Wednesday, March 31, 2010

ஐபில் - இந்த கேட்சைப் பாத்தீங்களா?

ஆர்வத்துடன் கிரிக்கெட் பார்க்கும் பழக்கம், ரொம்ப நாட்கள் முன்பே போய்விட்டது. சமயம் அமையும்போது (நமக்கு சாதகமான அணி ஜெயிக்கிற மாதிரி இருந்தா) மட்டும் பார்த்து வருகிறேன். ஒரு காலத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் தகவல்களும் மண்டைக்குள் இருந்தது. உபயோகம் குறைந்து போய், ஏறக்குறைய அனைத்தும் மறைந்துவிட்டது.

நேற்று அலுவலகத்தில் ஒரு கேட்ச் குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தனர். கேட்கும்போது, பயங்கரமான வித்தையாக தெரிந்தது. சரி, நெட்டில் தேடி பார்க்கலாம் என்று பார்த்தால்...வீடியோ தெரியாதவர்கள், இங்கே போய் பார்க்கலாம்...

http://www.youtube.com/watch?v=kA7ZsGgF9X4

.

Tuesday, March 30, 2010

சோழனின் பழைய கோவில்

திருப்பத்தூரில் இருந்து மதுரை சென்றுக்கொண்டிருந்தபோது, நண்பனின் மொபைல் அடித்தது. எடுத்து பேசியவன், சரியென முடித்தான்.

"யாரு?"

"வீட்டுல இருந்து"

"என்னவாம்?"

"போற வழில ஒரு கோயில் இருக்காம். போயிட்டு வர சொன்னாங்க".சரியாக சொல்வது என்றால் திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை போகும் வழியில் இருக்கிறது, அந்த கோவில். திருக்கோஷ்டியூர் எனும் ஊருக்கு பக்கத்தில்.

கோவில் வாசல் பக்கத்தில் ஒரு துருப்பிடித்த போர்டு இருந்தது. கண்ணை விரித்து, வாசிக்க முயற்சி செய்ததில், ராஜ ராஜ சோழன் என்பது மட்டும் குத்துமதிப்பாக தெரிந்தது.ராஜ ராஜ சோழன் எதுக்கு இங்க வந்தாரு? என்று யோசித்துக்கொண்டே உள்ளே சென்றோம். கோவில் பூசாரியிடம், ராஜ ராஜ சோழன் விவகாரம் குறித்து விசாரித்தோம்.அவர் சொன்னது, “இந்த கோயில் பல வருஷம் பழமையானது. (எத்தனை வருஷம்’ன்னு சொன்னாரு. மறந்து போச்சு!) ராஜ ராஜ சோழனோட குலத்தெய்வம் இந்த ஈஸ்வரர். ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதற்கு முன்பு வணங்கியது இவரைத்தான். இந்த கோயிலில் தான்.”ஆதாரத்திற்கு கல்வெட்டை காட்டினார். நாம் கல்வெட்டிற்க்கே ஆதாரம் கேட்போம் என்றாலும், அப்போது கேட்கவில்லை.ரொம்ப காலமா, எந்த பராமரிப்பும் இல்லாமல், புதர், பாம்புகள் சூழத்தான் இந்த கோவில் இருந்திருக்கிறது. சமீபத்தில் தான், பராமரிப்பு வேலைகள் நடந்திருக்கிறது. மதுரையில் இருக்கும் சில வியாபாரிகள் தயவில், மாத மாதம் ஹோமம் வளர்த்து, அன்னதானம் நடக்கிறதாம்.பராமரிப்பு பண்ணுவது நல்ல விஷயம் தான். அப்படியே பழமை மாறாமல், சீராக்கினால் நன்றாக இருக்கும்.பூசாரி இன்னும் நிறைய பேசினார். கேட்டுவிட்டு கிளம்பினோம். சிறிது தூரத்தில், ஒரு பெரிய பெருமாள் கோவில் இருந்தது. நடை சாத்தியிருந்ததால், போக முடியவில்லை.

.

Saturday, March 27, 2010

கார்ட்டூன் - அம்மாவின் சாணக்கியத்தனம்

பெரிதாக்கி காண க்ளிக்கவும்.செய்தி:

தலைவர் கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. - அழகிரி.

திமுகவின் தலைமை பீடத்தை நிர்வகிக்கும் தகுதியும் திறமையும் ஸ்டாலினுக்கே உண்டு. - வெற்றிகொண்டான்

.

அங்காடித்தெரு

தமிழில் தென் மாவட்டங்களை கதைக்களமாக கொண்டு படமெடுப்பவர்கள் ரொம்ப குறைவு. ஹரி மட்டும் தான் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தார். ஆனால், அவரும் கமர்ஷியல் படங்களையே எடுப்பதால், தென்மாவட்ட மக்களின் உணர்வுகள் சரியாக படங்களில் பதிவு செய்யப்படுவதில்லை எனும் வருத்தம் உண்டு.

வெயில் பார்த்தப்பிறகு நம்பிக்கை வந்தது. விருதுநகர் புழுதியையும், வெக்கையையும் திரைக்கு கொண்டு வந்தவர், இம்முறை சென்னை ரங்கநாதன் சாலைக்கு சென்று விட்டாரே என்று படம் பார்க்கும் முன்பு, ஒரு ஏமாற்றம் இருந்தது. ஆனால், படம் பார்த்தப்பிறகு ஏமாறவிடவில்லை என புரிந்தது.

அதேப்போல், ஜெயமோகன் வசனம் என்றதும், சென்னையில் நடக்கும் கதைக்கு இவருடைய வசனம் எந்த அளவுக்கு உதவும் என்றும் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து நரக வேதனை அனுபவிக்கும் கதாபாத்திரங்களுக்கு இவருடைய வசனங்கள் பொருத்தமானது என படம் தொடங்கியவுடன் தெரிந்து கொண்டேன்.அங்காடித்தெரு - அழகான பொருத்தமான பெயர்.

படத்தில் நடிக்க வைக்காமலேயே, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை மெகா வில்லனாக்கிவிட்டார்கள். இல்லை. காட்டியிருக்கிறார்கள். படத்தில் வரும் கடையின் பெயர் - செந்தில் முருகன் ஸ்டோர்ஸ். சரவணா ஸ்டோர்ஸின் எதிரில் இருப்பதால், அண்ணாச்சியின் முகத்தைத்தான் படமெங்கும் காட்டுகிறார்கள். தனியாக ஒரு ட்யூன் வைத்திருந்தாலும், அவ்வப்போது சரவணா ஸ்டோர்ஸின் ‘எடுத்துக்கோ எடுத்துக்கோ, அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ’ போன்ற விளம்பர பாடல்கள் தான் ஒலிக்கிறது. இதில், சினேகா அக்கா வேறு. இவர்கள் படத்தின் மீது மானநஷ்ட வழக்கு போட்டால், படத்திற்கு இன்னும் விளம்பரம் கிடைக்கும். எதுக்கு வேலியில் போற...?

எல்லோருமே நன்றாக நடித்திருந்தாலும், இயக்குனர் வெங்கடேஷின் அறிமுக நடிப்பு சர்ப்ரைஸ். பணியாளர்களிடம் பல்லை கடித்துக்கொண்டு முறைப்பதாகட்டும், வாடிக்கையாளர்களிடம் பல்லைக்காட்டி இளிப்பதாகட்டும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அவர் அடிவாங்கும்போதெல்லாம் மனம் சந்தோஷப்படும் அளவுக்கு சிறப்பான நடிப்பு.

பாடல்கள் பல நாட்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பல நாள் பேவரைட். காதல் பாடலை தெய்வீக உணர்வோடு, அதாவது சாமிப்பாட்டு மாதிரி விஜய் ஆண்டனி இசையமைத்திருப்பார். படமாக்கத்தில் முழு திருப்தியில்லை. காமெடியை சேர்த்து ஃபீலை குறைத்தது போல் இருந்தது. படத்திலும் இந்த குறை ஆங்காங்கே இருந்தது.

வசனங்கள் சில இடங்களில் சரியாக கேட்கவில்லை. கதாபாத்திரங்கள் கொடுத்த பாவனைகளை பார்த்து, ஏதோ முக்கியமான வசனம் பேசியிருக்கிறார் போல என்று நினைத்துக்கொண்டேன்.

படத்தில் வரும் காதல் சமாச்சாரங்கள் எல்லாம் இருக்கட்டும். நாம் ஒரு பொருளை மலிவாக வாங்குவதற்கு பின்னால், எத்தனை பேருடைய சோகங்கள் இருக்கிறது என்பது இந்த படம் காட்டும் சுடும் நிஜம்.

சில வாரங்கள் முன்னால் வந்த விண்ணைத்தாண்டி வருவாயாவில், சென்னையின் அழகான முகத்தை காட்டி ஒரு காதல் கதையை சொல்லியிருந்தார்கள். இதில் சென்னையின் இன்னொரு முகமான, கோர கொடூர பக்கத்தை காட்டி ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார் வசந்தபாலன். அது பிடித்தவர்களுக்கு, இது பிடிக்குமா என்பது சந்தேகம். வெயில் போலவே, சில காட்சிகளில் பார்வையாளர்களை கீறிவிட்டு கலங்க வைத்திருக்கிறார். களம் தான் புதுமையே தவிர, கதையில் பெரிதாக புதுமையோ திருப்பமோ இருப்பதாக சொல்ல முடியாது.

---

இந்த படத்தை பற்றி எழுத்தாளர், படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் அவருடைய வலைத்தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

நாகர்கோயில் போன்ற ஊர்களில் என்ன பிரச்சினை என்றால் முதல்நாள் படம் பார்க்க வருபவர்கள் எல்லா படங்களையும் பார்க்கும் ஒரு கும்பல். படம் முழுக்க கத்திக்கொண்டே இருப்பார்கள். அதாவது இந்தப்படம் எப்படிப்போகும் என எனக்கு தெரியும் என்ற அளவில். கொஞ்சம் படம் உணர்வுரீதியாக கனம் கொண்டால்கூட பொறுமை இழப்பார்கள். சில தினங்கள் கழித்து இது இன்னமாதிரியான படம் என்று ஆனபின்னர்தான் அதற்கான ரசிகர்கள் வருவார்கள்.

அப்போது மீண்டும் போய் படத்தைப் பார்க்கவேண்டும்.


தியேட்டருக்குள் இருந்த கும்பலை(!) பார்த்தப்பிறகு, அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. சிரித்துக்கொண்டேன்.

நான் பார்த்த தியேட்டரில் இரண்டே இடங்களில் தான் கொஞ்சம் சலசலப்பு எழுந்தது. ஒன்று, அஸ்வினி உடனான ஹீரோவின் முதல் காதல் முறிவின் போது. மற்றொன்று, ஊனமான குழந்தையை பெற்ற தாய் பேசும் வசனத்தின் போது.

---

’மச்சான்! பரவாயில்லைடா... ’வெயில்’ டைரக்டர் இந்த படத்தை பாஸிட்டீவா முடிச்சிட்டாரு!’

’எது? ஹீரோவை நடு ரோட்டுல நிக்க வைச்சதும், ஹீரோயினை ரோட்டோரம் உக்கார வைச்சதும் பாஸிட்டீவ் முடிவா?’

’அடே! மாற்று சினிமா எடுக்குற டைரக்டரு, ரெண்டு பேரையும் உயிரோட உட்டு வைச்சதே பெருசுடா...’

.

Wednesday, March 24, 2010

கார்ட்டூன் - குஷ்புவால் வந்த வினை

இனி கார்ட்டூனும் போடலாம்’ன்னு இருக்கேன். (ஐயோ பாவம்!)

முதல் போணி...சரியா தெரியாட்டி க்ளிக்கவும்.

செய்தி: திருமணத்துக்கு முன்பு `செக்ஸ்' உறவு வைத்துக்கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றம் அல்ல என்று நடிகை குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

.

Tuesday, March 23, 2010

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள்

இன்றைய தமிழ் சினிமாவின் நிதி நிலைமை, மூன்று ‘நிதி’களின் கைகளில் தான் இருக்கிறது. கலாநிதி, உதயநிதி, தயாநிதி.

தயாரிப்பாளர்கள் தான் பணம் போட்டு, ஒரு படத்தை எடுத்தாலும், தமிழ் சினிமா அவர்களை முதலாளிகள் போல் நடத்தியதில்லை. நடிகர்கள் வீட்டில் காத்து கிடப்பது, அவர்களது கால்ஷீட்டுக்காக தவிப்பது, பல தலைவலிக்கிடையே படப்பிடிப்பு நடத்துவது, பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிடுவது, லாபம் வந்தால் ஹீரோ, விநியோதர்கள், தியேட்டர் ஓனர்களுடன் பகிர்ந்துக்கொண்டு, அதுவே நஷ்டம் என்றால் மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு, தூக்கு வரை சென்ற தயாரிப்பாளர்களை கண்டு இருக்கிறோம். விதிவிலக்குகள் ஒரு சிலரே.

இந்த ட்ரெண்ட் ’நிதி’களின் திரையுலக வருகைக்கு பிறகு மாறியிருக்கிறது. அவர்கள் விஷயத்தில் மட்டும்.

---

ஒரு தற்காப்புக்கு படங்களை வாங்கி திரையிட ஆரம்பித்தார் கலாநிதி. அடிமாட்டு விலைக்கு படத்தை வாங்கி, விளம்பரம் செய்து வெளியிட்டு, படம் ஓடினால் சினிமா லாபம், இல்லாவிட்டால் டிவியில் போட்டு சேனல் லாபம் என்பது தான் இவரின் ஆரம்ப திட்டமாக இருந்தது. சன் பிக்சர்ஸின் விளம்பர யுக்தியும், படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங்கும், பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்களையே அசைத்து பார்த்தது.

பல வருடகால தயாரிப்பு அனுபவம் பெற்ற ஏவிஎம், தனது படத்தை சன் பிக்சர்ஸிடம் விற்றது. எந்திரன் தயாரிப்பாளர் பணக் கஷ்டத்தில் மாட்ட, ரஜினி ஷங்கருடன் ஓடி வந்து சந்தித்தது கலாநிதியை. தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த விஜய், தனது படத்தை இவர்களிடம் விற்றுவிட்டு, அவர்கள் சொல்படி தியேட்டர் தியேட்டராக சுற்றினார்.மக்களிடம் இவர்கள் மேல் இருந்த மயக்கம் குறைந்துவிட்டாலும், இவர்கள் பேனரில் படம் வெளிவந்தால், படத்திற்கு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைப்பதாக திரையுலகத்தினர் இன்னமும் நம்புகிறார்கள். அப்படியே, படத்தை இவர்களிடம் விற்காவிட்டாலும், படத்திற்கு இவர்களது தயவு முக்கியம் என கருதுகிறார்கள். நல்ல கதைகளில் நடித்துக்கொண்டிருந்த ஜீவா கூட, இவர்கள் விளம்பரத்தில் சொன்ன பொய்யை நம்பிவிட்டாரா என்று தெரியவில்லை. மசாலா கதையை கேட்டு இன்னொரு படமும் நடித்துவிட்டார்.

ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உண்மையா, பொய்யா தெரியவில்லை. சக்சேனா பண்ணிய போன் காலை ஷங்கர் எடுக்காததால், இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடக்கவில்லையாம். இப்படி உபத்திரவம் இருந்தாலும், வியாபாரத்திற்காக இவர்களை சகித்துக்கொள்ள திரையுலகினர் தயாராகவே இருக்கிறார்கள்.

---

கலாநிதி படம் எடுத்தால் கூட, அது அவர் காசு, அவர் படம் எடுக்கிறார் என நினைப்பவர்கள், உதயநிதி, தயாநிதி விஷயத்தில் அப்படி நினைப்பதில்லை.

ரெண்டு பெரிய வீட்டு பசங்க பண்ணும் செலவுகளாக எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் நினைக்கிறார்கள். காரணம் - கலாநிதி மாறன் ஏற்கனவே பெரிய தொழிலதிபர். படம் எடுக்க தேவையான, நிதி நிலைமை உள்ளவர். மற்ற இருவரின், தந்தைகளும் அரசியல்வாதிகள் மட்டுமே. தொழிலதிபர்கள் அல்ல.

இந்த சின்ன வயசில், இவ்வளவு பெரிய முதலீடுகளுடன் படம் எடுப்பதற்கான அடிப்படை, அரசியலில் சம்பாதித்தது என சாதாரணமாகவே கருதுகிறார்கள்.

---

எனது சின்ன வயசில், பிடித்த ஹீரோ, பிடித்த ஹீரோயின், காமெடி நடிகர் என எனக்கு பிடித்த பல காம்பினேஷன்களில் படம் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்ப்பேன். பிறகு, நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் என பிடித்த காம்பினேஷனில் நினைத்து பார்த்திருக்கிறேன். இவரும் அவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அவரும் இவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? என. நீங்களும் நினைத்து பார்த்திருக்கலாம்.

நம்மால் நினைக்க மட்டும் முடிந்ததை செய்துக்கொண்டிருக்கிறார் உதயநிதி. கில்லி மாதிரி இன்னொரு படம் தயாரிக்க முடியுமா? ஏன் முடியாது என குருவி தயாரித்தார். சூர்யா-ரவிக்குமார்-ஹாரிஸ் என ஆதவன் தயாரித்தார்.

நாமெல்லாம் ஒரு படத்தின் பாடல் பிடித்தால், கேசட்டோ சிடியோ யோசித்து வாங்குவோம். இவர் படத்தை வாங்கினார். விண்ணைத்தாண்டி வருவாயா. அதுவும் போட்டிக்கு ஆளில்லாததால், நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு படம் வெற்றிவிழாவிற்கு நாயகன் படமோ, அல்லது ஒரு குருப் போட்டோவோ போட்டு விளம்பரம் வெளியிடுவார்கள். முதல்வன் வெற்றிவிழாவிற்கு, ஷங்கர்-ரஹ்மான்-மாதேஷ் மூவரும் கோர்ட்-சூட்டுடன் உட்கார்ந்திருப்பது போல் விளம்பரம் வந்தது. மற்றபடி, ஹீரோ-ஹீரோயின் இல்லாமல் விளம்பரம் பார்த்தது கிடையாது.

இங்க பாருங்க.கமல்-ரவிக்குமார் காம்பினேஷனில் அடுத்த படம். கூடிய சீக்கிரம் கலைஞர் டிவியில், கமல் நின்றுக்கொண்டு, நேயர்கள் கேள்விக்கு பதில் சொல்லுவார்.

---

அடுத்து சின்னவர் - தயாநிதி. தொடக்கத்திலேயே, பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் இருந்து படத்தை வாங்கி வெளியிட்டார். அடுத்து, குறைந்த செலவில் ஒரு தமிழ்ப்படம் எடுத்து, நிறைய லாபம் சம்பாதித்தார். வேறு யார் அந்த படத்தை எடுத்திருந்தாலும், படத்தின் நிலை அதோ கதிதான். அடுத்து தயாரிப்பது - தூங்காநகரம். முன்னவர்கள் போல் இல்லாமல், இவர் கொஞ்சம் கதையும் கேட்பது போல் இருக்கிறது.இது தான் இவர் ஸ்டைல் என்று சொல்லமுடியாத படி, அடுத்து பையாவை வெளியிடுகிறார். அதற்கடுத்தது, அஜித்-கௌதம்-ரஹ்மான் கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

தயாரிப்பாளர் சங்க, நடிகர் சங்க எச்சரிக்கையெல்லாம் சட்டை செய்யாமல், அஜித் காலரை தூக்கிவிட்டு கொண்டு துணிச்சலாக இருந்ததற்கு, தயாநிதிக்கு இவர் கொடுத்த கால்ஷீட்டும் ஒரு காரணம் எனலாம்.

---

ரஜினி, கமல், விஜய், அஜித் என நடிகர்களின் கைகளில் இருந்த தமிழ் சினிமா, இன்று இந்த மும்மூர்த்திகளின் கைகளில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. விஜய், தனுஷ், விஷால் ஆகியோரை தியேட்டர், தியேட்டராக சுற்ற வைத்தவர்கள், மற்றவர்களையும் விட போவதில்லை. அட்லீஸ்ட், சன் டிவி, கலைஞர் டிவி ஸ்டுடியோக்களுக்காவது வர வைத்துவிடுவார்கள்.

மக்கள் ஒரு விஷயத்திற்காக சந்தோஷப்பட வேண்டும். இவர்களும் அரசியலுக்கு வந்துவிடாமல், சினிமாவிற்கு வந்தார்களே என்று.

பணம் வரவும் செய்யணும், போகவும் செய்யணும் அல்லவா? அது தானே, பணபுழக்கத்திற்கு வழி செய்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும். அந்த வகையில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இவர்கள் சேவை, இன்னமும் தேவை.

.

Friday, March 19, 2010

பெங்களுர் தேர்தல்

பெங்களுரில் விரைவில் மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது. ஏற்பாடு என்றது, தேர்தல் கமிஷன் செய்வதை சொல்லவில்லை. வேட்பாளர்கள் பல விஷயங்கள் செய்து வருகிறார்கள். உதாரணமாக, நேற்று முன்தினம் கர்னாடகாவில் ஒரு விசேஷம். உகாதிக்கு அடுத்த நாள், கறி சோறு சமைத்து சாப்பிடுவார்களாம். அதனால், சில இடங்களில் வீட்டுக்கு வீடு மட்டனும், சிக்கனும் காலையிலேயே வந்திருக்கிறது.

இது ஒருபுறம் என்றால், இளைஞர்களை வளைத்துப்போட, ஐபிஎல் டிக்கெட்டுகளை சில வேட்பாளர்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆண்களுக்கு சரக்கு, பெண்களுக்கு சேலை என்று ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தேர்தல் பரிசு. எல்லா ஊரும் ஒரே மாதிரி தான் இருக்கு.

---

ஜனதா தளம், தனது வேட்பாளர்களுக்கு ‘பிரச்சாரம் செய்வது எப்படி?’ என்று வகுப்பு நடத்தியிருக்கிறது. ஒழுங்காக சட்டையில பட்டன் போட்டுட்டு போ, படிச்சவன் இருக்குற இடத்துல வெடி போடாதே; அது உனக்கே வெடிச்சிரும், எவன் என்ன திட்டுனாலும் சிரிச்சிட்டு வந்துரு என பல அரசியல் பாலப்பாடங்களை நடத்தியிருக்கிறார்கள் குமாரசாமியின் தலைமையிலான கட்சியின் தலைவர்கள்.

ஏதாவது பதிப்பகம் “30 நாளில் அரசியல்வாதி ஆவது எப்படி?”, “நீங்களும் பிரச்சாரம் செய்யலாம்” போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட்டால், இவர்களின் சிரமத்தை குறைக்கலாம்.

---

தேர்தல்’ன்னா போதும். எங்கிருந்து தான் இவ்ளோ பவ்யம் வருமோ?நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா.

.

Tuesday, March 16, 2010

சந்திரபாபுவுக்கு ஏன் எம்.ஜி.ஆரை பிடிக்காது?

ஒரு மனிதன் எல்லோருக்குமே நல்லவனாக இருக்க முடியாது. அது எம்.ஜி.ஆராக இருந்தாலும். அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு அமைச்சர் பெருங்குடி மக்கள் வரை அனைவரின் கண்களுக்கும் வள்ளலாக தெரிந்தவர், சந்திரபாபுவின் கண்களுக்கு மட்டும் ஏன் அப்படி இருக்கவில்லை?

---

குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரை தவிர.
“என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர், சிரிச்சா முத்தா உதிர்ந்திரும்?” (எல்லோரையும் மிஸ்டர் என்றுத்தான் அழைப்பார்)

“உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்”

இதற்கு அவமானமாக உணர்ந்த சந்திரபாபு, மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டது. அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும்.

அதை பற்றி சந்திரபாபு சொன்னது,

“அன்று அவர் வளர்த்துக்கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை, இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன்.”

---

குலேபகாவலி, புதுமைப்பித்தன் வெற்றிகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர் படங்களில் காமெடிக்கு சந்திரபாபுதான் வேண்டும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘சந்திரபாபுவின் காமெடிக்காகவே படத்தை பார்க்கலாம்’ போன்ற பேச்சுக்கள் எம்.ஜி.ஆரின் காதுக்களுக்கு சென்றது.

அதில் இருந்து, “சந்திரபாபு வேண்டாம். அவன் இருந்தால், நான் கால்ஷீட் தரமாட்டேன்” என்று எம்.ஜி.ஆர். கூறியதாக வந்த செய்திகள் சந்திரபாபுவுக்கு தெரிய வந்தது.

ஆனால், அதற்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

---

அடிமைப்பெண் ஷூட்டிங்.

சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் ஏறி குதிப்பதுப்போல் காட்சி. முதலில் ஏறிய சந்திரபாபு, நிலைத்தடுமாறி கீழே விழப்போக, ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்.

சாப்பாட்டு நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட, சந்திரபாபுவுக்கு மட்டும் வரவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடைய சாப்பாட்டை, சந்திரபாபுவுக்கு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிட்டார். கேட்டதற்கு, பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

ஏன் இப்படி உம்மென்று இருக்கிறார் என்று ஜெயலலிதாவிடம் சந்திரபாபு கேட்டதற்கு, ஜெயலலிதா சந்திரபாபுவை விழாமல் தாங்கி பிடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாராம்.

இதை கேட்டவுடன் சந்திரபாபுவுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஏனெனில் சந்திரபாபுவிற்கும், ஜெயலலிதாவின் குடும்பத்திற்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போதே, அவர்கள் வீட்டுக்கு சந்திரபாபு செல்வாராம். ஜெயலலிதாவும் ‘அங்கிள்’ என்று ஓடி வந்து பழகுவாராம்.

---

சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்றொரு படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர், சம்பளத்தின் ஒரு பகுதியை கருப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டதாக சந்திரபாபு, பின்னர் பிலிமாலயா பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்., பூஜைக்கும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கும் மட்டுமே வந்திருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்கவே இல்லை.

நேரே சென்று பேசி பார்க்கலாம் என சென்ற சந்திரபாபுவை, அரை மணி நேரம் கண்ணேதிரே காக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ’நான் நடிகன், நான் கதாசிரியன், நான் வசனகர்த்தா, நான் டைரக்டர் என பெருமைப்பட்ட என்னை, டேய் நீ புரொடக்‌ஷன் பாயும் கூடத்தான்’ என அப்போது உணர வைத்ததாக கூறியிருக்கிறார் சந்திரபாபு.

கடைசியில் அவரை பார்த்தபோது, கால்ஷீட் பற்றி கேட்டிருக்கிறார். கால்ஷீட் சம்பந்தமாக அண்ணனிடம் பேசிக்கொள்ளும்மாறு எம்.ஜி.ஆர் சொல்ல, அண்ணன் சக்ரபாணியை பார்க்க சென்றார் சந்திரபாபு.

அங்கே அவர்களுக்குள் நடந்த உரையாடல், ஒருகட்டத்தில் முற்றிப்போய், சேரைத்தூக்கி அடிக்கும் நிலைக்கு போய்விட்டார் சந்திரபாபு. இந்த விஷயம் வெளியே பரவி, படம் நின்று போய், அடமானம் வைத்திருந்த சந்திரபாபுவின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்தது. பெயரும் கெட்டுப்போனது. குடி இன்னும் அதிகமாக, குடி கெட்டது.

---

ஒரு பேட்டியில் சந்திரபாபுவிடம் இப்படி கேட்டார்கள்.

எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

---

கண்ணீரும் புன்னகையும்
முகில்
174 பக்கங்கள்
கிழக்கு பதிப்பகம்

.

Sunday, March 14, 2010

கண்டதை எடுத்தது - 3

நடு ரோட்டுல நின்னுக்கிட்டு போட்டோ எடுக்கணுமா? அப்படி ஒண்ணும் ரிஸ்க் எடுக்குற அளவுக்கு இதுல வொர்த் இல்லையே’ன்னு நினைக்குறீங்களா? இது காருக்குள்ள உட்கார்ந்து, கார் ரோட்டை கிராஸ் பண்ணும்போது எடுத்தது தான். ஸ்பெஷலா வரும்’ன்னு நினைச்சேன். ப்ச். வரல.இது திருச்சி-மதுரை சாலையின் ஓரத்தில் நான் பார்த்த ஒரு கிணறு. எவ்ளோ தண்ணி!ஒருநாள் காலையில் நண்பனுடன் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து காந்திபுரம் வரை நடந்தே பேசிக்கொண்டு சென்றோம். பேசியதை பார்த்துக்கொண்டே இந்த சைக்கிள் தாத்தா சென்றார். சென்றவரை, போட்டோவில் பிடித்து வைத்துக்கொண்டோம்.கோவை காந்தி பார்க் பக்கமிருக்கும் முருகன் கோவில் இது. கோவிலில் இருந்த கதவின் மேல் ஆண்கள் என்று எழுதி வைத்திருந்தார்கள். மற்றொரு பக்கம், பெண்கள் என்றிருக்கும் என நினைக்கிறேன். எதுக்கு’ன்னு தெரியலை. சின்ன கதவு என்பதால் இடிச்சுக்கிட்டு போக கூடாது என்பதாலா?திருவண்ணாமலை அருகே எடுத்தது. எங்கே கூட்டிக்கொண்டு செல்கிறார்களோ? :-(முதல் பகுதியில் பார்த்த அய்யனாரின் குதிரை. அண்ணாந்து பார்த்து எடுத்தது.அய்யனார் குதிரை - இன்னொரு கோணத்தில்.வெளியே போகும்போது பூனை குறுக்கே போகக்கூடாது என்பார்கள். இங்கே செருப்பை எடுப்பதற்கே பூனைக்களுக்கு குறுக்கே செல்ல வேண்டியிருக்கிறது.இப்போதைக்கு அவ்ளோத்தான்!

.

Friday, March 12, 2010

கண்டதை எடுத்தது - 2

க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்.

குலசேகரபட்டிணம் கடற்கரையில் இந்த பிள்ளையார் கடலை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அப்படி என்னத்தான் பார்க்கிறார் என்று பார்த்த போது...ஏற்காட்டில் இரு இளம் வியாபாரிகள் டிஸ்கஸ் செய்துக்கொண்டிருந்தபோது...காரமா கொஞ்சம் மாங்காய்... ஆந்திரா என்று தெரியவேண்டும் என்பதற்காக அந்த பேப்பர்...கொலம்பஸ்ஸில் மல்லாந்து பார்த்தபோது...இவர்களுக்குள் என்ன பிரச்சினையோ? மைசூர் மிருகக்காட்சிச்சாலையில் எடுத்தது.திருச்சி மலைக்கோட்டையில் இருந்து...பெங்களூர் ப்ரிகேட் ரோடு... ஒரு நியூ இயர் கொண்டாட்டத்தின் போது....

Wednesday, March 10, 2010

கண்டதை எடுத்தது - 1

எனது மொபைலில் கேமரா கிடையாது. அதனால் தேவைப்படும்போது கையில் தனியாக கேமரா எடுத்து செல்ல வேண்டும். இப்படி கையில் கேமரா இருக்கும்போது, கண்ணில் கண்டதை எல்லாம் எடுத்து தள்ளுவேன்.

வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது. ஆறாயிரம் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அதில் எத்தனை உருப்படி என்பது வேறு விஷயம். நுரை தள்ளி எப்போது உயிரை விடுவேன் என்ற நிலையில் இருக்கிறது. தற்போது எடுக்கும் புகைப்படங்களில் வெளிச்சம் முன்பை விட குறைவாக இருக்கிறது. எக்ஸ்ட்ரா போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது.

சொற்ப நேரங்கள் கையில் இருக்கும் இந்த கேமராவிலேயே கண்டதையும் எடுத்து தள்ளியிருக்கிறேன். மொபைலில் கேமரா இருந்திருந்தால், என்னவாயிருக்குமோ?

அப்படி எடுத்த சில படங்கள்.

---

திருப்பதி மலைமேல் படி மூலம் ஏறினால், இப்படி ஆங்காங்கே எத்தனையாவது படி என்று குறித்திருப்பார்கள். செஞ்சுரி போட்ட சச்சின் போல், நாங்களும் கைகளைத் தட்டிக்கொண்டு எங்களின் சாதனைகளை அவ்வப்போது கொண்டாடிக்கொண்டோம்.சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு சாலையோர ஹோட்டலில் பசியாற காத்திருந்த போது எடுத்த படம். இந்த படத்தில் என்னோட ரெண்டு பேவரைட்டுகள் இருக்கிறது.ஒரு வீட்டு விசேஷத்தின் போது எடுத்தது.தெரிந்த நண்பரின் திருமணம் கடலூர் பக்கமிருக்கும் ஒரு கோவிலில் அதிகாலை நடந்தது. அந்த கோவில் பக்கமிருந்த ஆற்றை அந்நேரம் எடுத்தது. இப்ப, வேறொரு லுக் கிடைக்கிறது.இது திருப்பத்தூர் பக்கமுள்ள ஒரு கோவிலில் இருந்த அய்யனார் சிலை. இதுவும் கல்யாணத்திற்காக சென்ற போது எடுத்த படம்.வட கர்னாடக பக்கம் சென்ற போது, ஒரு பூங்காவில் சிறிது நேரம் இளைப்பாறினோம். அப்பவும் கை சும்மா இருந்தாதானே?திருச்சி மலைக்கோட்டை. கோவிலும் எதிரில் இருந்த தேவாலயமும்.---

இப்படி கண்டதையும் எடுத்து, அதை பிறகு பார்க்கும் போது, எடுக்கும் போது இருந்த மனநிலையும் சூழ்நிலையும் ஒரளவுக்கு மீண்டும் உணர முடிகிறது. இந்த பதிவில் இருக்கும் படங்கள் அவ்வளவு கேனத்தனமாக இல்லை. இன்னும் சில படங்கள் இருக்கிறது. கேனத்தனமாக.

இப்படி கேனத்தனமாக இருக்கிறது என்று கூறினாலும், அனுபவங்களை மீள் உணர வைக்கும் இம்மாதிரி படங்களை தொடர்ந்து எடுக்கத்தான் தோன்றுகிறது.

.

Monday, March 8, 2010

விமர்சனஃபோபியாவும் வி.தா.வ.’வும்

(கடந்த சில நாட்களாக இணைய இணைப்பில் கோளாறு. இது போன வியாழக்கிழமை எழுதிய பதிவு. இப்ப, ஊசி போய்விட்டது. குப்பையில் போடலாமா அல்லது என் ப்ளாக்கில் போடலாமா என்று யோசித்து, பிறகு இரண்டும் ஒன்றுதானே என்று சமாதானமாகி பதிவிடுகிறேன்.)

பெரும்பாலும் பொழுதுபோகாமல் தான் படம் பார்ப்பேன். பொழுதுபோகாமல் பார்க்கும் படங்கள், பார்ப்பது என்று முடிவாகிவிட்ட படங்கள். அப்படி பார்க்கும் படங்கள், எப்படி இருக்கும் என்று விமர்சனம் படித்துவிட்டெல்லாம் செல்ல மாட்டேன். எவ்வித அனுமானமும் இல்லாமல் படம் பார்ப்பதுதான் ஒரு முழுமையான அனுபவத்தை கொடுக்கும் படியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

விமர்சனம் படித்துவிட்டு, ஒரு படம் மோசம் என்று தெரிந்து போகாமல் இருந்தால், ஒரு ஐம்பது ரூபாய் தப்பும். ஆனால், அதுவே படம் நல்லபடமாக இருந்தால்? சாறு பிழிந்த சக்கை போல் தான் உணருவேன். அப்போதும் ஐம்பது ரூபாய் வேஸ்ட்தான். இதற்காக ஒரு படம் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், எந்த விமர்சனமும் படிக்காமல் போவேன்.

முன்பாவது பரவாயில்லை. ஒருவாரம் கழித்துதான் விகடன், குமுதத்தில் விமர்சனம் வரும். படம் பார்த்துவிட்டு நண்பர்கள் கூறுவதும் அதிகபட்சம் - மோசம், சுமார், பரவாயில்லை, நல்லாயிருக்கு போன்றவைகளாகத்தான் இருக்கும்.

ஆனால், இப்பொழுது? படம் இந்தியாவில் ரிலீஸாவதற்கு முன்பு, வெளிநாட்டிலோ, ப்ரிவ்யூ ஷோவோ பார்த்துவிட்டு முந்தைய நாளே விமர்சன பதிவு போடுகிறார்கள். அடுத்து ரிலீஸ் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் ஜெட்லியின் (!) குங்பூ வேகத்தில் இன்னொரு விமர்சனம் வரும். சிறிது நேரத்தில் எங்கு பார்த்தாலும் விமர்சனமாகத்தான் இருக்கும். வெட்டிபசங்களில் இருந்து புரட்சிகாரர்கள் வரை (இரண்டும் ஒண்ணுதானோ!) எல்லாரும் விமர்சனம் செய்கிறார்கள்.

ரொம்ப நல்ல விஷயமாக இருந்தாலும், என் அணுகுமுறைக்கு இடைஞ்சலாக இருக்கும். இதற்காகவே, ஒன்று படத்தை சீக்கிரம் பார்க்கவேண்டும். அல்லது, அவ்வகை பதிவுகளை சீண்டாமல் இருக்க வேண்டும்.

---

சில பல காரணங்களால், போன வாரம் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வை உடனே பார்க்க முடியவில்லை. ரஹ்மான் இசை என்பதற்காக ’என் சுவாச காற்றே’, ’பார்த்தாலே பரவசம்’ போன்ற படங்களையெல்லாம் கடைசி வரை உட்கார்ந்து பார்த்தவன். இதை விட முடியுமா?எந்த விமர்சனமும் படிக்கக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டு, ‘வி.தா.வ.’ என்று தலைப்பு இருந்தாலே பதிவுகளை மூடிக்கொண்டு இருந்தேன். இந்த பதிவுலகம் தான் இப்படி இருக்கிறதென்றால், வெளியில் நடமாடும் மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தால், பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களும் இதைத்தான் பேசுகிறார்கள். தெரியாதவர்களிடம் போய் ‘கொஞ்சம் சும்மா இருங்க’ என்றோ, ‘அமைதியா சாப்பிட்டுட்டு போங்க’ என்றா சொல்ல முடியும்? கையை வேறு சாப்பாட்டில் வைத்தாச்சு. காதை மூடிக்கொள்ளவும் முடியாது!

ஒருவழியா விமர்சனங்களிடமிருந்தும், கதை சொல்லிகளிடமிருந்தும் தப்பித்து, படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்து படம் பார்த்தாயிற்று.

---

காதலின் துள்ளல், கிளுகிளுப்பு, கிறுகிறுப்பு, முட்டாள்தனம், வலி எல்லாம் பொங்க பொங்க படமெடுத்திருக்கிறார் கௌதம். இப்படித்தான் எடுக்கணும் என்று எந்த பார்முலாவிலும் சிக்காமல், தனக்கு தோன்றியதை அப்படியே எடுத்திருக்கிறார். ஆங்கிலம் மட்டுமில்லாமல், இதில் மலையாளத்திலும் பாதி படம் ஓடுகிறது. சப்-டைட்டிலில் தமிழ் பிழையாக வேறு ஓடுகிறது.

கோவாவில் இருந்து வந்த சிம்பு, கேட் வாசலில் நின்று த்ரிஷாவுடன் சண்டை போடும் காட்சி, நான் ரசித்ததில் ஒன்று. வசனங்கள், எக்ஸ்ப்ரஷன்ஸ் என இயக்குனர், நடிகர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தார்கள்.

படத்தோடு இன்வால்வ் ஆன நண்பன் கேட்ட கேள்வி - த்ரிஷா படிச்சது பிஎஸ்சி, பிஇ ஆ? அல்லது எம்சிஏவா?

முன்னாள் காதலர்கள், இந்நாள் காதலர்கள் என எல்லோரையும் தங்கள் முதல் காதலை நினைத்து பார்க்க செய்திருக்கிறது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனலாம்.

குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், காதலை ரசிப்பவர்கள் உடனே பார்த்துவிடுங்கள். நான் பார்த்த தியேட்டரில் நாளை முதல் சின்ன தளபதியின் ‘தம்பிக்கு இந்த ஊரு’!

.

Wednesday, March 3, 2010

நித்தி அடைந்த ஆனந்தம்

போன ஞாயிறு, ஓசூரில் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் இருக்கும் ஒரு ஓட்டலில் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். மணி ஏழு- ஏழரை இருக்கும். ஓட்டலின் கல்லா டேபிளுக்கு எதிரே ஒரு பெரிய நித்தியானந்தா புகைப்படம் ஒரு சின்ன டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது.

கடையின் முதலாளியா? யாரென்று தெரியவில்லை. போட்டோவுக்கு மாலைப்போட்டு, ரொம்ப பயபக்தியுடன் சாம்பிராணி போட்டு பூஜை செய்தார். அவருடன் இருந்தவர்களும் தொட்டு கும்பிட்டு சென்றார்கள்.

இன்னமும் அந்த போட்டோ இருக்கிறதா, பூஜை நடக்கிறதா என்று தெரியவில்லை.

(அந்த போட்டோவை எடுத்துவிட்டதாக, நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர, ஓசுரில் நண்பர் வீட்டில் இரண்டு நாட்கள் கேபிள் தெரியவில்லையாம். கேபிள் ஆபரேட்டரும் நித்தியானந்தாவின் பக்தராம்!)

---

என்னுடன் படித்த நண்பன் ஒருவன் அடிக்கடி போன் செய்து நித்தியானந்தா ஆசிரமத்திற்கு கூப்பிடுவான். சும்மா இருந்தா வாடாவென்பான். ஸ்ட்ரெஸ் குறைச்சிக்கலாம் என்பான்.

சும்மா இருந்தாலும் போகாமல் இருந்ததற்கு காரணம் - 750, 1000 ரூபாய் என்று பீஸ் கேட்பார்கள். இல்லாவிட்டால், போய் என்னத்தான் சொல்கிறார்கள் என்று பார்த்திருப்பேன். ஸ்ட்ரெஸ் குறைக்கலாம் என்பதற்கு அப்படி ஒன்று என்னிடம் இல்லை என்பேன். இல்ல, நீ என் கூட வா. நம்ம பசங்கள பார்க்கலாம். ஏதாச்சும் படம் பார்க்கலாம். உனக்கு ஸ்ட்ரெஸ் இருந்தா குறையும் என்பேன். நல்ல நண்பர்களுடன் பேசுவதை விட வேறு எதில் ஸ்ட்ரெஸ் குறைந்துவிட போகிறது?

ஒரு கட்டத்திற்கு மேல் அழைப்பதை நிறுத்திவிட்டான். இன்று அவனுக்கு போன் செய்யவே எனக்கு தயக்கமாக இருக்கிறது. பாவம்! ரொம்ப நொந்துப்போய் இருப்பான்.

ஒருவேளை, அந்த களவாணிப்பயல் பண்ணினதுக்கு எனக்கென்ன? என்று சாரு மாதிரி கேட்டாலும் கேட்பான்.

---

சன் டிவியில் எனக்கு பிடித்த விஷயம் - படங்களில் அவர்கள் செய்யும் சென்ஸார். அவர்கள் போடும் தமிழ்ப்படங்களில் முத்தக்காட்சியோ, விவகாரமான காட்சியோ இருந்தால் கட் செய்துவிடுவார்கள். குடும்பத்துடன் பார்க்கும்போது சங்கடங்கள் நேராது.

உதாரணத்திற்கு, சன் டிவியில் காதல் கொண்டேன் படம் போட்டால் தைரியமாக பார்க்கலாம். தேவதையை கண்டேன் பாடல் காட்சியை போடும்போது கூட, அதிலிருக்கும் முத்தக்காட்சி இருக்காது. விவகாரமான காட்சி என்று இல்லை. அவர்களுக்கு பிடிக்காத எதையும் கட் செய்துவிடுவார்கள்.

சரவணா படத்தில் ஒரு காட்சியில் ‘டாக்டர் ராமதாஸ்கிட்ட சொல்லிடுவேன்’ என்பார் சிம்பு. அதைக்கூட கட் செய்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் நித்தியானந்தா விஷயத்தில் இறங்கி அடித்திருக்கிறார்கள். பார்க்க முடிகிற விஷயங்களை மட்டும் தான் போடுகிறோம் என்று ஒரு டிஸ்கி வேறு. என்ன நியூஸ் சொல்கிறார்கள் என்பதை ஹாலில் உட்கார்ந்து டிவியில் கேட்கமுடியாத அளவுக்கு காட்சிகள்.

---

சன் டிவியில் நேற்று இரவு என்றால், இன்று இந்தியா முழுக்க.

பெங்களூரில் சலூன், மெடிக்கல் ஷாப், ஹோட்டல் என்று எல்லா இடங்களில் உள்ள டிவிக்களிலும் நியூஸ் சேனல்கள் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாவற்றிலும், நித்தி-ரஞ்சி சல்சா.

பப்ளிக்கா எல்லா இடங்களிலும், படுக்கையறை காட்சியை போட்டுக்கொண்டு இருந்தது அசிங்கம்.

---

நித்தியானந்தாவின் பேமஸ் கட்டுரை தலைப்பை, இன்று பதிவர்கள் பதிவு தலைப்பாக பயன்படுத்தியிருந்தது செம காமெடி.

கதவை திற! ரஞ்சிதா வரட்டும்!
கதவைத் திற காமிரா உள்ளே வரட்டும்
கதவைத் திற கட்டழகி வரட்டும்
கதவைத் திற காமிரா வரும்

---

நித்தியாந்தாவின் கட்டுரைகளை போட்டு கல்லா கட்டிய குமுதம் இப்போது என்ன செய்கிறது?

இதோ!இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

.