Tuesday, October 27, 2009

தூத்துக்குடி ப்ரோட்டா

டிஸ்கி - நான் ஒரு பரோட்டா பிரியன்.

ஒவ்வொரு ஊர் மக்களும், அவர்கள் ஊரை விட்டு வெளியே செல்லும் போது, அவர்கள் ஊருக்கே உரிய சில விசேஷ விஷயங்களை விட்டு செல்கிறார்கள். தூத்துக்குடி மக்களுக்கு, ப்ரோட்டா. உப்பு, மீன் - இதையெல்லாம் விட ப்ரோட்டா ஒரு வகையில் வேறுபடுகிறது. அந்த மாதிரி தயார் செய்யப்படுவதையோ, பரிமாறப்படுவதையோ எங்கும் பார்த்ததில்லை. சுவைத்ததில்லை. (விருதுநகரில் சாப்பிட்டதில்லை)

இங்கு இதை பரோட்டா, புரோட்டா என்றெல்லாம் சொல்வதில்லை. ப்ரோட்டா, ரொட்டி அல்லது செட். வித்தியாசமா இருக்குல்ல? தூத்துக்குடியில் ப்ரோட்டா என்ற தலைப்பில் பிஎச்டி’யே பண்ணலாம். நான் ஒரு பதிவுவோடு நிறுத்தி கொள்கிறேன்.

தூத்துக்குடி தெருக்களில் பத்து அடி எடுத்து வைப்பதற்குள், ஒரு பேக்கரியையோ, ப்ரோட்டா கடையையோ காணலாம். பேக்கரியில் இருக்கும், தூத்துக்குடியின் இன்னொரு ஸ்பெஷலான மக்ரோனை பற்றி, இன்னொரு பதிவில் காணலாம். ப்ரோட்டா கடைக்கு ஹோட்டல் என்றோ, உணவகம் என்றோ சாதாரணமாக பெயர் வைத்துவிட மாட்டார்கள். நைட் கிளப்.

நைட் கிளப் என்றதும் மங்கிய வெளிச்சத்தில் அரைகுறை உடையில் ஆடும் பெண்கள் நினைவுக்கு வருகிறார்களா? தூத்துக்குடியில் இருப்பவர்களுக்கு அப்படி எதுவும் நினைவுக்கு வராது. ஒரு பத்துக்கு பத்து சதுர அடிக்கும் குறைவான அளவில் இருக்கும் கடைதான் நினைவுக்கு வரும். இந்த அளவு கடைக்குள்ளேயே, பத்து பதினைந்து பேருக்கு சுட சுட ப்ரோட்டா பரிமாறப்படும் வித்தையை ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்கள், இங்கு வந்து பார்த்து கற்றுக்கொள்ளலாம்.பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். ஆனா, இங்கே மெத்தடே வேற. தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள். அதற்கு முன், தோசைக்கல்லில் வாட்டுவதும் உண்டு. இதனால், ப்ரோட்டா சும்மா மொறு மொறுவென வரும். பை டிபால்ட், உங்கள் இலைக்கு பிய்த்து போட்டே வரும். தொட்டுக்க, இல்லையில்லை, குழப்பி அடிக்க சால்னா வரும். சால்னாவில் இரு வகைகள் இருக்கும். காரமானது ஒன்று. காரம் குறைவானது ஒன்று. அதற்கு மேல், சிக்கன் ப்ரை, சில்லி சிக்கன், மட்டன் சுக்கா, காடை, கௌதாரி, புறா, ஆம்லேட், ஆப்பாயில் இதையெல்லாம் வாங்கி கொள்ளலாம். பார்சலில் வாங்கி சென்றால், வேறொரு சுவை. வழக்கம் போல், தயிர் வெங்காயம் இலவசம். பெரும்பாலும் வெறும் வெங்காயம், தயிர் இல்லாமல்.

பொதுவாக, இந்த நைட் கிளப்களில், இட்லி, பூரி போன்றவற்றை எதிர்பார்க்கக்கூடாது. சில கடைகளில், தோசை, இடியாப்பம், ஆப்பம் கிடைக்கும். அதற்கும் சால்னா தான். சட்னி, சாம்பார்? ம்ஹும். சமீபத்தில் சேலம் சென்றபோது, பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் செல்வி மெஸ்ஸில் ‘இங்கு சைவம் கிடையாது’ என்ற போர்ட்டை என் நண்பர்கள் ஆச்சர்யமாக பார்த்தார்கள். போர்டு வைக்காமலேயே, தூத்துக்குடி நைட் கிளப்களில் அதுதான் பாலிஸி. அதனால், இக்கடைகள் அசைவக்காரர்களுக்கே எக்ஸ்க்ளுசிவ்வானது.

அப்ப, இட்லி, தோசைக்கு எங்கு செல்வது? அதற்கு வேறு ஓட்டல்கள் உண்டு. அவை சாதாரணமாக மற்ற ஊர்களில் இருப்பது போல் காலை முதல் இரவு வரை இருக்கும். நைட் கிளப்கள் நைட் மட்டுமே. காலையில் மூடி கிடக்கும். மதியத்திற்கு பிறகு, சாயந்தரம் வாக்கில் திறப்பார்கள். ஒருவர் அடுப்பு, பாத்திரங்களை எடுத்து வெளியே வைப்பார். இன்னொருவர் வெங்காயம் வெட்ட ஆரம்பிப்பார். அந்த நேரத்தில், அடுப்பை வைத்தவர், எண்ணெயை ஊற்றி சால்னா, கிரேவிக்கான வேலையை ஆரம்பிப்பார். இன்னொருவரோ, ப்ரோட்டாவுக்கான மாவை பிசைய ஆரம்பித்து விடுவார். இந்நேரத்திற்கு, ஊரே சால்னா வாசனையில் மூழ்கி இருக்கும்.

ஒரு கடையில் அதிகபட்சம் நாலு பேர்தான் வேலைக்கு இருப்பார்கள். பெரிய கடை என்றால், இன்னும் இரண்டு மூன்று பேர்கள் இருப்பார்கள். அவ்வளவு தான். நீங்கள் தான் நீங்கள் சாப்பிட்ட இலையை எடுத்து வெளியே போட்டுவிட்டு, கை கழுவ வேண்டும். ஒருவர் ப்ரோட்டா சுட சுட பொறித்து கொண்டே இருப்பார். இன்னொருவர் அதை சுக்கு நூறாய் பிய்த்து நமக்கு பரிமாறிக்கொண்டே இருப்பார். இன்னொருவர், பார்சலுக்கு வந்தவர்களை ஹேண்டில் செய்து கொண்டு இருப்பார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில், ப்ரோட்டாவை பிய்க்க ஒரு மெஷின் வைத்திருந்தார்கள். டெக்னாலஜி. சமீபத்தில் பார்த்து ஷாக்காயிட்டேன்.

கடைக்கு கடை ப்ரோட்டா மாறுப்படும். அளவுகளில் மட்டுமில்லாமல், சுவையிலும். சில கடைகளில், பொறிக்காத மெது மெது பரோட்டா கிடைக்கும். ஒரு முறை பார்த்து, ஒரு கடையின் சுவை பிடித்து விட்டால், சந்தா கொடுக்காமலேயே அந்த கடையின் ஆயுள்கால மெம்பர் ஆகிவிடுவீர்கள். அளவுக்கு ஏற்றது போல், ப்ரோட்டா விலை இருக்கும். தற்போதைய நிலையில், ரூபாய் மூன்றில் இருந்து பத்து வரை.

எண்ணெய்யில் பொறிப்பதால், கொலட்ஸ்ரால் அபாயம் இருக்கிறது. காரமா எங்க சாப்பிட்டாலும், அல்சர் வரும். மற்றபடி, சூடாக இருப்பதால், வேறு எந்த உபாதைகளும் வருவதில்லை. சால்னாவில் இருக்கும் இஞ்சி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவற்றால், ஏதேனும் மருத்துவ நன்மை இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்துதான் கண்டுப்பிடிக்க வேண்டும். ஊருக்குள், இதைத்தான் தினமும் சாப்பிட்டுக்கொண்டு நிறைய பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், ஒருமுறை சாப்பிடுபவர்கள், தயங்காமல் இறங்கி பட்டைய கிளப்பலாம். தண்ணீர், கையோடு கொண்டு செல்வது உசிதம். இல்லாவிட்டால், வீடு வந்து குடிக்கலாம்.

சொந்த ஊர் கதையை பேசுனா, கண்ணீர் வருவது வழக்கம். தூத்துக்குடிக்காரங்களுக்கு, உமிழ் நீரும்.

.

56 comments:

யாசவி said...

சரியா சொல்லணும்னா

”புரட்டா”

அப்புறம் விருதுநகர்ல சாப்பிடுங்க இன்னும் சிறப்பா இருக்கும்.


எங்க ஊர் செல்வி மெஸ்ல தலை கறி சாப்பிட்டு பாருங்க பட்டய கிளப்பும்.

சரி பசிக்குது அப்புறம் பார்க்கலாம்

:)

Ganee said...

Ayyah..Naanum thoothukudi thaan...Intha parotta vai ellaam vittu vittu chennai il vanthu irukiraen..Ungal pathivirku nanrii...

மகேந்திரன் said...

உப்புமா எழுத்தாளர் கேள்விபட்டிருக்கேன்..
நீங்க ஒரு பரோட்டா பதிவர் சரவணா..

உங்க பதிவ படிச்சதும் நேரா கேன்டீன் போயிட்டேன்..
நீங்க சொல்லும் பரோட்டாவ "வெயில்" படத்துல
"வெயிலோட விளையாடி.." பாட்டுல பாத்துருக்கேன்..!!
(என்னா ஒரு கவனிப்பு..!!)

பித்தனின் வாக்கு said...

ப்ரோட்டா தகவல்கள் சூப்பர். எங்க ஊறுலையும் பிய்த்துப் போட்டு சால்னா ஊத்திக் கொடுப்பார்கள். எனக்கு கொத்துப்ரோட்டாதான் ரொம்ப புடிக்கும். முட்டை போடமல் சால்னா ஊத்தி சைவ கொத்துப்ரோட்டா போட எனக்கு ஒரு ரெகுலர் கடை கூட இருந்தது. ஆனா இப்ப அப்படி சாப்பிட சான்ஸ் இல்லை. நன்றி. பழையனவற்றை நினைக்க வைத்த நல்ல பதிவு.

ஆயில்யன் said...

//நான் ஒரு பரோட்டா பிரியன்./

நானும்!
நானும்!! :))
காலையிலதான் புரோட்ட பத்தி ஒரு பேச்சு ஓடிக்கிட்டிருந்துச்சு டிவிட்டர்ல :)

ஆயில்யன் said...

//தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள்//

அது எங்க ஊர் பக்கம் நெய்புரோட்டான்னுல்ல சொல்லுவோம்!

பட் மொறு மொறுன்னு இருக்குற அதை சாப்பிடறது - பிச்சு திங்கிறது- ரொம்ப டெரர் ஆக்கும் :)

ஆயில்யன் said...

//. ஊருக்குள், இதைத்தான் தினமும் சாப்பிட்டுக்கொண்டு நிறைய பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், ஒருமுறை சாப்பிடுபவர்கள், தயங்காமல் இறங்கி பட்டைய கிளப்பலாம்.//
தூத்துக்குடி விசிட் போறப்ப இது கண்டிப்பா செஞ்சு பாக்குறேன் - தின்னு பாக்குறேன் :)

Anonymous said...

இதுவும் /தூத்துக்குடியின் இன்னொரு ஸ்பெஷலான மக்ரோனை பற்றி/

இதுவும் http://www.purplefoodie.com/2009/10/no-macaroons-here.html ஒண்ணா? Are they same?

- யாரோ ஒருவன்

ஜெட்லி... said...

குமரா படித்தவுடன் போன வருடம் நான்
தூத்துக்குடியில் நான் சாப்பிட்ட பரோட்டா
கடை நினைவுக்கு வருதுப்பா.....

k4karthik said...

Ahaa bossu.. ippadi kaalangaththala parotta paththi solli feel panna vechiteengale.. senkottai border parotta try pannirukeengala?

மாடல மறையோன் said...

////தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள்//

தோசைக்கல்லில் வைத்து எண்ணை ஊற்றி வதட்டுவார்கள் என்பதே சரி. பொறிப்பார்கள் என்றால் எண்ணையில் மிதக்கும்படி - வடைசுடுவது போல - செய்வதுதான் பொறித்தல்.

முதலில் தோசைக்கல்லில் எண்ணை ஊற்றி புரோட்டாக்களை வதட்டி வைத்துவிடுவார்கள் மொத்தமாக ஒரு பாத்திரத்தில். பின்னர் ஆர்டர் வரும்போது, எத்தனை வேண்டுமோ அத்தனையையும் இன்னும் சிறிது எண்ணை ஊற்றி முறுக வறுப்பார்கள். அல்லது வதட்டுவார்கள். அப்போதுதான் புரோட்டாவை கையால் எடுத்து நிறுத்தி கராட்டே நிபுணர் செங்கல்லை உடைப்பதுபோல உடைப்பார்கள். பின்னர் பிய்த்து சால்னா உற்றி...etc.

சரவணன் சார்...தூத்துக்குடியில் எந்தக்கடை ரொம்ப பேமசுன்னு சொல்லலையே!

சைவ நைட்கிளப்புகளும் உண்டு. அங்கு பூரி கிழங்கு, அப்புறம் மொச்சை சிறப்பு.

இரவு முழுவதும் இக்கிளப்புகள் திறந்திருக்கும் என்பது சரியல்ல. இரவுகாட்சி தியேட்டர்களில் முடிந்து ஆட்கள் வீடு திரும்பும் வரைதான் திற்ந்திருக்கும். கிட்டத்தட்ட, 2 AM வரைதான்.

மறுநாள், மாலை 3 மணியளவில் வேலை ஆரம்பித்தாலும், 5.30 மணிக்குத்தான் நீங்கள் சாப்பிடமுடியும்.

ஒரு சமயம், எனக்கு சென்னை பஸ் மாலை 5.20 மணிக்கு. ஆனால், புரோட்டா பார்சல் கிடைக்கவில்லை தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில்.

வினோத் கெளதம் said...

வாய் ஊறுது தலைவா..

சரவணகுமரன் said...

யாசவி, விருதுநகரில் சாப்பிடும் வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை. வருகைக்கு நன்றி...

சரவணகுமரன் said...

அப்படியா Ganee...

என்ன பண்றது? பொழப்புக்காக ப்ரோட்டாவை தியாகம் செய்ய வேண்டியதுதான்... :-)

சரவணகுமரன் said...

மகேந்திரன்,

நீங்கத்தான் பாட்டுனா, எல்லாத்தையும் நல்லா கவனிப்பீங்களே?

சரவணகுமரன் said...

சுதாகர், நானும் மற்ற ஊர்களில் கொத்து புரோட்டாத்தான் சாப்பிடுகிறேன். அதுவும் நம்ம பேவரைட் தான்.

சரவணகுமரன் said...

ஆயில்யன்,

நீங்களும் நம்ம டைப்தானா? குட் குட்...

//பிச்சு திங்கிறது- ரொம்ப டெரர் ஆக்கும் :)
//

அதனாலதான் தூத்துக்குடில அவுங்களே பிய்ச்சி போட்டுடுறாங்க..

சரவணகுமரன் said...

யாரோ ஒருவன்,

இப்படி கலர் கலரா இருக்காதே? முக்கோண வடிவுல வெள்ளையா இருக்கும்.

இங்கே பாருங்க...

http://cookingforward.blogspot.com/2008/04/macaroon.html

சரவணகுமரன் said...

ஜெட்லி, எந்த கடை? எப்படி இருந்தது?

சரவணகுமரன் said...

கார்த்திக், பார்டர் ப்ரோட்டா இன்னும் சாப்பிடலை. ப்ளான் பண்ணனும். :-)

சரவணகுமரன் said...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ,

வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி.

//பொறிப்பார்கள் என்றால் எண்ணையில் மிதக்கும்படி - வடைசுடுவது போல - செய்வதுதான் பொறித்தல்.//

எண்ணெய்யில் மிதக்கும்படி பொறிக்கும் கடைகளும் உண்டு. பெரும்பாலும் அப்படித்தான்.

//ரோட்டாவை கையால் எடுத்து நிறுத்தி கராட்டே நிபுணர் செங்கல்லை உடைப்பதுபோல உடைப்பார்கள்//

கராத்தே நிபுணர்கள், செங்கல் உடைப்பது போலா? சார், படிக்கிறவுங்க பயந்திட போறாங்க... :-)

//தூத்துக்குடியில் எந்தக்கடை ரொம்ப பேமசுன்னு சொல்லலையே//

ஆழ்வார், சிவன், குமார், கண்ணன் - இதெல்லாம் எனக்கு தெரிந்த சில கடை பெயர்கள். அப்புறம் பேமஸ்’ன்னே ஒரு பேமஸ் கடை இருக்குது. கடைக்காரர்கள் விளம்பரம் செய்ய என்னை அணுகலாம்.

//சைவ நைட்கிளப்புகளும் உண்டு. அங்கு பூரி கிழங்கு, அப்புறம் மொச்சை சிறப்பு. //

இது நான் கேள்விபடாதது, சைவ நைட் கிளப்புகள்! அங்கு சைவம் மட்டும் தானா? ஆச்சரியம்தான்...

//இரவு முழுவதும் இக்கிளப்புகள் திறந்திருக்கும் என்பது சரியல்ல. //

இரவு முழுவதும் என்று சொல்லவில்லையே!

//புரோட்டா பார்சல் கிடைக்கவில்லை தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில்//

பழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அருகே ஒரு கடை இருக்கிறது. அடுத்த முறை, அங்கே முயற்சி செய்யுங்கள்.

பின்னூட்டமே, ஒரு மினி பதிவாயிருச்சே!

சரவணகுமரன் said...

ஊறணும்’ல வினோத் கௌதம்...

சரவணகுமரன் said...

பல பேரு பசியை கிளப்பிவிட்டு இருக்கேன்னு நினைக்குறேன். ப்ரோட்டாவுக்கு இவ்ளோ ஆதரவா? வீட்டுக்கு வீடு இலவச ப்ரோட்டா என்ற கொள்கையுடன் கட்சி ஆரம்பிக்கலாம் போலிருக்கிறதே!

Vee said...

எங்க ஊரு நினைவை வரவைத்து விட்டீர். நல்லா இரும்.

.☼ வெயிலான் said...

இந்த வாரம் ஊருக்கு போக வச்சுட்டீங்க சரவணன்.

விருதுநகர் வாங்க! கவனிச்சுடலாம். :)

முகில் said...

மட்டக்கடை பக்கம் போனதில்லையா? அங்க இருக்குற பேமஸ் நைட் கிளப் எல்லாம் விட்டுட்டீங்களே... அந்த ஏரியா பயலுக கோவிச்சுக்கப்போறாங்க ;)

Kadir said...

சரவணா, வேண்டாம். புரோட்டா கதை எல்லாம் சொல்லி ஜொள்ளு விட வைக்கிறிர்கள்.

சரவணகுமரன் said...

Vee,

எந்த ஊருங்க?

சரவணகுமரன் said...

வெயிலான்,

கண்டிப்பா வாரேங்க... வரும்போது சொல்றேன்...

சரவணகுமரன் said...

முகில்,

ஒரு பின்னூட்டத்துல அந்த கடையை சொல்லியிருக்கேன். :-)

சரவணகுமரன் said...

கதிர்,

என்ன பண்றது? சாப்பிட முடியாதபோது, சாப்பிட்டதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.

sampath said...

தூத்துக்குடியில் ஆழ்வார் கடையில் புரோட்டா சாப்பிட்டு இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு. இனிமயான அனுபவம்.
தமிழ் நாட்டில் குறைந்த வாழும் செலவு உள்ள ஊர்...

மாடல மறையோன் said...

காந்தி சிலை பக்கத்திலே இருப்பது அய்யனார் நைட்கிளப் - பரோட்டாக்கடை. பக்கத்தில் சைவ நைட்கிளப். இரண்டும் இரவுக்காட்சி முடிந்து வருபவர்களுக்காக திறந்திருக்கும்.

சென்னைக்குப் போகுபவர்கள் எப்படி பழைய பேருந்து நிலையத்துக்கு போக முடியும்? புது பஸ் ஸ்டாண்டில்தானே பஸ் ஏற முடியும்? இருப்பினும், ப.ப வில் போய் நீங்கள் குறிப்பிட்ட கடைகளைப் பார்க்கிறேன். நன்றி.

வலைபதிவுகளில் இவ்வளவு பேர் தூத்துக்குடிக்காரர்கள் என்பது சந்தோஷமான விசயம். எனினும் என் ஊர் தூத்துக்குடி அல்ல. என் ஊர் மணப்பாடு. என் உறவினர்கள் எல்லாம் தூத்துக்குடி எனவே தூத்துக்குடி எங்கள் சொந்த ஊர் மாதிரி.

மாடல மறையோன் said...

//தமிழ் நாட்டில் குறைந்த வாழும் செலவு உள்ள ஊர்...//

அப்படி சொல்லமுடியாது. இப்போ மாறிக்கொண்டு வருகிறது.

ஆனால், சில்லாண்டுகளுக்கு முன், ஒரு சர்வேயில், காற்று மாசு air pollution தூத்துக்குடியிலேதான் தமிழக நகரங்கள் அனைத்திலும் மிகக்குறைவு என்று கண்டிபிடித்தார்கள்.

சம்பத் சார்...பெரிய கோயிலிருந்து (பனிமயமாதா கோயிலிலிருந்து) ரோச் பூங்கா வரை ஒரு நடை போய்ப் பாருங்கள். உங்களுக்கு தூய மாசுபடாத காற்று கிடைக்கும். உங்கள் நுரையீரலுக்கு நல்லது.

அலையில்லாக்கடலிலிருந்து உங்களை அன்போடு தழுவும் மெல்லிய கடற்காற்று! இந்தப்புறம் கடல்; மறுபுறம் எங்கு நோக்கினும் வெள்ளவெளேரன்ற உப்பளங்கள்!

நல்ல வேளை! இக்காட்சிகள் இன்னும் மாறாமல் தூத்துக்குடி இருக்கிறது!

இரக்கமுள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

சரவணகுமரன் said...

சம்பத்,

பதிமூன்று வருடங்களுக்கு முன்பு சாப்பிட்டது, இன்னும் ஞாபகம் இருக்கிறதா? சூப்பர்...

சரவணகுமரன் said...

ஜோ சார்,

நிறைய தகவல்கள் கொடுத்திருக்கீங்க... நன்றி...

//சென்னைக்குப் போகுபவர்கள் எப்படி பழைய பேருந்து நிலையத்துக்கு போக முடியும்?//

ஏங்க, மதியம் ப்ரோட்டா எங்க கிடைக்கும்’ன்னு சொன்னேன். நீங்க சென்னை போறீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்? :-)

சரவணகுமரன் said...

ஜோ சார்,

மகிழ்ச்சியை கொடுக்கிறது, உங்கள் வர்ணனைகள்.

//அலையில்லாக்கடலிலிருந்து உங்களை அன்போடு தழுவும் மெல்லிய கடற்காற்று! இந்தப்புறம் கடல்; மறுபுறம் எங்கு நோக்கினும் வெள்ளவெளேரன்ற உப்பளங்கள்!//

அந்த சாலை...

http://3.bp.blogspot.com/_5zYVUbYMkvA/SXi4KxEZBjI/AAAAAAAACmw/CA_1RcQZa6g/s640/DSC03902.JPG

நன்றி சார்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எண்ணெய்யில் பொறிப்பதால், கொலட்ஸ்ரால் அபாயம் இருக்கிறது. காரமா எங்க சாப்பிட்டாலும், அல்சர் வரும். மற்றபடி, சூடாக இருப்பதால், வேறு எந்த உபாதைகளும் வருவதில்லை//

:-)))

sampath said...

ஆழ்வார் மட்டும் அல்ல. பிருந்தாவன், சித்ரா பார், சொசைட்டி பார், ராஜ் தியேட்டர் என்று எல்லா இடமும் போய் இருக்கிறேன்.
தூத்துக்குடி எனக்கு மிகவும் பிடித்த ஊர். நான் ஸ்பிக்கில் இரண்டு வருடம் பணி புரிந்து இருக்கிறேன்.

சரவணகுமரன் said...

வாங்க ராதாகிருஷ்ணன் சார்...

சரவணகுமரன் said...

சம்பத், நிறைய இடங்களை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறீர்களே?

வருகைக்கு நன்றி.

Anonymous said...

நான் ஏறத்தாழ 18 வருடங்கள் முழுமையாக தூத்துக்குடியிலும் 4 வருடங்கள் விருதுநகரிலும் வாசித்துள்ளேன் நம்ம ஒட்டு விருதுநகர் பர்மா கடையவிட தூத்துக்குடி ஆழ்வார்குதான்.பார்டர் ப்ரோட்டா நல்லாத்தான் இருக்கும் ஆனா மூன்றாம் இடம்தான் அதன் சிறப்பு நாட்டுகோழி குறைந்த விலை பார்டரில் பிஸ்மி,ரஹ்மத் இரண்டு கடைகளும் நல்லா இருக்கும்.ஆனா தூத்துக்குடியில் மட்டும் தான் பொரோட்டா + சால்னா + வாழை இலை கலந்த அந்த வாசமும் கிடைக்கும்.

Vee said...

//Vee,
எந்த ஊருங்க?

தூத்துக்குடிதாங்க.

மதார் said...

நீங்க சொன்ன பரோட்டா , மக்ரூன் இரண்டுமே சுவை பார்த்துருக்கேன் , பரோட்டா பற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை . தூத்துக்குடியில் மட்டுமே எண்ணையில் பொறித்த பரோட்டா , சுற்று வட்டாரங்களில் கல்லில் போட்ட பரோட்டாவே , எனக்கு எங்கள் ஊர் பாய்கடை பரோட்டா , அந்த சுவை இன்று வரை எங்கும் கிடைக்கவில்லை . வீட்டிற்கு போனாலே அப்பா வங்கி வந்திடுவார் . மக்ரூன் பற்றி சின்ன தகவல் , koompu வடிவில் irukkum , கடல் paasi போல் sirusiru ootaigalum உண்டு . navile ittathum urugi விடும் . vilaiyum கூட கொஞ்சம் koodathan .

மதார் said...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ kku air pollution thoothukudila kamminu யாரு sonnaa ? அங்க poii ஒரு naal irunthu பாருங்க , உங்க kaikuttai entha colour aguthunu பாருங்க , இனி வரும் காலங்களில் தூத்துக்குடியில் மழை poliyuma enra santhgame வரும் , sterlite n புகை naal muluvathum vanthukonde irukkum , ithupoga thermal powerplant .குடி thaneerukkai kudangalai thookikondu povathai பாருங்கள் . சுற்று vattanrangalil engeum ivalavu thanner panjam இல்லை.

மதார் said...

அலை illak கடல் parkka azhaguthan , ஆனால் kadalkarayai கொஞ்சம் பாருங்கள் , avalavu karuppana மணல் நீங்கள் எங்கு senralum parkka முடியாது , sterlite, Thermal waste எல்லாமே கடலில் thaan kottapaduginrana . kadalval uirgal konjakonjamai sethukondurukkinrana .

Anonymous said...

நான் ஒரு முறை தூத்துக்குடியில் சாப்பிட்டிருக்கிறேன்.ரொம்ப நல்லா இருக்கும்..

மாடல மறையோன் said...

மதார்

சரியென நினைக்கிறேன். என் உறவினர்கள் நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்துகிறார்கள்.

ஆழ்வார் கடை எங்கே இருக்கிறது? தெரு?

சரவணகுமரன் said...

நன்றி மதார், விரிவான பின்னூட்டத்திற்கு...

சரவணகுமரன் said...

நன்றி அம்மு மது...

சரவணகுமரன் said...

ஜோ,

ஆழ்வார் எட்டயபுரம் சாலை ஆரம்பிக்கும் இடத்தில்... கல்யாண், சத்யா பக்கத்தில்...

செல்வக்குமார் said...

the gravy (kuzhambu) for parotta is also called as "empty". whether literate or illiterate they call it as em(p)ty - that means curry without the chicken/mutton pieces. nowadays, they call it as gravy also.

மாடல மறையோன் said...

Thanks Saravanan.

me..

நானும் கேட்டதுண்டு. Without mutton or chicken pieces, the plain curry is called EMPTY.

அப்புறம் உங்க எச்சில் இலையை நீங்களே தூக்கிகொண்டு போய் trash canலே போடணும்.

இப்படியெல்லாம் மதுரை சென்னையில் கிடையாது.

சில்வண்டு said...

திருநெல்வேலிப்பக்கம் இது பொரிச்ச ரொட்டிங்க...

Anonymous said...

Best nightclub is kanivilas, near kamarajar vegetable market.very famous in tuticorin. I guarantee it.

Anany from puthukottai,tuticorin

Unknown said...

நானும் தூத்துக்குடி தான் 15வருசத்துக்கு முன்னாடி சாப்ட பரோட்டா சால்னாவ நியாபக படுத்திடிங்க நானும் எத்தனை முறை பரோட்டா சால்னா செய்து பார்துட்டேன் நம்ம ஊர்ல சாப்டமாதிரி செய்ய வரலை அந்த பரோட்டா சால்னா எப்டி செய்ரதுனு சொல்லுங்க அண்ணே