Friday, May 29, 2009

காத்திருந்து காத்திருந்து...

"ஏன் தான் பொண்ணு பார்க்க போறோம்ன்னு சொல்லிட்டு போனோமோ? இப்ப கேபின் கிட்ட போனவுடனே நம்மள சுத்தி வளைச்சிருவாங்களே..."

ஏன் வருத்தப்படுறேன்னு கேட்கறீங்களா? பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லியிருச்சு.

"ஹே! மேன்... வாட் ஹேப்பண்ட்?" பார்த்துட்டான்டா பழரசம் பார்த்திபன். அதென்ன பழரசம் பார்த்திபன்னு பார்க்கறீங்களா? ஜூஸ் ஜங்ஷன் போயி ஒரு நாளைக்கு ரெண்டு ஜூஸ் அடிப்பான்.

"பொண்ணு பிடிக்கலை. வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்."

"ஹைய்யா! பொண்ணு தப்பிச்சிருச்சி."

மானிட்டரை முறைத்து கொண்டிருந்தவன், முறைப்பை அவனிடம் காட்டினேன்.

"சரி, சரி சொல்லு. என்னாச்சு?"

"இல்ல, பொண்ணு கொஞ்சம் குண்டா இருக்கு."

ஹும் - எச்சில் தெறித்தப்படி வந்த சிரிப்பை விழுங்கிக்கொண்டு இடத்தை காலி செய்தான்.

நான் குனிந்து பார்த்தேன். என் தொப்பையை. அந்த பொண்ணும் அதைத்தான் அடிக்கடி பார்த்திச்சு.

*****

எங்க அப்பா "இந்த மாசம் முடிக்கலாம், அடுத்த மாசம் முடிக்கலாம்"ன்னு சொல்லத்தான் செய்யுறாரு. மாசம் மட்டும் தான் முடியுது. வேற எதுவும் முடிஞ்ச மாதிரி இல்ல. அவர் இத சொன்ன முத மாசத்துல கல்யாணம் பண்ணியிருந்தா, இந்நேரம் பொண்ணு மாசமாயிருக்கும்.

ஒரு வயசு பையன் மனசு புரியுதா? இன்னும் கொஞ்சம் நாள்ல வயசு பையன்னு கூட சொல்ல முடியாது. ஒரு ஆம்பிளை மனசு, இன்னொரு ஆம்பிளைக்கு புரிய மாட்டேங்குதே?

இந்த தரகரை சொல்லணும். பொண்ணு காட்டுறதுல ஒரு வேகம் காட்ட மாட்டேங்குறாரு. தேவையில்லாத விஷயத்தை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்து கடுப்ப கிளப்புவாரு. இப்படித்தான் போன வாரம், என்ன விசேஷம்ன்னு கேட்டதுக்கு,

"உனக்கு முதல்ல ஒரு பொண்ணு பார்த்தோமே, அதுக்கு நேத்து டெலிவரி"ன்னாரு.

*****

இனி இவுங்கள எல்லாம் நம்புறதா இல்ல. நானே களத்துல இறங்கிறலாம்ன்னு இருக்கேன். தன் கையே தனக்கு உதவி. ஹலோ, சிரிக்காதீங்க.

இங்க ஆபிஸ்லயே யாரையாச்சும் பார்த்து, பேசி, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிரலாம்ன்னு இருக்கேன். சாதி, மத, மொழி, இன பேதங்களை தகர்த்தெறிய எனக்கொரு வாய்ப்பு.

நானெல்லாம் இன்ஜினியருக்கு படிச்சதே, எனக்கு புடிச்ச பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணத்தான். இப்படித்தான் என் தலைவனும் சொன்னான். அவரு கல்யாணம் மட்டும் பண்ணாம, சூப்பர்ஸ்டாராகவும் ஆயிட்டாரு.

ஆனா, இங்க போட்டிக்கு பல பேரு இருக்கானுகளே. ப்ரஷ்ஷர் பொண்ணுகள, ட்ரெயினிங் முடிக்கறதுக்கு முன்னாலயே கரெக்ட் பண்ணிருறாங்க. அப்படி தப்பிச்சு வருற பொண்ணு, கொஞ்சம் சுமாரா இருந்தா போதும், முதல் ப்ராஜக்ட் முடிஞ்சு டெலிவரி பண்ணுறதுக்கு முன்னாடி, அந்த டீம்ல யாராச்சும் லவ்வ டெலிவரி பண்ணிருறாங்க. டெட்லைன் ப்ராஜக்ட்டுக்கு இருக்கோ, இல்லையோ, இவனுங்களுக்கு இருக்குது. விட மாட்டேன். மிச்சம் சொச்சம் இருக்கும்ல.

யார்ரா அந்த புள்ளை? நம்மளையே பார்த்துட்டு போகுது. புச்சா இருக்கே. எதுக்கு கீழே பார்க்குது?

அச்சச்சொ!!! ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன். இதே நினைப்புல பேண்ட் ஜிப் போட மறந்திருக்கேன். ச்சே.

*****

முடியலை. நானும் என்னென்னலாமோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன். எவளும் சீந்த மாட்டேங்குறாளே.

ஜிம் போயி தொப்பைய கொஞ்சம் குறைச்சிக்கிட்டு வந்து, டீம்ல கூட ஒர்க் பண்ற கேரள பொண்ணுக்கிட்ட "தொப்பை குறைஞ்சிருக்கா"ன்னு கேட்டா, அதுக்குள்ள சிக்ஸ் பேக்கோட ஒரு நார்த் இண்டியன் வந்து அவளை டீ சாப்பிட கூட்டிட்டு போயிடுறான்.

பேர் அண்ட் லவ்லி போட்டுக்கிட்டு, மங்களகரமா இருக்குற ஒரு குடும்ப பாங்குக்கிட்ட பேச்சு கொடுத்து, "சனிக்கிழமை கோவிலுக்கு போகலாமா"ன்னு கேட்டா, "இல்ல, நான் என் பாய் ப்ரண்ட் கூட பப்புக்கு போறேன்"னு சொல்லிட்டு போயிடுறா.

சரி, மேட்ரிமோனியல் சைட் போயாவது பார்க்கலாம் பார்த்தா, "அடேய் சாப்ட்வேர் இன்ஜினியர்களா! கொஞ்சம் தள்ளி நில்லுங்கடா"ங்கறாளுக.

எது எப்படியோ, நடக்குறது நடக்கட்டும்.

டீம்ல புதுசா ப்ரியான்னு ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்கா. நம்ம ஊருதான். கோயமுத்தூர். கேட்டி கொடுக்கணும். கடைசி முயற்சியை அவக்கிட்ட பண்ணுவோமா? எதுக்கு, வாங்குன பல்பு போதாதா?ன்னு உள்ளுக்குள்ள ஒரு சவுண்ட் கேட்குது.

கேட்டி கொடுத்து முடிக்கவும், அப்பாக்கிட்ட இருந்து போன்.

"ஆமாண்டா, தூரத்து சொந்தம். எல்லா பொருத்தமும் சரியா இருக்கு. எங்களுக்கு பிடிச்சிருக்கு. நீ வந்து பார்த்துட்டு சொல்லு".

*****

இன்னைக்கு காலையிலேயே எந்திரிச்சுட்டேன். சீக்கிரம் ஆபிஸ் போகணும். எல்லார்க்கிட்டயும் சொல்லணும். எனக்கு ரெண்டு மாசத்துல கல்யாணம்ன்னு. எத்தனை நாளா நினைச்சிருப்பேன்? இத சொல்லணும்ன்னு.

விஷயம் தெரியாதா? எனக்கு பொண்ணு புடிச்சு போச்சு. முக்கியமா, பொண்ணுக்கும் என்னை புடிச்சு போச்சு!

எல்லாரும் கூடி பேசி, அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் பதினாறாம் தேதி முகூர்த்தம் குறிச்சு இருக்காங்க. கல்யாணத்துக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.

ஆபிஸ்ல இன்னும் யாரும் வரல. ப்ரியா மட்டும் இருந்தாள்.

"என்ன ப்ரியா, இவ்ளோ சிக்கீரம்?"

"பீஜி ரொம்ப போர். வீக் எண்ட் உங்களுக்கு கால் பண்ணினேன். ரீச் ஆகல. எங்காச்சும் உங்க கூட ஷாப்பிங் போகலாம்ன்னு நினைச்சேன்."

....

என்னை கண்டுக்கொள்ளாமலே கேட்டாள். "சரி, இப்ப டீ சாப்பிட போலாமா?"

**************************************************************************

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Thursday, May 28, 2009

நைட் ரைடர்ஸ் ஊர் போய் சேர்ந்தார்களா?

நண்பர் சுகுமார் சுவாமிநாதன், அவரது தளத்தில் வெளியிடும் புகைப்படங்களும் கமெண்ட்களும் ரசித்து சிரிக்கும்வண்ணம் இருக்கும். கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்திருப்பார். அவருக்கு என் வாழ்த்துக்கள். சமீபத்தில் ஒரு புகைப்படத்தை கொடுத்து, அதற்கு தகுந்த கமெண்ட் கொடுக்கும்படி சக பதிவர்களை கேட்டிருந்தார். முடிவில், அவர் தேர்ந்தெடுத்த மூன்று கமெண்ட்களில் ஒன்று என்னுடையது.தேர்வுக்கு நன்றி. அவர் அழகாக வடிவமைத்த பதக்கத்துக்கும் நன்றி. :-)

Wednesday, May 27, 2009

பார் திறக்க சம்மதிப்பாரா கடவுள்?

டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்திற்கு எதிர்த்தாற் போல் ஒரு பார் திறக்க முடிவெடுக்கிறார் ஒரு தொழிலதிபர். சரி, கூட்டம் அதிகம் வரும் இடம். திறந்தால் லாபம் அதிகம் பார்க்கலாம் என்று ஒரு வியாபார தந்திரம்.

இது தெரிந்து போய் தேவாலயத் தலைமை அந்த தொழிலதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. தேவாலயத்திற்கு வரும் பக்தக்கோடிகளும் ஆட்சேபங்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், எதற்கும் பிடி கொடுக்கவில்லை அந்த தொழிலதிபர். மதுபான கடையை திறந்தே தீருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார்.

தேவாலய தலைமை கூடி பேசுகிறது. சொல்லி பார்த்தாச்சு, திருந்தலை. சட்டப்பூர்வமாகவும் அந்த நாட்டில் இவ்வாறு கடை அமைவதற்கு எந்த தடையும் இல்ல. மனு கொடுத்து பார்த்தார்கள். பலன் இல்லை. என்ன பண்ணலாம்? இதை எதிர்த்து தினசரி பிரார்த்தனை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரார்த்தனையும் நடந்தது, பொதுமக்கள் ஆதரவுடன்.

இது எதற்கும் சாய்ந்து கொடுக்கவில்லை பார் ஓனர். கட்டிட வேலை மும்முரமாக நடந்தது. தொழிலதிபருக்கு எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது, கடை திறப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை.

அது ஒரு மழைக்காலம். இடி, மின்னலுடன் தினமும் மழை பெய்து கொண்டிருந்தது. கடை திறப்பதற்கு ஒரு வாரம் முன்பு, ஒருநாள் பெய்த பலத்த மழையில், மின்னல் தாக்கி அந்த கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்தது.

தொழிலதிபருக்கு பலத்த நஷ்டம். கவலையாகிவிட்டது. தேவாலயத்தைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரே குஷி. கொண்டாட்டம். தொழிலதிபர் முன்னால் சென்று “நாங்கத்தான் அப்பவே சொன்னோம்ல” என்று எகத்தாளம் வேறு.

வந்ததே கோபம், தொழிலதிபருக்கு. நேரே அந்த ஊர் கோர்ட்டுக்கு சென்றார். அந்த தேவாலயத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். தன் கட்டிடம் இடிந்து விழ காரணம் அந்த தேவாலயமும் அவர்களின் தொடர் பிரார்த்தனையும் தான் என்றும், அதனால் தனக்கு நஷ்ட ஈடாக பல மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் என்றும் தேவாலயத்தின் தலைமையை கோர்ட்டுக்கு இழுத்தார்.

அதுவரை சிரித்து கொண்டிருந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள், இப்போது சிரிப்பை குறைத்து கொண்டார்கள். தங்கள் பிரார்த்தனையால் கட்டிடம் இடிப்படவில்லை என்றும், பிரார்த்தனையால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர்களின் வாதத்தை முன்வைத்தார்கள். ஆதாரமாக, ஏதோவொரு பல்கலைக்கழகம் செய்திருந்த ஆய்வு முடிவுகளையும் முன் வைத்தார்கள்.

தன் முன்னால் இருந்த வாதங்களை கவனித்த நீதிபதி கூறினார். “நான் என்ன தீர்ப்பு வழங்க போகிறேன். எப்படி வழங்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் முன்னால் இருப்பவற்றை காணும்போது ஒன்று புரிகிறது. இங்கே பிரார்த்தனையின் சக்தியை கூற நம்மிடம் ஒரு பார் ஓனர் இருக்கிறார். அதை முற்றிலும் நிராகரித்து எதிர்ப்பு தெரிவித்தப்படி முழு தேவாலயமும் இருக்கிறது.”

அதான் பக்தி.

---

இது எனக்கு ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் வந்தது. தமிழாக்கம் செய்திருக்கிறேன். உண்மை நிகழ்வு என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கென்னமோ, உண்மை போல் தெரியவில்லை. ஆனால், இது உண்மையில் நடப்பதற்கும் சாத்தியம் இல்லாமல் இல்லை.

திமுக செயற்குழு - தொடரும் டைம்ஸ் நக்கல்

தொடர்ந்து திமுகவை நக்கல் செய்து இன்றும் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா. நேற்றைய நக்கல் இங்கே.நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா.

பி.கு. - நன்றி படத்துக்கு மட்டும்தாங்க!

Tuesday, May 26, 2009

மெதுவா மெதுவா அனுசரி...

ஒரு துறவி, தன் சிஷ்யகோடிகளிடம் கேட்கிறார் - “நமக்கு ஏன் கோபம் வந்தால் கத்துகிறோம்? மக்கள் ஏன் கோபத்தில் ஒருவரை ஒருவர் திட்டி கொள்கிறார்கள்?”

யோசித்த சிஷ்யர்களில் ஒருவர், “அப்போது நாம் அமைதியை இழப்பதால் கோபப்படுகிறோம்.” என்கிறார்.

அதற்கு துறவி, “அப்படியென்றால், பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் ஏன் கத்தி பேச வேண்டும்?” என்று கேட்கிறார். “மெதுவாக பேசினாலும் கேட்க தானே போகிறது? பிறகு ஏன் கத்த வேண்டும்?”

சிஷ்யர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். எந்த பதிலிலும் துறவி திருப்திப்படவில்லை.

முடிவில் அவரே விளக்கிறார். “இருவருக்கிடையே கோபம் இருக்கும் போது, அவர்களது இதயங்களின் இடைவெளி அதிகரிக்கிறது. அந்த தூரத்தை தாண்டி, தங்கள் பேச்சு மற்றவரை அடைய வேண்டும் என்று கத்துகிறார்கள். எவ்வளவுக்கெவ்வளவு கோபமாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கத்துக்கிறார்கள். காரணம் இதயங்களின் இடைவெளி. அவ்வளவு தூரம்.”

திரும்ப கேட்கிறார், “மக்கள் ஒவ்வொருவருக்கிடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் போது, பாசத்தை பொழியும்போது, காதலிக்கும் போது, என்ன நடக்கிறது? அப்போது ஏன் அவர்கள் கத்துவதில்லை? ஏனென்றால், அப்போது அவர்கள் இதயம் நெருக்கமாக இருக்கிறது. இடைவெளி குறைவாக இருக்கிறது.”

துறவி தொடர்கிறார். “மேலும் மேலும் அன்பு அதிகரிக்கும்போது, ஒருவரை ஒருவர் அதிகம் காதலிக்கும் போது, என்னவாகிறது?”

”அவர்கள் பேசுவதில்லை. ரகசிய குரலில் முணுமுணுக்கிறார்கள். அவர்களது காதலில் இன்னமும் நெருக்கமடைகிறார்கள். ஒரு கட்டத்தில் ரகசிய குரலும் தேவை இல்லாமல் போகிறது. பார்வைகளின் பரிமாற்றமே போதுமானதாகிறது. இது ஆழமான காதலைக் கொண்டவர்களின் மொழி.”

---

மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் தமிழாக்கம் இது. எனக்கு பிடித்திருந்ததால் பதிவு செய்துள்ளேன்.

அதனால் வாக்குவாதம் பண்ணும்போது, இதயங்களின் இடைவெளியை அதிகரிக்க விடாதீர்கள். தூரத்தை பெரிதாக்கும் வார்த்தைகளை விடாதீர்கள். இல்லாவிட்டால், இடைவெளி அதிகரித்து அதிகரித்து, ஒருநாள் திரும்ப வர முடியாத அளவுக்கு இதயங்கள் இரு துருவங்களாகிவிடும்.

டெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்!

இது இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் வெளிவந்துள்ள கேலி சித்திரம்.நம் மாநிலத்தை இந்திய அளவில் பெருமை அடைய செய்த நம்மூர் காவல் தெய்வங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

Monday, May 25, 2009

பெங்களூர் - டைம்பாஸ் வித் சயின்ஸ்

பெங்களூர் மையப்பகுதியில் உள்ளது விஸ்வேஸ்வரய்யா மியூசியம். இப்ப இல்ல, ரொம்ப வருஷமா இருக்குது. கிட்டத்தட்ட 47 வருசமா. யாரு விஸ்வேஸ்வரய்யா? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே, பொறியியல் வல்லுனரா பல சாதனைகளை பண்ணியவர். பல முக்கியமான இடங்கள் இன்றும் இவர் பெயரை சொல்லி கொண்டு இருக்கிறது. உதாரணமாக, மைசூர் அணை, திருப்பதி மலை சாலை. இவர் மைசூர் திவானாகவும் இருந்திருக்கிறார். கர்நாடகாவில் இவர் பெயரில் நிறைய கல்வி மையங்கள் உள்ளது.இப்ப நீ எதுக்கு அந்த பக்கம் போனன்னு கேட்கறீங்களா? ஸ்கூல்ல படிக்குற பையன், பெங்களூர் சுத்தி பாக்கணும்ன்னு சொன்னா, இங்க தானே கூட்டிட்டு போகணும்? நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும் போது, என்னை இங்க தான் டூர்ல கூட்டிட்டு வந்தாங்க. அதுக்கு அப்புறம் இப்பதான் போறேன்.அப்படி என்ன இருக்குது? அறிவியல் வளர்ச்சிகள், அறிவியல் பயன்பாடுகள், தொழில்நுட்ப புதுவரவுகள் என்று அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை காணலாம். நல்லா இருக்குதா? அறிவியல் ஆர்வம் இருந்தால், இந்த இடம் கண்டிப்பாக பிடிக்கும். அது மட்டும் இல்லை. குழந்தைகளை கவரும் நிறைய அறிவியல் விளையாட்டு சமாசாரங்களும் உள்ளது.உள்ள போனவுடன் உங்களை வரவேற்பது இந்த டைனோசர்தான். அசையுது. உறுமுது. என்ன, திருப்பி திருப்பி அதையே செஞ்சிட்டு இருக்குது.இங்க இருபது ரூபாய்க்கு 3டி படம் காட்டுறாங்க. அவுங்க கொடுக்குற கண்ணாடிய போட்டுக்கிட்டு பார்த்தா, பாம்பு வந்து மூக்க கொத்துது, மீன் நம்ம சுத்தி வருது, அலாவுதீன் கூட பறந்து போகலாம், தண்ணிக்குள்ள தவழ்ந்து போகலாம். இன்னும் பல. அதுக்காக ஹாலிவுட் ரேஞ்சுக்கு எதிர்ப்பார்க்காதீங்க. 20 ரூபாய்க்கு எவ்வளவோ, அவ்வளவு. குழந்தைகளை விட, பெரியவுங்க தான் கைய, காலா ஆட்டிட்டு இருந்தாங்க.இதோ, இந்த பையன் ஆடிட்டு இருக்குறது, வெர்சுவல் கேம். அந்த பையனுக்கு எதிர இருக்குற டிவில வருற கேமுக்கு ஏத்தப்படி கைய கால ஆட்டினா, அதாவது டிவில, பால் வரும். பையன் கைய, கால யூஸ் பண்ணி அத அடிப்பான். அவனோட செய்கைகள், அவன் முகத்தோட பின்னாடி இருக்குற டிவில வரும்.

இந்த மியூசியத்துல ஒவ்வொரு தளமாக, அறிவியல் களங்களை பிரித்திருக்கிறார்கள். ஒன்றில் விண்வெளி, இன்னொன்றில் மின்னணு, மற்றொன்றில் உயிரி தொழில்நுட்பம் என்று பல தளங்கள். இவற்றுக்கிடையே குழந்தைகள் விரும்பும் இயற்பியல் விளையாட்டுகளும் உண்டு.


பசித்தால் சாப்பிட கேண்டீனும் உண்டு. நல்ல அசைவ சாப்பாடு சாப்பிட விரும்புபவர்கள், பக்கத்தில் உள்ள செயிண்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ள நந்தினிக்கு சென்று நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிடவும்.சரியான சகோதரர்கள், அதான் ரைட் பிரதர்ஸ் கண்டுபிடித்த முதல் விமானத்தின் மாடல், அதே சைஸில் இங்கு உள்ளது. அவரு அதுல எப்படி பறந்து போனாருன்னு பார்த்து தெரிஞ்சிக்கலாம்.எப்படித்தான் இப்படி பறக்க தோணிச்சோ?பூட்டு உடைக்க ஆசைப்படுபவர்கள் இதை பார்த்து கற்று கொள்ளலாம்.பொதுவா, சனி, ஞாயிறு நல்லா கூட்டமா இருக்கும். முக்கால்வாசி, சிறுவர் பட்டாளம் தான். வெளியூரில் இருந்து வந்திருக்கும் பள்ளி சுற்றுலா கூட்டங்களை காணலாம். நாம போன சுற்றுலா நினைவுக்கு வரலாம். மியூசியம் பார்க்கும் ஆர்வமில்லாதவர், ஏதோ காணாததை காணும் பரவசத்துடன் இருக்கும் இவர்களை காண கூட சென்று வரலாம்.

அதுவும் வேண்டாமா? இது பெண்களூர்ங்க! கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.

Friday, May 22, 2009

கண்ணதாசனுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகராறு?

கண்ணதாசன் யார்?
சினிமா கவிஞர்.

அப்புறம்?
அர்த்தமுள்ள இந்துமதம் போல இந்து மத புகழ்ப்பாடும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

அப்புறம்?
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடியதோடு நிற்காமல் மது, மாது என்று வாழ்ந்து காட்டியவர்.

அப்புறம்?
அவ்ளோதான் தெரியும் - வனவாசம், மனவாசம் படிக்கும் வரை. இந்த புத்தகங்களை படித்தபிறகு தான் அவர் அரசியலில் எவ்வளவு ஈடுபட்டு இருக்கிறார் என்றும், அதில் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறார் என்றும் தெரிந்தது.

----

’மருதநாட்டு இளவரசி’ படம் தயாராகிக்கொண்டிருக்கும் போதுதான் கருணாநிதியை பற்றி அறிந்தார் கண்ணதாசன். ’அபிமன்யு’ படத்தில் வரும் கருணாநிதியின் வசனங்கள், அவரை ஆறு நாட்கள் தொடர்ந்து அந்த படத்தை பார்க்கும் அளவுக்கு கவர்ந்தது. அப்பொழுது ஏற்பட்டது கருணாநிதியின் மீதான காதல் என்கிறார் கண்ணதாசன். கருணாநிதியை வகைத்தொகையில்லாமல் புகழ, அவரும் கண்ணதாசனை நேசிக்க ஆரம்பித்து இருக்கிறார். பிறகு, ’காதல் தேசம்’ வினீத், அப்பாஸ் போல இருந்திருக்கிறார்கள். எப்படி? ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்து தூங்கிற அளவுக்கு.

அந்நேரம் கருணாநிதி அரசியலிலும் இருந்ததால், பல விஷயங்களை கண்ணதாசனுடன் பகிர்ந்திருக்கிறார். திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய சமயம், கருணாநிதி பெரியார் செய்த ’கொடுமை’களை பற்றி கூறி இருக்கிறார். விலகியதில் பெரிதும் மகிழ்ந்திருக்கிறார். திமுக முதல் அறிமுக கூட்டத்திற்கு கருணாநிதியால் அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார் கண்ணதாசன்.

அச்சமயம் சினிமாவில் கருணாநிதி பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். கண்ணதாசன் பல வேலைகளை மாறி மாறி பார்த்து, முடிவில் ’கன்னியின் காதலி’ என்ற படத்திற்கு முதல் பாடலை எழுதினார்.

பிறகு கருணாநிதியுடன் பல கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். சில அரசியல்வாதிகளுடன் பழகிய பிறகு அவருக்கு தோன்றியது, “கொண்ட கொள்கையில் எந்த அரசியல்வாதிக்கும் உறுதி இல்லை. எல்லா பிரச்சினைகளிலும் உயிரை கொடுப்பேன் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு, எத்தனை உயிர் இருக்கிறது?”

இடையில் சில பக்கங்களில் நண்பர் என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.

“என் நண்பர் தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி அற்புதமாக எழுதுவார். ஆனால், ஒரு பைசா பிச்சை போட மாட்டார். தொழிலாளர்களுக்காக, ரத்தம், நரம்பு என்று கட்டுரை எழுதுவார். ஆனால், அவரிடம் இருக்கும் தொழிலாளர்களுக்கு அதை கண்டு கொள்ள மாட்டார்”. விபச்சாரியிடம் கூட காரியம் முடிந்த பின்பு, காசை வாங்கி வந்தவராம் அவர் நண்பர்.

கண்ணதாசனும் அவர் நண்பரும் வாடகை கார் எடுத்து கொண்டு பெண்களுக்காக அலைந்திருக்கிறார்கள்.

முற்போக்கு என்கிற பேரில் வீட்டில் பொதுவில் வைக்க கூட முடியாதவாறு கதைகளை எழுதியவர் அவர் நண்பர். அதிலிருந்து அவர் எழுத்தை புறக்கணித்தார் கண்ணதாசன்.

யார் அந்த நண்பரோ?

----

“நான் தூத்துக்குடிக்கு பேச போகிறேன்?”

“உனக்கு என்ன பேச தெரியும்? எதுக்கு வீண் வேலை? வரவில்லையென்று சொல்லிவிடு”

இன்னொருவன் முன்னுக்கு வராமலிருப்பதே, தான் வாழ வழியென்பது எனது நண்பனின் சித்தாந்தம் என்கிறார் கண்ணதாசன்.

கல்லக்குடி போராட்டதிற்கு சென்று, சிக்கி, வழக்குக்காக அலைந்து, சிறையில் அடைப்பட்டு கிடந்ததில் அரசியல் வெறுக்க, சிறையில் இருந்து விடுதலையான பிறகு பத்திரிக்கை ஆரம்பித்தார் கண்ணதாசன். கருணாநிதிக்கோ, கல்லக்குடி போராட்டம் நல்ல மைலேஜ்ஜை கொடுக்க, கட்சியில் உயரத்திற்கு சென்றார்.

அடுத்த வந்த தேர்தலில் திருக்கோஷ்டியூரில் நின்றார் கண்ணதாசன். ஏனோதானோவென்று பிரச்சாரம் செய்து தோற்றுவிட்டார். அதற்கு பிறகு வந்த மாநகராட்சி தேர்தலில், கொஞ்சம் கடுமையாகவே உழைத்திருக்கிறார். தேர்தலில், திமுக பெரும்பான்மை பெற்றது. ’சரி, நம்மை பாராட்டுவார் அண்ணா’ என்று நினைத்து கொண்டிருக்கும்போது, அண்ணா கருணாநிதியை மட்டும் பாராட்டி மேடையில் கணையாழி அணிவித்தார்.

கடுப்பான கண்ணதாசன் அண்ணாவிடம் போய்,

“என்ன அண்ணா! இப்படி சதி செய்துவிட்டீர்களே?”

“அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்.” என்றார் அண்ணா.

-----

பிறகு திமுக வெறுத்து போக, கட்சியிலிருந்து விலகி சம்பத் தொடங்கிய த.தே.க. கட்சியில் சேர்ந்தார். பின்னால், அது காங்கிரஸில் ஐக்கியமாக, காமராஜருடன் நெருங்கினார். இன்னொரு பக்கம், சினிமாவிலும் வேகமெடுத்தார். கருணாநிதியோ, தமிழக அரசியலில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தார். கருணாநிதியை வெறுத்து கோபப்பட்டு தாக்கினார் கண்ணதாசன். கருணாநிதி, அதையெல்லாம் அப்போது அவருக்கு இருந்த மற்ற பிரச்சினையினால் கண்டுகொண்டிருக்கமாட்டார்.

ஒரு கட்டத்தில் காமராஜரிடமும் முட்டினார் கண்ணதாசன். திமுக, பகுத்தறிவு என்ற பேரில் ராமன், கிருஷ்ணன் என்று கடவுள்களை செருப்பால் அடித்து கடவுள் நம்பிக்கையை கேவலப்படுத்தியபோது, அவருக்கு வந்த ஆத்திரத்தில் இந்து ஆதரவு கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். முதல் போணி, துக்ளக்கில் “நான் ஒரு இந்து”.

அண்ணா நோய்வாய்பட்டு இறந்தப்பிறகு, கருணாநிதி காலையிலும் மாலையிலும் எம்ஜிஆரை சென்று பார்த்து அவருடைய ஆதரவை பெற்று, கட்சியின் தலைவர் ஆனார். நாவலர், அண்ணா சமாதியில் அழுது கொண்டிருந்தார். கண்ணதாசன் “அர்த்தமுள்ள இந்து மதம்” எழுதியிருந்தார். ’இந்திரா காங்கிரஸி’ல் சேர்ந்திருந்தார்.

அவருடைய கெட்ட நேரம், பிறகு கருணாநிதி இந்திராவுடன் கூட்டணி வைத்தார். “கருணாநிதிக்கு மேல் ஆளே இல்லை” என்று சொல்லும் அளவுக்கு கண்ணதாசன் நிலை ஆனது. அவரும் முடிவில் கருணாநிதி ஜோதியில் கலந்தார்.

----

இந்த புத்தகங்களில் கண்ணதாசன் மற்றவர்களை பற்றி மட்டும் எழுதவில்லை. தான் செய்த அயோக்கியத்தனங்களையும் எடுத்துரைத்திருக்கிறார். ரொம்ப அப்பிராணியாகவும் இருந்திருக்கிறார். கட்டுப்பாடில்லாத படகு போல் அலைகழித்திருக்கிறார்.

இந்த நிலையிலும் சினிமாவில் அவர் தொட்ட உயரம் அதிகம்தான். தன் கவிதை வரியால், கேட்போரை கட்டி போட்டார். கேட்போர் அனைவரையும் ரசிகராக்கினார். இதில் மட்டுமே, தன் முழு கவனத்தை செலுத்தியிருந்தால், இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார்.

இவர் ஏன் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை? சாணக்கியத்தனம் என்றைழைக்கப்படும் மொள்ளமாறித்தனம் பண்ண தெரியாததுதான்.

தங்கள் வாழ்க்கையை திறந்த புத்தகம் என்பார்கள் சிலர். நான் படித்த சுயசரிதைகளிலேயே இந்த புத்தகத்தில் தான், எந்த தயக்கமும் இன்றி தன் வாழ்க்கையை உண்மையிலேயே திறந்து வைத்திருக்கிறார் ஒரு ஆசிரியர்.

வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்வது போல் “பப்பரப்பேன்னு”.

Tuesday, May 19, 2009

இனம் - பணம் - என் மனம்

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை.

“சரியா வளைச்சி போட்டுட்டாங்க, போல?” என்றபடி வந்தமர்ந்தார் ஒரு ஆந்திர நண்பர்.

எதிரில் அமர்ந்திருந்த ஒரு தமிழ் உணர்வாளர் அவரை முறைத்தபடி பொறித்து தள்ளிவிட்டார். “எதுவும் தெரியாம பேச கூடாது. அமைதியா சாப்பிடுங்க” என்று கடைசியில் முடித்தார்.

அவரை சொல்லி குற்றவில்லை. ஈழத்தை பற்றிய புரிதல் நம் மக்களிடையே அவ்வளவுதான். அட, மற்ற மாநிலத்தவரை விடுங்கள். நம்மிடையேதான் எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருக்கிறது?

---

இனத்தை விட பணம் தான் முக்கியம் போல?

தேர்தலுக்கு முன்னால் யாருக்கு ஓட்டு போட? என்று சிலரிடம் கேட்ட போது, ‘போர் நடந்தால் யார் என்ன செய்ய முடியும்? காங்கிரஸ் வந்தால் பொருளாதார சீர்திருத்தம் இருக்கும். நம்ம வேலைக்கு நல்லது. வரி குறையும்’ என்று தான் கருத்து சொன்னார்கள். மத்தவன் செத்தா என்ன, இருந்தா என்ன? முதல்ல நாம நல்லா இருப்போம் என்பது தான் பெரும்பாலோரது மனநிலை.

தேர்தலின் போதும் வைகோ, சீமான், பாரதிராஜா போன்றவர்களோட உணர்வுபூர்வமான பிரச்சாரங்களை மீறி இருநூறு ரூபாய் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டுதான் பலர் ஓட்டு போட்டார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நம் மனதை பாதிக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும், செய்திதாளை (முக்கியமாக வட இந்திய) அதிகம் ஆக்கிரமித்து இருந்தது, சென்செக்ஸில் எகிறியடித்திருந்த இரண்டாயிரம் பாயிண்ட்கள்.

இப்படி தொடர்ந்து இன உணர்வை மீறியபடி பண உணர்வு.

---

நிறைய ஆய்வு கட்டுரைகள் வர தொடங்கிவிட்டது. தோல்விக்கு காரணம் என்ன என்று?

போன வழி சரியா? எடுத்த முடிவுகள் சரியா? என்று விவாதங்கள். ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிற கடந்த கால நிகழ்ச்சிகள்.

வெற்றி பெற்றிருந்தால் இதெல்லாம் வெற்றிக்கான காரணம் ஆகிருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இங்கு எப்போதும் வெற்றி பெற்றவன் பேச்சு தான் நியாயமானது. உண்மையானது. சரியானது.

வெற்றி பெற்றவன் உளறினால் கூட அது பொன்மொழி.
சொல்லுபவன் தோல்வியடைந்தால் சொல்வது பொன்மொழியாக இருந்தாலும் கூட அது உளறல்.

---

ஆளாளுக்கு ஒரு கோட்பாடு. ஒரு சித்தாந்தம்.

இவர்களது இந்த நிலைப்பாடால், இதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள், எதை பற்றியும் அறிந்திராத குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதும் முக்கியம். எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணும் ஜீவன்களுக்கு சுதந்திரம் கொடுப்பதும் அவசியம்.

Saturday, May 16, 2009

சர்வம் - பாவம்

ஆர்யா-யுவன்-விஷ்ணுவர்தன் காம்பினேஷனில் அறிந்தும் அறியாமலும், பட்டியலை தொடர்ந்து வந்திருக்கும் படம். முந்திய ரெண்டு படங்களும் பிடித்திருந்தது. அந்த எதிர்பார்ப்பில் பார்த்தால், ஏமாந்துவிட்டேன்.

படத்தின் ட்ரெய்லருக்காகவே நிறைய காட்சிகள் எடுத்தார்களோ, என்னமோ தெரியவில்லை. ட்ரெய்லரில் இருந்த எபெக்ட், படத்தில் எங்கும் இல்லை.

த்ரிஷாவை ஆர்யா லவ்வும் காட்சிகள், நல்ல ஆரம்பத்தை கொடுத்தது. அதுவும், அந்த இளையராஜா வயலின் இசை, சூப்பர். கேட்க விரும்புபவர்கள், கீழே உள்ள டேப் ரிக்கார்டரில் ப்ளே செய்து கேட்கவும்.த்ரிஷா இறந்தபின்பு, ஆர்யா பேசும் வசனம் இதுவரை எந்த படத்திலும் பார்த்திராதது. ‘செல்வராகவன் படம் மாதிரி இருக்குல்ல’ என்றான் நண்பன். அந்த காட்சிக்காக மட்டும்.

நல்ல கதைதான். இடைவேளைக்கு பிறகு பின்னி பெடலெடுத்திருக்க வேண்டிய படம், கடும் தொய்வில் சிக்கி கொண்டது. திரைக்கதை இன்னும் ரேஸியாக செய்திருக்கலாம். கடைசியில் அந்த பையன் அடம்பிடிக்கும் காட்சிகள், சரியான கடுப்பை கொடுத்தது. முடிவும் சொல்லி கொள்வது போல் இல்லை.

ரெண்டு பாடல்கள் நல்லா எடுத்திருந்தாங்க. “நீதானே” என்ற பாடலில் ஹைபிட்சின் போது லாரி தெறிப்பதும், கார்கள் மோதி கொள்வதும், பைக் பறப்பதும் அமர்க்களம். இளையராஜா பாடிய பாடல் சரியான சொதப்பல். ஆர்யா டான்ஸ் ஆடுவார் என்று பார்த்தால், ஸ்டில் கொடுத்து கொண்டிருக்கிறார்.

படத்திற்கு ரிச் லுக்கை கொடுத்திருப்பவர்கள், ஒளிப்பதிவாளரும், ஆர்ட் டைரக்டரும். கேமரா பட்டத்துடன் பறக்கிறது. லிப்ட்டில் தலைகுப்புற கீழே வருகிறது. வெளிர் ஆஸ்பிட்டல், பாலைவனம் போல் ஒரு இடம். அதில் துணி காய போட்டது போல் வண்ண வண்ண பேப்பர்கள். காட்டுக்குள், மலை மேல், பாலைவனத்தில் என்று பல இடங்களில் ஒரு கண்ணாடி பெட்டி. கிளைமாக்ஸ் சர்ச், கிருஸ்துவ சிலைகள். இப்படி பாராட்ட பல விஷயங்கள்.

அந்த ஸ்கார்ப்பியாவையும், நாயையும் காட்டும்போது, பார்ப்பவர்களை மிரட்டி இருக்க வேண்டாம்? இந்த படத்தில் அந்த பையனை பார்க்கும்போதும், அந்த பையனின் அப்பாவை பார்க்கும்போதும், ஆர்யாவை பார்க்கும்போதும் எல்லாம் நமக்கு பாவமாக இருந்திருக்க வேண்டும். அதை விட்டு, வில்லன் சக்ரவர்த்தியை பார்க்கும் போது தான் எனக்கு பாவமாக இருந்தது. பையனும் ஓவர் சேட்டை. அவுங்க அப்பாவும் சக்ரவர்த்திக்கிட்ட அது ஆக்ஸிடெண்ட், முடிஞ்சு போச்சுன்னு ஆறுதல்படுத்தாம எடுத்தெறிஞ்சு பேசுறாரு. ஆர்யாவும் சோகமா தாடியை மட்டும் வைச்சுக்கிட்டு, ஜாலியா இருக்காரு. படத்துல வில்லன் மட்டும் தான், பாவமா சுத்திட்டு இருக்காரு.

அப்புறம் இன்னும் சிலர் இப்படி பாவமா திரிஞ்சாங்க. படம் பார்க்க வந்தவுங்க.

தேர்தல் முடிவும் என் முடியும்

தலைப்புல ஏதும் தப்பு இல்லை. சரியாத்தான் சொல்லியிருக்கேன்.

இன்னைக்கு தேர்தல் முடிவு இல்லையா? உருப்படியா என்ன பண்ணலாம்? நாடு தன்னோட தலையெழுத்த முடிவு எடுக்கும் போது, நாம நம்மோட தலையெழுத்த முடிவு பண்ணுவோம்ன்னு முடி வெட்ட கிளம்பினேன்.

அங்க கடையிலும் டிவில ரிசல்ட் பார்க்க கூட்டம் கூடியிருந்தது. கடைக்காரன் பத்து செகண்ட் முடி வெட்டுறான். பத்து செகண்ட் டிவி பார்க்குறான். அப்புறம் பத்து செகண்ட் ரெண்டையும் சேர்த்து செய்யிறான். பயமாத்தான் இருந்தது.

இதுக்கு நடுவுல அவனுக்கு போன் பண்ணி வேற ரிசல்ட் கேக்குறாங்க. இவரும் ஏதோ ராஷ்ட்ரபதி பவன் முன்னாடி நிக்கற நிருபர் மாதிரி செய்திகள அப்டேட் பண்ணிட்டு இருக்காரு. தவிர, பேப்பருலயும் ஏதோ குறிச்சு வச்சிக்கிறாரு.

ஏதோ சொல்ல போயி, நம்ம தலையில ஏடாகூடமா கைய வச்சிட கூடாதுல்ல.

“ஏண்ணா, கொஞ்சம் ஸ்பீடா பண்ணுங்க... நான் வேணா போயி மதியம் வரவா?”

“சார்.. வேண்டாம்... வேண்டாம்... ரிசல்ட் முடிஞ்சதும் மதியம் நிறைய கூட்டம் வரும்”

எதுக்கு மொட்டை போடவா?

---

இப்போதைக்கு வந்திருக்குற ரிசல்ட் படி, இந்த தேர்தல்ல கருத்து கணிப்பு ஒரளவுக்கு சரியா வந்திருக்குன்னு நினைக்குறேன். ஜெயலலிதா ’கஷ்டப்பட்டு’ ஹெலிகாப்டரில் ஊர் ஊராய் போய் பண்ணிய பிரச்சாரம், அவருக்கு பெரிய அளவில் எதையும் கொண்டுவரவில்லை. கலைஞர் படுத்துக்கொண்டே ஜெயித்து விட்டாரா, என்ன? விஜயகாந்த், அலைந்த அலைக்கு வெறுத்திருப்பார்.

இந்த தேர்தலில் போன தேர்தல் போலில்லாமல், ஜெயா டிவியில் அதிமுக பின் தங்கிய நிலையில் இருப்பதை முதலிலேயே ஒத்துக்கொண்டு முடிவுகளை அறிவித்து வருகிறார்கள். போன தேர்தல், நல்ல காமெடியாக இருந்தது.

பிஜேபி தோல்வியை ஒப்பு கொண்டுள்ளார்கள். அத்வானி ஆசை நிராசைதானா? முடி வெட்டும் கடையில், வாஜ்பாய் முகத்தை காட்டாதது தான் காரணம் என்றார்கள்.

காங்கிரஸ் முன்னணியில் இருப்பதை பார்க்கும் போது, இந்திய மக்களுக்கு அந்த கட்சியின் மீது பெரிய அளவில் எந்த வெறுப்பும் இல்லாதது போல் உள்ளது. மன்மோகன் சிங் முகத்துக்கு கிடைத்த ஓட்டா இது? திங்கள் கிழமை பங்குசந்தை துள்ளுமே?

----

இந்த நிலையில் இலங்கை தமிழர்களை நினைத்தால் தான் கஷ்டமாக உள்ளது. இன்னும் நாலு நாளில் ராஜீவ் நினைவு தினம் வருகிறது.

Thursday, May 14, 2009

ஞானகுரு

ஆங்கிலத்தில் கதையின் வாயிலாக வாழ்க்கை தத்துவங்களை எளிமையாக கூறி வெற்றி பெற்ற புத்தகங்கள் பல உண்டு. விகடனின் ‘ஞானகுரு’ தமிழில் அப்படிப்பட்ட ஒரு புத்தகம். ஆசிரியர் - எஸ்.கே.முருகன்.

சில வருடங்களுக்கு முன்பு, ஜுனியர் விகடனில் தொடராக வந்தது ஞானகுரு. பிறகு, 2007இல் விகடன் பதிப்பகம் இதை புத்தகமாக வெளியிட்டது. தொடராக வெளிவந்தபோது, என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆனால், படித்த ஒவ்வொரு வாரமும் என்னை கவர்ந்தது. அப்போதே நினைத்து வைத்திருந்தேன், புத்தகமாக வந்தால் வாங்க வேண்டும் என்று. சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி விட்டேன்.

கதை மூலம் தத்துவம் சொல்வது, தத்துவம் படிக்க விரும்பாதவர்களையும் படிக்க வைக்கும் என்றாலும் எனக்கு இதில் பிடித்தது ஊர் சுற்றும் அந்த நாடோடி சாமியாரின் மாறுபட்ட பார்வை, நறுக் பதில்கள், வெளிப்படையாக போட்டுடைத்து பேசும் பேச்சு.

புத்தகத்தில் இருந்து சில ஞான துளிகள்...

ஆத்திகம் நாத்திகம் பற்றி,

கடவுளைக் கும்பிட உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை அவருக்கு மறுக்கவும் இருக்கிறது. இந்த உலகில் முழுமையான ஆத்திகர், முழுமையான நாத்திகர் என்று யாரும் கிடையாது. கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பவர்கள் ஏமாற்றம், தோல்வி வரும்போது ‘உண்மையில் கடவுள் இருக்கிறாரா?” என்று மனதில் ஓரத்தில் விசனப்படுவதுண்டு. அப்படியேதான் நாத்திகர்களும் சோதனை ஏற்படும்போது, கடவுள் லீலையோ என்று பயப்படுவதுண்டு. இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை, எவரும் திருந்தவேண்டிய அவசியமும் இல்லை.

கடவுள் இல்லை என்பது தானே அறிவியல் என்று கேள்விக்கு,

அதுதான் உனக்கு சந்தோஷம் என்றால் அப்படியே வைத்துக்கொள். இந்தப் பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று அந்தக் காலத்து விஞ்ஞானிகள் சொன்னார்கள். பிறகு பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்கிறார்கள். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பையும் முழு உண்மையென்று சொல்ல முடியாது. ஒருவேளை இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே, வேறு ஏதாவது ஒரு பிரபஞ்சத்தைச் சுற்றுகிறது என்பது போல் எதையாவது இன்னும் பல வருடங்கள் கழித்துக் கண்டுபிடிக்கலாம். அறிவியல் நிலையானது அல்ல. நாளுக்கு நாள் மாற்றமடையக் கூடியது. ஆனால், கடவுள் விஷயம் அப்படியல்ல.

இந்திய பெண்கள் பற்றி,

நான் பார்த்தவரையில், பெண்தான் பெரிய சுயநலவாதி. ஆனால், தன்னைப் பற்றி நினைப்பதில் அல்ல. தன்னையும் தாண்டி தன் குழந்தைகளைப் பற்றி முன்னுரிமை கொடுப்பதில் அவள் மிகப்பெரிய சுயநலவாதி! உலகின் மற்ற எல்லா உறவுகளுக்கும் இரண்டாம் இடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராகிற சுயநலவாதி. அதனால்தான், உலகம் முழுவதும் குடும்பங்கள் நெருக்கமும் சகிப்புத் தன்மையும் இல்லாமல் தவிக்கும் போதும்... நம் தேசத்தில் உறவுகளுக்கான மகிமை மாறாமல் இருக்கிறது.

ராணுவ வீரனிடம்,

உன் மனைவி மக்களை நீ நேசிப்பதைப் போலத்தானே உன்னால் கொல்லப்பட்ட எதிரியும் அவனது மனைவி மக்களை நேசித்திருப்பான். ஆக, உங்கள் இருவருக்குமே அன்பும் இருக்கிறது... கொலை வெறியும் இருக்கிறது. தவறு உன்னிடமில்லை. ராணுவம் என்ற அமைப்பின் மீதான தவறுதான் இது. இது போன்ற அமைப்பே தேவையில்லை என்பது தான் என் போன்ற பிச்சாண்டியின் ஆசை.

விபச்சாரியிடம்,

ஆண்கள் இருக்கும்வரை உங்களைப் போன்ற பெண்களை உருவாக்கவே செய்வார்கள். காமத்தில் தோல்வி கண்ட ஆண்கள்தான், வெவ்வேறு பெண்களிடம் இன்பம் தேடி அலைகிறார்கள். அவர்களது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியைத்தான் தழுவுகிறது. ஏனென்றால், பெண்னை வெற்றிகொண்டு இன்பம் அனுபவிக்க எந்த ஆணாலும் முடியாது.

குற்றாலத்துல குளிச்சா பைத்தியம் தெளியுமா?

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாதாரண நபர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது தெரியுமா? நீங்கள் நினைப்பதை எல்லாம் பேசவும், செய்யவும் முடியாது. ஆனால் நினைப்பது போல் எல்லாம் வாழ்பவர்களைத்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம். மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் அதிகமாகவும், அவர்கள் குறைவாகவும் இருப்பதால் நாம் தெளிவான மனநிலை உள்ளவர்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம். குற்றாலத் தண்ணீர் கொண்டு அவர்களது சுதந்திரத்தை பறிக்க நினைப்பது பரிதாபம்தான்.

நாய் வளர்ப்பவர்களுக்கு,

மனிதர்கள் நாய் வளர்ப்பது பாசத்தைக் காட்டுவதற்கு அல்ல... பிறரை அடிமையாக்கும் ஆசையின் மிச்சம்தான் அது.

ஒரு கார்ப்பரேட் சாமியாரிடம்,

“ஆத்மா, பரமாத்மா போன்ற கண்ணுக்கு தெரியாத சங்கதிகளும், சொர்க்கம், நரகம் போன்ற கற்பனைகளும் இன்றைய மனிதர்களுக்குத் தேவையில்லாதவை. அதுபோன்றே உடலைத் தொந்தரவு செய்யும் யோகா, தியானம் போன்றவைகளைவும் விட்டு ஒழியுங்கள்.”

“அப்படியானால் கடவுள்...”

“கடவுள் பற்றிய கவலை மனிதர்களுக்கு வேண்டாம். மனிதனைப் பற்றிய கவலை மட்டுமே மனிதனுக்குப் போதும்.”

“நாங்கள் மனிதர்களுக்கு உதவுவதையே முக்கிய கடமையாகச் செய்கிறோம். கடவுள் பெயரைச் சொல்லி, ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.”

“இந்த உலகத்தில் விளைவும் பொருட்களை சரியாக பங்கீடு செய்தால், உலக மக்கள் அனைவருமே பசி, பட்டினி, ஏழ்மை என்பதை சந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், ஒரு பக்கம் மிதமிஞ்சிய ஏழ்மையும், இன்னொரு பக்கம் மிதமிஞ்சிய செல்வமுமாக இருப்பதற்குக் காரணமே அரசுகள் தான். ஏழைகளுக்கு உதவிகள் செய்வதாகச் சொல்லி அரசு செய்யும் தவறையே நீங்களும் செய்கிறீர்கள்”

“அப்படி என்றால், ஜனநாயகம் சரியில்லை என சொல்கிறீர்களா?”

“ஜனநாயகம் மட்டுமில்லை, மன்னராட்சி, கம்யூனிஸம், முதலாளித்துவம் என்று இதுவரை உண்டான அத்தனை புரட்சிகளும் மாற்றங்களும் வலிமை குறைந்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை. மேலும் இன்றைய உலகம் முழுமையான முதலாளித்துவத்தை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. அதனால், இன்னும் அதிகமான ஏழைகள் உண்டாவர்கள். நீங்களும் அதிக அளவில் சேவை செய்யலாம்.”


காதலை பற்றி,

காதல் என்பது நீ உன்னைப் பற்றி எண்ணாமல், உன் அன்புக்குரியவனின் நலனைச் சிந்திப்பது. இன்னொருத்தியை மணந்துகொண்டால், காதலன் சந்தோஷமாக இருப்பான் என்று தெரிந்தால் அவனையே விட்டுக்கொடுக்கவும் தயாராக இருப்பது அதுதான் காதல்!. நீ என்னை நன்றாக வைத்துக்கொண்டால் மட்டுமே உன்னை நான் திருப்திப்படுத்துவேன் என்று கட்டுப்பாடு விதிப்பது காதல் அல்ல. ’நான் உன்னை நேசிக்கிறேன். அதற்காக உன் விஷயத்தில் தலையிடமாட்டேன், உன் எந்த விருப்பத்துக்கும் தடை போடமாட்டேன்’ என்று நேசம் காட்டுவதுதான் காதல். பேராசை, பொறாமை, மிரட்டல், அதிகாரம் இருக்கும் இடத்தில் காதல் வளராது.

இன்னும் எக்கச்சக்கமா இருக்குது. அனுபவத்தால் பெறும் நிறைய விஷயங்கள் எழுத்தில் உள்ளது. படித்து முடிந்தபின்பு, எனக்கு வியப்பெல்லாம் ஞானகுரு மேல் இல்லை. எஸ்.கே.முருகன் மீது தான்.

Tuesday, May 12, 2009

தேர்தல் 2009: காமெடி பிரச்சாரங்கள்

தேர்தல் சமயங்களில் நல்லா பொழுது போகும். கூச்சப்படாம, நம்ம தலைவர்கள் பேசுற பேச்ச கேட்டா, சில சமயம் வயித்தெரிச்சலா இருந்தாலும், பெரும்பாலான சமயம் செம காமெடியா இருக்கும். இந்த தேர்தலில் அப்படி சில பிரச்சார பேச்சுகள்.

கருணாநிதி

சோனியா காந்தியை நான் ”தியாக திருவிளக்கு” என்று அடைமொழி கொடுத்து கூறுவதற்கு காரணம், உலகம் அறிந்த உண்மை, நாடறிந்த செய்தி, நல்லோர் புரிந்து கொண்ட விவகாரம். அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க வருக, வருக என்று ராஷ்டிரபதி பவன் அழைத்த போது, ”நான் வர மறுக்கிறேன்” என்று அந்த பதவியை தியாகம் செய்தவர் சோனியா காந்தி.

அப்துல் கலாம் இதை கேட்டா, என்ன நினைப்பாரு?

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியிலே நம்முடைய இளஞ்சிங்கம் ராகுல் காந்தியின் பேச்சை நான் தொலைக்காட்சியிலே கேட்டேன்.

ஆரம்பிச்சுடாருய்யா...

வெற்றியை தேடித்தா! வெற்றி! வெற்றி! வெற்றி! அதைத்தவிர வேறு ஒன்றையும் எண்ணாதே! அதற்காக உழைத்திடு, அயர்வில்லாமல் உழைத்திடு என்று வேண்டி கேட்டுக்கொண்டு யார் எந்த பிரசாரம் செய்தாலும் என்ன பொய்யுரைத்தாலும், எத்தகைய பித்தலாட்ட பேச்சுகளிலே இறங்கினாலும் அவைகளையெல்லாம் நம்பாதே!

உஸ்ஸ்ஸ்... கண்ண கட்டுதே!

ஜெயலலிதா

கூட்டத்தை பார்த்து, திமுக அமைச்சர்களின் லஞ்சங்களை பட்டியலிட்டு,

என் ஆட்சியில் இது போல் லஞ்சம், ஊழல் நடக்குமா? நடந்தால்தான் நான் சும்மா விட்டுவிடுவேனா?

மக்கள்- இல்லை இல்லை என்று ஆரவாரம் செய்கிறார்கள். :-)

சோனியா சென்னை பொதுக்கூட்டத்தில்,

இந்த மாலை நேரத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி நம்முடன் இருப்பதை எண்ணி, நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இப்ப, என்ன சொல்ல வாரீங்க?

மோடி

உங்களது விரலுக்கு அபாரமான சக்தி இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் விரலுக்கு இருந்த சக்தியைவிட 2 மடங்கு அதிகமான சக்தி உங்கள் விரலுக்கு இருக்கிறது.

இதையே வேற யாராவது சொல்லி இருந்தா, தெய்வ குத்தம், புண்படுத்தப்பட்ட மத உணர்வு, வெட்டிங்கடா விரலைன்னு சொல்லியிருப்பாங்க.

ஸ்டாலின்

மூன்றாவது அணியில் பிரதமர் பதவிக்காக பலர் போட்டியில் உள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். கடைசியில் ஆட்சியையும் கவிழ்த்துவிடுவார்கள். மீண்டும் மூன்று மாதத்திலேயே நாடாளுமன்ற தேர்தல் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அடிக்கடி தேர்தல் நடத்தால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் பாதிக்கப்படும்.

நாட்டுக்கா? கட்சிக்கா?

முன்னாள் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசி வருவது வேதனையாக உள்ளது. கருணாநிதியை பற்றி பேச குட்டி யானை ஜெயலலிதா வுக்கு அருகதை இல்லை

ஆமாம். ஸ்டாலின் மாதிரி நாகரிகமா பேசுங்க.

வைகோ

தேர்தல் முடிவில் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆதரவுடன் தான் ஆட்சி அமையும். ஏன் பிரதமராகும் தகுதி அவருக்கு தான் உள்ளது என்று என்னால் அடித்து கூற முடியும்.

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!

ராமதாஸ்

தி.மு.க.வுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது. எந்த கட்சியுடனும் கூட்டு வைப்பார்கள். எந்த கூட்டணி அரசிலும் இடம் பெறுவார்கள். ஆனால், மற்றவர்களை பார்த்து மட்டும் சந்தர்ப்பவாதிகள் என பேசுவார்கள்.

நாங்க எல்லாம் ஒண்ணுதான்ன்னு சொல்றாரு

அன்புமணி ராமதாஸ் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்து விட்டார் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்திருந்தால் அவர் என்றைக்கோ முதல்-அமைச்சர் ஆகியிருக்க முடியும்.

சே! ஸ்டாலின் மேலேதான் என்ன கரிசனம்சீதாராம் யெச்சூரி

பிரதமர் யார் என்று கேட்கின்றனர். பிரதமருக்கு எங்களிடம் பஞ்சம் இல்லை. ஜெயலலிதா உள்ளிட்ட பல முன்னாள் முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் இந்தப் பதவியை ஏற்பார். பிரதமர் என்று ஒருவரை அறிவித்தால் அவரை மக்கள் தோற்கடித்துவிடக்கூடும்.

என்னா வில்லத்தனம்

தேர்தலுக்கு முன்னால் பிரதம வேட்பாளரை அறிவித்தால், அது மக்களை இழிவுப்படுத்துவது போலாகும்.

இதென்ன புதுக்கதை

ஆற்காடு வீராசாமி

வேலூரில் பேசிய ஜெயலலிதா முதல்-அமைச்சர் கருணாநிதியை ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார். அவருடைய கட்சிக்காரர்களை பார்த்து முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக பொதுமேடையில் பேசி இருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம் என்பதை காவல்துறையினர்தான் கண்காணிக்க வேண்டும். முதல்-அமைச்சர் கருணாநிதி உயிரோடு இருப்பது ஜெயலலிதாவிற்கு அவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது போலும். எம்.ஜி.ஆர் மருத்துவமனையிலே இருந்த போது, முதல்-அமைச்சர் கருணாநிதி ”நானும் பிரார்த்திக்கிறேன்” என்று தொடர் கட்டுரை எழுதினார். எம்.ஜி.ஆர் மறைந்த போது ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணி அளவிலேயே முதல் ஆளாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தியவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அது போலவே நாவலர் மறைந்த போதும் டெல்லி விமானத்தில் இருந்து கீழே இறங்கியதும், நேராக நாவலர் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியவர் கருணாநிதி.

கலைஞர் - ஏன்யா, அந்தம்மாவே ஒரு வார்த்தைதான் சொல்லுச்சு. இப்ப, நீ என்னய்யா சொல்ல வார?

பொதுவாக கருணாநிதியின் வீட்டாரும், உறவினர்களும், மருத்துவர்களும் அடிக்கடி கருணாநிதியிடம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். ஆனால் அவர்கள் சொல்லியே கேட்காத கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியா ஓய்வெடுக்க போகிறார்? கருணாநிதி உழைக்க பிறந்தவர். அவரால் ஓய்வெடுக்க முடியாது.

கலைஞர் - போதுமா? மனசுல இருக்குறத எல்லாம் சொல்லியாச்சா?

விஜயகாந்த்

ஜெயலலிதா எல்லா கூட்டங்களிலும் ஆட்களை கூட்டி வருகிறார். நான் கூட திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தை கண்ணால் பார்த்தேன். ஏதோ பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள், ஆனால் எவ்வளவு பணம் என்று தெரியவில்லை? சாப்பாடு பொட்டலம் கொடுக்கிறார்கள். அதற்குள் பிரியாணி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.

அதுக்குள்ள என்ன சார் இருக்க போவுது? அப்படி என்ன ஆர்வம் உங்களுக்கு?

ஒவ்வொரு சீசனிலும் புதிய டிசைன் துணிகள் வரும்போது பழைய துணியை மாற்றிவிட்டு புது துணியை அணிவதுபோல் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் மாற்றிப் பாருங்கள். அவர்கள் காப்பி குடிக்க சர்க்கரை கேட்கிறார்கள். நான் கூழ் குடிக்க உப்புதான் கேட்கிறேன்.

ரொம்ப கெஞ்சிருங்களே?

தே.மு.தி.க. வெற்றி பெற்றால் 40 இடங்களில் வர்த்தகமையம் அமைத்துக்கொடுப்பேன். வர்த்தக மையம் அமைத்துக்கொடுத்தால் குண்டூசியில் இருந்து ஹெலிகாப்டர் வரைக்கும் அங்கே கிடைக்கும். அப்படி 40 இடங்களிலும் வர்த்தக மையம் அமைக்கும் போது நீங்கள் சீனாவைப்பாரு என்று சொல்ல வேண்டாம், தமிழ்நாட்டை பார் என்று சொல்லலாம்!

என்னங்கடா இது? விக்ரமன் படத்துல தானே நடிச்சாரு? ஷங்கர் படத்துல நடிச்ச மாதிரி பேசுறாரு...

திருமாவளவன்

சோனியாகாந்தி அம்மையாரிடம் நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் வாழும் எங்கள் தமிழ் சொந்தங்களை காப்பாற்றுங்கள். அங்குள்ள போராளிகளையும், பொதுமக்களையும் காப்பாற்றுங்கள். அது உங்களால்தான் முடியும்.

என்ன தேடுறீங்க? இல்ல, இங்க ஒரு மானஸ்தன் இருந்தான். - இல்ல, அவன் கிடைக்க மாட்டான்.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று சிலர் கேட்டார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க., அ.தி.மு.க. எல்லாம் முன்பு கூட்டணி வைத்தது. ஆனால், நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

அதானே!

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்த போது அன்னிய செலாவணியின் இருப்பு அதிகமாக இருந்தது. மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால்தான் சமத்துவ மக்கள் கட்சி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

அடேங்கப்பா, நாங்க கூட வேற என்னமோன்னு நினைச்சேன்.

டி.ராஜேந்தர்

விஜயகாந்த் நேற்று முளைத்த கொக்கு, நான் வனத்தில் வளர்ந்த வேங்கை.

பார்த்தாவே தெரியுது

கார்த்திக்

ஒரு கூட்டத்தில் இவர் மேல் செங்கல் எறிந்தவுடன் இவர் சொன்னது,

எனது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தோல்வி பயத்தால் கல்வீசி தாக்குகிறார்கள். இது ஜனநாயக படுகொலை. எனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை.

:-)

Monday, May 11, 2009

பாடல்களின் வெற்றியும் படங்களின் வெற்றியும்

நான் எப்பவும் படம் வர்றதுக்கு முன்னாடியே, ஆடியோ ரீலிஸ் ஆனவுடனேயே பாட்டு கேட்க ஆரம்பிச்சுடுவேன். முக்கியமான இசையமைப்பாளர்கள் படம், அப்புறம் நல்லா இருக்குன்னு சொல்ற படங்களோட பாட்டுகள. படம் வர்றதுக்கு முன்னாடி பாட்டு கேட்கறதால, நாமளே நமக்குள்ள நம்ம கற்பனைக்கு ஏத்தபடி பாட்டுக்கு விஷுவல்ஸ் போட்டு வச்சிருப்போம்.

படம் வந்ததுக்கப்புறம், கேட்டுக்கிட்டு இருக்குற பாடல்கள மாறுதல்கள் வரும். நல்லா கேட்டுட்டு இருந்த பாட்ட, படம் பார்த்ததுக்கு அப்புறம் கேட்காம விட்டுடுவேன். அதேப்போல், கேட்க விரும்பாத பாடலை கேட்க ஆரம்பிச்சுடுவேன்.

அயன் படத்துல வர்ற ’ஓயாயி’ பாட்டு, எனக்கு முதல்ல வாரணம் ஆயிரம் ‘அடியே கொல்லுதே’ மாதிரி இருந்ததால, நான் அவ்வளவா விரும்பி கேட்கலை. அப்புறம் படம் பார்த்ததுக்கப்புறம், அந்த பாட்டுக்கான எடிட்டிங் வேலைகள், டான்ஸ், சவுண்ட் மிக்ஸ் எல்லாம் பிடிச்சு அப்புறம் கேட்க ஆரம்பிச்சேன்.

அதேப்போல், லேசா லேசா, சக்கரக்கட்டி பாட்டு எல்லாம் படம் வர்றதுக்கு முன்னாடி ரசிச்சு கேட்டுட்டு இருந்தேன். படம் வந்ததுக்கப்புறம், நோ.

---

எனக்கு சில படங்களோட பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கும். நல்லா இருக்கும். ஆனா, படம் ஹிட் ஆகலைன்னாவோ, இல்ல டிவில போடாம இருக்கறதாலோ அவ்வளவா யாருக்கும் தெரிஞ்சிருக்காது. ஹிட்டும் ஆயிருக்காது. நான் மட்டும் கேட்டுட்டு இருந்த மாதிரி இருக்கும்.

இப்ப, சமீபத்துல அப்படி பிடிச்ச பாட்டு, ஆனந்த தாண்டவம் படத்துல வர்ற ‘கல்லில் ஆடும்’ பாட்டு. நல்ல மெலடி. இசை: ஜிவி பிரகாஷ். படம் பார்த்ததுக்கு அப்புறம், பாட்டு அந்த படத்தோட தீமோட பிடிச்சிருந்தது. ஆனா, டிவில எங்கயும் பார்த்த மாதிரி இல்ல.

சில வெளிவராத, வெளிவந்ததான்னு தெரியாத படங்களோட பாட்டையும் ரசிச்சுக் கேட்டுட்டு இருப்பேன். உதாரணம்: ஒரு பொண்ணு ஒரு பையன்’ன்னு ஒரு படம். அதுல ‘மலர்களே மலர்களே’ன்னு ஒரு பாட்டு. பெய்லா ஷிந்தா பாடினது, கார்த்திக் ராஜா இசையில். நடுவே, கார்த்திக் ராஜா பாடினதும், கிட்டார் இசையும் இதமா இருக்கும். கேட்டு பாருங்க.

அப்புறம், ‘நாளைய பொழுது உன்னோடு’ன்னு ஒரு படம். பாண்டியராஜன் பையன் ப்ரித்விராஜ் நடிச்சது. பயப்படாதீங்க. பாட்டுதான். ’பேச பேராசை’ன்னு கார்த்திக், பவதாரிணி பாடின பாட்டு. மியூசிக் - ஸ்ரீகாந்த் தேவா என்றாலும், இந்த பாட்டு இளையராஜாவோடது மாதிரி இருக்கும். தேவா பேமிலிங்கறதால, யார் மாதிரின்னாலும் போடுவாங்க.

இந்த ரெண்டு படங்களுமே, சமீபத்தில் டிவில போட்டாங்க. கலைஞர் டிவியோ, ஜெயா டிவியோ ஞாபகம் இல்ல. ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியலை.

----

பாட்டால படம் ஹிட்டாகுமா? படத்தால பாட்டு ஹிட் ஆகுமா? முக்கியமா, கதையும் எடுக்கப்பட்டிருக்கும் விதமும்தான் படத்தோட வெற்றியை தீர்மானிப்பது என்றாலும், பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வெற்றி படத்தை சூப்பர் ஹிட் படமாக்குவது பாடல்கள் தான். கரகாட்டகாரன், உள்ளத்தை அள்ளித் தா படங்களோட வெற்றிக்கு நகைச்சுவைதான் முக்கிய பங்காற்றியது என்றாலும் பாடல்களின் பங்களிப்பை விட்டு விட முடியாது.

அதே போல், எல்லா பாடல்களும் ஹிட்டாகி, படம் சுமாரா இருந்தாலே, வெற்றி படமாகிவிடும். காதலன், மின்னலே, ஜோடி போன்ற படங்களில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்களால் காப்பாற்றப்பட்டார்கள்.

அது மட்டுமில்லை, நிறைய படங்களுக்கு ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வருவது பாடல்கள். அப்படி இழுத்து வந்திருந்த ரசிகர்களை மிச்ச படம் விரட்டி அனுப்பிடும். உதாரணம்: உயிரே, இந்து, சங்கமம், ரிதம், தாம் தூம், வல்லவன்.

சில படங்களை ஒரு பாடல் தூக்கி பிடிக்கும். அந்த பாடல் முடிஞ்சதும், கிளம்பி போற கூட்டம் உண்டு. அப்படி சில பாடல்கள்,

* மலை மலை மருதமலை
* வாளமீனுக்கும்
* சரோஜா சாமான் நிக்காலோ
* லஜ்ஜாவதியே
* டாக்ஸி டாக்ஸி
* ஓ போடு
* நாக்க முக்க
* மன்மத ராசா

ஒரு படத்தின் பாடல்கள் எல்லா தரப்பையும் கவர வேண்டியது அவசியம். குறைந்த பட்சம், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். சிவா மனசுல சக்தி பட பாடல்கள் இப்படி எல்லோருக்கும் பிடிச்சிருந்தா, படம் பெரிய வெற்றியை அடைஞ்சிருக்கும்.

---

படத்துக்கு பாட்டு எதுக்கு? படத்தோட ஓட்டத்தை குறைக்குதே? இங்கிலிஷ் படங்களில் பாடல்கள் இல்லையே?ன்னு என்று பாடல்களை நோக்கி கேள்வி எழுப்புபவர்கள் இருக்கிறார்கள். அடேய், இங்கிலிஷ் படத்துலேயே தமிழ் பாட்ட போட ஆரம்பிச்சுடாங்க.

எது எப்படியோ, பாடல்கள் நம்ம வாழ்க்கைக்கு முக்கியம். பாடல்கள்தான் நம்மை ஆறுதல்படுத்துகிறது. குஷிப்படுத்துகிறது. தூங்க வைக்கிறது. அழ வைக்கிறது. ஆனந்தப்பட வைக்கிறது. ஆட்டம் போட வைக்கிறது. நினைவலையை உயரே எழுப்பி, ஆழ் மன கடலில் அடங்கி கிடக்கும் நினைவு பொக்கிஷங்களை மேலே கொண்டு வர வைக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும், மனநிலையையும் அந்த காலக்கட்டத்தில் கேட்கும் பாடல்களுடன் பதிவு செய்கிறான். வேறொரு சமயத்தில் கேட்கும் போது, பழைய நிகழ்வை கண் முன்னால் காட்டும். பழைய சூழ்நிலையை உணர வைக்கும். பழைய மணத்தை சுவாசத்தில் கலக்கும். ஒரு விதத்தில், பாடல்கள் நம் வாழ்வில் கடந்து வந்த உணர்வுகளை சுமக்கும் டைரி.

Saturday, May 9, 2009

பசங்க - போச்சே!

பசங்க நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்ல, பசங்க நாங்க வண்டி கட்டிக்கிட்டு ஓசூர் கிளம்பினோம். பைக் தான். எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு தினந்தந்தி பார்த்துக்கிட்டோம். தினந்தந்தி இ-பேப்பர். சேலம் எடிசன். விஞ்ஞானம் எப்படி எல்லாம் உதவுது பாருங்க.

படம் அப்படி இருக்குன்னு சொல்றாங்களே! இப்படி இருக்குன்னு சொல்றாங்களே!ன்னு ரொம்ப ஆவலா போனோம். என்ன! நல்ல படம் பார்க்க போறோம்ன்னு ஒரு சந்தோஷம் தான்.

தியேட்டர் கிட்ட போயிட்டோம். என்ன இது? வேற ஏதோ போஸ்டர் தெரியுதே? என்ன படம் அது?

நரி.

ஊஊஊ... ன்னு வடக்குபட்டி ராமசாமிக்கு ஊதுவாங்களே... அப்படி இருந்தது.

ஏதோ மம்முட்டி நடிச்ச மலையாள பட டப்பிங். கடுப்புல தியேட்டர்காரன்க்கிட்ட போயி கேட்டோம். நேத்தோட படத்த தூக்கிடாங்களாம். ஏண்ணா, பெட்டி இருந்ததுன்னா ஒரு ஷோ போடுங்கண்ணான்னு சொல்ல நினைச்சோம். ஒவரா இருக்கும்ன்னு திரும்பிட்டோம்.

படம் பார்க்க வந்த மத்தவிங்களும் நரியை பார்த்து பயந்து ஓடிட்டு இருந்தாங்க. நிஜ நரியை பார்த்தா கூட இப்படி அதிர்ச்சி அடைஞ்சிருக்க மாட்டாங்க.

படம் பார்க்கணும்ன்னா முதல் வாரமே பார்க்கணும் போல. இல்லாட்டி, படம் தப்பிச்சு ஓடிட்டு இருந்தா உண்டு. சில படங்கள் ஏன் ஓடுதுன்னே தெரியாம ஓடுது. சில படங்கள் இப்படி.

நிலைமை இப்படி இருந்ததுன்னா, டிவிடி எப்படி விக்காம இருக்கும்? பட தயாரிப்பாளர்களே சீக்கிரம் டிவிடி விட்டா நல்லா இருக்கும். அவுங்களுக்கும் லாபமா இருக்கும். நாமளும் நல்ல படத்தை தெளிவா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம பார்க்கலாம்.

Friday, May 8, 2009

பெய்யென பெய்யும் பண மழை

தேர்தல்ன்னா ஆயிரக்கணக்கில் பணம்ங்கற ட்ரெண்ட், ரொம்ப வேகமா பரவிக்கிட்டு இருக்குது. திருமங்கலம் அதுக்கு ட்ரெண்ட் செட்டர்.

முன்ன, அமைச்சர் லெவல்ல கொள்ளை அடிச்சாங்க. பிறகு, அதிகாரிகள், உதவியாளர்கள் என்று விரிவடைந்து மாவட்ட செயலாளர்கள், வட்டம் என்று வந்தது. அடுத்தக்கட்டமாக, ”எனக்கு ஓட்டு போடு, உனக்கு லஞ்சம் கொடுக்குறேன். பிறகு, நான் அத கொள்ளை அடிச்சுக்கிறேன்” என்று இப்ப மக்களுடனேயே டீலிங் வந்தாச்சு. நாடு சீரழிவதின் மற்றொரு அடையாளம்.

இந்த தேர்தல்ல வழக்கத்தை விட அதிகமா பண மழை பெய்யுதுன்னு சொல்றாங்க. மக்கள் கிட்டயும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்காம்.

பணத்தை தண்ணியா செலவழிக்கறதா சொல்லுவாங்க. பணமும் தண்ணிதான். புரியலைன்னா, கீழே படத்த பாருங்க.இந்த படத்துல இருக்குற சூரியன்ல எந்த வித அரசியலும் இல்ல. இது இயற்கை. :-)

அசல் படம் எடுக்கப்பட்டது : www.sawater.com.au. நன்றி

Thursday, May 7, 2009

பெங்களூரில் வீடா? - ஒரு எச்சரிக்கை

இது இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (பெங்களூர் பதிப்பு) வெளிவந்த ஒரு பக்க விளம்பரம்.ஒரு கட்டிட நிறுவனம் தவறாக வெளியிட்ட விளம்பரத்தை சுட்டி காட்டி பெங்களூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு. நிறுவனம் ஒன்றும் டூபாக்கூர் கம்பெனி அல்ல. இந்தியாவின் முன்னணி நிறுவனம். டி.எல்.எஃப்.

அனுமதியே வாங்காமல் எவ்வளவு தைரியமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். எப்படியும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். இருந்தாலும், இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது குற்றம் தானே?

பெரிய கம்பெனி என்றால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று தான் நம்பி வாங்குவார்கள். அதிலும் மண் அள்ளி போட இப்படி சில நிறுவனங்கள்.

இந்த மேட்டரில் வாரி சுருட்ட வாய்ப்பிருந்தும், அந்த நிறுவனத்தின் தவறை அம்பலப்படுத்தியதற்காக பெங்களூர் மாநகராட்சியை பாராட்டலாம். ஆனால், அவர்களாலும் இப்படி எத்தனை நிறுவனங்களை கவனித்து கொண்டு இருக்க முடியும். புதியதாக வீடு வாங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த விளம்பரத்தில் கொடுத்துள்ளார்கள். கவனிக்கவும்.

இந்த அறிவிப்பு கொடுத்த எரிச்சல், இதில் உள்ள கடைசி வரியால் தான் ஒரளவுக்கு குறைந்தது.

This advertisement has been issued in the public interest and the cost of this advertisement will be recovered from the promoter/developer.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ரஹ்மானுக்கு விவேக்கும்... விவேக்கிற்கு நானும்...

சித்திரை திருநாளுக்கு சன் டிவியில் விவேக், ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டி கண்டார். ரஹ்மானை பேட்டி காண்கிறோமே என்று விவேக் பயங்கரமாக ப்ரிபேர் செய்து வந்திருந்தார். ரஹ்மான் சிம்பிளாக பதில் சொல்லி கொண்டிருந்தார். ரஹ்மானுக்கே தெரியாத அளவுக்கு ஏதேதோ, எங்கெங்கோ படித்துவிட்டு வந்திருந்தார். ஜாலியா இருந்தது.

கடைசியில் ரஹ்மானுக்காக எழுதிக் கொண்டு வந்திருந்த கவிதையை படித்தார். இதோ அது...

----

ஏ.ஆர்.ஆர்.
காலம் உன்னிடம் இருந்து பறித்தது ப்ளாக் போர்டு
ஆனால் கலைவாணி உன் கையில் கொடுத்ததோ கீ-போர்டு.

கடல் இருந்த இடத்தில் தான் இருக்கும்
புயல் தான் கரையை கடக்கும்.
நம்மிடம் இசைஞானி என்ற கடலும் உண்டு
ஏ.ஆர்.ஆர். என்ற புயலும் உண்டு.

அமெரிக்க ஆஸ்கர் இதுவரை நமக்கு கேள்விக்குறி
அதை அடைந்ததால் நீ நமது தேசத்தின் ஆச்சரியக்குறி.

மற்றவர்களுக்கு உழைப்பு, ஒரு களைப்பு
ஆனால் உனக்கோ, அது களிப்பு.

ஆரம்பத்தில் உன் வாழ்வில் தான் எத்தனை அவமானங்கள்
இன்றோ உன் வரவேற்பறை முழுவதும் எத்தனை வெகுமானங்கள்.

காதணி விழாவுக்கும், பூப்புனித நீராட்டு விழாவிற்கும் கூட
போஸ்டர் அடித்து ஒட்டும் இக்காலத்தில்
நீ ஆஸ்கர் வென்ற மேடையில் கூட அமைதியாக
எல்லா புகழும் இறைவனுக்கே என்றாயே
அந்த பண்பினாலே எங்கள் இதயங்களை வென்றாயே!

நீ பார்ட்டிக்கு போவதில்லை
ஆனால் உன் பாட்டு இல்லாத பார்ட்டியே இல்லை!

நீ பப்புக்கு போவதே இல்லை
ஆனால் உன் பாட்டை கேட்காமல் எங்களுக்கு மப்பே ஏறுவதில்லை!

உனக்கு பிகரும் இல்லை
சுகரும் இல்லை.

தம்மும் இல்லை
பப்புள் கம்மும் இல்லை.

உனக்கு பிடித்த ஒரே ரம்
வந்தே மாதரம்.

மற்றவர்கள் கோல்டன் ஈகிள் அடிக்கின்ற வயதில்
நீ கோல்டன் குளோப்பே வென்று விட்டாய்
ஆம்! அது தானே ராயல் சேலஞ்ச்.

சல்மான்கான் போல் உனக்கு சிக்ஸ்பேக் இல்லை
ஷாருக்கான் போல் உனக்கு சிக்ஸ்பேக் இல்லை
அமீர்கான் போல் கூட உனக்கு எயிட் பேக் இல்லை
ஆனால் உன் போல் டபுள் ஆஸ்கார் வாங்கியவன் இங்கு எவனுமில்லை.

உன்னை பெற்றெடுத்தது நமது சினிமா
இப்போது தத்து எடுத்திருப்பது உலக சினிமா.

இனி நீ சான்பிரான்சிஸ்கோ சென்றாலும்
சென்னையை மறந்து விடாதே!

மன்ஹாட்டனில் இருந்தாலும்
மதுரையை மறந்து விடாதே!

டேனி பாயில் வணக்கத்திற்க்குரியவர்தான்
இருந்தாலும் உன் அம்மா போட்டு தரும் ஆப்பாயிலை மறந்து விடாதே!

உன் ரசிகர்கள் விரும்பியது
ஆஸ்கார் என்னும் சிவப்பு கம்பளவிரிப்பை.
ஆனால் நீ விரும்பியதோ
உன் தாயின் முகத்தில் சிரிப்பை.
என்ன தவம் செய்ததோ
அந்த தெயவத்தாயின் கருப்பை.

வாழ்க ஏ.ஆர்.ஆர்.
உன் பின்னே இனி வரப்போவது யார் யார்...


---

எனக்கு வாலி-மின்னலே காலத்தில் விவேக் காமெடி தான் பிடித்திருந்தது. வசனங்கள் புத்திசாலித்தனமாக தெரிந்தது. லைட்டாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தவர், சின்ன கலைவாணர் என்றவுடன், அதையே முழு தொழிலாக ஆக்கி கொண்டார். அதுதான் வடிவேலு கோல் போட நல்லா வாய்ப்பாக அமைந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு ஒரே மாதிரி இருக்கிறது என்று ஏதேதொ முயற்சி செய்து பார்த்தார். எதுவும் பெரிதாக ஒர்க்-அவுட் ஆகவில்லை. இந்த நேரத்தில் அவருக்கு பத்மஸ்ரீ வேறு. அவருக்கு வாழ்த்து சொன்னவர்களை விட, அவருக்கு எதற்கு இது என்று கேள்வி கேட்டவர்கள் தான் அதிகம்.

எது எப்படியோ, வாங்கின விருதிற்கு ஏற்றாற்போல் ஏதாவது பெரிய சாதனை செய்ய வாழ்த்துக்கள்...

இனி விவேக்கிற்கு எனது கவிதை...

விவேக்
உன் காமெடி இப்போது பயங்கர மொக்கை
மற்றவர்கள் செய்து முடித்ததின் கடைந்தெடுத்த சக்கை.

வாழ்வுக்கு பிறகு மோட்சத்தை காட்டுவது தாடி வளர்த்த அகோரி
வாழும்போதே உனக்கு சூட்சுமத்தை காட்டியது அமெரிக்கன் கல்லூரி.

நீ கழட்டுவதே இல்லை கூலிங் கிளாஸ்
இதே பாணியை தொடர்ந்தால் உன் ஆட்டம் க்ளோஸ்.

சின்ன கலைவாணர் என்று உனக்கு ஒரு பட்டம்
இதை அவர் கேட்டிருந்தால் எடுத்திருப்பார் ஓட்டம்.

உன்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது கே.பி.
அவர் பெயரை காப்பாற்ற மறுபடியும் காமெடியில் நீ சோபி.

உனக்கும் மதுரை
உன் போட்டியாளர் வடிவேலுவுக்கும் மதுரை
இருவருக்கும் தமிழ்சினிமாவில் நகைச்சுவையே துறை
அவரை விட உனக்கே சமூக கருத்தில் அக்கறை
அதுதானோ உனது குறை?

நீ கதாநாயகனாக நடித்த படம், சொல்லி அடிப்பேன்
இன்னும் இம்மாதிரி முயற்சியில் இறங்கினால், நான் சொல்லாமலே அடிப்பேன்.

உனக்கும் கொடுத்திருக்கிறார்கள் பத்மஸ்ரீ
ஏன் என்று கொஞ்சமாவது யோசி.

உன் முதல் படம் மனதில் உறுதி வேண்டும்
இரட்டை அர்த்தமில்லாத, முகம் சுழிக்க வைக்காத
தரமான காமெடியே உன்னிடமிருந்து எங்களுக்கு வேண்டும்.

அடிக்கடி நீ உச்சரிப்பது கலாம்
அதற்காகவே அவ்வபோது அவருக்கு வைப்பாய் சலாம்
இப்போதைக்கு இது போதும், போகலாம்
வருங்காலத்தில் நீயும் உன் ஆசைப்படி இயக்குனர் ஆகலாம்.

வாழ்த்துக்கள்...


---

தமிழ் இசையை உலகமெங்கும் கொண்டு சேர்ப்பேன் என்று சொல்லி இருந்தார் ரஹ்மான். சொல்லியதை செய்து காட்டிவிட்டார்.

ஆக்ஸிடெண்டல் ஹஸ்பெண்ட் என்ற படத்தில், தெனாலி படத்தில் வரும் “ஜன்னல் காற்றாகி வா” பாடல் முழுமையாக தமிழில் அப்படியே பயன்படுத்தப்பட்டு உள்ளது. பாருங்க, கே.எஸ்.ரவிக்குமார் படப்பாட்டு ஹாலிவுட் படத்துல.அது மட்டும் இல்ல... அலைபாயுதே ‘யாரோ யாரோடி’ பாட்டு பிட்டும் ஒரு நீளமான காட்சியின் பின்னணியில் வருகிறது. காட்சிக்கு ஏகப்பொருத்தம். அந்த காட்சி யூ-டூபில் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சுட்டி கொடுக்கவும்.

சுட்டி கொடுத்த ஜியாவுக்கு நன்றி.

Tuesday, May 5, 2009

விடைபெறும் நட்பு

ஒரு கல்லூரி ஆட்டோகிராப் கவிதை...வருடத்தில் சில காலம்
வீசும் தென்றல் போல்
என் வாழ்வில்
நீ.


பக்கத்து வீதிக்கு கூட வர தயங்கியவனை
சொர்க்கத்து வீதிக்கு இழுத்து சென்றவள்
நீ.


என்னை நேசித்தது மட்டுமில்லாமல்
எனக்கு நேசிக்க கற்று கொடுத்தவளும்
நீ.


புதிராம் பெண்ணை
எனக்கு புரிய வைத்த
போதி மரம்
நீ.


அள்ளி அள்ளி கொடுத்தும்
குறையாத அமுத சுரபியாக
அன்பை பொழிந்தவள்
நீ.


உன்னுடைய நட்பை
என்னுடைய கண பொழுதை கடக்கும்
ஆக்ஸிஜனாக கொடுத்தவள்
நீ.


நம் நட்பின்
அடுத்த கட்டம்
தொடும் தூரத்தில்.


கலக்கத்துடன்
என் மனம்
தொலைத்தூரத்தில்.

சிவந்த மண் பிரதேசம் (புகைப்படப் பதிவு)

சிவந்த மண்ணுடன் பரந்து விரிந்திருக்கும் இந்த இடங்கள், தேரி காடுகள் என்றைழைக்கப்படுகிறது. இவை தமிழகத்தின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலியில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் பக்கமுள்ள நாசரேத், நாலுமாவடி, காயாமொழி போன்ற பல்வேறு ஊர்களை சுற்றி இந்த தேரி காடுகள் அமைந்துள்ளது. டாடாவின் டைட்டானியத்திற்காக பிரபலமானது, சாத்தான்குளம் தேரி காடுகள்.

இந்த தேரி காட்டில் முந்திரி, பனை, தென்னை ஆகிய மரங்களை பார்க்கலாம். கொல்லாம்பழத்தை உப்பு போட்டு சாப்பிட்டு இருக்கீங்களா? வேண்டுமானால் சென்று, முந்திரியின் மேலுள்ள கொல்லாம்பழத்தை பறித்து சாப்பிட்டுவிட்டு வாருங்கள். முந்திரி கொட்டையை அங்கயே போட்டு விட்டு வரவும். காஸ்ட்லியான ஐட்டமாச்சே!

கீழே முந்திரி கொட்டை மட்டுமில்லை... சமயங்களில் பிணங்களும் கிடைக்கும். ஸ்கெட்ச் போடவும், பதுங்கவும் தகுந்த இடம் என்பதால் முந்திரிகாடுகள் அதற்கும் பிரபலம்.

இந்த தேரிக்காட்டில் பல படங்களை எடுத்துள்ளார்கள். நீங்களும் ஹீரோதான், கிழக்கு கரை, ஐயா, தாமிரபரணி என்று வில்லு வரை எடுத்துள்ளார்கள். சமீபகாலமாக, ஹரியின் படங்களில் அதிகமாக காணலாம்.
வில்லு படத்தில் இந்த மண்ணில் உடல் மறைவதாக காட்டுவார்கள். அதைப்போல் மணலில் மறையும் கோவில் ஒன்று இங்கு இருப்பதாக ஒருவர் சொன்னார். உண்மையா என்று தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தவும்.இந்த மண்ணில் தான் டைட்டானியம் இருப்பதாக டாடா நிறுவனத்தினர் பதினைந்து கோடிவரை செலவு செய்து தெரிந்து கொண்டார்கள். டைட்டானியம் ராணுவத்திற்கு மிகவும் உதவும் உலோகம். மண்ணில் இருந்து பிரித்தெடுத்து விற்றால் கொள்ளை காசு வரும்.இதற்காக தொழிற்சாலை ஆரம்பிக்க டாடா முயற்சி செய்ததும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு கருத்து கேட்கும் கந்தசாமிக்களாக சுற்றியதும் அனைவரும் அறிந்ததே.


எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி இருப்பதால், தெரியாமல் உள்ளே நுழைந்தால் தொலைந்து போக வாய்ப்புகள் அதிகம். இந்த புகைப்படங்கள் கூட வெவ்வெறு இடங்களில் எடுத்தாலும், ஒரே மாதிரி வந்துள்ளது.

Sunday, May 3, 2009

பி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி

பி.வாசு கன்னடத்தில் பொல்லாதவனை எடுக்க போகிறாராம்.

எப்படி வரும்?

1) கன்னட படங்கறதால கொஞ்சம் பட்ஜெட் பார்த்து தான் எடுப்பாரு. அதனால பல்ஸருக்கு பதிலா, பிளாட்டினா.
2) கமர்ஷியலுக்காக ஒரிஜினல்ல இருக்குற தேவையில்லாத சீனை பெரிதாக்குவார். தேவையான சீனை சுருக்கிவிடுவார். அதன்படி, இந்த படத்தில் முதல் பாதி முழுக்க ஹீரோவும், ஹீரோயினும் லவ் பண்ணுவார்கள், நண்பர்கள் காமெடி பண்ணுவார்கள். கிளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி ஹீரோ பைக்க தொலைப்பார்.
3) தொலைந்த பைக்கை ஹீரோ பெங்களூர் ஹார்பரில்(!) போயி தேடுவார்.
4) வில்லனை சுத்தி இருக்குற ரவுடிகளுக்கு வெள்ளை சட்டையும் மடிச்சு கட்டின வேட்டியும் தான் யூனிப்பார்ம்.
5) தனுஷ் அப்பா ஆஸ்பிட்டலில் இருக்கும் போது, “அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே” என்ற அப்பா செண்டிமெண்ட் பாடல் நிச்சயம்.
6) கிஷோர் இறந்தபின் அஞ்சு அழும் காட்சியை, குங்குமம், வளையல், வெள்ளை புடவை என்று இன்னும் மெருக்கேற்றுவார்.
7) பத்து வருஷம் முன்னாடி எடுத்திருந்தாங்கன்னா, செட்டு போட்டு இரண்டு பாட்டும், ஊட்டில ரெண்டு பாட்டு எடுத்திருக்கலாம். அவரோட, தற்போதைய ரேஞ்ச் படி ரெண்டு பாட்டு பாரின்ல தான்.
8) "எங்கேயும், எப்போதும்" ரீ-மிக்ஸ்க்கு பதிலாக ஒரு பழைய ராஜ்குமார் பாடலை ரீ-மிக்ஸ் பண்ணுவார்கள். படம் - வெள்ளி விழாதான். மெஜஸ்டிக் பக்கமிருக்குற ஒரு தியேட்டருல.

இந்த படம் மட்டும் கன்னடத்தில வெற்றியடைஞ்சுதுன்னா, அப்புறம் அதே டீம வச்சி அதே மாதிரி ஒரு படம் எடுப்பாரு. அப்படி இல்லாட்டி, அவர் பையனை அங்க இறக்கி விடுவாரு. அது கண்டிப்பா ஊத்திக்கும்.

---

இவ்ளோ சொன்னாலும், பி.வாசு படங்களில் இருந்த ஒரு நல்ல விஷயம், அவர் நகைச்சுவை நடிகர்களை பயன்படுத்திய விதம். முக்கியமாக, கவுண்டமணி. இவர் படங்களில் கவுண்டமணி, ஒரு சுதந்திர பறவை. வாசு இயக்கத்தில் கவுண்டமணி பேசிய வசனங்கள் ரொம்ப பிரபலம்.

சின்னதம்பி

தியேட்டரில் சம்பந்தமில்லாமல் ஒரு காட்சியில் தனியாக கைத்தட்டியபடி,

“சூப்பருப்பு..”

“எதுக்கு நீங்க இவருக்கு போயி கைத்தட்டுறீங்க?”

“ஏன்? அவருதான் கதையிலையே ஒரு பெரிய டர்னிங் பாயிண்டு. (அந்த காட்சியில் ஒரு வயதானவரை கீழே தள்ளி விட்டு இருப்பாங்க!) அவரு வந்ததுக்கப்புறம் தான் கதையில ஒரு கசமுசாலாம் ஏற்பட்டு... ம்ம்ம்.. அய்யோ..”

போட்டோவில் இருக்கும் அப்பாவிடம்,

“கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல நான் வேலை செய்ய மாட்டேனா? டேய்! முப்பது ரூபாடா...முப்பது ரூபா கொடுத்தா, நான் மூணு நாளைக்கு கண்ணு முழிச்சு வேல பார்ப்பேண்டா...

சேதுபதி IPS

கப்பலுக்கு போகும் ஆசையில் இருப்பவரிடம்,
நம்பியார்: டேய்! மடையா
கவுண்டமணி: டேயா? இந்த ஐநூறு ரூபா சம்பளத்துக்கு டேயா? ஆயிர ரூபா கொடுத்தீங்கன்னா, கெட்ட வார்த்தையில கூப்பிடுவீங்களா?

மன்னன்

தியேட்டரில்,
ரஜினி: இந்த மோதிரம், செயின் என்னப்பா பண்றது?
கவுண்டமணி: உள்ளே வாங்கி வெளியே விக்க வேண்டியதுதான்
ரஜினி: ஏன்பா?
கவுண்டமணி: அத எவன்பா அசிங்கமா கைல மாட்டிக்கிட்டு.

மைக்கில் - தொழிலதிபர் அவர்களே!
கவுண்டமணி: சே! எவண்டா தொழிலதிபரு? சீக்கிரம் மோதிரத்தையும், செயினையும் கொடுங்கப்பா... அடடா, நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடிலப்பா... புண்ணாக்கு விக்குறவன், குண்டுசி விக்குறவன் எல்லாம் தொழிலதிபராம்...

விஜயசாந்தி கை சொடுக்கி கூப்பிட்டவுடன்,
கவுண்டமணி: ஓ! இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க, போல!
நாங்களாவது ஒங்கக்கிட்ட சொல்லிட்டு வந்தோம்... நீங்க எங்கக்கிட்ட சொல்லிட்ட வந்தீங்க?

”நீங்க இப்படி சொன்னா, நாங்க வாங்க மாட்டோம். மூஞ்ச சிரிச்ச மாதிரி வச்சிக்கிட்டு சொல்லுங்க” இதை சொல்லும் போது கவுண்டமணி முகத்தை பார்க்கணும். அப்பப்பா :-).

உண்ணாவிரதத்தில்,

ரகசிய குரலில், “ஏம்பா, எல்லாரும் தூங்கிட்டாங்க. நான் மட்டும் போயி ஏதாவது கடை திறந்திருந்தா, நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரட்டுமா?”

ரஜினி முறைக்கிறார்.

“நான் இங்க உக்கார்ந்ததே தப்பு. மூணாவது ரோவுல உக்கார்ந்திருந்தா, என் இஷ்டத்துக்கு எந்திரிச்சு ஓடி போயிருப்பேன். ஐம்பது வயசுக்கு மேல இந்த நாயிங்க செத்தா என்ன? பொழச்சா என்ன? என்னால பசி தாங்க முடியல.” அழுகிறார்.

போன வாரம், இந்த உண்ணாவிரத காமெடி பார்த்து சிரியோ சிரின்னு சிரிச்சோம்.