Friday, August 31, 2012

யுனிவர்சல் ஸ்டுடியோவில் ஒரு வாக்

சென்ற பதிவின் தொடர்ச்சி.

டால்பி தியேட்டரையும் மெழுகு மியூசியத்தையும் பார்த்துவிட்டு, யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு கிளம்பினோம்.

போகும் வழியிலேயே பாப்பாவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டோம். டிஸ்னிலேண்ட்டில் ஒவ்வொரு பார்க்கிங் தளத்திற்கும், ஒரு கார்ட்டூன் கேரக்டர் பெயர் வைத்திருந்தது போல், இங்கு யுனிவர்சலின் ப்டைப்புகளில் வரும் கேரக்டர் பெயர்களும், படப்பெயர்களும் வைத்திருக்கிறார்கள்.



சிட்டி வாக் என்னும் ஷாப்பிங் ஏரியாவை கடந்து உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. இங்கே படம் பார்க்க தியேட்டர்களும் இருக்கின்றன.


இந்த சிட்டி வாக் ஏரியாவை கடந்து செல்லும் ஒரு இடத்தில், தரையில் இருந்து தண்ணீர் பீச்சியடிக்க, அதில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.



ஒவ்வொரு முறை தண்ணீர் மேலெழும்பி வரும்போதும், அங்கிருந்த குழந்தைகளிடம் எழும் உற்சாகத்திற்கு அளவேயில்லை. பார்க்கும் நமக்கும் சலிப்பேயில்லை.



இங்கே நிறைய உணவகங்கள் இருந்தாலும், அச்சமயம் எங்களுக்கு பசிக்கவில்லையென்பதால், உள்ளே நுழைந்துவிட்டோம்.



யுனிவர்சல் ஸ்டுடியோஸ், அமெரிக்காவின் பழமையான சினிமா தயாரிப்பு நிறுவனம். பல பேர் கைமாறி தற்சமயம் என்பிசி வசம் இருக்கிறது, யுனிவர்சல் ஸ்டுடியோஸ்.

தீம் பார்க்குடனான இந்த ஸ்டுடியோ திறக்கப்பட்டது, 1964இல். இவர்கள் தயாரித்து பெரிய ஹிட்டான படங்களை மையமாக வைத்து,  இங்குள்ள விளையாட்டுகளை அமைத்துள்ளார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸை ‘எண்டர்டெயின்மெண்ட் கேபிடல் ஆப் வேல்ர்ட்’ என்று சொல்ல, யுனிவர்சல் ஸ்டுடியோஸை ‘எண்டர்டெயின்மெண்ட் கேபிடல் ஆப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிறார்கள்.

உள்ளே எக்கச்சக்க கூட்டம். ஒவ்வொரு இடத்திலும் வெயிட் செய்ய, எவ்வளவு நேரமாகும் என்பதை காட்டும் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே இருக்கின்றது. அதை பார்த்தால், இன்னும் கடுப்பாகும். 15, 30, 45 நிமிடங்கள் என்றிருக்கும்.



மர்லின் மன்றோ மாதிரி இருக்கும் பெண்ணுடன் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள கியூ கட்டி நின்றார்கள்.

வெயிட்டிங் டைமே இல்லாதது, இந்த ஹாரர் ஹவுஸ் தான். லட்சணம் புரிந்திருக்குமே? மனைவி, குழந்தை வராமல், நான் மட்டும் உள்ளே சென்றேன்.



நல்லவேளை, எனக்கு முன்னால் இரு ஜோடிகள் சென்றுக்கொண்டிருந்ததால், அவர்களை அப்படியே பாலோ செய்து போய்க்கொண்டிருந்தேன். நல்ல இருட்டு. தனியே சென்று இருந்தால், தடவி தடவி தான் போக வேண்டி இருந்திருக்கும்.

ஆங்கில பேய் படங்களில் வரும் அம்சங்கள் எல்லாம் இருந்தது. ஆங்காங்கே, கொடூரமான மேக்கப்பில் இருக்கும் ஆசாமிகள், கையைப் பிடித்து இழுக்க, உள்ளே கொஞ்சம் கிலியாக தான் இருந்தது.

தவிர, எனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஜோடிகள் கொஞ்சம் காமெடி செய்துக்கொண்டு வர, எனக்கு நல்ல என்டர்டெயின்மெண்டாக இருந்தது.

ஒரு அறையில் டம்மி பிணங்களை ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி தொங்கிவிட்டிருந்தார்கள். முன்னால் சென்றிருந்த ஆண், சட்டென்று அப்படி ஒரு டம்மி பொணத்தை கட்டிப்பிடிக்க, எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. வெளியே வரும் வரை, நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே வந்தேன்.

ஒரு செங்குத்தான உயர்ந்த அறையில், கோர முக மேக்கப்பில் ஒருவர் கையில் கோடாலியுடன், எல்லோரையும் விரட்டி விரட்டி வெட்ட வந்தார். அனைவரும் பயந்து ஓட, எங்களுக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஒரு இளம்பெண், அவரையே முறைத்து பார்க்க, அவரோ ஏதேதோ செய்து பயமுறுத்த முயன்றுக்கொண்டிருந்தார்.

ம்ஹும். அந்த பெண் அசரவேவில்லை. நடக்காமல் நின்று முறைக்க ஆரம்பித்துவிட்டார்.

கோர முக காரருக்கு என்ன செய்ய என்று தெரியாமல் உள்ளே சென்றார். சரிதான் என்று அந்த பெண் வெளியே நடக்க ஆரம்பித்தார். அதுதான் வெளியே செல்லும் வழி. திடீரென்று அந்த வழிக்கு பக்கத்தில் இருக்கும் சிறு கேப்பில் இருந்து கோரமுககாரர் வர, அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த இளைஞி பயத்தில் வெளியே ஓடினார். ‘தட் இஸ் ஏ குட் ஒன்’ என்றான் அவளுடன் வந்த இளைஞன்.


பிறகு, ஷ்ரெக் 4D என்றொரு ஷோ நடந்துக்கொண்டிருந்தது. ஒரு 3டி கண்ணாடி கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். அது ஒரு திரையரங்கம். திரையரங்கத்திற்கு உள்ளே விடுவதற்கு முன் ஸ்ரெக் முன்கதையை சொன்னார்கள். பிறகு, உள்ளே விட்டு படத்தைப் போட்டார்கள்.

ரெகுலரான 3டியுடன், உட்கார்ந்திருந்த சேரை ஆட்டி, முன்சீட்டின் பின்பக்கத்தில் இருந்து நம் முகத்தில் தண்ணீர் தெளித்து, நம் சீட்டின் மேற்பக்கத்தில் இருந்து காற்றடித்து, மேலிருக்கும் லைட்களை அவ்வப்போது போட்டு 4டி எபெக்ட் கொடுத்தார்கள்.

உதாரணத்திற்கு, படத்தில் வரும் ஒரு கேரக்டர் திரையில் துப்பினால், நம் முகத்தில் தண்ணீர் இருக்கும். திரையில் வண்டி ஓடினால், நமது சீட் ஆட தொடங்கும். யாராவது வேகமாக திரும்பினால், நமது கழுத்தில் காற்றடிக்கும். மின்னல் வெட்டினால், மேலே இருக்கும் விளக்கு பட்டென்று ஒளிர்ந்து, கண் கூச வைக்கும்.  இப்படி ஒரு அனுபவம் புதிதாக இருந்தது. படம் கொஞ்ச நேரம் தான். அதற்கு காத்திருந்த நேரம் தான் அதிகம்.

 
 வெயிலும் அதிகம் தான். நம்மூரில் கல்யாண வீட்டில் பன்னீர் தெளிக்க ஒரு மெஷின் வைத்திருப்பார்களே? அதேப்போல், குளிர்ந்த நீரை தெளிக்கும் ஃபேன்களை பல இடங்களில் வைத்திருந்தார்கள்.
 

 

 

 இங்கு வாட்டர் வேர்ல்ட், யுனிவர்சல் அனிமல் ஆக்டர்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

 

 
 அனிமல் ஆக்டர்ஸ் நிகழ்ச்சியில் எடுத்த சில வீடியோக்களை, அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

.
 

Thursday, August 30, 2012

மெழுகாவோம் வாங்க!

சென்ற பதிவின் தொடர்ச்சி.

சில பிரபலங்களின் சிலைகளை பார்த்துவிட்டு, மெழுகு சிலைகள் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்.

ஹாலிவுட் எஸ்.ஜே.சூர்யா - ஜிம் கேர்ரி. (இப்படி சொன்னா, எஸ்.ஜே.சூர்யாவுக்கு சந்தோஷமா இருக்கும்’ல?)

 
கேமரொன் டயஸ். சிலர் மடியில் உட்கார ட்ரை செய்துக்கொண்டிருந்தனர்.
 


 
மைக்கெல் ஜாக்சன். தாத்தா பாட்டிங்க கூட இதே மாதிரி ஸ்டெப்ஸ் போட்டு, பக்கத்துல நின்று போஸ் கொடுத்துக்கிட்டாங்க.

 
டைகர் வுட்ஸ்.

 
ஸ்பைடர்மேன்
 

 
இப்படி ஊர்ல இருக்கிறவங்கெல்லாம் சிலை வச்சவங்களுக்கு ஒரு சிலை வேண்டாமா? மேடம் துசாட்ஸ், இல்ல மேடம் ருஸ்சோ என்று சொல்ல வேண்டுமாம். (போன பதிவின் பின்னூட்டத்தில் யோகன் சொல்லியிருக்கிறார். நன்றி யோகன்.) மேடத்தின் சிலை இது.




இது தவிர, மெழுகு சிலைகளின் தகவல்களையும் இங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஒரு தலையை செய்ய, 10 பவுண்ட் மெழுகும், இரு கைகளுக்கு 4 பவுண்ட் மெழுகும் தேவைப்படுமாம். (சாம்பாருக்கு எவ்வளவு பருப்பு போடணும்’ன்னு சொல்ற மாதிரி இருக்கா?) ஒரு ஜோடி கண்களை உருவாக்க மட்டும், 15 மணி நேரங்கள் ஆகுமாம். இங்கே இருக்கும் ஒரு சிலையின் கண்கள் போல் இன்னொரு சிலையின் கண்கள் இருக்காதாம்.

ஒரு நாளுக்கு 8 மணி நேரங்கள் என்று எடுத்துக்கொண்டால், ஒரு சிலையை செய்து முடிக்க மூன்று மாதங்களுக்கு மேல் ஆகுமாம்.

முதலில் இப்படி ஒரு இரும்பு எலும்பு கூடை செய்கிறார்கள்.  இதற்கு மேல் மோல்டிங். பிறகு, முடி. அப்புறம், கண்கள், பற்கள், மேலே வண்ணம். முடிவில் ட்ரஸ்.



சிலைகள் அனைத்தும் எந்த ஒரு வெளிப்புற சப்போர்ட்டும் இல்லாமல் நிற்கிறது.


சிலைகளை வடிப்பதற்கு முன், பிரபலங்களை சந்தித்து 2-3 மணி நேரத்தில் அளவெடுக்கிறார்கள். 200 வித அளவுகள். அளவெடுக்க இரு சிற்பிகள், படமெடுக்க ஒரு போட்டோகிராபர், பேச கொள்ள ஒரு பிஆர் என்று ஒரு டீமாக போய் வருகிறார்கள்.

 
அப்படி எடுத்த சில பிரபலங்களின் அளவுகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
 
எல்லாம் முடிந்தது. வெளியே வரும் வழியில், நமது கைகளை மெழுகில் வடித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு, கொஞ்சம் ஆர்வத்தை கிளப்ப, போய் விசாரித்தேன்.
 
முதலில் பாப்பாவின் கைகளின் மாதிரி எடுத்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டேன், விவரம் தெரியாமல். ”முடியாது. ஐஸ் தண்ணீரில் 30 நொடிகள் கையை வைத்திருக்க வேண்டும்” என்றார். இதென்ன பெரிய விஷயமா? என்று நினைத்துக்கொண்டேன்.
 
இது ஈஸியாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை. அமெரிக்கர்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை. பெரிதாக நோக விரும்ப மாட்டார்கள். சரி, நம் கையை மெழுகில் மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டியது தான் என்று கையை நீட்டினேன்.
 
ஒரு அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போட சொல்லி கிலியை கிளப்பிவிட்டு, பிறகு வேலையை ஆரம்பித்தார்.
 


 ஐஸ் தண்ணீரில் முப்பதே விநாடிகள் தான் வைக்க சொன்னார். கஷ்டம்’தாங்க.



பிறகு, கையை எடுத்து சூடாக இருந்த மெழுகில் முக்கினார். ஹைய்யா, வலிக்கவே இல்லையே?



ஒழுகிய மெழுகை சரி செய்கிறார்.



திரும்ப குளிர்ந்த நீரில் கையை முக்...



என்ன கலர் என்று கேட்டார். சிகப்பு என்று சொல்ல, அதில் ஒரு முக்...



 
இப்படி ஆங்கையும் இங்கையும் முக்கி, முக்கி, பிறகு கைகளில் இருந்து அதை உருவினார். கையில் இருந்த முடிகள் மெழுகில் ஒட்டி இருக்க, இழுத்ததில் வலிக்க, சப்பா...!!!


ஒருவழியாக கை ரெடியாகியது.



அருள் சொல்லும் வகையில் வந்திருந்தது.



தற்சமயம் வீட்டு ஷோகேஷில் இருந்து, வீட்டிற்கு வருபவர்களுக்கு அருள் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

.

Wednesday, August 29, 2012

மேடம் துசாட்ஸ் - மெய்நிகர் உலக பிரம்மா

சென்ற பதிவின் தொடர்ச்சி.

டால்பி தியேட்டர், சைனீஸ் தியேட்டர் மற்றும் மேடம் துசாட்ஸ் மியூசியம் அகியவை அனைத்தும் ஒரே சாலையில் பக்கம் பக்கம் தான் இருக்கிறது. நாங்கள் மேடம் துசாட்ஸ் மியூசியம் இருக்கும் கட்டிடத்தில் தான் காரை பார்க்கிங் செய்து விட்டு, டால்பி தியேட்டருக்கு சென்றிருந்தோம். ஞாயிறு காலை சிறிது நேரமே, டால்பி தியேட்டருக்குள் அனுமதிப்பார்கள் என்பதால், அதற்கு முதலில் சென்றோம்.

அதை பார்த்துவிட்டு பிறகு, மேடம் துசாட்ஸ் மியூசியத்திற்கு வந்தோம். அந்த சாலையின் பெயர் - ஹாலிவுட் பொல்வார்ட் (Hollywood Boulevard).  பொல்வார்ட் என்று பல சாலைகளை அமெரிக்காவில் காணலாம். பொல்வார்ட் என்பது ஒரு வகை சாலை.

இந்த சாலை முழுக்க பிரபலங்கள் போல் உடையணிந்து கொண்டு சிலர் சுற்றுகிறார்கள். மைக்கேல் ஜாக்சன், பைரேட்ஸ், பேட்மேன் ஜோக்கர் என்று பலரை காண முடிந்தது. நம்மிடம் பணம் பெற்றுக்கொண்டு, போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.






சிலரை பார்த்த போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் கோவில் நினைவுக்கு வந்தது.



இந்த சாலையில் தான் ஹாலிவுட் வாக் ஆப் ஃபேம் (Hollywood Walk of Fame) என்னும் ஹாலிவுட் நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் நட்சத்திர தடங்களைப் பதித்து வைத்திருக்கிறார்கள்.



நம்மூர் என்றால், தலைவனை மிதிக்க விட மாட்டோம் என்று இதற்கெல்லாம் அனுமதித்திருக்க மாட்டார்கள்.


இதையெல்லாம் பார்த்துவிட்டு, மேடம் துசாட்ஸ் மியூசியத்திற்குள் நுழைந்தோம்.

மேடம் துசாட்ஸ் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்ந்த பெண்மணி. மெழுகு சிலைகளை வடிவமைப்பதில் ’அம்மா டக்கர்’. லண்டனில் இருக்கும் இவருடைய மியூசியம் மிகவும் புகழ் பெற, உலகம் முழுக்க பிரபலங்களின் மெழுகு சிலைகள் கொண்ட இவருடைய மியூசியங்கள் திறக்கப்பட்டன.  இவருடைய குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்ட இந்த மியூசியங்கள், தற்சமயம் வேறொரு பொழுதுபோக்கு நிறுவனத்தால் (மெர்லின் எண்டர்டெயின்மெண்ட்) வாங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

 
 
ஹாலிவுட்டில் இருக்கும் இந்த மியூசியத்தில் மூன்று தளங்கள். மேலிருந்து பார்த்துவிட்டு கீழே வருமாறு அமைத்துள்ளார்கள்.


 


 சும்மா சொல்லக்கூடாது. நிஜமாகவே சிலைகளை தத்ரூபமாக அமைத்துள்ளார்கள். சுரண்டி பார்த்தேன். மெழுகுதான்!




விரல், மேலே இருக்கும் கோடுகள், அதில் இருக்கும் சிறு முடிகள் என்று அத்தனையும் நிஜத்திற்கு அருகாமையில்.



சில இடங்களில், மெழுகு சிலைகளைப் பார்த்து நிஜமாகவே யாரோ நிற்கிறார்கள் என்று நினைத்தேன். சில இடங்களில், நிஜ மனிதர்களை மெழுகு சிலை என்று நினைத்து பிறகு சுதாரிக்க வேண்டி இருந்தது.





ஒரு இடத்தில், ஒரு சைனீஸ் பெண் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அந்த பெண்ணுடன் வந்திருந்த ஆண் தள்ளியிருந்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் முதலில் அந்த ஆணை கவனிக்கவில்லை. இந்த பெண்ணை மட்டும் பார்க்க, அந்த பெண்ணின் வெள்ளை கலருக்கு பொம்மை போலவே இருக்க, பக்கத்தில் போய் உக்கார்ந்துவிடலாமா என்று நினைத்துவிட்டேன். நல்லவேளை, அந்த பெண் சிறு அசைவை காட்ட, அவள் நிஜம் என்று உணரமுடிந்தது. இல்லாவிட்டால், ரசாபாசம் ஆகியிருக்கும்!!! அதன்பிறகு, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே சிலைகளை அணுக வேண்டியிருந்தது. :-)



இங்கிருக்கும் மியூசியத்தில் இந்திய நடிகர்கள் யாரும் இல்லை. ஆசிய அளவில் ஜாக்கிசான் இருந்தார். லண்டன், நியூயார்க்கில் இருக்கும் மியூசியங்களில் இந்திய கலைஞர்களின் சிலை இருக்கிறதாம்.




மனிதர்களை, அவர்களின் உண்மையான அளவில் அளவெடுத்து மெழுகு சிலை வடிப்பதால், சில ரகசிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள முடிந்தது. உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். நான் ஜாக்கிசானை விட உயரம். இதுபோல், மற்றவற்றை நீங்களே ஒரு அனுமானமாக யூகியுங்கள்.



சிலைகளுடன் போஸ் கொடுக்க என்று, அந்த மனிதர்களுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, சார்லி சாப்ளினுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க, அவரிடம் இருப்பது போன்ற தொப்பி, கைத்தடி போன்றவை இருக்கின்றன. சில பிரபலங்களுடன் உட்கார்ந்து காபி குடிப்பது போன்று பில்-டப் கொடுக்க, அதற்கேற்ப சேர், காபி கோப்பை போன்றவற்றை பக்கத்திலேயே வைத்திருக்கிறார்கள்.
 

 




 
ஓபாமாவையும் அவருடைய அலுவலகத்தையும் அப்படியே காப்பி எடுத்து வைத்திருந்தது சிலருக்கு குஷியாகிவிட்டது. அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இதுவல்லவோ ஜனநாயகம்?

நம்மூர் பிரதமர் போன்ற பிரபலங்களை இதுபோல் சிலை செய்ய அனுமதிப்பார்களா? இதற்கும் அவர் நிஜமாகவே சிலை போலத்தான் இருப்பார்!!!

இன்னும் கொஞ்சம் மெழுகு சிலைகளும், மெழுகு சிலை பற்றிய சில தகவல்களும், அடுத்த பதிவில் பார்க்கலாம்.

.

Tuesday, August 28, 2012

எனக்கொரு ஆஸ்கர் பார்சல்!!!

சென்ற பதிவின் தொடர்ச்சி.

போன ஞாயிறு-இன் மெயின் ஸ்பாட் - யுனிவர்சல் ஸ்டுடியோ. அது இருப்பது ஹாலிவுட்டில். போகும் வழியில் இன்னும் இரண்டு இடங்களை கவர் செய்து விடலாம் என்பதால், முதலில் நாங்கள் சென்ற இடம் - டால்பி தியேட்டர்.



நான் இதுவரை எத்தனை தியேட்டர்கள் சென்றிருந்தாலும், இந்த தியேட்டர் ரொம்ப ஸ்பெஷல். இங்கு படம் எதுவும் போட மாட்டார்கள். ஆனால், இந்த தியேட்டர் திரையுலகத்தினருக்கே படம் காட்டும். ஆமாம், வருடதோறும் ஆஸ்கர் அவார்ட்டுகள் வழங்கப்படுவது, இந்த அரங்கில் தான்.

இங்கு அரை மணி நேர அளவில், உள்ளே அழைத்து சென்று அரங்கின் சிறப்பம்சங்களை விளக்கும் மினி டூர் நடத்துகிறார்கள். அதற்கும் டிக்கெட் தான். நாங்கள் சென்ற போது, ஆறு பேர் எங்களுடன் வந்தார்கள்.

ஒல்லியாக பேட்ரிக் என்றொரு இளைஞன், அரங்கை பற்றி விளக்க வந்தான். உள்ளே அழைத்து சென்று கதவை மூடிகொண்டான். அரங்கை ரொம்ப பாதுகாப்பது தெரிந்தது.

இது முன்பு கோடாக் தியேட்டர் என்றழைக்கப்பட்டது. அதற்காக, வருடத்திற்கு ஒரு பெரும் தொகையை செலுத்திவந்தது. பின்பு, இந்த வருட ஆரம்பத்தில் கோடாக் நிறுவனம் திவாலாக, டால்பி நிறுவனம் பெயருக்கு பொறுப்பெடுத்துக்கொண்டது. 20 வருட ஒப்பந்தம்.




ஆஸ்கர் நிகழ்ச்சியை இங்கு நடத்துவதற்கு 70 வருட ஒப்பந்தம், இந்த அரங்குடன் போட்டிருப்பதாக பேட்ரிக் சொன்னார். பக்கத்திலிருக்கும் சைனீஸ் தியேட்டரிலும் பலகாலம் முன்பு இருமுறை இந்நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது.



அரங்கின் முன்பக்கம் நிறைய கடைகள் இருக்கிறது. ஆஸ்கர் நிகழ்ச்சியின் போது, இந்த தெருவையே குத்தகைக்கு எடுத்ததுபோல், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்குமாம்.

ஆங்காங்கே இருக்கும் நிறுவன பெயர்கள், பொருட்கள் பெயர்கள், பேனர்கள் அனைத்தும் சிகப்பு துணியால் மறைக்கப்படுமாம். பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு, டாம் க்ரூஸ் வந்தாலே, அவருடைய ட்ரைவிங் லைசன்ஸ் பார்க்கப்பட்டு, சரியான ஆள்தான் என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுவாராம். ஒருமுறை ஒரு நடிகர் இப்படி அடையாள அட்டை கொண்டு வராமல் போக, அவரால் அவார்ட் வாங்க முடியவில்லையாம்.

இதை அவர் சொல்லும் போது, நாம் நம்மூர் டிவி அவார்டை நினைத்துப் பார்த்தேன். ஆளே வராவிட்டாலும், சுவரேறி குதித்தாவது, அவார்டை கொண்டு போய் கொடுத்துவிடும் பெரிய மனசு புரிந்து பெருமையடைந்தேன். அவர்களை உள்ளே விடாவிட்டாலும், யாரை உள்ளே விடுவார்களோ, அவர்களிடம் கொடுத்து அனுப்பி, ஒரு போட்டோ கிடைத்தால் போதும். அதை வைத்தே விளம்பரம் செய்து, கல்லா கட்டும் திறமை யாருக்கு வரும்?






சரி, டால்பி தியேட்டருக்கு போவோம். உள்ளே நுழைந்ததும், இரு பக்கமும் கடைகள். எதிரில் ஒரு பெரிய அழகிய வண்ணத்துடன் கூடிய படிகட்டுகள். அதற்கு பின்னால், மேலே அரங்கிற்கு செல்ல லிப்ட். ஒன்லி ஃபார் விஐபிகள். (இந்தியாவை தவிர வேறெங்கும் விஐபி என்ற பதம் இல்லை என்கின்ற ஞாநியின் கூற்று உண்மையில்லை போலும்!!!)

 

 



 


 
இருபக்கமிருந்த தூண்களிலும், இதுவரை சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பெயர்கள், வருடவாரியாக இருந்தன. வருங்காலத்திற்கும் இப்பவே வருட எண்கள் ரெடியாக இருந்தன.



இந்த காம்ப்ளக்ஸை மட்டுமே படமெடுக்க முடிந்தது. டால்பி தியேட்டருக்குள் புகைப்படமெடுக்க தடை. பாதுகாப்பு காரணமாம்.

அரங்கின் வெளித்தளத்தில் சில புகைப்படங்களை கருப்பு வெள்ளையில் வைத்திருந்தார்கள். சில கலைஞர்கள் அவார்ட் வாங்கும் புகைப்படங்கள். ஒரு நீள கண்ணாடியில் கருப்பு வெள்ளையில் ப்ரிண்ட் செய்யப்பட்டு, பின்னணியில் வெள்ளை சிலிக்கான் கண்ணாடி திரை, ஒளியூட்டப்பட்டு இருந்தது. இந்த அமைப்பிற்கு என்ன காரணம் என்றால், அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது. அவை அனைத்தையும் ஒரே மாதிரியாக தெரிவதற்கு, இம்மாதிரி செய்யப்பட்டுள்ளதாக பேட்ரிக் விளக்கினார். சிலிக்கான் கண்ணாடி பின்னணிக்கு காரணம், அதுவே ஆரம்ப சினிமா திரையிடலுக்கு பயன்பட்டது என்பதாகுமாம்.

அரங்கிற்கு வெளியே இருந்த, பாரை பார்த்தோம். உலகின் தலைசிறந்த சரக்குகள் இங்கே கிடைக்குமாம். அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நிகழ்ச்சி ஆரம்பித்தப்பிறகு, சரக்கு கிடைக்காதாம். இந்த பாரில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. இங்கு ஒரு ரியல் ஆஸ்கர் விருது இருக்கிறது. தங்க ஜொலிப்பில் மின்னிக்கொண்டிருந்தது. தொட்டுப்பார்க்க முடியாதபடி, கண்ணாடி பேழைக்குள் இருந்தது அது.

இந்த விருதின் மகத்துவத்தை விவரித்தார் பேட்ரிக். இந்த விருதை விற்க கூடாது என்று கையெழுத்து வாங்கிக்கொண்டே, இந்த விருதை கொடுப்பார்களாம். அப்படியே விற்க வேண்டி வந்தாலும், அதை முதலில் இதை வழங்கும் அமைப்பிற்கு விற்க சம்மதிக்க வேண்டுமாம். இது தங்கம் உள்ளிட்ட ஐந்து உலோகங்களால் செய்யப்பட்டது. இதை கொடுப்பதற்காக கலைஞர்களிடம் இருந்து எவ்வகையிலும் பணம் பெறப்படுவதில்லை. ஒருமுறை ஆஸ்கர் வாங்கிய ஒருவர் அதை ஒரு ஆக்ஸிடெண்டில் உருக்குலைக்க, அதை வாங்கிக்கொண்டு வேறொரு ஆஸ்கர் கொடுத்தார்களாம். இப்படி நிறைய தகவல்கள் கொடுத்தார் பேட்ரிக். கூட வந்தவர்களும் கேள்விகளைக் கேட்டு, சந்தேகங்களை நிவர்த்திசெய்துக்கொண்டார்கள்.

பிறகு, அரங்கின் உள்ளே அழைத்து சென்றார்கள். யப்பா! எவ்வளவு பெரியது? அரங்கின் உயரம் மிக பெரியது. எங்கு பார்த்தாலும் கலையம்சம் செதுக்கப்பட்டு இருந்தது. மேலே உள்ளே டிசைன் அருமையாக இருந்தது. அந்த டிசைனுக்கும் சில காரணங்களை கூறினார். அதில் ஒன்று, ஒலி ஒளி அமைப்பிற்கு தேவையான ஒயர்கள் யார் பார்வைக்கும் படாமல், அதில் மறைக்கப்பட்டு இருக்குமாம்.

பக்கவாட்டில் இருந்த பால்கனிகள், எனக்கு எங்க ஊர் சார்லஸ் தியேட்டரை நினைவுக்கொண்டு வந்தது. கடந்த முறை ஆஸ்கரின் போது, அது போன்ற ஒரு பால்கனி ஒன்றில் இருந்து தான், ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.



தற்சமயம், இந்த அரங்கில் மாலை நேரத்தில் ஒரு நாடக நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாங்கள் சென்ற போது, அதற்கான பொருட்கள் மேடையில் இருந்தன. மேடை, மேலும் கீழும் நகரும்படி லிப்ட் மீது அமைந்து இருக்கிறது.

பிறகு, வெளியே வந்தோம். வெளியில் ஷோகேஸில் இருந்த சில புகைப்படங்களைக் காட்டினார். அவை வெவ்வேறு வருடங்களில், அரங்கின் அலங்காரங்களை காட்டியது. ஒரு வருடம் போல் இன்னொரு வருட அலங்காரம் இருக்காதாம். இந்த அலங்கார வேலைகள், ஆறு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடுமாம். உண்மையிலேயே, சிறப்பான புகைப்படங்களாக இருந்தன அவை.

அங்கு புகைப்படங்கள் எடுக்க முடியாதது, ஒரு பெரும் குறையாக இருந்தது. எங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில், ஆளுக்கொரு புகைப்படம் கொடுத்து வழியனுப்பினார் பேட்ரிக்.

டால்பி தியேட்டருக்கு வரும் வழியில் இருந்த கடைகளில் சின்ன டம்மி ஆஸ்கர் விருதுகள் கிடைக்கின்றன. Best Husband, Best Wife என்று. ஏற்கனவே ஆளுக்கொன்று வாங்கி வைத்திருந்தோம். அதை இந்த அரங்கின் முன்பு நின்று பிடித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஏதோ நம்மால் முடிந்தது!

அரை மணி நேரம் தான் இருந்தாலும், எனக்கு இந்த டால்பி தியேட்டர் விசிட் ரொம்பவும் பிடித்திருந்தது.

.