Friday, October 23, 2009

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் மகேந்திரன்...

---

இரு வாரங்களுக்கு முன் நண்பனுடன், அவனுக்கு தீபாவளி புத்தாடை வாங்க சென்றிருந்தேன். எப்போதுமே கூட்டம் அலைமோதும், அணிந்து பார்க்கவும் தனிமையற்ற ஆடையகங்களுக்கு செல்வதை தவிர்ப்பேன்.

சற்றே ஒத்த கருத்துடைய நண்பன் என்பதால் பிரபலமடையாத, தொலைவிலுள்ள கடையின் மூன்றாம் தளத்தின் எங்கள் தேடல் துவங்கியது. எங்கிருந்தோ கசியும் படியான அமைப்பில் பாடல்கள் ஒலிக்கும்படி செய்திருந்தனர். நண்பனுக்காக அவனுடன் நின்றிருந்த போதும், மனது ஒவ்வொரு பாடலுடனும் சடுகுடு ஆடிக்கொண்டிருந்தது.

மதியப்பொழுது என்பதாலும் தீபாவளி காய்ச்சல் இன்னும் தீவிரமடையவில்லை என்பதாலும், முதல் தளத்தில் சேலை தேடும் சில பெண்கள் தவிர யாருமில்லை. புத்தாடைகளுக்கே உண்டான ஒரு வாசமும், தளத்தின் குளுமையும் என்னை இன்னும் முழுமையாய் பாடலை கவனிக்க வைத்தன. ஒரு கட்டத்தில் என்னை அழைத்து வந்தது, வீணென்று அவனுக்கே தெரிந்து விட்டது போல என்னை கேட்பதையும் நிறுத்திக்கொண்டான்.

அங்கே வெகு வருடங்களுக்கு பின் இன்னும் ஒருமுறை ரசித்துக்கேட்ட பாடல் ஒன்று. உறவுகளின் வரையறையை சொல்லி அடக்கி வைத்தாலும் அடங்காத மனதின் கிளர்ச்சி அந்த பாடல். படம் வெளியாகி பல வருடங்களுக்கு பின்னும், என் பள்ளியிறுதி வகுப்பின் ஒரு விடுமுறை மதியப்பொழுதில் தொலைக்காட்சியில் அந்த படம் போட்ட போது அம்மா அவசரமாக சேனல் மாற்றினார். அப்படி ஒரு சர்ச்சைக்குள்ளான படத்தில் ராஜாவின் அபாரமான பாடல்.

வெளியாகி 26 வருடங்களுக்கு பிறகும், பாடலின் குளுமை சற்றும் குறையாமல் கழுத்தை வளைத்து காதில் ரகசியம் சொல்லும் இந்தப்பாடல். 1983 ல், வெளியான "இன்று நீ நாளை நான்". விவரம் தெரியும் வயதில் எனக்கு இன்னுமொரு ஆச்சர்யம் - படத்தின் இயக்குனர் மேஜர் சுந்தர்ராஜன். சிவக்குமார், லட்சுமி, சுலக்க்ஷனா, நடிப்பில் உறவுகளின் கட்டுக்களை உதறிவிடும் உணர்வுகளை பற்றிய படம்.ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றில், முறை தவறிய உறவினை குறித்து "தேவை என்று வந்துவிட்டால் ஜாதியையா பார்க்கத்தோன்றும்?" என்று முடித்திருப்பார். அதன் பிரதிபலிப்பான இந்த படம் வெளியான போது ஏகத்துக்கும் சர்ச்சை உண்டானது. சி.எ.பாலனின் "தூக்குமர நிழலில்" என்ற நாவலை தழுவி படமாக்கப்பட்டது.வசதி படைத்த ஜெய்சங்கரின் வீட்டில் சிறுவயது முதல் வேலை செய்யும் சிவகுமார், குடும்பத்தில் ஒருவர் போல இருக்கிறார். ஜெய்சங்கரின் மனைவி லட்சுமியையும் அண்ணி என்றே அழைக்கிறார். அவர்களே பெண்பார்த்து சுலக்க்ஷனாவை சிவகுமாருக்கு மணம் முடித்தும் வைக்கின்றனர். அரசியல் மோகத்தில் மனைவியை கவனிக்க நேரமின்றி ஜெய்சங்கர் தேர்தலில் நின்று தோற்று, நிறைய குடிக்க ஆரம்பிக்கிறார். தனிமையில் வாடும் லட்சுமியை, சிவகுமார்-சுலக்க்ஷனா தம்பதியின் அன்னியோன்யம் இன்னும் தகிக்க வைக்கிறது.

அளவற்ற குடியால் ஜெய்சங்கர் இறந்த பின்பு, விதவையான லட்சுமியின் பார்வை சிவகுமாரின் மீது இன்னும் தீவிரமடைகிறது. பண்பாடு கருதி கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். சிவகுமாரின் குழந்தையும் லட்சுமியை பெரியம்மா என்று அழைத்து அவரிடமே
வளர்கிறது. இந்நிலையில் இரண்டாவது பிரசவத்துக்காக சுலக்க்ஷனா தாய் வீடு செல்ல, ஒரு மழைநாளின் ஒதுங்க இடமில்லாத ஈரத்தில் லட்சுமி, சிவகுமாரிடம் தன்னை வெளிப்படுத்துகிறார். முறை தவறிய உறவு அங்கே துவங்குகிறது.அன்று முதல் அவரை அண்ணி என்று அழைப்பதை நிறுத்திக்கொள்கிறார். இருவரும் திருமணம் செய்ய எடுக்கும் முடிவு சுலக்க்ஷனாவுக்கு தெரிய வரும் பொழுது நிகழும் களேபரத்தில் சுலக்க்ஷனா இறக்க, சிவகுமார் தூக்கு தண்டனை கைதியாகிறார். தண்டனைக்கு முதல் நாள் அவரைக்காண வரும் லட்சுமி, ஜெயிலிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். படம் நிறைவடைகிறது.

எந்த ஒரு விஷயமும் நமக்கு நிகழாத வரை, அதன் பாதிப்பு முழுமையாக நம்மை தாக்காது. எல்லோரும் முகம் சுழித்தாலும், எனக்கு இன்னும் அந்த அத்துமீறல் நியாயமாகவே படுகிறது. தவறு செய்யாமலிருக்க காரணம், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது தானே?

படத்தில் ராஜாவின் பங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. அற்புதமான காலத்தால் கரையாத பாடல்கள். ஜானகி, ஷைலஜாவின் கூட்டணியில் "மொட்டுவிட்ட முல்லைக்கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி...", எஸ்.பி.பி, ஜானகி, உமா ரமணன் இணைந்த "தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு..." போன்ற நெடுங்காலம் வானொலியின் வர்த்தக ஒளிபரப்பை குத்தகைக்கு எடுத்த பாடல்கள்.இந்த படத்தில் நான் சொல்ல வந்த என் விருப்ப எண், படத்தின் அதி முக்கிய மழைக்காட்சி பாடல். பாடல் துவங்கும்போது உங்களுக்கே தெரியாமல் மெலிதாக குளிர்வது போலவும், சில்லென்ற சாரல் துளைப்பதைப்போலவும் உணர்வீர்கள். ஜானகியின் ஆலாபனையுடன் துவங்கும் இந்த பாடல் வரிகள் கவனிக்கப்படாமல் போன வைரமுத்துவின் வைர வரிகள். ஒரு விதவையின் தாகம் இதற்கு மேலும் வெளிப்படுத்தப்படுமா? சற்றே வித்தியாசமான தாளக்கட்டில் பாடல் தொடரும். மழையுடன் ஒத்திசைந்த மிருதங்க இசை.

என் பதின்ம வயதில் இந்தப்பாடலின் "மழை செய்யும் கோளாறு... கொதிக்குதே பாலாறு..." என்ற வரிகளில் நான் வைரமுத்துவின் அடிமையாகி போனேன். அதை ஜானகி பாடியிருக்கும் விதம் கவனிக்கையில், இதை ராஜா, ஜானகிக்கு எப்படி சொல்லி தந்திருப்பார் என்பதை என்னால் யூகிக்கவே முடியவில்லை. சிவகுமாரின் மிகையான நடிப்பைத்தவிர அத்தனையுமே பாடலின் பலம். லட்சுமியின் முக பாவங்கள் நிச்சயமாய் உங்களை வியக்க வைக்கும். சரணத்தின் முன்பு ஜானகி கொஞ்சும் லல்லல்லல லல்ல லாலா... சொல்லி விளங்க வைக்க முடியாத ஒன்று.

என் உணர்வுகளுக்கு நான் இது நாள் வரை போட்டு வைத்திருந்த தடைகள் அனைத்தையும், கழுவித்துடைக்க வந்த இந்த மழை உண்மையில் இங்கே பெய்யவில்லை... இது காமன் காட்டில் பெய்த மழை...!! கேட்டுப்பாருங்கள்...பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்..
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..

மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு... கொதிக்குதே பாலாறு...
இது காதல் ஆசைக்கும் காமன் பூசைக்கும் நேரமா?
இந்த ஜோடிவண்டுகள் கூடு தாண்டிடுமா?

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

இந்த தாமரை மலர்ந்தபின்பு மூடுமோ?
பட்டு பூங்கொடி படர இடம் தேடுமோ?
மலர்க்கணை பாயாதோ... மதுக்குடம் சாயாதோ?
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா...
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா...

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்...
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...


-மகேந்திரன்.

---

பாடல்களைக் காண படங்களை க்ளிக்கவும்.

19 comments:

Toto said...

Excellent post Saravanan. What you said about the song is true. Vairamuthu was asked about the logical meaning - it should be "Pon megam" instead of "Pon vaanam". He cleverly answered that it's an unuusual relation and hence the unusual comparison. Thanks for the lyrics !

-Toto
www.pixmonk.com

சரவணகுமரன் said...

நன்றி Toto, இப்பதிவை எழுதியது எனது நண்பர் மகேந்திரன்.

shabi said...

இந்த பாடல் வரிகள் கவனிக்கப்படாமல்//// எனக்கும் மிகவும் பிடித்த பாடல் நீங்கள் குறிப்பிட்டுள்ள்து போல் கவனிக்கப்படா் பாடல் இல்லை இது

Karthick said...

Hi Saravanan, I am regular reader of your blog...its in my recent visit page in my Google Chrome, so i check almost everyday. I hear this song as a mms with a name nice voice...a college girl sung and recorded in a mobile...unfortunately i didnt realize the lyrics that much caz the tune mesmerise...now reading this post its very interesting and nice...thanks to magendran...i dont think no one can analyse raja sir song this much...cheers - karthick.D

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி shabi

சரவணகுமரன் said...

இதேப்போல் தொடர்ந்து வாசிக்கவும்... நன்றி கார்த்திக்...

Karthick said...

Hi,

Can i have you number..you can mail that to my ID karthick@vansesystems.com.

Anonymous said...

//இருவரும் திருமணம் செய்ய எடுக்கும் முடிவு சுலக்க்ஷனாவுக்கு தெரிய வரும் பொழுது நிகழும் களேபரத்தில் சுலக்க்ஷனா இறக்க, சிவகுமார் தூக்கு தண்டனை கைதியாகிறார். தண்டனைக்கு முதல் நாள் அவரைக்காண வரும் லட்சுமி, ஜெயிலிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். படம் நிறைவடைகிறது.//

சார் பாவம் அந்த குழந்தை என்ன ஆச்சு?
அனாதை ஆயிடுச்சா அல்லது அதுவும் செத்துப் போயிடுச்சா?

மகேந்திரன் said...

லாஜிக்கலா யோசிச்சா சுலக்க்ஷனாவோட பெற்றோர் அந்த குழந்தைகள பாத்துக்கலாம்.
ஆனா படம் அந்த ஜெயில் சீனோட முடிஞ்சிடும். அதனால எனக்கும் தெரியல..
(நல்லா கேக்குறாங்கையா டீடைலு..)

சரவணகுமரன் said...

//நல்லா கேக்குறாங்கையா டீடைலு//

மகேந்திரன்,

எனக்கு ஒரு டவுட். ஆவியா இருக்கும் ஜெய்சங்கர், இத பார்த்து என்ன நினைச்சிருப்பார்? இதுக்கும் லாஜிக்கலா யோசிச்சி சொல்லுங்களேன். ஈரம் ஸ்டைல்'ல இருந்தாலும் சரி... :-)

நரேஷ் said...

மகேந்திரனின் விமர்சனம் வழக்கம் போல மிக அருமை....

உண்மையில் இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு தெரியாது....பாட்டை மட்டுமே கேட்டிருந்தேன்....விமர்சனத்தை படித்துவிட்டு மீண்டும் பாடலை பார்த்து கேட்கும் போது தனி சுகம்....ஜானகியும், லட்சுமியும் கலக்கியிருக்காங்க.....

//எந்த ஒரு விஷயமும் நமக்கு நிகழாத வரை, அதன் பாதிப்பு முழுமையாக நம்மை தாக்காது. எல்லோரும் முகம் சுழித்தாலும், எனக்கு இன்னும் அந்த அத்துமீறல் நியாயமாகவே படுகிறது. தவறு செய்யாமலிருக்க காரணம், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது தானே?//

ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை மிக அனாசயமாக சொல்லிச் சென்றிருக்கிறார் மகேந்திரன் :))))....

நரேஷ் said...

மகேந்திரனுக்கு ஒரு விண்ணப்பம்...

நான் 'பண்புடன்' என்கிற குழுமத்தில் உறுப்பினர்...உங்களுக்கு ஆசிஃப் மீரான் (சாத்தான் குளத்தார்) தெரிந்திருக்கலாம்....அவர்தான் குழும நிர்வாகி.....

பக்கமாக, அவருடன் பேசும் போது மகேந்திரனின் இந்த இசைப் பதிவுகளைப் பற்றி சொன்னேன்....அவரும் ஆர்வமாகி பதிவுகளை குழுமத்தில் போடச் சொன்னார்... போடும் முன் (உங்கள் பெயர் போட்டு) குழுமத்தில் இடுவதென்றாலும் உங்களை கேட்க வேண்டுமே என்று எண்ணித்தான், உங்களை அனுமதி கேட்கிறேன்......

என் மெயில் ஐடி
meetnnk1@gmail.com

மகேந்திரன் said...

இன்று இரவு விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியரில்,
மழைப்பாடல் சுற்றுக்காக ஒரு குழந்தை (ஸ்ரீநிஷா??)
"பொன்வானம் பன்னீர் தூவுது " பாடப்போகிறாள்.
பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்.. (9pm - 10pm)

Anand said...

இந்த பாடல் பல முறை பார்த்திருந்தாலும் உங்கள் விமர்சனம் என்னை இந்த படம் பார்க்க தூண்டியது. இதோ இப்பொழுது கே தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருக்கிறேன். அருமையான படம். இப்பொழுது இதை விட பரந்து விரிந்த படங்கள் பல வந்து விட்டது. ;-)

மகேந்திரன் said...

நன்றி ஆனந்த்..

#இதை விட பரந்து விரிந்த படங்கள் பல வந்து விட்டது#

"ஜெகன் மோகினி" பத்தி சொல்றிங்களா?

Anand said...

@ மகேந்திரன்

#ஜெகன் மோகினி" பத்தி சொல்றிங்களா? #
அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். இருந்தாலும் டைரக்டர் KB படத்தில் இல்லாததா ?

மகேந்திரன் said...

ஆமா ஆனந்த்.. உறவின் சிக்கல்களை மையமாக வைத்து வந்த படங்களின் பிதாமகன் பத்மஸ்ரீ திரு.கே.பாலச்சந்தர், அவர் படங்களில் வரும் இயல்புக்கு சற்றே ஒத்துவராத, மிகையான நடிப்புடன் கூடிய கதாநாயகியின் பாத்திரங்களைத்தவிர, காட்சிகளை அமைப்பதில் அவரின் தனி முத்திரை தெரியும். "வெள்ளி விழா" படத்தில், ஹிந்தி பேசும் சவுகார் ஜானகியுடன் தன கணவனை இணைத்து சந்தேகப்படும் ஜெயந்தி, அவனிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல், அச்சா? (अच्चा?) என்று ஒரே பொருமலில் தெரியப்படுத்துவது ஒரு சோறு பதம்..!!
அவரை பற்றிய மீள்நினைவுக்கு நன்றி..

Unknown said...

ரொம்ப ரசனைக்காரரா இருப்பீங்க போலிருக்கே!! என்னை மாதிரியே!! அருமை!!! அருமை!!!

Meena Mano said...

Really nice to read this....you have an excellent taste.....

By,
Meena Mano...