Thursday, December 9, 2010

வாட்டர் சர்வீஸ்



இதுவரை எனது பைக்கை தனியாக வாட்டர் சர்வீஸுக்கு விட்டதில்லை. பைக் சர்வீஸ் விடும்போது, அவர்கள் அதையும் செய்துவிடுவதால், அப்போது மட்டும் தான். அலுவலகத்தில் இதுவரை வண்டி, வெளியில் வெட்டவெளியில் நிற்பதால், அவ்வப்போது மழையே வண்டியை கழுவிவிட்டு விடும். நானும் வண்டியை எடுக்கும்போது, லைட்டாக துடைத்துவிட்டு எடுப்பேன்.

மற்றபடி, நானாக தண்ணீரை பீச்சியடித்து துடைத்தது கிடையாது. ஆனால், அப்படி செய்யவேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.

வண்டி வாங்கிய புதிதில், வாரயிறுதிகளில் ஆரம்ப ஜோரில் வண்டியை கழுவி துடைத்திருக்கிறேன். பிறகு, கொஞ்ச கொஞ்சமாக நிறுத்தி, இப்பொழுதெல்லாம் கழுவுவதும் இல்லை. துடைப்பதும் இல்லை. நான் உட்காரும் இடம், பேண்ட் படும் இடத்தை மட்டும் துடைத்து விட்டு உட்காருவேன். பின்னால் உட்கார்பவர்கள், அவர்களது இடத்தை துடைத்துவிட்டு உட்கார வேண்டும்!

ஏன் இதுவரை பைக்கை வாட்டர் சர்வீஸுக்கு விட்டதில்லை என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய ஒரு உயர்ந்த நோக்கத்தினால் உருவான உருப்படாமல் போன செயல் என்று அதை வர்ணிக்கலாம். அது என்ன உயர்ந்த நோக்கம்? நமக்கான வேலைகளை, நாம் தான் செய்ய வேண்டும் என்று காந்தி சொன்னார் அல்லவா? அதை முடிந்தவரை செயல்படுத்தியதால் வந்த வினை. அப்ப, என்னுடைய பைக் கண்றாவியாக இருப்பதற்கு காந்தியா காரணம்?

அடச்சே! எதையோ சொல்ல வந்து, எதைதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நமக்கான வேலையை, நாம் தான் செய்ய வேண்டும் என்ற கொள்கையால், வண்டி கழுவுவது சிம்பிளான வேலை, அதை எதற்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும்? நாமே செய்து விடலாம் என்று பிரமாதமாக திட்டமிடுவேன். திட்டமிட்ட நேரத்தில், அதை விட அதி முக்கியமான காரியங்கள் வந்துவிடுவதால், திட்டம் திட்டமாகவே முடிவு பெற்றுவிடும்.

---

சமீபத்தில் ஏதோ ஒரு வேலையாய், ஒரு வாட்டர் சர்வீஸ் கடையை கடக்க, உடனே வண்டியை வாட்டர் சர்வீஸ் செய்துவிடலாம் என்ற எண்ணம் வர, விசாரித்தேன். ஐம்பது ரூபாயாம். காலையில் வர சொன்னார்கள்.

அடுத்த நாள் செல்லும்போது, ஒரு மணி நேரம் கழித்து வரச் சொன்னார்கள். எனக்கு வேறொரு வேலை இருந்ததால், அங்கிருந்து கிளம்பிவிட்டேன். போகும் வழியில், ஒரு ஏரியில் லாரி, வேன்களை கழுவிக்கொண்டு இருந்தார்கள். அதை பார்த்தவுடன், அங்காவது போர் தண்ணி. இங்க பக்கத்துல ஏதாச்சும் சர்வீஸ் செண்டர் இருந்தா, நல்லா தாராளமா ஏரி தண்ணியை வச்சு வண்டி கழுவுவாங்களே என்றொரு ஸ்மார்ட் யோசனை கிளம்பியது.

அருகில் இருந்த ஒரு மெக்கானிக்கல் ஷாப்பில் கேட்டதற்கு, தள்ளி இருந்த ஒரு சந்தை நோக்கி கைக்காட்டினார்கள். அந்த ஏரியா ஒரு பழைய கிராமம். நகர வளர்ச்சிக்கேற்ப மாற்றங்கள் இருந்தாலும், கிராமத்து தோற்றம் ஆங்காங்கே இன்னமும் தெரிந்தது. அந்த சந்தில் இருந்த கடையில், ஒரு பையன் தனியாக உட்கார்ந்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தான். கடையின் முன்பு, ஈரமாக இருந்ததால், அது தான் வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை என்று தெரிந்தது.

வாட்டர் சர்வீஸ் என்று கேட்டேன். ஆமாம் என்று சொல்லிவிட்டு, உடனடியாக வேலையை ஆரம்பித்தான். நான் தள்ளி நின்று பார்க்க ஆரம்பித்தேன்.

அவனுக்கு இருபது-இருபத்தைந்து வயதிருக்கும். கொஞ்சம் குள்ளமாக, ஒல்லியாக இருந்தான். கடைக்குள் சுருண்டிருந்த ஒயர், ட்யூப் எல்லாவற்றையும் விரித்தெடுத்தான். ஒயரில் இருந்த ஸ்விட்சைப்போட, தண்ணீர் பீறிட்டு அடித்தது.

நான் வாட்டர் சர்வீஸ் என்றால், தண்ணீரை நன்றாக அடித்து, பிறகு துடைத்துவிடுவார்கள். அவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன். அவன் அதற்கு பிறகு, உள்ளே சென்றேன். தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து, ஒரு வாளியில் ஊற்றினான். அதென்ன தொட்டி தண்ணீர்? காவிரி தண்ணீரோ! பிறகு, ஒரு கேனில் இருந்து ஏதோ ஒரு திரவத்தை கொஞ்சம் ஊற்றினான். கலக்கியவுடன் வந்த நுரையைப் பார்த்தவுடன், அது ஏதோ சோப்பு தண்ணி என்று தெரிந்தது.

வண்டியில் ஒரு இடம் பாக்கியில்லாமல், சுற்றி சுற்றி வந்து, அழுக்குத் தேயக் கழுவினான். சும்மா சொல்லக்கூடாது. கொஞ்ச நேரத்திற்கு, வண்டியை அவனுடையதாகவே நினைத்துக்கொண்டான் போலும். ஒரு சின்ன தூசுவைக்கூட விடாமல், முழு அர்ப்பணிப்புடன் தேய்த்து தேய்த்து கழுவினான். வண்டி உஜாஜாவிற்கு மாறியது.

அந்த கடையின் பின்பக்கத்தில் தான் அவர்களது வீடு இருக்கிறது. கடையின் வழியாகவே, வீட்டிற்கு செல்ல முடியும். அந்த வழியில் ஒரு வயதான் அம்மா உள்ளே சென்றார்கள். நான் கடை வாசலில் ரொம்ப நேரமாக நிற்பதை கண்ட அவர், கடையின் முன்னால் இருந்த சேரில் உட்கார சொன்னார்கள். அவர்கள் கிருஸ்தவர்கள். கடையின் உள்ளே, கிருஸ்மஸுக்காக ஒரு குடில் செட்டப் செய்து வைத்திருந்தார்கள். பெரும்பாலும், உடைக்கப்பட்ட கற்கள், வாகன குழாய்கள் என பழைய பொருட்களைக் கொண்டே செய்திருந்தார்கள். யேசுவின் உண்மையான குடிலாக அது இருந்தது.

அதற்குள், சோப்பு போட்டு முடித்தவன், திரும்ப தண்ணீர் அடிக்க துவங்க, அது என் மேல் தெறிக்க ஆரம்பிக்க, நான் எழுந்து பழையபடி தெருவிற்கு வந்தேன். வண்டியைப் பார்க்க ரொம்ப திருப்தியாக இருந்தது. சாவியைப் போட்டு, வண்டியை எடுத்துக்கொள்ள சொன்னான். எவ்வளவு என்று கேட்டு, ஐம்பது ரூபாய் கொடுத்தேன். ஓட்டும்போது, கண்ணாடியில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர், எனது இரு கைகளிலும் விழுந்துக்கொண்டிருந்தது. நிலத்தடி தண்ணீரா, ஏரி தண்ணீரா, காவிரியா தெரியவில்லை.

எனது வீட்டில் இருந்து, இந்த கடை சிறிது தொலைவுதான். இருந்தாலும், அடுத்த முறை இங்கேயே வரலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன். காந்தி கொள்கை போனாலும் சரி!

.

17 comments:

மாணவன் said...

அருமை நண்பரே,

"வாட்டர் சர்வீஸ்" இந்த விசயத்தைக்கூட உங்கள் பாணியில் அருமையாக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை...

அமுதா கிருஷ்ணா said...

நான் எங்கள் வண்டியினை இப்படி தான் குளிக்க வைப்பேன். எனக்கு ரொம்ப பிடித்த வேலை.குளித்த வண்டியினை பார்க்க ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்.

Mohan said...

நீங்கள் எதைப் பற்றி எழுதினாலும்,அது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாட்டர் சர்வீஸ் க்கு ஒரு போஸ்ட் டா?

pichaikaaran said...

” நமக்கான வேலைகளை, நாம் தான் செய்ய வேண்டும் என்று காந்தி சொன்னார் அல்லவா”

சென்ற பதிவுக்கு பிராயாசித்தம் செய்துவிட்டது இந்த வரி..
நல்லவைகளை அவ்வப்போது நினைவுகூர்வது நல்லது...

கெட்டதை போற்றினால் நாமும் அதில் ஓர் அங்கமாகி விடுகிறோம்...

இந்த பதிவுக்கு பாசிடிவ் ஓட்டு போட்டாச்சு

THOPPITHOPPI said...

///வாட்டர் சர்வீஸ் க்கு ஒரு போஸ்ட் டா?////////

ஹஹாஹா
--------------------------------

பரவாயில்ல ஒரு வாட்டர் சர்விச்சயே இவ்வளவு அழகா பதிவு போட்டு இருக்கீங்க. ஒரு சில இடங்களில் நாம் கொடுத்த பணத்துக்கு மன நிம்மதி கிடைத்தால் இப்படித்தான் ரசிக்க வைக்கும்

venkat said...

வாட்டர் சர்விசில் - இவ்வளவு விசயங்களா ?

Thamira said...

நான் உட்காரும் இடம், பேண்ட் படும் இடத்தை மட்டும் துடைத்து விட்டு உட்காருவேன். பின்னால் உட்கார்பவர்கள், அவர்களது இடத்தை துடைத்துவிட்டு உட்கார வேண்டும்!//

ஹிஹி.. சேம், சேம்.!

சரவணகுமரன் said...

நன்றி மாணவன்

சரவணகுமரன் said...

சரிதான் அமுதா கிருஷ்ணா

சரவணகுமரன் said...

நன்றி மோகன்

சரவணகுமரன் said...

ரமேஷ்,

ஹி... ஹி... இன்னும் எதுக்கெல்லாம் நீங்க இங்க பதிவு பார்க்க போறீங்களோ? :-)

சரவணகுமரன் said...

பார்வையாளன்,

ரொம்ப நல்லவர்தான் நீங்க!!!

சரவணகுமரன் said...

நன்றி தொப்பி

சரவணகுமரன் said...

இல்லையா பின்ன, வெங்கட்!

சரவணகுமரன் said...

ஆதிமூலகிருஷ்ணன்,

அப்ப நம்மள மாதிரியும் பல பேர் இருக்காங்க! :-)

Indian said...

சூப்பர். எந்த ஏரியாவுல இருக்கு நீங்க சொல்ற கடை? நானும் டூ-வீலர் சர்வீஸ் கடையை ரொம்ப நாளாத் தேடிட்டிருக்கேன்.