Friday, September 23, 2016

தி லாஸ்ட் ஆங்க்லெட்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



காலப் புத்தகத்தில் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டி, ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சென்று பார்ப்போம். 1910 ஆம் வருடம். நெட்ஃப்ளிக்ஸ் இல்லா காலம். சினிமா என்றொரு பதமே, அப்பொழுது தான் உருவாகி இருந்தது. அனைத்துலக மக்களின் பொது மொழியான மௌன மொழியில் படங்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அப்போது இந்தியாவின் முதல் சினிமா வெளியாகி இருக்கவில்லை. அச்சமயம், மினியாபோலிஸில் சதர்ன் தியேட்டர் திறக்கப்பட்டு, மௌனப் படங்கள் திரையிடப்பட்டுக்கொண்டு இருந்தது.
இன்னும் பல பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டி, மின்சாரமில்லா காலத்திற்குச் செல்லலாம். தமிழ் மக்கள் வாழ்வில், அப்பொழுதே பழங்கலைகளில் ஒன்றான தெருக்கூத்து இருந்தது. தெருக்கூத்து, கோவிலில், ஊர்த் திடலில், தெருமுனையில் நடந்திட, அது எளிய மக்களுக்கான கலையாக இருந்தது. மக்களுக்குத் தேவையான கருத்துகள், கதையாக, பாட்டுடன், ஆடலுடன், வசனத்துடன் நாடகமாகப் பரப்பப்பட்டது.
சரி, இப்போது வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி தற்காலத்திற்கு வரலாம்.
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் பழமையான கலை, மினியாபோலிஸின் பழமையான அரங்கான சதர்ன் தியேட்டரில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, ஆங்கில வசனத்துடன், தமிழிசைப் பாடல் கலந்த புது வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது. ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தால், ‘தி லாஸ்ட் ஆங்க்லெட்’ (The Lost Anklet) என்னும் தெருக்கூத்து மேடையேற்றப்பட்டு, மினசோட்டா மக்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது எனலாம்.
தலைப்பே, இந்தத் தெருக்கூத்தின் கதையைச் சொல்லிவிடுமே!! ஆம், சிலப்பதிகாரத்தின் கதையே, இந்தத் தெருக்கூத்தின் கதை. மகிழ்வாகச் சென்று கொண்டிருக்கும் கண்ணகி-கோவலன் கதையில் தொடங்கும் தெருக்கூத்தை, கதை ஓட்டத்திற்கு ஏற்ற உணர்வுகளுடன் விவரித்துச் செல்கிறார் கட்டியங்காரன். சேரன் செங்குட்டுவன், கரிகாலச்சோழன், நெடுஞ்செழிய பாண்டியன் எனத் தமிழ் மண்ணை ஆண்ட மூன்று மன்னர்களுக்கும் இந்தக் கதையில் பங்குண்டு. மாதவியின் அழகிலும், நடனத்திலும் மயங்கிய கோவலன், கண்ணகியை மறந்து சில காலம் மாதவியுடன் தங்க, பிறிதொரு சந்தர்ப்பத்தில், மாதவியுடன் மனஸ்தாபம் ஏற்பட, கண்ணகியின் நினைவு வர, கண்ணகியுடன் திரும்பிச் சென்று சேருகிறார். தான் சேர்த்த பொருட்களை இழந்த காரணத்தால், கண்ணகியும், கோவலனும், கௌந்தி அடிகள் துணையுடன் பொருள் தேடி மதுரை வருகிறார்கள். வந்த இடத்தில் கோவலன் சிலம்பை விற்கச் செல்ல, அங்கு, பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு, அவையில் பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் உயிரிழக்க நேரிடுகிறது. அதனால் சோகம் கொண்டு ஆத்திரமுற்ற கண்ணகி, அவையில் மன்னனுடன் வாக்குவாதம் புரிந்து, தன் சிலம்பை எறிந்து, மன்னனின் தவறை நிரூபித்து, மதுரையை எரிக்கிறார்.
இந்தக் கதையை, ஒரு மணி நேர தெருக்கூத்தாக அழகாகச் சுருக்கி, அருமையான நடனத்துடன், தொன்மையான பாடல், இசையுடன் வழங்கினார்கள் இந்தக் கலைஞர்கள்.
கண்ணகியாக லக்சண்யா
கோவலனாக குமரகுரு
மாதவியாக மீனாக்ஷி
கௌந்தி அடிகளாக ஜானிஸ்
நெடுஞ்செழியனாக நாகச் சாய்
கோப்பெருந்தேவியாக யாமினி
செங்குட்டுவனாக வேல்முருகன்
கரிகாலனாக முகமது ஆசிஃப்
பொற்கொல்லனாக சுரேஷ்
கட்டியங்காரனாக ஹனிபால்
ஆகியோர் தாங்கள் ஏற்றிருந்த வேடங்களுக்கு உயிருட்டினர்.
நாடகக் கலையில் நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் வாய்ப்பில்லா விட்டாலும், ஒவ்வொருவரும் தங்கள் தேர்ந்த திறமையை இந்தத் தெருக்கூத்தில் காட்டினர். 165 பேர் உட்காரக்கூடிய இந்த அரங்கில், கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகருக்கும் கேட்கும் வகையில், மைக் இல்லாமல் வசனம் பேச வேண்டும். அதற்கேற்ற வகையில், உணர்வுகளை முகத்தில் கொஞ்சம் மிகையாக வெளிப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும், நமது கலைஞர்கள் சிறப்பாகச் செய்தார்கள்.
இது தவிர, வந்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் சிலப்பதிகாரக் கதை புரியும் வண்ணம் வசனம் ஆங்கிலத்திலும், நமது பாட்டிசை தெரிந்திடும் வண்ணம் பாடல்கள் தமிழிலும் அமைத்து, இந்தத் தெருக்கூத்து ஒரு நவீன ஃப்யூஷன் வடிவத்தில் அமைந்திருந்தது ஒரு சிறப்பு. இந்த வடிவத்திற்குள் தங்களை அழகாகப் புகுத்திக்கொண்ட இந்தக் கலைஞர்கள், பார்வையாளர்களின் கவனத்திற்கு எவ்விதக் குழப்பமும் ஏற்பட்டு விடாதவாறு, தங்களது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, சிலரது பங்களிப்பைப் பாராட்டிவிட வேண்டும். இறுதிக் காட்சியில், லக்ஷண்யாவின் ஆவேச நடிப்பு, வரும் காட்சிகள் எங்கும் குமரகுருவின் நளினமான உடல்மொழி, நடனக் கலைஞர் மீனாக்ஷியின் நவரச முகபாவங்களுடன் கூடிய நாட்டியம், சுரேஷின் கணீர் குரல் மற்றும் ஹனிபாலின் நகைச்சுவை கலந்த வர்ணனைகள் வேடிக்கை நடிப்பு ஆகிய அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. இவை தவிர, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, இசை, பாடல்கள், ஒலி, ஒளி அமைப்புகள், கலை இயக்கம் என இந்தத் தெருக்கூத்துக்காக, மேடையின் பின்னால் இருந்து பங்களித்தவர்களும் தங்கள் பணியினைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்தத் தெருக்கூத்து முடிந்த பின்பு, வந்திருந்த பார்வையாளர்கள் அங்கிருந்த கலைஞர்களைப் பாராட்டியபடி, கை தட்டிக் கொண்டு அரங்கை விட்டுக் கலைந்தனர். முழு வண்ணமயமான ஒப்பனையுடன் இருந்த இந்தக் கலைஞர்களுடன், சிலர் ஆர்வத்துடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர். பிற மக்களும், ஒப்பனையுடன் சாலையில் நடந்து சென்ற நமது கலைஞர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே சென்றதைக் காண சுவாரஸ்யமாக இருந்தது.
மொத்தத்தில், இந்தத் தெருக்கூத்தைக் கண்ட பார்வையாளர்களுக்கு, இது ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும். இந்தக் காலத்தில், இந்த ஊரில், இப்படி ஒரு அனுபவத்தை அளித்த, இந்தத் தெருக்கூத்தை இயக்கிய சச்சிதானந்தம், வசனமெழுதிய சரவணன், இதற்கு உறுதுணையாக இருந்த மினசோட்டாத் தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்கள், மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் தன்னார்வலர்கள், பழமையான அமைப்புடன் சதர்ன் தியேட்டரைப் பராமரித்து வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் பனிப்பூக்கள் சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

.

No comments: