Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, October 2, 2017

நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாடப்படும் காரணம் என்ன? அமெரிக்காவுக்குச் சைனீஸ் நூடுல்ஸும் டொமட்டோ சாஸும் பிடிக்கும் அளவுக்கு, சோஷலிசமும் போராட்டங்களும் பிடிப்பதில்லை. மே 1 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை உலகமே வருடம் தோறும் மே ஒன்றாம் தேதி அன்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் மட்டும் தொழிலாளர் தினமான செப்டம்பர் முதல் திங்களில் "சம்மர் முடியுது, ஸ்கூல் தொறக்குது, வருடத்தின் கடைசி ட்ரிப்" என்று ப்ளான் செய்து சுற்றுலா சொகுசில் இருப்பார்கள் மக்கள்.

சரி, அது என்ன சிகாகோ போராட்டம், எட்டு மணி நேர வேலை? 1870களில் உலகமெங்கும் தொழிற்சாலைகள் பெருகிய காலக்கட்டத்தில், சிகாகோவிலும் அந்த வளர்ச்சி நன்கு காணப்பட்டது. தொழிலாளர்கள் சராசரியாக வாரத்திற்கு ஆறு நாட்கள் எனச் சுமார் அறுபது மணி நேரங்கள் மேலே உழைத்தார்கள். நூறு மணி நேரங்கள் உழைக்க வைக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்களது பணிநிலையைச் சீராக்க, தினசரி எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை, தொழிலாளர்களால் அதிகார வர்க்கத்திடம் வைக்கப்பட்டது. அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம், 1886 மே ஒன்றில் இருந்து தினசரி வேலை நேரம் 8 மணி நேரமாகத் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கான போராட்டங்கள், பேரணி பல இடங்களில் நடந்தன. சிகாகோவில் ஹேமார்க்கெட்டில் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த காவல்துறை, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயல, அந்தப் போராட்டக்களத்தில் தொழிலாளர் உரிமைக்கான முதல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏழு போலீஸார் உள்படச் சுமார் பதினைந்து பேர் பலியானார்கள். அறுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. 1940 இல் அமெரிக்கக் காங்கிரஸ் 40 மணி நேர வார வேலைக்கான சட்டம் இயற்றியது.

ஆனால், இந்த உலகில் தொழிலாளர்கள் எல்லாம் இன்னமுமா எட்டு நேரம் மட்டும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக்கு நன்கு தெரிந்த ஐடி துறையை எடுத்துக் கொண்டாலே, என்னால் தயக்கமின்றிக் கூற முடியும் - இல்லையென்று.

கம்பெனியின் பாலிசி, அப்பாயிண்மெண்ட் லெட்டர் எனப் பயன்பாட்டில் இல்லாதவற்றைக் கூறும் பேப்பரில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை இருக்கும். அதற்கு முரணாக, அன்றாடப் பயன்பாட்டு நெறிமுறைகள் இருக்கும் பிற இடங்களில் எட்டு மணி நேர வேலைக்கான வாய்ப்பே இருக்காது. ப்ரொடக்ஷன் இஷ்யூ (Production Issue) என்றால் எந்நேரம் என்றாலும் பார்க்க வேண்டும், ப்ரொடக்ஷன் இன்ஸ்டாலை (Production install) நைட் தான் செய்ய வேண்டும், டிசாஸ்டர் ரிக்கவரி டெஸ்டிங் (Disaster Recovery Testing) வாரயிறுதியில் செய்ய வேண்டும், ஸ்ப்ரிண்டில் (Sprint) கம்மிட் செய்தவை, எந்த நிலையிலும் கண்டிப்பாக ஸ்ப்ரிண்ட் முடிவிற்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்கு ஈடுகட்ட தனியாக விடுமுறை ஏதும் இல்லை. பிறகு, எட்டு மணி நேர வேலை? அமெரிக்காவில் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதில் காரணம் இருக்கிறதல்லவா!!

கணினி முன் உட்கார்ந்துப் பார்க்கும் வேலைகளில், பெரிய உடல் உழைப்பு இல்லையென்பதால், இப்படி நேரம் கடந்த வேலையை, ஒரு குறையாக யாரும் பெரிதாகச் சொல்வதில்லை. ஆனால், இப்படி வேலை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை, சம்பந்தப்பட்டவர்களே கவனிப்பதில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இன்னொன்று, ஃபேக்டரி கதவை மூடிவிட்டு உள்ளூக்குள் கிடந்து வேலைப் பார்க்கும் சூழல் இதில் இல்லை. கையில் ஒரு லேப்டாப்பைக் கொடுத்து, எங்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்பதால், ஆர்வக் கோளாறு காரணமாகவும், பெயருக்கும், பணியிடத்து முன்னேற்றங்களுக்காகவும் பலரும் தாமே பலருக்குத் தவறான முன்னுதாரணமாக இந்த விஷயத்தில் அமைந்து விடுகிறார்கள்.

இது போன்ற விஷயங்களில் சில பெண்கள் தான் கட்டுப்பாட்டுடன் 8 மணி நேர வேலையுடன் ஒருதினத்தை நிறுத்திக்கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் குடும்பச் சூழல், சார்புப் பொருளாதார நிலைமை போன்றவை காரணமாக இருக்கலாம். பெரும்பாலான ஆண்களை முழு நேரமும் அலுவலக வேலைக்கு நேர்ந்துவிட்டதால், அதிலேயே கதியாகக் கிடக்கிறார்கள். தனிப்பட்ட வேறு துறைச் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டால், இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துக்கொள்ளலாம்..

எட்டு மணி நேரத்தை அதிகாரவர்க்கத்திடம் பேசுவதை விட்டு, தனி ஒருவனாக ஒவ்வொரு தொழிலாளியும் தன்னுள் இருந்து சிந்திக்கும் காலக்கட்டம் இது.

.

ஃபேஸ்புக் புர்ச்சியாளர்கள்

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



அதென்ன புர்ச்சி? எந்நேரமும் களத்தில் நின்று போராடினால், அது புரட்சி. டைம்பாஸுக்காக, இணையத்தில் உட்கார்ந்து அன்றைய தினத்தின் ஹாட் டாபிக்கிற்குச் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தால், அது புர்ச்சி. :-)

சமீப ஆண்டுகளில், இத்தகைய புர்ச்சியாளர்களின் புகலிடமாக, ஃபேஸ்புக் இருந்து வருகிறது. சமயங்களில், நம்ம சுற்று வட்டாரத்திலேயே இவ்வளவு புர்ச்சியாளர்களா என்று மலைக்க வேண்டியிருக்கிறது.

இவர்களை அடையாளம் காண்பது எப்படி?

  • கண்டிப்பாக, டெய்லி போஸ்ட் போடுவார்கள். போடாட்டி? ஆபீஸ்ல புழிஞ்சு எடுத்துட்டு இருக்காங்க'ன்னு புரிஞ்சுக்கோங்க!!
  • சொந்த கதை, வீட்டு நிகழ்வுகள், வேலை, கல்வி பற்றியெல்லாம் எழுத மாட்டார்கள். ஒன்லி, நாட்டுப் பிரச்சினை. அதிலும், முக்கியமாகப் பிரச்சினை இருக்க வேண்டும்.
  • அப்படியே என்றேனும் எந்தப் பிரச்சினையும் இல்லாத நாளில், சொந்த கதையை எழுதினாலும், அதில் கொஞ்சம் காரம் சேர்த்து, சமூகத்துக்கான கருத்து இல்லாம முடிக்க மாட்டார்கள்.
  • அமெரிக்க அதிபரோ, ஆர்பிஐ கவர்னரோ, யார இருந்தாலும் சரி, கூச்சமே படாம அறிவுரை சொல்வார்கள்.
  • என்னமோ, எல்லா நாட்டு பிரதமர்களும் இவர்களது போஸ்ட்டை படித்து விட்டு தான் தூங்க போவது போல், அவர்களுக்குக் கடிதம் எழுதிக் கேள்வி கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
  • 'ஏ! தாழ்ந்த தமிழகமே‘ என்று தமிழ்நாட்டுக்கு 100 அடி மேல் நிற்பது போல் கூவுவார்கள்.
  • பிற ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்லிவிட்டு, முதல் நாளே சட்டை கிழிய, சாரி, இப்பல்லாம் எங்க சட்டை கிழியுது? பர்ஸ் கிழிய, படம் பார்த்து விட்டு, ஹீரோவின் முகத்திரையைக் கிழிக்கிறேன் என்று ஏதாவது கிறுக்குவார்கள். இவர்கள் இணையத்தை விட்டுக் களம் இறங்கும் ஒரே இடம் திரையரங்காகத் தான் இருக்கும்.
  • 'தோழர்’ என்ற நல்ல வார்த்தையை, காமெடியாக்குபவர்கள். மொக்கை போடும் போது கூட, தோழர் என்று அழைத்துக் கொண்டு அன்பே சிவம் நல்லசிவமாக நினைத்துக் கொண்டு ஃபேஸ்புக்கில் வாழ்வார்கள்.
  • இன்னொரு வகைப் பார்ட் டைம் புர்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு வீடு, வேலை, தோப்பு, தொறவு என்று பல முக்கியப் பணிகளுக்கிடையே திடீரென்று ஏதேனும் விஷயத்தில் சமூகப் பார்வை தட்டுப்பட்டு விட்டால், உடனே பார்ட் டைம் புர்ச்சியாளர்களாய் உருவெடுத்து விடுவார்கள். வாட்ஸ் - ஆப் ஃபார்வர்ட், ஃபேஸ்புக் ஷேரிங், டிவிட்டர் ரீவிட் என்று நேரம் கிடைக்கும் போது மட்டும் பொங்கி விட்டு, மற்ற நேரம் கடமையை ஆற்ற சென்று விடுவார்கள். சம்பந்தபட்ட இணையத்தளத்திற்கு இவர்களால் கூடும் பேஜ் வியூஸ் தவிர வேறெந்த பிரயோஜனமும் இல்லையென்றாலும், அதையெல்லாம் நம் புர்ச்சியாளர்கள் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.
  • பல புர்ச்சியாளர்களோட புரட்சி, அம்பானியை நம்பி தான் இருக்கிறது. அதாவது, அவரோட ஜியோ மற்றும் அது போன்ற இலவச இணையச் சேவையை நம்பியிருக்கின்றன. ஃப்ரீ வை- ஃபையில் மட்டும் வரும் சமூக அக்கறையா? அப்ப , அது புர்ச்சியே தான்.
பெரும்பாலான புர்ச்சியாளர்கள், தங்கள் எழுத்தில் இருக்கும் பிழையைக் கூடத் திருத்த முன்வர மாட்டார்கள். இவர்கள் தான் ஊருக்கே பிழை திருத்த பாடம் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

கண்டுப்பிடிச்சிட்டீகளா, உங்களைச் சுற்றி இருக்கும் புர்ச்சியாளர்களை? என்னது, உங்களுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் இருக்கிறதா? அப்படியென்றால். பிடியுங்கள் புர்ச்சியாளர் பட்டத்தை.

முன்பெல்லாம் ஏதேனும் பிரச்சினை நடக்கும் போது, முதலில் அந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுபவரை நினைத்து கவலை வரும். இப்போது அந்தப் பிரச்சினையை வைத்து, நம் புர்ச்சியாளர்கள் செய்யப் போகும் ஸ்டேடஸ் கூத்தில் இருந்து எப்படித் தப்பிப்போமோ என்ற கவலை தான் வருகிறது. அது நியாயமான சமூகக் கோபமோ அல்லது அசட்டு ஆசட்டு கோளாறோ, வேறு வழி தெரியாமல் இணையத்தில் சரணடையும் இவர்கள், சிறிது காலத்தில் களைத்தோ அல்லது புரிந்தோ இந்த மெய்நிகர் போராட்ட உணர்வில் இருந்து வெளிவந்துவிடுவார்கள்.

பின் குறிப்பு - இந்தப் புர்ச்சியாளர்களுக்கு மத்தியிலும், சில நல்லுள்ளங்கள் தொடர்ச்சியாகத் தாம் கற்றவற்றை மற்றவருக்குப் பெரும்பாலான நேரங்களில் பகிர்ந்து கொண்டு, அவ்வப்போது தேவையான சமயம் மட்டும் தங்கள் கருத்துகளை நேர்மையாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நாம் இதில் அடையாளம் காண முயற்சி செய்திருப்பது, போலி ஃபேஸ்புக் போராளிகளை மட்டும்.


.

Wednesday, December 1, 2010

மாண்புமிகு வேலைக்காரர்



முன்பெல்லாம் நடுத்தரவர்க்கத்தை தாண்டிய வசதி படைத்தவர்களின் இல்லங்களிலேயே, வீட்டு வேலை செய்பவர்களை காணலாம். கூட்டு குடும்பமாக, பெரும் குடும்பமாக இருப்பவர்கள், வீட்டு வேலையை செய்து முடித்துவிட்டு, நேரம் போகாமல் உட்கார்ந்து கதை பேசுவார்கள். தற்சமயம் நகரங்களில் தனியாக வாழும் பேச்சிலர்களும், வேலைக்கு செல்லும் கணவன் - மனைவிகளும், உதவிக்கு வேலை செய்ய ஆள் வைப்பதை தவிர்க்க முடியாமல் போய் நெடுநாளாகிறது.

---

பெங்களூரில் எனக்கு தெரிந்த பேச்சிலர் நண்பர்கள் பெரும்பாலோனர், வெளியே சாப்பிட்டு விட்டு, வீட்டை துடைப்பது, கழுவுவது, துணி துவைப்பது போன்ற வேலைகளை அவர்களே செய்துவிடுவார்கள். சிலர் வெளியே சாப்பிட்டு விட்டு, வீட்டில் எப்படி குடிவந்தார்களோ அப்படியே வைத்துவிடுவார்கள். ஓனர் வீட்டை பார்த்துவிட்டு கண் கலங்குவதும், பிறகு வாடகை வாங்கிவிட்டு சமாதானம் ஆவதும் வழக்கம். சில ஓனர்கள் வாடகை வாங்க வருவதில்லை. ஆன்லைனிலேயே ட்ரான்ஸ்பர் செய்ய சொல்லிவிடுவார்கள். சேலம், ஈரோடு, வேலூர் என பெங்களூருக்கு சில மணி நேரத்தில் பயணம் செய்யும் கொடுப்பினை பெற்றவர்கள், வாரயிறுதியில் ஒரு பெரும் மூட்டையுடன் ஊருக்கு செல்லுவார்கள். மறந்தும், அவர்களது பையை திறந்து பார்த்துவிடாதீர்கள். லேப்டாப் பேக், அழுக்கு மூட்டையாகி இருக்கும்.

---

சில பேச்சிலர்கள், சுகவாசிகளாக இருப்பார்கள். வீட்டில் ஒன்றாக தங்கியிருப்பவர்கள் சேர்ந்து வாஷிங்மிஷின் வாங்கி இருப்பார்கள். அதில் துணியைப் போட வேலைக்கு ஆள் வைக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு சோம்பல் குணம் கொண்டவர்கள். இவர்கள் நன்றாக சாப்பிட நினைத்து, நண்பர்கள் எவருக்கும் சமையல் கலை கைக்கூடாமல் இருந்தால், சமைக்க ஆள் வைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல்,காலையிலையோ, மாலையிலையோ சமைக்க வர சொல்லியிருப்பார்கள். பெரும்பாலும் இரவிலாக இருக்கும். வாரயிறுதியில் மதியமும், இரவுமாக இருக்கும்.

---

இப்படி தான் என்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டுக்கும், சமையலுக்கு ஒரு பெண்மணி வருகிறார். சம்பளம் ரெண்டாயிரத்து சொச்சம். ஆங்காங்கே வேலைக்கேற்ப, ஏரியாவில் வேலையாள் டிமாண்டிற்கு ஏற்ப, சம்பளம் வேறுபடும். எனக்கு தெரிந்து 600 ரூபாயில் இருந்து 3500 வரை மாத சம்பளமாகக் கொடுக்கிறார்கள்.

ஒரு வேளைக்கு சமைக்க, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஆகும். இதனால் நாலைந்து வீடுகளில் வேலை செய்வார்கள். என் நண்பன் வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்மணியும் இப்படி ஒரு பிஸி பெண்மணி. டைம் ஸ்லாட் அமைத்து, பல வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர். ‘கிட்டத்தட்ட என்னுடைய டேக் ஹோம் சம்பளம் அளவுக்கு, அந்தம்மா சம்பாதிப்பதாலோ என்னவோ, எங்களை மதிப்பதே இல்லை’ என்பான்.

இவர்களுடைய விருப்பத்திற்கேற்ப, சமையல் இருக்காதாம். அந்தம்மாவுக்கு என்ன இஷ்டமோ, அது தான் சமையல். ’சப்பாத்தி செய்யுங்களேன்’ என்றால், ‘இல்லை, இன்னைக்கு உப்புமா சாப்பிடுங்க’ என்று பதில் வருமாம்.

அதே பெண்மணி வாரமொருமுறை வந்து வீடு துடைத்து, கழுவி செல்லுவாராம். அந்த பெண்மணி வரும் நேரம், இவர்கள் கழுவ தேவையான சமாச்சாரங்களை எடுத்து ரெடியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தண்ணீரை அப்படியே ஊற்றிவிட்டு, ஒரு தள்ளு தள்ளிவிட்டு சென்றுவிடுவாராம்.

இவர்கள் ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்து, அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்ல, அம்மணி ஏனென்று கேட்டிருக்கிறார். இவர்களும் வீடு மாறப்போவதாக பொய் சொல்லி சமாளித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருப்பதோ, ஒரு வீட்டின் முதல் மாடியில். ஓனர் இருப்பதோ, தரைத்தளம். ஒரு மாதம் கழித்து, கீழேயிருந்து சத்தம் வந்திருக்கிறது. என்னவென்று எட்டிப்பார்த்தால், அந்தம்மா நின்றிருக்கிறார்.

”என்ன?”

“வீடு காலி பண்ணப் போறதா சொன்னீங்களே? இன்னும் போகலையா?” என்று சத்தமாக கேட்டிருக்கிறார்.

வீட்டு ஓனருக்கு கேட்டுவிடக்கூடாதே என்று பதறியடித்துக்கொண்டு கீழே ஓடி சென்று சமாளித்திருக்கிறான்.

நான் கேட்டேன்.

"இப்ப சமையலுக்கு என்ன செய்யுறீங்க?”

“தெரிஞ்சத வைச்சு, நாங்களே செய்யுறோம். நல்லாத்தான் இருக்கு.”

.

Friday, September 24, 2010

அயோத்தி வழக்கு - வரலாறும் வருங்காலமும்

அயோத்தி இந்தியாவின் இதயப்பகுதியில் இருப்பதாலோ என்னவோ, அங்கு விழுந்த அடி காலத்திற்கும் இந்தியாவின் தேகமெங்கும் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேண்டுமானால் 1992 நிகழ்வு, பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கலாம். ஆனால், அடிப்படை பிரச்சினை 1885 யிலேயே வேர் விட தொடங்கிவிட்டது.



இந்து மத நம்பிக்கைபடி அயோத்தி, தசரதன் ஆண்ட நகரம். ராமர் பிறந்த மண். தற்போது இங்கு இருக்கும் பாபர் மசூதி, முகாலய அரசர் பாபரின் தளபதி மிர் பஹியால் கட்டப்பட்டது. அவரை இங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டினாரா என்பது இந்தியாவிற்கு தலைவலியை கொடுக்கும் சர்ச்சைக்குரிய கேள்வி. பதிலுக்கு மொத்த நாடும் காத்திருக்கிறது.

1885 இல் ரகுபர் தாஸ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அயோத்தியில் பாபர் மசூதிக்கு பக்கமிருக்கும் அவருடைய நிலத்தில் ஒரு திண்டு (திண்ணை போன்ற மேடை) இருந்தது. அது தான் ராமர் பிறந்ததாக நம்பப்பட்டு வந்த இடம். அதில் கோவில் கட்ட அனுமதியளிக்கும் படி ஒரு வழக்கு தொடர்ந்தார். இடம் அவருடையதாக இருந்தாலும், பக்கத்திலேயே மசூதி இருப்பதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது என்று ஃபைசாபாத் துணை நீதிபதி தீர்ப்பளித்தார். இதே வழக்கு ஃபைசாபாத் மாவட்ட நீதிபதியிடம் செல்ல, அவரும் அனுமதி மறுத்தார். “என்னத்தான் இந்துக்களின் புனிதத்தலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டு இருந்தாலும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும்” என்றார் அந்த ஆங்கிலேயே நீதிபதி சம்பியர்.

பிறகு இரு மதத்தினரும் இந்த இடத்தில் வழிபாடு நடத்தி வந்தனர்.

1934இல் ஒரு பசு கொல்லப்பட்டதால் உருவான கலவரத்தில் மசூதி தாக்கப்பட்டது. அரசே அதை சரி செய்தும் கொடுத்தது.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது. 1949 இல் மசூதிக்குள் ஒரு ராமர் சிலை வைக்கப்பட்டது. யார் வைத்தது? எப்படி வைக்கப்பட்டது? தெரியாது. ஆனால், அதற்கு இந்துக்கள் கூட்டம் கூடியது. பூஜைகளும் நடத்தப்பட்டது. பிறகு கூட்டம் தடுக்கப்பட்டு, மசூதி பூட்டப்பட்டாலும், அந்த சிலை வெளியே எடுக்கப்படவில்லை. அந்த சிலையை வெளியே எடுக்க, யாருக்கும் தைரியம் வரவில்லை. அப்போதைய பிரதமர் நேரு ஆணையிட்டும், யாரும் எடுக்க தயாராக இல்லை. அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட், “என்னை வேலைவிட்டு போக சொன்னாலும் சொல்லுங்க, அந்த சிலை எடுக்க சொல்லாதீங்க” என்றார்.

ஃபைசாபாத் கமிஷனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த சிலையை தற்சமயம் எடுப்பது சரிப்பட்டு வராது. கொஞ்ச நாள் பொறுப்போம். எல்லாம் அடங்கிய பிறகு முடிவெடுப்போம்.

அவர் சொன்னது போலவே சில காலம் ஏதும் பிரச்சினை இல்லாமல் சென்றது. 1949 இல் நகர மாஜிஸ்ட்ரேட் ஆணையின்படி, அந்த இடம் நகராட்சி சேர்மனால் கையகப்படுத்தப்பட்டது.

திரும்ப 1950 இல் கோபால் சிங் என்பவர் மசூதிக்குள் ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும், உள்ளூர் பூசாரி ஒருவர் மட்டும் உள்ளே தினமும் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் வழங்கப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பில், “இந்த மசூதி முஸ்லீம்களால் பல ஆண்டு காலம், வழிப்பாட்டுக்காக பயன்பட்டு வந்ததாகவும், அது ராமரின் வழிப்பாட்டு தலமாக இருந்ததில்லை எனவும்” கூறப்பட்டது. ராமர் சிலை ரகசியமாக, தவறாக உள்ளே வைக்கப்பட்டதாக அந்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது.

1955 இல் அந்த இடத்திற்கு உரிமை கோரி நின்மோஹி அஹாரா என்பவரும், மொகமது ஹசிம் என்பவர் தலைமையில் ஐந்து முஸ்லிம்கள் அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தீர்ப்பளித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், தற்போது நிலவும் நிலையிலேயே நீடிக்குமாறு தீர்ப்பளித்தனர். பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்தில் ஒரு முடிவு கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறினாலும், ஒன்றும் நடக்கவில்லை.

1961 இல் ஹசிம் இடத்தை முஸ்லீம்களிடம் திரும்ப வழங்க கோரி இன்னொரு வழக்கு தொடர்ந்தார். 1964 இல் இதை பற்றிய அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கிற்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. 1968 இல் அந்த இடத்திற்கு ஒரு பொறுப்பாளரை நீதிமன்றம் நியமித்தது. ஆனால், 1971 இல் இன்னொரு வழக்கு தொடரப்பட்டதால் அவருக்கு வேலை இல்லாமல் போனது.

1983 இல் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த பிரச்சினையை பெரியளவில் எடுத்த செல்லும் வரை, அந்த வழக்கு கண்டுக்கொள்ளப்படவில்லை. பிரச்சினையின் தீவிரம் கூட கூட, ஃபைசாபாத் நீதிமன்றம் 1886இல் அந்த இடத்தை இழுத்து மூடியது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டை சந்தித்து ராம தரிசனத்திற்கு அனுமதி கோர, அதற்கு அவர் வழங்கிய ஆணை, கடும் சூட்டை கிளப்பியது. கலவரம் ஆரம்பித்தது.

நீதிபதி பாண்டே கூறியது என்னவென்றால், “இருதரப்பையும் விசாரித்ததில், அந்த இடத்தை திறந்து விடுவதாலும், சிலைகளுக்கு பூஜை செய்வதாலும் முஸ்லீம் மக்களுக்கு எந்த பிரச்சினை இல்லையென்று தெரிகிறது. திறந்துவிடுவதால் ஒன்றும் வானம் இடிந்து விழ போவதில்லை”.

இதை தொடர்ந்து வக்பூ வாரியமும், பாப்ரி மஸ்ஜித் செயல் குழுவும் அலாகாபாத் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மதவாதிகளுக்கு இது முழு நேர தொழிலானது. கரசேவகர்கள் பிஸியானார்கள். 1990 இல் முலாயம் சிங் ஆட்சியில், கரசேவகர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தப்பட, இதை பிரச்சினையாக்கி பாரதீய ஜனதா உத்திரப்பிரதேசத்தில் 1991 ஆட்சியை பிடித்தது. பாஜக முதல்வர், மசூதியை சுற்றி அமைந்துள்ள இரண்டே முக்கால் ஏக்கரை, கோவில் கட்டுவதற்காக கையகப்படுத்தினார். பாப்ரி மஸ்ஜித் செயல் குழு அப்படியேதும் கட்டப்படாமல் இருக்க தடைக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

1992இல் பாஜக தலைமையின் முன்னிலையில் மசூதி தகர்க்கப்பட்டது. இந்தியாவே ஆட்டம் கண்டது. கல்யாண் சிங் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றி 67 ஏக்கர், மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு, இந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு முன்பு, ராமர் கோவில் இருந்ததா? என்று கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, அதன் மேல் முடிவெடுக்க இம்மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் கூடுகிறது.

---

வழக்கின் தீர்ப்பு, அங்கு ராமர் கோவில் இருந்ததா இல்லையா என்பதை குறித்தே அமையும். தீர்ப்பையொட்டி கலவரம் ஏற்படலாம் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட அணி மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்லும். முடிவில், அதுவும் இழுக்கப்பட்டு இழுக்கப்பட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை அறிய, நாமெல்லாம் இருப்போமா என்பதே சந்தேகம் தான்.

ஒரு சாதாரண இடப்பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டால், என்னத்தான் முன்பு ராமர் கோவில் இருந்தாலும், 400 ஆண்டுகளுக்கு மேலாக மசூதி இருப்பதால், அதில் கோவில் கட்ட சட்டரீதியாக இடமில்லை. இல்லாவிட்டால், இப்போது நாம் இருக்கும் இடமெல்லாம் நமக்கில்லாமல் போகலாம். இது என் மூதாதையர் இடம், அது என் மூதாதையர் இடம் என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்.

இப்பிரச்சினை பெரிதாக காரணம், அரசியல்வாதிகளே. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, இது ஒரு முக்கிய காரணம். ஆனால், முன்பு இருந்தது போல தற்போது மக்களிடம் இதற்கு ஈடுபாடு அதிகமில்லை. அதே சமயம், பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, அப்போதைய தொழிலதிபர்களும் காரணமாக இருந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், தொழில் சூழல் நன்றாக அமையும் என்று ஒரு நம்பிக்கையிருந்ததால், அவர்களது ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது தொழிலதிபர்களின் பிரதிநிதியாக பிரதமராக செயல்படுவதால், காங்கிரஸிற்கு அவர்களது முழு ஆதரவும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மதரீதியாக பிரச்சினை ஏற்பட்டு, சுமூகமான தொழிற்சூழல் கெட தொழிற்துறை விரும்பாததால், அவர்களை காப்பதற்காக, காங்கிரஸ் இப்பிரச்சினையை தள்ளிப்போடவும், முக்கியத்துவம் கொடுக்காமல் கண்டுக்கொள்ளாமலும் இருக்கவே முயலும். ஏன், பாஜகவும் இதை பெரிதாக பிரச்சினையாக்காது என்றே கருதப்படுகிறது.

எப்படியோ, இவ்வழக்கின் தீர்ப்பில் நடுநிலைமை சாத்தியம் இல்லை. தலைவலியாகத்தான் இருக்கப்போகிறது. இந்திய நீதித்துறையின் பெரும் பிரச்சினையான கால விரயமே, இப்பிரச்சினையை காக்கக்கூடும். தீர்ப்பு வழங்கப்போகும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறுவதால், அதன் பிறகு உடனே தீர்ப்பு வழங்க முடியாது. அச்சமயம் விசாரணை திரும்ப முதலில் இருந்து நடைப்பெறும்.

நாமும் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

பின்குறிப்பு - இணையத்தில் பல்வேறு தளங்களில் வாசித்ததை பதிந்திருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் குறிப்பிடவும்.

.

Thursday, June 24, 2010

சில ’புரியல’கள்



வயசு பசங்க, ஒரு வயசு பொண்ணப்பார்த்து, ‘சூப்பர் பிகர்’ என தங்களுக்குள் பேசிக்கொள்வது ஆணாதிக்கமா?

---

தம் அடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசலாமா? கூடாதா?

---

வாதம் செய்கிறேன் என்று வாய்ப்பே கொடுக்காமல் வகுந்தெடுப்பது பாசிசமா? இல்லையா?

---

அவனவன் அவன் வேலையையும், வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொண்டாலே, சமுதாயம் அதுவா முன்னேறும் என்கிறார்களே, உண்மையா?

---

ராவணன் பிராமணன் என்றும் வாசித்திருக்கிறேன். ராவணன் திராவிடன் என்றும் வாசித்திருக்கிறேன். எது உண்மை? இரண்டும் உண்மையா?

---

ராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்?

---

ஹீரோயிச ராவணன், கிளாமர் சீதை, சூழ்ச்சிக்கார ராமன், சரக்கடிக்கும் அனுமர் என இருந்தும் திராவிட நாத்திகர்கள் ஏன் மணிரத்னத்தை ரவுண்ட் கட்டுகிறார்கள்? அதற்கேற்ப காரணங்களை எப்படி பிடிக்கிறார்கள்?

---

முதலாளித்துவம் கெட்ட சொல்லா? முதலாளிகள் அனைவரும் கெட்டவர்களா?

---

நல்ல முதலாளிகள் யார் யார்? அப்படி யாருமே கிடையாதா? நல்ல முதலாளி ஆவது எப்படி?

---

நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் கெட்டவரா? அவர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டே, அவரையோ, அவரை போல சிந்தாந்தம் கொண்டவர்களையோ கெட்ட விதமாக விமர்சிப்பது சரியா?

---

முதலாளிகளையும், அவர்கள் தரும் சம்பளம், இன்னபிற வசதிகளையும் உதறி தள்ளிவிட்டு நியாயம் பேசுவதுதான் சரியாமே?

---

எடுக்கப்படும் சினிமா அனைத்திலும் நியாயமான சமூக அரசியல் தீர்வுகளை எதிர்ப்பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்கு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ எங்கு செல்வார்கள்?

---

பொதுவுடமை பேசும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுகளை முழுதாக ரீடரில் காட்டுவதில்லை?

---

பைரேட்டட் மைக்ரோசாப்ட் மெஷினில், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து, தாராளமயமாக்கத்தை எதிர்த்து கூகிள் ப்ளாக்கரில் பதிவெழுதி, அதையே அடோப் பிடிஎப் பைலாகவும் மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது சரியா?

---

இத்தனை இஸங்களை தெரிந்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களை ரப்ச்சர் பண்ணி வாழ்வது சிறந்ததா? இது பற்றி எதுவும் தெரியாமல் சாதா மொக்கைகளைப் போட்டு ஜாலியாக வாழ்வது சிறந்ததா?

.

Friday, April 23, 2010

போன் போபியா

செல்போன்கள், நம்மிடையே ஒரு புது பய பழக்கத்தை உருவாக்கியிருக்கிறது.



செல்போன் பெருகிவிட்ட இக்காலத்தில் எல்லோரும் எப்போதும் நெருங்கியவர்களுடன் தொடர்பில் இருக்க பழகிவிட்டனர். இப்படி தொடர் தொடர்பு பழக்கம், சிலரை சிறிது நேரமே ஆனாலும், தொடர்புக்கொள்ள முடியாவிட்டால், ஏதேதோ எண்ணங்கள் தோன்றி, ஒருவித பய உணர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.

---

அலுவலக நண்பருக்கு கைக்குழந்தை இருக்கிறது. தினமும் ஆபிஸ் வந்தப்பிறகு, வீட்டில் இருக்கும் மனைவிக்கு போன் செய்து, குழந்தையை பற்றி விசாரிப்பார். ஒருநாள், இதுபோல் தொடர்புகொள்ள, அந்த பக்கம் போனை யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய, பலன் அதே.

இவருக்கு பல நினைவுகள். வேலையும் ஓடவில்லை. அச்சமயம் அக்கம்பக்கத்தில் இருக்கும் எவருடைய தொலைப்பேசி எண்ணும் இவரிடம் இல்லை. 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

அலுவலகம் வெளியே வந்து ஆட்டோ ஏறும் சமயத்தில், வீட்டில் இருந்து போன் வர, விசாரித்தால் ஏதோ சப்பை மேட்டர். கடுப்பாக இருந்தாலும், ஒரு வகையில் நிம்மதியுடன் சீட்டில் வந்து உட்கார்ந்தார்.

அன்று வீட்டுக்கு போவதற்கு முன்பே, சுற்றத்தார் தொலைப்பேசி எண்களை வாங்கி வைத்துக்கொண்டார்.

---

இன்னொரு நண்பரின் அத்தான், ஒரு வேண்டுதலுக்காக திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அவர் அச்சமயம் உடல்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கிறார். இவர் சென்ற மறுநாள் அவருடைய மனைவி இவருக்கு போன் செய்ய, போன் நாட் ரீச்சபுல். தொடர்ந்து போன் செய்து, செய்து சலித்துவிட்டார்கள். இது மறுநாளும் தொடர்ந்தது.

பெண்ணின் அப்பா, அம்மா என்று அனைவரும் அவருடைய வீட்டில் குவிந்துவிட்டார்கள். இங்கே என் நண்பருக்கும் டென்ஷன். எந்த பக்கம் இருந்து போன் போட்டாலும், ஒரே பதில். நாட் ரீச்சபுல். மேலும், ஒருநாள் கடந்தது.

என்ன செய்ய? ஹெலிகாப்டரை எடுத்து சென்று, பறந்துக்கொண்டே தேடவா முடியும்?

சும்மா அமைதியாக, நிம்மதியாகவும் இருக்க முடியாது. இதற்காக எதுவாவது செய்யவும் முடியாது.

பிறகுதான் தெரிந்தது, மொபைலில் ப்ராப்ளம். நாலு நாள் கழித்து, தரிசனம் முடித்து வீடு வந்தவருக்கு, ‘ஏன் போன் செய்யவில்லை?’ என்று வீட்டில் செம தரிசனம்.

---

நானும் சில சமயம் யாருக்காவது காத்திருக்கும் போது, இதுபோல் உணர்ந்திருக்கிறேன். வருபவர் வண்டியில் வந்துக்கொண்டிருப்பாராக இருக்கும். ”கொஞ்சம் எடுத்து பேசினால் தான் என்ன?” என்று காக்க வைப்பவர் மேல் கோபம் வரும்.

அதே சமயம், இதே கோபத்தை நானும் தெரிந்தே கிளப்பி இருக்கிறேன். நான் வண்டி ஓட்டும் போது, பெரும்பாலும் செல்போன் அடிப்பது கேட்காது. அப்படி கேட்டாலும், சமயங்களில், ‘இந்த நேரத்தில் இது வேறயா?’ என்று விட்டுவிடுவேன். ‘போய் சமாளித்துக்கொள்ளலாம்’ என்று சுய சமாதானத்துடன்.

வர வர, இதன் பாதிப்பின் தீவிரம் அதிகமாக, இந்த ‘பயணத்தின் போது செல்போன் எடுக்கக்கூடாது’ என்ற நல்ல பழக்கம், கெட்ட பழக்கமாகி வருகிறது.

---

நான் இன்றைக்கு இதைப் பற்றி எழுதினாலும், இந்த போன் உளவியல் பிரச்சினையை சிம்பு, தனது ப்ளாப் படமான ‘வல்லவனில்’ காட்டிவிட்டார்.

படத்தின் வில்லி ரீமா, சிம்புக்கு ஒரு போன் செய்வார். சிம்பு எடுக்கமாட்டார். ரீமா விடவே மாட்டார். தூங்காமல் காலை வரை போன் செய்வார். (சே! இந்த படம் பார்த்ததை மறக்க நெனச்சாலும் முடியலியே?)

இந்தளவுக்கு இல்லையென்றாலும், நம்மில் பெரும்பாலோர் ஒருகால் மிஸ்ஸாகி விட்டால், தொடர்ந்து 10-20 மிஸ்ட் கால்கள் தொடுப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். நொட் திஸ் பாயிண்ட். படத்தில் ரீமா இந்த காட்சியின் மூலமாக சைக்கோவாக சித்தரிக்கப்பட்டிருந்தார்.

---

இதற்கு என்ன செய்வது? செய்ய முடியும்? செல்போன் தரும் உபயோக பலனுடன் இந்த உபத்திரவத்தையும் சேர்த்து அனுபவிக்க வேண்டுமா?

மனரீதியாக சரி செய்து கொள்வது ஒரு வழி. செல்போனுக்கு அடிமையாவதை குறைக்க வேண்டும். எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பைத் தவிர்க்க வேண்டும். அப்படியே அதிகம் பேசினாலும், இம்மாதிரி சமயங்களில் செல்போன் இல்லாத காலத்தை நினைத்துக்கொள்ள வேண்டும். பொறுமை வேண்டும். தொடர்புக்கொள்ள வேறு வழியே இல்லாத போது, பொறுமை ரொம்ப அவசியம்.

---

இன்று சில நண்பர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தது. மற்ற நண்பர்களுக்காக, பதிவாக.

.

Sunday, April 4, 2010

இந்திய பணக்காரர்களின் பர்ஸை திறப்பது எப்படி?

இந்தியாவின் பெஸ்ட் செல்லர், சேத்தன் பகத், இன்றைய (04-04-2010) டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்திய பணக்காரர்களிடம் இருந்து பணத்தை உருவுவது எப்படி? என்று. ஷங்கர் படத்தில் வருவது போல், இதுவும் அறிவுபூர்வமாக இல்லாவிட்டாலும், படிக்க ஜாலியாக இருந்தது. அது இங்கே தமிழில்...

---

சமீபத்தில் நடந்த ஐபிஎல் அணி ஏலத்தில், இரு புது அணிகளை அடுத்த பத்து ஆண்டு கால உரிமைக்கு, ரூபாய் 1700 கோடிக்கு மேல் விற்ற ஐபில் தலைமை பாராட்டுக்குரியது. மூன்றே ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கை வர்த்தகத்தை உண்டாக்கியதற்கு மட்டுமல்லாமல், வாங்கியவர்களால் திரும்ப சம்பாதிக்கவே முடியாத பெரும் தொகைக்கு விற்றதற்கு!

என்னத்தான் இணையத்தில் விதவிதமாக கணக்கு போட்டாலும், இந்த அணிகளை வாங்கியவர்கள், ஒரு சீசனுக்கு கிட்டத்தட்ட 170 கோடி கொடுக்க வேண்டும். இது தவிர, வீரர்கள் சம்பளம், நிர்வாக செலவு இத்யாதிகளுக்காக மேலும் 45 சி கொடுக்க வேண்டும். அதனால், இவர்கள் லாபம் பார்க்கவேண்டுமானால், வளரும் பண மதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், இந்த அணியை வாங்கியவர்கள் ஒரு சீசனில் 215 கோடிக்கு மேல் ஐபிஎல் மூலம் வருமானம் பார்க்க வேண்டும்.

ஆனால், இதுவரை ஒரு அணி உரிமையாளரால், அதிகபட்சம் 110 கோடிக்கு மேல், சம்பாதிக்க முடிந்ததில்லை. அதனால், இந்த புது அணிகளை வாங்கியவர்கள், வாங்குவதற்கு ரொம்ப ‘ஓவராக’ கொடுத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க எந்த வணிகவியல் நிபுணரும் தேவையில்லை. குழந்தையும் சொல்லிவிடும்.



அணிகளின் மூலம் சம்பாதிக்க வேறு வழிகளும் இருக்கின்றன என்பதை ஒத்துக்கொண்டாலும், அதை தடுப்பதற்கு சில தடைக்கற்களும் உருவாகி இருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வணிகம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை சார்ந்தது. எளிதில் கணிக்க இயலாதது. மேலும் புது புது அணிகளை சேர்ப்பது, பார்வையாளர்களிடையே ஆர்வத்தை குறைக்கக்கூடும். ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஐபிஎல் கிரிக்கெட்டை பார்ப்பவர்களை விட, அதைவிட குறைந்த செலவில் தயாரிக்கப்படும் வேறு சில தொலைக்காட்சி தொடர்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் என தெரியவந்துள்ளது.

இருந்தும், இந்தியாவின் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்யங்கள், பணத்தை இதில் கொட்ட ஆர்வமாக இருக்கிறார்கள். சாதாரணமாக நமக்கே தெரியும் கணக்குகள், அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? அவர்களிடம் இல்லாத நிபுணர்களா? தெரிந்தும் எப்படி இதற்கு செலவழிக்கிறார்கள்?

இது வெறும் லாப நோக்கத்தை சார்ந்தது அல்ல. அதையும் தாண்டி, வேறு சில விஷயங்கள் இருக்கிறது. உடனடி புகழ் வெளிச்சம். இதை அவ்வளவு சுலபமாக வாங்கிவிட முடியாது. உங்களிடம் கோடி கோடியாக பணம், வங்கி கணக்கில் கொட்டிக்கிடக்கலாம். அதற்காக, உங்களால் பாலிவுட் பெரும் தலைகளுடன், கவர்ச்சி கன்னிகளுடன் உட்கார்ந்துக்கொண்டு கிரிக்கெட் பார்க்க முடியுமா? ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும் போது, ஆஸ்திரேலியா முன்னணி வீரர்களுடன் கைக்குலுக்கிக்கொள்ள முடியுமா? விளையாட்டிற்கு பிறகான பார்ட்டியில், சியர்லீடர்ஸ்களுடன் சியர் சொல்லிக்கொள்ள முடியுமா? இதை எல்லாவற்றையும் விட, இதையெல்லாம் நீங்கள் அனுபவிப்பதை உலகமே பார்க்கும் சந்தர்ப்பத்தைத்தான் உங்களால் ஏற்படுத்த கொள்ள முடியுமா?



இவை எதுவும் இல்லாமல், உங்களிடம் எண்ணெய் கிணறு இருந்தால் என்ன? விமானங்கள் இருந்தால் என்ன? கடுப்பை கிளப்பும் முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் லாபம் சம்பாதித்துக்கொடுப்பது மட்டுமா உங்கள் வேலை? பாஸு, உங்ககிட்ட பணம் இருக்குது. அது இருக்கு’ன்னு உலகத்துக்கு காட்ட வேண்டாமா? ’எரிவாயு நிறுவனம்’ வைத்திருக்கிறேன் என்று சொல்வதை விட, ‘கொச்சி குளுமை’யை வைத்திருக்கிறேன் என்று சொல்வதற்காக, ஆண்டுக்கு 100 கோடி செலவழித்தால் தான் என்ன?

அது தான் உண்மை. ஒரு ஐபிஎல் அணியை வாங்குவதின் மூலம், இன்ஸ்டண்ட் புகழ், கவர்ச்சி, இளமை, துடிப்பு இவையனைத்தையும் வாங்குகிறீர்கள். வாழ்வை தாண்டிய இமேஜை கிடைக்க பெறுகிறீர்கள். இதற்காக, வேறெந்த வரமோ, திறமையோ தேவையில்லை. பணம். அது ஒன்றே போதும்.

ஐபிஎல் மூலம் வேறு சில வணிக பாடங்கள் கிடைத்தாலும், எனக்கு இந்திய பணக்காரர்களிடம் இருந்து பணம் பெறுவது குறித்த புரிதல் கிடைக்கிறது. மேல்நாட்டினர் போலில்லாமல், இந்திய செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தில் மிக குறைந்த சதவிகிதத்தையே பொது சேவைக்கு அளிக்கிறார்கள். இது அவர்களது சொந்த ஆர்வத்தை பொறுத்ததாக இருக்கலாம். நிறைய தன்னார்வ அமைப்புகள், இவர்களிடம் இருந்து மிக சிரமப்பட்டே உதவி பெறுகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு செலவிடுவதின் மூலம், எவ்வித லாபமும் நிறுவனங்களுக்கு ஏற்பட போவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனால், இதே போல், லாபம் ஈட்டி தராத கிரிக்கெட் அணிகளுக்கோ, மகிழ்ச்சியுடன் தங்கள் பர்ஸில் இருந்து பெரும் தொகையை எடுத்துக்கொடுக்கிறார்கள். லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுடைய கௌரவத்தை கட்டி காத்தால் போதுமானதாக இருக்கிறது.



இப்படி இவர்களுடைய இமேஜை மேம்படுத்தி காட்டுவதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. இது போல, நம்மிடம் இதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது. இவர்களுடைய பெயர்களை பாலத்திற்கு வைக்கலாம், ரோட்டிற்கு வைக்கலாம், ரயிலுக்கு வைக்கலாம், ரயில்வே ஸ்டேஷனுக்கு வைக்கலாம். (சுடுகாட்டுக்கு கூட வைக்கலாம்.) இதற்கான ஏலத்தை நடத்தி, இவர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஒரு அழுத்தமான போட்டியை உருவாக்கிவிட்டால் போதும். அடுத்த நாள் பேப்பரில் பெயர் வருவதற்காக, ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு ஏலத்தில் ஜெயிக்க முயலுவார்கள். இப்படி வரும் பணம், சில நல்ல காரியங்களுக்காக பயன்படுமானால், இதில் என்ன தவறு?

இன்னும் பெரும் பணத்தை பெற, அரசு இவர்கள் பெயரை சிறிது காலத்திற்கு நாணயத்திலோ, ரூபாய் நோட்டிலோ போடலாம். சில அரசு கல்லூரிகளுக்கும் இவர்கள் பெயரை வைக்கலாம். பணத்திற்காக மட்டுமில்லாமல், தங்கள் பெயரில் இருக்கும் கல்லூரியின் தரத்தை உயர்த்த இவர்கள் முயலுவார்கள் என்பதற்காகவும். பின் தங்கள் பெயரில் இருக்கும் கல்லூரி, மோசமான கல்வி அளிப்பதை யார் தான் விரும்புவார்கள்?

குறைந்த அதிகாரம் படைத்த 'டம்மி’ பதவிகளை உருவாக்கி, அதையும் ’லம்ப்’பாக விற்கலாம். ’இரண்டாம் துணை ஜனாதிபதி’ என்பது போல ஒரு பெயர், இவர்களுக்கு ‘உர பாக்டரி அதிபர்’ என்ற பெயரை விட பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

இந்த ஐடியாக்கள் கேனத்தனமாக தெரிந்தாலும், சொல்ல வருவது புரிந்திருக்கும். ஈகோ என்பது ஒரு மனிதனுக்குள் இருக்கும் மிருகம். அவன்/அவள் எதை சாதித்திருந்தாலும், இந்த மிருகத்திற்கு தீனி தேவை. அதை சரியாக குறி வைத்து அடித்து, அணியின் மதிப்பை விட பல மடங்கு விலைக்கு விற்றதற்காகவும், அப்படி வாங்கியவர்களையும் மகிழ்ச்சியோடு சிரிப்புடன் வைத்திருப்பதற்காகவும், மோடியும் ஐபிஎல் தலைமை குழுவில் மற்றவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். இது போல், மற்ற அமைப்புகளும், அரசும், ’பெத்த பேர்’களை பெரும் தொகைக்கு விற்று, வேறு நல்ல காரியங்களுக்கு அதை பயன்படுத்த முன் வர வேண்டும்.

அதே சமயம், உங்களிடம் 1700 கோடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வருந்தாமல் உங்களுடைய ராசிக்கு நன்றி சொல்லுங்கள். பணம் அதிகம் இருந்தாலும் சமயங்களில் நல்லதிற்கல்ல. அது முட்டாள்தனமான காரியங்களை செய்ய தூண்டும். அதற்கு பதில், குதிக்கும் சியர்லீடர்ஸை டிவியில் பார்ப்பது பெட்டர்.

.

Wednesday, March 3, 2010

நித்தி அடைந்த ஆனந்தம்

போன ஞாயிறு, ஓசூரில் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் இருக்கும் ஒரு ஓட்டலில் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். மணி ஏழு- ஏழரை இருக்கும். ஓட்டலின் கல்லா டேபிளுக்கு எதிரே ஒரு பெரிய நித்தியானந்தா புகைப்படம் ஒரு சின்ன டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது.

கடையின் முதலாளியா? யாரென்று தெரியவில்லை. போட்டோவுக்கு மாலைப்போட்டு, ரொம்ப பயபக்தியுடன் சாம்பிராணி போட்டு பூஜை செய்தார். அவருடன் இருந்தவர்களும் தொட்டு கும்பிட்டு சென்றார்கள்.

இன்னமும் அந்த போட்டோ இருக்கிறதா, பூஜை நடக்கிறதா என்று தெரியவில்லை.

(அந்த போட்டோவை எடுத்துவிட்டதாக, நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர, ஓசுரில் நண்பர் வீட்டில் இரண்டு நாட்கள் கேபிள் தெரியவில்லையாம். கேபிள் ஆபரேட்டரும் நித்தியானந்தாவின் பக்தராம்!)

---

என்னுடன் படித்த நண்பன் ஒருவன் அடிக்கடி போன் செய்து நித்தியானந்தா ஆசிரமத்திற்கு கூப்பிடுவான். சும்மா இருந்தா வாடாவென்பான். ஸ்ட்ரெஸ் குறைச்சிக்கலாம் என்பான்.

சும்மா இருந்தாலும் போகாமல் இருந்ததற்கு காரணம் - 750, 1000 ரூபாய் என்று பீஸ் கேட்பார்கள். இல்லாவிட்டால், போய் என்னத்தான் சொல்கிறார்கள் என்று பார்த்திருப்பேன். ஸ்ட்ரெஸ் குறைக்கலாம் என்பதற்கு அப்படி ஒன்று என்னிடம் இல்லை என்பேன். இல்ல, நீ என் கூட வா. நம்ம பசங்கள பார்க்கலாம். ஏதாச்சும் படம் பார்க்கலாம். உனக்கு ஸ்ட்ரெஸ் இருந்தா குறையும் என்பேன். நல்ல நண்பர்களுடன் பேசுவதை விட வேறு எதில் ஸ்ட்ரெஸ் குறைந்துவிட போகிறது?

ஒரு கட்டத்திற்கு மேல் அழைப்பதை நிறுத்திவிட்டான். இன்று அவனுக்கு போன் செய்யவே எனக்கு தயக்கமாக இருக்கிறது. பாவம்! ரொம்ப நொந்துப்போய் இருப்பான்.

ஒருவேளை, அந்த களவாணிப்பயல் பண்ணினதுக்கு எனக்கென்ன? என்று சாரு மாதிரி கேட்டாலும் கேட்பான்.

---

சன் டிவியில் எனக்கு பிடித்த விஷயம் - படங்களில் அவர்கள் செய்யும் சென்ஸார். அவர்கள் போடும் தமிழ்ப்படங்களில் முத்தக்காட்சியோ, விவகாரமான காட்சியோ இருந்தால் கட் செய்துவிடுவார்கள். குடும்பத்துடன் பார்க்கும்போது சங்கடங்கள் நேராது.

உதாரணத்திற்கு, சன் டிவியில் காதல் கொண்டேன் படம் போட்டால் தைரியமாக பார்க்கலாம். தேவதையை கண்டேன் பாடல் காட்சியை போடும்போது கூட, அதிலிருக்கும் முத்தக்காட்சி இருக்காது. விவகாரமான காட்சி என்று இல்லை. அவர்களுக்கு பிடிக்காத எதையும் கட் செய்துவிடுவார்கள்.

சரவணா படத்தில் ஒரு காட்சியில் ‘டாக்டர் ராமதாஸ்கிட்ட சொல்லிடுவேன்’ என்பார் சிம்பு. அதைக்கூட கட் செய்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் நித்தியானந்தா விஷயத்தில் இறங்கி அடித்திருக்கிறார்கள். பார்க்க முடிகிற விஷயங்களை மட்டும் தான் போடுகிறோம் என்று ஒரு டிஸ்கி வேறு. என்ன நியூஸ் சொல்கிறார்கள் என்பதை ஹாலில் உட்கார்ந்து டிவியில் கேட்கமுடியாத அளவுக்கு காட்சிகள்.

---

சன் டிவியில் நேற்று இரவு என்றால், இன்று இந்தியா முழுக்க.

பெங்களூரில் சலூன், மெடிக்கல் ஷாப், ஹோட்டல் என்று எல்லா இடங்களில் உள்ள டிவிக்களிலும் நியூஸ் சேனல்கள் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாவற்றிலும், நித்தி-ரஞ்சி சல்சா.

பப்ளிக்கா எல்லா இடங்களிலும், படுக்கையறை காட்சியை போட்டுக்கொண்டு இருந்தது அசிங்கம்.

---

நித்தியானந்தாவின் பேமஸ் கட்டுரை தலைப்பை, இன்று பதிவர்கள் பதிவு தலைப்பாக பயன்படுத்தியிருந்தது செம காமெடி.

கதவை திற! ரஞ்சிதா வரட்டும்!
கதவைத் திற காமிரா உள்ளே வரட்டும்
கதவைத் திற கட்டழகி வரட்டும்
கதவைத் திற காமிரா வரும்

---

நித்தியாந்தாவின் கட்டுரைகளை போட்டு கல்லா கட்டிய குமுதம் இப்போது என்ன செய்கிறது?

இதோ!



இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

.

Wednesday, December 30, 2009

விஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை

என் சிறு வயதில் அண்ணனுடன் திரையரங்கில் செகண்ட் ரிலீஸில் ‘விடுதலை’ படம் பார்த்தேன். ரஜினி சிவாஜியுடன் செய்யும் குறும்புத்தனங்களுக்காக எனக்கு பிடித்த படம். ரஜினியுடன் நடித்த ஹீரோ யாரென்று அண்ணனிடம் கேட்டபோது, விஷ்ணு’ன்னு ஒருத்தன் என என் காதில் விழுந்தது. கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் என்பது உபத்தகவல். ரஜினி, சிரஞ்சிவி, மம்மூட்டி என்ற சூப்பர் ஸ்டார் லிஸ்டில் இவரை சேர்த்துக்கொண்டேன்.



எப்ப இவரை பற்றி பேசும் போதும், எதற்கு அண்ணன் ”விஷ்ணு’ன்னு ஒருத்தன்” என்றே சொல்கிறார்? என்பது ஒரு கேள்வியாகவே இருந்தது. அண்ணன் மட்டுமல்ல, எல்லோருமே அப்படித்தான் சொன்னார்கள். ரொம்ப நாள் கழித்து தான், அவருடைய பெயர் ”விஷ்ணுவர்தன்” என்று தெரிந்தது. அது என் காதில் விஷ்ணு’ன்னு ஒருத்தன் என விழுந்திருக்கிறது.

இன்று காலை, விஷ்ணுவர்த்தன் என்கிற இந்த ஒருவர் இறந்த செய்தியைக் கேட்டப்போது, யாரோ ஒருவர் என்று தோணவில்லை. நம்பவும் முடியவில்லை.

அந்த படத்தில் ஆரம்பத்தில் ரஜினியின் ஜோடி மாதுரியை இவர் டாவடித்ததால், எனக்கு இவரை அப்போது பிடிக்கவில்லை. கடைசியில், பேபி ஷாலினியுடன் தனியாகவே சென்று விட்டதால், சமாதானமானேன். இவரை எப்போது பார்க்கும்போதும், பரிதாபமாக இருக்கும். இந்த படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆனதாலும், டிவியில் எதிலும் போடாததாலும், ரொம்பவும் தேடி, டிவிடி வாங்கி வைத்துள்ளேன். கடைசியில் போராக இருக்கும். இருந்தாலும், இன்னோரு முறை பார்க்க வேண்டும்.

---

சந்திரமுகியின் கன்னட ஒரிஜினலான ஆப்தமித்ரா வெளியான சமயம், அதன் ஹீரோயின் சௌந்தர்யா மரணமடைந்தார். தற்போது, அதன் இரண்டாம் பாகம் எடுத்துவருகிறார்கள். ஹீரோ இறந்துவிட்டார்.

---

கன்னட ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ராஜ்குமார் இறந்தபோது நடந்தது போல், இன்றும் ரகளை, கலாட்டாக்கள் நடந்துள்ளது. பல அலுவலகங்களில், மதியமே வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள். நிறைய கடைகள் பூட்டி கிடந்தன. பஸ், கார், வேன்களில் விஷ்ணுவர்தன் படம் தற்காப்பிற்காக ஒட்டப்பட்டிருந்தது. ப்ளேக்ஸ் போர்டுகளில் சிரித்த முகத்துடன் இருந்தவருக்கு மாலை போட்டு அனுதாபம் தெரிவித்திருந்தனர்.

---

கன்னட சேனல்கள் அனைத்திலும் விஷ்ணுவர்தன் தான். மியூசிக் சேனல்களில் அவருடைய பாடல்களும், மூவி சேனல்களில் அவருடைய படங்களும் ஓடிக்கொண்டிருந்தது. உதயாவில் கன்னட ரமணா ஒடிக்கொண்டிருந்தது. நியூஸ் சேனல்களிலும் முழுக்க அவரை பற்றிய செய்திகளே. பிரபலங்கள் அவரை பற்றி கருத்து சொன்னார்கள். ரஜினி உருக்கமாக பேசினார். அவருடைய உடலுக்கு பக்கத்தில் அம்பரிஷ், அர்ஜுன், சுஹாசினி போன்றோர் அழுதுக்கொண்டு இருந்தார்கள்.

---

நடிகர்கள் தான் எவ்வளவு நெருக்கமாக மக்களுடன் கலந்துவிடுகிறார்கள். இது எல்லோருக்கும் அமைவது இல்லை. ஒரு சிலருக்கே.

முன்பின் சந்தித்திருக்காதபோதும், நடிகர்கள் திருமணத்தின் போது, தங்கள் வீட்டு திருமணம் போன்றே மகிழ்வதும், அவர்கள் இறப்பின் போது உணர்ச்சிவயப்பட்டு அழுவதும், வேறெந்த துறையினருக்கும் கிடைப்பதில்லை. தினம் தினம் அல்லது அடிக்கடி பார்ப்பதால், தங்களுக்கு பிடித்தவராக இருப்பதால், இனி அவர்களுடைய படைப்பு இல்லை எனும் நிலை ஏற்படும்போது, அவர்களின் இழப்பு கஷ்டமானதாக ஆகிறது.

ஒரு கலைஞனிடம் அவனுடைய படைப்பை மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகனுக்கே இப்படியென்றால், அவன் குடும்பத்தினருக்கு?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

.

Sunday, December 20, 2009

கசாப் என்னும் அப்பாவி

மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்ட கசாப், பலமுறை மாற்றி மாற்றி பேசியிருக்கிறான். அவனுடைய தற்போதைய வாக்குமூலம், இந்தியர்கள் அனைவரையும் கிறுக்கர்களாக்கியிருக்கிறது. தான் இந்தியா வந்தது சினிமாவில் நடிக்கத்தான் என்றும், சும்மா சுற்றிக்கொண்டு இருந்தவனை போலீஸ் தவறாக கைது செய்தது என்றும் கூறியிருக்கிறான்.

அவன் மேலும் கூறியவை,

- இந்த கேஸே ஜோடிக்கப்பட்டது.
- பாகிஸ்தானில் இருந்து முறையான விசாவில் வந்தேன்.
- படத்துக்கு போகலாம் என்று சுற்றிக்கொண்டு இருந்தவனை, பாகிஸ்தானி என்பதால் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்.
- தன்னை போல் இருக்கும் அபு அலிகத் எனும் தீவிரவாதியின் குற்றங்களை தன் மேல் சுமத்தியிருக்கிறார்கள்.
- வீடியோவில் வருவதும் அபு அலிகத் தான்.

இவ்வாறு அமைதியாக, தெளிவாக கூறியிருக்கிறான். இப்படியெல்லாம் பேச இவனுக்கு யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? இல்லை, தானாகவே இப்படி பேச கற்றுக்கொள்ளும் சூழல் இவனுக்கு அமைந்திருக்கிறதா? இவனுக்கும் ஆதரவாக பேச, ஒரு இந்திய வழக்கறிஞர் இருப்பது, இந்திய ஜனநாயகத்தின் பலமா, பலவீனமா?



“தீவிரவாதிகளுக்கும் போலீஸுக்கு துப்பாக்கி சண்டை நடந்திருக்கலாம். ஆனா, நான் அவன் இல்லை.” என்று கூலாக சொல்லுகிறான். ”ரயில் நிலையத்தில், மூன்று காவலர்களை நீ சுட்டு கொன்றிருக்கிறாய் என உன்மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்ற சொன்னதற்கு, “நானா?” என்று பதில் கேள்வி சாதாரணமாக எழுப்புகிறான்.

ஏ.கே.47 பற்றி கேட்டதற்கு, “நான் இதுவரை அதை தொட்டதேயில்லை.” என்றவன், நல்லவேளை பார்த்ததேயில்லை என்று சொல்லவில்லை. அதற்கு பதில், இப்படி சொல்லியிருக்கிறான். “போலீஸ் வைத்திருந்ததை பார்த்திருக்கிறேன்.” என்று. நல்லவன் தான். பரவாயில்லை. தாக்குதல் நடத்தியதே போலீஸ் தான் என்று சொல்லவில்லையே?

இதன் மூலம் இதுவரை விசாரிக்கப்பட்ட, சம்பவத்தை நேரில் கண்ட 610 சாட்சியங்களை பொய் என்றிருக்கிறான். இவர்கள் அனைவரும் கிரைம் பிராஞ்ச் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்பது இவன் கூற்று. “என் போட்டோ தான் உலகம் முழுக்க காமிச்சாங்களே! அத இவுங்ககிட்ட காமிச்சு, எனக்கு எதிரா சாட்சி செய்ய சொல்லிட்டாங்க.”

நீதிபதி அவனிடம் “டேய் கண்ணா! நீயே தானே ஆறு மாசம் முன்னாடி குற்றத்தை ஒப்புக்கொண்டு, சிசிடிவில வந்தது நான் தான்’ன்னு சொன்ன?” என்று நினைவுப்படுத்தியதற்கு, “அப்ப போலீஸுக்கு பயந்து பொய் சொன்னேன். “ என்று உச்சக்கட்ட பல்டி அடித்திருக்கிறான்.

படிக்கும்போது ஜோக் போல இருந்தாலும், இது எல்லாமே நம் நாட்டு நீதிமன்றத்தில் ஒரு கடுமையான தாக்குதலை நடத்திய தீவிரவாதியால் சொல்லப்படும் உண்மையான வாக்குமூலங்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிக்களுக்கோ, இல்லை சர்வதேச உலகத்திற்கோ, இந்தியாவின் நீதித்துறையும், விசாரணை முறைகளும் எவ்வளவு பலவீனமாக தெரியும்? மக்களை, குழந்தைகளை கருணையேயில்லாமல் சுட்டு தள்ளிக்கொண்டு இருந்தவனை கைது செய்து விசாரிக்கும் முறையா?

இப்படித்தான் கொஞ்ச நாட்கள் முன்பு, அவன் மட்டன் பிரியாணி கேட்டு, கொடுத்த தட்டுகளை தூக்கியெறிந்தாக, சிறைத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் வந்து நீதிபதியிடம் புலம்பினார்கள். நீதிபதியும் அவனிடம் அப்படியா? என்று கேட்டதற்கு, அவனும் தைரியமாக ஆமாம் என்று சொல்லியிருக்கிறான். உலகத்திலேயே ஒரு தீவிரவாதியின் அசைவ உணவை பற்றி வழக்கு மன்றத்தில் விசாரிக்கும் நாடு, நமது நாடாகத்தான் இருக்கும்.

நாட்டில் இருக்கும் ஒரு சராசரி பிரஜைக்கும் உண்மை தெரிந்திருக்கும் நிலையில், ஏன் நமது விசாரணை முறைகள் இப்படி பலவீனமானதாகவும், நேர விரயமாக்குவதாகவும் இருக்கிறது? ’ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது’ என்னும் சிந்தாந்தம் தவறு என்று சொல்லவில்லை. ’ஒரு குற்றவாளியும் தப்பிக்கக்கூடாது. ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது’ எனும் நிலை சாத்தியமில்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்பதே குற்றங்களை சகஜமாக்குகிறதே?

மதுரையில் அத்தனை பேர் கண் முன்னால் நிகழ்த்தப்பட்டு, உலகத்திற்கே டிவியிலும் போட்டுக்காட்டப்பட்ட தினகரன் அலுவலக வன்முறை வெறியாட்டங்கள், ஏதோ அனைவரும் தூக்கத்தில் கண்ட கனவு போல், விசாரணையில் சாட்சியங்கள் பல்டியடித்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கோ, நடத்தும் வழக்கறிஞர்களுக்கோ அல்லது கவனிக்கும் மக்களுக்கோ, இவையெல்லாம் கேஸ்கள். அவ்வளவே. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், வழக்குக்கள் தங்கள் வாழ்வில் இழப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள். அவர்களை திருப்திப்படுத்தாத தீர்ப்புக்கள் எவையும், நியாயமான தீர்ப்புக்கள் அல்ல.

ஒருவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர் தானா என்று உறுதிசெய்துக்கொண்ட பிறகு, அவர் நீதிபதிக்கு இணையான இடத்தில் வைக்கப்பட வேண்டும். வழக்கின் திசையையும், நீதிபதியின் தீர்ப்பையையும் பரிசீலனை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறான மாற்றங்களும், புரட்சிகளும் நீதித்துறையில் ஏற்படாத வரை, வழக்குகள் வெறும் வழக்கமானதாக மட்டுமே இருக்கும்.

.

Wednesday, October 14, 2009

திருவண்ணாமலை அன்னதான போர்ஜரி

திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு அறக்கட்டளை. ஏதோ அன்னதான அறக்கட்டளை என்று வரும். சரியாக தெரியவில்லை. வேறு ஏதும் நல்ல அறக்கட்டளையை தவறாக சொல்லிவிடக்கூடாது. அதனால், திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு அறக்கட்டளை என்று எடுத்துக்கொள்ளவும்.

இவர்கள் மாதம் தோறும் கடிதம் அனுப்புவார்கள். எப்படி அட்ரஸ் பிடிப்பார்களோ தெரியவில்லை. அன்னதானம் நடத்துகிறோம் அல்லது குரு பெயர்ச்சி பூஜை நடத்துக்கிறோம். உங்களால் முடிந்த அமௌண்ட்டை அனுப்பவும் என்று. கடவுள் பக்தியால் சிலரும், ஏதோ நல்ல காரியம் என்று சிலரும் யோசிக்காமல் தங்களால் முடிந்த பணத்தை அனுப்புவார்கள். எனக்கு தெரிந்த சிலரும் அனுப்பி இருக்கிறார்கள். பணம் அனுப்பியவர்களுக்கு ருத்திராட்சை, கருப்பு கயிறு, விபூதி, குங்குமம், செப்பு தகடு இப்படி ஏதாவது வரும். சமயத்தில் அன்னதான புகைப்படங்கள் வரும். மறக்காமல், சில நாட்கள் கழித்து, திரும்பவும் பணம் அனுப்ப சொல்லி கடிதம் வரும். பலரும் இது கோயிலுக்கு தொடர்புடையவர்களிடம் இருந்து வருவதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.



சமீபத்தில் திருவண்ணாமலை சென்று இருந்தேன். ஒரு கடைக்காரரிடம் ஒருவர் பேச்சு கொடுத்தப்போது, இது பற்றிய டாபிக் வந்தது.

“ஏங்க, இங்க கோயில் அன்னதான அறக்கட்டளை எங்கே இருக்கிறது?”

”அது ஒரு போர்ஜரிங்க”

கேட்டவர் ஷாக்கானார். நானும் ஆர்வமுடன் உரையாடலை கேட்க தொடங்கினேன்.

“போர்ஜரியா? பதிவு பண்ணின ட்ரஸ்ட் தானாங்க அது? கவர்மெண்ட் பதிவு எண் பார்த்தேனே?”

“நானும் கூடத்தான் ட்ரஸ்ட் ஆரம்பிப்பேன். தெருவுல சுத்திட்டு இருந்தவன், ட்ரஸ்ட் ஆரம்பிச்சு, இப்ப காருல பறக்குறான்.”

“இவ்ளோ சொல்றீங்க. போலிஸ் ஒண்ணும் பண்ணலீயா?”

“இப்ப வருற லெட்டர்ல அந்த அறக்கட்டளை பேரை பாருங்க. மாத்திருப்பாங்க.”

“மாட்டிக்கிட்டாங்களா? எப்படி?”

“நன்கொடை கொடுத்தவுங்க எல்லாம், கோயிலுக்கு பாஸ் கேட்க ஆரம்பிக்க, அப்பத்தான் கோவிலுக்கும், ஏமாந்து பாஸ் கேட்டவங்களுக்கும் விவரம் புரிஞ்சுது.”

“இப்ப என்ன பண்றான், அவன்?”

“வேற ட்ரஸ்ட் ஆரம்பிச்சுட்டான். தயவுசெய்து அதுக்கும் பணம் அனுப்பிடாதீங்க.”

“அன்னதானம் பண்ற போட்டோ எல்லாம் அனுப்புனாங்களே?”

“என்ன சார்? எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க. அப்படி போட்டோ அனுப்புறது பெரிய விஷயமா? உங்கக்கிட்ட மட்டுமா வாங்குனான்? இந்த மாதிரி தமிழ்நாடு முழுக்க, ஏன் உலகம் முழுக்கக் கூட அனுப்பியிருப்பான். எத்தனை கோடி அடிச்சானோ? ஏதாவது பண்ணனும்ன்னு நினைச்சா, நீங்க உங்க வீட்டுப்பக்கம் இருக்குற கஷ்டபடுற யாருக்காவது அஞ்சு கிலோ, பத்து கிலோ அரிசி வாங்கி கொடுங்க. கோவிலுக்குத்தான் பண்ணனும்’ன்னு நினைச்சா, நீங்களே நேரா வந்து 2000, 3000 நன்கொடை கொடுக்கலாம். அவுங்களும், உங்க முன்னாடியே அன்னதானம் போடுவாங்க. அதைவிட்டுட்டு விபூதி அனுப்புறான், குங்குமம் அனுப்புறான்’ன்னு பணம் அனுப்பாதீங்க. நான் கூடத்தான் அனுப்புவேன்.”

இது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரிந்தால், மேலும் விவரம் சொல்லலாம். தெரியாதவர்கள், உஷாராகவும்.

.

Friday, August 28, 2009

அன்றும்... இன்றும்...

மிருக வதை



அழகு



வாய்ப்பு



அதிகாரம்



பக்தி



மரண பயம்



.

Saturday, August 15, 2009

பன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்

கலைஞரிடம் நிருபர்கள்,

”பன்றி காய்ச்சலை தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்?”
கலைஞர் - ”பொது குழு கூடி முடிவெடுக்கும்.”
”தலைவா, இது கட்சி பிரச்சினையில்லை.”
கலைஞர் - ”அப்ப, அரசு உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும்.”

உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு,

நிருபர்கள் - ”என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?”
கலைஞர் - ”இது குறித்து முடிவெடுக்க, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.”

----

ஜெயலலிதா

“பன்றி காய்ச்சலுக்கு காரணம் - கருணாநிதியே!”

ஜோக்குக்கு சொல்லலீங்க... நிஜமாவே அவுங்க சொன்னது.

---

கம்யூனிஸ்டுகள்,

“மன்மோகன் சிங் அரசின் உலகமயமாக்க கொள்கையின் பின்விளைவுதான் இந்த பன்றி காய்ச்சல். இதற்கு முழு பொறுப்பும் ஏற்று காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும்.”

---

போன வார செய்தி...

பசியால் எந்த ஒரு இந்தியனும் பலியாக விட மாட்டோம். அதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ளது. - மன்மோகன் சிங் அறிவிப்பு.

இந்த வார செய்தி...

பன்றி காய்ச்சலால் 28 பேர் பலி.

---

டிவியில் எப்பொழுதும் கிரிக்கெட் ஸ்கோர் போடும் இடத்தில், இப்பொழுது பன்றி காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கையை போடுகிறார்கள். டிக்கெரிங் எப்பொழுதும் ஓடி கொண்டிருக்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள், பயங்காட்டியே சாகடித்து விடுவார்கள் போல் உள்ளது. ரொம்ப லைட்டாகவும் இருக்க வேண்டாம். அதற்காக ஒரேடியாக ஆட்டம் காண வைக்கவும் வேண்டாம்.

சரி... பன்றி காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யலாம்? போர்க்கால அடிப்படையில், உடம்ப எந்த நோயும் தாக்காம, கிண்ணுன்னு வச்சிருங்க. அதுக்கு, சில சுலபமான வழிகள் பிளஸ் டவுட்களும்...

1) முடிந்தவரை கை கழுவிக்கொண்டே இருங்க. சும்மா இருக்கும்போது, கையை கண்ணுல, மூக்குல, வாயில வச்சு தேய்க்காம, வேற வேலையை பாருங்க.
(டவுட்: கை கழுவி முடிஞ்ச பிறகு, அந்த டேப் மூடுற இடத்துல கிருமி இருந்திச்சினா?)

2) நல்லா தூங்குங்க. நைட் உக்கார்ந்து ப்ளாக் எழுதுறதோ, படிக்குறதோ கண்டிப்பா கூடாது.
(பன்றி காய்ச்சல் மட்டுமில்லாம, இன்னும் பல வியாதிகள் வராது)

3) நிறைய தண்ணி குடிங்க. இது எப்பவும் பண்ண வேண்டியது. அட்லீஸ்ட், இப்பவாவது பண்ணுங்க.
(தண்ணின்னா H2O!.)

4) இது எல்லாமே உடம்பு நல்லா எதிர்ப்பு சக்தியோடு இருக்குறதுக்காக. நல்லா சுகாதரமான, சத்தான சாப்பாடு சாப்பிடுங்க. சளி பிடிக்குற மாதிரியான ஐட்டங்களை தவிர்க்க பாருங்க.
(சுகாதாரமான உணவு என்றால் ஹோட்டல்'ல சாப்பிட கூடாதா? இது ரொம்ப கஷ்டம்)

5) இந்த சமயமாவது சரக்கடிக்காதீங்க.
(சரக்கடிக்கிறதால, உங்களுக்கு எல்லோரையும் எதிர்க்கிற சக்தி வரலாம். ஆனா, உடம்புல எதிர்ப்பு சக்தி குறையுமாம்.)

6) எக்ஸசைஸ் பண்ணுவீங்களா? இல்லாட்டி, வாரத்துக்கு மூணு-நாலு நாளு, அரை மணி நேரம் நடங்க.
(எங்க நடக்குறதா? ஆபிஸ் மாடிப்படில ஏறி இறங்குங்க. இல்லாட்டி, கேர்ள் ப்ரண்டோடு உக்கார்ந்து பேசிவீங்களே, அந்த பார்க்குல நடந்துக்கிட்டே பேசுங்க.)

7) யாராவது Hன்னா, S ஆயிடுங்க. ஒரே தட்டுல போட்டு சாப்பிடுற அளவுக்கு ப்ரண்டா இருந்தாலும், கொஞ்ச நாள் ரெண்டு தட்டுல சாப்பிடுங்க.

8) தியேட்டர், மால் எல்லாம் அவசியம் இருந்தா, குழந்தைகளை அழைச்சிட்டு போங்க. மொக்கையை வீட்டுல இருந்தே போடுங்க.
(நம்மூர் தியேட்டர் டாய்லட்டுக்குள்ள, சும்மாவே மாஸ்க் போட்டுட்டுதான் போக வேண்டி இருக்கும்.)

9) இதுவரை சொன்னது, டாக்டர்கள் பரிந்துரைத்தது. ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் என்ன சொல்றாருன்னா, கோளறு பதிகம் படிக்கணுமாம். அதிருத்ர யாகம் நடத்தணுமாம்.



---

இந்த சமயத்துல ஊருக்கு போனேன். நிறைய பேரு மாஸ்க் போட்டுட்டு போனாங்க. நானும் கர்ச்சிப் கட்டிட்டு பஸ்'ல ஏறினேன். கொஞ்சம் தயக்கமாதான் இருந்தது. வித்தியாசமா பார்ப்பாங்களே'ன்னு. பஸ்'ல ஏற்கனவே சில முகமூடிகள் இருந்தார்கள்.

நிஜமாவே முகமூடி கொள்ளையர்கள் வழியை மறிச்சா கூட, 'சும்மா காமெடி பண்ணாதீங்க'ன்னு சொல்லிட்டு போற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். மனிதர்களை விடுங்க, நாயே கண்டுக்காம போகுது. அது, தன் முன்னிரண்டு காலால் முகத்தை பொத்தாமல் போகும் வரை ஆச்சர்யமில்லை.

என் ப்ரெண்ட்,

"ரொம்ப பயமா இருக்குடா..."

"சாவு மேல அவ்ளோ பயமா?"

"சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல்'ன்ன பெருமையா செத்து போகலாம். பன்றி காய்ச்சல்'ங்கறதுதான் யோசிக்க வைக்குது."

கேலிக்காகவும், கேவலப்படுத்துவதற்காகவும் மனிதனால் பயன்படுத்த ஒரு விலங்கின் பெயர், இன்று எல்லோரையும் கதிகலங்க வைத்துவிட்டது என்பதென்னவோ உண்மைதான்.

.

Wednesday, August 12, 2009

எழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்

சிறுவயதில் இருந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அனைவருமே, கதைகளில் இருந்துதான் அந்த ஆர்வத்தை ஆரம்பித்து இருப்பார்கள். என்னுடையதும் அப்படித்தான். சிறுவர்மலர், அம்புலிமாமா, காமிக்ஸ் என்று தொடங்கி ராஜேஷ்குமார், சுபா, சுஜாதா என்று போனது. ஆனால், பிறகு கதை படிப்பதில் ஆர்வம் குறைந்தது. கதை படிப்பது பொழுது போக்க மட்டும் தான் என்ற எண்ணம் இதற்கு ஒரு காரணம். பொழுது போக்குவதற்கு படித்தாலும், ஏதாவது தெரியாதது தெரிந்து கொள்ளலாம் என்று அரசியல் வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்து கொண்டிருந்தேன்.

உண்மையில் கதைகள் மூலம் நாம் நிறைய மறைமுகமாக கற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து ஒரு எழுத்தாளரின் கதைகளை படிப்பதின் மூலம், அந்த எழுத்தாளரை சுற்றி இருந்த உலகத்தை, எழுதியவரின் கண்களால் நாம் காணலாம். அவரின் உள்ளே நுழைந்து அவருடைய எண்ணவோட்டத்தில் நாமும் நீந்தலாம். தொடர் வாசிப்பைப் பொறுத்து, அவராகக் கூட வாசகன் மாறலாம்.

என்னத்தான் கதைக்கென்று கரு, கதாபாத்திரம், முடிவென்று இருந்தாலும், கதை நடக்கும் சூழல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் பதிவாக இருக்கும். காலச்சூழலை தலைமுறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது கதைகள். ஒருவகை சமூக கல்வெட்டுக்கள் இவை. பக்தியே, மனிதனுக்கு கதைகள் மூலம் புகுத்தப்படுவது தானே?

கதைகள் எழுதுவதும், கதைகள் வாசிப்பதும் ஒரு தனிமனிதனின் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது அல்ல. சமூகரீதியாக தொடர்புள்ளது. கதைகளில் தான், இடங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, வழக்கங்களைப் பற்றிய குறிப்புகளுடன் எழுத்தோடு எழுத்தாக உணர்வுகளும் பின்னப்பட்டிருக்கிறது.

---

யார் எழுத்தாளன்? எழுதுபவன் எல்லோரும் எழுத்தாளன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அது எழுத்தாளர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையாகத்தான் இருக்கும்.

எழுத்தாளன், எழுதியதை விட அதிகம் வாசித்தவனாக இருப்பான்.

எழுத்தில் எந்த சமரசத்தை செய்து கொள்ளாதவனாக இருப்பான்.

எதிர்பார்ப்பு, எழுத்து சார்ந்தே இருக்கும்.

பேனா மையில் நேர்மை கலந்திருக்கும்.

எழுத்தும் வாழ்வும் ஒன்றாயிருக்கும்.

---

பதிவுலகத்தில் இன்னும் ஆர்வம் நீர்த்துவிடாமல் இருப்பதற்கு, தெரியாதவற்றை கற்றுக்கொடுக்கும் அமுதசுரபியாக வலையுலகம் தொடர்ந்து இருப்பதே காரணம். கோபிகிருஷ்ணன் என்றொரு முக்கியமான, அதிகம் கண்டுக்கொள்ளப்படாத எழுத்தாளரை தெரிந்து கொண்டதே ஜயோவ்ராம் சுந்தர் மற்றும் சிவராமன் பதிவுகளால் தான். இருவருக்கும் நன்றி.

---

டேபிள் டென்னிஸ், தூயோன், இடாகினிப் பேய்களும்... - இந்த மூன்று புத்தகங்களையும் வாசித்ததில் நான் உணர்ந்தவை மேலுள்ளவை. இதில் நான் செய்த தவறு, கோபிகிருஷ்ணனை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல், டேபிள் டென்னிஸ் வாசிக்க துவங்கியது. முழுவதும் முடித்தபிறகும், என்னுள் எதுவும் ஏறவில்லை. என் வாசிப்பு நிலை உணர மட்டுமே உதவியது.

இவையெல்லாம் பெயருக்குத்தான் கதைப்புத்தகங்கள். உண்மையில், இவை கோபிகிருஷ்ணனின் வாழ்க்கைப்பதிவுகள்.

---

கதை எழுதுவதற்கான ஆர்வத்தை மற்றவர்களிடம் தூண்டுவதற்கும், அதை மேம்படுத்த முயற்சி எடுப்பதற்கும், தெரியாத எழுத்தாளர்களை பற்றிய அறிமுகம் கொடுப்பதற்கும் (அட்லீஸ்ட் என் போன்றவர்களுக்கு), சிவராமன், சுந்தர் ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகள்.

.

Tuesday, August 11, 2009

கன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்

திரும்ப திரும்ப திருவள்ளுவர் சிலையைப் பற்றி எழுதவது போல் உள்ளது. இருந்தாலும் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

சிலை திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி தினகரன் கூறியது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

வழக்கு தொடர்ந்த கன்னட அமைப்பினர், அதை எதிர்க்க காரணமாக கூறியது - இடத்திற்கான அனுமதியையும், வீரப்பன் கோரிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும் என்பதையும்.

தீர்ப்புக்கு முன் நீதிபதி பேசிய வார்த்தைகள், ஒவ்வொன்றும் சவுக்கடி.

----

சிலையைத் திறப்பதற்கான அனுமதியை மாநகராட்சியும், அரசும் வழங்கிவிட்டதைத் தெரியாமல் மனுதாரர்களாகிய கன்னட சங்கத்தினர் பொதுநல வழக்குத் தொடர்ந்தது சரியல்ல. மாநகராட்சி நிலம் என்பது அரசு நிலம்தானே? நீங்கள் தவறான முறையில் வழக்கைத் தொடர்ந்துள்ளீர்கள்.

நீங்கள் திருவள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தீர்களா அல்லது ஒட்டு மொத்தமாக நகரில் சிலைகள் அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்தீர்களா? வழக்கை விட்டு வேறு பக்கம் போகாதீர்கள். நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?

நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இப்போது கர்நாடக தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறேன். கடந்த ஓராண்டாக கர்நாடகத்தில் வாழ்கிறேன். கன்னடராக வாழ்ந்து வருகிறேன். பெங்களூரில் நடக்கும் சிலை திறப்பு விழாவில், மனுதாரர்கள் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

குடகு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் முன்பு கோவை ஆ‌ட்‌சிய‌‌ரி‌ன் ஆளுகையின் கீழ் இருந்தன. காவிரி நீரை தரமாட்டேன் என்கிறீர்களே, காவிரியை கர்நாடக எல்லைக்குள்ளே கட்டுப்படுத்த முடியுமா? அது இயற்கையாகவே தமிழகம் நோக்கி பாயத்தானே செய்யும்? மொழியின் பெயரால் நாட்டை பிரிக்காதீர்கள்.

வீரப்பன் கோரிக்கை விடுத்ததாலேயே, ஒரு விஷயம் சட்டவிரோதம் ஆகிவிடுமா? திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். 50 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் கூறியதற்காக சிலை திறப்பை தவிர்க்க முடியாது. தமிழகத்துடன் ஆயிர‌ம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக திருவள்ளுவர் சிலை திறப்பை தடுப்பது நியாயமாகாது. பிரச்சனைகள் இருப்பதால் தமிழகத்துடன் போருக்கு போக முடியுமா? அப்படி போரிட்டால் என்னை எந்த அணியில் சேர்ப்பீர்கள்?

நமது நாடு மிகுந்த பலம் வாய்ந்த நாடாகும். கூட்டமைப்பின் கீழ் நாடு செயல்படுகிறது. இதனால் நாம் நம்மிடம் உள்ள கருத்துவேறுபாடுகளை மறக்க வேண்டும். நம் அனைவருக்குள்ளும் இந்தியன் என்ற மனப்பான்மை வளர வேண்டும். தமிழர், கன்னடர், மலையாளிகள் என்ற வேறுபாடு கூடாது.

மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. காவிரி, ஒகேனக்கல் பிரச்சினையுடன் இதை சம்பந்தப்படுத்த வேண்டாம். கர்நாடக எல்லைக்குள்ளேயே காவிரி நீரை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? அது இயற்கையுடன் ஒன்றுபட்டது. உங்களது முயற்சி இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது எளிது. ஆனால் தீயை அணைப்பது கஷ்டம். குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழி வகுப்பது எளிது. ஆனால் போராட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்.

கோர்ட்டில் மனு செய்வது சுலபம். ஆனால் இதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்களா?.

இதுபோன்ற வழக்குகளை கோர்ட்டுக்கு கொண்டு வந்து, பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த வழக்கில் எந்த ஓர் அவசரமும் இருப்பதாக தெரியவில்லை. இதை ஒரு பொது நலன் வழக்கு என்றுகூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும்போது வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதற்காக அவசரம் காட்டுகிறீர்கள். இது முக்கியமான பொதுநல வழக்கு என்று கூறுகிறீர்கள். ஆனால் மனுதாரர்களில் ஒருவர் கூட கோர்ட்டுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் இதை முக்கியமான வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அரசு விழா இல்லை என்பதுபோல நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து, விழாவில் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது இது எப்படி தனியார் நிகழ்ச்சியாக இருக்க முடியும்? அப்படியே இது அரசு விழா இல்லை என்று நீங்கள் கூறினால், அதையும் நீதிமன்றத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லது நீங்கள் தான் பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

முதலில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அழைப்பிதழை கொண்டு வாருங்கள். அதில் கர்நாடக அரசு சின்னம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம். அது அரசு விழாவா இல்லையா என்பதை நானே உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன். எனவே மொழி, மதம், சாதி போன்றவற்றை காரணம் காட்டி, நாட்டை துண்டாடாதீர்கள். கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள இதயப்பூர்வமான உறவை கெடுக்கக்கூடாது.

திருவள்ளுவர் சிலைக்கு எதிராக போராடினீர்கள் என்றால் அதை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்திற்குள் அதை எடுத்து வராதீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கக் கூடாது என்று தமிழக நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள்.

மாநகராட்சி தேர்தலை முன்வைத்து சிலை திறக்க அரசு முயற்சிப்பதாக கூறுகிறீர்கள். திருவள்ளுவர் ஒரு அரசியல்வாதி அல்ல.

திருவள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோர் நாட்டின் கலாசார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள பெரும் புலவர்கள். இதன் மூலம் மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் நாட்டைப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்துள்ளீர்கள். இது தவறு. தவறான வழக்கை தாக்கல் செய்துள்ள உங்கள் மீது அபராதம் விதிக்க முடியும். ஆனால் மனுதாரர்களுக்கு, நீதிமன்றம் எச்சரிக்கை மட்டும் விடுக்கிறது.

9-ந் தேதி நடை பெறும் சிலை திறப்பு விழா முழு வெற்றி பெறட்டும். இதன் மூலம் சாதி, மதம், இனம், மொழிபேதம் இல்லாத சமுதாயத்தை படைப்போம்.

----

நீதிபதி ஐயா, சபாஷ்!

நன்றி : தினத்தந்தி, தினமணி, தமிழ்செய்தி

Saturday, July 25, 2009

கலாமை சோதனையிட்டது தப்பா?

கலாமை அமெரிக்க விமான நிறுவனம் அவமரியாதை செய்துவிட்டது. மன்னிப்பு தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பிரச்சினை. விமான நிறுவனம் மன்னிப்பு. பிறகு இல்லையென்று இந்த வாரம் செய்திதாளில் தினமும் வந்த செய்தி இது.

இதில் கலாம் என்ற மனிதரை விட்டுவிடலாம். ஒரு முன்னாள் ஜனாதிபதியை சோதனை செய்யலாமா வேண்டாமா? என்பதை மட்டும் பார்க்கலாம். முன்னாள் மட்டுமில்லை, இந்நாள் ஜனாதிபதியையும், மற்ற குடிமகன்கள் என்ன சோதனைக்களுக்கு உட்படுத்தபடுகிறார்களே, அத்தனைக்கும் உட்படுத்த வேண்டும். அவரும் குடிமகன் தானே? முதல் குடிமகன்.

தவிர, சோதனை செய்வதை எப்படி அவமரியாதை என்ன எண்ணலாம்? நாட்டில் எல்லோரையும் தான் சோதனை செய்கிறார்கள். அப்ப, நாமெல்லாம் தினமும் கேவலப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறோமா? நம்ம மேல சந்தேகப்படுறாங்க. எனக்கு மரியாதை இல்லைன்னு நினைச்சா, பிறகு பாதுகாப்பில் தான் குறை ஏற்படும். பாதுகாப்பிற்கு என்று சில சோதனைகளை வரைமுறை செய்துவிட்டால், அனைவரையும் அதில் உட்படுத்தவேண்டும்.

பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறு செய்ய மாட்டார்களா? ஒருமுறை ஒரு எம்.பி. லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி கொண்டு சென்றார் என்று செய்தி வந்தது. இன்னொரு எம்.பி. தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் இன்னொரு பெண்ணை வெளிநாடு அழைத்து சென்று மாட்டி கொண்டார். தங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

இவர்கள் தவறு செய்பவர்களா? என்று எண்ணாமல், அனைவரும் சமம் என்னும் ரீதியிலாவது இந்த சோதனைகள் அவசியம். சில நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதிகள் உண்டு. நிறுவன தலைவர் உட்பட. எது கொண்டு செல்லலாம்? எது கொண்டு செல்ல கூடாது? என்று. இது வரவேற்க்கபட வேண்டியது தானே?

இப்பொழுது கலாம் என்ற மனிதர் சம்பந்தபட்டதால், மக்கள் ஆதரவோடு அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், ஆதாயம் தேட வாய்ப்புள்ளது. அடிபட போவது, சோதனை செய்யும் பணியாளர்களின் கடமையுணர்ச்சி. எங்கே, இவரை சோதனையிட்டால் பிரச்சினை ஆகுமோ? என்று யோசிக்கும் நிலை வரும். அது நல்லதற்கில்லை.

முதலில் பாதுக்காப்புக்காக செய்யப்படும் இந்த சோதனைகளில் பாரபட்சம் கூடாது. அதேப்போல், சோதனையிடுவதை கௌரவ குறைவாக எடுத்துக்கொள்ள கூடாது. இது பற்றி கலாமிடம் கருத்து கேட்டாலே, நாட்டின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவராக, இதற்கு ஆதரவு தெரிவிப்பார்.

முன்னாள் ஜனாதிபதியை சோதனையிட தேவையில்லை என்பது நமது அரசாங்க ப்ரோட்டோக்கால். முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், சோதனையிட வேண்டும் என்பது அமெரிக்க விமான நிறுவனத்தின் பாலிஸி. இப்போது ஒரு கேள்வி? இந்திய விமான நிறுவனங்கள் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை சோதனையிடுமா, இல்லையா? இதில் தெரிந்துவிடும் லட்சணம்.

மீடியாக்களை சொல்ல வேண்டும். சோதனையிட்டாலும் கூச்சல். சரியாக சோதனையிடாமல் பிளைட் கடத்தப்பட்டாலும் கூச்சல்.

Tuesday, July 21, 2009

ஆடி விசேஷம்

காலையில்
அம்மாவின் பாசத்துடன்
தென்றலாய் தலை தடவி எழுப்பி

மதியம்
தோழனின் நட்புடன்
முதுகு தொட்டு தள்ளி

இரவில்
காதலுடன் தேகத்தினுள்
அனுமதியின்றி நுழைந்து சிலிர்ப்பூட்டி

தனிமையிலும்
உணர்வுகளை பகிர்ந்து கொண்டது
ஆடி மாத காற்று.

---

ஆடி மாதமென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நினைவிற்கு வரும். இன்று எல்லாவற்றையும் தள்ளி விட்டு, தள்ளுபடி நிற்கும்படி வர்த்தக நிறுவனங்கள் முண்டியடித்து நிற்கின்றன. கடந்த சில நாட்களாக, எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேனோ, அப்படி இருக்கிறது வானிலை. அருமை.

ஆடி ஒன்றாம் தேதி மகேந்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் அவருடைய வட்டார ஆடி விசேஷத்தை பற்றி சொன்னார். நன்றாக இருந்தது. இதை நான் பார்த்ததும் இல்லை, கொண்டாடியதும் இல்லையே’ன்னு லேசா ஒரு வருத்தமும் இருந்தது. அதற்கு அடுத்த நாள், கலைஞர் செய்திகளில் கரூர் அமராவதி கரையோரம் கொண்டாடியதாக அந்த விசேஷத்தை காட்டினார்கள்.

ஆடி ஒண்ணு பற்றி மகேந்திரன்...

---

ஆடி ஒண்ணு - லீவு போட்டு கொண்டாடினீர்களா? பணத்துக்கு பின்னால ஓட ஆரம்பிச்ச பிறகு ஆடி ஒண்ணாவது ரெண்டாவது. இதுக்கெல்லாமா லீவு போட முடியும்? அப்படியே போட்டாலும், ஆடி ஒண்ணுன்னு எப்படி என் மராத்தி மேனேஜருக்கு புரிய வைப்பேன்? என்ன விசேஷம்னு கேக்குறிங்களா? அதெல்லாம் பழைய கதை.. இப்போ யாருக்குமே தெரியுறதில்ல.. தெரிஞ்சாலும் செய்யறதில்ல. விஷயத்துக்கு வரேன்.

நானெல்லாம் சின்ன பயலா இருக்கும் போது எங்க ஊருல ஆடி ஒண்ணு கொண்டாட்டம் அமர்க்களமா இருக்கும். இந்த வழக்கம் சேலத்தில மட்டும்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளூர் விடுமுறை. ஒருவாரத்துக்கு முன்னையே எல்லா கடைகள்ளேயும் ஆள் உயர குச்சி ஒண்ணு மஞ்சள் எல்லாம் தடவி விற்பனைக்கு வெச்சிருப்பாங்க. புதுசா ஊருக்கு வர்ற யாருக்குமே அது எதுக்குன்னு தலைகீழ யோசிச்சாலும் புரியாது.

"அழிஞ்சி" என்ற ஒரு மரத்தின் உறுதியான குச்சி. நெருப்பில் போட்டாலும் லேசுல எரியாது. அந்த குச்சில யாரையும் அடிக்கக்கூட மாட்டாங்க. "அழிஞ்சி" குச்சில அடிச்சா அழிஞ்சி போயிடுவாங்களாம்.. நல்லாருக்கில்ல?? வீட்டுல எத்தனை குழந்தைகள் இருக்காங்களோ அத்தனை குச்சி வாங்குவோம். பெரியவங்களும் வாங்குவாங்க.

ஆடி ஒண்ணு அன்னிக்கு மதியமா, நல்ல தேர்ந்தெடுத்த இளம் தேங்காய் எடுத்து, தரையில கொஞ்சம் மணல் போட்டு அழுந்த எல்லாப்பக்கமும் தேய்ப்போம். (தேங்காய் உரைக்கிறது). நல்லா மொழுமொழுன்னு (விஜய் பாட்ட யோசிக்காதிங்க) வந்த உடன கழுவி, அந்த மூணு கண்ணுல ஒண்ணை ஓட்டை போட்டு தண்ணிய எல்லாம் வெளிய எடுப்போம். "தீனி" ன்னு ஒண்ணு, பச்சரிசி, அவல், பயத்தம் பருப்பு, பொட்டுகடலை, வெல்லம்,எள்ளு எல்லாம் பச்சையா கலந்திருக்கும். அதை அந்த தேங்காய் ஓட்டை வழியா, கொஞ்ச கொஞ்சமா ஒரு கோணி ஊசி இல்லன்னா மயிர்கோதி வெச்சி திணிப்பாங்க. வழக்கமா வீட்டுல இருக்குற பாட்டி, தாத்தா தான் இதை செய்வாங்க. இப்போ யார் வீட்டுலயும் மயிர்கோதியும் இல்ல தாத்தா பாட்டியும் இல்ல.!!

தீனி அடைக்கும் போதே அந்த தேங்காய் தண்ணியையும் கொஞ்ச கொஞ்சமா உள்ளேயே ஊத்திடுவாங்க. அது நிறைஞ்ச உடன் அந்த குச்சியின் ஒரு முனைய கூரா சீவி (ஏற்கனவே சீவி தான் இருக்கும்) தேங்காயின் துளையை அடைப்பாங்க. பிறகு அதுக்கொரு மஞ்சள் நீராட்டுவிழா.

தேங்காய்க்கு பொட்டு எல்லாம் வெச்சி ரெடியா வெச்சிட்டு எல்லாப்பசங்களும் தெருத்தெருவா போய் எரிக்கிற மாதிரி ஓலை, மரம் எல்லாம் சேகரிச்சிட்டு வந்து, தெருவில கூடுவோம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போகியைப்போல எரிச்சி தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரும் ஒண்ணா கூடி அந்த தேங்காய்களை சுடுவோம். ஆடி ஒண்ணு எப்படியாவது மழை வந்தே வந்துவிடும். மேக மூட்டமா இருக்குற நேரத்தில அந்த நெருப்போட அனலில தேங்காய சுடுற சுகம்.. தேங்காய் நல்லா வெந்து, உள்ள இருக்குற தீனி எல்லாம் வெந்து ஓடு விரிசல் விட்டு நல்ல வாசம் வரும்.

அப்புறம் வெச்சி சாமி கும்பிட்டு வீட்டுல எல்லோரும் உட்கார்ந்து உடச்சி சாப்பிடுவோம். எல்லா வீட்டிலும் அதே தீனி, அதே தேங்காய்னாலும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ருசியிருக்கும். மனுஷங்க மாதிரியே. சாப்பிடுற நேரத்தில கண்டிப்பா மழை வரும். மழை விட்ட பிறகு அந்த அழிஞ்சி குச்சிகளை வெச்சி ரோட்டில கல்லா மண்ணா விளையாட போவோம். அக்கா தங்கை வீட்டில இருந்தா கூட ஒரு குச்சி சேர்த்து விளையாட கிடைக்கும். தெரு முனை வரை போய் விளையாடிவிட்டு, தோற்றவன் அங்கிருந்து நொண்டி அடிச்சிகிட்டே வருவான். நாங்கெல்லாம் பின்னாடி ஆடிகிட்டே வருவோம்.

இப்போ எந்த தெருவிலயும் தேங்காய் சுடுறத பாக்க முடியல. என்னை மாதிரி ஆதங்கபடுறவங்க கூட அடுத்த வீட்டுக்கு வாசம் வராம காஸ் அடுப்புல வெச்சி சுடுறாங்க. இன்னைக்கும் ஆடி ஒண்ணு அன்று, என்னைப்போல எத்தனையோ பேரு நினைச்சாலும் கொண்டாட முடியாத தூரத்தில உட்கார்ந்துகிட்டு பழச நினைச்சிக்கிட்டு இருக்கோம். இதெல்லாம் யோசிச்சி பார்க்கும் போது, இப்படி நாம கைவிட்ட வழக்கங்கள எல்லாம் தொகுத்தாலே சிந்து சமவெளி நாகரீகம் மாதிரி புதுப்பெயரோட ஒரு நாகரீகம் கிடைக்கும்.. என்ன சொல்றீங்க??

Wednesday, July 15, 2009

சமுத்திரக்கனியின் நட்பிலக்கணம்

சென்ற வார ‘நீயா நானா’வில் நட்பை பற்றி கலந்துரையாடினார்கள். நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று குரூப்பும் நட்பென்றாலும் அதில் ஒரு லிமிட் வேண்டும் என்று மற்றொரு குரூப்பும் பேசினார்கள். ஆனால் அவர்கள் பேசியதை விட சிறப்பு விருந்தினர்களாக வந்த ’நாடோடிகள்’ இயக்குனர் சமுத்திரக்கனியும் ’குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ நாயகன் ராமகிருஷ்ணனும் அதிகம் பேசினார்கள். காரசாரமாக விவாதம் செய்து கொண்டார்கள். நட்பில் லிமிட் பார்க்கக்கூடாது என்று சமுத்திரக்கனியும் லிமிட் தேவை என்று ராமகிருஷ்ணனும்.

சமுத்திரக்கனியும் ராமகிருஷ்ணனும் பல வருட நண்பர்கள். அவர்களின் அதீத ஆர்வ பங்கேற்பிற்கு இதுவும் ஒரு காரணம். இருவரும் வாடா போடா என்று பேசிகொண்டது எனக்கு ஆச்சரியமளித்தது. ஏனெனில், ராமகிருஷ்ணன் படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்தார்.

சமுத்திரக்கனி சொன்னது “நண்பர்களிடம் பிரதிபலன் பார்த்து பழக கூடாது (சரி). நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போ. நான் உனக்காக எதையும் செய்யும்படிதான் இருப்பேன். (இதுதான் உதைக்குது)”



அதாவது அவருடன் ஒன்றாக படுத்துறங்கிய நண்பன், காலையில் அவர் பார்க்க இருந்த தயாரிப்பாளரிடம் அவருக்கு முன்னால் சென்று கதை சொன்னாராம். பின்னால், அந்த நண்பன் உதவி கேட்டு வந்த போது, இவர் அவருக்கு உதவினாராம்.

தனக்கு தீங்கிழைத்த நண்பனை பழிவாங்க நினைக்காமல் உதவி செய்தது நல்ல விஷயம். நண்பன் என்றில்லை. எந்த மனிதனாக இருந்தாலும் கஷ்டத்தில் உதவலாம். ஆனால், திரும்ப திரும்ப எப்படிப்பட்டவனாக இருந்தாலும், எவ்வளவு துரோகம் இழைத்தாலும், நண்பனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று சொன்னது தான் எனக்கு சரியாகப்படவில்லை. திரும்ப திரும்ப உதவி செய்வதற்கு மனிதாபிமானம் காரணமாக இருக்கலாம். அதற்கு நட்பென்ற மூலாம் எதற்கு?

நாடோடிகள் படத்தில் இருந்து என்ன கற்று கொண்டீர்கள்? நான் படத்தின் கருத்தாக எடுத்துக்கொண்டது - நண்பனுக்காகவும் நண்பனின் நண்பனுக்காகவும் உயிரை பணயம் வைத்து உதவி செய்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் பெரிய இழப்புகளை சந்திக்கிறார்கள். ஆனால், செய்த உதவி பலனற்று போகிறது. அதனால் செய்யும் உதவியின் முக்கியத்துவம் கருதி உதவி செய்யவேண்டும்.

அதன் பிறகு படத்தில் காட்டியது - உதவி செய்து உதாசீனப்படுத்திய நண்பனைக் கூட்டி பாடம் நடத்தி அனுப்பி விட்டு, இன்னொரு உதவிக்கு கிளம்புகிறார்கள். வேற வழியில்லை. படத்தை அப்படித்தான் முடிக்க முடியும். வெளியே வரும்போது ரசிகன், நன்றாக பீல் பண்ண வேண்டும் அல்லவா? ஆனால், இதுவா வாழ்க்கைக்கான பாடம்? தவறில் இருந்து எது சரி என்று கற்றுக்கொள்ள வேண்டாமா?

சரி, விடுங்க. படம் பார்த்தோமா, என்ஜாய் பண்ணோமா என்றில்லை இதென்ன? ஒ.கே.



ஆனால், இதையே தான் அந்த நிகழ்ச்சியிலும் வந்து பேசி கொண்டிருந்தார். ராமகிருஷ்ணனும் மற்றவர்களும் என் நண்பன் என்னை ஏமாற்றி விட்டான். நான் எதற்கு உதவ வேண்டும்? என்றால் ‘அப்படியென்றால் அவன் நண்பனே இல்லை’ என்று விளக்கம் கொடுப்பதும், ஆனால் அதையே அவர் நண்பன் செய்தால் ’அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். ஏனெனில் அவன் என் நண்பன். நட்பு.’ என்று ஓவராக பொங்கிக்கொண்டிருந்தார். லாஜிக்கே இல்லாமல் பேசி கைத்தட்டல் வாங்கி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தான் தங்கள் அணி சார்பில் எதை சொன்னாலும் கைத்தட்டுவார்களே!

நண்பனுக்கு உதவ போய் நீ கஷ்டப்படலாம். ஏன்னா, அவன் உன் நண்பன். உன் குடும்பத்தார்களும் உன்னை சுற்றியிருப்பவர்களும் ஏன் கஷ்டப்படவேண்டும்? நான் நினைப்பது - எந்த உறவா இருந்தாலும் தாமரை இலை மேல் நீர் போல் இருக்க வேண்டும். (இது தவறாக இருக்கலாம். என் அனுபவ அறிவு கம்மி. போகப் போக கற்றுக்கொள்ளலாம்.)



எத்தனை முறை என்னை ஏமாற்றினாலும், நான் அப்படியே தான் இருப்பேன் என்று கூறுவது சரியானதா? அனுபவங்களில் இருந்து நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டாமா? ஏமாளி, தியாகி என்று ராமகிருஷ்ணன் கூறினாலும், சமுத்திரக்கனி இது உணர்வுபூர்வமானது என்றார். அறிவுப்பூர்வமாக பார்த்தால், உதவி தேவைப்படும் யாருக்கும் நம்மால் முடிந்த, மற்றவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்தாத உதவிகளை செய்யலாம். நமது உதவியின் முக்கியத்துவத்தை பலனடைந்தவர்கள் புரிந்து நடக்க வேண்டும். இது ஒன்றும் பிரதிபலன் இல்லை. அடிப்படை மனுஷத்தன்மை. இதை சமுத்திரக்கனியிடம் சொன்னால், “இப்படியெல்லாம் யோசிச்சா, அது நட்பே இல்லை” என்பார்.

பாஸ், ஓவர் சென்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது.

பி.கு.: சும்மா சொல்லக்கூடாது. ப்ரோக்ராம் செம ஜாலியா இருந்தது. குறிப்பா, சமுத்திரக்கனி ராமகிருஷ்ணனை தாக்கி பேசிய பேச்சு. நிகழ்ச்சியைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

ரசிச்சு பார்த்தா ஜாலி
யோசிச்சு பார்க்கலைன்னா முடிஞ்சுது ஜோலி!

Tuesday, May 19, 2009

இனம் - பணம் - என் மனம்

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை.

“சரியா வளைச்சி போட்டுட்டாங்க, போல?” என்றபடி வந்தமர்ந்தார் ஒரு ஆந்திர நண்பர்.

எதிரில் அமர்ந்திருந்த ஒரு தமிழ் உணர்வாளர் அவரை முறைத்தபடி பொறித்து தள்ளிவிட்டார். “எதுவும் தெரியாம பேச கூடாது. அமைதியா சாப்பிடுங்க” என்று கடைசியில் முடித்தார்.

அவரை சொல்லி குற்றவில்லை. ஈழத்தை பற்றிய புரிதல் நம் மக்களிடையே அவ்வளவுதான். அட, மற்ற மாநிலத்தவரை விடுங்கள். நம்மிடையேதான் எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருக்கிறது?

---

இனத்தை விட பணம் தான் முக்கியம் போல?

தேர்தலுக்கு முன்னால் யாருக்கு ஓட்டு போட? என்று சிலரிடம் கேட்ட போது, ‘போர் நடந்தால் யார் என்ன செய்ய முடியும்? காங்கிரஸ் வந்தால் பொருளாதார சீர்திருத்தம் இருக்கும். நம்ம வேலைக்கு நல்லது. வரி குறையும்’ என்று தான் கருத்து சொன்னார்கள். மத்தவன் செத்தா என்ன, இருந்தா என்ன? முதல்ல நாம நல்லா இருப்போம் என்பது தான் பெரும்பாலோரது மனநிலை.

தேர்தலின் போதும் வைகோ, சீமான், பாரதிராஜா போன்றவர்களோட உணர்வுபூர்வமான பிரச்சாரங்களை மீறி இருநூறு ரூபாய் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டுதான் பலர் ஓட்டு போட்டார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நம் மனதை பாதிக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும், செய்திதாளை (முக்கியமாக வட இந்திய) அதிகம் ஆக்கிரமித்து இருந்தது, சென்செக்ஸில் எகிறியடித்திருந்த இரண்டாயிரம் பாயிண்ட்கள்.

இப்படி தொடர்ந்து இன உணர்வை மீறியபடி பண உணர்வு.

---

நிறைய ஆய்வு கட்டுரைகள் வர தொடங்கிவிட்டது. தோல்விக்கு காரணம் என்ன என்று?

போன வழி சரியா? எடுத்த முடிவுகள் சரியா? என்று விவாதங்கள். ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிற கடந்த கால நிகழ்ச்சிகள்.

வெற்றி பெற்றிருந்தால் இதெல்லாம் வெற்றிக்கான காரணம் ஆகிருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இங்கு எப்போதும் வெற்றி பெற்றவன் பேச்சு தான் நியாயமானது. உண்மையானது. சரியானது.

வெற்றி பெற்றவன் உளறினால் கூட அது பொன்மொழி.
சொல்லுபவன் தோல்வியடைந்தால் சொல்வது பொன்மொழியாக இருந்தாலும் கூட அது உளறல்.

---

ஆளாளுக்கு ஒரு கோட்பாடு. ஒரு சித்தாந்தம்.

இவர்களது இந்த நிலைப்பாடால், இதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள், எதை பற்றியும் அறிந்திராத குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதும் முக்கியம். எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணும் ஜீவன்களுக்கு சுதந்திரம் கொடுப்பதும் அவசியம்.

Saturday, March 28, 2009

ஒபாமா கண்டிபிடித்த ரகசியம் & ஒரு இந்திய ரகசியம்

இன்று ஒரு மீட்டிங்கில் பேசிய ஒபாமா கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

“இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டிருந்த வேலைகள், குறைந்த ஊழியத்திற்கானவை. ஆனால், அதிக வேலை பளு உள்ளவை. இதை தடுத்து, அமெரிக்காவிற்கு கொண்டு வருவதால் எந்த பலனும் இல்லை. இதற்கு பதில், அமெரிக்கா வாழ்க்கை தரத்திற்கு ஏற்றாற்போலான உயர் நிலை வேலைகளை இங்கு உருவாக்க வேண்டும்.”

அப்பாடி, ஒரு வழியாக விஷயத்தை கண்டுபிடிச்சுட்டாரு! இந்த விஷயம் தெரியாமத்தான் தேர்தல்ல அப்படி பிரச்சாரம் பண்ணினாரா?

எது எப்படியோ, இந்த நெருக்கடி நேரத்தில், இந்திய ஐடி & பிபிஒ துறை நிறுவனங்கள் சந்தோஷப்பட்டு கொள்ள ஒரு செய்தி.

---

மருத்துவ சுற்றுலா என்றழைக்கப்படும் வெளிநாட்டினர்க்கு மருத்துவ சேவை அளிப்பதில், இந்தியா உலகத்திலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறதாம். இங்கு மருத்துவ செலவு குறைவென்பதால், வெளிநாட்டில் இருந்து நிறைய பேர் இந்தியா வருகிறார்களாம்.

அதே சமயம், இன்னொரு விஷயம். இந்தியா, தன் மக்களின் மருத்துவத்திற்காக செலவளிப்பது, மொத்த ஜிடிபியில் 1.2 பர்சண்டேஜ் தான்.

‘ஊரார் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் வீட்டு பிள்ளை தானா வளரும்’ன்னு சொல்ற மாதிரி, வெளிநாட்டுக்காரங்களை நல்லா கவனிச்சு அனுப்பினோம்ன்னா, இங்குள்ள மக்களின் உடல் நலம் தானா கவனிக்கப்படும்’ன்னு நினைச்சுக்கிச்சா அரசாங்கம்?