Friday, May 30, 2008

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... சண்டே காணத்தவறாதீர்கள்!

இந்த வாரம் ஞாயிறு உங்கள் சன் டிவியில் ஒரு சூப்பர் படம் போடப்போறாங்க. இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்களுக்கும், DVD கிடைக்காதவர்களும் பார்க்க நல்ல சந்தர்ப்பம். இப்பவே வார இறுதி வேலைகளை பிளான் பண்ணிகோங்க.அப்படி என்ன படம்னு கேக்குறீங்களா? அதாங்க நம்ம தமிழ் திரையுலக சுனாமி, முன்னாள் திமுக, அதிமுக பிரச்சார பீரங்கி, முன்னாள் தமிழக அரசு சிறுசேமிப்பு துறை தலைவர், லட்சிய திமுக பொது செயலாளர், விஜய டி. ராஜேந்தரின் இயக்கத்தில், நடிப்பில், இசையில் வெளியான "வீராச்சாமி".
உண்மையிலேயே இது ஒரு நல்ல முழுநீள காமெடி படம். ஆனா அவரு படத்த சீரியஸா எடுத்து இருப்பாரு. அதிலயும், கிளைமாக்ஸ்ல அவரு இறந்து போற காட்சில திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் சிரிப்பால் அரங்குகள் குலுங்கியது, 75 ஆண்டு கால தமிழ் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. பாண்டி பஜார் சிடி வியாபாரிகள் இந்த படம் அளவுக்கு இதுவரை எந்த படமும் வியாபாரம் ஆனதில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

ஸோ, குடும்பத்தோட என்ஜாய் பண்ண தயாராகுங்க. பார்த்துட்டு திங்கள்கிழமை வந்து உங்க அனுபவங்களை வலையில் பகிர்ந்து கொள்ளுங்க. ஒரு எச்சரிக்கை, ஹீரோ அறிமுகக்காட்சி பார்த்து வீட்டுல உள்ள குழந்தைகள் பயந்துட போகுது.

Wednesday, May 28, 2008

பாடப்புத்தகத்தில் ரஜினி...

நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது படிக்காம ரஜினி படம் பாத்தா வீட்டுல திட்டுவாங்க... இப்ப என்னனா பாட புக்லேயே ரஜினி படம் வந்துருச்சி.

ஆமாங்க... CBSE பாடத்திட்டத்தின்படியான ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தில் ரஜினியின் கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார் வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

கீழ பாருங்க...
தலைவரு புகழ் கன்னாபின்னான்னுல்லா பரவுது...
நன்றி: IndiaGlitz

புகைப்பிடிக்கும் ஆண் என்றால் லிப்ட்...

மின்னஞ்சலில் வந்த ஒரு வீடியோ விளம்பரம் இது.

ஆள் நடமாட்டமோ, வாகன ஓட்டங்களோ இல்லாத ஹைவே.

ஒரு ஆண் சாலை ஓரம் அமர்ந்திருக்கிறான். ஏதாவது வண்டி வருமா? லிப்ட் கிடைக்குமா? என்றவாறு சாலையே பார்த்து கொண்டிருக்கிறான். தூரத்தில் ஒரு கார் வருகிறது.

எழுந்து காரை நோக்கி கையை காட்டுகிறான். காரில் வருவது ஒரு பெண். அவள் காரில் இருந்துகொண்டே இவனை பார்க்கிறாள். பின் காரை நிறுத்தாமல் இவனை கடந்து செல்கிறாள்.

கார் நிற்காமல் சென்றது கண்ட நம்ம ஆள், பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்க ஆரம்பிக்கிறான். இதை, கடந்து சென்ற பெண் காரில் இருந்தவாறே கார் கண்ணாடி வழியே பார்க்கிறாள். அவன் புகைப்பதை கண்ட அவள், காரை நிறுத்துகிறாள்.

பின், காரை பின்னோக்கி அவனருகே கொண்டு வருகிறாள். நிறுத்திய காரினுள் அவனை ஏற சொல்கிறாள். அவனும் ஏறுகிறான். கார் செல்கிறது.

இதற்கு பிறகு திரையில் ஆங்கிலத்தில் ஒரு லைன்.
"புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு லிப்ட் கொடுக்க பெண்கள் பயப்படுவதில்லை."

அதன் கீழே இன்னொரு லைன்.
"புகை பிடித்தல் ஆண்மை குறைவை ஏற்படுத்தும்"

அவ்வளவு தான் விளம்பரம். சும்மா அட்டகாசமா இல்லை?

இதை வெளியிட்டது ஒரு இந்திய அரசு நிறுவனம். மிகவும் தரமாக தயாரிக்க பட்டுள்ள இந்த விளம்பரம், சொல்ல வந்த விஷயத்தை பளிச்சென்று சொல்கிறது.

அன்புமணி திரை பிரபலங்களுக்கு வேண்டுகோள் வைப்பதை விட, இளைஞர்களை நேரடியாக அடையும் இம்மாதிரியான விளம்பரங்களை ஊடகங்கள் எங்கும் ஒளிபரப்ப செய்யலாம்.

சைக்கிள் வாங்க போறேன்... என்ன சொல்றீங்க?

என்னங்க பண்றது? பெட்ரோல் விலை ஏறி ஏறி இப்ப திரும்பவும் ஏத்த போறாங்களாம். ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல... பெட்ரோல் அமைச்சகம் இப்ப லிட்டருக்கு பதினாறு ரூபா ஏத்த பரிந்துரை செஞ்சு இருக்காங்களாம். நினைச்சா வயித்த கலக்குது... இந்திய ஆயில் நிறுவனங்கள் பங்குகளுக்கு பண்ற பெட்ரோல் சப்ளையும் கம்மி பண்ணி இருக்காங்களாம். அதனால பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். பெட்ரோல் நஷ்டத்தை ஈடுகட்ட வரி விதிக்கலாமானு கூட யோசிக்கிறாங்கலாம். ஒண்ணு, நாம பெட்ரோல அதிக காசு கொடுத்து வாங்கணும்... இல்ல சம்பளத்துல இருந்து வாங்காத பெட்ரோலுக்கு அவங்களே காச எடுத்துக்குவாங்களாம்... என்ன பண்றது? புலம்ப தான் முடியும்... :-)

நான் கடந்த ரெண்டு மாசமா ஒரு சைக்கிள் வாங்கலாம்ன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். அதுல பல நன்மைகள்...

1) பெட்ரோல் தேவையில்லை
2) உடலுக்கு நல்ல எக்சசைஸ்
3) சுற்றுசுழலுக்கும் நல்லது

நீங்க என்ன நினைக்கறீங்க?

Monday, May 26, 2008

குற்ற உணர்ச்சியில்லாத குற்றம்

போன வாரம் மதுரைக்கு ஒரு கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் ஓசுரிலிருந்து மதுரைக்கு சேலம் வழியாக பேருந்து மாறி மாறி சென்றேன். ராத்திரி எந்நேரமும் எந்த ஊரிலிருந்தும் எந்த ஊருக்கும் செல்லலாம் என்ற பெருமை நமது போக்குவரத்துக்கழகத்திற்கு இருந்தாலும், அளவு கடந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தால் (!) நமது பேருந்துகளில் சராசரியாக மூன்று திரைப்படங்கள் பார்க்க வேண்டிய தொல்லை (சிலருக்கு வசதி) உள்ளது.

நான் சென்ற பேருந்துகளில் போடப்பட்ட படங்கள், அறை எண் 305 இல் கடவுள், நேபாளி, அரசாங்கம். நான் சென்ற இரண்டு பேருந்துகளுமே அரசு பேருந்துகள். தமிழ்நாட்டில் திருட்டு சிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று அனைவருமே அறிந்தாலும் எந்தவிதமான பயமும் இல்லாமல் கவலையும் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்த மக்களும், சட்டத்தை இயற்றிய அரசின் ஊழியர்களும் படத்தை பார்த்து கொண்டு வந்தார்கள்.

இதில் கடவுள் படத்தில் திருட்டு விசிடி பார்ப்பவர்களுக்கு எதிராக காமெடி பிரச்சாரம் வேறு. அந்த சீனை திருட்டு விசிடில பார்க்கும் போதும் யாருக்கும் குற்ற உணர்ச்சி இல்லை. ஏன்?


அடிப்படையில் இது ஒரு குற்றமா என்பதே ஒரு குழப்பம். திரைப்படத்துறையினர், தங்களுக்கு சேரவேண்டிய பணம் வராததால் இதை குற்றம் என்கிறார்கள். மக்கள் இதை குற்றமாக கருதாததற்கு, திரை அரங்குகளில் அதிக கட்டணம் என்று சிலர் வாதம் செய்கிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சிடிக்களில் திரையரங்குகளில் எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல், ஒரிஜினல் சிடிக்களில் இருந்து காப்பி செய்யப்பட்டதும் உள்ளது. ஆக, ஒரிஜினல் சிடி பார்ப்பது தவறு இல்லை. அதில் இருந்து காப்பி செய்யப்பட்ட சிடி பார்ப்பது தவறு. ஆனால் இந்த சட்ட திட்டம் ஆடியோ காசெட்டுகளுக்கு இல்லையா? முன்பு, பல படங்களின் பாடல்களை நமக்கு காசெட்டில் பதிவு செய்து தரும் தொழிலை பலர் செய்து வந்து உள்ளார்கள். இன்று, சிடிகளின் வருகையால், இவ்வகையான தொழில் குறைந்து இருந்தாலும், இன்றும், இருப்பதாகவே நினைக்கிறேன். அதே சமயம், திருட்டு ஆடியோ சிடிகளும், தாராளமாக கிடைக்கிறது. இதற்க்கு திருட்டு திரைப்பட சிடி அளவுக்கு எதிர்ப்பில்லை.


ஆனாலும் இந்த தகவல் தொழில்நுட்ப காலத்தில் காப்பிரைட், உரிமம் போன்றவற்றிற்கு மதிப்பு கொடுப்பது அவசியம். உரிமம் பெறாத படங்களை பார்ப்பது தவறு என்று நமது சட்டம் சொல்லியிருப்பதால், இவ்வாறு படங்களை பார்க்க நேரும்போது, மக்களுக்கு தன்னிச்சையாக குற்ற உணர்வு ஏற்பட வேண்டும். ஆனால், யாருக்கும் இவ்வாறு தோன்றுவதாக தெரியவில்லை. இதற்கு, நாம் சார்ந்த சூழலே காரணம் என்று நினைக்கிறேன்.

சந்திரமுகி வெற்றி விழாவின் போது, கலைஞர் "நான் எந்த விழாவிற்கு சென்றாலும், அதை பற்றி அறிந்து கொண்டே செல்வேன். இப்போது சந்திரமுகி படத்தை பார்த்து விட்டே வந்துள்ளேன். எப்படி பார்த்தேன் என்று கேட்க கூடாது" என்று நகைச்சுவையாக கூறினார். தலைவர் ஏன் அப்படி சொன்னார்? எப்படி பார்த்தார்? என்றெல்லாம் தெரிய வில்லை. அவர் திரையரங்கு சென்று பார்த்திருந்தால் செய்தி தாளில் வந்திருக்கும். ஒரிஜினல் சிடிக்கு வெளிநாட்டில் தான் அனுமதி. தமிழ்நாட்டில் இல்லை. எப்படியோ?


அதேபோல், போன வருடம் தீபாவளிக்கு, சன் டிவியில் கில்லி படம் ஒளிபரப்புவதாக இருந்தார்கள். கலைஞர் டிவியில் அரசு விருது வழங்கும் விழா ஒளிபரப்புவதாக இருந்தார்கள். கடைசி நேரத்தில் சன் டிவியில் அரசு விழாவை ஒளிபரப்பியதால், கலைஞர் டிவியில் தாங்கள் உரிமம் பெறாத கில்லி படத்தை சிறிது நேரம் (சன் டிவி அரசு விழாவை நிறுத்தும் வரை) ஒளிபரப்பினார்கள். இதுவும் திருட்டு விசிடியில் படம் பார்ப்பது போன்றது தான்.

இது போல், அரசு திருட்டு விசிடிக்கு எதிராக நிலையாக இல்லாமல் இருப்பதே மக்களின் இந்த மனநிலைக்கு காரணம் என்று கருதுகிறேன். எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக தோன்றுகிறது. உதாரணத்திற்கு, சந்திரமுகி வெளியானபோது அதன் சிடிக்கு எதிராக நடவடிக்கைகள் வேகமாகவும், கடுமையாகவும் இருந்தது. இப்போது, உதயநிதி ஸ்டாலினின் குருவி படத்தின் சிடிக்கு எதிராகவும் போலீசாரின் நடவடிக்கைகள் அதிகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றது. அதே நேரம், விஜயகாந்தின் அரசாங்கம் படத்தின் சிடி? நாளையே, கமல் கலைஞரை சந்திப்பார். தசாவதாரம் சிடிக்கு பயங்கர கெடுபிடியாக இருக்கும். இதுபோன்ற, நிலையான, பொதுவான நடவடிக்கைகள் இல்லாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

இதற்கு தீர்வு, சிடிக்களை ஒழுங்கான முறையில் தயாரிப்பாளரின் அனுமதியுடன், உரிமம் வழங்கி படம் வெளியான சில நாட்களில் உள்ளூரில் அனுமதிப்பது என்பது என்னுடைய கருத்து. இதன் மூலம் திரையரங்குகள் சிறிது பாதிப்பு அடைந்தாலும், திரையரங்கு சென்று பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் குறையாது. இந்த பாதிப்பை திருட்டு விசிடிக்களால் திரையரங்குகள் முன்னமே அடைந்து விட்டார்கள். திரையரங்கு சென்று படம் பார்க்கும் அனுபவம் வேறு. அதை எந்த தொழில்நுட்பத்தினாலும் வீட்டினுள் கொண்டு வர இயலாது.

முன்பு கேபிள் வந்த போது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சாட்டிலைட் சானல் வந்தபோது எதிர்ப்பு கிளம்பியது. இப்பொழுது, டிடிஹைச் டிவிக்கும் எதிர்ப்பு. மக்களுக்கு வசதி தரும் எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் எதிர்ப்பு அதிக நாள் இருக்காது. தமிழ்நாட்டில் விசிடி என்று முறைப்படுத்த படுமோ? "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசனில் விசிடி வழங்குவோம்"ன்னு ஏதோவொரு கட்சி வாக்குறுதி தரும் நாள் கூட வரலாம்.

Wednesday, May 7, 2008

தயங்காம பயப்படாம பண உதவி செய்ய ஒரு வழி...

ஓரளவுக்கு பணம் இருக்குற எல்லோருக்குமே சிறு அளவிலாவது மத்தவங்களுக்கு உதவ மனசில ஆசை இருக்கும். ஆனா அதுக்கு பல விஷயங்கள் இடைஞ்சலா இருக்கும்.


உதவனும்னு நினைக்கும் போதோ அல்லது உதவிக்கு யாரவது வந்து நிற்கும் போதோ, நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். பணம் இருக்கும் போது யாருக்கு உதவுவது என்று தெரியாமல் இருக்கும். கஷ்ட படுபவர்களுக்கு தானம் செய்யலாம்ன்னு நினைக்கும் போதே, நாம் அவர்களை அந்நிலையில் இருப்பதற்கே உக்குவிக்குறோமோ என்றோ, அவர்கள் உண்மையிலேயே கஷ்டபடுகிறார்களோ என்றோ, நாம் ஏமாற்றபடுகிறோமோ என்றோ பலவித எண்ணங்கள் வரும்.

தைரியமாக இணையம் மூலமாக, உண்மையிலேயே கஷ்டப்படும் முதியோர்களுக்கு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு உதவ ஒரு வழி உள்ளது. அது தான் www.giveindia.org.

இவர்கள் இந்தியாவில் உள்ள பலவிதமான சேவை மையங்களை கண்டறிந்து, அவர்களின் சேவை வழிமுறைகளையும் நிர்வாகங்களையும் ஆராய்ந்து, அவர்களுக்கு இணையம் மூலமாக உதவ வழி செய்துள்ளார்கள். முக்கியமாக நாம் உதவியாக கொடுக்கும் பணம் எவ்வாறு செலவிட பட்டுள்ளது, அதனால் யார் பயனடைந்து உள்ளார்கள் என்பதை சில நாட்கள் கழித்து நமக்கு புகைப்படத்துடன் கூடிய ஒரு PDF பைலை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி தெரியப்படுத்துகிறார்கள்.

இது பற்றிய மேலும் பல தகவல்களை அந்த தளத்தில் காணலாம்.

வருடத்தில் சில நாட்கள் நாமே நேரடியாக இவ்வாறு உதவும் மையங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களுடன் பேசி, உதவிகளை செய்யலாம். அவ்வாறு செய்ய இயலாதவர்களுக்கு இந்த தளம் உண்மையிலேயே உபயோகமாக இருக்கும். நேரில் சென்று ஆறுதல் கூறுகிறேன் என்று, அவர்களை மேலும் பரிதாபத்திற்க்கு உள்ளாக்குவது வேண்டாம் என்று நினைப்பவர்களும் இந்த தளம் மூலம் உதவிகளை செய்யலாம்.