Sunday, January 31, 2010

வீக் எண்ட் சினிமா

கோவா

-கோவா ஆடியோ ‘சிம்பிள்’ வெளியீடு
-சௌந்தர்யாவிற்கு திருமணம்

ரஜினி மேற்கண்ட இரண்டு முடிவுகளையும், கோவா படம் பார்த்துவிட்டு எடுத்திருப்பார்.

எவ்வளவு தைரியம் இருந்தால், வெங்கட் பிரபு இப்படி உண்மையை சொல்லியிருப்பார்? ‘A Venkat prabhu holiday' என்று படம், போஸ்டர் எங்கும் உண்மையை சொல்லியிருக்கிறார்.

முதல் படத்தின் கதை, வேறொரு இயக்குனருடையது என்றார்கள். இரண்டாவது, ஆங்கில படத்தின் தழுவல் என்றார்கள். சொல்லவே நல்லாயில்லை. இருந்தாலும்...

இதிலும், அப்படி ஏதாவது செய்திருக்கலாம்.

---

தமிழ்ப் படம்படத்தின் ஆரம்ப டைட்டிலில் இருந்து, இறுதிவரை இப்படி சிரித்து சிரித்து பார்க்கும்படி ஒரு தமிழ்ப்படம் வந்திருக்கிறதா?

ரஜினியில் இருந்து சிம்பு வரை, மணிரத்னத்தில் இருந்து ஷங்கர் வரை, ஏன் கேமராமேன், டான்ஸ் மாஸ்டர் என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.

ஒரு படம் பார்க்கும்போது, தியேட்டரில் இங்கு இங்கு சிரித்தார்கள் என்று கைவிட்டு எண்ணி சொல்லிவிடலாம். இதில் படத்தின் எல்லா காட்சிகளையும் சொல்லவேண்டும்.

வெண்ணிற ஆடை மூர்த்தியை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன். இவர் ஒரு காலேஜ் ஸ்டுடண்ட். ஜாவா புத்தகத்துடனேயே அலைகிறார். டபுள் மீனிங் பேசும் போதெல்லாம் தலையில் வந்து காக்கா கொத்துகிறது.

என்ன, படத்தின் இறுதி கொஞ்சம் இழுவையாகிவிட்டது. ஆனாலும் இறுதிவரை சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள்.

மற்ற படங்களில், ஒரிரு சீன்களில் தமிழ் சினிமாவை கிண்டல் செய்வார்கள். இதில் படம் முழுக்க. இது போல் ஒரு புது வெரைட்டியை தமிழில் அறிமுகம் செய்ததற்கு அறிமுக இயக்குனர் அமுதனுக்கு வாழ்த்துக்கள்.

---

ஜக்குபாய்

ஒரே வாரத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகியிருப்பதால், சரத்-கவுண்டமணி-கே.எஸ்.ரவிக்குமார் என இருந்தும் சுமாரான திரையரங்குகளில் மட்டும் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது. நான் பார்க்கவில்லை. பார்க்கவும் போவதில்லை.

ஸ்ரேயாவிற்கு அப்பாவாக நடித்ததற்கு சரத்குமாருக்கு பாராட்டுக்கள். ஒரு பேட்டியில், இது பற்றி கேட்டதற்கு, “எனக்கும் அந்த வயதில் ஒரு பெண் இருக்கிறாரே?” என்றார். நல்லவேளை, ஸ்ரேயாவுக்கு அம்மாவாகவும் டபுள் ஆக்‌ஷனில் ஸ்ரேயாவை நடிக்கவைக்கவில்லை.

இறுதியில் வழக்கம்போல், கே.எஸ்.ரவிக்குமார் வருவதால் மட்டுமே இது கே.எஸ்.ரவிக்குமார் படம் என்று தெரிகிறது. மற்றபடி, ஏதோ புதுமுக இயக்குனரின் முதல் படம் போல் இருக்கிறது என்கிறார்கள்.

இந்த வாரம், ஒரே திரையரங்கில் இரண்டு வேறுவேறு புதிய படங்கள் ஓடுவதால், தொலைவில் இருந்து வந்திருந்த நண்பர் குழுக்கள், இருந்து இரண்டு காட்சிக்கள் பார்த்துவிட்டு சென்றார்கள்.

.

Thursday, January 28, 2010

நாட்டு சரக்கு - கேமரூன் அடிச்ச காப்பி

இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்மபூஷண். நிருபர்கள், ஒரு கேள்வியை இருவரிடமும் கேட்டார்கள்.

ரஹ்மானுக்கும் பத்மபூஷண் விருது தந்திருக்கிறார்களே?

இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

இளையராஜாவுக்கும் பத்ம பூஷண் விருது கிடைத்திருக்கிறதே?

இளையராஜாவுக்கும் எனக்கும் ஒரே நேரத்தில் பத்ம பூஷண் விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம். எங்க அப்பா சேகர் இசையில் இளையராஜா வாசித்திருக்கிறார். இளையராஜா இசையில் நான் வாசித்திருக்கிறேன். அந்த வகையில் விருது கிடைத்திருப்பது குடும்ப சந்தோஷம்.


---ஐபாட், ஐபோனை தொடர்ந்து ஐபேட் வெளியிட்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஸ்லேட்டு போல இருக்கும் இதில் இணைய உலாவல், பாடல்கள், படங்கள், புத்தகங்கள், கேம்ஸ் என எல்லாம் சாத்தியம். புதுசு, புதுசா யோசிச்சு வெளியிடுறாங்க. ஆரம்பத்தில் அவர்களுடைய சிபியூ பாக்ஸ் பார்த்து வியப்படைந்திருக்கிறேன். சின்ன டிபன் பாக்ஸ் சைஸ் தான் இருக்கும்.

இப்ப, இன்னுமொரு புது சாதனம். இந்த வடிவத்தில் ஈ-புக் வாசிப்பது சரியாக, நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இனி, இந்த மாடலை வைத்துக்கொண்டு பிற நிறுவனங்களும் இதுபோல் வெளியிடும். இந்தியர்களுக்காக, ஏதேனும் சைனா நிறுவனம் உழைக்க ஆரம்பித்து இருக்கும்.

---

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்த நான்-வெஜ் ஹோட்டலில் இப்படி எழுதிவைத்திருந்தார்கள். “மாமிச உணவு சாலை”. படிக்கும்போது, என்னவோ போல இருந்தது. அசைவ உணவகம் என்று எழுதியிருந்தாலாவது பரவாயில்லை. அதனால் தானோ என்னவோ, நான் பார்த்தபோது, கடையில் கூட்டமே இல்லை.

---

அங்கிருந்து கிளம்பிய ஒரு ரயிலுக்குள் பார்த்தப்போது, ஒரே சிவப்பு நிற உடையாக இருந்தது. ஒரு கோச் என்றில்லாமல், எல்லா கோச்சிலும் அப்படியே. ரயிலே அப்படித்தான். ஈரோடு - மேல்மருவத்தூர் ஸ்பெஷல். சில நாட்கள் கழித்து மணியாச்சி ரயில் நிலையத்தில் பார்க்கிறேன். திருநெல்வேலி -மேல்மருவத்தூர் ஸ்பெஷல். எத்தனை?

கோவில் பற்றி தெரியாது. ஆனால், பெண்களை அதிகம் கவரும் கோவில் என்பதால் பெண்கள் கூட்டம் அதிகம் என நினைக்கிறேன். பெண்கள் போனப்பிறகு, வீட்டில் இருந்து ஆண்கள் என்ன செய்வது? வீட்டை பூட்டிவிட்டு எல்லோரும் போக வேண்டியது தான்.

ரயில்வே, ரயில் விட வேண்டியது தான்.

---

அவதார் பார்த்துவிட்டு வந்த கேரள நண்பர், வாயில் அடித்துக்கொண்டார். ”மோகன்லால் நடிச்ச ‘வியட்நாம் காலனி’ படக்கதையை (தமிழில் பிரபு நடித்தாரே! அதே தான்) அப்படியே காப்பி அடிச்சிட்டு, டைட்டிலில் ஒரு நன்றிக்கூட போடலியே” என்று புலம்பியவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு யோசித்து பார்த்தால், அட ஆமா!. ஒரு காலனியை அவுங்க பட்ஜெட்டுக்கு ஏத்தப்படி, வேற்றுக்கிரகமாக மாற்றியிருக்கிறார்கள்.

பாத்துக்கோங்க, ஹாலிவுட் டைரக்டர்களும் காப்பி அடிக்கிறாங்க.

---

’வியட்நாம் காலனி’ நல்ல ஜாலியான படம். படத்தை நினைச்சா, உடனே நினைவுக்கு வருற காமெடி இது.

கவுண்டமணி பசியோடு வீட்டுக்கு வருவார். வீட்டில் சாப்பிட உணவிருக்காது. தண்ணீர் குடிக்கலாம் என்று குடத்தின் அருகே இருக்கும் டம்ளரை எடுப்பார். உள்ளே கொஞ்சுண்டு தண்ணீர் இருக்கும். அதை குடிக்காமல், டம்ளரை அலசி வெளியே ஊற்றிவிட்டு, குடத்திற்குள் பார்த்தால் தண்ணீர் இருக்காது. அவருக்கே உரிய எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பார்.

பிறகு, கீழே மனோரமா வீட்டில் போய் சாப்பாடு இருக்கிறதா என்று கேட்பார். மனோரமா அதற்கு,

"இப்பத்தான் மாட்டுக்கு போயி கொட்டினேன்."

கவுண்டமணி பரிதாபமாக, "மாடு தூங்கியிருக்குமா?"

.

Wednesday, January 27, 2010

நைட்டி!என் ஆறு வயதில் அம்மா சொன்னாள்...
அந்த சிலோன்லருந்து வந்துருக்குற
ஸ்டெல்லா போட்டிருக்குறா...
துணியா அது... அங்கி மாதிரி...
நைட்டியாமா...
என் பதினொரு வயதில் திரும்பவும் சொன்னாள்...
எல்லாருமிப்ப போட்ட நைட்டியோடையே
கடை வரைக்கும் வராளுங்க...
அதுங்களுக்கிருக்கோ இல்லையோ...
நமக்கு வெக்கமா இருக்கு...
ஓரிரு வருடத்தில் திரும்பவும் சொன்னாள்...
அக்காவுக்கு நைட்டி போட்டா
நல்லா இருக்கு...
புள்ள துணி வெலகாம தூங்குறா...
கடை வரை வந்த அக்காக்களும்,
ஆரம்பித்து வைத்த ஸ்டெல்லாவும்
கண்காணாத தூரத்திலிருக்க...
சென்ற முறை ஊருக்கு போயிருக்கையில்
கதவு திறந்த அம்மா நைட்டியில் நின்றாள்...!!!

-மகேந்திரன்.

.

Tuesday, January 26, 2010

தமிழ் படம் - கோவா

கோவா படத்தின் லேட்டஸ்ட் ட்ரெய்லரில், ஆங்கிலத்தில் கம்பீரமாக ஒரு வாய்ஸ் வருகிறதே? ரஜினியுடையதா? ரஜினியுடையதாக இருந்தால்...

சூப்பர் ஸ்டார் வாய்ஸை இப்படி ஒரு மொக்கை பசங்க படத்துக்கு யூஸ் பண்ணிட்டாங்களே! என்ன பண்றது? ஒரு படத்தை தயாரிச்சு, வெளியிடுறதுக்குள்ள என்னல்லாம் பண்ண வேண்டி இருக்குது? சென்னை-28 ஆரம்பத்துல எஸ்.பி.பி. (அவருதான் அதுக்கு தயாரிப்பாளர்) பேசுனாரு. இதுல தலைவர் பேசுவாரோ?

கிராமத்து பசங்க கோவாவுக்கு போறதும், அங்க நடக்குற விஷயங்களும் தான் கதை’ன்னு தெரியுது. எனக்கு பயணம் பிடிக்கிற மாதிரி, பயணக்கதைகளும் பிடிக்கும். தவிர, வெங்கட் பிரபுவின் முந்தைய இருபடங்களுமே பிடித்திருந்ததால், இதையும் பார்க்கும் ஆர்வம் அதிகமிருக்கிறது. இல்லனாப்புல, விட்டுடவா போறோம்?

வெங்கட் பிரபுவிடம் ”படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்களே?” என்று கேட்டதற்கு, ”படத்துல வல்கரா எதுவும் இருக்காது. படத்தோட கன்டென்ட் அப்படி” என்றார். எப்படியோ!

”சின்ன பசங்க வர மாட்டாங்களே?” என்றதற்கு,

“ஹி... ஹி... யாரு சொன்னா? இப்பத்தான் வருவாங்க.” என்று சிரித்தார். இப்படி ஒரு இயக்குனர பார்க்க முடியாது!

---இளையராஜா-கங்கை அமரன் குடும்ப வாரிசுகள் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். 5 பாடகர்கள் ஒவ்வொரு வரியையும் தங்களுக்குள் ஒற்றுமையாக பிரித்துக்கொண்டு பாடியிருப்பது நன்றாக இருக்கிறது. இளையராஜாவின் ஜீன் பாட்டின் மெட்டில் தெரிகிறது.

எஸ்.பி.பி.யின் வாரிசும், மலேசியா வாசுதேவனின் வாரிசும் இன்னொரு பாடலை பாடியிருக்கிறார்கள். அப்புறம் இளையராஜாவும், எஸ்.பி.பி.யுமே இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். "வாலிபா வா வா" என்ற இந்த பாட்டின் நடுப்பகுதி, முதல்வன் "அழகான ராட்சசி" போல் எனக்கு படுகிறது. ராகரீதியாக ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதோ?

"ஏழேழு தலைமுறைக்கும்" பாடல் கேட்டவுடன் பிடித்தாலும், போக போக அஜிஸ், ஆண்ட்ரியா பாடிய "இது வரை இல்லாத உணர்வு" பாடல்தான் பிடிக்கும் என தோன்றுகிறது.

"பட்டிக்காட்டை விட்டுபுட்டு பட்டணத்தில் குடிபுகுந்து
மெட்டுகளை கட்டித்தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு"

"வயலுல விளைஞ்ச நெல்லு, நகரத்த தேடி வந்து
பசிகளை தீர்ப்பதுபோல் பாரு எங்க கதை!"


என்று இந்த பாடலில் கங்கை அமரனின் அருமையான வரிகள் இருக்கிறது.

ராஜா பெருமையையே இங்க பல பேரால தாங்க முடியலை. இதுல குடும்ப பெருமை வேறயா?

---

வெங்கட் பிரபு, சென்னை-28 யிலும், சரோஜாவிலும் ”பாரதிராஜாவின் வெள்ளை உடை தேவதைகள்”, “என்ன கொடுமை சரவணன்?”, “ஐ யம் கார்னர்டு, ஹெல்ப் லெஸ்” போன்ற வசனங்கள் மூலம் பல தமிழ் படங்களை, கலைஞர்களை கிண்டல் அடித்திருப்பார்.

அதையே முழுக்களமாக எடுத்துக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள், ஒரு நக்கல் கும்பல். இயக்குனர் அமுதன், மிர்ச்சி சிவா, எம்.எஸ். பாஸ்கர் என இந்த படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சேர்ந்து பேசினாலே செம காமெடியாக இருக்கிறது.ட்ரெய்லர் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. பாட்டு கேட்டாலும் சிரிப்பு வருகிறது. படத்தில் சிவாவுடன் வரும் யூத் ப்ரெண்ட்ஸ் - எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி & மனோ பாலா. ஜீப்பில் நாயகியுடன் சிவா போகும் போது, ஒரு கோக் டின் வந்து விழுகிறது. முன்னால் செல்லும் வண்டியை பார்த்து சிவா கத்துகிறார். “மிஸ்டர் அன்புசெல்வன் ஐஏஎஸ்....”

நக்கல் படம் என்று அமெச்சுராக எடுக்கவில்லை. காட்சிகள் ரிச்சாக இருக்கிறது. தயாநிதி அழகிரி தயாரித்திருக்கிறார். ஷங்கரிடம் கேட்டாலும் தயாரித்திருப்பார். என்ன, அவர் படத்தை இப்படி கிண்டல் அடித்திருக்கமுடியாது. ஷங்கர் எந்திரனுக்கு அழைத்த நிரவ் ஷா, இதற்கு ஒளிப்பதிவு. அறிமுக இசையமைப்பாளர் கண்ணன் போட்டிருக்கும் மெட்டுக்கள் அனைத்தும் சட்டென்று பற்றிக்கொள்ளும் வகை.

ஹீரோ டைட்டில் சாங்கில் “தயிர்ல போட்ட தயிர் வடை, போடலைன்னா மெது வடை... ஓட்டை இருந்தா ஓட்டை வடை” என அரிய தத்துவங்கள் வருகிறது. பாடல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஹீரோ எந்த கலர் தமிழன் என்று இப்படி சொல்கிறார்கள்.

”பச்சை மஞ்ச கறுப்பு தமிழன் நான்...”
”பச்சை எல்லோ பிங்க் தமிழன் நான்...”
”பச்சை மஞ்ச ஒயிட் ரோஸ் தமிழன் நான்...”
”பச்சை மஞ்ச ஆரஞ்சு தமிழன் நான்...”
“எல்லா கலரு தமிழனும் நான்...”


இன்னொன்று, தமிழ் படங்களில் வந்த புரியாத பாடல் வரிகளை சேர்த்துவைத்து ஒரு பாடல்.

”ஓ! மஹசியா ஓ! மஹசியா
நாக்க முக்க நாக்க, ஒ ஷக்கலாக்கா
ஓ! ரண்டக்கா”


அதிகமாக அடி வாங்கி இருப்பது, ஹாரிஸ் தான். ஹரிஹரன், ஸ்வேதா பாடியிருக்கும் இந்த பாடல், அருமையான மெலடி. நியூசிலாந்தில் எடுத்திருக்கிறார்கள். கேட்க கேட்க முணுமுணுக்க வைக்கிறது. நம்மையறியாமல் முணுமுணுக்கும்போது, வந்து விழும் வார்த்தைகளை யோசித்துப் பார்த்தால் கிண்டல் செய்யப்பட்டிருப்பது தமிழ்ப்பட இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல, ரசித்து கேட்கும் ரசிகர்கள் நாமும் தான் என்று தெரிகிறது.

காமெடிக்கு கியாரண்டி கொடுத்தப்படி இந்த வாரம் வெளியாகும் இவ்விரு படங்களும், கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் படத்தில் ஹாலிவுட் தரத்தையும், பேண்டஸி கதையில் சீன்-பை-சீன் லாஜிக்கையும் தேடிக்கொண்டிருக்கும் சிலருக்கு மன உளைச்சலிருந்து ஒய்வு கொடுக்குமா என்று பார்ப்போம்.

.

Monday, January 25, 2010

செருப்புக்கும் உண்டு சிறப்பு

மதன் மோகன் மாளவியா பற்றி தெரியுமா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. மேலே படியுங்கள்.சுதந்திர போராட்ட வீரர். கல்வியாளர். 1910களில் இவருக்கு ஒரு இந்து மத பல்கலைக்கழகம் தொடங்க ஆசை. அன்னி பெசண்ட் அம்மையார் போன்றோர்களுடன் இணைந்து வேலையை துவக்கினார். பல்கலைக்கழகத்திற்கு வாரணாசி மன்னர் 2000 ஏக்கர் நிலம் நன்கொடையாக அளித்தார். எனினும், மற்ற வேலைக்களுக்கு பெரும் தொகை தேவைப்பட்டது.

நிதி திரட்ட ஊர் ஊராக சுற்றுபயணம் மேற்கொண்டார். பெரும் செல்வந்தர்களையும், வியாபாரிகளையும் சந்தித்து நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பயணத்தின் ஒருக்கட்டத்தில் ஹைதராபாத் வந்து சேர்ந்தார். அப்போது ஹைதராபாத் நிஜாம் உலக அளவில் பெரும் பணக்காரர். அதனால், அவரிடமும் கேட்டு வைப்போம் என்று மதன் மோகன் நிஜாமிடம் உதவிக்கோரினார்.

”என்ன தைரியம் இருந்தால் என்னிடமே நிதி கேட்பாய்? அதுவும் ஒரு இந்து பல்கலைக்கழகம் தொடங்க?” என்று ஏறியவர், தன் செருப்பை மதன் மோகன் மேல் எறிந்து அவமானப்படுத்தி அனுப்பினார். மதன் மோகன் செருப்பை எடுத்துக்கொண்டார்.

நேராக ஹைதராபாத் சந்தைக்கு செருப்புடன் சென்றார். ஏலத்தை ஆரம்பித்தார். த்ரிஷா பயன்படுத்திய சோப்பு டப்பா, நயன்தாரா கடித்த ஆப்பிள் என்றாலே இப்போது வாங்குவதற்கு பல பேர் இருக்கும் போது, அப்போது நிஜாம் செருப்பு என்றால் சும்மாவா? கூட்டம் கட்டியது.

விஷயம் நிஜாம் காதுக்கு சென்றது. ”நான் பயன்படுத்திய செருப்பு, ஒரு சிறு தொகைக்கு ஏலத்தில் சென்றால் எனக்குதானே அவமானம்?” என்று எண்ணியவர், தன் வேலையாள் ஒருவரை அனுப்பி, ”எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. அதை வாங்கி வா.” என்று அனுப்பி வைத்தார்.

மதன் மோகன் நடத்திய ஏலத்தில் ஒரு பெரும் தொகைக்கு அந்த செருப்பு விலை போனது. நிஜாம் செருப்பை நிஜாமுக்கே விற்றவர், அந்த பணத்தை பல்கலைக்கழகம் கட்ட பயன்படுத்திக்கொண்டார்.

---

அதனாலே நம்மக்கிட்ட என்ன இருக்குதுங்கறது முக்கியமில்லை. அதை எப்படி பயன்படுத்துகிறோம்’ங்கறதுதான் முக்கியம்.

(மாரல் ஆப் த ஸ்டோரி சொல்ல நினைச்சா, சிம்புவோட பஞ்ச் டயலாக் மாதிரி போச்சே!)

.

Sunday, January 24, 2010

இளையராஜா பற்றி வைரமுத்துஇசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

---

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

---

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

---

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.

நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.

நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

---

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

---

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

---

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---

நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?


---

வைரமுத்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரையுலக வாழ்க்கையிலும் சந்தித்த மனிதர்களில் தன்னை ஏதெனும் ஒரு விதத்தில் பாதித்தவர்களை பற்றி தனக்கே உரிய நடையில் எழுதியிருக்கும் புத்தகம் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கலைஞர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஏ.வி.எம். சரவணன், சாலமன் பாப்பையா என நமக்கு தெரிந்தவர்கள் பற்றிய தெரியாத விஷயங்களை, அவர்களின் உயர்ந்த பண்புகளை சிலாகித்து, சிலாகிக்க வைக்கிறது வைரமுத்து எழுத்துக்கள்.

---

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வைரமுத்து.
219 பக்கங்கள்.
ரூ. 70.
சூர்யா லிட்ரேச்சர் லிமிடெட்.
திருமகள் நிலையம்.

.

Friday, January 22, 2010

பெங்களூரில் இந்தியாவின் நீள ’ஹை’ ஹைவே

இது போன வருடம் இந்நேரம் எழுதியது. இதோ இன்று இந்த பாலத்தை (Bangalore Elevated National Highway) திறந்துவிட்டார்கள். பாலு திறக்க வேண்டியது. ம்ம்ம். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல்நாத் துவங்கிவைக்க வேண்டியதாகிவிட்டது.தேசிய நெடுஞ்சாலை அமைந்த இந்தியாவின் நீளமான பாலம் இது தான் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது - இந்தியாவின் நீளமான பாலம். ஆனால், அது தேசிய நெடுஞ்சாலை அல்ல.2008 செப்டம்பரில் முடியவேண்டிய பாலம். 2009 ஏப்ரலில் திறக்கப்படும் என்று நீட்டிக்கப்பட்டு ஒரு வழியாக இன்று திறந்துவிட்டார்கள். கட்டி முடிக்க ஆன செலவு அதிகமில்லை. 776 கோடி தான். கூடுதலாக 100 கோடி ஆனது என்கிறார்கள். அவதார் என்கிற மூன்று மணி நேரம் ஓடுகின்ற பொழுதுபோக்கு சினிமா எடுக்கவே 1200 கோடி ஆகும் எனும்போது, நாட்டிற்கு தேவையான சாலைக்கு 800 கோடி என்பது ஓகே.இந்த பாலத்தில் மடிவாளா தாண்டி பொம்மன்னஹல்லியில் ஏறிவிட்டோம் என்றால் ஒரே மூச்சில் பத்து கிலோ மீட்டர் தள்ளி எலக்ட்ரானிக் சிட்டியில் இறங்கிவிடலாம். ஓசூர் செல்லவேண்டி இருந்தால், இந்த பாலத்திற்கு பிறகும் எங்கும் நிற்க வேண்டியதில்லை. பொம்மசந்த்ரா, சந்தாபுரா, அத்திப்பள்ளி என தொடர்ந்து இருக்கும் பாலங்களால் நிமிடங்களில் ஓசூர் வந்து சேர்ந்துவிடலாம்.இரவு பாலம் முழுக்க தகதகவென வெளிச்சத்தில் ஒளிர்கிறது. இன்று முதல்நாள் என்பதால், சீரியல் செட் வேறு. ஒரு போஸ்ட்டில் மூன்று விளக்குகள். மார்கழி மாத பனியில், காலை நேரங்களில் இந்த வெளிச்சம் தான் சாலையை காட்டுகிறது.பெங்களூர் சாலைகள் எல்லா இடங்களிலும் ஏறி ஏறி இறங்கும். அதன் மீது கட்டப்பட்ட இந்த பாலமும் ஏறி ஏறி இறங்குகிறது.நடுவே பார்க்கிங் செய்ய ஒரு இடம் இருக்கிறது. இன்று அது பிக்னிக் ஸ்பாட் போல இருந்தது. சிலர் நண்பர்களுடனும், சிலர் கேர்ள் பிரண்ட்ஸ்களுடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.அதிகப்பட்சம் 80 கிலோமீட்டர் ஸ்பீடில் போகலாம் என்கிறார்கள். ஆனால், மக்கள் பறக்கிறார்கள். இந்த படத்தை பாருங்கள்.தகவல் சொல்ல எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேகள், வாகன ஓட்டத்தை கண்காணிக்க கேமராக்கள், ஏதேனும் வண்டி நின்று விட்டால் மேலிருந்து கீழிறக்க கிரென் என ஏற்பாடுகள் பல.டோல் கட்டியே இந்தியன் நொந்துருவான் போல இருக்கே? இந்த பாலத்தில் போகவும் கட்டணம் தான். பைக்கிற்கு பத்து, காருக்கு முப்பது. ஒரு மாசத்திற்கு என்று பாஸ் வாங்கிக்கொள்ளலாம். இது ஸ்மார்ட் கார்டில் வருகிறது. எலக்ட்ரானிக் டோலும் இருக்கிறது. அதாவது உங்கள் காரின் உள்ளே ஒரு சின்ன சாதனத்தை நிறுவிவிடுவார்கள். நீங்கள் கேட் பக்கம் வரும்போதே, கேட்டில் இருக்கும் இன்னொரு சாதனம் உங்கள் காரில் உள்ள சாதனத்துடன் தொடர்புக்கொண்டு அதற்கேற்றாற்போல் கேட்டை திறந்துவிடும்.

மேலும் டீட்டெயில்ஸ் இங்கே.

ஓசூர் போறவங்க, மேலே போனாத்தானே காசு’ன்னு கீழே போனாலும், அத்திப்பள்ளியில் பிடுங்கிவிடுவார்கள். ஆனால், நல்லவேளை அங்கு பைக்கிற்கு கிடையாது.இன்றும், இன்னும் சில நாட்களும் டோல் கிடையாது. எல்லாரும் ஜாலியா ஏறி இறங்கிட்டு இருக்காங்க. வழக்கமான சாலையாகத்தான் மேலே பாலத்தில் தெரிந்தாலும், ஓரத்தில் போகும்போது, பக்கமிருக்கும் உயர்ந்த கட்டிடங்களால், நாம் இருக்கும் உயரம் உணர்ந்து, ஒரு கிறுகிறு உணர்வு வரத்தான் செய்கிறது.

படங்களை பெரிதாக காண க்ளிக்கவும். ஏதேனும் உயரமான பில்டிங் மேலிருந்தோ, ஹெலிகாப்டரில்(!) இருந்தோ எடுத்தால், இன்னும் அருமையாக வரும்.

ஏர்போர்ட் ரன்வே என்று நினைத்து, பைலட் யாராவது ப்ளைட்டை இங்கு இறக்கிவிடக்கூடாது.

.

Thursday, January 21, 2010

கொழந்தப்பய குமரனின் கோட்டிக்காரத்தனங்கள்

சிறு வயதில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி இருந்த சுவர்களில் ஒரு சுவருக்கும் வீட்டின் ஒரு பக்க சுவருக்கும் ரொம்ப சின்ன இடைவெளிதான் இருந்தது. பெரியவர்கள் யாராலும் அந்த சைடு போக முடியாது. என்னை போன்ற சிறுவர்கள் ஒரு பக்கமாக திரும்பிக்கொண்டு போகலாம்.

அப்போது கலர் கலராக இருக்கும் கோழிக்குஞ்சுகளை வளர்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு கோழிக்குஞ்சு அந்த பக்கமாக சென்று விட்டது. அதை பிடிக்க சைடாக சென்ற நான், அந்த இடைவெளியில் நேராக திரும்ப, சுவருக்கிடையில் சிக்கிக்கொண்டேன். கோழிக்குஞ்சு அசால்டாக வெளியே வந்து அதன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டது.

நானாக வெளியே வர முயற்சி செய்து பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. பயத்தில் கத்தி அழ ஆரம்பித்து விட்டேன்.

வீட்டில் இருந்தவர்கள் வந்து வெளியே இழுக்க முயற்சி செய்தார்கள். நெற்றி சுவரில் படும்படி தலை சரியாக மாட்டிக்கொண்டது. பிறகு, தெருவில் சென்றுக்கொண்டு இருந்தவர்களும் உதவிக்கு வந்தார்கள். என்னை சுற்றி ஒரே மக்கள் கூட்டம். எப்படியோ, பல திட்டங்கள் போட்டு வெளியே கொண்டு வந்தார்கள். அடுத்த நாள், தினந்தந்தியில் இந்த செய்தி வந்ததா? என்று தெரியவில்லை. மற்றபடி, தெருவில் பாப்புலர் ஆகிவிட்டேன்.

ஒரு வாரத்திற்கு, தொப்பியில் இருப்பதை போல, நெற்றி முன்பக்கம் நீண்டுக்கொண்டிருந்தது. அதற்கு பிறகு, அந்த கோழிக்குஞ்சை பார்க்கும்போதெல்லாம் அது என்னை நக்கலாக பார்ப்பது போலவே இருக்கும்.

---

எங்களது வீட்டின் முன்பக்கம் இருக்கும் க்ரில் கேட்டில் எப்போதும் தொங்கிக்கொண்டு இருப்பேன். தெருவில் வித்தை காட்டுபவர்கள் போல, அவ்வப்போது அதில் தொங்கியவாறு டைவ் அடிப்பேன்.

ஒருநாள் கையில் ஒரு கயிறு கிடைக்க, அதையும் வைத்துக்கொண்டு வித்தைகளை தொடர்ந்தேன். கயிறை கேட்டின் மேலுள்ள ஆணியில் மாட்டிக்கொண்டு தொங்க, ஆணியில் இருந்து கயிறு நழுவ, டமாலென்று கீழே விழுந்தேன். கேட்டின் இரும்பு கீழ்பாகத்தில், உச்சந்தலை பட்டு, கொஞ்சம் டெமெஜ் ஆனது (ஓ! அதான் இப்படி எழுதுறீயா?’ன்னு கேட்கக்கூடாது!).

முடிக்களுக்கிடையே ப்ளாஸ்டர் போட சிரமமாக இருக்க, அந்த இடத்தில் இருந்த முடிகளை வெட்டிவிட்டார்கள். ஆனந்த தாண்டவத்தில் ரிஷிக்கு போட்டு விட்ட வழுக்கை போல.

அடிப்பட்டதுக்கூட வலிக்கவில்லை. இந்த ஹேர் கட்டிங் தான்...

---

தீவிர ரஜினி ரசிகனாக இருந்த காரணத்தால், கையில் கிடைக்கும் ரஜினி படங்களை எல்லாம் சேர்த்து ஒரு நோட்டில் ஒட்டி வைத்திருப்பேன். சில படங்கள் இங்கேயும், இங்கேயும் இருக்கிறது.

புத்தகம் என்றால் நடுநடுவே விளம்பரங்கள் இருக்க வேண்டும் அல்லவா? அதையும் சேர்த்தேன். இதோ அந்த விளம்பரங்கள்.

ராமராஜன் படம் கிடைக்கல. அதான் நானாகவே... ஹி...ஹி... :-)

.

Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவன் - Revisited

விழாக்கால குதூகலம், அன்றைய தினம் வெளியாகும் ஒரு சினிமா பார்ப்பதில் தான் முழுமையடைகிறது என்றொரு நம்பிக்கை எனக்கு. சரி, எவ்வளவு நாள் இப்படி பார்ப்போம்? என்று நினைத்துக்கொண்டு அப்படியே தொடர்கிறது. எந்த படத்தையும் எவ்வித விமர்சனம் வருவதற்கு முன்பு, வந்தாலும் கண்ணில் காட்டாமல், படத்தை முந்தி பார்ப்பது பழக்கமாகிவிட்டது. விமர்சனம் படிக்காமல் சிக்கியதும் உண்டு. விமர்சனம் படித்து தப்பியதும் உண்டு. இருந்தும் எந்த வித தாக்கமும் இல்லாமல் படம் பார்ப்பதே வழக்கம்.

முதல் நாள் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தது, இப்படி ஒரு விசேஷ தின மகிழ்ச்சி மனநிலையில். பார்வையாளர்களை பதறவைக்கும் இயக்குனர் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், படத்தின் ஆரம்பமும் முதல் பாதியும், கொஞ்சம் வேறொரு செல்வராகவனை காட்டியது. டிஷ்... டிஷ்... பீட்டுடன் கூடிய "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" ரீ-மிக்ஸ் பாடல், கார்த்திக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த புது ரசிகர்களை ஆடத் வைத்தது. இப்படி மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களை கொண்டாட்டத்துடனே வைத்தது முதல் பாதி முழுவதும்.நிறைய காட்சிகளில் செல்வராகவனுக்கு கைத்தட்டல்கள் போய் சேர்ந்தது. குறிப்பாக, ஆண்ட்ரியாவை ரூட்டு விட்டுக்கொண்டு, ரீமாவை திட்டிக்கொண்டு கார்த்தி திரியும் காட்சிகள். நடராஜர் உருவத்தில் நிழல் விழும் காட்சியில், கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா ஓடி மணல் குழிகளில் இருந்து தப்பிக்கும் சீன்.

கதாபாத்திரங்கள் சிரித்தால் பார்ப்பவர்களும் சிரிக்கணும். அழுதால் பார்ப்பவர்களும் அழ வேண்டும். கதாபாத்திரங்களுக்கு பைத்தியம் பிடித்தால்? அதே உணர்வை பார்வையாளர்களுக்கும் கொண்டு வர செல்வராகவன் யோசித்திருப்பார் போல! இடைவேளையின் போது எல்லோருமே ஒரு குழப்பமான நிலையில் தான் இருந்தார்கள். அந்த காட்சியில் அமைதிக்கிடையே படீர் என்று ஒரு சத்தம். நன்றாக சவுண்ட் வைக்கும் தியேட்டரில் நடுவே உட்கார்ந்து பாருங்கள். உங்கள் காதிலும் ரத்தம் வரலாம்.

இதே பேண்டஸி எதிர்ப்பார்ப்பில் பாப்கார்ன் வாங்கி கொண்டு வந்து உட்கார்ந்தால், ஏமாற்றம் நிச்சயம். ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணியது போதும். இனி பீல் பண்ணனும் என்று செல்வராகவன் நினைத்திருப்பார் போலும். வேறொரு பாணியில் படம் பயணிக்க தொடங்கிறது.

அவ்வளவு நேரம் பேண்டஸியால் விறுவிறுவென ஓடிய படம், எதார்த்தமான முடிவை நோக்கி சென்றது. மகாதீரா போல ஹீரோ ஜெயித்திருந்தால், கொண்டாடியிருப்பார்கள். அதிரடிப்படைக்கும் பஞ்சத்தில் கிடந்த சோழப்படைக்கும் நடக்கும் போரில், ஏதாவது புத்திசாலித்தனமாகவோ அல்லது காட்டு விலங்குகளின் தயவாலோ (அவதார்) சோழப்படை ஜெயித்திருந்தால், ஆஹாவென்றிருப்பார்கள். பாதிவரை மேஜிக்கலாக யோசித்த இயக்குனர், இறுதியில் லாஜிக்கலாக யோசித்ததின் விளைவு - எல்லோருக்குமே ஏமாற்றம்.

---

ஐந்தாறு நாட்கள் கழித்து, வேறு சில நண்பர்கள் அழைத்ததால் திரும்பவும் சென்றேன். ஏதோ ரவீந்திரனுக்கு நம்மாலான உதவி.

இப்ப, இரண்டாம் பாதி வேறு மாதிரி இருந்தது. சில காட்சிகளை கட் செய்திருந்தார்கள். அதை சொல்லவில்லை. (தற்போது சேட்டிலைட் ப்ரோஜக்‌ஷன் என்பதால், ஆபரேட்டர் இஷ்டத்திற்கு கட் செய்யாமல், கட் செய்தாலும் பாதிப்பு இல்லாத காட்சிகளை கட் செய்திருந்தார்கள். குறிப்பாக, பயணத்திற்கு முன்பு தற்கொலை செய்துக்கொள்ளும் கிழவனாரின் காட்சி)

தொடரும் என்று முடித்தாலே, இயக்குனர் முடிக்கத்தெரியாமல் முடித்திருக்கிறார் என்றொரு எண்ணம் வந்துவிடுகிறது. இயக்குனர் நினைத்தப்படி கன்னாபின்னாவென்று எடுத்து, முடிக்க தெரியாமல் முடிக்கவில்லை. இப்படித்தான் முதலிலேயே யோசித்து, ஸ்கிரிப்ட் எழுதி, அதைத்தான் எடுத்திருக்கிறார் என்ற நம்பிக்கையோடு பார்க்கும்போது, படம் கண்டிப்பாக கவரும். அது என்னவோ தெரியவில்லை. செல்வராகவன் படத்தை இரண்டாம் முறை பார்க்கும் போது, இன்னமும் பிடிக்கிறது. புதுப்பேட்டையும் இப்படித்தான்.

நெகட்டிங் ரிவ்யூவில் மூழ்கிவந்த நண்பர்கள், படத்தை பார்த்துவிட்டு, நல்லாதானே இருக்கிறது என்றார்கள். கடைசியில் கார்த்தி காப்பாற்றும் சிறுவன், சோழ மன்னரின் வாரிசு என்பது தெரியாமலேயே பலர் வெளியேறினார்கள். குழந்தைகளும், தாய்மார்களும் பார்க்க முடியாமல் சில காட்சிகள் இருப்பது, படத்திற்கு வரும் கூட்டத்தை தடுக்கும் விஷயங்கள்.

---

நல்ல திறமையான இயக்குனர்களிடம், நிர்வாகத்திறமை இல்லாதது பெரிய குறை. சரியாக திட்டமிடாததால், அதிக செலவு இழுத்துவைப்பதால், கால தாமதம் ஆக்குவதால், படத்தின் வெற்றிக்கு சிக்கல் இழுத்துவைப்பார்கள். இந்த படத்திலும் அப்படி நிறைய.

ஆனால், செலவு என்று பார்க்கும்போது, 30 - 35 கோடி என்கிறார்கள். அந்த செலவுக்கு படம் படு பிரமாண்டமாகத்தான் தெரிகிறது. இதைவிட அதிகம் செலவழித்து வந்த தமிழ்ப்படங்களை பார்க்கும்போது, இது ஒன்றும் மோசமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

---

’யாரடி நீ மோகினி’ படத்தில் ஒரு காட்சியில் தனுஷ் தன்னுடைய சாப்ட்வேர் ப்ரோகிராமை, ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொடுப்பார். அதற்கு பல மென்பொருட்நிபுண விமர்சகர்கள், ‘எந்த கம்பெனிலய்யா, பிரிண்ட் அவுட் எடுக்கிறாங்க?’ என்று கேள்வி எழுப்பினார்கள். கோட் ரிவ்யூ பண்ண ப்ரிண்ட் அவுட் எடுக்கும் நிறுவனங்கள் இருந்தாலும், ஒரு காட்சியை எப்படி எடுத்தாலும் வெளுத்துக்கட்ட ஆட்கள் இருக்கிறார்கள். சாப்ட்வேர் ஹீரோ பற்றிய படமென்றால், படம் பார்க்க சாப்ட்வேரில் வேலைப்பார்ப்பவர்கள் மட்டுமா வருவார்கள்?

எல்லோருக்கும் புரியணுமே’ன்னு எளிமையா எடுத்தாலும் திட்டு. அதான் புரியுமேன்னு நவீனமா எடுத்தாலும் திட்டு.

சோனியா டைவர்ஸின் போது வந்த பேட்டியில், வாரிசு பற்றிய ஒரு கேள்விக்கு, ”என் படங்கள் தான் என்னுடைய வாரிசுகள்” என்றார் செல்வராகவன். அதற்காகவாவது, திட்டுவதை விட்டு வைக்கலாம்.

அப்படி இல்லாமல், திட்டில் இருந்து தப்பிக்க ஒரே வழி - இயக்கம் ’ஜேம்ஸ் ஸ்பீல்பெர்க்’ அப்படின்னு ஏதாச்சும் போட வேண்டியதுதான்.

.

Monday, January 18, 2010

பொய் மூட்டை

இறுக கட்டிவைக்கப்பட்ட என் பொய்களெல்லாம்
வெளியேற ஏதுவின்றி அமைதியாய் காத்திருக்கும்...

என்றேனுமொரு தனித்த பயணம் வேண்டி
நாள் குறிக்கையில் மூட்டையிலிருந்து
முதல் பொய் ஒன்று அறைத்தோழனை அடையும்...

வீட்டிலிருந்து வரும் அழைப்பிற்காய்
அடுத்த பொய் வெளியே வரும்...

பேருந்திற்கான காத்திருப்பில் எதிர்பாராமல்
சந்திக்கும் நட்பு இன்னுமொரு பொய்யை சுமந்து போகும்...

இப்படியாக அரை மூட்டை காலியான பின்பு,

போகுமிடத்தில் வீட்டிற்கென வாங்கும் தோரணமொன்று ,
முதல் பொய்யை இழுத்துப்பிடித்து மூட்டையில் திணிக்கும்...

உச்சிப்பொழுதில் சாப்பிட்டயா என கேட்டு வரும்
அம்மாவின் அழைப்பிற்கு வெட்கப்பட்டு
இரண்டாம் பொய் இடம் பெயரும்...

அலைந்து திரிந்து அறை திரும்பி வெந்நீர் குளியலுக்கு பின்
சகவாசியுடன் அருந்துமொரு இரவு உணவுடன்
அடுத்த பொய் தன்னிடத்திற்கே திரும்பும்...

அடுத்த நாள் அலுவலகத்தில் வார இறுதி எப்படியிருந்ததென
நண்பன் கேட்கையில் இறுதிப்பொய்யும்
தன்னை மூட்டைக்குள் புகுத்தி இறுக்கமாய்
முடிச்சிட்டுக்கொள்ளும்...

பொய்களின் ருசியை முழுவதுமாய்
சுவைக்கத்தெரியாமல் ஒரு அசடென
என் நாட்களை முடிக்கிறேன்...!!!

மூட்டையிலிருந்து வெளிவரும் நாட்களுக்காய்
என் பொய்களெல்லாம் மீண்டும்
காத்திருக்கின்றன...!!!

-மகேந்திரன்.

.

Saturday, January 16, 2010

காலடியில் சூரிய கிரஹணம்

தென்னங்கூரை வழியாக எப்போதும் தரையில், சுவரில் விழும் சூரிய ஒளி... வட்ட வட்டமாக...நேற்று மதியம் ஒரு மணிக்கு மேல்...கொஞ்ச நேரம் கழித்து...

ரெண்டு மணிக்கு பக்கத்தில்...இதை பார்க்க கன்னியாக்குமரி போலாமா, ராமேஸ்வரம் போலாமா என்று யோசித்து, பிறகு எங்கும் போகாமல் வீட்டில் படுத்து கிடந்தால், அது என் காலடி கீழேயே வந்து 'ஷோ' காட்டிவிட்டு சென்றுவிட்டது.

.

Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன்

ஒரு படத்திற்கு கிளைமாக்ஸ் ரொம்ப முக்கியம். படத்தின் ஆரம்பமோ, மற்ற பகுதிகளோ எவ்வளவு நன்றாக இருந்தாலும், பெரும்பாலும் படத்தின் முடிவை பொறுத்துத்தான் ரிசல்ட் அமையும். இந்த படத்திலும், என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் படம் முழுக்க ரசித்து பார்த்தாலும், வெளியே வந்தவுடன், படம் பார்க்க காத்திருந்தவர்களிடம், ‘படம் நல்லா இல்லை’ என்று சொல்லிவிட்டார். இதற்காகவே இந்த பத்தி முதலில்.’காதல் கொண்டேன்’ பட விளம்பரத்தில் ‘A Selvaraghavan Film' என்று போட்டதை பார்த்து, ‘இதுல்லாம் ஓவர்’ என்று நினைத்திருந்தேன். அதற்கு பிறகு பல படங்களில், அதை நிருபித்து காட்டிவிட்டார். இப்போது டைட்டில் பார்க்காமலே சொல்லி விடலாம். ‘A Selvaraghavan Film'.

கடல் கடந்து, காடு கடந்து, ஏழு விதமான தடைகளைத் தாண்டி, பிரமாண்டமாக, விறுவிறுப்பாக சோழ பரம்பரையிடம் இருக்கும் ஒரு பாண்டிய நாட்டு சிலை நோக்கிய பயணம் இப்படத்தின் கரு. முதல் பாதி முழுக்க கலகலப்பு, பரபரப்பு, விறுவிறுப்பு. இரண்டாம் பாதி, தரித்திரம் கண்ட சரித்திரத்தின் சோகம்.

பல விஷயங்கள் இந்த படத்தில் புதுசு. இதுவரை இப்படி ஒரு தமிழ்படம் வந்ததில்லை என்று தைரியமாக சொல்லலாம். இந்த படத்தில் இருந்த சில காட்சிகளை இப்படி எடுக்கும் தைரியம் செல்வராகவனுக்கு மட்டுமே உண்டு என்றும் சொல்லலாம். மற்றபடி, கார்த்தியின் லோக்கல் வசனங்கள், ஹீரோவை உரசும் ஹீரோயின்கள், டப்பாங்குத்து ஆடும் சோழ மன்னன் என படமெங்கும் வழக்கம்போல் செல்வராகவன் டச்.

படத்தில் வெயிட்டான கேரக்டர், கார்த்தியுடையது என்று சொல்ல முடியாது. ரீமா சென்னும், பார்த்திபனும் தான் நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில், ’படம், ஆங்கில படத்திற்கு இணையாக இருக்கிறது’ என்றதற்கு ‘ஏன் எப்போதும் ஆங்கில படத்துடன் ஒப்பிடுகிறீர்கள்?’ என்று ஆளாளுக்கு பொரிந்தார்கள். கற்பனை திறன், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என பல விஷயங்களில் நாம் காலரை விட்டு கொள்ளலாம். குழுவுக்கான ஒப்பனை, கிராபிக்ஸ் என சில விஷயங்களில் இன்னமும் மெனக்கெட வேண்டும். படம் பார்க்கும்போது, பல ஆங்கில படங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இவ்வளவு கஷ்டப்பட்டு படமெடுத்திருக்கும் செல்வராகவன், இன்னும் கவனமாக கிளைமாக்ஸை செதுக்கி இருக்கலாம். சினிமாத்தனமாக இருந்தாலும், குழப்பமில்லாமல், தெளிவாக முடித்திருக்கலாம். சரி, இவ்வளவு உழைப்புக்கு பிறகு இப்படி சொல்லிக்கொண்டே போவது, பெரும்பாவம். இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் - புதுமை. துணிச்சல். பிரமாண்டம்.

Thursday, January 14, 2010

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்வருஷம் முழுக்க விரட்டுற காக்கைக்களுக்கு, இன்னைக்கு செம பார்ட்டி...

Monday, January 11, 2010

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா

’சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பது கற்றுக்கொடுப்பதற்காக எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல. அது சுஜாதாவின் ஒரு சிறுகதை தொகுப்பு என்பது சுஜாதாவின் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். தொகுப்பில் உள்ள முதல் கதையின் தலைப்பே, புத்தகத்தின் தலைப்பு. முழுக்க முழுக்க நகைச்சுவை படர்ந்திருக்கும் கதை இது. குங்குமத்தில் வெளியானது. எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக 1981க்கு முன்பு.சுஜாதாவின் கதைகள் எல்லாவற்றிலும் முதல் வரி படிப்போரை உள்ளே இழுத்துவிடும். கதை எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் அறிவுரையும் இதுதான். இந்த கதையின் முதல் பாரா...

ஒரு அரிய வாய்ப்பு! நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத்தொடர்பு கொள்ளுங்கள்: த.பெட்டி எண்: 2355.

முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக இந்த கதையை படிக்க விரும்புபவர்கள், இப்படியே கிளம்பி விடவும். நான் வாசித்து ரொம்பவும் ரசித்த கதையை இங்கே பகிர்ந்துக்கொள்ள போகிறேன்.

கதையின் நாயகன் ராஜரத்தினம், மேலே இருக்கும் விளம்பரத்தை தினமணியில் பார்ப்பதில் தொடங்குகிறது கதை. ராஜரத்தினத்துக்கு அவர் எழுதும் கதைகள் பத்திரிக்கையில் வர வேண்டுமென்பது ஆசை. ஆனால், எழுதிய கதைகள் ஒன்றும் பிரசுரமாகவில்லை. ஒருநாள் இந்த விளம்பரத்தைப் பார்த்து அவர் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், அதை ராஜரத்தினத்தின் வார்த்தைகளிலே சுஜாதா எழுதியிருக்கிறார்.

சுஜாதா பற்றி அவருடைய கதாபாத்திரமான ராஜரத்தினம் என்ன நினைக்கிறார்?

“சுஜாதாவிடம் கற்றுக்கொள்ள!” சர்தான், சுஜாதா வராறா! அந்த ஆளு சுமாரான எழுத்தாளன்தான்; ஒத்துக்கறேன், அங்க இங்க படிப்பேன். வாத்யார்கிட்டே சரக்கு இருக்கலாம். அவருதான் லாண்டரி கணக்கு எழுதினாக்கூட போடறாங்களாமே!

விளம்பரத்தை பார்த்து சுஜாதா நடத்தும் சிறுகதை பட்டறைக்கு விண்ணப்பம் எழுதிப்போடுகிறார் ராஜரத்தினம். அவர்களும் வர சொல்கிறார்கள். இவரும் அவர்கள் வர சொன்ன ஹோட்டலுக்கு சொல்கிறார். அங்கு ஒருவர் அவரை விசாரித்துவிட்டு மாடியில் இருக்கும் அறைக்கு போக சொல்கிறார்.

மெள்ள மாடிப்படில ஏறிப் போனேன், எதிர்பார்ப்பில என்னோட இருதயம் ஒரு ரெண்டு படி முன்னாலேயே ஏறுது. அந்த ரூம் கதவைத் தட்டினேன். இல்லை, ‘டக் டக் கினேன்...’ எப்படி?

என்ன குசும்பு, பாருங்க? கதை வந்த ஆண்டை நினைத்துக்கொள்ளவும்.

அப்புறம் அந்த அறையின் கதவை ராஜரத்தினம் தட்ட, கதவை திறப்பது ஒரு பெண்.

“மன்னிச்சுக்கங்க, இதானே ஒம்பது?”

“ஆமாம் உள்ளே வாங்க.”

“சுஜாதாவை சந்திக்கலாம்னுட்டு”

“நான்தான் சுஜாதா”ங்கறா அந்தப் பொண்ணு.


அடுத்த ஆறு பக்கத்துக்கு அந்த பொண்ணுக்கூட நடக்குற கசமுசா தான் கதை. முடிவு ஆஹா ஓஹோ’ன்னு சொல்லுற மாதிரி இல்லாம, யூகிக்கும்படி இருந்தாலும், அந்த எள்ளலும் நக்கலும் கலந்த நடை இருக்கே? சூப்பரு...

“ஒரு பெண்ணை வர்ணிக்கிறீங்க. சரி, நல்ல ஆரம்பம். ஆனா நீங்க ஒரு பெண்ணைக் கிட்டத்தில பார்த்திருக்கீங்களா?”

“ம்... இல்லைதான்”

“எடுங்க பேப்பரை. என்னைப் பாருங்க. வர்ணிங்க. எழுதுங்க”


இப்படியே ராஜரத்தினத்துக்கு கதை எழுத பழக்கிவிடுறாங்க.

ராஜரத்தினம், “வேண்டாங்க. கதை கொஞ்சம் வேற மாதிரி போவுது.”

“என்ன வேற மாதிரி?”

“அடுத்த பக்கத்தில அவங்க ரெண்டு பேரும் ஒரு கணத்தில் சபலத்தில் தம்மை இழந்துர்றாங்கன்னு வரது!”

“சரி, அதுக்கென்ன இழந்துட்டாப் போச்சு!”

“என்னங்க இது?”

“இலக்கியங்க! வாங்க!”


---

சிறுகதை எழுதுவது எப்படி?
சுஜாதா
விசா பப்ளிகேஷன்ஸ்
112 பக்கங்கள்
50 ரூபாய்

.

Saturday, January 9, 2010

ஜக்குபாய் - விமர்சனம்“இந்தக் கதையப் பத்தி எனக்கு நல்லா தெரியும். இது நான் நடிக்கிறதா இருந்த படம். இந்தக் கதை வசாபின்னு ஒரு ஃப்ரெஞ்ச் படம்.”

-ரஜினிகாந்த்என்ன தலைவா, நீங்க? நான் படம் பார்க்கிறதுக்கு முன்னாடி கதையே கேட்க மாட்டேன். நீங்க என்னடா’ன்னா...???ஆனா எனக்கென்னமோ, இந்த படம் அப்படியே அந்த படம் மாதிரி இருக்கும்’ன்னு தோணலை.பாருங்களேன்! அதுல கருப்பு கோட், உள்ள கருப்பு சட்டை. இதுல கருப்பு கோட், உள்ள வெள்ளை சட்டை. இப்படி கதையில பல மாற்றங்கள் இருக்கும்’ன்னு நினைக்கிறேன்.நன்றி: சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்.சரியா தெரியாட்டி, க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.

.

அசல் - டொட்ட டொய்ங்

காதல் மன்னன் வந்தபோது, இயக்குனர் சரண் மேல் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விகடன் கார்ட்டூனிஸ்ட், பாலசந்தர் அசிஸ்டெண்ட், இண்ட்ரஸ்டிங்கான காட்சியமைப்புகள் என்று. முதல் படம் ‘காதல் மன்னன்’ ரொம்ப பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ’காதலுக்கு மரியாதை’யைக்கூட அதற்கு காரணமாக சொல்லலாம். பிறகு ’அமர்க்களம்’ அவ்வளவாக பிடிக்கவில்லை. ’பார்த்தேன் ரசித்தேன்’ அவர் எங்கோ பார்த்து, ரசித்து எடுத்த படம் என்று தெரிந்த பின்பும், பார்த்து ரசித்தேன். ரஹ்மான் கூட்டணியில் வந்த ‘அல்லி அர்ஜூனா’, மனோஜ் நடித்ததில் உட்கார்ந்து முழுவதும் பார்த்த படம்.

ஜெமினிக்கு பிறகு அவருடைய டெம்ப்ளேட் காட்சிகள் சலிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, நகைச்சுவை என்று தாமு, சார்லி யாரையாவது வள வளவென பேச விடுவது. வசூல்ராஜாவும், அட்டகாசமும் கமலுக்காகவும், அஜித்துக்காகவும் பார்த்த படங்கள். அதன் பிறகு சாக்லேட் ஹீரோக்களை வைத்து அவர் எடுத்த எந்த படத்தையும் பார்க்கவில்லை. அசலுக்கு அவர் இயக்குனர் என்றபோது ‘அய்யய்யோ’ என்றிருந்தது. இது அவ்வளவுதான், இதற்கு அடுத்தது என்ன என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர் படங்களின் மீது தான் ஆர்வமின்மை என்ற போதிலும், ஒரு மனிதராக பரிதாபத்திற்குரியவராக இருந்தார். இவர் இவரது படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளரையும், கலை இயக்குனரையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டு, ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார். ஆரம்பம் நன்றாகத்தான் சென்றது. பின்பு, என்ன நடந்ததோ, நிறுவனத்தின் ஒரு பார்ட்னரான கலை இயக்குனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார். கமல் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை என்று புகார் கூறினார். செக் பவுன்ஸ் ஆன கேஸில் சிக்கினார். மனுசன் தொடர்ந்து கஷ்டக்காலத்தில் தவித்தார். படங்களும் எதுவும் ஓடவில்லை.
இந்த நேரத்தில் அஜித் தனது பழைய நண்பருக்கு அசல் மூலம் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சரணுக்கு மீண்டும் வெற்றி அமையுமா? பாடல்களை கேட்கும்போது அமையும் என்றே தோன்றுகிறது.

---

அஜித் ஒரு ஆச்சரியம். லவ்வர் பாயாக அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக நிற்பவர். பெரிய வெற்றிகளுக்கு பிறகு வரும் இவரின் சில படங்களை பார்க்கும்போது, கதையை கேட்கவே மாட்டாரோ? என்று தோணும். இவருடைய வெள்ளை தோலுக்கும், பாலிஷ் முகத்திற்கும் பெண் ரசிகைகள் எக்கச்சக்கமாக இருக்கலாம். எப்படி இவ்ளோ மசாலா பட ரசிகர்கள்? இதற்கும், நிஜத்தில் ஏதாவது சொல்லி உசுப்பேற்றுபவர் இல்லை. சினிமாவை வெறும் தொழிலாக, தொழிலில் ப்ரோபஷனலாக ஈடுபடுபவர். பிறகு எப்படி?

தனி ஆளாக மேலே வந்தது, அவ்வப்போது நன்றாக நடித்து பேர் வாங்குவது, தோன்றுவதை மட்டும்/அப்படியே சொல்லுவது, சினிமாவை விட்டு மற்ற பிரச்சினைக்களுக்கு போகாதது போன்ற காரணங்களால் இவரை தமிழகம் கவனித்துவருகிறது. தவிர, கொஞ்சம் அனுதாபமும் உண்டு.களிமண்ணு தான். இவருடைய நடிப்பு - இயக்குனரை பொறுத்தது. சில படங்களில் ‘அட’, சில படங்களில் ‘அடச்சே’. பேசுனாத்தானே பிரச்சினை என்று இந்த படத்தில் அவருக்கு வசனம், இரண்டு பக்கம் தானாம். படம் ஹிட்டாக இந்த ஒரு காரணம் போதாது? படத்தின் கதை, திரைக்கதையில் வேறு உதவியிருக்கிறாராம். படம் வந்தபிறகு தான் தெரியும், அது உதவியா என்று.

---

அஜித்துடன் மட்டுமில்லை. தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜுடனும் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறார் சரண். பரத்வாஜ்-வைரமுத்து-சரண் கூட்டணியின் ஏழு பாடல்களில் நாலு சுலபமாக ஹிட்டாகிவிடும். சமீபகாலங்களில் மாஸ் ஹீரோக்களுக்கென எடுக்கப்படும் படங்களில் நாலு குத்து, ஒரு லைட் மெலடி என்ற பார்முலாவில் தான் பாடல்கள் அமையும். இதில் சில சிச்சுவேஷன் பாடல்கள் தெரிகிறது. அது மட்டுமில்லாமல், ரசிகர்களுக்காக ‘தல போல வருமா?’, ‘டொட்ட டொய்ங்’ என எகிறி அடித்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் வெஸ்டர்ன் இசைதான். மறக்காமல், பரத்வாஜ் தனது எலக்ட்ரிக் கிட்டாரை எடுத்து வந்திருக்கிறார். இந்த கிட்டாரை வைத்து மட்டும் தான், பரத்வாஜ் இசை என்று கண்டுப்பிடிக்க முடியும். மற்றபடி, நிறைய மாற்றங்கள்.

ஜேம்ஸ் பாண்ட் தீம் போல ஆரம்பிக்கும் ‘காற்றை நிறுத்தி’ பாடலில் அட்டகாசம் படத்தின் ‘தல போல வருமா’ பிட், செமையா ஃபிட் ஆகியிருக்கிறது.

ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை இழிவென ஏசுவான்
உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை உயர்வென்று பேசுவான்

சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான்
தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான்
மாயமா... மந்திரமா...

தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...


பிப்ரவரியில் தமிழ்நாட்டில் எங்கும் ‘டொட்ட டொய்ங்’காகத்தான் இருக்க போகிறது. நவீன இசையில் பழைய தாளத்தில் ஆட்டம் போட வைக்கும் பாடல்.

பணயக்கைதி போல என்னைய ஆட்டி படைக்கிற!
பங்கு சந்தையை போல என்னை ஏத்தி இறக்குற!

ஹேய்! நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்குற
கத்தி கண்ணு வத்தி வச்ச என் உச்சி மண்டையில
டொட்ட டொய்ங்! டொட்ட டொய்ங்!


’ஏய் துஷ்யந்தா’வும் கேட்டவுடன் பிடிக்கும் பாடல். பழைய டைப் ராகமும், தாளமும், வரிகளும் இந்த பாடலின் பலமென்றால், பாடகி சுர்மிகியின் குரல் பாடலை இன்னமும் உயரத்திற்கு ஏற்றி செல்கிறது.

கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே வெகு நாட்கள் இருந்தோம்

பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள் சுக நினைவு


இது போதும். மீதியை அப்புறம் கேட்டுக்கலாம்.

.

Thursday, January 7, 2010

பஸ்ஸா? ரயிலா? இரண்டும் தான்...

முன்பு எனக்கு பஸ் பயணங்கள் தான் பிடித்திருந்தது. நினைத்த நேரத்திற்கு செல்லலாம். கோவை, சேலம், மதுரை என்று எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் தொடர்ந்து மற்ற ஊர்களுக்கு பஸ்கள் இருக்கும். வெயிட் பண்ண வேண்டிய தேவையிருக்காது. நமக்கு தேவையான நேரத்திற்கு கிளம்பி போய் கொண்டே இருக்கலாம். இதுவே, ரயிலென்றால் அதன் நேரத்தை பொறுத்து தான் நாம் செல்ல வேண்டி இருக்கும். அதுவும் எப்போது வேண்டும் என்றாலும் வரும். போகும். என்ன, பஸ் ஒவ்வொரு ஊராக நிறுத்தி நிறுத்தி, நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும்.ரயிலில் சவுகரியம் என்னவென்றால், இரவில் காலை நீட்டிக்கொண்டு நன்றாக படுத்து உறங்கலாம். காலையில் பல் தேய்த்துவிட்டு, டீயோ காபியோ குடித்து நாளை தொடங்கலாம். பஸ்ஸை விட வேகமாக சென்றுவிடும். ஒவ்வொரு ஊரிலும், ஐந்து நிமிடத்திற்கு மேல் நிற்காது. சின்ன ஊர் என்றால், ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். முன்னமே திட்டமிட்டு சரியாக ரிசர்வ் செய்துவிட்டால், சீப்பாக முடிந்துவிடும்.

சில இடங்களில் ரயிலின் பாதை, சாலை பாதையை விட கம்மியாக இருக்கும். உதாரணத்திற்கு, ஓசூரிலிருந்து சேலம் செல்லும் வழித்தடத்தை சொல்லலாம். கிருஷ்ணகிரி செல்லாமல், தர்மபுரி சென்று சேலம் போய்விடும். இதற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகர். இதுபோல், நாமக்கல் சுற்றுவட்டாரத்திலும் தண்டவாளங்கள் இல்லை. ஏன் இந்த பிரச்சினை என்று யாராவது சொல்லலாம். இதனால வேறு சில இடங்களில், ரயிலில் சென்றால் சுற்றி செல்ல வேண்டி இருக்கும். சேலத்தில் இருந்து கரூர் செல்ல, ஈரோட்டை சுற்றி செல்லவேண்டியிருக்கும். மற்றபடி, பெரும்பாலான இடங்களில் ரயில் தடங்களும், சாலை வழிகளும் சேர்ந்தே செல்லும்.மேலே குறிப்பிட்ட காரணங்களால், சமீபகாலங்களில் பஸ்ஸை விட ரயிலில் தான் அதிகம் பயணிக்கிறேன். எதிலும் ரிசர்வ் செய்யாவிட்டால், மாறி மாறி பஸ்ஸில் செல்வேன். இது கடுப்பான விஷயம் என்றாலும், வேண்டிய இடத்தில் இறங்கும் சுதந்திரம் இருக்கும். சில நேரம் யோசிப்பதுண்டு. பஸ்ஸில் மாறி மாறி செல்வது போல் ஏன் ரயிலில் செல்ல கூடாது என்று. நேர நேரத்திற்கு வராத ரயிலை நம்பி, எதற்கு வம்பு என்று விட்டு விடுவேன்.

கொஞ்ச நாட்கள் முன்பு, பெங்களூரில் இருந்து கிளம்பி கோவில்பட்டிக்கு அதிகாலையில் சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் சென்றால், காலை ஒன்பது மணிக்கு மேல்தான் செல்ல முடியும். அதற்கு முன்பு, செல்ல வேண்டும்.

எப்ப வேண்டுமென்றாலும் கிளம்பலாம் என்பது போல் ப்ரீயாக இருந்தேன். www.erail.in என்ற இணையத்தளம் திட்டமிடுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு ரயிலாக, இணைத்து இணைத்து பார்த்துக்கொண்டிருந்ததில், ஈரோட்டில் இருந்து கோவில்பட்டிக்கு செல்ல கோவையில் இருந்து வரும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கண்ணில் பட்டது. அடுத்த நாளுக்கு டிக்கெட் இருக்கிறதா என்று ஒரு அசட்டு நம்பிக்கையில் பார்த்தால், ஆச்சரியம். ஆர்ஏசியில் இருந்தது. புக் செய்து விட்டேன்.

பெங்களூர் - சேலம் : பஸ்
சேலம் - ஈரோடு : ரயில்
ஈரோடு - கோவில்பட்டி : ரயில்

என ரயில்-பஸ் காம்பினேஷனில் செல்வதாக திட்டமிட்டு கொண்டேன்.

போட்ட திட்டத்தின் படி, மதியம் மூன்று மணிக்கு கிளம்பினேன். ஏழரைக்கு சேலம் ரயில் நிலையத்தில் இருந்தேன். எட்டு மணிக்கு வந்த கோவை இன்டர்சிட்டி பிடித்து, ஒன்பது மணிக்கு முன்பாகவே ஈரோடு வந்தேன். செம ஸ்பீடு. சுஜாதாவின் மூன்று சிறுகதைகளை சாவகாசமாக படித்து முடிப்பதற்குள் ஸ்டேசன் வந்துவிட்டது. கோவில்பட்டிக்கு ரயில் பத்து மணிக்கு தான். இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. வெளியே சென்று, இருக்கிற கடைகளிலே எங்கு கூட்டம் அதிகமாக இருக்கிறதென்று பார்த்து, ஒரு கடையில் முட்டை வீச்சு புரோட்டா சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தால், டிக்கெட் கன்பர்ம் ஆகியிருந்தது. சொன்ன டைமுக்கு ரயில் வர, பெர்த்தில் ஏறி படுத்து உறங்கியவன், காலையில் கோவில்பட்டியில் இறங்கிய போது, மணி நாலு. ஆபரேஷன் சக்ஸஸ்!

குறிப்பு: அந்த ஈரோட்டு ஹோட்டல் பெயர் மறந்துவிட்டது. உள்ளே பெரியார் படம் மாட்டி இருந்தது. ஒவ்வொரு இலைக்கும் ஒரு பெரிய கப்பில் தாராளமாக சால்னா வைத்தார்கள். கல்லாவில் ஒரு பெண்மணி இருந்தார். பரிமாறிய பெரியவர், ரொம்ப பரிவாக பண்பாக பேச, எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அடுத்த முறை ஈரோட்டுக்கு சென்றால், அவருக்காகவே அந்த ஹோட்டல் செல்ல வேண்டும்.

இந்த பயணத்திற்கு நேர் எதிராக திரும்பி வரும்போது, ரயிலில் நான் வரும்போது பட்ட அவஸ்தை இருக்கிறதே? ஆத்திரத்தை அடக்கலாம்... ஆர்வத்தையும் அடக்கிக்கொண்டு, இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

.

Tuesday, January 5, 2010

தூத்துக்குடி கடல்

தூத்துக்குடி கடற்கரை ரொம்ப அமைதியானது. அலைகள், கரையின் அருகிலேயே ஆரம்பித்து, ஒரு மீட்டருக்குள் முடிந்து விடும் வகையை சேர்ந்தது. பாறைகள் எதுவும் இருப்பதில்லை. நேருஜி பூங்கா, ரோச் பூங்கா போன்றவைகளும், கடலுக்கு அருகிலேயே இருந்தாலும், புதிய துறைமுகம் அருகில் இருக்கும் கடற்கரை தான் பார்க்கும்படியானது.நான் பள்ளியில் படிக்கும்போது, ட்யூசன் முடித்துவிட்டு, விளையாட நேருஜி பூங்கா சென்றிருக்கிறேன். கண்றாவியாக இருக்கும். ரோச் பூங்கா - பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, அங்கிருக்கும் புதர்கள் மூலமாக சமூக விரோத காரியங்கள் நடக்க உதவியாக இருந்தது. பிறகு, புதர்கள் ஒழிக்கப்பட்டபிறகு, தருவை மைதானத்தில் கிரிக்கெட் விளையாட இடமில்லாத போது, கிரிக்கெட் விளையாட உதவியது. கார்க் பால் நன்றாக எழும்பும். தற்போது ஒரளவுக்கு சீரமைக்கப்பட்டு, ஊஞ்சல், ராட்டினம் போன்றவைகளும், நடக்க நடைபாதையும் இருக்கிறது. பார்க்கிங் காசு வேறு வாங்குகிறார்கள். இந்த ரோச் என்பவர் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தூத்துக்குடி நகராட்சியின் முதல் தலைவர்.தாமிரபரணி படத்தில் கஞ்சா கருப்பு, ”நாலு பயவுள்ளகளை உட்காரவுட்டா போதும். பீச் உருவாக்கிடலாம்” என்பார். கடற்கரைக்கான இலக்கணங்களில் ஒன்றாகி விட்டது, காதல் ஜோடி. நான் அப்படி யாரையும் இங்கு கண்டதில்லை. நான் போவது எப்போதோ ஒரிருமுறை. விசேஷ விடுமுறை நாட்களில் மட்டும் கூட்டம் கூடும். ஸ்பெஷல் பஸ் ஓடும். பூங்காவில் குழந்தைகள் கூட்டம் விளையாடிக்கொண்டிருக்கும். நாலு பேர் தள்ளுவண்டி கடை போட்டு, சுண்டல், பஜ்ஜி, அப்பளம் விற்பார்கள்.மற்றபடி எல்லா நாட்களிலும், காலை நேரங்களில் மீன் விற்பனை ஏல முறையில் நடக்கும். கடலில் இருந்து வரும் படகில் இருந்து நேராக மீன்கள் விற்பனைக்கு வரும். இதற்கென்று இரண்டு மூன்று இடை தரகர்கள் இருப்பார்கள். மீனவர்கள் மீன்களை வகை வகையாக பிரித்து, கரையில் கொட்ட, தரகர்கள் விற்பனையை தொடங்குவார்கள். மீனைப்பொறுத்து ஐம்பதிலோ, நூறிலோ ஆரம்பிப்பார். சுற்றி இருக்கும் சில்லரை வியாபாரிகளும், வீட்டிற்கு மீன் வாங்க வந்திருப்போரும், என்னைப்போல் வெட்டியாக பார்ப்பதற்கு வந்திருப்போரும் ஏலத்தில் பங்கு கொண்டு தங்கள் விலையை சொல்லுவார்கள். ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் என்றும் கூடும். அஞ்சு, பத்து என்றும் கூடும். ப்ரோக்கரேஜாக, காலை வைத்து சில மீன்களை தரகர், அவர் பக்கம் தள்ளிவைத்துக்கொள்வார்.சமீப காலங்களில், நிறைய குடும்ப தலைவிகள் மீன் வாங்க நேரடியாக இங்கு வந்து விடுவதால், ஏலத்தில் மீன்களின் விலை அதிகமாக தான் போகிறது. இருந்தாலும், மார்க்கெட்டுக்கு இது பெட்டர். மீன்களை வெட்டிக்கொடுக்கவும், இறால்களை உருவிகொடுக்கவும், நண்டுகளை உடைத்துக்கொடுக்கவும் இங்கேயே ஆட்கள் இருக்கிறார்கள். அக்டோபஸ் போன்ற சில ஜந்துகளும் இருக்கும். எனக்கு தான் பெயர் தெரியவில்லை.இங்கு துறைமுக கடற்கரையில் காலை ஏழு எட்டு மணிக்கு மீன்கள் வர தொடங்கும். இங்கு வருவதை விட, பழைய துறைமுகத்திலும், திரேஸ்புரம் கரையிலும் அதிகம் வரும். பழைய துறைமுகத்திற்கு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு படகுகள் கடலில் இருந்து திரும்பும். திரேஸ்புரத்தில் காலையில் இருந்து மதியம் வரை சென்று வாங்கி கொள்ளலாம்.இது தவிர, மீன் மார்க்கெட்டும் இருக்கிறது. தெருவில் சைக்கிளிலும், கூடையில் விற்பவர்களும் உண்டு. சில மீன்கள், காய்கறிகளின் விலையை விட குறைவாக இருப்பதால், நிறைய வீடுகளில் தினமும் சமையலில் மீன் இருக்கும். செவ்வாய், வெள்ளியில் மட்டும் சாம்பார் வைத்துக்கொள்வார்கள். இன்னும் அந்த காஸ்ட் அட்வான்டேஜ் இருக்கிறதா என்ற தெரியவில்லை.நாட்டில் சர்க்கரை வியாதிக்காரர்கள் எண்ணிக்கை கூடியிருப்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் அனைவரையும் டாக்டர்கள் நடக்க சொல்ல, அவர்களும் பீச்சிலோ, பீச் ரோட்டிலோ நடக்க கிளம்பிவிடுகிறார்கள். அது என்னடா, நடந்தா பீச்சுல தான் நடக்கணுமா? என்று கேட்டிருக்கிறேன். கான்வாஸ் ஷூ வேறு. ஆனா, அப்படியே கரையோரம் நடப்பது, நன்றாகத்தான் இருக்கிறது. பேச ஒரு ஆள் கிடைத்தால் சூப்பர்.இல்லாவிட்டாலும் பரவாயில்லை. முடிவில்லா கடற்கரையில், கால் வலிக்கும் வரை எதையாவது நினைத்துக்கொண்டு, பராக்கு பார்த்துக்கொண்டே நடக்கலாம். கரையில் வாழும் சிறு வண்டுக்கள், மணலை உருட்டி போட்டிருக்கும் கோலங்களை பார்த்துக்கொண்டு நடக்கலாம். கீழே கிடக்கும் சங்கு, சிப்பி போன்றவற்றை கையில் எடுத்து சிறு ஆராய்ச்சி செய்துக்கொண்டு நடக்கலாம். வயதான மீனவர்கள் கரையோரம் அமர்ந்து வலை தைப்பதை பார்த்துக்கொண்டு நடக்கலாம். எவ்வளவோ இருக்கிறது. கடலையே பார்த்துக்கொண்டு இருந்தாலும், சலிக்கவா போகிறது?

சுனாமி சமயத்தில், இங்கு சில இடங்களில் மட்டுமே கடல் நீர் உள்ளே வந்தது. திருச்செந்தூரில், கடல் உள்வாங்கியது. அந்த சமயத்தில், இந்த கடற்கரையோரம் ஒரு கும்பல் சுனாமி பார்க்க வந்திருக்கிறது. வருது, வருது என்று கிளப்பிவிட்டு கொண்டும், ஓடி கொண்டும் ஓட வைத்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இப்போதும் பவுர்ணமி சமயம், கடல் நீர் கரையை தாண்டி வெகு தூரம் வந்து நிற்கும். காலையில் சென்றால், தண்ணீருக்குள் நடந்து தான் கரைக்கு செல்ல வேண்டி இருக்கும்.இந்த கடலினால், தூத்துக்குடிக்கு நிறைய தொழிற்சாலைகள் வந்திருக்கிறது. வந்துக்கொண்டு இருக்கிறது. இருதினங்கள் முன்பு கூட, கர்நாடகாவில் மேதா பட்கர் தலைமையில் நடந்த போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட அனல் மின் நிலைய திட்டம் ஒன்று தூத்துக்குடிக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு அனல் மின் நிலையம் இருக்கிறது. இன்னும் நிறைய ரசாயன தொழிற்சாலைகள் இருக்கிறது. எல்லாவற்றின் கழிவும், இந்த கடலுக்கு தான். அதனால் தானோ, என்னவோ, மொத்த சோகத்தையும் உள்வாங்கிக்கொண்ட ஒரு தாயை போல் அமைதியாக இருக்கிறது.

.