Monday, November 4, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா

எனக்கு தெரிந்து ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்படங்கள் டென்வரில் ரிலீஸ் ஆவது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். ஆரம்பமும், ஆல் இன் ஆலும் இங்கு தீபாவளி ரிலீஸ்.வெற்றிகரமாக ஹாட்ரிக் ப்ளாப் கொடுத்திருக்கிறார் கார்த்தி. இயக்குனர்களால் முன்பு வெற்றிகளும், இப்போது தோல்விகளும். அவரால் படத்தின் வெற்றிக்கு ஒன்றும் பண்ண முடியாது போல.

இந்த படத்தில் கதை இல்லை என்று சொன்னால், இதற்கு முன்னால் வந்த ராஜேஷின் படங்களில் எங்கே கதை இருந்தது என்று இயக்குனர் ராஜேஷே கேட்பார்.

இதில் அப்படியே. இருந்தாலும், இந்த படம் ஏன் எடுபடவில்லை?

நான் படம் பார்த்த திரையரங்கில், படம் முழுக்க சிரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். நகைச்சுவை தோரணம். ஆனால் முழு படமாக யாருக்கும் திருப்தி கொடுத்திருக்காது. ஒரு ஒன்லைன் கதையாக  என்ன சொல்வது? குழப்பம் தான் வருகிறது.

முக்கியமாக, காஜல் அகர்வால் கதாபாத்திரம் எரிச்சலை கிளப்பியது. காஜலின் மீதல்ல. இயக்குனரின் மீது. லூஸு கதாபாத்திரங்கள், நாம் எப்போதும் பார்ப்பது தான். நகைச்சுவைக்கு என்றாலும், இப்படியா டம்பாக?

முந்தைய ராஜேஷின் படங்களில் சந்தானம் டாமினேட்டிங்காக இருக்கும். ஹீரோக்களை வாரு வாரு என்று வாருவார். இதில் அது மிஸ்ஸிங். கார்த்தி எப்போதும் டிவி நிகழ்ச்சிகளில் வந்து பேசுவது போல் பேசுகிறார். இன்னொரு செண்டிமெண்டல் மிஸ்ஸிங் - ராஜேஷின் போன படத்தின் ஹீரோ, உதயநிதி, இந்த படத்தில் கெஸ்ட் அப்பியரென்ஸ் கொடுக்கவில்லை!!!

படத்தின் ஒரே ஆசுவாசம் - தமன். ஆரம்பத்தில் யுவன் மட்டும் சொதப்ப, இதில் தமன் மட்டும் ஜொலித்திருக்கிறார். இளையராஜாவின் உற்சாகமுட்டும் தாளங்களை பொறுக்கியெடுத்து போட்டு பாடல்களை உருவாக்கியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நாள் கேட்கலாம் ரக பாடல்கள்.

80இல் நடக்கும் காட்சியில் சந்தானம் சொல்லுவார், “சுதாகர்தான் அடுத்த சீப் மினிஸ்டர். ரஜினி, கமல் எல்லாம் சும்மா சிசனல்” என்று. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாம் இப்படி தானே தப்பாக மதிப்பிடுகிறோம்? நாம் இப்போது வைத்திருக்கும் மதிப்பீடுகளும், பிற்காலத்தில் காமெடியாகத்தானே தெரியும்? இந்த படமே பிற்காலத்தில் இம்மாதிரியான பெருங்காமெடியாக மாறலாம்!!!

கார்த்தியின் படங்கள் அனைத்தையும் தயாரித்திருப்பதோ, விநியோகித்திருப்பதோ ‘ஸ்டுடியோ கிரீன்’. ஞானவேல்ராஜா, கார்த்தியின் உறவினர் என்று நினைக்கிறேன். (இல்லை என்று ஒரு விகடன் பேட்டியில் ஞானவேல்ராஜா சொல்லியிருந்தாலும்). இவர்களை வைத்து ஒன்று தான் இப்போது சொல்ல தோன்றுகிறது.

ஒரு பொன் முட்டையிடும் வாத்து செத்துக்கொண்டிருக்கிறது.

.

Thursday, October 31, 2013

ஆரம்பம் - தல தீபாவளி ஸ்பெஷல்

நிறைய முறை பார்த்தஒரு பழிவாங்கும் கதைதான். அதை கொஞ்சம் பெரிய லெவலில் தீவிரவாதம், அரசியல், ஊழல் என்று நாம் செய்திகளில் பார்த்தவைகளை மசாலாவாக எடுத்திருக்கிறார்கள். ஆங்காங்கே சுவாரஸ்யமான காட்சிகள், பஞ்ச்கள் என்று போராடிக்காமல் செல்கிறது. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.


அஜித், கோட் போடுவதை குறைத்து கொண்டாலும், கண்ணாடியுடன் ஸ்லோமோஷனில் நடப்பதை குறைக்கவில்லை. படத்தில் அவருடைய வெயிட் (நிஜமான எடையை சொன்னேன்!) ஏறி இறங்குகிறது. அஜித்தின் நடிப்பையும், வசன உச்சரிப்பையும் நக்கல் விடாமல் பார்க்க வைப்பது, சில இயக்குனர்களால் தான் முடியும். விஷ்ணுவர்தனும் அதில் முக்கியமானவர்.

முதல் பாதியில் கொடுக்கும் ட்விஸ்ட்டுகளை விட, குண்டு ஆர்யாவின் எபிஸோட் பிடித்திருந்தது. (திரைக்கு முன்னால் அமர்ந்திருந்ததால், எல்லோருமே குண்டாக தான் தெரிந்தார்கள்!!!). முதலில் பார்க்கும் போது, ஒரு மாதிரியாக இருந்தாலும், போக போக அந்த மேக்கப்பில் குறை தெரியவில்லை. நல்ல மேக்கப். முக்கியமாக, காமெடிக்கு வரும் சின்ன எபிசோடு என்றாலும், மெனக்கெட்டு எடுத்து இருக்கிறார்கள். அங்கேயே ஸ்கோர் செய்து விடுகிறார் ஆர்யா. (அங்கே மட்டும் தான். அதுக்கு அப்புறம் எப்போதும் போல் ‘ஏன் பாஸ்?’ என்று கேட்பதற்கு பதில் ‘ஏன் சீஃப்’ என்று அஜித்தை பார்த்து அவ்வப்போது கேட்டு கொண்டு, பின்னால் அலைகிறார்!!)நயந்தாரா வரும் சில சீன்களை பார்க்கும் போது, சில்க் ஸ்மிதா நினைவுக்கு வந்தார். அம்மணியோட வழக்கமான அழகு மிஸ்ஸிங். படத்தில் விஷம் குடித்து பிழைத்து வந்ததால், இப்படி இருக்கிறாரோ என்னமோ? டாப்ஸிக்கு வழக்கமான ’பேக்கு’ கேரக்டர். ஆனால், சும்மா வராமல், எல்லோருமோ கதையின் ஓட்டத்தோடு வருவது ப்ளஸ்.

ஏகப்பட்ட நட்சத்திர கூட்டம். இதனால, துணை நடிகர்களாக வருபவர்கள் கூட, எந்த ஸ்டேட்டிலோ பிரிமீயர் ஆக்டராக இருப்பாரோ என்று உற்று நோக்க வேண்டி இருக்கிறது. பின்னால் மற்றவர்கள் விமர்சனம் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.கதைக்கேற்ப, மும்பை, சென்னை, துபாய், திராஸ் என்று காட்சிகள் மாற, பார்ப்பதற்கு நல்ல விஷுவல். நீரவ்ஷா இல்லாதது குறை என்றாலும், அது படத்தில் தெரியவில்லை.

மாற்றானில் சொதப்பிய சுபா கதை, இதில் எடுபட்டிருக்கிறது. எண்பதுகளில் வந்தது போன்ற கதைதான் என்றாலும், இன்றைய காலக்கட்டத்திற்குகேற்ப திரைக்கதை தைத்திருக்கிறார்கள். பாதுகாப்பு கவச ஊழல், ஆயுத ஊழல், சவபெட்டி ஊழல் என்று காங்கிரஸுக்கு எதிரான படமாகவும் தெரிகிறது!!! தீவிரவாத தாக்குதல் காட்சியிலும், பிற காட்சிகளிலும் மதரீதியாக அடக்கிவாசித்திருப்பதால், நல்லவேளை, மோடிக்கு ஆதரவாக படமாக தெரியவில்லை!!! வசனங்கள் ஆங்காங்கே பஞ்ச்சாக வருகிறது. விஜயகாந்த் படம் வராத குறையே, இப்பல்லாம் இல்லை. படத்திற்கு ஏன் ஆரம்பம் என்ற பெயரை வைத்தார்களோ?

படத்தின் ட்ரெய்லர் ஓகே என்றாலும், எனக்கு பாடல்கள்  ரொம்பவும் பிடிக்கவில்லை. யுவன், அஜித்துக்காக போடும் தீம் இசையும் இல்லை என்பது இன்னொரு குறை. படத்திலும் பிரத்யேக தீம் இசை இல்லை. நல்லா இருந்த ஒரு பாடலையும் காணும் (ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா - யாருக்காவது காட்டினார்களா?) :-(

கூடை கூடையாக கனகாம்பரத்தை படம் முழுக்க நம் மேல் கொட்டினாலும், அவை சுவாரஸ்யம் என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும். கதையை எங்கே சுட்டாலும், தமிழ் ரசிகர்களுக்கேற்ப அதை கொடுப்பதற்கு ஒரு திறமை வேண்டும். ஒரு சிலருக்கே அது இருக்கிறது. இப்போது, அது விஷ்ணுவர்தன். கிளைமாக்ஸில் வில்லன் சாவதை ஒரு காமெடி சீனாக எடுத்திருப்பது வழக்கமில்லாத சிறப்பு. ரசித்தேன்.

படம் பார்க்கும் போது, ரெண்டு முறை கொட்டாவி விட்டாலும், தூங்கவில்லை. டென்வரில் இருக்கும் 10-12 அஜித் ரசிகர்களே, ஆங்காங்கே தியேட்டரில் கத்தும்போது, தமிழ்நாட்டில் தெறிக்கும்.

.

Monday, September 16, 2013

மங்கோலியன் க்ரில்

மங்கோலியன் சமையல், சைனீஸ் வகையை சேர்ந்தது தான். ஆனால், கடையின் அமைப்பும், சமைக்கும் முறையும் தான் வித்தியாசமானது, சுவாரஸ்யமானது.

டென்வரில் இருக்கும் மங்கோலிய உணவகங்களில் ஒன்றின் பெயர் - செஞ்சிஸ் க்ரில். மற்றொன்றின் பெயர் - யுவான் பார்பேக்யூ. இன்னும் ஆங்காங்கே இப்படிப்பட்ட வரலாற்றில் கேள்விப்பட்ட பெயர்களை நினைவுப்படுத்தும் பல உணவகங்கள் இருக்கின்றன. யாராச்சும் குப்ளாகான் என்று கடை திறக்கலாம்.

சரி, இந்த உணவகங்களில் அப்படி என்ன சுவாரஸ்யம்?

உள்ளே நுழைந்ததும், திருவோடு போல ஒரு பவுல் கொடுப்பார்கள். சில கடைகளில் எல்லாம் ஒரே சைஸில் இருக்கும். சில கடைகளில் ஸ்மால், மீடியம், லார்ஜ் என அவரவர் கொள்ளளவுக்கு ஏற்றாற் போல கொடுப்பார்கள். ஒரு டாலர் வித்தியாசம் இருக்கும்.அதை வாங்கிக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். முதலில் புரதங்கள். சிக்கன், டர்கி, மட்டன், பீப், மீன், இறால், டோஃபு போன்ற வகையறாக்கள் இருக்கும். பிறகு, காய்கறிகள். காளான், சோளம், வெங்காயம், தக்காளி, கீரை போன்றவை. அனைத்தும் சமைக்காதவை. பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், இஞ்சி, பூண்டு, உப்பு போன்ற பொடி வகைகள். கடைசியில் விதவிதமான சாஸ்கள். ஒவ்வொரு கடையிலும், இவற்றில் சில மாறுதல்கள் இருக்கும். இவையெல்லாவற்றையும் நமது விருப்பத்திற்கேற்ப, பாத்திரத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். சரியாக திட்டமிடாவிட்டால் பாதியிலேயே பாத்திரம் நிறைந்து விடும்.

இதனுடன் நூடுல்ஸோ, சாதமோ சேர்த்துக்கொள்ளலாம். முடிவில் இதை சமையல்காரரிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் நமக்கு நம்பரை கொடுப்பார். அதை எடுத்துக்கொண்டு, ஒரு டேபிளில் போய் உட்கார்ந்துக்கொள்ளலாம். இல்லாவிட்டாலும், அங்கேயே நின்று வேடிக்கையும் பார்க்கலாம்.

நாம் கொடுத்தவற்றை அங்கிருக்கும் பெரிய தோசை கல்லில் கொட்டி, கையில் இருக்கும் பெரிய குச்சியில், அப்படி இப்படி இழுத்துவிடுவார். இதுபோல், பல பேரின் சட்டிகள் அங்கே கவிழ்க்கப்படும். ஒரே கல் சமத்துவம்.அதிக நேரம் எடுக்க மாட்டார்கள். ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். அந்த சமைக்காத மாமிசங்கள் எப்படி ஒன்றிரண்டு நிமிடங்களில் வேகுகிறதோ? சந்தேகமாக தான் இருந்தது. ஆனால், நன்றாகவே வெந்திருந்தது.

சுவை சைனீஸ் வகை போல் தான். ஆனால் வாணலியில் போடாமல், கல்லில் வாட்டுவதால், பார்பேக்யூ சுவை வருகிறது. ஆனால், சுவை நன்றாக இல்லை என்று இக்கடைகளில் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் தானே எல்லாவற்றையும் எடுத்துக்கொடுக்கிறோம்? உப்பு உட்பட!!! (சில கடைகளில் அவர்களே உப்பு தண்ணீர் தெளித்து சமைப்பார்கள்.)

மங்கோலியர்களின் சாப்பாட்டை விட சமைக்கும் முறை தான் இண்ட்ரஸ்டிங். இதற்காகவே, செங்கிஸ்கான் போல் விடாமல் படையெடுக்கலாம்.

.

Sunday, September 8, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

டென்வரில் பெரிய நடிகர்கள் படங்கள் தான் வெளிவரும். கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் தவிர சில ஹை ஹைப், ஹை பட்ஜெட் படங்கள் வந்து பார்த்திருக்கிறேன். இந்த வாரம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ வந்திருக்கிறது. சிவகார்த்திக்கேயன், அதற்குள் அந்த லீகில் சேர்ந்துவிட்டாரா?சுந்தர்.சி, பூபதிபாண்டியன் கூட்டணி கற்பனை சங்கத்தை வைத்து ஒரு படத்தையே ராஜேஷ்-பொன்ராம் கூட்டணி எடுத்திருக்கிறது. (பூபதி பாண்டியன், வெற்றி இயக்குனராக தொடர்வார் என்று நினைத்திருந்தேன். அவருடைய எந்த முடிவு, அவரை இந்நிலைக்கு கொண்டு சென்றதோ?)

சும்மா இந்த டைட்டிலை வைத்தே ஒரு கதையை ரெடி செய்து படமெடுத்திருக்கிறார்கள். துப்பாக்கி திருட்டு போல சில மொக்கை தருணங்கள் இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனை, முதல் முறையாக பெரிய திரையில் இப்போது தான் பார்த்தேன். நகைச்சுவை, நடனம் பற்றி சொல்ல தேவையில்லை. அவருக்கேற்ற லைட்டான கேரக்டர். கோடிகளில் சம்பளம் கூடும் போது வரும் செய்தியை கேட்டு, சிலருக்கு பொறாமை வரும். மற்றபடி, பெரும்பாலோருக்கு பிடித்த நடிகராக இருப்பார்.

சத்யராஜ் நடிக்க மறுத்த படங்கள் லிஸ்டை கேட்டவர்களுக்கு, அவர் இப்போது நடித்து வரும் படங்களையும், கேரக்டர்களையும் பார்த்தால், அதற்கான உளவியல் பின்னணி புரிகிறதோ இல்லையோ, அவருடைய மார்க்கெட் நிலவரம் புரியும். மற்றவர்களெல்லாம் கேஷுவலாக வந்து போன மாதிரியும், இவர் மட்டும் நடித்தது போலவும் எனக்கு தெரிந்தது.

ஹீரோயின் அம்சமாக இருக்கிறார். முக எக்ஸ்பிரெஷனில் கவர்கிறார். ரவுண்ட் வருவாரா தெரியாது. ஆகலாம். (கல்யாண பெண்ணுக்கு தோழியாக வரும் காட்சியில், அவர் கட்டியிருக்கும் பட்டுபுடவையை பார்த்து ஒரு டிமாண்ட் வந்திருக்கிறது!!!)

சூரியிடம் ஒரு பேட்டியில் ‘நீங்கதான் செகண்ட் ஹீரோவாமே?’ என்று கேட்டதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை, சிவா தான்’ என்று கூச்சப்பட்டுக்கொண்டு சொன்னார். தாராளமாக, ‘ஆமா’ என்று சொல்லியிருக்கலாம். துப்பாக்கி ஆரம்பித்தபோது ஒரு பேட்டியில் சத்யன், ‘கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ அளவுக்கு’ என்று பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த படத்தை தியேட்டர் சென்று பார்க்க வைத்ததற்கு முதல் காரணம் - இமான் தான். சிலமுறை கேட்டபோது சலிப்பாக ஒரு டைப்பாக இருந்தாலும், தற்போதைக்கு தொடர்ந்து கேட்கும் ஆல்பம் இதுதான். திரும்பவும் சொல்கிறேன். இளையராஜா பாடல்களை கேட்டு ரசித்த எனக்கு, இமானுடைய சில பாடல்கள், இளையராஜா பாடல்களை நவீன தொழில்நுட்பத்தில் கேட்பதை போல இருக்கிறது.

லோ பட்ஜெட் படமென்றாலும், பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாக காட்டியிருக்கிறது. கலர்ஃபுல்.

காமெடி, காதல், பாடல்கள் எல்லாம் தூக்கலாக படத்தை தூக்கி நிறுத்தினாலும், மாட்டை கிணற்றில் இருந்து மேலே தூக்கும் காட்சி, படத்தை செண்டிமெண்டலாகவும் தூக்கிவிட்டிருக்கிறது. படத்தில் ‘காதல்’ தண்டபாணி வரை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளை தவிர, மற்றவை அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. நல்ல டைம் பாஸ். தியேட்டரில் படம் பார்த்தவர்கள், கடைசியில் வரும் மேக்கிங் டைட்டில் காட்சி வரை பார்த்து, முடிவில் கைத்தட்டி சென்றார்கள்.

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி ட்ரெண்டை திட்டி எழுதுபவர்களும், ஒருமுறை குடும்பத்துடன் சென்று படம் பார்த்துவிட்டு டென்ஷனை குறைக்கலாம்.

.

Sunday, August 11, 2013

தலைவா

இயக்குனர் விஜய் படங்களில் ஒரு கிளாஸ் இருக்கும். அந்த க்ளாஸை பெருமளவு கொண்டுவருவது, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷும் நல்லா மியூசிக் பண்ணியிருப்பார். அஜயன் பாலா போன்றவர்கள் பங்களிப்பு இருக்கும். வசனங்களும் கொஞ்சமா இருக்க, காட்சிபூர்வமா நிறைய கன்வே பண்ணுவார், இயக்குனர் விஜய். இதுக்கு மேலே, இவரு இன்ஸ்பயர் (!) ஆகுற படங்கள், நல்ல படங்களா இருக்கும். அதுக்காகவே, இவருடைய படங்களைப் பார்க்க ஒரு ஆர்வம் இருக்கும்.இந்த படமும் அப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தில் இருக்க, இந்த படம் இங்கு ரிலீஸ் ஆகியிருப்பது, எங்கள் வீட்டில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள திரையரங்கில். வியாழக்கிழமையே ரிலீஸ் ஆனாலும், 15 டாலர் என்பதால், ஒருநாள் கழித்து பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். வெள்ளிக்கிழமை மழை. அதனால், இன்று தான் போக முடிந்தது. இதற்குள் பாசிடிவ், நெகடிவ் விமர்சனங்கள் கவனத்திற்கு வந்து சேர்ந்தன.

போகும் வழியில், ஒரு இந்திய மளிகை கடைக்கு, முறுக்கு, சிப்ஸ், சமோசா வாங்கி வர சென்றேன். (என்ன தான், அமெரிக்காவில் படம் பார்த்தாலும், பார்க்குறது தமிழ் படமில்லையா? நம்மூர் பீலிங் வேண்டாம்?) சமோசா கொள்ளை விலை சொன்னதால், அதை மட்டும் வாங்கவில்லை. அந்த கடையில் ஒரு தமிழ் பையன் வேலை பார்க்கிறான். பார்த்து ரொம்ப நாள் ஆனதால், கொஞ்ச நேரம் பேசினோம். தலைவா போகிறேன் என்றதும் ‘வேண்டாம்’ண்ணா’ என்று எச்சரித்தான். ’கிளம்பியாச்சு, ஒரு டைம் பாஸ்’ என்று சொல்லிக்கிளம்பினேன்.

இன்று காலையில் ஜீன்ஸ் படத்து ‘அதிசயம்’ பாடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒன்று தோன்றியது. அந்த படம் வந்த புதிதில், அந்த பாடலின் ஒளிப்பதிவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இன்று ஏனோ அப்படி தோன்றவில்லை. அசோக்குமார் பெரிய ஒளிப்பதிவாளர் தான். இருந்தாலும், இன்றைய ஒளிப்பதிவாளர்கள் வைக்கிற கோணங்களும், வண்ணங்களும், கண்ணில் ஒத்திக்கொள்வது போல் இருக்கும். குறிப்பாக, நீரவ்ஷாவை சொல்லலாம். ஒவ்வொரு ஷாட்டும் அருமையான புகைப்படத்தரத்தில் இருக்கும். அதற்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் காரணமாக சொல்லலாம். என்னவோ, எனக்கு உலக அதிசயங்களை காட்டும் அந்த ஜீன்ஸ் பாடல், இப்போது முழுமையாக ஒளிப்பதிவு தரத்தில் இல்லை என்று தோன்றியது. உடனே, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவை பெரிய திரையில் காண வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. ’தலைவா’ - நான் காண இதுவும் ஒரு காரணம். (விஜய் படம் பார்க்குறதுக்கு என்னலாம் காரணம் சொல்ல வேண்டி இருக்குது??!!!)

இயக்குனர் விஜய், இப்ப இன்ஸ்பயர் ஆகியிருப்பது, நாயகன், தேவர் மகன், ஹிந்தி ராம் கோபால் வர்மாவின் டான் படங்களைப் பார்த்து. அதற்காக, முதலிலேயே மணிரத்னம், ராம் கோபால் வர்மா, ப்ரியதர்ஷன் போன்றோர்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறார். ரொம்ப நல்லவராம்!!!

மும்பைக்கே போகாமல், தமிழில் வந்த மும்பையில் எடுக்கப்பட்ட படங்களை மட்டும் பார்த்தால், என்ன தோன்றும்? மும்பை போலீஸ் வேஸ்ட். எதுவென்றாலும், அங்குள்ள தாதாவிடம் சென்று தான் முறையிட வேண்டும். நல்லவர்கள் நல்ல டானிடமும். கெட்டவர்கள் கெட்ட டானிடமும். மாதமொருமுறை மத கலவரம் நடக்கும். தெருக்கொரு தீவிரவாதி இருப்பான். இந்த படமும் அப்படிப்பட்ட தோற்றத்தைதான் அளிக்கிறது. புதிதாக, மொழி சார்ந்த பிரச்சினைகள் வேறு சேர்ந்திருக்கிறது.

விஜய் அரசியலுக்கு வந்தால், இப்பட கிளிப்பிங்ஸ், சாங்ஸ் ரொம்பவே உதவும். இருவர் பட பாணி, மக்கள் ஆதரவு கரகோஷ காட்சிகள் இருக்கிறது. எனக்கென்னவோ, விஜய் சீரியஸாக சமூக வசனங்கள் பேசுவது, எடுபடுவதாக தெரியவில்லை. ‘வாங்கண்ணா வணக்கங்கணா’ பாடலில் மட்டும், அதற்கு முந்தைய, பிந்தைய பாடி லேங்குவேஜ் போய், வழக்கமான ஸ்டைலில் ஆடுகிறார்.

அமலா பாலை மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்தால், ஏதோவொரு கவுண்டமணியிடம் சேர்ந்து நடித்த படத்தில், லலிதாகுமாரி டீச்சர் வேஷம் போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்வாரே, அது தான் நினைவுக்கு வருகிறது. சும்மா சொல்லக்கூடாது. அம்மணிக்கு வெயிட்டான, ட்விஸ்ட்டான வேஷம் தான். கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் காம்பையர் சுரேஷ்க்கு முதல் பாதியில் பொருத்தமாக ஹோட்டல் முதலாளி வேஷம் கொடுத்திருக்கிறார்கள். அதைப்போல், டிவியில் ரியாலிட்டி டான்ஸ் போட்டியில் ஆடியவர்களுக்கெல்லாம், பொருத்தமாக டான்ஸர்ஸ் ரோல் கொடுத்திருக்கிறார்கள். ஏன், ஹீரோ விஜய்க்கு கூட முதல் பாதி ரோல் தான் பொருத்தமாக இருக்கிறது!!!

சத்யராஜ் மேக்கப் நன்றாக இருந்தது. அவர் சொல்லி தொடங்கிய ‘கத்தியை தொட்ட’ டயலாக்கை ஹீரோ விஜய் முதல் காமெடியன் சந்தானம் வரை நாலைந்து முறை சொல்லி ஏதோ தத்துவம் போல் ஆக்கப்பார்த்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பார்த்த கதையை, விஜய் அண்ட் டீம், அவர்கள் பாணியில் சொல்லலாம் என்று பார்த்திருக்கிறார்கள். புத்திசாலித்தனமான காட்சிகள், ரொம்பவும் குறைவு. க்ளாஸாக சொல்ல நினைத்ததால், ஸ்லோவாகவும் செல்கிறது. இதனால், ஆங்காங்கே போர் அடிக்கிறது. தவிர, சிங்கம் மாதிரி பாஸ்ட் பார்வேர்ட் படங்களை பார்த்துவிட்டு, இதை பார்த்தால் இன்னும் ஸ்லோவாக தெரிகிறது.

நான் பார்த்த தியேட்டரில், இண்டர்வெல் விடவில்லை. கோகோகோலாவுடன் உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கிய காரணத்தில், ஒருகட்டத்தில் அது வேறு முட்ட தொடங்கியதால், எப்படா விடுவார்கள்? என்று தோன்றிவிட்டது. உட்கார்ந்து பார்க்க வைத்தவர்கள் - சந்தானமும், நீரவ்ஷாவும் தான்.

நாம் பார்க்காத மலையாள, ஹிந்தி, இங்கிலிஷ் படங்களை இதுவரை பார்த்து இன்ஸ்பயர் ஆகி படமெடுத்த இயக்குனர் விஜய், இப்ப நாம் பார்த்த தமிழ் படங்களையே பார்த்து இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம் இதுவென்பதால், முந்தைய படங்களில் இருந்த இண்ட்ரஸ்ட், இந்த படத்தில் நமக்கு இல்லை. அதனால், இயக்குனர் விஜய் அவர்களே, நீங்கள் நாங்கள் பார்க்காத வேறு மொழி படங்களைப் பார்த்தே இன்ஸ்பயர் ஆகி படமெடுங்கள்!!!

.

911

டென்வர், அமெரிக்கா.

திங்கள்கிழமை.

இரவு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு, டிவியில் யூ-ட்யூப் மூலமாக அதற்கு முந்தைய நாளைய ‘நீயா நானா’ பார்த்துக்கொண்டிருந்தேன். மனைவியும் கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு, ஹாலுக்கு வந்தாள். பெட் ரூமில், மகள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

திடீரென கிச்சனில் ஏதோ தண்ணீர் சத்தம். ஓடி சென்று பார்த்தேன்.

கிச்சனில் இருக்கும் வாஷ்பேசினில் இரு குழாய்கள் இணைப்பு இருக்கும். ஒன்றில், குளிர்ந்த நீரும், மற்றொன்றில் வெந்நீரும் வரும். எவ்வளவு சூடாக வரும் என்றால், அதை மட்டும் திறந்து வைத்து, கையை கிட்டே கொண்டு செல்ல முடியாது. குளிர்ந்த நீருடன் சேர்த்தே உபயோகிக்க முடியும்.


அந்த வாஷ்பேசினின் கீழ்புறம் ஒரு கப்போர்ட் உண்டு. அதற்குள்ளாக இருந்து, தண்ணீர் பீச்சியடித்துக்கொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தால், சூடான நீர். தள்ளி வந்து விட்டேன். வாஷ்பேசின் கீழே இருக்கும் குழாயில் ஏதோ பிரச்சினை. என்ன செய்ய? சிறிது நேரத்தில், கிச்சன் தரைபுறம் முழுவதும் தண்ணீர். அடுத்து வெளியே இருந்த ஹார்பட்டை நெருங்கிவிடும்.

அபார்ட்மெண்ட் அவசர பராமரிப்பிற்கு போன் செய்யலாம். நம்பர் கைவசம் இல்லை. உள்ளே எங்கோ வைத்திருந்தேன். தண்ணீர் வேகமாக சிந்திக்கொண்டிருந்தது. இந்த வேகத்தில் போனால் என்னாவது? 911க்கு போன் செய்தேன்.

911. வட அமெரிக்காவிற்கான அவசர நேர தொலைபேசி எண். தீயணைப்பு உதவியோ, போலீஸ் உதவியோ, மருத்துவ உதவியோ தேவையென்றால், இந்த எண்ணிற்கு போன் செய்யலாம். சும்மானாச்சுக்கும் போன் செய்தால் ஆப்பு. பெருசா அபராதம் விதிப்பார்கள்.

இங்கு அபார்ட்மெண்டில் லைட்டாக புகை வந்தாலே, பத்து நிமிடத்தில் வீட்டு வாசலில் பயர் இஞ்சின் நிற்கும். நம்மவர்கள் வீட்டில் சாம்பிராணி போட்டு, அடுப்பில் சாம்பார் வைத்து மறந்து போவது, தந்தூரி சிக்கனை ஓவனில் வைத்துவிட்டு தம்மடிக்க போவது என பல சந்தர்ப்பங்களில் அவர்களை அறியாமலேயே ஃபயர் இஞ்சினை வரவழைப்பார்கள். வீட்டிலிருக்கும் ஆலாரம் அலறும். அபார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து குடித்தனவாசிக்களும், இரவு பனிரெண்டு மணி என்றாலும், வெளியே பனிக்கொட்டுகிறது என்றாலும், வெளியே வந்து நிற்க வேண்டும்.

911க்கு போன் செய்து விபரத்தை சொல்கிறேன். நிதானமாக அட்ரஸ், பிரச்சினை எல்லாவற்றையும் கேட்டார்கள். இங்கே தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நான் பேச்சில் படபடக்கிறேன். அந்த பக்கம் ஸ்லோமோஷனில் பேசுவது போல் எனக்கு தோன்றுகிறது. 911 ஆபரேட்டர், தீயணைப்பு நிலையத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்க, அங்கும் அட்ரஸ் போன்றவற்றை கேட்க, சொன்னேன்.

வெந்நீர் கொட்டுவதில் புகை கிளம்ப, அபார்ட்மெண்ட் முழுக்க ஆலாரம் அடிக்கிறது.

மனைவியை பாப்பாவைத் தூக்கிக்கொண்டு கீழே போகச் சொன்னேன். எனக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை. தரைவிரிப்பில் நீர் பரவ, கால்கள் சுட, செருப்பு போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடந்தேன். தூரத்தில் ஃபயர் இஞ்சின் சத்தம் கேட்டது. எப்போதும் உடனே வருவது போல் தோன்றுவது, இன்று சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருக்கும் போது, மெதுவாக வருவது போல் தோன்றியது.

தீ என்றால் பாதிப்பு இருக்கும். தண்ணீர் தானே என்பதால் பெரிய பயம் இல்லை. நானும் கீழே போய் நின்றேன். பக்கத்தில் நின்ற பக்கத்து வீட்டு பெண்மணி, முக்கியமானவைகளை எடுத்து வந்துவிட்டீர்களா? என வினவினார். பொதுவாக, தீ போன்ற பிரச்சினைகள் வரும் போது, நம்மாட்கள் பாஸ்போர்ட், விசா போன்றவைகளை கையோடு எடுத்து வருவார்கள். எனக்கு அதெல்லாம் உள்ளே இருப்பதால், ஒன்றும் ஆகாது என நம்பிக்கை இருந்தது. இருந்தாலும், ஹாலில் தரையில் ஏதேனும் இருந்தால், நனையுமே என்று திரும்ப வீட்டிற்கு வந்தேன். எனது ஆபிஸ் பை இருந்தது. அதை எடுத்து சோபாவில் போட்டுவிட்டு, திரும்ப கீழே வர, தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டார்கள்.

ஒரு பைப் பிரச்சினைக்கு இந்த அக்கப்போரா? என்று தோன்றினாலும், என்ன செய்ய? வெந்நீர், இப்படி ஒரு பிரச்சினையை கிளப்பும் என்று நினைத்தேயில்லையே?

அவர்கள் மெதுவாக வந்து, சைரன் ஆப் செய்து விட்டு, அவர்கள் விதிமுறைகளை எல்லாம் கடைபிடித்து, மேலே வீட்டிற்குள் வந்தார்கள். நான் தான் போன் செய்தேன் என்று சொல்லி அறிமுகம் செய்துக்கொண்டேன். விபரத்தை சொன்னேன். எந்த ரியாக்‌ஷனும் இல்லை.  ஒருவித அமைதி, அவர்கள் அனைவரது முகத்திலும் காணக்கிடைத்தது.

உடல் முழுக்க கவசமாக உடையணிந்து இருந்தாலும், கைகளில் க்ளவுஸ் இல்லை. அவராலும், பைப்பை நெருங்க முடியவில்லை. பிறகு, கையுறையை அணிந்து வந்தார்கள். என்னன்னமோ செய்து பார்த்தார்கள். சுலபத்தில் பிரச்சினை முடியவில்லை. பிறகு, பைப் கனெக்‌ஷனை நிறுத்தினார்கள். அதற்குள் பாதி ஹால் முழுக்க தண்ணீர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் கொண்டு, முடிந்த வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். அதற்கு மேல், அபார்ட்மெண்ட் பராமரிப்பு குழுவிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். எதற்கு எங்களுக்கு போன் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. வேறு எதுவும் கேட்கவில்லை. தரைவிரிப்பிற்கு கீழே தண்ணீர் சென்று இருப்பதால், முழுவதுமாக ட்ரை ஆக வேண்டும். இல்லாவிட்டால், பல நோய்கள் வரும் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்கள்.

நான் எங்கள் வீட்டு வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தேன். கீழே இருந்த மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் மேலே வந்துவிட்டார்கள். நான் வாசலில் இருப்பதை பார்த்த, பக்கத்து வீட்டு பெண்மணி ‘உட்கார சேர் எடுத்து வரவா?’ என்று கேட்டார். நானென்ன கோலம் போடுவதையா பார்த்துக்கொண்டிருக்கிறேன்?

பிறகு, அபார்ட்மெண்ட்காரன் ஒரு கார்பட் க்ளினீங் நிறுவனத்திற்கு போன் செய்து வர வைத்தான். அவன், அவனுடைய வேனில் இருக்கும் மோட்டார் மூலமாக பைப் போட்டு, விதவிதமான உபகரணங்களால் வீட்டிலிருந்த தண்ணீர் முழுவதையும் எடுத்தான். தண்ணீர் நன்றாக உறிஞ்சப்பட்டிருந்தாலும், ஈரபதம் இருந்ததால், நாலு பெரிய டர்போ ஃபேன்களையும், ஒரு de-h
umidifierயும் வைத்துவிட்டு சென்றான். நைட் முழுவதும் இது ஓட வேண்டுமா? என்று கேட்டதற்கு, 48 முதல் 72 மணி நேரம் வரை ஓட வேண்டும் என்று பயம் காட்டி சென்றான்.

இந்த மெஷின்களையும் சத்தம் ரொம்ப பெரிதாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், மனநிலை கெட்டுப்போகும் வாய்ப்பை உருவாக்குவதாக தெரிந்தது. அடுத்த நாள், அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு, மனைவியும், குழந்தையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றேன். அதற்கு அடுத்த நாளும் ஓடியது. திரும்ப விடுமுறை கஷ்டம் என்பதால், நான் அலுவலகம் செல்ல, மனைவியும், குழந்தையும் பக்கத்துவிட்டிற்கு சென்றார்கள்.

சொன்ன மாதிரியே கிட்டத்தட்ட 72 மணி நேரத்திற்கு 3 நாட்களுக்கு இந்த மின் விசிறிகளை ஓட்டியே எடுத்து சென்றான். இப்போது எல்லாம் சரி. அமெரிக்க 911, ஃபயர் இன்ஜின் அனுபவமும் கிடைத்து விட்டது.

.

Saturday, July 6, 2013

சிங்கம் - 2

முன்குறிப்பு - இது ஒரு பக்க சார்புள்ள ஊர்பாசம் கொண்ட விமர்சனம்.இயக்குனர் ஹரி மேல் எனக்கு ஒரு அபிமானம் உண்டு. ஒரே காரணம், தூத்துக்குடி, திருநெல்வேலியையும் சுற்றுவட்டார கிராமங்களை தமிழ் சினிமாவில் காட்ட இருக்கிற ஒரே இயக்குனர் என்பதால். ஒரு ஊர் பாசம் தான். நாம் சுற்றி வளர்ந்த இடங்களை, ஊரில் இல்லாத போதும், படங்கள் மூலம் பார்க்க வைக்கிறாரே! அதற்கு மேல் வேகமான ஆக்‌ஷன் படங்களிலும், ஊர் பக்கம் இருக்கும் குடும்ப செண்டிமெண்ட்டை சரியாக மிக்ஸ் செய்து கொடுக்கும் அவருடைய ஸ்டைல். அவர் மேடைகளில், டிவிக்களில் கொடுக்கும் பேட்டியை பாருங்கள்! இன்னமும் சினிமா பேச்சு வழக்கு வராமல், நான் ஊர்பக்கம் பார்க்கும் ஒரு ஆள் பேசுவது போல், ஒரு கோர்வை இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்.

அதனால் அவர் எந்த படம் எடுத்தாலும் நான் பார்க்க ரெடியாக இருப்பேன். ஆனால், முதல்முறையாக அவருடைய படம் பார்க்கும் ஆர்வமில்லாமல் போனது இந்த படத்தில் தான். என்ன மோசமான ட்ரெய்லர் மேக்கிங்? எவன்யா அதை பண்ணியது? படத்தில் உள்ள ஹைலைட்ஸைக் காட்டுகிறேன் என்று சம்பந்தமில்லாமல் வெறும்  கத்தல் சீன்களாக போட்டு பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். தவிர, ஹரி முதல்முறையாக வெளிநாடுகளுக்கு சென்று படமெடுத்திருக்கிறார் என்றார்கள். எதுக்கு தேவையில்லாத வேலை என்று நினைத்துக்கொண்டேன்.

தூத்துக்குடிக்கு போய் ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்த படத்தில் பார்க்கலாம் என்று ஆர்வமாக இருந்தவனுக்கு, ரிவ்யூ படித்துவிட்டு செல்லலாம் என்று அறிவுறுத்தியது, ட்ரெய்லர்கள். அதற்கு மேல் அவர்கள் சொன்ன காரணமும் பயமுறுத்தியது. “எப்ப சிங்கம் 2 எடுப்பீங்கள்? என்று ரசிகர்கள் கேட்டார்கள். அதனால், சிங்கம் 2 எடுத்தோம்”. இப்படி ஒரு படத்தின் வெற்றியை வைத்து இன்னொரு வெற்றியை அறுவடை செய்ய நினைத்த படங்கள் எதுவும் உருப்பட்டதில்லை என்பது வரலாறு.

ஆனால், கிடைத்த வெற்றியை மட்டும் நினைத்துக்கொண்டிருக்காமல், யோசித்து திரைக்கதை அமைத்து, அதற்கு தேவையான உழைப்பை கொடுத்தால் வெற்றி பெறலாம் என்பது சிங்கம் 2 சொல்லிக்கொடுக்கும் பாடம். 

சிங்கம் 1 பார்த்துவிட்டு ஏதேனும் முன்முடிவுடன் சென்றால், பெரிதாக கவராது, சிங்கம் 2.  மற்றபடி, போராடிக்காமல் ஆக்‌ஷன், காதல், குடும்ப செண்டிமெண்ட், நகைச்சுவை என்று செல்கிறது சிங்கம் -2. எனக்கு படத்தில் பிடிக்காமல் போனது, இரண்டாம் பகுதியில் சூர்யாவும், வில்லன்களும் கத்தும் காட்டுக்கத்தல்கள். பிறகு, அந்த ஆப்பிரிக்க க்ளைமாக்ஸ்.

சில படங்களை பார்த்தால், கொஞ்சம் கட் செய்து வெளியிட்டால், நன்றாக ஓடும் என்பார்கள். இந்த படத்தில் கொஞ்சம் சவுண்ட் கம்மி செய்து வெளியிட்டால், நன்றாக ஓடும் என்பேன். அப்புறம், படம் முடிந்தவுடம் வரும் பாடலில் ஆடுபவர்கள் யார்? தயாரிப்பாளர்கள் குடும்பமா? என்ன ஆசை இது?

ஆப்பிரிக்க க்ளைமாக்ஸ் பார்த்தால், ஏதோ ப்ளாப் படம் (வில்லு, ஏகன், பில்லா 2, மாற்றான்) பார்க்கும் உணர்வு வருகிறது. மற்றபடி, அந்த காட்சிகளில் ஒரு ஒளிப்பதிவு புதுமை இருந்தது. கேமராக்களை இதுவரை வைக்காத இடங்களில் வந்து படமெடுத்திருக்கிறார்கள். மேலிருந்து விழும் காருக்கு உள்ளே, கார் வந்து மோதும் இடத்தில், சூர்யாவின் கையில், சின்ன ஹெலிகாப்டரில். நான் பார்த்தவரை தமிழ் சினிமாவில் இது முதல்முறை. ஹரி படத்தில் டெக்னிக்கல் புதுமையா? என்று ஆச்சரியப்பட்டு போனேன். ஆனால், இதை பற்றி படம் சம்பந்தப்பட்டவர்கள் உட்பட யாரும் பேசி பார்க்க வில்லை.

மற்ற காட்சிகளில் இருக்கும் புத்திசாலித்தனம், காமெடி சீன்களில் இல்லாவிட்டாலும், கொஞ்சம் மெனக்கெட்டு எடுக்கும் காட்சியமைப்புகள், வசனங்கள் போன்றவற்றால் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஹரி படங்களில் இருக்கும் காமெடி காட்சி மெனக்கெடலுக்கு ஒரு உதாரணம் - வேல் படத்தில் வரும் டீக்கடை காமெடியை சொல்லலாம். காக்கா எச்சம், டீக்கடை பற்றியெரிய வைக்கும் காட்சியை விஷுவலாக, காமெடிக்காட்சிதானே என்று நினைக்காமல் மெனக்கெட்டு எடுத்திருப்பார்கள். இதிலும் அப்படி, சந்தானம் அனுஷ்காவும் ஆடும் காதல் வந்தாலே பாடலையும், விஷ்வரூபம் ஸ்டைலில் சந்தானம் சண்டையிடும் காட்சியையும் சொல்லலாம். முதல் காட்சியில் கிராபிக்ஸும் , இரண்டாம் காட்சியில் எடிட்டிங்கும் நன்றாக இருந்தது.

மொத்தத்தில், இந்த படம் பார்த்ததில், கலவரம் உட்பட ஊரில் பார்த்த, ஊரை பார்த்த திருப்தி எனக்கு. மனைவிக்கு தலைவலி என்றாள். ஆனால், அதற்கு படம் காரணமில்லை என்றால். ஆனாலும், உண்மை நிலவரம் தெரியவில்லை.

---

இந்த ரிவ்யூ பார்த்து வயிறு குலுங்கி சிரித்தேன். நீங்களும் பாருங்க.
.

Tuesday, June 25, 2013

ராஞ்ஜனா


என்னுடன் பணிபுரியும் ஹிந்தி நண்பனுடன் ‘ராஞ்ஜனா’ பட ட்ரெய்லர் வந்த போது, அது பற்றி பேசியபோது, ‘ஹி இஸ் லுக்கிங் ஹாரிபிள்’ என்றான். நம்மாட்களும் இப்படிதானே பலகாலம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்! இருந்தாலும், காட்சி மாறும் என்று எண்ணிக்கொண்டே, ‘நேஷனல் அவார்ட் வாங்கிய யங்கெஸ்ட் ஆக்டர்’ என்றேன். ‘அப்படியா’ என்றவன், கடந்த வெள்ளியே படத்தைப் பார்த்துவிட்டு வந்தான். அவன் பார்த்துவிட்டு வந்து சொன்ன பிறகு தான், படம் வந்ததே எனக்கு தெரியும். காட்சி மாறியிருந்தது. ‘சூப்பர் மேன்... ஹி எஸ் ஆவ்சம். எக்சலண்ட் ஆக்டிங்’ என்று பாராட்டு மழை பொழிந்தான். ‘படம் சூப்பர் ஹிட்’ என்று உறுதியளித்துவிட்டு சென்றான். தனுஷிடம் என்னமோ இருக்கிறது என்று 465வது முறை நினைத்துக்கொண்டேன்.

நான் ஞாயிறன்று படம் பார்க்க சென்றேன். இங்குள்ள நிலவரத்திற்கு, நல்ல கூட்டம். எங்கள் அலுவலகத்தில் இருந்தே பலர் வந்திருந்தனர். அனைவருமே ரசித்து பார்த்தார்கள். முதல் பாதியில் தனுஷின் கோமாளித்தனமான ஜாலியான நடிப்பில் படமும் ஜாலியாக சென்றது. இரண்டாம் பாதியில், தனுஷ் சோகமான நடிப்பில் பிழிய, படமும் செண்டியானது. ஆனால், படம் முழுக்க வசனங்கள் சுவாரஸ்யம்.

நான் தியேட்டருக்குள் நுழையும் போதே, என்னை பார்த்த ஒரு நண்பர், எனக்கு ஹிந்தி தெரியாது என்பதால், சப்-டைட்டில் கிடையாதாம் என்று நக்கல் விட்டார். அதுலாம் போடுவார்கள் என்று சொல்லிவிட்டு சென்றேன். போட்டார்கள். படத்தில் இரு காட்சிகளில், தமிழில் வசனங்கள் வரும். அப்போது சப்-டைட்டில் போடவில்லை. என்னவென்று என்னிடம் கேட்டார்கள். ‘இப்ப எங்கிட்ட தான் கேட்டாகணும், பாருங்க’ என்று சொல்லிவிட்டு விளக்கினேன்.

தனுஷ் ஹிந்தி படத்தில் நடிக்கிறார் என்று நியூஸ் வந்தபோது, இந்த படத்தின் தலைப்பை சொல்லி ஒரு ஹிந்தி நண்பரிடம் அர்த்தம் கேட்டபோது தெரியவில்லை. அப்படி ஒரு ஹிந்தி வார்த்தையே கிடையாது என்றார். அடப்பாவி என்று இன்னொருவரிடம் கேட்டபோது, லைலா-மஜ்னு போல இது இன்னொரு காவிய காதல் கதாபாத்திரம். அன்-கண்டிஷனல் லவ்வர் என்று வைத்துக்கொள்ளலாம் என்றார். இதிலேயே கதையின் போக்கு தெரிந்துவிட்டேன். எவ்வளவு அசிங்கப்பட்டாலும், அடிபட்டாலும் லவ் பண்ணுவேன் என்பது தான் கதை. நம்மூரில் தனுஷ் நடித்த பல படங்களில் இது தான் கதை. ஹீரோயின் யாரையாவது காதலிப்பார். தனுஷ் கடைசிவரை ஹீரோயினை காதலிப்பார். ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது.

ஹீரோ ஹீரோயின் தவிர ஹீரோ நண்பர், நண்பரின் தங்கை, ஹீரோயினின் காதலர் என்று மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக இருந்தது. நன்றாக நடித்திருந்தனர். இது தவிர, வசனங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, (மிளகா ஹீரோ) நட்ராஜின் ஒளிப்பதிவு, லொக்கேஷன்கள் என்று படத்தில் பிடிக்க மற்ற விஷயங்களும் இருந்தன.

முடிவில், தனுஷின் உணர்வுகளின் குரலாக ஒலிக்கும் அந்த வசனம் அருமை. அந்த முடிவு எனக்கு பிடித்திருந்தது.

----

டிட்-பிஸ்

முகேஷின் கேன்சர் விளம்பரத்தை இங்கு தான் பார்த்தேன்.

மீசையை எடுத்த பத்து வயசு குறைஞ்ச மாதிரி என்போம். அது தனுஷுக்கு மிக பொருத்தம். தனது மைனஸாக மற்றவர்கள் கூறியதை, ப்ளஸாக வைத்துக்கொண்டு பயணிக்கிறார்.

தனுஷின் எனர்ஜி மிகுந்த நடனம் பலருக்கு பிடித்திருந்தது. பல காட்சிகளில், ரஜினியை பிரதியெடுத்திருந்தார். இவர் மட்டுமல்ல, இப்போது பலரும் அப்படிதான். சிங்கம் 2 ஷூட்டிங் காட்டினார்கள். சூர்யாவும் ரஜினி ஸ்டைலில் ஆடிக்கொண்டிருந்தார்.

ஹிந்தியில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர், குந்தன். தமிழில் கந்தன் என்று வைப்பார்களோ என்று நினைத்தேன். சிவாவாம்.

ஒரு காட்சியில் படித்த அறிவுஜீவிகள், தனுஷ் திருடனான காரணத்தை விடிய விடிய அலசுவார்கள். வாய்விட்டு சிரித்தேன்.

வாட்டசாட்ட, சிக்ஸ் பேக் ஹிந்தி சினிமா உலகில் தனுஷா? என்ற கேள்வி எனக்கும் இருந்தது. இதோ, தனுஷின் ஒல்லி வருகையை, பாசிட்டிவாக அலச ஆரம்பித்துவிட்டார்கள்.

.

Monday, May 13, 2013

ஜூராசிக் பார்க் - 3D

ஒரு பழைய படத்தை தியேட்டரில் போய் பார்த்து, எவ்வளவு நாளாகிறது? ஜுராசிக் பார்க் 3டியை, தியேட்டரில் போய் பார்க்க 3டி பெரிதாக ஈர்க்கவில்லை. படம் பார்த்த பழைய நினைவே தூண்டியது.


இது எனக்கு எப்போதுமே பிடித்த படம். 20 வருடங்களுக்கு முன்பு சிறு வயதில் இதற்கு முன்பு தியேட்டரில் பார்த்த படம் என்றால், டெர்மினேட்டர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்றவை நினைவுக்கு வருகிறது. இந்த படங்கள் எல்லாம் லேட் ரிலீஸ்கள். அதில் டென் கமாண்ட்மெண்ட்ஸ், எங்கள் ஊரில் இருக்கும் கிருஸ்துவ பள்ளிகளைக் கணக்கில் கொண்டு ‘கிளியோபட்ரா’வில் ரிலீஸ் செய்யப்பட்டது. எப்போது சீன் படங்களையே போடும் ‘காரனேஷன்’க்கு பள்ளி குழந்தைகளை அழைத்துவர செய்த படம், ஜூராசிக் பார்க்.

பள்ளியில் இருந்து நடத்திக்கூட்டி வந்து படம் காட்டினார்கள். சாலையில் வரிசையாக பேசிக்கொண்டு நடந்துவந்தோம். தியேட்டரைப் பற்றி எங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொண்டோம். தியேட்டரில், எதற்கெடுத்தாலும் கத்திக்கொண்டு இருந்தோம். இருட்டு, ஆசிரியர்கள் மேலான பயத்தை மறைத்திருந்தது.

அதற்கு பிறகு ஒரு காலத்தில், எப்போது ஸ்டார் மூவிஸில் இந்த படத்தை போட்டாலும், உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். மின்சார வேலி
பக்கம் இரு கார்களை துவம்சம் செய்யும் காட்சி, பாட்ஷா இண்டர்வெல் காட்சி போல், போர் அடிக்கவே அடிக்காது.

எனக்கு மட்டுமல்ல, என் மனைவிக்கும் அப்படி தான் போல. அவள் இன்னும் சிறுவயதில் பார்த்தது. பல முறை பார்த்த படம் என்றாலும், கடைசி முறை பார்த்து நாட்களாகியிருந்தால், இன்னொரு முறை பார்க்க சில நாட்களுக்கு முன்பே முடிவெடுத்தோம். தள்ளி சென்றுக்கொண்டே இருந்தது. அடுத்த வாரம், தூக்கிவிடுவார்கள் போல தெரிந்தது. அதனால், இந்த வாரயிறுதியில் செகண்ட் ஷோ போய் பார்த்தோம்.

சில மாதங்களுக்கு முன்பு, சூட்-அவுட் நடந்திருந்த தியேட்டர். படம் பார்க்கும் த்ரில்லை விட, இந்த தியேட்டரில் படம் பார்க்கும் த்ரில், ராத்திரியில் அதிகமாயிருந்தது. இரண்டு போலிஸ்காரர்கள், வாசலிலேயே நின்று நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அரங்கிற்குள் நுழைந்தால், நாங்கள் மட்டும் தான்.

நம்மூரில் ஆள் சேராவிட்டால், தியேட்டரில் என்ன செய்வார்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம். இங்கே எங்கள் இருவருக்காக படம் போட்டார்கள். பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள்.

படம் பார்க்கும்வரை, இது பழைய படம் என்ற நினைப்பே இருக்கவில்லை. படத்தில் வரும் ட்ரஸ்களைப் பார்த்தபிறகு தான், 20 வருட பழையப்படம் என்ற நினைப்பு வந்தது. ஆரம்ப காட்சிகளில், டைனோசரைக் காட்டாமலே, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பயம் காட்ட தொடங்குவார். டைனோசர்கள் மட்டுமில்லாமல், படத்தில் மேலிருந்துவிழும் கார், மின்சார கம்பி என்று மற்ற காட்சிகளிலும் பரபரப்பு இருக்கும். இதற்கு மேல், குழந்தைகளே பிடிக்காத ஒரு மனிதன், இறுதி காட்சியில் இரு குழந்தைகளும் தோளில் சாய ஹெலிகாப்டரில் செல்லும் காட்சி சொல்லும், இம்மாதிரியான படங்கள் ஜெயிக்க காரணமாக இருக்கும் மனித உணர்வை.

அமெரிக்காவில் டூர் அடித்த அனுபவத்தில் இப்படத்தை பார்க்கும் போது, இன்னும் பார்க் டூர், விசிட்டர் செண்டர் போன்ற காண்டெக்ஸ்ட் புரிகிறது.

எந்திரன் பட விமர்சனத்தில், அது எப்படி ஒரே சயிண்டிஸ்ட் இரு உதவியாளருடன் சேர்ந்து இப்படி ஒரு ரோபோ தயாரித்தார்? என்று பலர் கேள்வி கேட்டு இருந்தார்கள். இந்த படத்தில் இரு சாப்ட்வெர் இஞ்னியர்கள், ஒரு பாதுகாப்பு காவலர் என அவ்வளவு பெரிய பார்க்கிற்கு இவ்வளவு தான் கதாபாத்திரங்கள்.

அப்போது அவ்வளவு பிரமாண்டமாக தெரிந்த படம், இப்போது பட்ஜெட் படமாக தெரிகிறது. பெரிய கதவு, சிறியதாக தெரிகிறது. அப்போது அவ்வளவு தத்ரூபமாக தெரிந்த படம், இப்போது கொஞ்சம் பொம்மை டைனோசர் படமாக தெரிகிறது. ஆனாலும், அந்த ஸ்க்ரீன்ப்ளே இன்னும் ப்ரஷ். எத்தனை படங்கள், இதே திரைக்கதை பாணியில் வந்திருக்கிறது?

அந்த வகையில் இது சந்தேகமேயில்லாமல் க்ளாசிக்.

.

Sunday, May 12, 2013

கிடா வெட்டு


சாப்ட்வேர் வேலைக்காக வெளிநாட்டுக்கு வருபவர்கள் பெரும்பாலோருக்கு வேலை பிடித்து போய், இல்லை இடம் பிடித்து போய், இல்லை கிடைக்கிற சம்பளம் பிடித்து போய், இங்கேயே இருக்க ஆசைப்படுவார்கள். விசாக்காலம் முடிந்து ஊருக்கு கிளம்புவார்கள், அல்லது நிரந்தர குடியுரிமை தேடி செல்வார்கள்.

இது ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் வேலை பிடிக்காமல், இடம் பிடிக்காமல், வந்து சில நாட்களில் இந்தியா திரும்பி செல்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது, வேறு சில குடும்ப தேவைகளுக்காக உடனே திரும்பி செல்வார்கள். எங்கள் டீமில் அப்படி ஒருவன். பெயரை பிரதீப் என்று வைத்துக்கொள்ளலாம்.

பிரதீப் சமீபத்தில் தான் அமெரிக்கா வந்தான். திருமணம் ஆகி சில வாரங்களில், அமெரிக்கா வந்திருந்தான். தனியாக. மனைவியை சில மாதங்களுக்கு பிறகு கூட்டிவருவதாக ப்ளான் செய்திருந்தான். சில நாட்களிலேயே, இந்தியா திரும்ப வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். கேட்டதற்கு, தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான். மாப்பிள்ளை பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமாம். அதை எல்லாம் இங்கிருந்தே போன் மூலம், இண்டர்நெட் மூலம், அங்கிருக்கும் உறவினர்கள், நண்பர்களை வைத்து செய்யலாமே என்றதற்கு, இல்லை நான் தான் போக வேண்டும் என்றான்.

இதற்கிடையில், அவனது மாமியாருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதய ஆபரேஷனும் செய்யப்பட்டது. இப்போது கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றான். எங்கள் மேனேஜரிடமும் சொன்னான். அவர் என்னிடம் பேச சொல்லிவிட்டார். என்னிடமும் சமாதானம் செய்து, சமாளிக்க சொன்னார். அணியில் சீனியர் என்பதால், இந்த வேலையும் எனக்கு எக்ஸ்ட்ரா. நமக்கு அவ்வளவு சமாளிப்பு திறன் கிடையாது. ரொம்ப பேசவும் மாட்டோம்.

யாராவது நான் சொல்வதற்கு எதிராக எதையாவது எதையாவது சொன்னால், என் தரப்பு நியாயத்தை சொல்லிப்பார்ப்பேன். ரொம்பவும் சச்சரவுக்குள் போக மாட்டேன். நான் சொல்வதை கேட்காவிட்டால், ஏதாவது பிரச்சினை நேரும் என்று தோன்றினால், அதையும் பாதிக்கப்பட போவோரிடம் சொல்லிவைப்பேன். அவ்வளவு தான். முதல் பாதிப்புக்கு பிறகு, நம் பேச்சை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படிப்பட்ட நான் என்ன சமாதானம் சொல்வது? அவன் பக்கம் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது. அதனால், லைட்டாக என்ன செய்யலாம், இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் என்று ப்ரண்ட்லியாக சொல்லி பார்த்தேன். அவனும் அதன்படி அவன் வீட்டினரிடம் பேசிப்பார்த்தான். சில நாட்கள் ஒன்றும் பிரச்சினை இல்லாமல் போனது. திரும்ப வேதாளம் முருங்கைமரம் ஏறியது. எனக்கும் புரிந்தது. திருமணம் முடிந்து சில நாட்களில் மனைவியை விட்டு வந்தவனிடம், பெண் வீட்டினர் என்ன சொல்வார்கள்? வந்து கூட இரு என்றிருக்கிறார்கள். தவிர, பெண்ணின் அம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்.

எனக்கும் சரி என்று தான் பட்டது. இப்ப போனால், திரும்ப நினைத்தவுடன் வர முடியுமா? அதனால் ஒன்றும் பாதிப்பு இல்லையே? என்று அந்த கோணத்தில் யோசித்துவிட்டு முடிவெடுத்துக்கொள் என்று முடித்துக்கொண்டேன். இதற்கு மேல், மேனேஜருடன் பேசிக்கொள் என்றேன்.

எங்கள் மேனேஜர் லீவில் கிளம்புகிறார். புதிதாக இன்னொரு மேனேஜர் வந்திருந்தார். இவர்கள் இருவரும் அவனுடன் என்னையும் சேர்த்துக்கொண்டு மீட்டிங் வர சொன்னார்கள்.

அங்கேதான் கிடா வெட்டு. சுற்றி வளைத்தார்கள். அப்படி பண்ணலாமே? இப்படி பண்ணலாமே? என்றார்கள். சொந்த கதையை சொல்லி பார்த்தார்கள். அவன் எதை சொன்னாலும், அழகாக, ப்ரொபஷனலாக, எமோஷனலாக, செண்டிமெண்டலாக சமாளித்தார்கள். அவனால் எதையும் சொல்ல முடியாதபடி செய்தார்கள். முடிவில், அவனுடைய காசில் இரு வாரங்கள் இந்தியா சென்று குடும்பத்தை சமாளிக்க சொல்லி, அதை ப்ளானை ஏற்க செய்தார்கள். அடப்பாவிகளா!!! என்று நினைத்துக்கொண்டேன். எங்கிருந்து இதை கற்றுக்கொண்டார்களா?

ஆன்-சைட் வருபவர்கள் ஊரில் ஹவுசிங் லோன் எடுத்துவிட்டு வந்திருந்தால்,  அதை அடைத்துவிட்டு செல்லவே விரும்புவார்கள். கடனை அடைக்கும் வரை, எப்படியாவது இங்கேயே இருந்துவிட பிரயத்தனப்படுவார்கள். இவனுக்கு ஊரில் சொந்த வீடு இருந்ததால், அந்த பிரச்சினை இல்லை.

மீட்டிங் முடியும் போது, ஒரு மேனேஜர் அவனிடம் அக்கறையுடன் ஒரு அட்வைஸ் சொன்னார்.

”லீவுக்கு ஊருக்கு போகும் போது, ஏதாவது சொத்து வாங்கி போடு!!!”.

அதானே?
அப்படி போடு....!!!!

.

Sunday, May 5, 2013

யெல்லோஸ்டோன் வீடியோ

யெல்லோஸ்டோனில் வெவ்வேறு இடங்களில் எடுத்த வீடியோ துணுக்குகளை இணைத்து, பின்னணியில் இசை சேர்த்து வீடியோ படமாக்கியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து சொல்லவும்.

நிறைய இடங்களில் ஷேக் ஆகியுள்ள வீடியோ, கண் வலியை ஏற்படுத்தும். எச்சரிக்கை.


.

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 6

இன்று நிறைவு நாள். அமெரிக்காவின் தொழிலாளர் தினம் - செப்டம்பர் மூன்றாம் தேதி. இது அந்த விடுமுறை சமயம் சென்ற பயணம். ஒரு நாள் கூடுதல் விடுப்பு எடுத்து பயணித்தது.

அந்த கூடுதல் தினம் இன்று தான். இன்று அலுவலகத்தில் மற்றவர்கள் வேலை பார்க்க, நாம் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் என்ற குறுகுறுப்பே ஸ்பெஷல் தான். பள்ளிக்காலங்களில் இருந்து இன்றும் இந்த குறுகுறுப்பு தொடர்ந்து வருகிறது.

நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர், ஒரு இந்தியர். குஜராத்தியன். அவன் கூட கொஞ்சம் பேசியதில், மோடி அபிமானி என்று தெரிந்தது. மோடி புகழ் பாடிக்கொண்டிருந்தான்.

தோசை சுடுவது போல, அங்கிருந்த மெஷினில் சுட சுட பேன் கேக் (Pan Cake) செய்ய சொல்லிக்கொடுத்தான். சாப்பிட்டுவிட்டு திரும்ப, இரவு வந்த வழியே கிளம்பினோம். முந்திய தினம் தரவிறக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ கேட்டுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.இன்று செல்லும் இடம் - கிராண்ட் டெடான் தேசிய பூங்கா. செல்லும் வழியில் ஏதோ வேலை நடந்துக்கொண்டிருந்ததால், சாலையின் ஒரு பகுதியில் ட்ராபிக்கை நிறுத்தி, ஒரு சமயம் ஒரு பக்க ட்ராபிக் என்று அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஒருபக்க ட்ராபிக்கை வழி நடத்த ஒரு சிறு வண்டி வைத்திருந்தார்கள்.

கிராண்ட் டெடான், யெல்லோஸ்டோனுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு தேசிய பூங்கா. யெல்லோஸ்டோனில் அபூர்வ ஊற்றுகள் இருக்கிறதென்றால், இங்கு அழகிய ஏரிகளும், மலைத்தொடர்களும்.


யெல்லோஸ்டோனில் வெப்பத்துடன் கூடிய ரசாயன அனல் ஊற்றுகளைத் தொடர்ந்து பார்த்த கண்களுக்கு க்ராண்ட் டெடானின் ஜாக்சன் ஏரியும் அதன் பின்னணியில் இருக்கும் மலைத்தொடர்களும் குளிர்ச்சியைக் கொடுத்தது.


ஜாக்சன் ஏரி படகு பயணத்திற்கு முதலில் சென்றோம். ஆனால், சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே படகு பயணம் இருந்தது. எங்கள் நேரத்திற்கு அது சரிப்பட்டு வராததால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பினோம். அங்கு நிறையவே நேரத்தை விரயம் செய்தோம். சாப்பிட சென்ற நண்பர்கள் திரும்ப வர ரொம்பவே நேரமாகியது. நான் மனைவி குழந்தையுடன் அங்கிருந்த கடைகளைச் சுற்றி வந்துக்கொண்டிருந்தேன்.


அடுத்து அங்கு இருந்த அணையின் பக்கம் கொஞ்சம் நேரத்தை செலவழித்தோம்.


யெல்லோஸ்டோன் அனல் பறக்கும் ஆக்ஷன் படமென்றால், கிராண்ட் டெடான் டூயட் பாடல்கள் கூடிய ரொமான்ஸ் படம்.


டூயட் பாடல்கள் எடுக்க ஏற்ற இடம்.


வாக்கிங் செல்ல நடை பாதைகள், குதிரை சவாரி வழிகள் என்று பொழுதை ரம்மியமாக கழிக்க சிறந்த இடம்.


மாலை வரை அங்கிருக்கும் ஏரிகளுக்கு ஏறி இறங்கி சென்று வந்தோம். மாலையானதும் ஊருக்கு கிளம்ப தொடங்கினோம். அங்கிருந்து மாலை கிளம்பினால் தான் நடுராத்திரி அல்லது அதிகாலைக்கு முன்பு ஊர் வந்து சேர முடியும். அடுத்த நாள், அலுவலகம் வேறு செல்ல வேண்டும்.

கிளம்பும் சமயம், வெளியே வரும் இடத்தில் சின்ன ட்ராபிக். சாலையின் ஓரத்தில் கார்கள் பார்க் செய்யப்பட்டு, மக்கள் ஆர்வத்துடன் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு பக்கத்தில் நிறுத்த இடம் எதுவும் இல்லையென்பதால், நானும் மனைவியும் அங்கே இறங்கிக்கொள்ள, நண்பர் காரில் முன்னே பார்க் செய்ய சென்றார்.

 

அங்கு நின்றுக்கொண்டிருந்தது, மூஸ் எனப்படும் மான். இங்கு இருக்கும் ஸ்பெஷல் மான். அதன் கொம்பு டிசைன் தான், இதன் சிறப்பம்சம்.


சுற்றி இத்தனை பேர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாலும், அசராமல் அதன் வேலையைப் பார்த்துக்கொண்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது. நாங்களும் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பினோம்.

செல்லும் வழியில் ஒரு இடத்தில் டீ, காபியும், இன்னொரு இடத்தில் இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு, டென்வரில் வீட்டை வந்து சேரும் போது மணி இரண்டு இருக்கும். குறைந்த நேரத்தில் முடிவெடுத்துவிட்டு கிளம்பிய பயணம், ஒருவித குறைந்த திட்டமிடலுடன் சிறப்பாகவே முடிந்தது.

.

Monday, April 29, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 5

அடுத்து சென்ற இடம் - ஓல்ட் ஃபெய்த்புல் (Old Faithful). 

1870இல் ஆய்வுக்கு சென்ற குழுவினர், முதன் முதலில் பார்த்த வெந்நீர் நீருற்று இது தான். பீறிட்டுக்கொண்டு அடித்த நீருற்று, கொஞ்ச நஞ்ச உயரத்தில் அல்ல... நூற்றி இருபத்தி ஐந்து அடி உயரத்திற்கு அடித்திருக்கிறது.

அவர்கள் அங்கிருந்த நேரத்தில் ஒன்பது முறை பீறிட்டு அடித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் அடித்திருக்கிறது. சொல்லிவைத்த மாதிரி சரியான நேரத்திற்கு பீறிட்டு அடிக்க, இதற்கு பெயராக ‘பழைய நம்பிக்கை’ என்று வைத்தார்கள்.

இன்னமும் இந்த நீருற்று யாரையும் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு 91 நிமிடத்திற்கு ஒருமுறை பீறிடுகிறது. இதுதான் உலகில் கணிப்பு அதிகம் பொய்க்காத புவியியல் அம்சம்.


இங்கு இருக்கும் அரங்கம், வணிக வளாகங்கள் போன்றவற்றில், அடுத்த முறை எப்போது நீர் பீறிடும் என்பதை கணித்து எழுதி வைத்திருந்தார்கள். நாம் அதற்கெற்ப ஷாப்பிங் முடித்துக்கொண்டு, உணவருந்திக்கொண்டு செல்லலாம்.

நாங்கள் சென்ற போது, கேமரா சகிதம் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்த இருக்கைகள் நிறைந்திருந்தன. இதுதான் இங்குள்ள ஸ்டார் நீருற்று. அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட நீருற்று.

புகைந்து கொண்டிருந்தது, கணித்தது போலவே, சில நிமிடங்களில் பீறிட தொடங்கியது.


சுற்றி இருந்த கேமராக்கள் அனைத்தும், கண்கொள்ளா காட்சியாக  இந்த காட்சியை சுட்டுத் தள்ளியது.


ஏறக்குறைய மூன்று-நான்கு நிமிடங்கள் இருந்திருக்கும்.  இரு நிமிடங்கள் குறைய தண்ணீர் வந்தால், இடைவெளி 90 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்களாகிவிடுமாம்.


முடியும் போது, லைட்டாக கைத்தட்டி விட்டேன். உடனே, பக்கத்தில் இருப்பவர்கள் தொடர, முடிவில் மொத்த கூட்டமும் கைத்தட்டியது. ‘அடப்பாவிங்களா, அங்கே என்ன வித்தையா காட்டுனாங்க?!!!’ என்று கமெண்ட் விட்டபடி கிளம்பினோம்.


அடுத்த முறைக்கு, கடிகாரங்கள் திருப்பி வைக்கப்பட்டன.


அன்று இரவு தங்குவதற்கு, நாங்கள் ஏற்பாடு செய்திருந்த லாட்ஜ், அங்கிருந்து 120 மைல்கள் தொலைவில் இருந்தது. சாயந்திர நேரமானதால், அப்போதே கிளம்பினோம்.


சென்ற நேரம் நன்றாக இருட்டிவிட, நாங்கள் சென்ற வழியில் ஏதோ வேலை நடக்க, வண்டியை ஓட்ட சிரமமாகிவிட்டது. காரை மெதுவாக ஓட்ட, இன்னமும் நேரமாக நடு ராத்திரி போய் சேர்ந்தோம். அங்கு சென்று சாப்பிடலாம் என்று நினைத்திருக்க, அங்கு எந்த உணவகமும் இல்லை. கைவசம் இருந்த கொஞ்சம் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்கினோம்.

இது எவ்வளவு பழைய நிகழ்வு என்பதற்கு ஒரு சம்பவம். அப்போது தான், ‘நீதானே என் பொன் வசந்தம்’ பாடல்கள் வெளியாகி இருந்தது. தூங்குவதற்கு முன்பு, என் போனில் டவுன்லோடிவிட்டு தூங்கினேன்.

.

ஆப்கான் உணவு

வந்தேறிகளின் நாடு என்பதால், அமெரிக்காவில், பல தரப்பட்ட மக்கள், பல நாட்டு மளிகை கடைகள், உணவு பொருட்கள், உணவகங்கள் என எங்கும் காணலாம்.

அமெரிக்க அரசாங்கம், உலகில் இருக்கும் பல நாடுகளுடன் பிரச்சினையில் ஈடுபட்டாலும், அமெரிக்க மக்கள் வேறு நாட்டு மக்களுடன் எந்த பிரச்சினையும் செய்வதில்லை என்பது என் எண்ணம். (திரும்பவும், அமெரிக்கா என்பதே பல நாட்டு மக்களின் கலவை தான்...) அட்லீஸ்ட், வெறுப்பை காட்ட மாட்டார்கள். நான் வந்த புதிதில், வீட்டு பக்கம் ஆப்கான் பேக்கரி என்ற கடையைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்போது, எந்த ஆச்சரியமும் இல்லை. கியூபா, சைனா, கொரிய கடைகளை வழியெங்கும் காண்கிறேன். அந்த கடைகளில் அமெரிக்கர்கள் வர்த்தகம் புரிவதையும் காண்கிறேன்.

அப்படி சில நாட்கள் முன்பு, ஒரு ஆப்கான் உணவகத்தை பார்த்தேன். ஆப்கானிஸ்தான், எனக்கு இருவகையாக தெரியும். தாலிபான் போன்ற தீவிரவாத வழியை தேர்ந்தெடுத்த மக்கள் மற்றும் தாலிபான் மற்றும் பிற நாட்டு ராணுவத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் அப்பாவி மக்கள். அவர்கள் உணவை பற்றி யோசித்ததில்லை. இஸ்லாமிய நாடு என்பதால் அசைவ உணவு வகைகள், ரொட்டி என நம்மூர் உணவு வகை போல தான் இருக்கும் என்று நினைத்தாலும், சுவை எப்படி இருக்கும் என்பதில் ஒரு ஆர்வம் இருந்தது. தவிர கடையின் பெயரில் கபோப் என்று இருந்ததால் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று தைரியமாக உள்ளே சென்றோம்.சின்ன கடை தான். சில அமெரிக்கர்கள் உணவருந்தி கொண்டிருந்தார்கள். டிவியில் ஒரு இந்தி பாடல் ஓடிக்கொண்டிருந்தது. கடை ஊழியர்கள், தாடி வைத்துக்கொண்டோ, அல்லது பர்தா போட்டுக்கொண்டோ இருப்பார்கள் என்றெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களும் அப்படி இருக்கவில்லை. அவர்கள் அமெரிக்கர்கள் இல்லை. ஆனால், அமெரிக்க உடையில் இருந்தார்கள்.

ஆப்கான் டச் இருக்க வேண்டும் என்று கடை முழுக்க ஆப்கான் சமாச்சாரங்கள் வைத்திருந்தார்கள். ஆப்கான் உடை என்று இரு ஜோடி உடைகளை, சுவரில் மாட்டி வைத்திருந்தார்கள். நம்மூர் வடக்கத்திய உடை போல இருந்தது. நான் இதுவரை டிவியில் பார்த்த ஆப்கானிஸ்த்தனியர்கள் யாரும் இதுபோல் உடை அணிந்து பார்த்ததில்லை. மேலே தபேலாவும், ஆர்மோனியமும். நாம் தமிழ் இசை என்று சொல்லும் பாடல்களில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்களில் இருப்பது, தபேலாவும், ஆர்மோனியமும் தான்.


அப்புறம், அந்த உலகப்புகழ் பெற்ற ஆப்கான் பெண் படம், சுவற்றில் ஒரு பக்கம் மாட்டப்பட்டிருந்தது.


இன்னொரு பக்கம், சிதைக்கப்பட்ட புத்தர் சிலை இருந்தது. தென்னிந்தியர்கள் என்ற அளவில் நம்மை தெரிந்து வைத்திருந்தார்கள். கனிவான உபசரிப்பிற்கு பின்பு, உட்கார்ந்து மெனு கார்டை பார்த்தோம்.
டீ சாப்பிடுகிறீர்களா என்று கடை பெண்மணி கேட்டார். ஒண்ணே ஒண்ணு சொன்னோம். அப்படி ஒன்றும் விசேஷமில்லை. சாதாரண டீ தான். டின்னரின் போது, டீ கேட்டது தான் சிறப்பு.

அசைவ உணவு சாப்பிடலாம் என்று தான் சென்றிருந்ததால், சைவ உணவு வகைகளைத் தேடவில்லை. மெனுவில் ஒன்றே ஒன்று (கத்தரிக்காய் கறி) தான் பார்த்த ஞாபகம்.

நினைத்த மாதிரியே, சில ரொட்டி வகைகள், கறி வகைகள், கபாப்கள், ரைஸ் வகைகள் என மெனு இருந்தது. மெடிடெரெனியன் போலவும் கொஞ்சம் நம்மூர் போலவும் இருந்தது.  ஒரு ரொட்டியும், அதற்கு சிக்கன் கறியும், பிறகு சிக்கன் & மட்டன் கபாப்பும் ரைஸ் புலாவும்  ஆர்டர் செய்தோம்.


கொஞ்சுண்டு சாலட்டுடன், இரு சட்னிகள் தந்தார்கள். பச்சை கலர் சட்னி காரமாக இருக்கும் என்று எச்சரித்துவிட்டு சென்றார்கள். பொதுவாக, அமெரிக்காவில் ஸ்பெஸி என்று தரும் ஐட்டங்களில் பெயருக்கு காரம் இருக்கும். மற்றவற்றில் காரமே இருக்காது. அதனால், லைட்டாக காரம் இருக்கும் என்று நினைத்தால், காரம் சுர்ரென்று இருந்தது.

ரொட்டி நம்மூரில் செய்வது போலதான். நன்றாக ஸ்மூத்தாக  இருந்தது. சிக்கன் கறியும் அளவோடு காரத்தோடு, கொத்தமல்லி எல்லாம் தூவி நன்றாக இருந்தது. இருந்தாலும், நம்மூர் போல பலதரப்பட்ட வாசனை மசாலாக்கள் போடவில்லை. ஓகே.


இனி கடையின் முக்கியம்சமான கபாப். சிக்கன், மட்டன், பீப் என மூன்று வகைகள் இருந்தன. சிக்கனும் மட்டனும் ஆர்டர் செய்திருந்தோம். 

சிக்கன் மிருதுவாக சுவையாக இருந்தது. மட்டன் கொஞ்சம் கடினமாக இருந்தது. தவிர, நமது மட்டன் உணவு வகைகளில் எல்லாம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய் என்று வாசனை பலமாக இருக்கும். இதில் அப்படியெல்லாம் இல்லாமல், மட்டன் வாடை மிகுதியாக இருந்ததால், சாப்பிட கஷ்டமாக இருந்தது. பாசுமதி அரிசியில் புலவ், உதிரி உதிரியாக, அதற்கென்று தனியாக எந்த சுவையும் இல்லாமல் இருந்தது. சிக்கன் கறிகுழம்புடன் சாப்பிட நன்றாக இருந்தது.


சிக்கன் கபாப் + மிளகாய் சட்னி காம்பினேஷன், இங்கு சாப்பிட்டதில் ஸ்பெஷல் எனலாம். விலை அனைத்தும் மலிவே.

பாப்பா அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு சமயம், ஒரு டேபிளில் தலையை முட்டிக்கொண்டு அழ, கடைக்கார பெண்மணி அவளுக்கு ஏதோ கொடுத்து சமாதானப்படுத்தினார். அதன் பெயர் - ஃபிர்னி. டெசர்ட் வகை. எங்க வீட்டுக்கு பக்கமிருக்கும் வட இந்திய குடும்பத்தில் அதை செய்வார்கள். ரைஸ் புட்டிங் அல்லது அரிசி பால் பாயசம் போன்றது. பாதாம், பிஸ்தா போன்றவை சேர்ப்பார்கள்.  சிலர் ஆப்பிள் போன்ற பழங்களும் சேர்ப்பார்கள். குளிர வைத்து, சில்லென்று சாப்பிடுவார்கள்.

கடை உரிமையாளர், அமெரிக்க வந்த அவர்களது குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினர். டிவியில் ஹிந்தி பாடல் ஓடிக்கொண்டிருந்ததால், அதைப் பற்றி விசாரித்தோம். ஆப்கானிலும் படம் எடுப்பார்கள் என்றாலும், அதெல்லாம் கொஞ்சமே. பட்ஜெட்டும் கம்மியாகவே இருக்குமாம். இந்திய படங்கள் தான் அவர்களது பொழுதுப்போக்காம். அது சரி, ஹிந்தி படங்களை இப்படி பார்த்தால், கலக்‌ஷன் ஏன் 200 கோடியை அடிக்கடி தொடாது?

நம்மூரில் எங்காவது பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் இருக்கிறதா? இருக்கும் அரசியலில், இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாட்டில் உடுப்பி ஹோட்டல் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

.

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 4

பயணத்தை தொடருவதற்கு முன்பு, கொஞ்சம் சொந்த கதை.

---

இந்த பயணத்தொடரை சீரியஸாக தொடர்ந்து வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். பின்ன, நாலு நாள் போயிட்டு வந்த டூரை பத்தி நாலு மாத இடைவெளியில் கதை விட்டு கொண்டு இருந்தால்?!!  அதான்...

ஜனவரியில் இருந்தே அலுவலகத்தில் வேறு வேலை. அதை கற்றுக்கொண்டு வேலையை முடிப்பதற்கு, சில சமயம் வீடு வந்தும் வேலை செய்ய வேண்டி இருந்தது. வீட்டில் மனைவியுடன் உரையாடாமல், குழந்தையுடன் விளையாடாமல், அலுவலக வேலைக்காக லேப்டாப்பை பார்த்துக்கொண்டு இருப்பதே ஓவர். இதில் ப்ளாக்கர், பேஸ்புக், ட்விட்டர் இத்யாதிகளை ஓப்பன் செய்வது பெரும் பாவமாகப்பட்டதால், கைவசம் எழுத ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வந்து தேங்கினாலும், எழுதவில்லை.நான் ப்ளாக்கர் பக்கமே வராவிட்டாலும், சில நல்லவர்கள் ‘குமரன் குடில்’ க்கு வருகை புரிவது மகிழ்ச்சியே என்றாலும், ப்ளாக்கரில் புள்ளிவிவரங்கள் எடுப்பதில் ஏதேனும் Bug இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது.

----

பயணத்தைத் தொடருவோம். எங்கே விட்டோம்? ரீ-கேப்.

...முன்பு அபார்ட்மெண்ட் வீடாக இருந்ததை விடுதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பெட்ரூம்கள், ஒரு கிச்சன், ஹால் என்று இரு குடும்பங்கள் தங்குவதற்கு ரொம்ப வசதியாக இருந்தது. அன்றைய தினம் தங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகள் சொதப்பினாலும், ஏதோ நல்ல நேரத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்க, நிம்மதியுடன் தூங்கினோம். ஆன்லைனில் புக் செய்யும் போது, இனி கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவம் அந்த தினம் கிடைத்தது.....

இதுதான் நாங்கள் தங்கியிருந்த இடம். காலையில் வெளிச்சத்தில் பார்த்தபோது, மலையடிவாரத்தில் ரொம்ப ரம்மியமாக இருந்தது.
திரும்ப வடக்கு நுழைவுவாயில் வழியாக யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்குள் நுழைந்தோம்.


மேலுள்ள படத்தில் A'யில் இருந்து B’க்கு, கிட்டத்தட்ட 135 மைலை, முதல் நாளில் கடந்திருந்தோம். இன்று கடக்க வேண்டிய தூரம் - 175 மைல்கள். (படத்தில் B இல் இருந்து C)

போகும் வழியில் இருப்பவை தான், நாம் இன்று காணப்போவது. கிளம்பும்போதே, தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த சப்வேயில் ப்ரெக்ஃபாஸ்ட்டை முடித்தோம். வடக்கு நுழைவுவாயிலுக்கு வெகு அருகிலேயே. இதோ வடக்கு நுழைவுவாயில்.ஆரம்பத்தில், யெல்லோஸ்டோன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கட்டப்பட்டது. ரூஸ்வெல்ட் ஆர்ச்.முதலில் சென்ற இடம் - நொரிஸ் ஹாட் ஸ்ப்ரிங்ஸ்.

 சென்ற வழியில், நிறைய இடங்களில் மரங்கள் கருகி சாய்ந்து கிடந்தன.  யெல்லோஸ்டோனில் வருடம்தோறும் காட்டுத்தீ உருவாவது உண்டு. போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்தது. பின்பு, இந்த காட்டுத்தீயும் இந்த வனசூழலுக்கு தேவையான இயற்கையான ஒன்று என்ற புரிதல் ஏற்பட்ட பிறகு, காட்டுத்தீயால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பது, காட்டைவிட்டு வெளியே பரவுவதை தடுப்பது போன்றவை மட்டுமே அரசாங்கத்தின் நோக்கமானது. ஆனாலும், 1988 ஆண்டு வந்த தீ, ரொம்பவே ஆட்டம் காட்டிவிட்டதாம்.அதனால், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள் அங்கேயே அப்படியே இருந்து மக்கி, பிறகு புது மரங்கள் வளர்வது என முடிந்தவரை வனச்சூழலை அப்படியே பாதுகாக்கிறார்கள். மரக்கட்டைகளை அடுக்கி கொண்டு வரிசையாக செல்லும் லாரிகளை காண முடியவில்லை. :-(


நொரிஸ் ஹாட் ஸ்ப்ரிங்ஸில் எனக்கொன்றும் விசேஷமாக தெரியவில்லை. வழக்கம்போல், ஆங்காங்கே புகைந்துக்கொண்டு, கொதித்துக்கொண்டு இருந்தது. இப்படி ஒரு ஆச்சரியமான விஷயம், இங்கே விசேஷமாக தெரியாத அளவுக்கு, யெல்லோஸ்டோனில் நிறைய இடங்களில் இயற்கையின் புதிர்கள்.

ஒரு இடத்தில், இந்த நீருற்றுகள், எரிமலைகள் பற்றியெல்லாம் சுலபமாக புரிந்துக்கொள்ளும் வகையில் பலகை வடிவமைப்புகள் இருந்தன. குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சம்பந்தமான படிப்புகளில் ஆர்வமேற்பட உதவும்.


உலகில் எங்கெங்கெல்லாம் இம்மாதிரி இருக்கிறது என்று காட்டும் ஒரு படமும் அதில் இருந்தது. இந்தியா அதில் இல்லை. ஆனால், இந்தியாவிலும் வட இந்தியாவில், இமய மலை அருகில், வெந்நீர் ஊற்றுகள் இருப்பதாக அறிகிறேன்.சுற்றி சுற்றி வந்தோம். நடப்பதற்கு மர பலகைகள் அமைத்திருந்தார்கள். அதை விட்டு, கீழே இறங்கி வேண்டாம் என்று எச்சரிக்கை வேறு. என் பொண்ணு, கையில் வைத்திருந்த கண் கண்ணாடியை கீழே போட்டு விட, எதற்கு ரிஸ்க் என்று அப்படியே விட்டு விட்டு வந்தோம். ஏதோ, எங்களால் முடிந்த இயற்கைக்கு உபத்திரவம்.இங்கு எடுத்த வீடியோக்களை எல்லாம், மொத்தமாக சேர்த்து ஒண்ணு செஞ்சு வச்சுருக்கேன். அப்புறமா காட்டுறேன்.


போகும் வழியில் ஒரு ஏரியை காண, அதில் கப்பல் விட்டு, இயற்கை சூழலில் குப்பையை சேர்த்தோம். சொல்லி பார்த்தேன். ஒரு சின்ன பேப்பரால் ஒன்றும் ஆகாது என்று சாக்கு சொல்லப்பட்டது. ஆமாம், பேப்பர் தானே!!!


அடுத்து சென்ற இடம் - ஓல்ட் ஃபெய்த்புல் (Old faithful). கொஞ்சம் விலாவரியாக, அடுத்த பதிவில் பார்ப்போம்.

.