Friday, December 3, 2010

கதை கேளு! கதை கேளு!

எப்போதும் ஒரு கேள்வி சுற்றி வரும். அது ஏன், நடிகர்களுக்கு மட்டும் நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள்? சும்மா வந்துப் போனாலே, அவர்களுக்கு தான் அதிக சம்பளம். ஏன் இப்படி?

ஒரு விஷயம். இன்னும் பெரும்பாலோர் போஸ்டரில் இருக்கும் முகத்தைப் பார்த்து தான் தியேட்டருக்கு வருகிறார்கள். முகம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று பார்த்தல்ல. அந்த முகம் இதற்கு முன்பு எப்படி நடித்திருந்தது, எப்படிப்பட்ட படங்களில் நடித்திருந்தது என்பதை பார்த்து தான்.

இதற்கு முன்பு படங்களில் வந்ததற்கெல்லாம், இந்த ஹீரோக்களா முழு காரணம்? இதற்கு முன்பு வந்த படங்களின் கதைக்கோ, உருவாக்கத்திற்கோ, ஏன் நடிப்பிற்கோ கூட இவர்கள் சொந்தம் கொண்டாட முடியாதென்றாலும், ஒரு கதையை, இயக்குனரை தேர்ந்தெடுப்பது ஹீரோக்கள். ஒத்துக்கொள்வது, தேர்ந்தெடுப்பது - இது இரண்டுமே தற்சமயம் ஹீரோக்கள் தான் செய்கிறார்கள்.

முன்பு தயாரிப்பாளர்களிடம், இந்த அதிகாரமும், முக்கியமாக திறனும் இருந்தது. தற்போது, பெரும்பாலான சமயம் ஹீரோக்களிடம் இது இருக்கிறது. மற்றபடி, வெகுசில இயக்குனர்கள் மட்டுமே விதிவிலக்கு. ஸோ, சராசரி ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என்று சரியாக தேர்ந்தெடுக்கும் ஹீரோக்களை, மக்கள் சரியாக அடையாளம் கண்டுக்கொண்டு, அவர்களுடைய படங்களைப் பார்க்க தயாராகிவிடுகிறார்கள்.

அதனால், மக்கள் பார்க்க தயாராக இருக்கும் ஹீரோக்களுக்கு, படத்தின் முக்கிய பங்கு. சரிதானே?

---

மக்களுக்கு எது பிடிக்கும் என்று சரியாக கணிக்க தெரிந்த ஹீரோக்கள் தான், முன்னணி ஹீரோக்களாகிறார்கள். கமலை விட பல வருடங்கள் கழித்து திரையுலகிற்கு வந்தாலும், ரஜினியை விட கமலுக்கு சினிமாவைப் பற்றி, சினிமாவின் பலத்துறைகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், இந்த பல துறைகளில் திறமை பெற்றிருந்தாலும், ரஜினிக்கு சம்பளம் அதிகம். ஏன்? ரஜினி, சராசரி ரசிகர்களுக்கு, அதாவது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடித்தமான கதையை, அவர்கள் சார்பாக தேர்ந்தெடுத்து நடிப்பதனால்தான்.

இங்கு சம்பளம் அதிகம் வாங்குவது முக்கியமா? அல்லது, மக்களுக்கு பிடித்தமானதில் தான் நடிக்கணுமா? என்பது வேறொரு விவாதம்.

---



விஜய் தேர்ந்தெடுக்கும் கதைகளில் தற்சமயம் விமர்சனங்கள் இருந்தாலும், கொஞ்ச நாட்கள் முன்பு வரை தைரியமாக சென்று பார்க்கலாம் என்றால், அதற்கு காரணம் - விஜய்யிடம் அல்லது அவருடைய தந்தையிடம் இருந்த யூகிக்கும் திறமைதான். இந்த திறமையும், தயக்கமில்லா உழைப்பும் இருந்தால் வெற்றிதான்.

காலக்கட்டத்திற்கு ஏற்ப கதைகளை தேர்ந்தெடுத்ததால், இந்த நிலைக்கு விஜய்யால் வர முடிந்தது. ஒரு காலத்தில் மெல்லிய காதல் கதைகள், நகைச்சுவைப்படங்கள், பிறகு ஆக்‌ஷன் படங்கள் என்று அவர் தேர்ந்தெடுத்ததும், ரசிகர்கள் ரசனையும் ஒன்றாக அமைந்ததால், தொடர் வெற்றிகள் அமைந்தது. வரவிருக்கும் அவருடைய படங்களைப் பார்த்தால், இப்போது கூட மக்கள் மனநிலைக்கு ஏற்ப, தேர்ந்தெடுத்ததிற்பதாக மாற்றங்கள் தெரிகிறது. வரட்டும், பார்க்கலாம்.

ஒரு விஷயம் நான் உறுதியாக சொல்லுவேன். அஜித்திற்கு வேறு பல திறமைகள் இருந்தாலும், கதையை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனக்குறைவானவர் தான். தனக்கேற்ற இயக்குனர்களை தேர்ந்தெடுப்பவர், கதையில் கோட்டை விட்டுவிடுவார். இதனால், சில விஜய் படங்களாவது பார்ப்பதற்கு கடியாக இருந்தாலும், ஏதோ ஒரு வடிவத்திற்கு வந்து விடும். ஆனால், அஜித் படங்கள் இருக்கிறதே! எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அதனால் தான் அவரால், முகவரி, தீனாவிற்கு பிறகு, ரெட், ராஜா கொடுக்க முடிகிறது. வில்லனுக்கு பிறகு ஜனா கொடுக்க முடிகிறது. வரலாறுக்கு பிறகு ஆழ்வார் கொடுக்க முடிகிறது.

விக்ரம் நன்றாகத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் பாருங்கள் கொடுமையை? சமீப காலங்களில், அவர் வருடக்கணக்காக நேரத்தை எடுத்துக்கொண்டு படங்கள் நடிக்க, ஆனால் அதுவோ நாட்கணக்கில் ஓடுகிறது. கதை, இயக்குனர், நடிப்பு மட்டும் முக்கியமில்லாமல், எப்படி செயல்படுத்தப்போகிறார்கள், எப்படி உருவாக்கப்போகிறார்கள் என்பதும் முக்கியமாகிறது. இது கஷ்டமான காரியம் தான். விளைவு? சில மொக்கையான விளம்பரங்களில் அவர் நடித்து, நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

சமீப காலங்களில், இப்படி எல்லா விஷயங்களிலும் கச்சிதமாக இருப்பது, சூர்யா தான். தொடர்ந்து அனுபவம் வாய்ந்த இயக்குனர்களின் படங்களில் நடித்து, தமிழின் முன்னணி இயக்குனர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களை பாருங்கள். பாலா, கௌதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, முருகதாஸ் என எல்லாம் டாப் இயக்குனர்கள்.

அதோடு விடுவதில்லை. ஆதவனுக்காக உதயநிதி ஸ்டாலின் தசாவதாரத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரை வளைத்து போட்டுக்கொண்டு, சூர்யாவை சந்தித்தார். ”ரவிக்குமார் ரெடியாக இருக்கிறார், படத்தை ஆரம்பித்து விடலாம்” என்று சொல்ல, சூர்யாவோ “டைம் இருக்கிறதே என்று படத்தை ஆரம்பிக்க வேண்டாம். சரியான கதை அமையட்டும்” என்று சொல்லி, ஏராளமான கதைகளைக் கேட்டு, எதுவும் திருப்தியில்லாமல், முடிவில் வேறு வழியில்லாமல் அதிலும் ஒரளவுக்கு சுமாராக இருந்த கதையைத் தேர்ந்தெடுத்தார்.

கதை கேட்பது மட்டும் போதாமல், அது திரையில் வரவேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பது சூர்யா ஸ்பெஷல். செல்வராகவன் கதை சொல்ல, கதை பிடித்து போனாலும், பக்கவாக ஸ்கிரிப்ட் எழுதி வர சொல்லியிருக்கிறார் சூர்யா. இதனால் தான், சூர்யாவால் தொடர் வெற்றிகளைக் கொடுக்க முடிகிறது. படம் ஓடாவிட்டாலும், பெயராவது கிடைக்கிறது.

தனுஷ், ஆர்யா, ரவி, விஷால் போன்ற இளம் ஹீரோக்களும் அடுத்த லைனுக்கு வருவதற்கும், அவர்கள் படத்திற்கு இருக்கும் டீசண்டான ஓப்பனிங்கிற்கும் காரணம் - தற்சமயம் அவர்களிடம் இருக்கும் குறிப்பிடத்தக்க கதை தேர்ந்தெடுக்கும் திறன் தான்.

அதனால, ஹீரோக்களே...

கதை கேளுங்க... நல்லா கதை கேளுங்க...

டிஸ்கி - இதில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் எல்லாம் நண்பர்கள், மீடியாக்கள் மூலம் கேள்விப்பட்டவை தான். எந்த ஹீரோவும் கதை கேட்கும்போது, கூட உட்கார்ந்து பார்த்ததில்லை. :-)

.

5 comments:

மாணவன் said...

அருமையான அலசல்...

வழக்கம்போலவே உங்கள் எழுத்து நடையில் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்

தொட்ரட்டும்.......

வாழ்க வளமுடன்

pichaikaaran said...

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் ஃபிளாப் ஆவதும் , குப்பை படங்கள் ஹிட் ஆவதும் சர்வ சாதரணமாக நடக்கும் விஷ்யங்கள்

சரவணகுமரன் said...

நன்றி மாணவன்

சரவணகுமரன் said...

பார்வையாளன்,

ஏதோ ஒரு வகையில், ரசிகர்களை கவர்ந்தால் தான் ஹிட். அவர்களே ஹிட் என்று சொல்வதை கணக்கில் சேர்க்க முடியாது. அந்த ஏதோ ஒரு வகையில் ஹிட் என்பதை கணிப்பது தான் திறமை.

சிவராம்குமார் said...

அருமையான பகிர்வு!