Wednesday, December 30, 2009

விஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை

என் சிறு வயதில் அண்ணனுடன் திரையரங்கில் செகண்ட் ரிலீஸில் ‘விடுதலை’ படம் பார்த்தேன். ரஜினி சிவாஜியுடன் செய்யும் குறும்புத்தனங்களுக்காக எனக்கு பிடித்த படம். ரஜினியுடன் நடித்த ஹீரோ யாரென்று அண்ணனிடம் கேட்டபோது, விஷ்ணு’ன்னு ஒருத்தன் என என் காதில் விழுந்தது. கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் என்பது உபத்தகவல். ரஜினி, சிரஞ்சிவி, மம்மூட்டி என்ற சூப்பர் ஸ்டார் லிஸ்டில் இவரை சேர்த்துக்கொண்டேன்.



எப்ப இவரை பற்றி பேசும் போதும், எதற்கு அண்ணன் ”விஷ்ணு’ன்னு ஒருத்தன்” என்றே சொல்கிறார்? என்பது ஒரு கேள்வியாகவே இருந்தது. அண்ணன் மட்டுமல்ல, எல்லோருமே அப்படித்தான் சொன்னார்கள். ரொம்ப நாள் கழித்து தான், அவருடைய பெயர் ”விஷ்ணுவர்தன்” என்று தெரிந்தது. அது என் காதில் விஷ்ணு’ன்னு ஒருத்தன் என விழுந்திருக்கிறது.

இன்று காலை, விஷ்ணுவர்த்தன் என்கிற இந்த ஒருவர் இறந்த செய்தியைக் கேட்டப்போது, யாரோ ஒருவர் என்று தோணவில்லை. நம்பவும் முடியவில்லை.

அந்த படத்தில் ஆரம்பத்தில் ரஜினியின் ஜோடி மாதுரியை இவர் டாவடித்ததால், எனக்கு இவரை அப்போது பிடிக்கவில்லை. கடைசியில், பேபி ஷாலினியுடன் தனியாகவே சென்று விட்டதால், சமாதானமானேன். இவரை எப்போது பார்க்கும்போதும், பரிதாபமாக இருக்கும். இந்த படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆனதாலும், டிவியில் எதிலும் போடாததாலும், ரொம்பவும் தேடி, டிவிடி வாங்கி வைத்துள்ளேன். கடைசியில் போராக இருக்கும். இருந்தாலும், இன்னோரு முறை பார்க்க வேண்டும்.

---

சந்திரமுகியின் கன்னட ஒரிஜினலான ஆப்தமித்ரா வெளியான சமயம், அதன் ஹீரோயின் சௌந்தர்யா மரணமடைந்தார். தற்போது, அதன் இரண்டாம் பாகம் எடுத்துவருகிறார்கள். ஹீரோ இறந்துவிட்டார்.

---

கன்னட ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ராஜ்குமார் இறந்தபோது நடந்தது போல், இன்றும் ரகளை, கலாட்டாக்கள் நடந்துள்ளது. பல அலுவலகங்களில், மதியமே வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள். நிறைய கடைகள் பூட்டி கிடந்தன. பஸ், கார், வேன்களில் விஷ்ணுவர்தன் படம் தற்காப்பிற்காக ஒட்டப்பட்டிருந்தது. ப்ளேக்ஸ் போர்டுகளில் சிரித்த முகத்துடன் இருந்தவருக்கு மாலை போட்டு அனுதாபம் தெரிவித்திருந்தனர்.

---

கன்னட சேனல்கள் அனைத்திலும் விஷ்ணுவர்தன் தான். மியூசிக் சேனல்களில் அவருடைய பாடல்களும், மூவி சேனல்களில் அவருடைய படங்களும் ஓடிக்கொண்டிருந்தது. உதயாவில் கன்னட ரமணா ஒடிக்கொண்டிருந்தது. நியூஸ் சேனல்களிலும் முழுக்க அவரை பற்றிய செய்திகளே. பிரபலங்கள் அவரை பற்றி கருத்து சொன்னார்கள். ரஜினி உருக்கமாக பேசினார். அவருடைய உடலுக்கு பக்கத்தில் அம்பரிஷ், அர்ஜுன், சுஹாசினி போன்றோர் அழுதுக்கொண்டு இருந்தார்கள்.

---

நடிகர்கள் தான் எவ்வளவு நெருக்கமாக மக்களுடன் கலந்துவிடுகிறார்கள். இது எல்லோருக்கும் அமைவது இல்லை. ஒரு சிலருக்கே.

முன்பின் சந்தித்திருக்காதபோதும், நடிகர்கள் திருமணத்தின் போது, தங்கள் வீட்டு திருமணம் போன்றே மகிழ்வதும், அவர்கள் இறப்பின் போது உணர்ச்சிவயப்பட்டு அழுவதும், வேறெந்த துறையினருக்கும் கிடைப்பதில்லை. தினம் தினம் அல்லது அடிக்கடி பார்ப்பதால், தங்களுக்கு பிடித்தவராக இருப்பதால், இனி அவர்களுடைய படைப்பு இல்லை எனும் நிலை ஏற்படும்போது, அவர்களின் இழப்பு கஷ்டமானதாக ஆகிறது.

ஒரு கலைஞனிடம் அவனுடைய படைப்பை மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகனுக்கே இப்படியென்றால், அவன் குடும்பத்தினருக்கு?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

.

சரக்கும் சைடு டிஷ்ஷும்

ஆவுடையப்பன் முதுகில் போட்டிருந்த தோள் பையினுள், வோட்கா பாட்டிலும் பல்ப்பி ஆரஞ்சு பாட்டிலும் சண்டையிட்டு கொண்டிருந்தது. ஆவுடையப்பனுக்கு சொந்த ஊர், ராஜபாளையம். எம்சிஏ படித்து, சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் ஆகி ஏழு மாதங்கள் ஆகிறது. மனைவி லதாவை பிரசவத்திற்கு ஊரில் விட்டுவிட்டு, இன்று காலை தான் வந்தான். அலுவலகம் முடிந்து, இப்ப வீட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறான். வீட்டில் துணை இல்லையென்பதால், துணைக்கு ரெண்டு சங்கதிகளை வாங்கிக்கொண்டு செல்கிறான். வீட்டு பக்கத்தில் இருந்த ஹோட்டலில் நாலு புரோட்டாவும் வாங்கி கூட்டணி சேர்த்துக்கொண்டான்.



உடை மாற்றிவிட்டு, ஹாலுக்கு வந்து பாயை விரித்தான். எல்லா கதவுகளையும் சாத்திவிட்டு, பைக்குள் இருந்த பாட்டில்களை எடுத்து வெளியே அடுக்கினான். வெள்ளை திரவத்தையும், ஆரஞ்ச் திரவத்தையும் சரி விகிதத்தில் கலந்து, கலக்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தான்.

ஆவுடையப்பன் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல் மெகா குடிகாரன் இல்லை. கல்லூரியில் பழக்கமாகி, வேலையில் சேர்ந்தபிறகு பார்ட்டியில் கண்டினியூ செய்து, திருமணத்திற்கு பிறகு மனைவியின் பர்மிஷனோடு அவ்வப்போது குடிப்பவன். மாதத்திற்கு ஒருமுறை குடிக்கலாம் என்பது மனைவியின் கண்டிஷன். கண்டிஷன் ஏதுமில்லாதபோது, குடிக்க அவ்வளவு ஆர்வமில்லாதவனுக்கு, கட்டுப்பாடுகள் வந்தபின்பு தனியாக குடிக்கும் ஆசை வந்துவிட்டது. அதே சமயம், லதாவிடம் நல்ல பெயரையும் இழக்க விரும்புவதில்லை.

இப்போதுக்கூட வாங்கும்போது இருந்தபோது ஆர்வம், உட்கார்ந்து அடிக்கும்போது குறைந்துவிட்டது. லதாவின் முகம், வோட்காவில் தெரிந்தது.

ட்ரிங்... ட்ரிங்...

“ஹலோ”

“என்னங்க... ஆபிஸ்ல இருந்து வந்தாச்சா?”

“ஆமாம் டியர். இப்பத்தான்.”

“சாப்டாச்சா?”

“ம். இதோ. இப்பத்தான் வாங்கிட்டு வந்தேன்”

“ஏன்? கடையிலேயே சாப்டுட்டு வர வேண்டியது தானே?”

“இல்ல... அது வந்து...”

“என்ன...? வேற ஏதும் வாங்கிட்டு வந்தீங்களா?”

லதாவிடம் மறைக்க தோணவில்லை. உண்மையை சொல்லிவிட்டான்.

“ஏங்க?” கெஞ்சலாக குரல் ஒலித்தது.

“இல்லைம்மா. ஏதோ வாங்கிட்டேன். ஆனா, இப்ப குடிக்க தோணலை. நான் அப்படியே வச்சிட்டு தூங்க போறேன்.”

“ம்ம்ம்... சரிங்க... ஆனா சாப்டுட்டு தூங்குங்க...”

----

ஐந்து மாதங்களுக்கு பிறகு...

லதாவையும், குழந்தையையும் ஊரில் இருந்து கூட்டி வந்தவன், பைகளை பெட் ரூமில் வைத்துவிட்டு, லதாவை நேராக சமையலறைக்கு அழைத்து சென்றான்.

“என்னங்க? என்ன இருக்கு’ன்னு வந்ததும் இங்க இழுத்துட்டு வாரீங்க?”

”இங்க பாரு” - ப்ரிஜ்ஜை திறந்து உள்ளே இருந்த பாட்டிலை காட்டினான்.

“என்னங்க இது?”

“சொன்னேனில்ல... அன்னிக்கு வாங்குனது. அப்படியே வச்சிட்டேன்.”

“சரி. வாங்கினது வாங்கியாச்சு இல்ல... குடிச்சிட்டு தூர போடுங்க.”

“இல்ல... எனக்கு வேண்டாம். அப்படியே தூர போடு.”

“ஏங்க வேஸ்ட் பண்றீங்க? ஒரு தடவைதானே? குடிச்சிட்டு அந்த கண்றாவியை தூர எறிங்க”

“வேண்டாம்... வேண்டாம்... நானே போடுறேன்”

எடுத்து சமையலறை குப்பைத்தொட்டிக்குள் போட்டான்.

“என் ராசா...” நெட்டி முறித்தாள்.

---

குழந்தையுடன் வீட்டு வேலை பார்க்க முடியாது என்று வீட்டு வேலைகளை செய்ய, கண்ணம்மாவை வர சொல்லியிருந்தான். ஆவுடையப்பன் அலுவலகம் சென்றபிறகு கண்ணம்மா வந்தாள். ஜாயினிங் பார்மாலிட்டியை முடித்துவிட்டு, வீடு பெருக்க ஆரம்பித்தாள். குப்பையை அள்ளி எடுத்து சென்றவள், குப்பைத்தொட்டிக்குள் பார்த்து விட்டு,

“என்னம்மா இது?”

“எது?”

“இதோ” பாட்டிலை எடுத்துக்காட்டினாள்.

லதா ஒன்றும் சொல்லவில்லை.

“அய்யாவுக்கு இந்த பழக்கம் இருக்காம்மா?”

“ம்”

“எதுனாலும் இருக்கலாம்மா. இந்த பழக்கம் மட்டும் ஆகாதும்மா. பாத்துக்கோங்க” என்றபடியே குப்பைத்தொட்டியை எடுத்துக்கொண்டு வெளியே தட்ட சென்றாள்.

---

மாலை. கண்ணம்மா வீடு.

கண்ணம்மாவின் புருஷன் முருகன் கட்டிட வேலைக்கு சென்று விட்டு, அவளுக்கு முன்பே வீட்டுக்கு வந்துவிடுவான். கண்ணம்மா வீட்டுக்குள் நுழையும் போது, தரையில் படுத்துகிடந்தான்.

“மச்சான். எழுந்துரு. இங்க பாரு. உனக்கு என்னா கொண்டாந்திருக்கேன் பாரு”

“என்னடி?” - கண்ணம்மா கையில் இருப்பதை பார்த்து முகம் மலர்ந்தான். வோட்கா பாட்டில்.

“எங்காந்துடி இட்டாந்த?”

சொன்னாள்.

“செல்லம்டி நீ”

பாட்டிலை கையில் வைத்து சுற்றி சுற்றி பார்த்தவன், எழுந்து தண்ணீர் குடத்திற்கு பின்புறம் வைத்தான்.

“ஏன்யா குடிக்கலையா?”

“பெரிய சமாச்சாரம்டி. சும்மா அடிச்சா, நல்லா இருக்காது. நாளைக்கு கொஞ்சம் காசு கிடைக்கும். கறி, மிச்சரோட வாரேன்.”

---

இரவு சாப்பாட்டை முடித்து விட்டு, வாஷ்பேசினுக்கு கைக்கழுவ சென்ற ஆவுடையப்பன், குப்பைத்தொட்டியை பார்த்து விட்டு,

“லதா, அந்த பாட்டிலை வெளியே போட்டாச்சில்ல?”

“ஆமாங்க.”

---

மறுநாள் மாலை. முருகன் வேகவேகமாக வேலையை முடித்துவிட்டு, கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆபிஸில் பணத்தை வாங்கிவிட்டு, நேராக பாயின் கபாப் கடைக்கு சென்று சில்லி சிக்கன் வாங்கினான். பக்கத்தில் இருந்த கடையில், மசாலா கடலையும் மிக்சரும் பொட்டலம் போட்டுக்கொண்டான்.

வீட்டில் இன்னும் கண்ணம்மா வந்திருக்கவில்லை. கதவை உள்ளே சாத்திக்கொண்டான்.

பொட்டலங்களை பிரித்து வைத்துவிட்டு, குடத்தின் பின்புறம் இருந்த பொக்கிஷத்தை எடுத்து வந்தான். பாட்டிலுக்கு ஒரு முத்தம் கொடுத்தவன், மெதுவாக அதிலிருந்து டம்ளரில் ஊற்றினான். முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் பிரகாசம்.

அடுத்த கணம், டம்ளர் ஒரம் உதட்டில் பதிய, திரவம் தொண்டையில் பயணித்தது.

---

அதே நேரம்.

உடன் பணிபுரியும் ராஜூவுடன் பைக்கில் ஆவுடையப்பன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

”ஆவுடை! ஒரு கட்டிங் அடிச்சிட்டு போவோமா?”

“இல்லை ராஜூ! போன நாலஞ்சு மாசமா அடிக்கடி வீட்ல சரக்கு தான். பொண்டாட்டி ஊர்ல இல்லை. குழந்தை பிறந்த சந்தோஷம். இனி கிடையாது.” போலியாக சோகம் காட்டினான்.

“வீட்ல தெரியுமா?”

”தெரியும். நான் ஒரு உத்தமன்’ன்னு” - சிரித்தான் ஆவுடையப்பன்.

பிறகு, நடந்ததை எல்லாம் சொன்னான்.

“அப்ப கடைசி நாள் மட்டும் தான், அடிக்காம சரக்க அப்படியே ப்ரிஜ்ஜுக்குள்ள வச்சிட்டியா?”

“இல்லையே. அன்னிக்கும் அடிச்சேன். அடிச்சிட்டு வெறும் தண்ணியை ஊத்தி வச்சேன்.”

**********

டிஸ்கி - பின்னூட்டம் பார்க்கவும்.

.

Tuesday, December 29, 2009

புத்தகக் கண்காட்சி ஸ்பெஷல் - இளைய தளபதி புத்தகம்

இந்த புத்தகக்கண்காட்சியில் வெளிவர இருக்கும் புத்தகங்களில் மிக முக்கியமானது, டூபாக்கூர் புத்தக நிறுவனம் வெளியிடயிருக்கும் ‘இளைய தளபதி’ விஜய் வாழ்க்கை வரலாறு. இந்த புத்தகத்தில், நடிகர் விஜய் அவர்களின் வாழ்க்கையில் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார் ஆசிரியர் விஜய்பிரியன்.



விஜய் என்று பெயர் வைத்ததில் இருந்தே, விஜய்க்கான வெற்றியை தொடங்கிவைத்துவிட்டார் அவருடைய தந்தை, புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். சிறுவன் விஜய்க்கு சிறுவயதிலேயே படிப்பதற்கு இருக்கும் நாட்டத்தை விட நடிப்பதற்கே அதிக ஆசை. இன்று விஜய் முன்னணி நடிகரானாலும், இன்னமும் அந்த ஆசை நிறைவேறாதது வேறு விஷயம். ஆனாலும் சிறுவயதிலேயே தன் ஆசையை தந்தையிடம் வெளியிட்டு, அவருடைய படங்களில் தலைக்காட்ட தொடங்கினார். ஒவ்வொரு தந்தையும் தன் மகன் ஆசையை காது கொடுத்து கேட்பதின் அவசியம் என்னவென்பதை இதில் இருந்து தெரிந்துக்கொள்ளலாம்.

நாம் எல்லோருமே சிறு வயதில் வகுப்பிற்கு கட் அடித்து விட்டு, ரஜினி படத்திற்கு சென்றிருப்போம். ஆனால், நாம் எவருக்குமே அது போல் வேஷம் கட்டும் எண்ணம் வந்திருப்பதில்லை. இந்த விஷயத்தில், விஜய் விதிவிலக்கு. நாம் யாராக ஆக விரும்புகிறோமோ, அவராகவே ஆகிறோம் என்றார் இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம். அவர் சொல்லுவதற்கு முன்பே, அதை செயல்படுத்த தொடங்கியவர் விஜய். ரஜினி போல் துண்டு கட்டுவது, நடப்பது, ஓடுவது, ஆடுவது என்று ஒன்றையும் விட்டு வைத்ததில்லை விஜய்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் பலம், பலவீனம் தெரிந்திருக்க வேண்டும். பலத்தை நன்றாக வெளிகாட்ட வேண்டும். பலவீனத்தை புரிந்துக்கொண்டு, அதை வெளிக்கொணரும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. விஜய்க்கு டான்ஸ் நன்றாக வரும். அதற்கேற்றாற் போல், அவர் படத்தில் அரை மணிக்கு ஒரு முறை ஆட்டம் போடும் பாடல்கள் வரும். அது சோக பாடலாக இருந்தாலும், மகிழ்ச்சியுடன் ஆடுவார். நகைச்சுவை நன்றாக வரும் காரணத்தால், சீரியஸாக பேசும் இடங்களில் கூட காமெடி செய்வார். அதேப்போல், படத்திற்கு படம் வேறு வேறு வேடங்களில் நடித்தாலும், எல்லாவற்றிலும் அவர் அவராகவே வருவார். தெரிவார். இருப்பார். வேண்டுமானால், அதிகபட்சம் தனது மீசையின் அடர்த்தியை ஏற்றி இறக்கி வித்தியாசம் காட்டுவார்.

நாம் நம்மை மட்டும் கவனிக்கக்கூடாது. நம்மை சுற்றி இருக்கும் சூழலையும் கவனிக்க வேண்டும். நமக்கென்று ஒரு மார்க்கெட் இல்லாதபோது, மார்க்கெட் இருக்கும் இடத்தில் நாமிருக்க வேண்டும். இதற்கு நல்லதொரு உதாரணம் - விஜய். சங்கவி, விஜய்காந்தை காணவரும் கூட்டத்திடம் தனது முகத்தை காட்டி, அதன் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். காற்று அடிக்கும் நேரம், மாவு விற்கக்கூடாது. மழை அடிக்கும் போது, உப்பு விற்க கூடாது என்பதை உணர்த்தும் வகையில் காதல் கதை சீசனில் காதல் பாடங்களிலும், ஆக்‌ஷன் சீசனில் ஆக்‌ஷன் படங்களிலும் நடித்தார். வேறு பிஸினஸ் தெரியவில்லையென்றால், அதில் இறங்கக்கூடாது என்பதை விஜய்யிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

எதிர்பார்ப்பை குறைத்து கொண்டு, அதற்கு மேல் ரிசல்ட் காட்ட வேண்டும் என்பது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸின் தாரக மந்திரம். அதாவது இப்படித்தான், இவ்வளவுத்தான் இருக்கும் என்று குறைத்து மதிப்பிடும் வகையில் எதிர்பார்ப்பு உருவாக்கிக்கொண்டு இருக்கும்போது, கொஞ்சம் பெட்டராக இருந்தாலே ஆஹா ஓஹோவென்று புகழ்வார்கள். இதை சரியாக கணித்து, குருவி, வில்லு போன்ற தாங்க முடியாத படங்களை கொடுத்துவிட்டு, வேட்டைக்காரன் போன்ற ஒரளவுக்கு உயிரோடு விடும் படங்களை கொடுப்பதின் மூலம் ரசிகர்கள் ‘அப்பா தப்பிச்சோம்’ என்று சொல்லுவதைக்கூட ‘ஆஹா ஓஹோ’விற்கு ஈடானதாக ஆக்கியவர் விஜய்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்னும் பொன்மொழிக்கேற்ப, தன் தந்தையின் சொல்லை தட்டாமல் கேட்டு வருபவர் விஜய். தந்தை யுவராணியுடன் கபடி ஆட சொல்லினாலும் ஆடினார். தன் தலைவர் ரஜினி என்று சொல்ல சொன்னாலும் சொன்னார். எம்ஜிஆர் வழி தன் வழி என்றாலும் சொன்னார். மன்றத்திற்கு கொடி வெளியிட சொன்னாலும் வெளியிட்டார். ராகுல் காந்தியை போய் பார்க்க சொன்னாலும் பார்த்தார். கலாநிதி மாறனை பார்க்க சொன்னாலும் பார்த்தார். இப்படி ஒரு தந்தை அமைவதும் அரிது. இப்படி ஒரு பிள்ளை பிறப்பதும் அரிதோ அரிது.

இன்று இவர் அரசியலுக்கு வர முயற்சி எடுப்பதை பார்த்து ஆளாளுக்கு கருத்து சொல்கிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் விஜய் கண்டுக்கொள்ள போகிறாரா, என்ன? இந்த முகத்தை எல்லாம் காண வேண்டி இருக்கிறது என்று சொன்ன பத்திரிக்கையையே, இவர் முகத்தை அட்டையில் போட்டு, விற்பனையை ஏற்றிக்கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்தவர் விஜய். அதேப்போல், இன்று இவரை விமர்சிப்பவர்களும் ஒருநாள் இவர் முதலமைச்சர் ஆகும் போது, தங்கள் முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பார்கள் என்பதை நாளைய வரலாற்றில் நாம் காணத்தானே போகிறோம்?

பெரியதாக ஒன்றுமில்லாமலும், பெரிய இடத்திற்கு வரலாம் என்பதற்கு இவரைவிட பெரிய உதாரணம் வேறு யாருமில்லை. வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படும் அனைவரும் விஜயை எண்ணிப்பார்க்க வேண்டும். இவராலேயே இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு வர முடிந்ததென்றால், ஏன் நம்மால் முடியாது என்று ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒவ்வொரு குடும்பத்தின் அலமாரியிலும், அரசாங்க மற்றும் பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. மொத்தத்தில் இந்த புத்தகக்கண்காட்சியை கலக்க போகும் புத்தகம் இதுவென்றால், அது மிகையில்லை.

’இளைய தளபதி’ விஜய்
111 பக்கங்கள்
ரூபாய் 80
டூபாக்கூர் புத்தக நிறுவனம்.

.

Sunday, December 27, 2009

ரவிக்குமார் - சேரன் ’கல கல’ & ‘லக லக’

தமிழ் சினிமாவில் நல்ல படம் கொடுக்க வேண்டும், மெஸெஜ் சொல்லவேண்டும் என்ற நேர்மையுடன் படம் எடுக்கும், எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் - சேரன். இப்ப, முழுக்க முழுக்க சீரியஸாக படமெடுக்கும் இவரின் ஆரம்ப படங்களில் உள்ள நகைச்சுவை காட்சிகள், பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைப்பவை. ’பாரதி கண்ணம்மா’வில் ஆரம்பித்த பார்த்திபன் - வடிவேலு ட்ரெண்ட் ஆகட்டும், ’வெற்றிக்கொடி கட்டு’ துபாய் ரிட்டர்ன் வடிவேலு காமெடியாகட்டும் யாரும் மறக்க முடியாதவை.


சேரன், ஆனந்த விகடனில் எழுதிய ‘டூரிங் டாக்கீஸ்’ தொடரிலும், அவர் படங்களை போல, உணர்ச்சிமயமான சோக அத்தியாயங்கள் நிறைந்து இருந்தாலும், நடுநடுவே சிரிக்க வைக்கும் பகுதியும் உண்டு. அப்படி நான் வாசித்து சிரித்த சில இடங்கள்...

---

சேரன் சினிமாத்துறையில் நுழைந்தது, அவருடைய உறவினர் ஒருவருடைய தயவில். அந்த உறவினர் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றிய நிறுவனத்தில் சேரன் எடுபிடி வேலைகள் செய்துவந்தார். அப்போது அவர்கள் கவுண்டமணியை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுத்து வந்தார்கள்.



கவுண்டமணி வரும்போது, எல்லோரும் மரியாதையாக எழுந்து நின்று வணக்கம் சொல்வார்களாம். பதிலுக்கு, ஒன்றும் சொல்லாமல் போய்விடுவாராம் கவுண்டமணி. சில நாட்கள் குஷி மூடில் இருக்கும் போது மட்டும், “கொக்கமக்கா வணக்கங்கோய்!” என்பாராம்.

ஒருமுறை கவுண்டமணிக்கு தலை வலித்திருக்கிறது. சேரனை அழைத்து,

“தலை ரொம்ப வலிக்குதுடா தம்பி. என் தலையைக் கழட்டித் தர்றேன். கொஞ்ச நேரம் வச்சிருக்கியா?” என்றிருக்கிறார்.

சேரனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. ஹா ஹா என்று சிரித்தவரை, கவுண்டமணி,

“அடேய் எள்ளுருண்டைத் தலையா! உன் சம்பாத்தியத்துல ஒரு சாரிடான் வாங்கிட்டு வாடா!” என்று சொல்ல, இவரும் மகிழ்ச்சியுடன் வாங்கி வந்திருக்கிறார். கவுண்டமணிக்கே மாத்திரை வாங்கி கொடுத்தவன் என பெருமையுடன் இருந்திருக்கிறார்.

---

கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு செல்வதற்கு முன்பே, அவரிடம் ப்ரொடக்‌ஷன் ஆளாய் சேரனுக்கு அறிமுகம் இருந்தது.

“வணக்கம் சார்” - சலாம் போட்டார் சேரன்.

“அதாம்ப்பா கம்பெனி ஆளுங்களே இருக்காங்களே. நீ வேற எங்கியாச்சும் ட்ரை பண்ணேன்.”

”இல்ல சார். நான் உங்ககிட்ட அஸிட்டெண்ட்டா சேர வந்தேன்.”

சிரிப்புடன், “பார்றா”

வேகமாக “நிறைய கதை வெச்சிருக்கேன் சார்”

”எங்க சொல்லு பார்ப்போம்”

”கட் பண்ணா சார், ஓப்பன் பண்ணா சார், ஜூம் பண்ணா சார்” என அடித்து விட, ரவிக்குமார் சிரித்துக்கொண்டே அதை ரசித்தார்.

அவர் முடித்தப்பிறகு, அவரை சுற்றி இருந்த உதவியாளர்களிடம், “ஓகே... ஏய்! இவனுக்கும் கொஞ்சம் இடம் குடுங்கப்பா” என்று அவருக்கே உரிய கிண்டலுடன் சொல்ல,

சேரன் உடனே, ”ரொம்ப தாங்க்ஸ் சார்” என மறுபடியும் சலாம் போட.

ரவிக்குமார் ”ஒரு நாளைக்கு ஒரு கும்பிடுதான் அலவ்டு” என்றார் ஸ்ட்ரிக்டாக.

---

புரியாத புதிர் படத்தில் சேரன் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். ஜஸ்ட் இரண்டே விநாடிகள் ப்ரேமில் வருவார். ஆனால், அதற்கே துள்ளிக்குதித்திருக்கிறார்.

டைட்டிலில் உதவி இயக்குனராக பெயர் போட, “சேரன்னு போட்ரலாம்லடா” என கேட்டிருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.

இவர் தயக்கத்துடன் நிற்க, “என்னடா, ஏதோ கருத்து சொல்ல விரும்பறே போலிருக்கே?” என அவர் கேட்க,

சேரன் சொன்னது, “இல்ல சார். எம் பேரை இளஞ் சேர ராஜன்’னு போடுங்க சார்”.

“ஓ! அது தான் உன் முழு பேரா?”

”இல்ல சார்... பாரதிராஜா, இளையராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன்’னு ராஜா பேரு வெச்சவங்க தமிழ் சினிமாவுல ஹிட்டு சார். அதான் ஒரு எபெக்டுக்கு...” என இழுக்க,

“டேய்... இவன் சொன்ன மாதிரியே போட்ருங்கப்பா. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ராஜா வந்துட்டாரு...” என சவுண்ட் விட்டு இருக்கிறார் ரவிக்குமார்.

---

இரண்டாவது படம் முடிவதற்கு முன்பே, ஒரு அசட்டு தைரியத்தில் தனியே படம் இயக்கிவிடலாம் என்று நினைத்து ரவிக்குமாரிடம் சென்றார் சேரன்.

“என்ன?”

“நான் தனியா ஒரு படம் பண்ணலாம்ன்னு இருக்கேன் சார்”

அதிர்ச்சியுடன், “டேய்! என்னடா சொல்றே?”

“ஆமா சார். சரத் சாரை வச்சு ஒரு படம் பண்ணலாம்’ன்னு இருக்கேன். ஒரு புது தயாரிப்பாளர் பேசி வச்சிருக்கேன்”

“டேய்... உனக்கு என்னடா தெரியும்? அதுக்குள்ள படம் எடுக்க போறேங்குற?”

“நல்ல சப்ஜெக்ட் சார்”

”கதை கெடக்கட்டும். அதை எடுக்க தெரியுமாடா உனக்கு?”

”அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிருவேன் சார்”

“என்னது? அட்ஜஸ்ட் பண்ணிருவியா?”

”டிசைட் பண்ணிட்டேன் சார். அதான், உங்ககிட்ட சொல்லிரலாம்’ன்னு...”

“சரி. என்னவோ பண்ணு. நல்லா இரு.” போய்விட்டார்.

ஒரு வருஷம். நிஜ உலகம் புரிந்து, ஒன்றும் நடக்காமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பசி தாங்காமல் ரவிக்குமாரிடம் வந்து விழுந்தார் சேரன்.

“வாங்க டைரக்டர் சார்”

“என்னை மன்னிச்சிருங்க சார்”

”வா, வந்து உக்காரு. என்ன பண்ண? வயிறு சொல்லிக் குடுத்தப்புறம் தான் சில பேருக்கு வாழ்க்கை புரியுது” என்றபடியே சாப்பாடு போட்டார் கே.எஸ். ரவிக்குமார்.

.

Saturday, December 26, 2009

பைக் சர்வீஸ்

பல வேலைகள், பல நாட்களாக தள்ளிப்போகிறது.

வண்டியை சர்வீஸ் விடவேண்டும். இஞ்சினின் குரல் மாறிவிட்டது. நடுக்கத்தில் குழறுகிறது. எவ்வளவு தூரம் ஓடினோம் என்று கணக்கு வைப்பதில்லை. ரொம்ப முக்கியமான பிரச்சினை, குடிக்கிற பெட்ரோலுக்கு ஏற்ப ஓடுவதில்லை.



இரண்டு மாதங்களுக்கு முன்பே, சர்வீஸ் விட்டிருக்கவேண்டும். நிறைய வேலைகள். கொஞ்சம் சோம்பல். இந்த வாரம் விட்டு விடக்கூடாது.

தனியார் வங்கியில் ஒன்பது டூ ஆறு வேலை பார்க்கும் ஆனந்த் (அப்பாடி! கதையா மாத்தியாச்சு...), நாளை வண்டியை எப்படியாவது சர்வீஸ் விட்டுவிடுவது என்று முடிவு செய்தான். நாளை வியாழன். சர்வீஸுக்கு கூட்டம் இருக்காது. இந்த வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் அலுவலகம் விடுமுறை. ஊருக்கு செல்ல வேண்டும். இந்த வாரம் விட்டால், இன்னும் ஒரு மாதத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்கு முன்பு, வண்டியை சர்வீஸ் விட வேண்டும்.

கிளம்பும்போது, மானேஜர் கூப்பிட்டார்.

“ஆனந்த், சனிக்கிழமை ஆபிஸ் வர முடியுமா? கொஞ்சம் ஆடிட் வேலை இருக்குது.”

“இல்லை சார். ஊருக்கு போறேன்.”

“அப்படியா? சரி, அப்ப நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு, அதை பார்க்கலாம்.”

“ஒகே சார். ”

“ஒன்பதரைக்கு நான் ஹெட் ஆபிஸ் போகணும். ஒன்பது மணி. மிஸ் பண்ணிடாதே”

---

ஆனந்த், அலுவலகத்திற்கு பக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருக்கிறான். சர்வீஸ் ஸ்டேசன் இருப்பதோ, அவன் இருக்கும் இடத்தில் இருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால்.

என்ன செய்யலாம் என்று கணக்கு போட்டான்.

மெக்கானிக் எட்டு மணிக்கு கடை திறப்பதாக சொன்னான். ஏழரைக்கு வீட்டில் இருந்து கிளம்பினால், எட்டு மணிக்கு சர்வீஸ் ஸ்டேசன் போய்விடலாம். வண்டியை விட்டுவிட்டு வேகமாக கிளம்பினால், பஸ்ஸை பிடித்து எப்படியாவது ஒன்பதுக்கு ஆபிஸ் வந்துவிடலாம். மீட்டிங் அட்டெண்ட் பண்ணி விடலாம்.

அப்பொழுதே, மெக்கானிக்குக்கு போன் செய்து காலை எட்டு மணிக்கு வருவதாக சொன்னான். செல்போனில் ஆறு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்தான். பத்து நிமிடம் தூங்கியவன் எழுந்து, செல்போனின் சத்தத்தை உச்சத்தில் வைத்துவிட்டு, திரும்பவும் தூங்கி போனான்.

---

சரியாக ஆறு மணிக்கு எழுந்துவிட்டான். ஹீட்டரில் தண்ணி வைத்துவிட்டு, பல் துலக்குவது போன்ற மற்ற வேலைகளை வேகவேகமாக முடித்தான். குளிக்க தண்ணீரை மேல் ஊற்றும் போது, ஜில்லென்று இருந்தது. கரண்ட் இல்லை போல!

திரும்ப அடுப்பில் வென்னீர் வைக்கலாம். நேரமாகும். பரவாயில்லை என்று ஐஸ் வாட்டரை மேலே ஊற்றிக்கொண்டு, விரைத்துப்போய் துண்டால் துவட்டினான்.

எப்பொழுதும் காலையில் தான் சட்டையை அயர்ன் செய்து கொள்வான். கரண்ட் இல்லை. வேறு வழியில்லாமல், திங்கள் கிழமை போட்ட சட்டையையே போட்டுக்கொண்டு கிளம்பினான். பக்கத்து டேபிள் லலிதாவுடன், ஆபிஸில் லஞ்ச் சாப்பிடும்போது, சட்டையின் கை ஓரத்தில் லேசாக ரசம் சிந்தியிருந்தது. அன்று, அச்சச்சோ என்றாள். இன்று ஞாபகம் வைத்துக்கொண்டு கவனித்துவிடுவாளோ? கவனிக்க கூடாது என்று வேண்டிக்கொண்டு கிளம்பினான்.

---

எட்டு மணிக்கு சென்று விட்டாலும், மெக்கானிக் எட்டேகாலுக்கு தான் வந்தான். வேக வேகமாக, என்னவெல்லாம் செக் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு பஸ்ஸை பிடிக்க ஓடினான். வண்டியை எடுக்க ஆறு மணிக்கு வர சொல்லியிருந்தான். ஆபிஸ் ஆறு மணிக்கு தான் முடியும். அதுவரை கிளம்ப முடியாது. ஏழு மணிக்கு வந்து எடுத்துவிடலாம். ஒன்பது மணிக்கு ஊருக்கு ரயில். போய் விடலாமா? போக வேண்டும்.

பஸ் அழுக்காக இருந்தது. ‘இதுல எல்லாம் எப்படி தான் போறாங்களோ?’ என்று பஸ்ஸில் வரும் நண்பர்களிடம் கிண்டல் செய்வான். ஊரில் டவுன் பஸ்ஸில் போகும் சமயம், ‘இங்கத்தான் இதுக்கு பேரு, பஸ்ஸு. அங்கயெல்லாம் குப்பை லாரி’ என்பான். எல்லாம் நினைவுக்கு வந்தது. டைம் பார்த்துக்கொண்டான்.

அலுவலகம் உள்ளே போகும் போது, பெரிய முள் ஐந்தில் இருந்தது. மேனேஜர் அறைக்கு சென்று குட் மார்னிங் சொன்னான். பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு மீட்டிங் ரூம் போக சொன்னார். ப்ரிண்ட் எடுக்கும்போதே, மேனேஜர் மீட்டிங் ரூமிற்கு சென்று காத்திருக்க ஆரம்பித்தார். ப்ரிண்டரில் இருந்து பேப்பர்களை எடுத்துக்கொண்டு, மீட்டிங் ரூமை நோக்கி நடக்கும் போது, செல்போன் அலறியது. சவுண்ட் குறைக்க மறந்து போனது நினைவுக்கு வந்தது.

மெக்கானிக் தான்.

”ஹலோ சார். மெக்கானிக் பேசுறேன்.”

“சொல்லுங்க”

“வண்டில சாவியை காணும் சார்”

சொல்லும்போதே, கை பேண்ட் பாக்கெட்டை தடவ, உள்ளே வண்டி சாவி தட்டுப்பட்டது.

.

Thursday, December 24, 2009

கூகிளுக்கு என்னோடு டூடுல்

கூகிள் டூடுல் தெரியுமல்லவா? ஏதேனும் விசேஷத்திற்கு அல்லது நிகழ்விற்கு அதை குறிக்கும் வகையில், கூகிள் என்ற எழுத்துக்கள் படங்களுடன் அமைக்கப்பட்டு இருக்கும்.

உதாரணத்திற்கு இந்த காந்தி ஜெயந்தி அன்று அவர்கள் வெளியிட்ட டூடுல் இது.



மைக்கேல் ஜாக்சன் இறந்த சமயம் வெளியான டூடுல்.



இந்த படங்களை வரைய சொல்லி, இந்திய சிறுவர்களிடம் ஒரு போட்டி கூட கூகிள் நடத்தியது.

சரி, இது எதுக்கு இப்ப’ன்னு கேட்கறீங்களா? இணையத்தில் உலவுபவர்களில் பலர், இதை மறக்காமல் கவனிப்பார்கள். இன்னைக்கு இந்த விசேஷம். கூகிள் என்ன படம் போட்டுயிருக்குது’ன்னு ஆர்வமா வந்து பார்ப்பாங்க. ஏதாவது விஷயத்திற்கு கூகிள் இம்மாதிரி படம் போடாவிட்டால், சர்ச்சைகள் கூட எழும்புவது உண்டு.

எனக்கு ஒரு வருத்தம். நம்ம ஊர் தலைவர்கள் பிறந்தநாளை கூகிள் கண்டுக்க மாட்டேங்குதே’ன்னு. இப்ப இல்லாட்டினாலும், என்னைக்காவது போட்டுதானே ஆகணும். இன்னைக்கு, இந்தியாவுக்கு பிரத்யோகமா பக்கங்களை வடிவமைப்பவர்கள், நாளைக்கு தமிழகத்திற்காக வடிவமைக்கும் நிலை வரும்.

அப்ப உதவும் என்பதற்காக, கூகிளுக்கு என்னோட உதவி.



ஒரு தலைவரை போட்டா, இன்னொரு தலைவர் கோவிச்சுக்குவாரே? அப்புறம் அவுங்க ஆட்சில, கூகிள தமிழ்நாட்டுல தடைப்பண்ணிட்டா? அதனால, அவுங்களுக்கு ஒண்ணு.



இதையெல்லாம் பார்த்திட்டு, கூகிள் என்னை டூடுல் வரைய கூப்பிட கூடாதப்பா! எனக்கு டைமே இல்லை...

.

Wednesday, December 23, 2009

எக்ஸலண்ட் - செய்யும் எதிலும் உன்னதம்

தன்னம்பிக்கை வகை புத்தகங்கள் படித்து, அது போல் புத்தகம் எழுதிடலாம் என்கிற அளவுக்கு தன்னம்பிக்கை வந்ததால், அதன் பிறகு அவ்வகை புத்தகங்கள் படிப்பதை நிறுத்தி பல வருடங்களாகிறது. ஆனாலும், சமீபத்தில் அம்மாதிரி புத்தகம் ஒன்று வாங்கினேன். காரணம், பா.ரா.

பா. ராகவன் எனக்கு மாயவலையில் இருந்து தான் அறிமுகம். அவர் அதற்கு முன்பு எழுதிய கதைகள், கட்டுரைகள் எதையும் படித்ததில்லை. சமீபத்தில் அவர் தனது வலைப்பூவில் மீள் பிரசுரித்த அவரின் பழைய தொடர்கதையான ‘காதல் கால் கிலோ கனவு கால் கிலோ’யையும் இப்போதுதான் வாசித்தேன். (வாசிக்கும்போது பல இடங்களில் அடக்கமுடியாமல் சிரித்தேன்.) மற்றபடி, தீவிரவாத அமைப்புகள், கிரிமினல்கள், போராளிகள் ஆகியோரைப் பற்றி எழுதியவைகளை வாசித்து வருகிறேன். இப்படி எழுதுகிறவர், சுயமுன்னேற்ற புத்தகம் எழுதினால் எப்படி இருக்கும்? என்ற ஆர்வம்தான் இப்புத்தகம் வாங்க தூண்டியது.



நாம் செய்யும் காரியங்கள் அனைத்தையும் எக்ஸலண்டாக செய்வது எப்படி? என்பதை விளக்க இப்புத்தகம் உதவும் என்று வாக்குறுதி முதலிலேயே அளித்திருக்கிறார். அதுவும், ஆங்கில சுயமுன்னேற்ற புத்தகங்களில் கொடுத்திருப்பது போல. ஏக பில்டப்களுடன். எக்ஸலண்ட் என்பதற்கான தமிழ் சொல் - உன்னதம் என்பதே இந்த புத்தகம் படித்து தான் தெரிந்து கொண்டேன்.

உன்னதமாக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்த புத்தகத்தில் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஜஸ்ட், ரயில் பயணத்தில் பொழுதை கழிக்க வேண்டும். அவ்வளவே. ஆனால், ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தை பார்த்து, ஒருவேளை என்னை உன்னதம்மிக்க உத்தமனாக்கி விடுவாரோ என்று பயந்து தான் போனேன். நல்லவேளை, அப்படி ஒன்றும் ஆகவில்லை. படித்து முடித்து, தூங்கி எழுந்தபின், வழக்கம்போல் வாய் கொப்பளித்து டீ குடித்தேன்.

இது ஒரு வகையில், பாராவின் அனுபவ கட்டுரைகள். அவர் கடந்து வந்த மனிதர்களின் (அவரையும் சேர்த்து!) குணாதிசயங்களை உன்னதத்திற்கான படிக்கட்டுகளாக வரிசைபடுத்தியிருக்கிறார். வழக்கம்போல், அவரின் சுவாரஸ்யமான எழுத்துக்கள் இடைவிடாமல் வாசிக்க வைக்கிறது. அவரது வலைப்பூவை வாசிப்பது போலத்தான் இருந்தது.

இனி புத்தகத்தில் இருந்து சில வரிகள்....

---

இதுவரை வெளிவந்த தமிழ் சினிமா பாடல்களிலேயே தலை சிறந்த பத்து என்று தரத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் அந்தப் பட்டியலில் நிச்சயம் இடம்பெறக்கூடிய தகுதி ஹேராம் - ‘இசையில் தொடங்குதம்மா’வுக்கு உண்டு. மிக மேன்மையான தரத்தில் எழுதப்பட்ட இசை அது. கேட்கும்போதெல்லாம் சிலிர்ப்பூட்டக்கூடியது.

ஒரு தவம் செய்யாமல் இளையராஜாவால் எப்படி அப்படியொரு இசையை எழுதியிருக்க முடியும்? என்ன செய்திருப்பார்?

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கமலஹாசன் எடுத்து முடித்த படத்தில், முதலில் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடலே கிடையாது. படத்தை ஓடவிட்டுப் பார்த்த இளையராஜாவுக்கு அந்தக் குறிப்பிட்ட காட்சி வரும்போது அந்த இடத்துக்குள் ஒரு பாடலுக்கான தேவை ஒளிந்துகொண்டு இருப்பது ஒரு தரிசனமாகப் புலப்பட்டிருக்கிறது. கமலஹாசன் கண்ணில் படாத பாடல். எல். சுப்பிரமணியத்துக்குப் (முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர்) புலப்படாத பாடல். அந்த படத்தின் எடிட்டர்கூட அதைக் கவனித்துச் சொன்னதாகத் தெரியவில்லை. எப்படி இளையராஜாவுக்கு மட்டும் புலப்பட்டது?

இளையராஜாவின் இறைவன் இசையாக இருக்கிறபடியால் அவர் அதனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார். விளைவு, இசையின் உன்னதம்!

---

’ரெண்டு பேருதான்யா தமிழ்நாட்டுல பெஸ்டு ஆர்ட்டிஸ்டு. ஒருத்தன் கணேசன். இன்னொருத்தன் பாபு.’

சொன்னவர் வி.கே.ராமசாமி. சொன்னது, சிவாஜியையும் சந்திரபாபுவையும்.



ஒரு சமயம் கேட்டார், ‘கணேசன் மாதிரி பாபு ஏன் பாப்புலர் ஆவல சொல்லு பாக்கலாம்?’

பிறகு, அவரே சொன்னது,

‘அவன் பெரிய ஆர்ட்டிஸ்டு. அதுல சந்தேகமில்ல. எமகாதகப்பய. டைமிங் சென்ஸ் அதிகம் அவனுக்கு. ஒரு செகண்டுல பின்னிட்டுப் போயிடுவான். பக்கத்துல நடிச்சிக்கிட்டிருக்கறவங்க பேபேன்னு பேய்முழி முழிப்பாங்க. அவன் பார்ட்டை அவனே டெவலப் பண்ணிப்பான். இல்லேன்னா, எழுதிக்குடுக்கறத டெவலப் பண்ணிக்கிடுவான். என்னத்தையானா செஞ்சி சபாஷ் வாங்கிடுவான். ஆனா பாரு, நடவடிக்கைங்கள்ள அத்தன சுத்தம் இருக்காது...’

‘ஒழுக்கம்னு நாஞ்சொல்றது, நீ குடிக்கிறியா, சிகரெட்டு புடிக்கிறியா, கூத்தடிக்கிறியா - அதெல்லாம் இல்லே. வேலைல ஒழுக்கம் வேணும் தம்பி. ஒம்போது மணிக்கு ஷூட்டிங்னா கணேசன் டாண்ணு ஏழே முக்காலுகு ஸ்பாட்டுக்கு வந்து நிப்பான். நமக்கெல்லாம் அவமானமா போயிடும். நாம மேக்கப் போடறப்ப அவன் டயலாக் பாடம் பண்ணி முடிச்சிருப்பான். நாலு விதமா மனசுக்குள்ள நடிச்சிப் பாத்திருப்பான். செத்தாலும் ரீ டேக் வாங்க மாட்டான். பத்திரிகைங்கள்ள பேட்டி கீட்டின்னு வந்து கேட்டாங்கன்னா, ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லுவான். யாரைப்பத்தியும் குறையாவோ, நக்கலாவோ பேச மாட்டான். அவன் உண்டு, அவன் தொழில் உண்டுன்னு கடேசிவரைக்கும் இருந்துட்டான். செய்யறத ஒழுங்காவும் செஞ்சான். பிறவிலயே நடிப்பு அவன் ரத்தத்துல இருந்திச்சின்னு வையி. அது பெரிசில்ல. எப்பிடி டெவலப் பண்ணான்னு பாரு. அதான் முக்கியம்.’

----

இப்படி காந்தி, யானி, விஸ்வநாதன் ஆனந்த், கல்கி ராஜேந்திரன், ஜி.வி. ஐயர், பின்லேடன் என நமக்கு தெரிந்த, தெரியாத மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து உன்னதத்திற்கான வழியை எடுத்துக்காட்டியிருக்கிறார், பா.ராகவன்.

எக்ஸலண்ட்! செய்யும் எதிலும் உன்னதம்
பா. ராகவன்
152 பக்கங்கள்
ரூபாய் 70
கிழக்கு பதிப்பகம்


.

Tuesday, December 22, 2009

2009 - ரசித்த பாடல்கள்

இது நான் இந்த வருடம் கேட்டு ரசித்த பாடல்களின் லிஸ்ட். பெரும்பாலான படங்களின் பாடல்களை படம் வருவதற்கு முன்பே கேட்பது வழக்கம். அப்படி கேட்காமல், படம் பார்த்தபிறகு கேட்டதும் உண்டு. வர வர, அப்படிப்பட்டது குறைந்துக்கொண்டே வருகிறது.

இந்த லிஸ்ட்டில், தாலாட்டி தூங்க வைக்கும் பாடல்களும் உண்டு. தூக்கத்தை கலைத்து, சுறுசுறுப்பாக வேலை பார்க்க வைக்கும் பாடல்களும் உண்டு.

சில படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் பிடித்திருந்தாலும், லிஸ்ட் நீளக்கூடாது என்பதால், அதிகம் பிடித்த ஒரு பாடலை மட்டும் குறிப்பிட்டுயிருக்கிறேன். அதேப்போல், ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களின் பாடல்கள் பிடித்திருந்தாலும், ஒரு படத்தை மட்டும் குறிப்பிட்டுயிருக்கிறேன்.



மாசிலாமணி - ஓ திவ்யா திவ்யா - இமான்

என்ன, ஆரம்பமே ஏடாகூடமா இருக்கிறதா? அப்படித்தான். ஏன்னா, இமானுக்காக. இந்த படத்தில் இதுவும், ‘டோரா டோரா’வும் ஒரே அளவில் நான் ரசித்த பாடல்கள்.

பொக்கிஷம் - நிலா நீ வானம் - சபேஷ் முரளி

படத்தில் நிறைய பாடல்கள். எல்லாம் சூப்பர் என்று சொல்லமுடியாது. ஆனால், இந்த பாடல் என்னை ரொம்ப கவர்ந்தது. டிவியில் பார்த்தபோது, படமாக்கமும் நன்றாகத்தான் இருந்தது. நடுவில், சின்மயி பாடும் ‘அன்புள்ள மன்னா’ என்ற வரிகள் அருமையாக இருக்கும்.

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் - கடலோரம் - யுவன் ஷங்கர் ராஜா

இந்த பாடலை யுவன் பாடியிருந்தாலும், எனக்கு பிடித்தது எஸ்.பி.பி.சரண் பாடியது. பாடலை கேட்க துவங்கும்போதே, காதல் உணர்வு நம்மை சுற்றி பரவ தொடங்கிவிடும். ‘சின்ன சிறுக மனசுக்குள்’ பாடலும் மென்மையான மனதை வருடும் பாடல். கடைசியில், படத்தின் ரிசல்ட்டிற்கு உதவவில்லை.

வில்லு - டாடி மம்மி - தேவி ஸ்ரீ பிரசாத்

துள்ளலான இசை. ஆட்டம் போட வைக்கும் பாடல்கள். தேவி ஸ்ரீ பிரசாத், இந்த வருடம் மாங்கு மாங்கு என்று இரண்டு படங்களுக்கு உழைத்திருந்தார். இதுவொன்று. கந்தசாமி இன்னொன்று. பாடல்கள் ஹிட்டாகியும், படம் கைக்கொடுக்கவில்லை.

நாடோடிகள் - சம்போ சிவ சம்போ - சுந்தர் சி பாபு

படத்தின் முக்கியமான காட்சிக்கு, ஒரு பாடலை வைத்து பரபரப்பையும், விறுவிறுப்பையும் கூட்ட வேண்டுமென்றால், அந்த பாடல் எப்படி இருக்க வேண்டும். ஷங்கர் மகாதேவனின் குரலில் இந்த பாடலை கேட்டுக்கொள்ளுங்கள். படம் பார்க்கும் முன்பு, இந்த பாடலை கேட்டதில்லை. இருந்தாலும் பார்க்கும்போதும், புதிதாக தெரியவில்லை. பிறகு, இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

அயன் - நெஞ்சே நெஞ்சே - ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜிடன் விசேஷம், படம் முழுக்க ஹிட் சாங்ஸ் கொடுத்து விடுவார். குறைந்தபட்சம், தற்காலிகமாகவாவது. இந்த படத்திலும், விழி மூடி யோசித்தால், ஓயாயி ஏயாயி ஏயாயி என டிஜிட்டல் இசைக்காக பிடித்தவை இவை. ஆதவன் - வாராயோ வாராயோ, ஹசிலி பிடித்திருந்தாலும், பிரதிநிதித்துவம் காரணமாக லிஸ்ட்டில் சேர்க்கவில்லை. :-)

நான் கடவுள் - பிச்சைப்பாத்திரம் - இளையராஜா

இசைஞானிக்கு இந்த வருடம் சொல்லும்படியான படம். ரமணருக்கு இளையராஜா எழுதிய பாடலை, இந்த படத்திற்கு பயன்படுத்தியிருந்தார்கள். பாடலுடன் சேர்த்து, படத்தின் விஷுவலும் கலங்க வைக்கும்.

அச்சமுண்டு அச்சமுண்டு - கண்ணில் தாகம் தீருமோ - கார்த்திக் ராஜா

ரொம்ப பிரபலமாகாத பாடல். ஆனால், கேட்கும்போது கண்டிப்பாக என்னவோ செய்யும். நல்ல பாடல் கொடுத்தும், கார்த்திக் ராஜாவிற்கு பெட் லக் தொடர்கிறது.

நினைத்தாலே இனிக்கும் - அழகாய் பூக்குதே - விஜய் ஆண்டனி

பாடலும் சரி, படமாக்கமும் சரி, சிறப்பாக வந்த பாடல். கேட்பதற்கு சுகமான பாடல். படம் வெளிவந்து, ரொம்ப நாட்கள் கழித்து தான், இந்த பாடலை சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள். எதற்கென்று தெரியவில்லை. படத்தின் சஸ்பென்ஸ் போய்விடக்கூடாதென்றா? வேட்டைக்காரனின் ‘கரிகாலன்’ பாடலும், விஜய் ஆண்டனி இசையமைத்ததில் இந்த வருடம் எனக்கு பிடித்த பாடல்.

பசங்க - அன்பாலே அழகான வீடு - ஜேம்ஸ் வசந்தன்

படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே இதுவும், ‘ஒரு வெட்கம் வருதே’ பாடலும் பிடித்தது. படம் பார்த்தபிறகு, இவ்விரு பாடல்களை கேட்பது இன்னமும் கூடியது. பாலமுரளிகிருஷ்ணா குரலில் ‘அன்பாலே’ கேட்கும்போதெல்லாம், ரொம்ப நிறைவா, மனதுக்கு இதமாக இருக்கும்.

---

நான் ரசித்த பாடல்கள் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் லிஸ்ட்டுனா, பத்து இருந்தா தானே நல்லா இருக்கும்.

இந்த வருடம், யுவன் இசையமைப்பில் சர்வம், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், வாமனன் (ஏதோ செய்கிறாய்), யோகி என பல படங்களின் பாடல்கள் ஹிட்டாகியிருந்தாலும், எஸ்.எம்.எஸ் தவிர படம் எதுவும் ஹிட்டாகவில்லை.

வித்யாசாகர் நிலை வேறுமாதிரியானது. பேராண்மை படம் நல்ல பெயரை பெற்றாலும், பாடல்கள் ஹிட்டாகவில்லை. ‘துப்பாக்கி பெண்ணே’ மட்டும் எனக்கு பிடித்தது. கண்டேன் காதலை, சன் தயவில் ஓடினாலும், பாடல்கள் பிரபலமாக கேட்டாலும், ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாது. ‘சுத்துது சுத்துது’ மட்டும் கொஞ்ச நாட்கள் கேட்டு கொண்டிருந்தேன்.

விஜய் ஆண்டனிக்கு நல்ல வருஷம் என்று சொல்லவேண்டும். நிறைய படங்கள் இசையமைத்து இருந்ததில், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன் பாடல்கள் சூப்பர் ஹிட்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த ஆனந்த தாண்டவத்தில் ’கல்லில் ஆடும் தீவே’, ’பூவினை திறந்து கொண்டு’ இரண்டு பாடலும் நன்றாக இருந்தது. படம் சரியாக போகவில்லையென்றாலும், அவருக்கு இது முக்கியமான ஆண்டு. அவர் இசையமைப்பில் எதிர்பார்ப்பிற்குரிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ பாடல்கள் வெளியானது.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த வருடம் என்ற ஸ்பெஷல் இருந்தாலும், அவர் இசையமைப்பில் எந்த தமிழ்ப்படமும் இந்த வருடம் வெளியாகவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயம்.

தவிர புது இசையமைப்பாளர்கள், தமன், ஸ்ருதி ஹாசன், கணேஷ் ராகவேந்திரா போன்றோரும் குறிப்பிடத்தக்க வகையில் இசையமைத்திருந்தனர். அடுத்த வருடம், இன்னமும் பெயர் சொல்லும்படி இசையமைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வருடம் பாடல் வெளியாகி, அடுத்த வருடம் வெளியாகும் படங்களில் கவனிப்பவை - ஆயிரத்தில் ஒருவன், விண்ணைத்தாண்டி வருவாயா, பையா, அங்காடி தெரு, லீலை, நாணயம் (நான் போகிறேன் - ஒரு பாடலுக்காக)

சொன்ன பாடல்கள் சில, இங்கு கேட்கலாம்.



.

2009 - ரசித்த படங்கள்

எல்லா வருடம் போல, இந்த வருடமும் எதிர்பார்த்த சில படங்கள் நன்றாக இல்லை, எதிர்பாராத சில படங்கள் நன்றாக இருந்தது. பார்க்கக்கூடாது என்று நினைத்த படங்கள் எதையையும் பார்க்கவில்லை. ஆனால், பார்க்க நினைத்து சில படங்கள் பார்க்க முடியவில்லை. பார்த்ததில், நான் ரசித்த படங்கள் இவை. இது எல்லாமுமே தியேட்டரில் பார்த்தது தான். பழைய ஆங்கில படங்கள் தவிர, வேறு எதுவும் டிவிடியில் பார்ப்பதில்லை.



வெண்ணிலா கபடிக்குழு

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பிரமாண்ட ஜிகினா வேலைகளும் இல்லாமல், சிம்பிளா போரடிக்காமல் ஒரு படம் பார்ப்பது நிம்மதியான விஷயம். இந்த படம், அப்படிபட்ட படம் தான். கபடி விளையாட்டை களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் முடிவு யூகிக்கும்படியாக இருந்தாலும், ஜாலியான கேரக்டர்கள் மூலம் கதையை கொண்டு சென்றது தொய்வை ஏற்படுத்தவில்லை.

நான் கடவுள்

பலத்த எதிர்பார்ப்புடன் வந்த படம். முதல் முறை பார்த்தபோது, ஏமாற்றமாக இருந்தது. இரண்டாம் முறை, சில விஷயங்கள் கவர்ந்தது. காமெடி, ஆக்‌ஷன், ஹீரோயிஸம் என கமர்ஷியல் படங்களுக்கு உரிய எல்லா விஷயங்களும் இந்த படத்தில் இருந்தாலும், சொல்லப்பட்ட விஷயங்கள், காட்டிய காட்சிகள் லைட்டாக எடுத்துக்கொள்ளக்கூடியவை அல்ல.

நாடோடிகள்

இரண்டாம் பாதியை விட, முதல் பாதி பிடித்திருந்தது. இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சேசிங் திருமணக்காட்சி தான் படத்தின் வெயிட். இதுவே, கிளைமாக்ஸை தாண்டியும் மனதில் நின்ற விஷயம்.

சிவா மனசுல சக்தி

செம ஜாலியான படம். இளமை துள்ளலான காட்சிகள். நிறைய காட்சிகள் புதுசா, ப்ரஷ்ஷாக இருந்த படம். எல்லா பாடல்களும் ஹிட்டாகியிருந்தால், படம் பெரிய ஹிட்டாகியிருக்கும்.

யாவரும் நலம்

ரொம்ப அரிதாக வரும் த்ரில்லர் வகையை சேர்ந்த படம். வீட்டுக்கு வீடு இருக்கும் மெகா சீரியலை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட திகில் படம். சஸ்பென்ஸ் முடிச்சுக்களை எப்படி இயக்குனர் அவிழ்க்க போகிறார் என்று இறுதிவரை நான் ஆவலுடன் பார்த்த படம். இயக்குனரும் ஏமாற்றவில்லை.

ஈரம்

இதுவும் த்ரில்லர் வகையை சேர்ந்தது தான். கதையை விட, மேக்கிங்கில் மிரட்டி இருந்தார்கள். முழுக்க ரசித்தேன் என்று சொல்லமுடியாவிட்டாலும், ஓரிரு காட்சிகளில் மிரட்டியிருந்ததை நன்றாகவே ரசித்தேன்.

அயன்

திரைக்கதையில் நாவலுக்குரிய புத்திசாலித்தனம், ஹிட் பாடல்கள், லொக்கேஷன்கள் என பலரை கவர்ந்த படம். பல வெளிநாட்டு லொக்கேஷன்கள். எல்லாவற்றையும் அம்சமாக படத்தில் சேர்த்திருந்தார்கள். இந்த மாதிரி படங்களை, ரெண்டு மூணு முறைக்கூட பார்க்கலாம்.

ரேனிகுண்டா

ஒரு புது டீம் கொடுத்த தரமான படம் என்று சொல்லலாம். படத்திற்கு ஒளிப்பதிவும், சண்டைக்காட்சிகளும், வசனங்களும் ப்ளஸ். பார்வையாளர்களையும், அந்த அஞ்சு பேரோடு பயணிக்க வைத்து, அவர்கள் நிலையை உணர வைத்திருந்தார் இயக்குனர்.

பசங்க

ஒரு குட் பிலிங் படம். குழந்தைகள், பெற்றோர்கள் இரு தரப்பையும் கவரும் படம். இம்மாதிரி படங்கள் தமிழில் வருவது ரொம்ப குறைவு. பசங்க பார்வையிலேயே போன படம். பார்த்த அனைவரும் ‘நல்லாயிருக்கு’ன்னு சொன்ன படம்.

உன்னைப்போல் ஒருவன்

பெரிய பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்த ரீ-மேக். ரொம்ப சின்ன படம். தேவையில்லாத சீன் எதுவும் இல்லாம, சொல்ல வந்ததை மட்டும் சொல்லிவிட்டு சென்ற படம். பெரிய ஆக்‌ஷன் சிக்வெஸ் இல்லாமல், வெறும் வசனங்களால விறுவிறுப்பை ஏற்றி இருந்த படத்தை, கமல் டிவி டிவியாக வந்து ப்ரமோட் செய்தார்.

இது தவிர, காதல்னா சும்மா இல்லை, ஆனந்த தாண்டவம், திரு திரு துறு துறு போன்ற படங்கள் ஒரளவு கவர்ந்த படங்கள் என்று சொல்லலாம்.

பார்க்க நினைத்து தவறவிட்ட படங்கள், பொக்கிஷம், குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் & சிந்தனை செய்.

.

Sunday, December 20, 2009

வேட்டைக்காரன் - சிக்கியது யார்?

வேட்டைக்காரன் எப்ப வரும், எப்ப வரும் என்று காத்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான அனுஷ்கா ரசிகர்களில் நானும் ஒருவன். ஒருவழியாக வந்தாச்சு. பார்த்தாச்சு. அனுஷ்கா வாழ்க!

படத்திற்கு போகும்போதே, விஜய் படம் என்பதால், அதற்குண்டான எதிர்ப்பார்ப்பில் தான் சென்றேன். கொடுக்குற ஐம்பது ரூபாய்க்கு, என்ஜாய் பண்ணனும் என்று சென்றால், சொந்த காசில் சூனியம் வச்சுக்கிட்ட நிலைதான். ஆனாலும், சின்னவயசில் நான் பார்த்த ரஜினி படங்கள் தியேட்டரில் கிளப்பும் திருவிழாக்கோலத்தை, இப்ப இருக்குற நடிகர்களில் விஜய் படங்களில் தான் பார்க்கிறேன்.

டைட்டிலில் ஜுனியர் விஜய் என்று பேர் போடும்போதும், ’நான் அடிச்சா தாங்க மாட்டே’ என்று சஞ்சய் விஜயுடன் ஆடும்போதும், விசில் ஆரவாரத்தோடு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை, இந்த வயதில் இப்படி பெற்ற ஒரே வாரிசு, சஞ்சயாகத்தான் இருக்கும். பாட்டில் மகனுக்காக, விஜய் மெதுவாக ஆடுகிறார்.



முதலிலேயே சொன்னது போல், விஜய் படத்தில் நான் எதுவும் பெருசா எதிர்பார்க்கவில்லை என்று போனாலும், படத்தில் அவர் கொடுக்கும் அதிர்ச்சிகள் ஏராளம். படத்தில் விஜய் ப்ளஸ் டூ படிக்கும் பையனாம். நல்லவேளை, அனுஷ்கா எட்டாம் வகுப்பில் படிக்கவில்லை. பிறகு, காலேஜில் படிக்கிறார். பாட்ஷா போல் ஆட்டோ ஓட்டுகிறார். பிறகு, ரஜினி மாதிரியே சட்டையை விலக்கிவிட்டுக்கொண்டு நல்ல ரவுடி ஆகிறார். ரஜினி மாதிரி’ன்னு சொல்லக்கூடாது. இவரு ஒரு பக்கம் மட்டும் தான் விலக்குகிறார். படிகளில் இறங்கும்போது, ஒரு சைடாக திரும்பிக்கொண்டு ஸ்டைலாக இறங்குகிறார் பாருங்க? அப்படியே, லிவிங்ஸ்டன் மாதிரியே இருக்கிறது!

படத்தில் விஜய் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருக்கும் ரவுடிகளை ஒழிக்கிறார். ஏற்கனவே, திருப்பாச்சி படத்தில் திருப்பாச்சியில் இருந்து சென்னை வந்தார். இதில் தூக்குக்குடி. ஒண்ணும் பிரச்சனையில்லை. தமிழ்நாட்டில் நிறைய ஊர் இருக்கிறது. விஜய்க்கு படம் பண்ண, நிறைய கதைகள் இருக்கிறது. ஒரு இடத்தில் விஜய், “தூத்துக்குடி பசங்க. மோசமானவுங்க.” என்கிறார். இதை தூத்துக்குடியில் கேட்டு இருக்கணும். தியேட்டர் அலறியிருக்கும். மிஸ் பண்ணிட்டேன்.

வெற்றி விழாவில், நான் பார்த்து பயந்த ஜிந்தா - சலீம் கவுஸ் தான் இதில் மெயின் வில்லன். காமெடியாக இருந்தது. விஜய், சீரியஸாக பஞ்ச் டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கும்போது, இவர் புன்சிரிப்போடு இருப்பது இன்னும் தமாசு. இன்னும் சைடுக்கு பல வில்லன்கள். இப்படி நிறைய வில்லன்களை பார்ப்பது அலர்ஜியாக இருக்கிறது. விஜய், பெரிய் ஹீரோ தான். அதற்காக, இப்படி நிறைய வில்லன்கள் வச்சு தான், அதை நிருபிக்கணுமா?

விஜய் இதில் பல புது மேக்கப்புகள் முயன்றிருக்கிறார். அதையெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது. அப்படியாச்சும், புதுசா ஏதாச்சும் பண்ணட்டும். ரசிகர்கள் அவரிடம் எதிர்ப்பார்ப்பது, ரொம்ப குறைவு. அதையும் பூர்த்தி செய்யமுடியாமல் ஏமாற்றுகிறார். தரணி கேங்கை நம்பி, தொடர்ந்து படம் கொடுத்து ஏமாறுகிறார். சார், இனி உள்ளே விடாதீங்க. பாபு சிவன், வசனம் நன்றாக எழுதுகிறார். ஒருவேளை, அரசியல் பஞ்ச் டயலாக்ஸ் இருந்திருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். வெட்டி தள்ளப்பட்டிருக்கலாம்.

படம் வருவதற்கு முன், சன் டிவியிடம் விஜய் சிக்கியது போல் இருந்தது. படம் பார்த்த பிறகு, விஜயிடம் தான் சன் டிவி சிக்கியது மாதிரி இருக்கிறது. அந்த வகையில், விஜய் உண்மையில் வேட்டைக்காரன் தான். :-)

.

கசாப் என்னும் அப்பாவி

மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்ட கசாப், பலமுறை மாற்றி மாற்றி பேசியிருக்கிறான். அவனுடைய தற்போதைய வாக்குமூலம், இந்தியர்கள் அனைவரையும் கிறுக்கர்களாக்கியிருக்கிறது. தான் இந்தியா வந்தது சினிமாவில் நடிக்கத்தான் என்றும், சும்மா சுற்றிக்கொண்டு இருந்தவனை போலீஸ் தவறாக கைது செய்தது என்றும் கூறியிருக்கிறான்.

அவன் மேலும் கூறியவை,

- இந்த கேஸே ஜோடிக்கப்பட்டது.
- பாகிஸ்தானில் இருந்து முறையான விசாவில் வந்தேன்.
- படத்துக்கு போகலாம் என்று சுற்றிக்கொண்டு இருந்தவனை, பாகிஸ்தானி என்பதால் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்.
- தன்னை போல் இருக்கும் அபு அலிகத் எனும் தீவிரவாதியின் குற்றங்களை தன் மேல் சுமத்தியிருக்கிறார்கள்.
- வீடியோவில் வருவதும் அபு அலிகத் தான்.

இவ்வாறு அமைதியாக, தெளிவாக கூறியிருக்கிறான். இப்படியெல்லாம் பேச இவனுக்கு யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? இல்லை, தானாகவே இப்படி பேச கற்றுக்கொள்ளும் சூழல் இவனுக்கு அமைந்திருக்கிறதா? இவனுக்கும் ஆதரவாக பேச, ஒரு இந்திய வழக்கறிஞர் இருப்பது, இந்திய ஜனநாயகத்தின் பலமா, பலவீனமா?



“தீவிரவாதிகளுக்கும் போலீஸுக்கு துப்பாக்கி சண்டை நடந்திருக்கலாம். ஆனா, நான் அவன் இல்லை.” என்று கூலாக சொல்லுகிறான். ”ரயில் நிலையத்தில், மூன்று காவலர்களை நீ சுட்டு கொன்றிருக்கிறாய் என உன்மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்ற சொன்னதற்கு, “நானா?” என்று பதில் கேள்வி சாதாரணமாக எழுப்புகிறான்.

ஏ.கே.47 பற்றி கேட்டதற்கு, “நான் இதுவரை அதை தொட்டதேயில்லை.” என்றவன், நல்லவேளை பார்த்ததேயில்லை என்று சொல்லவில்லை. அதற்கு பதில், இப்படி சொல்லியிருக்கிறான். “போலீஸ் வைத்திருந்ததை பார்த்திருக்கிறேன்.” என்று. நல்லவன் தான். பரவாயில்லை. தாக்குதல் நடத்தியதே போலீஸ் தான் என்று சொல்லவில்லையே?

இதன் மூலம் இதுவரை விசாரிக்கப்பட்ட, சம்பவத்தை நேரில் கண்ட 610 சாட்சியங்களை பொய் என்றிருக்கிறான். இவர்கள் அனைவரும் கிரைம் பிராஞ்ச் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்பது இவன் கூற்று. “என் போட்டோ தான் உலகம் முழுக்க காமிச்சாங்களே! அத இவுங்ககிட்ட காமிச்சு, எனக்கு எதிரா சாட்சி செய்ய சொல்லிட்டாங்க.”

நீதிபதி அவனிடம் “டேய் கண்ணா! நீயே தானே ஆறு மாசம் முன்னாடி குற்றத்தை ஒப்புக்கொண்டு, சிசிடிவில வந்தது நான் தான்’ன்னு சொன்ன?” என்று நினைவுப்படுத்தியதற்கு, “அப்ப போலீஸுக்கு பயந்து பொய் சொன்னேன். “ என்று உச்சக்கட்ட பல்டி அடித்திருக்கிறான்.

படிக்கும்போது ஜோக் போல இருந்தாலும், இது எல்லாமே நம் நாட்டு நீதிமன்றத்தில் ஒரு கடுமையான தாக்குதலை நடத்திய தீவிரவாதியால் சொல்லப்படும் உண்மையான வாக்குமூலங்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிக்களுக்கோ, இல்லை சர்வதேச உலகத்திற்கோ, இந்தியாவின் நீதித்துறையும், விசாரணை முறைகளும் எவ்வளவு பலவீனமாக தெரியும்? மக்களை, குழந்தைகளை கருணையேயில்லாமல் சுட்டு தள்ளிக்கொண்டு இருந்தவனை கைது செய்து விசாரிக்கும் முறையா?

இப்படித்தான் கொஞ்ச நாட்கள் முன்பு, அவன் மட்டன் பிரியாணி கேட்டு, கொடுத்த தட்டுகளை தூக்கியெறிந்தாக, சிறைத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் வந்து நீதிபதியிடம் புலம்பினார்கள். நீதிபதியும் அவனிடம் அப்படியா? என்று கேட்டதற்கு, அவனும் தைரியமாக ஆமாம் என்று சொல்லியிருக்கிறான். உலகத்திலேயே ஒரு தீவிரவாதியின் அசைவ உணவை பற்றி வழக்கு மன்றத்தில் விசாரிக்கும் நாடு, நமது நாடாகத்தான் இருக்கும்.

நாட்டில் இருக்கும் ஒரு சராசரி பிரஜைக்கும் உண்மை தெரிந்திருக்கும் நிலையில், ஏன் நமது விசாரணை முறைகள் இப்படி பலவீனமானதாகவும், நேர விரயமாக்குவதாகவும் இருக்கிறது? ’ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது’ என்னும் சிந்தாந்தம் தவறு என்று சொல்லவில்லை. ’ஒரு குற்றவாளியும் தப்பிக்கக்கூடாது. ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது’ எனும் நிலை சாத்தியமில்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்பதே குற்றங்களை சகஜமாக்குகிறதே?

மதுரையில் அத்தனை பேர் கண் முன்னால் நிகழ்த்தப்பட்டு, உலகத்திற்கே டிவியிலும் போட்டுக்காட்டப்பட்ட தினகரன் அலுவலக வன்முறை வெறியாட்டங்கள், ஏதோ அனைவரும் தூக்கத்தில் கண்ட கனவு போல், விசாரணையில் சாட்சியங்கள் பல்டியடித்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கோ, நடத்தும் வழக்கறிஞர்களுக்கோ அல்லது கவனிக்கும் மக்களுக்கோ, இவையெல்லாம் கேஸ்கள். அவ்வளவே. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், வழக்குக்கள் தங்கள் வாழ்வில் இழப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள். அவர்களை திருப்திப்படுத்தாத தீர்ப்புக்கள் எவையும், நியாயமான தீர்ப்புக்கள் அல்ல.

ஒருவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர் தானா என்று உறுதிசெய்துக்கொண்ட பிறகு, அவர் நீதிபதிக்கு இணையான இடத்தில் வைக்கப்பட வேண்டும். வழக்கின் திசையையும், நீதிபதியின் தீர்ப்பையையும் பரிசீலனை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறான மாற்றங்களும், புரட்சிகளும் நீதித்துறையில் ஏற்படாத வரை, வழக்குகள் வெறும் வழக்கமானதாக மட்டுமே இருக்கும்.

.

Friday, December 18, 2009

வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா

"டேய்! என்ன பண்றதுன்னே தெரியலை. ஆபிஸ் வேலையை நினைச்சா கடுப்பா இருக்குது. வேலையை சொன்ன டைமுக்கு முடிக்கலைன்னு மேனேஜர் திட்டிட்டாரு”

“இவனுங்கள நம்ப முடியாது. அங்க இங்க’ன்னு என்னை உருட்டிவிட்டுக்கிட்டே இருக்காங்க”

“இந்த கம்பெனில சேர்ந்ததில் இருந்து, அவுங்க சொல்ற எல்லாத்தையும் செஞ்சிருக்கேன். ஆனா, நான் கேட்குற எதையும் அவுங்க தந்ததில்லை.”

இவையெல்லாம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் வருத்தப்பட்டு கூறி கேட்டவை. அவர்களுக்கு ஒரு புத்தகத்தை பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறேன்.

---

கேரன் ஒடாஸோ எழுதிய 'The truth about managing your career' என்னும் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கத்தை ‘வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா’ என்ற பெயரில் பியர்சன் நிறுவனத்துடன் இணைத்து கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர், அக்கலுர் ரவி. ஒரு புது வேலையில் சேர்வதிலிருந்து வேறு ஒரு வேலைக்கு செல்லுவது வரை, ஒரு நிறுவனத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு நமது செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று இந்த புத்தகத்தில் ஆலோசனை கூறுகிறார் பிரபல நிர்வாகப் பயிற்சியாளர் கேரன் ஒடாஸோ.



புத்தகம் படித்து தான் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. நாளடைவில் அனுபவத்தில் தெரிந்து கொள்ளக்கூடியது தான். இருந்தாலும், நிர்வாகத்துறையில் அனுபவஸ்தர் ஒருவர் கூறும்போது, உங்கள் செயல்பாடுகள் சரியனவா என்று உறுதி செய்துக்கொள்ள முடியும். பட்டு தெளிவதை விட, இது பெட்டர் தானே?

மொத்தம் 60 பார்முலாக்கள். அதாவது வேலையில் முன்னேற்றத்தைக் காண நம்மிடம் இருக்க வேண்டிய குணாதிசியங்கள் பற்றி அலசுகிறது இப்புத்தகம். உதாரணத்திற்கு சில,

நிறுவனத்தில் நல்ல பெயர் எடுக்க விரும்புபவர்கள், எதையும் மறுத்து பேச ரொம்ப தயங்குவார்கள். முடியாது என்றோ, இல்லை என்றோ எப்படி நாசூக்காக சொல்வது? எதற்காவது முடியாது என்று சொல்லிவிட்டால் அதற்காக வருத்தப்பட கூடாது. முடியாது என்று சொல்வதை உணர்வுபூர்வமான விஷயமாக எடுத்துக்கொள்ள கூடாது. அமைதியாகவும், சாதுரியமாகவும் ‘மறுப்பது’ ஒரு கலை. அதை கற்றுக்கொள்வது நீண்ட கால முன்னேற்றத்திற்கு அவசியம்.

சிலர், வேலையில் ‘டெட்லைன் டெட்லைன்’ என்று புலம்பிக்கொண்டு இருப்பார்கள். காலக்கெடு எவ்வளவு அவசியம் என்பது இவர்களுக்கு புரியும். காலக்கெடுவை தவறும்போது, தர்ம சங்கடங்கள் உருவாகும். தொடர்ந்து தவறும் போது, மதிப்பும் மரியாதையும் கெடும். வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது, எதிர்பாராதவை நிகழும். எவ்வளவு முயன்றும் சொன்ன நேரத்தில், செய்ய முடியாமல் போகும். அந்நேரங்களில் சம்பந்தப்பட்டவரிடம் முன்னெச்சரிக்கையாக நிலவரத்தை சொல்லிவிட வேண்டும். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புது தேதியை முடிவு செய்ய முயல வேண்டும். நம்முடைய ஒவ்வொரு உறுதிமொழியிலும், நம்முடைய நேர்மை பரிசோதிக்கப்படுகிறது. இவரை நம்பமுடியாது என்ற பெயர் ஏற்பட்டுவிட்டால், அதை சுலபத்தில் மாற்ற முடியாது.

பதவி உயர்வு என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. முதல் விஷயம். பதவி உயர்வுக்கான அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். பிறகு, ஆர்வமுடன் நாமாகவே சில காரியங்களில் ஈடுபட வேண்டும். உதாரணத்திற்கு, மேலதிகாரியின் சிரமம் குறைக்கும் வேலைகளை செய்யலாம். உங்கள் டீம் மேலும் சிறப்பாக செயல்பட, என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். இப்படி சில.

வேலை மாறும் எண்ணம் வரும்போது, என்னன்ன யோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். நாலு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். முன்னிலையில் இருப்பது, பாதுகாப்பாக உணர்வது, சுதந்தரமாக வேலை செய்வது, உயர்நிலையை அடைவது. இதில் எது முக்கியம் உங்களுக்கு? இப்படி உங்களால் ஒரு புது வேலையை தேர்வு செய்யமுடியவில்லையென்றால், என்ன தேவை, என்ன தேவை இல்லை, என்ன வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போடவும். அதை படிக்கும்போது, உங்கள் தேவையை பற்றிய பார்வை கிடைக்கும். அதை உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், ஒரு தெளிவு கிடைக்கும்.

ஊடகமே செய்தி. அதாவது என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம். மூளைக்குள் செலுத்தப்படும் செய்திகளின் மாறுபட்ட தன்மைக்கேற்ப மூளையை நாம் பயன்படுத்துகிறோம். பிடித்த முறையில் செய்திகள் வந்தால், மூளை முழுக்கவனத்துடன் இயங்கும். விரும்பாத நிலையில் செய்திகள் வந்தால், மூளை கண்டுக்கொள்ளாது தியான நிலைக்கு சென்றுவிடும். அதனால், யார் யாருக்கு எப்படியெப்படி விஷயங்களை பரிமாறி கொள்வது, அவர்களது நடவடிக்கைகளை கொண்டு அவர்களுடன் எப்படி பேசுவது என்று ஆசிரியர் விளக்குகிறார்.

இந்த புத்தகம் படிக்கும்போது, கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களில் கண்டிப்பாக எங்கேனும் உங்களை உணர்வீர்கள். நாம் அந்த சூழ்நிலையில் என்ன செய்திருப்போம்? சில நேரங்களில், ஆசிரியர் சொல்வதை போலவே செய்திருப்போம். ஆனால், பெரும்பாலும் நாம் செய்ய மறந்ததை காரணங்களுடன் விளக்கி நமக்கு நினைவுட்டுகிறது இப்புத்தகம். கிட்டத்தட்ட நாம் சந்திக்கும் எல்லா நிலைகளையும் குறிப்பிட்டு இருப்பதால், வாங்கி ஒரே மூச்சில் படித்து முடிக்கும் புத்தகம் என்பதை விட, அவ்வப்போது தேவையான சமயங்களில் எடுத்து வாசிக்க ஏற்ற புத்தகம்.

வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா
டாக்டர் கேரன் ஒடாஸோ
192 பக்கங்கள்
ரூபாய் 125
கிழக்கு பதிப்பகம்


.

Wednesday, December 16, 2009

சொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்

"சம்பாதிக்கிற பணத்தை ஏதாவது ஒரு நிலத்துல போடு. அது உனக்கு பின்னால நிலையான வருமானத்தைக் கொடுக்கும்"

இது ரஜினிக்கு அவரோட அப்பா சொன்ன அறிவுரை. நல்ல அட்வைஸ் தான். உண்மையான அட்வைஸ் தான்.



சரி... இப்ப, போன வருஷம் சரிஞ்ச ரியல் எஸ்டேட் மார்க்கெட் விலை திரும்பவும் உயர தொடங்கியுள்ளதாக செய்திகள் வருகிறது. அப்படியே, பிடிச்ச இடத்தில் மனை வாங்கினாலும், பிரச்சினை இல்லாமல் வாங்குவது எப்படி? வாங்குபவர்களுக்கு உதவ, சில டிப்ஸ். செக்லிஸ்டாகவும் பயன்படுத்தலாம்.

இந்த பதிவு இப்போது தேவையில்லை என்றாலும், பின்னால் உதவும். புக்மார்க் செய்துக்கொள்ளவும்.

முழுமையாக இருக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது. ஏனெனில், முழுமைக்கு முடிவில்லை.

- நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கபடுகிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது.

- உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் (Guardian) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.

- மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும்.

- அதிகாரம் பெற்ற முகவர் (Power of Attorney Holder) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது.

- அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை.

- உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா (Original Deed) அல்லது படி ஆவணமா (Duplicate copy) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் தான் தேவை.

- முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.

- 13 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது.

- சொத்தின் உரிமையை (Ownership) ஆராய்ந்து தெரிந்துக்கொள்வது போல், உடமை (Possession) பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். பட்டா பார்த்து, உடமையை தெரிந்துக்கொள்ளலாம். விவசாய நிலமென்றால், சிட்டா.

- மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.

- அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

- அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும்.

- அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.

- விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது.

- விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

- நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

- பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளரிடம் வாங்க வேண்டியவை,
* விற்பனை ஆவணம்
* தாய் ஆவணங்கள்
* வில்லங்க சான்றிதழ்
* பட்டா, சொத்து வரி ரசீதுகள்


நிலத்தை பொறுத்து, உரிமையாளரை பொறுத்து இது மாறுபடும். தேவைப்படும் ஆவணங்கள் கூடும்.

ஹாப்பி ப்ராபர்டி பர்சேஸ்!

நன்றி - வழக்கறிஞர் த.இராமலிங்கத்தின் ‘தைரியமாக சொத்து வாங்குங்கள்’
விகடன் பிரசுரம்.


.

Tuesday, December 15, 2009

கல்யாணம் முடிச்சி வெய்ங்கப்பா...

மகேந்திரனிடமிருந்து...

---

இரட்டை பின்னலும், தாவணியுமாக வளைய வரும் குமரிகள் நிரம்பிய ஊரில், கழனியோட்ட அப்பனும், களை பிடுங்க அம்மாவும் போனவுடன் ஆடு, கோழி, மாடுகளை ஆனமட்டும் பார்த்த பின்பு, சோட்டு பெண்களை கூட்டு சேர்த்து தோப்புகளிலும், படித்துறைகளிலும் பேசும் கதை என்னவாக இருக்கும்?

புரிந்தும் புரியாமலும் நிற்கும் பருவம், புரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கும்... எப்போது, எப்போது என்று ஆவலாய் காத்திருக்கும் மனது வண்ணக்குவியலாய் சிறகு விரித்து ஊரைச்சுற்ற கிளம்பும்...

எங்க இருக்கானோ? எப்ப வருவானோ? எனக்கிருக்கும் அதே சுமை தானே உனக்கும்? ஒத்த வயது பெண்களுடன் பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கம்...



1986 ல் ராஜாவின் இசையில் வெளியான "அறுவடை நாள்".
பாடல் : ஓலக்குருத்தோல காத்துல ஆடுது...
கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிக அழகானதொரு பாடல்.

கங்கை அமரனின் வரிகளை பாடியிருப்பது இசைத்தாரகை ஜானகி... வித்தியாசமானதொரு இசையுடன் துவங்கும் பாடல், கோரஸ் பெண்களின் லல லல்ல லாலாலா.. வுடன் ஆரம்பிக்கும். அதை குழலோசை தொடர்ந்து கொண்டே வரும்... ஜானகி துவங்குவார்.

வெகு துள்ளலான மெட்டு... தபேலா இசை... வரிகளில் ஏக்கம் தொனிக்கும்.

யாரும் சேர்த்து வைக்காமலே
இந்த காற்றும் பூவும் சேர்ந்து கொள்கிறதே...
நாம மட்டும் ஏன் காத்திருக்கணும்?


சரணத்தின் முதல் இரண்டு வரிகளை ஜானகி பாடுவார்... அதையே கோரஸ் பெண்கள் திரும்ப (repeat ) பாடும் போது, விடுங்கடி நானே பாடிடுறேன்... என்பது போல இரண்டாம் முறையும் அவரே பாடுவார். சரணத்தின் இறுதியில் "மேகம் ஒரு ஈரச்சேலை" என்று அவர் பாடும் போது பின்னால் கோரஸில் வெறும் "ம்ம்ம்ம்..." வருவது அட்டகாசமாயிருக்கும்.

முதல் சரணம் முடிந்த பின் வரும் இசையில்... படத்தில் அந்த பெண்களெல்லாம் ஒருவர் பின் ஒருவர் நின்று ரயில் விடுவார்கள்... அதற்கு ராஜா வெறும் கோரஸ் குரலின் ஹம்மிங்கிலேயே ரயிலோசை கொடுத்திருப்பார். ரயிலின் சைரன் ஒலிக்கு வயலின் பயன்படுத்தியிருப்பார்... படத்தில் பார்க்க இன்னும் அழகாக இருக்கும்.

பின்பு இரண்டாம் சரணம் துவங்கும்.

"மல்லிகையும் பூத்தாச்சு... அல்லியும் தான் பூத்தாச்சு...
கன்னிப்பொண்ணு தான் காத்திருந்து பாத்தாச்சு..."


இந்த வரிகளை கண்டு வியந்திருக்கிறேன். எத்தனையோ பூக்களிருக்க, எதற்கு இந்த அல்லியும், மல்லிகையும்? "செண்பகமும் பூத்தாச்சு.. செவ்வரளி பூத்தாச்சு" என்று
எழுதினால் கூட சந்தத்தில் இடிக்காமல் உட்காரும் தான். ஆனால் இந்த கருமம் இருட்டின பின்தானே வந்து தொலைக்கிறது, அல்லியும் மல்லிகையும் இரவில் மலர்வதை போல...

எப்படியிருக்கிறது? இன்னும் அது ஜானகி குரலில் எப்படியிருக்கும்?

"உலகம் முழுதும் பருவத்து கோலம்... மனது முழுதும் கனவுமயம்..." என்பதை கேட்கையில், யாருப்பா அது, இவங்களுக்கெல்லாம் மொதல்ல கல்யாணம் முடிச்சி வெய்ங்கப்பா என்று அலறத்தோன்றும்.

இதில் நான் எதையுமே மிகையாக சொல்லவில்லை என்பது இன்று இரவு இந்த பாடலை நீங்க தேடிப்பிடித்து கேட்ட பின்பு அறிவீர்கள்...



ஓலக்குருத்தோல காத்துல ஆடுது... கண்ணனத்தேடுது...
வாழ இள வாழ வாசலில் ஆடுது, வேளையக்கூறுது./.
கதைகதையாம் காரணமாம்
கல்யாணத்தோரணமாம்... காத்தாடுது...

சந்தனத்த பூசாம சம்மந்தத்த பேசாம
சேர்ந்தது என்ன காத்தும் பூவும் கூசாம?
இதுவும் பொதுவா இலக்கியம் தானே?
இயற்கை எழுதும் இலக்கணமோ?
மேகம் ஒரு ஈரச்சேல வானத்துல காயப்போட...
தூறும் மழைச்சாரல் போல தினமும்
அதிசயம் நடக்குது...

மல்லிகையும் பூத்தாச்சு அல்லியும்தான் பூத்தாச்சு
கன்னிப்பொண்ணு தான் காத்திருந்து பாத்தாச்சு...
உலகம் முழுதும் பருவத்து கோலம்...
மனது முழுதும் கனவு மயம்...
பொண்ணு இவ சின்னப்பொண்ணு
பேரில் மட்டும் கன்னிப்பொண்ணு
பூவரசம் பூவப்போல சிரிச்சா
புதுப்புது விதத்துல...

ஓலக்குருத்தோல காத்துல ஆடுது... கண்ணனத்தேடுது...
வாழ இள வாழ வாசலில் ஆடுது, வேளையக்கூறுது...
கதைகதையாம் காரணமாம்
கல்யாணத்தோரணமாம்... காத்தாடுது...


-மகேந்திரன்.

---

யூ-ட்யூபில் தேடினால், படம் கிடைக்கிறது. பாடல் மட்டும் தனியாக கிடைக்க மாட்டேங்கிறது. யாருக்காவது கிடைத்தால், லிங்க் கொடுக்கவும்.

.

Monday, December 14, 2009

பா - Paa

பெங்களூரின் மையத்தில் இருக்கும் ஒரு மல்டிப்ளெக்ஸில், சென்ற வாரம் இந்த படத்தை பார்த்தேன். மல்டிப்ளெக்ஸ் என்றாலும், வார நாட்களில் டிக்கெட் விலை நூறு ரூபாய் தான். அதுவும் ஆன்லைனில் தொடர்ச்சியாக டிக்கெட் புக் செய்யும்போது, இன்னும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு ஆச்சரியப்பட வேண்டுமானால், இன்னொரு தகவல் சொல்லி அதிர்ச்சியடைய செய்ய வேண்டும். கோரமங்களா போரம் பிவிஆர் சினிமாஸில், எல்லா நாட்களும் கோல்ட் கிளாஸ் எனும் திரை அரங்கில், டிக்கெட்டின் விலை 600 ரூபாய்!

ஏற்கனவே, பாடல்கள் பிடித்துபோய் அதனாலேயே இந்த படம் பார்க்கும் ஆர்வம் இருந்ததால், பார்த்தேன். இருபது பேர் இருந்திருப்போம். படம் ஆரம்பிக்கும் முன், எங்க எல்லோரையுமே எந்திரிக்க சொல்லி, அமிதாப் மிரட்டுவது போல் ஒரு ஸ்லைட் போட்டார்கள். எந்திரிக்காட்டி, எங்க ‘பா’கிட்ட சொல்லுவேன் என்றபடி விரலை நீட்டி மிரட்டினார். நாங்களும் நின்றோம். தொடர்ந்து, ஜனகணமன போட்டார்கள். தாகூர் போட்ட ட்யூன் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் புது வெர்சன்.

பார்க்க வந்தவர்கள் எங்களை அட்டேன்சனில் நிற்க சொல்லிவிட்டு, பாடிய பாடகர்கள் கேஷுவலாக சிரித்து கொண்டு, கைகளை ஆட்டிக்கொண்டு பாடினார்கள். ஏனோ, ரஹ்மான் இறுதியில் ஜெய ஹே என்று பாடும் போது புல்லரித்தது.



பா பாடல்களில் வரும் கோரஸை, பிளேயரில் கேட்கும்போதே புல்லரிக்கும். இந்த மாதிரி பாடலுக்காக, இசைக்காக படம் பார்க்க வரும்போது, ’எப்போதுடா பாட்டு வரும்?’ என்றிருக்கும். ரஹ்மான் இசையமைத்த படங்கள், பலவற்றுக்கு இப்படி சென்றிருக்கிறேன். வெறும் பாடலுக்காக, இளையராஜாவின் இசைக்காக, ஒரு ஹிந்தி படத்திற்கு சென்றது, இதுதான் முதல் முறை.

விளம்பர படங்களில் பணியாற்றி பிறகு சினிமாவுக்கு வந்தவர்களின் படங்களை காண அழகாக இருக்கும். இண்ட்ரஸ்டிங்காக இருக்கும். இதில், ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் வேறு இருக்கிறார். ஆரம்பத்தில், ஜெயா பச்சன் படிக்கட்டில் உட்கார்ந்து டைட்டிலை வாசிப்பதிலே இது ஆரம்பித்து விடுகிறது.

நம்மாட்கள் தான் இந்த மாதிரி முகம் முழுக்க மேக்கப் போட்டு நடிப்பார்கள். இங்கயும், நம்ம ஊர் காற்று அடித்திருக்கிறது.

இந்த வயதில், இப்படி பனிரெண்டு வயது பையனின் மேக்கப் போட்டு, தனது கம்பீர குரலை மீறி அதற்கேற்றது போல் பேசியும் நடித்திருக்கும் அமிதாப்பை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டவர், மொட்டை அடித்து தனது குறுந்தாடியையும் எடுத்திருந்தால், கம்ப்ளீட் டெடிக்கேஷன் என்றிருக்கலாம். மேக்கப் மூலமும், ப்ரொஜேரியா என்னும் அரிய நோயை அறிமுகப்படுத்தியும் இதை சமாளித்திருக்கிறார்கள்.



ஒருமுறை அமிதாப்பும், அபிஷேக்கும் பேசிக்கொண்டிருந்த போது, அபிஷேக் ரொம்ப சீரியஸாகவும், ஆனால் அமிதாப் விளையாட்டுத்தனமாகவும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதை பார்த்தபொழுது தான், இயக்குனருக்கு இப்படி ஒரு படமெடுக்க ஐடியா வந்திருக்கிறது. அதற்காக, ஏனோ தானோவென்று கதையை அமைக்காமல், சீரியஸாக உணர்வுபூர்வமாக கதையை அமைத்திருக்கிறார். அதே சமயம், கிளை கதையாக அமைத்திருக்கும் அபிஷேக்கின் அரசியல் நடவடிக்கை காட்சிகள் தேவையில்லையோ என்று தோன்றுகிறது.

அபிஷேக் இப்படி வெட்டியாக சுற்றுவதை காட்டத்தான், படத்தில் அவர் அரசியல்வாதியாக வருகிறார் என்று பக்கத்து சீட்டில் இருந்தவர் கூறினார். இதேப்போல், படத்தின் நடுவே அடிக்கடி ஒரு கடிகாரத்தை இயக்குனர் காட்டுவதும், காலம் கடந்து செல்வதை காட்டும் குறியீடு என்றார் அவர். :-)

அரசியலில் தூய்மை என்றிருக்கும் அபிஷேக், படிக்கும் காலத்தில் மட்டும் எப்படி வித்யா பாலனை திருமணம் செய்து கொள்ளாமல் கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார்? அரசியல் படித்து, திருந்தி விடுகிறார் போலும்.

இந்த படத்திற்கு, பா என்று பெயர் வைப்பதற்கு பதில், மா என்று பெயர் வைத்திருக்கலாம். அந்தளவுக்கு வித்யா பாலனின் கேரக்டர், கதையில் வெயிட். அரிய வியாதியுடைய மகனை, தனியாக பாஸிட்டிவாக வளர்க்கும் தாயாக வருகிறார். இளம் நாயகியாக நடிக்கும் படங்களில், கொஞ்சம் வயதானவராக தெரியும் வித்யா பாலன், இதில் ரொம்ப அழகாக தெரிகிறார்.

அந்த கோரஸை படத்தில் பார்க்கும் போதும் புல்லரித்தது. (இப்படி சும்மா, சும்மா புல்லரிப்பது என்பது ஏதேனும் வியாதியா?) படம் முழுக்க என்று சொல்லமுடியாது. ஆனால், கிடைக்கும் கேப்பில் எல்லாம் பின்னணியில் கிளப்பியிருந்தார் மேஸ்ட்ரோ. மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த படம் பார்த்த உணர்வு கிடைத்தது. ஹும்... தமிழில் இப்படி ஒரு வாய்ப்பு வர மாட்டேங்குதே!

படம் முழுக்க, அமிதாப் அடிக்கும் விட்டுகள் ரசிக்கத்தக்கவை. கடைசியில் “நீ செஞ்ச தப்பு, நான் தான்” என்று தன்னை தானே கைக்காட்டுவது உருக்கம். இதுபோல், பல பளிச் வசனங்கள். பள்ளியில் ஒரு அழகான சிறுமி நெருங்கும்போதெல்லாம், எப்போதும் அமிதாப் விலகி செல்வார். ஏதோ, காமெடி என்று நினைத்தால், கடைசியில் அதை விளக்கும் காட்சியில் ஷாக் கொடுக்கிறார்கள்.

இளையராஜாவின் இசைக்காக சென்று பார்த்த படம். அந்த வகையில் திருப்தி. கூடவே, அமிதாப்பின் வாழ்நாள் நடிப்பு - எக்ஸ்ட்ரா போனஸ்.

---

இந்த படம் பார்த்துக்கொண்டிருந்த போது, தமிழில் இப்படி ஒரு காம்பினேஷனில் படம் பண்ண யார் இருக்கிறார்கள்? என்றெண்ணிய போது, சிம்பு தமாஷாக நினைவுக்கு வந்து போனார்.

ஜாக்கி சேகரின் பதிவில் இந்த படத்தை காணும்போது, ஆச்சரியம். வெடி சிரிப்பு.



இந்த படத்தை டப்பிங் செய்தால், சில இடங்களில் வசனங்களை தமிழாக்கம் செய்வதும், அதை கேட்பதும் ரொம்ப கஷ்டம்.

.

Sunday, December 13, 2009

ரேனிகுண்டா

கலை, கமர்ஷியல் இரண்டும் கலந்த பாலா, அமீர், சசிக்குமார் வரிசை இயக்குனர்களின் பட வகையை சேர்ந்தது ரேனிகுண்டா. எப்பொழுதும் போல் இல்லாமல் இருப்பதற்காக, மதுரையை விட்டுவிட்டு, புத்திசாலித்தனமாக ரேனிகுண்டாவை களமாக எடுத்திருக்கிறார்கள்.



படத்தில் எல்லோருமே புதிது. அதனாலேயே, பல விஷயங்கள் ப்ரெஷாக இருக்கிறது. படத்தின் கலர், கேமரா கோணங்கள், நடிகர்கள் தேர்வு, புதியவர்களின் நடிப்பு, சண்டைக்காட்சிகளின் விறுவிறுப்பு, இசை என எல்லாமுமே படத்தோடு ஒன்ற வைக்கிறது.

படத்தின் ப்ளஸ் - மைனஸாக கொலைக்காட்சிகளை சொல்லலாம். ஒவ்வொரு கொலைக்காட்சியையும், பிரமிக்க வைக்கும் விதத்தில் எடுத்திருக்கிறார்கள். அந்த நால்வர் எதிராளிக்கு போடும் கிடுக்கிப்பிடியாகட்டும், விரட்டிக்கொண்டு ஓடும் கேமராவாகட்டும், மிரட்டும் இசையாகட்டும், சீட் நுனிக்கு தள்ளிவிடுகிறது. இதேப்போல், ஹீரோவின் அப்பா, அம்மாவை கொல்லும் காட்சியும் பதற வைக்கிறது. இப்படி பாராட்டும் வகையில் இருந்தாலும், குழந்தைகளுடன், குடும்பத்துடன் பார்க்க முடியாது.

ஹீரோ, ஹீரோயின் என்று இவர்களை சொல்ல முடியாது. அந்த பையன், அந்த பசங்க, அந்த பொண்ணு என்று தான் சொல்ல வருகிறது. படத்தில் எல்லோருமே புதியவர்கள் என்றாலும், மற்றவர்கள் அளவுக்கு ஹீரோவாக நடித்திருக்கும் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் பையன் ஜானிக்கு நடிக்க வரவில்லை. அது பெரிதாக தெரியாத அளவுக்கு, அந்த கேரக்டரை வடிவமைத்திருப்பது, இயக்குனரின் சாமர்த்தியம். படத்தின் கருவாக்கத்திற்கும், உருவாக்கத்திற்கும் உதவியதாக சொல்லி சக்ரவர்த்திக்கு பெரிதாக நன்றி சொல்கிறார்கள், டைட்டில் கார்டில் இயக்குனர் பெயருக்கு முன்பாக. என்னவெல்லாம் உதவினாரோ?

ஷார்ப்பான வசனங்களை எழுதியிருப்பவர் - சிங்கம்புலி. இவர் ’நான் கடவுள்’ படத்தில் விக் சாமியாராக வருபவரும், மாயாவி படத்தின் இயக்குனருமான சிங்கம் புலி தானே? லவ் பீலிங் வந்த டப்பா, அவன் கோணத்திலேயே அதை “அந்த பீலிங் இருக்குதே, நாலு பேர் சேர்ந்து வெட்டின மாதிரி இருக்குடா” என்று சொல்வது கலக்கல். படம் முழுக்க, இவன் பேசும் வசனங்கள் - நல்ல கலகலப்பு.

இம்மாதிரி படங்களின் முடிவு, இப்படித்தான் இருக்கும் என ஏற்கனவே சில படங்கள் எடுத்து பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால், நடக்க போவது தெரிந்தும், படத்தின் முடிவில், அந்த பையனையும், பொண்ணையும் மட்டும் சந்தோஷமாக விட்டிருக்கலாமே? என்றொரு எண்ணம் வருகிறது. வம்புக்கு கொலை செய்தவர்களிடம் சேர்ந்ததற்காகவே, அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் அதே சோக முடிவை கொடுத்திருப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

படம் முடிந்த பிறகு, நண்பர்கள் சிலர் அவர்கள் தோஸ்த் ஒருவரை, படத்தில் வருவதை போல கிடுக்கிப்பிடி போட்டு விளையாடிக்கொண்டிருந்தது - படத்தின் வெற்றி. பயமுறுத்தும் வெற்றி.

.

Friday, December 11, 2009

(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 8

சிறு வயதில் ரஜினி படங்களில் என்னை கவர்ந்தது, சண்டைக்காட்சிகளும் நகைச்சுவைக்காட்சிகளும். அக்காலத்தில் நான் பார்த்த படங்களும், மறக்க முடியாத காட்சிகளும்.

மனிதன் படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்கு, குண்டுகளை கீ-செயின் போல் சட்டையில் மாட்டிக்கொண்டு ரஜினி புறப்பட்டு போகும் காட்சியை மறக்க முடியுமா? அவர் மேல் எறிந்த குண்டுகளை, அந்தரத்திலேயே பிடித்து அப்படியே திருப்பி எறிவார்.



நாம இப்ப வெளியே போகும்போது, கையோடு தண்ணீர் கொண்டு போகிறோம். ரஜினி, தர்மத்தின் தலைவனில் கையோடு சில்வர் கலரில் ஒரு சின்ன டப்பா வைத்திருப்பார். என்ன குடிப்பார் என்று நினைவில்லை. ஆனால், அந்த டப்பா மட்டும் நினைவிருக்கிறது.



ராஜா சின்ன ரோஜாவில் ஒரு நகைச்சுவைக்கு பெரிய அளவில் பேண்ட் போட்டுக்கொண்டு வருவார். அதுவும் பேஷனாகி, பேகிஸ் என்ற பெயரில் ஒரு ரவுண்ட் வந்தது. இப்ப, அந்த காட்சியை காணும்போது, ஏன் சிரிக்கிறார்கள் என்றுதான் யோசிக்க தோணும். அந்த படத்தில் தான் தமிழ் சினிமாவின் முதல் அனிமேஷன் பாடல் இடம்பெற்றது.



மாப்பிள்ளையில் ரஜினி அறிமுகமாகும் காட்சியில், டெரராக ஒரு வேஷம் போட்டுக்கொண்டு கல்யாண மண்டபத்திற்குள் பைக்கில் வருவார். ஒரு சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, தீக்குச்சியை பார்க்க, அது பற்றியெறியும். அதை கொண்டு சிகரெட்டை கொளுத்துவதோடு விடமாட்டார். அதை அப்படியே வாயினுள் கொண்டு சென்று, புகையுடன் வெளியே உதடாலேயே எடுப்பார்.



அதிசய பிறவி. தோல்வி படமாக இருந்தாலும், டிவியில் போடும்போதெல்லாம் பார்க்க தயங்கமாட்டேன். இதில் வினுசக்ரவர்த்தி ரஜினிக்கு பொருத்தமான உடலாக, வேறு சில ரஜினிகளை காட்டுவார். ரஜினியின் முந்தைய படங்களை பயன்படுத்தி அமைத்திருக்கும் இந்த காட்சியும், என்னோட பேவரிட்.



அண்ணாமலை. யாருக்குத்தான் பிடிக்காது இந்த ரிவென்ஜ் காட்சி?



சலிக்கவே சலிக்காத பாட்ஷா இடைவேளை பைட்.



பார்க்க வருபவர்களை எண்டர்டெயின் செய்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள். படங்கள்.

35 வருடங்களாக தொடர்ந்து, தனது படங்கள் மூலம் நல்ல எண்டர்டெயின்மெண்டையும், தனது அறுபது ஆண்டுகால வாழ்க்கை மூலம் பல நல்ல பாடங்களையும் வழங்கிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

.

(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 7

ஓவியங்கள் வரைவதுபோல், சிறுவயதில் இருந்த இன்னொரு பொழுதுபோக்கு, பத்திரிக்கையில் வரும் படங்களை கட் செய்து, ஒரு நோட் முழுக்க ஒட்டுவது. அப்படி ஒட்டிய ரஜினி படங்களில் சில, இப்பதிவில்.



இப்ப, எல்லா நடிகர்களையும் ரசிக்கும் பக்குவம் இருக்கிறது. ஆனால், ஒன்றும் அறியாத வயதில், எந்த வித தூண்டுதலும் இல்லாமல் ரசித்தது ரஜினியைத்தான்.



இது ஏதோ அப்பொழுது என்று சொல்லிவிட முடியாது. இன்றும் குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் - ரஜினிதான்.



இன்று ரஜினி படம் பார்த்துவிட்டு, ரஜினியின் நிஜ புகைப்படத்தை பார்த்தால், அது ரஜினி என்று நம்ப மறுக்கும் குழந்தைகளைக் கூட, எப்படி ரஜினி தன் செய்கைகளால் திரையில் கவர்கிறார்?



எனக்கு இப்போது நினைவில்லை. அந்த வயதில் எப்படி என் கையில் ‘ரஜினி ரசிகன்’ புத்தகம் கிடைத்தது என்று. யாரோ ஒரு ரஜினி ரசிகர் என்னை சுற்றி இருந்திருக்க வேண்டும்.



இதில் உள்ள படங்கள், ரஜினி ரசிகன் போன்ற புத்தகங்களில் இருந்தும், பொங்கல் வாழ்த்துக்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டது. ஏதோ, மட்டமான பசை பயன்படுத்துயிருக்கிறேன். நண்பர்கள், என் வயதையொட்டிய உறவினக்கார பசங்க, எனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவதென்றால், ரஜினி படங்களைத் அனுப்புவார்கள்.



மீதி நாளை...

.

Wednesday, December 9, 2009

நாட்டு சரக்கு - தவளை எங்கே?

அப்பாடா! ஒரு வழியா இளையராஜாவுக்கு நன்றாக இசையமைக்க தெரியுமென்று சாரு ஒத்துக்கொண்டுள்ளார்.

இசைத்துறை வல்லுனரும், இளையராஜாவின் தீவிர ரசிகருமான அகிலன் தன் பதிவில் ராஜா-ரஹ்மான் ஒப்பீடு பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் அல்லது வேறு ஒரு இசையமைப்பாளரையோ ஒரே நேர்கோட்டில் வைப்பது எந்த வகையில் நேர்மையான பார்வையாக இருக்க முடியும்? அது முற்றிலும் நமது ரசனையில் இருந்து எழுவதுதானே? அதைவிட அபத்தமானது சலம்டாக் மில்லினியரையும் நான் கடவுளையும் ஒப்பிடுவது. இரண்டு இசையின் வெளிபாடுகளுக்கும் இரு வேறு பெரும் காரணங்கள் இருக்கிறது. அதை இசையமைப்பாளன் மட்டும் தீர்மானிப்பதில்லை.

...

இளையராஜாவின் சமீபத்திய படமான ‘பா’வை பார்ப்போம் அதில் ஒர் இறுதி காட்சி. அந்தப் பையன் இறக்கப் போகிறான், தனது தந்தைக்கும் தாயிற்கும் திருமணம் நடத்துகிறான், திருமணத்திற்கு தீயை சுற்றிச் சுற்றி நடப்பதுபோல், அவர்கள் அவனது படுக்கையைச் சுற்றி சுற்றி நடக்கிறார்கள், அவனது பாட்டி திருமண மந்திரம் சொல்கிறாள். பையன் மன நிறைவு கொள்கிறான். தந்தையின் முகத்தில் சோகம், இப்பொழுதான் பழகியிருக்கிறான் அதுவும் தனது மகன் என்று தெரியாத நிலையில். தெரியும் போது பையன் மரண படுக்கையில், அந்த சமயம் அவன் ‘பா’ என்கிறான். தந்தையின் முகத்தில் சந்தோஷம், ஏமாற்றம், விரக்தி. சற்று நேரத்தில் பையன் இறக்கிறான். ஒரு சில நிமிட சம்பவங்கள் அனைத்தும். இந்த அத்தனை உணர்ச்சிக்கும் இளையராஜா இசை வடிவம் கொடுத்திருப்பார். ஒவ்வொரு சின்னச் சின்ன உணர்ச்சிக்கும். மந்திரங்கள் உச்சரிக்கும் போது, தந்தை கவலையாகப் பார்க்கும் போது, சட்டென்று பையன் பா என்று சொல்லும் போது (முதல் முறையாக அவன் வாழ்வில் அவன் உச்சரிக்கும் வார்த்தை, அவன் தந்தை முதல் முறையாக அவனது வாழ்வில் கேட்கும் வார்த்தை) நமது கலாச்சரத்திற்குப் பழக்கப்பட்ட வயலின் நாதம் அந்த இடத்தில் ஒலிக்கும், உடனே அந்த இசை சற்றென்று தடம் மாறுகிறது காரணம் அவன் இறக்கிறான். மிகச் சிக்கலான இசைக் கலவை.


மேலும் வாசிக்க...

---

துவரம் பருப்பு விலை தாறுமாறாக போனதால், அதற்கு இணையான ஒரு ஐட்டத்தை கவர்மெண்ட் கனடாவில் இறக்குமதி செய்யப்போகிறார்கள். இதற்கு அரசாங்க தரப்பில், சத்தானது, விலையும் குறைவானது என ஆதர குரல் கொடுத்தாலும், மற்றவர்கள் இதன் சுவை துவரம் பருப்பு போல் வராது என்கிறார்கள். கிலோ இருபத்து ஜந்து ரூபாய் தான் வருமென்பதால், அரசாங்கம் இந்த எதிர்ப்பு குரலை எல்லாம் கண்டுக்கொள்ளபோவதில்லை. ஆரம்பத்தில், பாம் ஆயில் கொண்டு வந்த போதும், இப்படி எதிர்ப்பு இருந்தது. அப்புறம் சரியாகிவிட்டது என்கிறார்கள்.

---

சிவகாசி ஊர் பெயரை மாற்றபோகிறார்கள். விஜய் நடித்ததாலா? இல்லை, பேரரசு எடுத்ததாலா? இரண்டும் இல்லை. ஊரில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தவிர்க்க, நியூமராலஜிப்படி பெயரை மாற்றுகிறார்கள். பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. ஒரு எழுத்து எக்ஸ்ட்ராவாக சேர்க்கிறார்கள். Sivakasi, இனி Sivakaasi.

இந்த பெயரை பயன்படுத்தும்படி உள்ளூர் மக்களுக்கும், நிறுவனங்களும் வேண்டுகோள் எழுப்பி , ஊரு முழுக்க சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுல இருக்குற ஊருக்கு, ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மாற்ற சொல்லி, எந்த ஜோசியருய்யா சொன்னது?

---

என் நண்பனுடன் கோவை சாலையில் நடந்துக்கொண்டிருந்தேன். அவன் ஒரு சைனா மொபைல் வைத்திருந்தான். போலி IMEI நம்பர் தடை விவகாரத்தால் ஒரு சிம் வேலை செய்யவில்லை. சரி செய்ய கடைகளில் 200 முதல் 400 வரை கேட்கிறார்கள். அந்த கடுப்பில் இருந்தவன், பெட்டிக்கடைகளில் தொங்கி கொண்டிருந்த தினசரி தலைப்பு செய்தியை பார்த்து இன்னும் கடுப்பானான். செய்தி - நாளை முதல் பொது இடங்களில் புகைப்பிடித்தால், 200 ரூபாய் அபராதம்.

“என்னங்கடா நினைச்சிக்கிட்டாங்க? கடையில சைனா மொபைல் விப்பாங்களாம். ஆனா, வாங்கி யூஸ் பண்ணா பணம் கட்டணும்’மாம். அப்புறம் ஏன் அதை விக்கவுட்டீங்க? இவுங்க தம்மு விப்பாங்களாம். வாங்கி அடிச்சா, பைன் கட்டணும்மாம். வாங்கிக்கிட்டு போயி வீட்டுக்குள்ளயா அடிக்கணும்? இப்படியே போச்சு’ன்னா, இன்னும் கொஞ்ச நாள்ல ரோட்டுல சிக்கன் கபாப் தின்னா கூட பைன் கேட்பானுங்க” என்று பொறிந்து தள்ளினான்.

---

கேபிள் சங்கர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கின முதல் படமான டுயல் (Duel) பத்தி சொன்னதுக்கு அப்புறம் அந்த படம் பார்க்க ரொம்ப ஆர்வமா இருந்தேன். படமும் ஒரு வழியா பார்த்தாச்சு. ரெண்டு கேரக்டரை வைத்து மிரட்டியிருந்தார். லாரி எழுப்பும் ஒலியும், அதை காட்டும் கேமரா கோணமும் அபாரம். ஆனா, கடைசி வரை ஏன் இந்த விரட்டல்’ன்னு சொல்லவேயில்லையே?

ஹீரோ காரை விட்டு இறங்கி லாரியை நோக்கி நடந்தால், லாரிக்காரன் ஓடிவிடுகிறான். காரில் போனால், விரட்டுகிறான். ஆனால், அதே சமயம், குழந்தைகள் சென்ற ஸ்கூல் பஸ், கிளம்ப உதவுகிறான். ஒரு வேளை, அவனுக்கு அந்த கார் மேல் தான் கோபமா? இதையெல்லாமேயே காட்சிகள் மூலம் பார்ப்பவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயக்குனரின் நோக்கமா?

---

போன வருடம் நடந்த மும்பை தாக்குதலுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்று எப்போதும் போல் கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கிறது. இந்த வருடம், அதே தினத்தன்று என்டிடிவியில் ஒளிப்பரப்பான உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேட்டியில், ஒருவர் மும்பை தாக்குதலால ஏற்பட்ட இழப்புக்களை கூறிவிட்டு, ”ஆனால் இன்னமும் கசாப்பிடம் விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது. ஏன்?” என்று அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார். அதற்கு சிதம்பரம், “என் நிலையில் நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க?” என்று பதில் கேள்வி எழுப்பினார். கேள்வி கேட்டவர் ஏதும் பதில் சொல்லவில்லை. சிறிது மௌனத்திற்கு பிறகு, “அது தான் பதில்” என்றார் சிதம்பரம்.

ஆனால், கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானில் நிறைய குண்டு வெடிக்கிறதல்லவா? பாகிஸ்தானும் இந்தியா மேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சும்மா தான் சொல்கிறார்களா? இல்ல...??? ஒண்ணும் புரியலை.

---

இது ஒருமுறை கூர்க் சென்ற போது எடுத்த படம். பெருசு பண்ணி பாருங்க. இதில் ஒரு தவளை இருக்கிறது. எங்கே’ன்னு சொல்லுங்க பார்க்கலாம்?



ஆங்கில எழுத்தையும், எண்ணையும் இணைத்து எந்த கட்டம் என்று கூறுங்கள்.

.

Tuesday, December 8, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 6

வரையும் படங்களுக்கு எனக்கு கலரடிக்க பிடிக்காது. தெரியாது என்றும் சொல்லலாம். கொஞ்சமாவது நல்லா இருக்க வேண்டுமென்றால், அப்படியே விட்டுவிடுவது தான் பெட்டர் என்று விட்டுவிடுவேன்.



மனித முகங்களை வரையும்போது, ஸ்கெட்ச் மூலம் கலரடிக்க முடியாது. கலர் பென்சிலோ, வாட்டர் கலர் கொண்டோ வரைய, அது பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதற்கு நான் முயன்றதேயில்லை.

ஆனால், இந்த மாதிரி கார்ட்டூன்களுக்கு ஸ்கெட்ச் மூலம் தாராளமாக கலர் அடிக்கலாம். பாருங்க, கொஞ்சம் காட்டுத்தனமா அடித்திருக்கிறேன்.



மிக்கி மௌஸ் பிடிக்காத சிறுவர்கள் உண்டா? எனக்கும் அப்ப ரொம்ப பிடிக்கும். மிக்கி மௌஸ் உருவான கதை தெரியுமா? யூனிவர்சல் ஸ்டூடியோவுக்காக ஆரம்பத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் வால்ட் டிஸ்னி. அவர் அப்போது உருவாக்கிக்கொண்டிருந்த கார்ட்டூன் தொடருக்காக, தயாரிப்பாளர்களிடம் ஊதியத்தை அதிகப்படுத்த சொல்ல, அவர்கள் மறுத்திருக்கிறார். இவரும் கோபத்தில் வெளியே வந்து புது நிறுவனம் தொடங்கிவிட்டார். ஆனால், அவர்களிடம் அவர்கள் ஏற்கனவே உருவாக்கியிருந்த கார்ட்டூன் கேரக்டருக்கான உரிமை இல்லாததால், புதிய கேரக்டர் உருவாக்க வேண்டியிருந்தது.



என்ன பண்ணலாம் என்று ஒவ்வொரு மிருகமாக வைத்து யோசிக்க, கடைசியில் டிஸ்னியை கவர்ந்தது, அவர் தோட்டத்து எலிக்குட்டி. அதை வைத்து ஒரு கேரக்டர் செய்துவிட்டார்கள். அந்நேரத்தில் டிஸ்னியுடன் பணியாற்றிய நடிகர் மிக்கி ரூனியின் பெயர்தான், மிக்கி மௌஸ் என்ற பெயர் அமைய காரணம் என்று சொல்கிறார்கள்.

உருவமும் பெயரும் போதுமா? அதன் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? அதன் செய்கைகளுக்கு இன்ஸ்பிரெஷனாக டிஸ்னி எடுத்துக்கொண்டது சார்லி சாப்ளினை.



ஆனால், மற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை டிவியில் அடிக்கடி பார்ப்பது போல, டிஸ்னியின் கேரக்டர்களை பார்த்துவிட முடியாது. அதற்கு காரணம், அதன் மேல் உள்ள காப்பிரைட் உரிமைகள். இதில் இவ்வளவு கவனமாக இருந்ததற்கு காரணம், முதலில் ஏமாந்தது போல் திரும்பவும் ஏமாந்துவிட கூடாது என்பதுதான்.



இப்ப, டிஸ்னிக்கென்றே பிரத்தியேக சேனல் இருக்கிறது. அடிக்கடி பார்த்துக்கொள்ளலாம். ஓவியமாக கவர்ந்த அளவுக்கு, கார்ட்டூன் கதைகளாக எனக்கு அவ்வளவு பிடிக்காது. எல்லோரையும் போல், டாம் அண்ட் ஜெர்ரி பிடிக்கும். கவுண்டமணி செந்தில் கான்செப்ட். அப்புறம், பாப்பாய் பிடிக்கும். ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று எளிமையா சின்ன சினிமாக்கதை போல் இருக்கும்.



சமீபத்தில் டோரா அடைந்த பிரபலம் ஆச்சரியப்படுத்துகிறது. மடமடவென எல்லா பொருட்களிலும், டோரா இருக்கிறாள். எங்கும் டோரா. எதிலும் டோரா. இவள் நிக்கெலோடென் வீட்டு பெண்.



தமிழ்ப்பட பாடல் வரை கொண்டு வந்துவிட்டார்கள். குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கூட, டோரா பர்த்டே பார்ட்டி என்று ஒரு தீமுடன் கொண்டாடுகிறார்கள்.



குழந்தைகளின் தோழமையான ஹீரோக்கள் - கார்ட்டூன்கள். அதனால் தான் எத்தனை வருடங்கள் கழித்தும், ஒரு மவுஸுக்கு கூட இவ்வளவு மவுசு.

---

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் மகேந்திரனுக்கு இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

.