Monday, April 29, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 5

அடுத்து சென்ற இடம் - ஓல்ட் ஃபெய்த்புல் (Old Faithful). 

1870இல் ஆய்வுக்கு சென்ற குழுவினர், முதன் முதலில் பார்த்த வெந்நீர் நீருற்று இது தான். பீறிட்டுக்கொண்டு அடித்த நீருற்று, கொஞ்ச நஞ்ச உயரத்தில் அல்ல... நூற்றி இருபத்தி ஐந்து அடி உயரத்திற்கு அடித்திருக்கிறது.

அவர்கள் அங்கிருந்த நேரத்தில் ஒன்பது முறை பீறிட்டு அடித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் அடித்திருக்கிறது. சொல்லிவைத்த மாதிரி சரியான நேரத்திற்கு பீறிட்டு அடிக்க, இதற்கு பெயராக ‘பழைய நம்பிக்கை’ என்று வைத்தார்கள்.

இன்னமும் இந்த நீருற்று யாரையும் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு 91 நிமிடத்திற்கு ஒருமுறை பீறிடுகிறது. இதுதான் உலகில் கணிப்பு அதிகம் பொய்க்காத புவியியல் அம்சம்.


இங்கு இருக்கும் அரங்கம், வணிக வளாகங்கள் போன்றவற்றில், அடுத்த முறை எப்போது நீர் பீறிடும் என்பதை கணித்து எழுதி வைத்திருந்தார்கள். நாம் அதற்கெற்ப ஷாப்பிங் முடித்துக்கொண்டு, உணவருந்திக்கொண்டு செல்லலாம்.

நாங்கள் சென்ற போது, கேமரா சகிதம் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்த இருக்கைகள் நிறைந்திருந்தன. இதுதான் இங்குள்ள ஸ்டார் நீருற்று. அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட நீருற்று.

புகைந்து கொண்டிருந்தது, கணித்தது போலவே, சில நிமிடங்களில் பீறிட தொடங்கியது.


சுற்றி இருந்த கேமராக்கள் அனைத்தும், கண்கொள்ளா காட்சியாக  இந்த காட்சியை சுட்டுத் தள்ளியது.


ஏறக்குறைய மூன்று-நான்கு நிமிடங்கள் இருந்திருக்கும்.  இரு நிமிடங்கள் குறைய தண்ணீர் வந்தால், இடைவெளி 90 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்களாகிவிடுமாம்.


முடியும் போது, லைட்டாக கைத்தட்டி விட்டேன். உடனே, பக்கத்தில் இருப்பவர்கள் தொடர, முடிவில் மொத்த கூட்டமும் கைத்தட்டியது. ‘அடப்பாவிங்களா, அங்கே என்ன வித்தையா காட்டுனாங்க?!!!’ என்று கமெண்ட் விட்டபடி கிளம்பினோம்.


அடுத்த முறைக்கு, கடிகாரங்கள் திருப்பி வைக்கப்பட்டன.


அன்று இரவு தங்குவதற்கு, நாங்கள் ஏற்பாடு செய்திருந்த லாட்ஜ், அங்கிருந்து 120 மைல்கள் தொலைவில் இருந்தது. சாயந்திர நேரமானதால், அப்போதே கிளம்பினோம்.


சென்ற நேரம் நன்றாக இருட்டிவிட, நாங்கள் சென்ற வழியில் ஏதோ வேலை நடக்க, வண்டியை ஓட்ட சிரமமாகிவிட்டது. காரை மெதுவாக ஓட்ட, இன்னமும் நேரமாக நடு ராத்திரி போய் சேர்ந்தோம். அங்கு சென்று சாப்பிடலாம் என்று நினைத்திருக்க, அங்கு எந்த உணவகமும் இல்லை. கைவசம் இருந்த கொஞ்சம் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்கினோம்.

இது எவ்வளவு பழைய நிகழ்வு என்பதற்கு ஒரு சம்பவம். அப்போது தான், ‘நீதானே என் பொன் வசந்தம்’ பாடல்கள் வெளியாகி இருந்தது. தூங்குவதற்கு முன்பு, என் போனில் டவுன்லோடிவிட்டு தூங்கினேன்.

.

ஆப்கான் உணவு

வந்தேறிகளின் நாடு என்பதால், அமெரிக்காவில், பல தரப்பட்ட மக்கள், பல நாட்டு மளிகை கடைகள், உணவு பொருட்கள், உணவகங்கள் என எங்கும் காணலாம்.

அமெரிக்க அரசாங்கம், உலகில் இருக்கும் பல நாடுகளுடன் பிரச்சினையில் ஈடுபட்டாலும், அமெரிக்க மக்கள் வேறு நாட்டு மக்களுடன் எந்த பிரச்சினையும் செய்வதில்லை என்பது என் எண்ணம். (திரும்பவும், அமெரிக்கா என்பதே பல நாட்டு மக்களின் கலவை தான்...) அட்லீஸ்ட், வெறுப்பை காட்ட மாட்டார்கள். நான் வந்த புதிதில், வீட்டு பக்கம் ஆப்கான் பேக்கரி என்ற கடையைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்போது, எந்த ஆச்சரியமும் இல்லை. கியூபா, சைனா, கொரிய கடைகளை வழியெங்கும் காண்கிறேன். அந்த கடைகளில் அமெரிக்கர்கள் வர்த்தகம் புரிவதையும் காண்கிறேன்.

அப்படி சில நாட்கள் முன்பு, ஒரு ஆப்கான் உணவகத்தை பார்த்தேன். ஆப்கானிஸ்தான், எனக்கு இருவகையாக தெரியும். தாலிபான் போன்ற தீவிரவாத வழியை தேர்ந்தெடுத்த மக்கள் மற்றும் தாலிபான் மற்றும் பிற நாட்டு ராணுவத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் அப்பாவி மக்கள். அவர்கள் உணவை பற்றி யோசித்ததில்லை. இஸ்லாமிய நாடு என்பதால் அசைவ உணவு வகைகள், ரொட்டி என நம்மூர் உணவு வகை போல தான் இருக்கும் என்று நினைத்தாலும், சுவை எப்படி இருக்கும் என்பதில் ஒரு ஆர்வம் இருந்தது. தவிர கடையின் பெயரில் கபோப் என்று இருந்ததால் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று தைரியமாக உள்ளே சென்றோம்.சின்ன கடை தான். சில அமெரிக்கர்கள் உணவருந்தி கொண்டிருந்தார்கள். டிவியில் ஒரு இந்தி பாடல் ஓடிக்கொண்டிருந்தது. கடை ஊழியர்கள், தாடி வைத்துக்கொண்டோ, அல்லது பர்தா போட்டுக்கொண்டோ இருப்பார்கள் என்றெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களும் அப்படி இருக்கவில்லை. அவர்கள் அமெரிக்கர்கள் இல்லை. ஆனால், அமெரிக்க உடையில் இருந்தார்கள்.

ஆப்கான் டச் இருக்க வேண்டும் என்று கடை முழுக்க ஆப்கான் சமாச்சாரங்கள் வைத்திருந்தார்கள். ஆப்கான் உடை என்று இரு ஜோடி உடைகளை, சுவரில் மாட்டி வைத்திருந்தார்கள். நம்மூர் வடக்கத்திய உடை போல இருந்தது. நான் இதுவரை டிவியில் பார்த்த ஆப்கானிஸ்த்தனியர்கள் யாரும் இதுபோல் உடை அணிந்து பார்த்ததில்லை. மேலே தபேலாவும், ஆர்மோனியமும். நாம் தமிழ் இசை என்று சொல்லும் பாடல்களில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்களில் இருப்பது, தபேலாவும், ஆர்மோனியமும் தான்.


அப்புறம், அந்த உலகப்புகழ் பெற்ற ஆப்கான் பெண் படம், சுவற்றில் ஒரு பக்கம் மாட்டப்பட்டிருந்தது.


இன்னொரு பக்கம், சிதைக்கப்பட்ட புத்தர் சிலை இருந்தது. தென்னிந்தியர்கள் என்ற அளவில் நம்மை தெரிந்து வைத்திருந்தார்கள். கனிவான உபசரிப்பிற்கு பின்பு, உட்கார்ந்து மெனு கார்டை பார்த்தோம்.
டீ சாப்பிடுகிறீர்களா என்று கடை பெண்மணி கேட்டார். ஒண்ணே ஒண்ணு சொன்னோம். அப்படி ஒன்றும் விசேஷமில்லை. சாதாரண டீ தான். டின்னரின் போது, டீ கேட்டது தான் சிறப்பு.

அசைவ உணவு சாப்பிடலாம் என்று தான் சென்றிருந்ததால், சைவ உணவு வகைகளைத் தேடவில்லை. மெனுவில் ஒன்றே ஒன்று (கத்தரிக்காய் கறி) தான் பார்த்த ஞாபகம்.

நினைத்த மாதிரியே, சில ரொட்டி வகைகள், கறி வகைகள், கபாப்கள், ரைஸ் வகைகள் என மெனு இருந்தது. மெடிடெரெனியன் போலவும் கொஞ்சம் நம்மூர் போலவும் இருந்தது.  ஒரு ரொட்டியும், அதற்கு சிக்கன் கறியும், பிறகு சிக்கன் & மட்டன் கபாப்பும் ரைஸ் புலாவும்  ஆர்டர் செய்தோம்.


கொஞ்சுண்டு சாலட்டுடன், இரு சட்னிகள் தந்தார்கள். பச்சை கலர் சட்னி காரமாக இருக்கும் என்று எச்சரித்துவிட்டு சென்றார்கள். பொதுவாக, அமெரிக்காவில் ஸ்பெஸி என்று தரும் ஐட்டங்களில் பெயருக்கு காரம் இருக்கும். மற்றவற்றில் காரமே இருக்காது. அதனால், லைட்டாக காரம் இருக்கும் என்று நினைத்தால், காரம் சுர்ரென்று இருந்தது.

ரொட்டி நம்மூரில் செய்வது போலதான். நன்றாக ஸ்மூத்தாக  இருந்தது. சிக்கன் கறியும் அளவோடு காரத்தோடு, கொத்தமல்லி எல்லாம் தூவி நன்றாக இருந்தது. இருந்தாலும், நம்மூர் போல பலதரப்பட்ட வாசனை மசாலாக்கள் போடவில்லை. ஓகே.


இனி கடையின் முக்கியம்சமான கபாப். சிக்கன், மட்டன், பீப் என மூன்று வகைகள் இருந்தன. சிக்கனும் மட்டனும் ஆர்டர் செய்திருந்தோம். 

சிக்கன் மிருதுவாக சுவையாக இருந்தது. மட்டன் கொஞ்சம் கடினமாக இருந்தது. தவிர, நமது மட்டன் உணவு வகைகளில் எல்லாம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய் என்று வாசனை பலமாக இருக்கும். இதில் அப்படியெல்லாம் இல்லாமல், மட்டன் வாடை மிகுதியாக இருந்ததால், சாப்பிட கஷ்டமாக இருந்தது. பாசுமதி அரிசியில் புலவ், உதிரி உதிரியாக, அதற்கென்று தனியாக எந்த சுவையும் இல்லாமல் இருந்தது. சிக்கன் கறிகுழம்புடன் சாப்பிட நன்றாக இருந்தது.


சிக்கன் கபாப் + மிளகாய் சட்னி காம்பினேஷன், இங்கு சாப்பிட்டதில் ஸ்பெஷல் எனலாம். விலை அனைத்தும் மலிவே.

பாப்பா அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு சமயம், ஒரு டேபிளில் தலையை முட்டிக்கொண்டு அழ, கடைக்கார பெண்மணி அவளுக்கு ஏதோ கொடுத்து சமாதானப்படுத்தினார். அதன் பெயர் - ஃபிர்னி. டெசர்ட் வகை. எங்க வீட்டுக்கு பக்கமிருக்கும் வட இந்திய குடும்பத்தில் அதை செய்வார்கள். ரைஸ் புட்டிங் அல்லது அரிசி பால் பாயசம் போன்றது. பாதாம், பிஸ்தா போன்றவை சேர்ப்பார்கள்.  சிலர் ஆப்பிள் போன்ற பழங்களும் சேர்ப்பார்கள். குளிர வைத்து, சில்லென்று சாப்பிடுவார்கள்.

கடை உரிமையாளர், அமெரிக்க வந்த அவர்களது குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினர். டிவியில் ஹிந்தி பாடல் ஓடிக்கொண்டிருந்ததால், அதைப் பற்றி விசாரித்தோம். ஆப்கானிலும் படம் எடுப்பார்கள் என்றாலும், அதெல்லாம் கொஞ்சமே. பட்ஜெட்டும் கம்மியாகவே இருக்குமாம். இந்திய படங்கள் தான் அவர்களது பொழுதுப்போக்காம். அது சரி, ஹிந்தி படங்களை இப்படி பார்த்தால், கலக்‌ஷன் ஏன் 200 கோடியை அடிக்கடி தொடாது?

நம்மூரில் எங்காவது பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் இருக்கிறதா? இருக்கும் அரசியலில், இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாட்டில் உடுப்பி ஹோட்டல் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

.

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 4

பயணத்தை தொடருவதற்கு முன்பு, கொஞ்சம் சொந்த கதை.

---

இந்த பயணத்தொடரை சீரியஸாக தொடர்ந்து வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். பின்ன, நாலு நாள் போயிட்டு வந்த டூரை பத்தி நாலு மாத இடைவெளியில் கதை விட்டு கொண்டு இருந்தால்?!!  அதான்...

ஜனவரியில் இருந்தே அலுவலகத்தில் வேறு வேலை. அதை கற்றுக்கொண்டு வேலையை முடிப்பதற்கு, சில சமயம் வீடு வந்தும் வேலை செய்ய வேண்டி இருந்தது. வீட்டில் மனைவியுடன் உரையாடாமல், குழந்தையுடன் விளையாடாமல், அலுவலக வேலைக்காக லேப்டாப்பை பார்த்துக்கொண்டு இருப்பதே ஓவர். இதில் ப்ளாக்கர், பேஸ்புக், ட்விட்டர் இத்யாதிகளை ஓப்பன் செய்வது பெரும் பாவமாகப்பட்டதால், கைவசம் எழுத ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வந்து தேங்கினாலும், எழுதவில்லை.நான் ப்ளாக்கர் பக்கமே வராவிட்டாலும், சில நல்லவர்கள் ‘குமரன் குடில்’ க்கு வருகை புரிவது மகிழ்ச்சியே என்றாலும், ப்ளாக்கரில் புள்ளிவிவரங்கள் எடுப்பதில் ஏதேனும் Bug இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது.

----

பயணத்தைத் தொடருவோம். எங்கே விட்டோம்? ரீ-கேப்.

...முன்பு அபார்ட்மெண்ட் வீடாக இருந்ததை விடுதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பெட்ரூம்கள், ஒரு கிச்சன், ஹால் என்று இரு குடும்பங்கள் தங்குவதற்கு ரொம்ப வசதியாக இருந்தது. அன்றைய தினம் தங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகள் சொதப்பினாலும், ஏதோ நல்ல நேரத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்க, நிம்மதியுடன் தூங்கினோம். ஆன்லைனில் புக் செய்யும் போது, இனி கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவம் அந்த தினம் கிடைத்தது.....

இதுதான் நாங்கள் தங்கியிருந்த இடம். காலையில் வெளிச்சத்தில் பார்த்தபோது, மலையடிவாரத்தில் ரொம்ப ரம்மியமாக இருந்தது.
திரும்ப வடக்கு நுழைவுவாயில் வழியாக யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்குள் நுழைந்தோம்.


மேலுள்ள படத்தில் A'யில் இருந்து B’க்கு, கிட்டத்தட்ட 135 மைலை, முதல் நாளில் கடந்திருந்தோம். இன்று கடக்க வேண்டிய தூரம் - 175 மைல்கள். (படத்தில் B இல் இருந்து C)

போகும் வழியில் இருப்பவை தான், நாம் இன்று காணப்போவது. கிளம்பும்போதே, தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த சப்வேயில் ப்ரெக்ஃபாஸ்ட்டை முடித்தோம். வடக்கு நுழைவுவாயிலுக்கு வெகு அருகிலேயே. இதோ வடக்கு நுழைவுவாயில்.ஆரம்பத்தில், யெல்லோஸ்டோன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கட்டப்பட்டது. ரூஸ்வெல்ட் ஆர்ச்.முதலில் சென்ற இடம் - நொரிஸ் ஹாட் ஸ்ப்ரிங்ஸ்.

 சென்ற வழியில், நிறைய இடங்களில் மரங்கள் கருகி சாய்ந்து கிடந்தன.  யெல்லோஸ்டோனில் வருடம்தோறும் காட்டுத்தீ உருவாவது உண்டு. போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்தது. பின்பு, இந்த காட்டுத்தீயும் இந்த வனசூழலுக்கு தேவையான இயற்கையான ஒன்று என்ற புரிதல் ஏற்பட்ட பிறகு, காட்டுத்தீயால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பது, காட்டைவிட்டு வெளியே பரவுவதை தடுப்பது போன்றவை மட்டுமே அரசாங்கத்தின் நோக்கமானது. ஆனாலும், 1988 ஆண்டு வந்த தீ, ரொம்பவே ஆட்டம் காட்டிவிட்டதாம்.அதனால், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள் அங்கேயே அப்படியே இருந்து மக்கி, பிறகு புது மரங்கள் வளர்வது என முடிந்தவரை வனச்சூழலை அப்படியே பாதுகாக்கிறார்கள். மரக்கட்டைகளை அடுக்கி கொண்டு வரிசையாக செல்லும் லாரிகளை காண முடியவில்லை. :-(


நொரிஸ் ஹாட் ஸ்ப்ரிங்ஸில் எனக்கொன்றும் விசேஷமாக தெரியவில்லை. வழக்கம்போல், ஆங்காங்கே புகைந்துக்கொண்டு, கொதித்துக்கொண்டு இருந்தது. இப்படி ஒரு ஆச்சரியமான விஷயம், இங்கே விசேஷமாக தெரியாத அளவுக்கு, யெல்லோஸ்டோனில் நிறைய இடங்களில் இயற்கையின் புதிர்கள்.

ஒரு இடத்தில், இந்த நீருற்றுகள், எரிமலைகள் பற்றியெல்லாம் சுலபமாக புரிந்துக்கொள்ளும் வகையில் பலகை வடிவமைப்புகள் இருந்தன. குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சம்பந்தமான படிப்புகளில் ஆர்வமேற்பட உதவும்.


உலகில் எங்கெங்கெல்லாம் இம்மாதிரி இருக்கிறது என்று காட்டும் ஒரு படமும் அதில் இருந்தது. இந்தியா அதில் இல்லை. ஆனால், இந்தியாவிலும் வட இந்தியாவில், இமய மலை அருகில், வெந்நீர் ஊற்றுகள் இருப்பதாக அறிகிறேன்.சுற்றி சுற்றி வந்தோம். நடப்பதற்கு மர பலகைகள் அமைத்திருந்தார்கள். அதை விட்டு, கீழே இறங்கி வேண்டாம் என்று எச்சரிக்கை வேறு. என் பொண்ணு, கையில் வைத்திருந்த கண் கண்ணாடியை கீழே போட்டு விட, எதற்கு ரிஸ்க் என்று அப்படியே விட்டு விட்டு வந்தோம். ஏதோ, எங்களால் முடிந்த இயற்கைக்கு உபத்திரவம்.இங்கு எடுத்த வீடியோக்களை எல்லாம், மொத்தமாக சேர்த்து ஒண்ணு செஞ்சு வச்சுருக்கேன். அப்புறமா காட்டுறேன்.


போகும் வழியில் ஒரு ஏரியை காண, அதில் கப்பல் விட்டு, இயற்கை சூழலில் குப்பையை சேர்த்தோம். சொல்லி பார்த்தேன். ஒரு சின்ன பேப்பரால் ஒன்றும் ஆகாது என்று சாக்கு சொல்லப்பட்டது. ஆமாம், பேப்பர் தானே!!!


அடுத்து சென்ற இடம் - ஓல்ட் ஃபெய்த்புல் (Old faithful). கொஞ்சம் விலாவரியாக, அடுத்த பதிவில் பார்ப்போம்.

.