Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு

தியேட்டர் சென்று பார்க்க மாட்டேன் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். சனிக்கிழமை போரடித்தால் செல்லலாம் என்றொரு எண்ணம் இருந்ததால், லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

ஏனோ தெரியவில்லை. நண்பருக்கு படம் பிடித்திருந்தது. சூர்யாவை புகழ்ந்துக்கொண்டிருந்தார்.

இன்று மதியம் அவரிடம் ‘ஏழாம் அறிவு போறேன். வாரீங்களா?’ என்றேன். எப்படியும் பார்த்தாச்சே! வர மாட்டார் என்றேண்ணினேன். ‘கண்டிப்பா வருவேன்’ என்று ஆச்சரியம் கொடுத்தார்.



இங்கு மூணு மணி ஷோவுக்கு சென்றோம். வெளியே சென்று ரொம்ப நாள் ஆவதால், எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்து, இந்த படத்துக்கு சென்றோம்.

---

படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வந்த நாளே பார்த்திருந்தால், அதை பற்றி சொன்னால் ஏதேனும் பிரயோஜனம் இருக்கும். டோங்லீ நாய்க்கு போட்ட கிருமி மாதிரி அதான் நல்லா பரவிடுச்சே!

இந்த படத்தின் மைனஸ் என்றால் அது படத்திற்கு கொடுத்த பில்டப் தான். அட்லீஸ்ட், போதிதர்மரையாவது கொஞ்சம் சஸ்பெஸ்சாக வைத்திருக்கலாம். அவரைப் பற்றி படம் வருவதற்கு முன்பே எல்லா சானல்களிலும் டாகுமெண்டரி ஒளிபரப்பி பெப்பை குறைத்துவிட்டார்கள்.

விமர்சனஃபோபியாவுக்கு பயந்து முன்ஜாக்கிரதையோடு இருப்பேன். இனி, பில்டப்ஃபோபியாவுக்கும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் போல?

பில்டப்பும் வித்தியாசமான பில்டப். அடக்கமாக கையை கட்டிக்கொண்டே பில்டப் கொடுத்தார்கள்.

முன்பு, நீதி உபதேசக்கதைகளில் தன்னடக்கம் முக்கியம், தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பது போல் நீதி வைத்து இருப்பார்கள். ஆனால், அப்ரைசல் வந்து விட்டால், நாம் அப்படியா இருக்கிறோம்? அதை செய்தோம், இதை செய்தோம் என்று பில்டப் கொடுப்போம் இல்லையா? அப்படி தான் எங்கும் ஆகிவிட்டது. பிழைக்க வேண்டும் என்றால் இப்படியொரு விளம்பரம் அவசியமாகிவிட்டது இக்காலத்தில். மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி!

---

இங்கு ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிட்டு இருந்தார்கள். சைனீஸ் கவர்மெண்ட் என்று வரும் இடங்களை, சைனீஸ் என்றே படத்தில் சொல்கிறார்கள். சப்-டைட்டிலுக்கு சென்சார் கிடையாதே!

கமல் பொண்ணு என்பதால் சில இடங்களில் கேமரா சுட்டதை கிராபிக்ஸ் துணைக்கொண்டு கண்ணியம் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் பெருமையை இவருடைய டமிழைக் கொண்டு சொல்கிறார்கள்.

ஏதாச்சும் பெருசா பண்ணனும், பண்ணனும் என்று யதார்த்ததை பல இடங்களில் விட்டுவிட்டு படம் செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கிய பல பிரச்சினைகளுக்கு முடிவு சொல்லாமல் படத்தை அம்போவென்று முடித்தது போல் இருக்கிறது.

---

நண்பருக்கு திரும்ப பார்த்தாலும், படம் பிடித்திருந்தது. ஆச்சரியமான விஷயம் தான். அதற்கு காரணம், தியேட்டரில் பார்த்தது தான். வீடு வரும்வரை புகழ்ந்துக்கொண்டு வந்தார்.

படம் சுமார் தான் என்று சொன்ன பிறகும், தியேட்டர் சென்று காசு செலவழித்து படம் பார்த்த எனக்கு எவ்வளவு பெரிய மனசு? என்னைப்போல் ரசிகர்கள் இருக்கும் வரை, தமிழ் சினிமா அழியாது. தமிழ் சினிமாவை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். (அது என்னமோ தெரியவில்லை. இந்த படத்தின் எபெக்ட். பில்டப் அதுவாக வருகிறது!!!)

.

Wednesday, October 26, 2011

தீபாவளி - 2011

ஊருக்கு செல்லாத தீபாவளி என்று எதுவும் இருந்ததில்லை. முதல் முறையாக, தீபாவளி அன்று வீட்டைவிட்டு தள்ளி இருக்கிறேன்.

---

இங்கு பனிகாலம் இன்றைய முதல் பனி பெய்தலுடன் இன்று ஆரம்பித்து இருக்கிறது.

ஊர் முழுக்க சோப்பு நுரையை அப்பிவிட்டது போல் இருக்கிறது.



(Image URL - http://photos.denverpost.com/mediacenter/2011/10/first-snow-hits-metro-denver/#8)

---

தீபாவளி அன்று ஜாலியாக எண்ணெய் தேய்த்து குளித்து, சாமி கும்பிட்டு, இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டு, காலையில் வடை இட்லியும், மதியம் கறி சாப்பாடும் சாப்பிட்டு விட்டு, வாங்கி கொடுத்த வெடிகளை வீட்டின் சிறுவர்கள் வெடிப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு தீபாவளி ரிலீஸ் படம் பார்த்து விட்டு அன்றைய தினம் சிறப்பாக முடியும்.

இந்த முறை முற்றிலும் வேற மாதிரி. தீபாவளி அன்று அலுவலகம் போக வேண்டிய நிலை.

நல்லவேளை, பனி தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால், அலுவலகம் வர வேண்டாம். வீட்டிலிருந்தே வேலை பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இன்னமும் பனி பெய்துக்கொண்டிருக்கிறது.

பருப்பு வடையும், ரவை கேசரியும் ட்ரை செய்தேன். வடை நன்றாக வந்தது. கேசரி கொஞ்சம் கட்டி பிடித்து சொதப்பி விட்டது. சாமி முன் வைத்து கும்பிட்டேன். ‘இதுக்கு நீ சும்மாவே கும்பிட்டு இருக்கலாம்’ என்று போட்டோவில் இருந்த முருக பெருமான் சொன்னது போல் இருந்தது.

‘ஒகே’ என்று நானும் சொல்லிவிட்டு, அவருக்கு வைத்ததை கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுவிட்டு, வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

---

படம் பார்க்கலாம் என்றால் பனி பெய்துக்கொண்டிருக்கிறது. அதையும் மீறி மாலை சென்றுவிட்டால், ‘ஆபிஸ் போக முடியாதாம். ஆனா, படத்துக்கு போக முடியுமாம்!’ என்று நாலு பேரு நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். அதனால், வாரயிறுதியில் செல்லலாம் என்று இருக்கிறேன்.

இங்கு தமிழிலும், தெலுங்கிலும் ‘7ஆம் அறிவு’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் சொல்வதைக் கேட்டால், பனிரெண்டு டாலரை சேமிக்கலாமா? என்று யோசிக்கிறேன். ரஜினிக்காக ‘ரா-ஒன்’ பார்க்கலாம் என்றால், யூ-ட்யுபில் இருக்கும் வீடியோவைப் பார்த்தால், அது ரஜினி போலவே இல்லை. அது ரஜினி நடையே இல்லை. இந்த உட்டாலங்கடிக்கு ரஜினி ஏன் சம்மதித்தார் என்று தெரியவில்லை. ரஜினியிடம் ஷாருக் சிவாஜி பாணியில், ”நீங்க வந்தா மட்டும் போதும்” என்று சொல்லியிருப்பார் போலும்.

---

7ஆம் அறிவை விட வேலாயுதம் பெட்டராக இருக்கும் போல் தெரிகிறது. இதை தான், “ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது” என்று சொல்கிறார்களோ?

---

எனது முந்தைய தீபாவளி பதிவுகளை வாசித்துப்பார்த்தேன். தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்கான டிக்கெட்டுக்கான அடிதடியை பற்றியே இருக்கிறது.

இதுவரை ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் பிரச்சினையாக இருந்தது. இப்ப அது இல்லை. அதான், ஊருக்கு செல்வதே பிரச்சினையாக இருக்கிறதே?

---

அனைவருக்கும் எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். :-)

.

Sunday, October 23, 2011

சொந்த சமையல்

எனக்கு உணவின் மீது இருக்கும் காதலைப் போல, சமையலின் மீதும் உண்டு. உணவின் மீதான காதலை, எப்பொழுதுமே வெளிப்படுத்தி, அனுபவித்திருக்கிறேன். ஆனால், சமையல் மீதான காதல் சமீப காலம் வரை கைக்கூடியதில்லை.



நான் சிறுவனாக இருக்கும்போதே சமையல் மீது ஆசை உண்டு. சிறுவயதில், பயோரியோ பல் பொடி டப்பாவை, சிறு கற்கள் மீது வைத்து, அடியில் ஒரு சின்ன மெழுகுவர்த்தியை வைத்து, அதனுள் அரிசியையும், தண்ணீரையும் விட்டு ஒலை வைத்திருக்கிறேன். போட்ட அரிசி, எடுக்க எடுக்க, டப்பாவை மீறி சாதமாக வந்தது, அவ்வயதில் ஆச்சரியம்.

இப்படியெல்லாம் விளையாடிக் கொண்டிருந்த நான், பின்பு வாசிக்க தொடங்கியப்பிறகு, சமையல் பகுதிகளை விடாமல் வாசித்திருக்கிறேன். சமையறை அதிகாரம் கிடைக்காத வயதென்பதால், வாசிப்போடு சரி. ஒரே மாதிரி சிக்கன் சமைக்கப்படும் என் வீட்டில், நண்பன் வீட்டில் வாசித்த சிக்கன் ரெசிப்பியை, அம்மாவிடம் கொடுத்து, சமைக்க செய்து, வீட்டில் சிக்கன் புதுமையை புகுத்திய அனுபவமும் உண்டு.

என் அண்ணனுக்கும் இதுப்போல் சமையல் ஆர்வம் உண்டு. வீட்டில் அம்மாவும், அப்பாவும் ஊருக்கு போய் விட்டால், ஹோட்டலில் போய் சாப்பிட சொல்வார்கள். அச்சமயங்களில், என் அண்ணன், அவருடைய நண்பரை அழைத்து வந்து அசைவ உணவு சமைக்க சொல்வார்கள். அவர் கேட்டரிங் துறையில் அனுபவம் உள்ளவர் என்பதால், ஏதேனும் புதிதாக ட்ரை செய்வார்.

பள்ளி காலத்தின் இறுதியில், மைதா, வனஸ்பதி, பால், சர்க்கரை போட்டு பர்பி செய்யும் செயல்முறையை எதிலோ படித்து, வீட்டில் அனுமதி வாங்கி, செய்து, பாராட்டு பெற்றிருக்கிறேன். கிடைத்த பாராட்டால், ஈஸியாக செய்யலாம் என்பதால், பல முறை அதை செய்து, பர்பி என்றாலே வீட்டினர் வெறுத்து, தெறித்து ஓட வைத்திருக்கிறேன்.

கல்லூரி சென்ற காலத்தில், சமையலுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி. அதன் பிறகு, வேலைக்கு சென்ற காலத்திலும், வீட்டில் இருந்து சென்றதால், அந்நேரத்தில் மற்றவர்களுக்கு வாய்க்கும் வாய்ப்பு (தொல்லை?) எனக்கு வாய்க்கவில்லை.

எப்பொழுதுவாவது வீட்டில் ஊருக்கு செல்லும் போது, அந்நேரத்தில் பெங்களூரில் எங்கள் வீட்டின் அருகில், தமிழ் கடைகள் ஏதும் இல்லாத காரணத்தால், வீட்டில் சமைப்பதுண்டு. வீட்டில் ஒரு வாரத்திற்கு போதுமான, தோசை மாவு இருக்கும். 2-3 நாட்களுக்கு போதுமான சாம்பார் இருக்கும். அதையும் அவ்வப்போது நூடுல்ஸ் செய்தும் சமாளிப்பேன். பிறகு, வீட்டின் அருகில் தமிழ் உணவகங்கள் வந்தப்பிறகு, நிறைய கடைகளைப் பற்றி தெரிந்த பிறகு, வெளியே சென்று விடுவேன்.

நண்பர் கணேஷுக்கு நன்கு சமைக்க வரும். அவருடைய அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத சமயம், அவர் அம்மா சொல்லிக்கொடுக்க, இவர் சமைத்து, அவருடைய அம்மாவின் கை பக்குவம் இவருக்கு வந்துவிட்டது. அதனால், சமயங்களில் இவரும் வீட்டுக்கு வந்து, சமையல் செய்வார். இப்படி இவர் வந்துவிட்டால், என் வேலை, காய்கறி நறுக்குவதும், பாத்திரங்களை கழுவுவதும் என்று சென்றுவிடும்.

கணேஷ் சமையல் பிரமாண்டமானது. அவருக்கு சாதாரணமாக செய்ய தெரியாது. முந்திரியை கொட்டி, சிக்கன் க்ரெவி வைப்பார். தேங்காயை அரைத்து, கெட்டியாக மீன் குழம்பு வைப்பார். ஒருமுறை தெரியாமல், அவித்த கடலை கேட்டுவிட்டேன். மாலையில், வெங்காயம், தேங்காய் துறுவல் போட்டு தாளித்து அதை ரெடி செய்துவிட்டார். நான் சாப்பிட நினைத்தது, ஒரு தட்டு அளவுக்கு. அவர் ஒரு சட்டி நிறைய செய்து வைத்திருந்தார். அப்புறம் என்ன செய்வது? பக்கத்து வீடுகளுக்கு சப்ளை செய்தோம்.

காலை சமையல் முடித்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மதிய சமையலைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். மதிய சாப்பாட்டின் போது, இரவு வேளைக்கான திட்டங்கள் தீட்டப்படும்!

அதனால், அச்சமயங்களில், என் வயிற்றுக்கான தீனி நன்றாக கிடைத்துக்கொண்டிருந்தாலும், என் சமையல் ஆர்வத்திற்கான தீனி கிடைக்கவில்லை.

பிறகு, திருமணம் நடந்தது. இப்ப, இன்னுமா தீனி கிடைக்காமல் இருக்கும்? இரண்டுக்குமே தீனி கிடைத்தது.

சமையல் ஆர்வத்திற்கு, சாப்பாட்டு ஆர்வம் தேவை. சாப்பாட்டு ஆர்வத்திற்கு, சமையல் ஆர்வம் தேவை. உண்மையோ, பொய்யோ, வைரமுத்துவின் வரிகள் போல், இப்பதிவிற்கும் இரு வரிகள் கிடைத்துவிட்டது. (ரொம்ப யோசிக்காதீங்க!)

ஒரே மாதிரி சாப்பிடாமல், வித விதமாக சாப்பிடும் ஆர்வமும், அதற்கான பொறுமையும் இருப்பதால், இணையத்தில் கிடைக்கும் பலவித சமையல் குறிப்புகளை, மனைவிடம் சொல்லி, வீட்டில் பலவித சமையல் நடக்கும். நல்லவேளை, மனைவிக்கும் இதில் ஆர்வம் இருந்தது. நானும் இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதால், திட்டோ, சலிப்போ இல்லாமல், மனைவி செயல்வடிவம் கொடுத்துவிடுவார்.

ஒவ்வொரு ஆணுக்கும் சமைக்க தெரிய வேண்டும். அட்லீஸ்ட், அதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். மனைவியின் பிறந்தநாளின் போது, காலையிலேயே அவருக்கு முன்பு எழுந்து, ஏதோ கேசரி போன்ற ஒரு ஸ்வீட்டை செய்து, பிறகு மனைவிக்கு அதை ஆச்சரியத்தோடு காண்பித்து உண்ண வைப்பது, எவ்வளவு சந்தோஷம்?

இப்பொழுது தனியாக இருப்பதால், வேறு வழியே இல்லாமல், நான் தான் சமைக்க வேண்டும். உடன், ஒரு நண்பர் வந்து சேர்ந்திருக்கிறார். அவரும் சமைப்பார் என்றாலும், வேகமாக, விரைவாக சாப்பிட வேண்டும் என்ற சமையல் தேர்ச்சி பெற்றவர் அவர். நம்முடையது கொஞ்சம் நேரம் எடுக்கும் சமையல் முறை கொண்டது. என் சமையல், அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. கடந்த ஒருவருடமாக சமைத்துக்கொண்டிருந்தவர் என்றாலும், இப்பொழுது அவர் எது சமைத்தாலும், என்னிடம் ஆலோசனை பெறும் அளவுக்கு, என் சமையல் ஏதோ மதிப்பு கொடுத்து இருக்கிறது.

என் நளபாகத்திற்கு பெரும் பின்னணியாக இருப்பது - சமையல் குறிப்புகள் தான். இணையத்தில் சமையல் குறிப்புகளை எழுதி தள்ளும் அனைத்து அன்னையர்களுக்கும், சகோதரிகளுக்கும் என் நன்றிகள். ஒரு ஐட்டத்தை எத்தனை முறை செய்தாலும், ஒவ்வொரு முறையும் இக்குறிப்புகளை பார்த்தே செய்வேன். ப்ராசஸ் முக்கியமல்லவா? அப்பொழுது தான் எனக்கு கன்ஸிஸ்டன்ஸி வருகிறது.

இங்கு அவ்வப்போது பாட்லக் (Potluck) எனப்படும் கூட்டஞ்சோறு முறை, இந்திய சமூகத்தினரிடம் நடைபெறும். மனைவியுடன் செல்லும் போது, மனைவி சமைத்து கொண்டு வருவார். இப்பொழுது நான் மட்டும் செல்வதால், என்னிடம் எதையும் சமைத்து எடுத்து வர சொல்ல மாட்டார்கள். நானும் போய் நன்றாக கட்டிவிட்டு, பிறகும் பார்சலும் கட்டிக்கொண்டு வருவேன்.



சென்ற வாரம், பாட்லக்கிற்கு செல்லும் போது, மனைவியின் தோழி கேட்டார்.

“சமைக்கிறீங்களா? ஒழுங்கா சாப்பிடுறீங்களா? காலையில என்ன சாப்பிட்டீங்க?”

“பொங்கல், வடை, சட்னி” (முந்திய தினம், இன்னொரு வடை எக்ஸ்பெர்ட் நண்பர் வந்து செய்து கொடுத்துவிட்டு சென்றார்)

அவருக்கு ஆச்சரியம்.

“ஆஹா!!! என்னங்க இது? அடுத்த முறை, உங்களுக்கும் ஒரு ஐட்டம் கொடுக்க போறோம்...”

இப்பொழுது என் வாழ்க்கையில் மூன்றே மூன்று தினசரி நடவடிக்கைகள் தான் நடைபெறுகிறது. அலுவலக வேலை, வீட்டுக்கும் நண்பர்களுக்கும் போன், சமையல். இதுவரை செய்யாத ஒரு ஐட்டத்தை முதல்முறை செய்து முடிக்கும் போது, பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. போன வாரம் ஒருநாள், வத்தக்குழம்பு. நேற்று, மீன் குழம்பு. இதோ, இன்று சிக்கன் செய்ய வேண்டும்.

காலையில் ஒரு உறவினரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

”தனியா இருக்கோம்ன்னு சாப்பிடமா இருக்காதே? எதையாவது செஞ்சு சாப்பிடு! சரியா?”

“சரி”. மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

.

Saturday, October 15, 2011

இந்திய விசிட்

சென்ற வாரம் இந்தியா வந்து திரும்பினேன். குறுகிய கால விசிட். ஒரு வாரம் தான் இருக்க முடிந்தது. இருந்தாலும், ரொம்ப மகிழ்வாக இருந்தது.



வீடு, உறவினர்கள், நண்பர்கள், குலதெய்வம் கோவில், இந்திய உணவுகள் என அனைத்தும் சந்தோஷத்தை கொடுத்தது. நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டும், பல நண்பர்களை பார்க்க வேண்டும், சில படங்கள் பார்க்க வேண்டும் என டார்கெட்டுகள் இருந்தாலும், அதுவெல்லாம் முழுமை பெறவில்லை.

---

டென்வரில் இருந்து பெங்களூர் வரும் வரை எந்த சோர்வும் தெரியவில்லை. பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து வீடு செல்வதற்குள் டயர்டாகிவிட்டோம். முன்பு, இப்படி யாராவது சொல்லும் போது, (இருக்கும் இடத்தை மட்டம் தட்டுவது போல்) நானே கடுப்பாவேன். என் அனுபவ பகிர்வே, இப்போது அப்படி தான் இருக்கும் போல.

என்ன இருந்தாலும், சொர்க்கமே என்றாலும்....

பெங்களூரில் இன்னமும் பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு இடத்தில் ரெடியானால், அடுத்த இடத்தில் குழி தோண்ட தொடங்கிவிடுகிறார்கள். 2003 இல் பெங்களூர் வந்தபோது, ஊருக்குள் பல இடங்களில் பாலம் கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது புறநகர் பகுதிகளில். அவுட்டர் ரிங் ரோடு, புது ஏர்போர்ட் ரோடு போன்றவை உருவானபோது, அந்த ஏரியாக்கள் வெறிச்சோடி இருக்கும். இப்போது அந்த சாலைகள் நெரிசலை தாங்க முடியாமல்,ஒவ்வொரு சந்திப்பிலும் பாலங்கள் கட்டப்படுகின்றன. ரொம்ப நாட்கள் கூட ஆகவில்லை. என்ன காரணம்? சரியான தொலைநோக்கு பார்வை இல்லாததாலா? இல்லை, தொலைநோக்கையெல்லாம் அடிச்சி நகட்டும் வேகமான நம்மூர் விரிவாக்கமா?

---

எங்கேயும் எப்போதும், முரண், வாகை சூட வா, சதுரங்கம் என பல படங்கள் இம்முறை பார்க்க தூண்டியது. எங்கேயும் எப்போதும் மட்டுமே பார்த்தேன். அதுவும் நேரமே கிடைக்காமல் செகண்ட் ஷோ சென்று பார்த்தேன்.

சுவாரஸ்யமான காட்சிகள், அதிர வைக்கும் ஒலி என்று இருந்தாலும், எனக்கு தூக்கம் கண்ணை சுழட்டியது. அவ்வளவு சோர்வு. இதையெல்லாம் மீறி, ஆசைக்கு ஒரு படம் பார்த்தாச்சு!

அப்புறம் ஆசைக்கு இரு நாட்கள் தூத்துக்குடி புரோட்டாவும் ஆச்சு.

---

தூத்துக்குடியில் சும்மாவே வெயில் பட்டையை கிளப்பும். இப்ப, பகலில் மூன்று மணி நேரம் பவர் கட் வேறு. சும்மா ஜிவ்வென்று இருந்தது. இதற்காகவே, பகலில் தூங்கிவிடுவேன். சாயங்காலமும் வெக்கைக்கு குறைச்சல் இருக்காது.

அதுவே, கிராமப்புறம் பக்கம் சென்றபோது, அங்கிருக்கும் மரங்களால் சில்லென்ற காற்று, சுகமாக இருந்தது. விட்டால், அப்படியே படுத்து அங்கேயே உருளலாம் போல இருந்தது.

---

டென்வர், வாஷிங்டன், துபாய், சென்னை, பெங்களூர் என ஐந்து ஏர்போர்ட்களை இந்த பயணத்தின் போது கண்டேன். டென்வர் சிறியது. சுற்றிலும் வெட்டவெளி. வாஷிங்டன், பகலில் மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருந்தது. வீடுகள் அழகாக வரிசையாக கட்டப்பட்டிருந்தது, வெவ்வெறு வடிவத்தை காட்டியது. ஆனால், இரவில் ஒளி வெளிச்சம் அவ்வளவாக இல்லை. துபாய் இரவில் மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருந்தது. இரவிலும் வெதுவெதுப்பாக இருந்தது.

சென்னை ஏர்போர்ட் தற்சமயம் ஊருக்கு மத்தியில் வந்துவிட்டது. எங்கும் வீடுகள். சிறிது சிறிதாக. நெருக்கமாக. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தென்னை மரத்தை பார்க்க முடிந்தது. ஆனால், ஏர்போர்ட் மோசமாக இருந்தது, சென்னையில் தான்.

விமான நிலைய கட்டிடத்திற்கு கூட்டி செல்லும் பஸ், ரொம்ப மட்டமாக இருந்தது. தீய்ந்த டயர் வாடை வந்தது. குப்பைகள். ஒழுகும் பைப்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு, மோசமான வரவேற்பாக இருக்கும். புது கட்டிட கட்டுமான வேலை நடப்பதால், இப்படி இருக்கலாம். ஒவ்வொரு ஹாலின் ஓரத்திலும், நமது பாரம்பரிய சிலைகளை வைத்திருந்தது, நல்ல விஷயம். ஆனாலும், பெரிய கவர்மெண்ட் ஆபிஸாகவே, இந்த ஏர்போர்ட் இருக்கிறது.

---

கிட்டத்தட்ட வெளிநாட்டு ப்ராண்டுகள், அனைத்தும் இந்தியாவில் கடைவிரித்துவிட்டதாக தெரிகிறது. மெக் டொனால்டு, கேஎப்சி, பிஸ்ஸா ஹட், டகோ பெல்ஸ், பாப்பா ஜோன்ஸ், சப்வே, ரீபோக், நைக், அடிடாஸ் என அனைத்தையும் காண முடிகிறது. ஐட்டங்கள் இந்திய ப்ளேவரில் கிடைப்பது விசேஷம். உதாரணத்திற்கு, செட்டிநாடு பிஸ்ஸா என ஒரு விளம்பரத்தை பாப்பா ஜான்ஸில் காண முடிந்தது. மெக் டொனால்ட்ஸை கிருஷ்ணகிரி பக்கமும் ஹைவேயில் பார்த்ததாக ஞாபகம்.

---

ரோடு ரூல்ஸ் எல்லாம் எல்லா பக்கமும் ஒன்று தான் போல. அமெரிக்காவில் இருப்பது போன்ற சாலை குறியீடுகள் தான், இங்கும் இருக்கிறது. ஆனால், ஒரே வித்தியாசம். நாம் அதை கவனிப்பதில்லை. சாலையில் நாம் ரூல்ஸ்களுக்காக கவனிப்பது - ட்ராபிக் போலீஸை மட்டும் தான். நம்மூரில் சாலையில் பயணம் செய்ய, விசேஷ திறமை தேவை. அது அதாகவே ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருப்பது, இன்னும் விசேஷம்.

---

டென்வருக்கு திரும்பும் போது, நான் மட்டும் தான் வந்தேன். தனிமையின் பலன் - எழுதி கிழிக்கலாம் என்றிருக்கிறேன். ஐயோ பாவம்! நான் உங்களை சொன்னேன். :-)

.