Saturday, July 6, 2013

சிங்கம் - 2

முன்குறிப்பு - இது ஒரு பக்க சார்புள்ள ஊர்பாசம் கொண்ட விமர்சனம்.



இயக்குனர் ஹரி மேல் எனக்கு ஒரு அபிமானம் உண்டு. ஒரே காரணம், தூத்துக்குடி, திருநெல்வேலியையும் சுற்றுவட்டார கிராமங்களை தமிழ் சினிமாவில் காட்ட இருக்கிற ஒரே இயக்குனர் என்பதால். ஒரு ஊர் பாசம் தான். நாம் சுற்றி வளர்ந்த இடங்களை, ஊரில் இல்லாத போதும், படங்கள் மூலம் பார்க்க வைக்கிறாரே! அதற்கு மேல் வேகமான ஆக்‌ஷன் படங்களிலும், ஊர் பக்கம் இருக்கும் குடும்ப செண்டிமெண்ட்டை சரியாக மிக்ஸ் செய்து கொடுக்கும் அவருடைய ஸ்டைல். அவர் மேடைகளில், டிவிக்களில் கொடுக்கும் பேட்டியை பாருங்கள்! இன்னமும் சினிமா பேச்சு வழக்கு வராமல், நான் ஊர்பக்கம் பார்க்கும் ஒரு ஆள் பேசுவது போல், ஒரு கோர்வை இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்.

அதனால் அவர் எந்த படம் எடுத்தாலும் நான் பார்க்க ரெடியாக இருப்பேன். ஆனால், முதல்முறையாக அவருடைய படம் பார்க்கும் ஆர்வமில்லாமல் போனது இந்த படத்தில் தான். என்ன மோசமான ட்ரெய்லர் மேக்கிங்? எவன்யா அதை பண்ணியது? படத்தில் உள்ள ஹைலைட்ஸைக் காட்டுகிறேன் என்று சம்பந்தமில்லாமல் வெறும்  கத்தல் சீன்களாக போட்டு பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். தவிர, ஹரி முதல்முறையாக வெளிநாடுகளுக்கு சென்று படமெடுத்திருக்கிறார் என்றார்கள். எதுக்கு தேவையில்லாத வேலை என்று நினைத்துக்கொண்டேன்.

தூத்துக்குடிக்கு போய் ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்த படத்தில் பார்க்கலாம் என்று ஆர்வமாக இருந்தவனுக்கு, ரிவ்யூ படித்துவிட்டு செல்லலாம் என்று அறிவுறுத்தியது, ட்ரெய்லர்கள். அதற்கு மேல் அவர்கள் சொன்ன காரணமும் பயமுறுத்தியது. “எப்ப சிங்கம் 2 எடுப்பீங்கள்? என்று ரசிகர்கள் கேட்டார்கள். அதனால், சிங்கம் 2 எடுத்தோம்”. இப்படி ஒரு படத்தின் வெற்றியை வைத்து இன்னொரு வெற்றியை அறுவடை செய்ய நினைத்த படங்கள் எதுவும் உருப்பட்டதில்லை என்பது வரலாறு.

ஆனால், கிடைத்த வெற்றியை மட்டும் நினைத்துக்கொண்டிருக்காமல், யோசித்து திரைக்கதை அமைத்து, அதற்கு தேவையான உழைப்பை கொடுத்தால் வெற்றி பெறலாம் என்பது சிங்கம் 2 சொல்லிக்கொடுக்கும் பாடம். 

சிங்கம் 1 பார்த்துவிட்டு ஏதேனும் முன்முடிவுடன் சென்றால், பெரிதாக கவராது, சிங்கம் 2.  மற்றபடி, போராடிக்காமல் ஆக்‌ஷன், காதல், குடும்ப செண்டிமெண்ட், நகைச்சுவை என்று செல்கிறது சிங்கம் -2. எனக்கு படத்தில் பிடிக்காமல் போனது, இரண்டாம் பகுதியில் சூர்யாவும், வில்லன்களும் கத்தும் காட்டுக்கத்தல்கள். பிறகு, அந்த ஆப்பிரிக்க க்ளைமாக்ஸ்.

சில படங்களை பார்த்தால், கொஞ்சம் கட் செய்து வெளியிட்டால், நன்றாக ஓடும் என்பார்கள். இந்த படத்தில் கொஞ்சம் சவுண்ட் கம்மி செய்து வெளியிட்டால், நன்றாக ஓடும் என்பேன். அப்புறம், படம் முடிந்தவுடம் வரும் பாடலில் ஆடுபவர்கள் யார்? தயாரிப்பாளர்கள் குடும்பமா? என்ன ஆசை இது?

ஆப்பிரிக்க க்ளைமாக்ஸ் பார்த்தால், ஏதோ ப்ளாப் படம் (வில்லு, ஏகன், பில்லா 2, மாற்றான்) பார்க்கும் உணர்வு வருகிறது. மற்றபடி, அந்த காட்சிகளில் ஒரு ஒளிப்பதிவு புதுமை இருந்தது. கேமராக்களை இதுவரை வைக்காத இடங்களில் வந்து படமெடுத்திருக்கிறார்கள். மேலிருந்து விழும் காருக்கு உள்ளே, கார் வந்து மோதும் இடத்தில், சூர்யாவின் கையில், சின்ன ஹெலிகாப்டரில். நான் பார்த்தவரை தமிழ் சினிமாவில் இது முதல்முறை. ஹரி படத்தில் டெக்னிக்கல் புதுமையா? என்று ஆச்சரியப்பட்டு போனேன். ஆனால், இதை பற்றி படம் சம்பந்தப்பட்டவர்கள் உட்பட யாரும் பேசி பார்க்க வில்லை.

மற்ற காட்சிகளில் இருக்கும் புத்திசாலித்தனம், காமெடி சீன்களில் இல்லாவிட்டாலும், கொஞ்சம் மெனக்கெட்டு எடுக்கும் காட்சியமைப்புகள், வசனங்கள் போன்றவற்றால் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஹரி படங்களில் இருக்கும் காமெடி காட்சி மெனக்கெடலுக்கு ஒரு உதாரணம் - வேல் படத்தில் வரும் டீக்கடை காமெடியை சொல்லலாம். காக்கா எச்சம், டீக்கடை பற்றியெரிய வைக்கும் காட்சியை விஷுவலாக, காமெடிக்காட்சிதானே என்று நினைக்காமல் மெனக்கெட்டு எடுத்திருப்பார்கள். இதிலும் அப்படி, சந்தானம் அனுஷ்காவும் ஆடும் காதல் வந்தாலே பாடலையும், விஷ்வரூபம் ஸ்டைலில் சந்தானம் சண்டையிடும் காட்சியையும் சொல்லலாம். முதல் காட்சியில் கிராபிக்ஸும் , இரண்டாம் காட்சியில் எடிட்டிங்கும் நன்றாக இருந்தது.

மொத்தத்தில், இந்த படம் பார்த்ததில், கலவரம் உட்பட ஊரில் பார்த்த, ஊரை பார்த்த திருப்தி எனக்கு. மனைவிக்கு தலைவலி என்றாள். ஆனால், அதற்கு படம் காரணமில்லை என்றால். ஆனாலும், உண்மை நிலவரம் தெரியவில்லை.

---

இந்த ரிவ்யூ பார்த்து வயிறு குலுங்கி சிரித்தேன். நீங்களும் பாருங்க.




.