Thursday, February 16, 2012

இணைய திரையரங்குகள்

வாரத்திற்கு ஒரு படமாவது தியேட்டர் சென்று பார்த்துக்கொண்டிருந்தவனை, தியேட்டர் இல்லாத ஊருக்கு அனுப்பி வைத்தால் என்ன செய்வான்? (நான் பார்க்க விரும்பும் படங்களை திரையிடும் தியேட்டர் இல்லாத ஊர் என்று பொருள் கொள்க!). இணையம் தான் கதி.சிறு பட்ஜெட் படங்களை, திரையரங்குகள் தான் கண்டு கொள்வதில்லை என்றில்லை. திருட்டுத்தனமாக படங்களை வழங்கி வரும் இணையத்தளங்களும் கண்டு கொள்வதில்லை. முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் முதல் நாளே சுட சுட பதிவேற்றுபவர்கள், சிறு பட்ஜெட் படங்களை ஒன்றிரண்டு நாளிலோ, அல்லது பதிவேற்றாமலே விட்டுவிடுவார்கள். இதுவே, பெரிய படங்கள் என்றால் ஒவ்வொரு நாளும் வகை வகையான ப்ரிண்ட்டை தளத்தில் ஏற்றுவார்கள். முதல் நாள், தியேட்டர் காப்பி. அடுத்தது, தியேட்டரில் எடுத்ததில் நல்ல ப்ரிண்ட். அப்புறம், இன்னும் கொஞ்சம் நல்லது. சில வாரங்களுக்கு பிறகு, டிவிடி, ப்ளு-ரே என்று அப்-லோடி அப்-லோடி அப்-டூ-டேட்டாக இருப்பார்கள். சின்ன படங்கள், அப்படி அல்ல. கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

நல்ல விமர்சனங்களை பெற்ற சில சிறு பட்ஜெட் படங்களைத் தேடி தேடி களைத்திருக்கிறேன். இதற்கு எஸ்.ஏ.சி. ஏதாவது செய்ய வேண்டும். (என்னைத் தேடி வந்து உதைக்க போகிறார்கள்.)

தமாஷை விடுங்கள். பிறகு, நான் என்ன தான் செய்வது? பெங்களூரில் இருந்த போதும், இப்படி சில படங்கள் வராமல் இருந்த போது, ஓசூருக்கு பைக்கில் சென்று பார்த்து வந்திருக்கிறேன். இப்போது, என்ன செய்ய? ஆபத்துக்கு பாவமில்லை என்று இணையத்தில் மட்டமான ப்ரிண்ட் என்றாலும் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கிறது.


---

மகான் கணக்கு என்றொரு படம் வந்தபோது இணையத்திலும் சரி, டிவி விமர்சனங்களிலும் சரி, ஒரளவுக்கு நன்றாக இருப்பதாக சொன்னார்கள். நானும் தேடி தேடி பார்த்தேன். எங்கும் எனக்கு சிக்கவில்லை.

சமீபத்தில், இந்தியாக்லிட்ஸ் மூவிஸ் தளத்தில் காணக்கிடைத்தது. முக்கியமாக, இது லீகலான தளம். திருட்டுத்தனமாக பார்க்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இல்லாமல் பார்க்கலாம்.

படம் ஓகே. காதில் பூ சுற்றும் கதை தான் என்றாலும், இது போன்ற யாரும் சொல்லாத கதைகள், நடைமுறையோடு ஒட்டிய கதைகள் என்றால், சில குறைகள் இருந்தாலும் பார்க்கலாம். ‘ஹைய்யா! லோனு’ என்று இருப்பவர்களை, ‘ஹைய்யையோ! லோனா?’ என்று தெறிக்க விட்டு யோசிக்க வைக்கும் விழிப்புணர்வை கொடுப்பதால், இயக்குனரை பாராட்டத்தான் வேண்டும். வசனங்கள், நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது. நாடகத்தன்மை தான் குறை.

---

ஒரு இரண்டு மணி நேரம், ஏதேனும் வேலை பார்க்க வேண்டும் என்றால், முன்பு பாட்டை போட்டுவிட்டு வேலையை பார்ப்பேன். இப்போது, ஏதேனும் படத்தை போட்டுவிட்டு பார்க்கிறேன்.

யூ-ட்யூபில் நிறைய பழைய படங்கள், புது படங்கள், நல்ல தரத்தில் காணக்கிடைக்கின்றன. போட்டுவிட்டோம் என்றால், அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்க, வேலையும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும். யூ-ட்யூபில் லீகல், இல்லீகல் - இருவகை படங்களும் இருக்கின்றன. பெரும்பான்மை, இல்லீகல்.


லீகல் என்றால் சட்டத்திற்காக மட்டும் அல்ல. நமக்கும் பார்க்க கொஞ்சம் தரத்தில் இருக்கும். உங்களுக்கு தெரிந்த லீகல் தளங்களை சொல்லுங்களேன்?

.

Monday, February 13, 2012

விஜய் டிவி - சிவகார்த்திக்கேயன் - மெரினா

இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திக்கேயனை ‘மெரினா’ படத்திற்கு ஒப்பந்தம் செய்த போது நினைத்திருக்க மாட்டார். அவருடைய இந்த படத்திற்கு (ப்ரீயாக?!!) இவ்வளவு ப்ரமோஷன், விஜய் டிவியிடம் இருந்து கிடைக்கும் என்று.என்றைக்கு தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும், தங்களுடைய கண்டுபிடிப்பான, சிவகார்த்திக்கேயன், இந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததோ, அன்றிலிருந்து ‘மெரினா’ விஜய் டிவியின் படமாக ஆகிவிட்டது. வம்சத்திற்கு கலைஞர் டிவி போல், மெரினாவிற்கு விஜய் டிவியாகி விட்டது.

இதை பற்றியே ப்ரோகிராம் மேல் ப்ரோகிராமாக போட்டு தள்ளுகிறார்கள். சிவாவும் நல்லபடியாக பிரபலமாக ஆகிவிட்டால், அதை வைத்தே இவர்கள் பெருமையை கூட்டிக்கொள்ளலாம். இப்போதே, சந்தானம் பற்றி ஏதாவது சொல்லவேண்டுமானால், இவர்கள் பெருமையை சொல்லிவிட்டு தான் சொல்வார்கள். (த்ரிஷா, ஜெகன் என்று இவர்கள் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது) நல்ல விஷயம் தான். ஆனால், அதனால் மற்றவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது, பாருங்கள்?

இப்படி தான், மெரினா படத்தின் ஹீரோ ஹீரோ என்று அனைத்து நிகழ்ச்சிகளிலும், சிவகார்த்திக்கேயனை கூட்டி வந்து, இயக்குனருடன் அமர வைத்து பேசவிடுகிறார்கள். (ஒரு சூறாவளி கிளம்பியதே... சிவா... சிவா... என்று பில்டப் சாங் வேறு!) ஆனால், படத்தை பொறுத்தவரை கதை - ஒரு சிறுவனை பற்றியது, அவன் பார்வையில் அவன் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியது. உண்மையில், ஹீரோ அவன் தான். இது சிவாவுக்கும் தெரியும். படத்தின் டைட்டிலில் சிவாவின் பெயர் பக்கோடாவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவதாக தான் வருகிறது. இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பக்கோடாவை சேர்த்துக்கொள்ளாமல், அல்லது, தூரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைத்து நடத்துகிறார்கள்.

இயக்குனருக்கு இது புரிந்தும், வேறு வழியில்லாமல், கலந்துக்கொண்டு வருகிறார். எப்படியோ, படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்து, படம் ஓடி, இயக்குனருக்கு நல்ல பெயருடன் லாபத்தையும் கொடுத்தால் நல்லது தான். நல்ல விஷயம் (ஊரைவிட்டு ஓடி வந்து பீச்சில் சுண்டல் விற்பது அல்ல. கல்வி முக்கியம் என்பது) நாலு பேரை சென்றடைந்தால் நல்லது தான்.

அதே சமயம், விஜய் டிவி பப்ளிசிட்டி கொடுத்திருக்காவிட்டாலும், படத்தின் ஓப்பனிங்கிற்கு சிவகார்த்திக்கேயன் தனிப்பட்ட அளவில் கொஞ்சமாவது காரணமாக இருந்திருந்திருப்பார். அவருடைய டிவி வீச்சு அப்படி. எத்தனை பேர் பார்க்கிறார்களே, நான் ரெகுலராக ‘அது இது எது’ பார்த்து வருகிறேன். யாராவது சிக்கினால் போதும், ஓட்டியே நிகழ்ச்சி முழுக்க ஓட்டிவிடுவார். ஆனாலும், ஆள் தராதரம் பார்த்து தான் ஓட்டுவார். சேரன் போன்ற கோபக்காரர்களிடம் கொஞ்சம் பம்மியே பேசுவார். ’3’ பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தனுஷிடம் அடக்கமாக பேசியவர், இசையமைப்பாளர் அனிருத்தை விட்டுவைக்கவில்லை. அவர் வேஷ்டி சட்டையில் வந்ததை பார்த்து, ”சட்டையைக் காய போட்டுருக்காங்களோன்னு நினைத்தேன்” என்று நக்கல் விட்டார். ‘வாகை சூட வா’ நிகழ்ச்சியில் இயக்குனர் பாண்டிராஜை ஓட்டாமல் விட்டததால் தான், இந்த வாய்ப்பே அவருக்கு என்று இயக்குனர் நகைச்சுவையாக கூறினார்.

அது என்னமோ தெரியவில்லை. பொண்ணுகளை எவ்வளவு நக்கல் விட்டாலும், பெண்களுக்கு இவரை ரொம்பவும் பிடித்துவிடுகிறது. திறமைமிக்கவர். நன்றாக நடனமாடக்கூடியவர். விஜய் டிவி டான்ஸ் ப்ரோகிராமில், காம்பியராக இவர் விட்ட லந்துகளை தொகுத்து போட்ட நிகழ்ச்சி, மெயின் நிகழ்ச்சியை விட பெரிய ஹிட். இவர் வராத நிகழ்ச்சிகளே இல்லை என்பது போல் விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரை இறக்கிவிட்டார்கள். ’காபி வித் சிவா’ என்று கூட இடையில் ஆரம்பித்தார்கள். திறமையும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் திறனும் இருந்தால், வேகமாக உச்சத்தை தொடலாம் என்பதற்கு உதாரணமாகி வருகிறார் சிவகார்த்திக்கேயன்.

சிவகார்த்திக்கேயனை ஹீரோவாக வைத்து இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றும் அட்லீ எடுத்த ’முகப்புத்தகம்’ என்னும் குறும்படம், ஏற்கனவே யூ-ட்யூபில் ஹிட்.

தனுஷ் படம், செல்வராகவன் படம் என்று தொடர்ச்சியாக வெள்ளித்திரையில் பிரகாசிக்கப்போகும் சிவகார்த்திக்கேயனுக்கு வாழ்த்துக்கள்.


.

இலக்கிய பரோட்டா - நகலும் அசலும்

நகலும் அசலும்---

நகல்

பஞ்சாப்பில் உருவான மைதாவும், பெல்லாரியில் விளைந்த வெங்காயமும், நாமக்கல்லில் போடப்பட்ட முட்டையும் இங்கே என் இலையில் சங்கமித்திருக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு இந்தியனின் பசியை நீக்க, ஒன்றிணைந்த இந்திய ஒருமைப்பாடா?

அசல்

பரோட்டா வெறும் உணவில்லை அது ஒரு கலாச்சாரக் குறியீடு, பரோட்டா சாப்பிடாதவர்களே இல்லை எனும்படி அது தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது,


---

நகல்

புரோட்டா வட இந்திய உணவு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முகலாய படையெடுப்பின் மூலம் இந்திய பிரதேசத்திற்குள் அறிமுகமான உணவு இது. புரோட்டா பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து நம்மிடம் வந்திருக்கிறது. அதனிடம், எந்த முகலாய பேரரசர் இதை சொல்லி அனுப்பினார்?

அசல்

பஞ்சாபில் இருந்து பரோட்டா எப்படி தென்னிந்தியாவிற்குள் வந்தது, தமிழ்மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு எவ்வாறு பரோட்டா அறிமுகமானது, அங்கு பரோட்டா அடைந்த உருமாற்றங்கள் என்ன என்பதை முழுமையாக விவரித்திருக்கிறார் ஷாநவாஸ், மொகலாய மன்னர்களின் உணவுபட்டியலில் பரோட்டா இடம் பெற்றிருப்பது வரை மனிதர் தேடித்துருவி ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்.


---

நகல்

மாஸ்டர் அதை தயார் செய்து கொண்டிருந்தது, அவருடைய இரும்பு கரண்டி, கல்லில் எழுப்பும் ஒலியின் மூலம் எனக்கு தெரிந்தது. அது ஒரு வன்முறையின் ஒலியாக எனக்கு கேட்டது. கண்ணுக்கே தெரியாத, புரோட்டாக்கள், முட்டைகள், தக்காளிகள், வெங்காயங்கள், கறிவேப்பிலைகள், ’உனக்காக நாங்கள் மரணிக்கிறோம்’ என எழுப்பும் மரண ஒலியாக அது என்னை வந்தடைந்தது.

சிறிது நேரத்தில் ஒலியின் அளவு குறைந்தது. இரும்பு கரண்டியின் வன்முறையை தாங்க முடியாத உணவு பொருட்கள், அதற்கு அடங்கி, கொத்து புரோட்டாவாக உருவெடுத்திருக்கும் நேரம் அது.


அசல்

பள்ளிவயதில் பரோட்டா போடும் மாஸ்டரின் லாவகத்தை வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன், பரோட்டாவை பிய்த்துப் போட்டு அதில் சால்னா ஊற்றுவது ஒரு கலை, அது போலவே கொத்து பரோட்டா போடும் கல்லின் தாள ஒசை தனியான லயம் கொண்டது.

---

எது எப்படியோ, ”ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்” - நான் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம் என்றாகிவிட்டது.

தூத்துக்குடி பரோட்டா பற்றி வாசிக்க, இங்கே செல்லுங்கள்.

.

Sunday, February 12, 2012

கேப்டன் பிரபாகரன்

சிறு வயதில், எனது அண்ணனின் தயவால் நிறைய படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முக்கியமாக, அனைத்து ரஜினி படங்களுக்கும் முதல் நாளிலேயே அழைத்து சென்று விடுவார். அதன் பிறகு, வேறு படங்களுக்கும் கூட்டி சென்று விடுவார். ‘கேப்டன் பிரபாகரன்’ வந்திருந்த சமயம், என்னை அந்த படத்திற்கு கூட்டி செல்லவே இல்லை. படத்தைப் பற்றி பள்ளியில் பேசப்பட்டோ, எப்படியே எனக்கு தெரிந்து, அண்ணனிடம் அழைத்து செல்லுமாறு கூற, அவர் அந்த படத்திற்கு அழைத்து செல்லவே இல்லை. ஏனென்று இப்பொழுது வரைக்கும் தெரியவில்லை.

அச்சமயம், ரெகுலர் டிக்கெட் விலை ஐந்து ரூபாய் அளவில் இருந்ததென நினைக்கிறேன். தூத்துக்குடி சினிராஜில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்திற்கு பதினைந்து ரூபாய் டிக்கெட் ரேட் என்று கேள்விப்பட்டு, பதினைந்து ரூபாய் சேர்த்து, அண்ணனிடம் கொடுத்து கூட்டி செல்ல சொன்னேன். என்ன நினைத்திருப்பாரோ, வாங்கினாரோ, வாங்கவில்லையோ, எதுவும் இப்போது நினைவில்லை. அழைத்து சென்றார். வாயை பிளந்து பார்த்தது மட்டும் நினைவிருக்கிறது.

---விஜயகாந்தின் நூறாவது படம். நூறாவது படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது, விஜயகாந்திற்குதான்.

---

சந்தனகடத்தல் வீரப்பனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. அதிகாரவர்க்கத்தின் தயவுடன் கடத்தல் செய்துவரும் வீரபத்ரனை, எப்படி ஐஎப்எஸ் அதிகாரியான பிரபாகரன் பிடித்து, அவனுக்கு உதவி செய்தவர்களையும் போட்டு தள்ளுகிறார் என்பதே இப்படத்தின் கதை.

---

இந்த படத்தின் தயாரிப்பாளர், விஜயகாந்தின் முன்னாள் நண்பர் - இப்ராகிம் ராவுத்தர். இவர் தற்போது விஜயகாந்தின் எதிரணியான அதிமுகவில் தஞ்சமடைந்திருக்கிறார். விஜயகாந்திற்கு எதிராக இவரை வைத்து எப்படி காய் நகர்த்த போகிறார்களோ? காலத்தின் கோலம்.

இயக்குனர் செல்வமணியின் இரண்டாம் படம். அந்நேரத்தில் ஷங்கரைப் போன்ற ஹாட்டஸ்ட் இயக்குனர். ஆட்டோ சங்கர், வீரப்பன், ராஜீவ் கொலை என்று பல முக்கிய சம்பவங்களை வைத்து ஒருபக்கமும் காதல் படங்களை மற்றொரு பக்கமும் எடுத்துவந்தவர். இந்த படம் தான், இவருடைய மாஸ்டர் பீஸ் எனலாம்.

வெறுமனே போலிஸ் ஹீரோ, கடத்தல் வில்லன் என்று கதை பண்ணாமல், கடத்தலுக்கு உதவி செய்து ஆதாயம் பெறும் அரசியல்வாதி, போலிஸ், கலெக்டர், மோசமான நிலையில் வேலை பார்க்க வைக்கப்படும் கடைநிலை காவல்துறையினர், வேறுவழியில்லாமல் கடத்தல்காரனுக்கு உதவும் பக்கத்து கிராம மக்கள் என்று கதையை பின்னி உண்மைக்கு பக்கத்தில் கொண்டு வந்திருப்பார்.

அதே போல், வெறும் ஆக்‌ஷன் படமாக இல்லாமல், சூடு பறக்கும் வசனங்களால் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளில் விஜயகாந்தின் கால்களும், மற்ற காட்சிகளில் விஜயகாந்தின் வாயும் ரெஸ்டே இல்லாமல் விளையாடி இருக்கும். பேக் ஷாட், சுவற்றில் ஜம்ப் செய்து உதைப்பது என்று சண்டைக்காட்சிகளில் விஜயகாந்த் தனது ட்ரெட்மார்க்கை பதித்திருப்பார். வசனங்களுக்கு லியாகத் அலிகான் இருக்க, வேறென்ன வேண்டும்? அரசியல் காரத்திற்கு பஞ்சமில்லை. ஒரளவுக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு கொடுத்தது என்றும் சொல்லலாம். ஆங்காங்கே வரும் முக்கியமான வசனங்களுக்கு, தியேட்டர் ஆபரேட்டர் சவுண்ட் கூட்டியது, இன்னமும் நினைவிருக்கிறது. அவர் சவுண்ட் கூட்டியதாலேயே அவ்வசனங்கள் முக்கியத்துவம் பெற்று, தியேட்டரில் கைத்தட்டல் பெற்றன. அந்த ஆபரேட்டர் ஒவ்வொரு காட்சிகளுக்கும் இது போன்று கூட்டி வைத்திருப்பார் அல்லவா? தற்போது யாருக்கு வரும் இது போன்ற இன்வால்வ்மெண்ட்?

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. வீரபத்ரனின் ஆட்கள், யூனிபார்முடன் தோட்டாக்களை பூணூல் போல் போட்டுக்கொண்டு, துப்பாக்கி சகிதம், குதிரையில் வருவது படு சினிமாத்தனம். படத்தின் ஆரம்பத்திலேயே ரம்யா கிருஷ்ணன் கர்ப்பமாகிவிடுவார். இறுதியில் குழந்தை பெற்றுவிடுவார். ஆனால், இறுதிக்கு முந்திய காட்சியில் தான், வாயும் வயிறுமாக காட்டுவார்கள். அதற்கு முன்பு வரை ‘ஆட்டமா தேரோட்டமா’ என்று கெட்ட ஆட்டம் போடுவார். (ம்ம்ம்... இதையெல்லாம் இப்போது தான் கவனிக்க தோன்றுகிறது...)

அக்காலத்தில் இது படு பிரமாண்டமான படைப்பாக இருந்திருக்கும். முழுக்க முழுக்க உண்மையான காட்டில், ஆங்காங்கே நன்றாக செட் போட்டு, மன்சூரலிகான் வரும் காட்சிகள், நம்பகத்தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கும். மன்சூரலிகான் காமெடி கலந்து டெரர் வில்லத்தனம் காட்டியிருப்பார். அப்போது படு பிட்டாக இருந்திருக்கிறார். சரத்குமார், விஜயகாந்தின் நண்பராக சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

பெரும் ஜனப் பட்டாளத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் இறுதிகாட்சி, படு பிரமாண்டம் எனலாம். இப்போது ஷங்கர் படங்களில் ஜனத்திரளுடன் வரும் காட்சிகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாதது. இப்போது, இந்த படத்தை பார்க்கும்போது, ‘ஜென்டில்மேனில்’ இப்படத்தின் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. தைரியமாக அரசியல் படங்களை, காரமான வசனங்களுடன் எடுப்பவர் என்று பெயர் பெற்ற ஆர்.கே.செல்வமணி தற்போது தயாரிப்பாளர்கள் சங்க அரசியலில் மும்முரமாக இருக்கிறார். இறுதியாக எடுத்த படங்கள், காணமுடியாதவைகளாக இருந்தன. சூடான அரசியல் படங்களை எடுக்க, ஒரு இயக்குனர் சீட் காலியாக இருக்கிறது.

"எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளும்கட்சியை குற்றம் சாட்டுவதும், பிறகு அவர்களே ஆட்சியைப் பிடித்தவுடன் திருட ஆரம்பிப்பதும் வழக்கம் தான்” என்று கேப்டன் இப்படத்தில் வசனம் பேசுகிறார். நோட் திஸ் பாயிண்ட்.

---

சேனல்களில் இந்த படத்தை பார்த்ததாக ஞாபகம் இல்லை. சமீபத்தில் இணையத்தில் காண நேர்ந்ததால் இப்பதிவு.


.

நானும் எஸ்ராவும்

சும்மா சீனுக்கு வச்ச தலைப்பு தான்.

இருந்தாலும், ஒரு அர்த்தம் இருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் காந்தி பற்றி சொன்னதாக வந்த தகவல்கள் தவறானவை என்று சர்ச்சை கிளம்பியது. பல புத்தகங்களை வாசித்து, பல திரைப்படங்களை பார்த்து, பல இடங்களுக்கு சென்று, அத்தகவல்களை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டு வருபவர் எஸ்ரா. வாசிக்கும் அனைத்தின் நம்பகத்தன்மையையும் சோதித்து பார்த்து சொல்வது கஷ்டமான விஷயம் தான்.


டால்ஸ்டாய்


இவற்றையெல்லாம் மிக உறுதியான தகவல்களாக எடுத்துவைக்காமல், ஒரு டிஸ்கி போட்டு பகிரலாம். அல்லது, தவறு என்று உறுதியான பிறகாவது, திருத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால், சர்ச்சை தான்.

சரி. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

நானும் அவர் கூறிய தகவலை, சில வருடங்களுக்கு முன்பு அவரை போலவே நம்பி, உண்மைப்போல் இத்தளத்தில் பகிர்ந்திருந்தேன்.

பெங்களூரில் வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட போது எழுதிய பதிவு அது.

இப்போது, அத்தகவல் தவறு என்று தெரிகிறது. தினமணியில் இது பற்றி லா.சு.ரங்கராஜன் எழுதியிருக்கிறார். அதை பற்றி, ஞாநியும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால், எஸ்ரா போல் நானும் எதையோ வாசித்து ஏமாந்திருக்கிறேன் என்று தெரிகிறது. இருந்தாலும், அது உண்மையாக இருந்திருக்கலாம் என்று மனம் எண்ணுகிறது. பெருமையடிக்கத்தான். முன்பு, அலுவலகத்தில் பிற மொழியினரிடம் இதை சொல்லி பெருமையடித்திருக்கிறேன். (ஒகே... சொன்ன பொய்யை மறைச்சிடலாம்!!!)

எனிவே, என் பதிவைப் பார்த்து ஏமாந்தவர்களிடம் உண்மையை கூற கடமைப்பட்டுள்ளேன்.

அப்பதிவை வாசித்த நண்பர்களே, அதை மறந்துவிடுங்கள். ஓகே? :-)

.

Thursday, February 9, 2012

முதலும் முடிவும்

துர்காவை தொட்டவுடன் சுபாஷ் அடைந்த உணர்வை என்னவென்று சொல்ல முடியும்? நாம் தண்ணீர் ஊற்றிய செடியில் பூத்த முதல் மலரை தொடும் போது ஏற்படும் சிலிர்ப்பை விட நூறு மடங்கு பெரியது அது. வேரில்லாமல் விதையில் பூத்த அதிசய முதல் மலர் - துர்கா.

ஆம். துர்காவை டாக்டர் சுபாஷ் டெஸ்ட் ட்யூப் முறையில் படைத்திருந்தார்.

---

பத்திரிக்கையாளர்களிடம் இந்த சாதனையை அறிவித்தார் டாக்டர் சுபாஷ். செய்தி பரவ, அரசாங்கம் சுபாஷை அழைத்தது. “எப்படி செய்தாய், இந்த சாதனையை? உன்னால் எப்படி முடிந்தது? சொல்!” ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது, மேற்கு வங்காள அரசு.

---

வல்லுனர் குழுவின் முன் சுபாஷ்.

“எங்கு அந்த கருவை வைத்திருந்தாய்?”

சொன்னார். “எப்படி?” என்று அடுத்த கேள்வி. அடுத்தடுத்த எப்படிகளுக்கு பதில் கூறினாலும், எப்படிகள் நின்றபாடில்லை. சுபாஷால் சமாளிக்க முடியவில்லை.

வல்லுனர் குழு சொன்ன தீர்ப்பு - “இது போர்ஜரி!”.

---

தனது முயற்சியையும், முடிவுகளையும், ஆய்வு கட்டுரையாக எழுத நினைத்து விடுமுறைக்கு விண்ணப்பித்தார் சுபாஷ். விடுமுறை நிராகரிக்கப்பட்டது.

தனது முயற்சியை பற்றி விவாதிக்க, ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது. பயணம் நிராகரிக்கப்பட்டது.

முடிவில், கண்ணியல் துறை பேராசிரியராக பணி மாற்றம் செய்யப்பட்டு, கல்லூரிக்கு அனுப்பப்பட்டார்.

---

சுபாஷ் உருவாக்கிய முதல் இந்திய டெஸ்ட் ட்யூப் குழந்தை பிறந்ததற்கு 67 நாட்களுக்கு முன்பு தான், உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை இங்கிலாந்தில் பிறந்திருந்தது. அதை உருவாக்கிய லண்டன் டாக்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துக்கொண்டிருக்க, அதற்கு மாற்றான முறையில், குறைந்த வசதிகளை கொண்டு அச்சாதனையை உருவாக்கிய இந்திய டாக்டருக்கு அடி மேல் அடி விழுந்துக்கொண்டு இருந்தது.1981 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, தனது அறையில் தன் முடிவை நிகழ்த்திக் கொண்டார் சுபாஷ். இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கிய மருத்துவ பிரம்மா, அதிகாரவர்க்கத்தின் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டார்.

தொடங்கிவைத்தவருக்கு முடித்துவைப்பதில் என்ன கஷ்டமிருக்கப் போகிறது?

---

1986இல் டாக்டர் ஆனந்தின் மருத்துவ முயற்சியின் மூலம் பிறக்கப்பட்ட குழந்தையே, பல காலம் இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி என்றழைக்கப்பட்டது. நம்பப்பட்டது. பின்னர், சுபாஷின் ஆய்வு கட்டுரைகளை வாசிக்க நேர்ந்த அதே டாக்டர் ஆனந்த், 1997இல் டாக்டர் சுபாஷ் முகோபாத்யாவின் சாதனையை உலகிற்கு அறிய செய்தார்.

2010 இல் உலகின் முதல் குழந்தையை உருவாக்கிய இங்கிலாந்து டாக்டர் ராபர்ட்டிற்கு, அவருடைய சாதனைக்கான அங்கீகாரத்தின் உச்சமாக மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பரவாயில்லை, இந்தியாவிற்கு அதற்குள் அதன் உண்மையான சாதனை டாக்டரைப் பற்றி தெரிந்துக்கொள்ளவாவது முடிந்ததே? என்ன, உடனடியாக அவருக்கு முடிவுரை எழுதியது, இந்தியாவின் சாதனை!

---

இந்தியாவிற்கு அறிவுரை சொல்லுமளவுக்கு அப்பாடக்கர் இல்லை என்றாலும், அங்கீகாரத்தின் அவசியத்தை புரிந்துக்கொள்ள வேண்டியது நமக்கு மிக அவசியம். இந்திய சமூகத்தில் அங்கீகாரம் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் கிடைத்துவிடாது. ”இது என்ன பெரிய விஷயமா?” என்ற மனோபாவம் தான் இதற்கு காரணம்.

நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு முயற்சிகளுக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களிடம் நமது பாராட்டுகளை கொண்டு சேர்க்கும்போது, ஏதோ நம்மால் ஆன அளவில் ஒரு சின்ன மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. நமது வீட்டில் இருந்து, அலுவலகத்தில் இருந்து இதை நாம் தொடங்கலாமே?

முதல் முயற்சிகளை தொடங்கி வைத்த அனைத்துத்துறை இந்தியர்களுக்கும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

---

டிஸ்கி - கீழ்க்கண்ட இணைப்புகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

இணைப்புகள்:-http://drsubhasmukhopadhyay.blogspot.com/
http://www.drsubhasmukherjee.com/
http://en.wikipedia.org/wiki/Subhash_Mukhopadhyay_(physician)

.

Tuesday, February 7, 2012

இணைய வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நானும்

முன்பு, டேப் ரிக்கார்டர், எம்பி3 ப்ளேயர், தொலைபேசி, செய்திதாள், தொலைக்காட்சி என்று ஒவ்வொரு வேலைக்கு ஒவ்வொரு சாதனத்தை உபயோகித்து வந்தோம். இன்றும் வருகிறோம் என்றாலும், பலருக்கு எதற்கெடுத்தாலும் லேப்டாப், இண்டர்நெட் என்றாகிவிட்டது.

இப்பதிவும் இது சம்பந்தப்பட்டது தான்.

---வீட்டில் டிவி இருந்தாலும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணும் வகையிலான கேபிள் இணைப்போ, டிஷ் இணைப்போ நான் வைத்திருக்கவில்லை. நம் ஊரில் காணும்வகையிலான ஒரே இணைப்பில் அனைத்து சானல்களும் வரும் வழிவகைகள் எனக்கு தெரிந்து இங்கு இல்லை. இணையத்தில் ஒரளவுக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் காண முடிவதால், அதற்கு மேல் யோசிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இன்றைய தினம், ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டவுடன், இணையத்தில் காணக்கிடைக்கிறது. இதுவும் ஒருவகையில் பைரஸி தான். ஆனால், இதற்கு தற்சமயம் எந்த எதிர்ப்பும் இல்லை. புதிய திரைப்படங்களை சுட சுட வழங்கும் இணையதளங்களில் தான், இந்நிகழ்ச்சிகளும் வகைவாரியாக சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. தமிழ் தொலைக்காட்சிகளைக் காண வழியில்லாதவர்களுக்கு, பெரும்பேறாக இருப்பவை, இத்தளங்கள். ஒருவேளை, இந்தியாவில் இணைய தொழில்நுட்பமும், இணைய உபயோகிப்பும் நல்ல வளர்ச்சியை அடைந்தபிறகு, தொலைக்காட்சி நிறுவனங்கள் அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கும் என நினைக்கிறேன்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் விளம்பர வருவாய் இருப்பதால், இதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால், இது கேபிள் & டிடிஎச் நிறுவனங்களை பாதிக்க, இணைய தொலைக்காட்சி -இந்தியாவில் புது துறையாக காணப்படும்.

நிகழ்ச்சி, நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டு, அதன் இணைப்புகளை கொடுக்கும் தளங்கள் ஒருபக்கம் என்றால், நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் இணையத்தளங்கள், இன்னொரு பக்கம். உதாரணத்திற்கு, டிஜிடல் ஸ்ட்ரிம்ஸ் என்ற தளத்தை சொல்லலாம். ஏழு டாலருக்கு முப்பது நாட்களுக்கு லைவ்வாக டிவி பார்க்கலாம்.

இது தவிர, ரோக்கு என்றொரு சாதனம் இருக்கிறது. இணைய வழி வீடியோக்களை நமது தொலைக்காட்சியில் காண, இது வழிவகை செய்கிறது. சானல் லைவ் போன்ற தளங்கள் வழங்கும் தொலைக்காட்சி இணைப்பினை, இதன் மூலம் பெறலாம். கொஞ்சம் செலவு அதிகமாகும் என்றாலும், இணைய இணைப்பும், டிவியும், இந்த டப்பாவும் இருந்தால் போதும். கணினி இல்லாமல், இணையம் மூலம் டிவி, டிவியில் பார்க்கலாம்.

தற்சமயம் வரும் ப்ளு-ரே ப்ளேயர்களில், இணையத்துடன் இணைத்துக்கொள்ளும் வசதி இருப்பதால், யூ-ட்யூப் போன்ற தளங்களை இதன் மூலமே டிவியில் பார்த்துக்கொள்ளலாம்.

அப்புறம், கூகிள் டிவி என்றொரு சமாச்சாரம் இருக்கிறது. இப்படி போய்க்கொண்டே இருக்கும் போல! அதனால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

----

ஏதோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நான் தற்சமயம் பார்த்து வரும் தொலைக்காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பற்றி சொல்ல வந்தேன்.

பெரும்பாலான சமயம், புதிய தலைமுறையை அவர்களது தளத்தில் பார்த்து வருகிறேன். எனக்கு பிடித்திருக்கிறது. நம்மூருடன் தினசரி தொடர்பில் இருக்க, உதவிகரமாக இருக்கிறது. தரமான செய்திகளை, லைவ்வாக, முக்கியமாக இலவசமாக தருவதால், பாராட்டுக்கள்.

நேர்பட பேசு, புது புது அர்த்தங்கள் போன்ற நிகழ்ச்சிகள் காணக்கூடிய நேரத்தில் வருவதால், அடிக்கடி பார்ப்பேன். கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு, நண்பேண்டா போன்றவை காண விருப்பப்பட்டாலும், நேர சிக்கல் காரணமாக காணமுடிவதில்லை.

சனிக்கிழமையானால், அது இது எது. ஞாயிறானால், நீயா நானா, வாங்க சினிமா பத்தி பேசலாம், நாளைய இயக்குனர் போன்றவை பார்ப்பேன். திங்கள்கிழமை, மதன் டாக்ஸ்.

இது தவிர, பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றை பார்ப்பேன். அவ்வளவு தான்.

நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், அவற்றை இணையம் வழி காண, உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை பகிரலாம்.

.

Sunday, February 5, 2012

ஆந்திராவில் விஜய் - ஃபாலோ அப்

விஜய்க்கு ஆந்திராவில் வரவேற்பு எப்படியிருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பை வைத்து ‘ஆந்திராவில் விஜய்’ என்றொரு பதிவை சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.

அதன் நீட்சி - இப்பதிவு. (இந்த வார்த்தையை யூஸ் பண்ண, ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஹைய்யா!!!)

விசாரித்தவரையில், இந்த படம் தெலுங்கில் ப்ளாப். (தெலுங்கிலும் ப்ளாப் என்று சொல்லலாமா?)ஷங்கரின் முதல் தெலுங்கு ப்ளாப் - ஸ்நேகிதுடு என்று தெரியவருகையில் ஷங்கரின் ரசிகனாக எனக்கு வருத்தமே! (இதுக்கெல்லாம் காரணம்... ஹும்....)

தெலுங்கு நண்பர் கூறினார். “ஜீவாவை ஏன் இப்படத்தின் விளம்பரத்தில் ப்ரமோட் செய்யவில்லை என்று தெரியவில்லை. செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.”

ரீமேக் என்றாலும், ஷங்கரின் மெனக்கெடலுக்கு ஒன்றும் படத்தில் குறைச்சலில்லை. பெரும்பாலான தெலுங்கு மக்கள், 3 இடியட்ஸ்ஸை பார்த்திருப்பதும், இப்படத்திற்கு கூட்டம் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம்.

சரி, தமிழுக்கு வருவோம்.

படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள், எல்லா பக்கமிருந்து வந்தாலும், கலக்‌ஷன் குறைவு என்றே தெரிகிறது. கலக்‌ஷனை பக்கமிருந்து நான் பார்க்கவில்லை என்பதாலும், இது குறித்து நானெதுவும் ஆய்வு செய்யவில்லை என்பதாலும், இது குறித்து ஏதும் சொல்ல முடியாது.

ஒருவேளை, விஜய்யிடமிருந்து நல்லவிதமான மாஸ் படத்தை தான் தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்க்கிறதோ? இப்படினா அப்படின்னு சொல்லுங்க... அப்படின்னா இப்படின்னு சொல்லுங்க... இப்படி உசுபேத்தி உசுபேத்தியே தளபதியை ரணகளமாக்குங்க!!!

.

Friday, February 3, 2012

ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா

இந்த வார தெஹல்காவில் வந்திருந்த கட்டுரையைப் படித்த போது பகீரென்று இருந்தது.ஜெயலலிதா சசிகலாவை விரட்டியது தெரிந்த விஷயம். அதற்கான காரணங்கள், உள்விவகாரங்கள் பற்றிய விஷயங்கள், தெரிந்திருக்கவில்லை.

தெஹல்காவில் வந்திருந்த விஷயங்கள் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், எவ்வளவு அதிகாரங்கள் இருந்தாலும், பக்கத்திலேயே நம்பிக்கைக்குரியவர்கள் இல்லாவிடில், நாம் ஒன்றுமில்லை என்பது நிச்சயம் என்று ஞாபகப்படுத்தியது.

ஜெயலலிதாவுக்கு பதில் சசிகலாவை முதலமைச்சராக்குவது என்பது மன்னார்குடி கும்பலின் திட்டம். ஏதாவது சந்தர்ப்பம் அமையுமா என்று இருந்தவர்களுக்கு, ஜெயலலிதாவின் பெங்களூர் நீதிமன்ற வழக்கு, யோசிக்க வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வழக்கில் ஏதேனும் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு பாதகமாக வந்தால், அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் வேலையாட்கள், சசிகலாவின் ஆட்கள். ஜெயலலிதாவின் காவலாளிகள், சசிகலாவின் ஆட்கள். கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், சசிகலாவின் ஆட்கள். இப்படி எல்லாமே சசிகலாவின் ஏற்பாட்டில் நிறுவப்பட்டவை. சசிகலாவிற்கு தெரியாமல், ஜெயலலிதாவிற்கு ஏதும் தெரிய வாய்ப்பில்லை.

இந்நிலையில் இந்த சதி திட்டம், ஜெயலலிதாவிற்கு தெரியவந்தது, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மூலம். தமிழகத்திற்கு வந்த தொழிலதிபர்களை எக்கச்சக்க கமிஷன் கேட்டு, மன்னார்குடி மாஃபியா குஜராத்திற்கு விரட்டியடிக்க, அத்தொழிலதிபர்கள் மோடியிடம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இது குறித்து தகவல் சொல்ல, எச்சரிக்கை மணி அங்கிருந்து அடித்திருக்கிறது.

அம்மாவிற்கு அதன்பிறகே, தன்னைச் சுற்றி நடக்கும் பேரங்கள் தெரியவந்திருக்கிறது. மோனோ ரயில் காண்ட்ராக்ட் விஷயத்தில், தன்னுடைய கையெழுத்து தன்னையறியாமல் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.

தனக்கு கொடுக்கப்படும் உணவை, பழங்களை, மருந்துகளை பரிசோதிக்க சொல்லி அனுப்ப, அதில் சிறிய அளவில் விஷம் கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் பிறகு, ஜெயலலிதா சுதாரித்துக்கொண்டு, மன்னார்குடி கும்பலின் நடவடிக்கைகளை, தொலைபேசி பேச்சுகளை, துப்பறியும் நிறுவனம் கொண்டு கவனிக்க, தன்னை சுற்றி, கட்சி முழுக்க, ஆட்சி முழுக்க, இந்த கும்பலின் சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பது தெரிந்து, கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தொடங்கினார்.

அதன் பிறகு நடந்ததில் கொஞ்சம் நமக்கு தெரிந்தது.

இதை வாசித்தப்போது, ஜெயலலிதாவின் நிலை பரிதாபத்தை கொடுத்தது. குடும்பம்தான் பலவீனம் என்றாலும், கருணாநிதியின் நிலை பரவாயில்லை. யோசித்து பார்த்தால், இப்படிப்பட்டவர்களின் கைகளில் ஆட்சியை கொடுக்கும், தமிழக மக்களாகிய நமது நிலை தான் உண்மையில் பரிதாபத்திற்குரியது.

எப்படிபட்டவர்களாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், ஆப்பில்லாத வாழ்க்கை எங்கும் இல்லை என்பது தான் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறுதலான பாடம்.

.