Thursday, July 29, 2010

பூனே

ஆபிஸ் வேலையாக வாரயிறுதியில் இரண்டு நாட்கள் பூனே போய் வர சொன்னார்கள். ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டேன். ஒன்றோ, இரண்டோ படிக்கும்போது டெல்லி சென்றிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது டூருக்கு மும்பை சென்றிருக்கிறேன். வேறெங்கும் வட இந்தியாவில் சென்றது கிடையாது. மும்பை, பூனேகாரர்களுக்கு வட இந்தியா என்பது வேறு. வாட் எ பிட்டி!

சனிக்கிழமை அதிகாலை கிங் பிஷர் ப்ளைட். கொஞ்ச நேரத்திற்கு முன்பு சென்றிருந்தால், ஜன்னல் சீட் கிடைத்திருக்கும். பயணத்தின் போது, ஜன்னல் சீட் கிடைப்பதில்லை என்றால் பயணம் முழுமையடைவதில்லை. பஸ்ஸில் இப்படி பின்னால் ஜன்னல் சீட் கிடைக்காவிட்டால், போய் டிரைவர் சீட் பக்கத்தில் உட்கார பார்ப்பேன். இங்கு அப்படி எதுவும் ட்ரை செய்யமுடியாது.

முன்பு ஊருக்கு செல்லும்போது, பஸ்ஸில் அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், டிரைவர் சீட்டுக்கு பின் இருக்கும் கேபினில் உட்கார்ந்து செல்லுவேன். ப்ளைட்டிலும் இப்படி விட்டால் நன்றாக இருக்கும்!

பூனேக்கு முதன்முதலாக செல்வதால், முடிந்தளவுக்கு நிறைய இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டேன். அலுவலக வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு, இருதினங்களும் சாயங்காலத்தில் இருந்து சுற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் நடந்தது வேறு.நான் பூனேயில் இறங்கியதில் இருந்து மழை. மழை. மழை. இதை மட்டும் தான் பார்த்தேன். ஈரம் படத்தில் வந்த சென்னையை போல இருந்தது. ஈரமாக. சனிக்கிழமை சீக்கிரம் வேலை முடிந்தது. வெளியே கிளம்பினால் மழை. ஒரு குடை இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. வாங்கலாம் என்றால் பக்கத்தில் கடை எதுவுமில்லை.நான் பூனேயில் தங்கியிருந்த இடம், நகரின் மையத்தின் இருந்து நெடும்தொலைவில் இருந்தது. பெங்களூரில் தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து சாப்ட்வேர் நிறுவனங்கள். இரண்டு வருடங்கள் ப்ராஜக்ட் மேனேஜராக இருந்துவிட்டால், கிளையண்டை கிளப்பிக்கொண்டு, வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டைப்பிடித்து தனியாக கம்பெனி தொடங்கிவிடுவார்கள். அதனால், எல்லா ஏரியாவிலும் சாப்ட்வேர் நிறுவனங்கள் இருக்கும். பூனேயில் அப்படியில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களை ஊரை விட்டு தள்ளி வைத்துவிட்டார்கள்.

பெங்களூரில் சிவப்பு மண் என்றால், பூனேயில் கருப்பு மண். ஜியாகிரபியில் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அப்ப மனதில் நிற்காதது, இனி நிற்கும்.

புது ஊர். மெல்லிய தூறல்கள். தயார்நிலை ஏற்பாடுகள். தொந்திரவில்லாத, சுதந்திர தனிமை என மகிழ்ச்சியோடு இருந்தாலும், தொடர் தூறல் எங்கும் செல்ல விடாதது வருத்தமே. ஆரம்பத்தில் ஜில்ஜிலுவென இருந்த மழை, பிறகு நசநசவென எனக்கு தெரிந்தது.தெரியாத பாஷை. நண்பர்கள் இல்லாத ஊர் என்றாலும் கேட்டு கேட்டு தெரிந்து சுற்றிப்பார்க்க போய்விடலாம் என்று தான் நினைத்திருந்தேன். பெங்களூரில் போனது போல் போகலாம் என்பது என் நினைப்பு. அது எவ்வளவு தவறு என்பது அங்கு போனப்பிறகு தான் தெரிந்தது. கன்னடத்திலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ பேசும்போது, நமக்கு கொஞ்சமாவது புரியும். அதேப்போல், நாம் தமிழில் பேசினாலும் அவர்களுக்கு புரியும். இங்கோ பேசுவது மராத்தியா, ஹிந்தியா என்பதே எனக்கு புரியாத நிலை.

நான் தங்கியிருந்த இடத்தின் பெயர் - wakad. இதை வாகட், வகாட், வாகாட், வகத், வாகத், வகாத் இப்படி நான் எப்படி உச்சரித்தாலும் அவர்களுக்கு புரியவில்லை. ஹோட்டல் பெயர் சொன்னதால் தப்பித்தேன். இந்த நிலையில் ஊருக்குள் சென்றுவிட்டு, தங்கியிருக்கும் இடத்தை சொல்ல தெரியாமல், திரும்ப முடியாமல் போய்விட கூடாதே என்று ஒரு தயக்கம் இருந்தது. இதற்கு மேல் மழை வேறு.

மழை சிறிது விட்டவுடன், ஒரு ஆட்டோவில் கடைகள் இருக்கும் பகுதிக்கு சென்று ஒரு குடை வாங்கினேன். உடனே மழை பெய்தது. ஹய்யா! கொஞ்சம் வாக்கிங் போனேன். சமோசாவுக்கு பக்கத்தில் இருந்த, ’ஓமப்பொடியில் உருட்டிய ஒரு ப்ரவுன் கலர் பலகாரம்’ ஒரு பார்வையை கவர்ந்தது. வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். உள்ளே மாவு போல இருந்தது. அப்புறம், பாசந்தி போல ஒரு ஐட்டம் சாப்பிட்டேன்.

நம்மூரில் சாயங்காலத்திற்கு பிறகுதான், பேல் பூரி, பாவ் பாஜி கடைகள் உதயமாகும். இங்கு காலையிலேயே சிற்றுண்டியாக, இவைகளை சாப்பிடுகிறார்கள். சாம்பார் வடை கிடைத்தது. vada இங்கு wada. அப்புறம் மிச்சரில் சாம்பார் போன்ற ஒரு திரவத்தை ஊற்றி சாப்பிட்டார்கள்.

---

ஒரு ஜார்கண்ட் பெண் கேட்டாள்.

“தமிழ்நாட்டுல நிறைய சரவணன்கள் இருப்பாங்க தானே?”

“ஆமாம்”

“அப்படின்னா என்ன?”

“சாமி பேரு”

“சாமியா? யாரு அவரு?”

“பிள்ளையாரு தெரியும்ல”

“ஆமாம்”

“அவரோட யங்கர் ப்ரதர்”

---

வெளியில் எல்லா இடங்களிலும் சைகையிலையும், ஒரு சொல் ஆங்கிலத்திலும் தகவல் பரிமாற்றம் செய்துக்கொண்டிருந்தேன். ஒரு ரெஸ்டாரெண்டில் ’எக் ப்ரைட் ரைஸ்’ கேட்டேன். “அண்டா ப்ரைட் ரைஸ்?” என வெயிட்டர் கன்பர்ம் பண்ணி கேட்டார். நல்லவேளை, ’முட்டை’யை ஹிந்தியில் ’அண்டா’ என்று சொல்லுவார்கள் என தெரிந்திருந்ததால், “ஒரு ப்ளேட் போதும்” என்று நான் சொல்லவில்லை.

பெங்களூருக்கு திரும்பி வரும் போது, ஜன்னல் சீட் கிடைத்தது. உள்ளூக்குள் சென்று பார்க்க முடியாத பூனேயை, பறவை பார்வையில் பார்க்க முடிந்தது. ஊருக்குள் ஏதோ ஒரு ஆறு ஓடுகிறது. மேலிருந்து ஆற்றையும், அதை கடக்கும் பாலங்களையும், அதில் செல்லும் வாகனங்களையும் காண நன்றாக இருநதது.

அடுத்த முறை, இதுபோல் செல்லும்போது ஒருநாள் எக்ஸ்ட்ரா இருந்துவிட்டு வருவதுபோல் திட்டமிட வேண்டும்.

திங்கள்கிழமை காலை கிளம்பி பெங்களூர் திரும்பினேன். பூனேயில் இருந்து பெங்களூர் வர ஒரு மணி நேரமும், ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு வர இரண்டு மணி நேரமும் ஆனது.

.

Monday, July 19, 2010

ரஜினியின் வலைப்பதிவு - பதிவர்களுக்கு எச்சரிக்கை

ஊர் உலகத்துல ஆளாளுக்கு ப்ளாக் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ரஜினி ஒன்று ஆரம்பிக்கலாம், இல்லையா? இப்படி ரஜினியை ப்ளாக் ஆரம்பிக்க சொல்லி அமிதாப்பிடம் நச்சரிக்கிறார்களாம் இணைய ரசிகர்கள்.

அமிதாப் ஒவ்வொருவரையாக ப்ளாக் ஆரம்பிக்க சொல்ல, ட்விட்டர் கணக்கு தொடங்க சொல்ல, உச்ச நட்சத்திரங்களும் அவர் பேச்சை கேட்டு தொடங்குகிறார்கள். நமக்கு ஒரு தூதுவர் கிடைத்துவிட்டார் என்றெண்ணி பெரும்பாலான ரசிகர்களும் அவரிடம் ரஜினிக்கு இணையத்தில் ஒரு துண்டு போட்டு சீட் பிடிக்க நெருக்குகிறார்களாம்.’நானென்ன இம்மாதிரி இணைய தளங்களுக்கு விளம்பர தூதுவரா?’ என்று அமிதாப் கேட்டாலும், எனக்கென்னமோ இது உண்மையாக இருக்குமோ என்று கூட தோன்றுகிறது. இப்ப கொஞ்சம் பரவாயில்லை. சில காலம் முன்பு, டிவியில் விளம்பரம் போட ஆரம்பித்தால், வரிசையாக சீப்பு, சோப்பு என எல்லாவற்றிலும் அமிதாப் தான் வருவார். ஏன் வெள்ளிக்கிழமையானால் போதும். ஏதோ ஒரு அமிதாப் படம் ரிலீஸ் ஆகிவிடும். தற்சமயம் நிலைமை சீரடைந்து இருக்கிறது. அதனால், தனது வியாபாரத்தை இணையத்தில் தொடங்கிவிட்டாரோ? என்றெண்ண தோன்றுகிறது. இப்ப ‘ஆனா, ஊனா’ என்றால் ப்ளாக், ட்விட்டர் என்பதே இவர் பேச்சாக இருக்கிறது.

ஆனால், இந்த விஷயத்தில் இவர் பேச்சையெல்லாம் ரஜினி கேட்க போவதில்லை. ரஜினி தனது இமேஜ்/ப்ராண்ட் போன்றவற்றை, பொதுஜனம்/மீடியா போன்றவற்றில் இருந்து விலகியே வளர்ப்பவர். மூடியிருப்பதை பார்க்கும் ஆசை தான், ரஜினியின் புகழ் யுக்தி. விளம்பரங்களில் நடித்து தனது சூப்பர் ஸ்டார் இமேஜை நீர்த்துப்போகாமல் வைத்திருப்பவர். அவ்வளவாக விழாக்களில், நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாதவர். (கலைஞரின் பாராட்டுவிழாக்கள் விதிவிலக்கு). முன்புக்கு இப்போது பரவாயில்லை.

ரஜினி டிவிக்கு, பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து எவ்வளவு நாளாகிறது? விஜய் டிவியில் அவருக்கு ‘செவாலியே சிவாஜி விருது’ வழங்கி, கோபிநாத் ஒரு சிறு பேட்டி எடுத்தார். கமல் போன்றோர் வரும் பொதுநல விளம்பரங்களில் கூட தலைக்காட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு, போலியோ விளம்பரத்தில் வந்தார்.

அப்படி திரைப்போட்டு வாழ்பவர், வலைப்பதிவு ஆரம்பித்து தன் எண்ணங்களை பதிவாரா, என்ன? தற்போதைக்கு சாத்தியமே இல்லை. வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, ஓய்வு நேரம் அதிகமிருக்கும் சமயத்தில் ஆரம்பிக்கலாம்.

இப்ப போய் கேட்டா, ”நம்ம கையில என்ன இருக்கு? எல்லாம்...” என்று சொல்லி மேலே கையைக் காட்டுவார்.

---

நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பும் போது, விண்ணப்பித்தவர்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவும், ஒருக்கட்டத்திற்கு மேல் வடிகட்டுவதற்கும், சமீபகாலங்களில் அவர்களின் பெயரை இணையத்தில் தேடி, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்களை தேர்வாளர்கள் தெரிந்துக்கொள்கிறார்களாம்.

உதாரணத்திற்கு, உங்கள் பெயரை கூகிளில் தேடுங்கள். பேஸ்புக், ப்ளாக், ட்விட்டர், லிங்க்இன் - இப்படி எதிலாவது உங்கள் பக்கத்தை எடுத்துக்காட்டும். அப்படியே அங்கு இருப்பதை பார்த்தால், உங்கள் மறுபக்கம் தெரிந்துவிடும்.

நீங்க கேவலமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்திருந்தால், மானாவாரியாக கவர்மெண்ட்டை திட்டி, நிறுவனங்களை திட்டி பதிவெழுதியிருந்தால், ஆப்பு நிச்சயம். என்ன தான் நிறுவனங்கள் கருத்து சுதந்திரத்தை அனுமதித்தாலும், அநாகரீகமாக சொல்லப்படும் கருத்தை ஏற்க போவதில்லை.

இதற்கு தான் புனைப்பெயர்கள் உதவுகிறது. ஆனால், அதிலும் சிலர் ஆர்வகோளாறில் தங்களது போட்டோவை போட்டுவிடுவார்கள். ஆக, இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, அதுவும் வேலைக்கு ஆகாது. அப்படி இப்படி குலுக்கி போட்டு கண்டுப்பிடித்துவிடுவார்கள். அதனால், இம்மாதிரி சிக்கல்களில் சிக்காமல் இருக்க, ஒழுக்கமாக எழுதவும். இதுவரை ஏதாவது வில்லங்கமாக எழுதியிருந்தால், உடனே தூக்கிவிடுங்கள். ஆமா, அப்படியே நாம் தூக்கினாலும், கூகிள் கேச் விடவா போகிறது?!!!

இனியாவது இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு பதிவெழுதவும். இல்லாவிட்டால், முற்றிலும் வேறொரு முகமூடியுடன் பதிவெழுதவும்.

ஆனால், அதில் மல்டிபிள் டிஸ்ஆர்டர் வியாதி வரும் ஆபத்து இருப்பதால், ஒழுக்கமே விழுப்பம் தரும்.

.

Sunday, July 18, 2010

கணினியில் புதிய இந்திய ரூபாய் குறியீடு

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய ரூபாய் சின்னம் பற்றி அறிந்திருப்பீர்கள்.

இதை உருவாக்கிய உதயகுமார், சென்னையில் பிறந்தவர். பழங்கால தமிழ் எழுத்துமுறைகளில் சில ஆய்வுகளை செய்தவர். செய்துக்கொண்டு இருப்பவர். இந்த ஆய்வுகள், தனது ரூபாய் சின்னத்தின் உருவாக்கத்திற்கு உதவியதாக கூறியிருக்கிறார் உதயகுமார்.

வாழ்த்துக்கள் உதயகுமார்.இந்த குறியீடு இந்தியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் ஏற்கனவே பழக்கமானதாக இருப்பது போல் அமைந்தது இதன் சிறப்பு.

இந்த புதிய சின்னத்தை, கணினியில் பயன்படுத்த விரைவில் கீ-போர்டு மாற்றங்கள் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். சிலர் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார்கள்.

இதோ இந்த தளம் செல்லவும்.

ஃபாண்ட் டவுன்லோட் செய்யவும்.

உங்கள் கணினியில் ஃபாண்ட் போல்டர் (உ.தா.: மைக்ரோசாப்ட் எக்ஸ்பியில், c:\WINDOWS\Fonts) சென்று, டவுன்லோட் செய்த .ttf பைலைப் போடவும்.

புதிய ரூபாய் சின்னம், உங்கள் கணினியில் பயன்படுத்த ரெடி.

1ஆம் நம்பருக்கு இடதுப்புறம் இருக்கும் ` பட்டனை அழுத்தி, ஃபாண்டை ‘Rupee Foradian’க்கு மாற்றினால், ரூபாய் சின்னம் வந்துவிடும்.தற்போது, இந்த ஃபாண்ட்டை பயன்படுத்தி வேர்ட் போன்ற மென்பொருட்களில் டைப் செய்யலாம். யூனிகோட் மாற்றங்கள் நிகழ்ந்தப்பிறகு, அனைத்து வலைத்தளங்களிலும் பயன்படுத்த முடியும்.

.

Saturday, July 17, 2010

சின்னத்திரை சினிமா - சிந்தனை செய்

பெயருக்கு ஏற்ப, சிந்தனை செய்து எடுத்த படம். நம்மையும் அவ்வபோது நன்றாக சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.

நான் அவ்வளவாக ஆங்கில படங்கள் பார்ப்பதில்லை. ஆனால், கதைகள் கேட்பேன். இந்த படத்தில் சில காட்சிகளை பார்த்தபோது, இதற்கு முன் கேட்ட ஆங்கில பட கதைகள் நினைவுக்கு வந்தது. உதாரணத்திற்கு, அந்த பேங்க் திருட்டு மற்றும் ரயிலில் வாந்தியெடுக்கும் நாயகி.

ஹீரோ இறுதியில் இறந்துவிடுவார் என்பதை மட்டும் தான் யூகிக்க முடிந்தது. மற்ற அனைத்தையும் இண்ட்ரஸ்டிங்காக செய்திருந்தார் இயக்குனரும் நாயகனுமாகிய யுவன். இவர் எங்கே போனார்?

தமனுக்கு முதல் படம். ரஹ்மான், ஹாரிஸ் பெரிய படங்களுக்கு போடும் சில இசை துணுக்குகளை, தமன் இப்படத்திற்கு வழங்கியிருக்கிறார். படம் பார்த்துக்கொண்டிருந்த போது நடுவில் வீட்டுக்கு வந்தவர், இந்த படத்தில் வந்த ஒரு பிரபலமான பாடலை பாடினார். எனக்கு தெரியவில்லை. சன் ம்யூசிக்கில் லைட்டாக பார்த்த மாதிரியிருந்தது.

ஒருவேளை, யுவன் நடிக்காமல் ஒரளவுக்கு பிரபலமான ஹீரோ யாரையாவது நடிக்க வைத்திருந்தால், படத்தின் ரிசல்ட் பெட்டராக வந்திருக்கலாம்.

---

போன வருஷம், பார்க்க ஆவல் கொண்டு தவறவிட்ட படம் - சிந்தனை செய். பலர் நன்றாக இருந்ததாக சொல்லியிருந்தார்கள். பெங்களூரில், பொதுவாக எல்லா படங்களும் வருவதில்லை. ஆனால், இந்த படம் வெளியாகியிருந்தது. இருந்தும் விட்டுவிட்டேன். எப்பேர்பட்ட படமாக இருந்தாலும், இரு வாரங்களுக்கு மேல் ஓடாது. இது ஒரு வாரத்திற்கு மேல் ஓடியிருக்காது.இன்று சன் டிவியில் இந்த படம் போடுவதாக, கணேஷ் சொல்லியிருந்தான். காலையிலிருந்தே வேலை இருந்தாலும், ஈவ்னிவ் பார்க்க நினைத்திருந்தேன்.

நான் தற்சமயம் டிவி பார்ப்பதே சொற்பம். இதில் படங்களை முழுவதுமாக பார்த்து, பல நாட்கள் ஆகிவிட்டது. வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, படம் போட்டு இருபது நிமிடம் ஆகியிருந்தது. இருந்தும், பார்க்க துவங்கினேன்.

நடுவே, தெரிந்தவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். சவுண்டை குறைத்துவிட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டே சிறிது பார்த்தேன். ஏழு மணிக்கு சன் நியூஸ் போட்டார்கள். பிறகு, படம் போட்ட பிறகு, யாரோ கதவை தட்ட, வெளியில் கொஞ்சம் நேரத்தை செலவிட்டேன். இப்படி விட்டு விட்டு பார்த்ததில் எந்தளவு படம் புரிந்திருக்கும்? எப்படி தான் வீட்டில் படம் பார்க்கிறார்களோ? (வீட்டில் சன் டிவி ஓடிக்கொண்டிருந்தால், மாற்றி விஜய் டிவி வைப்பதால் ‘சன் டிவிக்கு விரோதி’ என்றொரு பெயர் சம்பாதித்திருக்கிறேன்!)

தவிர, இது ஒன்றும் மோசமான படமாக இல்லாவிட்டாலும், சில காட்சிகளை வீட்டில் உட்கார்ந்து பார்க்க சங்கோஜமாக இருந்தது.

ஒரு நல்ல டிவிடி கிடைத்து, வீட்டில் யாரும் இல்லாமல், யார் தொந்தரவு இல்லாமலும் பார்த்தால் உண்டு. இதற்கு பதில், தியேட்டருக்கு சென்று பார்ப்பதே பெட்டர் என்று தோன்றுகிறது. பார்த்த படத்தை வேண்டுமானால், டைம் பாஸுக்கு திரும்ப டிவியில் பார்க்கலாம்.

'இன்னும் எத்தனை நாள் தியேட்டர்ல போய் பார்ப்ப?’ன்னு அப்படின்னு ஒரு குரலும் எங்கிருந்தோ கேட்கிறது!

.

Thursday, July 15, 2010

யுவன் இசைத்து தள்ளியவை

கடந்த சில வாரங்களில், யுவன் இசையமைத்து மூன்று திரைப்படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. ரொம்ப வேலை பார்க்கிறாரே?---

பாண காத்தாடி

முரளி கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டு, தனது பையனை கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறார். பாடல் வெளியிட்டு மேடையில், முரளி தனது படங்களுக்கு இளையராஜாவின் இசை பெரும் பலமாக இருந்தாகவும், அடுத்தக்கட்டத்தில் தனது மகன் ஆதர்வாவின் வெற்றிக்கு யுவனின் இசை உதவும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். பாடல்களை கேட்கும் போது முழு உதவி பண்ணியிருப்பதாக தெரியவில்லை.

ஐந்து பாடல்கள். வழக்கம் போலான யுவனின் இசை. எனக்கு பிடித்தது - சாதனா சர்கம் பாடிய ‘என் நெஞ்சில்’ பாடலும், கார்த்திக் பாடிய ‘ஒரு பைத்தியம்’. ‘என் நெஞ்சில்’ யார் கேட்டாலும், உடனே பிடித்து விடும் ரகம். பாடல் முழுவதும், அருமையான தாளம். கார்த்திக் பாடிய பாடலில், கொஞ்சம் பையா வந்து போகிறான்.

---

காதல் சொல்ல வந்தேன்

நான் நம்பிக்கை வைத்திருக்கும் கமர்ஷியல் டைரக்டர்களில் ஒருவர் - பூபதி பாண்டியன். காமெடியில் வெளுத்து வாங்குவார். தனுஷ், விஷாலை வைத்து முதல் மூன்று படங்கள் இயக்கியவர், அடுத்து விக்ரம் வைத்து ஒரு படம் இயக்க போவதாக பல நாட்களாக செய்தி வருகிறது. இந்த கேப்பில் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் கதை இயக்கி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். கனவு படம் என்று வேறு சொல்லியிருக்கிறார்.யுவன் தான் இசை. இதுவரை வந்த விளம்பரங்களில், இவர்தான் முன்னிறுத்தப்படுகிறார். யுவன், உதித், கார்த்திக், விஜய் யேசுதாஸ் இவர்களுடன் சிதம்பரம் சிவகுமார் பூசாரியும் பாடியிருக்கிறார். உதித் பாடிய ’ஒரு வாணவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே’ - இந்த ஆல்பத்தில் என்னுடைய பிடித்தது. நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் ஒரு பலமென்றாலும், உதித்தின் உச்சரிப்பை கேட்கும் போது ஜாலியாக இருக்கிறது.

மெட்டுக்காக பாடல் வரிகள் இழுக்கப்படுவதை கேட்க வேண்டுமானால், கார்த்திக் பாடியிருக்கும் ‘அன்புள்ள சந்தியா’வை கேட்கவும். அன்புள்ள சந்தியா, உனை நான் காத...... லிக்கிறேன்.

---

தில்லாலங்கடி

இதிலும் பெரிதாக ஸ்பெஷாக எதுவும் தென்படவில்லை. தெலுங்கு ஒரிஜினலுக்கு தமன் இசை. இதிலும் அவர் இரண்டு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.

சிம்பு பாடிய ‘பட்டு பட்டு பட்டாம்பூச்சி’ பத்திக்கிற வகை. சித்ராவும், ஸ்ரேயா கோஷலும் இணைந்து பாடிய ‘சொல் பேச்சு கேட்காத சுந்தரியே’, யுவன் ஸ்டைலில் இரு தலைமுறையின் இரு இனிமையான குரல்களில் வந்திருக்கும் பாடல். நடுவே வரும் யுவனின் குரல் இசையும் இதனுடன் கூட்டணி போடுகிறது. தோல்வியின் புகழ் பாடும் பாடல் ஒன்று இருக்கிறது, ஷங்கர் மஹாதேவனின் குரலில். மொத்த ஆல்பத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறது, தமன் இசையில் ஸ்ரீ வர்தினியின் ‘இதயம் கரைகிறதே’. ஆனால், தமனின் ‘பூட்ட பாத்ததும் சிரிப்பான்’ பாடலில் தேவிஸ்ரீ நினைவுக்கு வருகிறார்.

சன்னில் படத்தின் விளம்பரத்தை தொடங்கிவிட்டார்கள்.

---

இன்னும் யுவனின் இசையில் நிறைய படங்கள் வரயிருக்கிறது. எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு புதுமையையும், தரத்தையும் கூட்டலாம்.

இப்ப ஒரு யுவன் சம்பந்தமான வீடியோ...

வீடியோவின் இறுதியில், கரகாட்டக்காரன் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தால் எப்படி இருக்கும் என்று இளையராஜாவே சொல்கிறார் பாருங்கள். அட்டகாசம்..

Tuesday, July 13, 2010

போன வார சினிமா - பழைய மெட்ராஸும், ஆவீயும்

தோசையை சூடாக சாப்பிட்டால் தான் ருசியாக இருக்கும் என்பதுபோல், புதுப்படத்தை உடனே பார்த்தால் தான் ரசிக்கமுடியும் என்பதுபோல், படத்தை பார்த்துவிட்டு பதிவும் உடனே போட்டுவிட வேண்டும். இல்லாட்டி, ஆறிப்போன எபெக்ட் தான். இருந்தாலும், இப்ப எழுத வேறு ஒன்றும் தோணாததால், போன வாரம் பார்த்த படங்களை பற்றியே எழுதுகிறேன்.வந்தால் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று நினைத்த இருபடங்கள், சென்ற வாரம் வெளியாகியது. மதராசபட்டிணம் & ஆனந்தபுரத்து வீடு.

---

ஏற்கனவே எனக்கு மதராசபட்டிணத்தின் பாடல்கள் பிடித்துப்போனதை பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். படத்தில், பின்னணி இசையும் ரொம்ப பிடித்துபோனது. சில இடங்களில் புல்லரிக்க வைத்தது. ஐ மீன், படத்தில் சில இடங்களில்...

ஐம்பது ரூபாய் கொடுத்து இந்த படத்தை பார்த்தேன். செண்ட்ரல் ஸ்டேசனையும், அதையொட்டிய ’சென்னையின் தேம்ஸ்’ நதியை பார்த்ததிலேயே ஐம்பது ரூபாய் சரியாக போய்விட்டது. எது செட், எது கிராபிக்ஸ் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிராமல் அனுபவிக்கவும். உண்மையிலேயே, இந்த படத்தை பார்ப்பது ஒரு நல்ல டைம் மெஷின் அனுபவம்.

அந்த பழைய நதி, கூவமாக மாறியதை காட்டி, ஹீரோயின் பாட்டி (!) மூக்கை பொத்தும் காட்சி - செருப்படி. இது போல் வெளிநாட்டினரிடம் இருந்து பணம் பறிக்கும் காட்சிகளும். கூவம் சாக்கடையாக மாறியது, சுதந்திரத்திற்கு பிறகு தானா? வெள்ளையர்கள் வெளியேறி, நம்மவர்களின் ஆட்சியில் தானா?

ஒரு உண்மையான கதைக்களத்தில், வரலாற்று காலக்கட்டத்தில், எவ்வித குழப்பமுமின்றி கற்பனையான ஒரு காதல் கதையை உறுதியாக சொல்லியதற்காக இயக்குனருக்கு சபாஷ்.

லகான் மாதிரியிருக்கு, டைட்டானிக் மாதிரியிருக்கு, வழக்கம்போலான சில தமிழ் சினிமாக்காட்சிகள் என்றெல்லாம் சொன்னாலும், ஒரு இளம் குழுவின் கடும் உழைப்பில் உருவாயிருக்கும் தரமான படம் இது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய முழு பங்கையும் கொடுத்திருக்கிறார்கள்.

அபூர்வமாக படம் பார்ப்பவர்களும், பார்க்க வேண்டிய படம்.

---

சந்திரமுகி, அந்தியன் என சில ஜாம்பவான்களின் படங்களில் காட்டியதற்கு முன்பே, அந்த கருவை ஒரு சீரியலில் காட்டியவர் நாகா. இந்திய தொலைக்காட்சி சீரியல்களை பாப்புலாரிட்டி அடிப்படையிலும், தரத்தின் அடிப்படையிலும் வரிசைபடுத்தினால், அவர் இயக்கிய ‘மர்ம தேசம்’ கண்டிப்பாக அதில் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கும்.

அப்படிப்பட்டவர் இயக்கும் முதல் படமென்பதாலும், ஷங்கர் தயாரிப்பென்பதாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆ.வீ.யில் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை.

த்ரில்லிங்காக எதையாவது காட்டிவிட்டு லாஜிக் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றேன். முதல் காட்சியிலேயே, இதில் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஈரம் போல், இதிலும் நல்ல பேய். ஆனால், நல்ல நந்தா. அம்புலிமாமா டைப் மேஜிக் காட்டுகிறார்கள்.

படத்தில் எனக்கு பிடித்தது - அந்த வீடும், அந்த பையனும். எத்தனை கோடி செலவழித்தாலும், இப்படி ஒரு இயற்கையான நீச்சல்குளத்துடன் வீடு அமைவது சிரமம். பொடியனின் ஹேர் ஸ்டைலும் சிரிப்பும் அருமை.

ஒருகட்டத்திற்கு மேல், ஹீரோவின் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தான், படத்தின் பெரும் பிரச்சினை. அந்த குண்டு வில்லனை பார்க்க, எனக்கு பாவமாக இருந்தது. லட்ச கணக்கில் பணத்தை கொடுத்துவிட்டு, ஹீரோவின் வீட்டில் காவல் காக்கிறார். ஹீரோவும், ஹீரோயினும் இவர் பிரச்சினையை பெரும்பாலும் கண்டுக்கொள்ளவே இல்லை. அய்யோ பாவம்!

ஆனந்தபுரத்து வீட்டில் பழைய ஆவி.

கொசுறு நியூஸ் - ஷங்கர் இன்னும் சில காலத்திற்கு படம் தயாரிக்க போவதில்லையாம். படம் பார்த்து பயந்தது, அவர் ஒருவராகத்தான் இருக்கும்.

.

Tuesday, July 6, 2010

ப்ளாக்கர் - பின்னூட்ட பிரச்சினை

ப்ளாக்கரில் வலைத்தளம் வைத்திருப்பவர்கள், இன்று தலையை பிய்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.உங்கள் பதிவுக்கு ‘இத்தனை’ பேர் பின்னூட்டமிட்டு இருக்கிறார்கள் என்று ப்ளாக்கரின் முதல் பக்கத்தில் கணக்கு காட்டும். என்னவென்று பார்க்க மாடரேட் பக்கத்திற்கு சென்றால், ஒன்றும் இருக்காது.

இப்பிரச்சினை பலருக்கு இருக்கிறது. ப்ளாக்கர் டீம் சரி செய்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

பதிவை போட்டுவிட்டு, என்னடா இது யாரும் ஒண்ணும் சொல்லலையே? என்று குழப்பமடையவோ, வருத்தமடையோ வேண்டும். இது உங்க குத்தம் இல்லை. ப்ளாக்கர் குத்தம்.

மறைந்து போகும்/மறைக்கப்படும் பின்னூட்டங்களைப் பார்க்க ஒரு வழி. பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை பார்க்க, மெயில் ஐடியை செட் செய்து வைத்துக்கொள்வது. (Blogger -> Settings -> Comments -> Comment moderation/Comment Notification Email)

சில பதிவுகளைப் பார்க்கும் போது, நல்லவேளை இன்று பின்னூட்டம் வேலை செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது.

தற்போது இப்பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், அவ்வப்போது error என்று பல்லிளிக்கிறது.

.

Monday, July 5, 2010

களவாணி

யெய்யய்யே! படம் பாக்க வுடுறாங்களா? எப்ப பாரு கத்திக்கிட்டே! படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை, குரூப் குரூப்பாக வந்திருந்த இளைஞர் கூட்டம் கத்திக்கொண்டே இருந்தது. அதிலும் சிலர் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள்.இயக்குனராகும் ஆசையில் இருப்பவர்கள், ஏகப்பட்ட ஐடியாக்களை சேர்த்து வைப்பார்கள். தங்களுடைய முதல் படத்தில் அவ்வளவையும் அள்ளி வைப்பார்கள். பந்தியில் முதல் வரிசையில் உட்கார்ந்தால், எல்லா ஐட்டங்களும், சூடாக கிடைக்குமே? அப்படி ஒரு உணர்வை ரசிகர்களுக்கு கொடுக்கிறது இப்படம்.

தமிழ் சினிமா பலமுறை பார்த்த ‘ஒரு உருப்படாதவனின் காதல் கதை’ தான். ஒரத்தநாடு, ராணிமங்களம் போன்ற ஊர்களை களமாக வைத்து, ஜாலியாக சொல்லிருக்கிறார்கள்.

இயக்குனர் விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்தவரா? கிராமத்து கதை, விவசாய பின்னணி என்பதால் விவசாய குறிச்சொற்களை படத்துடன் கலந்திருக்கிறார். படம் முழுக்க ரசிக்கும் வகையில் நிறைய டைரக்டர் டச்கள் இருக்கிறது. அடிவாங்கிய சொம்பு, செங்கல் டிவி ஸ்டாண்ட், பொரளி பேசும் டிஷ் என கவனிக்கத்தக்க காட்சிகள். யதார்த்ததை மீறாத கிராமத்துக்காட்சிகள். பெரிய ஐடியா மணியாக இருப்பார் போல!

’பசங்க மீனாட்சி’ விமல், ‘பருத்தி வீரன் முத்தழகி அம்மா’, ’வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா சாம்பியன்’, ‘பருத்தி வீரன், நாடோடிகள் டைப் கிச்சு கிச்சு’ கஞ்சா கருப்பு, ’பசங்க புஜ்ஜிமா அம்மா’, ‘சுப்பிரமணியபுரம் பாணி’ பொண்ணு கடத்தல் போன்றவற்றை பார்த்தபோது, முடிவு ட்ராஜெடியாக இருக்குமோ? என்று பயந்தேன். நல்லவேளை, எங்குமே ட்ராக் மாறாமல், ஜாலியாகவே முடித்தார்கள்.

பாடல்களை கேட்டதே இல்லையென்பதால் ஒரு பாடலை தவிர மற்ற எதுவும் கவரவில்லை. சாதா காதல் கதையை இரண்டரை மணி நேரம் காட்டுவதால் சில இடங்களில் போர் அடிக்கிறது. மற்றபடி நடிகர்கள் தேர்வு, கதாபாத்திரங்களின் ஸ்கெட்ச், புதுமுகங்களின் நடிப்பு, கிராமத்து சுவாரஸ்யங்கள், காமெடி ரவுசுகள் என படத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

விமல், ஒரு காட்சியை தவிர படம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையுடன் காலரை இழுத்துவிட்டுக்கொண்டு சுற்றுகிறார். ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்க தயாராக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிடிக்கும் வகையில் உள்ள கதாபாத்திரத்தில், கவரும்படி நடித்திருக்கும் விமலுக்கு இந்நேரம் மன்றங்கள் திறக்கப்பட்டிருக்கும். பெயருக்கு முன்னால் என்ன போடலாம் என்று உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

இயக்குனர் சற்குணம் - சசிக்குமாரிடமோ, பாண்டிராஜிடமோ அல்லது சுசீந்திரனிடமோ தொழில் கற்றிருப்பார் என படம் பார்க்கும் போது தோன்றியது. ஆனால் ஆச்சரியம். அவர் பணியாற்றியது ‘பொய் சொல்ல போறோம்’ இயக்குனர் விஜய்யிடம்.

ஒரு ஜாலியான கதையை கிராமத்து பின்னணியில் பார்க்க விரும்பினால், களவாணியை பிடிங்க.

.

பாரத் பந்த் - இன்று பதிவு கிடையாது!

பெட்ரோல் விலை உயர்வை முன்னிட்டு, எதிர்கட்சிகளால் அறிவிக்கப்பட்டு, மக்களால் கொண்டாடப்பட்டு வரும் பாரத் பந்த்தை முன்னிட்டு இன்று பதிவு எதுவும் கிடையாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

அவ்வளவுதான் சொல்ல திட்டமிட்டு ஆரம்பித்தாலும், இன்னும் சில விஷயங்கள்...

பாஜக அழைப்புவிட்டிருக்கும் பந்த் என்பதால், பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் பந்த் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. பெங்களூரில் மெடிக்கல் ஷாப் தவிர இதர கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பேச்சிலர் ரூம்களில் கஷ்டப்பட்டு ஹோட்டல் கண்டுபிடித்து, ரகசியமாக பார்சல் வாங்கி உணவருந்தினார்கள். கிச்சன் வசதி இல்லையென்றால் இவர்களுக்கு வேலை நிறுத்தத்துடன் உண்ணாவிரதமும்.

காலையில் சொற்ப அளவில் பஸ்கள் ஓடிக்கொண்டிருந்தது. மதியத்திற்கு மேல் ஒன்றையும் காணவில்லை.ஒரு நல்ல விஷயம். எங்குமே சிக்னல் இல்லை. ஞாயிற்றுக்கிழமை கூட ஓயாமல் வேலை பார்க்கும் சிக்னல்கள் இன்று ரெஸ்ட் எடுத்தது. ஆரஞ்ச் விளக்கு மட்டும் கண்ணடித்துக் கொண்டிருந்தது. மையபகுதியான எம்.ஜி. ரோடு பக்கமிருக்கும் சிக்னல்கள் மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது.

ஒரு இடத்தில் சிகப்பு கொடியுடன் ஒரு கோஷ்டியும், இன்னொரு இடத்தில் காவி கொடியுடன் ஒரு கோஷ்டியும் ஆளே இல்லாத ரோட்டில் ஆர்ப்பாட்டிக்கொண்டிருந்தனர்.

போலீஸ் ஆங்காங்கே நின்று கண்காணித்துக்கொண்டிருந்தனர். யாராவது பிரச்சினை செய்கிறார்களா? என்று பார்த்தார்களா அல்லது யாராவது கடையை திறக்கிறார்களா? என்று பார்த்தார்களா என்று தெரியவில்லை.

ஆளே இல்லாத ரோட்டில் பைக் ஓட்டுவது சுகம். அதிலும் இன்று சிறிது நேரம் மழை தூற... வாவ்!

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தம். பைக் வேலையை நிறுத்திவிட கூடாதென்று, பந்த் என்றும் கண்டுக்கொள்ளாமல் பெட்ரோல் போட வேண்டியிருந்தது. மடிவாளாவில் இருந்த பெட்ரோல் பங்க் மட்டும் திறந்திருந்ததை கண்டேன்.

கல்வி நிலையங்களுக்கும், பெரும்பாலான நிறுவனங்களும் இன்று விடுமுறை என்று வெள்ளியன்றே அறிவித்துவிட்டார்கள். மீதி நிறுவனங்கள், வாரயிறுதியில் மெயில் அனுப்பியும், மெசேஜ் அனுப்பியும் லீவு விட்டார்கள். சில நிறுவனங்கள் முக்கியமான, தேவையான இன்ஜினியர்களை ஞாயிறு இரவே ஆபிஸ் வந்து படுக்க சொல்லிவிட்டார்கள். பந்த் இந்திய அளவில் தானே? உலகளாவிய வேலை நிறுத்தமாக இருந்திருந்தால், அவர்களுக்கும் விடுமுறை கிடைத்திருக்கும்.

விடுமுறை என்று மகிழ்ச்சியாகவும் இருக்க முடியவில்லை. வரும் சனிக்கிழமை போக வேண்டுமாம். அப்புறம் என்ன வேலை நிறுத்தம்? வேலையை தள்ளி வைத்தல் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வீட்டில் இருந்து என்ன செய்ய? தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி பந்த்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால், சன் டிவி, கலைஞர் டிவி, கே டிவிக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளோ, சிறப்பு திரைப்படங்களோ இல்லை.

ஏடிஎம்களுக்கு வேலை நிறுத்தம் இல்லையென்பதால், பணமெடுக்க பிரச்சினை இல்லை. இம்மாதிரி எவ்வளவுக்கெவ்வளவு மனித வேலையை தானியங்கியாக மாற்றுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு வேலை நிறுத்ததால் வரும் பாதிப்பு குறையும்.

இன்று மாலை, பந்த் மாபெரும் வெற்றி என்று சொல்லுவார்கள். ஆனால், பெட்ரோல் விலை? அதே தான். லிட்டர் 58 ரூபாயும் சில்லறைகளும்.

.

Thursday, July 1, 2010

அரசுக்கெதிரான ஒரு தனிமனித போராட்டம்

கர்நாடக சட்டசபை கடந்த இரண்டு நாட்களாக அமளிதுமளிபடுகிறது. காரணம், ஒருவருடைய ராஜினாமா கடிதம். அரசு துறைகளில் இருக்கும் லஞ்ச மற்றும் இதர சீர்கேட்டினை விசாரிக்க இருக்கும் அமைப்பின் தலைவருடைய ராஜினாமா கடிதம். பாஜக அரசை தவிர கவர்னர், எதிர்க்கட்சிகள், மக்கள் என அனைவரும் ராஜினாமாவை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளின் இந்த அக்கறைக்கு அரசியல் காரணங்கள் இருப்பினும், நடுநிலையாளர்களின் வருத்தம் - இருக்கும் சொற்ப நம்பிக்கைகளையும் பாழாய் போன அரசியல் காலி செய்கிறதே என்பது தான்.

---

’லோக் அயுக்தா’ என்றொரு அமைப்பை மொரார்ஜி தேசாய், அவருடைய ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தினார். அதன் முக்கிய நோக்கம், லஞ்ச முறைக்கேட்டை கண்டறிவது. லோக் அயுக்தா என்றால் ‘மக்கள் தூதுவன்’ என்பது போன்ற அர்த்தம் வரும். இந்த அமைப்புக்கான சட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் ஒரு லோக் அயுக்தாவை நியமிக்க வேண்டும். ஒரு முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி, இதன் தலைவராக இருப்பார். அவரும் ‘லோக் அயுக்தா’ என்று தான் அழைக்கப்படுவார். இவரை நியமிக்கும் அதிகாரம், மாநில ஆளுனருக்கு உண்டு. ஒரு மாநிலத்தின் முதல்வர் முதற்கொண்டு கடைநிலை அரசு ஊழியர்கள் வரை, லோக் அயுக்தாவின் விசாரணை வட்டத்திற்குள் வருவார்கள்.

கேட்க நன்றாக இருந்தாலும், விசாரணை மற்றும் அறிக்கை வரை தான் இவர்களது அதிகாரம். அதற்கு மேல் தண்டிக்கும் அதிகாரமெல்லாம் இவர்களுக்கு கிடையாது.

நான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை. பெங்களூர் செய்திதாள்களில் அடிக்கடி இது சம்பந்தமான செய்திகள் வரும். இங்கு லோக் அயுக்தாவாக இருப்பவர், 69 வயதான முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி - சந்தோஷ் ஹெக்டே. மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக திகழும் அளவுக்கு, பல விஷயங்களை செய்திருப்பவர். உதாரணத்திற்கு சில.---

அந்த அன்னைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மணி இரவு 2. அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றால், கண்டுக்கொள்ள யாருமில்லை. ஹெக்டேவுக்கு தொலைபேசி எண்ணை சுழற்றினார். ”அய்யா, நீங்க சொல்லுங்கய்யா... கேப்பாங்க...”. ஹெக்டேவுடைய வேலை இதுவல்ல. ஆனாலும் அந்த மருத்துவமனைக்கு போன் போட்டார். ஒரே போன். அடுத்த சில மணித்துளிகளில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் குடிசைக்கு முன்பு நின்றார்கள்.

ஏதோ அதிகாரமில்லாதவர்களை மட்டும் பிடித்து மிரட்டுபவரல்ல இவர். கோலார் எம்.எல்.ஏ.வையும் லஞ்சம் வாங்கும்போது, கையும் களவுமாக பிடித்திருக்கிறது இவருடைய அணி. அவ்வளவு ஏன், போன வருடம் பாராளுமன்றத்தில் 17 முக்கியமான மசோதாக்களை 13 நிமிடத்தில் தாக்கல் செய்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் மீதே கோபக்கனலை வீசினார். காரணம் - லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் கறைப்படிந்த கரங்களை கழுவ வழி ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

---

சமீபத்தில் இவர் வாளை சுழட்ட ஆரம்பித்த இடம் - பெல்லாரி் கனிம சுரங்கத் தொழிலில். பெரிய இடம் தான். ஒரு மாநிலத்தின் ஆட்சியையே தொங்கலில் வைக்கும் அளவுக்குக்கான செல்வாக்கு படைத்தவர்களுக்கு எல்லாமே சட்டவிரோதம் தான். எல்லாவற்றையும் விசாரித்து என்னதான் அறிக்கையை அரசுக்கு அனுப்பினாலும், பலன் தெளிவான பூஜ்யம். திரும்ப திரும்ப விசாரித்து அனுப்பினாலும், பலன் அதே. தவிர, இவருக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கு பலவிதமான நெருக்கடிகள். இவர் தவறு செய்த அரசு அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பினால், சில நாட்களில் சஸ்பென்சன் தடை செய்யப்பட்டு, ஜாலியாக சீட்டில் அமர்ந்திருப்பார் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். இவர் அரசிடம் வைத்த கோரிக்கைகள் எதையும் சட்டை செய்யவில்லை அரசு.

பொறுத்தார். பார்த்தார். ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டார்.

“என் பேச்சுக்கு கட்டுப்பட்டு, நேர்மையுடன் எனக்கு கீழே வேலைப்பார்க்கும் அதிகாரிகளை என்னால் காப்பாற்ற முடியாவிட்டால், அவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்க நான் தகுதியானவன் அல்ல. அரசு வீட்டுக்காகவும், சிகப்பு விளக்கு பொருத்திய காருக்காகவும் மட்டும் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன்.”

பதவியில் இருந்து விலகினாலும், தனது சமூக பணிகள் தொடரும் என்கிறார் ஹெக்டே.

இவர் பிரஸ் மீட் வைத்ததை பார்த்து தலைமறைவான முதல்வர் எடியுரப்பா, அடுத்த நாள்தான் வெளியே வந்தார். ”ராஜினாமா முடிவை பரிசீலனை செய்ய கேட்பீர்களா?” என்ற கேள்விக்கு, முதல்வரின் பதில் - “நான் அவருடைய முடிவை மதிக்கிறேன்.”

நல்லா மதிச்சீங்க!

---

மக்கள் பிரச்சனைகளை உடனே தீர்த்துவைப்பது போல் ஒரு படம் அமைந்தாலே, அதை பேண்டஸி என வகைப்படுத்திவிடுகிறோம். அந்த அளவில் தான், தீர்வுகளை நோக்கிய நம் நம்பிக்கை இருக்கிறது. எப்பொழுதாவது சின்னதாக ஒரு நம்பிக்கை பூக்கும். அதையும் பூத்து மலர்வதற்கு முன்பே பிடுங்கி ஏறிய சிலர் தயாராக இருக்கும் வரை, நமக்கு உடனடி நியாய தீர்வென்பது பேண்டஸி தான் போலும்.

.