Saturday, November 24, 2012

விரதம்

சென்ற வாரம் கந்த சஷ்டி வந்ததல்லவா? அதற்கு ஆறு நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். நானல்ல, என் தந்தை இருப்பார். திருச்செந்தூருக்கு நடந்தும் செல்வார். தற்சமயம், வயதின் காரணமாக செல்வது இல்லை. நான் இதற்கு என்று இல்லை. பொது பிரச்சினைக்களுக்காக கூட விரதம் இருந்ததில்லை. இருக்க தோன்றியதும் இல்லை.திருமணத்திற்கு முன்பு, என் மனைவி நிறைய முறை விரதம் இருந்திருக்கிறாளாம். இந்த முறை, இங்கு விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தாள். எதற்கு, முடியுமா, வேண்டாம் என்றெல்லாம் லைட்டாக சொல்லிப்பார்த்தேன். ஒரு தடவை முடிவெடுத்துவிட்டால் என் பேச்சே நானே கேட்க மாட்டேன் என்று பன்ச் பேசாவிட்டாலும், அதுதானே மனைவிகளின் தத்துவம்? இருந்தார்.

தினமும் எதுவும் சாப்பிடாமல், எனக்கு மட்டும் வீட்டிலும், அலுவலகத்திற்கும் சமையல் செய்துக்கொடுத்தாள். அவ்வப்போது, எலுமிச்சை சாறுடன், வெல்லம் கலந்து குடித்து வந்தாள். சில சமயம், பழங்களும் சாப்பிடுவாள். விதவிதமாக சமைத்து சாப்பிட விட்டாலும், அவள் விரதமிருக்க, நான் மட்டும் கட்டுகட்டு என கட்டுவது சமயங்களில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தினாலும், என்ன செய்ய? கட்டி வந்தேன்.

சென்ற வெள்ளிக்கிழமை என்ன தோன்றியதென்றால், வாரயிறுதியில் நாமும் சாப்பிடாமல் இருந்தால் என்ன? என்று. விரதம், டயட் என்று இல்லாமல், விரதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆர்வம்.

பொதுவாக, எனக்கு சாப்பிடும் நேரம் கொஞ்சம் தள்ளி சென்றாலே, பசி வயிற்றை கிள்ள, சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிடும். வீட்டில் இருக்கும் போதும் சரி, படிக்கும் காலத்தில் ஹாஸ்டலில் இருக்கும் போதும் சரி, நேரா நேரத்திற்கு மணியடித்து சாப்பாடு போடுவார்கள். குறிப்பாக, ஹாஸ்டல் சாப்பாட்டைப் பற்றி சொல்ல வேண்டும். கல்லூரி எட்டரைக்கு என்றால், என் கல்லூரி நண்பர்கள் எட்டே காலுக்கு எழுந்து கிளம்பி கல்லூரிக்கு வருவார்கள். நானோ எட்டு மணிக்கே ஹாஸ்டல் மெஸ்ஸை நோக்கி நடந்து செல்வேன்.

காரணம் சிம்பிள். காலை உணவு முக்கியம் என்று என்றோ வாசித்தது. இரவு உணவிற்கு பிறகு, நாம் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பதால், காலை உணவு அந்த விரதத்தை முடித்து வைக்கும் காரணத்தாலே, அதற்கு ‘ப்ரெக்பாஸ்ட்’ என்று பெயர் என்றும், காலை உணவை சாப்பிடாமல் விட்டோமானால், உணவை செரிக்க உதவும் திரவத்தாலேயே உடலுக்கு தீங்கு என்றும் படித்ததாலே, எதற்கு தேவையில்லாமல் வம்பை விலைக்கொடுத்து வாங்க வேண்டும் என்று காலை உணவு எவ்வளவு கேவலமாக இருந்தாலும் லைட்டாகவாவது சாப்பிட்டு விடுவேன்.

சமீபத்தில் ஒருநாள் காலையில் பதினொரு மணி இருக்கும். என் கல்லூரி நண்பனுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தேன். ’சாப்டாச்சா?’ என்று கேட்டதற்கு ’இல்லை... இனிதான்’ என்றான். திரும்ப அவன், ’நீ?’ என்று கேட்டவன், அவனாகவே, ‘அந்த ஹாஸ்டல் காலை சாப்பாட்டையே விடாமல் சாப்பிட்டவன், இப்ப வீட்டு சாப்பாடு. சாப்பிடாமல் இருப்பியா? சாப்பிட்டு இருப்பே!! அப்புறம்?’ என்று அடுத்த டாபிக்கிற்கு அவனாகவே சென்று விட்டான்.

அப்படிப்பட்ட நான், இரு நாட்கள் விரதம் இருக்க போகிறேன், என்பது எனக்கே ‘நான் என்னவாவேன்’ என்ற ஆர்வத்தை கிளப்பியது.

சனிக்கிழமை மதியம் வயிறு லைட்டாக ‘சாப்பாடு போடுடா!’ என்று நினைவுப்படுத்தியது. சிறிது நேரத்தில், அதுவாகவே அமைதியாகியது. அதன் பிறகு, உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், மனரீதியாக சில கேள்விகள்.

நாம் எதற்கு விரதம் இருக்கிறோம்? நமக்கு இது தேவையா? சாப்பிட்டு விடலாமா? என்பது போன்ற கேள்விகள். பிறகு, முடிவெடுத்துவிட்டோம். அதற்காக இருந்தே ஆகவேண்டும் என்று விரதத்தைத் தொடர்ந்தேன்.

இரவில் கொஞ்சம் எலுமிச்சை சாறும், ப்ளாக் பெர்ரி சிறிதும் சாப்பிட்டேன்.

இன்னொரு பிரச்சினை. பொதுவாக, விடுமுறை நாட்களில் வேறு ஏதும் முக்கியமான வேலை இல்லாவிட்டால், வீட்டில் சமைப்பது உண்டு. சமையலுக்கு உதவுவது உண்டு. இந்த இரு நாட்களில் வெளியே செல்லும் வேலையும் இல்லை. வீட்டில் சமையலும் இல்லையென்பதால், ஒரே போர். எவ்வளவு நேரம், லாப்டாப்பை கட்டிக்கொண்டு அழுவது? தூங்கிவிட்டேன்.

ஞாயிறு அன்று, எங்கள் அப்பார்ட்மெண்டில் தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமையல் ஐட்டம் செய்துக்கொண்டு வர வேண்டும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஐட்டம் - இட்லி. சட்டி நிறைய இருந்தாலும், தொட்டு பார்க்க மட்டும் தான் முடிந்தது.

அன்று சாயங்காலம், விரதத்தை முடித்துவிட்டு தான், இட்லியை வாயில் போட முடிந்தது. முதலில் இருநாட்கள் பெரிதாக தெரிந்தாலும், கடந்தபிறகு அவ்வளவே என்று தோன்றியது. சாதித்தது என்னவென்றால், இரு நாட்கள் (ஆக்சுவல்லி, ஒன்றரை நாள் தான்) என்னால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது தான்.

இனி, அடுத்த சஷ்டிக்கு இன்னும் நாட்களைக் கூட்ட முடியுமா? என்று பார்க்க வேண்டும். உடல்நலன் சார்ந்து செய்ய வேண்டும்.

 
.

Sunday, November 18, 2012

துப்பாக்கி

துப்பாக்கி, இங்கு நேற்று தான் வந்தது. இரண்டே காட்சிகள் தான். அது ஏனோ தெரியவில்லை. விஜய் படங்களின் திரையிடுகள், இங்கு அசிங்கப்படுகிறது. தீபாவளிக்கு வந்திருந்தால், கோவில், இனிப்பு, வடை, வெடி ஆகியவற்றுடன் இந்த படமும் சேர்ந்து என் தீபாவளி முழுமையடைந்திருக்கும்.

---
வெள்ளி இரவு ஒரு காட்சி, ஞாயிறு மதியம் ஒரு காட்சி என இரண்டே காட்சிகள். வீணாப்போன தாண்டவமே, இங்கு ஒரு வாரத்திற்கு மேல் திரையிட்டார்கள். மாற்றானும் அப்படியே. விஜய் படங்களுக்கு ஏன் இப்படி என்று தெரியவில்லை. டிஸ்ட்ரிப்யூட்டர்கள் அப்படி வாய்க்கிறார்களோ? தாண்டவத்தை யூ-டிவியும், மாற்றானை யூரோஸும் வெளியிட்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

---

ஒன்பது மணி காட்சிக்கு, எட்டேக்காலுக்கு கிளம்பி சென்றோம். எப்போதும் பர்ஸில் கார்ட் இருக்கும் என்பதால், பணம் எவ்வளவு இருக்கும் என்று கவனிப்பதேயில்லை. எல்லா இடங்களிலும், கார்ட் ஒத்துக்கொள்வார்கள் என்பதால். இங்கு சென்று பார்த்தால், ஒரு டேபிள் போட்டு, இரு தமிழர்கள் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள். டேபிளில் டிக்கெட் சுருள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. கார்ட் கிடையாது, வெளியே இருக்கும் ஒரு கடையில் ஏடிஎம் இருக்கிறது, அங்கு சென்று பணம் எடுத்து வாங்க என்றார்கள். ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள், உள்ளே செல்வதற்கு க்யூவில் நின்றுக்கொண்டிருந்தார்கள். நான் சென்று எடுத்து வருவதற்குள், க்யூ வளர்ந்திருந்தது.

உள்ளே வேறு ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது போல. க்யூவில் சுமார் இருபது நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது. இப்படி ஒரு படத்திற்கும் இங்கு நின்றதில்லை. நேரம் ஆக, ஆக, கூட்டம் கூடியது. நல்ல கூட்டம்.

என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வேறு மாநில நண்பர்களும் வந்திருந்தார்கள். மாற்றான் போனபோது அதிர்ச்சி கொடுத்த அந்த தமிழ் பெண்ணும், ஒரு சின்ன பெண்ணுடன் வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

தியேட்டர் சுமார் தான். இங்கு தான், அவன் இவன் பார்த்தேன். இம்முறையும் சவுண்ட் அதிகம் வைக்கவில்லை. தியேட்டர் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விஜய், காஜல் அறிமுக காட்சிகளுக்கு நல்ல கைத்தட்டல். உடன் வந்த ஆந்திர நண்பருக்கு ஆச்சரியம். இப்படித்தான் எல்லா தமிழ்ப்படங்களுக்கும் இருக்குமா? என்று வினவினார். யோசித்துப்பார்த்தேன். சூர்யா படங்களுக்கு அப்படி ஒன்றும் கைத்தட்டல் இருந்ததில்லை. அஜித் படங்களுக்கு, நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்.

துப்பாக்கியில் பல காட்சிகளுக்கு, வசனங்களுக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் இருந்தது.உதாரணத்திற்கு, ஐ யம் வெயிட்டிங்கை சொல்லலாம்.

படத்தில் வரும் ஸ்லீப்பர் செல்ஸ் போல சமூகத்தில் நிறைய அன்ட்டி-விஜய் பேன்ஸும் ஊடுருவிவிட்டார்கள். பொதுவாக பார்த்தோமானால், விஜய்யை நக்கல் அடிப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். நேற்று தியேட்டரிலும் அப்படித்தான். எங்களுக்கு பின்னாடி இருந்தவர்கள், ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எரிச்சலாக இருந்தது.

---

இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கம்மியே. இந்த வருட பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் தோல்வி, ஒரு காரணம். விஜய், முருகதாஸ் மேலான அவநம்பிக்கை, இன்னொரு காரணம். படத்தின் வெற்றிக்கு, இக்காரணங்களும் காரணமே.

முருகதாஸ் புத்திசாலித்தனமான காட்சிகள் அமைத்திருக்கிறார் என்று சொல்ல ஆசைத்தான். கொஞ்ச நாள் போகட்டும். இது எந்த இங்கிலிஷ் படம் என்று யாரும் எதுவும் சொல்லாமல் இருந்தால் சொல்கிறேன்.

காவலனுக்கு முன்பு வந்த ஐந்து விஜய் படங்களை, படம் வந்த போது, ஹிட் என்றார்கள். முடிவில், ஐந்தும் தோல்வி என்றார்கள். காவலன், வேலாயுதம், நண்பன் வந்த போது நிஜமாகவே நன்றாக இருந்ததாக சொன்னார்கள். முடிவில், ரிசல்ட் ஆவரெஜ் என்றார்கள். இது என்னவாகுமோ?

கூகிள் பாடல் என்னை பொறுத்தவரை ஹிட் சாங். தினமும் கேட்கும் பாடல். என்னுடன் அலுவலகம் வரும் மற்ற மொழி நண்பர்களுக்கும் பிடித்த பாடல்.

படம் எனக்கு பிடித்திருந்தது. க்ளைமாக்ஸ் தவிர. முருகதாஸ் படங்களில் ரமணா தவிர அனைத்து படங்களிலும், க்ளைமாக்ஸ் சுமார்தான். படங்களின் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சிகள் கொடுக்கும் விறுவிறுப்புக்கு, ஈடுக்கொடுக்க முடியாததாக இருக்கும். இதுவும் அப்படியே.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மற்றவர்கள் போல் வித்தியாச கோணங்களில் வித்தை காட்டாமல், காட்டப்படும் காட்சிகளில் டீடெயிங்கில் வித்தை காட்டியிருக்கிறார்.

ஹீரோவின் பணியை தவிர, வேறெதற்கும் சம்பந்தமில்லாமல், இறுதியில் போடும் டெடிக்கேஷனுக்கு ஏமாந்து திரையரங்கில் கைத்தட்டினார்கள். முருகதாஸ் நினைத்தது நடந்துவிட்டது. ஜாலியாக போய் ஹிந்தி படமெடுப்பார்.

விஜய்யின் ட்ராக் சேஞ்ச் முடிவு, நல்ல பலன்களை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் தொடர் வெற்றிகள் கொடுக்க வாழ்த்துக்கள்!!! படம் வெளிவரும் அன்று, இங்கு திரையிட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்.

---

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஒரு தீபாவளி நிகழ்ச்சியில் விஜய்யும், முருகதாஸும் கலந்துக்கொண்டார்கள். விஜய்யை பற்றி முருகதாஸுடன் கேட்டபோது, வழக்கம் போல் எல்லோரும் சொல்வதை சொன்னார். முடிவில் ஒரு பஞ்ச் வைத்தார்.

“விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். ஷாட் எடுக்கும் போது, வேறு மாதிரி, காட்சிக்கு ஏற்றாற்ப்போல் துள்ளலுடன் இருப்பார். எது பெர்ஃபார்மன்ஸ் என்றே தெரியாது.”

கடைசி வரியை சொன்ன போது, முருகதாஸை பார்த்து  விஜய் ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார் பார்க்கணும். சூப்பர்...

 
.

Monday, November 5, 2012

சான்டா மோனிகா பீச்

இந்த பதிவின் தொடர்ச்சி.
 
பெவர்லி ஹில்ஸ் சென்ற பேருந்து, நாங்கள் ஏறிய சான்டா மோனிகா பீச்சிலேயே வந்து இறக்கிவிட்டது.
 
காரை கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு வந்திருந்தோம். இந்த பீச்சிற்கு உள்ளே சென்று விட்டு, பிறகு வெளியே வந்து, அங்கு சென்று காரை எடுக்க, எப்படியும் கொஞ்சம் அதிகமாக நேரமாகும் என்று தோன்றியது. ஏனெனில், அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது, லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட் தான். எங்காவது கொஞ்சம் நேரமாகிவிட்டால், சிரமமாகிவிடும் என்பதால், முதலில் காரை எடுத்துக்கொண்டு பக்கத்திலேயே வைத்துக்கொள்வோம் என்று நினைத்து காரை எடுத்து வந்தோம்.
 
பீச்சை கடந்து செல்லும்போது, பார்க்கிங் ஃபுல் என்று முன்னால் ஒரு போர்டு இருந்தது. உள்ளே பார்த்தால், நிறைய பார்க்கிங் இடங்கள் இருப்பது போல் தெரிந்தது. அங்கு இருந்த செக்யூரிட்டியிடம் கேட்டேன். அவர் அது வேறு பார்க்கிங் என்று சொன்னார். வழியை கேட்டதற்கு, வேறு ஒரு பக்கம் கையை காட்டினார்.
 
அந்த பார்க்கிங் செல்லும் வழியை, ஜிபிஎஸ்ஸில் பார்த்தால், அது இந்த மெயின் வழியை காட்டியது. இந்த மெயின் வழியில், பார்க்கிங் இல்லை என்று ஒரு போர்டு. என்னடா இது சிக்கல் என்று மொபைலை உதவிக்கு எடுத்தேன். மொபைல் சரியான வழியைக் காட்டியது. 
 

இங்கு உள்ள பார்க்கிங்கில் காரை போட்டு உள்ளே சென்றோம். இந்த பீச்சில் உள்ள சிறப்பம்சம், Pier என்றழைக்கப்படும் கடல் தண்ணீருக்கு மேல் மரத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் தளம் தான். ரொம்ப பழமையான மரத்தளம். நூறு ஆண்டுகளுக்கு மேலான கட்டுமானம் இது.கடைகள், உணவகங்கள், ஒரு கேளிக்கை பூங்கா அனைத்தும் இதன் மேல் இருக்கிறது.


அப்படியே ஒரு வாக் சென்றோம். கடல் மணலில் கொஞ்ச தூரம் வரை, பலகை போட்டிருந்தால், பாப்பாவை ஸ்ட்ராலரிலேயே கூட்டி சென்றோம். அதன் பிறகு, பாப்பாவை கையில் எடுத்துக்கொண்டு, ஸ்ட்ராலரை மணலில் இழுத்துக்கொண்டு சென்றோம். பாப்பாவுக்கு முதல் கடல் அனுபவம். இதற்கு முன்பு திருச்செந்தூர் சென்றிருந்தாலும், கடல் பக்கம் சென்றதில்லை. கரையில் கால் நனைய நிற்க வைத்தோம். வித்தியாசமா இருக்கிறதே என்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.இங்குள்ள மக்கள் சூரிய குளியல் எடுத்துக்கொண்டும், கடல் குளியல் எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.குழந்தைகள், மணலில் குழி தோண்டி, தங்களை தாங்களே புதைத்துக்கொண்டு இருந்தார்கள். சில பெற்றோர்கள், உதவி செய்துக்கொண்டு இருந்தார்கள். குழந்தைகளுக்கான மணல் அள்ளும் உபகரணங்கள் ப்ளாஸ்டிக்கில் கிடைப்பதால், அதனுடன் ரெடியாக வந்திருந்தார்கள்.ஒரு ஹெலிகாப்டர் அந்த பக்கம் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு பறவை அதற்கு பின்னணியில் தெரிய, இரண்டும் கிட்டத்தட்ட ஒரு அளவில் இருக்க, ஒரு க்ளிக்.


இந்த மரக்கட்டுமானத்திற்கு கீழும் சிலர் சுற்றிக்கொண்டு, விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அலைகள், தூண்களை நனைத்துக்கொண்டு இருந்தது.


 

இது நன்றாக பலமாக இருக்க வேண்டும். பின்ன, மேலே ஒரு விளையாட்டுத்தளமே இருக்கிறதல்லவா?


ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கவில்லை. நேரமில்லா காரணத்தால், அப்படியே சுற்றி பார்த்துவிட்டு, பக்கத்தில் இருந்த பப்பா கம்ப் என்னும் ரெஸ்டாரெண்டில் சாப்பாடு வாங்கிவிட்டு கிளம்பினோம். கடை முழுக்க ஏதாவது வாசகங்கள் எழுதிய பலகைகள். எங்கு விட்டு வைக்கவில்லை. இங்கு இறால் உணவு வகைகள் பிரபலம். இருப்பதிலேயே காரமாக இருப்பது எது என்பதை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதை பார்சல் கட்டிக்கொண்டோம். அப்பத்தான் இனிப்பாக இல்லாமல், நமக்கேற்ற மாதிரி மொஞ்சமாவது உப்பு காரத்துடன் இருக்கும்.


அங்கிருந்து ஏர்போர்ட் பக்கம்தான். நார்மலாக 15 ஆகலாம் என்று கூகிள் மேப்ஸ் சொல்லியது. இருந்தாலும், ஒரு மணி நேரம் என்று ஓவராக கணக்கு வைத்துக்கொண்டு கிளம்பினோம். எங்கள் ஓவர் கணக்கு, சரியாகவே ஆனது.

போன பாதை, நகரின் நடுவே இருந்ததால், ஏகப்பட்ட சிக்னல்கள். பெரிதாக ட்ராபிக் இல்லையென்றாலும், நிறைய சிக்னல்கள் இருந்ததால், நேரம் பிடித்தது. இந்த சிக்னல் கேப்பிலேயே உணவை முடித்துவிட்டோம். முதலில் காரை வாடகை எடுத்த இடத்தில் விட்டுவிட்டு, பிறகு அங்கிருந்து அவர்களுடைய பேருந்தில் ஏர்போர்ட் செல்ல வேண்டும்.

காரை விடும் இடத்திற்கு செல்லவே, ஒரு மணி நேரம் ஆனது. அங்கே கணக்கை செட்டில் செய்துவிட்டு, லைட்டாக ரெப்ஃரெஷ் செய்துவிட்டு, ஏர்போர்ட் சென்றோம். காரை வாடகை எடுக்கும் போது, எவ்வளவு ஆகும் என்று ஒரு எஸ்டிமேட் கொடுத்தார்கள். திரும்ப விடும்போது, அதை விட அதிகமாக சொன்னார்கள். அந்த எஸ்டிமேட்டை எடுத்துக்காட்டி விளக்கம் கேட்க, எஸ்டிமேட்டை விட குறைவாக பிறகு சொன்னார்கள். எப்பவும் எஸ்டிமேட் வாங்குவது முக்கியம் என்று புரிந்தது.

ஏர்போர்ட் சென்று, செக்யூரிட்டி முடித்து, ப்ளைட் டைமை பார்த்தால், ப்ளைட் திரும்பவும் லேட். இந்த Frontier எப்பவும் இப்படிதான் போலும்!!! கிளம்பும் போதும், இதே பிரச்சினைதான். டென்வரில் இருக்கும் நண்பர் போன் செய்து, ப்ளைட் டைமை கேட்டார். வந்து பிக்-அப் செய்வதாக சொன்னார். இரவு 11 மணி ஆகும் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ப்ளைட் இன்னும் லேட்டாகியது. இரவு உணவாக ஒரு சாலடை வாங்கி, ஏர்போர்ட்டிலேயே உண்டோம்.

ப்ளைட்டில் ஏறி உட்கார்ந்தது தான் தெரியும். நல்ல தூக்கம். அவ்வளவு அலைச்சல். அவ்வளவு களைப்பு.

டென்வரில் இறங்கியபோது இரவு ஒரு மணி இருக்கும். ஒரு டாக்ஸி கிடைக்க, வீடு வந்து சேர்ந்த போது, மணி இரண்ரை- மூன்று இருக்கும். அப்படியே பெட்டில் படுத்து சுருள, லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் முற்றுப்பெற்றது.

.

Sunday, November 4, 2012

எந்த மரம் நல்ல மரம்?

PIT தளம், எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று. போட்டிகளில் கலந்துக்கொள்வது இல்லையென்றாலும், தொடர்ந்து நான் தொடரும் தளங்களில் ஒன்று. முன்பொரே ஒருமுறை கலந்துக்கொண்டு சிறப்பு செய்தது உண்டு. பிறகு, பிரமித்துப்போய் பெருமூச்சுவிடுவது மட்டுமே உண்டு.

தற்சமயம், கொஞ்சம் கேமரா கையுமாக சுற்றுவது என்றிருப்பதாலும், நம்மையும் ஒரு போட்டோகிராபர் என்று சில அப்பாவிகள் நம்புவதாலும், இம்மாத போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பு செய்யலாம் என்றிருக்கிறேன்.

இம்மாத போட்டிக்கான தலைப்பு - மரங்கள்/மரம்.

சமீபகாலங்களில் இந்த தலைப்புக்கு பொருத்தமான புகைப்படங்கள் நிறைய எடுத்திருக்கிறேன் என்பதால், புதிதாக எடுக்க தேவையில்லாமல், எடுத்ததில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் போதுமானதாக இருக்கிறது.

எதை அனுப்புவது என்பதில் தான் குழப்பம். (நீ புடுங்குனது பூரா...!!! நோ... நோ... நோ...)

பதிவுலக நண்பர்கள், ஐடியா மணிக்களாய் இருக்கும்போது என்ன குழப்பம்? ஒரு பதிவைப்போட்டா ஆச்சு!

கேள்வி - கீழ்க்கண்ட நான்கு புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்? (நல்லதாய் பார்த்து!!!)

ஒன்று:

இங்கு இருக்கும் அனைத்து புகைப்படங்களும், சமீபத்தில் இவ்வருட இலையுதிர் காலத்தின் போது எடுத்தது. இந்த புகைப்படம் இங்கே இருக்கும் சீஸ்மேன் பார்க் என்னும் பார்க் சென்றபோது, அருகே இருந்த தெரு இப்படி கலர்புல்லாய் அழகாய் இருக்க, உடனே எடுத்தது.


இரண்டு:

இது அந்த சீஸ்மேன் பார்க்கில் எடுத்தது. ஒரு மரம் மட்டும் தனியே வேறு கலரில் வித்தியாசமாய் இருக்க, க்ளிக்கியது.

 
மூன்று:
 
இந்த படம், ஒரு மாதத்திற்கு முன்பு ஆஸ்பென் என்ற ஊருக்கு ட்ரிப் சென்றபோது, அங்கு இருக்கும் மெரூன் பெல்ஸ் என்ற மலைப்பகுதியில் எடுத்த புகைப்படம். போஸ்ட் கார்ட், வால்பேப்பர் என்று மட்டுமே பார்த்த சில இடங்களை இங்கே தரிசிக்க முடிந்தது. இடங்களைப் பற்றிய பதிவுகள், விரைவில். இப்போதைக்கு, இது அங்கு எடுத்த படம் என்ற தகவல் மட்டும்.
 நான்கு:

போன புகைப்படத்தில் பார்த்த அதே மரங்கள் தான். வேறு ஆங்கிளில்.


இனி உங்க டர்ன். எது நல்லா இருக்கு? சொல்லுங்க.

வேணும்னா, புகைப்படங்களைக் கிளிக்கி பெரிசா பார்த்து சொல்லுங்க. டவுன்லோட் செஞ்சு, உட்கார்ந்து, படுத்து பார்த்து பொறுமையா ஆராஞ்சு யோசிச்சும் சொல்லலாம். (மக்கா, டவுன்லோடி உங்க பேருல அனுப்பி ஆப்பு வச்சுறாதீங்கப்பு!!!)

எதுவுமே நல்லா இல்லையென்றாலும், கூச்சப்படாம சொல்லுங்க. நான் வெட்கப்படாம, பிங்கி பிங்கி பாங்கி போட்டு ஏதாச்சும் ஒண்ணை அனுப்பிடுவேன்!!!

ஒரு ரகசிய கேள்வி. இந்த PIT நடுவர்கள் எந்த மாதிரி படங்களை தேர்ந்தெடுப்பாங்க? யாருக்காச்சும் தெரியுமா?

(PIT  நடுவர்களே வந்து நேரடி பெயரிலோ அல்லது புனைப்பெயரிலோ வந்து கருத்து சொல்லலாம். ஆட்சேபனை இல்லை. ரகசியம் காக்கப்படும்!!!)

பயப்புள்ள ஒருத்தரும் ஒண்ணும் சொல்லல? அப்பவும், முன்சொன்ன அதே விதிமுறை கடைப்பிடிக்கப்படும். பிங்கி பிங்கி பாங்கி.

.

Friday, November 2, 2012

லேப்டாப் ஸ்க்ரீன் - சாண்டி

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு சுபயோக தினத்தில், என் மனைவி போன் பேசி விட்டு அதை திறந்திருந்த லேப்-டாப்பின் கீ-போர்ட் மீது வைத்து விட்டு, வேறு வேலையில் மூழ்க, எங்க வீட்டு பாப்பா ஏதோ அவளுக்கு இருக்கும் கொஞ்சுண்டு தெம்போடு, லேப்-டாப்பை கொஞ்சம் வேகமாக மூட, லேப்-டாப் ஸ்கிரீன் பணால். முதல் போணியே, நல்ல பெரிய போணிதான்.மேலே எதுவும் தெரியவில்லை. ஆன் செய்தால், உள்ளே இருக்கும் எல்ஈடி ஸ்க்ரீன் க்ரக் விட்டிருப்பது தெரிந்தது. பாதிப்பு ஸ்க்ரீனுக்கு மட்டும் தான் என்று தெரிந்தது. அதை தவிர, இந்த லேப்டாப்பை வைத்து, நான் பார்க்கும் பல வெட்டி வேலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது!!!

என்ன செய்யலாம் என்று யோசித்து, இணையத்தில் விசாரித்ததில், பக்கத்திலேயே ஒரு சர்வீஸ் சென்டர் இருப்பது தெரிந்தது. நல்ல திறமையான ஆள் தான் என்று வாசித்த ரீவ்யூஸ்களும் சொல்லியது. சரி, அவரிடம் எடுத்து சென்று கேட்போம் என்று சென்றேன்.

லேப்டாப்பை கொடுத்துவிட்டு, இதை சரி செய்ய எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். லேபர் சார்ஜ் எவ்வளவு ஆகும் என்று வேண்டுமானாலும் சொல்கிறேன். எந்த ஸ்க்ரீன் இதற்கு சரிபடும் என்பதை திறந்துப் பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும் என்றார்.

சரி, லேபர் சார்ஜ் உங்களுக்கு எவ்வளவு என்று கேட்டதற்கு தொண்ணூறு டாலர் என்றார். எச்சில் முழுங்கிவிட்டு, இந்த ஸ்க்ரீன் குத்துமதிப்பாக எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா என்று கேட்டேன். HP ஒரிஜினல் இருநூறு, முன்னூறு ஆகும். அதைபோல் வேறு நிறுவன பாகம் என்றால், எண்பதில் இருந்து நூற்றியம்பது வரை இருக்கும் என்றார்.

கூட்டி கழித்து பார்த்ததில் இருநூறு டாலருக்கு குறைவில்லாமல் வேட்டு வைக்க ரெடியாக இருப்பது தெரிய வந்தது. அவரை சொல்லி குற்றம் இல்லை. இங்கு இப்படி தான். சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் கதைதான்.

சில நாட்களுக்கு முன்பு, இப்படி தான் இன்னொரு சம்பவம். நண்பர் ஒருவர் ஆன்லைனில் எது எங்கு எப்ப சீப்பாக கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் ஒரு வாட்சைக்காட்டி, இது 20 டாலர் தான். வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். நமக்கு அச்சமயம் அது தேவையாக இருந்ததால், வாங்கிவிட்டேன்.

பார்சல் வீடு வந்த பிறகு, கையில் போட்டு பார்க்கும் போது தான் தெரிந்தது. செயின் நீளமாக இருந்தது. எனது கைக்கு சரியாக இருக்க வேண்டுமானால், இரண்டு இணைப்புகளைக் கழட்ட வேண்டியிருந்தது.

நம்மூர் பக்கம் என்றால் மசூதி பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸிற்கு சென்றால், நிறைய வாட்ச் ரிப்பேர் பார்க்கும் கடைகள் இருக்கும். சரி செய்ய சொன்னால், 10 ரூபாய் கேட்பார்கள். இங்கே, 10 டாலர்கள் கேட்பார்களாம். பக்கமிருந்த ஒரு கடையில், நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தான் 15 டாலர் கொடுத்து இதுபோல் சரிசெய்திருந்தாராம்.

என்னடா, இது வம்பா போச்சே! என்று நினைத்துக்கொண்டேன். பின்ன, 20 டாலர் வாட்சிற்கு, 15 டாலர் செலவு செய்து ரிப்பேர் கூட இல்லை, செயினை சரி பண்ணுவதா என்று வேறு வழிமுறைகளை யோசித்தேன்.

இருக்கவே இருக்கிறது, யூ-ட்யூப் என்று அதில் இந்த வேலையை எப்படி செய்வது என்று பார்த்தேன். சின்ன குண்டு பின், கத்தி போன்றவற்றை வைத்தே, இதை சரி செய்ய வழிமுறைகள் சொல்லி நிறைய வீடியோக்கள் இருந்தன. நாலைந்து வீடியோக்கள் பார்த்து, நானே சரிசெய்துவிட்டேன். போலவே, நண்பர் அவருடைய காருக்கான லைட்டை யூட்யூப் வீடியோ பார்த்தே மாற்றினார்.

லேப்டாப்பிற்கு இது போல் ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்தேன். நான் அந்த லேப்டாப்பை வாங்கியது, சுமார் 500 டாலருக்கு. இப்ப, ரிப்பேர் செய்ய கேட்பது, சுமார் 200 டாலர். எனக்கு தெரிந்த ஒருவர் சமீபத்தில் தான், 350 டாலர் கொடுத்து, ஒரு நல்ல லேப்டாப் வாங்கியிருந்தார். 200 டாலருக்கு ரிப்பேர், 350 டாலருக்கு புது லேப்டாப் என்று ஒரு ’நீயா நானா’ உள்ளூக்குள் ஓடியது.

சரி, யூ-ட்யூப் பார்ப்போம் என்று பார்த்தால், இதே மாடல் லேப்டாப்பை திறந்து ஸ்க்ரீனை சரி செய்ய பல பேர் வழி சொல்லுகிறார்கள். லேப்டாப் கழுத்தில் கத்தியை வைக்க தைரியம் வந்தது.

இரண்டு மூன்று வீடியோக்கள் பார்த்துவிட்டு, அது போலவே ஸ்க்ரூக்களை கழட்டினேன். ஸ்க்ரீனையும் கழட்டி பார்க்க முடிந்தது. அந்த மாடல் எல்ஈடி ஸ்க்ரீனை, இணையத்தில் தேடினேன். நாற்பது-ஐம்பது டாலருக்கு கிடைத்தது. ஆன்லைனில் ஆர்டர் கொடுக்க, மூன்று நாட்களில் வீடு வந்து சேர, அதை லேப்டாப்பில் இணைக்க, இதோ லேப்டாப் ரெடி!!! ஒரு பதிவும் ரெடி!!!

நான் எழுதுவதற்கு இடையூறாக எத்தனை தடங்கல்கள்? அதையெல்லாம் முறியடித்து, அதை வைத்தே எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

யூ-ட்யூப் புரட்சி வாழ்க!!! நூற்றியம்பது டாலரை தண்டம் அழாமல் காப்பாற்றியதற்கு யூ-ட்யூப்பிற்கு நன்றி. யாருப்பா அது? சிறு தொழில்களை, யூ-ட்யூப் அழிக்கிறது என்று போராட்டம் பண்றது?!!!

---

நியூயார்க் பக்கம் சுழற்றியடித்த சாண்டியால், நியூயார்க் பங்கு சந்தை இரு தினங்களாக மூடபட, அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள் எனக்கு.

பங்குசந்தை சம்பந்தமான மென்பொருள் செயலிகளை பராமரித்து/மராமத்து செய்து வருவதால், அலுவலகத்தில் பல்வேறு பிரச்சினைகள். இதுவரை இந்த மாதிரி ஆனதே இல்லை என்பதால், புதிது புதிதாக சரித்திரத்தில் இதுவரை பாராத பிரச்சினைகள். அந்த லட்சணத்தில் செயல்பட்டன, அந்த செயலிகள்.

இரண்டு நாட்களாக நிறைய வேலை செய்தும், ஒரு கஸ்டமர் அனுப்பியிருந்த இரண்டு மியூச்சுவல் பண்ட் ஆர்டர்கள் எக்ஸ்சேஞ்ச் போய் சேரவில்லை. ஒருநாள் கழித்தே அனுப்ப முடிந்தது. ஆனாலும், அந்த கஸ்டமருக்கு மகிழ்ச்சி. அடுத்த நாள், மார்க்கெட் ஏறியிருந்தது. லாபம் என்பதால், கம்ப்ளையிண்ட் எதுவும் இல்லை. நாங்கள் தப்பித்தோம்.

 
.