Thursday, November 26, 2009

இசைமேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்...

மகேந்திரனின் விரல் உதிர்க்கும் இசையெழுத்துக்கள்.

---

சமீபத்தில் நண்பரின் திருமணத்துக்காக விழுப்புரம் சென்றிருந்தேன். முதல் நாளே சென்றதற்கு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும் காரணம். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, நண்பர்களுடன் பேசியபடி அரங்கில் அமர்ந்திருந்தாலும் மேடையின் வலதுபுறம் நடந்துகொண்டிருந்த இசைக்குழுவின் ஆயத்தபணிகளை ஆவலாக கவனித்துக்கொண்டே இருந்தேன்.

சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட குழுவினர். துவங்குவதற்கு முன் அவர்கள் தத்தம் கருவிகளை முடுக்கிக்கொண்டு இருக்கும்போது வாசிக்கும் சிறு கோர்வைகளை என்ன பாடலென்று கண்டுபிடிப்பது எனக்கு மிகப்பிடித்தமான விஷயம். திருமண அரங்கில் இசை நிகழ்ச்சி என்பது, வியக்க வைக்கும் வண்ணக்கலவையில் சிறகுகளிருந்தும், கவனிக்கப்படாமல் குப்பையை கிளரும் சேவலை போன்றது. யாருமே ரசிக்காமல், சவுண்ட கொஞ்சம் கம்மி பண்ணு என்ற பாராட்டுகளுக்கிடையில் நிகழும் ஒரு நிகழ்ச்சி அது. அவர்களும், எப்போதும் கேட்டு சலித்த திருமணப்பாடல்களை (நூறு வருஷம் இந்த...) ஒரு மாற்றமுமின்றி பாடியபடியே இருப்பார்கள்.

இதிலும் வழக்கம் போல ஒரே ஒரு பாடகி. எனக்கு அவர்களை பார்க்கும் போதெல்லாம் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்த குழந்தை என்ன செய்து கொண்டிருக்கும் என்று யோசிப்பேன். அவர்களோ நள்ளிரவிலும் புன்னகை மாறாமல் பாடிக்கொண்டிருப்பார்கள். இசை நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் பொறுப்பு அவர்களுடையதே. ஏதேனும் ஒரு எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்தி பாடலையோ அல்லது சரவணப்பொய்கையில் நீராடியதையோ பாடி துவக்குவார்கள். நானும் அப்படி ஒன்றை தான் எதிர்பார்த்திருந்தேன்.

சற்றே அசுவாரஸ்யத்துடன் வெளியே மழையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த எனக்கு இதமான அதிர்ச்சி. இதுவரை நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கேட்டிராத ஒரு பாடலை அந்த பாடகி பாடத்துவங்கினார். ராகவனே ரமணா ரகுநாதா... என்ற அந்த பாடல் என்னை கட்டிப்போட்டது. நாங்கள் இறுதிவரிசையில் அமர்ந்திருந்ததாலும், நண்பன் கொணர்ந்து தந்த காபியின் ருசியினாலும் நான் பாடலில் ஒன்றினேன்.



அந்த பாடல் என்னை எங்கள் வீட்டில் முதன்முதலில் வாங்கிய ஒரு பிலிப்ஸ் டேப் ரெக்கார்டருடன், எங்கள் இல்லம் கழித்த காலத்துக்கு கொண்டு சென்றது. 1983ம் ஆண்டு ராஜாவின் இசையில் வெளிவந்த படம் "இளமை காலங்கள்", மணிவண்ணன் இயக்கத்தில் மோகன், சசிகலா (அறிமுக நாயகி) நடிப்பில் இதமாக மனதை வருடும் பாடல்களுடன்
வெற்றிபெற்றது. அந்த இசை நிகழ்ச்சியில் நான் கேட்ட ராகவனே ரமணா பாடல் இந்த படத்துக்காக சுசீலா மற்றும் ஷைலஜாவால் பாடப்பட்டது. அப்போதெல்லாம் கம்பெனி கேசட் என்பது பிரபலமாதலால், படத்தின் எல்லாப்பாடல்களும் நமக்கு பரிச்சயமாகிவிடும்.

இந்த பாடலை தவிர ஜேசுதாஸ் ரசிகர்களின் தொகுப்பில் கண்டிப்பாக இருக்கும் "ஈரமான ரோஜாவே... என்னைப்பார்த்து..." மற்றும் சுசீலாவுடன் ஜேசுதாஸ் பாடிய "பாடவந்ததோர் கானம்..." எல்லாம் எங்கும் ஒலித்த பாடல்கள். ஆனால் எனக்கான பாடலொன்று... எப்போதும் சிறு புன்னகையோடு நான் ரசிக்கும் பாடலொன்று அந்த படத்திற்காக எஸ்.பி.பி & ஜானகி பாடியது. அது... "இசைமேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்..."



காதலின் ரகசிய தருணங்கள் எல்லாம் ஓய்ந்து போய், இருப்புகளும் இயக்கங்களும் மிக வெளிப்படையாக பரஸ்பரம் அறியப்படும் சர்க்கரையில் தோய்த்த நிமிஷங்களுக்கானது இந்த பாடல்.

ஜானகியின் மிக மெலிதான ஒரு ஹம்மிங் துவங்கும். அடுத்தவரியில் எங்கெங்கோ மறைந்திருந்த தோழிகள் பாடிக்கொண்டே வெளிவருவது போல சேர்ந்திசை குரல்கள் (chorus) இணைந்து கொள்ளும். அடுத்த வரியில் வயலின்களின் படையெடுப்பு... இறுதியில் ட்ரிபிள் தாளக்கட்டு... பல்லவி முடிவில் எஸ்.பி.பி இணைவார்.

முதல் சரணம் துவக்கத்தில் அதி மென்மையான ஹம்மிங் ஒன்றை ஜானகி துவக்குவார் அதை கோரஸ் பெண்கள் முடித்துவைப்பர். எப்போதும் சரணம் முடியும் போதுதானே தாளம் இடைவெளி கொடுக்கும்? ஆனால் இதில் ஜானகி கன்னிக்கரும்பு... எனும்போதே தாளம் இருவினாடி ஒடுங்கும்.இடையிலும், இறுதிப்பல்லவியிலும் ஜானகி இசைமேடையில் என்று பாடும்போதே எஸ்.பி.பியும் அதை வசனம் போல கீழஸ்தாயியில் சொல்லிக்கொண்டே வருவார்...

வழக்கமான தபேலா இசையின்றி, சற்றே துள்ளலான ஆனால் இதமான தாளத்தில் சொக்க வைக்கும் மெட்டு. பாடல் முழுவதுமே தொடரும் கோரஸ் குரல்கள். இது போதாதென்று வாலியின் வரிகள்.

"கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க... வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க" என்று அவர் பாடும் போது உங்கள் கைகள் யார் தலையையேனும் கோதிக்கொடுக்க தேடும். பாடல் முடிவதும் ஒரு ஹம்மிங்குடன். எஸ்.பி.பி ஒரு ஹம்மிங்கை நூல் பிடித்தாற்போல பாட, ஜானகி சற்றே விலகி மேலே போய் முடிப்பார்... நீங்களும் கேட்டுப்பாருங்கள்...

.





இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்...

முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
நெஞ்சுக்குள்ளே தீயிருந்தும்
மேனியெங்கும் பூவசந்தம்...
கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்...

கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க
வந்துதொடும் உன் கைகள் வகிடெடுக்க
போதைக்கொண்டு பூ அழைக்க
தேடிவந்து தேனெடுக்க
தங்கக்கொழுந்து தொட்டவுடன் பூவாக...

இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்...


-மகேந்திரன்.

---

பாடலைக் காண படத்தை க்ளிக்கவும்.

.

Wednesday, November 25, 2009

நாட்டு சரக்கு - மிஸஸ் கொலம்பஸின் அதிரடி கேள்விகள்

ஏ.சி.நீல்சன் என்றொரு கருத்து கணிப்பு நிறுவனம் உண்டல்லவா? அவர்கள் ஆசிய அளவிலான சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். தலைப்பு - செரைக்கணுமா? வேண்டாமா? என்பது தான். வேற பொழப்பு இல்லையா என்கிறீர்களா? அதுதானே அவர்கள் பொழப்பு. சரி, சர்வே முடிவு என்ன?

இந்திய பெண்களுக்கு முழுக்க மழித்த ஆண்கள் தான் பிடிக்குமாம். அப்பத்தான் கிஸ் பண்ண விரும்புவார்களாம். சென்னை, மும்பை பெண்களுக்கு ரெண்டு மூணு நாளு தாடி இருந்தாலும் ஒகேவாம். எந்த ஊர் ஆண்கள் மீசை வைக்கிறார்கள்? எவ்வளவு நேரத்தில் சேவிங் பண்ணுகிறார்கள்? எந்த நடிகருக்கு மீசை எப்படி இருந்தால் நல்லாயிருக்கும்? என்றெல்லாம் நாட்டுக்கு தேவையான பல தகவல்கள் இந்த சர்வே முடிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.

---

ஆந்திராவில் காந்தி என்ற பெயருக்கு ரேஷன் கார்டு கொடுத்த செய்தியை படித்தீர்களா? நம்மூர்ல அடிக்கடி இந்த மாதிரி குமுதத்தில் செய்வார்கள். பாரதியாருக்கு சாதி சான்றிதழ், லைசென்ஸ் என்று. ஆனால், காந்திக்கு ரேஷன் கார்டு வாங்கியவர் பண்ணிய குசும்பு கொஞ்சம் ஓவர்.

ரேஷன் கார்டில் இருந்த புகைப்படம், காந்தியின் உண்மையான புகைப்படம். கொடுத்த பெயர், ’காந்தி தாத்தா’. அப்பா பெயர், ‘நாதுராம் கோட்சே’. முகவரி, நம்பர் 15, காந்தி தெரு, காந்தி சாலை. (விவேகானந்தர் குறுக்கு சந்து என்பதுபோல்!) இப்படித்தான் கொஞ்ச நாள் முன்பு, ஆந்திராவில் லட்சுமி என்ற பெண்ணுக்கு சானியா மிர்சா படம் போட்ட ரேஷன் கார்டு கொடுத்தாங்களாம்.

ஐயா, அதிகாரிகளே, மோசடி பண்ணுங்க. கொஞ்சம் நம்புற மாதிரி டீசண்டா பண்ணுங்க.

---

கனடாவில் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நேதலி என்றொரு பெண்மணி, உடம்பு சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லை. கடும் மன உளைச்சல் என்று காரணம் சொல்லி, அவருடைய காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து மாத மாதம் பணம் பெற்று வந்திருக்கிறார். ஒரு சமயத்தில் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். என்ன காரணமென்றால், அவருடைய பேஸ்புக்கில் இருந்த புகைப்படங்களை காட்டியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் அம்மணி பாரில் என்ஜாய் பண்ணியது, பர்த்டே பார்ட்டி கொண்டாடியது, விடுமுறையில் ஊருக்கு சென்றது எல்லாம் இருந்திருக்கிறது.

இனி என்ன பண்றது’ன்னு அம்மணி பேசாம விட்டிருக்கும்’ன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. டாக்டர்தான் கவலையை மறக்க பாருக்கு போயி நண்பர்களுடன் ஜாலியா இருங்க. வேற வேற ஊருக்கு ட்ரிப் போயிட்டு வாங்க’ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு’ன்னு சொல்லி வக்கீல் வைச்சு போராடிட்டு இருக்காங்க.

அதானே, கவலையை மறக்க வேற என்ன பண்ண முடியும்?

---

கொலம்பஸுக்கு கல்யாணம் ஆகியிருந்தா என்னவாயிருக்கும்’ன்னு ஒரு மெயில் வந்தது.

அவரு வீட்டை விட்டு கிளம்பும் போது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருந்திருக்குமாம்.

- ஏங்க, எங்க போறீங்க?
- யாரு கூட வருறது?
- எதுக்கு?
- எப்படி போறீங்க?
- என்னது கண்டுபிடிக்க?
- எதுக்கு நீங்க மட்டும் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்கறீங்க?
- நீங்க இல்லாம, நான் என்ன பண்றது?
- நானும் வரட்டுமா?
- எப்ப வருவீங்க?
- நைட் சாப்பாட்டுக்கு வந்திருவீங்களா?
- எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
- நீங்க வேணுமின்னே, என்னை சேர்க்காம பிளான் போட்டு இருக்கீங்க?
- எல்லாம் கடைசி நேரத்துல திட்டம் போடுறது?
- எதுக்குன்னு சொல்லுங்க?
- நான் எங்க அம்மா வீட்டுக்கு போகணும்.
- நீங்க தான் என்னை வந்து விட்டுட்டு போகணும்.
- நான் திரும்பி வர போறதில்லை.
- என்னது சரியா?
- எதுக்கு நீங்க என்னை தடுக்க மாட்டேங்கிறீங்க?
- அப்படி என்ன எழவை கண்டுபிடிக்க போறீங்களோ!
- எப்ப பாரு, இந்த மாதிரி வெட்டி வேலைத்தான்.
- போன தடவையும், இப்படித்தான் ஏதோ பண்ணுனீங்க.
- இப்பயெல்லாம் நீங்க இந்த மாதிரி வேலையைத்தான் பார்க்கிறீங்க.
- எனக்கு இன்னும் புரியலை. இன்னும் அப்படி கண்டுபிடிக்க என்ன இருக்கு?

இதுக்கு மேல, அவரு அமெரிக்காவை கண்டுப்பிடிச்சிருப்பாரு? சரி, அப்படியே கூட்டிட்டு போயிருந்தா?



:-)

.

Tuesday, November 24, 2009

ரஹ்மான் - இன்றைய ரோல் மாடல்

வீட்டின் ஒரே ஆண் பிள்ளை. பதினோரு வயது தான். தலைவனை இழந்த குடும்பத்தை தாங்கும் வயதா அது? இப்படி ஒரு குடும்பத்தை தூக்கி நிறுத்துவதே எவ்வளவு பெரிய சாதனை? ஆனால், அந்த சிறுவன் அதோடு நிறுத்தினானா? முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கினான். இந்திய இசையமைப்பாளர்கள் அனைவரையும் டிஜிட்டல் இசை நோக்கி செல்ல வைத்தான். உலக இசையை இந்தியா கொண்டு வந்தான். இந்திய இசையை உலகமெங்கும் கொண்டு சென்றான். தமிழகமும் இந்தியாவும் வருட வருடம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்கரை, இதோ இந்த வருடத்தில் கை நிறைய வாங்கி கொண்டு வந்தான்.

ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மான் இசை ஆட்டம் போட வைத்திருக்கிறது. தூங்க வைத்திருக்கிறது. அவரின் ஒலி நுட்பங்கள் ஏதேதோ உணர வைத்திருக்கிறது. இசை மட்டுமில்லை. அவருடைய வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. தன்னம்பிக்கை. விடாமுயற்சி. புதுமை. அடக்கம். தொடர் தேடல். சொல்லிக்கொண்டே போகலாம்.



என்.சொக்கன் எழுதி வெளிவந்திருக்கும் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ புத்தகம், ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரின் இசை வாழ்க்கையில் தொடங்கி ஆஸ்கார் வரையிலான ரஹ்மானின் இசைப்பயணத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ரஹ்மானை இசையை, ரஹ்மான் பற்றிய செய்திகளை தொடர்ந்து கவனித்து வருபவன் என்பதால், எனக்கு ரஹ்மான் லைம்லைட்டிற்கு வருவதற்கு முன்னால் நடந்தவைகளை தெரிந்துக்கொள்ளவே ஆர்வம். பதினான்கு அத்தியாயங்கள் உள்ள இப்புத்தகத்தில், ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசையமைப்பது பற்றி சொல்லியிருப்பது ஏழாவது அத்தியாயத்தில் தான். அதனால், கிட்டத்தட்ட பாதி அளவிற்கு ரஹ்மானின் சினிமாவிற்கு முந்தைய வாழ்வை பற்றியே ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

புத்தகத்தில் இருந்து சில சுவாரஸ்ய தகவல்கள்.

ரஹ்மானின் முதல் சினிமா பாடல் எது? சின்ன சின்ன ஆசையா? இல்லை. 1975 இல் வெளிவந்த ‘பென்படா’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘வெள்ளித்தேன் கிண்ணம் போல்’ என்ற பாடல். இந்த படத்திற்கு இசை, அவரின் தந்தை ஆர்.கே.சேகர். பாடல் ரெகார்டிங்கின் போது, ஒன்பது வயது திலீப் விளையாட்டாக ஹார்மோனியத்தில் ஏதோ வாசித்துக்காட்ட, அது அங்கிருந்த எல்லோருக்கும் பிடித்துவிட, அந்த மெட்டே பாடலாகியது. அப்புறம், இன்னொரு விஷயம். ரஹ்மான் தந்தை இசையமைத்த முதல் படத்தின் பெயர் - பழசிராஜா.

தந்தை இறந்த பிறகு, ஸ்டூடியோ ஸ்டூடியோவாக வேலைக்கு சென்றதால், திலீப்பால் பள்ளிக்கு ஒழுங்காக செல்ல முடியவில்லை. பள்ளி நிர்வாகம், அவரின் அம்மாவிடம் பையன் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கவனிக்க சொன்னார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கும் செல்லவேண்டும். பிறகு, பள்ளிக்கும் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது? அடுத்த நாள், ஸ்டூடியோவில் இருந்து நேரடியாக பள்ளிக்கு வர சொன்னார் அவரின் அம்மா. அங்கு வாசலில் காத்திருந்த அவர், திலீப்பிற்கு அங்கேயே உடை மாற்றி, உணவளித்து பள்ளிக்கு உள்ளே அனுப்பி வைத்தார்.



அந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பாளர்களிடம் திலீப் இசையமைத்திருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் தொடங்கி டி.ராஜேந்தர், ராஜ்-கோட்டி என்று இளையராஜா வரை நிறைய இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றிருக்கிறார். ராஜ்-கோட்டியிடம் துள்ளல் இசை, இளையராஜாவிடம் ஒழுக்கம் என.

ரஹ்மானுக்கு இசையை தவிர வேறு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. ஒரு நேரத்தில், எதிர்காலத்தின் மீது பயமேற்பட்டு, இசைத்துறையில் வேலையில்லாமல் போனால் என்ன செய்வது என்று ஒரு கட்டத்தில் திகைத்து போய், கார் ஓட்ட கற்றுக்கொண்டாராம். சினிமாவில் பிரச்சினை ஆகிவிட்டால், டிரைவர் ஆகி விடலாம் என்று நினைத்திருக்கிறார்!

ரஹ்மான் விளம்பரத்துறையில் இருந்த போது, அவரின் இசை இந்தியாவெங்கும் கொடிக்கட்டி பறந்தது. உதாரணத்திற்கு, டைட்டன் விளம்பரத்தில் வரும் கீ-போர்டு இசை, அரவிந்த்சாமி வரும் லியோ காபியின் வீணை இசை, ஏசியன் பெயிண்ட்ஸ் பொங்கல் விளம்பரம், சிந்தால் சோப், பிரிமியர் குக்கர், கார்டன் சாரிஸ் விளம்பரங்களின் இசை இவையெல்லாம் அந்நேரத்தில் ரஹ்மான் பற்றி அறியாமலே, எல்லோரையும் கவர்ந்திருந்த விளம்பரங்கள். அந்த இசை துணுக்குகளை இப்போது கேட்டாலும் சொல்வோம், என்ன விளம்பரம் என்று.

எந்த சினிமாவையும் வேலை நேரத்தில் விரும்பி பார்க்காத ரஹ்மான், ஏதோ தோன்றி, ஒரு நண்பருடன் ப்ரிவ்யூ சென்று பார்த்த படம் - தளபதி. இளையராஜா-மணிரத்னம் கூட்டணியின் கடைசி படம். படம் முடிந்த பிறகு, வழக்கத்திற்கு மாறாக, கொஞ்சம் அதிக நேரம் ரஹ்மானுடன் மணிரத்னம் பேசியிருக்கிறார். சந்திப்புக்கள் தொடர, ரோஜாவிற்காக ஒப்பந்தமானார் ரஹ்மான்.

இப்படி நிறைய சுவாரஸ்ய தகவல்களை இந்த புத்தகத்தில் ஆசிரியர் தொகுத்தளித்திருக்கிறார். நடுவே ரஹ்மான் வெவ்வேறு இயக்குனர்களிடம், வெவ்வேறு படங்களில் பணியாற்றியதை பற்றி குறிப்பிடும் போது, பாடல்கள், பாடிய பாடகர்கள் பற்றி நிறைய சொல்லியிருப்பது கொஞ்சம் சலிப்பை வரவழைத்தது.

மற்றபடி, அவர் தேடி தேடி கற்றுக்கொண்ட பலவகை இசை வடிவங்கள், அவருடன் இணைந்த தமிழின், இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள், அவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள் பற்றிய தகவல்கள் - ரஹ்மானின் திறமையை, பெருமையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. அவர் வாங்கிய விருதுகள் பற்றி வாசிப்பதே நமக்கு திகட்டுகிறது. ரஹ்மான் துல்லியமான இசையுடன் உலகமெங்கும் நடத்தும் மேடை கச்சேரிகள், இரவில் கம்போஸிங் செய்வதின் காரணங்கள், அவர் தொடங்கிய இசைக்கல்லூரி பற்றி பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஆஸ்கரை நெருங்கியது எப்படி என்பதை தமிழை தாண்டி, தெலுங்கு, ஹிந்தி, இந்திய ஆல்பம், லண்டன் மேடை நாடகம், ஆங்கில சினிமா என்று சென்ற அவரின் இசைப்பயணத்தை வாசித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம். புதுசாக ஏதாவது செய்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இவரை கவனிப்பவர்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் இவருடைய வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடம்.

ஏ.ஆர்.ரஹ்மான்
176 பக்கங்கள்
என். சொக்கன்
கிழக்கு பதிப்பகம்
ரூபாய் 80


இப்புத்தகத்தை பற்றி ஏற்கனவே எழுதிய ஒரு பதிவு இங்கே.
ரஹ்மான் விவேக் பேட்டி பற்றிய பதிவு.
ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய போது எழுதிய பதிவு இங்கே.

.

Monday, November 23, 2009

பழசிராஜா

என்னுடைய மலையாள நண்பன், மலையாளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் பார்த்துவிட்டு சொன்னான். படம் சூப்பர். மம்முட்டியை விட சரத்குமார் தான் படத்தில் வெயிட். பின்னணி இசையில் இளையராஜா கலக்கியிருக்கிறார். ஒலிப்பதிவு - ரசூல் பூக்குட்டி. அட்டகாசம்.

அடடே! படத்தின் ஒலிப்பதிவை எல்லாம் மக்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்களே? எல்லாம் ஆஸ்கார் பண்ணிய வேலை.

இப்படியெல்லாம் கேட்ட நான், அப்பொழுதே மலையாளத்தில் பார்த்துவிட வேண்டும் என நினைத்தேன். பிறகு, நேரம் அமையாததால், முடியவில்லை. தமிழில் தான் பார்க்க முடிந்தது.



படத்தில் மம்முட்டி ராஜா. சரத்குமார் தளபதி. தமிழ் ரிமேக்கின் போஸ்டரில் தளபதி தான் முன்னாடி நிற்கிறார். டைட்டிலிலும் சுப்ரீம் ஸ்டார் தான் பஸ்ட்.

இது தான் மலையாள திரைப்படவுலகின் மிகப்பெரிய பிரமாண்ட படைப்பு. எக்கச்சக்க செலவு. நல்ல வசூல். இப்படியெல்லாம் கேள்விப்பட்ட எனக்கு படத்தைப் பார்த்தபிறகு தோன்றியது. மலையாள படவுலகம் அவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது? சிறைச்சாலைக் கூட இதைவிட பிரமாண்டமாக தெரிந்ததே? ஓ! அது கலைப்புலி தயாரிப்போ!

ஒருவேளை எதார்த்தமாக இப்படித்தான் இருந்தது என்பதால், இப்படி எடுத்திருப்பார்களோ? இருக்கலாம். ஆனால், படத்தில் மம்முட்டி, சரத்குமார், மனோஜ் கே. ஜெயன், பத்மபிரியா என எல்லோரும் கயிறு கட்டி பறப்பதை பார்த்தால் வேறு எதுவோ ட்ரை பண்ணியதுபோல அல்லவா இருக்கிறது.

படத்தில் நகைச்சுவை நடிகர்களாக தெரிந்தது, ஆங்கிலேயர்கள் தான். அதுவும், பரேடு போகும் ஆங்கிலேய சிப்பாய்களை கண்டு, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

படத்தில் மம்முட்டி ரொம்ப சாந்தமான ராஜா. எப்பொழுதும் பொறுமையா, நிதானமா, யாரு என்ன சொன்னாலும் கேட்குறாரு. துரோகத்திற்கு மேல் துரோகம் செய்யும் சுமனை ஆங்காங்கே பார்த்தாலும் அப்படியே பேசிவிட்டு விட்டுவிடுகிறார். இதனால், சூழ்ச்சி செய்யும் சுமன் மற்றும் ஆங்கிலேயரை விட இப்படி எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் ராஜாவை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது. அதற்காக வரலாற்றை மாற்றவா முடியும்? தனியாக சென்று, எல்லோரையும் சுட்டு தள்ளி, பழிக்கு பழியாக ஜெனரலை தூக்கில் தொங்கவிடுவது - கொஞ்சம் சுறுசுறு.

போராடுபவர்களிடம் இருக்கும் ஆக்ரோஷம் படத்தில் சரத்குமாரிடம் தான் இருக்கிறது. அப்புறம் மனோஜ் கே. ஜெயன். தண்ணியடித்துக்கொண்டிருக்கும் சுமனிடன் சரத் பேசும்பொழுது அவர் வாளை நீட்ட, அதை சரத் பிடித்தப்படி பேசும் காட்சியில் வெளுத்துக்கட்டியிருந்தார்.

இளையராஜாவின் இசை படத்திற்கு கொஞ்சம் ரிச்னெஸ் கொடுத்திருந்தது. ஆஹா, ஓஹோவென்று சிலர் புகழ்ந்த பாடல்களும், என்னை பெரிதாக கவரவில்லை.

பழசிராஜா படையினர் ஆங்கிலேயரிடம் தோற்றதற்கு, சூழ்ச்சி, படை பலம், ஆயுத பலம் போன்றவை சில காரணங்களாக இருந்தாலும், வேட்டியை மடித்துக்கொண்டு போரிட்டிருந்தாலே பெருமளவு சேதாரத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் ஆய்வின் முடிவு.

கேரள பண்டையக்கால கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை காணும் ஆர்வமிருந்தால் பாருங்கள். அதுவும் இந்த வாரமே பார்த்துவிடுங்கள். அதற்கு பிறகு கஷ்டம் தான்.

.

Sunday, November 22, 2009

பஞ்சரான டயரும் பெங்களூர் புத்தகத் திருவிழாவும்

இந்த முறை புத்தகத்திருவிழாவில் கலந்துக்கொள்ள ஏகப்பட்ட தடைகள். பத்து நாட்களாக நடந்து கொண்டிருந்தாலும், கடைசி நாளில் தான் போக முடிந்தது. அன்றும் பல தடைகள்.

பைக்கில் என் நண்பனுடன் கோரமங்களா ஃபோரமை கடக்கும்போது, வண்டி லம்ப தொடங்கியது. நிறுத்தி வீலை பார்த்தால், புஸ். என்ன பண்ணலாம்? கொஞ்சம் யோசித்துவிட்டு, வண்டியை கோரமங்களாவிற்குள் உருட்ட தொடங்கினோம். ஆட்டோகாரர்களிடம் பஞ்சர் கடையை கேட்ட போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் கையை காட்டினார்கள். ஆனால், விரைவிலேயே ஒரு இன்ஸ்டண்ட் பஞ்சர் கடையை கண்டுப்பிடித்தோம்.



அடையார் ஆனந்த பவன் பக்கத்தில், ஒருவர் மரத்தடியில் ஒரு பெட்டியுடன் அமர்ந்திருந்தார். பெட்டிக்குள் பஞ்சர் பார்க்கும் உபகரணங்கள். ஆஹா! நமக்குன்னு பஞ்சர் பார்க்க, இப்படியெல்லாம் வழி செஞ்சு வச்சிருக்காங்களே’ன்னு அவர் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. அது கொஞ்ச நேரம் தான் நிலைத்தது.

டயரை கழற்றும் முன்பே, எனக்கு இன்று கண்டிப்பாக ட்யூப் மாற்றவேண்டியிருக்கும் என்று தீர்மானமாக தெரியும். ஏனெனில், பல முறை பஞ்சர் போடப்பட்டு எச்சரிக்கைக்கு உள்ளாகியிருந்தேன். ஒவ்வொரு முறையும் வேறு எங்காவது நல்ல ட்யூப் வாங்கி மாற்றலாம் என்றிருந்தேன். டயரை கழற்றி ட்யூப்பை பார்த்தால், பேரதிர்ச்சி. எனக்கல்ல.



ஒரு ஆணி குத்தி, அதன் பிறகு வண்டியை உருட்டியதில் ட்யூப் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.



”ட்யூப் இன்னைக்கு (சண்டே) கிடைக்குமா?”

”கிடைக்கும். நான் வாங்கிட்டு வந்திருவேன்.”

“எவ்ளோ?”

“கடையில 290. நான் 260க்கு வாங்கி தாரேன்”

யம்மாடி. நான் கேள்விப்பட்டவரை 100-150 தான் இருக்கும். வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோரமங்களாவில் இருக்கும் நண்பருக்கு போன் செய்தேன். அவர் பக்கத்திலேயே ஒரு கடையை சொன்னார். அது பூட்டிக்கிடந்தது. கொஞ்சம் நடந்ததில் இன்னொரு கடையை கண்டுப்பிடித்தேன். 140க்கு வாங்கி கொடுத்து, பழையப்படி கிளம்பினோம்.

---

புத்தக கண்காட்சி நடக்கும் மைதானம் அருகே இருக்கும் சாலை எங்கும் வாகன நெரிசல். இவ்வளவு மக்களும் புத்தகம் வாங்கவா வந்தார்கள்? என்றால் இல்லை.

அதே சாலையில் கொஞ்சம் தொலைவில் இருக்கும் தியேட்டரில் இருந்து வந்த மக்கள் வெள்ளம் கொஞ்சம். அப்படி என்ன படம் என்றால், 2012. உலகம் அழியிறத பார்க்க, எவ்ளோ ஆர்வம்? அதுவும் எவ்வளவு குதூகலத்தோடு, மகிழ்ச்சியோடு பார்த்துவிட்டு வருகிறார்கள்?

அந்த மைதானத்தில் பக்கத்தில் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒன்று, ஆட்டோ எக்ஸ்போ. இன்னொன்று, ஒரு நடன நிகழ்ச்சி.

அது ஒரு கன்னட சானலில் நடைபெற்றுக்கொண்டிருந்த நடன நிகழ்ச்சியின் இறுதி போட்டி. நடுவர் - பிரபுதேவா. என் நண்பனிடம் விளையாட்டுக்கு கேட்டேன்.

“நாமளும் பார்க்க போவோமா?”

அவன் ஆவலுடன் கேட்டது, “நயன்தாராவும் இருப்பாங்களா?”

---

நான் போன நேரத்திற்கு புத்தகக்கண்காட்சியில் நல்ல கூட்டம். நுழைவு கட்டணம் - 20 ரூபாய். ஓவர் தான். இருந்தாலும், பார்க்கிங்கிற்கே சில இடங்களில் அவ்வளவு கொடுக்கவேண்டி இருப்பதால், ஒகே. ஒருமுறை எல்லாக்கடையையும் பார்த்துவிட்டு பிறகு வாங்க துவங்கலாம் என்று முடிவு செய்தோம்.



நிறைய சாமியார்கள் கடை போட்டிருந்தார்கள். எல்லா மொழிகளிலும் சாமியார்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். கொஞ்சம் புத்தகங்களை வைத்துக்கொண்டு, மற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தது.

ஒருமுறை நான் எழுதிய கதைக்கு முரளிகண்ணன் பின்னூட்டத்தில் ஓ. ஹென்றியின் கதை போலுள்ளது என்று பாராட்டியிருந்தார். யார்ரா அது? நம்மள மாதிரி (டேய்...) சரி, நாம யாரு மாதிரியோ எழுதுறோமாமே, அவரு யாரு? அவரு கதை எப்படி இருக்கும்’ன்னு படிக்க ஒரு ஆர்வம் இருந்தது. அவருடைய அனைத்து கதைகளும் கொண்ட புத்தகம் ஒன்று மலிவு விலையில் ரூ. 150க்கு வைத்திருந்தார்கள். கவனித்துக்கொண்டேன்.

குழந்தைகளை கவரும் வகையில் தான் நிறைய புத்தகக்கடைகள் இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட, நிறைய கன்னடப்புத்தகக் கடைகளும் இருந்தன. ஒரு ரவுண்ட் வருவதற்குள்ளேயே, கால் வலிக்க ஆரம்பித்தது. நேரமும் நிறைய போயிருந்தது. அதனால், புத்தகங்கள் வாங்க துவங்கினேன். வாங்க நினைத்திருந்த பல புத்தகங்கள் மறந்து போய்விட்டது.

கிரடிட் கார்டு வசதி இல்லாத கடைகளுக்காக, ஒவ்வொரு கடைவரிசையின் ஆரம்பத்திலும் ஒரு டேபிளில் கிரடிட் கார்ட் மெஷினுடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஸ்வைப் பண்ணியபிறகு, கடை பெயருக்கு பணத்தை வரவு வைத்துக்கொண்டார். கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் மெஷின் இருந்தும், நான் போன நேரம் அது வேலை செய்யவில்லை.

லேட்டாக சென்று, மெதுவாக எல்லாக்கடையையும் சுற்றி பார்த்து, பிறகு வாங்கி வெளியே வந்ததால், நேர நெருக்கடியின் காரணமாக இரண்டே இரண்டு மிளகாய் பஜ்ஜியுடன் முடித்து கொண்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு செல்ல செல்ல, வாங்க மறந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. சரி, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.

.

Friday, November 20, 2009

பா (Paa) - இளையராஜா... ப்பா!

ஹிந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் நடித்து அடுத்த மாதம் வெளியாக போகும் படம், Paa. இதில் அபிஷேக்கிற்கு மகனாக அமிதாப் நடிக்கிறார். படத்தின் இயக்குனர் - பால்கி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன். ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம். இசை - இளையராஜா.



இந்த தகவல்களை கேட்கும்போது கூட ஒன்றும் தோன்றவில்லை. படத்தின் பாடல்களை கேட்டபிறகு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறிவிட்டது.

எம்.பி.3 பிளேயரில் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஹிந்தி பாடல்களை இப்படி கேட்டதில்லை. தால், தில்ஸே பாடல்களை சிடியில் பைனரி தேய்ந்து டெசிமலாகும் வரை கேட்டு இருக்கிறேன். அதற்கு பிறகு, இப்பொழுது தான்.

மொத்த பாடல் எண்ணிக்கை - எட்டு. ஏற்கனவே தமிழில் வந்த மூன்று மெட்டுகள் (எனக்கு தெரிந்து) திரும்ப இசையமைக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு மெட்டில் மூன்று பாடல்கள். அப்புறம் ஒரு தீம் மியூசிக். அந்த தீம் மியூசிக்கில் ஒரு பாடல். தீம் மியூசிக் கேட்கும்போது திருவாசகம் நினைவுக்கு வந்தது.

இதற்கு முன்னால், பால்கி இயக்கிய சீனி கம் படத்தையும் இதே குழு தான் உருவாக்கியது. அதில், குழலுதும் கண்ணனுக்கு, மன்றம் வந்த தென்றலுக்கு, விழிகளில் போன்ற தமிழ் பாடல்களின் மெட்டுகளே முழுக்க யூஸ் செய்யப்பட்டு இருந்தது.

இதில் ’அலைகள் ஓய்வதில்லை - புத்தம் புது காலை’யும், ’ஆட்டோ ராஜா - சந்தத்தில் பாடாத’வும், ’அது ஒரு கனாக்காலம் - காட்டு வழி’ பாடலும் திரும்ப இசையமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள பாடல், படங்களில் ரிப்பீட் ஆவது இது ஆறாவது முறை. மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என்று சுற்றி சுற்றி வந்துள்ளது. இளையராஜாவுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.

மனதை உருக்கும் மெட்டுக்கள், சிம்பொனி கம்போஸிங் என உன்னத தரம். பவதாரிணி ஒரு பாட்டு பாடியிருக்காங்க. அமிதாப் ஒரு பாட்டு பாடியிருக்காங்க. அதுவும் கதாபாத்திரத்தின் குரலில். இந்த பாடலும் தமிழில் வந்தது தான். அது ஒரு கனாக்காலத்தில் இளையராஜா பாடிய ‘காட்டு வழி’ பாடல்.

இயக்குனர் பால்கி, இளையராஜாவின் தீவிர இசை வெறியர் என சொல்லும் அளவுக்கு ரசிகர். திரை உலகிற்கு வருவதற்கு முன்பு, விளம்பர உலகில் பழம் தின்று கொட்டை போட்டவர். விளம்பரங்களுக்கும் இளையராஜாவின் இசையை (அனுமதியுடன்) பயன்படுத்தியிருக்கிறார்.சர்ப், பஜாஜ், கோககோலா, மேகி, ஐசிஐசிஐ என பல பிரபல விளம்பரங்களை உருவாக்கியவர்.

படத்தின் ட்ரெய்லர். படத்தின் தீம் இசையுடன்.



ஹிந்தி தெரியாது என சில நேரங்களில் தான் வருந்தியிருக்கிறேன். இப்பொழுது அருமையான பாடல்களின் அர்த்தம் புரியாமல். இதற்கு முன்னால், அழகான பெண்கள் ஹிந்தியில் ஏதேனும் கேட்கும்போது!

.

Wednesday, November 18, 2009

லைப்ரரி - 2

லைப்ரரி - 1

அங்கு வைத்திருந்த வார பத்திரிக்கைகள் ஒன்றையும் இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை. நூலகத்திற்காகவே அச்சிடுவார்களோ?



தினசரிகள் படிக்க, டீக்கடைக்கு வருவது போல் சில ரெகுலர் வாடிக்கையாளர்கள் வருவார்கள் போல் இருந்தது. இந்த நூலகத்தில் இன்னும் சில வசதிகளை கண்டேன். படிக்கும் புத்தகங்களில் இருந்து பக்கங்களை ஜெராக்ஸ் எடுக்க ஒரு ஜெராக்ஸ் மெஷின் வைத்திருந்தார்கள். ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய். பிரவுசிங் பண்ண ஒரு கம்ப்யூட்டரும் வைத்திருந்தார்கள். ஒரு மணி நேரத்திற்கு பதினைந்து ரூபாய்.

அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்க்க தொடங்கினேன். புத்தகங்களை எடுத்து படிப்பதைவிட, எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக இருந்தது. தற்போதைய ஆர்வத்தின்படி, வரலாற்று புத்தகங்களின் மீது பார்வையை ஓட்டினேன். அண்ணா, காமராஜர் பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தது. ராஜாஜி பற்றி படிக்கவேண்டும் என்று கொஞ்சம் நாட்களாகவே நினைத்துகொண்டிருந்ததால், ராஜாஜியை தேடினேன். உடனே சிக்கினார்.

புத்தகத்தை எழுதியவரும் பெரிய ஆள் தான். மா.பொ.சி. கொஞ்சம் நேரம் வாசித்தேன். ராஜாஜி பற்றி பலரும் தவறாக புரிந்துகொள்வதற்கு, அவருடைய வெளிப்படையான பேச்சு தான் காரணம் என்று கூறியிருந்தார். என்னால் ரொம்ப நேரம் வாசிக்க முடியவில்லை. பின்னால இருந்த எண்ணற்ற புத்தகங்கள், காந்தம் போல் இழுக்க தொடங்கியது.

கதை, கவிதை, வரலாறு என்று எல்லாவற்றையும் சுற்றி வந்தேன். கமலா தியேட்டர் உரிமையாளரும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலராக இருந்த வி.என்.சிதம்பரம் எழுதிய “நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்” என்ற புத்தகத்தை புரட்டினேன். அரசியல், சினிமா, ஆன்மிக பிரபலங்களிடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்து அவர் ‘இதயம் பேசுகிறது’ இதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம் அது. நல்லாத்தான் இருந்தது.

பிறகு, ஜெயமோகன் எழுதிய பேய்கதைகளின் தொகுப்பை பார்த்தேன். இதுவரை எந்த ஜெயமோகனின் புத்தகத்தையும் தொட்டதில்லை. அதற்காகவே, அதை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். முன்னுரையே, பேயறைந்ததுபோல் இருந்ததால், எடுத்த வேகத்தில் வைத்துவிட்டேன்.

நான் தெரிந்து கொள்ள விரும்பிய இன்னொருவர் - ஜீவா. ஜோதிபாரதி என்பவர் எழுதிய ஜீவா பற்றிய புத்தகத்தை வாசிக்கலாம் என்று புரட்டினேன். அந்த புத்தகம் எப்படிபட்டதென்றால், ஜீவாவை தமிழகத்தின் மற்ற அரசியல் தலைவர்களிடன் ஒப்பிட்டு எழுதிய புத்தகம். ஜீவாவை தூக்கிபிடிக்க, அண்ணா, பெரியார், காமராஜர் என்று மற்றவர்களை வாரியடித்திருந்தார். படிக்கவே கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது.

இப்படியே பார்த்துக்கொண்டிருந்து நேரம் ஓடியிருந்ததால், மழை திரும்பவும் பெய்யபோவது போல் இருந்ததால் கிளம்பினேன். நூலகரிடம், நூலகத்திற்கு புத்தகம் வழங்கலாமா? அதற்கென ஏதேனும் முறை இருக்கிறதா? என்று கேட்க நினைத்திருந்தேன். அவசரத்தில் மறந்து கிளம்பி விட்டேன். அடுத்த முறை கேட்க வேண்டும். தெரிந்தவர்கள் சொல்லவும்.

---

நூலகத்தோட அருமை நூலகம் பக்கத்தில் இல்லாதபோது தான் தெரியும். அதனால், நூலகம் பக்கத்தில் இருந்தும் போகாதவர்கள், போயிட்டு வந்துடுங்க.

தகவல் தொழில்நுட்பத்தின் பலனாக, இப்பொழுதெல்லாம் ஆன்-லைன் லைப்ரரிகளும் வந்துவிட்டன.

http://www.librarywala.com
http://www.easylib.com

நூலகத்தினுள் நுழையும்போது உங்கள் நாசியை தாக்கும் புத்தக வாசனையிலிருந்தே இதில் வேறுபாடுகள் தொடங்குகிறது. அதனால், ஆன்-லைன் நூலகம் என்பது அதற்கு மாற்றாக அமையமுடியாது. ஒரு கூடுதல் வசதி. அவ்வளவுதான்.

எனக்கு உள்ள ஆசைகளில் ஒன்று. வீடு கட்டும் போது, அது இருக்கணும், இது இருக்கணும் என்று ஏகப்பட்ட கனவுகள் சிறுவயதில் உண்டு. அமைதியாகவும், அதே சமயம் ஆர்பாட்டமாகவும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பாட்டு கேட்கும் வகையில் ஒரு அறை இருக்கணும். கிட்டத்தட்ட தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் ஹோம் தியேட்டர் கொண்ட ஹால் இருக்கணும். இப்படி எக்கச்சக்கமா இருந்தது. இருக்கிறது. கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், கனவு காணவேண்டும் அல்லவா?

ஆனால், இப்படி எதுவுமே இல்லையென்றாலும் குறைந்தபட்சம் புத்தகங்களை அழகாக அடுக்கி வைப்பதற்கும், உட்கார்ந்து படிப்பதற்கும் ஏற்ற வசதி இருக்க வேண்டும். இது ஈஸி தான் என்று நினைக்கிறேன். வீட்டில் நூலகம் அமைப்பதன் மூலம், வீட்டிற்கான ஆன்மா வந்தடையும் என்று யாரோ பெரிய மனுஷன் சொல்லியிருக்கிறார்.

மனிதனின் நல்ல நண்பன், புத்தகங்கள். நல்ல நண்பர்கள் எப்போதும் அருகில் இருந்தால், இருக்கும் இடம் சொர்க்கம் தானே?

(முற்றும்)

.

Monday, November 16, 2009

வெட்னஸ்டேவும் உன்னைப்போல் ஒருவனும்

ரொம்ப நாட்களாக பார்க்க நினைத்த வெட்னஸ்டே, இப்பொழுது தான் பார்த்தேன். பல பேர் இவ்விரு படங்களை ஒப்பிட்டு எழுதிவிட்டார்கள். எல்லோருமெ வெட்னஸ்டேவைத்தான் சிறந்ததென சொல்லியிருந்தார்கள். உண்மைதான். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான அந்த இரண்டிலும் ஹீரோக்கள் இல்லாமல், சாதாரணமான மனிதர்களை காட்டியிருப்பது, படத்தில் சொல்லியிருக்கும் பிரச்சினையும் அதன் களமும் - ஒரிஜினல் படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்டுகள். ஆனாலும், தமிழ் ரீ-மேக்கை முழுவதுமாக மட்டம் தட்டிவிட முடியாது.

தமிழில் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கும் விஷயங்கள்.



கமலிடம் ‘நல்லா நடித்திருப்பது யார்? நீங்களா, நஸ்ருதீன் ஷாவா?” என்று கேட்டதற்கு சொல்லமுடியாது என்றார். நஸ்ருதீன் ஷா தான். தமிழில், நுனி நாக்கு ஆங்கிலம், எக்ஸ்ட்ரா மேதாவித்தனம் என ஒரு சூப்பர் ஹீரோவாக வந்தார் கமல். ஹிந்தியில், மாடிப்படி ஏறி முச்சிறைக்கும்படியான சாதாரண மனிதன். ஆனால், கமிஷனர் கேரக்டரில் கம்பீரமாக மோகன்லால் ஜெயிக்கிறார். ஹிந்தி கமிஷனர் அனுபம்கேர், ஏதோ சங்கீத வித்வான் போல் வெள்ளை ஜிப்பா போன்ற சட்டை அணிந்து அலுவலகத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். இப்படித்தான் மும்பை கமிஷனர் இருப்பாரோ?

மற்ற இரு போலீஸ்களும், தமிழில் சூப்பர் காப். ஹிந்தியில் ஒருவர் கான்ஸ்டபிள் போல இருந்தார். இன்னொருவர் பரவாயில்லை. கிட்டத்தட்ட கணேஷ் போல் தான். என்ன, குற்றவாளிகளை அடிக்கும்போது, சரியாக படிக்காத பையனை அடிக்கும் அப்பா போல் அடிக்கிறார்.

ஹிந்தியில் வரும் சி.எம்., சபாரி அணிந்த பாதுகாப்பு அதிகாரி போலிருந்தார். தமிழில், நிஜ வாய்ஸ் கொடுத்து, நிஜ வசனம் கொடுத்து (தேர்தல் வெற்றிக்கு எந்த பிரச்சினையும் வராதே?), நிஜ முதல்வரை நமது கற்பனைக்கு விட்டிருந்தார்கள்.

காம்பியராக வரும் நடிகை, ஹிந்தியில் ஒரு காமெடி பீஸ். தமிழில் நல்ல பிகர்! அதுமட்டுமில்லாமல், ஹிந்தியில் அந்த காம்பியர் எடுக்கும் தெருவோர பேட்டி, காமெடியாக எடுக்கவேண்டும் என்று நாடகத்தனமாக எடுக்கப்பட்டுயிருந்தது. பயந்த முட்டாளாக காண்பித்த பெண்ணை, தமிழில் தைரியமான அறிவார்ந்த பெண்ணாக காட்டியிருக்கிறார்கள். கமிஷனர் முன் சிகரெட் புகைக்கும் அளவுக்கு தைரியம்.

அதேப்போல் தான், பாதுகாப்பு கேட்டு வரும் சூப்பர் ஹீரோவை காட்டும் காட்சிகளும் - நகைச்சுவைக்கென்ற நாடகத்தனமான படமாக்கம்.

இசை - அழுத்தம் திருத்தமாக இருந்தது தமிழில் என்பது என் கருத்து. ஆனால், அதையும் முழுமையாக புதுமையாக இசையமைத்தது என்று சொல்ல முடியாது. ஹிந்தியை அடிப்படையாக வைத்து தான் ஸ்ருதி இசையமைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

தமிழில் தீவிரவாதிகளை கொண்டு செல்ல கண்டெயினர் - ஹிந்தியில் ஸ்கூல் பஸ் போன்ற வாகனம். தமிழில் இறுதியில் குண்டு வெடிப்பது சுமோ - ஹிந்தியில் இரண்டு பெஞ்ச். இப்படி பெரிய படங்களுக்குரிய ரிச்னஸ், தமிழில் அதிகம். ஆனால், அதையும் யதார்த்தம் மீறிய காட்சியமைப்பாக குறை சொல்லலாம்.

ஹிந்தியில் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மனிதனின் உணர்ச்சிகரமான பேச்சு யதார்த்தமாக இறுதியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. தமிழில் அந்த அளவிற்கு இல்லாததற்கு, தொடர் பாதிப்பு இங்கு வட இந்தியா போல் இல்லாதது எனலாம். ஆனால், அதற்கு படைப்பாளியை குற்றம் சொல்லமுடியாது. ரீ-மேக் செய்வதற்காக மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயன்றிருக்கிறார்கள். கஷ்டமான வேலைதான். இந்த அளவிற்கு இழுத்து கட்டுவதற்கும் திறமை தேவைதான். ஆங்காங்கே லாஜிக் லூஸாக இருந்தாலும், தேசபக்தி எனும் ஸ்ட்ராங்க் முடிச்சு போட்டு கட்டியிருக்கிறார்கள்.

சுருக்கமாக சொல்வதென்றால், உள்ளூர் கதையின் நாயகனை தமிழில் உலக நாயகனாக்கியிருக்கிறார்கள். யதார்த்தமாக எடுக்கிறேன் என்று சிம்பிளாகவும், ஹிந்தி போல் வேறு யாரையாவது நடிக்க வைத்து எடுத்திருந்தாலும், இப்போது போல் வெற்றியடைந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

.

Sunday, November 15, 2009

எழுத்தாளர்கள் சந்தித்த நாய்கள்



ரெண்டு நாள் முன்னாடி வாசித்தது.

எஸ்.ராமகிருஷ்ணன்

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றின் வாசலில் ஒரு நாய் சோர்ந்து படுத்துகிடந்தது. நோய்மையுற்ற நாய்களின் முகத்தில் விவரிக்கமுடியாத ஒரு பதற்றம் இருப்பதை கண்டிருக்கிறீர்களா. அது சொல்லற்ற வலி. அந்த நாய் காலை வெயிலை கூட அதிகபட்சமான ஒன்றாக நினைத்தது போல அதை விட்டு விலகி ஒரமாக படுத்து கிடந்தது. அருகில் போய் உட்கார்ந்து அதையே பார்த்து கொண்டிருந்தேன்.

நாயின் உடல் சீரற்று நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் காதுகள் மடங்கியிருந்தன. கண்கள் பழுத்து போய் ஒடுங்கியிருந்தது. தெருநாயாக இருக்க கூடும். தெருநாய்கள் நோய்வாய்படுவதை போல துரதிருஷ்டம் உலகில் இல்லை. அவை உடனடியாக வெறுக்கபடுகின்றன. நோய்மையின் போதும் துரத்தப்படுகின்றன. நாயின் நெற்றியை தடவிவிட்டபடியே இருந்தேன். உஷ்ணமான அதன் மூச்சு கைகளில் படிந்தது. உயிரியக்கம் என்பதை மனது அரிதாக தருணங்களில் மட்டுமே உணர்கிறது. அந்த நாயின் உடலில் இருந்து வரும் அதிர்வு என்னையும் பற்றிக் கொண்டது.

மேலும் படிக்க...

---

இன்று வாசித்தது.

ஜெயமோகன்

இன்று அலுவலகம் சென்றுகொண்டிருந்த வழியில் ஓர் அழுகைக்குரலைக் கேட்டேன். கிட்டத்தட்ட ஒரு ஐந்துவயதுக்குழந்தை கூவி அழுவதுபோல. சுற்றுமுற்றும்பார்த்தேன். காலிமனையின் ஓர் ஓரத்தில் ஆறேழுமாதம் வயதுள்ள ஒரு தெருநாய் அமர்ந்து அழுதுகொண்டிருந்தது. சாதாரண ஊளை அல்ல. வலியும் துயரமும் நிறைந்த தேம்பல், முறையீடு, மன்றாட்டு, அருகே நின்று அதைக்கூர்ந்து பார்த்தேன். ஒரு பின்னங்கால் முழுக்க வெந்துபோய் சதை வழண்டு வெளுத்து பிய்ந்து தொங்கியது. யாரோ கொதிக்கக் கொதிக்க எதையோ அதன் மீது வீசியிருக்கிறார்கள். ஏதாவது வீட்டுக்குள் நுழைந்து திருடி தின்றிருக்கும். இந்த காலனியில் அது பசியாற்றிக்கொள்ள வேறு வழியும் இல்லை.

நாட்டு நாய்களுக்கே உரிய கூரிய முகம். நரம்பு பரவி விடைத்த பெரிய காதுகள். வைக்கோல் நிறம். ஒல்லியான சிறு உடல். மோவாயும் அடிவயிறும் மட்டும் வெளுப்பு. வெந்த பின்னங்காலை தூக்கி வைத்துக்கொண்டு ஊன்றிய மூன்று கால்களும் வெடவெடக்க தலையை தூக்கி மூக்கை வானுக்கு எழுப்பி கண்மூடி அது அழுதது.

அங்கே நிற்க முடியவில்லை. தாண்டிச்சென்றேன். அழுகை தொடர்ந்து கேட்டது. விலகிச்செல்லச் செல்ல இன்னும் துல்லியமாகக் கேட்பதுபோல. என்ன ஒரு அழுகை! இத்தனை துக்கம் தோய்ந்த ஒரு அழுகையை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை.

மேலும் படிக்க...

---

இதை வாசித்தவுடன் முன்னாடி வாசித்த இது ஞாபகம் வந்தது.

சாரு நிவேதிதா

எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ' சூ... சூ.... ' என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.

.
.
.

தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.

எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.

முழுவதும் படிக்க...

.

Saturday, November 14, 2009

தலைவா!!! (இளகிய மனமா, ப்ளீஸ்... வேண்டாம்)

இன்று குழந்தைகள் தினம். காலண்டரில் தேதி கிழிக்கும்போது, நேருவை கண்டேன். சரி, ஏதோ பார்க்கலாம் என்று ஒவ்வொரு நாளாய் புரட்டினேன்.



அடுத்தது, வ.உ.சி. கப்பலோட்டிய தமிழர். இப்ப, நினைவுக்கு வரும் தகவல் சொல்லிவிடுகிறேன். கப்பலோட்டிய தமிழர் என்று ராஜாஜியிடம் சொன்னால், ’கப்பல் அவரா ஓட்டினார்? கேப்டன் தானே ஓட்டினார்’ என்று இவர் ஓட்டுவாராம். சரி, நெக்ஸ்ட்.



இந்திரா.



ராஜாஜி. இவர் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் கொஞ்சம் படித்தேன். காமராஜர், அண்ணா போன்றவர்களை புகழும் அளவுக்கு இவரை புகழ்பவர்கள் கம்மி. ஏன்?



பாரதி.



அப்புறம்...

அப்புறம்...

அப்புறம்...


தலைவா!!!






இந்த வருடம் தான், நான் முதன்முதலில் ரஜினி பிறந்தநாளை காலண்டரில் பார்க்கிறேன். என்னோட காலண்டர்தான் இப்படியா? இல்ல, ஊரே இப்படித்தான் இருக்குதா?

அப்படியே, கலைஞரிடம் இந்த தினத்தை ‘இளைஞர் எழுச்சி தினமாக’ தமிழகமெங்கும் விடுமுறைக்கொடுத்து கொண்டாட ஆவண செய்யுமாறு வேண்டுகோள் வைக்கும்படி சரத்குமாரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இதை படிச்சிட்டு, எஸ்.ஏ.சந்திரசேகர் சிவகாசிக்கு போன் போட்டுடக்கூடாது. ஆனா, அதுவும் ஒருநாள் நடக்கும்’ன்னு தான் தோணுது.

.

Friday, November 13, 2009

லைப்ரரி - 1

பள்ளியில் இருக்கும்போது, ஒருநாள் எங்கள் பிரின்சிபால் எல்லோரையும் நூலகத்தில் மெம்பராக சொன்னார். எங்கள் ஊரில் மூன்று நூலகங்கள் அப்போது இருந்தன. அதில் எங்கள் வீட்டில் இருந்து அருகாமையில் இருக்கும் ஒரு நூலகத்திற்கு சென்றேன். அது ஒரு கிளை நூலகம். மெயின் ரோட்டில் இருந்தாலும், சந்து பொந்து வழியாக சென்றுவிடலாம்.



நூலகர் திருநீறு பூசிக்கொண்டு வெள்ளை வேஷ்டி சட்டையுடன் இருப்பார். உறுப்பினராக வேண்டும் என்றதற்கு பச்சைக்கலரில் ரசீது போல இருந்த ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து, தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கிகொண்டு, முப்பத்தைந்து ரூபாய் கொண்டு வர சொன்னார். எல்லாம் ஆயிற்று. தொடர்ந்து போக தொடங்கினேன்.

பள்ளியில் எதற்கு திடீரென்று சேர சொன்னார்கள் என்று தெரியவில்லை. கூட்டம் சேர்க்க சொல்லி ஏதும் உத்தரவு வந்ததா? இல்லை, மாணவர்கள் மீதான உண்மையான அக்கறையா? தெரியவில்லை. எதுவோ, அவர்களது எண்ணம் நூலகம் சென்று மாணவர்கள் பொது அறிவை வளர்ப்பார்கள் என்பதாக இருந்திருக்கும். ஆனால், நான் அங்கே முழுக்க முழுக்க படித்த புத்தகங்கள் - கதை புத்தகங்கள்.

அது பழையக்கால கட்டிடம். கீழே வேறு ஏதோ அலுவலகம் இருந்தது. மேலே, நூலகம். நுழையும் முதல் அறையில் நோட்டீஸ் போர்டு இருக்கும். பிறகு, ஒரு பெரிய ஹால். அங்கே தினசரி நாளிதழ்கள், வார, மாத பத்திரிக்கைகள் அடுக்கி வைத்திருப்பார்கள். இரண்டு மூன்று பெரிய மேஜைகள் இருக்கும். அதில் உட்கார்ந்து படிக்க, வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். குமுதம், ஆனந்த விகடனுக்கு தான் அங்கு பயங்கர டிமாண்ட். இதனால், பொதுவாக அந்த புத்தகங்களை நூலகர் தன்னுடைய மேஜை டிராயரில் வைத்திருப்பார். அவருக்கு தெரிந்தவர்கள், யாராவது கேட்டால் மட்டும் கொடுப்பார்.

புத்தகம் இருக்கும் அறையில் மூன்று ரேக்குகள் உண்டு. வகை வகையாக, துறைவாரியாக அடுக்கி வைத்திருப்பார்கள். நாளடையில், எது எங்கே இருக்கும் என்று பழக்கமாகிவிட்டது. ஒரு சமயத்தில், ஒரு புத்தகம் தான் எடுக்க முடியும். படிக்கவேண்டும் என்று நினைக்கக்கூடிய இரு புத்தகங்கள் கிடைத்துவிட்டால், ஒன்றை யாரும் செல்லாத ரேக்கில் கொண்டு மேலே வைத்துவிடுவோம். அடுத்தமுறை வரும் வரை, யாரும் எடுத்திருக்க மாட்டார்கள்.

தொடர்ந்து செல்ல செல்ல, அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டது. டவுசருடன் செல்லும் சிறுவனாக இருந்ததால், வேலை வாங்க ஆரம்பித்தார். விடுமுறைக்காலங்களில் மாலை நேரத்தில், எதிரே இருக்கும் ஹோட்டலுக்கு சென்று, நான் தான் அவருக்கு தினமும் டீயும், பஜ்ஜியும் வாங்கிவர வேண்டும். நானும் ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு இந்த வேலைகளை செய்து வந்தேன்.

என்னுடன் வரும் என் நண்பன் ஒருவன், நூலகத்தில் இருந்து புத்தகங்களை ஆட்டைய போடுவதில் கில்லாடி. நான் இரண்டு வாரத்தில் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் படித்து கொண்டு இருக்கும் போது, அவன் சாவகாசமாக படித்து கொண்டிருப்பான். எனக்கு அந்தளவுக்கு விவரம் பத்தாததாலும், அதற்கு தைரியம் இல்லாததாலும் அதற்கு முயன்றதில்லை. துணையெழுத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் ஊரு விட்டு ஊரு சென்று நூலகத்தில் புத்தகம் திருட சென்றதை படித்த போது, இவனைத்தான் நினைத்தேன்.

இது எல்லாம், என் பத்தாம் வகுப்பு வரை மட்டும். அதன்பிறகு செல்லவில்லை. அந்த நூலகம் பூட்டப்பட்டுவிட்டது என்பதை மட்டும் அந்த வழியாக செல்லும்போது பார்த்து தெரிந்துக்கொண்டேன். என்னிடம் ஆயுள் சந்தா வாங்கிய நூலகத்திற்கு, ஆயுள் நீடிக்கவில்லை.

---

இந்தமுறை ஊருக்கு சென்றிருந்தபோது, மழை தொடர்ந்து பெய்துக்கொண்டிருந்தால் வெளியே சுற்றவும் செல்லவில்லை. பார்க்க தைரியம் இல்லாத படங்கள் தான் ஓடிக்கொண்டிருந்தால், படத்திற்கும் செல்லவில்லை. ரொம்ப நாளாக செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த நூலகத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால், இப்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

ஒரு நண்பனிடம் கேட்டேன். அவன் கல்லூரி படிக்கும் அவனுடைய இன்னொரு நண்பனின் நம்பரை கொடுத்து பேச சொன்னான். அவன் குத்துமதிப்பாக ஒரு இடத்தை சொன்னான். பிறகு, அவன் சொன்ன இடத்திற்கு சென்று, அங்கு இருந்தவர்களிடம் விசாரித்து, ஒரு வழியாக கண்டுப்பிடித்தேன். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்குமாம். இரண்டாம் சனியும், எல்லா ஞாயிறுகளும் விடுமுறையாம். முகப்பிலேயே எழுதி வைத்திருந்தார்கள்.

கண்டிப்பாக தமிழில் பெயரை எழுத சொல்லி ஒரு பதிவேடு வைத்திருந்தார்கள். அருகில் உள்ள மேஜையில் ஒரு அம்மணி உட்கார்ந்திருந்தார். அவருக்கு பின்னால் இருந்த சுவரில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார். பல வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அதே கேள்வியை கேட்டேன். இந்தமுறை கொஞ்சம் வேறு மாதிரியான படிவத்தை கொடுத்து, கெஸட் ஆபிசர் கையெழுத்து, ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர் கையெழுத்து, ரேசன் கார்டு ஜெராக்ஸ், அறுபது ரூபாய் கொண்டுவர சொன்னார். தமிழில் தான் நிரப்ப வேண்டும் என்பதை திருப்பி திருப்பி கூறினார். எத்தனை கையெழுத்து வாங்குவது என்றெண்ணி, அப்படியே திரும்பி போகலாமா என்று நினைத்துக்கொண்டேன். இந்த நூலகத்தில், தினசரி, வார பத்திரிக்கைகள் இருக்கும் மேஜையும் மற்ற புத்தகங்கள் இருக்கும் ரேக்குகளும் ஒரே அறையில் நான் பார்க்கும்படி இருந்தது.

இங்கு உள்ள புத்தகங்களை இங்கேயே படிக்கலாமா? அதற்கும் உறுப்பினராக வேண்டுமா? என்று கேட்டேன். இல்லை. படிக்கலாம் என்றார். அவர் கொடுத்த விண்ணப்பத்தை அப்படியே மடித்து பாக்கெட்டில் வைத்து உள்ளே நுழைந்தேன்.

(தொடரும்)

Thursday, November 12, 2009

அத்வானி

என்னுடைய பள்ளிக்காலத்தில் என் வீட்டிற்கு வரும் ஒரு குடும்ப நண்பர், விளையாடலாம் என்று சொல்லி ஒருமுறை ஒரு மைதானத்திற்கு அழைத்து சென்றார். அவர் சொன்னது போலவே, நிறைய பேர் அங்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் காக்கி டவுசர் அணிந்திருந்தனர். சிலர், சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நிறைய பேசுவார்கள். பெரும்பாலும், தேசபக்தியை சார்ந்தே இருக்கும். அந்த இடத்திற்கு பெயர் - ஷாகா. இயக்கம் - ஆர்.எஸ்.எஸ்.



நான் ரெண்டு மூன்று வாரங்கள் சென்றிருப்பேன். பிறகு, இன்னொரு கோஷ்டியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டேன். அத்வானியும் என்னைப் மாதிரித்தான் போல. கொஞ்சம் வித்தியாசம். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவரை, ஷாகாவுக்கு அவரது கல்லூரி நண்பர் அழைத்து செல்ல, அதன் பின் ஆர்.எஸ்.எஸ்., அரசியல், பாரதிய ஜனதா, பாபர் மசூதி, துணை பிரதமர், பிரதமர் வேட்பாளர் என்று எங்கெங்கோ சென்று, இன்றும் தினமும் பேப்பரில் அவர் பெயர் அடிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கர்நாடகா ஆட்சி போன்ற தீவிர பிரச்சினைக்களுக்கு அவர் உதவி, பாஜகவுக்கு இன்னமும் தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் அதை பேப்பரில் படித்து கொண்டிருக்கிறேன். அத்வானி பற்றி புத்தகங்களில் படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஆர். முத்துக்குமாரின் ’அத்வானி’ புத்தகத்தில் இருந்து அத்வானி பற்றி நிறைய தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன். இப்போதைய பாகிஸ்தானில் அப்போது பிறந்தார் என்று தெரியும். ஆர்.எஸ்.எஸ். பேக்கிரவுண்ட் தெரியும். பிறகு பாஜக கட்சியில், ஆட்சியில் அவருடைய பங்கை பற்றி அவ்வப்போது செய்திதாள்களில் படித்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் டூ பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனசங்கம் டூ ஜனதா மோர்ச்சா டூ ஜனதா, ஜனதா டூ பாரதிய ஜனதா என்கிற அவரது அரசியல் பாதையை, இந்த புத்தகத்தில் தான் விளக்கமாக படித்து தெரிந்துக்கொண்டேன்.

நான் சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்ட நபர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒரளவுக்கு தொடர்ந்து கவனித்து வருகிறேன். நான் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல விஷயங்கள், பாஸிட்டிவ் சமாச்சாரங்களைத்தான் முதலில் கவனிப்பேன்.

ஆர்.எஸ்.எஸ். இல் அப்படி நான் கண்ட சில நல்ல விஷயங்கள். விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம். தேசப்பக்தி. எதிலும் ஒரு ஒழுங்கு. இதில் தேசப்பக்தி என்பது தான் பிரச்சினைக்குரியது. அதற்கு முன் ஒழுங்கைப் பற்றி நினைவுக்கு வரும் நிகழ்ச்சி. அவர்கள் நடத்திய ஒரு குரு பூஜையில் கலந்துக்கொள்ள சென்றிருந்தேன். அரங்கத்திற்கு வெளியே காலணிகளை கழற்றிவிட்டு செல்ல வேண்டும். அந்த காலணிகளை அவர்கள் வரிசையாக அடுக்கி வைத்திருந்த அழகை பார்த்து அசந்துவிட்டேன். நீள நீளமாக, நிறைய இடங்களை எடுத்துக்கொண்டு எந்த குழப்பமும் இன்றி அருமையாக இருந்தது. அவ்ளோத்தான், ஒழுங்கு பற்றி.

தேசப்பக்தி. இதில் என்ன பிரச்சினை என்றால், இந்தியா என்பது ஹிந்துக்களுக்கான தேசம் என்ற கருத்து. தேசத்தின் மீதான பக்தி என்பது முழுக்க முழுக்க ஹிந்துத்துவா மீதான பக்தியாகும்போது, பிரச்சினை கிளம்புகிறது. மற்ற மதத்தினரின் மேல் வன்மம் காட்டும்போது, அவர்களிடம் இருக்கும் பாஸிட்டிவ் எல்லாம் நெகடிவ் ஆகிவிடுகிறது.

ஹீரோ ஆகவேண்டிய அத்வானி வில்லனாகுவதும் இதனால் தான். ஸ்வயம் சேவக் என்கிற கான்செப்ட்டே அருமையானது.

”சுயமான ஊக்கத்துடன், சுயமான விருப்பத்துடன் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு தன்னலத்தைத் தியாகம் செய்கின்ற உணர்ச்சியைப் பெற்றவனே ஸ்வயம் சேவக். அவன் தேசியப்பார்வை கொண்டவன். தேச முன்னேற்றமே அவனுடைய லட்சியம். இனி என்னுடைய வாழ்க்கை தேசத்துக்குத் தொண்டு செய்வதற்காகவே எஞ்சியுள்ளது என்று நினைப்பவன்.”

இதைத்தான் லட்சியமாகக் கொண்டு செழிப்பான குடும்பத்தில் பிறந்த அத்வானி, கரடுமுரடான பாதையை தேர்ந்தெடுத்தார். இயக்கத்திற்கு உறுதுணையாக அரசியல் பாதையை எடுக்கும்போதும் பிரச்சினையில்லை. இந்திராவின் அராஜகத்திற்கு எதிராக போராடியபோதும் பிரச்சினையில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற, ஹிந்து ஓட்டுக்களை ஒரு சேர கவர, அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் தான் பிரச்சினைகள். அது அவருக்கு வெற்றிகளை கொண்டுவந்தாலும், மனிதாபிமானத்தை வெகுதூரம் விரட்டிவிட்டது.

ஹிந்து ஓட்டுக்களைக் அப்படி சிந்தாமல் சிதறாமல் எடுக்க, அவர் போட்ட கணக்குத்தான் பாபர் மசூதி பிரச்சினை. புத்தகத்தின் ஆரம்பத்திலேயே, அயோத்தி சம்பவத்தை லைவ்வாக எழுத்தில் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இதற்காக அத்வானி நடத்திய ரதயாத்திரை, கரசேவை போன்றவை அடுத்த வந்த தேர்தல்களில், பிரமாதமான ஓட்டு சதவிகிதத்தை பெற்று தந்தது. இங்கு குற்றவாளி ஒருவர் மட்டுமில்லை. மத ரீதீயாக அத்தனை சதவிகித மக்கள் ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்கள். மதவாதிகளுக்கு இவர் முகத்தையும், மிதவாதிகளுக்கு வாஜ்பாய் முகத்தையும் காட்டி ஆட்சியை பிடித்தது தான் உச்சம். அதற்கு பிறகு இறங்கு முகம் தான்.

அதிகாரத்திற்கு வருவதற்கு முன்புவரை இரும்பு மனிதராக காணப்பட்டவர், ஆட்சிக்கு பிறகு பலவீனமானவராகவே காட்சியளிக்கிறார். இதற்கு காரணம், பல விஷயங்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததே. முக்கியமாக, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள். கந்தஹார் விமான கடத்தல், நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதல்... எக்ஸ்ட்ரா... எக்ஸ்ட்ரா... ஆட்சியில் இல்லாதபோது, தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு சலனப்பட கூடாது என்றவர் அத்வானி. ஆனால், அவரே உள்துறை அமைச்சராக இருந்தபோது, தாலிபான் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து சிறையில் இருந்த தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டி வந்தது.

இப்படி ஸ்வயம் சேவக் முதல் உள்துறை அமைச்சர், துணை பிரதமர், பிரதமர் வேட்பாளர் என அத்வானியின் பலமுகங்களை எடுத்து காட்டியிருக்கிறார் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார். இவர் ஏற்கனவே இந்திரா பற்றிய புத்தகம் எழுதியிருப்பதாலோ என்னவோ, இந்திரா பற்றிய அத்தியாயங்களை மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். இதனால், படத்தின் நடுவே சில ரீல்களில் காணாமல் போகும் ஹீரோவை போலாகிறார் அத்வானி. அத்வானி திருமணம் செய்துக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக ஒரு அத்தியாயம் முடிந்திருந்தது. ஆனால், அதற்கு பிறகு அவர் திருமணம் செய்துகொண்டது பற்றி எதுவும் சொல்லவில்லை. அத்வானியுடன் பிரச்சாரங்களில் பங்குபெறும் அவர் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் எதுவும் சொல்லப்படவில்லை.

இந்த புத்தகம் எனக்கு அத்வானி என்கிற அரசியல் தலைவரின் வரலாறு என்பதாக மட்டுமில்லாமல், ஜனநாயக இந்தியாவின் முக்கிய அத்தியாயங்களை புரட்டிப்பார்க்கும் வாய்ப்பை அளிக்கும் புத்தகமாகவும் இருந்தது. குறிப்பாக, எமர்ஜென்சி, மதவெறி அரசியல். தவிர, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, வி.பி.சிங், சரண் சிங் என வேறு பல அரசியல்வாதிகளின் குணாதிசயங்கள் (அப்படி குறிப்பிடத்தக்க வகையில் கவர்ந்தது - அத்வானியை துணிச்சலாக கைது செய்த லாலுவின் ஹீரோயிசம்). சுதந்திர இந்தியாவின் முக்கிய கட்சியும், காங்கிரஸை தவிர நிலையான ஆட்சியை கொடுத்த ஒரே கட்சியுமான பாரதிய ஜனதாவின் வளர்ச்சியை புரிந்துக்கொள்ளவும் உதவும் புத்தகம் இது.

அத்வானி
ஆர்.முத்துக்குமார்
கிழக்கு பதிப்பகம்
184 பக்கங்கள்
ரூபாய் 80

புத்தகம் வாங்க இங்கு க்ளிக்கவும்.


.

Tuesday, November 10, 2009

அறிவுமதியின் முத்தமிழ்

மகேந்திரனிடமிருந்து...

---

நினைந்து கொள்ள நனைந்து கொள்ள
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மழை..!!

-அறிவுமதி

கடந்த சில நாட்களாய் தொடரும் ஓயாப்பெருமழையில் நனைந்து கொண்டே அலுவலகம் வருவது, என் நாட்களின் இனிய துவக்கமாக இருக்கிறது. மழை கொடுக்கும் ஞாபகங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

ஊருக்கெல்லாம் ஒரே மழை எனினும் ஒவ்வொருவருக்கும் அது கொடுக்கும் அனுபவம் வேறுபடுகிறது. இன்று காலை கண்விழிக்கும் போதே மழையின் தரிசனம், மற்றுமோர் அற்புத தினத்தை துவக்கி வைத்தது.

1997 ம் வருடத்தின் இதே போன்ற ஒரு மழை நாள். மந்தாரமான வானம் ஓயாமல் தூறிக்கொண்டிருந்த, வெளிச்சமில்லாத ஒரு காலை, பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து கல்லூரிக்கு பயணித்தபோது நான் இந்த பாடலை முதல் முறை கேட்டேன்.

ராஜா அலை சற்றே ஓய்ந்து எல்லோர் வாயிலும் ரஹ்மான் தவழ்ந்த காலை. அப்போது வெளியாகியிருந்த ராஜாவின் ஒரு படம். வழக்கமான ராஜா இசையிலிருந்து சற்றே நவீனப்படுத்தப்பட்ட இசை வாகு.

இணக்கமான ஒருவருடன் மலைப்பாதையில் பயணிக்கும் சுகமளிக்கும் மெட்டு. அறிவுமதியின் காதல் ததும்பும் வரிகள்.



பாடல் "முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன?". இடம் பெற்ற படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான "ராமன் அப்துல்லா". எப்போதுமே 80களின் ராஜா பாடல்களிலேயே ஊறிக்கிடந்த எனக்கு அது மிக வித்தியாசமான இசையாகப்பட்டது.

கரண் மற்றும் அஸ்வினி (எனக்கு தெரிந்து இவர் தமிழில் மூன்றாவது அஸ்வினி) நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கும் மழைக்கும் ஒரு தொடர்பும் இல்லை எனினும், எனக்கு ஏனோ மழையை ஞாபகப்படுத்தும். நிஜமாகவா அல்லது என் அதீத கற்பனையா தெரியவில்லை... எஸ்.பி.பி, சித்ரா இருவருமே வழக்கமான குரலில் இல்லாமல் சற்றே கரகரப்பாக பாடியிருப்பது போல என் காதுக்கு ஒலிக்கும்.

பல்லவி முழுவதுமே ஆண் குரலில் ஒலிக்கும். அனுபல்லவியின் முதல்வரி "மனம் வேகுது மோகத்திலே" எனும்போதே தபேலா இசை நடை மாற எத்தனிக்கும்.. அடுத்த வரி "வேகுது தாபத்திலே” எனும்போது இன்னுமொருமுறை நடை மாறும்.

பாடலின் interlude களில் குழலிசை தொடரும். அருண்மொழி எனும் குழலிசை கலைஞர் ராஜாவின் ராஜாங்கத்தில் எப்போதுமே ஆஸ்தான வித்வான். நல்ல பாடகரும் கூட. இதே படத்தில் "என் வீட்டு ஜன்னல் எட்டி" என்ற பாடலை பவதாரிணியுடன் பாடியிருப்பார்.

அறிவுமதி ராஜாவுடன் இணைந்த முதல் பாடலிது. தெரியாத யாரையேனும் சந்திக்க சென்றால் இன்னார் அனுப்பினார்களென்று சொல்வது போல " உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்" என்று அவள் சொல்வது, நான் உறங்கியபின் வரப்போகும் கனவு இப்போதே வந்து காத்திருக்கிறது, தூங்க இன்னும் மடி கிடைக்கவில்லை என்பதெல்லாம் உச்சபட்ச பிரமிப்பு எனக்கு.

கவிஞர் அறிவுமதியை ஒருமுறை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது இந்த வரிகளை அவரிடம் சொன்னபோது கிடைத்த பதில் ஒரு புன்னகை. தீவிர இனமானவாதி. ஆங்கிலக்கலப்பில்லாத பாடல்களை மட்டுமே எழுதிய (இப்போது திரையிசையிலிருந்து விலகியிருக்கிறார்) கொள்கைவாதி. அதுபற்றிய கேள்விக்கு "அன்னையை விற்றா பிள்ளைகளுக்கு உணவளிப்பது?" என்றவர். ராஜாவுடன் அவரின் முதல் பாடல் இது எனினும் சிறைச்சாலை பாடல்கள் முதலில் வெளிவந்தன. (கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமா?, ஆசைக்கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி..).

மென்மையாக துவங்கும் கிடார் இசை பாடலைத்துவக்கும். பாடல் முழுவதுமே தபேலா இசை பிரதானமாக இருந்தாலும் பின்னணியில் மிக மெலிதான வயலின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த பின்னணி வயலின் மட்டுமே கவனித்தால் அது நிகரில்லாததாயிருக்கும்.

பாடலின் முடிவில் எஸ்.பி.பி "முத்தமிழே" எனும்போது சித்ரா "என்ன ?" என்று கொஞ்சுவார். அந்த வரியை எஸ்.பி.பி முடிக்கும் போது ஒரு overlap உடன் அடுத்த வரியை சித்ரா தொடர்வார்.

ராஜாவின் கடந்து போன எத்தனையோ நாட்களில் இந்த பாடலும் ஒன்றாக இருக்கலாம்... ஆனால் எனக்கு அதுவே இன்னும் கடக்க முடியாத கடலாக இருக்கிறது..!!



முத்தமிழே முத்தமிழே
முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன?
முத்தத்தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன?
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன?
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன?
மனம் வேகுது மோகத்திலே..
நோகுது தாபத்திலே..

காதல்வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை..
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை..
தாகம் வந்து பாய்விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே..
மோகம் வந்து குடைபிடிக்க கைவளையல் சிரிக்கிறதே..
உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்..
முத்தம் சிந்தச்சிந்த ஆனந்தம் தான்..

கனவுவந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா?
ஆசை இங்கு பசித்திருக்கு, இளமைக்கென்ன விருந்திருக்கா?
பூவைக்கிள்ளும் பாவனையில் சூடிக்கொள்ள தூண்டுகிறாய்..
மச்சம் தொடும் தோரணையில் முத்தம் தர தீண்டுகிறாய்..
மின்னல் சிந்தி சிரித்தாய் கண்ணில் என்னை குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்..

முத்தமிழே முத்தமிழே
முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன?
முத்தத்தமிழ் வித்தகரே..
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன?
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன?
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன?
மனம் வேகுது மோகத்திலே..
நோகுது தாபத்திலே..


-மகேந்திரன்.

.

Monday, November 9, 2009

மழை பயணம்

சென்ற வார நடுவில் இருந்து இறுதி வரை ஒரு திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எதற்கும் முன்பதிவு செய்யவில்லை. மகேந்திரன் போட்டுக்கொடுத்த திட்டத்தின் படி, மாலை ஆறு மணிக்கு ஓசூரில் கிளம்பி இரவு ஒன்பதே காலுக்கு சேலம் சென்றடைய முடிந்தது. ஒன்பதே முக்காலுக்குள் ஒரு கொத்து புரோட்டாவும் செல்வி மெஸ்ஸில் சாப்பிட முடிந்தது.

எப்ப பேஸஞ்சரில் போய் நொந்தேன் என்று நினைவில்லை. பேஸஞ்சர் என்றாலே கசக்கும். அதற்கு, பஸ்ஸில் சென்று விடலாமே? என்று மனம் கணக்கு போடும். எப்படியோ, மகேந்திரன் கொடுத்த ஊக்கத்தாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் ரயிலை தேர்ந்தெடுத்தேன். ரயில்வே இல்லையில்லை, மகேந்திரன் சொன்ன நேரத்திற்கு சேலம் சென்றேன். ஏதோ அவருடைய சொந்த கம்பெனி போல், இந்த ரயிலுக்கு அவ்வளவு சப்போர்ட்டு.

போன புதன் அன்று கிளம்பும் போது, தொடங்கிய மழை... இன்னமும் அப்படியே பார்த்துக்கொண்டிருக்கேன். தொடர்ந்து ஒரு வாரமாக, ஈரம் எபக்ட். படத்தை இப்ப ரிலீஸ் செய்திருந்தால், அப்ப அப்படி கேட்டு இருக்க மாட்டேன்.

---

கவர்மெண்ட் பஸ்ஸில் அழகர் மலை பார்த்தேன். அரைகுறையாகத்தான். ஹீரோ ஆர்.கே. ஆனால், அவர் ஹீரோவாக நம்பியிருப்பது வடிவேலுவை. படத்திற்கு மட்டுமில்லை... சென்ற வாரம் சென்னையில் அவர் திறந்த ஓட்டலுக்கும் அவரைத்தான் நம்பியிருக்கிறார். ஊர் முழுக்க, அரசியல்வாதி ரேஞ்சுக்கு வடிவேலு போஸ்டர்கள்.

படத்திற்கு இசை - இளையராஜா. அடுத்த வருடம், இளையராஜாவிற்கு யாராவது விருது கொடுக்க வேண்டுமென்றால், இந்த படத்திற்கு கொடுக்கலாம்.

வில்லனும் அவன் தங்கையும் ஹீரோவை வம்பில் மாட்டிவிட துடிக்கிறார்கள். அதையும் மீறி, ஹீரோ தன் லட்சியத்தை எப்படி அடைகிறார் என்பது தான் கதை என்று நான் நினைக்கிறேன். அப்படியென்ன லட்சியம்? ஹீரோயினை கல்யாணம் பண்ணுவது தான். இதுவல்லவா லட்சியம்?’ன்னு கவுண்டமணி மாதிரி கேட்கக்கூடாது. முடிவு என்னன்னு தெரியல்லை. சுவாரஸ்யத்தில் தூங்கிவிட்டேன்!

---

Boom TV என்றொரு சானல், கவர்மெண்ட் பஸ்களில் (மட்டும்) வருகிறது. ப்ளாட் டிவியில் படங்கள், பாடல்கள் - விளம்பர இடைவேளையுடன் வருகிறது. அடிக்கடி ”உள்ளத்தை அள்ளித்தா” போடுவார்கள் என்று நினைக்கிறேன். நான் இரண்டு பஸ்களில் பார்த்தேன். ரிதமையும் பொம்முக்குட்டி அம்மாவையும் கலந்து பாட்டு போட்டார்கள்.

ரோடெல்லாம் ஒரளவுக்கு ஒழுங்காக போட்டுவிட்டார்கள். ஆனா, இந்த கவர்மெண்ட் பஸ்கள்தான், அதில் போகக்கூடாத வேகத்தில் ஓட்டுகிறார்கள். மரண உருட்டு. எப்படி டிவி வைக்கலாம், என்ன படம் போடலாம் என்று யோசிப்பதற்கு பதில், பஸ் கொஞ்சம் வேகமா போக ஏதாச்சும் பண்ணலாம்.



ஆஹா... சூப்பரா ரோடு போட்டுருக்காங்க என்று சந்தோஷப்படுவதற்குள், சாலையெங்கும் டொல் கேட் திறந்து பணம் பிடுங்குகிறார்கள். காரில் பெங்களூரில் இருந்து கோவை போவதற்குள், நூறு-நூத்தியம்பது ரூபாய் வசூல் பண்ணிவிடுகிறார்கள். புதிது புதிதாக டொல் கேட்டுகள் வந்துக்கொண்டே இருக்கிறது. எத்தனை வருஷம் வசூலிப்பாங்களோ?

கோயமுத்தூர்ல இருக்குற ஆத்துப்பாலத்தை கடக்க இன்னும் வசூல் பண்ணிக்கிட்டே இருக்காங்க. அது ஒரு குட்டியூண்டு பாலம். அதுக்கே அப்படின்னா, இதுக்கெல்லாம் கேட்கவே வேண்டாம்.

---

பெங்களூர் ஓசூர் ரோட்டுல, வண்டியில பெட்ரோல் இல்லாம, நைட் பதினொரு மணிக்கு மேல போயிடாதீங்க. சிங்கி அடிக்கவேண்டி வரும். இப்படித்தான், கொஞ்ச நாள் முன்னாடி நண்பர்களுடன் ஒரு குவாலீஸில் தெரியாம போயிட்டோம். பெட்ரோல் பங்க் தேடி தேடி, ஒரு கட்டத்தில் வண்டி பாதியில் நின்று விட்டது.

டிரைவர் அங்கிருந்த ஒரு சரக்கு லாரிக்காரரிடம் பெட்ரோல் கேட்டார். அவரும் தருகிறேன், கேன் கொண்டுவா என்றிருக்கிறார். இவரிடம் கேன் இல்லை. அங்கு ஒரு கடையை தட்டி திறந்து, செல்போனை அடகு வைத்து, கேன் வாங்கி வருவதற்குள், லாரிக்காரர் எஸ்ஸாகிவிட்டார். பிறகு, டிரைவரும் நானும் நடந்து, பஸ்ஸில் சென்று, காரில், வேனில் லிப்ட் ஏறி, லாரியில் தொத்திக்கொண்டு, ஒரு வழியா மழையில் ஓசூருக்கே போயி பெட்ரோல் வாங்கி வந்தோம்.

கையில் ஒரு காசு இல்லனாலும், ஒரு கேன் இருந்தா எந்த ஊருக்குனாலும் போயிடலாம்’ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. போயி வருவதற்கு, மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. அதுவரைக்கும், ஓரமாக நின்ற வண்டியில் நண்பர்கள் நான்கு பேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஹைவே போலீஸ் வந்து விசாரித்திருக்கிறார்கள்.

“அப்புறம் என்னடா ஆச்சு? ஒண்ணும் கேட்கலீயா?”

“இன்னும் கொஞ்சம் நேரம் நின்னா, நம்மக்கிட்டயே பெட்ரோல் கேட்பானுங்க’ன்னு போயிட்டாங்க!”

---

போன வாரம், திரும்ப வருவதற்கும் முன்பதிவு செய்யவில்லை. அன்-ரிசர்வ்டு கோச்சில் வந்தேன். சைடு ஜன்னல் சீட்டில் இருந்து வந்ததால், தொந்தரவு ஏதும் இல்லை. எதிரில் இருந்தவருடன் போட்டுக்கொண்ட பரஸ்பர ஒப்பந்தத்தின் படி, என் இருக்கையில் அவரும், அவர் இருக்கையில் நானும் கால் நீட்டியப்படி தூங்கிக்கொண்டே வந்தோம்.

என்ன, நடுவில் டாய்லெட் போகத்தான், விசேஷ பயிற்சிகள் தேவைப்படுகிறது. சும்மா, ஏர்ல பறந்து பறந்து போக வேண்டியிருக்கு. ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் எல்லாம் பண்ணினேன். ஒருவர் ஒரு நீள ப்ளைவுட் கொண்டு வந்திருந்தார். கீழே படுக்கவைத்திருந்த அதில், மக்கள் ஏறி உக்கார்ந்து விட்டார்கள். ஒரு சாமியாரும் கூட. நான் கடந்து செல்லும்போது, அது தொடர்பாக சண்டை போய்கொண்டு இருந்தது.

அன்-ரிசர்வ்டு கோச்சில், சுவாரஸ்யத்திற்கு குறைவேயில்லை.

---

காலையில் ஓசூர் ரயில்வே ஸ்டேசனில் இறங்கும்போது, ‘என்னடா, ப்ளாட்பாரத்தில் கார் பார்க்கிங் பண்ணியிருக்காங்க’ன்னு ஆச்சரியம். அப்புறம், உத்துப்பார்த்தா, நானோ கார்கள். வரிசையா நிறுத்தி வச்சிருந்தாங்க. பக்கத்தில் இருந்த சரக்கு ரயிலில் இருந்து, இறக்கி வைத்திருப்பார்கள் போல.

இப்ப, டவுட் வருது. அது கார்தானா? இல்லை, தூக்க கலக்கத்துல வேற எதையாச்சும் பார்த்திட்டேனா?

---

மழை பெஞ்சா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம்.

முந்தா நாள் காயப்போட்ட உள்ளாடைகள், இன்னும் காயவில்லை. வேறு வழியில்லாமல், அயர்ன் பண்ணி போட வேண்டியிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானலில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

மக்களே, ஐடியா கொடுங்க!

.

Friday, November 6, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 5

பொதுவாக, பாடப்புத்தகத்தில் இருக்கும் வரலாறுக்கும் உண்மைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்த பாரதியார் படம். இந்த படமும் அப்படியே. இப்போதைய அரசியல்வாதிகள் பற்றிய தற்கால செய்திகள் நமக்கு தெரியும். வருங்காலத்தில் இவர்களை பற்றி நல்லவிதமாக படிக்கும் தலைமுறையை நினைத்தால்...



இதுவும் தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்தது தான். எனக்கு அந்நேரங்களில் அண்ணாவையும் பாரதிதாசனையும் குழப்பும். அண்ணா பற்றி நிறைய தெரிந்து கொண்டது, கடந்த ஒரு வருடத்தில் தான்.



இது ’கேலி சித்திரம் வரைவது எப்படி?” என்ற ஒரு புத்தகத்தில் இருந்த அண்ணாவின் படம்.



இருவர்.



எக்காலத்திற்கும் பொருத்தமான படம். எவர்க்ரீன்? குமுதத்தில் வந்தது.



ஒரு பொதுவான பேச்சாளர் கார்ட்டூன்.



(தொடரும்)

.

Tuesday, November 3, 2009

சாமிகிட்ட சொல்லி வெச்சு...

மகேந்திரனிடமிருந்து...

---

என் அன்பை பொய் என்று சொல்...
அப்போதுதான் உன்னை இன்னும்
பிரியமாய் தொட முயல்வேன்...!!


பூமா ஈஸ்வர மூர்த்தியின் இந்த கவிதை எனக்கு மிகப்பிடித்தமான ஒன்று...

உன் மீதான என் அன்பை நீ சந்தேகப்படுவது கூட எனக்கு பிடிக்கும். அது என்னை மீண்டும் ஒருமுறை உன்னிடம் நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறது... வெளிப்படுத்தப்படாத அன்பு எத்தனை தூய்மையானதென்று தெரியுமா? என் சிரிப்பு எதிரே வருபவரையும் தொற்றிக்கொள்வதை போல எளிதானதில்லை, என் அன்பை உனக்கு விளங்க வைப்பது. ஆனாலும் அந்த சிரமம் சுகமானது..

உனக்கான என் அன்பை மொத்தமும் வெளிப்படுத்த ராஜாவின் இந்த பாடலைப்போல வேறு ஏதேனும் கிடைக்குமா?

1992 ம் வருடம், மலையாள இயக்குனர் பரதன் இயக்கத்தில் வெளியான "ஆவாரம்பூ" படத்தின் பாடல்கள் மிக நேர்த்தியாக, ராஜாவின் பெயர் சொல்பவை.



வினீத், நந்தினி (வைதேகி) நடிப்பில் மிக இயல்பான அழகில் படமாக்கப்பட்ட "சாமிகிட்ட சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே..."

பரதனின் முதல் தமிழ்ப்படமான இது, "தகர" என்ற மலையாளப்படத்தின் தழுவல்.

எனக்கே சிலமுறை தோன்றும்... எத்தனை முறை ஜானகியை பற்றி சிலாகித்து சொல்வதென்று.. எத்தனை முறை சொன்னாலும் தீராதது அவரின் குரலினிமை. கங்கை அமரனின் வரிகளை இசையின்றி எஸ்.பி.பி துவங்குவார். பின்பு இசையோடு துவங்கும் பாடலின் அனுபல்லவியில் "முத்துமணியே... பட்டுத்துணியே..." என்று ஜானகி நுழைவார். காண்பதற்கும் மிக அழகான கடற்புரத்தில் படமாக்கப்பட்டிருக்கும் பாடல். ஒப்பனையில்லாத நாயகியின் தெளிவான முகம் வெகு அழகாய் இருக்கும்.

முதல் சரணத்தில், ஆதாரம் அந்த தேவன் ஆணை என்ற வரியை முடிந்தால் ஸ்வரமாக்கி பாருங்கள்... "ஆணை" என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் ராஜா பிரயோகித்திருக்கும் ஸ்வரங்களும், அதை ஜானகி பாடியிருக்கும் வேகமும் அற்புதமாயிருக்கும்.

அதன்பின்பு "வந்த துணையே... வந்து அணையே..." ஜானகி என்பதெல்லாம் மறந்து நமக்கு மிகவிருப்பமான ஒருவர் நம் கைப்பற்றி அழைப்பது போல் இருக்கும்.

இரண்டாவது சரணத்திற்கு முன்பு ஒரு தனித்த வயலின் பகுதி.. அதோடு போட்டியிடும் குழலிசை, இறுதியில் இரண்டும் இணையுமிடத்தில் ஜானகி துவங்கும் "காவேரி அணை மீதேறி நதி..." பாடல் முழுவதுமே, "தயவு செய்து என் அன்பை புரிந்து கொள்ளேன்" என்கிற ரீதி தொனிக்கும்...

இந்த முறை பாடல் முடிவுறும் போது, நீங்கள் மீண்டும் முதலிலிருந்து கேட்கத்துவங்குவீர்கள் என்று நினைக்கிறேன்...!!



சாமிகிட்டச்சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே...
முத்துமணியே... பட்டுத்துணியே...
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்துவந்த சித்திரமே...

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே...
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேர தெளிந்தேனே...
ஆதாரம் அந்த தேவன் ஆணை, சேர்ந்தாய் இந்த மானை...
நாவார ருசித்தேனே தேனை, தேர்ந்தேன் இன்று நானே...
வந்த துணையே... வந்து அணையேன்...
அண்டமுள்ள சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே...

காவேரி அணை மீதேறி நாடி ஓடோடிவரும் வேகம்...
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறைவேதம்...
பூலோகம் அந்த வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்...
வாழ்நாளில் சுகம்தானிது போலே வாழும் வழி கேட்டேன்...
வன்னக்கனவே... வட்ட நிலவே...
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே...

சாமிகிட்டச்சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே...
முத்துமணியே... பட்டுத்துணியே...
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்துவந்த சித்திரமே...


-மகேந்திரன்.

---

பாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

.

பிரபாகரன் - வாழ்வும் மரணமும்

பிரபாகரன் இறந்த அதே மாதத்தில் அசுர வேகத்தில் அவரை பற்றிய இந்த புத்தகத்தை வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். போன வரியில் ‘இறந்த’ என்ற சொல்லை எழுத இன்னமும் எனக்கு தயக்கம் இருக்கும் நிலையில், ‘பிரபாகரன் - வாழ்வும் மரணமும்’ என உறுதியாக புத்தகத்தை எழுதியிருக்கிறார், பா.ராகவன். புத்தகத்தின் இந்த வேகத்திற்கு, ஆசிரியர் அந்நேரம் குமுதத்திலும், ரிப்போர்ட்டரிலும் எழுதிக்கொண்டிருந்த தொடருக்கான உழைப்பு உறுதுணையாக இருந்திருக்கிறது.



பிரபாகரன், விடுதலை புலிகள், தமிழ் ஈழ போராட்டம் என இவை எல்லாவற்றின் தற்போதைய நிலையின் காரணமாக, ஆரம்பமாக ஆசிரியர் சுட்டிக்காட்டுவது - ராஜீவ் படுகொலை. அது நிகழாமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்? இலங்கைக்கான அண்மைகால இந்திய ராணுவ உதவி, பழி வாங்குவதற்கான மூர்க்க சக்தி வாய்ந்ததாக இருந்திருக்காது. தமிழக காங்கிரஸ் கொண்டிருக்கும் புலி எதிர்ப்பும் இருந்திருக்காது. ஆனால், ராஜீவ் படுகொலை நிகழாமல் இருந்திருந்தால்? ராஜீவ், புலிகளுக்கு எதிரான நிலையை கொண்டிருந்தாலும், அவருக்கு ஏற்பட்டு இருக்கும் பல பிரச்சினைகளால், இலங்கை உடன்பாடு என்பதெல்லாம் அவருக்கு பெரிய முக்கியத்துவம் பெறாமலே போயிருக்கலாம்.

சரி. ராஜிவை கொல்ல ஏன் முடிவெடுத்தார்கள்? இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்காத விஷயத்தை, எளிமையாக, புலிகள் பக்க நியாயம் புரியும்வண்ணம் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். எங்கும் பதிந்திருக்காத அந்நேரத்திய ராஜிவ் எண்ணங்களை, இந்த புத்தகம் மூலம் கண்டிப்பாக புரிந்துக்கொள்ளலாம்.

மாத்தையாவை பற்றி விலாவரியாக சொல்லியிருக்கும் ஆசிரியர், கருணாவை அவ்வளவாக கண்டுக்கொள்ளவில்லை. மாத்தையா, புலிகள் இயக்கத்தில் கமாண்டர் பொறுப்பில் இருந்தவர். புலிகளுக்காக உண்மையாக போரிட்டவர்தான். ஆனால், இறுதி வரை இல்லை. இந்திய அதிகாரிகளுடன் மறைமுகமாக தொடர்பு வைத்திருந்து, புலிகளுக்கு துரோகம் செய்துகொண்டு இருந்தார். ஆசிரியரின் வார்த்தைகளில், மாத்தையாவைக் காட்டிலும் பிரபாகரனை மிகப்பெரிய மனநெருக்கடிக்கு உண்டாக்கிய நபர் வேறு யாருமில்லை. அவருக்கு பிரபாகரன் வைத்த சோதனை, அவர் மேல் சாட்டப்பட்ட குற்றங்கள், கொடுத்த இறுதி தண்டனை - எல்லாமும் விரிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பிரச்சினை மிகவும் தீவிரமானதே, அமைதி உடன்பாட்டுக்கு பிறகுதான் என்பது எப்பேர்பட்ட முரண். அதற்கு முன்பெல்லாம் பிரபாகரன் வேதாரண்யம், மைலாப்பூர், திருவான்மியூர் என்று சுற்றி திரிந்திருக்கிறார். பாண்டி பஜாரில் துப்பாக்கி சூடு நடத்தி, தமிழக போலீஸாரிடம் கைதாகி இருக்கிறார். தமிழக மக்களுக்கு விடுதலை புலிகள் பற்றி தெரிய வந்தது அப்போது தான்.

அந்நேரம் எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு செய்த உதவிகள் ஏராளம். கைதான பிரபாகரனை, இலங்கைக்கு அனுப்ப சொல்லி அதிபர் ஜெயவர்த்தனே கேட்டபோது மறுத்தார். இரண்டு கோடியை கைக்காசில் இருந்து எடுத்து கொடுத்தார். சென்னைக்கு வந்த ஆயுத கப்பலில் இருந்து ஆயுதங்களை பிரச்சினை இல்லாமல் இறக்க உதவினார். இது சரியா தவறா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், தன் அதிகாரத்தை மீறி ஒரு தமிழக முதலமைச்சர் புலிகளுக்கு உதவியது வரலாற்று ஆச்சரியம் தான். அந்த நேரத்திலும், எம்ஜிஆர் சந்திப்புக்கு அழைத்த முந்திய தினம் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, பிரபாகரனுக்கு தர்மசங்கடம் உருவாக்கியிருக்கிறார் கலைஞர்.

புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் சொல்லியிருப்பது.

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒரு போராளி இயக்கத்தின் தலைவராக இருந்து படைகளையும் மக்களையும் வழிநடத்திக்கொண்டிருந்த ஒரு மனிதரைப் பற்றி முழுமையானதொரு பதிவை இன்னொருவர் ஒருக்காலும் எழுத இயலாது. ஒன்று அவரே எழுதியிருக்கவேண்டும். அல்லது நிழல்போல் அவருடனேயே இருப்பவர் யாராவது எழுதவேண்டும்.

உண்மைதான். ஆனால், பாரா சம்பவங்களையும் நிகழ்வுகளையும் வெறுமனே புத்தகத்தில் அடுக்கிக்கொண்டு போகவில்லை. ஒவ்வொரு முடிவுக்கும், விளைவுக்கும் காரணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார். நார்வே அமைதி முயற்சிகளின்போது கை ஓங்கியிருந்த புலிகளுக்கு, இறுதி யுத்தம் என்று ராஜபக்‌ஷே வருணித்த போரில் தோல்வியை சந்தித்ததின் காரணக்கூறுகள் எவை? பிரபாகரனுடன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வம் போன்ற வழிக்காட்டிகள் இல்லாதது, இந்திய அரசின் அனைத்து வழி உதவிகள், இயக்கத்தின் அனைத்து ரகசியங்கள் அறிந்த கருணா அரசின் கைப்பாவை ஆனது போன்றவற்றை ஆசிரியர் சுட்டிக்காட்டுக்கிறார்.

மீண்டும் சொல்லலாம். பிரபாகரன் தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய பிழை, ராஜிவ் படுகொலை. அதன் இரு தரப்பு நியாய அநியாயங்களை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டுச் சிந்தித்தாலும் அது ஒரு சரியான ராஜதந்திர நடவடிக்கை அல்ல. பிராந்திய வல்லரசு பதினெட்டு ஆண்டுகள் கழித்தும் பழி வாங்கும்.

பொதுவாகவே கிழக்கு பதிப்பகம் வெளியிடும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், ஒரு பக்க சார்பாக சம்பந்தப்பட்டவரை தூக்கி நிறுத்துபவையாகவே இருக்கும் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இந்த புத்தகம் எப்படி? பிரபாகரனுக்கு ஆதரவானதா, இல்லை எதிரானதா? என்று கேட்டால், கண்டிப்பாக ஆதரவானதுதான். உண்மை அதுவாகவே இருக்கலாம். இருந்தாலும், பிரபாகரன் செய்த தவறுகளை ஆசிரியர் சுட்டிக்காட்ட தவறவில்லை. பிரபாகரன் தரப்பு நியாயங்களையும் அதற்கு எடுத்துரைத்திருக்கிறார். சர்வாதிகாரி, இயக்கத்தில் சிறுவர்கள் சேர்ப்பு, மனித கேடயமாக மக்கள் போன்ற குற்றசாட்டுகளுக்காகவே ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஆரம்பத்திலேயே சொன்னது போல், இன்னமும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று வாதம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கு சாதகமான அவர்கள் கூறும் எல்லா சந்தேகங்களையும் பட்டியலிட்டு இருக்கும் ஆசிரியர், என்ன நடந்திருக்கும் என்பதை ஒரு சில விஷயங்களை வைத்து விளக்கியிருக்கிறார். பிரபாகரன் மரணத்தைப் பொறுத்தவரை முழு உண்மை என்ற ஒன்று கிடையாது என்பது உறுதி என்றும், அதனால் இருளில் உறுப்பு தடவித்தேடி யானையைச் சமைக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

இறுதியாக நூலை பற்றிய ஒன்று. நூலிருந்து.

நோக்கம், விளைவு என்னும் இரு எல்லைகளுக்கு நடுவே செயல்பாடு என்னும் மிக நீண்ட ஒருவழிப் பாதை ஒன்றுண்டு அல்லவா? இந்த நூல், பிரபாகரனின் செயல்பாடுகளைத்தான் மறைமுகமாக ஆராய்கிறது. சரியான முடிவுகளும் தவறான கணிப்புகளும் இல்லாத மனித வாழ்க்கை இல்லை. நமது சரியான முடிவுகளும் தவறான கணிப்புகளும் நம்மை மட்டுமே பெரும்பாலும் பாதிக்கின்றன. பிரபாகரனைப் பொருத்தவரை, அது ஈழத் தமிழர்கள் அத்தனை பேரையும் பாதித்துவிட்டது. அதுதான். அது ஒன்றுதான் வித்தியாசம். அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது இந்நூல்.

ஆசிரியரே சொல்வது போல், பிரபாகரன் போன்ற ஒரு போராளியின் வாழ்வை முழுமையாக பதிவு செய்வது கடினம். ஆனால், இருக்கும் தகவல்களைக் கொண்டு, எளிமையான நடையில் வந்திருக்கும் இந்த புத்தகம், பிரபாகரனை புரிந்து கொள்ள கண்டிப்பாக உதவும்.

பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
203 பக்கங்கள்
ரூபாய் 100
கிழக்கு பதிப்பகம்

புத்தகம் வாங்க இங்கு க்ளிக்கவும்.


.

Sunday, November 1, 2009

அஜித் நடிப்பும் நடனமும்

டிவில முழுசா ஒரு படம் பார்த்து எவ்ளோ நாளாச்சு என்று எண்ணிக்கொண்டே கடந்த சனி அன்று ஒரு படம் பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். கே டிவில தானே எப்பவும் படம் போடுவாங்க. இப்ப என்ன போடுறாங்க, பார்ப்போம் என்று வைத்தேன். காதல் கோட்டை ஓடிக்கொண்டிருந்தது.

பாதிக்கு மேல் ஓடிவிட்டது. சரி, இனி தான் நல்லா இருக்கும்’ன்னு என்று பார்க்க தொடங்கினேன். படத்துல எல்லா கேரக்டருமே கொஞ்சம் அறிவுஜீவித்தனமாக தத்துவமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த படத்தை அந்த டைமில் எடுத்ததால் உண்டு. பிறகு, கொஞ்ச காலத்தில் செல்போன் வந்துவிட்டது. செல்போன் வந்த பிறகு, இப்படி ஒரு விஷயம் நடக்கவே வாய்ப்பில்லையே? (பார்க்காமல் காதல் என்பதை சொல்லவில்லை. பார்க்காமல் காதலித்தவரை சந்திக்க பெரும்பாடுபடுவதை.)

இந்த படத்திற்காக அகத்தியன் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றிருந்தார். சிறந்த இயக்குனர் தேசிய விருது வாங்கி கொடுத்த முதல் தமிழ் படம். ஆனால், இந்த படத்திலும் வழக்கமான தமிழ் சினிமாவிற்கான விஷயங்கள் எல்லாம் இருக்கும். தேவையில்லாத இடங்களில் பாடல், சண்டைகாட்சி என்றெல்லாம் இருந்தாலும், கிளைமாக்ஸ் வரை மெல்லிய சஸ்பென்ஸ் வைத்திருந்தது ப்ளஸ்.

அதிலும் முடிவில் அஜீத்தான், தான் தேடி வந்த தன் காதலன் என்று தெரிந்தவுடன், ரயிலில் இருந்து இறங்கி உணர்ச்சி பொங்க, தான் கமலி என்று வெளிப்படுத்தும் உச்சக்கட்டகாட்சியில் தேவயானி சிறப்பாக நடித்திருந்தார். அதற்கு பதிலுக்கு அஜீத் வெளிக்காட்டும் உணர்ச்சி, ஒண்ணுமில்லாததாக இருந்தது. ஆனால், பிறகு வந்த படங்களில் எல்லாம் இம்மாதிரி காட்சிகளில் அஜித் நன்றாக செய்திருப்பார். அவரை அடிக்கடி வாரிவிடும் ஒரு விஷயம் - அவரது குரல், உச்சரிப்பு.

---



அஜீத்தின் மைனஸாக இருந்த, இருக்கும் இன்னொரு விஷயம் - நடனம். டான்ஸ்ல எங்க ஆளு பக்கம் வரவே முடியாதே என்று விஜய் ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு இருப்பார்கள். இது கண்டிப்பாக அஜீத்துக்கும் தெரிந்திருக்கும். இதனாலேயே அஜீத்தின் ஒவ்வொரு படத்திலும் எப்படி ஆடியிருக்கிறார் என்று கவனிப்பேன். சில இயக்குனர்கள் மட்டும் தான், அஜீத்தின் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள், எதுக்கு அவர கஷ்டப்படுத்திக்கிட்டு என்று விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அஜீத் நன்றாக ஆடியிருக்கிறார் என்று நான் நினைக்கும் மூன்று பாடல்கள்.

தீனா - நீயில்லை என்றால்

யுவன் போட்ட சூப்பர் ட்யூன் இது. இப்ப, ஆடியோவில் கேட்டாலும், ஆட்டம் போட வைக்கும் தாளம். அஜீத் ஒரு காலையும் கையையும் ஏற்றி இறக்கி ஆடும் ஆட்டம், எங்கள் கல்லூரி ஹாஸ்டலில் ரொம்ப பிரபலம்.



வரலாறு - இளமை இளமை

இந்த படத்தில் தல பரதநாட்டியம் ஆடி, அது யாரும் சிரிக்கும்படி இல்லாததே பெரிய சாதனை. ஆனால், அதற்கு முன்னால், படத்தின் ஆரம்ப பாடலான ‘இளமை இளமை’ பாடலிலேயே என்னன்னமோ ஆடி என்னை ஆச்சரியப்படுத்தியிருந்தார் அஜீத். பட வைத்தவர் ராபர்ட்.



ஏகன் - ஹேய் சாலா

இந்த படத்தில் அஜீத்தின் நடனத்திற்கு எல்லோரிடமுமே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் படத்தின் இயக்குனர் - டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம். விஜய் எப்போதும் நன்றாக ஆடுவார் என்றாலும், பிரபுதேவா இயக்கத்தில் இன்னமும் கலக்கியிருந்தார். அதுபோல் ஏதாவது நடந்துவிடாதா என்று ஒரு ஏக்கம் அஜீத் ரசிகர்களிடம் இருந்திருக்கும். அது இந்த பாடலில் மட்டும் ஒரளவுக்கு பூர்த்தியானது.



---



அஜீத் நல்லா டான்ஸ் ஆடுன பாடல்களை பார்த்தோம். இனி விஜய் நல்லா நடிச்ச படங்களை வேறொரு பதிவில் பார்ப்போம். கொஞ்சம் கஷ்டம்தான். ட்ரை பண்ணுவோம்.

.