Tuesday, March 1, 2016

இஸ்லாமிய ஆச்சாரம்

சென்றவருடம், ஒரு ப்ராஜக்ட்டுக்காக இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு தனி மனிதனின் எண்ணங்களையே, ஒரு சமூகத்தின் பிரதிப்பலிப்பாக எடுத்துக்  கொள்ள முடியாது. அதனால், அப்படி எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜஸ்ட் எ எண்ண  பகிர்தல்.
நண்பர் தற்சமயம் அமெரிக்காவிலும், இதற்கு முன்பு சில ஆண்டுகள் லண்டனிலும் இருந்திருக்கிறார்.
பெரும்பாலான இஸ்லாமியர்கள் போல, அவருக்கும்  பிஜேபியும், மோடியும்  பிடிக்காது. பிடித்தால்  தான் ஆச்சர்யப்பட வேண்டும். அதில் ஒன்றும் தப்பில்லை. அவருடைய பேஸ்புக்கில் இரண்டு விதமான பகிர்தல் தான் இருக்கும். ஒன்று, மோடியை, பிஜேபியை, இந்திய அரசை மட்டம் தட்டும் செய்திகள். மற்றொன்று, இஸ்லாமின் மேன்மையை போற்றும் கட்டுரைகள்.
நான் ஃபேஸ்புக்கில் ஒரு சுற்று பார்வையை விடும் போது, மோடியை, பிஜேபியைக் காட்டமாக விமர்சிக்கும் செய்தியைக் கடக்கும் போது, அது யாருடைய பகிர்தல் என்பதை கண் காணாமலே, மூளை சொல்லி விடும். என்னுடன் நட்பில் இருக்கும் சில இஸ்லாமிய நண்பர்களாக தான் இருக்கும். கவனிக்க, என்னுடன் நட்பில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களும்  அவ்வாறு பதிவதில்லை.
மூளை கணித்ததை மீறி, அம்மாதிரி பதிவு வேறேனும் ஒருவர் பகிர்ந்திருந்தால், ஒரு ஆச்சர்யத்துடன் அதை வாசித்து விட்டு கடப்பேன். இல்லாவிட்டால், இது சகஜம்தானே என்று அப்படியே போய் விடுவேன். இஸ்லாமியர் அல்லாத சில முற்போக்குகளுக்கும்,  இந்த விதியைப் பொருத்துவது உண்டு.
எந்தவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு. நான் எனது பிஜேபி அபிமான  நண்பர்களுடன் இந்துத்வா அரசியலையும்,  மோடியையும் விமர்சித்து விவாதம் செய்வதுண்டு. ஆனால், இந்த நண்பர் போல வெறும் மத ரீதியாக மட்டுமே பிஜேபி எதிர்ப்பைக் காட்டுபவர்களைக் காணும் போது, இவருக்கும் எனது மற்ற இந்து மத அரசியல் அபிமான நண்பர்களுக்கும் எந்த வேறுபாடும் தெரிவதில்லை. எனது பிஜேபி நண்பர்கள், அவர்களது தரப்புக்காக என்னுடன் விவாதித்து மன்றாடி கை விட்டு விடுவார்கள். ஆனால், இம்மாதிரி இஸ்லாமிய நண்பர்களிடம் பேசும் போது நினைப்பதுண்டு. அவர்களால் முடியாததை இவர்கள் முடித்து, நம்மையும் பிஜேபி ஆதரவு கூடாரத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்று.
இந்த மதரீதியான அரசியல் கொள்கையைத் தவிர, மற்றபடி நண்பர் மிகவும் பண்புள்ளவர். இஸ்லாம் கோட்பாட்டின்படி வாழ வேண்டும் என்று நினைப்பவர். தான் அப்படித்தான் வாழ்வதாக நினைத்து வாழ்பவர். அதில் சில கொள்கைகள் என்னை உறுத்தினாலும், மதம் மீதான அவரது மன உறுதி ஆச்சர்யப்படுத்தும்.
அதில் முக்கியமானது - ஹலால் உணவு என்று தான் நினைப்பதை மட்டுமே உண்பது. சில கடைகளில் ஹலால் என்று சொன்னாலும், அவர்கள் எங்கே வாங்குகிறார்கள் என்பதைக் கேட்டும் உறுதி செய்து கொள்வார். ஹோட்டல்காரர்கள் வாங்கும் ஹோல்சேல் கறிக்கடைகளில் எங்கு ஒரிஜினல் ஹலால் கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும். அதனால், வெறுமனே ஹலால் என்று சொல்லி, அவரை சாப்பிட வைத்துவிட முடியாது.
சில வாரயிறுதிகளில், பக்கத்து ஊருக்கு சென்று ஒரு பண்ணையில் அவரே ஆட்டை அடித்து கறி வாங்கி வருவார். ஹலால் முறையில் அறுக்கப்படும் ஆடுகள் மீது கொள்ளை பிரியம் கொண்டவர். மந்திரம் ஓதியவுடன் ஆடுகள் வெட்டுவதற்கு தானாகவே தலையைக் கொடுக்கும் என்று ஒரு தகவல் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். (இதையே, என் வீட்டில் இது போல் யாராவது சொல்லி இருந்தால், மூட நம்பிக்கை என்றிருப்பேன்!!) அதனால், ஹலால் விஷயத்தில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்.
இந்த ஹலால் பிரியம், மாமிச உணவில் மட்டுமல்லாமல், பிற அனைத்திலும் பார்ப்பார். உதாரணமாக, காபி, டீ, சாலட், பன்னீர், முட்டை, மாத்திரை, மருந்து, சோப்பு, ஷாம்பூ என நாம் நினைத்துப் பார்த்திராத அனைத்தும் இதில் அடங்கும். 'என்னது, ஷாம்பூவா?' என வாயைப் பிளந்தால், 'ஆமாங்க, காஸ்கோ கிர்க்லேண்ட் ஷாம்பூ மட்டும் தாங்க ஹலால். மத்ததெல்லாத்திலேயும் பன்றி கொழுப்பு இருக்கு' என்று சொல்லி, நாம் பன்றிக் கொழுப்பைத் தேய்த்து குளிப்பதாக, ஒரு கற்பனையை நம் மனதில் தருவித்து சென்று விடுவார்.
மாத்திரை, மருந்து கூட பொதுவாக விற்பதை வாங்க மாட்டார். எது ஹலால், எது ஹலால் இல்லை எனச் சொல்லும் ஒரு இணையத் தளத்தில் பார்த்து தெளிவான பிறகே வாங்குவார். அந்த தளத்தில் இவர் தேடுவது இல்லை என்றால், அந்த தளத்தை நடத்துபவருக்கு போன் போடுவார். அந்த தளத்தை நடத்துபவர், கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு பாகிஸ்தானியர். அவர் அவருடைய லேபில் ஒரு ஆராய்ச்சி நடத்தி முடிவைத் தெரிவிப்பார். அதென்ன ஆராய்ச்சியோ?
எனக்கு தெரிந்த இந்து பிராமண மற்றும் இதர சைவ உணவு மட்டுமே உண்ணும் பிரிவைச் சேர்ந்த நண்பர்களை நினைத்து பார்ப்பதுண்டு. அவர்களில் வேகன் உண்டு, வெஜ்ஜிடேரியன் உண்டு, எக்கிடேரியன் உண்டு, சிக்கிடேரியன், பிஷ்ஷிடேரியன் எல்லாம் உண்டு. ஆனால், நண்பர் பார்க்கும்  ஹலால் நுணுக்கம் யாருக்கும், எதிலும் வராது. அவருடைய ஹலால் விதி இதுதான். ஒரு உணவோ, பொருளோ ஹலால் என்றால் பயன்படுத்து. இல்லாவிட்டால், பயன்படுத்தாதே. வேறு வழியே இல்லாவிட்டால் பயன்படுத்து. எனக்கு தெரிந்து யாரும்  பார்க்காத  ஆச்சாரத்தை, இவர் கடைப்பிடிக்கிறார்.
தவிர, எங்கள் வீட்டில் செய்த பலகாரம் ஏதேனும் எடுத்து சென்று கொடுத்தால், சாமிக்கு  படைக்காதது  என்று உறுதி மொழி கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வார். அதே சமயம், இது போன்ற எந்த சந்தர்ப்பத்திலும் மிகவும் பண்பாக பேசி நடந்து கொள்வார்.
நம்மூரில் இஸ்லாமியர்களும், பிற முற்போக்காளர்களும் அமெரிக்காவை இஸ்லாமிய எதிர்ப்பு நாடாக எண்ணி, சமயம் கிடைக்கும் போதெல்லாம் தாக்கி வருவார்கள். ஆனால், நண்பருக்கு இந்தியா, பாகிஸ்தான், அரபு நாடுகளை விட அமெரிக்கா தான் இஸ்லாமியர்கள் வாழ உகந்த நாடு. மின்னியாபோலிஸில் இஸ்லாமிய முறைப்படி பாடம் நடத்தும் இஸ்லாமிய பள்ளி இருப்பது அவரை கவர்ந்த விஷயங்களில் ஒன்று.
இஸ்லாமிய கோட்பாடுகளின் படியே வாழ வேண்டும். தான் அவ்வாறு மட்டுமே வாழும் உண்மையான இஸ்லாமியன் என்ற பெருமிதம் எப்போதும் அவரிடம் உண்டு. இதனால், சமயங்களில் மற்ற இஸ்லாமியரையும் "அவர்களெல்லாம் இஸ்லாமியரே அல்ல" என்று தயங்காமல் விமர்சித்து விட்டு சென்று விடுவார்.
ஒரு முறை இப்படி தான், ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையான முஸ்லீமே இல்லை என்றார். ஏனென்றால், இஸ்லாத்தில் சினிமா, இசை போன்றவற்றுக்கு இடமே இல்லை. இவர் என்னவென்றால் அதிலே முழ்கி கிடக்கிறார் என்றார். ரஹ்மான் மட்டுமல்ல, நாகூர் ஹனிபா, நுஸ்ரத் பதே அலிகான் என அனைவரும் அப்படியே என்றார். நானும் அன்று சும்மா இல்லாமல் இப்படி கேட்டேன். (அப்போது நாங்கள் இருவரும் ஒரு அமெரிக்க நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்) இஸ்லாத்தில் கடன் தொழிலும் ஆகாது தான். அந்த தொழிலில் ஈடுபடும் நிறுவனம் தரும் சம்பளம் ஒகேவா? என்று. கேட்டிருக்கக் கூடாது, கேட்டு விட்டேன். அதற்கு அவர், நாம் நேரடியாக நிதி நிறுவனத்திடம் சம்பளம் வாங்கவில்லை. மென்பொருள் சேவை நிறுவனத்திடம் தான் சம்பளம் பெறுகிறோம் என்று ஒரு லாஜிக்  சொன்னார். வேறு வழியில்லா விட்டால் என்ன செய்வது? என்றும் ஆறுதல் படுத்திக் கொண்டார்.
அது உண்மையும் கூட. அவரால் முடிந்த அளவு முயன்றிடுவார். என்ன, இந்த நம்பிக்கை இல்லாதவரைப் பழித்திடுவார். இசை ஹராம் என்று ரஹ்மானைப் பழிப்பவர், தனது குழந்தை யூட்யூப்பில் ரைம்ஸ் கேட்டால், அழாமால் இருக்கிறதென்பதால்  அதை அனுமதிப்பார்.
போலவே, மசூதிக்கு சென்றுவிட்டு, வெளியே வந்தவுடன் மாடர்ன் உடை அணியும் இங்குள்ள பெண்களை, அவர்கள் இஸ்லாமிய பெண்களே அல்ல என்று விமர்சிப்பார்.
அதற்காக, எல்லா விஷயங்களிலும் இப்படித்தான் என்று சொல்ல முடியாது. வட்டி கூடாது என்பதற்காக, ஒருநாள் இவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று, சேமிப்பு கணக்கில் தனக்கு கொடுத்த வட்டியைத் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு அவர்கள், அப்படி செய்வதற்கு ஏதும் வழி இல்லை என்றிருக்கிறார்கள். வட்டி கொஞ்சம் அதிகப்படுத்திக்கொடுக்க மாட்டார்களா என்று நினைக்கும் என்னிடம் வந்து, இவர்கள் கொடுத்த வட்டியை, தான் இல்லாதவர்களுக்கு அளித்துவிடுவேன் என்றார். (குறிப்பு - அமெரிக்க வங்கிகளில், செக்கிங் அக்கவுண்ட்டில் அரை பர்செண்ட் கூட வட்டி கொடுக்க மாட்டார்கள்.) இந்த காரணத்திற்காகவே, வங்கியில் கடன் வாங்கி புதுக்காரோ, வீடோ வாங்க மாட்டேன் என்பார்.
நேரம் தவறாமல், தொழுகை செய்வார். வாரம் தவறாமல், மசூதி சென்று விடுவார். இஸ்லாமிய நண்பர்களின் சர்கிளில் வாரயிறுதியைக் கழிப்பார். நோன்பு காலங்களில் எக்ஸ்ட்ரா நாட்களுக்கு நோன்பு இருப்பார்.
இந்த காலத்தில் இப்படியெல்லாம் வாழ முடியுமா? என்று நினைத்திருக்கிறேன். இவர் வாழுகிறார். வாழ முயலுகிறார். இஸ்லாம் பற்றிய பாசிடிவ், நெகட்டிவ் கொண்ட பல புரிதல்களை அளித்து இருக்கிறார். ஒரு மத கோட்பாட்டை, இந்தளவுக்கு வேறு எந்த மதத்தினரும் பின்பற்றுகிறார்களா என்று தெரியவில்லை. அதுதான் பிரச்சினையும் கூட என்று நினைக்கிறேன்.
எனிவே, நல்ல மனிதர். எங்களை வீட்டிற்கு அழைத்து பிரியாணி போட்டிருக்கிறார். ஆட்டு குடல் குழம்புடன். அதற்காகவேனினும், அவரை மறக்க மாட்டேன். தனிப்பட்ட நட்பில் பேசியவற்றை, இப்படி பதியலாமா என்னும் மன குழப்பம், பல நாட்களுக்கு இப்பதிவை ஒத்திப்போட செய்தது. அந்த நட்பும், பழக்கமும் மனப்பதிவாகவே இருந்து அழிந்து விட கூடாதென்று பதிந்துவிட்டேன்.
.