Friday, July 31, 2009

”கன்சல்டன்சில இருந்து பேசுறோம்”

ட்ரிங் ட்ரிங்...

“ஹலோ”

“கிருஷ்ணனா?”

“ஆமாம். கிருஷ்ணன் தான் பேசுறேன். நீங்க?”

“நாங்க ப்ரைட் கன்சல்டன்சில இருந்து பேசுறோம்.”

“சொல்லுங்க”

“நீங்க வேறு வேலை தேடுவதாக, நாக்ரி தளம் மூலம் தெரிந்து கொண்டோம். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு ஒன்று எங்களுடன் உள்ளது. உங்களுக்கு இதில் ஆர்வமுள்ளதா?”

“ஆமாம். ஒரு நிமிஷம். இடத்தில் இருந்து வெளியே வந்திடுறேன். ஆஆங்.... சொல்லுங்க”

“இது ஒரு முன்னணி பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். உங்களுக்கு இந்த வேலையில் எத்தனை ஆண்டு அனுபவம் உள்ளது?”

“ஆறு வருஷம்”

“உங்க தொழில்நுட்ப அனுபவங்களை பத்தி சொல்லுங்க?”

“நான் கடந்த ஆறு வருடங்களாக இணைய தொழில்நுட்பத்தில் வேலைப் பார்த்துவருகிறேன். தற்போது தொழில்நுட்ப அணித்தலைவராக இருக்கிறேன்.”

“உங்கள் வருடாந்திர சம்பளம்?”

“எட்டு லட்சம்”

“எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கிறீர்கள்?”

“பத்து லட்சம்”

“இந்த நேரத்தில் இது அதிகம். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.”

“சரி.”

“இந்த வேலை கிடைத்தால், எவ்வளவு நாட்களில் சேர முடியும்”

“ஒரு மாதம். என்னிடம் சில கேள்விகள் உள்ளது.”

”கேளுங்க”

“நான் வெளிநாட்டு பணியை எதிர்ப்பார்த்து இருக்கிறேன். அதற்கு வாய்ப்புள்ளதா?”

“கண்டிப்பா. நீங்கள் சேர்ந்த சில நாட்களில் வெளிநாடு அனுப்பப்படுவீர்கள்.”

“அதேப்போல், இனி நான் அதிகமாக மேலாண்மை பொறுப்பில் ஈடுபட எண்ணியுள்ளேன். பணி உயர்வு வாய்ப்பு எப்படி?”

“உங்கள் தகுதியை பார்க்கும் போது, நீங்கள் அதற்கு தகுதி உள்ளதாக தோன்றுகிறது. பிரகாசமான வாய்ப்பு உள்ளது”

“பணி சூழ்நிலை எப்படி? வேலை நேரம் என்ன? அதிக நேரம் வேலை பார்ப்பதில் தொந்தரவில்லை. ஆனால், அதுவே தொடர்ச்சியாக இருக்க கூடாதுல்ல. இங்க பார்த்தீங்க, நைட் பத்து மணிவரை இருக்க வேண்டி இருக்கிறது.”

“பணி சூழ்நிலை சிறந்த நிறுவனம் இது. பணி நேரம் இங்கு சிறப்பா நிர்வாகம் செய்யப்படுகிறது.”

“சரி சரி”

“வேறேதும் கேள்வி உள்ளதா?”

“இல்லை.”

“நேர்காணலுக்கு இந்த சனிக்கிழமை வரமுடியுமா?”

“ம்ம்ம்.... சரி. வருகிறேன். எங்கு?”

“டைடல் பார்க்.... ஏபிசி கம்பெனி”

“போன வைய்யா! நான் அங்கத்தான் வேலை பார்க்குறேன்.”

டொக்.

நீதி : என்ன வாங்குறோம்ன்னு தெரிஞ்சு, பேரம் பேசுங்க.

Thursday, July 30, 2009

புதுக்கவிதை பற்றி சுஜாதா

கணையாழியின் கடைசி பக்கங்களில் அக்டோபர் 1972 இல் வந்தது.

புதுக்கவிதை பற்றி சற்றுப் பேசலாம். புதுக் கவிதை தற்போது ஒரு rash போல் நம்மிடம் பரவி இருக்கிறது. “அடிக்கடி கட்சிமாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கைச் சின்னமாய்க் கொடுத்தால் என்ன” என்கிற வாக்கியத்தை ஐந்தாகப் பிரித்து கவிதையாகப் பதிப்பித்திருந்தார்கள்.

என்னய்யா விளையாடுகிறீர்களா?

*

நான் புதுக் கவிதையை எதிர்ப்பவனில்லை. யாப்பு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவனில்லை. ஆனால் இந்தப் புதுக் கவிஞர்கள் எல்லோருக்கும் அமிதசாகரர் இயற்றிய யாப்பருங் கலக்காரிகையில் இரண்டு மூன்று பாடங்கள் நடத்த எனக்கு விருப்பமாக இருக்கிறது. மீறுவதற்கு முன் சில தளைகளை... சந்தத்தை.

”பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறமெழ உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிவிட்டேன்
என் அப்பா...”

போன்ற அபாரமான வரிகளின் மரபை!

*

சந்தம் என்பது மனித வாழ்க்கையில் அடிப்படையான ஒரு விஷயம். அது நம் இதயத் துடிப்பில் இருக்கிறது. இயற்கையின் மாறுதல்களில் நம் சங்கீதத்தில்... யாவற்றிலும் வியாபித்திருக்கிறது.

ஞானக்கூத்தன், சி. மணி இருவருக்கும் யாப்பைப் பற்றித் தெரிந்திருக்கிறது. பல நவீன விஷயஙகளைச் சிலர் யாப்புடன் சொல்லக் கூடியவர்கள், சொல்லும் விஷயத்தை யாப்பு மறைக்க முற்படும்போது மீறுகிறார்கள். மீறலாம். காமராசனிடம் Form இருக்கிறது. அது அமையாதபோது சுதந்திரமாக உரைநடைக்குச் சென்று விடுகிறார்.

யாப்புடன் எழுதுவது மிகச் சுலபமான விஷயம். எதை வேண்டுமானாலும் யாப்புடன் சொல்லலாம். பார்க்கலாமா?

எல்லோரும் பாட்டெழுத நான் ஏன் விதிவிலக்கா?
எல்லோரும் என்பதுடன் (யோசி) எதுகைக்கு
எல்லோரா! எப்பூடி? ஈஸி, கவிஎழுத
வல்லோரில் நான்ஒருவன் என்பதைக் காட்ட
அடுத்த கவிதைக்கு வந்துவிட்டேன் மேலே
தொடுத்து அமைப்பதில் தொந்தரவு இல்லை
படுத்துக் களைத்திருக்கும் பத்மாவைப் பாச்சா
கடித்த கதைபற்றிச் சொல்ல நினைத்தவன்
பாயை விரித்துப் படுத்தவளைப் பாச்சா
வாயைத் திறந்து...’ வரைக்கும் வந்துவிட்டேன்
மாயச் சுழலிது, மேலே முடிச்சவிழ்க்க
ராயப்பேட்டை பாலு! வா!

இஃது பன்னிரண்டடியான் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பா.

---

ஒரு இடத்தில் மட்டும் நான் ’ப’வை ’பூ’வாக தவறாக டைப்படித்துள்ளேன் என்பதை சரியாக சொல்லிக்கொள்கிறேன்.

இலக்கியம், கவிதை இவையெல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று மொழியல்லாத வேறேதும் இலக்கணம் இருக்கிறதா? தெரிந்தால் சொல்லவும். அதேப்போல் வகைவகையான கவிதைகள். பலர் எழுதும் கவிதைகள் எனக்கு புரிவதே இல்லை. இவ்வித குறைக்கு என்ன பெயரென்று தெரியவில்லை. புரிந்த கவிதைகளும், சுஜாதா சொன்னது போல், உடைத்து போட்ட உரைநடை போலத்தான் இருக்கிறது. அப்படின்னா, எனக்கு புரிஞ்ச கவிதை, கவிதையே இல்லையா? தவிர, கட்டுடைத்து எழுதப்படும் கடாமுடா கவிதைகளை ரசிப்பது எப்படி? முதலில் புரிந்து கொள்வது எப்படி? குறைந்தபட்சம், புரிந்த மாதிரி காட்டிக் கொள்வது எப்படி?

இல்ல, எனக்கெல்லாம் வாரமலர் கவிதையும், டீ.ஆரின் எதுகை மோனை வசவுகளும் தான் லாயக்கா?

Wednesday, July 29, 2009

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...

மகேந்திரனிடமிருந்து...

எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படங்கள் சிலவுண்டு. அவற்றை தொகுத்துப்பார்க்கும்போது பல படங்கள் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியதாக இருக்கும். எந்த தொழில்நுட்ப பயமுறுத்தல்களும், ஆடம்பரங்களுமில்லாத எளிமையான படங்கள் அவருடையது.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் எளிமையாக, ரசிக்கும்படியாக இருக்கும். அவரே ஒரு நல்ல இசை ரசிகராக இருந்ததால் அவர் படங்களின் பாடல்களும் குறிப்பிடும்படியானவை. அவரின் இன்னொரு சாதனை ராஜாவையும் எம்.எஸ்.வியையும் இணைத்து இசையமைக்க வைத்தது. இவர்கள் இணைந்து இசையமைத்த ’மெல்லத்திறந்தது கதவு’ பாடல்கள் இனிமையின் உச்சம்.

என்னைக்கவர்ந்த அவரின் படங்களில் ஒன்று 1984 ல் வெளியாகி வெள்ளி விழா கண்ட "வைதேகி காத்திருந்தாள்". கதை, இசை, நகைச்சுவை அனைத்துமே தேர்ந்தெடுத்து செய்தவையாக இருக்கும். இன்றும் தமிழ் நாட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜனை அறியாதவர்கள் இருக்க முடியாது. "இந்த பெட்ரோமாக்ஸ் லைட் எப்படிண்ணே எரியுது?" வரலாறு படைத்த நகைச்சுவை. கவுண்டமணியின் ஆகப்பொருத்தமான ஜோடியாக கோவை சரளா (கோயம்புத்தூரில் வசித்த, கொங்கு தமிழில் கலக்கும் இவர் ஒரு மலையாளி). அவரைவிட கவுண்டமணிக்கு மிகப்பொருத்தமான ஜோடியாக செந்தில். (அண்ணே அந்த வ்விலாசம்.. வ்விலாசம்..)நாயகன் விஜயகாத்தின் ஜோடியாக வந்து பாதியில் இறந்து போவது பிரேமின் தோஷி என்றொரு வங்காள நடிகை. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. (அதற்கு நேர்மாறான அவர் மகள் இப்போது "கிருஷ்ணலீலை" என்றொரு படத்தில் நடிகர் ஜீவனுடன் நடித்து வருகிறார்). "வெள்ளிக்கிழமை ராமசாமி" போன்ற கிளிஷேக்களை தவிர மிகவும் இயல்பான அழகான படம் இது. இனி பாடல்களைப்பற்றி..

ராஜாவின் படம் என்றால் எஸ்.பி.பி & ஜானகியே தான் பாட வேண்டுமா?. யாருக்கு மாற்றம் தேவைப்பட்டதோ தெரியவில்லை. தமிழில் வெகு நாட்களாக உரிய அங்கீகாரமின்றி, கவனிக்கப்படாமலே இருந்த ஜெயச்சந்திரனை ராஜா முழுமையாக பயன்படுத்திக்கொண்டார். விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் வெவ்வேறு குரல்களில் இடம்பெற்றன.

யாரையுமே தாளம் போட வைக்கும் "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.." (அரை கிலோமீட்டருக்கு அந்தாண்ட வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்.. இனி புள்ள தூங்கிடும்..!!). இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.

கேட்ட நிமிஷத்தில் மனதை கனப்படுத்தும் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி.." இடையில் வரும் ஒரு "ஆரிராரோ..ஆரிராரோ..", விஜயகாந்த்தின் பிரமையில் வரும் பிரேமின் தோஷி கேட்கும் "காலெல்லாம் வலிக்குதா மாமா?" எல்லாம் கேட்கையில் எனக்கு கண்ணோரம் துளிர்க்கும். இதே பாடலின் இடையில் வரும் "வாடா கருப்பா இறங்கி வாடா.." ஒரு அற்புதமான குறியீடு. இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி ரணப்பட்டு நிற்கும் நாயகன் பாடுகையில், யாருக்கோ பேயோட்டும் பாடலை இடையில் திணித்திருப்பது மிகுந்த அர்த்தம் பொதிந்ததாயிருக்கும். இயக்குனர் நினைப்பதையெல்லாம் இசையில் வெளிப்படுத்த ராஜாவை விட்டால் வேறு யார்?

கதையின் இன்னொரு பகுதியில் வரும் ரேவதியின் திருமணப்பாடலை ராஜாவே பாடியிருப்பார். உமா ரமணனுடன் அவர் பாடிய "மேகங்கருக்கையில புள்ள தேகங்குளிருதடி.. ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்ய?.." ஒரு வியக்கவைக்கும் நாட்டுப்புற மெட்டு. இடையில் சேர்ந்திசைக்குரல்களில் வரும் "ஹொய்யா ஹோ.. ஹொய்யா ஹோ.." கேட்கையில் நிஜமாக நாமே பரிசலில் போவது போல இருக்கும்.

"ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்?
ஆளுக்கோர் ஆசைய ஏன் கொடுத்தான்?..
இல்லன்ன உலகமே இல்ல புள்ள, இதுகூட தெரியல என்ன புள்ள?"
என ராஜா கேட்கையில் சிலிர்ப்பாயிருக்கும்.

எம்.எஸ்.வியின் தீவிர ரசிகரான ராஜாவுக்கு, அவர் இசையமைத்த பாடல்களில் மிகவும் பிடித்தது "பாக்யலட்சுமி" படத்திலிடம் பெற்ற "மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்..". பல மேடைகளில் இதை ராஜா பலமுறை சிலாகித்து சொல்லியிருக்கிறார். ஒரு விதவையின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த இந்த பாடல் "சந்திரகவுன்ஸ்" என்ற ஹிந்துஸ்தானி ராகத்திலமைந்தது.இதே போன்று ஒரு பாடலை அமைக்க ராஜா தகுந்த வாய்ப்பை எதிபார்த்து காத்திருந்தார். எனவே இப்படத்தில் விதவையாக வரும் ரேவதி பாடுவதான ஒரு சூழலுக்கு, அதே ராகத்தில் ராஜா அமைத்த பாடல் ஜானகியின் குரலில் ஒலித்த "அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.. சிலம்பொலியும் புலம்புவதை கேள்". என் பள்ளி நாட்களில், கலை நிகழ்ச்சிகளில் பெண்வேடமிட்டு சிறுவர்கள் நாட்டியம் என்ற பெயரில் ஆட தேர்ந்தெடுக்கும் முதல் பாடலாக இது இருந்தது. பாடலின் இறுதியில் ரேவதியின் தந்தையாக வந்து உக்கிரதொணியில் ஜதி சொல்லும் ட்டி.எஸ்.ராகவேந்தர், நிஜமாகவே ஒரு பாடகர். தற்போது அவர் மகள் கல்பனா நிறைய பாடி வருகிறார் ( கடவுள் தந்த அழகிய வாழ்வு, இன்னும் நிறைய).

இப்போது எனக்கான பாடல்...என் விருப்ப எண்களில் ஒன்றாக இருக்கும் இந்த பாடல் ஜெயச்சந்திரன், வாணிஜெயராம் பாடிய "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..இன்பத்திலாடுது என் மனமே.." ஆபோகி என்ற ராகத்தில் ராஜா அமைத்த இந்த பாடல் அப்பட்டமாக மன குதூகலத்தை பிரதிபலிக்கும் ஒன்று. கங்கை அமரன் எழுதிய பாடல்களில் இது குறிப்பிட்டு சொல்லும்படியான ஒன்று. பாடல் இசை துவங்குவதற்கு முன்பாக ஒரு நீண்ட ஆலாபனையுடன் தொடங்கும். பாடல் முழுக்க வீணை அற்புதமாக கையாளப்பட்டிருக்கும். வாணிக்காகவே அமைத்தது போன்ற வேகமான ஸ்வரவரிசைகள் வேறு பாடலை பிரமாதப்படுத்தியிருக்கும்.

என்றேனும் நீங்கள், வெகுநாட்கள் எதிர்நோக்கியிருந்த விஷயம் கைகூடப்பெற்று ஆனால் உடனடியாக பகிர்ந்துகொள்ள அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறதா? அப்போது தவிப்பு கலந்த குதூகலத்தின் உச்சமாய் உங்களுக்குள் ஒரு இசை நிகழுமே.. அதுதான் இது..

"ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ" என்ற வரிகள் நிஜமாகவே கங்கை அமரனே எதிர்பாராமல் வந்து விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கேட்கும் போதெல்லாம் வாணி எங்கே போனார் என்று ஆதங்கமாயிருக்கும். இதை எழுதும்போதே எனக்கு இப்பாடலை மீண்டும் கேட்க மிகுந்த ஆவலாயிருக்கிறது.. நீங்களும் கேளுங்கள்..

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..
இன்பத்திலாடுது என் மனமே..
கனவுகளின் சுயம்வரமோ.. கண்திறந்தால் சுகம் வருமோ?..

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத்தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே..
நாயகன் கைதொடவும் கொண்ட நாணத்தை பென்விடவும்..
மஞ்சத்திலே கொஞ்சக்கொஞ்ச மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச..
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்..

மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ?
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ?
காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..
மஞ்சத்திலே எழுச்வரம்.. இன்பத்திலே நூறுவரம்..
இணைந்து மகிழ்ந்து மிதந்த நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..
இன்பத்திலாடுது என் மனமே..
கனவுகளின் சுயம்வரமோ.. கண்திறந்தால் சுகம் வருமோ?..


-மகேந்திரன்

Tuesday, July 28, 2009

எஸ்.வீ.சேகர் - நாடகம் - என் முதல் அனுபவம்

இன்றைய இளம் தலைமுறைக்கும் இதற்கு பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் நாடகம் என்றால் டிவியில் போடும் சீரியல்கள் தான் ஞாபகத்திற்கு வரும். நாடகம் என்ற சினிமாவின் தாய் கலையை, இதுவரை நான் நேரில் கண்டதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது, ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்று இருந்தேன். சென்ற ஞாயிறு எஸ்.வீ.சேகரின் ‘பெரிய தம்பி’ பார்த்தேன்.

---

நான் பைக்கில் உள்ளே நுழையும்போதே, சேகர் வாசலில் நின்று கொண்டிருந்தார். தேனீர் சட்டையின் (டி-சர்ட்) மேல் பட்டன்களை திறந்து விட்டு கொண்டு, பூணூல் தெரியும்வாறு. அப்போது தான் காரில் இருந்து இறங்கியிருப்பார் போல். யாருக்காக காத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. நாடகம் ஆரம்பிப்பதற்கு நிமிஷம் முன்வரை மேடையின் அருகே இருக்கும் கதவுக்கு வெளியேவே நின்று கொண்டிருந்தார். அவருக்கு மெஷின் கன்னுடன் ஒரு பாதுகாப்பு காவலர். எம்.எல்.ஏ. அல்லவா?

---

நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பூஜை பண்ணினார்கள். முடிவில், தேங்காய் உடைத்து முடித்து கொண்டார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் ஸ்கிரினை ஒருவர் ஓடிகொண்டே மாற்றியது, மேடையில் நாலு மைக் வைத்து, நாடகத்தின் கதாபாத்திரங்கள் அதில் தங்களை மாறி மாறி பொசிஷன் செய்து கொண்டே நடித்தது - எனக்கு புது அனுபவம். அவர் வீடு என்பதற்கு வரும் ஸ்கிரினில், அவர் தந்தை புகைப்படம், சங்கராச்சாரியார், ஜெயந்திரர் படங்களை மாட்டி வைத்திருந்தார்கள்.

---
இந்த நாடகத்தில் கிராமத்து வழக்கங்களையும் அப்படி சொல்லிவரும் திரைப்படங்களையும் கிண்டல் செய்து கதை அமைத்திருந்தார். 2 மணி நேரத்தில் 200க்கு மேல் ஜோக்ஸ் என்று டார்க்கெட் வைத்து அடிக்கிறார். அவர் சும்மா பேசினாலே, டைமிங் காமெடி சிதறும். அதனால் ரொம்ப சுலபமாகவே டார்க்கெட்டை கடக்கிறார். ஹிந்தி எதிர்ப்பு, டெல்லி, அம்மா, சன் டிடிஎச், மெகா சீரியல் காமெடிக்களுக்கு நல்ல கைத்தட்டல். லோக்கல் மேட்டர் திருவள்ளுவர் சிலை பற்றி சொல்லியும் கைத்தட்டல் அள்ளினார். நாடகத்தின் முடிவில் அவரே சொன்னதுபோல், எத்தனை நாடகங்கள் வேண்டுமானாலும் போடலாம், டைட்டிலை மாற்றி கொண்டு. டைட்டிலில் என்ன இருக்கிறது என்றார்.

---

அவர்களுக்குள் என்ன நகைச்சுவையோ தெரியவில்லை. மேடையிலேயே ஒரு பெண்மணி (இவர் மீண்டும் மீண்டும் சிரிப்பில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் வருபவர்) அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தார். நாடகம் முடிந்து குழுவினரை அறிமுகப்படுத்தி, வந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லி இருபது நிமிடம் பேசியபோது, எஸ்.வீ.சேகரின் காமெடி இன்னும் அதிகமாக தொடர்ந்தது. அரங்கத்தில் சிரிப்பொலியும் அதிகமானது.

சிவசங்கரன் - மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இப்ப, கரண்ட் பிரச்சினைக்கு இவர் காரணம் கிடையாது. ரிட்டையர் ஆகிவிட்டார். இவர் சர்வீஸில் இருக்கும்போது, இவ்ளோ பிராப்ளம் கிடையாது. இன்னும் ஜாஸ்தியாத்தான் இருந்திருக்கும்.

டெலிபோன் மணி - நிறைய படங்களில் பார்த்திருப்பீர்கள். இவரோடுதான் ரஜினி, கமல் நடித்திருப்பார்கள். அந்த படங்கள் எல்லாம் பாருங்க. கண்டிப்பா இவரை தேடி கண்டுப்பிடிப்பீங்க.

கிருஷ்ணக்குமார் - இவர்தான் நாடக இன்சார்ஜ். எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ஏதாவது பழி வந்தா, இவர் மேலத்தான் போடுவோம்.

ராஜேந்திரன் - இவர் மதிமுகவில் இருக்கிறார். என்ன பொறுப்புன்னு கேட்டுக்கிட்டதில்லை. பதிலுக்கு அதிமுகவில் நீ என்னவா இருக்கன்னு கேட்டுட்டா?

முரளிதரன் - எங்க ட்ருப் ஆரம்பித்ததிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவில் இருக்கிறார். காலேஜில் படித்த மாணவன் ஒருவன், அங்கேயே லெக்சரர் ஆன போது, அவனிடம் கல்லூரி முதல்வர் ‘இதை பத்தி என்ன நினைக்கிற?’ என்று கேட்டதற்கு, ’இங்க படிச்சா, வேற எங்கயும் வேலை கிடைக்காது’ என்றானாம். அது போல், என்னைக்கு எங்களுக்கு வாசிக்க ஆரம்பித்தாரோ, வேற எங்கயும் அவரால் போக முடியலை.

தனது மகன் அஸ்வீனையும் அறிமுகப்படுத்தினார். அவரிடம் “நீ ஆக்‌ஷன் ஹீரோவானதற்கு பிறகுதான் கல்யாணம்” என்றிருக்கிறாராம். அதனால், அவரும் சீக்கிரம் ஆக்‌ஷன் ஹீரோ ஆவதாக சொல்லியிருக்கிறாராம். இன்னொரு ஆக்‌ஷன் ஹீரோவா?

ம்ம்ம். அவருக்கென்ன? நடிச்சிட்டு போயிடுவாரு.

---தொடர்பு கொள்ள அவருடைய மெயில் ஐடி கொடுத்தார். மயிலாப்பூர் எம்.எல்.ஏ. அட் ஜிமெயில் டாட் காம். ”எம்.எல்.ஏ.வா இருக்கேனோ, இல்லயோ, ஐ.டி. என்னிடம் தான் இருக்கும். எப்படியும், இன்னும் கண்டிப்பா ரெண்டு வருஷம் எம்.எல்.ஏ.வாத்தான் இருப்பேன். ரொம்ப வருத்தப்படாதீங்க. அதுக்கப்புறம் எம்.பி.யா ஆயிருவேன். தன்னம்பிக்கைதான்.”

இப்படி நம்பிக்கை அவருக்கு இருந்தா சரி. மூடநம்பிக்கை என்று கருதும் பலவற்றை ஆதரித்து, பரிந்துரைத்து தகுந்த விளக்கம் கொடுக்காமல் பேசுவது சரியா?

---

அவரின் அரசியல் சண்டைகளே காமெடியாகத்தான் இருக்கும். உ.தா. சமீபத்தில் சட்டசபையில் கலைராஜனுடனான சண்டை.

எஸ்.வீ.சேகர் - ”நான் பேசினால் என்னை போட்டுவிடுவதாக கலைராஜன் மிரட்டுகிறார். எனது உயிருக்கோ, உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன்.”

கலைராஜன் - “'எட்டப்பன்' எஸ்.வீ.சேகர் நாளை பன்றிக் காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல”

எஸ்.வீ.சேகர் - ”பன்றிக் காய்ச்சலெல்லாம் எனக்கு வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்”

---

நாடகம் அழிந்து வரும் கலை என்று பல வருடங்களாக சொல்கிறார்கள். இன்னும் உயிர் பிழைத்து வருவதற்கு, எஸ்.வீ.சேகர், கிரேஸி மோகன், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றவர்களது குழுக்களே முக்கிய காரணமாக இருக்கிறது. இவர்களின் பலம் - நகைச்சுவை, சினிமா தந்த பிரபலம். நாடக ஆர்வம் குறைவதற்கு காரணம் - எத்தனை தடவை, பார்த்ததையே பார்ப்பது?, ஒரு நாடகம் பார்க்கும் காசில், நாலு படங்கள் பார்த்து விடலாம் போன்ற எண்ணங்கள்.

நாடகங்களை பற்றி அவர் சொன்னபோது, ‘சினிமா பிடிக்கவில்லையென்றால், வெளியே தான் போகணும். இங்க பிடிக்கலைன்னா, உள்ளே வரலாம்’. அதாவது அவரை சந்தித்து சொல்லலாமாம். சொன்னபடியே, எல்லாம் முடிந்தபிறகு, வெளியே செல்லும் கதவருகே நின்று, கை குலுக்கி பாராட்டு பெற்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.

ஏதாவது புதுசா முயற்சி பண்ணினால், நாடகங்களுக்கு மீண்டும் வரவேற்பு வரலாம். என்ன செய்வது? யார் செய்வது? தெரியவில்லை. பார்க்கலாம்.

மார்க்கெட் போன காமெடி நடிகர்கள் ட்ரை பண்ணலாம். கவுண்டமணி? கூட்டம் அம்மும்.

---

கடைசியா அவர் சொன்னது,

“உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரணம், ஒரு ஞாயித்துக்கிழமை... தொலைக்காட்சிகளில் எத்தனை படங்கள், எவ்ளோ நிகழ்ச்சிகள்... எல்லாத்தையும் விட்டுட்டு இவ்ளோ பேரு வந்திருக்கீங்கன்னா, அதற்கு காரணமா இருக்கும் அனைத்து தொலைக்காட்சிக்களும் எனது மனமார்ந்த நன்றிகள்.”

:-)

Monday, July 27, 2009

வைரமுத்துவின் ’ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’

இது வைரமுத்து 1991இல் எழுதிய நாவல். அவர் வார்த்தையில் இது ஒரு உண்மையும் கற்பனையும் கலந்த காதல் கதை. தேனி வட்டாரத்தைக் களமாக கொண்டு எழுதப்பட்ட அரண்மனை காலத்து கதை. சரியாக எந்த காலம் என்று தெரியவில்லை. வைரமுத்துவின் பலம் - உணர்வுகளை இயற்கை சங்கதிகளோடு அறிவியல் கலந்து எளிமையாக சொல்வது. இந்த நடை, கதையை ஸ்பெஷலாக்கியுள்ளது. கதையை சொல்லி வாசிக்க முடியாமல் ஆக்க கூடாதல்லவா? அதனால் கதையை சொல்ல போவதில்லை. காதலின் லைப் சைக்கிளில் வரும் சேட்டைகள், ஏக்கங்கள், இன்பம், பயம், சோகம் எல்லாவற்றையும் இந்த கதையில் பதிவு செய்துள்ளார். பீலிங் பார்ட்டிகள் கதையை ரசிக்கலாம். மற்றவர்கள் தமிழை ரசிக்கலாம்.

ரசிக்க சில...

---

காதலை இன்னும் இந்த மண்ணில் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. மொழி அதை வெறும் வார்த்தையாய்ப் பார்க்கிறது. விஞ்ஞானம் அதை வெறும் ஹார்மோன்களாய்ப் பார்க்கிறது. மதம் அதை வலக்கையால் தண்டித்துவிட்டு இடக்கையால் ஆசிர்வதிக்கிறது. தத்துவம் அதைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று இன்னும் தீர்மானம் போடவில்லை. இந்தியாவில் காதல் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது காதலர்கள் மீது தான்.

---

பலாப்பழம் உரிப்பது வரை கஷ்டம்.

ரயிலில் ஏறுவதுவரை கஷ்டம்.

முதலிரவில் அணைப்பதுவரை கஷ்டம் - அதாவது விளக்கை.

காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.

---

நிறைவேற்றக் கூடியவர்கள் மட்டுமே காதலிக்கலாம் என்று சட்டமிட முடியுமா?

காய்க்கிற மரங்கள் மட்டுமே பூக்கலாமென்றால் தாவரங்களுக்கு இலையுதிர்காலத்திற்குப் பிறகு இன்னொரு பருவம் இருக்க முடியாது.

---

காற்றை இயங்க வைக்கிறது பூமியின் சுழற்சி.
மரங்களை இயங்க வைக்கிறது காற்றின் சுழற்சி.
மனிதனை இயங்க வைக்கின்றன காதலும் பசியும்.
பசியும் ஒரு வகையான காதல்தான்; காதலும் ஒரு வகையான பசிதான்.

---

குளியலின் முதல் சுகம் குளியல் அல்ல. அது கொடுக்கும் சுதந்திரம்.

ஆடைகள் என்னும் பொய் விலங்குகளைக் களைந்து, விட்டு விடுதலையாகி - நாம் நாமாகவே இருக்கும் வாய்ப்புக்கு மகிழ்ந்து - இதமான வெந்நீர் சருமங்களுக்கு ஒத்தடம் கொடுத்து ஓடி ஒழுகி சொல்லாமல் கொள்ளாமல் அந்தரங்கங்களில் எல்லாம் பரவுகிற போது - வாய் வழியே மூச்சுவிட்டு இமைகள் தாழும் நிமிஷமிருக்கிறதே - அதை, ஒரு மனிதன் வாழும் நிமிஷங்களுள் ஒன்றாய் வரவு வைக்கலாம்.

---

இதைப் படிக்கும்போதே வைரமுத்து வெள்ளை பைஜாமா போட்டுக்கிட்டு விறைப்பா, உங்க கண் முன்னால வருவாரே?

Saturday, July 25, 2009

கலாமை சோதனையிட்டது தப்பா?

கலாமை அமெரிக்க விமான நிறுவனம் அவமரியாதை செய்துவிட்டது. மன்னிப்பு தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பிரச்சினை. விமான நிறுவனம் மன்னிப்பு. பிறகு இல்லையென்று இந்த வாரம் செய்திதாளில் தினமும் வந்த செய்தி இது.

இதில் கலாம் என்ற மனிதரை விட்டுவிடலாம். ஒரு முன்னாள் ஜனாதிபதியை சோதனை செய்யலாமா வேண்டாமா? என்பதை மட்டும் பார்க்கலாம். முன்னாள் மட்டுமில்லை, இந்நாள் ஜனாதிபதியையும், மற்ற குடிமகன்கள் என்ன சோதனைக்களுக்கு உட்படுத்தபடுகிறார்களே, அத்தனைக்கும் உட்படுத்த வேண்டும். அவரும் குடிமகன் தானே? முதல் குடிமகன்.

தவிர, சோதனை செய்வதை எப்படி அவமரியாதை என்ன எண்ணலாம்? நாட்டில் எல்லோரையும் தான் சோதனை செய்கிறார்கள். அப்ப, நாமெல்லாம் தினமும் கேவலப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறோமா? நம்ம மேல சந்தேகப்படுறாங்க. எனக்கு மரியாதை இல்லைன்னு நினைச்சா, பிறகு பாதுகாப்பில் தான் குறை ஏற்படும். பாதுகாப்பிற்கு என்று சில சோதனைகளை வரைமுறை செய்துவிட்டால், அனைவரையும் அதில் உட்படுத்தவேண்டும்.

பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறு செய்ய மாட்டார்களா? ஒருமுறை ஒரு எம்.பி. லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி கொண்டு சென்றார் என்று செய்தி வந்தது. இன்னொரு எம்.பி. தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் இன்னொரு பெண்ணை வெளிநாடு அழைத்து சென்று மாட்டி கொண்டார். தங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

இவர்கள் தவறு செய்பவர்களா? என்று எண்ணாமல், அனைவரும் சமம் என்னும் ரீதியிலாவது இந்த சோதனைகள் அவசியம். சில நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதிகள் உண்டு. நிறுவன தலைவர் உட்பட. எது கொண்டு செல்லலாம்? எது கொண்டு செல்ல கூடாது? என்று. இது வரவேற்க்கபட வேண்டியது தானே?

இப்பொழுது கலாம் என்ற மனிதர் சம்பந்தபட்டதால், மக்கள் ஆதரவோடு அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், ஆதாயம் தேட வாய்ப்புள்ளது. அடிபட போவது, சோதனை செய்யும் பணியாளர்களின் கடமையுணர்ச்சி. எங்கே, இவரை சோதனையிட்டால் பிரச்சினை ஆகுமோ? என்று யோசிக்கும் நிலை வரும். அது நல்லதற்கில்லை.

முதலில் பாதுக்காப்புக்காக செய்யப்படும் இந்த சோதனைகளில் பாரபட்சம் கூடாது. அதேப்போல், சோதனையிடுவதை கௌரவ குறைவாக எடுத்துக்கொள்ள கூடாது. இது பற்றி கலாமிடம் கருத்து கேட்டாலே, நாட்டின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவராக, இதற்கு ஆதரவு தெரிவிப்பார்.

முன்னாள் ஜனாதிபதியை சோதனையிட தேவையில்லை என்பது நமது அரசாங்க ப்ரோட்டோக்கால். முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், சோதனையிட வேண்டும் என்பது அமெரிக்க விமான நிறுவனத்தின் பாலிஸி. இப்போது ஒரு கேள்வி? இந்திய விமான நிறுவனங்கள் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை சோதனையிடுமா, இல்லையா? இதில் தெரிந்துவிடும் லட்சணம்.

மீடியாக்களை சொல்ல வேண்டும். சோதனையிட்டாலும் கூச்சல். சரியாக சோதனையிடாமல் பிளைட் கடத்தப்பட்டாலும் கூச்சல்.

Friday, July 24, 2009

பெங்களூரில் எஸ்.வீ.சேகர்

இந்த வார இறுதியில் பெங்களூரில் எஸ்.வீ.சேகரின் இரு நாடகங்கள் நடைபெறவுள்ளது.சனிக்கிழமை - 25 ஜூலை 2009 - 'தத்துப்பிள்ளை'
ஞாயிற்றுக்கிழமை - 26 ஜூலை 2009 - 'பெரியதம்பி'

டிக்கெட் புக் செய்ய, இங்கே செல்லவும்.
http://www.ticketnew.com/Calender.aspx

பார்க்கிறதுக்கு இப்படி போங்க.


View Larger Map

அவரோட காமெடி கொஞ்சம்... இங்கே...

ஒரு கிளியின் தனிமையிலே...

மகேந்திரனிடமிருந்து...

என் துவக்கப்பள்ளி பிராயத்தில் அது ஒரு அடைமழை நாள். இரவெல்லாம் விடாமல் பெய்த மழை காலையிலும் மெல்லியதாய் தூறிக்கொண்டிருந்தது, மேகமூட்டத்துடன் கூடிய மிகுந்த அழகான காலை. பெயர் மட்டுமே கேள்விப்பட்டிருந்த மெட்ராஸ் வங்கக்கடலில் புயல் என்பதால் மழை.

பிரிட்டிஷ் காலத்திய கட்டிடமும், அழகிய பெரிய சாளரங்களுடன் கூடிய வகுப்பறைகளுமுள்ள கிருஸ்த்துவப்பள்ளி நான் பயின்றது. வரிசையான மரங்களும் பசும்புல்வெளியுமான என் மைதானம். அப்போதெல்லாம் மழையினால் பள்ளி விடுமுறை என்பதை ஊடகங்கள் உறுதிசெய்யாது. பள்ளிக்கு போகிற வழியில் எதிர்ப்படும் யாரேனும் உற்சாகத்துடன் சொல்வார்கள். அப்படியே அவர்கள் சொன்னாலும் " நீ போயி பாத்தியா?" எனக்கேட்கும் அம்மாவின் "அன்பு" கேள்விக்கு அஞ்சி நாங்களே பள்ளிக்கு போய் உறுதிசெய்துவிட்டு வருவோம். அப்படி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட காலை அது.

மழை எப்போதுமே குழந்தைகளுக்கானது. எப்போதெல்லாம் மழையினால் பள்ளிவிடுமுறை அறிவிக்கிறார்களோ, அடுத்த ஒருமணியில் மெலிதாய் வெயில் கிளம்பும். பள்ளி உள்ளே நுழைந்து விடுமுறை என்று அறிந்து எல்லோரும் திரும்பிக்கொண்டிருக்க, வரிசையாய் ஈரமாய் நின்ற புங்கன், வாகை மரங்கள், அவற்றினடியில் மழையில் மட்டுமே காணக்கிடைக்கும் அட்டைப்பூச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த நான், வீடு திரும்ப மனமில்லாமல் விருட்டென்று மஞ்சள் பையை எறிந்துவிட்டு மைதானத்துக்கு ஓடினேன். புல்வெளியின் இடையிடையே தேங்கியிருந்த மழை நீரில் என் காக்கி அரைக்கால்சராய் நனைய ஆடிக்கொண்டிருந்தபோது.. எங்கிருந்தோ வீசிய காற்றில் மெலிதாக துவங்கியது இந்த பாட்டு..

இத்தனை ரம்மியமான நேரத்துடன் தொடர்புள்ளதென்றால் அது ராஜாவின் பாடலன்றி வேறு எதுவாக இருக்கக்கூடும்? நிசப்தத்தை கிழித்துக்கொண்டு கிறீச்சிடும் ஒரு கிளிக்குஞ்சின் ஓசையுடன் துவங்கும் பாடலது.
படம்: பூவிழி வாசலிலே (1987) பாடல்: ஒரு கிளியின் தனிமையிலே..

இயக்குனர் பாசிலின் படங்களுக்கென்று ஒரு தனித்துவ, பட்டியலிலில்லாத வண்ணமுண்டு. காதல் காட்சிகளிலும் கூட ஒரு மெலிதான சோகம் இழையோடும். அதற்கேற்றார்போல ராஜா இழைத்துத்தரும் பிரத்தியேக பாடல்களும் பாசிலின் படங்களுக்கு இன்னுமொரு பலம்.

இன்றும் கூட கேட்ட பொழுதினில் மனதை லேசாக்கி, ஈரமைதானத்தில் இரு கைகளையும் விரித்து ஓடும் ஒரு பள்ளிச்சிறுவனாக என்னை மாற்றிவிடும் பாடலிது. படத்தின் முழுக்கதையையும் ஒரே பாடல் சொல்லிவிடும். கடந்த காலத்தின் காயம் மறைக்க, இலக்கின்றி மனம்போல வாழும் நாயகனிடம், வழிதவறி வந்து சேரும் ஒரு பேச இயலாத குழந்தை, இவர்கள் இருவரின் வாழ்வில் குறுக்கிடும் நாயகியின் காதல் என க(வி)தை..ஜேசுதாஸ், சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் ஒரு சுகமான தாலாட்டு. இவர்கள் இருவருக்கும் இணையாக சேர்ந்திசைக்குரல்கள் நம் கைகளைப்பற்றி ஆடுவதற்கு அழைக்கும். மேற்கத்திய பாணியில் துவங்கும் பல்லவி, சரணத்தில் வரும்போதும் ஒரு தெளிந்த நீரோடை போல தெளிவான குரலோசையை தாங்கிப்பிடிக்கும் தபேலா இசையுடனிருக்கும்.

ஆசையால் உன்னை அள்ளவேண்டும்..
அன்பினால் எனைக்கொல்ல வேண்டும்...
சேரும் நாளிதுதான்..

என்று அவள் பாடும்போது அது குழந்தைக்காகவா இல்லை அவனுக்காகவா என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.ஒரு இறைவன் வரைந்தகதை.. கதைமுடிவும் தெரிவதில்லை.. உண்மைதானே.. கதை முடிவு தெரிந்துவிட்டால் இவ்வளவு வருடம் கழித்தும் அதைப்பேசிக்கொண்டிருக்க மாட்டோமே..

மண்ணை குழைத்து நயம்பட எத்தனையோ ஆயிரம் பானைகள் செய்துவிட்ட குயவன் கைகட்டி நிற்கிறான், அதிலொரு பானையின் ஒருதுளி நீரை பருகுவதாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன் நான்..

இனி பாடல்..

ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
இருகிளிகள் உறவினிலே புதுக்கிளி ஒன்று வரவு
விழிகளிலே கனவு மிதந்துவர
உலகமெல்லாம் நினைவு பறந்துவர
தினம் தினம் உறவுஉறவு புதிது புதுது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு..

முத்துரத்தினம் உனக்கு சூட முத்திரைக்கவி இசைந்துபாட
நித்தம் நித்திரை கரைந்து ஓட சித்தம் நித்தமும் நினைந்து கூட..
சிறுமழலை மொழிதனிலே இனிமைத்தமிழில் இதயம் மகிழ
இருமலரின் விழிகளிலே இரவும் மறைய பகலும் தெரிய
ஆசையால் உன்னை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக்கொல்ல வேண்டும்
சேரும் நாளிதுதான்..

கட்டளைப்படி கிடைத்த வேதம் தொட்டணைப்பதே எனக்கு போதும்
மொட்டுமல்லிகை எடுத்து தூவும்.. முத்துப்புன்னகை எனக்கு போதும்..
ஒரு இறைவன் வரைந்த கதை, புதிய கவிதை இனிய கவிதை..
கதை முடிவும் தெரிவதில்லை, இளைய மனதில் எழுந்த கவிதை..
பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்..

ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
இருகிளிகள் உறவினிலே புதுக்கிளி ஒன்று வரவு
விழிகளிலே கனவு மிதந்துவர
உலகமெல்லாம் நினைவு பறந்துவர
தினம் தினம் உறவுஉறவு புதிது புதுது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு..


-மகேந்திரன்.

பாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

Thursday, July 23, 2009

ஜெயா மேக்ஸ் - பலவீனம் பலமாக...

தூர்தர்ஷன் காலத்தில் டிவி மேல எவ்ளோ கிரேஸ் இருந்தது? வெள்ளிக்கிழமை எங்கிருந்தாலும் ஒளியும் ஒலியும்’க்காக அந்நேரம் டிவி முன்னால் இருப்போம். அதிலும் ரஜினி, கமல் பாட்டு போடும்போது, சவுண்ட் கூட்டி வைத்து, சண்டையாகி கலாட்டாவில் முடியும். அதுபோல், ஞாயிறு படம். எந்த காலத்து படம் போட்டாலும் பார்ப்போம். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் பார்த்தது அதில்தான். தமிழ் என்றில்லை, சித்ரகார், சித்ரமாலா, ரங்கோலி என்று எதையும் விட்டுவைக்க மாட்டோம்.

இன்று கால ஓட்டத்தில் பாடல்கள் மட்டுமே போடும் தமிழ் சானல்கள் நாலு இருந்தாலும் (உள்ளூர் கேபிள் சானல்கள் வேறு!) அன்று இருந்த திருப்தி இன்று இருப்பதில்லை. ஒரு சானல் வைத்து விட்டு, இன்னொன்றில் என்ன போடுகிறான், பார்ப்போம் என்று மாத்தி, பிறகு அது பிடிக்காமல் மற்றொன்று மாற்றி, முடிவில் ரிமோட் தேய்வது தான் ரிசல்ட். ஆனாலும், பெரும்பாலான சமயங்களில் நான் போய் கடைசியாக நிறுத்துவது ஜெயா மேக்ஸில் தான்.

இதன் சிறப்பம்சங்கள்,

1) பனியன் போட்ட சனியன்கள் யாரையும் நிறுத்தி மொக்கை போடாமல், பாட்டை மட்டும் போடுவது. (அது எதுக்கு சம்பளம் கொடுக்கணும்’ன்னு நினைச்சிருக்கலாம்.)

2) விளம்பரம் அதிகம் போடாதது. அதுவும் இப்பொழுதுதான் போடுகிறார்கள். (நாங்களா போட மாட்டோம்ன்னு சொல்றோம். யாரும் தர மாட்டேங்கிறாங்களே’ன்னு அவுங்க நினைக்கலாம்.)

3) பாட்டை தேர்வு செய்து போடுவது, கண்டிப்பாக ஒரு நல்ல ரசனைக்காரராகத் தான் இருக்க வேண்டும். (வாழ்க அந்த புண்ணிய ஆத்மா! வளர்க அவர்தம் சேவை!)

4) பொன் குஞ்சு என்பதற்காக தீ, மாசிலாமணி, உளியின் ஓசை என்று போட்டு தாக்காமல் இருப்பது. (இருந்தாதானே போடுவது? அதுக்காக தலைவி பாட்டு போட்டு டேமேஜ் ஆகிற கூடாது)
குறிப்பு - மாசிலாமணியிலும் சில நல்ல பாடல்கள் இருக்கிறது. பேசிக்கலி நான் இமானுக்கும் ரசிகன், ‘மொபைலா’விலிருந்து.

5) காமெடி போட்டு கடுப்பை கிளப்பாமல், ஒன்லி சாங்ஸ் என்று இருப்பது (காமெடி சானல்கள் இருந்தாலும், அது எதுக்கு நைட்டானா, சன் மியூசிக்லயும், இசையருவிலயும் காமெடி போடுறாங்க?)

6) தொடர்ந்து ஒரே கலக்‌ஷனை போடாமல், தகுந்த இடைவெளியில் பாடல் தொகுப்பை மாற்றுவது. (சலிக்காமல் தொடர்ச்சியாக பாடல் கேட்கும்படி ஒரு கலக்‌ஷன் உருவாக்குவது ரொம்ப கஷ்டம். வேண்டுமானால், உங்கள் மீடியா ப்ளேயரில், வின்ஆம்ப்பில், ஐ-பாடில் முயன்று பாருங்களேன்.)

இந்த வாரம் அப்படி ஒரு கலக்‌ஷனை மாற்றி இருக்கிறார்கள். புத்துணர்ச்சியோடு இருக்கிறது.

உதாரணத்திற்கு, நேற்று தொடர்ச்சியாக நான் பார்த்த பாடல்கள்...

முள்ளும் மலரும் - செந்தாழம் பூவில் (இது அடிக்கடி பார்க்கிறது தான். லூஸ்ல விடுங்க)
ரோசாப்பூ ரவிக்கைக்காரி - என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் (இந்த பாட்டை இப்பத்தான் முதன்முதலில் டிவியில் பார்க்கிறேன்.)
கேளடி கண்மணி - கற்பூர பொம்மையொன்று (கடைசியா, எப்ப பார்த்தேன்?)

பழைய பாடல் என்றில்லை... புதுப்பட பாடல்களிலும் நல்ல பாடல்களாக போடுகிறார்கள். அட்லிஸ்ட் எனக்கு பிடித்த பாடல்களை. இடைப்பட்ட பாடல்கள் - இன்னும் விசேஷம்.

பாட்டு பாடவா படத்தில் வரும் ”வழி விடு... வழி விடு... வழி விடு... என் தேவி வருகிறாள்” என்ற பாட்டை நான் பள்ளியில் படிக்கும்போது, சன் மியூசிக் முதல் எடிஷனில் பார்த்தது. அதன் பிறகு இப்பொழுதுதான் பார்க்கிறேன். இளையராஜாவும் எஸ்.பி.பி.யும் இணைந்து பாடிய பாடல். படத்தில் எஸ்.பி.பி. அவருக்காகவும், இளையராஜா ரகுமானுக்காகவும் பாடியது. இரு இமயங்களின் நுணுக்கங்களை நெருக்கத்தில் இணைத்து கேட்கலாம்.

ராஜாவின் பார்வையிலே: விஜய் - அஜித் இணைந்து நடித்த இந்த படத்தில் வரும் “ஒரு சுடர், இரு சுடர், ஒளி சுடர், மணி சுடர், முத்து சுடர் ஆடுதடி” பாடலின் ஒளி கிட்டத்தட்ட நினைவில் இருந்து மறைந்துவிட்டது. ஒலி அவ்வப்போது கேட்டு கொண்டுத்தான் இருக்கிறேன். இந்த பாடலையும் நேற்று பார்த்தேன். வீரா “மலை கோயில் வாசலில்” சாயலில் வரும் இந்த பாடல், ஒரு உற்சாகத்தை கொடுக்கும் டூயட். சும்மா, நீங்க கேட்டாலே தலையை ஆட்டுவீங்க. அந்த கால விஜய்யை கேட்கவா வேண்டும்? பாடலின் நடுவே சூப்பராக தலையை ஆட்டி ஆடுவார்.

மெலடியில் மட்டுமா கலக்குகிறார்கள்? நேற்று முன்தினம் நான் பார்த்த இரு அதிரடி பாடல்கள்.

காதல் பரிசு - ஏய்! உன்னைத்தானே

கமலும் ராதாவும் இன்னொரு கேங்கை எதிர்த்து போட்டி ஆட்டம் போடும் தூள் பாடல். இளையராஜா மேற்கத்திய பாணியில் இளமை துள்ளலுடன் போட்ட மெட்டு. பாடலில் நடுவே, கமல் பறந்து, குழுவினரின் மேலமர்ந்து, எதிராளியை நோக்கி கை நீட்டுவது அமர்க்களம். இந்த பாடலை தொடர்ந்து வந்தது,

அடுத்த வாரிசு - ஆசை நூறு வகை

ரஜினி யூத்தாக இருந்து கெட்ட ஆட்டம் போட்ட பாடல். பல மூவ்மெண்ட்கள் எக்ஸசைஸ் போல இருக்கும். அதில் இருக்கும் குழந்தைத்தனத்திற்காகவே ரசிக்கலாம். என்னா வேகம்? என்னா துள்ளல்? ரஜினியின் ஸ்டைல் கலந்த ஆட்டத்தையும் இளையராஜாவின் ஆட்டம் போட வைக்கும் இசையையும் ஒரு சேர இதில்தான் காண முடியும். டொண்ட் மிஸ் இட்.

இது எல்லாமுமே ஒவ்வொரு வகையில் எனக்கு பிடித்த பாடல்கள். இப்படி எல்லாவற்றையும் தொடர்ந்து காண வைத்து என்னை குஷிப்படுத்திய, குஷிப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயா மேக்ஸிற்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

இதற்கெல்லாம் மூலகாரணமாக திகழ்ந்துக்கொண்டிருக்கும் புரட்சித்தலைவி வாழ்க!

Wednesday, July 22, 2009

உங்க சிஇஓ’வுக்கும் இவ்வளவு நம்பிக்கையா?

ஒரு விமான நிறுவனத்திற்கு, சாப்ட்வேர் செய்ய வேண்டிய தேவை வந்தது. எந்த கம்பெனியிடம் வேலையை கொடுப்பது? என்று தீர்மானிக்க ஒரு விநோத திட்டம் தீட்டினார்கள். அச்சமயம், அமெரிக்காவிற்கு செல்ல ஒரே நேரத்தில் இருபது பெரிய சாப்ட்வேர் கம்பெனிகளின் தலைமை அதிகாரிகள் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தார்கள். இது தான் சரியான நேரம் என்று விமான நிறுவனம் ரகசியமாக திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார்கள். ஒன்றுமில்லை, அவர்களின் திறமையை, நம்பகத்தன்மையை, நம்பிக்கையை சோதிக்க போகிறார்கள்.

இருபது சிஇஓ’க்களும், அமெரிக்காவில் நடக்கும் கூட்டமைப்பு மீட்டிங்கிற்கு செல்லும் நாள் வந்தது. ஒவ்வொருவரும் ப்ளைட்டில் ஏறும் போது, அவர்களிடம் தனியாக விமான நிறுவனத்தினர் ஒரு விஷயம் சொல்கிறார்கள்.

“நீங்கள் எங்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், உங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஆளில்லா தானியங்கி’ மென்பொருளால் இந்த விமானம் முதன்முறையாக இயக்கப்படுகிறது. அதில் நீங்கள் பயணம் செய்வது இன்னும் விசேஷமாகிறது.”

என்னது, பைலட் இல்லாம வெறும் சாப்ட்வேர் ப்ளைட் ஓட்டப்போகுதா? பெரிய நிறுவனங்கள் என்பதால், எந்த சாப்ட்வேர் யாருக்கு செய்து கொடுத்தோம் என்று தலைமை நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால், அதை அப்படியே நம்பினார்கள்.

இப்ப, நிறுவன தலைமை அதிகாரிகளுக்கு கலக்கமாகி விட்டது. பயம். நடுக்கம். என்ன பண்றது?

எஸ்கேப் ஆவதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள்.

”ஒரு அவசர வேலை வந்திருக்கு. என் டிக்கெட்டை கேன்சல் பண்ணிருங்க.”

”ஓ! மை காட். தாத்தா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரா?” (சின்ன வயசுல இருந்து இக்கட்டான நேரத்துல தாத்தா தான் ஹெல்ப் பண்றாரு)

“அப்படியா? மீட்டீங் கேன்சலா? ஒகே, திரும்ப எப்பன்னு சொல்லுங்க... பை”

“20 கோடி லாஸா? உடனே நான் வாரேன்”

“ஐயோ, வயத்தை கலக்குதே!”

இப்படி பத்தொன்பது பேரும் எஸ்ஸாகிவிட்டார்கள்.

ஆனால், ஒருத்தர் மட்டும் ஜம்மென்று சீட்டில் உட்கார்ந்தார். அவர் முகத்தில் எந்த பதட்டமும் இல்லை. பைலட் இல்லாத முதல் விமானம் என்று சொல்லப்படும் அந்த விமானத்தில் பயணம் செய்ய எந்த தயக்கமும் காட்டவில்லை.

விமான சோதனை டீம் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இவர்தான். இவர் நிறுவனம் தான். தங்கள் சாப்ட்வேர் தேவையை இவரிடம் தான் கொடுக்க வேண்டும். எதற்கும் பேசி பார்த்து விடலாம் என்று நினைத்து, தங்கள் ஆள் ஒருவரை பயணி போல் வேடமிட்டு, அவர் பக்கத்தில் அமர வைத்தார்கள்.

“என்ன சார்? இந்த ப்ளைட்ல பைலட்டே இல்லையாமே?” பயணி வேடத்தில் ஒற்றன் தூண்டில் போட்டான்.

நம்மாளு “ஆமாம். அப்படித்தான் சொன்னாங்க”

“உங்களுக்கு ஒண்ணும் பயமில்லையா?”

“எனக்கெதுக்கு பயம்? அந்த சாப்ட்வேர் எங்க நிறுவனத்தால் பண்ணியது, தெரியுமா?”

“ஓ! அப்படியா? உங்கள் நிறுவனம் மேல், உங்கள் ஊழியர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கையா?”

”நம்பிக்கைதான். கொஞ்சம் காத கிட்ட கொண்டு வாங்க. எங்க கம்பெனி சாப்ட்வேர்ங்கிறதால, இது முதல்ல ஸ்டார்ட்டே ஆகாது. அப்புறம் எங்க பறக்குறது?”

Tuesday, July 21, 2009

ஆடி விசேஷம்

காலையில்
அம்மாவின் பாசத்துடன்
தென்றலாய் தலை தடவி எழுப்பி

மதியம்
தோழனின் நட்புடன்
முதுகு தொட்டு தள்ளி

இரவில்
காதலுடன் தேகத்தினுள்
அனுமதியின்றி நுழைந்து சிலிர்ப்பூட்டி

தனிமையிலும்
உணர்வுகளை பகிர்ந்து கொண்டது
ஆடி மாத காற்று.

---

ஆடி மாதமென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நினைவிற்கு வரும். இன்று எல்லாவற்றையும் தள்ளி விட்டு, தள்ளுபடி நிற்கும்படி வர்த்தக நிறுவனங்கள் முண்டியடித்து நிற்கின்றன. கடந்த சில நாட்களாக, எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேனோ, அப்படி இருக்கிறது வானிலை. அருமை.

ஆடி ஒன்றாம் தேதி மகேந்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் அவருடைய வட்டார ஆடி விசேஷத்தை பற்றி சொன்னார். நன்றாக இருந்தது. இதை நான் பார்த்ததும் இல்லை, கொண்டாடியதும் இல்லையே’ன்னு லேசா ஒரு வருத்தமும் இருந்தது. அதற்கு அடுத்த நாள், கலைஞர் செய்திகளில் கரூர் அமராவதி கரையோரம் கொண்டாடியதாக அந்த விசேஷத்தை காட்டினார்கள்.

ஆடி ஒண்ணு பற்றி மகேந்திரன்...

---

ஆடி ஒண்ணு - லீவு போட்டு கொண்டாடினீர்களா? பணத்துக்கு பின்னால ஓட ஆரம்பிச்ச பிறகு ஆடி ஒண்ணாவது ரெண்டாவது. இதுக்கெல்லாமா லீவு போட முடியும்? அப்படியே போட்டாலும், ஆடி ஒண்ணுன்னு எப்படி என் மராத்தி மேனேஜருக்கு புரிய வைப்பேன்? என்ன விசேஷம்னு கேக்குறிங்களா? அதெல்லாம் பழைய கதை.. இப்போ யாருக்குமே தெரியுறதில்ல.. தெரிஞ்சாலும் செய்யறதில்ல. விஷயத்துக்கு வரேன்.

நானெல்லாம் சின்ன பயலா இருக்கும் போது எங்க ஊருல ஆடி ஒண்ணு கொண்டாட்டம் அமர்க்களமா இருக்கும். இந்த வழக்கம் சேலத்தில மட்டும்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளூர் விடுமுறை. ஒருவாரத்துக்கு முன்னையே எல்லா கடைகள்ளேயும் ஆள் உயர குச்சி ஒண்ணு மஞ்சள் எல்லாம் தடவி விற்பனைக்கு வெச்சிருப்பாங்க. புதுசா ஊருக்கு வர்ற யாருக்குமே அது எதுக்குன்னு தலைகீழ யோசிச்சாலும் புரியாது.

"அழிஞ்சி" என்ற ஒரு மரத்தின் உறுதியான குச்சி. நெருப்பில் போட்டாலும் லேசுல எரியாது. அந்த குச்சில யாரையும் அடிக்கக்கூட மாட்டாங்க. "அழிஞ்சி" குச்சில அடிச்சா அழிஞ்சி போயிடுவாங்களாம்.. நல்லாருக்கில்ல?? வீட்டுல எத்தனை குழந்தைகள் இருக்காங்களோ அத்தனை குச்சி வாங்குவோம். பெரியவங்களும் வாங்குவாங்க.

ஆடி ஒண்ணு அன்னிக்கு மதியமா, நல்ல தேர்ந்தெடுத்த இளம் தேங்காய் எடுத்து, தரையில கொஞ்சம் மணல் போட்டு அழுந்த எல்லாப்பக்கமும் தேய்ப்போம். (தேங்காய் உரைக்கிறது). நல்லா மொழுமொழுன்னு (விஜய் பாட்ட யோசிக்காதிங்க) வந்த உடன கழுவி, அந்த மூணு கண்ணுல ஒண்ணை ஓட்டை போட்டு தண்ணிய எல்லாம் வெளிய எடுப்போம். "தீனி" ன்னு ஒண்ணு, பச்சரிசி, அவல், பயத்தம் பருப்பு, பொட்டுகடலை, வெல்லம்,எள்ளு எல்லாம் பச்சையா கலந்திருக்கும். அதை அந்த தேங்காய் ஓட்டை வழியா, கொஞ்ச கொஞ்சமா ஒரு கோணி ஊசி இல்லன்னா மயிர்கோதி வெச்சி திணிப்பாங்க. வழக்கமா வீட்டுல இருக்குற பாட்டி, தாத்தா தான் இதை செய்வாங்க. இப்போ யார் வீட்டுலயும் மயிர்கோதியும் இல்ல தாத்தா பாட்டியும் இல்ல.!!

தீனி அடைக்கும் போதே அந்த தேங்காய் தண்ணியையும் கொஞ்ச கொஞ்சமா உள்ளேயே ஊத்திடுவாங்க. அது நிறைஞ்ச உடன் அந்த குச்சியின் ஒரு முனைய கூரா சீவி (ஏற்கனவே சீவி தான் இருக்கும்) தேங்காயின் துளையை அடைப்பாங்க. பிறகு அதுக்கொரு மஞ்சள் நீராட்டுவிழா.

தேங்காய்க்கு பொட்டு எல்லாம் வெச்சி ரெடியா வெச்சிட்டு எல்லாப்பசங்களும் தெருத்தெருவா போய் எரிக்கிற மாதிரி ஓலை, மரம் எல்லாம் சேகரிச்சிட்டு வந்து, தெருவில கூடுவோம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போகியைப்போல எரிச்சி தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரும் ஒண்ணா கூடி அந்த தேங்காய்களை சுடுவோம். ஆடி ஒண்ணு எப்படியாவது மழை வந்தே வந்துவிடும். மேக மூட்டமா இருக்குற நேரத்தில அந்த நெருப்போட அனலில தேங்காய சுடுற சுகம்.. தேங்காய் நல்லா வெந்து, உள்ள இருக்குற தீனி எல்லாம் வெந்து ஓடு விரிசல் விட்டு நல்ல வாசம் வரும்.

அப்புறம் வெச்சி சாமி கும்பிட்டு வீட்டுல எல்லோரும் உட்கார்ந்து உடச்சி சாப்பிடுவோம். எல்லா வீட்டிலும் அதே தீனி, அதே தேங்காய்னாலும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ருசியிருக்கும். மனுஷங்க மாதிரியே. சாப்பிடுற நேரத்தில கண்டிப்பா மழை வரும். மழை விட்ட பிறகு அந்த அழிஞ்சி குச்சிகளை வெச்சி ரோட்டில கல்லா மண்ணா விளையாட போவோம். அக்கா தங்கை வீட்டில இருந்தா கூட ஒரு குச்சி சேர்த்து விளையாட கிடைக்கும். தெரு முனை வரை போய் விளையாடிவிட்டு, தோற்றவன் அங்கிருந்து நொண்டி அடிச்சிகிட்டே வருவான். நாங்கெல்லாம் பின்னாடி ஆடிகிட்டே வருவோம்.

இப்போ எந்த தெருவிலயும் தேங்காய் சுடுறத பாக்க முடியல. என்னை மாதிரி ஆதங்கபடுறவங்க கூட அடுத்த வீட்டுக்கு வாசம் வராம காஸ் அடுப்புல வெச்சி சுடுறாங்க. இன்னைக்கும் ஆடி ஒண்ணு அன்று, என்னைப்போல எத்தனையோ பேரு நினைச்சாலும் கொண்டாட முடியாத தூரத்தில உட்கார்ந்துகிட்டு பழச நினைச்சிக்கிட்டு இருக்கோம். இதெல்லாம் யோசிச்சி பார்க்கும் போது, இப்படி நாம கைவிட்ட வழக்கங்கள எல்லாம் தொகுத்தாலே சிந்து சமவெளி நாகரீகம் மாதிரி புதுப்பெயரோட ஒரு நாகரீகம் கிடைக்கும்.. என்ன சொல்றீங்க??

Monday, July 20, 2009

மெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவில் நான்

மணிரத்னம் இப்ப ராவணன் படம் எடுத்துட்டு இருக்காரு. இதுக்கு அப்புறம் அவரு எடுக்கப்போற படத்தோட கதை இந்த பதிவுல.

ராஜஸ்தான் மாநிலத்தில் சூட்டோடு புழுதி கிளப்பும் ஒரு பாலைவன கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவுங்க சீமா பிஸ்வாஸ். இவுங்களுக்கு ஒரு வயசான கேரக்டர் கொடுக்குறோம். தலை பூரா வெள்ளை முடி வைச்சு மேக்கப். இவுங்க பொண்ணு ஹேமாமாலினி. முதல்ல வருற ரெண்டு ரீல, ப்ளாக்-அண்ட்-வொயிட்ல ஓட்டுறோம். அப்ப சீமா-ஹேமாமாலினி பேமிலி, கிராமத்துக்கு குறுக்க போன நேஷனல் ஹைவேயில ஓட்டல் வச்சு வியாபாரம் பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு சமயம் பஞ்சாப் போற ஒரு லாரில வந்த சிங், அதான் நம்ம தர்மேந்திரா அந்த ஓட்டலுக்கு சாப்பிட வாராரு. வந்தவரு ஹேமாமாலினியோட லவ்ஸ் ஆகி, அவர கூட்டிட்டு பஞ்சாப் போயிடுறாரு.

பஞ்சாப்ல குடும்பம், குட்டின்னு வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்திச்சு. ஆனா, விதி போட்ட குத்தாட்டத்துல அந்த குடும்பமே ஒரு மத கலவரத்துல இறந்துருறாங்க. அவுங்க குட்டி பொண்ணு மட்டும் பிழைக்குறாங்க. பிறகு, தர்மேந்திரா உறவினர்கள், அந்த பொண்ண சீமா பிஸ்வாஸ்க்கிட்டயே விட்டுடுறாங்க. சீமா, பேத்தியை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிறாங்க. தன்னந்தனியா கடையையும் பார்த்துக்கிறாங்க.

பொண்ணு வளர்ந்து ஐஸ்வர்யா ராயா மாறுது. ஹம்பில ஒரு டான்ஸ் போடுது. பாட்டிக்கு ஒத்தாசையா ஒட்டல பாத்துக்குது. ஆனா, பாட்டிக்கு அதுல இஷ்டம் இல்ல. கடையில யாருகூடயும் பேச விடுறதும் இல்ல. ஏன்னா, பொண்ண இழந்தது மாதிரி பேத்தியையும் இழந்துற கூடாதே?

இங்க தான் கதைய ஆரம்பிக்குறோம். அந்த கிராமத்துக்கு மாதவன் வாராரு. அவரு ஒரு தொல்துறை ஆராய்ச்சியாளர். கதைப்படி இவரு தமிழ்நாட்டை சேர்ந்தவரு. இவர ராஜஸ்தான் பாலைவனத்துல நிக்க வச்சி கருப்பாக்குறோம். கதையில இவரு டெய்லி ஐஸ்வர்யா ராய் ஓட்டல்ல தான் சாப்பிடுறாரு. ஒரு சமயம் ’எப்பப் பார்த்தாலும், இந்த சப்பாத்தி தானா?’ன்னு மாதவன் சலிச்சுக்கும் போது, ஐஸ்வர்யா ’வேணும்ன்னா கிச்சன் போயி நீங்களே சமைச்சுக்கோங்க’ என்கிறார். ரோஷத்தில் மாதவனும் தமிழ்நாட்டு ஸ்பெஷல் வடை செய்து காட்டுகிறார். எப்படி செய்வதுன்னும் சொல்லி காட்டுறாரு.

சீமாக்கு வடையும் பிடிச்சு போச்சு. மாதவனும் பிடிச்சு போச்சு. மூணு பேரும் நெருக்கமாயிடுறாங்க. மாதவன் அடிக்கடி போறாரு. சாப்பிடுறாரு. பேசுறாரு. சீமாவுக்கு தெரியாம, ஐஸ்வர்யா ராயை மயக்கி, தன்னோடு மும்பைக்கு கூட்டிட்டு போயிடுறாரு. ஆப்பம் சுட்ட சீமா பிஸ்வாஸுக்கு ஆப்பு.

இனி மும்பைய காட்டுறோம். இங்க மாதவனோட பக்கத்து வீட்டுல தங்கியிருக்காரு, அபிஷேக் பச்சன். என்னது, மாதவன் ஹீரோ இல்லையா?ன்னு ஷாக் ஆகிறீங்களா? அப்படித்தான். ஏன்னா, இங்க ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். டைரக்டரு மணிரத்னம்.

மும்பை வந்ததுக்கப்புறம் ஐஸ்வர்யாவுக்கு மாதவன பிடிக்கலை. தன்னை பாட்டிக்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரேன்னு வருத்தம், கோபம். இந்த சமயத்துல அபிஷேக், மாதவனுக்கு வேலை விஷயமா ப்ரெண்ட் ஆகுறாரு. நிறைய பேசுறாங்க. வெளியே சுத்துறாங்க. ஒருநாள், ஓட்டல்ல ரெண்டு பேரும் சேர்ந்து தண்ணி அடிக்குறாங்க. மாதவன் தண்ணி அடிச்சிட்டு உளறும் போது, அபிஷேக் நீங்க உளறுறது கூட கவிதை என்கிறார். போதையில், மகிழ்ச்சியில் மாதவன் பாட ஆரம்பிக்கிறார். இதுக்கு, ரஹ்மான்கிட்ட இருந்து சுபி, அரபி, வெஸ்டர்ன் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு காக்டெயில் ட்யூன் வாங்குறோம்.

பாட்டுல அப்படியே, தான் ராஜஸ்தான் போனது, சீமா ஓட்டலுக்கு போனது, ஐஸ்வர்யா ராயை சந்திச்சது, ஏமாத்தி கூட்டிட்டு வந்தது, வந்தபிறகு ஐஸ்வர்யா விருப்பமில்லாமல் இருப்பது எல்லாத்தையும் பாடுறாரு. இங்கத்தான் ட்விஸ்ட். ஏற்கனவே, அபிஷேக்குக்கு ஐஸ்வர்யா மேல ஒரு காதல் இருக்குது. ஆனா, மாதவன் மனைவின்னு கட்டுபடுத்திக்கிட்டு இருக்காரு. இப்ப, உண்மை தெரிஞ்சோன்ன, முடிவு பண்ணிருறாரு. கட்டுனா, ஐஸ்வர்யா... அதுவரைக்கும் நோ சாயா...

இனி கிளைமாக்ஸ் தான் பாக்கி. தண்ணி அடிச்சப்ப, மாதவன் கிட்ட இருந்து கறந்த விஷயங்களை, அதாவது மாதவன் பத்தின பலவீனங்களை யூஸ் பண்ணி, ஐஸ்வர்யாவை காப்பாத்தி, கல்யாணம் பண்ணி, ஜோடியா ராஜஸ்தானுக்கு சீமாவை பார்க்க கூட்டி செல்கிறார்.

இது என்ன கதை? இதுல என்ன இருக்குன்னு தலையில அடிச்சிக்கிறீங்களா? கதை சுமாரா இருந்தாலும், இசை, வசனம், ஒளிப்பதிவு, லொக்கேஷன்னு மேக்கிங்ல கலக்குவோம்ல.

சரி, இந்த கதையை ஏன் மணிரத்னம் எடுக்கணும்?

இல்ல, அவர்தான் எடுக்கணும். ஏன்னா, அவரு எடுக்குற மாதிரியான கதை. அவரு எடுக்க வேண்டிய கதை இது.

இதுல என்ன ஸ்பெஷல்?

ஏன்னா,

ஏன்னா,

இது பாட்டி சுட்ட வடையை சுட்ட காக்கா கதை!

----

நீங்க உண்மையிலேயே முற்போக்கு அறிவாளியா இருந்தா, இந்த கதையில வருற குறியீடுகள கண்டுப்பிடிச்சிருக்கணும். For example, இங்க வடைங்கறது ஒரு குறியீடு, மாதவனோட கருப்பு கலர் ஒரு குறியீடு, மாதவன் மப்புல உளறுனத, அபிஷேக் புகழ்ந்தது இன்னொரு குறியீடு.

என்ன, நான் மெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவில் இருக்க வேண்டிய ஆளுதானே? :-)

Friday, July 17, 2009

வெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...

இன்று காலை எட்டு மணிவாக்கில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தினசரி காலண்டரில் என் ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இருந்தபோதே நினைத்தேன். இதுப்போல் ஏதாவது நடக்கும் என்று. சிறிது நேரத்தில் நடந்து விட்டது.

நான் எவ்வளவு லக்கி? கொடுத்து வைத்தவன்.

கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

இந்த இந்திய பெருந்தேசத்தில், கோடானு கோடி மக்கள் மத்தியில் ஒரு சில பேருக்கு மட்டும் கிடைக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு, எனக்கு கிடைத்ததென்றால் சும்மாவா?

போதும் நிறுத்து! அப்படி என்னத்தான் நடந்தது என்கிறீர்களா?

மூணு மாசம் கழிச்சி வருற தீபாவளிக்கு ஊருக்கு போக, ரயில்ல டிக்கெட் கிடைச்சிடுச்சு! :-)

வாணி ஜெயராம் - யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது?

மகேந்திரனின் நெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல் பதிவின் பின்னூட்டங்களை பார்த்தப்போது தான், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது?, பாடலுக்கு இருக்கும் பெருமையும் அருமையும் எனக்கு தெரிந்தது. நான் அவ்வளவாக கேட்காத பாடல். தற்போது கேட்க தூண்டிய மகேந்திரனுக்கு நன்றி.

இனி பாடலைப் பற்றி மகேந்திரன்.

----

மீண்டும் வாணியைப் பற்றிய ஒரு பதிவு. எழுதவேண்டுமென்றால் அவரைப்பற்றி மட்டுமே இன்னுமொரு ஆயிரம் பதிவு எழுதலாம். நான் சில சமயம் யோசிப்பதுண்டு. இத்தனை திறமையான இனிமையான பாடகிக்கு ஏன் குறிப்பிடும்படியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று. என் வீட்டு வேப்பமரத்தில் மட்டுமே அமர்ந்து கூவ வேண்டுமென்று நானொரு குயிலை கட்டுக்குள் வைக்க முடியுமா? வாணியும் கூட அப்படித்தான்.வேலூர் மாவட்டத்தில் பிறந்த வாணி, கல்லூரி முடித்தது சென்னையில். திருமணத்தின் முன்பு குடும்பத்தின் சம்பிரதாயமாக கற்ற இசை அவருக்குள் மட்டுமே இருந்தது. திருமணம் முடிந்து கணவரின் பணி நிமித்தம் காரணமாக பம்பாய்க்கு பயணம். அதன் பின் துவங்கியது வாணியின் இசையுலகப்பிரவேசம். இசையுலக விற்பன்னர்களே வியக்கும் வண்ணம் தினமும் 18 மணி நேரம் சாதகம். எல்லாமுமாக சேர்ந்து அவரை 16 இந்திய மொழிகளில் பாட வைத்தது. இனி அவரின் இன்னொரு பாடல்...

இப்போது ஒரு குறுந்தகட்டில் 140 பாடல்களை வைத்துக்கொண்டிருப்பதால் அவற்றின் மதிப்பு நமக்கு தெரிவதில்லை. சிறுவயதில் ஒலிநாடாக்கள் எளிதாக புழங்குவதற்கு முன், சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்ட பாடல் ஒன்று. ஒவ்வொரு முறையும் மீண்டும் கேட்க மாட்டோமா என்றிருக்கும். அப்படி காத்திருந்து கேட்டதால் தானோ என்னவோ, இன்னும் மனதை விட்டு இறங்காமல் அடம் பிடித்து அமர்ந்திருக்கிறது.

எப்போது இந்தப்பாடலை பற்றி நினைத்தாலும் திரு. பி.ஹச். அப்துல் ஹமீது அவர்களின் குரலும் நினைவில் வரும். ஏனென்று தெரியவில்லை. பாடல் இடம்பெற்ற படம் "நெஞ்சமெல்லாம் நீயே" (1983). பாடல் "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?.." சங்கர் கணேஷ் இசையமைப்பில் வாணி பாடிய பாடல்.

இன்னும் கூட நிறைய பேர் இது ராஜாவின் பாடல் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். இதன் இசைக்கோர்வை அப்படி. பாடல் முழுவதுமே பயன்படுத்தியிருக்கும் வயலின், சீரான நடையில் தபேலா எல்லாவற்றிலும் ராஜாவின் சாயல் இருக்கும். தமிழில் வாணிக்கு நிறைய பாடல் கொடுத்து, அவரை முழுமையாக பயன்படுத்திக்கொண்டவர்கள் சங்கர்-கணேஷ்.

வாணியின் ஹிந்துஸ்தானித் திறமை முழுவதையும் வெளிக்கொணரும் பொருட்டு அவருக்கென்றே பாடல் அமைப்பார்கள். எல்லாப்பாடல்களின் இடையிலும் ஒரு ஆலாபனை. இந்தப்பாடலின் சரணத்தின் கூட முதல் வரி முடிந்து ஒரு ஆலாபனைக்கு பின் அடுத்த வரி துவங்கும்.

எனக்கு ஒரு வழக்கமுண்டு, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை கேட்கும் போது கண்மூடி, அதை எனக்கு தெரிந்த யாராவது பாடுவது போல கற்பனை செய்து பார்ப்பேன். வாணியின் முகம் எனக்கு பரிச்சயமாவதற்கு முன்பே குரல் பரிச்சயப்பட்டு விட்டதால், நானே அதற்கொரு முகம் கொடுத்தேன்.. பின்பொரு நாளில் வாணியின் படத்தைப் பார்த்தபோது அவர் அதை விட மிகுந்த அழகாயிருந்தார்.

வாணி, 80 களின் துவக்கத்தில் கச்சேரிகளுக்காக எங்கள் ஊர் வருகையில், கர்நாடக சங்கீதம் சற்றும் அறிந்திராத கூட்டம் (என் தந்தை உட்பட) இறுதியாக அவர் பாடப்போகும் ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், மல்லிகை என் மன்னன் மயங்கும், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது? போன்ற பாடல்களுக்காக இறுதிவரை அசையாமல் இருக்குமாம்.

இந்தப்பாடல் எப்போதுமே அந்திப்பொழுதில் கேட்டதாலோ, இல்லை பாடலின் இயல்பே அப்படியோ தெரியவில்லை. கேட்கும் பொழுதெல்லாம் அதை சாயங்காலமாகவே மனம் உணரும். கோரஸ் வயலின்களுடன் துவங்கும் பாடல் நம் கையைப்பிடித்து இழுப்பது போல ஒரு பிரமை அளிக்கும். யாரது என்பதை மட்டுமே வெவ்வேறு விதங்களில் பாடியிருப்பார்..திறமையான பாடகியை (ராதா) மனைவியாக அடையப்பெற்ற ஒரு ஈகோ நிறைந்த கணவனைப் பற்றிய (மோகன்) கதை. எத்தனை கஷ்டப்படுத்தினாலும் அவள் கணவன் மேல் மாறாத நிறைந்த அன்புடையவள். அவளின் அன்பு ஒரு நீரூற்றைப்போல பாடலில் வெளிப்படும்.

சில சமயம், அம்மாக்கள் கண்முன்னே பிள்ளையை வைத்துக்கொண்டு, எங்க பாப்பா?.. எங்க போயிருப்பா? காணலியே.. என்று விளையாட்டாக தேடுவது போல, நீதான் என்னை முழுவதுமாக அள்ளிச்சென்றாய்.. உன்னைத்தவிர ஒருபோதும் யாரும் என்னை தீண்டிவிட முடியாது.. இருந்தாலும் கேட்டு வைப்பேன் என்ற ரீதியில் பாடல் துவங்கும்..

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது??..!!

நீ திருப்பித்தரவேண்டாம்.. தந்தாலும் வாங்க மாட்டேன் என்பது உனக்கும் தெரியும்..
இருந்தாலும் அடுத்த வரியில் இப்படிச்சொல்வேன்..

தாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..!!வேறு யாருமே பழக்கமில்லாத முற்றிலும் புதிதான ஒரு ஊரில், உங்கள் துணையுடன் நீங்கள் கைகோர்த்து நடக்கும் ஒரு அந்திப்பொழுதில், பிறர் கேட்காவண்ணம் மிக மெலிதாக, நீங்களே எதிர்பாராத பொழுதில் அவள் பாடத்துவங்கினால் எப்படி இருக்கும்?? இப்படித்தான் இருக்கும்..

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது?
தாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது??

மார்கழிப்பூக்கள் என்னைத்தீண்டும்...
மார்கழிப்பூக்கள் என்னைத்தீண்டும் நேரமே..
தேன்தரும் மேகம் வந்து போகும்,
சிந்து பாடும் இன்பமே..
ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல்வரும்
கார்காலம் போதை தரும்..

தாமரை ஓடை இன்ப வாடை..
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே..
செவ்விதழ் ஓரம் இந்தநேரம்
இன்பசாரம் ஊறுதே..
ஆளானதால் வந்த தொல்லை.. காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை..

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது?
தாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது??


-மகேந்திரன்.

பாடலை ரசிக்க படத்தை க்ளிக் செய்யவும்.

Thursday, July 16, 2009

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

பொதுவா சினிமாவில் நாயகியை பற்றிய பாட்டுனா, அவ ரொம்ப அழகு, ஆஹா, ஒஹோ அப்படின்னு தான் நம்ம கவிஞர்கள் எழுதுவாங்க. அதனால் தான் என்னவோ, அங்காடி தெருவில் வரும் இந்த பாட்டு கவனத்தை இழுத்தது.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை


பாடல் முழுக்க இப்படியே. ரஹ்மான் குடும்பத்தில் இருந்து வரும் இசையமைப்பாளர் என்றபோது எனக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் மேலான எதிர்ப்பார்ப்பு வேறு மாதிரி இருந்தது. வெயில், கீரிடம் என்று அவரிடம் இருந்து வந்த பாடல்களில் மின்னியது மெலடி மெல்லிசை பாடல்கள். அதனாலேயே, அவர் படப்பாடல்கள் என்றால் ஒரு கவனம் இருக்கும். ஆனால், குசேலன், காளை, சேவல் என்று அதன்பிறகு தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருந்தார்.

வெயிலை தொடர்ந்து இப்போது அங்காடி தெருவில் வசந்தபாலனும் பிரகாஷும் சந்தித்துயிருக்கிறார்கள். இதிலும், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கதைகளை பேசும் விழி அருகே, உன் பேரை சொல்லும்போதே, எங்கே போவேனோ? என்று நான்கு மெலடி மெட்டுக்களில் தாலாட்டியிருக்கிறார்.

இசை சிறப்பாக அமைய, இயக்குனரின் பங்கு எவ்ளோ முக்கியம்?!

----

மதியம் ஏதாவது ஈடுபாடில்லாத வேலையை செய்து கொண்டிருந்தால், ஒரு அசதி வந்து தூக்கத்தில் கவிழ்க்க பார்க்கும். அதில் சிக்காமல் தப்பிப்பதற்கு சில நிவாரணிகள் இருக்கின்றது. இன்றைய காலக்கட்டத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் அப்படி ஒன்று. கொஞ்ச நாள் முன்பு, இப்படித்தான் வில்லு உபயோகித்து வந்தேன். டாடி மம்மி பாட்டின் பீட்டிற்கு, மேஜையை தட்ட போய், பக்கத்து இருந்தவர் எட்டிப்பார்த்தார். இப்ப அப்படி சிக்கி இருப்பது, கந்தசாமி.

கந்த கந்த கந்த கந்த கந்தசாமி, மியாவ் மியாவ், என் பேரு மீனாக்குமாரி, அலைக்ரா-இந்திய பொண்ணுதாங்கோ பாடல்களில் அதிர அதிர இசையமைத்திருக்கிறார். எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி, மம்போ மாமியா, சொல்லாமல் சொல்லுவான் பாடல்களில் ஏதும் விசேஷத்தை நான் காணவில்லை. இதெல்லாம் டூப்பு - தேவியின் பேட்டா ராப்பு. விக்ரம் பாடாத பாடல்கள், ஏனோ சிறப்பாக இருக்கிறது.

ஒன் - நம் முத்தம் ஒண்ணு
டூ - அதில் எச்சில் ரெண்டு
த்ரீ - அந்த போதையில் மறக்கும் காலம் மூணு

ஒன் - உன் மேனி ஒண்ணு
டூ - ....


இப்படி, இதுக்கு மேல எழுதியதற்கு கவிஞர் விவேகாவிற்கு, மதுரையின் அரசர் சத்யராஜிடம் ஆயிரம் பொற்காசுகள் வாங்கி கொடுக்கலாம்.

----

ரொம்ப எதிர்பார்த்து ஒருவழியாக பாடல்கள் வந்துவிட்டது. பாடல்கள் எதிர்பார்ப்பை இன்னமும் எகிற வைத்துவிட்டது. ஆயிரத்தில் ஒருவன். இதற்கு, யுவன் இல்லை, ஜி.வி. பிரகாஷ் என்றபோது ஒரு வருத்தம் இருந்தது. இதற்கு முன்னால், அன்னியன் படத்தின் போது இது போல் இருந்தது. பிரகாஷ் குறுகிய காலத்தில் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றவர். உண்மையிலேயே அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது இந்த படம். அவர் இசைவாழ்வில் மைல் கல்லாக இருக்க போவது - ஆயிரத்தில் ஒருவன்.

ஒவ்வொரு பாட்டின் தலைப்புமே, பயங்கர பில்-டப்பாக இருக்கிறது. Celebration of Life, Composer's Mix, Govinda - Club mix, The King Arrives. நாங்க படம் மட்டுமா, ஹாலிவுட் மாதிரி எடுப்போம்? பாட்டே அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். The King Arrives இசையை கேட்டு மிரண்டு, பக்கத்தில் இருந்தவனையும் மிரள வைக்கலாம் என்று கேட்க வைக்க, அவன் இது ஒரு ஆங்கில பாட்டில் இருந்து உருவியது என்று எனக்கு ஆப்பு வைத்தான். யாராவது உண்மையை சொல்லுங்க. இருந்தாலும் கேட்காமல் இருக்க போவதில்லை. இதில் இசையின் இடையில் நமது தலையில் ஆணி அடிப்பது போல உணர வைப்பது - டெக்னாலஜி மிரட்டல்.

உன் மேல ஆசைத்தான் பாடலை தனுஷ், மனைவி ஐஸ்வர்யா, நாயகி ஆண்ட்ரியா ஆகியோருடன் பாடியிருக்கிறார். இந்த பாட்டுக்கும், சர்வத்தில் இளையராஜா பாடிய அடடா வா அசத்தலாம் பாட்டுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுப்பிடிப்பது, குமுதத்தில் ஆறு வித்தியாசங்கள் கண்டுப்பிடிப்பதை விட கஷ்டம். அதிலும் ஆண்ட்ரியா. இந்த படத்தில் இதற்கு முன்னால் யுவன் இசையமைத்தற்கும், இந்த ஒற்றுமைக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா?

இந்த படத்தின் பெரும்பாலான பாடல்களை எழுதியது செல்வராகவன். அவருடைய அனைத்து படங்களிலும் பாடல்களை நிறைய திருத்தங்கள் செயவது அவர்தானாம். இதிலும் அப்படி செய்ய, கேசட்டில் அவர் பெயரை போட்டு விட்டாராம் பிரகாஷ். நம்புற மாதிரி இல்லனாலும், எங்கோ படித்தது. பாடல் வரிகள் மட்டுமில்லை. இசையும் அப்படித்தான் இருக்கிறது. ஆங்காங்கே, செல்வராகவனை காணலாம். அடுத்த படத்தில் அவர் பெயரைப் போட்டுவிடலாம்.

Wednesday, July 15, 2009

சமுத்திரக்கனியின் நட்பிலக்கணம்

சென்ற வார ‘நீயா நானா’வில் நட்பை பற்றி கலந்துரையாடினார்கள். நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று குரூப்பும் நட்பென்றாலும் அதில் ஒரு லிமிட் வேண்டும் என்று மற்றொரு குரூப்பும் பேசினார்கள். ஆனால் அவர்கள் பேசியதை விட சிறப்பு விருந்தினர்களாக வந்த ’நாடோடிகள்’ இயக்குனர் சமுத்திரக்கனியும் ’குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ நாயகன் ராமகிருஷ்ணனும் அதிகம் பேசினார்கள். காரசாரமாக விவாதம் செய்து கொண்டார்கள். நட்பில் லிமிட் பார்க்கக்கூடாது என்று சமுத்திரக்கனியும் லிமிட் தேவை என்று ராமகிருஷ்ணனும்.

சமுத்திரக்கனியும் ராமகிருஷ்ணனும் பல வருட நண்பர்கள். அவர்களின் அதீத ஆர்வ பங்கேற்பிற்கு இதுவும் ஒரு காரணம். இருவரும் வாடா போடா என்று பேசிகொண்டது எனக்கு ஆச்சரியமளித்தது. ஏனெனில், ராமகிருஷ்ணன் படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்தார்.

சமுத்திரக்கனி சொன்னது “நண்பர்களிடம் பிரதிபலன் பார்த்து பழக கூடாது (சரி). நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போ. நான் உனக்காக எதையும் செய்யும்படிதான் இருப்பேன். (இதுதான் உதைக்குது)”அதாவது அவருடன் ஒன்றாக படுத்துறங்கிய நண்பன், காலையில் அவர் பார்க்க இருந்த தயாரிப்பாளரிடம் அவருக்கு முன்னால் சென்று கதை சொன்னாராம். பின்னால், அந்த நண்பன் உதவி கேட்டு வந்த போது, இவர் அவருக்கு உதவினாராம்.

தனக்கு தீங்கிழைத்த நண்பனை பழிவாங்க நினைக்காமல் உதவி செய்தது நல்ல விஷயம். நண்பன் என்றில்லை. எந்த மனிதனாக இருந்தாலும் கஷ்டத்தில் உதவலாம். ஆனால், திரும்ப திரும்ப எப்படிப்பட்டவனாக இருந்தாலும், எவ்வளவு துரோகம் இழைத்தாலும், நண்பனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று சொன்னது தான் எனக்கு சரியாகப்படவில்லை. திரும்ப திரும்ப உதவி செய்வதற்கு மனிதாபிமானம் காரணமாக இருக்கலாம். அதற்கு நட்பென்ற மூலாம் எதற்கு?

நாடோடிகள் படத்தில் இருந்து என்ன கற்று கொண்டீர்கள்? நான் படத்தின் கருத்தாக எடுத்துக்கொண்டது - நண்பனுக்காகவும் நண்பனின் நண்பனுக்காகவும் உயிரை பணயம் வைத்து உதவி செய்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் பெரிய இழப்புகளை சந்திக்கிறார்கள். ஆனால், செய்த உதவி பலனற்று போகிறது. அதனால் செய்யும் உதவியின் முக்கியத்துவம் கருதி உதவி செய்யவேண்டும்.

அதன் பிறகு படத்தில் காட்டியது - உதவி செய்து உதாசீனப்படுத்திய நண்பனைக் கூட்டி பாடம் நடத்தி அனுப்பி விட்டு, இன்னொரு உதவிக்கு கிளம்புகிறார்கள். வேற வழியில்லை. படத்தை அப்படித்தான் முடிக்க முடியும். வெளியே வரும்போது ரசிகன், நன்றாக பீல் பண்ண வேண்டும் அல்லவா? ஆனால், இதுவா வாழ்க்கைக்கான பாடம்? தவறில் இருந்து எது சரி என்று கற்றுக்கொள்ள வேண்டாமா?

சரி, விடுங்க. படம் பார்த்தோமா, என்ஜாய் பண்ணோமா என்றில்லை இதென்ன? ஒ.கே.ஆனால், இதையே தான் அந்த நிகழ்ச்சியிலும் வந்து பேசி கொண்டிருந்தார். ராமகிருஷ்ணனும் மற்றவர்களும் என் நண்பன் என்னை ஏமாற்றி விட்டான். நான் எதற்கு உதவ வேண்டும்? என்றால் ‘அப்படியென்றால் அவன் நண்பனே இல்லை’ என்று விளக்கம் கொடுப்பதும், ஆனால் அதையே அவர் நண்பன் செய்தால் ’அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். ஏனெனில் அவன் என் நண்பன். நட்பு.’ என்று ஓவராக பொங்கிக்கொண்டிருந்தார். லாஜிக்கே இல்லாமல் பேசி கைத்தட்டல் வாங்கி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தான் தங்கள் அணி சார்பில் எதை சொன்னாலும் கைத்தட்டுவார்களே!

நண்பனுக்கு உதவ போய் நீ கஷ்டப்படலாம். ஏன்னா, அவன் உன் நண்பன். உன் குடும்பத்தார்களும் உன்னை சுற்றியிருப்பவர்களும் ஏன் கஷ்டப்படவேண்டும்? நான் நினைப்பது - எந்த உறவா இருந்தாலும் தாமரை இலை மேல் நீர் போல் இருக்க வேண்டும். (இது தவறாக இருக்கலாம். என் அனுபவ அறிவு கம்மி. போகப் போக கற்றுக்கொள்ளலாம்.)எத்தனை முறை என்னை ஏமாற்றினாலும், நான் அப்படியே தான் இருப்பேன் என்று கூறுவது சரியானதா? அனுபவங்களில் இருந்து நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டாமா? ஏமாளி, தியாகி என்று ராமகிருஷ்ணன் கூறினாலும், சமுத்திரக்கனி இது உணர்வுபூர்வமானது என்றார். அறிவுப்பூர்வமாக பார்த்தால், உதவி தேவைப்படும் யாருக்கும் நம்மால் முடிந்த, மற்றவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்தாத உதவிகளை செய்யலாம். நமது உதவியின் முக்கியத்துவத்தை பலனடைந்தவர்கள் புரிந்து நடக்க வேண்டும். இது ஒன்றும் பிரதிபலன் இல்லை. அடிப்படை மனுஷத்தன்மை. இதை சமுத்திரக்கனியிடம் சொன்னால், “இப்படியெல்லாம் யோசிச்சா, அது நட்பே இல்லை” என்பார்.

பாஸ், ஓவர் சென்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது.

பி.கு.: சும்மா சொல்லக்கூடாது. ப்ரோக்ராம் செம ஜாலியா இருந்தது. குறிப்பா, சமுத்திரக்கனி ராமகிருஷ்ணனை தாக்கி பேசிய பேச்சு. நிகழ்ச்சியைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

ரசிச்சு பார்த்தா ஜாலி
யோசிச்சு பார்க்கலைன்னா முடிஞ்சுது ஜோலி!

Monday, July 13, 2009

ஆயிரம் தாமரை மொட்டுகளுடன் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஆயிரம் தாமரை மொட்டுகளுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

----

வைரமுத்துவின் தீவிர ரசிகரான நண்பர் மகேந்திரனின் பேனாவிலிருந்து...

எதையெல்லாமோ எழுதிவிட்டு இதை விட்டு விட்டால், அடுத்த ஜென்மத்தில் எனக்கு பாட்டு கேட்க காதுகள் இல்லாமல் போய்விடும். இசையில் இளமையான இசை என்று ஏதாவது உண்டா? பருவமடைந்த அடுத்த வருடம், ஊர்த்திருவிழாவில் கலந்து கொள்ள ஆவலாயிருக்கிற, தன்னை மட்டுமே எல்லோரும் பார்க்கப்போவதாய் வெட்கம் மிளிர்கிற குமரியின் செழிப்பு இந்தப்படத்தின் இசையில் இருக்கிறது.

அந்தக் கூட்டணி அப்படி.. இளமையான பாரதிராஜா, இன்னும் இளமையான வைரமுத்து, இவர்களுடன் ராஜா சகோதரர்கள்.

பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 1981ல் வெளியான "அலைகள் ஓய்வதில்லை". பாடல் "ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே"

கைத்தட்டல் ஒலியுடன் துவங்கி, மிருதங்கம் தொடர, உச்ச ஸ்ருதியில் சேர்ந்திசை குரல்கள் தொடர்ந்து, பின் மதியம் நல்ல வெயில் நேரத்தில், எதிர்பாராமல் சடசடவென்று பொழிந்து, ஓடி ஒதுங்குவதற்கு முன் சட்டென நிற்கும் மழைபோல, எல்லாமும் ஓய்ந்து ஒரு ரகசிய தொனியில் ஜானகி துவங்கும் ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு மயக்கம் பாடல் முழுவதுமே விரவியிருக்கும்.

படப்பிடிப்பு துவக்குமுன்பே பாடல் பதிவு முடிந்து விடும். முதலில் கதையில் ஒரு பிராமண வாலிபனுக்கும், இஸ்லாமிய யுவதிக்குமான காதல் பற்றிய கரு இருந்தது. எனவே வைரமுத்து "கோயிலில் காதல் தொழுகை" என்று எழுதியிருந்தார். பின்பு திரைக்கதையில் மாற்றம் வந்து கிறிஸ்துவப்பெண்ணாக முடிவு செய்யப்பட பிறகும். பாடல் வரிகளில் மாற்றம் செய்ய யாருக்கும் மனம் இல்லாமல் அப்படியே விட்டு விட்டார்களாம். (வைரமுத்துவின் நேர்காணலிலிருந்து).

கேட்கும் யாருக்குமே முதல் முறையிலேயே பிடித்துப்போகும் மெட்டு. என்னதான் மிருதங்கம், வீணை போன்ற உயர்குடி சமாச்சாரங்கள் இருந்தாலும், பாடலின் மெட்டு ஒரு நாட்டுப்புற கும்மிப்பாடலை சார்ந்திருக்கும். கங்கை அமரன் ராஜாவிடம் மனஸ்தாபம் கொண்ட காலங்களில், "அவர் என்ன பெரிய பாட்டு போட்டுட்டார், எங்க ஊருல முளைப்பாரி எடுக்கும்போது பாடுற கும்மி பாட்ட காப்பி அடிச்சார்.." என்று மூலத்தையும் பாடிக் காட்டினார். ராஜாவே இதை சொன்னாலும் இனி நம்மால் மனதை மாற்றிக்கொள்ள இயலாது தானே??

சேர்ந்திசை குரல்களுக்கென ஒரு மரியாதை கொடுத்தது ராஜாவின் காலத்தில் தான். அதன் ஒரு உதாரணம் இந்த பாடல். ஒரு பரிட்சார்த்த முயற்சியாக சரணம் ஆரம்பிக்கும் போது, வார்த்தைகள் இல்லாமல் ஹம்மிங்கில் துவங்கி பின்பு வார்த்தைகள் சேரும். முதல் சரணத்தின் முடிவில் ஒரு தனித்த வயலின் பகுதி, தொடரும் சேர்ந்திசைகுரல்கள். அதை படமாக்கியிருக்கும் விதம் காதலர்கள் நீருக்குள் நெருங்கி நிற்கும்போது, அவர்களை சுற்றி தாமரைப்பூக்கள் வட்டமிடும். இதற்காக பாரதிராஜாவின் உதவியாளர்கள் (மனோபாலா உட்பட) கையில் தாமரைப்பூவுடன் நீரில் மூழ்கி நடந்தார்களாம்.

இரண்டாவது சரணத்தில், ஹே..வீட்டுக்கிளியே.. எனும்போது பின்னணியில் ராஜா ஒரு குயில் கூவலை பயன்படுத்தியிருப்பார். கூடவே நம் மனதும் கூவும்.. இறுதிப் பல்லவியில், ஜானகி ஆயிரம் தாமரை என்று நிறுத்தி நநநந.. ஆயிரம் தாமரை, நநநந நநந நநந.. என்பார்.. பாடல் முடியப்போகிறதே என்று வருத்தமாயிருக்கும்.

வைரமுத்து பேனாவுக்குள் காதலை ஊற்றி எழுதியிருப்பார். இங்குத் தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று.. சமுத்திரத்தின் நீரெல்லாம் அணைக்கமுடியாமல் தோற்றுப்போகும் தீயை ஒரு மெல்லிய மலரின் தேன் என்னவென்று கேட்டுவிடும் சாமர்த்தியம் காதலில் மட்டும் தானே சாத்தியம்?மிக அழகான ராதா.. இளமையான கார்த்திக்.. ஒருமரத்தை தழுவியிருக்கும் விரல்கள் கோர்க்கும் போது பாடல் துவங்கும். பாடல் படமாக்கப்பட்டது நாகர்கோயில், இரணியல் அருகிலுள்ள ஒரு குளத்தில். என் நண்பனின் தந்தை, எப்போதெல்லாம் இந்தப்பாடலைப்பற்றி பேசுகிறாரோ அப்போதெல்லாம் பரவசப்படுவார், இருக்காதா பின்னே? அதே ஊரை சேர்ந்த அவர், ராதா குளித்த அதே குளத்தில் அவரும் குளித்திருக்கிறாரே..!!!


ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்..
இங்கிரண்டு ஜாதிமல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை..

ஹே.. கொத்துமலர் அமுதம் கொட்டும் மலரே
இங்குத்தேனை ஊற்று இது தீயின் ஊற்று..
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும்..

ஹே.. வீட்டுக்கிளியே கூண்டைவிட்டு தாண்டிவந்தியே..
ஒருகாதல் பாரம் ரெண்டு தோளில் ஏறும்..
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை..
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை..
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்..

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்..
இங்கிரண்டு ஜாதிமல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை..


பாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

சர்ச்சை சாவர்க்கர்

வரலாற்று நிகழ்வை திரும்பி பார்க்கும் போது அதில் பல வியப்புகள் இருக்கும். வியப்பு மேலிடும் போது, இன்னமும் திரும்பி பார்க்கும் ஆர்வம் துளிர்க்கும்.

காந்தியை கோட்சே சுட்டு கொன்ற அன்று, சாவர்க்கரின் வீடு தாக்கப்பட்டது. கோட்சே உறுப்பினராக இருந்த இந்து மஹாசபையை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் சாவர்க்கர். சில நாட்களில் சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு, கோட்சே காந்தியை கொல்லும் முன்பு சாவர்க்கரை சந்தித்தார் என்பதும் சாவர்க்கர் அவரிடம் ‘வென்று வா’ என கூறி ஆசி வழங்கினார் என்பதும். அதாவது காந்தியை கொல்ல வேண்டுமென்பது சாவர்க்கரின் ஆணை என்பது அவர் மேலான குற்றச்சாட்டு. பிறகு, கோட்சே கூறியிருந்த பதிலில் ‘இது தான் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு என்றும் முன்பொருமுறை காந்தியின் கூட்டத்தில் குழப்பம் விளைத்ததற்கே தங்களை சாவர்க்கர் கண்டித்தார்’ எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் சாவர்க்கர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

-----

சில வருடங்கள் கழித்து அவர் இறந்த பிறகு, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, சாவர்க்கர் நினைவாக தபால் தலை வெளியிடப்பட்டது. அவரது நூற்றாண்டு விழா, அந்தமான் சிறைச்சாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிஜேபி ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் காந்தியின் படத்திற்கு எதிரே சாவர்க்கரின் படம் மாட்டப்பட்டது.சாவர்க்கர் யார்? என்ன செய்தார்? அவர் அரசால் கொண்டாடப்படுவதற்கும் தூற்றப்படுவதற்கும் காரணம் என்ன? வேறு வழியில்லை. ப்ளாஷ்பேக் போகத்தான் வேண்டும்.

இலந்தை. சு. இராமசாமியின் ‘வீர் சாவர்க்கர்’.

-----

சாவர்க்கர் மஹாராஷ்ராவில் ஒரு மராத்தி கவிஞருக்கு மகனாக 1883 இல் பிறந்தார். கற்பூர மூளையென்பதால், படிப்பில் கெட்டி. இலக்கியத்திலும் ஆர்வம் அதிகம். புத்தகங்கள் மூலம் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டங்களை அறிந்தார். கல்லூரியில் இது பற்றி பேசினார். கூட்டங்கள் நடத்தினார். அவரை சுற்றி கூட்டம் கூடியது. அபிநவ பாரத் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஆங்கிலேய அரசு, இவர் மேல் ஒரு கண் வைத்தது.

இந்நிலையில் லண்டனில் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் லண்டனுக்கு கப்பலேறினார். அவர் லண்டன் சென்றது படிப்பதற்கு மட்டுமில்லை. அவருக்கு வேறு திட்டங்கள் இருந்தது. வன்முறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தால், ஆயுதங்களை நெருங்குவதற்காகவும் வெளிநாடு சென்றார். தனது இயக்கத்தை கடல் கடந்து கொண்டு சென்றார். லண்டன் சென்று புரட்சிகள் பற்றி, புரட்சியாளர்கள் பற்றி புத்தகங்கள் எழுதினார். துப்பாக்கி சுட கற்று கொண்டார். அங்கு அவருடைய கூட்டாளி, வ.வே.சு. ஐயர். இந்தியர்களை கூட்டி கூட்டங்கள் நடத்தினார். மற்ற வெளிநாடுகளுக்கும் இந்த எழுச்சியை பரவ செய்தார்.

இந்தியாவில் நடப்பதையும் சாவர்க்கர் கவனித்து வந்தார். துப்பாக்கிச் சூடு, கலகம், ஆயுத கொள்முதல் என்று திட்டங்கள் செல்ல, ஒரு கட்டத்தில் சாவர்க்கர் லண்டனில் கைது செய்யப்பட்டார். பிறகு, இந்தியா கொண்டு வரப்பட்டார். வரும் வழியில் கப்பலில் இருந்து குதித்து தப்பிக்க அவர் செய்த முயற்சி, தோல்வியில் முடிந்தாலும் உலகமெங்கும் அவர் புகழ் பரவ செய்தது. இந்தியாவில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை. ஆயுள் தண்டனை. 25 ஆண்டுகள்.

சில காலம் இந்திய சிறையில் அனுபவித்த பிறகு, அந்தமான் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுபவித்த சோதனைகள் ஏராளம். இருந்தாலும் இலக்கிய பணியில் கவனத்தை செலுத்தினார். மற்ற சிறை கைதிகளுக்கு ஆலோசனைகள் கூறினார். சிறைச்சாலை படத்தில் அம்ரிஷ் பூரி ஒரு கொடூரமான கேரக்டரில் வருவாரே? பாரி. வார்டர். அங்கு அவருடைய கொடுமைகள் எக்கச்சக்கம். சாவர்க்கர் சிறையில் அதிகாரிகளை எதிர்த்து செயல்பட்டாலும், கொஞ்சம் அடங்கிதான் சென்றிருக்கிறார். அவருக்கு சிறையை விட்டு வெளியே வருவதில் தான் ஆர்வமிருந்தது. அதற்காக விண்ணப்பிக்கவும் செய்தார்.

ஆனால் அவ்வளவு சீக்கிரமாக அவரை விட்டு விடவில்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு, அவரை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். இந்தியாவில் மூன்று ஆண்டுகள். மொத்தம் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவரின் பார்வை, இந்திய சுதந்திரம் என்பதை விட்டு இந்து மதத்தின் மேல் பதிந்தது. காரணம், சிறையிலும் வெளியிலும் அவர் கண்ட மதமாற்றங்கள். சிறையிலேயே யார் இந்து? என்ற கேள்விக்கு பதிலாக ‘ஹிந்துத்வா’ என்ற புத்தகத்தை எழுதினார். இந்து மதத்தில் இருந்த குறைப்பாடுகளை களைய, சீர்திருத்தங்களை மேற்கொண்டார். முக்கியமாக, தீண்டாமை. அனைத்து சாதியினரையும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வைத்தார். தலித்களை ஆலயப்பிரவேசம் செய்ய வைத்தார். மராத்தி மொழிக்காக இயக்கம் ஆரம்பித்தார்.

83 வயதில் அவர் இறந்தபோது, அவருக்கு அணிவகுப்பு செய்து முழு மரியாதை செய்தது - ஆர்.எஸ்.எஸ்.

-----

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டாலும், இன்று அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிந்தவராக இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பிஜேபி போன்ற இந்து அமைப்புகள் மட்டும் சாவர்க்கரை ஹீரோவாக தூக்கி பிடித்து கொண்டிருப்பதற்கு காரணம் - சிறையில் அடைக்கப்பட்ட பிறகு சாவர்க்கரிடம் ஏற்பட்ட மாற்றம். அஹிம்சை வழியில் போராடிய காந்தி எந்நிலையிலும் தயக்கமின்றி தைரியமாக ஆங்கிலேய அரசை எதிர்த்த போது, வன்முறை வழியில் சென்ற சாவர்க்கர் சிறையில் எழுதிய மன்னிப்பு கடிதங்கள். சர்ச்சைகளை கிளப்பும் ஹிந்துத்துவாவை உருவாக்கியவர் என்ற பெயர். சமூகப்பணியாக இந்துக்களாக இருந்து முஸ்லீமானவர்களை திரும்பவும் இந்துக்களாக மாற்றியது போன்றவைகளேயாகும்.

சாவர்க்கர் என்றாலே சர்ச்சைதான் போலும். சமீபத்தில் கூட மும்பை கடல் பாலத்திற்கு சாவர்க்கர் பெயரை வைக்க சொல்லி வேண்டுகோள் வைக்கப்பட, ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்பட்டது. காந்திக்களுடனான சண்டை சாவர்க்கருக்கு ஓயாது போல. சாவர்க்கர் என்ற புதிரை அவிழ்ப்பது சுலபமில்லை. ஒன்று முழு ஆதரவாக இருக்கும். இல்லையென்றால், முழு எதிர்ப்பாக இருக்கும். அவரை பற்றிய நேர்மையான பார்வை எங்கும் இருக்காதா?

இலந்தை சு. இராமசாமியின் ‘வீர் சாவர்க்கர்’ புத்தகத்தில், ஆசிரியர் சாவர்க்கரின் முழு வாழ்வையும் பதிவு செய்துள்ளார். சிறையில் அவர் அரசுடன் மேற்கொண்ட அணுகுமுறைகள், அவரின் மதரீதியான செயல்பாடுகள் போன்றவற்றிற்கு கூறப்பட்டுள்ள சாதகமான காரணங்களால், இப்புத்தகம் படித்தபிறகு வருவதென்பதோ, ஹீரோ பிம்பம்தான். தமிழில் சாவர்க்கர் பற்றிய ஒரு புத்தகத்தை கொடுத்து, புதிரின் பல முடிச்சுக்களை அவிழ்த்ததற்காக நூலாசிரியர் இலந்தை சு. இராமசாமிக்கு வாழ்த்துக்கள்.

-----

வீர் சாவர்க்கர் - இலந்தை சு. இராமசாமி
கிழக்கு பதிப்பகம்
புத்தகம் வாங்க இங்கே செல்லவும்

Friday, July 10, 2009

நாட்டு சரக்கு - நயன்தாரா டாட்டூ

ஆடி பிறப்பதற்கு பத்து நாட்கள் முன்பே டிவி சானல்களில் ஆடி தள்ளுபடி ஜவுளி விளம்பரங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. சரவணாவில் சினேகா காண்ட்ராக்ட் முடிந்துவிட்டது போலும். இப்போது ஸ்ரீதேவிக்காக ஆடி விளம்பரத்தில் ஆடி கொண்டு இருக்கிறார் (எத்தனை ஆடி?). ராதிகா மேடம் சென்னை சில்க்ஸில் துணி வாங்க சொல்றாங்க. நல்லவேளை, இவுங்க ஆடவில்லை. ஜெயசந்திரனுக்கு லேகா வாஷிங்க்டனும், பூர்ணாவும். போத்தீஸ்க்காக சத்யராஜ் என்ன செய்ய போகிறாரோ? ஒரு வருட காண்ராக்டுக்காக ஒரு கோடி வாங்கியிருப்பதாக சொல்வதால், சும்மா விட மாட்டார்கள். பிரபு சினிமாவில் போடாத வேஷங்களை கூட கல்யாணுக்காக போடுகிறார். “சரவணா... பிரமாண்டமா...” என்று உலக அதிசய பின்னணியில் தமன்னாவும், லட்சுமிராயும் இன்னபிற அழகிகளுடன் ஆடி கழிவு துணியை பிரமாண்டமாக வாங்க சொல்கிறார்கள். ஆடி தள்ளுபடிக்கும், பிரமாண்டத்துக்கும் என்னப்பா சம்பந்தம்?

----

இன்பமோ, துன்பமோ... சந்தோஷமோ, கஷ்டமோ...
ஒரு நிமிஷம் எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கிட்டு
மனசை அமைதியாக்கிட்டு யோசிச்சு
ஒரு முடிவு எடுத்தா, அது சரியா வரும்

அப்படிங்கற மாதிரி பிரபுதேவா நடிச்ச காதலன் படத்துல பாலகுமாரன் எழுதிய வசனம் ஒண்ணு வரும். எல்லோரும் அப்படி யோசிச்சா சரி. யோசிச்சிருந்தாலும் சரி.

----

நான் வேலைக்கு சேரும் முன்பு, ஒருமுறை என் நண்பனுக்காக பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் காத்து நின்று கொண்டிருந்தேன். தாமதமாக வந்த அவன், தனக்கு எம்.ஜி. ரோடுக்கும் ப்ரிகேட் ரோடுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றான். இரண்டு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு அவனிடம்,

“இது எம்.ஜி. ரோடு. இந்த பக்கம் ப்ரிகேட் ரோடு. அந்த பக்கம் இருக்குறது காமராஜர் ரோடு.” என்றேன்.

அவன் ஆச்சரியத்துடன், “காமராஜர் ரோடா? இங்கேயா? எப்படி?” என்று கூறியவன், பின்பு அவனாக,

“காமராஜர் படிச்சிட்டு வேலை இல்லாம இங்க வந்திருப்பாரு. அப்ப இந்த பக்கம் தான் தங்கியிருப்பாரு!” என்று காரணம் சொல்லிக்கொண்டான்.

-----

முன்னணி ஹீரோவென்றால் ஒரு படத்திலாவது போலீஸ் வேஷம் போட்டு விடுவார்கள். முன்னணி காமெடி நடிகரென்றால் ஒரு படத்திலாவது ரவுடி வேஷம் போட்டு விடுவார்கள். முன்னணி இசையமைப்பாளர்கள் ஒரு படத்திலாவது அம்மா சென்டிமெண்ட் பாட்டுக்கு மெட்டு போட்டு இருப்பார்கள்.

இளையராஜா பல படங்களில் அம்மா பாட்டுக்கு இசையமைத்து இருக்கிறார். ஜேசுதாஸ், ரஜினி என்ற சூப்பர் காம்பினேஷனில் வந்த “அம்மா என்றழைக்காத உயிரில்லையே”, அம்மா பாடல்களுக்கு பெஞ்ச்மார்க்காக இருக்கிறது. இதில் வீணை, தபலா, வயலின் என்று ரொம்ப சாத்வீகமா, டிபிக்கல் இளையராஜாத்தனமாக இருக்கும். ரஹ்மானுக்கு நியூ படத்தில் வரும் “காலையில் தினமும்” பாடல். இதில் அவருக்கே உரிய கீ-போர்டு, டிரம்ஸுடன் இருந்தாலும் ரொம்ப அடிதடியாக பீட்டுடன் இல்லாமல் அழகா இருக்கும். இது ரஹ்மான் டைப் பாட்டு. அப்புறம் நம்ம தேனிசை தென்றல். அவரு வியாபாரி படத்துக்காக ஒரு அம்மா பாட்டு போட்டு இருப்பாரு. பாடலில் உபயோகித்த இசை கருவிகள் ஆகட்டும், பாடலின் மெட்டு ஆகட்டும் - அக்மார்க் தேவா பாடல். இப்படி இந்த இசையமைப்பாளர்களின் இசை ஸ்டைலை தெரிந்து கொள்ள, ‘அம்மா’ பாடல் என்கிற இந்த சாம்பிள் போதும்.

----

பெஞ்ச்மார்க்ன்னு சொல்லும்போது இன்னொண்ணு நினைவுக்கு வருகிறது. சன் டிவி தமிழர்களின் வாழ்வோடு எந்தளவுக்கு கலந்திருக்கிறது என்றும் தெரிகிறது.

இரண்டு தாய்மார்கள் பேசி கொண்டார்கள்.

“எத்தனை மாசம்?”

“நாலு மாசம்”

“புரண்டு படுக்கிறானா?”

“படுக்குறான்.”

“சன் டிவில தமிழ் மாலைன்னு போடும்போது திரும்பி பார்க்கிறானா?”

“ம்ம்ம்... பார்க்குறான்.”

பார்க்காத குழந்தை விசேஷ குழந்தையாகிவிட்டது. புரண்டு படுப்பது, உட்கார்வது, தவழ்வது, நடப்பது என்பது போல் சன் டிவி தமிழ் மாலையும் குழந்தையின் வாழ்வில் ஒரு மைல் கல்லாகிவிட்டது.

----

கூகிள் அடுத்ததாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிட போகிறார்கள். அங்கே இங்கே என்று கடைசியில் மைக்ரோசாப்டின் அடி வயித்துலேயே கை வைக்க போகிறார்கள். இணைய வசதியுடன் ஒரு சிம்பிள் மெஷினும் கூகிள் கிரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இருந்தால் போதும். ஆன்-லைனிலேயே எல்லாவற்றையும் செய்துவிடும் வசதி வந்துவிடும். நமக்கு விண்டோஸுக்கு கொடுக்குற நாலாயிரம் மிச்சமாகும். ஆனா, அத இன்டர்நெட்டுக்கு கொடுக்க வேண்டிவரும். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த ஜிமெயில்ல, பீட்டா என்ற சோதனை பெயரை இந்த வாரம் தான் தூக்கியிருக்கிறார்கள். இத்தனை வருஷம் ஆனாலும் விண்டோஸில் இருக்குற ஓட்டையை இன்னமும் முழுசா அடைக்குற வழியை காணும். இந்நிலையில் கூகிளின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படியிருக்குமோ?

----

பச்சை குத்திக்கறத முன்னாடி பட்டிக்காட்டான், படிக்காதவன் பண்ற வேலையா சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப, நாகரிகமாக அன்பின் வெளிப்பாடாக மாறிவிட்டது. டாட்டூ. கமிட்மெண்ட் இருக்குறவுங்களும், கமிட்மெண்ட் வேணுங்கறவுங்களும் பண்ணிக்கிறாங்க. நயன்தாரா பிரபுதேவாவுக்காக குத்திக்கிட்ட டாட்டூவை பாத்தீங்களா? எது எப்படியோ, அந்த டிசைன் நல்லாயிருக்குது. பி ஆங்கிலத்திலயும்... rabhu தமிழிலும்...

அந்த பி கூட எனக்கு தமிழ் போலத்தான் தெரிகிறது.பிரபுதேவாவுக்கு தெலுங்காம்... நயன்தாராவுக்கு மலையாளமாம்... டாட்டூ தமிழில்...

வாழ்க தமிழ்!

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

Thursday, July 9, 2009

நெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ராஜாவின் பாடல்களை பற்றிய பதிவு. விஸ்வநாதன் மேல் மிகப்பெரிய அபிமானம் கொண்ட ராஜா, அவர் பாணியிலேயே ஒவ்வொரு படங்களிலும் பெண்குரல் தனிப்பாடலை (female solo) அமைப்பதை தொடர்ந்தார். விஸ்வநாதன் எப்படி சுசீலாவை அதிகபட்சம் தனிப்பாடல்களில் பயன்படுத்திக்கொண்டாரோ அதைப்போல நம் ராஜாவுக்கு ஜானகி. ராஜாவின் முதல் பாடல் பதிவே ஜானகியின் தனிப்பாடலாகத்தானே அமைந்தது. அன்னக்கிளிக்காக "மச்சான பாத்திங்களா?.." (1975). அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்த இது ஜானகியின் முதல் தேசிய விருதுக்கும் வழிசொன்னது. (16 வயதினிலே - செந்தூரப்பூவே).

இவ்வரிசையில் அதிகம் கவனிக்கப்படாமல் போன ஒரு பாடகி வாணிஜெயராம். மிக அற்புதமானதொரு குரல் கொண்ட பாடகி. துவக்கத்தில் ஜேசுதாசுடன் ஜோடிப்பாடல்களுக்கான ஏற்ற குரலாக அமைந்தார். அவர் ராஜா கையில் கிடைத்தபிறகு, அவருக்கென்றே ராஜா அமைத்ததோ எனும்படியான பாடல்கள் நமக்கு கிடைத்தன. அவற்றில் எப்போது நினைத்தாலும் உடனே கேட்க வேண்டுமென வேட்க்கையைத்தூண்டும் பாடல்களிரண்டு..

பெண்குரலில் தனிப்பாடல்களுக்கென ஒரு பிரத்யேக வாசம் உண்டு. அது நிஜமாகவே மனதை இளகச்செய்யும் திறனுடையது. இல்லையென்று சொல்பவர்கள் ஒரு நிசப்தம் சூழ்ந்த இரவில் ராஜாவின் இசையில் வாணிஜெயராம் குரலில் "நானே நானா யாரோ தானா.. மெல்ல மெல்ல மாறினேனா.." ஒருமுறை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.. விரகம் பொதிந்தும் அதை வெளிப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள் நிறைந்த வலியை உணர்த்தும் பாடலது. ’அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்துக்காக ராஜாவால் போடப்பட்டது. (1979)
இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில், ராஜாவின் மெட்டுக்கு வாலி அமைத்த வரிகள். எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் எல்லாமே உடலுக்குதானே தவிர, மனதை யார் என்ன செய்துவிட முடியும்? என் மனதின் ஆசைகள், தேவைகள், இயலாமைகளை என்னைத்தவிர யாருணர முடியும்?.. எப்போதேனும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்கையில் அதை யாரால் கட்டுக்குள் வைக்க இயலும்? எத்தனை கேள்விகள்.. இதே ஒரு பெண்ணின் நிலையில் இன்னும் வலியதாய் இருக்கக்கூடும்.. ஏனெனில் தளைகள் அதிகமாகும்போது கேள்விகளும் அதிகமாகுமல்லவா?..

விரகத்தை தன்னுள் தேக்கி வைத்திருக்கும் நாயகி, ஒரு அசந்தர்ப்பத்தில் மது அருந்த நேரிடுகிறது.. ஏக்கம் பாடலாக வெளிப்படுகிறது. இதைக்கேட்கும் நேரம், எங்கேனும் ஒரு வலியுணரும் கண்ணில் ஈரம் கசியக்கூடும். ராஜாவே, தேக்கிவைத்த தன் ஏக்கத்தை எல்லாம் வெளிப்படுத்தியது போன்றதொரு பிரவாகம்..

என்னை நோகடிக்கும் இந்த விரகத்தை எல்லாம் இன்றே வடித்து வெளியேற்றி விடவேண்டும் என்பதாக வெளிப்படும் வார்த்தைகள்.. அவற்றுக்கு உறுதியளிக்கும் பின்னணி இசை. பாடலின் துவக்கத்தில் மெலிதாய், கீழஸ்தாயியில் துவங்கும் குழலின் ஓசை. அதிலிருந்து துவங்கும் குரலிசை.. மேற்கத்திய பாணி (பெண் மது அருந்துவதும் கூட) என்பதால் பாடல் முழுக்க கிடார் பின்னணி. சந்தர்ப்பம் நேர்கையில் கேட்டுப்பாருங்கள்.

என்னில் தோன்றிய மாற்றங்களுக்கு நான் யாரைப்போய் காரணம் கேட்பது? என்னை நானே கேட்டுக்கொள்வது தானே சரி..?!!

இனி பாடல்..

நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..

ஒருவன் மடியிலே உருகும் இதயமே இதோ துடிக்க..
உலர்ந்த உதடுகள் தனிமைக்கவிதைகள் ஏதோ படிக்க..
மதுவின் மயக்கமே உனதுமடியில் இனிமேல் இவள்தான்,
சரணம்..சரணம்..

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது..
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்.. விரகம்..
நரகம்..நரகம்..

நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..


அடுத்த பாடல்..

இதுவும் கூட அப்பட்டமான ஏக்கத்தின் வெளிப்பாடு.. தேவராஜ்-மோகன் இயக்கத்தில் ரோசாப்பூ ரவிக்கைக்கைக்காரி (1979) படத்துக்காக ராஜாவின் இசையில் கங்கை அமரனின் வரிகள்.. இதுவும் கூட வாணிஜெயராமின் குரலில் கிறங்கடிக்கும் பாடல்.
மிகுந்த நாகரீகம் கொண்ட நாசூக்கான பெண்ணொருத்திக்கு, ரவிக்கை கூட அணியாத பின்தங்கிய மக்களடங்கிய ஒரு கிராமத்தில் வாழ்க்கைப்பட நேர்ந்தால்?? அவள் கணவன் இன்னும் கட்டுக்குடுமியுடனிருக்க, பட்டணத்து நாகரீகத்தை பிரதிபலிக்கும், இஸ்திரி செய்த சட்டையும், பெல் பாட்டம் பேண்ட்டும் அணிந்த ஒரு வாலிபனின் சிநேகம் அவளுக்கு கிடைத்தால்?.. அவனுடன் அவன் புல்லட் வண்டியில், மலைப்பாதையில் ஒரு நெடும்பயணம் செய்ய நேர்ந்தால்.. கீழே விழாமலிருக்க வேண்டி அவன் இடுப்பை வளைக்கும் கைகளினூடாக மோகத்தின் வெப்பம் பரிமாறப்படுகிறது..

இருவரும் தம்போக்கிலிருக்க, மிக அழகாக பின்னணியில் ஒலிக்கும் பாடல்... இசைக்கருவிகளின் ராணி வயலின் என்பதை இந்தப்பாடல் கேட்ட பிறகு
ஒப்புக்கொள்வீர்கள். மதுவந்தி (பெயரே எவ்வளவு அழகு..!!) என்ற ராகத்திலமைந்த ராஜாவின் பாடல்.. பாடல் முழுக்க சீரான தொனியில் தொடரும் தபேலாவின் இசை. சரணத்தில் துவங்கும் வாணியின் ஆலாபனை மீண்டும் தாளகதியில் வந்து சேர்ந்து கொள்ளுவது கொள்ளை அழகு.. அது ஒன்றே சத்தியம் செய்யும், நான் ராஜாவின் குழந்தையென்று..

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது?.. ஏன் வாட்டுது?..
ஆனால் அதுவும் ஆனந்தம்..

என் மனகங்கையில் சங்கமிக்க..
சங்கமிக்க பங்குவைக்க..
பொங்கிடும் பூம்புனலில்..
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில்,
போதையிலே மனம் தங்கிநிற்க பொங்கிநிற்க..
காலம் இன்றே கூடாதோ..

மஞ்சளைப்பூசிய மேகங்களே..
மேகங்களே.. மோகங்களே..
மல்லிகை மாலைகளே..
மல்லிகை முல்லையின் மாலைகளே..
மார்கழி மாதத்து காலைகளே..
என்றும் என்னை சேராயோ..

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது?.. ஏன் வாட்டுது?..
ஆனால் அதுவும் ஆனந்தம்...


இதைக்கேட்க நேர்வது நமக்கும் கூட ஆனந்தம் தானே? அதுவும் உங்கள் மனைவியோ, கணவனோ ஊருக்கு போயிருக்கும் குளிர்காலத்தில் தனிமையான ஒரு நாளின், ஊரடங்கியப்பொழுதில் எங்கோ அடுத்த தெருவிலிருக்குமொரு இசை ரசிகரின் வானொலியில் ஒலிக்கும் இப்பாடல்கள் காற்றில் பயணித்து மிக மெலிதாக உங்கள் காதுகளை அடையும் பொழுதுகள் அறிவிக்கும்.. சொர்க்கம் என்றால் என்னவென்று..!!

-மகேந்திரன்

---

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தை பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வை... பின்குறிப்புகள்...

Wednesday, July 8, 2009

சரக்கடித்த சத்யசீலன்!

சத்யசீலன் நம் நாட்டு குடிமகன்களில் ஒருவன். தமிழ்நாட்டின் பெரும்பான்மை இனமான டாஸ்மாக் சமூகத்தை சார்ந்தவன். அதற்காக ஓவராக குடிப்பான் என்று எண்ண வேண்டாம். வாழ்க்கையில் மூன்றே தருணங்களில் தான் குடிப்பது என்று உறுதியுடன் வாழ்ந்து வருகிறான். அந்த மூன்று தருணங்கள் - சந்தோஷமாக இருக்கும்பொழுது, சோகமாக இருக்கும்பொழுது, போர் அடிக்கும்பொழுது. இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருந்தும், அவனுக்கு தினமும் சரக்கடிக்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது.

அவன் தினமும், தனியாக தங்கியிருக்கும் தன் அறைக்கு பக்கத்தில் இருக்கும் பாரில் தான் தண்ணியடிப்பான். ஏனெனில், அந்த கடையில் தேவையான சமயம், ப்ரீ ஹோம் டெலிவரி செய்வார்கள். சரக்கை அல்ல. சரக்கடித்து மப்பில் இருக்கும் அவனை. ரெகுலர் கஸ்டமரல்லவா?

அவனுக்கு இரண்டு அண்ணன்கள். கம்யூனிச குடும்பம். ஊரில் இருக்கும்போது, எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல், ஒன்றாக உட்கார்ந்து சகோதரர்கள் சரக்கடிப்பார்கள். எவ்வளவு நாட்கள்தான் அப்பா காசில் தண்ணியடிப்பது என்று வேலை தேடி வெவ்வெறு ஊர்களுக்கு பயணமானார்கள். மூத்தவன் மும்பைக்கும், நடுவே இருந்தவன் நெல்லூருக்கும், சின்ன தம்பி சத்யசீலன் சென்னைக்கும் சென்றார்கள். வேலையும் கிடைத்தது. வேளாவேளைக்கு சரக்கும் கிடைத்தது.

முதல் நாள் அந்த பாரில் தண்ணி அடிக்க சென்றபோது, மூன்று க்ளாஸ் முழுக்க சரக்கு ஆர்டர் செய்தான். அவர்களும் கொடுத்தார்கள். அவனும் ஒன்றன்பின் ஒன்றாக மூன்றையும் அடித்து முடித்தான்.

கிளம்பும்போது, சப்ளையர் “சார்... எதுக்கு சார் மூணு டம்ளரையும் முத தடவையே ஆர்டர் பண்ணுனீங்க? ஊத்தி ரொம்ப நேரம் வச்சா, நல்லா இருக்காது சார். வேணும்போது, பாட்டில்ல இருந்து ஊத்தினாத்தான் நல்லா இருக்கும்.” என்று ஆலோசனை சொன்னான். வாடிக்கையாளர் சேவை முக்கியம் என்று காந்தி சொல்லியிருக்கிறார்.

”அப்படி இல்ல, தம்பி... எனக்கு ரெண்டு அண்ணனுங்க. எப்பவும் ஒண்ணாத்தான் சரக்கடிப்போம். பிரிஞ்சதுக்கப்புறம், இப்படித்தான் தண்ணி அடிக்கணும்ன்னு முடிவு பண்ணி, அப்படியே செஞ்சுச்சிட்டு வாரோம்.”

சகோதரர்களின் சபதம் கடை பையனை ஃபுல்லரிக்க, இல்ல, புல்லரிக்க செய்தது.

அதன் பிறகு அவன் சொல்லாமலே, அவனுக்கு மூணு கிளாஸ் நிறைய சரக்கு வைத்தார்கள்.

நாட்கள் கடந்தது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வருமான வரியை குறைக்கிறார்களோ இல்லையோ, சரக்கின் மேல் வரியை உயர்த்தினார்கள். இதை எதிர்த்து விஜய் மல்லையாவிலிருந்து மப்பில் குப்புற அடித்து மல்லாந்து கிடக்கும் செல்லையா வரை யாரும் கேள்வி கேட்காதது பொருளாதார நிபுணர்களுக்கே ஆச்சர்யம் தான்.

ஒரு நாள் வழக்கம்போல் கடைக்கு நுழைந்த அவனின் வழக்கத்திற்கு மாறான முகத்தை கடையில் இருந்த அனைவரும் காணத்தவறவில்லை.

கடைப்பையன் மூன்று டம்ளர் எடுத்து செல்ல,

“ஒண்ணு எடுத்திட்டு போயிடு. இனி ரெண்டு தான்.”

சொன்ன ஒரு நொடியில் பக்கத்து டேபிளில் ஏப்பம் விட்டவர் அப்படியே ப்ரிஸ் ஆனார். எதிர் டேபிளில் வாந்தி எடுக்க வாயை பிளந்தவர் அப்படியே ப்ரிஸ் ஆனார். பாட்டிலில் இருந்து க்ளாஸ்க்கு படையெடுத்த நெப்போலியன் அப்படியே ப்ரிஸ் ஆனார். பிரட்டி போட்ட ஆம்லெட் அப்படியே ப்ரிஸ் ஆனது. இப்படி அனைத்துமே அந்த நொடி அப்படி அப்படியே பாரதிராஜா படத்தில் வருவது போல் ப்ரிஸ் ஆனது.

கடைக்காரர் கல்லாவில் இருந்து எழுந்து, வேட்டியை இறக்கிவிட்டவாறே அவனருகே வந்தார்.

“தம்பி, கவலைப்படாதீங்க. நாங்க இருக்குறோம். வாழ்க்கையில இது எல்லாத்தையும் கடந்து போகத்தான் வேணும். எந்த அண்ணன்? என்னாச்சு? சொல்லுங்க”

”ஐயய்யோ! அப்படியெல்லாம் இல்ல அண்ணாச்சி... ரெண்டு அண்ணன்களும் நல்லா இருக்காங்க.”

“அப்புறம்?”

தன்னம்பிக்கையுடன், ”நான் இன்னையில இருந்து தண்ணி அடிக்கறது இல்லன்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றான் சீரியஸாக.

---

மேற்கத்திய பாணியில் மின்னஞ்சலில் வந்ததை அடிப்படையாக கொண்டு எழுதியது.

ஒரு காக்டெயில் நாட்டுசரக்காக மாறியதே!

----

அடுத்த பதிவு : நெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல்

Tuesday, July 7, 2009

கொலை செய்தாரா கலைவாணர்?

இன்று தமிழில் வரும் எல்லா இதழ்களிலும் கிசுகிசு உண்டு. ஜனரஞ்சகப் புத்தகம் என்றால் திரைத்துறையினரைப் பற்றிய கிசுகிசு. புலனாய்வு புத்தகம் என்றால் அரசியல்வாதிகளைப் பற்றிய கிசுகிசு. இலக்கியப் புத்தகம் என்றால் எழுத்தாளர்களைப் பற்றிய கிசுகிசு. தமிழ் புத்தகங்கள் தான் இவ்வாறு என்றில்லை. ஹிந்தியில் இதற்கென்று ஒரு தனி சானலே உண்டு. அடுத்தவன் பற்றிய அந்தரங்கத்தை தெரிந்து கொள்ள, இயற்கையாகவே மனிதனுக்கு அவ்வளவு ஆர்வம்.

தமிழில் இப்படி வந்த முதல் பத்திரிக்கை - சினிமா தூது. 1944 ஆண்டு இதை தொடங்கியவர், லட்சுமிகாந்தன். இவர் அப்பொழுது தான் அந்தமான் ஜெயிலில் இருந்து வந்திருந்தார். ஒரு போர்ஜரி கேஸில் ஜெயிலுக்கு சென்றிருந்தார். இந்த பத்திரிக்கை அரசாங்க அனுமதி பெறாததால், தடை செய்யப்பட்டது. தடை செய்தால், வாசகர்களின் அறிவுக்கு எப்படி தீனி போடுவது? அப்பொழுது அனந்தய்யர் என்பவர் இந்துநேசன் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அவரிடம் லட்சுமிகாந்தன் சென்று, பக்கத்தை நான் பாத்துக்கிறேன், பதிப்பை நீங்க பாத்துக்கோங்க என்றிருக்கிறார். டீலிங் நன்றாக இருக்கவே, பத்திரிக்கை செம மேட்டர்களுடன் வெளியானது.

இப்போதைய இளம் நடிகர்கள் பத்திரிக்கையாளர்களிடம் ‘என்ன நீங்க? என்னை பத்தி கிசுகிசுவே எழுதலை?” என்று கோபித்துக் கொண்டிருக்க, அன்றைய நடிகர்கள் கிசுகிசுவை கண்டு நடுங்கி இருக்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து, தங்களை பற்றிய செய்திகள் வராமல் பார்த்து கொண்டார்கள். அது பொய்யாக இருந்தாலும்.

அந்நேரம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிரபல நடிகர். பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். அவரை பற்றியும் இந்துநேசனில் வந்தது.

என்.என்.கிருஷ்ணன் இதை கண்டுகொள்ளவில்லை. பணம் கேட்டு சென்ற போது, அவர் கொடுக்கவில்லை. தொடர்ந்து, அவரை பற்றிய செய்திகள் வந்து கொண்டு இருந்தது. கேட்டதற்கு, ’எவனோ ஒருவன் நம்மால் பொழைக்கிறான். பொழைச்சிட்டு போகட்டும்.” என்றார்.

இந்நிலையில் வடிவேலு என்பவர் தங்கியிருந்த வீட்டை லட்சுமிகாந்தன் வாங்கினார். வீட்டை காலி செய்ய சொன்னபோது, வடிவேலு மறுத்திருக்கிறார். இவ்விஷயத்தில் இவர்களுக்குள் தகராறு ஆகிவிட்டது.

ஒரு நாள் லட்சுமிகாந்தன் அவருடைய வக்கீலை பார்க்க ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்தார். போகும்வழியில் அவருக்காக காத்திருந்த வடிவேலுவும், அவருடைய நண்பரும், ரிக்‌ஷா கடந்து சென்றவுடன், பின்னால் சென்று, ரிக்‌ஷாவை பிடித்து இழுக்க, ரிக்‌ஷா கவிழ்ந்தது. ரிக்‌ஷா ஓட்டியவரை வடிவேலுவின் நண்பர் விரட்டியடிக்க, வடிவேலு லட்சுமிகாந்தன் மேல் பாய்ந்து கத்தியால் குத்தினார். சம்பவத்தில் கத்தி குத்துப்பட்ட லட்சுமிகாந்தன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பிறகு இறந்தார்.

இரு வாரங்கள் கழித்து, இந்த கொலை வழக்குக்காக என்.எஸ்.கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவருடன் அந்நாளைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டார். தவிர, வடிவேலுவும் இன்னும் சிலரும்.

அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு. நடிகர்களுக்கு பத்திரிக்கை ரீதியான தகராறு. வடிவேலுவுக்கு வீடு விவகாரத்தில் தகராறு. அதனால், பாகவதரையும், கலைவாணரையும் சந்தித்த வடிவேலுவிடம், அவர்கள் லட்சுமிகாந்தனை கொலை செய்யுமாறும் தேவையான பண உதவிகளை தாங்கள் செய்வதாகவும் கூறியிருக்கிறார்கள் என்பது தான்.

ஏழு மாதங்கள் நடந்த விசாரணையின் முடிவில் கொடுத்த தீர்ப்பில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சொல்லி பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

கலைவாணர் சிறையில் அடைக்கப்பட, வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் நடந்த வழக்குக்காக கலைவாணரின் சொத்துக்கள் விற்கப்பட்டது. வாரி வழங்கிக்கொண்டிருந்த குடும்பம், மற்றவர்களிடம் கை நீட்டி வாங்கும் நிலைக்கு வந்தது.

வழக்கில் பாகவதரும், கலைவாணரும் சம்பந்தப்பட்டு இருந்தது ஒரே இடத்தில் தான். வடிவேலு அவர்களை ஒரு தியேட்டரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்று கொண்டார் என்பது தான். ஆனால், சம்பவத்தன்று கலைவாணர் சேலத்தில் இருந்ததற்கு சாட்சிகள் இருந்ததாலும், அப்ரூவரான ஒருவரின் வாக்குமூலம் நிரூபணம் ஆகாததாலும், என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டார். அதுபோல், பாகவதரும் விடுதலை செய்யப்பட்டார்.

லட்சுமிகாந்தனின் நிலைக்கு கலைவாணர் காரணம் இல்லை என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறினாலும், அவருக்கு நேர்ந்ததை காலத்தின் தீர்ப்பாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும். எழுத்து தான் என்றாலும் அதில் கண்ணியம் இல்லாவிட்டால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு லட்சுமிகாந்தன் ஒரு உதாரணம். சோதனையான காலமென்றாலும், கூட இருந்தவர்களை கலைவாணர் புரிந்து கொள்ள உதவியது இந்த காலம் தான்.

மேலும் தகவலுக்கு & கலைவாணரைப் பற்றி அறிந்து கொள்ள - முத்துராமனின் சிரிப்பு டாக்டர்.

-----

நாளைய பதிவு : சரக்கடித்த சத்யசீலன்!

Monday, July 6, 2009

ஷங்கர் - சக்சேனா : ஒரு ஜுஜ்லீப்பா மீட்டிங்

ஷங்கர் அவரது அலுவலகத்தில் உருண்டுக்கொண்டே உலக உருண்டையை உருட்டி கொண்டிருக்கிறார். “புதுசா யாரும் போகாத இடத்துக்கு போகலாம்ன்னு பார்த்தா, எல்லாம் பார்த்த இடமா இருக்கே?”

உதவியாளர், “தமிழ்நாட்டுல எங்காச்சும் பார்ப்போமா?”

“இங்க எவன்யா எடுப்பான்? நாம எடுக்குறது வேற, உலகத்தரத்துல. இங்க எப்படி? சே... சே...”

“சார். நீங்க கூட ஜென்டில்மேன், முதல்வன் எல்லாம் இங்கதானே எடுத்தீங்க.”

”ஒண்ணு முத படம். விவரம் பத்தலை. இன்னொண்ணு நம்ம ப்ரொடக்‌ஷன்.”

“வெவரமாயிட்டீங்களோ?” என்றபோது இன்னொரு உதவியாளர் ஓடிவந்து “சார், ப்ரொடக்‌ஷனில் இருந்து வந்திருக்காங்க”

“வந்துட்டாய்ங்களா?” என்று களோபரத்தில் சுனாமியை சந்திக்கும் திருவள்ளூவர் சிலை போல் எல்லோரும் விரைப்பாக, சக்சேனா சிரித்த முகத்தோடு நுழைகிறார்.

“ஹலோ ஷங்கர், நாங்க படத்தை வாங்கினப்ப ஒண்ணா நின்னு போட்டோ எடுத்துக்கிட்டதோட சரி. அதான் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்.”

“வாங்க வாங்க. நானே வந்து பார்க்கலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். படத்துல ஹீரோயின் அப்பாவா நடிக்க ஒருத்தர் தேவைப்பட்டாரு. நம்ம பாஸு பொருத்தமா இருப்பாருன்னு தோணுச்சு”

”நம்மக்கிட்டேவா?” என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே, “சரி. அதை அப்புறம் பேசலாம். படம் எப்படி போயிட்டு இருக்குன்னு பாஸ் பார்த்துட்டு வர சொன்னாரு.”

“படம் நல்லா ஃபாஸ்ட்டா போயிட்டு இருக்கு. கிட்டத்தட்ட 40% முடிஞ்சுது.”

“என்னது? 40% ஆ? இது தான் உங்களுக்கு ஃபாஸ்ட்டா? நாங்க மாசத்துக்கு ஒண்ணுன்னு வருஷத்துக்கு 12 படம் ரிலீஸ் பண்றவங்க. நீங்க என்னன்னா, ஒரு படம் எடுக்க ரெண்டு வருஷம் ஆக்குறீங்க.”

”பின்ன என்னங்க, நம்ம படம்ன்னா ஒரு பெர்ஃபெக்‌ஷன் வேணும்மில்லையா?”

“என்னதுக்குய்யா அது? நாங்க ரிலீஸ் பண்ணின படங்களை பார்த்தீங்களா? எதுலயாவது அது இருந்துச்சா? அதெல்லாம் பார்த்தா, நாங்க படத்த வாங்குறோம்? ஏதோ, முதமுறையா படம் தயாரிக்குறோமே, பெரிய ஸ்டார், பெரிய டைரக்டர்ன்னு நினைச்சது தப்பா போச்சே!”

”சார், நம்ம படம் கண்டிப்பா ஹிட் ஆகும். நீங்க நிறைய லாபம் பார்க்கலாம்.”

“அது எங்களுக்கு தெரியாதா? ரிலீஸ் ஆகாம பெட்டிக்குள்ள தூங்குற படத்தயே எழுப்பி ஓடவிட்டு ஹிட் ஆக்குறவுங்க நாங்க”

“இருந்தாலும் படம் வெயிட்டா இருக்கணும்மில்ல”

“என்னைய்யா! புரியாதா ஆளா இருக்க? இதுவரைக்கும் நாங்க வாங்கி வெளியிட்ட படத்தை ஒண்ணு கூட எங்களால முழுசா பார்க்க முடியலை. எங்களுக்கு தேவை படத்துல நாலைஞ்சு பாட்டு, ரெண்டு மூணு சண்டை. அப்புறம் கதைங்கற பேர்ல ஏதாச்சும் இருந்தாலும் சரி. காமெடிங்கற பேர்ல ஏதாச்சும் இருந்தாலும் சரி. ஏன், கதையே காமெடியா இருந்தாலும் சரி. அட்லிஸ்ட், விளம்பரமாவது பார்க்குற மாதிரி இருந்தா போதும். இல்லாட்டியும் பரவாயில்லை, திருப்பி திருப்பி போட்டு பார்க்க வைச்சிடுவோம். இப்ப கூட தேவைன்னா, ‘காதலில் விழுந்தேன்’ படத்தை திருப்பி ரிலீஸ் பண்ணி, விளம்பரம் போட்டு, ஓட விட்டுடுவோம். மக்களை பத்தி எங்களுக்கு தெரியும்மய்யா”

“இது சூப்பர்ஸ்டார் படம்ங்க”

“யோவ், கூர்க்கா மாதிரி இருக்குறவன் நடிச்சாலும், நாங்க ஷோக்க ஓட்டிடுவோம். யார் நடிச்சா என்ன? சரி, நாங்க சொல்றத கேளுங்க. அப்படியே ஷூட்டிங் எடுக்கறப்போ, ஸ்பாட்லயே படத்துல நடிக்கறவுங்க எல்லார்க்கிட்டயும் ‘கலாநிதிமாறன் சார் படத்துல நடிக்குறதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும்”ன்னு சொல்ல சொல்லி வீடியோ எடுத்து கொடுங்க.”

“எதுக்குங்க, உங்க சானல்ல போடுறதுக்கா? எப்ப போட போறீங்க?”

“இப்படி ஒரு வீடியோ போட போறோம்ன்னு ஒரு மாசம் விளம்பரம் போடுவோம். அப்புறம் தான். அதுலாம் உங்களுக்கு எதுக்கு? படத்த பத்தி சொல்லுங்க. என்ன பணறதுன்னு நாங்க சொல்றோம்.”

“படத்துல ரஜினி ஒரு விஞ்ஞானி.”

”அப்ப படிக்க தெரிஞ்சவர். ரஜினி பேப்பர் படிக்குற மாதிரி ஒரு சீன் வச்சிடுங்க. ஆபிஸ்ல வந்து தினகரன் ஒரு கட்டு எடுத்துக்கோங்க. இது சூப்பர்ஸ்டார் படிக்குற சூப்பர் பேப்பர். அப்படின்னு ஒரு வசனம் சேர்த்துடுங்க.”

படபடப்புடன்,”அவரு பெரிய விஞ்ஞானிங்க. அவரு போயி எப்படி தமிழ் பேப்பர...”

“யோவ், என்ன பெரிய விஞ்ஞானி? சரி, சரி. நம்ம பேப்பருல வருற அறிவியல் மலரை படிக்குற மாதிரி சீன் வச்சிடுங்க”.

“சார். இது ஒரு உலகத்தரத்துல எடுக்குற பிரமாண்ட படம். இதுல எப்படி தமிழ் பேப்பரு, அறிவியல் மலரு?” என்று இழுக்க...

“உங்களுக்கு எங்க பேப்பரு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா? அப்ப ஒண்ணு பண்ணுங்க. நம்ம தினகரன் ஈ-பேப்பர் சைட்ட படிக்குற மாதிரி வச்சிடுங்க”

’விட மாட்டாரு போல இருக்கே’ என்று நினைத்துக்கொண்டு ”சரிங்க. ரஜினியும் ஐஸ்வர்யாவும் லவ் பண்றாங்க. அதுக்கு ஒரு டூயட் எடுத்துருக்கோம். பார்க்கறீங்களா? ரஹ்மான் பிரமாதமா இசையமைச்சிருக்கார்”.

கண்டுகொள்ளாமல் யோசித்து கொண்டிருந்தவர், “அப்ப அவுங்க மூணு பேரையும் சன் மியூசிக் ஸ்டுடியோவுக்கு வர சொல்லுங்க. எங்க காம்பயர் கேட்குற கேள்விக்கு, பாட்டை பத்தி அவுங்க சொல்லட்டும்.”

அதிர்ச்சியாகி, “பெரிய ஆளுங்க எல்லோரும். டைம் கிடைக்குமோ என்னவோ?”

“அப்ப, சூரியன் எப்.எம்.?”

தலை சொறிந்துக்கொண்டே ”சார்...” என்று இழுக்க...

“விடுங்க” என்று போன் போடுகிறார். “தம்பி, 1996 எலக்‌ஷன் ரஜினி இண்டர்வியூ எடுத்துக்கோ. ’எந்திரனை பார்க்காட்டி தமிழ்நாட்டை ஆண்டவானாலும் காப்பாத்த முடியாது’ன்னு வருற மாதிரி ஒரு ஒட்டு போட்டு ரெடியா வச்சிரு. என்னது? மிமிக்ரியா? அசத்த போவது டீம கூப்பிடு. அப்புறம் ஆஸ்கார் மேடையில ரஹ்மான், ’எல்லா புகழும் சன் டிவிக்கே’ன்னு சொல்ற மாதிரி இன்னொரு பிட்டும் ரெடி பண்ணிரு.”

ஷங்கர் மேலும் அதிர்ச்சியில் உறைய,

“படம் ரெடியாக இன்னும் எவ்வளவு நாளாகும்? பட்ஜெட் ஸ்டேடஸ் என்ன?” என்று சக்சேனா கேட்க, ஷங்கர் சொல்லும் பதிலில், பதிலுக்கு இவர் ஷாக்காகிறார்.

“என்னது? ஒரு படம் எடுக்க இவ்வளவா? இந்தளவுக்கான படத்துக்கு பண்ண வேண்டிய விளம்பரத்தை நினைச்சா, எனக்கே சலிப்பா இருக்குது. இது ஆகுற கதையில்லை. ஒண்ணு பண்ணுங்க. படத்தை நாலைஞ்சு பாகமா பிரிச்சிடுங்க. மூணு மாசத்துக்கு ஒண்ணுன்னு ஒன்றரை வருஷத்துக்கு ஓட்டலாம். அப்பத்தான் கணக்கு சரியா வரும்.”

டெரர்ராகி, “இது என்ன சீரியலா? எபிசோட் எபிசோடா வெளியீட? விட்டா, அப்படியே சீரியல் பண்ண விட்டுடுவீங்களே?”

“பண்ணத்தான் என்ன? சரி. பயப்படாதீங்க. எங்க ஆபிஸ்க்கு வந்துட்டு போங்க. ரஜினி சாரையும் வர சொல்லியிருக்கோம். பாஸை மீட் பண்றப்புல ஒரு கிளிப்பிங் எடுத்துக்கிட்டோம்ன்னா, தலைப்பு செய்தில ஒரு வாரத்துக்கு பரபரப்பா சொல்ல ஒரு நியூஸ் கிடைச்சுடும். ” சொல்லும்போதே, போன் ரீங் டோன் “சிக்கு சிக்கு பூம் பூம்” என்று அலற, போனை எடுத்து சக்சேனா பேசுகிறார்.

“என்னது? கமல் ஆபிஸ் வந்துருக்காரா? மருதநாயகமா? இதோ வாரேன்.” என்று போனில் சொல்லிவிட்டு, ஷங்கரிடம் “ஒரு வேலை வந்திருக்கு. போயிட்டு வந்திருறேன். அந்த தலைப்பு செய்தி மேட்டர் மறந்திராதீங்க. ஆபிஸ்க்கு வந்திருங்க.”

வேகமாக சென்றவரை பார்த்துக்கொண்டிருந்த ஷங்கரிடம், உதவியாளர்,

“ஆபிஸ் ரூம்னா பயப்படுறத நாமத்தான் காட்டினோம். இவரு நமக்கே காட்டிட்டு போறாரே? என்ன சார், யோசிக்குறீங்க?”

“கமல் சார் அங்க போயிருக்காராமே? இப்ப, யார் பாவம்ன்னு தான்!”

***

நாளைய பதிவு : கொலை செய்தாரா கலைவாணர்?.

காணத் தவறாதீர்கள்ள்ள்ள்....

பாருங்க, எனக்கும் ஒட்டிக்கிச்சு! :-)