Tuesday, December 27, 2016

பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்


பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, நண்பரொருவர் ஒரு திங்கள் கிழமையின் மதிய உணவுவேளையில் சொன்ன விஷயம் இது. வாரயிறுதியில் ஓசூரில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். நீள வரிசை. பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது, பக்தர் குழுக்கள். ஒரு பெரிய கதவைக் கடக்கும் போது, நமது நண்பர் அந்தக் கதவில் மாட்டியிருந்த ஒரு உலோக வளையத்தைத் தட்டியவாறு சென்றிருக்கிறார். அதைப் பார்த்த அவரது மனைவியும் அதை ஒரு தட்டுத் தட்ட, பின் தொடர்ந்த நண்பர் குடும்பமும் அந்தச் செய்கையைத் தொடர, அந்த முழு வரிசைக்கும் அது வழக்கமாகி விட்டது. பிறகு, சாமி கும்பிட்டு விட்டு திரும்ப வரும் போது கவனித்த போதும், ஒன்றிரண்டு பேர்கள் அதைத் தட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். நண்பருக்கே சந்தேகம் வந்து விட்டது. நமது செய்கையே, இக்கோவிலின் வழக்கம் தானோ? என்று.
இதில் எவ்வளவு கற்பனை கலந்திருக்கிறது என்ற ஆய்விற்குள் நுழையாமல், ஒன்று புரிந்துக் கொள்ளலாம். இப்படி யாரோ ஒருவர் ஆங்காங்கே ஆரம்பித்து வைக்கும் கிறுக்குத்தனத்தைப் பின் தொடர, ஏதோ ஒருவகை நம்பிக்கை அல்லது உணர்வு காரணமாகிறது.
சமீபத்தில் மினசோட்டாவில் இருக்கும் வெர்மிலன் (Vermillion Falls) நீர் வீழ்ச்சியைக் காணச் சென்றபொழுது , அங்கிருந்த பாலத்தில் மாட்டப்பட்டிருந்த பூட்டுகளைக் கண்டபொழுது, மனிதர்களின் இந்த உலகளாவிய உணர்வு பூர்வ 'கிறுக்குத்துவ' நம்பிக்கைக்கு இன்னுமொரு சான்று கிடைத்தது.
ஐரோப்பிய நாடுகளில் உருவான வழக்கம் இது. ஒரு பாலத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. "லவ் லாக்" என்ற பெயரில் காதலர்களாக இருப்பவர்கள், அவர்களது பெயரை ஒரு பூட்டில் எழுதி, அந்தப் பூட்டைப் பாலத்தின் ஏதோ ஒரு பகுதியில் மாட்டிவிட்டு, சாவியை எறிந்து விட வேண்டியது. அதாவது, சாவியைத் தேடிக் கண்டறிந்து, அந்தப் பூட்டைப் பிரித்தெடுக்க முடியாதது போல, அவர்களது காதலையும் பிரிக்க முடியாதாம்.
பாண்ட் டே ஆர்ட்ஸ் (Pont des Arts) எனும் பாலத்தில் ஆரம்பித்து, பாரிஸின் பல பாலங்கள், காதலர்களின் இச்செய்கையினால் பூட்டுகளால் சூழ்ந்து கிடக்கின்றன. நகரின் சில நிர்வாக அமைப்புகள், இச்செய்கைக்கு ஆதரவளித்து, காதல் பூட்டுக்கு வரவேற்பு கொடுத்து, சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர் நோக்கி காத்திருக்கின்றன. சுற்றுச்சூழல் குறித்தும், கட்டுமானப் பாதுகாப்பு குறித்தும் விவரமறிந்த, அக்கறையுடைய அமைப்புகள் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது, பூட்டுகளை உடைத்து எறிகின்றன. இருந்தும், பூட்டு ஆர்வலக் காதலர்கள் இப்பழக்கத்தை விடுவதாக இல்லை. பூட்டுகளைத் தொடர்ந்து போட்டு நிர்வாகத்தினரை டார்ச்சர் செய்து வருகிறார்கள்.
மினசோட்டா காதலர்கள் அந்தளவுக்கு மோசமானவர்கள் இல்லை. இதுவரை கொஞ்சம் பூட்டு தான் போட்டு இருக்கிறார்கள். இருந்தாலும், கவனிக்கத்தக்க அளவில் உள்ளது. நிலைமை எல்லை மீறும் போது, இங்கும் நிர்வாகத்தினர் களத்தில் இறங்க வேண்டிவரும்.
ஒரு பாலத்தை வடிவமைக்கும் போது, அதில் நடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், அதில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் தான், அது எவ்வளவு எடையைத் தாங்க வேண்டி வரும் என ஆராய்ந்து திட்டமிட்டுக் கட்டுவார்கள். போகிற போக்கைப் பார்த்தால், இம்மாதிரி பூட்டுகளையும் கணிக்க வேண்டிவரும் போலும்.

இதை முதலில் பார்த்த போது, நம்மூரில் சில கோவில்களில் இருக்கும் தொட்டில் மரம் நினைவுக்கு வந்தது. மரத்திற்குப் பக்கத்திலேயே தொட்டில் விற்பார்கள். மகான் கவுண்டமணி அந்தக் காலத்திலேயே வாழைப்பழ வியாபாரம் அதிகரிக்கக் கொடுத்த ஐடியா நினைவுக்கு வருகிறது. நல்லவேளை, இங்குப் பக்கத்தில் எங்கும் பூட்டுக்கடை இல்லை!!

.

Friday, September 23, 2016

தி லாஸ்ட் ஆங்க்லெட்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.காலப் புத்தகத்தில் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டி, ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சென்று பார்ப்போம். 1910 ஆம் வருடம். நெட்ஃப்ளிக்ஸ் இல்லா காலம். சினிமா என்றொரு பதமே, அப்பொழுது தான் உருவாகி இருந்தது. அனைத்துலக மக்களின் பொது மொழியான மௌன மொழியில் படங்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அப்போது இந்தியாவின் முதல் சினிமா வெளியாகி இருக்கவில்லை. அச்சமயம், மினியாபோலிஸில் சதர்ன் தியேட்டர் திறக்கப்பட்டு, மௌனப் படங்கள் திரையிடப்பட்டுக்கொண்டு இருந்தது.
இன்னும் பல பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டி, மின்சாரமில்லா காலத்திற்குச் செல்லலாம். தமிழ் மக்கள் வாழ்வில், அப்பொழுதே பழங்கலைகளில் ஒன்றான தெருக்கூத்து இருந்தது. தெருக்கூத்து, கோவிலில், ஊர்த் திடலில், தெருமுனையில் நடந்திட, அது எளிய மக்களுக்கான கலையாக இருந்தது. மக்களுக்குத் தேவையான கருத்துகள், கதையாக, பாட்டுடன், ஆடலுடன், வசனத்துடன் நாடகமாகப் பரப்பப்பட்டது.
சரி, இப்போது வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி தற்காலத்திற்கு வரலாம்.
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் பழமையான கலை, மினியாபோலிஸின் பழமையான அரங்கான சதர்ன் தியேட்டரில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, ஆங்கில வசனத்துடன், தமிழிசைப் பாடல் கலந்த புது வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது. ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தால், ‘தி லாஸ்ட் ஆங்க்லெட்’ (The Lost Anklet) என்னும் தெருக்கூத்து மேடையேற்றப்பட்டு, மினசோட்டா மக்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது எனலாம்.
தலைப்பே, இந்தத் தெருக்கூத்தின் கதையைச் சொல்லிவிடுமே!! ஆம், சிலப்பதிகாரத்தின் கதையே, இந்தத் தெருக்கூத்தின் கதை. மகிழ்வாகச் சென்று கொண்டிருக்கும் கண்ணகி-கோவலன் கதையில் தொடங்கும் தெருக்கூத்தை, கதை ஓட்டத்திற்கு ஏற்ற உணர்வுகளுடன் விவரித்துச் செல்கிறார் கட்டியங்காரன். சேரன் செங்குட்டுவன், கரிகாலச்சோழன், நெடுஞ்செழிய பாண்டியன் எனத் தமிழ் மண்ணை ஆண்ட மூன்று மன்னர்களுக்கும் இந்தக் கதையில் பங்குண்டு. மாதவியின் அழகிலும், நடனத்திலும் மயங்கிய கோவலன், கண்ணகியை மறந்து சில காலம் மாதவியுடன் தங்க, பிறிதொரு சந்தர்ப்பத்தில், மாதவியுடன் மனஸ்தாபம் ஏற்பட, கண்ணகியின் நினைவு வர, கண்ணகியுடன் திரும்பிச் சென்று சேருகிறார். தான் சேர்த்த பொருட்களை இழந்த காரணத்தால், கண்ணகியும், கோவலனும், கௌந்தி அடிகள் துணையுடன் பொருள் தேடி மதுரை வருகிறார்கள். வந்த இடத்தில் கோவலன் சிலம்பை விற்கச் செல்ல, அங்கு, பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு, அவையில் பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் உயிரிழக்க நேரிடுகிறது. அதனால் சோகம் கொண்டு ஆத்திரமுற்ற கண்ணகி, அவையில் மன்னனுடன் வாக்குவாதம் புரிந்து, தன் சிலம்பை எறிந்து, மன்னனின் தவறை நிரூபித்து, மதுரையை எரிக்கிறார்.
இந்தக் கதையை, ஒரு மணி நேர தெருக்கூத்தாக அழகாகச் சுருக்கி, அருமையான நடனத்துடன், தொன்மையான பாடல், இசையுடன் வழங்கினார்கள் இந்தக் கலைஞர்கள்.
கண்ணகியாக லக்சண்யா
கோவலனாக குமரகுரு
மாதவியாக மீனாக்ஷி
கௌந்தி அடிகளாக ஜானிஸ்
நெடுஞ்செழியனாக நாகச் சாய்
கோப்பெருந்தேவியாக யாமினி
செங்குட்டுவனாக வேல்முருகன்
கரிகாலனாக முகமது ஆசிஃப்
பொற்கொல்லனாக சுரேஷ்
கட்டியங்காரனாக ஹனிபால்
ஆகியோர் தாங்கள் ஏற்றிருந்த வேடங்களுக்கு உயிருட்டினர்.
நாடகக் கலையில் நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் வாய்ப்பில்லா விட்டாலும், ஒவ்வொருவரும் தங்கள் தேர்ந்த திறமையை இந்தத் தெருக்கூத்தில் காட்டினர். 165 பேர் உட்காரக்கூடிய இந்த அரங்கில், கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகருக்கும் கேட்கும் வகையில், மைக் இல்லாமல் வசனம் பேச வேண்டும். அதற்கேற்ற வகையில், உணர்வுகளை முகத்தில் கொஞ்சம் மிகையாக வெளிப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும், நமது கலைஞர்கள் சிறப்பாகச் செய்தார்கள்.
இது தவிர, வந்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் சிலப்பதிகாரக் கதை புரியும் வண்ணம் வசனம் ஆங்கிலத்திலும், நமது பாட்டிசை தெரிந்திடும் வண்ணம் பாடல்கள் தமிழிலும் அமைத்து, இந்தத் தெருக்கூத்து ஒரு நவீன ஃப்யூஷன் வடிவத்தில் அமைந்திருந்தது ஒரு சிறப்பு. இந்த வடிவத்திற்குள் தங்களை அழகாகப் புகுத்திக்கொண்ட இந்தக் கலைஞர்கள், பார்வையாளர்களின் கவனத்திற்கு எவ்விதக் குழப்பமும் ஏற்பட்டு விடாதவாறு, தங்களது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, சிலரது பங்களிப்பைப் பாராட்டிவிட வேண்டும். இறுதிக் காட்சியில், லக்ஷண்யாவின் ஆவேச நடிப்பு, வரும் காட்சிகள் எங்கும் குமரகுருவின் நளினமான உடல்மொழி, நடனக் கலைஞர் மீனாக்ஷியின் நவரச முகபாவங்களுடன் கூடிய நாட்டியம், சுரேஷின் கணீர் குரல் மற்றும் ஹனிபாலின் நகைச்சுவை கலந்த வர்ணனைகள் வேடிக்கை நடிப்பு ஆகிய அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. இவை தவிர, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, இசை, பாடல்கள், ஒலி, ஒளி அமைப்புகள், கலை இயக்கம் என இந்தத் தெருக்கூத்துக்காக, மேடையின் பின்னால் இருந்து பங்களித்தவர்களும் தங்கள் பணியினைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்தத் தெருக்கூத்து முடிந்த பின்பு, வந்திருந்த பார்வையாளர்கள் அங்கிருந்த கலைஞர்களைப் பாராட்டியபடி, கை தட்டிக் கொண்டு அரங்கை விட்டுக் கலைந்தனர். முழு வண்ணமயமான ஒப்பனையுடன் இருந்த இந்தக் கலைஞர்களுடன், சிலர் ஆர்வத்துடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர். பிற மக்களும், ஒப்பனையுடன் சாலையில் நடந்து சென்ற நமது கலைஞர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே சென்றதைக் காண சுவாரஸ்யமாக இருந்தது.
மொத்தத்தில், இந்தத் தெருக்கூத்தைக் கண்ட பார்வையாளர்களுக்கு, இது ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும். இந்தக் காலத்தில், இந்த ஊரில், இப்படி ஒரு அனுபவத்தை அளித்த, இந்தத் தெருக்கூத்தை இயக்கிய சச்சிதானந்தம், வசனமெழுதிய சரவணன், இதற்கு உறுதுணையாக இருந்த மினசோட்டாத் தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்கள், மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் தன்னார்வலர்கள், பழமையான அமைப்புடன் சதர்ன் தியேட்டரைப் பராமரித்து வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் பனிப்பூக்கள் சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

.

பேஸுபான் – பாலிவுட் டான்ஸ்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் பாலிவுட் டான்ஸ் குழுவின் பேஸுபான் (Bezubaan) என்னும் நடன நாடகக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
Bezubaan என்றால் குரலற்றவன். இந்தத் தலைப்பைக் கேட்டால், ஏதோ ஒரு சீரியஸான ஃபீல் கிடைக்கிறதல்லவா? ஆனால், இது ஒரு வண்ணமயமான, ஆடல், பாடல், ஜாலி, ஃபீல் குட் நாடகம். ஒரு சீரியஸான மையக் கருத்துடன்.
பாலிவுட் டான்ஸ் சீன் - மினசோட்டாவின் ஃபேமஸ் இந்திய நடனக்குழு. நடனம் தான் இந்தியத் தன்மை கொண்டது. மற்றபடி, அனைத்து நாட்டினரும் ஆடுவார்கள். பாலிவுட் டான்ஸ் என்று சொல்லிக் கொண்டாலும், க்ளாசிக் முதல் டப்பாங்கூத்து வரை அனைத்தையும் ஆடுவார்கள். ஆனால், எதை ஆடினாலும், உயர் தரத்துடன், தேர்ந்த நிபுணவத்துவத்துடன் ஆடுவார்கள்.
நம்மூர் பாலிவுட் பட அமைப்பைப் போன்றே கொஞ்சம் ட்ராமா, அடிக்கடி நகைச்சுவை, அவ்வப்போது செண்டிமெண்ட், நிறைய டான்ஸ் என வரிசையாகத் தொடர்ந்து வைத்து, கவனத்தை எங்கும் சிதறவிடாமல் மேடையை மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். ஆக்ஷன் ப்ளாக் தான் இல்லை!!
கதை - மினசோட்டா இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அப்பா என்னும் அப்பு மேனனையும், அவரது குடும்பத்தாரையும் சுற்றிச் சுழலுகிறது. பிற சமூகங்கள் மீதான சகிப்புத்தன்மையை மையமாகக் கொண்ட கதை. அப்புமேனனுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். முதல் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. பையன், அமெரிக்கக் கலாச்சாரத்தில் ‘Dude’ ஆக வாழ்கிறான்!! இளைய பெண், தந்தையின் கடைக்குப் பக்கத்தில் புதிதாகத் தரைவிரிப்புக் கடை திறந்திருக்கும் ஒரு முசல்மானைக் காதலிக்கிறாள். Dude பையன், ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த அமெரிக்கப் பெண், முசல்மான் நடத்தும் டான்ஸ் பள்ளியில் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கவர, அதாவது கவர் செய்ய, Dude பையனும் அந்த நடனப்பள்ளிக்குச் செல்கிறான். அமெரிக்கப் பெண்ணைக்கூட மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் அப்பா, ஒரு முஸ்லிமை மருமகனாக ஏற்க மறுக்கிறார். காரணம் - அவருடைய ஃப்ளாஷ்பேக் மற்றும் பொதுவான சமூகப் பார்வை. பிறகு, அப்பாமனம் திருந்துகிறாரா? இந்த ஜோடிகள் இணைகிறார்களா? என்பது கண்டே பிடிக்க முடியாத (!!!) இந்தக் கதையின் முடிவு. இந்தக் கதையின் சுவாரஸ்யமான ஓட்டத்தைத் தள்ளிவிட, நடு நடுவே இரு தொகுப்பாளர்கள் மேடையேறி நமக்குக் கதையை விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில், இந்தத் தொகுப்பாளர்களும் கதைக்குள் குதித்துவிடுகிறார்கள்.
எவ்விதக் குழப்பங்களும் இல்லாத சிம்பிள் கதை. அதை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கும், ஆடும் நடனத்திற்கும் தொடர்ந்து அரங்கத்தில் கரவொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வசனமெழுதிய ஹிமான்ஷு அகர்வாலும், வர்கீஸ் அலெக்சாண்டரும் இதற்காகப் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களுக்கு நடனம் அமைத்த அனைத்து பயிற்சியாளர்களுமே கலக்கியிருக்கிறார்கள்.
வசனங்களில் எங்கும் எள்ளலும், சுய பகடியும், சமூகச் சாடலும் பரவியுள்ளன. வசனகர்த்தாவுக்குத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வித்தியாசம் தெரியாது எனத் தங்களைத் தாங்களே நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். மொழி தெரியாதவர்களும், ஹிந்தி பாடலுக்கு வாயசைத்து ஆடிக் கொள்ளலாம் என்று பாலிவுட்டையும் வாருகிறார்கள். அப்படியே சென்று, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்பவர்களையும் ஒரு குத்து விடுகிறார்கள். நாடகம் முழுக்கக் கொண்டாட்ட மனநிலை தான். ஏதோ வடக்கத்திய கல்யாண வீட்டுக்குச் சென்று வரும் உணர்வு கிடைக்கிறது.
மொத்தம் எட்டுப் பாடல்கள். அதில் ஒன்று மலையாளப்பாடல். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். விதவிதமான உடைகள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் சிறப்பாக ஆட்டம் போடுகிறார்கள். ஆவெனப் பார்வையாளர்கள் வாயைப் பிளக்கும் வகையில் மேடையில் சுழலுகிறார்கள். அனாயசமாக ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், அனைவரும் நடிப்பிலும் சிக்ஸர் அடிக்கிறார்கள்.
சென்ற ஆண்டு ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில், அதிகப் பார்வையாளர்கள் பார்த்தது - இவர்களுடைய ஸ்பைசி மசாலா சாய் நாடகம் தானாம். இந்த வருடமும் அரங்கம் நிறைந்தே இருந்தது. கடந்த மே மாதத்தில் இருந்து தயாராகி, கடும் பயிற்சி எடுத்து மேடைக்கு வந்திருக்கிறார்கள். அது மேடையில் நன்றாகவே தெரிகிறது. நடப்புக் காலத்திற்கு ஏற்ற, தேவையான கருத்தை, அனைவரையும் மகிழ வைத்து, சிரிப்புடன் சேர்த்து, புகட்டி விடுகிறார்கள்.
எக்கச்சக்கமான கலைஞர்களின் பங்களிப்பை அருமையாக ஒருங்கிணைத்து, ஒரு பிரமாண்ட சினிமாவின் கனவுப் பாடல் காட்சியைப் போல், எந்த வி.எப்.எக்ஸும் இல்லாமல், அழகான அந்த எஃபெக்டை, இந்தச் சிறு மேடையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். படங்களில் காட்டுவது போல், பல வயது அப்புமேனனை, ஒரே சமயத்தில் மேடையில் காட்டுகிறார்கள். இப்படி வியப்பளிக்கும் பலவற்றை, இந்த ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் மேடையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இந்த நாடகத்தின் இயக்குனர்களான ஸ்டீஃபன் அலெக்சாண்டரும், மது பெங்களூரும்.

நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான திவ்யா, இறுதியில் கிட்டத்தட்ட இதில் பங்கேற்ற நூறு கலைஞர்களையும் ஒரு சேர மேடையில் கொண்டு வந்து, வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விருப்பமுள்ளவர்களைத் தங்கள் குழுவில் சேர அழைப்பு விடுத்தார். அடுத்த வருடம், இருநூறு பேரை மேடையில் ஏற்றி விடுவாரோ? இதற்காகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் அமைப்பு, இவர்களுக்கு இன்னும் பெரிய மேடை அமைத்துத் தரவேண்டும்!! இப்படி ஒரு பிரமாண்டமான, வண்ணமயமான நிகழ்வை விருந்தளித்த மினசோட்டாவின் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவிற்கு, நமது அன்பான சியர்ஸ்!!

.

எங்கெங்கும் ஏரி...


பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.நியூயார்க்கிற்கு வானுயர்ந்த கட்டிடங்கள், ஃப்ளோரிடாவிற்குக் கேளிக்கைப் பூங்காக்கள், கொலரடோவிற்கு மலைத்தொடர்கள், வேகாஸிற்குச் சூதாட்ட விடுதிகள் என்பது போல மினசோட்டாவிற்குப் பெருமை சேர்ப்பது ஏரிகள். பாருங்கள், எவ்வளவு ரம்மியமான அழகு சேர்க்கும் பெருமை!!
ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம், மினசோட்டா. இதைக் கேள்விப்பட்டு, பிறகு மினசோட்டாவிற்கு வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் இருக்க, எனக்குத் தோன்றியது - "இது அனைத்தையும் கூட்டி தான் பத்தாயிரமோ?". நாங்கள் இருந்த அபார்ட்மெண்டில் கூட, ஒரு சிறு குட்டை இருக்க, அதையும், அதில் நீந்திய வாத்துகளையும் கண்டு வந்த சந்தேகம் இது.
பிறகு, விசாரித்த பிறகு தான் தெரிந்தது. அது அப்படி அல்ல, 10 ஏக்கருக்கு மேல் சுற்றளவு உள்ள ஏரிகளின் எண்ணிக்கை மட்டுமே, பத்தாயிரத்தைத் தாண்டுமாம். இத்தனை ஏரிகளையும் கண்டு ரசித்த உயிரினம் ஏதேனும் இருக்குமா? அப்படி இருந்தால், அதனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், இத்தனை ஏரிகளிலும் நீ ரசித்த அழகு என்ன? இதில் உன்னைப் பெரிதும் கவர்ந்த ஏரி எது?
அத்தனை ஏரிகளையும் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை கொண்ட பயணம், ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை பார்த்த ஏரிகள் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. மினசோட்டா , ஒரு சொர்க்கம்!!
மினசோட்டா குளிர்காலத்தைச் சரிவரக் கையாளத் தெரியாதவர்கள், இம்மாநிலத்தை நொந்துக் கொள்வார்கள். ஆனால், இயற்கையைப் புரிந்து கொண்டு, இயற்கையுடன் பயணிப்பவர்களுக்குப் புரியும் ரகசியம் - நாமிருப்பது சொர்க்கமென்பது.
நகர்ப்புறம், சுற்று வட்டாரம், செல்லும் வழியெங்கும் என இங்கு நீக்கமற நிறைந்திருப்பது ஏரிகள். வானில் இருக்கும் நட்சத்திரங்கள் போல, சாலையில் நாம் காணும் மனிதர்கள் போல, நம் கைரேகையைப் போல ஒவ்வொரு ஏரியும் தனித்துவமானது. ஒவ்வொருவரை, ஒவ்வொரு விதத்தில் கவரக்கூடியது. மினசோட்டாவின் ஏரிகள் அனைத்தையும் பார்த்து விட்ட மனிதர் எவரேனும் இருந்தால், அவர் இயற்கை ரசிகரோ, அல்லது பொதுப்பணித்துறை ஊழியரோ, அவரிடம் கேட்க என்னிடம் கேள்விகள் நிறைய உள்ளன.நகரின் மையப்பகுதியில் இருக்கும் ஏரிகளில் கோடை வாரயிறுதிகளில் நல்ல கூட்டம் இருக்கும். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை போன்றவற்றுடன், குடும்பங்கள் இணைந்து உணவருந்துவதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி விரும்பிகள் வாக்கிங், ஜாக்கிங் செய்வதற்கும் தேவையான வசதிகள் இருக்கும். சில ஏரிகளில் போட்டிங், கயாக்கிங் போன்றவைகளும் இருக்கும். இது தவிர, லேக் ஹாரியட் (Lake Harriet) மாதிரியான ஏரிகளில், ஆங்காங்கே அவ்வப்போது, உள்ளூர் இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இம்மாதிரி ஏரிகளுக்குச் சென்றால், இலவசமாக, நிம்மதியாகப் பொழுது போக்கி விட்டு வரலாம். சிலர் தங்களது நாய்களைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் வருவார்கள். அந்த நாய்கள் குடிப்பதற்கு ஏதுவாக, குடிநீர் வசதிகள் செய்திருப்பார்கள். நோட் பாயிண்ட், அவ்வளவு பெரிய ஏரி இருக்கிறதே என்று எண்ணி, நாயை ஏரியில் தண்ணீர் குடிக்க விடுவதில்லை. அதே சமயம், அவை குடிப்பதற்கும் குடிநீர் ஏற்பாடு செய்து விடுகிறார்கள்.
லேக் ஆப் தி ஐல்ஸ் (Lake of the Isles) போன்ற ஏரிகளைச் சுற்றி நடக்கும் போது, அவ்வப்போது ஏரிகளைச் சுற்றியிருக்கும் வீடுகளையும் காண வேண்டும். ஏரிப் பக்கமாக இடம் வாங்கி வீடு கட்டியிருப்பவர் என்றால், அவர் கலாரசிகராகத் தானே இருக்க வேண்டும்? என்று கேட்கும்படியான டிசைனில் வீடுகள் ஒவ்வொன்றும் இருக்கும். சில ஏரிகளில் வீட்டின் கொல்லைப் புறத்துடன் ஏரி இணைந்திருக்கும். வீட்டிற்கு முன் பக்கம் கார் நிற்பது போல், பின்பக்கம் போட் நிற்கும். வீட்டிற்குப் பின்புறமே போட் நிற்க வேண்டும் என்பதில்லை. சிலர் கார் பார்க்கிங் இல் போட் வைத்திருப்பார்கள். சிலர் ஏரியிலேயே ஒரு இடத்தைப் பார்த்து, அங்கு நிறுத்தி வைத்திருப்பார்கள். நேரம் கிடைக்கும் போது, போட்டை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் கிளம்பி விடுவார்கள். மெடிசின் லேக்கை (Medicine Lake) சுற்றி வந்தால், இப்படிப்பட்ட வீடுகளைக் காணலாம்.
சில படகுகளில், உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக, டேபிளும், சுற்றி சேர்களும் இருக்கும். வீட்டில் போர் அடித்தால், ஏரியின் மத்தியில் சென்று சாப்பிட்டு விட்டு வருவார்கள். அது ஓர் அனுபவம். அது ஒரு சுவை. போலவே, ஏரிக்கரையோரம் அமர்ந்து சாப்பிடவும், லேக் நோகோமிஸ் (Lake Nokomis) போன்ற ஏரிகளில் வசதியுண்டு.போட்டிங் தவிர, ஏரியில் விளையாடுவதற்கும், பொழுது போக்குவதற்கும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அன்றொரு நாள், ஒரு ஏரிக்கரையில் நடந்து கொண்டு இருக்கும்போது, அதைக் கவனித்தேன். ஒருவர் ஏரியின் மத்தியில், தண்ணீரின் மேல் நடந்து கொண்டும், பறந்து கொண்டும் இருந்தார். மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எப்படி இப்படிப்பட்ட கண்டு பிடிப்புகளை (Flyboarding) வைத்துக் கொண்டு பொழுதை மட்டும் ஓட்டுகிறார்கள் என்று!!
இன்னொரு குரூப்பைக் கவனிக்கலாம். ஏரியில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ... வாளியுடனும், தூண்டிலுடனும் குறைந்த பட்சம் நாலைந்து பேர் கண்டிப்பாக இருப்பார்கள். நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை, குளிர்காலத்தில், தண்ணீர் எல்லாம் உருகி ஜஸ் ஆனாலும், மீன் பிடிப்பவர்கள் ஏரியில் இருப்பார்கள். தண்ணீராக இருக்கும் போது, ஏரிக்கரையோரம் நின்று மீன் பிடிப்பவர்கள், தண்ணீர் ஐஸ் ஆனதும், ஐஸ் மீது ஏறி, அதில் துளையிட்டு, பின்பு அந்தத் துளை வழியாக மீன் பிடிப்பார்கள். துளை போடுவதற்கு ஒரு கருவி, மீன் அசைவுகளைக் கண்காணிக்க ஒரு கருவி, ஐஸ் ஏரியின் மீது ஒரு கூடாரம் எனத் தொழில் முறை மீன்பிடிப்பவர்களை விட இந்தப் பொழுதுபோக்குமுறை மீன்பிடிப்பவர்களிடம் தான் அதிகக் கருவிகள் இருக்குமோ என நினைக்கும் வண்ணம் அலப்பறைக்குக் குறைச்சலிருக்காது!! “அடேய், நாங்களே இந்தக் குளிரில் ஓடி ஒளிந்து வாழ்கிறோம். இந்தக் குளிரிலும் எங்களைப் பிடிக்க ஏன்ப்பா உங்களுக்கு இந்தக் கொலவெறி?” என்று அந்த மீன்கள் நினைப்பது, இவர்களுக்குத் தெரிவதில்லை.


இது தவிர, எந்த அட்வென்சரோ, ஆக்டிவிட்டியோ இல்லாமல், அமைதியாக ஏரியின் இயற்கை அழகை ரசிப்பவர்களையும் நிறையக் காணலாம். ஏரிகளைச் சுற்றி இருக்கும் பெஞ்ச்களில் உட்கார்ந்து கொண்டோ, புல் தரையில் படுத்துக்கொண்டோ, மரங்களுக்கிடையே ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டோ, வாழ்க்கையை ரசனையோடு வாழ்பவர்களையும் காணலாம். கடற்புரமே இல்லாமல் எக்கச்சக்கமான பீச் (ஏரிக்கரை) கொண்ட ஊர் இதுவாகத்தான் இருக்கும். அதனால், குழந்தைகளுக்கும் பிடித்தவைகளாக இந்த ஏரிகள் இருக்கின்றன.
இப்படிப் பலதரப்பட்ட மக்களையும் கவர்பவைகளாக இந்த ஏரிகள் உள்ளன. லேக் கேல்ஹூன் (Lake Calhoun) மாதிரியான ஏரிகளைச் சுற்றி வந்தால், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருசேரக் காணலாம். வாரயிறுதியில் திருவிழா போல் ஜே ஜே என்றிருக்கும். தனிமை விரும்பிகள் என்றால் நகரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஏரிகளுக்குச் சென்று வரலாம்.
மினியாபோலிஸ் நகர்பகுதியில் இருக்கும் ஏரிகளையும், பூங்காக்களையும் இணைத்தவாறு இருக்கும் கிராண்ட் ரவுண்ட்ஸ் (Grand Rounds Scenic Byway), இக்கட்டுரையில் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 50 மைல் தூரம் கொண்ட பாதை இது. நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லுவதற்கு ஏதுவாகப் பாதை என்பதால், நகரின் முக்கிய ஏரிகளை, ஒரு ரவுண்டில் சென்று காண இந்தப் பாதை உதவும்.
இதெல்லாம், சில மணி நேரப் பொழுது போக்குக்கான ஏரிகள். நகர்ப்புறத்தைச் சுற்றியிருப்பவை. நாள் கணக்கில் ஒரு ஏரியை நின்று ரசிக்க வேண்டுமென்றால், லேக் சுப்பிரியருக்குச் செல்லலாம். அது ஏரிகளின் ராணி. இங்கு படகுகளைப் பார்க்கலாம் என்றால், அங்கு கப்பல்களைப் பார்க்கலாம்.
பொதுவாக, இந்த நிலப்பரப்பில் ஏரிகள் எப்படி உருவாகுமோ, அப்படித்தான் இங்குள்ள ஏரிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு உருவாகியுள்ளன. அதாவது, பனிநிலைக் காலத்தில் (Ice Age) நிலப்பரப்பு மேல் எங்கும் பனியாக இருந்த போது, ஆங்காங்கே நிலத்தினுள் ஊடுருவிய பனிப் பாளங்கள், பின்பு ஏரியாக உருவெடுத்தன. ஆனால், மினசோட்டாவாசிகள் ஒரு சுவாரஸ்யமான கதையையும், இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். அமெரிக்க நாட்டுப்புறக் கதைக் கூறலில் பால் பன்யன் (Paul Bunyan) என்றொரு ராட்சத மரவெட்டி கதாபாத்திரத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவனிடம் இருந்த நீல நிறக் காளை அங்கும் இங்கும் ஓடியதில் பதிந்த கால் தடங்களே, இந்த ஏரிகள் என்பது அந்தக் கதை.
ஒரு பக்கம் மினசோட்டாவின் பொருளாதாரம், ஏரிகளால் வளருகிறது என்றால், இன்னொரு பக்கம் சரியாகப் பராமரிக்கப்படாத ஏரிகளால், மினசோட்டாவின் பொருளாதாரம் பாதிக்கும் சூழ்நிலையும் உள்ளது. மினசோட்டாவின் சில ஏரிகள், பாசிகளால் சூழப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிலையும் இங்கு உண்டு. இவ்வகை ஏரிகள் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அதிகம் உள்ளன. மினியாபோலிஸ் நகர்ப் பகுதியில் உள்ள ஏரிகள் அவ்வளவு மோசமில்லை. அதே சமயம் ஆஹா ஓஹோ ரகமுமில்லை. நல்ல சுத்தமான ஏரிகள் என்றால், பெமிட்ஜி (Bemidji) பக்கமும், துலூத் (Duluth) பக்கமும் செல்ல வேண்டும்.
என்ன இருந்தாலும், மினசோட்டாவின் ஏரிகளில் கோடைக்காலத்தில் நிரம்பத் தண்ணீரும், குளிர்காலத்தில் மூடியவாறு பனியும் இல்லாமல் இருப்பதில்லை. போலவே, வழிபாடு என்ற பெயரில் எதையும் ஏரித் தண்ணீரில் கரைப்பதில்லை. ஏரியை மூடி, ஃப்ளாட் போடுவதிலலை. ஏரிகளைச் சுற்றிக் கடைகள் திறந்து, கழிவை ஏரியில் கலப்பதில்லை. அதனால், மினசோட்டாவின் ஏரிகள் எங்கெங்கும் ஸ்பெஷல் தான். என்றென்றும் ஸ்பெஷல் தான்.
மேலும் தகவல்களுக்கு,