Sunday, September 28, 2014

ஜாகை மாற்றம் - அப்டேட்

கடந்த மாதம் டென்வரில் இருந்து மின்னியாபொலிஸ் வந்தேன். ஒருவழியாக கடந்த வாரம் தான் ஒரு நிலையை அடைந்தோம்.

டென்வரை விட குளிர் அதிகமாக இருக்குமாம். நான் பிறந்ததில் இருந்து மாறி மாறி வந்திருக்கும் இடங்களை எண்ணிப்பார்க்கிறேன். குளிர் அதிகமாகிக்கொண்டே தான் வந்திருக்கிறது. அண்டார்டிகாவில் ரிட்டயர் ஆவேனோ?

டென்வர் ரொம்பவும் பழகிப்போயிருந்தது.வீட்டிற்கு வெளியேவே சுலபமாக அனைத்தும் கிடைத்தது. சமையலின்போது கருவேப்பிலை இல்லையென்றால், பொடிநடையாக சென்று வாங்கிவந்துவிடலாம். ஊரில் இருக்கும்போது வீட்டின் முன்புறம் இருந்த மரத்தில் சுவர் ஏறி பறிப்பேன். அதற்கு பிறகான வசதி, டென்வரில் தான் இருந்தது.

டென்வர் மலைக்களுக்கு பிரபலம் என்றால் மின்னியாபொலிஸ் ஏரிகளுக்கு. 10000 ஏரிகள் கொண்ட மாநிலமாம். நானும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் ஏரிகளும், அதில் நீருற்றுகளும் நிறைந்து இருக்கிறது. எங்க அபார்ட்மெண்ட் உள்ளேயே மூணு குட்டி ஏரி இருக்குனா பார்த்துக்கோங்களேன்!!!



மின்னியாபொலிசில் எனது அலுவலகம் இருப்பது, டவுண்டவுன் எனப்படும் நகரின் மையத்தில். இங்கு இருக்கும் ஸ்கைவே தான், இந்த ஊரில் என்னை இம்ப்ரெஸ் செய்த முதல் சமாச்சாரம்.

இருக்கும் பெரும்பாலான கட்டிடங்களை, இரண்டாம் தளத்தில் நடைபாதை அமைத்து இணைத்திருக்கிறார்கள். பலன் - ரோட்டில் இறங்காமல் கட்டிடங்கள் வழியாகவே ஒரு ரவுண்ட் போகலாம். குளிர்காலத்தில் ரொம்பவும் வசதியை கொடுக்கும். பாதையோர கடைகள் அனைத்தும், இந்த ஸ்கைவேயில் தான் இருக்கிறது. முதல் நாள் காரில் ஜிபிஎஸ் போட்டுக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்தபோது, ஜிபிஎஸ் நிறைய கடைகளைக் காட்ட, கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.ஒன்றும் புரியவில்லை. அப்புறம், ஸ்கைவே பற்றி தெரிந்தபோது தான், இது புரிந்தது.

பஸ் வசதி நன்றாக இருக்கிறது. பஸ்களுக்கு தனி லேன் இருப்பதால், ஊருக்குள்ளே பஸ்ஸில் சென்றால்தான் சீக்கிரமாக செல்லமுடிகிறது. இந்த தனி லேனில் பணம் செலுத்தினாலும், கூட்டமாக (Carpool) சென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நான் தங்கியிருக்கும் இடம் தான் காரணமா தெரியவில்லை. எங்கு செல்லவேண்டுமென்றாலும், பத்து மைல், இருபது மைல் என்று சொல்கிறார்கள். ப்ரெஷாக மீனும், மட்டனும் எங்கு கிடைக்கும் என்று யாராவது சொன்னால் தேவலை.

பொண்ணை ஸ்கூலில் சேர்த்தாச்சு. ரொம்பவும் பயந்து போயி இருந்தேன். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாளோ என்று. நல்லவேளை, அமைதியாக சுமுகமாகவே அன்றைய தினம் முடிந்தது. இப்போதைக்கு ஜாலியாகவே செல்கிறாள். அங்கும் விளையாட்டு தான் காட்டுகிறார்கள்.

அதெல்லாம் சரி. இந்த பதிவு இப்ப எதுக்கு போட தோணியது?

டொமைன் ரினிவ் பண்ண ரிமைன்டர் வந்தது.

.