Monday, November 4, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா

எனக்கு தெரிந்து ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்படங்கள் டென்வரில் ரிலீஸ் ஆவது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். ஆரம்பமும், ஆல் இன் ஆலும் இங்கு தீபாவளி ரிலீஸ்.



வெற்றிகரமாக ஹாட்ரிக் ப்ளாப் கொடுத்திருக்கிறார் கார்த்தி. இயக்குனர்களால் முன்பு வெற்றிகளும், இப்போது தோல்விகளும். அவரால் படத்தின் வெற்றிக்கு ஒன்றும் பண்ண முடியாது போல.

இந்த படத்தில் கதை இல்லை என்று சொன்னால், இதற்கு முன்னால் வந்த ராஜேஷின் படங்களில் எங்கே கதை இருந்தது என்று இயக்குனர் ராஜேஷே கேட்பார்.

இதில் அப்படியே. இருந்தாலும், இந்த படம் ஏன் எடுபடவில்லை?

நான் படம் பார்த்த திரையரங்கில், படம் முழுக்க சிரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். நகைச்சுவை தோரணம். ஆனால் முழு படமாக யாருக்கும் திருப்தி கொடுத்திருக்காது. ஒரு ஒன்லைன் கதையாக  என்ன சொல்வது? குழப்பம் தான் வருகிறது.

முக்கியமாக, காஜல் அகர்வால் கதாபாத்திரம் எரிச்சலை கிளப்பியது. காஜலின் மீதல்ல. இயக்குனரின் மீது. லூஸு கதாபாத்திரங்கள், நாம் எப்போதும் பார்ப்பது தான். நகைச்சுவைக்கு என்றாலும், இப்படியா டம்பாக?

முந்தைய ராஜேஷின் படங்களில் சந்தானம் டாமினேட்டிங்காக இருக்கும். ஹீரோக்களை வாரு வாரு என்று வாருவார். இதில் அது மிஸ்ஸிங். கார்த்தி எப்போதும் டிவி நிகழ்ச்சிகளில் வந்து பேசுவது போல் பேசுகிறார். இன்னொரு செண்டிமெண்டல் மிஸ்ஸிங் - ராஜேஷின் போன படத்தின் ஹீரோ, உதயநிதி, இந்த படத்தில் கெஸ்ட் அப்பியரென்ஸ் கொடுக்கவில்லை!!!

படத்தின் ஒரே ஆசுவாசம் - தமன். ஆரம்பத்தில் யுவன் மட்டும் சொதப்ப, இதில் தமன் மட்டும் ஜொலித்திருக்கிறார். இளையராஜாவின் உற்சாகமுட்டும் தாளங்களை பொறுக்கியெடுத்து போட்டு பாடல்களை உருவாக்கியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நாள் கேட்கலாம் ரக பாடல்கள்.

80இல் நடக்கும் காட்சியில் சந்தானம் சொல்லுவார், “சுதாகர்தான் அடுத்த சீப் மினிஸ்டர். ரஜினி, கமல் எல்லாம் சும்மா சிசனல்” என்று. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாம் இப்படி தானே தப்பாக மதிப்பிடுகிறோம்? நாம் இப்போது வைத்திருக்கும் மதிப்பீடுகளும், பிற்காலத்தில் காமெடியாகத்தானே தெரியும்? இந்த படமே பிற்காலத்தில் இம்மாதிரியான பெருங்காமெடியாக மாறலாம்!!!

கார்த்தியின் படங்கள் அனைத்தையும் தயாரித்திருப்பதோ, விநியோகித்திருப்பதோ ‘ஸ்டுடியோ கிரீன்’. ஞானவேல்ராஜா, கார்த்தியின் உறவினர் என்று நினைக்கிறேன். (இல்லை என்று ஒரு விகடன் பேட்டியில் ஞானவேல்ராஜா சொல்லியிருந்தாலும்). இவர்களை வைத்து ஒன்று தான் இப்போது சொல்ல தோன்றுகிறது.

ஒரு பொன் முட்டையிடும் வாத்து செத்துக்கொண்டிருக்கிறது.

.