Friday, October 31, 2008

மதுரை 'பிரமாண்ட' மஹால்

சில நாட்களுக்கு முன்பு, மதுரையின் நடுவே உள்ள திருமலை நாயக்கர் மஹாலுக்கு சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்கள். மஹாலுக்கும் சுற்றியுள்ள சுழலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.



மதுரையை (நேரடியாக) ஆண்ட திருமலை நாயக்கரால், கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, இந்த பிரமாண்ட தூண் மாளிகை.



இப்போது இருக்கும் இந்த பிரமாண்டமே, ஒரு மிச்சம்தான். முன்பு ராஜா வாழும்போது இருந்தது, இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பெரியது.



திராவிட, ஐரோப்பிய மற்றும் முகாலய பாணியில் அமைந்த கட்டிடக்கலை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, மதுரையில் குளோபலைசேஷன்.



மணிரத்னத்துக்கு பிடித்த ஷுட்டிங் ஸ்பாட். பம்பாய், இருவர், குரு என்று பல படங்களில் நடித்துள்ளது. நேருக்கு நேர், பீமா போன்ற படங்களிலும் ராஜாவின் உண்மையான அரண்மனை, கனவு பாடல்களின் செட் பிராப்பர்டி ஆனது.



இது போல வேறெங்கும் 248 பெரிய தூண்களுடன் கூடிய அரண்மனை, இந்தியாவில் கிடையாது.



ஏகப்பட்ட வளைவு அலங்காரங்கள் இருந்தாலும், அந்த காலத்தில் மரமோ, இரும்போ உபயோகப்படுத்தாமல், செங்கலுடன் சுண்ணாம்பையும் கரும்பு சாறையும் மட்டுமே பயன்படுத்தி கட்டியுள்ளார்கள்.



கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும் போல!!!

Thursday, October 23, 2008

நூறுனா சும்மாவா?

எதன் எண்ணிக்கையும் நூறை தொடும்போது, அது சிறப்பாகிறது. நடிகர்களின் படம், படம் ஓடிய நாட்கள், கிரிக்கெட் வீரர்களின் மேட்ச், எடுக்கும் ரன், இவையனைத்துமே நூறை தொடும் போது, இவர்களுக்கும் மகிழ்ச்சி. இவர்களை பிடித்தவர்களுக்கும் சந்தோஷம். கணக்கெடுத்திருந்தால், தசரதனும் நூறாவது மனைவியை மணக்கும் போது, அதிகம் மகிழ்ந்திருப்பான்.



நடிகர்கள் நூறாவது படத்தில் நடிக்கும்போது, கொஞ்சம் கவனம் எடுத்து, சிரத்தையாக நடிப்பார்கள். பிரபல நடிகர்களின் நூறாவது படத்தை பார்த்தாலே, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கதாநாயகனாக, நூறு படத்தில் நடிப்பது என்பது சாதனைதான். எத்தனை வருடங்களில் நூறை தொட்டார்கள் என்பது அவர்களது திறமையை, திரை வாழ்வை பொறுத்தது.

1935இல் சதி லீலாவதி படத்தின் மூலம் பட கணக்கை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். செஞ்சுரி போட்டது, 33 ஆண்டுகளுக்கு பிறகு, ஒளி விளக்கு படத்தின் மூலம். கலைஞரின் வசனம் பேசி ஆரம்பித்த சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் சதம் மிகவும் சிறப்பானது. படம் - நவராத்திரி (1964). ஒன்பது கதாபாத்திரங்களில் ஆச்சரியம், பயம், அனுதாபம், கோபம், அன்பு, வெறுப்பு, காதல், வீரம், மகிழ்ச்சி என்று நவரசங்களையும் நடிகர் திலகம் காட்டி நடித்த படம், வெளியானது பராசக்தி வந்து 12 ஆண்டுகளூக்கு பிறகு.

சினிமாவுக்கென்றே வாழும் கமலுக்கு நூறு ஒரு பெரிய விஷயமே இல்லை. அறுபதில் நடிக்க ஆரம்பித்த கமல், இருப்பத்தியொரு வருடங்களில் நூறாவது படமான ராஜ பார்வையில் நடித்தார். இதில், கதாசிரியர் கமலும் எட்டி பார்க்க, படத்தை எடுத்தவர் தயாரிப்பாளர் கமல்.

ரஜினியின் நூறாவது படம், அவரது உண்மையான ஆன்மிக ஆர்வத்தை வெளிக்காட்டியது. ரஜினியின் ஆன்மிக குருவை (ராகவேந்திரர்) பற்றிய இப்படத்தை தயாரித்தது அவரின் அறிமுக குரு (பாலசந்தர்). இயக்கியது அவரின் கமர்ஷியல் குரு (எஸ்.பி.முத்துராமன்). நடிக்க வந்து 10 வருடங்களில் இப்படத்தில் நடித்தார். இதிலையும் அவர்தான் ஃபாஸ்ட்டு. பர்ஸ்டு.

விஜயகாந்தும், தனக்கு பிடித்ததும் தனக்கு பொருத்தமான போலிஸ் கதாபாத்திரத்தில் நூறாவது படத்தில் நடித்தார். படத்தின் பெயர் அவருடைய பெயருடன் நிலைத்துவிட்டது. படத்தின் வெற்றி அந்தளவு பிரமாண்டமானது. முதல் படம் "இனிக்கும் இளமை" வெளியானது 1979 இல். "கேப்டன் பிரபாகரன்" வெளியானது 1991 இல்.

இவரளவுக்கு மற்ற நடிகர்களால் நூறாவது படத்தில் வெற்றியை கொடுக்க முடியவில்லை. சத்யராஜின் "வாத்தியார் வீட்டு பிள்ளை" சுமார். சத்யராஜ் தனி கதாநாயகனாக நடித்தது, அவரது அறுபதாவது படத்தில்தான். பிரபுவின் "ராஜகுமாரன் (1994)"னும் சுமார் தான். இவரது முதல் படமான "சங்கிலி" வந்து 12 வருடங்கள் கழித்து இது வந்தது. சரத்குமாரின் "தலைமகன்" வந்ததே எனக்கு நினைவில்லை.

நடிகைகள் குறைந்த வருடங்களில் நடிகர்களை விட அதிக படத்தில் நடித்து விடலாம். ஆனால் நூறு படங்களில் நடிக்கும் அளவுக்கு திரை துறையில் இருப்பது அந்தளவு சுலபமில்லை. அப்படி நடித்தவர்கள், சாவித்திரி (கொஞ்சும் சலங்கை), சரோஜா தேவி (பெண் என்றால் பெண்), கே.ஆர். விஜயா. "முற்றிலும் மாறுபட்ட" கதாபாத்திரத்தில் நூறாவது படத்தில் நடித்தவர் ரோஜா. படம் - பொட்டு அம்மன்.

நடிகைகள் நிலைமை இவ்வாறென்றால் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் செஞ்சுரிகள் அபூர்வமானவை. அவ்வளவாக யாரும் கண்டு கொள்ளாதது. பாலசந்தரின் நூறாவது படம், பார்த்தாலே பரவசம். இதில் அவரது டிவி தொடர்களையும் சேர்த்து கொண்டார்கள். இந்தியா முழுக்க சென்று படம் எடுத்த ராம. நாராயணனின் நூறாவது படம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா. இந்த தலைமுறை இயக்குனர்கள், நூறு படங்கள் இயக்குவது என்பது கஷ்டம்தான். கே.எஸ்.ரவிக்குமார் தொட்டுவிடுவார் என்று நினைத்திருந்தேன். தசாவதாரத்திற்கு பிறகு நம்பிக்கையில்லை. ஹரி மேல் நம்பிக்கை உள்ளது. ஷங்கர் எடுக்க மாட்டார் என்று யார் வேண்டுமானாலும் சத்தியம் செய்வார்கள்.

முன்னணி இசையமைப்பாளர்களால் ஈஸியாக நூறு படங்களில் இசையமைத்து விடலாம். இளையராஜா மூடுபனியிலேயே நெருங்கிவிட்டார்.

குறை பிரசவம் மாதிரி முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்கள் உருவாகும் இந்த காலத்தில், முன்னணி நடிகர்கள் தேர்வு செய்து வருடத்தில் சில படங்களில் மட்டுமே நடிப்பதால், நூறு பட கணக்கை தொடுவதற்கு, முன்பை விட அதிக வருடங்கள் ஆகும். பதினாறு வருடங்களுக்கு முன்பு நடிக்க வந்த விஜயும், அஜித்தும் அடுத்த வருடம்தான் அவர்களது ஐம்பதாவது படங்களில் நடிக்க இருக்கிறார்கள்.


கிரிக்கெட்டிலும் இந்த மாதிரி நூறு சார்ந்த சாதனைகளுக்கு மதிப்பு அதிகம். சச்சினுக்கு நூறு மேல ஆசை அதிகம். உலகத்திலேயே, அதிக தடவை நூறு அடித்தவராச்சே? சர்வன், சங்கக்காரா போன்றவர்கள் தங்களது நூறாவது மேட்ச்சில் நூறு அடித்தவர்கள். நூத்துல நூறு. சாதாரணமாக நூறு அடிக்கும் போதே முக்கியமான வீரர் ஆகிறார்கள், இளம் வயதிலேயே நூறு அடித்தவரும், வேகமா நூறு அடித்தவரான அபிரிடிக்கு, அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும்?


எண்ணிக்கை முக்கியம் இல்லை. தங்கள் பங்களிப்பின் தரமும் அதன் மூலம் அடையும் பெருமையும் தான் முக்கியம் என்றாலும், ஒரு மைல்கல் என்கிற விதத்தில் நூறு சிறப்பானதே.

அப்புறம், இது என்னுடைய நூறாவது பதிவு.

Monday, October 20, 2008

அடுத்த ஒலகத்தரம், இளையத்தளபதியிடமிருந்து

விஜய் வில்லு படத்துக்கு பிறகு நடிக்க போற படம் "கிருஷ்ணகிரி". படத்து பேர வச்சே கண்டுப்பிடிச்சிருப்பீங்களே, யாரு இயக்குனரென்று? பேரருசுவே தான். ரஜினி இப்ப குசேலன்'ல நடிச்சதாலே அதே மாதிரி ஒரு படம் பண்ணனும்'ன்னு இந்த கதைய 'பண்ண' போறாராம். கிருஷ்ணன் கிரி'ன்னு ரெண்டு நண்பர்கள பத்தின கதை இது.



தொடர்ந்து சிட்டி படங்களா பண்றதால ஒரு சேஞ்ச்'க்கு இந்த கிராமத்து படத்துல விஜய் நடிக்க போறாரு. இது கிராமத்து படங்கறதால, முழுக்க முழுக்க கிராமங்களிலே எடுக்க போறாங்களாம். இடங்கள தேர்வு செய்ய டைரக்டர் காரைக்குடிக்கும், மிகிவகாவுக்கும் போறாராம். மிகிவகா'ங்கறது நியூஸிலாந்து'ல ஒரு கிராமம்!!!.

இனி பேரரசு மீதி கதையை சொல்லுவாரு. கேளுங்க. (வாய ரெண்டு சென்டிமீட்டர் மட்டும் திறந்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் ரெண்டு செகன்ட் கேப் விட்டு படிங்க).

“இதுவரைக்கும் யாரும் நடிக்காத கேரக்டர்ல விஜய் இந்த படத்துல நடிக்குறாரு. படத்துல விஜய், கிருஷ்ணன்’ங்கற கதாபாத்திரத்துல தயிரு விக்குறாரு. சின்ன வயசுல இருந்து விஜயும் அவர் நண்பரும் மாட்டு தொழுவத்துல வளருறாங்க. வெளிநாட்டுக்கு போய் பால் வித்து பெரிய தொழிலதிபர் ஆக ஆசை படுற நண்பனை, விஜய் கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புறாரு. அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கையில நடக்குற திருப்பங்கள் தான் கதை.”

பல கஷ்டங்களுக்கு பிறகு கிடைத்த இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மூலம் மீதி கதையை தெரிஞ்சுக்கலாம். என்ன கஷ்டம்னா, இந்த ஸ்கிரிப்டை பேரரசு பல நடிகர்களுக்கு முன்பு கொடுத்திருக்கிறார். படித்த அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் பல விதங்களில் இதை அழிக்க முயன்று, துரதிஷ்டவசமாக நம்மிடம் ஒரு காப்பி வந்து சேர்ந்தது.

நண்பனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு விஜய் இங்கே முன்னாள் கதாநாயகியுடன் ஒரு குத்து பாட்டும், இன்னாள் கதாநாயகியுடன் ரெண்டு டூயட்டும் ஆடிட்டு இருக்காரு. இவரோட இந்த சிறந்த சேவையைப் பாராட்டி நியூசிலாந்து அரசாங்கம், இவர் படம் போட்டு ஒரு தபால் தலை வெளியிடுறாங்க. அப்ப வருகிற பாட்டுதான் “உன் தல தறுதல… என் தல இருக்குறது தபால்தலை…” அப்படிங்கற பாட்டு.

அப்படியே ஊர சுத்திட்டு இருக்குறவரு ஒரு நாள் ஒரு அதிர்ச்சியை பாக்குறாரு. அவரு கஷ்டப்பட்டு வெளிநாடு அனுப்பி வச்ச அவரு ஃப்ரண்டு, வெளிநாட்டுல பெரிய தொழிலதிபரா இருப்பாருன்னு நினைச்ச அவரு ஃப்ரண்டு, நியூசிலாந்துல உள்ள ஒரு மாட்டு தொழுவத்துல சாணி அள்ளிட்டு இருக்காரு. அப்ப, அந்த சாணிக்குள்ள இருந்து எட்டு எழுத்துக்கள் சுத்திட்டு வந்து ஆடியன்ஸ் முன்னாடி நிக்குது. அதுதான் INTERVAL.

ஆக்சுவலா, என்ன நடந்துருக்குனா, டிராவல் ஏஜெண்ட் அமெரிக்கா அனுப்புறேன்னு சொல்லி ஆஸ்திரேலியாவுக்கு போலி விசா எடுத்து அனுப்பியிருக்காரு. பைலட், ஆஸ்திரேலியா போறேன்னு சொல்லி நியூசிலாந்து போய் இருக்காரு. அங்க ஒருத்தரு, பால் வியாபாரம் பண்ணலாம்னு சொல்லி பணத்தைப் பிடுங்கிட்டு சாணி அள்ள வைச்சிருக்காரு. ஏமாத்துன இவங்க மூணு பேரையும் எப்படி ஹீரோ கட்டம் கட்டி, ஸ்கேட்ச் போட்டு சாணி அள்ள வைக்குறாருங்கறதுதான் மிச்ச கதை. அதை தனக்கே உரிய பாணியில் பாக்குறவுங்க மிரளுற மாதிரி திரைக்கதை அமைச்சியிருக்காரு.

நண்பன் கேரக்டேருல நடிக்க பசுபதிய கேட்டாங்களாம். ஏற்கனவே பெரிய விஜய் படத்துல நடிச்சி நொந்து போயி இருந்தவரு, இந்த கதைய படிச்ச பீதியில, சினிமாவை விட்டுட்டு கூத்து பட்டறைக்கே போய்டலாம்னு முடிவு பண்ணிட்டாராம். அதனால, அதுல ஸ்ரீமன் அல்லது நிதின் சத்யா நடிக்கலாம்னு பேச்சு அடிபடுது. நிதின் சத்யா, தற்போது விஜய் அப்பா சந்திரசேகர் இயக்கத்துல ஹிரோவா நடிச்சிட்டு இருக்காரு என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய்-பேரரசு காம்பினேசன்னு சொல்லியாச்சு. அவங்களோட சிறப்பம்சமான கமர்ஷியல் ஐட்டங்கள், பஞ்ச் டயலாக்குகள் இல்லாமலா? ஹீரோ அறிமுகக்காட்சியில, பேரரசு கூலிங்கிளாஸ்ல போஸ்ட்மேன் வேஷத்துல வந்து “நான் கொடுக்குறது தபாலு… தயிருக்கு தேவை வெறும் பாலு!!! மாடு போடுறது சாணி… தமிழ் நாட்டுக்கு இவருதான் டோனி!!!”ன்னு டயலாக் விடுறாரு. இதுக்கே தியேட்டர் அலற ஆரம்பிக்கும் போது, விஜய் வைக்கோல் போருக்குள்ள இருந்து எண்ட்ரி கொடுக்குறாரு “கிரி கிரி கிரி, இது கிருஷ்ணகிரி… வரி வரி வரி நான் வரிபுலி…”ங்கற பாட்டோட.

இனி பஞ்ச் டயலாக்குகள பார்க்கலாம்.

ஒரு சண்டைக்காட்சியிலே விஜய் சொல்ற டயலாக் இது,
"மின்னல பார்த்தா கண்ணு போய்டும்ண்ணா...
பாக்கலேன்னா மின்னலே போய்டும்ண்ணா...
நாமளும் அப்படிதாண்ணா
"

அப்புறம் படத்துல ஒரு போட்டி டான்ஸ் இருக்கு... அதுல ஜெயிச்சத்தப்புறம், என்ன சொல்றாருன்னா,
"நீ எவ்ளோ பெரிய டான்சரா இருந்தாலும், உன் சாவுக்கு உன்னால ஆட முடியுமாடா?"

இன்னொரு சீன்ல ஒரு சிற்பிய பார்த்து சொல்றாரு,
"நீ உளிய எடுத்து கல்லுல அடிச்சா அது கலை
நான் எடுத்து உன்மேல அடிச்ச அது கொலை
"

கடைசில வெளிநாட்டுக்கு போக ஆசை படுற இளைஞர்களுக்கு ஒரு தத்துவம் சொல்லுறாரு,
"அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நெறைய எடத்துல இருக்கும்; ஆனா அடையார் ஆல மரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும் தான் இருக்கும்"

படம் உலகத்தரத்தொட இருக்கனும்ங்கறத்துக்காக பாட்டு சீன்ல மட்டும் இல்லாம, படம் முழுக்க வெளிநாட்டுக்காரங்கள பின்னாடி நடமாட விட போறாங்க. படத்தை கேன்ஸ்'ல திரையிட விஜய் அப்பா சந்திரசேகர் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாராம். பிளைட் டிக்கெட்டும் ரெடியாம்! கோட் டையும் ரெடியாம்!

படத்துல விஜய் விதவிதமான கட்டம் போட்ட சட்டைய போட்டுட்டு வராரு. ஏன்னா, இது தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைச்சிட்டு போற படமாச்சே?

Tuesday, October 14, 2008

எந்திரன் & மர்மயோகிக்கு எச்சரிக்கை

வாரணம் ஆயிரம் - கேட்க காரணம் ஏராளம்

அடியே கொல்லுதே

கிட்டார் ஆதிக்கம் செலுத்தும் இந்த பாடலை பென்னி, க்ரிஷ்வுடன் சேர்ந்து பாடி இருப்பவர், ஸ்ருதி கமலஹாசன். எனக்கு என்னவோ, இப்பாடலின் சரணம், "காக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி"யை ஞாபகப்படுத்தியது. முணுமுணுக்க வைக்கும் இப்பாடலில் உள்ள கிட்டார் இசை, கொஞ்சம் இரைச்சலை கொண்டு வந்தது போல் உள்ளது.

"உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே!
என் காலை நேரம், என் மாலை வானம், நீ இன்றி காய்ந்திடுதே!"


நெஞ்சுக்குள் பெய்திடும்

மென்மையான இசையில் ஹரிஹரன் தாலாட்டும் குரலில் பாடிய இந்த பாடலை, இரவு விளக்கை அணைத்து விட்டு கேட்டால், தூக்கம் உத்தரவாதம்.

"என்னோடு வா, வீடு வரைக்கும்
என் வீட்டை பார், என்னை பிடிக்கும்"


ஏத்தி ஏத்தி

இதே மாதிரி பாட்ட நான் எங்கயோ கேட்டு இருக்கென? எங்கன்னு தான் தெரியல. எதோட இன்ஷ்பிரசனோ? :-) பசங்களை பத்திய பீட் பாடல் என்பதால் என்னவோ, இந்த பாடலை மட்டும், தாமரைக்கு பதில் முத்துகுமார் எழுதிவுள்ளார்.

"லைட் ஹவுஸ் உயரத்தையும், எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிட்சையில பதில் எழுத, பாதி பேப்பர்ல நோண்டும்"


முன்தினம் பார்த்தேனே

சூர்யா, அலைபாயுதே மாதவன் ஸ்டைல்'லில் பேசி ஆரம்பிக்கும் இந்த பாடல், சாக்சபோன், கிட்டார் இசையில் ஒரு அருமையான மெலடி. இப்படத்தின் பாடல்களில் முன்னணியில் உள்ள பாடல்.

"தலை சாய்க்க தோளும் தந்தாய்…விரல் கோர்த்து பக்கம் வந்தாய்…
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே..
பகல் நேரம் கனாக்கள் கண்டேன், உறங்காமலே… உயிரெண்டும் உராய கண்டேன், நெருங்காமலே…
உனை அன்றி எனக்கு ஏது, எதிர்காலமே…"


ஓம் ஷாந்தி! ஷாந்தி!

மூணு நிமிஷ பிட்டு பாடலை பாடி இருப்பவர்கள், எஸ்.பி.பி. சரணும் கிளிண்டனும். தாளம் ஏறி இறங்கும் இந்த பாடலை, இளமையான எஸ்.பி.பி. பாடியது போல் உள்ளது.

"நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழியெங்கும் உந்தன் முகம்தான்
வலிகூட இங்கே சுகம்தான்"


அவ என்ன என்ன தேடி

ஹாரிஸ்-கௌதம்-தாமரை காம்பினேசனில் இப்படி ஒரு பாடலா? என்று ஆச்சரியப்படுத்தும் இந்த பாடல், மெல்லிய குத்தில் சாதாரணமாக இருந்தாலும், இடையில் வரும் கோரஸ் டாப் கிளாஸ்.

"துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்தில நீட்டி, இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாலோ?
வெளிச்சம் தந்தவ ஒருத்தி, அவளே இருட்டுல நிறுத்தி, ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா எங்கே போனாலோ?"


அனல் மேலே

சுதா ரகுநாதன் கச்சிதமாக பாடியுள்ள இப்பாடல், அட்டகாசமான மெலடி. வயலினும் சித்தாரும், பின்னால் வரும் ஹம்மிங்கும் பீல் பண்ண வைக்கிறது.

"எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ!
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ! "


மெலடிகள் நிறைந்துள்ள இப்படத்தின் பாடல்கள், ஏற்கனவே ஹிட். பொதுவா, மெலடி பாடல்களின் போது, தியேட்டரில் சிகரெட் நிறைய விற்கும். விற்பனையை, கவுதம் 'வாசுதேவ' மேனன் கட்டுபடுத்துகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். (ஒ! தியேட்டருல சிகரெட் பிடிக்க கூடாதோ?)

Thursday, October 9, 2008

நோகாமல் நொங்கு தின்ன ரிலையன்ஸ்

கேபிள் டிவி'யை ஓய்க்கும் வண்ணம், தினமொரு நிறுவனம் டிடிஹைச் சேவையை தொடங்கிவருகிறது. முதலில், டிஷ் டிவி இந்த சேவையை இந்தியாவில் தொடங்க, பின்பு டாட்டா ஸ்கை அதற்கு போட்டியிட்டு கொண்டு வந்தது. கலாநிதி மாறனும் சன் டிடிஹைச் ஆரம்பிக்க, ஒரு தொழிலையும் விட்டு வைக்காத ரிலையன்ஸ், பிக் டிவி டிடிஹைச் சேவையை சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தது.

இந்த போட்டியால், 3000 ரூபாய் என்ற அளவில் இருந்த இந்த சேவையின் விலை, தற்போது, ஆயிரம் ரூபாய்க்கு இறங்கிவுள்ளது. இந்த நிலையில், அடுத்ததாக இன்னொரு நிறுவனமும் கோதாவில் இறங்குகிறது. அது, செல்போன் சேவையில் முன்னணியில் இருக்கும் ஏர்டெல்.

ஏர்டெல், கடந்த சில வாரங்களாக "வித்தியாசமாக பண்றோம்"ங்கற நினைப்புல டிவி'ல ஒரு விளம்பரம் ஒளிபரப்பிட்டு இருந்தாங்க. ஒரு சிவப்பு கலர் சோபாவை காட்டி, "வீட்டில் சந்திக்கிறோம்" என்ற அர்த்தத்தில் "See you at home." என்ற லைனை காட்டி கொண்டிருந்தார்கள். அதாவது, பாக்குறவுங்க எல்லாம், இது என்ன? இது என்ன?ன்னு எதிர்ப்பாக்கனும்மாம்.

இதுக்கு ஆப்பு வைக்கும் விதமா, கொஞ்சம் நஞ்சம் சேர்ந்திருந்த எதிர்ப்பார்ப்புகளையும் அள்ளிட்டு போற மாதிரி, ரிலையன்ஸ்காரனுங்க ஒரு விளம்பரம் போடுறாங்க. அதே சிவப்பு சோபாவை காட்டி, அதே லைனை (“See you at home.”) போட்டு, கடைசில ரிலையன்சின் சேவையை காட்டிட்டாங்க. டிவி'ல பார்த்து எதிர்ப்பார்த்தவங்களும், "ஒ! இது ரிலையன்சுக்கு விளம்பரமா?"ன்னு போயிட்டாங்க. அதாவது, ஒரு வாரமா, இந்த விளம்பரத்துக்கு ஏர்டெல் பண்ணிய செலவின், உழைப்பின் பலனை, ரிலையன்ஸ், ஒரு நைட்டுல பண்ணுன விளம்பரத்தால அள்ளிட்டு போயிட்டாங்க.

இதை, சட்டப்படி தப்புன்னும் சொல்ல முடியாது. ஏன்னா, ஏர்டெல் எந்த பிராண்ட், டிரேட்மார்க் சிம்பளையும் விளம்பரத்துல காட்டல. இப்ப, போனது போதும்டா, முழு விளம்பரத்தையும் போட ஆரம்பிச்சிடாங்க. ஒரே விளம்பரத்துல, கரீனா கபூர், ஸைப் அலி கான், ஏ. ஆர். ரஹ்மான், கவுதம் கம்பீர், ஜாகிர் கான், மாதவன், வித்யா பாலன் எல்லோரும் வாராங்க.

கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடி இந்த மாதிரி தான், பெப்சியும், கோகோ கோலாவும் அடிச்சிக்கிட்டாங்க. நம்ம ஊரு, சன் மியூசிக், இசை அருவி விளம்பரங்களிலும் இந்த சண்ட இருக்கு. இனி, இந்த மாதிரி டீசர் விளம்பரம் போடும் போது, கொஞ்சம் கவனமா போடுவாங்க.

Tuesday, October 7, 2008

கஜயகாந்த் கடிவேலுவின் நேருக்கு நேர்

கஜயகாந்த் கடிவேலுவை சீண்ட(!), வெகுண்டு எழுந்த கடிவேலு, 2011 சட்டமன்ற தேர்தலில் நிற்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் மருவாதையாக வாழும் மிஸ்டர். பொதுஜனத்தை சந்திக்க கிளம்புகிறார்கள். பிரச்சாரத்தில், ஒரு வீட்டில் இருவரும் ஒரே நேரத்தில் நுழைய நேரிடுகிறது.

பொதுஜனம் : பாத்து வாங்கையா. நாலு பேரு வந்து போற இடம் இல்லையா?
கஜயகாந்த் (கடிவேலுவை பார்த்து) : யோவ் யோவ்... என்னய்யா இங்கே வந்துருக்கே?
கடிவேலு : வேற எங்கே போறது?
கஜயகாந்த் : இது கார்பரேசன் ஏரியா. இங்கே வருரதுன்னா, எலெக்சன் கமிசன் கிட்ட அனுமதி வாங்கணும்.
பொதுஜனம் : யோவ் யோவ் யோவ்! ஒட்டு வேணும்னா கேட்டு தொலைங்கையா. அதுக்கு ஏன் சுத்தி வளச்சி கண்டதையும் பேசுறீங்க.
பதிஷ் (கஜயகாந்திடம்) : தலைவா, வாங்க வேற வீட்டுக்கு போகலாம்.
கஜயகாந்த் : இருப்பா. (பொதுஜனத்திடம் திருப்பி). புரிதில்ல புரிதில்ல. அப்ப வோட்ட எனக்கு போடுங்க.
கடிவேலு : அய்யா, காமெடி பண்ணி ரொம்ப நாளு ஆகுதையா. வோட்ட எனக்கு போடுங்கையா.
கஜயகாந்த் : ஏய்! ஒரு அரசியல் தலைவர் நின்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கும் போது, "ஐயா, கொய்யா"ன்னுட்டு. சத்தம் இல்லமா கேக்கணும் ராஸ்கல்.
பொதுஜனம் : சரி, சரி. ரெண்டு பேரும் சண்ட போடாதிங்கையா.
கஜயகாந்த்: ஏய், நான் எப்படா இவன் கூட சண்டை போட்டேன்? சண்ட போடுற அளவுக்கு இவன் எனக்கு இக்குவலான்ன ஆளா?
பொதுஜனம் : டிவி பாக்குற நேரத்துல உசுர வாங்கதிங்கையா. ரெண்டு பேரும் ஓரமா நில்லுங்க.
கடிவேலு : சரிங்க சாமி

கடிவேலு ஓடி சென்று கஜயகாந்த் பக்கம் நிற்கிறார்.

கஜயகாந்த் : டேய்! என்னடா இங்க வந்து நிக்குற?
கடிவேலு : அவருதானே, நம்ம ரெண்டு போரையும் ஓரமா நிக்க சொன்னாரு.
கஜயகாந்த் : தல்ட்ரா, தல்ட்ரா... முதல்ல... (பொதுஜனத்திடம்) டேய், நான் தமிழ்நாடு பூரா பிரச்சாரம் போகணும். என் பேச்சை கேளு முதல்ல.
கடிவேலு : ஆமாண்ணே, நானும் நாலு தெரு போகணும். முதல்ல, என் பேச்சை கேளுங்க.

பின்னால் நின்று கொண்டிருந்த பழருட்டி "தூ" என்று துப்பி விட்டு செல்கிறார்.

கடிவேலு : அவரு ஏன் கோவிச்சிட்டு போறாரு? தேர்தல்ல பொறுமைதானே முக்கியம்.
கஜயகாந்த் : பார்த்திருறேண்டா இன்னைக்கு.
பொதுஜனம் : சரி சரி... சொல்லுங்க. ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவீங்க?
கடிவேலு : நான் வந்தா மக்களுக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்குவேன். நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்திட்டு, அதிகாரிகள் அவுங்க வேலைய ஒழுங்கா பண்றாங்கலான்னு பார்த்துக்குவேன்.
பொதுஜனம் (கஜயகாந்திடம்) : அப்ப நீங்க?
கஜயகாந்த் : இதுவரைக்கு வந்தவுங்க தமிழ்நாட்டுக்கு ஒண்ணும் பண்ணல. நான் வந்தாலும், ஊழல ஒரு நாளுல ஒழிக்க முடியாது. நமக்கு நம்ம நாடுதான் முக்கியம். இலங்கை, பாகிஸ்தான் பிரச்சனை தீர வழி சொல்லுவேன். வீட்டுக்கு ஒரு கோழி குஞ்சு கொடுப்பேன்.
பொதுஜனம் : ஐயையையே.... அவரு என்ன அழகா வாக்குறுதி கொடுத்தாரு? நீ என்ன குழப்பிக்கிட்டு. ஒரு அரசியல்வாதியா இருந்து சட்டசபையில இருந்து அப்படி என்னதான் டிரெயினிங் எடுத்த?
கஜயகாந்த் : டேய்! சட்டசபைக்கும் இதுக்கும் என்னடா இருக்கு? அங்க இதுலம்மா சொல்லி தராங்க?
பொதுஜனம் : ஏய்! என்னை டிவி பாக்க விடாம, என் நேரத்த கெடுத்துட்டு இருந்த, மண்ட மேலயே போட்டுடுவேன். போயிடு பேசாம.
கஜயகாந்த் : ஏண்டா, இப்ப எமோசன் ஆகுற? ஏன் எமோசன் ஆகுற?
பொதுஜனம் (பயங்கர காண்டுடன் ): போட்டு தள்ளிடுவேன்... ஆமா... அந்த தங்கம் என்னா அருமையா வோட்டு கேக்குது. எப்ப பார்த்தாலும்.....

என்று சொல்லிக்கொண்டே ரீமோட்டை தூக்கி எறிய முற்படுகிறார்.

கஜயகாந்த் : டேய்.... டேய்... வாடா...வாடா.. உன்ன வச்சிக்கிறேன்... உன்ன நல்லவன்னு நம்பி வந்ததுக்கு ரீமோட்ட தூக்குறீயா?

(மனதுக்குள்) இந்த பயலுக்கு இவ்ளோ ஆதரவா?

கடிவேலுவிடம் திரும்பி,
கஜயகாந்த்: டேய்! நான் போற எடத்துக்கு "வராத வராத"ன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்?
கடிவேலு : நான் போற எடத்துக்கு நீங்க வராதீங்கன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்?
கஜயகாந்த்: என்ன விட அதிக செல்வாக்குன்னு திமிரா உனக்கு? இருடா உன்ன வச்சிக்கிறேன்...இரு... வச்சிக்கிறேன்...

(மனதுக்குள்) இவன எப்படி தூக்குறது? என் பின்னாடி தானே வருவான்? அப்ப தூக்குறேன்.

என்றபடியே, அடுத்த வீட்டுக்குள் நுழைகிறார்.

அந்த வீட்டில், இரு பொடிசுகள் சுட்டி டிவி பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
கஜயகாந்த்: தம்பிகளா! எனக்கு வோட்டு போட்டுடுங்க...
பொடுசு : இன்னும் ஒட்டு போடுற வயசு வரலிங்கையா.
கஜயகாந்த்: சரி, சரி... தேர்தல் நிதியாச்சும் கொடு.
பொடுசு : தூ... இதுலாம் ஒரு பொழப்பு?

அப்போது, அங்கு வரும் கடிவேலு, "அய்யா" என்று கூவ,
கஜயகாந்த், "சட் அப், யு நான் சென்ஸ் அண்ட் இடியேட் யு நியூ சென்ஸ்" என்று அலறியப்படி கடிவேலுவை விரட்டுகிறார் .

சமைக்கலாம்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

இந்த வாரம், வாரமலரில் வந்த ஒரு கேள்வி.

அன்புள்ள மேடம்,

நமஸ்காரம். எம்.சி.ஏ., படித்து விட்டு, நான் ஐ.டி.,யில் வேலை பார்க்கிறேன். திருமணமாகி, அவனும் என்னுடன் தான் வேலை பார்க்கிறான். காதல் திருமணம் தான். எனக்கு 28 வயதாகிறது; அவன் என்னை விட ஒரு வயது மூத்தவன். மேடம், நான் மிக, மிக செல்லமாக வளர்ந்தவள். கோவையில் என் பெற்றோருக்கு ஆடம்பரமான பங்களா, ஆள் படை எல்லாம் இருக்கிறது. இன்று வரையில் கோவை பங்களாவின் சமையலறை எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஒரு காபி வேண்டுமானாலும் அம்மா, நான் இருக்கும் இடம் தேடி காபியை வேலைக்காரப் பெண்ணிடம் கொடுத்து அனுப்புவார்.

திருமணத்துக்குப் பிறகு, எங்களுடன் சிறிது காலம் என் மாமியார் வந்து தங்கியிருந்தார். அவர் இருந்த வரையில் சமையல் ஒரு பிரச்னையாக இல்லை. இருந்தாலும், "ஊரிலிருந்து சமையலுக்கு ஆள் வரவழைக்கிறேன்!' என்று சொன்னேன். "எதற்கு வீண் செலவு... இரண்டு பேருக்கு என்ன தொலையாத சமையல்?' என்று தடுத்து விட்டார் என் மாமியார். என் கணவன் சரியான அம்மா பிள்ளை. அப்படியே ஆமாம் போடுகிறான். இப் பொழுது ஊருக்குப் போய் விட்டார் மாமியார். "சமையல் ஆளுக்கு வேண்டுமானாலும் நாங்களே சம்பளம் கொடுத்து விடுகிறோம். நீ சிரமப்பட்டால் எனக்கு தாங்க முடியாது!' என்கிறார் அப்பா... "உப்போ, காரமோ, எதையோ போட்டு சமைத்துப் பழகு. நானும் உனக்கு உதவியாக இருப்பேன். வேண்டுமானால் வேலைக்காரி வைத்துக் கொள்... சமையலுக்கு யாரும் வேண்டாம்!' என்கிறான் இவன்.

இதனாலேயே எங்கள் இருவருக்கும் இடையே தினமும் சண்டை... இவனுக்கு தோசை, இட்லி எல்லாம் வேண்டும்; வெறும் ரொட்டி இறங்காது. இவன் அம்மா, நன்றாக நாக்கை வளர்த்து வைத்திருக்கிறார். சமையலறையில் காலையில் இரண்டு மணி நேரம், இரவு இரண்டு மணி நேரம் வீணாக்குவது கிரிமினல் வேஸ்ட் இல்லையா? மாலையில் வீடு திரும்பும் முன் ஏதாவது ஓட்டலில் சாப்பிட்டு வரலாம் என்றால், "என் உடம்புக்கு ஆகாது!' என்கிறான். தினமும் வீடு வந்து சேரவே இரவு 9.00 மணிக்கு மேலாகி விடுகிறது. வந்த பிறகும், "லாப் டாப்' பைக் கட்டிக் கொண்டு அழ வேண்டியிருக்கிறது. காலையில் சமைத்த சோறில் மோரை ஊற்றிச் சாப்பிட எனக்கே பிடிக்கவில்லை. அவனுக்கும் இறங்கவில்லைதான். வீம்புக்காகத் தின்கிறான். இவனை எதற்காக கல்யாணம் செய்து கொண்டேன் என்று வருந்துகிறேன்... இதை அவனிடமே வாய் விட்டுச் சொல்லியும் விட்டேன். அவனோ, "இதே கேள்வியைத்தான் நானும் எனக்குள் கேட்டுக் கொள்கிறேன். நமக்குள் கெமிஸ்ட்ரியே ஒத்துப் போகவில்லை!' என்கிறான்.
என்ன செய்வது? பிரிந்து விடவா? பதில் தேவை.

இப்படிக்கு,
அன்பு மகள்.


இதற்கான அனுராதா ரமணனின் பதிலை இங்கே காணலாம்.

ஸோ, பீ கேர்பூல்...

இவரது எண்ணம் இங்கே கேள்வியாக வெளிப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணங்கள், இன்னும் எங்கெல்லாம் செயல் வடிவம் பெற்றதோ?


இன்னும் சில ஆண்டுகளில், இந்த பகுதியிலேயே "அவன் சமைக்கிற சாப்பாட்டுல உப்பே இல்ல. டைவர்ஸ் பண்ணிடலாமா?"ன்னு கேள்வி வரலாம். அப்ப, பிளாகுல இந்த மாதிரி காப்பி பேஸ்ட் பண்ணி பதிவு போட, ஒரு ஆணாக, எனக்கு நேரமும், உரிமையும் இருக்குமான்னு தெரியல. :-)

நன்றி : தினமலர் - வாரமலர்.

Sunday, October 5, 2008

காதலில் விழுந்தேன், சக்கரகட்டி, ராமன் தேடிய சீதை

காதலில் விழுந்தேன்

முதல் பாதி லவ் பண்றவங்களுக்கும், காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்களுக்கும் பிடிக்கும். ரெண்டாம் பாதி மனித குரங்குகளுக்கு வேண்டுமானால் பிடிக்கும். ஹீரோ மேனரிசம் விக்ரம் போன்றே இருக்கிறது. நாக்க முக்க பாட்டுக்காக குழந்தைகளை இப்படத்தை கூட்டி போக விரும்பினால், ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

சக்கரக்கட்டி

இவ்ளோ பட்டும், இந்த படத்தை தாணு எடுக்க துணிந்தது, ஆச்சரியம். இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர், தன் மகனின் முதல் படமாக இதை தேர்தெடுத்து இருப்பது, இன்னொரு ஆச்சரியம். சாந்தனு, ஜெயம் ரவி போலிருக்கிறார். பாடல் காட்சிக்கு காட்டவேண்டிய ரியாக்சனை படம் முழுக்க காட்டுகிறார். படத்தில் கதாநாயகி, நாயகனின் நண்பர்கள் அனைவரும் டி.ராஜேந்தர் படத்தில் வரும் நடிகர்களை ஞாபகப்படுத்துகிறார்கள். படுத்துகிறார்கள். மேல்தட்டு இளைஞர்கள் பேசும் பேச்சு இவ்ளோ மொக்கையாவா இருக்கும்?

ராமன் தேடிய சீதை

விறுவிறுப்பான படம், மெகா சீரியல் ரசிகர்களுக்கு. இந்த படம் நல்லாயிருக்கு என்று சொல்லும் அளவுக்கு, மற்ற படங்கள் ரசிகர்களை சோதித்துள்ளது. யதார்த்த நாயகன் மேல் மட்டும் நம்பிக்கை இல்லாமல், பசுபதி, நிதின் சத்யாவையும் நம்பி இருக்கிறது மோசெர் பேயேர். கூடிய விரைவில், இருபத்தியஞ்சு ரூபாய்க்கு எதிர்பார்க்கலாம்.

இந்த மூணு படங்களிலுமே, ரெண்டு மூணு நல்ல பாடல்கள் உள்ளது. விஜய் ஆண்டனி, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் மூவருமே பாராட்டுக்குரியவர்கள்.

காதலில் விழுந்தேன் - தோழியா, உன் தலை முடி
சக்கரக்கட்டி - டாக்ஸி, மருதாணி, சின்னம்மா
ராமன் தேடிய சீதை - இப்பவே இப்பவே, மழை நின்ற பின்பும்

Wednesday, October 1, 2008

ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும்

நாம் எந்த தலைமுறையை சார்ந்தவர்கள் என்பதை, நமக்கு எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ் இவர்களில் எந்த நடிகரை பிடிக்கும்-பிடிக்காது என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நான் ரஜினி-கமல் தலைமுறை.

ரஜினியால் எண்பது-தொன்னூறுகளில் பெரிதும் கவரப்பட்டவர்கள், சிறுவர்கள். இப்ப கோமாளித்தனமா தெரிஞ்சாலும், அப்ப அவர் பண்ற காமெடி சேட்டைகள், மேஜிக் ஸ்டைல் சுவாரஸ்யமானவை. அதேப்போல், அப்ப இளைஞ-இளைஞிகளின் ஹார்ட் த்ரோப்பாக இருந்தவர், கமல். இவரின் அழகு, இளம் பெண்களின் கனவு நாயகனாக்கியது.

அதுக்கு அப்புறம், ரஜினி ரசிகர்கள் என்று சொல்லுபவர்களிடம், ரஜினியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால், ரொம்ப நல்ல மனுஷன் என்று சொல்லுவார்கள். கமல் ரசிகர்களிடம் கேட்டால், திரைத்துறையில் அவருக்குள்ள திறமையை காரணமாக சொல்லுவார்கள். அறிவு ஜீவியாக காட்டி கொள்ளவும், கமல் ரசிகன் என்று சொல்லி கொண்டவர்கள் உண்டு. எனக்கு தெரிந்த ஒரு கமல் ரசிகர், ஹே ராம் படம் பார்த்துட்டு "படம் சூப்பர். ஆனா அந்த தாத்தாவை தான் ஏன் அடிக்கடி காட்டுறாங்கன்னு தெரியல"ன்னு சொன்னார்.

ரஜினி, கமல் ரசிகரா இருந்து இப்ப சினிமா ரசிகர்களா ஆனவங்க, இருவரின் படங்களையும் இப்ப விரும்பிதான் பாக்குறாங்க. அப்ப, ரஜினியை பிடிச்சவங்களுக்கு இப்ப கமலின் புதுமைகளும், சாதனைகளும் மகிழ்ச்சியை கொடுப்பதுப்போல், அன்றைய கமல் ரசிகர்கள் இப்ப குடும்பத்தோட போயி குதூகலத்தொட ரஜினி படம் பார்க்கத்தான் செய்யுறாங்க. ஆனாலும், ரஜினியா கமலான்னு சண்டை போடுவது சிறுபுள்ளத்தனமா ஒரு ஜாலியை கொடுக்க தான் செய்யுது.:-)

இந்த பதிவ எழுத தூண்டுனது, லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு. இந்த மாணவர்கள், யார்க்கிட்ட எந்த அடிப்படையில இந்த கருத்து கணிப்ப நடத்துனாங்கன்னு தெரியல. இவர்களின் கணிப்புப்படி, நடிகர்களின் புகழ்வரிசை இது.

1) எம்.ஜி.ஆர்.
2) சிவாஜி.
3) விஜய்
4) ரஜினி
5) விஜயகாந்த்

இந்த முடிவ பார்த்தா எனக்கென்னமோ, ரஜினி-கமல் தலைமுறை மக்கள், ஓட்டெடுப்பில் சரியான விகிதத்தில் இல்லை என்று தான் தோன்றுகிறது.

இப்ப உள்ள உள்ள, சிறுவர்-இளைஞர்களிடம், விஜய்க்கு பெரும் வரவேற்ப்பு இருந்தாலும், ஆரம்ப காலத்தில் ரஜினி ரசிகர்களை குறி வைத்தே, "பார்த்தா சின்ன ரஜினிடா" என்பது போல, இவர் படங்களில் சில காட்சிகள் இருக்கும். அஜித்தின் வான்மதி படத்திலும் இதுபோன்ற அரசியல் இருந்தது.

அஜித்துக்கு இவ்ளோ ரசிகர்கள் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் விஜயை பிடிக்காதவர்கள் அவ்ளோ பேரு இருக்குறாங்க. அப்புறம், நடிகர்களுக்கும் இந்த போட்டி ரொம்ப தேவையானதா இருக்கு. அப்பத்தான், நிறையா ரசிகர்கள் கிடைப்பாங்க. இல்லாட்டி, சூர்யா, விக்ரம் மாதிரி நல்லா நடிச்சும் மாஸ் இல்லாம போகுதே?

எனக்கு தெரிந்த ஒரு ரஜினி வழி விஜய் ரசிகர், சச்சின் படத்திற்கு பிறகு விஜயை வெறுக்க ஆரம்பித்தார். காரணம், விஜய் சச்சினை சந்திரமுகியுடன் வெளியிட்டு தன் பலத்தை காண ஆசைப்பட்டார் என்பதாம். ஆனா, ரஜினி ஒரு மேடையில், விஜயை தன் ரசிகன் என்று சொல்லி அவர் பாணியில் கீழே இறக்கி வைத்தார். இப்ப, நடக்குறத பார்த்தா, விஜய் தன் டீலிங்கை டரைக்ட்டா எம்.ஜி.ஆரோடு காட்ட ஆரம்பித்து விட்டார் என்று தோன்றுகிறது.

0.2 புள்ளி கணக்கில் ரஜினி பின்னடைந்துள்ள, இந்த கருத்து கணிப்பு, ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுத்து இருந்தாலும், கமல் ஆட்டத்துக்கே இல்லாதது சிறிது மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

அப்புறம், நானும் சைடுல ஒட்டுபெட்டி வச்சிருக்கேன். பார்த்துருவோம், ரெண்டுல ஒண்ணு?