Monday, April 29, 2013

ஆப்கான் உணவு

வந்தேறிகளின் நாடு என்பதால், அமெரிக்காவில், பல தரப்பட்ட மக்கள், பல நாட்டு மளிகை கடைகள், உணவு பொருட்கள், உணவகங்கள் என எங்கும் காணலாம்.

அமெரிக்க அரசாங்கம், உலகில் இருக்கும் பல நாடுகளுடன் பிரச்சினையில் ஈடுபட்டாலும், அமெரிக்க மக்கள் வேறு நாட்டு மக்களுடன் எந்த பிரச்சினையும் செய்வதில்லை என்பது என் எண்ணம். (திரும்பவும், அமெரிக்கா என்பதே பல நாட்டு மக்களின் கலவை தான்...) அட்லீஸ்ட், வெறுப்பை காட்ட மாட்டார்கள். நான் வந்த புதிதில், வீட்டு பக்கம் ஆப்கான் பேக்கரி என்ற கடையைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்போது, எந்த ஆச்சரியமும் இல்லை. கியூபா, சைனா, கொரிய கடைகளை வழியெங்கும் காண்கிறேன். அந்த கடைகளில் அமெரிக்கர்கள் வர்த்தகம் புரிவதையும் காண்கிறேன்.

அப்படி சில நாட்கள் முன்பு, ஒரு ஆப்கான் உணவகத்தை பார்த்தேன். ஆப்கானிஸ்தான், எனக்கு இருவகையாக தெரியும். தாலிபான் போன்ற தீவிரவாத வழியை தேர்ந்தெடுத்த மக்கள் மற்றும் தாலிபான் மற்றும் பிற நாட்டு ராணுவத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் அப்பாவி மக்கள். அவர்கள் உணவை பற்றி யோசித்ததில்லை. இஸ்லாமிய நாடு என்பதால் அசைவ உணவு வகைகள், ரொட்டி என நம்மூர் உணவு வகை போல தான் இருக்கும் என்று நினைத்தாலும், சுவை எப்படி இருக்கும் என்பதில் ஒரு ஆர்வம் இருந்தது. தவிர கடையின் பெயரில் கபோப் என்று இருந்ததால் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று தைரியமாக உள்ளே சென்றோம்.



சின்ன கடை தான். சில அமெரிக்கர்கள் உணவருந்தி கொண்டிருந்தார்கள். டிவியில் ஒரு இந்தி பாடல் ஓடிக்கொண்டிருந்தது. கடை ஊழியர்கள், தாடி வைத்துக்கொண்டோ, அல்லது பர்தா போட்டுக்கொண்டோ இருப்பார்கள் என்றெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களும் அப்படி இருக்கவில்லை. அவர்கள் அமெரிக்கர்கள் இல்லை. ஆனால், அமெரிக்க உடையில் இருந்தார்கள்.

ஆப்கான் டச் இருக்க வேண்டும் என்று கடை முழுக்க ஆப்கான் சமாச்சாரங்கள் வைத்திருந்தார்கள். ஆப்கான் உடை என்று இரு ஜோடி உடைகளை, சுவரில் மாட்டி வைத்திருந்தார்கள். நம்மூர் வடக்கத்திய உடை போல இருந்தது. நான் இதுவரை டிவியில் பார்த்த ஆப்கானிஸ்த்தனியர்கள் யாரும் இதுபோல் உடை அணிந்து பார்த்ததில்லை. மேலே தபேலாவும், ஆர்மோனியமும். நாம் தமிழ் இசை என்று சொல்லும் பாடல்களில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்களில் இருப்பது, தபேலாவும், ஆர்மோனியமும் தான்.


அப்புறம், அந்த உலகப்புகழ் பெற்ற ஆப்கான் பெண் படம், சுவற்றில் ஒரு பக்கம் மாட்டப்பட்டிருந்தது.


இன்னொரு பக்கம், சிதைக்கப்பட்ட புத்தர் சிலை இருந்தது. தென்னிந்தியர்கள் என்ற அளவில் நம்மை தெரிந்து வைத்திருந்தார்கள். கனிவான உபசரிப்பிற்கு பின்பு, உட்கார்ந்து மெனு கார்டை பார்த்தோம்.




டீ சாப்பிடுகிறீர்களா என்று கடை பெண்மணி கேட்டார். ஒண்ணே ஒண்ணு சொன்னோம். அப்படி ஒன்றும் விசேஷமில்லை. சாதாரண டீ தான். டின்னரின் போது, டீ கேட்டது தான் சிறப்பு.

அசைவ உணவு சாப்பிடலாம் என்று தான் சென்றிருந்ததால், சைவ உணவு வகைகளைத் தேடவில்லை. மெனுவில் ஒன்றே ஒன்று (கத்தரிக்காய் கறி) தான் பார்த்த ஞாபகம்.

நினைத்த மாதிரியே, சில ரொட்டி வகைகள், கறி வகைகள், கபாப்கள், ரைஸ் வகைகள் என மெனு இருந்தது. மெடிடெரெனியன் போலவும் கொஞ்சம் நம்மூர் போலவும் இருந்தது.  ஒரு ரொட்டியும், அதற்கு சிக்கன் கறியும், பிறகு சிக்கன் & மட்டன் கபாப்பும் ரைஸ் புலாவும்  ஆர்டர் செய்தோம்.


கொஞ்சுண்டு சாலட்டுடன், இரு சட்னிகள் தந்தார்கள். பச்சை கலர் சட்னி காரமாக இருக்கும் என்று எச்சரித்துவிட்டு சென்றார்கள். பொதுவாக, அமெரிக்காவில் ஸ்பெஸி என்று தரும் ஐட்டங்களில் பெயருக்கு காரம் இருக்கும். மற்றவற்றில் காரமே இருக்காது. அதனால், லைட்டாக காரம் இருக்கும் என்று நினைத்தால், காரம் சுர்ரென்று இருந்தது.

ரொட்டி நம்மூரில் செய்வது போலதான். நன்றாக ஸ்மூத்தாக  இருந்தது. 



சிக்கன் கறியும் அளவோடு காரத்தோடு, கொத்தமல்லி எல்லாம் தூவி நன்றாக இருந்தது. இருந்தாலும், நம்மூர் போல பலதரப்பட்ட வாசனை மசாலாக்கள் போடவில்லை. ஓகே.


இனி கடையின் முக்கியம்சமான கபாப். சிக்கன், மட்டன், பீப் என மூன்று வகைகள் இருந்தன. சிக்கனும் மட்டனும் ஆர்டர் செய்திருந்தோம். 

சிக்கன் மிருதுவாக சுவையாக இருந்தது. மட்டன் கொஞ்சம் கடினமாக இருந்தது. தவிர, நமது மட்டன் உணவு வகைகளில் எல்லாம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய் என்று வாசனை பலமாக இருக்கும். இதில் அப்படியெல்லாம் இல்லாமல், மட்டன் வாடை மிகுதியாக இருந்ததால், சாப்பிட கஷ்டமாக இருந்தது. பாசுமதி அரிசியில் புலவ், உதிரி உதிரியாக, அதற்கென்று தனியாக எந்த சுவையும் இல்லாமல் இருந்தது. சிக்கன் கறிகுழம்புடன் சாப்பிட நன்றாக இருந்தது.


சிக்கன் கபாப் + மிளகாய் சட்னி காம்பினேஷன், இங்கு சாப்பிட்டதில் ஸ்பெஷல் எனலாம். விலை அனைத்தும் மலிவே.

பாப்பா அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு சமயம், ஒரு டேபிளில் தலையை முட்டிக்கொண்டு அழ, கடைக்கார பெண்மணி அவளுக்கு ஏதோ கொடுத்து சமாதானப்படுத்தினார். அதன் பெயர் - ஃபிர்னி. டெசர்ட் வகை. எங்க வீட்டுக்கு பக்கமிருக்கும் வட இந்திய குடும்பத்தில் அதை செய்வார்கள். ரைஸ் புட்டிங் அல்லது அரிசி பால் பாயசம் போன்றது. பாதாம், பிஸ்தா போன்றவை சேர்ப்பார்கள்.  சிலர் ஆப்பிள் போன்ற பழங்களும் சேர்ப்பார்கள். குளிர வைத்து, சில்லென்று சாப்பிடுவார்கள்.

கடை உரிமையாளர், அமெரிக்க வந்த அவர்களது குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினர். டிவியில் ஹிந்தி பாடல் ஓடிக்கொண்டிருந்ததால், அதைப் பற்றி விசாரித்தோம். ஆப்கானிலும் படம் எடுப்பார்கள் என்றாலும், அதெல்லாம் கொஞ்சமே. பட்ஜெட்டும் கம்மியாகவே இருக்குமாம். இந்திய படங்கள் தான் அவர்களது பொழுதுப்போக்காம். அது சரி, ஹிந்தி படங்களை இப்படி பார்த்தால், கலக்‌ஷன் ஏன் 200 கோடியை அடிக்கடி தொடாது?

நம்மூரில் எங்காவது பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் இருக்கிறதா? இருக்கும் அரசியலில், இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாட்டில் உடுப்பி ஹோட்டல் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

.

No comments: