Monday, April 19, 2010

NH - 7

ரோடு போடும் சமயங்களில், சிறு வயதில் நடந்து சென்றாலும் சரி, சைக்கிளில் சென்றாலும் சரி, சிரமமாக இருக்கும். எல்லோருக்கும் தொந்தரவு கொடுத்தபடி, இதெல்லாம் எதற்கு என்றவாறு பார்த்தபடி ஓரத்தில் போவேன். கல்லு, மண்ணு, ஜல்லி, தார் என்று மாற்றி மாற்றி ஒரு அடி உயரத்திற்கு போடுவதை பார்க்கும்போது, இப்படி மெனக்கெடுவது அவசியமா என தோன்றும். சிவில் இன்ஜினியரிங்கில் விதவிதமான சாலைகளை பற்றி படித்தபோதுக் கூட, இது தோன்றுவதுண்டு. மனிதனோ, வாகனமோ போவதற்கு ஒரு பாதை. அதற்கு ஏன் இவ்வளவு டகால்டி வேலைகள் என்று.

---

முன்பு தென் தமிழகத்தில் இருந்து ரயிலில் பெங்களூர் வரவேண்டும் என்றால் பிற்பகலில் கிளம்பவேண்டும். இப்பொழுதும் அப்படித்தான். சாயங்காலம் கிளம்பினால், காலை வந்து சேருவோம். அதேப்போல், பெங்களூரில் இருந்து இரவு கிளம்பினால், மறுநாள் மதியம் வந்து சேருவோம். பெரும்பாலும், சாலைவழி பயணம் இதை விட அதிக நேரம் எடுப்பதாகத்தான் இருக்கும். இப்படி நேரம் எடுப்பதால், ஊருக்கு போய் வருவது பெரிய விஷயமாக, பெரும் திட்டத்திற்குரிய விஷயமாக இருக்கும்.

சமீபகாலங்களில், தொடுக்கப்படும் நெடுஞ்சாலை இணைப்புக்கள், பயணத்திட்டங்களை எளிமையாக்கி இருக்கிறது.

---

சராசரி மைலெஜ் கொடுக்கும் காரில் நாலு பேர் பயணம் செய்தால், ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கான செலவைவிட கொஞ்சமே அதிகம் ஆகும். நான்கு வழி சாலையில், நீங்கள் ஆக்ஸிலெட்டரை அழுத்தி மிதிக்காவிட்டாலும், வண்டி தானே நூறில் செல்லும். எதிரில் வண்டி வரும் பிரச்சினையும், அதற்கான ஆழ்ந்த கவனமும் எச்சரிக்கையுணர்வும் தொடர்ச்சியாக தேவையில்லை. முன்னால் செல்லும் வண்டியை முந்தினாலும், முந்தும் வண்டிக்கு வழி விட்டாலும் போதும். எண்பதில் இருந்து நூறு கிலோமீட்டர் மணி வேகத்தில் சென்றாலும், அதிகாலை பெங்களூரில் கிளம்பி, மதிய உணவிற்கு திருநெல்வேலிக்கோ, தூத்துக்குடிக்கோ சென்று விடலாம்.

மதிய உணவிற்கு என்ன வேண்டுமென்று போகும்போது சொன்னால் போதும். போய் சேரும்போது, வீட்டில் லஞ்ச் ரெடியாக இருக்கும்.

போகும் போது, காலையிலேயே கிளம்புவது போல், திரும்பி வரும்போது, மதியம் கிளம்பலாம். வீட்டில் சண்டே ஸ்பெஷல் சிக்கனோ, மட்டனோ ஒரு கட்டு கட்டுவிட்டு, கூடவே ஒரு பார்சலும் கட்டிவிட்டு வந்தால், இரவு ஒன்பது-பத்து மணிக்கு வீடு திரும்பவும், கட்டிக்கொண்டு வந்த பார்சலை சாப்பிட்டுவிட்டு கவுந்தடித்து உறங்கவும் சரியாக இருக்கும்.பெங்களூர் - சென்னை, திருச்சி - மதுரை, மதுரை - கோவை என அனைத்து முக்கிய வழித்தடங்களும் வேக வழித்தடங்களாகிவிட்டது.

---

பெங்களூரில் இருந்து மதுரைக்கு சாலை வழியாக சென்றால் 210 ரூபாய் ஆகிறது. பஸ் டிக்கெட்டா என்றால் இல்லை. சாலையை பயன்படுத்த மட்டும் சுங்க சாவடிகளில் 210 ரூபாய் பிடுங்கிறார்கள். அத்திப்பள்ளி (20), கிருஷ்ணகிரி (25), தருமபுரி (45), சேலம் (29), வேலஞ்செட்டியூர் (54), கொடை ரோடு (37) என்று காருக்கு மதுரை வரை செமயாக வசூல் செய்கிறார்கள். அதற்கு பிறகு, எங்கும் இல்லை. இருந்த டோல் கேட்களும் நீக்கப்பட்ட தடயங்கள் சில இடங்களில் தெரிகிறது.

ஒரு விஷயம் புரியவில்லை. எதற்கு இந்த வரி கட்டுகிறோம் என்றால், இந்த சாலைகளை போட்டது தனியார் நிறுவனங்கள். அவர்கள் போட்ட காசை எடுப்பதற்கு, நாம் பணம் செலுத்துகிறோம் என்கிறார்கள். அப்புறம் எதற்கு இந்த சாலைகளில் ஆங்காங்கே மன்மோகன் சிங், சோனியா படங்களை வைத்திருக்கிறார்கள்?. போனமுறை, வாஜ்பாய். இதில் என்ன சாதனை இருக்கிறது? ரோடு போட்டு, கீழே லைன் போடுகிறார்களோ இல்லையோ, மறக்காமல் இவர்களது படத்தை எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறார்கள். இப்படி படம் காட்டுவதற்காகவே, கொஞ்சம் மானியமோ, பங்கோ கொடுத்தாலும் கொடுத்திருப்பார்கள்.

---

கல்லூரி படிக்கும் போது, மும்பை டூர் போனபோது, லோனாவாலா ஹைவேயில் சென்றோம். எங்கேயும் நிறுத்தக்கூடாது, எண்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்லவேண்டும், ஜீப்பில் தொடர்ந்து கண்காணிக்கும் ஹைவே பேட்ரோல் என ஆச்சரியமாக இருந்தது.

இந்திய சாலைகளில் எண்பது கிலோமீட்டர்தான் அதிகாரபூர்வ அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் என நினைத்திருந்தேன். இப்ப, நம்ம ஊருக்குள்ளயே, 100 கிலோமீட்டர் என்ற போர்டுகளை பார்க்கும் போது, இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அதைவிட, ஆச்சரியம். இந்த சாலையின் நடுவில், எதையும் கண்டுக்கொள்ளாமல், தைரியமாக, சைக்கிளில் எதிர்திசையில் வரும் நம்மூர் பெரியவர்கள்.

---

திரும்பி வரும்போது, மதுரை வரை சென்னைக்கு போகவும் இதுதான் வழி என்றாலும், வழி காட்டும் போர்டுகளில் எல்லாம் மதுரையும், பெங்களூருமே இருந்தது. சென்னை சொற்ப இடங்களில் தான். காரணம், இது NH - 7.இந்தியாவில் NH - 7 நெடுஞ்சாலை ஸ்பெஷலானது. இது தான் இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை. வாரணாசியில் இருந்து கன்னியாக்குமரி வரை செல்லும் சாலை.


---

லிங்குசாமி, ’பையா’ படத்தில் இன்னொன்று செய்திருக்கலாம். பெங்களூரில் இருந்து மும்பை சென்றதற்கு பதிலாக, கன்னியாக்குமரி சென்றிருக்கலாம். சேலம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி என்று போகும் ரூட்டிற்கு ஏற்ப கமகமவென மசாலா சேர்ந்திருக்கும்.

ம். கொஞ்ச நாள் கழிச்சு, வேற யாராச்சும் ட்ரை பண்ணுங்க’ப்பா.

---

பை-பாஸ் சாலைகள் எல்லா இடங்களில் இருந்தாலும், ரோடு போட்டு ரொம்ப நாள் ஆன காரணத்தாலோ என்னவோ, சாலைகள் பை-பாஸ் போல் தெரியவில்லை. உதாரணத்திற்கு, சேலம். மதுரையிலும், பழைய பை-பாஸ் சாலை இப்படித்தான். ஜன நெரிசலொடு இருக்கும். தற்போது பரவாயில்லை. கூடியவிரைவில், ஊர் தற்போதைய பை-பாஸ் சாலைவரை விரிவடைந்துவிடும் என நினைக்கிறேன்.

பெங்களூர் அவுட்டர் ரிங் ரோடும் அது போலத்தான். பயன்பாட்டிற்கு வந்து சில காலத்திலேயே, இன்னர் ரிங் ரோடாக மாறிவிட்டது.

---

’நோ ப்ராப்ளம்’ என்றொரு சிறுகதை. சுஜாதா எழுதியது. ஜெர்மனி சாலை ஒன்றில் பயணிக்கும் கதை. அந்த சாலையை பற்றி, அங்கு இருக்கும் வசதிகள் பற்றி, சாலையில் ஓடும் காரைப் பற்றி, மறக்காமல் காரை ஓட்டும் பெண்ணை பற்றி எல்லாம் சுஜாதா விவரித்து எழுதியிருப்பார்.

பயணத்தின் போது, காரில் செல்பவர்கள் வழியில் ஒரு விபத்தை பார்ப்பார்கள். அந்த இடத்தை நெருங்கும் முன்பே, விபத்தை பற்றிய தகவல்கள், இவர்களுடைய காருக்கு வந்துவிடும். இவர்கள் அந்த இடத்தை நெருங்கும்போது, ஒரு ஹெலிகாப்டர் நொறுங்கிய காரை அள்ளிக்கொண்டு கிளம்பும். பத்தே நிமிடத்தில், ஒரு துப்புரவு வண்டி அந்த இடத்தை துடைத்து தள்ளிவிடும். நிமிடங்களில் விபத்து நடந்த சுவடே இருக்காது.

இந்த கதையை அவர் எழுதியது, 70களில் இறுதியில். இது முழுமையான கற்பனை கதையாகவோ, விஞ்ஞான புனைவாகவோ இருக்காது என நினைக்கிறேன்.

இன்னும் இங்கு அந்தளவுக்கு வரவில்லையே என வருந்துவதைவிட, இப்பவாவது, இந்தளவுக்காவது வந்திருக்கிறதே என்று சந்தோஷம்தான் படவேண்டியிருக்கிறது.

.

11 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்றால் 9 ம‌ணி நேர‌த்தில் சென்று விட‌ முடிகிற‌து.திருச்சியில் ம‌ட்டும் ஒரு பால‌ம் வேலை ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து.அதுவும் முடிந்து விட்டால் எந்த‌ ஊருக்குள்ளும் செல்ல‌ வேண்டிய‌தில்லை.பைபாஸிலேயே செல்ல‌லாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உண்மையிலேயே என்னால் NH-7 மறக்க முடியாது.எங்கள் கல்லூரி NH-7 ரோட்டில்தான் உள்ளது. எத்தனை தடவை Strike என்று ரோட்டில் உக்கார்ந்திருப்போம். எத்தனை பஸ்சில் கல்லை விட்டு எறிந்திருப்போம். ஹும் அது ஒரு கனா காலம்

arivuindia said...

saravanan,
Writer Pa. Ragavan has mentioned about your food favorites(entha ooril enna saappidalaam) in his blog….
-Arivu

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான "NH - 7" பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

சரவணகுமரன் said...

ஓ அப்படியா, கரிசல்காரன்? சென்னையில் இருந்து சென்றதில்லை.

வருகைக்கு நன்றி.

சரவணகுமரன் said...

பஸ்ஸை கல்லெறிந்தது ஒரு கனாக்காலமா? இதெல்லாம் ஓவரு, ரமேஷ்...

சரவணகுமரன் said...

நன்றி அறிவு... நீங்கள் சொன்னதற்கு பிறகு தான் பார்த்தேன். நன்றி.

சரவணகுமரன் said...

நன்றி பனித்துளி சங்கர்... வாங்க வாங்க...

DHANS said...

now we can reach chennai trichy in 4 hours, the roads are better than chennai bangalore (straight mostly had no curves like bangalore road)

toll= 25+25+51+35+35

சரவணகுமரன் said...

DHANS,

நாலு மணி நேரமா? பறப்பீங்க போல!

Anonymous said...

w\

நானும் பெங்களூரிலிருந்து விருதுநகருக்கு தீபாவளிக்கு போறதா இருக்கோம். ஹுண்டாய் ஐ10 காரில். காலை 7.00 மணிக்கு கிளம்பினால் 3.00 மணிக்கு போய்ச்சேரலாமல்லவா .. ?

நான் ரொம்ப நிதானம். மேலும் வழியில் ருசியான உணவு கிடைக்குமிடங்கள் பற்றிய தகவல் கிடைத்தால் நலம்

எப்பவுமே இந்த பஸ் காரர்கள் நிறுத்தும் இடங்களிலேயே வேறு வழி இல்லாமல் கொட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா .. நம் காரில் செல்லும் போது நம் இஷ்டம் தானே .. !

- கார்த்திகேயன்