Monday, September 29, 2008

ரஜினியின் அரசியல் - என்னுடைய சைக்கிள்

இந்த வார குமுதத்தில், அக்டோபர் ஒன்பதாம் தேதி ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி முடிவை அறிவிக்க போகிறார் என்று ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். ரஜினி எந்த விஷயத்தில் முடிவெடுக்கும் முன்பும், பேப்பரில் எழுதி வைத்து, நெருங்கிய நண்பர்களிடன் முடிவை சொல்லுவாராம். அவர்களிடன் இருந்து வரும் கருத்துகளுக்கு ஏற்ப, முடிவை எடுப்பாராம். இன்னும், எத்தனை காலத்துக்கு இந்த ஸ்டிரியோ டைப் நியூஸ் போடுவாங்களோ?

அது போல நானும்... (அப்பாடி, வச்ச தலைப்புக்கு ஒண்ணு சொல்லியாச்சி...)

ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தது. பைக் வாங்க கூட நான் இவ்ளோ யோசிச்சது இல்ல. ரெண்டு நாள் முன்னாடி சட்டுன்னு போய் சைக்கிள் வாங்கிட்டேன். இப்பல்லாம் தீவிரவாதிகள் தான், அதிகம் சைக்கிள் வாங்குவதால் அந்த தயக்கம் வேறு.

சிவாஜி நகர்'ல ஒரு கடையில வாங்குனோம். வீடு, ரொம்ப தூரம்ங்கறதால பைக்ல நண்பன் கூட பின்னாடி வச்சி கோரமங்களா போலாம்னு பிளான். டிராபிக் ரொம்ப இருந்ததால நண்பன், டிராபிக் முடிஞ்சதுக்கு அப்புறம் பைக்ல ஏறிக்கிறேன்னு சொல்லிட்டு, சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சான். ஓட்டுனான், ஓட்டுனான், கண் பார்வையில இருந்தே எஸ் ஆகிட்டான்.

நான் வரிசையா சிக்னல்ல நின்னு, நின்னு, ஒன் வே'ல போயி, யூ டர்ன் அடிச்சி சேருரதுக்கு, பத்து நிமிஷம் முன்னாடியே கோரமங்களாவில வெயிட் பண்ணிட்டு இருந்தான். ஆமை ஜெயிக்கும் பந்தயக்களம், பெங்களூர்.




புது சைக்கிள்'க்குன்னு ஒரு வாசம் இருக்கு. ரப்பர் டயர், செயின் கிரிஸ்ள்ள இருந்து கலந்து வரும். அது, அப்படியே சின்ன வயசு சைக்கிள் ஞாபகங்களை கிளறியது. ஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள் எடுத்து சைக்கிள் ஓட்ட கத்துகிட்டது, ரோட்டுல ஒருத்தர் மேல இடிச்சி அடி வாங்குனது, மார்கழி மாசம் ஆனா காலையில கோவிலுக்கு போயி பொங்கல் சாப்பிட்டுட்டு ஊருக்கு வெளியே ரொம்ப தூரம் சைக்கிள்'ல போறதுன்னு எக்கச்சக்க ஞாபக கிளறல்கள்.

சைக்கிளில் போகும்போது தான், பெங்களூர் சாலைகளின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் உணர முடிகிறது. சைக்கிள் ஓட்டுவது ஹார்ட் அட்டாக், ஸுகர், கேன்சர், பிளட் பிரஷர், தொப்பை, அதிக எடை போன்றவற்றை தவிர்க்கும் என்றாலும், கவனமாக இல்லாவிட்டால், "இத்தினுண்டு இருக்குற ரோட்டுல நீ வேறயா?"ன்னு தட்டிட்டு போக வாய்ப்புகள் உண்டு. இதனால், அடிபடும் இடத்திற்கு ஏற்ப பாதிப்புக்கள் இருக்கும்.

நான் சைக்கிள் ஓட்டுன காலத்தில ஆயிரம் ரூபா அதிகப்பட்ச விலையா இருந்தது. இப்ப, கிட்டத்தட்ட மூவாயிரம். கியர் சைக்கிள் ஆரம்பக்கட்ட விலையே, அஞ்சாயிரம். சைக்கிள் வடிவமைப்பிலும் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கு. ஆன்லைன்'ல செலக்ட் பண்ணி வாங்கவும் வசதிகள் கூடிருக்கு.

நேத்து சைக்கிள் ஒட்டுனவன், இன்னைக்கு பைக் ஓட்டலாம். இன்னைக்கு பைக் ஓட்டுறவன், நாளைக்கே சைக்கிள் ஓட்டலாம். அதுக்காக, வாழ்க்கை ஒரு பைக்ன்னு சொல்ல முடியுமா? வாழ்க்கை ஒரு சைக்கிள்'ன்னு சொன்னாதான் பொருத்தமா இருக்கும். :-)

காந்தி ஜெயந்தி - கலைஞர் டிவி

உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்
"உத்தமர்" காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு................................................................

தகிட... தகிட... தகிட... தகிட...
தகிட... தகிட... தகிட... தகிட...
தகிட... தகிட... தகிட... தகிடா.......................

கத்தாழ கண்ணழகி........
ஸ்னிக்தாவுடன்...
ஒரு கொண்டாட்டமான சந்திப்பு...

ஸ்னிக்தா யாரு? காந்தியின் புகழ்ப்பரப்பும் சீடரா?

Friday, September 26, 2008

இன்டர்நெட் அட்ரஸ் காலியாகுதுங்கோ

எந்தவொரு கணினியும், தகவல் தொடர்பு சாதனமும் இணையத்தில் பங்குகொள்ள, அதற்கு ஐ.பி. அட்ரஸ் அவசியம். இப்போது உள்ள முறைப்படி, ஒவ்வொரு முகவரியும், 32 பைனரி எண்களால் ஆனது. அதாவது அதிகபட்சம் எண்களாக 255.255.255.255 என்று இப்படி இருக்கும்.

இந்த முறைப்படி 4.2 பில்லியன் முகவரிகளே சாத்தியம். இணையத்தின் முன்னேற்றத்தாலும், புது புது தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையாலும், பெரும்பாலான முகவரிகள் உபயோகப்படுத்தபட்டாயிற்று. இன்னும், மிச்சம் இருப்பது பதினாலு சதவிகிதம் மட்டுமே. அதுவும், 2010 க்குள் காலியாகிவிடுமாம்.

புது முகவரிகள் இல்லாவிட்டால், புதியதாக யாராலும் இணையத்தில் உலாவ முடியாது. கிலியா இருக்குமே? புதுசா தங்க இடம் இல்லாமல் கூட இருக்கலாம், இன்டர்நெட் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் பலர் இருக்கிறார்கள்.



இதற்கு ஏற்கனவே தீர்வு கண்டுப்பிடித்தாயிற்று. இப்போது உள்ள, IPV4 முறைக்கு அடுத்தக்கட்டமாக IPV6 என்று இதற்கு பெயர். இதன் மூலம், 340 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் புதிய முகவரிகள் கிடைக்கும். இது, இன்னும் சில பல்லாண்டுகளுக்கு தாக்கு பிடிக்கும். அதுக்குள்ளே, உலகம் அழிஞ்சிடாது?

இதில், என்ன பிரச்சினை என்றால், இது பரவலாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்த வகை முகவரி உள்ளவர்களால், இணையத்தை உபயோகப்படுத்த முடியாது. இது, இணைய உலகத்தை மிகவுமே பாதிக்கும்.

அதனால், இணைய தந்தை என்றழைக்கப்படும் வின்ட் செர்ப் என்ன சொல்கிறார் என்றால், பயனாளிகள் அனைவருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு இருக்கவேண்டும் எனவும், இம்முறைக்கு சாதகமான சாதனங்களையே இனி வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

ஸோ மக்களே, புதுசா ஏதும் கம்ப்யூட்டர் வாங்குறீங்கன்னா "IPV6 Compatible" ஆ பார்த்து வாங்குங்க.

பாவம் பாகிஸ்தான் மக்கள்

ஐ.நா. கூட்டத்திற்காக நம்ம தல மன்மோகன் சிங், பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சர்தாரி உள்பட பல உலக தலைவர்கள் நியூயார்க்'இல் முகாமிட்டு இருக்கிறார்கள். இவர்களை ஜான் மெக்கைன் சந்திப்பதாக ஒரு பிளான்.

ஜான் மெக்கைன், அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருப்பவர். இவரால் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கபட்டிருப்பவர், சாரா பாலின். பாலின், ஒரு முன்னாள் அழகி (தினத்தந்தி அர்த்தத்தில எடுத்துக்காதிங்க!). இப்ப, அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருப்பவர்.

ஜான் மெக்கைன், அமெரிக்கா பொருளாதார சரிவை சரி பண்ணுவதில் கொஞ்சம் பிசியாக இருந்ததால், பாலினை சந்திப்புக்கு அனுப்பி இருக்கிறார். தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்குமேன்னு. வெளியுறவு கொள்கை தொழில்.

பாலின் முதல்ல மன்மோகன் சிங்கை சந்திச்சி இருக்காங்க. நம்மாளும் எரிசக்தி, பாதுகாப்புன்னு பல டாப்பிக்குகள பத்தி பேசி இருக்காரு. அம்மணியும், ரொம்ப ஆர்வமா கேட்டு இருக்காங்க.



அதுக்கு அப்புறம், பாலின் சர்தாரியை மீட் பண்ண போயிருக்காங்க. முதல்ல, அவுங்க நாட்டு தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரெஹ்மான் கூட போட்டோ எடுத்துருக்காங்க. அப்ப ரெஹ்மான் கேட்டது,

"எப்படி உங்களால இவ்ளோ பிசியா இருக்கும் போதும், இவ்ளோ அழகா இருக்க முடியுது?"

அதுக்கு, பாலின் நன்றின்னு சொல்லிட்டு புன்னகைச்சிட்டாங்கலாம்.

அடுத்தது, சர்தாரி முறை.

சர்தாரி : நான் நினைச்சவிட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.
பாலின் : தேங்க்ஸ் (டாபிக் மாத்த நினைக்கிறாங்க)
(விடாம) சர்தாரி : இப்பதான் எனக்கு தெரியுது, அமெரிக்காவே உங்க பின்னாலே ஏன் அலையுதுன்னு.

அதுக்கு அப்புறம், போட்டோகிராபர் படம் எடுக்க கை குலுக்க சொன்னபோது, சர்தாரி சொன்னது,
"ரொம்ப கட்டாயாப்படுத்தீங்கன்னா, கட்டிப்பிடிக்கவும் தயார்"

பிறகு பாலின், பெனாசிர் இறந்ததுக்கு துக்கம் விசாரிச்சி சர்தாரியை ஆப் பண்ணி இருக்காங்க. சர்தாரியும், தேர்தல்ல நீங்க ஜெயிச்சா, மெக்கைனும் நீங்களும் பாகிஸ்தான் வாங்கன்னு சொல்லியிருக்காரு. (கிழிஞ்சிது!!!)

நல்ல ஆளுங்கள பிடிச்சி, ஆட்சி பொறுப்ப கொடுத்திருக்காங்க. இதுக்கு, முஷாரப்பே பரவாயில்லைன்னு, இப்ப அவுங்களுக்கு தோணும்.

இனிமேல், பாகிஸ்தான் ராணுவத்துகிட்ட மட்டும் இல்ல, பாகிஸ்தான் தலைவர்களின் இந்திய வருகையின் போதும், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்.

Tuesday, September 23, 2008

குமரி – காமராஜர் மணிமண்டபம் (புகைப்பட பதிவு)

காமராஜர், சத்தியமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலுடன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சுதந்திரத்திற்கு பிறகு, முதல்வராகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, நாட்டுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.



படிப்பறிவில்லாத மக்கள் ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதை அறிந்து, தமிழகமெங்கும், ஐம்பதாயிரம் பள்ளிக்கூடங்கள் திறந்து, இலவசமாக கல்வியை வழங்கிய முன்னோடி.



ஒரு கிராமம் வழியாக செல்லும் போது, இரு சிறுவர்கள் ஒரு பெரியவருடன் சேர்ந்து வயல்வெளியில் வேலை செய்வதை கண்டு, பெரியவரிடம் "ஏன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை?" என்று கேட்கிறார். அதற்கு, அவர் "அனுப்பிட்டு சாப்பாட்டுக்கு என்ன செய்வது?" என்று பதில் கேட்கிறார். ஒன்றும் சொல்லாமல் திரும்பும் காமராஜர், அதிகாரிகளிடம் கேட்டது, "பள்ளியில் மதியம் உணவு வழங்கினால் என்ன?".



அதற்கு அதிகாரிகள், "ஏற்கனவே, இலவச கல்வி திட்டத்தால் நிதிசுமை அதிகமாகி உள்ளதாகவும், மதிய உணவு வழங்க வேண்டுமானால், மக்களுக்கு வரி விதிக்க வேண்டிவரும்" எனவும், "அவ்வாறு வரி விதித்தால் அது அடுத்த தேர்தலில் கட்சியை பாதிக்கும்" எனவும் கூறுகிறார்கள். இதற்கு காமராஜர் கூறியது, "எதையையும் vote bank பத்தி யோசிச்சே செய்ய கூடாது. மக்களுக்கு கிடைக்கிற நன்மையை பார்த்துதான் செய்யணும்".



மழை பெய்தும், விவசாயத்திற்கு பயன்படாமல் போகும் நீரை சேமிக்க, விவசாயிகள் நன்மை பெரும் வண்ணம், அணைகள் கட்டினார்.



முதல்வராக இருந்தபோது, நேருவை சந்தித்து, கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் ஆட்சி பணிகளில் இருந்து தங்களை விடுவித்து, கட்சி பணியில் ஈடுபடவேண்டும் என்று யோசனை கூறி, அதற்க்கு முன்னுதாரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.



அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, இந்தியாவின் பிரதமராக யார் வர வேண்டும் என்று முடிவெடுத்தவர், இந்த தமிழ் நாட்டு கிங் மேக்கர்.



இந்திராவை பிரதமராக்கி, பின்பு அவராலேயே "யார் அந்த காமராஜர்?" என்று வாங்கி கட்டி கொண்டவர்.



அண்ணா தலைமையில் போட்டியிட்ட திமுக, தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது, "திருமணமாகாத இவருக்கு, நாட்டின் விலைவாசி உயர்வு எங்கே தெரிய போகிறது?"



விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த காமராஜரை சந்தித்த தொண்டர்கள், "அவர்கள் கள்ள ஒட்டு போட்டதால்தான் தோற்தோம் " என்றதற்கு, "இது மக்கள் தீர்ப்பு. நாம தோத்ததால கள்ள ஓட்டுன்னு சொல்ல கூடாது. அடுத்த ஆறு மாசத்துக்கு அவர்கள் ஆட்சியை, யாரும் விமர்சிக்க கூடாது." என்று கட்டளை இட்டார்.



எனக்கு காமராஜரை பற்றிய ஒரு வருத்தம். என்னதான் நாடு முக்கியம் என்றாலும், வீட்டையும் கவனிக்க வேண்டும் அல்லவா? தன் தாய் ஒரு மின் விசிறியும், கம்பளியும் கேட்டதற்கு, "குளிருக்கு கம்பளி போட்டுட்டு, அப்புறம் எதுக்கு பேனு?" என்று கேட்டு, "இப்ப கம்பளி மட்டும் வாங்கிக்க, பேனு அப்புறம் பார்க்கலாம்"ன்னு சொன்னவர் காமராஜர். விருதுநகரில் உள்ள தன் வீட்டில், யாரும் கேட்காமல், தண்ணீர் குழாய் வைத்த அதிகாரியுடன், "இன்னைக்கு எங்க வீட்ல வச்சா, நாளைக்கு ஒவ்வொரு தலைவரும், அதிகாரியும் அவங்கவுங்க வீட்ல வைப்பாங்க. நாடு என்னத்துக்கு ஆகுறது?" என்று ஒரு பிடி பிடித்து விட்டு உடனே அதை கழற்றி போக செய்தார். என்னை பொறுத்தவரை, தனக்கு சம்பளமாக வந்த பணத்தில்லாவது தன் குடும்பத்திற்கு குறைந்தபட்ச வசதிகளை செய்து கொடுத்திருக்கலாம்.

அப்புறம், இன்னொரு விஷயம், "காமராஜ்" படத்தில் இளையராஜா இசையமைத்து பாடிய "நாடு பார்த்ததுண்டா" என்ற பாடல், கவனிக்கப்படாமல் போன ஒரு அருமையான இளையராஜாவின் மெலடி பாடல். இந்த படத்தில், இயக்குனர் மகேந்திரன் ஒரு காட்சியில் நடித்து உள்ளார்.

காமராஜர் பற்றிய பல தகவல்களும், புகைப்படங்களும், காமராஜரின் உறவினரின் தளமான இங்கே காணலாம்.

பாடும் நட்சத்திரங்கள்

சினிமா அறிமுகமான காலகட்டத்தில், பின்னணி பாடகர்கள் எனப்படும் கலைஞர்கள் உருவாவதற்கு முன்பு, நடிக்கும் நடிகர்களுக்கு பாடும் திறமை என்பது முக்கியம். பாடும் திறமை உள்ளவர்களே, நடிகர்கள் ஆகலாம் என்ற நிலை இருந்தது. இந்த காலத்தில் தான், படம் முழுக்க பாட்டு பாடி தங்கள் முழு திறமையை காட்டு காட்டு என்று காட்டி கொண்டு இருந்தார்கள். தியாகராஜ பாகவதர், சுந்தராம்பாள், சுப்புலக்ஷ்மி போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பின்னணி இசை, பின்னணி பாடகர்கள் என்று வந்த பின்பு, நடிகர்களுக்கு பாடுவது என்பது அவசியம் இல்லாமல் போனது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு, அவர்களது குரலை விட பொருத்தமாக பாட டி.எம்.சௌந்தரராஜன் போன்ற பாடகர்கள் இருந்த போது, விருப்பம், திறமை, தேவை இருந்தாலொழிய நட்சத்திரங்கள் பாட காரணம் இல்லாமல் போனது. அப்போது நடிகைகளில் பத்மினியும், நடிகர்களில் சந்திரபாபுவும் சிறப்பாக பாடி கொண்டு இருந்தார்கள். ஒரு நடிகராகவும் இருந்து கொண்டு பாடல்களில், நகைச்சுவை, தத்துவம், மேற்கத்திய இசை வடிவம், துள்ளல் நடனம் சேர்த்து பாடல்களை மெருகேற்றினார்.

அது என்னமோ தெரியவில்லை, நகைச்சுவை நடிகர்களுக்கு நன்றாகவே பாட வருகிறது. கலைவாணரில் தொடங்கி, சந்திரபாபு, மனோரமா என்று தற்போது வடிவேலு வரை நன்கு பாடுகிறார்கள்.



பாகவதர் காலத்துக்கு பிறகு சொந்த குரலில் பாடும் கதாநாயகனாக வந்தவர், கமலஹாசன். இவர் "அரங்கேற்றம்" படத்தில் தொடங்கி தற்போது "தசாவதாரம்" வரை தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் சேர்த்து சுமார் எழுபது பாடல்கள் வரை பாடி இருக்கிறார்.

ரஜினியை வைத்து பல எக்ஸ்பரிமேண்டுகளை செய்து வரும் பி.வாசு, அவரை மன்னன் படத்தில் பாடவும் வைத்தார். அந்த படம் வந்த போது, ரஜினி பாடி இருக்காருங்கதால ரொம்ப ஆர்வமா ஓடி போயி கேசட் வாங்கி பாட்டு கேட்டேன். அவரு எப்படி பாடி இருப்பாருன்னு கற்பனை பண்ணி வேகமா பாடி இருப்பாரு நெனைச்சேன். ஆனா, "அடிக்குது குளிரு" பாட்டை கேட்கும்போது, நான் அடைஞ்ச ஏமாற்றம் இருக்கே. முடியல. ரெண்டு டைம், டேப் ரிக்கார்டர் தான் சரியா பாட மாட்டேங்குதுன்னு தட்டி தட்டி பார்த்தேன். அதுக்கு அப்புறம், மன்னன் பாட்டே கேட்கல. கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிட்டாங்க. இப்ப கூட, சிவாஜி படத்தில ரஜினி பாட போறார்ன்னு ஒரு புரளி வந்திச்சே. அத கேட்டு நான் ரொம்பவே பயந்திட்டேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கல.

இந்த தலைமுறையில ஓரளவுக்கு நல்லா பாடிட்டு இருக்குறவுங்க, விஜயும், சிம்புவும். இருவருக்குமே, பாடும் திறமை தங்கள் பெற்றோருடன் இருந்த வந்ததுதான். கமல், அஜித்துக்கு பின்னணியாக உல்லாசம் படத்தில் பாடியது போல், விஜய் சூர்யாவுக்கு பின்னணியாகவும், சிம்பு அஜித்துக்கு பின்னணியாகவும் பாடியுள்ளார்கள்.

சில படங்களில் இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் படத்திற்கு மவுசு கூட்டும்வண்ணம், நடிகர்களை பாட அழைக்கிறார்கள். சரத்குமார், அர்ஜுன், பிரசாந்த், விக்ரம், விவேக், ஷாலினி என்று இவர்களெல்லாம் பாடி இருப்பது இதற்காகத்தான் இருக்கும்.

ரசிக்கும்படி யார் பாடினாலும் வரவேற்க்கலாம். என்னதான் நட்சத்திரங்கள் பாடினாலும், தகுந்த பயிற்சியுடனும், திறமையுடன், அனுபவத்துடனும் பாடும் பாடகர்களின் பாடல்களுக்கு முன்னால் அவர்கள் ஒரு படி கீழேதான் . சில படங்களில், கமல், விஜய் போன்ற நட்சத்திரங்கள் பாடிய பாடல்களை, எஸ்.பி.பி, ஹரிஹரன் போன்ற பாடகர்களும் பாடி இருப்பார்கள். அதை ஒப்பிட்டு பார்த்தாலே, பாடகர்களின் சிறப்பு தெரியும்.

Tuesday, September 16, 2008

இந்த தளபதிங்க தொல்லை தாங்க முடியலப்பா...

கவுண்டமணி சொல்றாப்ல, நாட்டுல ஒரு படம் நடிச்சவன், ஒரு ஹிட் கொடுக்காதவன் எல்லாம் தளபதியாம். இவனுங்க தொல்லை தாங்க முடியலப்பா...

முன்னாடி எல்லாம் நடிகர்களுக்கு கணிசமான படங்களில் நடித்த பிறகு, ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பட்டங்கள் 'கொடுப்பார்கள்'. இப்ப அவங்களே போட்டுகிறாங்க. அதுவும், ஒரு படம், ரெண்டு படம் முடிச்சதுக்கு அப்புறம்.

இப்ப, எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னு பாக்குறீங்களா? இருக்குற தளபதிங்க பத்தாதுன்னு, இன்னொரு தளபதி வர்ராரு. காதல் தளபதி. ஒரு ரீமேக் பட விளம்பரத்தில் சித்தார்த்துக்கு தான் இந்த பட்டத்தை கொடுத்துருக்காங்க.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மக்கள் திலகம், நடிகர் திலகம் போன்ற பட்டங்கள் அவர்களுக்கு பொருத்தமானது. அது திலகங்கள் காலம் போல. நடிகையர் திலகம், இயக்குனர் திலகம்'ன்னு ஏகப்பட்ட திலகங்கள்.

அப்புறம், ரஜினிக்கு தாணு (தாணுவா? பாலாஜியா?) கொடுத்த "சூப்பர் ஸ்டார்" பட்டம் ரொம்ப பேமஸ். அத எங்க பார்த்து அவரு கொடுத்தாரோ, அது ஒரு பதவி மாதிரி ஆயிடுச்சி. கமலுக்கு, காதல் இளவரசன்'ன்னு ஒரு பட்டம் இருந்தது. அதாவது, ஜெமினி கணேசன் காதல் மன்னராம். அப்புறம், கமலே மன்னராகி, சூப்பர் ஆக்டராகி, இப்ப ரவிக்குமார் புண்ணியத்துல உலக நாயகன் ஆகிட்டாரு.

அதுக்கப்புறம், புரட்சி'ங்கற வார்த்தைக்கு வந்தது கிரகம். ஒருத்தர், கலைகளில் பல புரட்சிகளை பண்ணி, புரட்சி கலைஞர் ஆனார். இன்னொருத்தர், தமிழில் பல புரட்சிகளை பண்ணி, புரட்சி தமிழன் ஆனார். பிரபு, நடிகர் திலகத்தின் மகன் என்பதால், இளைய திலகம் ஆனாரு. கார்த்திக் கொஞ்சம் நாள், காதல் இளவரசனாக இருந்து அப்புறம் நவரச நாயகனா பிரோமொட் ஆனாரு. உண்மையிலேயே, அவரு நவ ரசங்களையும் காட்டுவாரு. ஒரே மாதிரி.

அதுக்கு அப்புறம் வந்தவுங்க எல்லோருக்கும் அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் மேல ஒரு கண்ணு. நாமளும், அப்படி ஒரு பட்டம் வச்சிகிட்ட அப்படி ஆகிடலாம்னு. சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் (!), லக்கி ஸ்டார்'ன்னு ஏகப்பட்ட ஸ்டார்கள்.

உண்மையிலேயே, எஸ்.ஏ. சந்திரசேகர் ஸார பாராட்டணும்ங்க. அதிகம் ஆசைப்படாம (அதிலையும் ஒரு உள் நோக்கம் இருந்தாலும்) , இளைய தளபதி'ன்னு பேர வைச்சாரு. டிரென்ட் செட்டர். இப்ப எல்லாரும், ஸ்டார் ஆசைய விட்டுட்டு தளபதியாக ஆசை படுறாங்க. விஜய் சாதிச்சிடாருங்க.

இப்ப நம்ம நாட்டுல இருக்குற மூணு ராணுவ தளபதிகளுக்கு அப்புறம் இருக்குற மத்த தளபதிகள்.

விஜய் - இளைய தளபதி
பரத் - சின்ன தளபதி
விஷால் - புரட்சி தளபதி
ரித்திஷ் - வீர தளபதி
சித்தார்த் - காதல் தளபதி

இதுல தளபதிங்கர பேருக்கு ஏற்ப வாட்டசாட்டமா, கம்பீரமான குரலோட இருக்குறது ரித்தீஷ் தான்.

வேற ஏதாச்சும் காமெடியான பட்டம் இருந்திச்சின்னா சொல்லுங்க!!!

ஒரு நிமிடம் செலவழித்தால் வெள்ள சேதத்திற்கு உதவலாம்

பீகார் வெள்ள சேதத்தை பற்றி தெரிந்திருக்கும். வெள்ள சேத நிவாரணத்திற்கு நீங்களும் உதவலாம். உங்களின் பொன்னான ஒரு நிமிடத்தை செலவழித்தால் போதும்.

இந்த தளத்திற்கு செல்லவும். http://www.helpbihar.in

நாலே கேள்விகள். சரியான பதிலுக்கு கொடுத்தால், உங்கள் சார்பாக உதவிகள் செய்யப்படும்.

உங்களுக்கே பதில் தெரியும். இருந்தாலும் இந்தாங்க பிட்.

1. Capital of bihar : Patna

2. The river caused flood : Kosi

3. Total people affected : 25lakhs

4. What is the opposite of word "flood" : Drought

எவ்வளவோ பண்றோம்.... இத பண்ண மாட்டோமா... :-)

ஹிட் ரேட் அதிகம் உள்ள நண்பர்களே, இதை ப்ரொமோட் செய்யவும்.

மின்னஞ்சலில் வந்தது. அனுப்பிய நண்பருக்கு நன்றி.

Monday, September 15, 2008

சக்கரக்கட்டி – தித்திக்கிறதுதான்

மருதாணி

நல்ல பீட்டுடன் உள்ள மெலடி பாடல். சாதனா போன்ற குரல். பாடியது மதுஸ்ரீ. மயக்கும் குரலில் கிறங்க வைக்கிறார். நடுவே, ரஹ்மான் வேறு ஹம் செய்கிறார். காதலி, காதலனை நினைத்து பாடும் பாடல் போலிருக்கு. மருதாணி மருதாணி என்று பாட்டை முடிக்கவே மனசில்லாமல் ஆறரை நிமிடங்கள் கழித்து முடித்து வைக்கிறார் ரஹ்மான். (எப்பவும் பண்றதுதான்!).

"வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்...
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்..."
- வாலி

டாக்சி டாக்சி

தாளம் போட்டு ஆட்டம் போட வைக்கிற பாடல். நட்பை பற்றிய ஜாலியான சாங். கேட்டவுடன் பிடித்து போகும் பாடல்.

"ராசி ராசி…நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி..நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…" :-)
-நா. முத்துக்குமார்.


சின்னம்மா சிலகம்மா

சுமாரான பாடல். காதலன் "கோபாலா கோபாலா", முதல்வன் "உப்பு கருவாடு" சாயல் பாடல். ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல.

ஏலேய்… நேரம் வந்திடுச்சி….

கீட்டர் இசையை பிரதானமாக கொண்ட இந்த பாடல், பொறுமையை சோதிக்கிறது. அதை பண்ணுவோம, இதை பண்ணுவோம் என்கிற கனவு வகை பாடல். ஏலேய், பாட்டை மாத்துடா… ஏலேய்!!!

ஐ மிஸ் யூ… மிஸ் யூ டா

இந்த பாட்டு முதல்ல ஏதும் சுவாரஸ்யம் இல்லாத மாதிரி இருந்தது. பாடல் வரியும், பாடும் குரலும் கொடுக்கும் போதை, ஃபிலிங்கோடு கேட்டால், திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது (என்னடா பீலிங்கு!!!). இசையை விட, பாடலை தூக்கி பிடிப்பது, பாடலின் உணர்வை அப்படியே கொடுக்கும் சின்மயீயோட ஜீவனுள்ள குரல்.

“என் தேகமோ அழகு ஒவியம்
நீயில்லையேல் வெறும் காகிதம்”
-நா. முத்துக்குமார்.

நான் எப்போது பெண்ணானேன்?

இது “சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலை” ஞாபகப்படுத்தும் பாட்டு. நடுவே, கொட்டாவி வர வைத்தாலும், ரசிக்கத்தக்க பாடல் வரிகளைக் கொண்ட பாடல். முதல் வரியே, எப்படிப்பட்ட பாடல் என்று சொல்லி விடும்.

"என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்தேன் அப்போதா"
-நா. முத்துக்குமார்.

பாடல்களை கேட்கும்போது, காதல் சம்பந்தப்பட்ட படம் என்று தெரிகிறது (இது பாட்டு கேட்டுதான் உனக்கு தெரியுதா?ன்னு கேக்குறீங்களா? விடுங்க விடுங்க…). ஏற்கனவே வெளியான விளம்பரங்களில், விஷுவல்ஸ் ரொம்ப அழகாக இருந்தது. ரஹ்மானும் ரொம்ப நம்பிக்கையாக போட்டு கொடுத்திருப்பதால், படம் எப்படி இருக்கிறதோ, ஆல்பமாக கண்டிப்பாக வெற்றி பெறும் என்றே தோன்றுகிறது.

Saturday, September 13, 2008

குமரி - காந்தி மண்டபம் (புகைப்பட பதிவு)

குமரிமுனையில் உள்ள காந்தி மண்டபத்தில் எடுத்த புகைப்படங்கள்.

காந்தி நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம், சிறப்பான வடிவமைப்பைக் கொண்டது.



ஒவ்வொரு வருடமும் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில், சூரிய ஒளி விழும்மாறு இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.



பத்தொன்பது வயதில் லண்டனுக்கு சட்டம் படிக்க சென்ற காந்தி,
வாங்கி கொடுத்த சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்கள் ஆகியும்,
இன்னமும் நமது நாட்டின் படிப்பறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை,
அமெரிக்க மக்கள் தொகைக்கு சமம்.



இந்தியர்கள் தலை நிமிர்ந்து வாழ சுதந்திரம் வாங்கி தந்த காந்திக்கு, தென்னாப்பிரிக்காவில் தலைப்பாகையை கழட்ட சொன்ன சம்பவம்தான், சமூக அநீதிக்கு எதிராக போராட காரணமாக இருந்தது.



கன்னியாகுமரியை பற்றி காந்தி.



காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம்.



உலக வரலாற்றில், சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்டு, ஆட்சியில் பங்குபெறாத ஒரே தலைவர்.



கடைசி வரை அமெரிக்கா செல்லாத காந்தியைப் பற்றி ஐன்ஸ்டின் சொன்னது,

"I believe that Gandhi’s views were the most enlightened of all the political men in our time. We should strive to do things in his spirit: not to use violence in fighting for our cause, but by non-participation in anything you believe is evil."


Friday, September 12, 2008

தமிழ் சினிமா <--> கெட்டவார்த்தை

கெட்ட வார்த்தையும் மனிதனின் ஆயுதங்களில் ஒன்று.

பொதுவாக கோபமாக இருக்கும் போதும், சண்டைகளின் போதும் கெட்ட வார்த்தைகள் எண்ட்ரி கொடுக்கும். வாய் சண்டை, கைக்கலப்பாவதற்க்கு பெரிதும் உதவும். படிக்காதவர்கள்தான் கெட்ட வார்த்தைகளால் பேசுவார்கள் என்பதெல்லாம் பொய். கல்லூரிகளிலும், கல்லூரி விடுதிகளிலும் (இப்பொழுது பள்ளிகளிலுமாம்) மாணவர்களிடையே சகஜமான பேச்சுவார்த்தைகளிலும் கூட கெட்ட வார்த்தைகள் இடம் பெறும். செல்லமாக அழைப்பதற்க்கு கூட உபயோகப்படுத்தப்படும்:-). ஹாஸ்டலில் அப்படி பேசுபவர்கள், விடுமுறைக்கு வீட்டிற்கு செல்லும் போது, எப்படித்தான் தங்கள் நாக்கை கட்டுப்படுத்துகிறார்களோ?

சமூகத்தின் மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று எல்லாத்தட்டு மக்களிடமும் வேறுபாடு இன்றி இருப்பது கெட்ட வார்த்தைகள். மொழி வேண்டுமானால் மாறுபடும். மேல்தட்டு மக்களிடம் பேசப்படும் ஆங்கில கெட்ட வார்த்தைகள், தமிழ் கெட்ட வார்த்தைகள் அளவுக்கு ஜெர்க் கொடுக்காது. தவிர, தமிழுடன் ஒப்பிடும் போது ஆங்கிலத்தில் வார்த்தைகள் குறைவுதான். எப்படி லவ் என்ற ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழில் காதல், பாசம், அன்பு என்று பல வார்த்தைகள் உள்ளதோ, அதுப்போல் ஒரு ஆங்கில கெட்ட வார்த்தைக்கு சமமாக தமிழில் பல கெட்ட வார்த்தைகள் உள்ளது. அதற்காக செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புகளில் இதுவும் ஒன்று என்றா சொல்ல முடியும்?

இனி தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தைகளின் பங்கைப் பார்ப்போம். சினிமா என்பதே கெட்ட வார்த்தை என்ற நிலையிலிருந்து, இன்று சினிமாவில் கெட்ட வார்த்தையை ரசிக்கும் அளவுக்கு காலம் நம்மை மாற்றியிருக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு மெதுவாக காமெடி காட்சிகளில் இடம் பிடித்து, பின்பு ஹீரோக்களின் பஞ்ச் வசனங்களுக்கு ஈடாக தற்போது படங்களில் இடம் பிடித்து வருகிறது.

“வெற்றி கொடி கட்டு” படத்தில் வடிவேலுவின் மச்சான் ஒருத்தர், சைக்கிளைப் பிடித்துக் கொண்டு வடிவேலுவை சரமாரியாக திட்டுவார். சமுதாயத்திற்கு படத்திற்கு படம் கருத்து கூறி வரும் இயக்குனர், இந்த கெட்ட வார்த்தைகளுக்கு பின்னணியாக வயலின் இசையை வைத்திருப்பார். வாலி அஜித் போல அவரின் உதட்டசைவை கவனித்தால், படம் எதார்த்தமாக வரவேண்டுமென்று இயக்குனர் நிஜ கெட்ட வார்த்தைகளையே பேச வைத்திருப்பது தெரியும்.

பின்பு, கெட்ட வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் கூறி, ரசிகனே முழுவதையும் புரிந்து கொள்ளும் டிரண்டை கொண்டு வந்தவர் விவேக். “டேய்! அது உங்க ஆத்தாடா” என்ற கேள்விக்கு சின்ன கலைவாணர் கொடுக்கும் பதிலடி, நகைச்சுவை மூலம் அவர் தரும் கருத்து செறிவுகளில் ஒன்று.

கெட்ட வார்த்தைகளை ஆக்ஷன் ஹீரோக்களின் பஞ்ச் வசனமாக ஆக மாற்றிய பெருமை டைரக்டர் ஹரியை சாரும். சாமி படத்தில் “கேன பூனா… மூன கூனா” என்பதற்கு “கேன புண்ணாக்கு… முட்டாள் குரங்கு” என்று விளக்கம் கொடுத்தது, சென்சார் போர்டை மட்டுமே ஏமாற்றி இருக்கும்.

எனக்கு ஒரு சந்தேகமும் உண்டு, படத்தில் கதாபாத்திரங்களுக்கு பேர் வைப்பது கூட, ஹீரோ அந்த கதாபாத்திரங்களை திட்டுவதற்கு ஏற்ப வைக்கிறார்களோ? என்று. உதாரணத்திற்கு, வல்லவன் படத்தில் ரீமா சென் ஒரு காட்சியில் சிம்புவிடம்

“ஏய்! நான் கீதாடா” என்று சொல்ல,

“போடிங்…” என்று சொல்லி விட்டு ஹீரோயிச பின்னணி இசைவுடன் நடந்து செல்வார்.

அதேப்போல், சிவாஜியில் ரஜினியிடம் சுமன்,

“நான் ஆதிடா” என்க,

விவேக் குறுக்கிட்டு,

“போடங்…” என்று சொல்ல வருவதை ரஜினி பாய்ந்து தடுக்க,

“கபோதின்னு சொல்ல வந்தேன்” என்று விவேக் சொல்லுவதை நாம் நம்ப வேண்டுமாம். சார், நம்பிட்டோம். வசனம்: சுஜாதா.

கிராமங்களில் பேசும் ஒரு கெட்ட வார்த்தை, கிராமத்து படங்கள் எடுத்து வந்த பாரதிராஜா மற்றும் ராஜ்கிரணின் பல படங்களில் இடம் பெற்று வந்தது. சென்சாருக்கு இப்போதுதான் அது தெரிய வந்ததோ என்னமோ, இப்போதெல்லாம் அதற்கு பதிலாக தக்காளி.

ஸ்டைலிஷாக படம் எடுக்கும் கவுதம் மேனனின் படங்களிலும் தொடர்ச்சியாக கெட்ட வார்த்தைகளுக்கு பங்கு உள்ளது. அவருக்கு பிடித்த கெட்ட வார்த்தை எதுவென்று போட்டி வைத்தால், குலுக்கலில் தான் பரிசுகள் வழங்க வேண்டி வரும்.

இப்படியெல்லாம் படத்தில் பேசலாமா என்றால் நிஜத்தில் இருப்பதை தானே படத்தில் வைக்குறோம் என்பார்கள். கெட்ட வார்த்தைகளின் பழக்கமில்லாத, பழக்கம் ஏற்படுத்த கூடிய வாய்ப்பில்லா குழந்தைகள் கூட படங்கள் பார்த்து கற்றுக் கொள்ளலாம். சில படங்களில், கெட்ட வார்த்தை வரும் இடத்தில் “கீ…” என்று சென்சார் பண்ணிய சத்தம் வரும். இப்பொழுது இயக்குனர்களே, பின்னணி இசையாக இதை செய்து விடுகிறார்கள். பொல்லாதவன் ரவுடிகள் சம்பந்தப்பட்ட படமென்பதாலோ என்னவோ, படம் முழுக்க இப்படி “கீ… கீ…” தான்.

இதை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டுமென்றால், “நீ பேசவில்லையா? இல்லை, நீ பேசவில்லையா?” என்று அரசியல் கட்சிகளும் அடித்து கொள்ளும். மொத்தத்தில் தமிழன் (மனிதன்) வாழ்வோடு கலந்து விட்டது. எந்த பினாயில் ஊற்றியும் கழுவ முடியாது. தண்ணி அடிப்பதையே “வாழ்றது கொஞ்சம் நாள்… அது என்ன பண்ணும்?... உடம்புக்கு நல்லதாமே?” என்று நியாயப்படுத்துபவர்கள், இதையா நிறுத்திவிட போகிறார்கள்? அப்படியே சொல்லாம விட்டார்களே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.

இக்கட்டுரையில் ஏதேனும் வரலாற்று பிழை இருந்தால் என்னை மன்னித்தருளி பிழையை நீக்கும்மாறு கேட்டு கொள்கிறேன். பதிவிற்கு பொருத்தமாக இருக்க வேண்டுமென்பதற்க்காக கெட்ட வார்த்தைகளை பின்னுட்டமாக இட வேண்டாம் என்றும் கேட்டு கொள்கிறேன். :-)

Thursday, September 11, 2008

கலாநிதி மாறன் வழங்கும் நாக்க முக்க

காதலில் விழுந்தேன் படம் எடுக்கப்பட்டு பல நாட்களாக வெளியாகாமல் இருந்தது. படத்தின் டிரம்ப் கார்டு “நாக்க முக்க” பாடல். பாடலை திரும்ப எடுக்கும் அளவுக்கு பாடல் ஹிட். குழந்தைகளுக்கு பிடித்துவிட்டால் பின்பு எப்படி ஹிட் ஆகாமல் இருக்கும்?

இப்போது இப்படத்தை சன் டிவி கலாநிதி மாறன் வாங்கியுள்ளார். சன் சேனல்களில் “கலாநிதி மாறன் வழங்கும்” என்று விளம்பரம் போட ஆரம்பித்துவிட்டார்கள். மெட்ராஸ் டாக்கிஸ் ஸ்டைல்'லில் "சன் பிக்சர்ஸ்" என்று டைட்டில். தொலைக்காட்சி உரிமை என்றில்லாமல், இப்போது படங்களை வாங்க துவங்கிவிட்டார்கள்.



சன் மியூசிக்கால் பாடல் ஹிட்டாகி, சில படமும் ஹிட்டாகிய வரலாறு உள்ளது (வாள மீனு). இம்முறை தாங்கள் வாங்கிய படத்தை தங்கள் சேனல்களால் ஹிட்டாக்குகிறார்களா? என்று பார்ப்போம். இனி, சன் மியூசிக்கில் கொஞ்சம் நாள் நாக்க முக்க தான். டாப் டென்னில் இப்படத்தை முதலிடத்தில் வைத்து விடுவார்கள். கலைஞர் டிவியில்? கொடுக்கவே மாட்டார்கள். இதற்கு போட்டியாக கலைஞர் டிவி'யும் இறங்கினால், சிறு பட தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதான்.

அப்புறம் சன் மியூசிக்கில் மசாலா மிக்ஸில் “குசேலன்: சினிமா சினிமா” பாடலைப் போடுகிறார்கள். பி. வாசு டைரக்ஷனில் வந்ததை விட, சன் மியூசிக் எடிட்டர் பண்ணியது நன்றாக உள்ளது. ஏகப்பட்ட படங்களில் இருந்து கட்டிங். பொருத்தமான ஒட்டிங்.



நாகேஷ் நடித்த ஒரு காமெடி காட்சியைப் பார்த்தேன். நாகேஷ் அவர்களது நகைச்சுவையைப் பற்றி சொல்ல தேவையில்லை. இக்காட்சியில் மூன்று கதாபாத்திரங்களுக்கு கொடுத்திருந்த வித்தியாசமும் அருமை, அக்கால டெக்னிக்கும் அருமை.



Tuesday, September 9, 2008

தியானக் கடல் - கன்னியாகுமரி (புகைப்பட பதிவு)

கன்னியாகுமரி, திருவாங்கூர் மகாராஜாவின் ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வந்த குமரி ஊர்.



விவேகானந்தர் நீந்தி சென்ற பாறைக்கு நாம் "பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின்" படகில் செல்லலாம். வேறு எங்கு "பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்" செயல்படுகிறது என்று தெரியவில்லை. சேது சமுத்திர திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வேண்டுமானால் கழகத்திற்கு நிறைய வேலைகளும், 'வருவாயும்' வரலாம்!



விவேகானந்தர் பாறையை காணும் ஆர்வம், பக்கத்தில் உள்ள தமிழர்களை விட, தூரத்தில் உள்ள வட இந்தியர்களுக்கு தான் அதிகம் உள்ளதாக தோன்றுகிறது.



சூரியனின் வெளிச்சத்தாலும் கல்லின் நிழலாலும் செயல்படும் இயற்கையான கால கடிகாரம் இது.



ரொம்ப தூரத்தில் சென்ற படகு. என் கேமராவின் அதிகப்பட்ச ஜூம் பயன்படுத்தி எடுத்த போட்டோ. அதனால் மங்கலாக தெரிவது போல் உள்ளது. இந்த புகைப்படத்தை இன்னும் ஜூம் செய்து பார்த்தால், கடலுக்கு அப்பால், ஆற்காடு வீராச்சாமி, ஸாரி, வீராஸ்வாமி மின்வெட்டுக்கு பழியை போட்ட காற்றாடிகள் தெரியும்.



ரொம்ப குஷியா இருக்கும் போது, நாம நம்மை மறந்து, சுற்றி இருக்குறதா மறந்து ஆட ஆரம்பிச்சிடுவோம்'ன்னு இப்ப கொஞ்ச நாள் முன்னாடி எதிலயோ படிச்சேன். இந்த பாப்பாவும் பயங்கர குஷியா இருக்கு போல! பின்ன, கடல்னாலே குஷிதான்... கடலுக்கு நடுவேன்னா கேட்கவா வேணும்? :-)



நான் போன டைம், நல்ல வெயில். பொறுமையா நடக்க முடியலை. இந்த வெள்ளை கலர் பெயிண்ட் அடிச்சி இருக்காங்களே… இதுதான் வெறுங்கால்ல நடக்க கொஞ்சம் உதவியா இருந்தது.



விவேகானந்தர் பாறையை திறந்து வைத்தது, அப்போது ஜனாதிபதியாக இருந்த வி.வி. கிரியும், முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும். திறந்து வைத்து இந்த வாரத்தோடு 38 வருடங்கள் ஆகிறது.



அதேப்போல் 1975 இல் திருவள்ளுவர் சிலையை குமரிமுனையில் அமைக்க முடிவெடுத்து அறிவித்தது, கலைஞர். பின்பு, 1979 இல், எம்.ஜி.ஆர் தலைமையில் மொரார்ஜி தேசாய் அடிக்கல் நாட்டினார். திரும்ப, இருமுறை கலைஞர் (1989 & 1996) பணிகளைத் தொடங்கி வைத்து, முடிவில் இந்த நூற்றாண்டின் முதல் நாளில், சிலையைத் திறந்து வைத்தார்.



திருவள்ளுவர் ‘கதை’யை சிலைக்கு கீழே விற்றுக் கொண்டு இருந்தார்கள். அதை இங்கு சென்று காணலாம். :-)

பிரியாணியோவ் பிரியாணி... (இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்க்கவும்)

நான் ஏற்கனவே எங்க போனா என்ன சாப்பிடலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனால எங்க போனா என்ன சாப்பிடக்கூடாதுன்னு சொல்றதும் என் கடமையாகிடிச்சி... :-)

சீனா போனீங்கனா, இந்த மாதிரி போர்ட பார்த்தா உஷாராகிடுங்க...



அப்படியே கடைக்கு பக்கவாட்டுலேயோ, பின்னாடியோ பார்த்தீங்கன்னா, இந்த மாதிரி ஒரு வண்டி நிக்கலாம்.



இப்பவே, நீங்க திரும்பி போயிடலாம். இதுக்கு மேலயும் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருந்திச்சின்னா, கடை பின்னாடி வழியா உள்ளே போனீங்கன்னா, இதை பார்க்கலாம்.



எல்லாம் நாயீங்க... நாயி பிரியாணி பண்றானுங்க...



எனக்கு நம்ம ஊருல தனியா ரோட்டுல போகும் போது, நாய பார்த்தா பயம் வரும். எங்கேயாவது, குழந்தைகள நாய் கடிச்சிடுச்சின்னு நியூஸ் கேட்டா, நாய் மேல கோபம் வரும். இங்கே, நாய்கள பார்க்கும் போது பரிதாபம் தான் வருது.



பிரியாணி ரெடியாகுதுங்கோ...



இதுக்கு டிஸ்ப்ளே வேற...!!!



உங்க தெருவுல ஏதாச்சும் நாய் உங்ககிட்ட வம்பு பண்ணிச்சினா, இந்த படங்களை அதுக்கு காட்டுங்க...

மின்னஞ்சலில் வந்தது. அனுப்பிய நண்பருக்கு நன்றி.

Sunday, September 7, 2008

சாவுடன் ஒரு பந்தயம்

“அதுக தூங்கின பிறகு தான் நாம உள்ளே போக முடியும்”

“சும்மா போயித்தான் பார்ப்போமே?”

“தோழரே, பொறுத்தால்தான் பூமியை ஆள முடியும். கொஞ்சம் இருட்டடும். வெளியே போகலாம். இல்லாவிட்டால் நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்.”

இதை கேட்டதும் தான் கொஞ்சம் அடங்கினான். இடத்துக்கு புதுசுதானே. ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வார்கள். நாமத்தான் எல்லாம் சொல்லி கொடுக்கணும்.

“நம்ம வாழ்க்கைத்தரம் மோசமாயிட்டே போறத பார்த்தா, வருத்தமா இருக்கு.”

“ம்ம்ம்… என்ன பண்றது?”

“எல்லாம் இந்த தம்மாம்துண்டு வயித்துக்காக தான். இப்பலாம், நமக்கு கிடைக்குற நேரம் கொஞ்சம் தான். அதுக்குள்ள எத்தனை வேலைத்தான் செய்யிறது?”

“காரணம், விஞ்ஞான வளர்ச்சித்தான். இது அதுங்களுக்கு வேலை செய்யிற நேரத்த குறைக்கும்ன்னு பார்த்தா, நாம வாழுறதுக்கான நேரத்த குறைச்சிடுச்சி.”

கதவடைக்கும் சத்தம் கேட்குது. வந்துகொண்டிருந்த வெளிச்சத்தின் மிச்சமும், முழுவதுமாக போனது.

“சரி, வா… போகலாம்”

பைப்பை பிடித்து ஏறினோம்.

“ஆன்டேனாவை நல்லா டியூன் பண்ணிக்கோ. ஏதும் பிரச்சினைன்னா நம்ம உயிரைக் காப்பாத்த போறது அதுத்தான்”

“புரியுது”

நுழையும் இடத்திலேயே எதிர்ப்பார்த்து வந்தது இருந்தது.

“இது வேண்டாம். அந்த பக்கம் இன்னும் பிரெஷா கிடைக்கும்”

ரொம்ப காத்திருந்து ஏக்கத்துடன் வந்தவனிடம், இதை சொன்னதும், ஏற்கனவே சிறியதாக இருக்கும் அவன் முகம் ஏமாற்றத்தில் சிறுத்தது.

“எதுக்கு ரிஸ்க்?”

“பரவாயில்லை” என்று நான் சொல்லி முடிக்கவும், அறை முழுவதும் வெளிச்சம் பரவவும் சரியாக இருந்தது.

சுதாரித்து, “திரும்பி ஓடு” என்று நான் கத்த, இருவரும் ஓட ஆரம்பித்தோம்.

அதுகளில் உள்ள சிறுசு, எங்களை பார்த்து விட்டது.

“ம்மா” என்று பீதியில் பீறிட, எங்கள் முழு வேகத்தையும் கொடுத்து ஓட்டம் எடுத்தோம்.

இப்ப உயிர் பயம் வந்துடுச்சி. இன்றுதான் எங்களுக்கு கடைசி நாளா? நினனக்கும் போதே மனம் கலக்கமடைந்தது.

நாங்கள் ஏறி வந்த பைப்ப நெருங்கிட்டோம்.

“சீக்கிரம் எறங்கு”

இருவரும் சல்லென்று குதித்தோம்.

“தப்பிச்சிட்டோம்”

அமைதியாக இருந்தேன். ஆன்டேனாவை டியூன் செய்தேன். ஏதோ தப்பா நடக்க போகிறது என்றது உள் மனம்.

“இல்ல. நாம சாக போறோம்.”

“என்ன?”

“சுவாசத்தில விஷவாயு கலந்திட்டு இருக்குறது உனக்கு தெரியல?”

காற்றில் கலந்த விஷம், எங்கள் உயிரிலும் கலக்க, உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிகிறது.

“என்ன அது?” வாய் குழறியப்படி அவன் கேட்க,

“HIT மாதிரி இருக்கு” என்று சொல்லும் போதே, வாஷ்பேசின் குழாய்க்குள் எங்கள் வாழ்க்கைப்பயணம் முடிந்தது.

Thursday, September 4, 2008

'அதை' போட மறந்திட்டேன்...

அதை போடுறதுக்கு எப்படி மறந்தேன்னே தெரியல....

காலையில ஆபிஸ் வந்தபிறகு, டாய்லட்டுலதான் கவனிச்சேன்...

இதை எல்லாம் போடுறதுக்கு கூடவா மறப்பாங்க?

அப்படி என்ன மறதியோ?

நல்லவேளை, யாரும் கவனிக்கலை...

யாராவது பார்த்திருந்தா என்ன நினைப்பாங்க? இவ்ளோ பெரிய கம்பெனில வேலை பாக்குறவன், இத கூட போடாமன்னு... ச்சே... ச்சே...

பேசாம, வீட்ல போயி போட்டுட்டு வந்திடலாமா?

வேண்டாம், வேண்டாம்... அங்க எல்லாம் போயி யாரு பாக்க போறா?

நாம போடாம வரும் போதுதான், மத்தவன எல்லாம் பார்ப்போம்... அதோ, முன்னாடி போறானே... அவன் சட்டைக்கு கீழே கொஞ்சமா தெரியிதே...

அடுத்த முறை, அந்த மாதிரி பெல்ட வாங்கணும்.

Wednesday, September 3, 2008

இதற்கெல்லாம் தணிக்கை கிடையாதா?

திரைப்படங்களுக்கு தணிக்கை உள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், விளம்பரங்களும் நேரடி தணிக்கை இல்லாவிட்டாலும் மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சகம் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கிறது.

பொது நிகழ்ச்சியில் கவர்ச்சியாக உடையணிந்து வரும் நடிகைகளைக் கண்டிக்க கலாச்சார காவலர்கள் இருக்கிறார்கள்.

ஏன், நமது தமிழ்மணமில் கூட சில சொற்களுக்கு தணிக்கை உள்ளது.

ஆனால், கடைகளின் விளம்பர பலகைகளைக் கவனிக்க ஏதேனும் தணிக்கை உள்ளதா?

பெங்களுர் ஓசூர் சாலையில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை இது.

படம் நீக்கப்பட்டது.

உன் பார்வை சரியில்லை. இதையெல்லாம் கலை கண்ணொட பார்க்கணும்’ன்னு சொல்லிடாதீங்கப்பா… :-)

இசையருவியின் “தமிழ் இசை விருது”

கலைஞர் டிவி ‘விடுமுறை தின’ சிறப்பு நிகழ்ச்சி விளம்பரம் கோமாளித்தனமாக இருந்தாலும், அன்று ஒளிப்பரப்பான “தமிழ் இசை விருது” நிகழ்ச்சி, தமிழ் திரைப்பட இசையை கவனித்து ரசித்து வருபவர்களுக்கு வித்தியாசமாகவும், தங்களுக்கு பிடித்த இசை கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதை கண்டு சந்தோஷமடைய ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.



பொதுவா விருது வழங்கும் விழாக்களில் இசை சம்பந்தமாக சிறந்த இசையமைப்பாளர், பாடகர், பாடகி, கவிஞர் என்று நாலு விருது வழங்குவார்கள். ஆனால் இந்த விழாவில், சென்செஷனல் ஆல்பம், கிரேஸி சாங், ரீ-மிக்ஸ் சாங் என்று எக்கச்சக்கமான விருதுகள் கொடுத்தார்கள். அதனால் ஒரே விழாவில் ரஹ்மான், ஹாரிஸ் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.

ஹாரிஸுக்கு விருது வழங்கும் ஜீவாவின் மனைவி



ஸ்ருதி கமலஹாசன் “அன்பே சிவம்… அன்பே சிவம்…” பாடலை பாடினார். எல்லோரும் ஆஹா ஒஹோ என்று புகழ்ந்தார்கள். எனக்கென்னமோ, அப்பா பாடியதை குதறிய மாதிரி தான் தெரிந்தது. ஒருவேளை, நம்ம ஞானம் அவ்வளவுதான் போலிருக்கு. கேட்க, கேட்க பிடிக்குமாயிருக்கும்.



விருதுகளுக்கு நடுவே குத்து ஆட்டம் (ஸ்னிக்தா, மேக்னா நாயுடு) போட்டத்திற்கு பதிலாக, இசையமைப்பாளர்களை இசையமைக்கவோ, பாடகர்களை பாடவோ வைத்திருக்கலாம்.



விஷுவலுக்காக ஷங்கருக்கு விருது



ஹாரிஸ் ஜெயராஜ், இசையமைப்பாளர் ஆன பிறகு, தற்போதுதான் ரஹ்மானை சந்திப்பதாக கூறினார்.



ரஹ்மான் பேசும்போது தனக்கு குமுதம் கேள்வி-பதிலில் அதிகமான கேள்விகள், “ஏன் முன்புபோல் இப்போது மெலடி அதிகம் இல்லை?”, “ஏன் ரீ-மிக்ஸ் செய்கிறீர்கள்?” என்று வருவதாகவும், இது இசையமைப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் உள்ள இடைவெளியைக் காட்டுவதாக கூறினார். இதை வருங்காலத்தில் தவிர்க்க முயலுவேன் என்றும் கூறினார்.

Tuesday, September 2, 2008

இண்டர்வியூ

பிரவுசிங் செண்டருக்கு வந்திருந்த நோக்கத்தையே மறந்திருந்தான் சுந்தர். இண்டர்வியூ மெயில் வந்திருந்தால் பார்க்கலாம் என்று வந்தவன், வேறு எந்த கருமத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவாறு நினைவு வந்து பார்க்கும்போது மெயில் வந்திருந்தது.

சுந்தருக்கு இது இருபத்தியெட்டாவது இன்டர்வியூ. கஷ்டப்பட்டு ஆரம்பநிலை பரீட்சைகளில் தேர்வானால், நேர்முக தேர்வில் நொங்கெடுக்கிறார்கள். நேர்முக தேர்வுக்காக, இரவெல்லாம் கண் விழித்து மிட்நைட் மசாலா முடிந்த பின்னும் படித்துவிட்டு சென்றால், முதல் தேர்விலேயே “ரிசல்டை அப்பாலிக்காக சொல்றோம்” என்று சொல்லிவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். அது என்னமோ தெரியவில்லை. நன்றாக எழுதியவர்களுக்கு, உடனே திருத்தி ரிசல்ட் சொல்லிவிடுகிறார்கள்.

சுந்தர் இருப்பது திருநெல்வேலி. அவ்வப்போது இண்டர்வியூக்காக மட்டும் சென்னை, பெங்களுர் சென்று வருவான். வீட்டுப்பக்கம் இருந்த குட்டிசுவரை பிரிய மனமில்லை.

“என்னடா! அடுத்த வாரம் சென்னை போறியாமே?” கேட்டான் குட்டி சுவரின் பொது குழு உறுப்பினரான அமீர்.

“ஆமாம்டா… ஒரு கம்பெனியில இருந்து கூப்பிட்டு இருக்காங்க… கம்பெனி சின்னதுதான்… பார்ப்போம், கிடைக்குதான்னு”

“நல்லா பண்ணு” மொபைல் கம்பெனியில் வேலை பார்க்குற மமதை.

“சரிடா… எனக்கு உன் ஷு வேணும். என்னுது காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல வாங்கியது… ரொம்ப பழசா இருக்கு”

ஏண்டா… மும்பை டூர் போனதையும் புது ஷு வாங்குனதையும் இவங்கிட்ட சொன்னமோன்னு நினைச்சி இருப்பான்.

“ம்ம்ம்… தாரேன். இப்ப கம்பெனி வேலையா பைக்ல தனியா செங்கோட்டை வரை போறேன். நீயும் வா.”

வெயிலுல அவன் கூட பைக்குல போறத நினைச்சா கடுப்பாக வந்தது. ஒரு நாள் முழுக்க வேஸ்ட்டா போகும். வேறு வழியில்லாமல் சரியென்று வண்டியில் ஏறினான். வண்டி சீட் தோசைக்கல் போலிருந்தது.

----------------------------

ந்த ஷுவை கால்ல போட்டுட்டு போலாமா? இல்ல பேக்ல வச்சு கொண்டு போலாமா? என்று யோசிச்சிட்டு இருக்கும்போது, “எதுலடா ஊருக்கு போற?” என்று அம்மா கேட்டாள்.

“டிரெயின்ம்மா”

“டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டியா?”

“அம்மா, இப்பெல்லாம் ADMKல எலெக்சன் டிக்கெட் கூட கிடைக்கும். ஆனா டிரெயின்ல டிக்கெட் கிடைக்குறதில்ல. பொங்கலுக்கு போறதுக்கு தீபாவளிக்கே புக் பண்ணனும். தீபாவளிக்கு போறதுக்கு சுதந்திர தினப்ப புக் பண்ணனும்.”

“சரி சரி… உனக்கு பிடிச்ச கொத்தமல்லி துவையல் வச்சிருக்கேன். நைட் சாப்பிட இட்லி எடுத்துட்டு போறியா?”

பிடிச்சதுதான். ஆனா அதை எடுத்துட்டு போனா, இந்த ஷுவை பேக்குல வைக்க முடியாது. இட்லியா? ஷுவா?

போவது இண்டர்வியூக்கென்பதால் சான்றிதழுடன் ஷு உள்ளே போனது.

----------------------------

சே சே… இனி ரிசர்வ் பண்ணாம டிரெயின்ல போக கூடாதுப்பா… டாய்லட் போக கூட கால் கிட்ட உக்கார்ந்தவன் கிட்ட பர்மிஷன் வாங்க வேண்டியிருக்கு. டாய்லட் போறவனுங்க, வந்தோமா, போனோமா, போனோமான்னு இல்லாம்ம, அவனுங்க ஒவிய திறமைய இங்கத்தான் காட்டுவானுங்க. பன்னாடைக… லாலுக்கிட்ட சொல்லி இதுக்கு எதாச்சும் பண்ண சொல்லணும்.

கால்கிட்ட உக்கார்ந்தவன், கீழேயே படுத்திருந்தான். நல்லவன்டா நீ. என் எடத்துல நீயும் உக்காராம, வேற எவனையும் உக்கார விடாம பார்த்துக்கிட்டியேடா!

அது என்னது அவன் தலைக்கு கீழே? தலையணை மாதிரி. டேய்! எந்திரிடா… அது என் பேக்குடா…

“ஹலோ… எந்திரிங்க… என் பேக்”

“அப்படிங்களா? சும்மாதானே இருந்திச்சின்னு எடுத்தேன்”

“இல்லங்க… நான் கையிலேயே வச்சிருக்கேன்”

“அப்படி என்ன தம்பி வச்சிருக்கே?”

மும்பை ஷுன்னு சொல்றதா? என்ன நினைப்பான்?

“என் சர்டிபிகேட்ஸ்’ண்ணா”

“ஓ! அப்படியா? இந்தா”

அப்பாடி!!!

----------------------------

சும்மாவா சொன்னாரு தளபதி, சிங்கார சென்னையாக்குவேன்னு. எத்தனை பாலம்? எத்தாம் பெரிய பாலம்?ன்னு பச்சைக்கலர் பாலங்களைப் பார்த்துக்கொண்டே நடந்ததில், கீழே இருந்த பச்சைக்கலர் ஐட்டத்தை கவனிக்காமல், சதக்கென்று மிதித்தான்.

என்ன இது? இந்த இடத்துல ரோடு ரொம்ப மென்மையா இருக்குன்னு கீழே பார்த்தா… சாணி.

சென்னை இன்னும் சிங்காரமாகலைன்னு நினைச்சிக்கிட்டே, சோடா வாங்கி ஷுவை கழுவினான்.

----------------------------

ரு வழியா கம்பெனியை கண்டுப்பிடிச்சாச்சு. மாடிப்படியேறி, கதவை திறக்கும்போது, பக்கத்திலிருந்த செக்யூரிட்டி கையை அந்த பக்கம் காட்டினான்.

அலுவலக கதவருகே ஒரு பலகை மாட்டப்பட்டிருந்தது.

“காலணிகளை இங்கே கழட்டி விட்டு செல்லவும்”