Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Wednesday, October 14, 2009

திருவண்ணாமலை அன்னதான போர்ஜரி

திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு அறக்கட்டளை. ஏதோ அன்னதான அறக்கட்டளை என்று வரும். சரியாக தெரியவில்லை. வேறு ஏதும் நல்ல அறக்கட்டளையை தவறாக சொல்லிவிடக்கூடாது. அதனால், திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு அறக்கட்டளை என்று எடுத்துக்கொள்ளவும்.

இவர்கள் மாதம் தோறும் கடிதம் அனுப்புவார்கள். எப்படி அட்ரஸ் பிடிப்பார்களோ தெரியவில்லை. அன்னதானம் நடத்துகிறோம் அல்லது குரு பெயர்ச்சி பூஜை நடத்துக்கிறோம். உங்களால் முடிந்த அமௌண்ட்டை அனுப்பவும் என்று. கடவுள் பக்தியால் சிலரும், ஏதோ நல்ல காரியம் என்று சிலரும் யோசிக்காமல் தங்களால் முடிந்த பணத்தை அனுப்புவார்கள். எனக்கு தெரிந்த சிலரும் அனுப்பி இருக்கிறார்கள். பணம் அனுப்பியவர்களுக்கு ருத்திராட்சை, கருப்பு கயிறு, விபூதி, குங்குமம், செப்பு தகடு இப்படி ஏதாவது வரும். சமயத்தில் அன்னதான புகைப்படங்கள் வரும். மறக்காமல், சில நாட்கள் கழித்து, திரும்பவும் பணம் அனுப்ப சொல்லி கடிதம் வரும். பலரும் இது கோயிலுக்கு தொடர்புடையவர்களிடம் இருந்து வருவதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.



சமீபத்தில் திருவண்ணாமலை சென்று இருந்தேன். ஒரு கடைக்காரரிடம் ஒருவர் பேச்சு கொடுத்தப்போது, இது பற்றிய டாபிக் வந்தது.

“ஏங்க, இங்க கோயில் அன்னதான அறக்கட்டளை எங்கே இருக்கிறது?”

”அது ஒரு போர்ஜரிங்க”

கேட்டவர் ஷாக்கானார். நானும் ஆர்வமுடன் உரையாடலை கேட்க தொடங்கினேன்.

“போர்ஜரியா? பதிவு பண்ணின ட்ரஸ்ட் தானாங்க அது? கவர்மெண்ட் பதிவு எண் பார்த்தேனே?”

“நானும் கூடத்தான் ட்ரஸ்ட் ஆரம்பிப்பேன். தெருவுல சுத்திட்டு இருந்தவன், ட்ரஸ்ட் ஆரம்பிச்சு, இப்ப காருல பறக்குறான்.”

“இவ்ளோ சொல்றீங்க. போலிஸ் ஒண்ணும் பண்ணலீயா?”

“இப்ப வருற லெட்டர்ல அந்த அறக்கட்டளை பேரை பாருங்க. மாத்திருப்பாங்க.”

“மாட்டிக்கிட்டாங்களா? எப்படி?”

“நன்கொடை கொடுத்தவுங்க எல்லாம், கோயிலுக்கு பாஸ் கேட்க ஆரம்பிக்க, அப்பத்தான் கோவிலுக்கும், ஏமாந்து பாஸ் கேட்டவங்களுக்கும் விவரம் புரிஞ்சுது.”

“இப்ப என்ன பண்றான், அவன்?”

“வேற ட்ரஸ்ட் ஆரம்பிச்சுட்டான். தயவுசெய்து அதுக்கும் பணம் அனுப்பிடாதீங்க.”

“அன்னதானம் பண்ற போட்டோ எல்லாம் அனுப்புனாங்களே?”

“என்ன சார்? எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க. அப்படி போட்டோ அனுப்புறது பெரிய விஷயமா? உங்கக்கிட்ட மட்டுமா வாங்குனான்? இந்த மாதிரி தமிழ்நாடு முழுக்க, ஏன் உலகம் முழுக்கக் கூட அனுப்பியிருப்பான். எத்தனை கோடி அடிச்சானோ? ஏதாவது பண்ணனும்ன்னு நினைச்சா, நீங்க உங்க வீட்டுப்பக்கம் இருக்குற கஷ்டபடுற யாருக்காவது அஞ்சு கிலோ, பத்து கிலோ அரிசி வாங்கி கொடுங்க. கோவிலுக்குத்தான் பண்ணனும்’ன்னு நினைச்சா, நீங்களே நேரா வந்து 2000, 3000 நன்கொடை கொடுக்கலாம். அவுங்களும், உங்க முன்னாடியே அன்னதானம் போடுவாங்க. அதைவிட்டுட்டு விபூதி அனுப்புறான், குங்குமம் அனுப்புறான்’ன்னு பணம் அனுப்பாதீங்க. நான் கூடத்தான் அனுப்புவேன்.”

இது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரிந்தால், மேலும் விவரம் சொல்லலாம். தெரியாதவர்கள், உஷாராகவும்.

.