Thursday, December 30, 2010

மன்மதன் அம்புஎன்னையும் நம்பி ஒரு ஜீவன் கேட்டதால் இப்பதிவு.

நான் அவ்வப்போது படம் பார்க்கும் ஒரு தியேட்டரில், ஆன்லைன் ரிசர்வேஷன் கொண்டு வந்திருந்தார்கள். படம் வெளிவந்த அன்று காலை, 'ஆன்லைன் ரிசர்வேஷனில் ரஜினி படம் vs கமல் படம்' என்று ட்விட்டரில் ஒரு விவாதம் பார்த்தேன். பிறகு, இந்த தியேட்டரில் ஆன்லைன் ரிசர்வேஷன் நிலையைப் பார்க்கலாம் என்று சென்றேன். நான் தான் முதல் போணி.

ரிசர்வ் செய்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்றால், முதல் போணி மட்டுமல்ல, ஒரே போணி என்றும் தெரிந்தது. தியேட்டருக்குள் சென்றால், சொற்ப கூட்டம். முதல் நாள் கமல் படத்திற்கு இந்நிலையா? என்று ஆச்சரியமாக இருந்தது. இதற்கும் கே.எஸ். ரவிக்குமார் படம், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு.

ரொம்ப சிம்பிளான கதை. அதை எவ்வளவு கஷ்டமா கொடுக்கணுமோ, அப்படி கொடுத்திருக்கிறார்கள். இதற்கு தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சூர்யாவை, ஒரு பாடலுக்கு ஆட சொல்லியிருக்கிறார்கள். கன்னடத்தின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரமேஷ் அரவிந்திற்கு மொட்டையடித்திருக்கிறார்கள். மற்றபடி, நிறைய பேருக்கு கண்ணுக்கு தெரியாவண்ணம் மொட்டையடித்திருக்கிறார்கள்.

இது என்ன வகை படம் என்பதை புரிந்துக்கொள்ள முடியாதவண்ணம் படமெடுத்திருப்பது என்ன வகை நவீனத்துவம் என்று தெரியவில்லை. சில நேரங்களில் கௌதம் படத்தில் வருவதை போல வசனம் பேசுகிறார்கள். சில நேரங்களில் அதற்கு மேலே, மலையாளம், தெலுங்கு, பிரென்ச் என்று என்னை போன்றவர்களுக்கு ஒன்றுமே புரிந்துவிட கூடாது என்பது போல் பேசுகிறார்கள். Alimony என்றால் என்னவென்று வீட்டுக்கு சென்று டிக்‌ஷனரி எடுத்து பார்க்கவேண்டியதாக போய்விட்டது. அடுத்து கமல் வசனத்தில் வரும் படத்திற்கு, கையோடு டிக்‌ஷனரி எடுத்த செல்லலாம் என்றிருக்கிறேன்.

அதைப்போல் கண்ணீர் வடிய சீரியஸாக பேசுகிறார்கள். அதற்கு அடுத்த காட்சியில், மொக்கை காமெடி போடுகிறார்கள். அதற்கு, அடுத்த காட்சியில் அறிவுபூர்வமாக பேசுகிறார்கள். கமல் விஜய் டிவியில் பேசியதை போலவே, படத்திலும் பேசுகிறார். கமலுக்கும், த்ரிஷாவுக்கும் எப்போது காதல் வந்தது, எப்படி காதல் வந்தது என்று போட்டி வைத்தால், பரிசு கொடுப்பது மிச்சம். மாதவனுக்கும், சங்கீதாவுக்கும் எப்படி காதல் வந்தது என்று சொன்னால், அடுத்த கமல்-ரவிக்குமார் கதை டிஸ்கஷனில் நீங்களும் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள்.

முட்டு சுவர், நடு ரோடு என்று வலிந்து திணிக்கப்பட்ட நிறைய குறியீடுகள் இருக்கிறது. பாராட்டுவார்கள் என்று பார்த்தால், ஒருவரும் பாராட்ட மாட்டேங்கிறார்கள்.

’நீல வானம்’ பாடல் படமாக்கத்திற்கு கமல் எப்படி வாயசைத்திருப்பார் என்று யோசித்ததிலேயே பாடல் முடிந்துவிட்டது. படத்தின் பாராட்டுக்குரிய ஒரே விஷயம் இதுதான்.

த்ரிஷா, சங்கீதா இருக்கும் காட்சிகளில் த்ரிஷாவை விட சங்கீதாவையே நிறைய பேர் பார்த்திருப்பார்கள் என்பது நிச்சயம். இதுதான் சங்கீதாவின் ஒரிஜினல் குரல் என்றால், இவர்தான் ‘நித்தி பக்தை’ மாளவிகாவிற்கு குரல் கொடுப்பவரா? இந்த படத்தில் த்ரிஷாவின் அம்மா நடித்திருப்பதாக செய்திகள் வந்ததே? எந்த வேடத்திற்காக இருக்கும்?

படத்தின் ஆறுதலான விஷயங்கள், ஒளிப்பதிவும், இசையும்.

கமல், ரவிக்குமாரை கூடியவிரைவில் சந்தானபாரதி ஆக்கிவிடுவார் எனத் தோன்றுகிறது. கமல் பேச்சை கேட்காததால் தான், ரவிக்குமாரால் கமலை வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுக்க முடிகிறது என்பார்கள். ரவிக்குமார், கமல் பேச்சை கேட்க தொடங்கிவிட்டார் போலும்.

கமல் அறிமுகமாகும் ஆரம்பக்காட்சிக்கு தியேட்டரில் கிடைக்கும் வரவேற்ப்பை நினைத்துப்பார்க்கும்போது, கமலை வைத்து இந்த பட்ஜெட்டில் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பிரமாண்ட கப்பல், அழகழகான லொக்கேஷன்கள், ஹெலிகாப்டர் ஒளிப்பதிவு என அனைத்து பிரமாண்டங்களையும், படத்தின் திரைக்கதையும், முடிவும் அமுக்கிவிடுகிறது.

Huge-budget films are good as long as they have solid content. இது கமல் சொன்னது. கமலுக்கே சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

.

Thursday, December 23, 2010

நன்றி தமிழ்மகன்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதி உயிர்மை பதிப்பகத்தின் வெளியிட்டில் வந்திருந்த ”செல்லுலாயிட் சித்திரங்கள்” என்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன். தமிழ்மகன், தனது திரையுலக அனுபவங்களைப் பற்றி சுவையாக எழுதிய புத்தகம் இது. உயிரோசையில் தொடராக வந்தது. அவருடைய வலைத்தளத்தில் வருவதை வாசித்திருக்கிறேன். பின்னூட்டங்களும் இட்டிருக்கிறேன்.இன்று அந்த புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.

முதல் பக்கத்தில் நன்றி சொல்லியிருந்தார், ஒரு கூட்டத்திற்கே. இப்படி.

நன்றி

என். சொக்கன், பாஸ்டன் பாலா, உண்மைத்தமிழன், ஆயில்யன், ராஜம் ரஞ்சனி, கே. பாலமுருகன், வா.மணிகண்டன். ஜோ, வண்ணத்துப்பூச்சியார், ஆதவன், இலா, நிலோபர் அன்பரசு, வெங்கடரமணன், ஏ.மாரீஸ்வரன், வினோத் கௌதம், முரளிகண்ணன், ராமசுப்ரமணிய சர்மா, தமிழ் ஸ்டூடியோ.காம் அருண், கேபிள் ஷங்கர், ராஜா, சரவணகுமரன், தமிழ் சினிமா, கோவை ரகுநாதன் என ஊக்கமளித்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி எழுதிய வலைவாசி நண்பர்களுக்கு பிரத்யேகமாக.


தெரிந்த பெயர்களாக இருக்கிறதே? என்று வாசித்ததில் என் பெயரும் வந்தது. அது நானாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

எதிர்ப்பார்க்காமல் கண்ணில் பட்ட விஷயம், ரொம்ப மகிழ்வை கொடுத்தது. பின்னூட்டத்திற்கு இப்படி ஒரு நன்றியா?

உங்க நன்றிக்கு ரொம்ப நன்றி சார்.

.

Friday, December 17, 2010

விஜய், சில்வர்ஸ்பூன் சில்பாக்குமாரா?

முதலில் இந்த வீடியோவை பார்க்க முடிந்தவர்கள், பார்த்துவிட்டு வரவும்.சும்மா சொல்லக்கூடாது. கவுண்டமணி ஞானிதான்.

முன்பெல்லாம் எனக்கு காமெடி பதிவு எழுத வேண்டுமென்றால், ஈஸியாக இருந்தது - விஜய் பற்றி எழுதுவது தான். இவ்வருட ஆரம்பத்தில் சபதம் செய்துகூட, அதை நிறுத்தி வைத்தேன். இதோ, இவ்வருட இறுதியில், விஜய் ஆதரவு டோனுடன் இப்படியொரு பதிவு எழுதுவேன் என்று நினைத்தே பார்க்கவில்லை.

2010 - விஜய்யின் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம் தான். இந்த வருடம் வெளியான ஒரே விஜய் படம், சுறா. இன்னொன்று வெளியாகும், வெளியாகும் என்று சொல்கிறார்கள். வெளிவந்த பாடு இல்லை.இதுவரை விஜய் படம் நன்றாக இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். படம் சரியாக போகவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த வருடம் தான், விஜய்யின் கடைசி அரை டஜன் படங்கள் ப்ளாப் என்று வெளிப்படையாக விஜய்க்கு எதிராக சினிமா துறையிலேயே குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்திருக்கிறது. இப்போது தான், ஒரே மாதிரி படங்களிலும் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதெல்லாம் பரவாயில்லை. இனி சரி பண்ணிடலாம் என்று ஒரு நம்பிக்கை வரும் வண்ணம் காவலன், வேலாயுதம் மற்றும் 3 இடியட்ஸ் எனத்தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்தார். இப்ப, என்னவென்றால், ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இன்னொரு படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நல்லவேளை, வேலாயுதம் பற்றி எவ்வித நெகட்டிவ் செய்தியும் இதுவரை வரவில்லை. படம் முடியட்டும், பார்க்கலாம்.

தமிழ் திரையுலக விநியோக அதிகாரம் ’நிதி’களிடம் சிக்கியபோது, படங்களின் வெற்றியும், பெரும்பகுதி லாபமும் இவர்களையே சேரும் என்பது மட்டுமே முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால், விஜய் போன்ற ஒரு முன்னணி நடிகரே, இவர்களிடம் படும் பாட்டை பார்க்கும்போது தான், இவர்கள் திரையுலகம் மீது கொண்டுள்ள முழு கட்டுப்பாடும் தெரிகிறது. எனக்கு தெரிந்த ஒரு அஜித் ரசிகரே, ‘ஐயோ பாவம், விஜய்!’ என்று வருத்தப்படுகிறார்.

விஜய்க்கு மக்கள் ஆதரவை பெற நல்ல வாய்ப்பு. ஏற்கனவே, கலைஞர் பாராட்டுவிழாவில் அஜித்தின் பேச்சுக்கு கிடைத்த ஆதரவை நினைத்து பாருங்கள்.

விஜய்யின் அரசியல், இதுவரை எவ்வித காரணங்களும் இன்றி ஒரு காமெடி விஷயமாகத்தான் இருந்தது. அவர் அரசியலுக்கு வருவதற்கு எவ்வித நேர்மையான உந்துதலோ, உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமோ இருந்ததில்லை. ஏழைகளுக்கு தானம் செய்வதைக்கூட, தயாரிப்பாளர்களின் ஸ்பான்சருடன் செய்வதாகவே தெரிகிறது.

இவர்கள் இப்போது விஜய்க்கு கொடுக்கும் பிரஷரைப் பார்க்கும்போது, அவருடைய அரசியல் ஆசையை சீரியஸாக ஆக்கிவிடுவார்களோ என்று பயப்பட வேண்டி இருக்கிறது. இது அரசுக்கு எதிராக இருக்கும் உணர்வுகளை, தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் விஜய்யின் திட்டமாகக்கூட இருக்கலாம்.

ரஜினி, கமல், அஜித், சூர்யா என சினிமாவின் மேல் மட்டும் முழு கவனம் கொண்டவர்கள், இவர்களை அனுசரித்தே செல்கிறார்கள். தற்சமயம் ‘பாக்ஸ் ஆபிஸ் செல்லம்’ என்றழைக்கப்படும் சூர்யாவின் கடைசி ஐந்து படங்களும், இவர்கள் தயவில் வெளிவந்தவை. அதுபோல் ரஜினி, கமல் நடித்ததும், அஜித் நடித்துக் கொண்டிருப்பதும் ‘நிதி’களின் படங்களே. விஜய்யும் அப்படி சென்றவர்தான். எந்த தைரியத்திலோ அல்லது வேறு வழியில்லாமலோ, இப்போது எதிர் வழியில் செல்கிறார்.

ஒருவகையில் வீரன் போல் தெரிந்தாலும், முடிவில், அட்லீஸ்ட் அடுத்த வருட இறுதியில் என்னவாகிறார் என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

.

Thursday, December 9, 2010

வாட்டர் சர்வீஸ்இதுவரை எனது பைக்கை தனியாக வாட்டர் சர்வீஸுக்கு விட்டதில்லை. பைக் சர்வீஸ் விடும்போது, அவர்கள் அதையும் செய்துவிடுவதால், அப்போது மட்டும் தான். அலுவலகத்தில் இதுவரை வண்டி, வெளியில் வெட்டவெளியில் நிற்பதால், அவ்வப்போது மழையே வண்டியை கழுவிவிட்டு விடும். நானும் வண்டியை எடுக்கும்போது, லைட்டாக துடைத்துவிட்டு எடுப்பேன்.

மற்றபடி, நானாக தண்ணீரை பீச்சியடித்து துடைத்தது கிடையாது. ஆனால், அப்படி செய்யவேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.

வண்டி வாங்கிய புதிதில், வாரயிறுதிகளில் ஆரம்ப ஜோரில் வண்டியை கழுவி துடைத்திருக்கிறேன். பிறகு, கொஞ்ச கொஞ்சமாக நிறுத்தி, இப்பொழுதெல்லாம் கழுவுவதும் இல்லை. துடைப்பதும் இல்லை. நான் உட்காரும் இடம், பேண்ட் படும் இடத்தை மட்டும் துடைத்து விட்டு உட்காருவேன். பின்னால் உட்கார்பவர்கள், அவர்களது இடத்தை துடைத்துவிட்டு உட்கார வேண்டும்!

ஏன் இதுவரை பைக்கை வாட்டர் சர்வீஸுக்கு விட்டதில்லை என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய ஒரு உயர்ந்த நோக்கத்தினால் உருவான உருப்படாமல் போன செயல் என்று அதை வர்ணிக்கலாம். அது என்ன உயர்ந்த நோக்கம்? நமக்கான வேலைகளை, நாம் தான் செய்ய வேண்டும் என்று காந்தி சொன்னார் அல்லவா? அதை முடிந்தவரை செயல்படுத்தியதால் வந்த வினை. அப்ப, என்னுடைய பைக் கண்றாவியாக இருப்பதற்கு காந்தியா காரணம்?

அடச்சே! எதையோ சொல்ல வந்து, எதைதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நமக்கான வேலையை, நாம் தான் செய்ய வேண்டும் என்ற கொள்கையால், வண்டி கழுவுவது சிம்பிளான வேலை, அதை எதற்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும்? நாமே செய்து விடலாம் என்று பிரமாதமாக திட்டமிடுவேன். திட்டமிட்ட நேரத்தில், அதை விட அதி முக்கியமான காரியங்கள் வந்துவிடுவதால், திட்டம் திட்டமாகவே முடிவு பெற்றுவிடும்.

---

சமீபத்தில் ஏதோ ஒரு வேலையாய், ஒரு வாட்டர் சர்வீஸ் கடையை கடக்க, உடனே வண்டியை வாட்டர் சர்வீஸ் செய்துவிடலாம் என்ற எண்ணம் வர, விசாரித்தேன். ஐம்பது ரூபாயாம். காலையில் வர சொன்னார்கள்.

அடுத்த நாள் செல்லும்போது, ஒரு மணி நேரம் கழித்து வரச் சொன்னார்கள். எனக்கு வேறொரு வேலை இருந்ததால், அங்கிருந்து கிளம்பிவிட்டேன். போகும் வழியில், ஒரு ஏரியில் லாரி, வேன்களை கழுவிக்கொண்டு இருந்தார்கள். அதை பார்த்தவுடன், அங்காவது போர் தண்ணி. இங்க பக்கத்துல ஏதாச்சும் சர்வீஸ் செண்டர் இருந்தா, நல்லா தாராளமா ஏரி தண்ணியை வச்சு வண்டி கழுவுவாங்களே என்றொரு ஸ்மார்ட் யோசனை கிளம்பியது.

அருகில் இருந்த ஒரு மெக்கானிக்கல் ஷாப்பில் கேட்டதற்கு, தள்ளி இருந்த ஒரு சந்தை நோக்கி கைக்காட்டினார்கள். அந்த ஏரியா ஒரு பழைய கிராமம். நகர வளர்ச்சிக்கேற்ப மாற்றங்கள் இருந்தாலும், கிராமத்து தோற்றம் ஆங்காங்கே இன்னமும் தெரிந்தது. அந்த சந்தில் இருந்த கடையில், ஒரு பையன் தனியாக உட்கார்ந்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தான். கடையின் முன்பு, ஈரமாக இருந்ததால், அது தான் வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை என்று தெரிந்தது.

வாட்டர் சர்வீஸ் என்று கேட்டேன். ஆமாம் என்று சொல்லிவிட்டு, உடனடியாக வேலையை ஆரம்பித்தான். நான் தள்ளி நின்று பார்க்க ஆரம்பித்தேன்.

அவனுக்கு இருபது-இருபத்தைந்து வயதிருக்கும். கொஞ்சம் குள்ளமாக, ஒல்லியாக இருந்தான். கடைக்குள் சுருண்டிருந்த ஒயர், ட்யூப் எல்லாவற்றையும் விரித்தெடுத்தான். ஒயரில் இருந்த ஸ்விட்சைப்போட, தண்ணீர் பீறிட்டு அடித்தது.

நான் வாட்டர் சர்வீஸ் என்றால், தண்ணீரை நன்றாக அடித்து, பிறகு துடைத்துவிடுவார்கள். அவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன். அவன் அதற்கு பிறகு, உள்ளே சென்றேன். தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து, ஒரு வாளியில் ஊற்றினான். அதென்ன தொட்டி தண்ணீர்? காவிரி தண்ணீரோ! பிறகு, ஒரு கேனில் இருந்து ஏதோ ஒரு திரவத்தை கொஞ்சம் ஊற்றினான். கலக்கியவுடன் வந்த நுரையைப் பார்த்தவுடன், அது ஏதோ சோப்பு தண்ணி என்று தெரிந்தது.

வண்டியில் ஒரு இடம் பாக்கியில்லாமல், சுற்றி சுற்றி வந்து, அழுக்குத் தேயக் கழுவினான். சும்மா சொல்லக்கூடாது. கொஞ்ச நேரத்திற்கு, வண்டியை அவனுடையதாகவே நினைத்துக்கொண்டான் போலும். ஒரு சின்ன தூசுவைக்கூட விடாமல், முழு அர்ப்பணிப்புடன் தேய்த்து தேய்த்து கழுவினான். வண்டி உஜாஜாவிற்கு மாறியது.

அந்த கடையின் பின்பக்கத்தில் தான் அவர்களது வீடு இருக்கிறது. கடையின் வழியாகவே, வீட்டிற்கு செல்ல முடியும். அந்த வழியில் ஒரு வயதான் அம்மா உள்ளே சென்றார்கள். நான் கடை வாசலில் ரொம்ப நேரமாக நிற்பதை கண்ட அவர், கடையின் முன்னால் இருந்த சேரில் உட்கார சொன்னார்கள். அவர்கள் கிருஸ்தவர்கள். கடையின் உள்ளே, கிருஸ்மஸுக்காக ஒரு குடில் செட்டப் செய்து வைத்திருந்தார்கள். பெரும்பாலும், உடைக்கப்பட்ட கற்கள், வாகன குழாய்கள் என பழைய பொருட்களைக் கொண்டே செய்திருந்தார்கள். யேசுவின் உண்மையான குடிலாக அது இருந்தது.

அதற்குள், சோப்பு போட்டு முடித்தவன், திரும்ப தண்ணீர் அடிக்க துவங்க, அது என் மேல் தெறிக்க ஆரம்பிக்க, நான் எழுந்து பழையபடி தெருவிற்கு வந்தேன். வண்டியைப் பார்க்க ரொம்ப திருப்தியாக இருந்தது. சாவியைப் போட்டு, வண்டியை எடுத்துக்கொள்ள சொன்னான். எவ்வளவு என்று கேட்டு, ஐம்பது ரூபாய் கொடுத்தேன். ஓட்டும்போது, கண்ணாடியில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர், எனது இரு கைகளிலும் விழுந்துக்கொண்டிருந்தது. நிலத்தடி தண்ணீரா, ஏரி தண்ணீரா, காவிரியா தெரியவில்லை.

எனது வீட்டில் இருந்து, இந்த கடை சிறிது தொலைவுதான். இருந்தாலும், அடுத்த முறை இங்கேயே வரலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன். காந்தி கொள்கை போனாலும் சரி!

.

Monday, December 6, 2010

ரத்த சரித்திரம்

என்னுடன் முன்பு நிறைய ஆந்திர நண்பர்கள் வேலைப் பார்த்தார்கள். அடிக்கடி பரிதாலாரவி பற்றிப் பேசிக் கொள்வார்கள். நானும் என்ன எதுவென்று கேட்டிருக்கிறேன். இவர் அவரைக் கொல்ல, அவர் இவரைக் கொல்ல என ஒரேக் கதையை திருப்பி திருப்பி சொன்னது போல் இருக்கும். அதைத்தான் ராம் கோபால் வர்மா படமாக எடுத்திருக்கிறார்.

கதையின் களமான ஆனந்தப்பூருக்கு, ஒரு ஆந்திர நண்பரின் கல்யாணத்திற்கு சென்று வந்திருக்கிறேன். இப்போதுதான் தெரிகிறது, நான் சென்று வந்தது ரத்த பூமியென்று.

நம்மூரிலும் இதைப்போல், இதைவிட சூடான பழிவாங்கும் கதைகளைக் கேட்டு இருக்கிறேன். சொன்னால், சாதிப்பிரச்சினைத்தான் வரும். சரி, இந்த படத்தைப் பற்றி பார்ப்போம்.

ரங்கீலா மட்டும்தான் நான் பார்த்த ஒரே ராம்கோபால் வர்மா படம். அவருடைய படங்களைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம், பார்க்க தோன்றும். ஆனால், பார்த்ததில்லை. இப்ப, சூர்யா உபயத்தில் பார்க்க நேர்ந்தது.

‘நான் மகான் அல்ல’ படத்தின் விளம்பரம் பார்த்து சென்றவர்களுக்கு, படம் அதிர்ச்சியளித்திருக்கும். அழகான காதல் படம் போல் காட்டி, வன்முறையை அள்ளி தெளித்திருப்பார்கள். இதில் விளம்பரத்திலேயே ரத்தத்தை அள்ளி தெளித்திருந்ததால், அங்கு சென்று துடைத்துக்கொள்ள வசதியாக இருந்தது.

காந்தி சிலைக்கு முன்பு நடக்கும் கொலை, சிவன் படத்திற்கு முன்பு நடக்கும் கத்திகுத்து என வன்முறைக்காட்சியில் கூட யோசிக்க வைத்திருக்கிறார்கள். ரொம்ப ப்ளேயினான பழிவாங்கல் கதையாக இருந்தாலும், ராம்கோபால் வர்மாவின் படத்தை முதல்முறையாகப் பார்ப்பதால், எனக்கு சலிப்பு வரவில்லை.

ராம் கோபால் வர்மாவின் 360 டிகிரி கேமரா கோணம் பற்றி பலர் புகழ்ந்திருந்த காரணத்தால், ஏதேதோ கற்பனை செய்துக்கொண்டு அதைக் காண ஆர்வமாக இருந்தது. பார்க்கும்போது, இதுதானா அது என்று சப்பென்றாகிவிட்டது. கவனத்தை கலைப்பதால், சீக்கிரம் ஜீரோ டிகிரிக்கு கொண்டு வாங்கப்பா என்று தோன்றியது. கலர்புல்லாக படங்களைப் பார்த்துவிட்டு, இந்த டோனில் படம் பார்க்க, வித்தியாசமாகவும் அதே சமயம் கொஞ்சம் பழையப்படம் பார்ப்பது போலவும் இருந்தது.

ஹிந்திப்படங்களில் நடிக்கும் தமிழ் நடிகர்களுக்கு பெரிய கேரக்டர்கள் எதுவும் வந்து சேராது. தென்னிந்திய ஹீரோக்கள் என்றுக்கூட சொல்லலாம். கன்னட ஸ்டார் சுதீப் (இவர் இயக்குனரும் கூட), இந்த படத்தில் ஒரு சின்னக் கேரக்டரில் ஆனால் சிறப்பான நடிப்பில் வந்து செல்கிறார். சூர்யா போய் கொஞ்சம் வெயிட்டான கேரக்டர் வாங்கி வந்திருக்கிறார். சூர்யாவினால், வர்மாவின் சமீபகாலப்படங்களை விட இது கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கும் என நினைக்கிறேன். எக்ஸ்ட்ராவாக இந்த படத்திற்கு தமிழ்நாடு மார்க்கெட் கிடைத்திருக்கிறதே? (ஆனால், படம் லாஸ் என்று சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்பதாக, இப்போதே ஒரு நியூஸ் கேள்விப்படுகிறேன்)

சூர்யா நடிப்பு எப்படி? கடைசியில் சொல்கிறேன்.

நிறைய முக்கியமான காட்சிகள், ஸ்லோமோஷனில் வருகிறது. ஸ்லோமோஷனில் வருவதால், முக்கியமான காட்சி என்றுக்கூட தோன்றியிருக்கலாம்.

அதில் கோர்ட்டுக்கு சூர்யாவை கொண்டு வரும் சீன் நன்றாக இருந்தது. கோர்ட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் மீதும், படம் பார்க்கும் நமக்கே சந்தேகம் வரும்படி அமைத்திருந்தார்கள்.படத்தில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரம் ‘சூரி’. இந்த சூரி தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர் சிறையில் இருந்தப்போதுதான், ராம் கோபால் வர்மா அவரை இந்த படத்திற்காக சந்தித்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகம் பார்த்தப்பிறகே, சூரி சில ஆட்சேபனைகளை ராம் கோபால் வர்மாவிடம் சொல்லியிருக்கிறார். ராம்கோபால் வர்மாவோ, அடுத்த பாகம் வரும்வரை பொறுத்திருக்க சொல்லிருக்கிறார். பொறுத்திருந்து தற்போது இந்த படத்தைப் பார்க்க, ஹைதராபாத்தில் இருந்து சனிக்கிழமை பெங்களூரில் வந்திருக்கிறார். பாதுகாப்பு கருதி, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் வந்து படம் பார்த்திருக்கிறார்.

டிவி பாம் சம்பவம், பரிதாலா ரவிக்கு சாதகமாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறியவர், ராம் கோபால் வர்மாவுக்கு அங்கிருந்தே போன் போட, அவர் எடுக்கவில்லையாம்.

சூரி, இப்ப சூர்யாவின் ரசிகராகிவிட்டாராம். சில காட்சிகளின்போது கண்ணீர் விட்டவர், தன்னுடைய அம்மா, தங்கை, அண்ணன் இறந்தக்காட்சியில் தான் பட்ட வேதனையை, சூர்யா சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சூர்யாவை பாராட்டியிருக்கிறார் சூரி.

நிழலை நிஜம் பாராட்டியிருப்பது, நிழலுக்கு பெருமைதானே!

.

சன் டிவி ரியாலிட்டி ஷோஒரு ஆல மரத்தடியில் மக்கள் கூடி நிற்கிறார்கள். இன்னும் குற்றம் சாட்டப்பட்டவரும், பிராதுக் கொடுத்தவரும் வந்து சேரவில்லை.

அதற்கு முன்பே வந்து சேர்ந்த மக்கள், தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

“இவ்வளவு நாளா நமக்கெல்லாம் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவருக்கே இந்த நிலைமை?” - ஊர் பெருசு ஒருவருக்கு ஓவர் வருத்தம்.

பஞ்சாயத்து தலைவர் மேலேயே குற்றம் சாட்டியிருக்கிறார்கள் போல.

“எல்லாம் அவருடைய பொண்ணாலத்தான்?”

சொந்த பொண்ணாலயே, பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்துக்கு இழுக்கப்பட்டிருக்கிறார். பிராதுக்கொடுத்தவரும் வந்துவிட்டார். இன்னும் பஞ்சாயத்து தலைவர் வரவில்லை.

யாருடா அது? என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு அம்பாஸிடர் கார் வந்தது. இறங்கியது நடிகர் விஜயக்குமார். இடது கையில் கட்டு போடப்பட்டிருந்தது.

அந்த ஊர் பெருசு ஓடி சென்று,

“என்னய்யா ஆச்சு?”

“அது சொந்த கதை. சோக கதை”.

தங்கம் சீரியல். 06-12-2010. இரவு 8:30 PM.

.

Sunday, December 5, 2010

கடனுக்கு மரியாதைஎன்னுடைய நண்பர் ஒருமுறை ஊருக்கு போவதற்காக, பெங்களூர் மடிவாளாவில் இருக்கும் தனியார் பேருந்து நிறுவன அலுவகங்களில் ஏறி இறங்கினார். கடைசி நேரம் என்பதால், எதிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பஸ்ஸில் மட்டும் ஒரு டிக்கெட் இருந்தது. இவரும் மகிழ்ச்சியாக பர்ஸைத் திறந்து, பணத்தை எடுத்தவாறே, ‘எவ்வளவு?’ என்று கேட்க, பணத்தைப் பார்த்த பேருந்து நிறுவன ஊழியர், “சார், இது இண்டர்நெட் டிக்கெட். கிரெடிட் கார்டு வேணும்.” என்றிருக்கிறார்.

இவரிடம் கிரடிட் கார்டு அந்நேரம் கிடையாது. எவ்வளவு சொல்லியும் பணத்திற்கு அந்த டிக்கெட்டைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? என்பது போல் கேட்டுவிட்டு, இன்னொரு நண்பரை அழைத்து, அவரிடம் இருந்து கிரெடிட் கார்டை, கிரெடிட்டில் வாங்கி, நண்பர் பிறகு டிக்கெட்டை வாங்கினார்.

“கிரெடிட் கார்ட் என்பது ஒரு கடனட்டை. கையில் வைத்திருந்த பணத்திற்கு இல்லாத மதிப்பு, கடன் காசுக்கு இருக்கிறது.” என்று அவரை புலம்ப வைத்துவிட்டார்கள்.

---

நான் அடிக்கடி ரயிலில் டிக்கெட் புக் செய்வதால், ஒரு பேங்கில் இருந்து போன் செய்து, ட்ரெயின் டிக்கெட் விலையில் சலுகை தரும் கிரெடிட் கார்டு வேணுமா? என்று கேட்டப்போது, சரியென்று சொல்லிவிட்டேன்.

ஒரு வருடம் கழித்து, வருட சந்தா என்று 300 ரூபாய் சார்ஜ் செய்தார்கள். யோசித்துப் பார்த்தேன். 300 ரூபாய் கொடுக்கும் அளவுக்கு, அதில் ஒன்றும் நான் சலுகைப் பெற்றுவிடவில்லை. அதனால், பேங்கை அழைத்து கார்டை கேன்சல் செய்யச் சொன்னேன்.

“ஏன் சார்?”

“அந்தளவுக்கு நான் ஒன்றும் ட்ரெயின் டிக்கெட் எடுத்து சலுகைப் பெறவில்லை.”

“இருந்தாலும், மற்ற இடங்களில் பயன்படுத்தலாம் அல்லவா?”

“அதற்கு என்னிடம் இலவச ஆயுள் சந்தா கொண்ட கார்டு இருக்கிறது. இது வேண்டாம்.”

“வருட சந்தாவை கேன்சல் செய்தால், எங்கள் கார்டை தொடருவீர்களா?”

“ஒகே”. சார்ஜ்ஜை கேன்சல் செய்துவிட்டார்கள்.

---

கிரெடிட் கார்டை ரொம்பவும் கவனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று பயன்படுத்தும் அனைவரும் சொல்வார்கள். உண்மைதான். சரியாகப் பயன்படுத்தினால், நமக்கு தான் லாபம். ஓசிப்பணம் என்று நினைக்காமல், அடுத்த மாதம் எவ்வளவு கட்ட முடியுமோ, அவ்வளவுக்கு மட்டுமே பயன்படுத்தினால், பிரச்சினையில்லாதது மட்டுமில்லாமல் சில பலன்களும் கிடைக்கும்.

நாம் செய்யும் செலவுக்கு ஏற்ப, பாயிண்ட்ஸ் கொடுப்பார்கள். அதன் மூலம், நமக்கு ஏதேனும் கிப்ட் கிடைக்கலாம். எனக்கு இதுவரை ஒரு வாட்ச், ஒரு புத்தகம், ஒரு எலக்ட்ரானிக் தெர்மாமீட்டர் கிடைத்திருக்கிறது. போன வாரம், ரூபாய் 1250 மதிப்புள்ள ஒரு உணவகத்தின் கிப்ட் வவுச்சர்கள் கிடைத்தது. உணவகம் - மெயின்லாண்ட் சைனா. அங்கு ஒருமுறை அலுவலத்தில் இருந்து அழைத்து சென்றிருக்கிறார்கள்.

விசாரித்ததில் அங்கு லன்ச் பபே - தலைக்கு கிட்டத்தட்ட அறுநூறு ரூபாயாம். கூட ஒரே ஒரு ஆளைக் கூட்டி செல்லலாம். யாரை கூட்டி செல்லலாம் என்று யோசித்தேன். இதுவரை அங்கு செல்லாத, 600 ரூபாய்க்கு கொடுத்தால், 1000 ரூபாய்க்கு சாப்பிட கூடிய ஆளாக இருக்க வேண்டும். இந்த க்ரைட்டிரியாவில் மேட்ச் ஆன ஒரு நண்பனை அழைத்து சென்றேன்.

ரிசப்ஷனிலேயே கிப்ட் வவுச்சரைக் காட்டி விசாரித்துக்கொண்டேன். வாங்குவீர்களே தானே என்று. அப்புறம், சாப்பிட்டப்பிறகு, நாட்டாமை விஜயக்குமார் மாதிரி ’செல்லாது செல்லாது’ என்று சொல்லிவிடக்கூடாதே!

அன்று கடல் உணவு திருவிழாவாம். முதலில் சூப்பும்,சிக்கன் ஸ்டார்ட்டர்ஸும் கொடுத்தார்கள். அதில் எனக்கு சிக்கன் மெமொ பிடித்துப்போனது. அது நம்மூர் கொழுக்கட்டை போன்றது. என்ன, நடுவில் சிக்கன் இருக்கும். அப்புறம் சிக்கன் நூடுல்ஸ், இறால் ப்ரைட் ரைஸ், நண்டு, இறால் அப்பளம், தொட்டுக்க ஏதேதோ மீன், சிக்கன், மட்டன் வெரைட்டிகளை எலக்ட்ரிக் இன்டக்ஷன் அடுப்பில் வைத்திருந்தார்கள். முடிவில் பழ வகைகள், கேக், ஐஸ்கிரீம்.

என்னால் ஒருக்கட்டத்திற்கு மேல் முடியவில்லை. நண்டு சாப்பிட்டு உடல் முழுக்க பெருத்துபோன ஒருவனுடைய கதையை சமீபத்தில் தான் கேட்டிருந்ததால், ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கூட வந்திருந்தவன் ஒன்றையும் விடவில்லை. ஒருமுறையிலும் விடவில்லை. முன்பே சொல்லியிருந்ததால், தயாராக வந்து இருந்தான். ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து சாப்பிட்டான். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆனது, நாங்கள் சாப்பிட்டு முடிக்க. இனிமேல், என் பெயருக்கு இம்மாதிரி கிப்ட் வவுச்சர்கள் அனுப்ப மாட்டார்கள் என நினைக்கிறேன்.

---

இப்பொழுதெல்லாம் கிரடிட் கார்டிற்கு நிறைய சலுகைகள் கொடுக்கிறார்கள். படத்திற்கு சென்றால், ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம். இதில் உள்ள உள்குத்து என்னவென்றால், இந்த சலுகை எல்லாம் நாம் போக முடியாத நேரத்தில் இருக்கும். அதாவது, புதன்கிழமை காலைக்காட்சி, செவ்வாய்க்கிழமை மதியக்காட்சி என்று இருக்கும்.

அப்புறம் ஏதேனும் பொருட்கள் வாங்கினால், அதில் கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுப்பார்கள். இது எல்லாமே வலைதான். எவனாவது சிக்குவானா என்று பார்த்துதான். எந்த மாதமாவது கட்ட முடியாமல், அல்லது தாமதமாக கட்டி மாட்டினால், இந்த சலுகைக்கு எல்லாம் சேர்த்தாற்போல் வட்டியும், முதலுமாக பிடிங்கிவிடுவார்கள். அதனால், நாம் கட்டுப்பாடாக இருந்தால் தான், கார்டு நமது கட்டுப்பாடில் இருக்கும்.

சில டிப்ஸ்...

1. அடுத்த மாதம் எவ்வளவு கட்டமுடியுமோ, அதற்கேற்ப செலவழிக்கவும்.
2. அந்தளவு செலவாகிவிட்டால், கார்டை பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, வெளியே செல்லவும்.
2. கார்டு இருக்கிறதே என்று வாங்காமல், காசிருந்தால் எது வாங்குவோமோ, எது தேவையோ, அதை மட்டும் வாங்கவும்.
3. கட்ட வேண்டிய நாளுக்குள், பணத்தை கட்டவும்.
4. கட்டுவதற்கு முன், அந்த மாதம் செய்த செலவுகளைப் பார்த்து, கணக்கு சரிப்பார்த்து கட்டவும்.
5. ரிவார்ட் பாயிண்ட் கொடுத்தால், அவ்வப்போது அதை சரிப்பார்க்கவும். அப்படியே விட்டு வைத்தால், ஏதாவது காரணம் சொல்லி அதை அமுக்கிவிடும் வாய்ப்புண்டு.
6. கிரடிட் உச்ச வரம்பை குறைத்து வைத்துக்கொள்ளவும்.
7. ஒரு கார்டே போதுமானது. இரு கார்டுகள் 15 நாட்கள் இடைவெளியில் ஸ்டேட்மெண்ட் நாட்கள் வருவது போல் வைத்திருந்தால், நீண்ட கிரடிட் அவகாசம் எப்பொழுதும் இருக்கும்வாறு வசதி உண்டு.
8. பெரிய தொகை ஏதேனும் இருந்து, கட்ட முடியாமல் போனால், அதை மாதம் தோறும் கட்டுவதாக (EMI) மாற்றி அமைக்கலாம்.
9. கிரடிட் கார்டு ஸ்லிப்களை தூக்கி ஏறியாமல், இரு மாதங்களாவது வைத்திருக்கவும்.
10. எவ்வித சலுகையும் இல்லாவிட்டால், பணம் இருக்கும்பட்சத்தில், இதை உபயோகப்படுத்தாமல் இருப்பதே நல்லது.

.

Friday, December 3, 2010

எந்திரன் vs நந்தலாலா - அறிவு ஜீவிகளின் நேர்மை?இரண்டும் ஒவ்வொரு வகை படம். ஒப்பிடக்கூடாது. தெரியும். ஆனால், இவ்விரு படங்களை பற்றிய நம்மூர் அறிவு ஜீவிகளின் பார்வையை பார்க்கும் போது தான், இவர்களின் நேர்மை அடி வாங்குகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு. அதெல்லாம் சரி. ஆனால், சராசரி ரசிகர்கள் ரசிக்காததை “இதுல்லாம் உலக தரம். உனக்கு புரியாதடா” என்று விமர்சிப்பதும், அவர்களுக்கு பிடித்ததை ”இது ஒரு குப்பை” என்று விமர்சிப்பதும் தான் அவர்களுடைய ஒரே குறிக்கோளா எனும் சந்தேகம் வருகிறது.

நந்தலாலா மோசமான படம் என்று சொல்லவில்லை. ஆனால், அதில் சொல்வதற்கு நிறைய குறைகள் இருக்கிறது. அவை எதையையும் கண்டுக்கொள்ளாமல், அதுவொரு உன்னதமான படம் என்று போற்றுவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.

உண்மையிலேயே, நான் படத்தை ரொம்பவும் கூர்ந்து கவனித்து, குறியீடுகளை தேடவில்லை தான். ஒரு படம் இவ்வாறான ஆய்வை, ரசிகனிடம் எதிர்ப்பார்க்கலாமா? அதுவே, ரசிகனை படத்துடன் ஒன்ற வைக்க வேண்டாமா? சரி, விடுங்க.

இந்த படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களிடம் நல்ல ‘நடிப்பு’ இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் வருவது போல், நிஜ வாழ்க்கையில் யாரும் இருப்பதில்லை. பின்ன, நீங்களும் நானும் யாரையாவது பார்த்தோமானால், கொஞ்சம் நேரம் போஸ் கொடுத்துவிட்டு, ஆஃப் அன் ஹவர் கழித்து, பல அர்த்தங்களைக் கொடுக்கும் கூர் வசனத்தையா பேசுவோம்? இல்லை, பேசாமலே உள்ளுக்குள் பேசிக்கொள்வோமா?

இளையராஜாவின் இசைக்கு தான், இந்த படத்தில் எத்தனை பாராட்டுக்கள்? ஏதோ, இந்த ஒரு படத்தில் மட்டும் தான் அவர் உண்மையாக இசையமைத்தது போல. இந்த படத்தின் இசையை விட, எந்த விதத்தில் ‘நான் கடவுள்’ படத்தின் இசையோ, ‘பா’ படத்தின் இசையோ, ‘பழசிராஜா’ படத்தின் இசையோ குறைந்தது? இவர்களின் கண்ணை மூடிவிட்டு, ஆர்.கே. நடித்த ‘அழகர் மலை’ படத்தின் பின்னணி இசையை போட்டுக் காட்டி, ‘நந்தலாலா’ பின்னணி இசை எப்படி என்று கேட்டிருந்தால், ‘ஆஹா! என்னா உன்னதம்!’ என்று மெய் சிலிர்த்திருப்பார்கள்.

எந்திரன் படத்திற்காக ரசூல் பூக்குட்டி, குப்பை மேட்டில் திரிந்து குப்பை சத்தத்தையும், மெழுகுவர்த்தியில் தீ அசையும் சத்தத்தையும் ரெக்கார்டிங் செய்த விதத்தை பார்த்தீர்களா? மூச்.

வெறும் அழகியல்களை மட்டும் கணக்கில் கொண்டு, கமா சோமா படங்களுக்கு சற்றும் குறைந்திடாத சென்டிமெண்ட் காட்சிகள் படம் முழுக்க இருக்கிறது. கீழே விழுந்த பெண்ணுக்கு, தெருவில் போகிறவன், அடிப்பட்ட இடத்தில் பாசத்துடன் தடவிக்கொடுக்கிறான். அடுத்த காட்சியில், அந்த பெண்ணை தோளில் தூக்கிக்கொண்டு பாட்டு. போகும்போது, அந்த பெண்ணும் அவனுடைய நெஞ்சில் குத்திவிட்டு ஓடுகிறாள். அய்யோ சாமி! படத்தில் யாருக்கு மனநிலைப் பாதிப்பு?

படத்தில் இரு அம்மாக்களை தேடி, இரு ஊர்களுக்கு செல்கிறார்கள். குறியீடு வைக்கிறதுதான் வைக்கிறீங்க. அட, ஊர் பேர்லயுமா வைக்குறீங்க. சரி, அப்படி ஏதாவது ஊரு இருக்கிறதா? நான் கேள்விப்பட்டதில்லை. இந்த சந்தேகத்தினாலேயே, நான் அதற்கு பிறகு அந்த கதாபாத்திரங்களோடு சேர்ந்து பயணப்படவில்லை. இயக்குனர் சொல்லும் கதையை கேட்க ஆரம்பித்துவிட்டேன். நல்லவேளை, சென்னையை காட்டி ‘டோக்கியோ’ என்று பெயர் வைக்கவில்லை.

அது என்ன, இவுங்க அந்த ஊர்களுக்கு போன சமயம், ஊருக்கே லீவ் விட்டுட்டாங்களா? ஒரு ஆளையும் காணும். ஓ! ஜப்பான் படத்தில இல்லையா? சார், ஜப்பான் மட்டுமில்ல, இன்னும் பல நாடுகளில் மக்கள் தொகை கம்மி. நம்மூர் மாதிரி கூட்டம் கூட்டமாக இருக்க மாட்டார்கள். நம்மூரில் எந்த கிராமத்திலாவது, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா? எந்த கிராமத்தில், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, டி-சர்ட் & ஹாஃப் ட்ரவுசருடன் கட்டிப்போட்டிருக்கிறார்கள்? ஜப்பான் படத்தில் அப்படி போட்டிருந்தார்களா, என்ன?

அதிலும் மிஷ்கினுக்கு தங்கை போல் இருக்கும் ரோகிணி, மிஷ்கினின் தாயாம். கஷ்டப்பட்டாவது மேக்கப் போட்டு, ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கலாமா? கூடவே கூடாது. ஆனால், மிஷ்கின் ரோகிணிக்கு மகனாக நடிக்கலாம். வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள்!

சரி, விஷயத்திற்கு வரலாம். ‘மனிதன் உருவாக்கும் ரோபோ காதலித்தால்?’ இந்த ஒரே ஒரு வரி ஒற்றுமையை வைத்துக்கொண்டு, எந்திரனை காப்பி, காப்பி என்று எத்தனை பெரிய மனிதர்கள் சொன்னார்கள்? அந்த மானஸ்தர்களெல்லாம் எங்கு சென்றார்கள்? இங்கு கிட்டத்தட்ட ஷாட் பை ஷாட் ஒருவர் அடித்திருக்கிறார். ஆனால், என்ன சொல்கிறார்கள்? ஐப்பான் படத்தில் அந்த காட்சியை லாங் ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். இங்கு க்ளோஸ் அப்பில் எடுத்திருக்கிறார்களாம். அதனால், இது லைட்டான தழுவலாம். ஒரிஜினலுக்கு செய்யப்பட்ட சரியான மரியாதையாம். சாமிங்களா, உங்களுக்கே ஓவரா தெரியலை? நீங்க சொன்னத பார்த்துட்டு, மிஷ்கின் “அச்சச்சோ, அந்த இடத்துல சரியா கவனிக்காம கேமராவ வைச்சுட்டோமோ?”ன்னு வருத்தப்பட போறாரு!

எனக்கு மிஷ்கின் மீதோ, நந்தலாலா படத்தில் சம்பந்தப்பட்ட எவர் மீதும் வருத்தமோ, கோபமோ கிடையாது. ஆளுக்கு தகுந்தாற்போல், நக்கீரன் வேடமும், மங்குனி வேடமும் போடும் அ.ஜீ.க்களை கண்டுத்தான் வியப்பு. இவர்களின் ’நேர்மையான’ எழுத்தைத்தான், இவ்வளவு நாட்கள் நம்பி ரசித்தேனா?

இப்படியெல்லாம் நான் படங்களில் லாஜிக் பார்க்காதவன் தான். ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தில் இவ்வளவு லாஜிக்கையும் தேடும் அ.ஜீ.க்கள், இந்த ’உலகத்தர’த்தில் ஒன்றையும் கண்டுக்கொள்ளாததே என்னை கேள்வி கேட்க தூண்டுகிறது.

கடைசியாக, இயக்குனர் ஷங்கருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எந்த அ.ஜீ.விடமாவது பாராட்டு பெற வேண்டுமானால், ஒன்று செய்யுங்கள். 3 இடியட்ஸில் அந்த அ.ஜீ.க்கு ஒரு வேடம் கொடுங்கள். பெரிதாக வேண்டாம். எந்த பாட்டு சீனிலாவது, விஜய், இலியானாவுக்கு பின்பக்கம் ஆட வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் தமிழ் சினிமாவை இரட்சிக்க வந்த இயக்குனசெம்மலாக மாறிவிடுவீர்கள். விஜய், நடிப்புக்கடவுளாக மாறிவிடுவார். 3 இடியட்ஸ், தமிழ் திரை உலகின் முதல் தமிழ் சினிமாவாக ஆகிவிடும். என்ன கண்றாவியோ!

.

கதை கேளு! கதை கேளு!

எப்போதும் ஒரு கேள்வி சுற்றி வரும். அது ஏன், நடிகர்களுக்கு மட்டும் நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள்? சும்மா வந்துப் போனாலே, அவர்களுக்கு தான் அதிக சம்பளம். ஏன் இப்படி?

ஒரு விஷயம். இன்னும் பெரும்பாலோர் போஸ்டரில் இருக்கும் முகத்தைப் பார்த்து தான் தியேட்டருக்கு வருகிறார்கள். முகம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று பார்த்தல்ல. அந்த முகம் இதற்கு முன்பு எப்படி நடித்திருந்தது, எப்படிப்பட்ட படங்களில் நடித்திருந்தது என்பதை பார்த்து தான்.

இதற்கு முன்பு படங்களில் வந்ததற்கெல்லாம், இந்த ஹீரோக்களா முழு காரணம்? இதற்கு முன்பு வந்த படங்களின் கதைக்கோ, உருவாக்கத்திற்கோ, ஏன் நடிப்பிற்கோ கூட இவர்கள் சொந்தம் கொண்டாட முடியாதென்றாலும், ஒரு கதையை, இயக்குனரை தேர்ந்தெடுப்பது ஹீரோக்கள். ஒத்துக்கொள்வது, தேர்ந்தெடுப்பது - இது இரண்டுமே தற்சமயம் ஹீரோக்கள் தான் செய்கிறார்கள்.

முன்பு தயாரிப்பாளர்களிடம், இந்த அதிகாரமும், முக்கியமாக திறனும் இருந்தது. தற்போது, பெரும்பாலான சமயம் ஹீரோக்களிடம் இது இருக்கிறது. மற்றபடி, வெகுசில இயக்குனர்கள் மட்டுமே விதிவிலக்கு. ஸோ, சராசரி ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என்று சரியாக தேர்ந்தெடுக்கும் ஹீரோக்களை, மக்கள் சரியாக அடையாளம் கண்டுக்கொண்டு, அவர்களுடைய படங்களைப் பார்க்க தயாராகிவிடுகிறார்கள்.

அதனால், மக்கள் பார்க்க தயாராக இருக்கும் ஹீரோக்களுக்கு, படத்தின் முக்கிய பங்கு. சரிதானே?

---

மக்களுக்கு எது பிடிக்கும் என்று சரியாக கணிக்க தெரிந்த ஹீரோக்கள் தான், முன்னணி ஹீரோக்களாகிறார்கள். கமலை விட பல வருடங்கள் கழித்து திரையுலகிற்கு வந்தாலும், ரஜினியை விட கமலுக்கு சினிமாவைப் பற்றி, சினிமாவின் பலத்துறைகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், இந்த பல துறைகளில் திறமை பெற்றிருந்தாலும், ரஜினிக்கு சம்பளம் அதிகம். ஏன்? ரஜினி, சராசரி ரசிகர்களுக்கு, அதாவது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடித்தமான கதையை, அவர்கள் சார்பாக தேர்ந்தெடுத்து நடிப்பதனால்தான்.

இங்கு சம்பளம் அதிகம் வாங்குவது முக்கியமா? அல்லது, மக்களுக்கு பிடித்தமானதில் தான் நடிக்கணுமா? என்பது வேறொரு விவாதம்.

---விஜய் தேர்ந்தெடுக்கும் கதைகளில் தற்சமயம் விமர்சனங்கள் இருந்தாலும், கொஞ்ச நாட்கள் முன்பு வரை தைரியமாக சென்று பார்க்கலாம் என்றால், அதற்கு காரணம் - விஜய்யிடம் அல்லது அவருடைய தந்தையிடம் இருந்த யூகிக்கும் திறமைதான். இந்த திறமையும், தயக்கமில்லா உழைப்பும் இருந்தால் வெற்றிதான்.

காலக்கட்டத்திற்கு ஏற்ப கதைகளை தேர்ந்தெடுத்ததால், இந்த நிலைக்கு விஜய்யால் வர முடிந்தது. ஒரு காலத்தில் மெல்லிய காதல் கதைகள், நகைச்சுவைப்படங்கள், பிறகு ஆக்‌ஷன் படங்கள் என்று அவர் தேர்ந்தெடுத்ததும், ரசிகர்கள் ரசனையும் ஒன்றாக அமைந்ததால், தொடர் வெற்றிகள் அமைந்தது. வரவிருக்கும் அவருடைய படங்களைப் பார்த்தால், இப்போது கூட மக்கள் மனநிலைக்கு ஏற்ப, தேர்ந்தெடுத்ததிற்பதாக மாற்றங்கள் தெரிகிறது. வரட்டும், பார்க்கலாம்.

ஒரு விஷயம் நான் உறுதியாக சொல்லுவேன். அஜித்திற்கு வேறு பல திறமைகள் இருந்தாலும், கதையை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனக்குறைவானவர் தான். தனக்கேற்ற இயக்குனர்களை தேர்ந்தெடுப்பவர், கதையில் கோட்டை விட்டுவிடுவார். இதனால், சில விஜய் படங்களாவது பார்ப்பதற்கு கடியாக இருந்தாலும், ஏதோ ஒரு வடிவத்திற்கு வந்து விடும். ஆனால், அஜித் படங்கள் இருக்கிறதே! எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அதனால் தான் அவரால், முகவரி, தீனாவிற்கு பிறகு, ரெட், ராஜா கொடுக்க முடிகிறது. வில்லனுக்கு பிறகு ஜனா கொடுக்க முடிகிறது. வரலாறுக்கு பிறகு ஆழ்வார் கொடுக்க முடிகிறது.

விக்ரம் நன்றாகத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் பாருங்கள் கொடுமையை? சமீப காலங்களில், அவர் வருடக்கணக்காக நேரத்தை எடுத்துக்கொண்டு படங்கள் நடிக்க, ஆனால் அதுவோ நாட்கணக்கில் ஓடுகிறது. கதை, இயக்குனர், நடிப்பு மட்டும் முக்கியமில்லாமல், எப்படி செயல்படுத்தப்போகிறார்கள், எப்படி உருவாக்கப்போகிறார்கள் என்பதும் முக்கியமாகிறது. இது கஷ்டமான காரியம் தான். விளைவு? சில மொக்கையான விளம்பரங்களில் அவர் நடித்து, நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

சமீப காலங்களில், இப்படி எல்லா விஷயங்களிலும் கச்சிதமாக இருப்பது, சூர்யா தான். தொடர்ந்து அனுபவம் வாய்ந்த இயக்குனர்களின் படங்களில் நடித்து, தமிழின் முன்னணி இயக்குனர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களை பாருங்கள். பாலா, கௌதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, முருகதாஸ் என எல்லாம் டாப் இயக்குனர்கள்.

அதோடு விடுவதில்லை. ஆதவனுக்காக உதயநிதி ஸ்டாலின் தசாவதாரத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரை வளைத்து போட்டுக்கொண்டு, சூர்யாவை சந்தித்தார். ”ரவிக்குமார் ரெடியாக இருக்கிறார், படத்தை ஆரம்பித்து விடலாம்” என்று சொல்ல, சூர்யாவோ “டைம் இருக்கிறதே என்று படத்தை ஆரம்பிக்க வேண்டாம். சரியான கதை அமையட்டும்” என்று சொல்லி, ஏராளமான கதைகளைக் கேட்டு, எதுவும் திருப்தியில்லாமல், முடிவில் வேறு வழியில்லாமல் அதிலும் ஒரளவுக்கு சுமாராக இருந்த கதையைத் தேர்ந்தெடுத்தார்.

கதை கேட்பது மட்டும் போதாமல், அது திரையில் வரவேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பது சூர்யா ஸ்பெஷல். செல்வராகவன் கதை சொல்ல, கதை பிடித்து போனாலும், பக்கவாக ஸ்கிரிப்ட் எழுதி வர சொல்லியிருக்கிறார் சூர்யா. இதனால் தான், சூர்யாவால் தொடர் வெற்றிகளைக் கொடுக்க முடிகிறது. படம் ஓடாவிட்டாலும், பெயராவது கிடைக்கிறது.

தனுஷ், ஆர்யா, ரவி, விஷால் போன்ற இளம் ஹீரோக்களும் அடுத்த லைனுக்கு வருவதற்கும், அவர்கள் படத்திற்கு இருக்கும் டீசண்டான ஓப்பனிங்கிற்கும் காரணம் - தற்சமயம் அவர்களிடம் இருக்கும் குறிப்பிடத்தக்க கதை தேர்ந்தெடுக்கும் திறன் தான்.

அதனால, ஹீரோக்களே...

கதை கேளுங்க... நல்லா கதை கேளுங்க...

டிஸ்கி - இதில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் எல்லாம் நண்பர்கள், மீடியாக்கள் மூலம் கேள்விப்பட்டவை தான். எந்த ஹீரோவும் கதை கேட்கும்போது, கூட உட்கார்ந்து பார்த்ததில்லை. :-)

.

Wednesday, December 1, 2010

பெண் பாவம்

எங்கள் அணி வேலைப் பார்த்துக் கொண்டிருந்த மென்பொருளில், வேலை செய்து தொழில் கற்றுக்கொள்வதற்கு புதியதாக ஒரு பெண்ணை சேர்த்திருந்தார்கள். பெண் என்று சொல்லக்கூடாது. பிள்ளை என்றே சொல்லலாம். இப்பத்தான் கல்லூரி முடித்து வந்திருக்கிறாள். மேனேஜர் அவளிடம் ”எந்த வித டெக்னிக்கல் டவுட் என்றாலும், எங்கிட்ட கேட்டுடாத. அவன்கிட்ட கேளு.” என்று என்னை நோக்கி கைக்காட்டிவிட்டதால், என்னிடம் பேசும் பெரும் வாய்ப்பு அவளுக்கு வாய்த்தது!அவ்வப்போது ஏதாவது வந்து கேட்பாள். தெரிஞ்சா சொல்லுவேன். தெரியாட்டினாலும் ஏதாவது சொல்லுவேன். அவள் ஒரு கன்னட-தமிழ் கலவை என்பதால், கிட்டத்தட்ட பழைய சரோஜா தேவி மாதிரி தான் பேசுவாள். லட்சணமான பெண். தமிழ் படங்களில் வரும் அழகான நாயகிகளைப்போலவே, அவளும் கொஞ்சம் மக்குதான்.

பொண்ணோட பெயரை இன்னும் சொல்லலீயா? ம்ம்ம்... ஒரு கற்பனை பேரு யோசிச்சு சொல்றேன். சஞ்சனா.

எங்க அணியை பத்தியும் சொல்லிடுறேன். பெரும்பாலும், தமிழரல்லாதவர்கள். என்னைத்தவிர தமிழ் தெரிந்த பையன், சுபாஷ். சுஜா என்றொரு தமிழ் பெண்ணும் இருக்கிறாள். நல்ல பொண்ணு. நம்ம ஆளு. அப்படி நான் மட்டும் எனக்குள்ளே நெனைச்சிக்கிட்டு இருந்தேன். சரி, கதை என்னை பத்தி கிடையாது என்பதால், அது வேண்டாம்.

வேலைப்பார்க்கும் சமயம், சஞ்சனாவும் சுபாஷும் பேசியதே கிடையாது. அல்லது, நான் பார்த்ததே கிடையாது. ஒருவேளை, நான் வேலையில் பிஸியாக இருந்திருப்பேன். இருங்க, ட்வீட்டரை க்ளோஸ் பண்ணிக்கிறேன்.

ஒருநாள் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தபோது, சஞ்சனாவும் சுபாஷும் சாலை ஓரத்தில் பேசிக்கொண்டு சென்றதை பார்த்தேன். சரி, நல்லா இருக்கட்டும் என்று சென்று விட்டேன். பிறகு, அவ்வப்போது அலுவலக படிக்கட்டில் பார்த்திருக்கிறேன். சில நாட்களில், சுபாஷ் எங்கள் அணியை விட்டு சென்றுவிட்டான். ஆனாலும், அவ்வப்போது நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து செல்வான். சரி, இன்னும் கதை ஓடுகிறது என்று நினைத்துக்கொண்டேன். சஞ்சனா சின்னப்பெண் என்பதால் கொஞ்சம் கலக்கமும் எனக்கு இருந்தது. சரி, நமக்கென்ன என்று இருந்துவிட்டேன். தவிர, வருத்தப்படும் அளவுக்கு சுபாஷிடமும் எந்த கெட்ட பழக்கம் இருந்ததாக தெரியவில்லை.

இப்ப, கதையில இன்னொரு கதாபாத்திரம் அறிமுகம் ஆகிறது. கதிர். மதுரைக்காரன். என்னிடம் நன்றாக பேசி பழகினான். என்கிட்ட மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லைன்னு, பின்னாடி தெரிஞ்சது. பெரும்பாலும், பெண்களை பற்றிதான் பேசுவான். யாரையாவது பிக்கப் செய்து கல்யாணம் செய்வதே அவனுடைய உயர் லட்சியமாக இருந்தது. ஆனால், ஒருநாள் கூட சஞ்சனா பற்றி பேசியது கிடையாது. அவன் சஞ்சனாவிடம் பேசியும் நான் பார்த்ததில்லை. ஒருவேளை நம்மக்கிட்ட தான் ஓவரா பேசுறான். இவன் செயல்ல ஒண்ணும் கிடையாது போல என்று நினைத்துக்கொண்டேன்.

வேலை பிஸியாக ஓடிக்கொண்டிருந்தது. கதிரும் இரவுவரை உட்கார்ந்து வேலைப் பார்ப்பான். நாங்கள் இருவரும் பேசும் சமயமெல்லாம், தூக்கம் வருவதில்லை என்று புலம்பினான். ரெஸ்ட்லெஸ்சாகவே இருந்தான். இதற்காக டாக்டரைப் பார்த்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கேட்டதற்கு, வேலைப்பளு என்றான். அதற்குக்கேற்ப நானும் கொஞ்சம் அட்வைஸ் செய்தேன். ஒரளவுக்கு சரியானான்.

பிறகு, சிறிது நாட்கள் கழித்து, என்னை தனியே அழைத்து சென்று சஞ்சனா பற்றி கேட்டான். எந்தளவுக்கு பழக்கம் என்று விசாரித்தான். சாதாரண அலுவலக ரீதியான பழக்கம் தான் என்று தெரிந்துக்கொண்டதும், ஒரு விஷயம் சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.

டீமில் சேர்ந்த சில நாட்களிலேயே, சஞ்சனாவுடன் பேச ஆரம்பித்து விட்டானாம். ஆனால், யாருக்கும் தெரியாமல் தான் பேசுவார்களாம். அது அவளுடைய கண்டிஷனாம். அடியே, கல்லுளிமங்கி!

ஒரிரு மாதங்கள் பேசி பழகியதில், கதிருக்கு காதல் மட்டுமல்ல, அதை சொல்லும் தைரியமும் வந்துவிட்டது. ஏற்கனவே ஒருமுறை காதலை சரியான சமயத்தில் சொல்லாததால், ஒரு திருமணமான காதலிக்கு இன்னமும் தோழனாக இருக்கும் அவலத்தை சந்தித்து இருப்பதால், இம்முறை உடனே சொல்லிவிட்டான். சஞ்சனா ஒத்துக்கொள்ளவில்லை. இது சரி வராது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். கதிர், இதனால்தான் அந்த சமயம் பேயடித்தது போல் இருந்திருக்கிறான். அப்ப தெரியவில்லை. இப்ப புரிகிறது. அப்பாடா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

அதற்குப்பிறகும், கதிரிடம் நட்பாக நன்றாகத்தான் பேசியிருக்கிறாள். ஆனால், கதிர் விடவில்லை. இதையே திருப்பி திருப்பி சொல்லி, அவள் சம்மதத்தைக் கேட்டிருக்கிறான். அவள் வெறுத்துப் போய், இவனை விட்டு விலகி சென்றுவிட்டாள். இவனிடம் பேசுவதே கிடையாது. எனக்கு சஞ்சனாவின் நிலையை நினைக்க, பரிதாபமாக இருந்தது. அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும், பழைய ஜோரு அவளிடம் இல்லை. ஒரு பொண்ணு லட்சணமா இருந்தா, எவ்ளோ கஷ்டம் என்று நினைத்துக்கொண்டேன்.

சிறிது நாட்களில் நான் வேறொரு அணிக்கு சென்று விட்டேன். அங்கே அடிக்கடி சுபாஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுபாஷ், பெரும்பாலும் வேலை பற்றியும், வருங்கால பணி உயர்வைப் பற்றியுமே பேசுவான். அவனுக்கேற்ற சரியான வாய்ப்பு எங்கள் நிறுவனத்தில் இல்லாததால், வெளியே வேலை தேடுவது என்று ஒருக்கட்டத்தில் முடிவு செய்தான். என்னன்ன படிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். பிறகு, அதை படித்தியா, இதை படித்தியா என்று நான் கேட்கும்போது, எதையும் என்னால் படிக்க முடியவில்லை என்றான். மனம், புத்தகத்தில் நிலைக் கொள்ள மாட்டேங்கிறது என்று புலம்பினான்.

என்னவென்று அழுத்தி கேட்டப்பொழுது, அங்கிருந்து ஒரு பூதம் வெளிவந்தது. ஒரு பெண்ணிடம் காதலை சொன்னானாம். அவள் முடியாது என்று சொல்லிவிட்டாளாம். யாரந்த பெண் என்று சொல்லவில்லை. ஆனால், எனக்கு தெரிந்தது. சஞ்சனாவாகத்தான் இருக்கும். அடப்பாவமே, ஒரு பிள்ளையை வேலை பாக்க விடுறாய்ங்களா? இப்படி வரிசையா வந்து ப்ரபோஸ் பண்ணா, அவா என்னத்தான் செய்வா? என்று அவள் சார்பில் கவலைப்பட்டேன்.

இருவருமே என்னை சந்தித்து புலம்புவார்கள். ஆனால், ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு தெரியாது. இருவரிடமும் நான், இதை விட்டுவிட்டு, வேலையைப் பாருங்க என்பேன். சுபாஷ், கவனத்தை வேலையில் செலுத்த ஆரம்பித்து விட்டான். கதிர் விடவில்லை. விரட்டிக்கொண்டே இருந்தான். வீட்டில் அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்திருந்தால், விட்டு இருப்பான். அதுவரை, சஞ்சனா பாவம் தான் என்று நினைத்துக்கொண்டேன். நானும் எவ்வளவுதான் கதிரிடம் பக்குவமாக சொல்லிப்பார்ப்பது?

அன்று அலுவலகத்திற்கு சென்றவுடனே, கதிர் அவசரமாக போனில் அழைத்தான். சஞ்சனா, இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டிருப்பதாக சொன்னான். இன்றுதான் அவனுக்கே தெரியுமாம். ஆனால், அவர்கள் பேசும் தொனியை பார்க்கும்போது, ரொம்ப நாட்களாக பேசிக்கொண்டிருப்பது போல் தெரிகிறதாம். சுபாஷ், கதிர் தவிர்த்து, சஞ்சனா இன்னொரு பையனிடம் பேசுவதை ஆரம்ப நாட்களில் நானும் பார்த்திருக்கிறேன். ஆனால், கதிர் சொல்லும் அடையாளத்தை பார்க்கும்போது, இவன் வேறு ஒருவனாக தெரிகிறது.

ஒருமுறை சுபாஷிடம், ”எந்த தைரியத்தில் நீ காதலை சொன்ன?” என்று கேட்டதற்கு, ”அவள் தன்னிடம் காதலுடன் பழகுவதாக தெரிந்தது” என்றான். எப்படி என்று கேட்டதற்கு, தனக்கு உடம்பு சரியில்லாத சமயத்தில் கோவிலுக்கு சென்று வந்தாள், அவளுக்கு எதுவென்றாலும் தன்னிடம் சொல்லுவாள், வீட்டு கஷ்டத்தை தன்னிடம் பகிர்ந்திருக்கிறாள் என்றெல்லாம் சொன்னான். இது எனக்கு நினைவுக்கு வரவே, கதிரிடமும் இதுபோல் கேட்டேன். அவனும் கிட்டத்தட்ட இதைப்போல் சொன்னான். எனக்கென்னவோ, தவறு இவர்கள் மேல் இருப்பதாக இப்போது தெரியவில்லை.

தொடர்ந்து இது சம்பந்தமாக பேசியதில், யோசித்து பார்த்ததில், சஞ்சனா மேல் பரிதாபம் போய், பயமே வந்துவிட்டது. சுபாஷையும், கதிரையும் பார்க்கத்தான் பரிதாபமாக இருந்தது. அந்த பெயர் தெரியாத புது லவ்வர் பாயும், கூடிய சீக்கிரத்தில் அவளிடம் ஆப்பு வாங்கிக்கொண்டு, என்னைப்போல் எவனிடமாவது போய் புலம்ப போகிறான்.

அடியே, கிராதகி! உன்னையை ஒண்ணும் தெரியாத பாப்பா’ன்னு நினைச்சேன். நீ என்னடானா, இப்படி டெரர் காட்டுறீயே?

அது சரி, நீ என்ன ப்ளாஷ்பேக் வச்சிருக்கியோ?

.

மாண்புமிகு வேலைக்காரர்முன்பெல்லாம் நடுத்தரவர்க்கத்தை தாண்டிய வசதி படைத்தவர்களின் இல்லங்களிலேயே, வீட்டு வேலை செய்பவர்களை காணலாம். கூட்டு குடும்பமாக, பெரும் குடும்பமாக இருப்பவர்கள், வீட்டு வேலையை செய்து முடித்துவிட்டு, நேரம் போகாமல் உட்கார்ந்து கதை பேசுவார்கள். தற்சமயம் நகரங்களில் தனியாக வாழும் பேச்சிலர்களும், வேலைக்கு செல்லும் கணவன் - மனைவிகளும், உதவிக்கு வேலை செய்ய ஆள் வைப்பதை தவிர்க்க முடியாமல் போய் நெடுநாளாகிறது.

---

பெங்களூரில் எனக்கு தெரிந்த பேச்சிலர் நண்பர்கள் பெரும்பாலோனர், வெளியே சாப்பிட்டு விட்டு, வீட்டை துடைப்பது, கழுவுவது, துணி துவைப்பது போன்ற வேலைகளை அவர்களே செய்துவிடுவார்கள். சிலர் வெளியே சாப்பிட்டு விட்டு, வீட்டில் எப்படி குடிவந்தார்களோ அப்படியே வைத்துவிடுவார்கள். ஓனர் வீட்டை பார்த்துவிட்டு கண் கலங்குவதும், பிறகு வாடகை வாங்கிவிட்டு சமாதானம் ஆவதும் வழக்கம். சில ஓனர்கள் வாடகை வாங்க வருவதில்லை. ஆன்லைனிலேயே ட்ரான்ஸ்பர் செய்ய சொல்லிவிடுவார்கள். சேலம், ஈரோடு, வேலூர் என பெங்களூருக்கு சில மணி நேரத்தில் பயணம் செய்யும் கொடுப்பினை பெற்றவர்கள், வாரயிறுதியில் ஒரு பெரும் மூட்டையுடன் ஊருக்கு செல்லுவார்கள். மறந்தும், அவர்களது பையை திறந்து பார்த்துவிடாதீர்கள். லேப்டாப் பேக், அழுக்கு மூட்டையாகி இருக்கும்.

---

சில பேச்சிலர்கள், சுகவாசிகளாக இருப்பார்கள். வீட்டில் ஒன்றாக தங்கியிருப்பவர்கள் சேர்ந்து வாஷிங்மிஷின் வாங்கி இருப்பார்கள். அதில் துணியைப் போட வேலைக்கு ஆள் வைக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு சோம்பல் குணம் கொண்டவர்கள். இவர்கள் நன்றாக சாப்பிட நினைத்து, நண்பர்கள் எவருக்கும் சமையல் கலை கைக்கூடாமல் இருந்தால், சமைக்க ஆள் வைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல்,காலையிலையோ, மாலையிலையோ சமைக்க வர சொல்லியிருப்பார்கள். பெரும்பாலும் இரவிலாக இருக்கும். வாரயிறுதியில் மதியமும், இரவுமாக இருக்கும்.

---

இப்படி தான் என்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டுக்கும், சமையலுக்கு ஒரு பெண்மணி வருகிறார். சம்பளம் ரெண்டாயிரத்து சொச்சம். ஆங்காங்கே வேலைக்கேற்ப, ஏரியாவில் வேலையாள் டிமாண்டிற்கு ஏற்ப, சம்பளம் வேறுபடும். எனக்கு தெரிந்து 600 ரூபாயில் இருந்து 3500 வரை மாத சம்பளமாகக் கொடுக்கிறார்கள்.

ஒரு வேளைக்கு சமைக்க, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஆகும். இதனால் நாலைந்து வீடுகளில் வேலை செய்வார்கள். என் நண்பன் வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்மணியும் இப்படி ஒரு பிஸி பெண்மணி. டைம் ஸ்லாட் அமைத்து, பல வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர். ‘கிட்டத்தட்ட என்னுடைய டேக் ஹோம் சம்பளம் அளவுக்கு, அந்தம்மா சம்பாதிப்பதாலோ என்னவோ, எங்களை மதிப்பதே இல்லை’ என்பான்.

இவர்களுடைய விருப்பத்திற்கேற்ப, சமையல் இருக்காதாம். அந்தம்மாவுக்கு என்ன இஷ்டமோ, அது தான் சமையல். ’சப்பாத்தி செய்யுங்களேன்’ என்றால், ‘இல்லை, இன்னைக்கு உப்புமா சாப்பிடுங்க’ என்று பதில் வருமாம்.

அதே பெண்மணி வாரமொருமுறை வந்து வீடு துடைத்து, கழுவி செல்லுவாராம். அந்த பெண்மணி வரும் நேரம், இவர்கள் கழுவ தேவையான சமாச்சாரங்களை எடுத்து ரெடியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தண்ணீரை அப்படியே ஊற்றிவிட்டு, ஒரு தள்ளு தள்ளிவிட்டு சென்றுவிடுவாராம்.

இவர்கள் ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்து, அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்ல, அம்மணி ஏனென்று கேட்டிருக்கிறார். இவர்களும் வீடு மாறப்போவதாக பொய் சொல்லி சமாளித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருப்பதோ, ஒரு வீட்டின் முதல் மாடியில். ஓனர் இருப்பதோ, தரைத்தளம். ஒரு மாதம் கழித்து, கீழேயிருந்து சத்தம் வந்திருக்கிறது. என்னவென்று எட்டிப்பார்த்தால், அந்தம்மா நின்றிருக்கிறார்.

”என்ன?”

“வீடு காலி பண்ணப் போறதா சொன்னீங்களே? இன்னும் போகலையா?” என்று சத்தமாக கேட்டிருக்கிறார்.

வீட்டு ஓனருக்கு கேட்டுவிடக்கூடாதே என்று பதறியடித்துக்கொண்டு கீழே ஓடி சென்று சமாளித்திருக்கிறான்.

நான் கேட்டேன்.

"இப்ப சமையலுக்கு என்ன செய்யுறீங்க?”

“தெரிஞ்சத வைச்சு, நாங்களே செய்யுறோம். நல்லாத்தான் இருக்கு.”

.