Thursday, April 29, 2010

ஆகட்டும் பார்க்கலாம்

சன் டிவியில் இருக்கும் போது, ரபி பெர்னார்டுக்கு பிரச்சினை வந்து ரபி விலகியப் பிறகு, அந்த இடத்தில் வந்தவர் வீரபாண்டியன். ஆரம்பக் கால ரபி அளவுக்கு இல்லாததால், இவர் மேல் பெரிய அபிப்ராயம் இல்லை. ’நேருக்கு நேர்’ நிகழ்ச்சி பார்ப்பதும் குறைந்து, ஒரு கட்டத்தில் நின்று விட்டது.

சமீபத்தில் நூலகத்தில் ஒரு புத்தகம் பார்த்தப்போது தான், இவரைப் பற்றி மேலும் சில விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன். இவருடைய தந்தை தியாகி திருநாவுக்கரசு அவர்கள் காமராஜரின் நண்பர். காமராஜருக்காக களத்தில் இறங்கி பல வேலைகள் செய்தவர். காமராஜர் இறந்த பிறகு, அரசியலில் இருந்து விலகிவிட்டார். வீரபாண்டியன் பல்வேறு வானொலிகளில், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்திய பின்னர், சன் டிவிக்கு வந்திருக்கிறார்.

தந்தைக்கு காமராஜருடன் இருந்த நெருக்கத்தால், சிறுவயதில் இருந்தே வீரபாண்டியனுக்கு காமராஜரிடம் அறிமுகம் இருந்திருக்கிறது. சிறுவனாக இருக்கும் போது, மேடைக்கு சென்று காமராஜருக்கு மாலை அணிவித்திருக்கிறார். கல்லூரி படிக்கும்போது, அங்கு வருகை வந்த காமராஜர் இவர் பெயரை ஞாபகமாக சொல்லி அழைத்திருக்கிறார். இப்படி காமராஜர் மேலான தாக்கம் தந்தை, மகன் இருவருக்கும் இருந்திருக்கிறது.

இவர் தந்தை இவரிடம் வைத்த ஒரு வேண்டுகோள், காமராஜர் பற்றிய தகவல்களை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது. இவரும் தந்தையின் சொல்லுக்கேற்ப, தந்தையிடம் கேட்டது, காமராஜரிடன் பழகிய தலைவர்களிடன் கேட்டது அனைத்தையும் தொகுத்து ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதை தனது தந்தைக்கு அர்பணித்திருக்கிறார்.‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜரின் பஞ்ச் டயலாக். புத்தகம் முழுக்க தகவல் தொகுப்புகள். ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து இரண்டு மூன்று பக்கங்கள் இருக்கிறது. தகவல்கள் விலாவாரியாக இருக்கிறது. இவையெல்லாம் உண்மை என்று அடித்து சத்தியம் செய்திருக்கிறார். ஒவ்வொன்றையும் சொன்னது யார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். கலைஞர், மூப்பனார் என பல தலைவர்கள் இப்புத்தகத்திற்கு பங்களித்திருக்கிறார்கள். சொந்த கட்சியினர் கொள்கைக்கு புறம்பாக இருந்தால் அவர்களை கண்டிப்பதும், மாற்று கட்சியினரின் மக்கள் நல காரியங்களுக்கு அவர்களை பாராட்டுவதும் என காமராஜர் மற்ற தலைவர்களுடன் பழகிய விதம் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

---

காமராஜர் ஒரு கூட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்தப்போது, பக்கத்தில் இருந்த மின்சார கம்பத்தில் ஏறி நின்றுக்கொண்டு ஒருவர், “தலைவர் வாழ்க!” என்று அவரை பார்த்து கத்தியிருக்கிறார்.

இதை கவனித்த காமராஜர், அவரை பார்த்து, “ஏலேய் கிறுக்கா! நான் வாழுறது இருக்கட்டும். நீ செத்துறாதே. கீழே இறங்கி வா...” என அழைத்திருக்கிறார்.

கீழே வந்து மாலை அணிவித்தவர் பெயர், தொழில் எல்லாம் விசாரித்து, தையல்காரர் என்று தெரிந்துக்கொண்டார். செல்லும்போது, “ஒழுங்கா துணியை தையி, இப்படி தொங்காதே!” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

---

இது கலைஞர் சொன்னது.

ஒருமுறை சட்டசபையில், இந்தி எதிர்ப்பு பற்றிய விவாதத்தின் போது, ஒரு திமுக எம்.எல்.ஏ (யாருன்னு மறந்து போச்சு!) சொன்னாராம். ”தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக்கொடுக்கக்கூடாது. ஆங்கிலமும் சொல்லிக்கொடுக்கக்கூடாது. தமிழ் மட்டும் தான்” என்று. கேட்டுக்கொண்டிருந்த அன்றைய முதல்வர் காமராஜர், எதிர்க்கட்சி தலைவர் அண்ணாவை, தன்னருகில் அழைத்தார். கலைஞரும் உடன் சென்றாராம்.

அண்ணாவிடம் காமராஜர் சொன்னது,

“நான் என்ன தமிழுக்கு எதிரியா? பள்ளிக்கூடத்துல ஆங்கிலம் சொல்லிக்கொடுக்காம எப்படி? அப்புறம், அதுக்கு பதில் ஹிந்தி அல்லவா வந்து உட்கார்ந்துவிடும்?”

அதைக்கேட்ட அண்ணா, பின்பு காரில் செல்லும்போது கருணாநிதியுடம் கூறியது,

“திமுக கொடி தான் பிடிக்கவில்லை என்றாலும், அவருக்கு உள்ள தமிழ் உணர்வு நம்மிடம் உள்ளது போன்றது தான்.”

---

சாப்பாடு கூடை தூக்கும் ஒரு பாட்டியை காமராஜர் ஒரு கூட்டத்தில் சந்தித்தார். அந்த பாட்டி காமராஜரிடம் தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்க, அருகே இருந்தவர் அந்த பாட்டிக்கு சிறிது பணம் கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்க மறுத்து, அதற்கு அந்த பாட்டி, “இன்னைக்கு நீங்க கொடுத்திருவீங்க? ஒருநாள் சரி. ஆனா, என்னை மாதிரி ஆதரவு இல்லாதவுங்க நிலை என்னைக்கும் இப்படித்தானே இருக்கும்?” என கேட்க, ”ஆகட்டும் பார்க்கலாம்” என சொல்லி அனுப்பியிருக்கிறார் காமராஜர்.

அலுவலகம் வந்தப்பிறகு அதிகாரிகளை கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். முதியோர்கள் எத்தனை பேர் இப்படி ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள், ஒரு வயதானவருக்கு மாதம் எவ்வளவு செலவு ஆகும் என்றெல்லாம் கேட்டு, மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

---

இப்படி நிறைய தகவல்கள் தொகுப்புக்கள். ஆனாலும், சில புத்தகங்களில் இருக்கும் கதை படிக்கும் உணர்வு இதில் இல்லை. மாறாக, சொன்னவர் பெயர், இடம், முடிந்தளவுக்கு தேதி வாரியாக குறிப்பிட்டு இருப்பதால், நடந்த நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ தொகுப்பாக இருக்கிறது.

வழக்கமா பழைய தலைவர்களின் பெருமையை இப்படி படிப்பது தான். அதுவும் காமராஜரைப் பற்றி சொல்ல வேண்டாம். ”இப்படி எல்லாம் அந்த காலத்துல இருந்திருக்கிறார்களே? இப்பவும் தலைவர்கள்’ன்னு இருக்காங்களே!” என்ற புலம்பல்கள் எல்லாம் இனி தேவையற்றது என நினைக்கிறேன்.

ஓட்டுக்கு காசு வாங்கிற மக்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்ன? மக்கள் மாறிய காலத்தில், தலைவர்கள் மட்டும் அப்படி மாறாமல் இருக்க வேண்டுமா?!

இந்த புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

.

Tuesday, April 27, 2010

மதராசப்பட்டிணம்

பீரியட் படங்கள் எடுப்பது ப்ரியதர்ஷனுக்கு பிடித்த வேலை. ஏதோ அவர் புண்ணியத்தில் தமிழில் சில படங்கள் பார்த்தோம். அவர் தமிழுக்கு ஒரு இயக்குனரை விட்டு சென்றிருக்கிறார். ப்ரியதர்ஷனிடம் பணிபுரிந்த விஜய்.

இயக்குனர் விஜய்யின் முதல் இரண்டு படங்களுமே (கீரிடம், பொய் சொல்லப் போறோம்) எனக்கு பிடித்திருந்தது. அதனால், அவர் அடுத்தது எந்த படம் எடுத்தாலும் பார்த்திருப்பேன். அவர் இப்போது எடுப்பதோ, சுதந்திரத்திற்கு முந்தைய சென்னையைக் களமாகக் கொண்டு ‘மதராசப்பட்டிணம்’. ஒரு சலவைக்காரனுக்கும் ஆங்கிலேய கவர்னர் மகளுக்கும் இடையேயான காதல் கதையாம்.இசை - ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த குருவியின் தலையில் எப்போதும் பனங்காய் தான். அவருடைய நிலைக்கு ஏற்ப சுமந்திருக்கிறார். பீரியட் படமென்பதால் ரஹ்மானின் பீரியட் படங்களை ரெஃபெர் செய்திருப்பார் என நினைக்கிறேன்.

வாம்மா துரையம்மா

உதித் நாராயண் பாடியிருக்கும் பாடல். இந்திய பெருமையை வெள்ளைக்கார ஹீரோயினுக்கு விளக்கும் பாடல். ஹீரோ பாட, ஹீரோயின் கேட்கும் சந்தேகங்களுக்கு ஹனீபா விளக்கமளிக்கிறார். இந்திய பெருமைகளை நா. முத்துக்குமார் அழகாக எழுதியிருக்கிறார். உதித் குரலும், பாடலின் மெட்டும் லகானை ஞாபகப்படுத்துகிறது. “கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்” என்று உதித் நாராயணை பாட வைத்திருப்பது பெரும் காமெடி.

இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே அன்பை காணலாம்.

வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிதுயம்மா
இதை அடிமையாக்கித்தான் கொடுமை செய்வது நியாயமா?


மேகமே மேகமே

எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர்கள் விக்ரம், நாசர் இணைந்து பாடியிருக்கும் பாடல். பாடியவர்கள் லிஸ்ட்டில் நா.முத்துக்குமார், எழுத்தாளர் அஜயன் பாலா பெயர்களும் இருக்கிறது. விஸ்வநாதன், விக்ரம் தவிர பாடும்போது மற்றவர்கள் குரல் தெரியவில்லை. விஸ்வநாதனை பாட வைத்திருப்பதாலோ என்னவோ, பிரகாஷுக்கு சங்கமம் நினைவு வந்திருக்கும். நா.முத்துக்குமார் சலவைத்தொழிலாளர்களின் வாழ்வை இப்பாடலில் பதித்திருக்கிறார்.

சலவைக்காரன் வாழ்க்கைக்கூட சாமியைப் போலத்தான்
உங்களோட பாவ மூட்டை சுமப்போம்....


ஆருயிரே ஆருயிரே

மென்மையான மெலடி சோனு நிகாம் குரலில். உடன் பாடியிருப்பது சைந்தவி. சோனு நிகாம் தமிழில் வேறு என்ன பாடல்கள் பாடியிருக்கிறார்? ஹிந்தி பாடகர் என்றாலும், குறை சொல்ல முடியாத தமிழ் உச்சரிப்பு. இவரது குரலும் பாடலின் இசையும், கேட்க இதமாக இருக்கிறது. உயிரே உயிரே என்று பாடுவதைக் கேட்கும் போது, படத்தின் முடிவில் ஹீரோவின் உயிரை எடுத்துவிடுவார்கள் போலும்.

பூக்கள் பூக்கும்

புல்லாங்குழல் அருமையான இசைக்கருவி. எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் முழுக்க தபலாவுடன் சேர்ந்து புல்லாங்குழலின் இசை விளையாடியிருக்கிறது. ரூப்குமார், ஹரிணியின் பாடியிருக்கும் இந்த பாடலின் ’பீட்டர்’ வரிகளை ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். ரூப்குமாருக்கு குண்டு குரல். வார்த்தைகளை அழுத்திவிடுகிறது.

வேரின்றி, விதையின்றி
விண் தூவும் மழையின்றி
இது என்ன
இவன் தோட்டம் பூப்பூக்குதே...


காற்றிலே காற்றிலே

சுதந்திர போராட்டத்தையும், காதலையும் இணைத்திருக்கும் பாடல். ஹரிஹரன் உணர்வுகளைக் கொட்டி பாடியிருக்கிறார். பாடலின் இடையே ‘வந்தே மாதரம்’ வந்து செல்கிறது. உங்க லவ்ஸ்க்கு வந்தே மாதரம் தான் கிடைத்ததா? என்று யாரும் சண்டைக்கு வராமல் இருந்தால் சரி.

நிகழ்காலம் கண்முன் முன்னே
வருங்காலம் கனவின் பின்னே
விதி போடும் கணக்கிற்கு விடையில்லையே!


இந்த ஐந்து பாடல்களுடன் பீல் ஃஆப் லவ், டான்ஸ் தீம் என இரு தீம் இசைகளும் இருக்கிறது. எல்லாமே மென்மையான பாடல்களாக இருப்பதால், இரவு கேட்டுக்கொண்டே தூங்க வசதியாக இருக்கும்.

சென்னையைக் களமாகக் கொண்டு நடக்கும் கதைக்கு, மண்ணின் மணத்துடன் எந்த பாடலும் இல்லாதது பெரிய குறை. வட இந்திய பாடல் உணர்வே இருக்கிறது. மேலும், பெரும்பாலாக ஹிந்தி பாடகர்கள்.

மற்றபடி, இசைக்கு மொழி கிடையாது என்று நினைத்துக்கொண்டு கேட்டோமானால், முதல் நாள் தியேட்டர் வாசலில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

.

Monday, April 26, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் - வெற்றி ரகசியம்?

1) போலிஞ்சரின் ‘திடீர்’ விஜயம்?2) சென்னை வெயிலின் அக்னி சோதனையும் இறுதி விடுதலையும்?3) தோனியின் எமர்ஜென்ஸி ஜீன்களின் பெர்ஃபார்மன்ஸ்?4) ரைய்னாவின் குரங்கு டைவ்கள்?5) சச்சினின் சூப்பர் ஃபார்ம் (செண்டிமெண்டலி அன்-லக்கி)?6) காணாமல் போன லட்சுமி ராய்?7) கிரவுண்ட் பக்கம் வராத விஜய்?வேறேதும் இருந்தாலும் சொல்லுங்க.

.

Sunday, April 25, 2010

இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி

படத்தின் பெயரே “இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி”. ஏன்? ஏதும் டைட்டில் ரிசர்வேஷன் பிரச்சினையோ? எது எப்படியோ, இந்த படத்தின் ரிசல்டை பார்த்து, ‘ரெட்டச்சுழி’ என்று இனியும் பெயர் வைக்கமாட்டார்கள்.ஷங்கர் சீப்பாக படமெடுத்தாலும், மேக்கிங்கில் ஒரு தரம் இருக்கும். இதில் அது டோட்டலி மிஸ்ஸிங். டிவி டிராமா பார்க்கும் எபெக்ட். டிவி டிராமாக்களில் கூட தற்சமயம் லாஜிக், யதார்த்தம் போன்றவை பார்க்கிறார்கள். இமயம்+சிகரம் என்பதற்காகவே ஷங்கர் ஒத்துக்கொண்டார் போலும்.

பாலசந்தரும், பாரதிராஜாவும் தங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் நடிப்பதும், அதுவும் இணைந்து நடிப்பதும் எப்படி இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு படத்தின் மீது இருந்தது.

பாலசந்தரை விட பாரதிராஜா நடிப்பில் கலக்கியிருக்கிறார். கிராமத்து பெரிய மனுஷனை கண் முன் நிறுத்துகிறார். கை வச்ச பனியன், பட்டாபட்டி மேல மடிச்சுவிட்ட வேட்டி, சரிந்து விழும் துண்டு என கிராமத்து யதார்த்தம். இதற்கு நேர் எதிராக பாலசந்தரின் மேக்கப். அந்த ஒட்டு மீசை, ஒரு சோறு.

பாரதிராஜாவுக்கு எத்தனை வயதானாலும், குரலில் அந்த ‘கணீர்’ போகவில்லை. நடிப்பில் என்னமா உணர்ச்சியைக் கொட்டுகிறார்? அதே சமயம், இன்னொரு பக்கம் காமெடியிலும் களைக்கட்டுகிறார். திரை உலகினர் இவரைப் பார்த்து டைரக்‌ஷன் மட்டுமல்ல, நடிப்பும் கற்றுக்கொள்ளலாம். பாரதிராஜா இன்னும் நிறைய நடிக்கணும். நான் பார்க்கணும்.

எனக்கு படத்தில் நல்லவிதமாக சொல்வதற்கு, பாரதிராஜாவை தவிர வேறெதுவுமில்லை.

அஞ்சலி... ம்ம்ம்... செம...!!! ‘அங்காடித்தெரு’வில் தங்கையுடன் பேசும் மாடுலேஷனுடனே இதில் பசங்களுடன் பேசுகிறார்.

கருணாஸ் அறிமுகமானவுடன் அவர்தான் ஹீரோவா? என அதிர்ச்சியுடன் தியேட்டர் சலசலத்தது. மக்கள் ரொம்ப நொந்துபோய் படம் பார்த்தார்கள். நடுவில் கரண்ட் போக, ‘ஹைய்யா’ என சந்தோஷக்குரல். ஒருவர் அவருடைய மொபைலில் ‘அபூர்வ சகோதரர்கள்’ சோக வயலின் இசை போட, அனைவரும் அவரவர் நிலையை எண்ணி சிரித்துக்கொண்டார்கள். ஏதோ அந்த பசங்க அவ்வப்போது அடிக்கும் ஜோக்குகளினால், எழுந்து போகாமல் கடைசிவரை உட்கார்ந்து பார்த்தது கூட்டம். (நெளிந்துக்கொண்டு தான்) அதில் மட்டும் தான் இயக்குனருக்கு வெற்றி.

மட்டமான தியேட்டர். நீண்ட இடைவெளிக்கு பிலிம் ப்ரொஜக்‌ஷனில் படம் பார்த்தேன். ரொம்ப டல்லாக இருந்தது. தியேட்டரில் சவுண்ட் சரியில்லையா, இல்லை படத்தின் சவுண்ட் ரெகார்டிங்கே அப்படித்தானா? என்று தெரியவில்லை. மோசம். திருட்டு டிவிடியில் பார்த்தது போன்ற உணர்வு.

ஒரு படத்தில் எவ்வளவு பெரிய ஆட்கள் பங்கு இருந்தாலும், அது வெற்றிக்கு உத்திரவாதமில்லை என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம். தமிழ் சினிமாவின் மூன்று சிறந்த இயக்குனர்கள் இந்த கதையை, திரைக்கதையைக் கேட்டு தங்கள் உழைப்பை செலவழித்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமே.

.

Saturday, April 24, 2010

சுறா

விஜய் படங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. சமீபகாலமாக, பாடல்களும் இந்த குற்றச்சாட்டில் சேர்ந்துவிட்டது. சுறா பாடல்களை பார்ப்போம்.சுறா பாடல்கள் எல்லாம் தெலுங்கில் மணிஷர்மா போட்டதுதான் என்று ஒரு செய்தி படித்தேன். சரி, தெலுங்குகாரர்கள் கேட்டாச்சு. நமக்கு புதுசா இருந்தா சரி என்று கேட்டால், நாமும் கேட்ட மாதிரி தான் இருக்கிறது.

'நான் நடந்தா அதிரடி' - இது பொதுவா மணிஷர்மா பக்கத்தில் விஷால் உட்கார்ந்தால் அவர் போடும் ட்யூன். மலைக்கோட்டை, தோரணை எல்லாம் கேட்டு, பார்த்து, இதை கேட்டால் மனக்கண்ணில் விஷால் தான் ஆடுகிறார்.

’தஞ்சாவூர் ஜில்லாக்காரி’ பாடல் இசை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது என்று நினைத்தால், ‘போக்கிரி மச்சான்’ என்று அவர்களே எடுத்துக்கொடுக்கிறார்கள். ஆனாலும் நல்லாத்தான் இருக்கு. அதேப்போல், ‘சிறக்கடிக்கும் நிலவு’ம் நல்லாயிருக்கு.

அப்புறம், ஆரம்பப்பாடல் என்று நினைக்கிறேன். ”வங்கக்கடல் எல்லை... நான் சிங்கம் பெத்தப்பிள்ளை...”. ’காதல்னா சும்மா இல்லை’ படத்தில் ரவிகிருஷ்ணா ஒரு கேள்வி கேட்பார். அதைப்பார்த்திருந்தால் கபிலன் இப்படியெல்லாம் எழுதித் தொலைக்க மாட்டார்.

இப்படியெல்லாம் சொன்னாலும், தற்போது என் மதிய தூக்கத்தை கலைக்கும் பாடல்கள் சுறா தான். அதற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இன்னொரு பாட்டு இருக்கிறது. நீங்கள் வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்றால், இந்த பாடல் வரிகளை கவனியுங்கள். வாலியும் இயக்குனரும் எழுதியிருக்கிறார்கள். (இப்படித்தான் சான்ஸ் வாங்கினாரா?) இது ஒரு டபுள் மீனிங் சாங்.

உங்களுக்காக இதோ,

இது நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டுப்பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை.


ஹீரோவை ‘இது’ன்னுட்டாங்க...

ஒளிரும் பனிமலை குமுறும் எரிமலை
இரண்டும் கலந்த இதயம்.
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே காலை உதயம்.


ஒரு மார்க்கமாத்தான் சுத்துறாங்க.

வெற்றிக்கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
வருங்காலம் நம்ம கையில் தான்டா...


எங்க? கையை காட்டு. - கவுண்டர்

கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா...


இப்படி காமெடி பண்றதுல, உங்கள மிஞ்ச யாரும் இல்லை!

ஒரு தாய் மக்கள்
ஒன்றாய் என்றும் நிற்கவேண்டும்
நாளை உலகம்
நம்மை பார்த்து கற்கவேண்டும்.


அய்யோ!

ஈர்க்குச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு
தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு.


விஜய் ரசிகர்கள் ஜாக்கிரதை.

இதுபோல, இன்னொரு பாட்டு இருக்கு.

தமிழன் வீரத்தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்.


ஆரம்பமே அட்டகாசமா இல்லை.

போதும். இதோட நிறுத்திக்கலாம் என்று வடிவேலு பாணியில் முடித்துக்கொள்கிறேன்.

---

பாட்டுல, படத்துல விஜய்க்கு இப்படி பில்டப் கொடுத்தாலும், பாடல் வெளியீட்டு மேடையில் எல்லோரும் காமெடியாக்கிவிட்டார்கள்.

சக்சேனா சொல்கிறார், “படத்தில் தமன்னா இருந்தால், நாங்கள் வாங்கிவிடுவோம்.” (இதுவும் அவருக்காகத்தானா?.)

வடிவேலு சொல்கிறார், “சாமியாரு படத்தையே சன் பிக்சர்ஸ் ஓட்டிடுவாங்க” (இதை விட்டுடுவாங்களா?)

என்னத்தான்யா நெனைச்சிக்கிட்டீங்க, எங்க ஆள?.

.

Friday, April 23, 2010

போன் போபியா

செல்போன்கள், நம்மிடையே ஒரு புது பய பழக்கத்தை உருவாக்கியிருக்கிறது.செல்போன் பெருகிவிட்ட இக்காலத்தில் எல்லோரும் எப்போதும் நெருங்கியவர்களுடன் தொடர்பில் இருக்க பழகிவிட்டனர். இப்படி தொடர் தொடர்பு பழக்கம், சிலரை சிறிது நேரமே ஆனாலும், தொடர்புக்கொள்ள முடியாவிட்டால், ஏதேதோ எண்ணங்கள் தோன்றி, ஒருவித பய உணர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.

---

அலுவலக நண்பருக்கு கைக்குழந்தை இருக்கிறது. தினமும் ஆபிஸ் வந்தப்பிறகு, வீட்டில் இருக்கும் மனைவிக்கு போன் செய்து, குழந்தையை பற்றி விசாரிப்பார். ஒருநாள், இதுபோல் தொடர்புகொள்ள, அந்த பக்கம் போனை யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய, பலன் அதே.

இவருக்கு பல நினைவுகள். வேலையும் ஓடவில்லை. அச்சமயம் அக்கம்பக்கத்தில் இருக்கும் எவருடைய தொலைப்பேசி எண்ணும் இவரிடம் இல்லை. 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

அலுவலகம் வெளியே வந்து ஆட்டோ ஏறும் சமயத்தில், வீட்டில் இருந்து போன் வர, விசாரித்தால் ஏதோ சப்பை மேட்டர். கடுப்பாக இருந்தாலும், ஒரு வகையில் நிம்மதியுடன் சீட்டில் வந்து உட்கார்ந்தார்.

அன்று வீட்டுக்கு போவதற்கு முன்பே, சுற்றத்தார் தொலைப்பேசி எண்களை வாங்கி வைத்துக்கொண்டார்.

---

இன்னொரு நண்பரின் அத்தான், ஒரு வேண்டுதலுக்காக திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அவர் அச்சமயம் உடல்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கிறார். இவர் சென்ற மறுநாள் அவருடைய மனைவி இவருக்கு போன் செய்ய, போன் நாட் ரீச்சபுல். தொடர்ந்து போன் செய்து, செய்து சலித்துவிட்டார்கள். இது மறுநாளும் தொடர்ந்தது.

பெண்ணின் அப்பா, அம்மா என்று அனைவரும் அவருடைய வீட்டில் குவிந்துவிட்டார்கள். இங்கே என் நண்பருக்கும் டென்ஷன். எந்த பக்கம் இருந்து போன் போட்டாலும், ஒரே பதில். நாட் ரீச்சபுல். மேலும், ஒருநாள் கடந்தது.

என்ன செய்ய? ஹெலிகாப்டரை எடுத்து சென்று, பறந்துக்கொண்டே தேடவா முடியும்?

சும்மா அமைதியாக, நிம்மதியாகவும் இருக்க முடியாது. இதற்காக எதுவாவது செய்யவும் முடியாது.

பிறகுதான் தெரிந்தது, மொபைலில் ப்ராப்ளம். நாலு நாள் கழித்து, தரிசனம் முடித்து வீடு வந்தவருக்கு, ‘ஏன் போன் செய்யவில்லை?’ என்று வீட்டில் செம தரிசனம்.

---

நானும் சில சமயம் யாருக்காவது காத்திருக்கும் போது, இதுபோல் உணர்ந்திருக்கிறேன். வருபவர் வண்டியில் வந்துக்கொண்டிருப்பாராக இருக்கும். ”கொஞ்சம் எடுத்து பேசினால் தான் என்ன?” என்று காக்க வைப்பவர் மேல் கோபம் வரும்.

அதே சமயம், இதே கோபத்தை நானும் தெரிந்தே கிளப்பி இருக்கிறேன். நான் வண்டி ஓட்டும் போது, பெரும்பாலும் செல்போன் அடிப்பது கேட்காது. அப்படி கேட்டாலும், சமயங்களில், ‘இந்த நேரத்தில் இது வேறயா?’ என்று விட்டுவிடுவேன். ‘போய் சமாளித்துக்கொள்ளலாம்’ என்று சுய சமாதானத்துடன்.

வர வர, இதன் பாதிப்பின் தீவிரம் அதிகமாக, இந்த ‘பயணத்தின் போது செல்போன் எடுக்கக்கூடாது’ என்ற நல்ல பழக்கம், கெட்ட பழக்கமாகி வருகிறது.

---

நான் இன்றைக்கு இதைப் பற்றி எழுதினாலும், இந்த போன் உளவியல் பிரச்சினையை சிம்பு, தனது ப்ளாப் படமான ‘வல்லவனில்’ காட்டிவிட்டார்.

படத்தின் வில்லி ரீமா, சிம்புக்கு ஒரு போன் செய்வார். சிம்பு எடுக்கமாட்டார். ரீமா விடவே மாட்டார். தூங்காமல் காலை வரை போன் செய்வார். (சே! இந்த படம் பார்த்ததை மறக்க நெனச்சாலும் முடியலியே?)

இந்தளவுக்கு இல்லையென்றாலும், நம்மில் பெரும்பாலோர் ஒருகால் மிஸ்ஸாகி விட்டால், தொடர்ந்து 10-20 மிஸ்ட் கால்கள் தொடுப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். நொட் திஸ் பாயிண்ட். படத்தில் ரீமா இந்த காட்சியின் மூலமாக சைக்கோவாக சித்தரிக்கப்பட்டிருந்தார்.

---

இதற்கு என்ன செய்வது? செய்ய முடியும்? செல்போன் தரும் உபயோக பலனுடன் இந்த உபத்திரவத்தையும் சேர்த்து அனுபவிக்க வேண்டுமா?

மனரீதியாக சரி செய்து கொள்வது ஒரு வழி. செல்போனுக்கு அடிமையாவதை குறைக்க வேண்டும். எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பைத் தவிர்க்க வேண்டும். அப்படியே அதிகம் பேசினாலும், இம்மாதிரி சமயங்களில் செல்போன் இல்லாத காலத்தை நினைத்துக்கொள்ள வேண்டும். பொறுமை வேண்டும். தொடர்புக்கொள்ள வேறு வழியே இல்லாத போது, பொறுமை ரொம்ப அவசியம்.

---

இன்று சில நண்பர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தது. மற்ற நண்பர்களுக்காக, பதிவாக.

.

Thursday, April 22, 2010

காய்கறியும் அழகு... காப்பியும் அழகு...

நல்லதும் கெட்டதும் எடுத்துக்கிற மனசுல இருக்குது... அழகும் அசிங்கமும் பார்க்கிற பார்வையில இருக்குது...’ன்னு சொல்லுவாங்க. யாரு? நாந்தான். :-)

இப்ப எதுக்கு இது? சொல்றேன்.

என்னத்தான் நாம சில விஷயங்களை, டெய்லி பார்த்துக்கிட்டு இருந்தாலும், அதுல இருக்கிற அழகு, நம்ம சாதாரண பார்வைக்கு தெரியாது. ஆனா, அது சில கண்களுக்கு தெரியும்.

நண்பர் மகேந்திரனுக்கு அப்படி ஒரு கண்ணு. ஸாரி. ரெண்டு கண்ணு.

அவர் எடுத்த புகைப்படங்களில் ரெண்டு, சும்மா நச்’ன்னு இருந்துச்சு. அத பதிவுல போடுறதுக்கு தான், இவ்ளோ பில்-டப்.

---

அம்மா நறுக்கி வைச்ச காய்கறி.---

ரசனையான காஃபி.பெருசாக்கி பார்க்க க்ளிக்கவும். டெஸ்க்டாப்’ல வைக்கிறதா இருந்தாலும் வச்சுக்கோங்க. காசு கேட்க மாட்டோம்.

.

Monday, April 19, 2010

NH - 7

ரோடு போடும் சமயங்களில், சிறு வயதில் நடந்து சென்றாலும் சரி, சைக்கிளில் சென்றாலும் சரி, சிரமமாக இருக்கும். எல்லோருக்கும் தொந்தரவு கொடுத்தபடி, இதெல்லாம் எதற்கு என்றவாறு பார்த்தபடி ஓரத்தில் போவேன். கல்லு, மண்ணு, ஜல்லி, தார் என்று மாற்றி மாற்றி ஒரு அடி உயரத்திற்கு போடுவதை பார்க்கும்போது, இப்படி மெனக்கெடுவது அவசியமா என தோன்றும். சிவில் இன்ஜினியரிங்கில் விதவிதமான சாலைகளை பற்றி படித்தபோதுக் கூட, இது தோன்றுவதுண்டு. மனிதனோ, வாகனமோ போவதற்கு ஒரு பாதை. அதற்கு ஏன் இவ்வளவு டகால்டி வேலைகள் என்று.

---

முன்பு தென் தமிழகத்தில் இருந்து ரயிலில் பெங்களூர் வரவேண்டும் என்றால் பிற்பகலில் கிளம்பவேண்டும். இப்பொழுதும் அப்படித்தான். சாயங்காலம் கிளம்பினால், காலை வந்து சேருவோம். அதேப்போல், பெங்களூரில் இருந்து இரவு கிளம்பினால், மறுநாள் மதியம் வந்து சேருவோம். பெரும்பாலும், சாலைவழி பயணம் இதை விட அதிக நேரம் எடுப்பதாகத்தான் இருக்கும். இப்படி நேரம் எடுப்பதால், ஊருக்கு போய் வருவது பெரிய விஷயமாக, பெரும் திட்டத்திற்குரிய விஷயமாக இருக்கும்.

சமீபகாலங்களில், தொடுக்கப்படும் நெடுஞ்சாலை இணைப்புக்கள், பயணத்திட்டங்களை எளிமையாக்கி இருக்கிறது.

---

சராசரி மைலெஜ் கொடுக்கும் காரில் நாலு பேர் பயணம் செய்தால், ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கான செலவைவிட கொஞ்சமே அதிகம் ஆகும். நான்கு வழி சாலையில், நீங்கள் ஆக்ஸிலெட்டரை அழுத்தி மிதிக்காவிட்டாலும், வண்டி தானே நூறில் செல்லும். எதிரில் வண்டி வரும் பிரச்சினையும், அதற்கான ஆழ்ந்த கவனமும் எச்சரிக்கையுணர்வும் தொடர்ச்சியாக தேவையில்லை. முன்னால் செல்லும் வண்டியை முந்தினாலும், முந்தும் வண்டிக்கு வழி விட்டாலும் போதும். எண்பதில் இருந்து நூறு கிலோமீட்டர் மணி வேகத்தில் சென்றாலும், அதிகாலை பெங்களூரில் கிளம்பி, மதிய உணவிற்கு திருநெல்வேலிக்கோ, தூத்துக்குடிக்கோ சென்று விடலாம்.

மதிய உணவிற்கு என்ன வேண்டுமென்று போகும்போது சொன்னால் போதும். போய் சேரும்போது, வீட்டில் லஞ்ச் ரெடியாக இருக்கும்.

போகும் போது, காலையிலேயே கிளம்புவது போல், திரும்பி வரும்போது, மதியம் கிளம்பலாம். வீட்டில் சண்டே ஸ்பெஷல் சிக்கனோ, மட்டனோ ஒரு கட்டு கட்டுவிட்டு, கூடவே ஒரு பார்சலும் கட்டிவிட்டு வந்தால், இரவு ஒன்பது-பத்து மணிக்கு வீடு திரும்பவும், கட்டிக்கொண்டு வந்த பார்சலை சாப்பிட்டுவிட்டு கவுந்தடித்து உறங்கவும் சரியாக இருக்கும்.பெங்களூர் - சென்னை, திருச்சி - மதுரை, மதுரை - கோவை என அனைத்து முக்கிய வழித்தடங்களும் வேக வழித்தடங்களாகிவிட்டது.

---

பெங்களூரில் இருந்து மதுரைக்கு சாலை வழியாக சென்றால் 210 ரூபாய் ஆகிறது. பஸ் டிக்கெட்டா என்றால் இல்லை. சாலையை பயன்படுத்த மட்டும் சுங்க சாவடிகளில் 210 ரூபாய் பிடுங்கிறார்கள். அத்திப்பள்ளி (20), கிருஷ்ணகிரி (25), தருமபுரி (45), சேலம் (29), வேலஞ்செட்டியூர் (54), கொடை ரோடு (37) என்று காருக்கு மதுரை வரை செமயாக வசூல் செய்கிறார்கள். அதற்கு பிறகு, எங்கும் இல்லை. இருந்த டோல் கேட்களும் நீக்கப்பட்ட தடயங்கள் சில இடங்களில் தெரிகிறது.

ஒரு விஷயம் புரியவில்லை. எதற்கு இந்த வரி கட்டுகிறோம் என்றால், இந்த சாலைகளை போட்டது தனியார் நிறுவனங்கள். அவர்கள் போட்ட காசை எடுப்பதற்கு, நாம் பணம் செலுத்துகிறோம் என்கிறார்கள். அப்புறம் எதற்கு இந்த சாலைகளில் ஆங்காங்கே மன்மோகன் சிங், சோனியா படங்களை வைத்திருக்கிறார்கள்?. போனமுறை, வாஜ்பாய். இதில் என்ன சாதனை இருக்கிறது? ரோடு போட்டு, கீழே லைன் போடுகிறார்களோ இல்லையோ, மறக்காமல் இவர்களது படத்தை எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறார்கள். இப்படி படம் காட்டுவதற்காகவே, கொஞ்சம் மானியமோ, பங்கோ கொடுத்தாலும் கொடுத்திருப்பார்கள்.

---

கல்லூரி படிக்கும் போது, மும்பை டூர் போனபோது, லோனாவாலா ஹைவேயில் சென்றோம். எங்கேயும் நிறுத்தக்கூடாது, எண்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்லவேண்டும், ஜீப்பில் தொடர்ந்து கண்காணிக்கும் ஹைவே பேட்ரோல் என ஆச்சரியமாக இருந்தது.

இந்திய சாலைகளில் எண்பது கிலோமீட்டர்தான் அதிகாரபூர்வ அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் என நினைத்திருந்தேன். இப்ப, நம்ம ஊருக்குள்ளயே, 100 கிலோமீட்டர் என்ற போர்டுகளை பார்க்கும் போது, இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அதைவிட, ஆச்சரியம். இந்த சாலையின் நடுவில், எதையும் கண்டுக்கொள்ளாமல், தைரியமாக, சைக்கிளில் எதிர்திசையில் வரும் நம்மூர் பெரியவர்கள்.

---

திரும்பி வரும்போது, மதுரை வரை சென்னைக்கு போகவும் இதுதான் வழி என்றாலும், வழி காட்டும் போர்டுகளில் எல்லாம் மதுரையும், பெங்களூருமே இருந்தது. சென்னை சொற்ப இடங்களில் தான். காரணம், இது NH - 7.இந்தியாவில் NH - 7 நெடுஞ்சாலை ஸ்பெஷலானது. இது தான் இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை. வாரணாசியில் இருந்து கன்னியாக்குமரி வரை செல்லும் சாலை.


---

லிங்குசாமி, ’பையா’ படத்தில் இன்னொன்று செய்திருக்கலாம். பெங்களூரில் இருந்து மும்பை சென்றதற்கு பதிலாக, கன்னியாக்குமரி சென்றிருக்கலாம். சேலம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி என்று போகும் ரூட்டிற்கு ஏற்ப கமகமவென மசாலா சேர்ந்திருக்கும்.

ம். கொஞ்ச நாள் கழிச்சு, வேற யாராச்சும் ட்ரை பண்ணுங்க’ப்பா.

---

பை-பாஸ் சாலைகள் எல்லா இடங்களில் இருந்தாலும், ரோடு போட்டு ரொம்ப நாள் ஆன காரணத்தாலோ என்னவோ, சாலைகள் பை-பாஸ் போல் தெரியவில்லை. உதாரணத்திற்கு, சேலம். மதுரையிலும், பழைய பை-பாஸ் சாலை இப்படித்தான். ஜன நெரிசலொடு இருக்கும். தற்போது பரவாயில்லை. கூடியவிரைவில், ஊர் தற்போதைய பை-பாஸ் சாலைவரை விரிவடைந்துவிடும் என நினைக்கிறேன்.

பெங்களூர் அவுட்டர் ரிங் ரோடும் அது போலத்தான். பயன்பாட்டிற்கு வந்து சில காலத்திலேயே, இன்னர் ரிங் ரோடாக மாறிவிட்டது.

---

’நோ ப்ராப்ளம்’ என்றொரு சிறுகதை. சுஜாதா எழுதியது. ஜெர்மனி சாலை ஒன்றில் பயணிக்கும் கதை. அந்த சாலையை பற்றி, அங்கு இருக்கும் வசதிகள் பற்றி, சாலையில் ஓடும் காரைப் பற்றி, மறக்காமல் காரை ஓட்டும் பெண்ணை பற்றி எல்லாம் சுஜாதா விவரித்து எழுதியிருப்பார்.

பயணத்தின் போது, காரில் செல்பவர்கள் வழியில் ஒரு விபத்தை பார்ப்பார்கள். அந்த இடத்தை நெருங்கும் முன்பே, விபத்தை பற்றிய தகவல்கள், இவர்களுடைய காருக்கு வந்துவிடும். இவர்கள் அந்த இடத்தை நெருங்கும்போது, ஒரு ஹெலிகாப்டர் நொறுங்கிய காரை அள்ளிக்கொண்டு கிளம்பும். பத்தே நிமிடத்தில், ஒரு துப்புரவு வண்டி அந்த இடத்தை துடைத்து தள்ளிவிடும். நிமிடங்களில் விபத்து நடந்த சுவடே இருக்காது.

இந்த கதையை அவர் எழுதியது, 70களில் இறுதியில். இது முழுமையான கற்பனை கதையாகவோ, விஞ்ஞான புனைவாகவோ இருக்காது என நினைக்கிறேன்.

இன்னும் இங்கு அந்தளவுக்கு வரவில்லையே என வருந்துவதைவிட, இப்பவாவது, இந்தளவுக்காவது வந்திருக்கிறதே என்று சந்தோஷம்தான் படவேண்டியிருக்கிறது.

.

Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

'தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என்று சொல்வதையே யோசித்து சொல்ல வேண்டிய நிலை தமிழனுக்கு. :-)

தை’யா, சித்திரை’யா? எதில் தமிழ் புத்தாண்டு துவங்குகிறது என்ற குழப்பம் பலருக்கு. என்னை பொறுத்தவரை சித்திரையில் தான் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான அறிவுபூர்வமான விளக்கம் இறுதியில்.

---

கலாநிதி மாறனுக்கோ, கலைஞருக்கோ குழப்பமே இருக்காது. தொலைக்காட்சி வியாபாரத்தில் சொன்னேன். ஒன்றிற்கு 18வது ஆண்டு துவக்க விழா. அதனால் சிறப்பு நிகழ்ச்சிகள். மற்றொன்றில், சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாம். இப்படி மாத மாதம் போடுவார்களோ?அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கூட சிறப்பு நிகழ்ச்சிகள் போடலாம்.

---

உண்மையில் எது தமிழ் புத்தாண்டு என்பதில் எனக்கு அக்கறையில்லை. இந்த ஆராய்ச்சியை நானே எடுத்து நடத்தினாலும், கடைசியில் ஒரு ‘குத்து மதிப்பு’ இருக்கும்.

நண்பனிடம் கேட்டேன். அவன் “அடுத்தது, அம்மா ஆட்சியில், இது தான் தமிழ் புத்தாண்டு. இப்ப இல்லை’ன்னு சொல்லிட்டு, அப்புறம் ஆமாம்’ன்னு சொல்லி, ஏன் நாமலே நம்மள முட்டாளாக்கிக்கணும்?”.

---

வருங்காலத்தில், சித்திரை மாத புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியாக இருப்போமோ இல்லையோ, சுள்ளென்று அடிக்கும் வெயிலுக்கு பயந்து வெலவெலத்து இருக்க போகிறோம். அலுவலகத்தில் ஜில்லென்ற காற்றில் பெரும்பாலும் பதுங்கி இருந்தாலும், அது எங்கிருந்து வருகிறது, அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகளை யோசித்தால் கலக்கமாகத்தான் இருக்கிறது.

அலுவலகத்தை சுற்றி மஞ்சள் மஞ்சளாக துளிகள். ரசாயன வாடை. காரணம் கேட்டால், குளிர் சாதனப்பெட்டியை கைக்காட்டுகிறார்கள்.

---

இதுவரை பங்குனி மாத வெயில் பல்லைக் காட்டிக்கொண்டு அடித்திருந்தாலும், சென்னை அணியினர் அதற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அது தான் இம்முறை அணியின் ரகசிய ஆயுதம்.

---

சித்திரையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடினால் தான் நல்லது. ஏனெனில், இன்னும் ஒருநாள் அதிகம் விடுமுறை கிடைக்கும். தை’க்கு பதில் வேறொரு மாதத்தை சொல்லியிருந்தால், இன்னமும் மகிழ்ந்திருப்பேன். அதற்கும், யாராவது வராமலா போவார்கள்?

---

இன்று வாழ்த்து கூறியவர்கள் அனைவருமே, முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்து, பிறகு திருத்திக்கொண்டு தமிழில் கூறி முடித்தார்கள்.

நானும் இந்த ஒரு பதிவாவது, முழுவதும் தமிழில் பிழையில்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். சில இடங்களில் எழுதியதை அழித்து, யோசித்து மாற்ற நேரமாகிவிட்டது. ஒற்றுப்பிழைகள் இருக்கும். அதைப் பற்றி எனக்கு யாராவது சொல்லிக்கொடுத்தால், நன்றாக இருக்கும்.

.

Friday, April 9, 2010

தியேட்டர் - 1

யாருமே உங்களை கவனிக்காத இடத்தில், உங்களுடைய நடவடிக்கைக்கள் எப்படி இருக்கும்? இம்மாதிரி இடங்களில் நீங்கள் சிரிப்பது, அழுவது, குதிப்பது என அனைத்துமே கட்டுப்பாடை மீறியதாக இருக்கும். தியேட்டரும் அப்படிப்பட்ட இடம் தான். உங்களை சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும், நீங்கள் அங்கே யாரையும் பொருட்படுத்துவதில்லை.

---நான் முதல் முறை எப்போது தியேட்டருக்கு சென்றேன் என்று நினைவில்லை. ரொம்பவும் யோசித்துப்பார்த்தால், அரியலூரில் ’மனிதன்’ பார்க்க போனது நினைவுக்கு வருகிறது. தியேட்டர் பெயர் நினைவில்லை. அரியலூரில் எந்த தியேட்டரில் ‘மனிதன்’ ரிலீஸ் ஆனது என்று யாராவது சொன்னால், வரலாற்றில் குறித்துவைத்துக் கொள்வேன்.

சிறு வயதில், தியேட்டருக்கு செல்லும் போது, காலை அசைக்காமல் படம் பார்ப்பதாலோ, என்னவோ, கால்கள் மரத்து போய்விடும். இடைவேளைகளின் போதும், படம் முடிந்த பின்பும், நடக்க சிரமப்படுவேன். என் அண்ணனின் சைக்கிளில் முன்னாடி உட்கார்ந்திருக்கும்போதும், இது நிகழும். இதனால், அடிக்கடி என் கால்கள் செருப்பை துறக்கும்.

---

தியேட்டர் ஏற்படுத்தும் மேஜிக் உணர்வின் மேல், சிறு வயதிற்கே உரிய ஒரு ஆர்வம் எனக்கிருந்தது. இந்த ஆர்வத்தால், வீட்டை தியேட்டராக்கி நண்பர்களுடன் விளையாடி இருக்கிறேன்.மளிகை சாமான்கள் வாங்கும் போது கிடைக்கும் சிறு அட்டைப்பெட்டி தான், என் ப்ரொஜக்டர். அப்போது, கடைகளில் விளையாட லென்ஸ்கள் கிடைக்கும். இப்போதும் கிடைக்கும் என நினைக்கிறேன். (சமீபத்தில் ஒரு வக்கீல் டாக்குமெண்ட் படிக்க, இதை போன்ற, ஆனால், உயர்தரமான ஒன்றை உபயோகித்ததை பார்த்தேன்.) வட்டவடிவான லென்ஸை, ப்ளாஸ்டிக்கால் சுற்றி ப்ரேம் அமைத்து, பிடிக்க கைப்பிடியும் கொடுத்திருப்பார்கள். வெயிலில் இந்த லென்ஸை ஒரு பேப்பரில் காட்டிக்கொண்டிருந்தால், பேப்பர் தீப்பிடிக்க துவங்கிவிடுவது இன்னொரு மேஜிக்.

இந்த லென்ஸ் வடிவத்திலேயே, அட்டை பெட்டியின் முன்புறத்தில் ப்ளேடால் ஒரு ஓட்டை போடுவேன். அங்கு லென்ஸ் நிறுத்தி வைத்துவிடுவேன். அட்டைப்பெட்டியில் அதற்கு எதிர்புறத்தில், ஒரு பிலிம் அளவிற்கு இன்னொரு ஓட்டை. இதில் பிலிமை நிறுத்தி வைப்பேன்.

பிலிம்கள் எக்கச்சக்கமாக கிடைக்கும். தெரிந்த படங்களின் பிலிமோ, அதில் தெரிந்த நடிகர்களோ இருந்தால் ஆனந்தம். சமயங்களில் பிலிம் ரோலே கிடைக்கும். அச்சமயம் பேரானந்தம்.

என் தியேட்டருக்கு தேவையான ஒளி வெள்ளத்தை பாய்ச்சுவது, அப்பா சேவிங் செய்ய வைத்திருக்கும் கண்ணாடி. அதனால், அப்பா சேவிங் செய்யும் சமயங்களில், என் தியேட்டரில் காட்சி கிடையாது. ஒரு கட்டத்தில், அந்த கண்ணாடியின் ஒரு பக்கம் சிறிது உடைந்ததால், அப்பா புது கண்ணாடி வாங்க, பழைய கண்ணாடி தியேட்டரின் பிரத்யோக சொத்தானது.

எங்கள் வீட்டின் பின்புறம், சமையலறை பக்கம் இருக்கும் வாசலில் சூரிய வெளிச்சம் விழும். அதை கண்ணாடியில் பிடித்து, முன்புறம் இருக்கும் அறையின் சுவரில் விழுமாறு போகஸ் செய்து, கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து, தாங்குவதற்கு முன்பும் பின்பும் கற்கள் வைப்பேன். ஏற்கனவே, செய்து வைத்திருந்த அட்டை பெட்டியை, இந்த கண்ணாடியின் முன்பு வைத்தால், முன்புற சுவற்றில் பெரிய வெள்ளை திரை உருவாகும். உள்ளூக்குள் பெரும் ஆரவாரத்தை இது கிளப்பும். வீட்டின் முன்பக்கம் இருந்து, பின்பக்கம் வரை நீண்ட நடைபாதை இருக்கும்வாறு வடிவமைத்து கட்டியிருந்ததால், பெரிய வடிவம் சாத்தியம். 29 இன்ச் டிவி திரையின் அளவை விட பெரியதாக வந்த ஞாபகம்.

சென்சார் சர்டிபிகேட் பிலிம், டைட்டில் பிலிம் என இருந்ததால், வரிசையாக போடுவேன். பக்கத்து வீடுகளில் இருக்கும், என்னைவிட சின்ன பசங்க தான் இங்கு ஆடியன்ஸ். அப்படி யாரும் வராவிட்டாலும் கவலையில்லை. நானே போட்டு பார்த்துவிடுவேன். பிலிம் ஓட்டையின் மேலும் கீழும் இரு கோடுகளை கிழித்து, அதில் பிலிம் ரோலை நுழைத்து, இழுத்துப்பார்த்திருக்கிறேன். படமாக வருமோ என்ற நப்பாசையில். இப்படி இழுப்பதால், என் ’செட்டாப்’ பாக்ஸ் கலைந்து போகும் சாத்தியமே அதிகம் நிகழும்.

எனது அன்றைய கோடை விடுமுறை கொண்டாட்டம் இது தான்.

---

இன்று எல்லாம் டிஜிட்டல்மயமாகிவிட்டதால், முன்பு போல் பிலிம் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைக்கும். இவ்வளவு நாட்கள் வந்த படங்கள், எங்கே போயிருக்கபோகிறது? பழைய படங்களும் டிஜிட்டலாகிவிட்டால், அந்த பிலிம்களும் உபயோகமற்றுதான் போகும். ஆனால், அதை வைத்து வருங்காலத்தில் குழந்தைகள் விளையாட விரும்புவார்களா? என்பது தான் தெரியவில்லை.

(தொடரும்)

.

Thursday, April 8, 2010

கொலை செய்தாரா கலைவாணர்?

இன்று தமிழில் வரும் எல்லா இதழ்களிலும் கிசுகிசு உண்டு. ஜனரஞ்சகப் புத்தகம் என்றால் திரைத்துறையினரைப் பற்றிய கிசுகிசு. புலனாய்வு புத்தகம் என்றால் அரசியல்வாதிகளைப் பற்றிய கிசுகிசு. இலக்கியப் புத்தகம் என்றால் எழுத்தாளர்களைப் பற்றிய கிசுகிசு. தமிழ் புத்தகங்கள் தான் இவ்வாறு என்றில்லை. ஹிந்தியில் இதற்கென்று ஒரு தனி சானலே உண்டு. அடுத்தவன் பற்றிய அந்தரங்கத்தை தெரிந்து கொள்ள, இயற்கையாகவே மனிதனுக்கு அவ்வளவு ஆர்வம்.

தமிழில் இப்படி வந்த முதல் பத்திரிக்கை - சினிமா தூது. 1944 ஆண்டு இதை தொடங்கியவர், லட்சுமிகாந்தன். இவர் அப்பொழுது தான் அந்தமான் ஜெயிலில் இருந்து வந்திருந்தார். ஒரு போர்ஜரி கேஸில் ஜெயிலுக்கு சென்றிருந்தார். இந்த பத்திரிக்கை அரசாங்க அனுமதி பெறாததால், தடை செய்யப்பட்டது. தடை செய்தால், வாசகர்களின் அறிவுக்கு எப்படி தீனி போடுவது? அப்பொழுது அனந்தய்யர் என்பவர் இந்துநேசன் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அவரிடம் லட்சுமிகாந்தன் சென்று, பக்கத்தை நான் பாத்துக்கிறேன், பதிப்பை நீங்க பாத்துக்கோங்க என்றிருக்கிறார். டீலிங் நன்றாக இருக்கவே, பத்திரிக்கை செம மேட்டர்களுடன் வெளியானது.

இப்போதைய இளம் நடிகர்கள் பத்திரிக்கையாளர்களிடம் ‘என்ன நீங்க? என்னை பத்தி கிசுகிசுவே எழுதலை?” என்று கோபித்துக் கொண்டிருக்க, அன்றைய நடிகர்கள் கிசுகிசுவை கண்டு நடுங்கி இருக்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து, தங்களை பற்றிய செய்திகள் வராமல் பார்த்து கொண்டார்கள். அது பொய்யாக இருந்தாலும்.அந்நேரம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிரபல நடிகர். பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். அவரை பற்றியும் இந்துநேசனில் வந்தது.

என்.என்.கிருஷ்ணன் இதை கண்டுகொள்ளவில்லை. பணம் கேட்டு சென்ற போது, அவர் கொடுக்கவில்லை. தொடர்ந்து, அவரை பற்றிய செய்திகள் வந்து கொண்டு இருந்தது. கேட்டதற்கு, ’எவனோ ஒருவன் நம்மால் பொழைக்கிறான். பொழைச்சிட்டு போகட்டும்.” என்றார்.

இந்நிலையில் வடிவேலு என்பவர் தங்கியிருந்த வீட்டை லட்சுமிகாந்தன் வாங்கினார். வீட்டை காலி செய்ய சொன்னபோது, வடிவேலு மறுத்திருக்கிறார். இவ்விஷயத்தில் இவர்களுக்குள் தகராறு ஆகிவிட்டது.

ஒரு நாள் லட்சுமிகாந்தன் அவருடைய வக்கீலை பார்க்க ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்தார். போகும்வழியில் அவருக்காக காத்திருந்த வடிவேலுவும், அவருடைய நண்பரும், ரிக்‌ஷா கடந்து சென்றவுடன், பின்னால் சென்று, ரிக்‌ஷாவை பிடித்து இழுக்க, ரிக்‌ஷா கவிழ்ந்தது. ரிக்‌ஷா ஓட்டியவரை வடிவேலுவின் நண்பர் விரட்டியடிக்க, வடிவேலு லட்சுமிகாந்தன் மேல் பாய்ந்து கத்தியால் குத்தினார். சம்பவத்தில் கத்தி குத்துப்பட்ட லட்சுமிகாந்தன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பிறகு இறந்தார்.

இரு வாரங்கள் கழித்து, இந்த கொலை வழக்குக்காக என்.எஸ்.கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவருடன் அந்நாளைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டார். தவிர, வடிவேலுவும் இன்னும் சிலரும்.

அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு. நடிகர்களுக்கு பத்திரிக்கை ரீதியான தகராறு. வடிவேலுவுக்கு வீடு விவகாரத்தில் தகராறு. அதனால், பாகவதரையும், கலைவாணரையும் சந்தித்த வடிவேலுவிடம், அவர்கள் லட்சுமிகாந்தனை கொலை செய்யுமாறும் தேவையான பண உதவிகளை தாங்கள் செய்வதாகவும் கூறியிருக்கிறார்கள் என்பது தான்.

ஏழு மாதங்கள் நடந்த விசாரணையின் முடிவில் கொடுத்த தீர்ப்பில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சொல்லி பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

கலைவாணர் சிறையில் அடைக்கப்பட, வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் நடந்த வழக்குக்காக கலைவாணரின் சொத்துக்கள் விற்கப்பட்டது. வாரி வழங்கிக்கொண்டிருந்த குடும்பம், மற்றவர்களிடம் கை நீட்டி வாங்கும் நிலைக்கு வந்தது.

வழக்கில் பாகவதரும், கலைவாணரும் சம்பந்தப்பட்டு இருந்தது ஒரே இடத்தில் தான். வடிவேலு அவர்களை ஒரு தியேட்டரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்று கொண்டார் என்பது தான். ஆனால், சம்பவத்தன்று கலைவாணர் சேலத்தில் இருந்ததற்கு சாட்சிகள் இருந்ததாலும், அப்ரூவரான ஒருவரின் வாக்குமூலம் நிரூபணம் ஆகாததாலும், என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டார். அதுபோல், பாகவதரும் விடுதலை செய்யப்பட்டார்.

லட்சுமிகாந்தனின் நிலைக்கு கலைவாணர் காரணம் இல்லை என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறினாலும், அவருக்கு நேர்ந்ததை காலத்தின் தீர்ப்பாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும். எழுத்து தான் என்றாலும் அதில் கண்ணியம் இல்லாவிட்டால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு லட்சுமிகாந்தன் ஒரு உதாரணம். சோதனையான காலமென்றாலும், கூட இருந்தவர்களை கலைவாணர் புரிந்து கொள்ள உதவியது இந்த காலம் தான்.

மேலும் தகவலுக்கு & கலைவாணரைப் பற்றி அறிந்து கொள்ள - முத்துராமனின் சிரிப்பு டாக்டர்.

---

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.முத்துராமன் அவர்கள் தற்போது உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரைப் பற்றி.

.

Wednesday, April 7, 2010

பெங்களூரில் கிரேஸி மோகன்

வருகிற மே மாதம், 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கிரேஸி மோகனின் இரு நாடகங்கள் நடைபெற இருக்கிறது.மதியம் மூணு மணிக்கு ஜூராசிக் பேபிவும், இரவு ஏழு மணிக்கு சாக்லேட் கிருஷ்ணாவும்.

மற்ற தகவல்களுக்கும், டிக்கெட் புக் செய்யவும், மேலே உள்ள லிங்க்களை க்ளிக் செய்யவும்.

நான் போன வருஷம், எஸ்.வி.சேகர் நாடகம் பார்த்த அனுபவம் இங்கே.

.

Sunday, April 4, 2010

இந்திய பணக்காரர்களின் பர்ஸை திறப்பது எப்படி?

இந்தியாவின் பெஸ்ட் செல்லர், சேத்தன் பகத், இன்றைய (04-04-2010) டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்திய பணக்காரர்களிடம் இருந்து பணத்தை உருவுவது எப்படி? என்று. ஷங்கர் படத்தில் வருவது போல், இதுவும் அறிவுபூர்வமாக இல்லாவிட்டாலும், படிக்க ஜாலியாக இருந்தது. அது இங்கே தமிழில்...

---

சமீபத்தில் நடந்த ஐபிஎல் அணி ஏலத்தில், இரு புது அணிகளை அடுத்த பத்து ஆண்டு கால உரிமைக்கு, ரூபாய் 1700 கோடிக்கு மேல் விற்ற ஐபில் தலைமை பாராட்டுக்குரியது. மூன்றே ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கை வர்த்தகத்தை உண்டாக்கியதற்கு மட்டுமல்லாமல், வாங்கியவர்களால் திரும்ப சம்பாதிக்கவே முடியாத பெரும் தொகைக்கு விற்றதற்கு!

என்னத்தான் இணையத்தில் விதவிதமாக கணக்கு போட்டாலும், இந்த அணிகளை வாங்கியவர்கள், ஒரு சீசனுக்கு கிட்டத்தட்ட 170 கோடி கொடுக்க வேண்டும். இது தவிர, வீரர்கள் சம்பளம், நிர்வாக செலவு இத்யாதிகளுக்காக மேலும் 45 சி கொடுக்க வேண்டும். அதனால், இவர்கள் லாபம் பார்க்கவேண்டுமானால், வளரும் பண மதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், இந்த அணியை வாங்கியவர்கள் ஒரு சீசனில் 215 கோடிக்கு மேல் ஐபிஎல் மூலம் வருமானம் பார்க்க வேண்டும்.

ஆனால், இதுவரை ஒரு அணி உரிமையாளரால், அதிகபட்சம் 110 கோடிக்கு மேல், சம்பாதிக்க முடிந்ததில்லை. அதனால், இந்த புது அணிகளை வாங்கியவர்கள், வாங்குவதற்கு ரொம்ப ‘ஓவராக’ கொடுத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க எந்த வணிகவியல் நிபுணரும் தேவையில்லை. குழந்தையும் சொல்லிவிடும்.அணிகளின் மூலம் சம்பாதிக்க வேறு வழிகளும் இருக்கின்றன என்பதை ஒத்துக்கொண்டாலும், அதை தடுப்பதற்கு சில தடைக்கற்களும் உருவாகி இருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வணிகம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை சார்ந்தது. எளிதில் கணிக்க இயலாதது. மேலும் புது புது அணிகளை சேர்ப்பது, பார்வையாளர்களிடையே ஆர்வத்தை குறைக்கக்கூடும். ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஐபிஎல் கிரிக்கெட்டை பார்ப்பவர்களை விட, அதைவிட குறைந்த செலவில் தயாரிக்கப்படும் வேறு சில தொலைக்காட்சி தொடர்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் என தெரியவந்துள்ளது.

இருந்தும், இந்தியாவின் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்யங்கள், பணத்தை இதில் கொட்ட ஆர்வமாக இருக்கிறார்கள். சாதாரணமாக நமக்கே தெரியும் கணக்குகள், அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? அவர்களிடம் இல்லாத நிபுணர்களா? தெரிந்தும் எப்படி இதற்கு செலவழிக்கிறார்கள்?

இது வெறும் லாப நோக்கத்தை சார்ந்தது அல்ல. அதையும் தாண்டி, வேறு சில விஷயங்கள் இருக்கிறது. உடனடி புகழ் வெளிச்சம். இதை அவ்வளவு சுலபமாக வாங்கிவிட முடியாது. உங்களிடம் கோடி கோடியாக பணம், வங்கி கணக்கில் கொட்டிக்கிடக்கலாம். அதற்காக, உங்களால் பாலிவுட் பெரும் தலைகளுடன், கவர்ச்சி கன்னிகளுடன் உட்கார்ந்துக்கொண்டு கிரிக்கெட் பார்க்க முடியுமா? ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும் போது, ஆஸ்திரேலியா முன்னணி வீரர்களுடன் கைக்குலுக்கிக்கொள்ள முடியுமா? விளையாட்டிற்கு பிறகான பார்ட்டியில், சியர்லீடர்ஸ்களுடன் சியர் சொல்லிக்கொள்ள முடியுமா? இதை எல்லாவற்றையும் விட, இதையெல்லாம் நீங்கள் அனுபவிப்பதை உலகமே பார்க்கும் சந்தர்ப்பத்தைத்தான் உங்களால் ஏற்படுத்த கொள்ள முடியுமா?இவை எதுவும் இல்லாமல், உங்களிடம் எண்ணெய் கிணறு இருந்தால் என்ன? விமானங்கள் இருந்தால் என்ன? கடுப்பை கிளப்பும் முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் லாபம் சம்பாதித்துக்கொடுப்பது மட்டுமா உங்கள் வேலை? பாஸு, உங்ககிட்ட பணம் இருக்குது. அது இருக்கு’ன்னு உலகத்துக்கு காட்ட வேண்டாமா? ’எரிவாயு நிறுவனம்’ வைத்திருக்கிறேன் என்று சொல்வதை விட, ‘கொச்சி குளுமை’யை வைத்திருக்கிறேன் என்று சொல்வதற்காக, ஆண்டுக்கு 100 கோடி செலவழித்தால் தான் என்ன?

அது தான் உண்மை. ஒரு ஐபிஎல் அணியை வாங்குவதின் மூலம், இன்ஸ்டண்ட் புகழ், கவர்ச்சி, இளமை, துடிப்பு இவையனைத்தையும் வாங்குகிறீர்கள். வாழ்வை தாண்டிய இமேஜை கிடைக்க பெறுகிறீர்கள். இதற்காக, வேறெந்த வரமோ, திறமையோ தேவையில்லை. பணம். அது ஒன்றே போதும்.

ஐபிஎல் மூலம் வேறு சில வணிக பாடங்கள் கிடைத்தாலும், எனக்கு இந்திய பணக்காரர்களிடம் இருந்து பணம் பெறுவது குறித்த புரிதல் கிடைக்கிறது. மேல்நாட்டினர் போலில்லாமல், இந்திய செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தில் மிக குறைந்த சதவிகிதத்தையே பொது சேவைக்கு அளிக்கிறார்கள். இது அவர்களது சொந்த ஆர்வத்தை பொறுத்ததாக இருக்கலாம். நிறைய தன்னார்வ அமைப்புகள், இவர்களிடம் இருந்து மிக சிரமப்பட்டே உதவி பெறுகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு செலவிடுவதின் மூலம், எவ்வித லாபமும் நிறுவனங்களுக்கு ஏற்பட போவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனால், இதே போல், லாபம் ஈட்டி தராத கிரிக்கெட் அணிகளுக்கோ, மகிழ்ச்சியுடன் தங்கள் பர்ஸில் இருந்து பெரும் தொகையை எடுத்துக்கொடுக்கிறார்கள். லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுடைய கௌரவத்தை கட்டி காத்தால் போதுமானதாக இருக்கிறது.இப்படி இவர்களுடைய இமேஜை மேம்படுத்தி காட்டுவதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. இது போல, நம்மிடம் இதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது. இவர்களுடைய பெயர்களை பாலத்திற்கு வைக்கலாம், ரோட்டிற்கு வைக்கலாம், ரயிலுக்கு வைக்கலாம், ரயில்வே ஸ்டேஷனுக்கு வைக்கலாம். (சுடுகாட்டுக்கு கூட வைக்கலாம்.) இதற்கான ஏலத்தை நடத்தி, இவர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஒரு அழுத்தமான போட்டியை உருவாக்கிவிட்டால் போதும். அடுத்த நாள் பேப்பரில் பெயர் வருவதற்காக, ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு ஏலத்தில் ஜெயிக்க முயலுவார்கள். இப்படி வரும் பணம், சில நல்ல காரியங்களுக்காக பயன்படுமானால், இதில் என்ன தவறு?

இன்னும் பெரும் பணத்தை பெற, அரசு இவர்கள் பெயரை சிறிது காலத்திற்கு நாணயத்திலோ, ரூபாய் நோட்டிலோ போடலாம். சில அரசு கல்லூரிகளுக்கும் இவர்கள் பெயரை வைக்கலாம். பணத்திற்காக மட்டுமில்லாமல், தங்கள் பெயரில் இருக்கும் கல்லூரியின் தரத்தை உயர்த்த இவர்கள் முயலுவார்கள் என்பதற்காகவும். பின் தங்கள் பெயரில் இருக்கும் கல்லூரி, மோசமான கல்வி அளிப்பதை யார் தான் விரும்புவார்கள்?

குறைந்த அதிகாரம் படைத்த 'டம்மி’ பதவிகளை உருவாக்கி, அதையும் ’லம்ப்’பாக விற்கலாம். ’இரண்டாம் துணை ஜனாதிபதி’ என்பது போல ஒரு பெயர், இவர்களுக்கு ‘உர பாக்டரி அதிபர்’ என்ற பெயரை விட பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

இந்த ஐடியாக்கள் கேனத்தனமாக தெரிந்தாலும், சொல்ல வருவது புரிந்திருக்கும். ஈகோ என்பது ஒரு மனிதனுக்குள் இருக்கும் மிருகம். அவன்/அவள் எதை சாதித்திருந்தாலும், இந்த மிருகத்திற்கு தீனி தேவை. அதை சரியாக குறி வைத்து அடித்து, அணியின் மதிப்பை விட பல மடங்கு விலைக்கு விற்றதற்காகவும், அப்படி வாங்கியவர்களையும் மகிழ்ச்சியோடு சிரிப்புடன் வைத்திருப்பதற்காகவும், மோடியும் ஐபிஎல் தலைமை குழுவில் மற்றவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். இது போல், மற்ற அமைப்புகளும், அரசும், ’பெத்த பேர்’களை பெரும் தொகைக்கு விற்று, வேறு நல்ல காரியங்களுக்கு அதை பயன்படுத்த முன் வர வேண்டும்.

அதே சமயம், உங்களிடம் 1700 கோடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வருந்தாமல் உங்களுடைய ராசிக்கு நன்றி சொல்லுங்கள். பணம் அதிகம் இருந்தாலும் சமயங்களில் நல்லதிற்கல்ல. அது முட்டாள்தனமான காரியங்களை செய்ய தூண்டும். அதற்கு பதில், குதிக்கும் சியர்லீடர்ஸை டிவியில் பார்ப்பது பெட்டர்.

.

Saturday, April 3, 2010

இலக்கிய கொத்து புரோட்டா

இது ஒரு பிரபல எழுத்தாளர் சாப்பிட்ட கொத்து புரோட்டா பற்றிய பதிவு. யார் சாப்பிட்ட கொத்து புரோட்டா என சரியாக கண்டுப்பிடிப்பவர்களுக்கு, சாப்பிட ஒரு கொத்து புரோட்டா பரிசு :-).

---முனியாண்டி விலாஸில் கொத்து புரோட்டா ஆர்டர் செய்திருந்தேன். மாஸ்டர் அதை தயார் செய்து கொண்டிருந்தது, அவருடைய இரும்பு கரண்டி, கல்லில் எழுப்பும் ஒலியின் மூலம் எனக்கு தெரிந்தது. அது ஒரு வன்முறையின் ஒலியாக எனக்கு கேட்டது. கண்ணுக்கே தெரியாத, புரோட்டாக்கள், முட்டைகள், தக்காளிகள், வெங்காயங்கள், கறிவேப்பிலைகள், ’உனக்காக நாங்கள் மரணிக்கிறோம்’ என எழுப்பும் மரண ஒலியாக அது என்னை வந்தடைந்தது.

சிறிது நேரத்தில் ஒலியின் அளவு குறைந்தது. இரும்பு கரண்டியின் வன்முறையை தாங்க முடியாத உணவு பொருட்கள், அதற்கு அடங்கி, கொத்து புரோட்டாவாக உருவெடுத்திருக்கும் நேரம் அது.

‘கொத்து புரோட்டா ரெடி’ என்ற மாஸ்டரின் குரல் கிச்சனில் இருந்து ஓங்கி ஒலித்தது. இது போல், அவர் எத்தனை முறை சொல்லியிருப்பார்? ஒவ்வொரு முறையும், அவர் சொன்ன சொற்களும் இதுவாகவேதானே இருக்கும்? இன்னமும், அந்த சொற்கள் இந்த ஹோட்டலில் தானே சுற்றியலைந்து கொண்டிருக்கும்?

ஏற்கனவே இலையை என் முன்னால் விரித்திருந்தேன். சர்வராக பணிபுரியும் பையன், சமீபத்தில் தான், சிறுவனாக இருந்து இளைஞனாக மாறியிருந்திருப்பான். அவனுடைய சொந்த ஊர் கண்டிப்பாக இதுவாக இருக்காது. அவன் அந்த கொத்து புரோட்டா நிறைந்த தட்டை என் முன்னால் வைத்ததில், ஒரு அலட்சியம் இருந்தது. அடுத்த டேபிளுக்கு பரிமாற செல்லும் அவசரம் இருந்தது. இந்த அலட்சியமும், அவசரமும் அவன் வயதுக்கே உரியது.

நான் இப்போது அந்த தட்டில் இருந்து சிறிது கொத்து புரோட்டாவை எடுத்து என் இலையில் வைத்துக்கொண்டேன். மொத்தத்தையும் எடுத்து இலையில் கொட்டிவிடாமல், சிறிது சிறிதாக எடுத்து நமக்கு நாமே பறிமாறிக்கொள்வதில் ஒரு சந்தோஷம் உள்ளது. எடுத்து வைத்து கொண்ட கொத்து புரோட்டாவை தொட்டு பார்க்கிறேன். மிருதுவான அதன் ஸ்பரிசம் என்னுள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதற்குள் ஒளிந்து கொண்டிருந்த தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்ற காய்கறி, தாவர வகைகள் மெல்ல என் கண்களுக்கு புலப்பட்டது. கூடவே, முட்டையின் பாகங்களும் தெரிந்தது. இவை அனைத்தும், பிய்த்து போடப்பட்ட அந்த புரோட்டாவுடன் ஒட்டி ஒன்றிணைந்திருந்தது. பிய்த்து போடப்பட்ட புரோட்டாவின் காயத்திற்கு அவை மருந்திடுவதாக எனக்கு தோன்றியது.

கொத்து புரோட்டாவை கலைத்து போட, உள்ளிருந்து மெல்லிய ஆவி கிளம்பியது. மனிதன் தான் இறந்ததற்கு பிறகு ஆவியாவான் என்ற நமது தவறான புரிதலை அது எனக்கு உணர்த்தியது. நமக்கு மட்டுமா உயிர் இருக்கிறது? இதோ, இந்த முட்டைக்கு இருக்காதா? தக்காளிக்கு இருக்காதா? புரோட்டாவாக இருக்கும், மைதாவாக இருந்த, கோதுமையாக வளர்ந்த இந்த பயிரும், நிலத்தில் இருந்து நீரை பருகி, நம்முடன் வளர்ந்தது தானே?

முட்டை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருகிறது. முட்டைகள் அழகானவை. அதன் வடிவம் நமக்கு இவ்வுலகின் வடிவத்தை உணர்த்துபவை. என் கையில் இருக்கும் கொத்து புரோட்டாவில் ஒட்டியிருக்கும் முட்டை எங்கிருந்து வந்தது? அதன் தாய் யார்? தான் போட்ட முட்டை, புரோட்டாவிற்குள் கொலை செய்யப்பட்ட சோகம் அதற்கு தெரியுமா?

ஒருவேளை, அந்த தாயும் கொலை செய்யப்பட்டிருக்கலாம். சிக்கன் சிக்ஸ்டி பைவ் ஆக்கப்பட்டிருக்கலாம். இதோ, என் எதிரே பக்கத்து டேபிளில், ஒரு ப்ளேட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் தந்தூரியாக கூட அது இருக்கலாம். அந்த தந்தூரி சிக்கன், சில இடங்களில் சிவந்தும், சில இடங்களில் கருகியும் இருந்தது. அந்த சிவப்பு அதன் மேல் எழுப்பப்பட்ட வன்முறையையும், அந்த கறுப்பு அதனால் உண்டான சோகத்தையும் குறிப்பதாக இருந்தது. அதற்குள், அந்த சிக்கனை வாங்கியவர், நான் பார்ப்பதை உணர்ந்து, அந்த தட்டை என் பார்வையில் படாதவாறு தள்ளி வைத்துக்கொண்டார்.

அவரின் இந்த செய்கை எனக்கு நான் வந்த நோக்கத்தை ஞாபகப்படுத்தியது. இந்நேரத்தில், என் இலையில் இருந்த புரோட்டா சிதறல்கள் ஆறியிருந்தது. புரோட்டா வட இந்திய உணவு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முகலாய படையெடுப்பின் மூலம் இந்திய பிரதேசத்திற்குள் அறிமுகமான உணவு இது. புரோட்டா பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து நம்மிடம் வந்திருக்கிறது. அதனிடம், எந்த முகலாய பேரரசர் இதை சொல்லி அனுப்பினார்?

பஞ்சாப்பில் உருவான மைதாவும், பெல்லாரியில் விளைந்த வெங்காயமும், நாமக்கல்லில் போடப்பட்ட முட்டையும் இங்கே என் இலையில் சங்கமித்திருக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு இந்தியனின் பசியை நீக்க, ஒன்றிணைந்த இந்திய ஒருமைப்பாடா? அல்லது, வேறுபாடு ஏதுமின்றி இந்தியவெங்கும் வியாபித்திருக்கும் வன்முறை கலாச்சாரமா?

திடீரென என் செவிகளை வந்து அடித்தது, அந்த பருமனான வார்த்தைகள்.

“ஒரு கொத்து புரோட்டாவை வாங்கிட்டு, ஒன்றரை மணி நேரமா யாருய்யா அது சும்மாவே பார்த்துட்டு இருக்குறது?”

என் இலை வரை வந்திருந்த வன்முறை, இப்பொழுது என் மீதே பாய்ந்தது. என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொத்து புரோட்டா, ஒரு அற்புதம். அதை நிமிடங்களில் ஆளுவதை நான் விரும்பவில்லை. அதற்குள் இருக்கும் அதிசயங்கள் எண்ணற்றவை. அதன் அனுபவத்தை, சுதந்திரமான இடமும் சாவகாசமான நேரமும் இல்லாவிட்டால் முழுமையாக அனுபவிக்க முடியாது. அதனால்...

கொத்து புரோட்டாவை பார்சல் கட்ட சொல்லி, வீட்டிற்கு சென்று யோசித்துக்கொண்டே சாப்பிட கிளம்பினேன்.

.

Friday, April 2, 2010

பையா

முதல்ல எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த படத்துக்கு ஏன் ‘பையா’ன்னு பேரு வச்சாங்க? இப்படி வச்சதுக்காகவே, “அவன யாருன்னு நினைச்சுக்கிட்ட... பையா!”, அப்படின்னு ஏதாச்சும் பன்ச் வசனம் இருக்கும்’ன்னு நினைச்சேன். இல்ல.
இது ஒரு யதார்த்தமான தமிழ் சினிமா. ஆம். ஹீரோவுக்கு ஹீரோயினை பார்த்தவுடனே, லவ் வந்து விடுகிறது. நம்ம பயலுகளுக்கும் அப்படித்தான். ஹீரோயினுக்கு கடைசி வரைக்கும் லவ் வரல. நம்ம பொண்ணுங்களுக்கு அப்படித்தான். கடைசில, ஹீரோயின் ஒரு பெரிய வீட்டுக்குள்ள போகுது. சந்தோஷமா பையனுக்கு டாட்டா காட்டிட்டு. உள்ள போனா, பொண்ண யாரும் மதிக்கல. என்ன பண்ணும்? வெளியே வந்துடுது. அப்புறம் வேற வழியே தெரியாததால, ஹீரோ மேல லவ் வந்துடுது. இவ்ளோ, துணிச்சலா காதலை சொல்ல முடியுமா?

படம் பெங்களூரில் ஆரம்பிக்கிறது. என்னை சுற்றி படம் பார்த்தவர்கள், இது அந்த இடம், இது இந்த படம் என்று படத்தை விட்டு, ஊர் சுற்றி பார்க்க கிளம்பி விட்டார்கள். இதில் ஒரு ஜோடி, படத்தில் காட்டியது எந்த மால்? என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள்.

படத்தின் கலகலப்பு, கார் கிளம்பியவுடன் தொடங்கி, கார் நின்றவுடன் முடிந்துவிடுகிறது. ரன்னில் லிங்குசாமி பல்சருக்கு விளம்பரம் பண்ணியது போல், இதில் லான்சர். அந்த காரை ஒரு கதாபாத்திரமாக ஆக்கியிருக்கியிருக்கலாம். இந்தியாவின் உள்கட்டமைப்பு முன்னேற்றத்தை (ரோட்டை) படமெங்கும் காட்டுகிறார்கள்.

லிங்குசாமி சொல்லுவார், “நான் தியேட்டரில் போய், எப்படி படம் பார்க்க விரும்புவேனோ, அப்படித்தான் படம் எடுப்பேன்”. எல்லா இயக்குனர்களுமே, அப்படித்தான் நினைப்பார்கள். அதனால், இவருடைய கவனம், சீன் பை சீனுக்கு தான் இருக்கும் என நினைக்கிறேன். சில காட்சிகளுக்கு, நல்ல ரெஸ்பான்ஸ். இப்படி முழு கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், சீன்களுடன் பாட்டு, பைட் சேர்த்து ‘மசாலா’ படமெடுப்பதால் மொத்த படமாக முழு திருப்தி கிடையாது.

கார்த்தி ஜீன்ஸ், டீ-சர்ட் போட்டு ப்ரொமோஷன் வாங்கியிருக்கிறார். மற்றபடி, அதே போல் முழிக்கிறார். சிரிக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் விவாதத்தின் போது, பறந்து பறந்து சண்டை போடுவதை தப்பாக சொல்லாதீங்க என்றார். இதில் அவரும் பறந்து, பறந்து சண்டை போட்டு ஆக்‌ஷன் ஹீரோ லிஸ்டில் இணைந்துள்ளார். மூன்று வருட இடைவெளி என்றில்லாமல், இம்முறை மூன்று மாத இடைவெளியில் அவருடைய படம் வந்திருக்கிறது.

தமன்னாவின் படங்களை சன் பிக்சர்ஸ் கண்டிப்பாக வாங்கும் என்று சக்சேனா சொல்லியிருக்கிறார். (அப்ப, சுறாவை விஜய்காக வாங்கவில்லையா?) அவர் வாங்காவிட்டாலும், மற்ற ’நிதி’கள் வாங்கிவிடுவார்கள் போல. தமன்னாவின் ஸ்டார் வேல்யூ கூடிக்கொண்டே போகிறது. தூத்துக்குடியில் அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து, தியேட்டர் முன்பு கட்-அவுட் வைத்திருப்பதாக நண்பன் சொன்னான்.

முதல் பாதி முழுக்க, கார்த்தி பேசும் வசனங்கள் தான் காமெடி. இரண்டாம் பாதியில், ஜெகன் வருகிறார். மும்பையில் ஜெகன் பேசும் ஹிந்தி, ஹி... ஹி... படத்தில் கார்த்தியின் நண்பர்கள், ஒரு பெண் உள்பட, ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். என்ன விஷயம்’ன்னு புரியல. கார்த்தி, இண்டர்வியூக்கு ஒரு சாப்ட்வேர் கம்பெனி செல்வார். ஐய்யய்யோ! லாஜிக் கண்டுபிடிக்க, சாப்ட்வேர் விமர்சகர்கள் கிளம்பிவிடுவார்களே என்று நினைப்பதற்குள், நல்லவேளை, காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

லிங்குசாமி, எஸ்.ராமகிருஷ்ணனை கைவிட்டு விட்டு, வசனத்திற்கு தன் முதல் பட வசனகர்த்தா பிருந்தாசாரதிவை சேர்த்துள்ளார். எளிமையாக இருந்தாலும், ஆங்காங்கே கவனம் பெறுகிறது. லிங்குசாமி, கூடிய விரைவில் ஹிந்தி படமெடுப்பார் என நம்பலாம். அதற்கான, எல்லா தகுதிகளும் தெரிகிறது.

யுவன் பாடிய ”என் காதல் சொல்ல நேரமில்லை” - சூப்பர். அவர் பாடியதில், ரொம்ப பிடித்த பாடலாகிவிட்டது.

கண்ணுக்கு குளிர்ச்சியா செட் போடுவதில் ராஜீவனை மிஞ்ச முடியாது. இதில் நிலவொளியுடன் கூடிய அருவி செட் ஒண்ணு போட்டு இருக்கிறார், பாருங்க! அட்டகாசம்.

பையாவின் கார் பயணம் சந்தோஷமாக தொடங்கினாலும், முடிவில் தலைவலியை கொடுப்பதும் உண்மை.

.

Thursday, April 1, 2010

வைரமுத்துவின் ‘பாட்டு’ டைரி

பாடல்களை ரசிக்கும் அனைவருக்குமே, பாடல்கள் உருவான விதம், பாடல்களுடனான அனுபவம் பற்றிய கட்டுரைகளும் பிடிக்கும். உதாரணத்திற்கு, இந்த தளத்தில் நண்பர் மகேந்திரன் எழுதிய இசை பக்கங்களை சொல்லலாம். அது ஒரு இசை ரசிகனின் பார்வையில் எழுதப்பட்டவை.

சமீபத்தில் பாடலாசிரியர் யுகபாரதியும், அவரது வலைத்தளத்தில் தான் எழுதிய பாடல்கள் உருவான அனுபவங்களை ‘முன்னாள் சொற்கள்’ என்ற தலைப்பில் எழுதி வருகிறார்.

அதுபோல், வைரமுத்து அவர் எழுதிய பின்னணிப் பாடல்களின் பின்னணி பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தான் - நேற்றுப் போட்ட கோலம் (1985).---

’சின்ன வீடு’ பட பாடல் பதிவின் போது, பாக்யராஜிடம் இளையராஜா கூறியது,

“நம்முடைய நாட்டுப்பாடல்களும், மேற்கத்திய இசையும் செவிகளுக்கு வேறு வேறாய்த் தோன்றிய போதிலும் ஏதோ ஓர் புள்ளியில் இரண்டும் சந்தித்துக் கொள்கின்றன. அங்கே அவை இரண்டும் ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. மேற்கத்திய இசையின் பாட்டை நம்முடைய நாட்டுப்புற பாணிக்கு இறக்குமதி செய்து நிறம் மாற்றினால், அது ஒரு வித்தியாசமான கலவையாக இருக்கும். அதுவே காதல் பாடலென்றால், மாறுதலாக இருக்கும்”

அப்படி மெட்டமைத்ததுதான் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’.

இந்த பாடல் எழுதும்போது தான், பாக்யராஜின் பாடல் உருவாக்கத் திறன் பற்றி தெரிந்து கொண்டார் வைரமுத்து.

இளையராஜாவிடமிருந்து மெட்டுக்களை வாங்கிச் சென்றவுடன் அவர் அவற்றை ஆறப்போட்டுவிடுவதில்லை. மனசுக்குள் ஊறப்போட்டு விடுகிறார். ஏறக்குறைய எல்லா மெட்டுக்களுக்கும் அவரே எழுதிப் பார்த்தும் விடுகிறார்.

இந்த பாடலில் “முத்தம் தரவே முகமே தருமே” என்று வைரமுத்து எழுதியிருந்த இடத்தில், பாக்யராஜ் “அந்தப்புரமே வரமே தருமே” என்று எழுதி வைத்திருந்தார். ஏனோ, அவர் எழுதிய வரிகள் வேண்டும் என்று பாக்யராஜுக்கு தோன்ற, வைரமுத்துவும் சம்மதித்து, அந்த வரியை மாற்றியிருக்கிறார்.

---

சிவாஜி நடித்த சாதனை படம். அந்த படத்தில் வரும் ‘அன்பே அன்பே’ பாடலில் இருக்கும் வினோதம் என்று இவ்வாறு கூறுகிறார்.

எனக்கு இசை தெரியாது. சுரஞானம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.

ஆனால் இந்த பாடலின் ஒலிப்பதிவின்போது இளையராஜா அவர்கள் சொன்ன சில செய்திகள் என்னை வியப்பின் விளிம்பிற்குத் தள்ளின.

இந்த பாடலின் முதல் சரணத்தில் ’பாவை செய்த பாவம் என்ன’ என்று எழுதியிருக்கிறேன். அவரது சுரம் ‘பா’ எனத் தொடங்குகிறது. என்னை அறியாமல் அதே இடத்தில் நானும் ‘பா’ என்று தொடங்கியிருக்கிறேன்.

’சாவை இன்னும் கொஞ்சநேரம் தள்ளிப்போடக்கூடாதோ’ என்ற வரியில் அவரது சுரம் ‘சா’ என தொடங்குகிறது. நானும் என்னையறியாமல் ‘சா’வென்று தொடங்கித்தான் எழுதியிருக்கிறேன்.

’தள்ளிப்போடக் கூடாதோ’ என்ற இடத்தில் இயல்பாகவே தாளம் தள்ளி வருகிறது. நான் இதனை அறியாமலேயே ’தள்ளிப்போடக் கூடாதோ’ என்று எழுதியிருக்கிறேன்.

இந்த ஒப்புமைகளையெல்லாம் இளையராஜா அவர்கள் எனக்குச் சுட்டிக் காட்டியபோது, என்னால் நம்பவே முடியவில்லை. நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். காரணம் தெரியாமல் என் கண்கள் பனிக்கின்றன.


---

ஒரு பாடலை பற்றி இப்படி படித்துவிட்டு, திரும்பவும் அந்த பாடலை கேட்கும்போது, கேட்ட பாடலாக இருந்தாலும், இன்னும் ப்ரெஷாக, இன்னமும் இனிமையாக இருக்கிறது. பிடித்த பாடல், மேலும் பிடித்து போகிறது.

ஆனால், நான் கேட்டிராத சில பாடல்கள் பற்றிய வைரமுத்துவின் எண்ணவோட்டத்தை, நான் அறிந்திராத காரணத்தால் என்னால் முழுமையாக உணரமுடியவில்லை.

மொத்தம் 25 பாடல்களை பற்றி 141 பக்கங்களில் சொல்லியிருக்கிறார். பெரும்பாலானவை, இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள். எம்.எஸ்.வி, சங்கர்கணேஷ், கங்கைஅமரனுக்கு எழுதிய பாடல்களும் உண்டு.

இதை அவர் எழுதிய காலம், ரஹ்மான் வருகைக்கு முந்திய காலம் என்பதால், ரஹ்மான் பாடல்கள் பற்றிய குறிப்புகள் இதில் இல்லை என்பது என்னளவில் இன்னொரு குறை. இதற்கு பிறகு, இது போல் ஏதும் வைரமுத்து எழுதியிருக்கிறாரா?

ஆனால், ரஹ்மான் இதுபோல் பாடல் பதிவு அனுபவங்களை புகைப்பட புத்தகமாக (Coffee Table Book) போட போவதாக கேள்விப்பட்டேன். அதில் பார்த்துக்கொள்ளலாம்.

.