Thursday, February 26, 2009

சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா'

எண்பதுகளில், சுஜாதா ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. புத்தகமாக முதல் பதிப்பு வெளிவந்தது நவம்பர் 1986 இல். பின்பு, தூர்தர்ஷனில் நாடகமாக மாற்றங்களுடன் வந்தது. பின்ன, சுஜாதாவின் கற்பனையை அப்படியே எடுப்பது என்றால் சுலபமா என்ன? அதுவும் தூர்தர்ஷனில்?

இப்ப, இதைத்தான் ஷங்கர் எந்திரனாக எடுத்து கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. கதையை படித்தால் அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இந்த கதையில் ஹீரோ என்று யாரும் கிடையாது.

2020 களில் நடக்கும் கதையை 1980 களில் எழுதியிருக்கிறார். 2022 இல் எங்கும் இயந்திர மயம். கதை என்ன கதை? சுஜாதாவின் கற்பனையும் வார்த்தைகளும் தான் விசேஷம். சிபி-நிலா ஒரு இளம் தம்பதி. இவர்கள் வாழும் அப்போதைய இந்தியா, ஜீவா என்னும் ஒற்றை அதிகாரத்தின் கீழ் உள்ளது. ரவி, மனோ என்று மற்றொரு அணி. நாட்டின் அதிகாரத்துடன் விளையாடும் அணி. ரவியுடன் இருந்த ஜீனோ என்ற இயந்திர நாய், நிலாவுடன் இணைந்து போடும் ஆட்டம்தான், இக்கதையின் ஸ்பெஷல். இந்த கதையை, கதை எழுதிய காலக்கட்டத்தில் படித்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் கூடிய சுவாரஸ்யமாக, சரியாக இருந்திருக்கும். இப்போது படித்தால் கிடைப்பது, இன்னொரு வகையான அனுபவம்.

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் சுஜாதா, இரு எழுத்தில் பெயர் வைத்துள்ளார். நாயை விட்டே ஷெல்லியின் கவிதையை பேச விடுகிறார். வருங்காலத்தில் என்ன மாதிரியான இயந்திரங்கள் இருக்கும், மனித மனம் எப்படி மாறுப்பட்டிருக்கும் என தனக்கே உரிய பாணியில் கதையெங்கும் தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்.

இக்கதையில் இருந்து சில வரிகள்.

------

நிலா சிபிக்கு போன் செய்ய போகிறாள்.

“பேசுபவரைப் பார்க்கவும் வேண்டுமெனில் ஒரு ரூபாய் அதிகமாகப் போடவும்” என்றது குரல், இயந்திர முட்டாளாக.

‘என் இனிய இயந்திரா... நிச்சயம் உனக்கு நான் பணிந்து ஒரு ரூபாய் போடத்தான் போகிறேன். இன்று என் கணவனிடம் அந்தச் செய்தியைச் சொல்லும்போது அவன் முகம் மாறுவதைப் பார்த்தே ஆகவேண்டும்.’ (இப்பத்தான் மூணு நாளு முன்னாடி கலைஞர் பி.எஸ்.என்.எல். போனில் 3 ஜி அறிமுகப்படுத்தினார்.)

“சிபி! நிலா பேசறேன்.”

“நிலா! எங்கருக்கே?”

“மால் பக்கத்தில் பூத்தில. சிபி, ஒரு சுபச் செய்தி!”.
(எனக்கு ஒரு நாலு அஞ்சு வருஷம் முன்னாடி தான் மால்ன்னா என்னன்னு தெரியும்.)

-------

எட்டாவது தெருவில் டிக்கெட் வாங்கிக் கொண்டு ‘மானோ’ பிடித்தாள். அதன் காந்தத் தண்டு காற்று மெத்தையில் வழுக்கிக் கொண்டு செல்ல, ‘சின்த்’ இயந்திரக் குரலில்-பல்லாவரம், மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி என்று அறிவிக்க, பத்தாவதில் இறங்கி பூமியடி ரயில் பிடித்து எட்டாவது குறுக்குத் தெருவில் இறங்கிக் கொண்டாள். சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு வாரத்துக்கு உண்டான காய்கறி வகைகள் ஆர்டர் செய்தாள்.

இந்த பட்ஜெட்டில் தான் லாலு புல்லட் ரயில் பற்றி சொல்லியிருக்கிறார். மானோ எப்ப வருமோ?

-------

ஜீனோ மேசை விளக்கைத் தன்பால் பொருத்திக் கொண்டு கொட்டாவி விட்டது நிலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மனத்தைப் படித்தது போல் ஜீனோ, “கொட்டாவி விடுவது என்னுடைய மேம்போக்கான செயல்களில் ஒன்று. நிஜ நாய் போல இருக்கவேண்டும் என்று என் கம்பேனிக்காரர்கள் கற்றுத் தந்த அசிங்கம்!”.

-------

“டில்லிக்கு எப்படிப் போவது?”

“அரை மணிக்கு ஒரு தரம் ஷட்டில் விமானம் இருக்கிறது. வார நாட்களில் போனால் பாதி விலைதான் டிக்கெட். காற்று சுவாச பிளேனில் அரை மணி பயணம்!” என்றது ஜீனோ.


-------


”ஜீனோ, இது என்ன வம்பு? வேண்டாம்! உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவார்கள்.”

“என் மெமரியைக் காப்பி பண்ணிக் கொண்டு விட்டால் சுட்டுப் பொசுக்கினாலும் இன்னொரு மாடல் வாங்கிக் கொள்ளலாமில்லையா? எனக்கு என்ன உயிரா இருக்கிறது?”


-------

“ஐயோ! இது சிபி இல்லை. இது யார்? இது யார்?” என்று நிலா புலம்ப,

“’யார்’ இல்லை, இது அஃறிணை” என்ற ஜீனோ, “எனக்கு இருக்கிற படிப்பறிவுகூடக் கிடையாது, மனித சாதியில்லை. என்ன சக யந்திரமே, உனக்கு சித்தர் பாடல் தெரியுமா?”


-------

நாய் தேநீரை சாஸரில் ஊற்றி ‘ப்ளக் ப்ளக்’ என்று நக்கிக் குடித்தது. “இதில் உள்ள க்ளுகோஸ் மட்டும்தான் என் ஸெல்லுக்கு உபயோகம்! மற்றவை யாவும் விரயம். ரவி, தித்திப்பு என்றால் என்ன?”

“உன் நாக்குக்கு அது தெரிவதில்லையா ஜீனோ?”

“என் நாக்கில் ஒரு தெர்மோகப்பிள் மட்டும்தான் இருக்கிறது. ருசி என்பதே எங்கள் மாடலுக்குக் கிடையாது. நானூறு கொடுத்தால் நாக்கு மாற்றித் தருகிறார்கள்.”

“நாக்கு போல வேறு அவயவங்கள்?”

“ஷட் அப்!” என்றது ஜீனோ.


--------

ஜீனோ போன்ற சிறிய இயந்திர நாயைக் கைது செய்ய மூன்று காவலர்கள் அதிகப்படிதான். மேலும், சக்தி வாய்ந்த லேசர் துப்பாக்கிகளை ‘பயம்’, ‘மரணம்’ போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தமில்லாத அந்த மெஷின் ஜென்மத்திடம் காட்டுவது அபத்தமாக இருந்தது.

-------

“பாட்டரி இணைப்பை எடுத்து விட்டால் போதுமே... நான் செத்துப் போய் விடுவேனே? புறப்படு. தப்பித்து விடலாம்” என்றது ஜீனோ, தீர்மானத்துடன்.

”ஏன் ஜீனோ?”

“பயம்! அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது. என் ஞாபகம், என் செயல்பாடுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டால் நான் என்கிற நான் என்ன ஆவேன்?”

”ஜீனோ, நீ மனிதர்கள் போல் சிந்திக்கத் துவங்கி விட்டாய்.”


------

“ஜீனோ, வர வர நீ பேசுவது எதுவுமே புரியவில்லை எனக்கு.”

“மனுஷத்தன்மையின் அடையாளம்!”


------

கொசுறு : கூகிளில் en iniya iyanthiraa என்று டைப் செய்து தேடினால், அது என்ன பரிந்துரைக்கிறது என்று பாருங்கள்? என் இனிய நயன்தாராவாம்.

கூகிளே, நீயுமா இப்படி?

Wednesday, February 25, 2009

நாட்டு சரக்கு - கலைமாமாமணி

தமிழின் இரு முன்னணி நட்சத்திரங்கள் அவர்கள். ஆரம்ப காலத்தில் இணைந்து கலக்கி கொண்டிருந்தார்கள். தற்போது பிரிந்தே நடிக்கிறார்கள். இவர்கள் சரும நிறத்தில் வேறுப்பட்டிருந்தாலும், மக்களை மகிழ்விப்பதில் ஒரே நிறம். இருவருமே தமிழின் முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் படங்களில் நடித்து இருக்கிறார்கள்.

யார் இவர்கள்? பதில் முடிவில்.

-----

தமிழக அரசு சார்பில் சாதனை புரிந்த பலருக்கு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட பார்த்து தான், எனக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பரதநாட்டியம் ஆட தெரியும்'ங்கற விஷயம் தெரியும். அத பார்த்திட்டு ச்சின்னப்பையன், 'என்கிட்டயும் ரேசன் கார்டு இருக்கு. எனக்கு தருவாங்களா'ன்னு கேட்குறாரு.

இதுல வேற கமல், வெளிநாட்டினர் விருது வாங்க நம்ம நாட்டுக்கு வரணும்ன்னு ஆசைப்படுறாரு. நம்ம நாட்டுல எல்லோருக்கும் கொடுத்திட்டு தான், அவுங்களுக்கு கொடுக்கணும் சரியா? இதன் மூலம் நம்ம தகுதியை உயர்த்திக்கலாம்.

அந்நியன் படத்துல விவேக் சொல்லுவாரு. "இங்க நான் ஒரு கலைமாமாமணி வாங்க போராடிட்டு இருக்கேன்"ன்னு. கூடிய சீக்கிரம் அதுக்கும் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

-----

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்பு காபி, டீ, போர்ன்விட்டா, லெமன் டீ, பாதாம் மில்க் என்று இலவசமாக அள்ளி வழங்கி கொண்டிருந்தார்கள். இப்ப, பல கம்பெனிகளில் கையில காசு, வாயில தோசை என்றாக்கி விட்டார்கள்.

முன்ன, பிரிண்ட் அவுட் எடுக்கணும்னா, அடிச்சி விட்டுட்டு இருந்தாங்க. இப்ப, அதுக்கும் தட்டுப்பாடாம்.

பல கம்பெனிகளில், மாத கடைசியில் வழங்கி கொண்டிருந்த சம்பள பட்டுவாடாவை, மாதத்தின் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம். ஏதோ பேங்க், இன்ட்ரஸ்ட், மிச்சம்'ங்கறாங்க. ஒண்ணும் புரியல.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?

-----

இப்படி உள்ளுக்குள்ள பல விஷயம் நடந்தாலும், வெளியே அவுங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு விஷயம் நடக்க ஆரம்பிச்சிருக்கு.

வீட்டு வாடகை குறைச்சிருக்காம். எனக்கு குறையலையே?'ன்னு கேட்காதீங்க. இருக்குற வீட்டுக்கு குறைக்கலையாம். அதுக்கு பதிலா, வீடு மாறி போனீங்கன்னா, குறைஞ்ச வாடகைக்கு கிடைக்குதாம். இதனாலேயே, பலர் வீடு மாற ஆரம்பிச்சுருக்காங்க.

-----

மேலே சொன்னவாறு சொன்னால் தெரியுமோ என்னவோ, இப்படி சொன்னால் கண்டிப்பாக தெரியும். தமிழ் சாட்டிலைட் சானல்களில், இவர்கள் முகம்தான் அடிக்கடி தெரிகிறது. வேற யாரு?

பத்மஸ்ரீயும், வைகை புயலும்தான்...

விவேக் கடைசியா (நம்மை வைத்து) செய்த பெரிய காமெடி, பத்மஸ்ரீ தான்.

Monday, February 23, 2009

ஆஸ்கர் வாழ்த்துக்களும் மனசாட்சியின் குரலும் :-)

நகைச்சுவையா இருக்கோ இல்லையோ, இப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

கலைஞர்

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.

ஆதலால், சிறுபான்மை சமுதாயத்திற்கு கழகம் செய்திட்ட தொண்டினை எண்ணி தங்கள் வாக்கினை உதயசூரிய... அச்சச்சோ, இனி வாழ்த்து அறிக்கையோ?

ரஜினி

ஒவ்வொரு தமிழருக்கும், இந்தியருக்கும் பெருமை சேர்த்துவிட்டார் ரஹ்மான்.

இனி எந்திரன், ஓவர்சீஸ்ல சும்மா அதிரும்ல...

ஜெயலலிதா

ரஹ்மான், இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

ஆமா, நம்ம இளைஞர் பாசறை என்னாச்சு? பன்னீர்...

கமல்

ஆஸ்கார், அமெரிக்காவின் உச்சம். அதையே உலகின் உச்சம் என்று நினைத்து நின்று விட கூடாது. அதை தாண்டி செல்ல வேண்டும்.

ம்ம்ம்... இனி ஆஸ்கார், ஆஸ்கார்ன்னு நம்ம உயிரை எடுக்க மாட்டாங்க...

சோனியா

இந்தியாவை பெருமையடைய செய்த ரஹ்மானுக்கும், இந்த படத்தில் பங்காற்றிய நடிகர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்தியாவை பற்றி இப்படி ஒரு படம் எடுக்கும் நிலை உள்ளதற்கு, காங்கிரஸிற்க்கும் எனக்கும் உள்ள பங்கை மறந்துவிட வேண்டாம்.

ப.சிதம்பரம்

ஆஸ்கார் விருதுக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு பணம் பரிசாக வழங்கப்பட்டு இருந்தால் அவருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதிமந்திரியிடம் பரிந்துரைசெய்வேன்

இதன் மூலம் அவர் சொத்து மதிப்பை தெரிந்து கொள்ளலாம். ஓ! இப்ப, ஐடி டிபார்ட்மெண்ட் நம்மக்கிட்ட இல்லையோ?

ராம.நாராயணன்

அந்த மாபெரும் தமிழனுக்கு சென்னையில் விரைவில் தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும். திரையுலகில் உள்ள அனைத்து பிரிவினரும் சேர்ந்து இவ்விழாவை நடத்துவார்கள்.

வராதவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ச்சே, பழக்கதோஷத்துல இதுதான் வருது.

ஹாரிஸ் ஜெயராஜ்

நம்மாளு வாங்குனதுல ரொம்ப சந்தோஷம்.

இனி தமிழ் பக்கம் அவ்ளோவா வரமாட்டாருல்ல. மக்களே, இனி நான் இருக்கேன்.

யுவன்

தமிழ்ல இருந்து போயி ஆஸ்கார் வாங்குனது பெருமை பட வேண்டிய விஷயம். எங்க குடும்பத்துல எல்லோருக்கும் சந்தோஷம்.

ஆனா, அப்பாவை தான் காணும்.

எஸ்.ஜே.சூர்யா

ரொம்ப மகிழ்ச்சி. நான் ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.

என்னை யாரும் மறந்திடாதிங்க. நானும் டைரக்டர் தான்... டைரக்டர் தான்... ஆமா, சொல்லிட்டேன்.

எல்லா புகழும் ரஹ்மானுக்கே

இன்று காலை எழுந்தவுடன் முதலில் டிவியை தான் போட்டேன். ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்ததா இல்லையா என்று பார்க்க. போன வாரம் லீக்கான ஆஸ்கார் லிஸ்ட்'இல் ரஹ்மான் பெயர் இல்லை. அது உண்மையாக இருக்க கூடாது என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

எட்டு மணி இருக்கும். செய்தி சானல்கள் பார்த்தால் எதிலும் ரஹ்மான் பெயர் இல்லை. அச்சச்சோ என்று இருந்தது. அப்புறம் ஸ்டார் மூவிஸ் பார்த்தால் இன்னும் வழங்கி கொண்டிருந்தார்கள். ஆபிஸுக்கு கிளம்பி கொண்டே அதையும் பார்த்து கொண்டிருந்தேன்.

எதிர்பார்த்தபடியே ரஹ்மான் ஆஸ்காரை வென்றார். மேடையில் தமிழில் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற போது உண்மையிலேயே புல்லரிக்க தான் செய்தது.

ரஹ்மான் வாழ்க்கையில இருந்து நாம எடுத்துக்கிறத்துக்கு இசை மட்டும் இல்லை. இன்னும் நிறைய இருக்கு.

---

அது விளம்பர துறை சம்பந்தமான விருது வழங்கும் விழா. அப்போது தான் தளபதி வெளியாகி இருந்தது. இளையராஜா சொல்லியிருந்த சில வார்த்தைகள், மணிரத்னத்தை யோசிக்க வைத்திருந்தது. விழாவில், சின்ன வயசு பையன் ஒருவனுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கினார்கள். லியோ காபின்னு சொன்னா, இன்னும் காதுல ஒலிக்குமே? அந்த இசைக்கு தான் விருது. பையனை மணிரத்னத்துக்கு அறிமுகப்படுத்த, அவர் அவனின் இசையை கேட்க விரும்பியிருக்கிறார். அவனும் ஸ்டுடியோ வர சொல்லிட்டான்.

அந்நேரம் காவிரி பிரச்சினை நடந்திருந்தது. அப்பிரச்சினை மனதை தொந்தரவு செய்ய, உருவாகியிருந்த இசை அது. மணிரத்னம் வந்திருந்த போது, அந்த ட்யூனைத்தான் போட்டு காட்டினான். கேட்ட அடுத்த நொடி, மணிரத்னம் முடிவு செய்து விட்டார். அடுத்த படத்துக்கு, நீதான்.

பையனை எல்லோருக்கும் தெரியும். உலகத்துக்கே. படம்-ரோஜா. பாடல்- தமிழா தமிழா. அதன் பின் நடந்தது, வரலாறு.

முதல் படத்திற்க்கே, இந்தியாவின் உயர்ந்த தேசிய விருது.

----

நாலு வயதில், கீ-போர்ட்டில் கையை வைத்த திலீப்பின் இளமைக்காலம் துயரங்களிலானது. ஒன்பது வயதில் அவரது அப்பாவை இழந்தார். அன்று, ஆரம்பித்தது அவரது ஓட்டம். அப்ப, அவர் இசையை பார்த்தது, ஒரு சோறு போடும் விஷயமாக மட்டுமே. ஓடிய ஓட்டத்தில் கல்வியை இழந்தார். பள்ளி வாழ்க்கையை இழந்தார். கல்லூரி வாழ்க்கையை இழந்தார். தெரிந்தது ஒன்றுதான். இசை.

இன்னமும் புன்னகை மன்னனுக்கு வெயிட்டை கொடுப்பது, அந்த தீம் மியூசிக். இளையராஜாவின் குழுவில் இருந்த போது, ரஹ்மான் கம்போஸ் செய்தது அது. ரஹ்மானுக்கு இளையராஜா இரண்டு விதங்களில் முன்னுதாரணம். எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாமல் நல்ல இசையை கொடுப்பது. ஆன்மிகம்.

----

உலகத்திலேயே, அதிக எண்ணிக்கையில் பாடகர்களை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் என்றால் அது ரஹ்மானாகத்தான் இருக்கும். அதற்கு அவர் சொன்ன காரணம். "திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போறப்ப ஏற்படுற வலி எனக்கு தெரியும்".

ரஹ்மான் வருறதுக்கு முன்னாடி இருந்த கேசட்டுகளையும், வந்ததுக்கப்புறம் இருக்குற கேசட்டுகளையும் பார்த்தா, ஒரு விஷயம் கவனிக்கலாம். ரஹ்மான் வந்தபின், ஒரு படத்தின் இசைக்கு பணியாற்றிய அத்தனை பேரின் பெயரும் கேசட்டில் இருக்கும்.

பொதுவாக, ஒரு படத்தின் இசையமைப்பாளரை இயக்குனர் தேர்ந்தெடுப்பார். இயக்குனரை இசையமைப்பாளர் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? மின்சார கனவு படத்தில் முதலில் புக் செய்தது ரஹ்மானை. ரஹ்மானிடம், யாரை இயக்குனராக போடலாம் என்று கேட்ட போது, அவர் சொன்னது, தன்னுடைய ஆரம்ப கால நண்பரும், விளம்பரப்பட இயக்குனருமான ராஜிவ் மேனனை.

இசையில் மட்டும் அல்ல, அவர் டிரெண்ட் செட்டர். மற்றவர்களை ஊக்குவிப்பதிலும், அங்கீகரிப்பதிலும் டிரெண்ட் செட்டர் தான் அவர்.

----

பாலிவுட்டில் ரஹ்மான் நுழைந்த போது, அவரை அமுக்க பலர் நினைத்தார்கள். எதையும் கண்டுக்கொள்ளவில்லையே? அவரது கவனம் முழுக்க வேலையில் தான். இசை. மக்களுக்கு பிடித்த இசை. அவ்வளவுதான். வேறு எதை நினைத்தும் புலம்பவில்லை. அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவின் நம்பர் ஒன்.

அவர் மேல்தான் எத்தனை சர்ச்சை? இசையமைக்க அதிக நாள் எடுக்கிறார். அலைய விடுகிறார். அதிக பணம் கேட்கிறார். மதம் மாற்றுகிறார். தீவிரவாதிகளை ஆதரிக்கிறார். வளர்ப்பு மகன் திருமண வழக்கு. இது அனைத்திற்கும் அவர் பதில் சொன்ன மொழி ஒன்றுதான். இசை.

ஒரு காலத்தில் தமிழ் பாட்டை தமிழன் தான் கேட்டு கொண்டிருந்தான். இப்பவும், சில மாநிலங்களில், ஹிந்தி பாட்டை கேட்பதையும், ஆங்கில பாடலை கேட்பதையுமே மதிப்பிற்குரியதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இன்று, தமிழ் பாட்டை, தமிழ் இசையை, இந்தியா மட்டுமில்லாமல், உலகம் முழுக்க கேட்க முடிகிறதென்றால், அதற்கு ஒரே ஆள் தான் காரணம். ரஹ்மான்.

இன்று ரஹ்மானின் இசை காதில் விழாமல் ஒரு தமிழனால், இந்தியனால் ஒரு நாளை கழிக்க முடியாது. சன் டிவியின் டைட்டில் மியூசிக்கும் அவருடையதே. ஏர்டெல்லின் ரிங் டோனும் அவருடையதே.

இசை உலக மக்களை இணைக்குமா? முடியும் என்று நம்பி உழைத்து கொண்டிருப்பவர், ரஹ்மான்.

----

ரஹ்மானுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். சிறு வயதில், அவரை சுழற்றியடித்த துன்பங்களிலிருந்து விடுபட, இறை பக்திக்கு தன்னை முழுமையாக அர்பணித்தார். கடவுளையும் இசை வடிவாக பார்க்கிறவர். அன்பையையும் இசை வடிவாக பார்க்கிறவர். தன்னுடைய எந்த ஒரு சாதனையையும், இறைவனுக்குக்கே அர்பணிக்கிறவர். இன்னமும் எளிமையாக, வெட்கப்படும் இளைஞனாகவே இருக்கிறார். எதற்கும் காரணமாக அவர் சொல்லுவது, “எல்லா புகழும் இறைவனுக்கே”. அது அவருடைய நம்பிக்கை.

இன்று ரஹ்மானின் சாதனையால் பெருமைப்பட்டு கொண்டிருப்பவர்கள், தமிழர்கள். இந்தியர்கள். நாம்.

நாம் சொல்லுவோம், "எல்லா புகழும் ரஹ்மானுக்கே".

சிவா மனசுல சக்தி

ஓசுர்ல ஒரு நண்பரை பார்த்துவிட்டு இந்த படத்திற்கு சென்றேன்.

ஜீவா சிரிப்பது, நிறுத்துவது, சிரிப்பது, நிறுத்துவது என்று கலக்கியிருக்கிறார். சந்தானம் தான் இப்போதைய கவுண்டமணி. எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாயகி டிவியில் பேசியதை பார்த்து விட்டு படத்தில் பார்த்தால், இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.

நான் பார்த்த தியேட்டரில் படம் ஆரம்பித்ததே, ஜீவா டிரேயினில் ஏறுவதிலிருந்துதான். நான் கூட வித்தியாச இருக்குதேன்னு நினைச்சேன். நிறைய விமர்சனங்களில் விகடன் லோகோ பற்றி புகழ்ந்து சொல்லிருந்தார்கள். அதை ஆர்வமாக பார்க்கலாம் என்றிருந்தால் கடைசி வரை காணவில்லை. அப்புறம் தான் புரிந்தது, தியேட்டர்காரன் தான் படத்தின் டைட்டிலை கட் செய்து விட்டான் என்று. விகடா, இதை கொஞ்சம் கவனி.

கடைசி காட்சிகள் ஜவ்வாக இருந்தாலும், அதுவும் வித்தியாசமான கிளைமாக்ஸ் தான்.

படத்தின் மார்க்கெட்டிங் நன்றாக உள்ளது. மார்க் போட சொல்லி கார்டு கொடுக்கிறார்கள். படத்தின் பாடல்களை கொஞ்சம் நன்றாக மார்க்கெட்டிங் செய்திருக்கலாம்.

படம் நல்லா ஜாலியா போகுது. எங்கேயும் கேப் விடாம காமெடி வச்சிருக்காங்க. செம லோக்கலா இருக்கு. சின்ன சின்ன விஷயங்களிலும் ஆச்சரியப்படுத்துகிறார் அறிமுக இயக்குனர் ராஜேஷ்.

இவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன்.

நாட்டு சரக்கு - ஆனாலும் ஷங்கர் மாதிரி வராது

சந்திராயன் 1 யை தொடர்ந்து 2012 இல், சந்திராயன் 2 என்ற பெயரில் ஒரு இயந்திர மனிதனை சந்திரனுக்கு அனுப்ப போகிறதாம் இஸ்ரோ. இவர்கள் எந்தளவு கச்சிதமாக தங்கள் வேலையை செய்கிறார்கள் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது.

இரண்டரை மணி நேரம் ஓடும் படத்தில் ஒரு ரீல் எந்திரனை காட்டவே நம்ம ஊர் டைரக்டர் ஷங்கர், 2-3 வருடங்கள் எடுத்துக்கிறாரு. கேட்டா, பெர்ஃபெக்டா வரணும்ன்னா அவ்ளோ நாள் ஆகும்’ங்கறாரு. இவுங்க என்னனா, மூணு வருசத்துல நிலவுக்கே ரியல் எந்திரனை அனுப்பறாங்க.

----

மகள் வயசு நடிகை கூட ஒரு நடிகர் ஜோடியா நடிக்கலாமான்னு நாமெல்லாம் கேள்வி கேட்டுட்டு இருக்கோம். ஆனா, ஒரு கன்னட படத்துல (Mussanje Gelathi) ஒருத்தர் அவர் நிஜ மகளோடயே ஜோடியா நடிக்குறாரு. இது ஒரு லவ் ஸ்டோரியாம். ஹீரோ ஸ்ரீநிவாஸ் படத்துல ஒரு ப்ரொஃபஸர். அவரோட மகள் ஷாலினி, அவர் பணிபுரியும் கல்லூரியில் படிக்கும் மாணவி. அவுங்க ரெண்டு பேருக்கும் லவ். கருமம் கருமம்.

கேட்டா, இது ஒரு கலை. இதை சினிமாவா பாருங்கன்னு சொல்லுவாங்க.அப்புறம் எதுக்கு ஹீரோ - ஹீரோயினுக்குள்ள கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்ன்னுலாம் சொல்றீங்க.

------

ஏற்கனவே இன்போஸிஸ் சொல்லி இருந்தாங்க. இந்த வருஷம் சம்பள உயர்வெல்லாம் கிடையாது. சம்பள குறைப்பு தான் உண்டுன்னு. இப்ப கவர்மெண்ட்டும் சொல்லியிருச்சு. ஊழியர்களை வேலையை விட்டு தூக்காதீங்க. சம்பளத்தை வேணா குறைச்சுக்கோங்கன்னு. ஸோ, சம்பள குறைப்பு நியாயமான விஷயமாயிடுச்சு.

அப்ரைசல் டைம் வர போகுது. மத்த வருசஷங்கள போல இந்த வருசமும் பேசிக்குவாங்க. உனக்கு எத்தனை பர்சண்ட், எனக்கு எத்தனை பர்சண்ட்ன்னு. ஆனா, இந்த டைம் மைனஸ்ல பேசிக்குவாங்க.

------

ஜெர்மன்ல ஒரு நாய், ‘மா மா’ன்னு பேசுதாம். நாய் பேரு அர்மானி. ஜெர்மனி முழுக்க பயங்கர பாப்புலர். அதோட வீடியோவை தான் அந்நாட்டு மக்கள் இப்ப விரும்பி பார்க்கிறார்களாம்.

இப்படி தான் ரட்சகன் படத்துல வடிவேலு ஒரு ஆட்டுக்கு நாய் வேஷம் போட்டு, அது இங்கிலிஷுல May சொல்லுதுன்னு கப்சா அடிச்சு விடுவாரு. அந்த மாதிரி இருந்திட போகுது. பார்க்க கொஞ்சம் ஆடு மாதிரிதான் இருக்கு.

-----

பெங்களூர்ல ஒரு பைக் திருடன். இதுவரைக்கும் 52 பைக்குகள திருடியிருக்கான். அத்தனை பைக்குகள திருடி என்ன பண்ணியிருக்கான் தெரியுமா? பிரியாணி வாங்கி தின்னுருக்கான். அட, நிஜமாங்க!. ஆள் தீவிர பிரியாணி பிரியர். பைக்க திருடிட்டு போற வழியில, பிரியாணி சாப்பிடுவானாம். பில்லுக்கு காசு இருக்காது. ‘இந்த பைக்க வச்சிருங்க. பணம் கொண்டு வாரேன்’ன்னு சொல்லிட்டு அப்படியே போயிடுவானாம்.

அடப்பாவி, பொல்லாதவன் படத்துல வருற மாதிரி திருடுன பைக்க வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தா கூட ஒண்ணும் தோணியிருக்காது. ஒரு பிளேட் பிரியாணிக்கு கொடுத்து பைக் மதிப்ப குறைச்சிட்டியேடா?

Saturday, February 21, 2009

ரசிகர்கள் நடிகர்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்

ரசிகர்கள் நடிகர்களிடம் (நாக்க புடிங்கிக்கிற மாதிரி) கேட்க விரும்பும் 10 கேள்விகள்

1) தலைவா, நான் படிக்கும் போதுதான் ஒரு இருபது வயசு பொண்ணு கூட ஆடிட்டு இருந்த. இப்ப என் மவனும் படிச்சு முடிச்சிட்டான். இன்னமும் அதே மாதிரி இன்னொரு இருபது வயசு பொண்ணு கூட ஆடிட்டு இருக்கியே. ஏன் இப்படி?

2) ஒரு படம் ப்ளாப் ஆன பின்னாடியும், ஒரு தயாரிப்பாளரின் வாழ்க்கையை ஒழிச்சு கட்டுன பின்னாடியும், எப்படி அதே சம்பளத்தை, கோடிகளில, உங்களால எந்த சங்கடமும் இல்லாம கேட்க முடியுது?

3) சார். உங்க வயசு எங்களுக்கு தெரியும். உங்க வயசுக்காரங்க முடி என்ன கலர்ல இருக்கும்ன்னு எங்களுக்கு தெரியும். அப்புறம் ஏன் இன்னமும் டை அடிச்சிக்கிட்டு? நிஜ வாழ்க்கையிலும் இந்த மேக்கப் தேவையா?

4) அது என்னப்பா, உங்களுக்கெல்லாம் பொது மக்கள் மேல சேவை உணர்வு உங்க மார்க்கெட் போனதுக்கப்புறம் தான் வருது?

5) உங்க பையனுக்கு ஒண்ணும் தெரியாது, நடிக்க வாரான். சரி. அது என்ன, நீங்களும் உங்க பையனும் ஒரே பொண்ணு கூட ஆடிட்டு. அசிங்கமா இல்ல?

6) உங்களுக்கு இன்னொரு நடிகனை பிடிக்கலைன்னா, அதுக்கு ஏங்க கதைக்கு சம்பந்தமே இல்லாமே, அவுங்களை திட்டி டயலாக் பேசிட்டு? நாங்க காசு கொடுத்து படம் பார்க்க வருறது, உங்க சில்லறைத்தனமான சண்டைய பார்க்கவா?

7) காமெடி பண்ணனும்ன்னா யாரையாவது அடிச்சோ, உதைச்சோ, திட்டியோ, கிண்டல் பண்ணியோ, கேவலப்படுத்தியோ, கெட்ட வார்த்தையில பேசியோ தான் சிரிக்க வைக்க முடியுமா? வேற முறையே இல்லையா? டீ.ஆர்., ஜே.கே.ஆர் இவுங்கள பார்த்தாவது திருந்த வேண்டியதுதானே?

8) உங்க பேருக்கு முன்னால ஒரு பட்டப்பேரு வச்சிருக்கீங்களே? அதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?ன்னு என்னைக்காவது யோசிச்சியிருக்கீங்களா?

9) படத்துல நடிக்குறதுக்கு முக்கியமான தகுதிகள்ன்னு, டான்ஸ் ஆடுறது, சிலம்பம் சுத்துறது, கராத்தே போடுறது, குதிரை ஓட்டுறதுன்னு, இதையெல்லாம் யாருய்யா சொன்னது? நடிக்குறது தானே முக்கியம்?

10) யக்கா, எப்படித்தான் நடிக்க வந்திருக்காட்டி டாக்டர் ஆகிருப்பேன், வக்கீல் ஆகிருப்பேன்ன்னு உங்களாலே புளூக முடியுது? அதான், உங்களுக்கு நடிக்க வரலில்ல? டாக்டர் ஆகிருக்க வேண்டியது தானே?

Thursday, February 19, 2009

நாட்டு சரக்கு - சாப்ட்வேர் நண்பர்களே, பொறாமைப்படாதீங்க!

இந்த தமிழக பட்ஜெட்டில் நிறைய எழுத்தாளர்களின் எழுத்தை அரசுடமையாக்க போறதா சொல்லி இருக்காங்க. இவர்கள் எழுத்தை பரவலாக மக்கள் படிக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அதில் கண்ணதாசனும் ஒருவர். அதை எதிர்ப்பவர்கள் கேட்கும் கேள்வி. “ஏன் பெரியார் படைப்புகளை அரசுடமையாக்கவில்லை?”. எல்லாம் ஒரு நல்லெண்ணம் தான். அர்த்தமுள்ள இந்து மதத்தை எல்லோரும் படிக்கட்டும். பெரியாரின் பகுத்தறிவு கருத்தை திராவிடர் கழக நூலகத்தில் போய் படிக்கட்டும் என்றுதான்.

கொள்கைக்காக அரசியலா? அரசியலுக்காக கொள்கையா?

---

இந்திய கிரிக்கெட் அணிக்கு புது யூனிஃபார்ம் கொடுத்திருக்காங்க. டார்க் ப்ளூ கலர்ல. அதை பற்றி கேப்டன் தோனிக்கிட்ட கேட்டதற்கு அவர் சொல்லியிருக்காரு. “டார்க்கா இருக்குறதால அழுக்கு தெரியாது. துவைக்கிற செலவு கம்மியாகும்”ன்னு. இதை படித்த போது, ஒரு பழைய சர்வே நினைவுக்கு வருகிறது. இது டிபிக்கல் இந்திய எண்ணமாம். இந்தியர்கள் தான் சட்டை வாங்கினாலும் சரி, கார் வாங்கினாலும் சரி, அழுக்கு தெரியாது என்று டார்க் கலர்ல வாங்குவாங்களாம். மனசுல பட்டதை வெளிப்படையா ஜாலியா சொன்னது சரிதான். அதுக்காக அழுக்கு ஆகிட போகுதுன்னு கீழ விழாம விளையாடிட போறீங்க.

---

பெங்களூர்ல ஒரு திருவள்ளூவர் சிலை, ரொம்ப நாளா திறக்கப்படாம இருக்குது. தமிழ் புலவர் சிலையை திறக்க, கன்னடர்கள் எதிர்ப்பு. திருவள்ளூவர் சிலையை திறக்கணும்ன்னா, நீங்க கன்னட அறிஞர் சிலையை சென்னையில திறங்கன்னு அவுங்க சொல்ல, அதுக்கென்ன ‘எவ்ளோ பண்றோம், இத பண்ண மாட்டோமா’ன்னு நம்மாளுங்க ஒகே சொல்லிட்டாங்க.

இனி என்னாகும்? அடுத்த முறை பிரச்சினையாகும் போது ரெண்டு சிலை உடையும்.

---

இரண்டு அரசுகள். தமிழ்நாடு, புதுவை. ஐந்து போலீஸ் தனிப்படைகள். இரண்டு நாட்களில் பிடித்து விடுவோம் என்று சட்டசபையில் அமைச்சர் வாக்குறுதி.

யாரை? சீமானை.

தாராளமா போட்டுக்கலாம், புரட்சி இயக்குனர்ன்னு.

---

ஒரு விளம்பரம் பார்த்தேன். ’மார்னிங் வாக்கர்’ அப்படின்னு ஒரு உடற்பயிற்சி கருவி. அதாவது காலையில வெளியே நடக்க போறதுக்கு பதிலா, படுத்துக்கிட்டு இந்த கருவி மேல காலை வச்சிக்கிட்டா, அது காலை மேல தூக்கி இறக்கி, ஏதோ நடக்குற எபெக்ட கொடுக்குமாம். நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். படுத்து கிடந்தா போதும்.

ஓவரா தெரியுதா? மேட்டர் அது இல்லை. இன்னைக்கு விளம்பரப்படி, அதுல இன்னொரு விஷயமும் இருக்காம். அது கூட ரிமேட் கொடுக்குறாங்களாம். நீங்க எந்திரிச்சு தான் அதுல உள்ள பட்டன்கள அமுக்கணும்ன்னு இல்லை. படுத்துக்கிட்டே பண்ணலாமாம்.

இது தான் வாழைப்பழ சோம்பேறித்தனம்.

---

முன்ன சாப்ட்வேர் மாப்பிள்ளைகளுக்கு இருந்த மதிப்பு இப்ப இல்லை. சாப்ட்வேர்ன்னா தெறிச்சு ஓடுறாங்களாம். ஏற்கனவே, கல்யாணம் ஆனவுங்களும் அவசரப்பட்டுட்டோமேன்னு யோசிச்சுட்டு இருக்காங்களாம். விவரம் புரியறதுக்குள்ள கவுத்துறலாம்ன்னு சிலர் போர்க்கால அடிப்படையில ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. இந்த நிலைமைல, எனக்கு தெரிஞ்ச சில சாப்ட்வேர் நண்பர்கள் ஒரு பொடிப்பையன் மேல பொறாமைப்பட்டு புலம்பிட்டு இருந்தாங்க. இவன் தான் அவன். ஸாரி. இவர்தான் அவர்.



பையனுக்கு 13 வயசு. பக்கத்துல இருக்குறது அவனோட 15 வயசு கேர்ள் பிரண்ட். நடுவுல அவங்களோட தவப்புதல்வன். பண்றதையும் பண்ணிட்டு எவ்ளோ அப்பாவியா பாக்குறான், பாருங்க.

படம் நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா

Tuesday, February 17, 2009

தாண்டவன் சாப்ட்வேர் அன் கோ

தாண்டவன் தான் இந்த கம்பெனிக்கு சி.இ.ஓ. முதலாளி. டெய்லி பிராஜக்ட் மேனேஜர்களுடன் மீட்டிங் போடுவாரு.

தாண்டவன் : ஏலேய் கணேசு? உன் பிராஜக்ட் ரெவன்யூ எவ்ளோ?

கணேஷ் : ரெண்டு கோடி

தாண்டவன் : எத்தனை உருப்படிக?

கணேஷ் : பத்து

தாண்டவன் : ராஜேசு, உன் ரெவன்யூ எவ்ளோ?

ராஜேஷ் : மூன்றரை கோடி

தாண்டவன் : உருப்படிக?

ராஜேஷ் : பதினைஞ்சு.

தாண்டவன் : முருகா, உன்னுது?

முருகன் : அஞ்சு கோடி முதலாளி. உருப்படிக, பத்துதான்.

தாண்டவன் : பாத்துக்கோங்கடா. அவன் மூத்... அவன் பிராஜக்ட் எக்ஸிக்யூஷன் ஸ்டைல பார்த்தாவது திருந்துங்க.

கணேஷ் : முதலாளி, அவன் உருப்படிக எல்லாம் புது டெக்னாலஜிஸ் தெரிஞ்சவிங்க. எங்ககிட்ட உள்ளவிங்களுக்கு ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது. சீக்கிரம் வந்தாலும் மெயில் செக் பண்ணவும், பிளாக் படிக்கவுமே நேரம் சரியாயிருக்கு. நாங்க என்ன பண்ணுறது?

தாண்டவன் : ஏலேய்! அதிகம் பேசுனா தொண்டைய கடிச்சு துப்பிருவேன். உன் பிரச்சினைக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன்.

------

அம்சவல்லி கேண்டினில் அமர்ந்து ஐ-பாடில் பாட்டு கேட்டுக்கொண்டே பிரெட் சாண்ட்விட்ச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

“ஏ! அம்சவல்லி... இப்பத்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறீயா?”

கேட்டது நாயர். கேரளாவில் இருந்து வந்திருந்தாலும், நன்றாக தமிழ் பேசுவான்.

“ஆமாம் நாயர். நீ?”

“நான் வீட்டுப்பக்கமே சாப்பிட்டுட்டேன். அப்புறம் வேல எப்படி போகுது?”

“வேல ரொம்ப. நிறைய பேர ரிலீஸ் பண்ணிட்டு, என்னை, ஒரு ஆளை வச்சி வேல வாங்குறாங்க. உனக்கு?”

“அதான், உனக்கு தெரியுமே? பழைய பிராஜக்ட் மேனேஜர் கூட ஒரு பிரச்சினை. பிராஜக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்டாங்க. இப்ப பெஞ்ச்ல தான் இருக்கேன். மூணு மாசமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். இப்ப புது ப்ராஜக்ட்ஸ் ரொம்ப கம்மி. என்ன பண்றதுன்னே தெரியலை.”

“ம்ம்ம்... சீக்கிரம் ஏதாவது ஒரு ப்ராஜக்ட பிடி”

“என்ன பொழப்போ?”

”பொருளாதாரம் எகிறி துள்ளுனாலும், குப்புற அடிச்சு விழுந்தாலும், அத நம்ம வேலையை வச்சுதான் சொல்லுறாங்க. அவனவனுக்கு உள்ள கஷ்டங்கள் எல்லாத்தையும் வயித்தெரிச்சலா கொட்டிக்க நம்ம வேலை இருக்குங்கறது நாம பண்ணின புண்ணியம்தானே?”

-----

ஈவ்னிங் மெயில் செக் பண்ணிட்டு இருக்கும்போது, மொபைல் அடித்தது.

“ஹலோ”

“ஹலோ. நாயரா? நான் ருத்ரன் பேசுறேன். HR பில்டிங்ல இருந்து.”

“சொல்லுங்க”

“கொஞ்சம் இங்க வர முடியுமா?”

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ருத்ரன் முன்பு அமர்ந்திருந்தான் நாயர்.

“நீங்க மூணு மாசமா பெஞ்ச்ல இருக்கீங்க?”

“ஆமாம். ப்ராஜக்ட் தேடிட்டு இருக்கேன்.”

”உங்க மேனேஜர்க்கிட்ட இருந்து வந்திருக்குற ஃபீட்பேக் சரியா இல்ல”

“...”

“எங்களுக்கு வேற வழி இல்லை. ஸாரி. நீங்க வெளிய வேலை தேடிக்கோங்க.”

“ஸார்”

-----

“அம்சவல்லி, எப்படி இருக்கீங்க?”

திடீரென்று கூப்பிட்டு கேட்பதால் குழப்பமாக பார்த்தாள், அம்சவல்லி. ருத்ரன் தொடர்ந்தார்.

“உங்களுக்கே தெரியும்? உலக பொருளாதார நெருக்கடி பத்தி”

???

“அதுல உங்க கிளையண்டும் பாதிக்கப்பட்டு இருக்காங்க. பிஸினஸை முடிச்சிக்க சொல்லி கம்யூனிக்கேஷன் அனுப்பி இருக்காங்க.”

“சார். ப்ராஜக்ட் நல்லாதானே சார் போச்சு. நான் நல்லாதானே சார் ஒர்க் பண்ணினேன்”

அம்சவல்லி கண் கலங்கி இருந்தாள்.

”அதுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எமோஷனலாகாதீங்க. இன்னும் ரெண்டு வாரத்துல வேற வேலை பார்த்துக்கோங்க.”

-----
வேலை பாக்காதவனை தூக்கினா, அது பெர்ஃபாமன்ஸ் டஸ் நாட் மீட் த எக்ஸ்படேஷன்.

வேலை நல்லா பார்க்குறவனையும் தூக்கினா, அது க்ளோபல் ரிசஷ்சன்.

AHAM BRAHMASMI

Friday, February 13, 2009

காமெடியாகி போன சீரியஸ் வசனங்கள்

வசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும்.

சில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும்.

அப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.


பாச மலர் - என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும்.

உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள்.

முதல் மரியாதை - ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள்.

நாயகன் - நீங்க நல்லவரா? கெட்டவரா?

மணிரத்னம் பட வசனங்களில் ஒரு தனித்தன்மை உண்டு. அதனாலயே, அதிகம் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும். சின்னி ஜெயந்த், விவேக் இதை படங்களில் காமெடி செய்தார்கள்.

அஞ்சலி - அஞ்சலி ஏந்துமா

இந்த வசனத்தால் அந்த சோக காட்சியை பல ஷோக்களில் காமெடி ஆக்கினார்கள்.

தேவர் மகன் - ஒரு பாட்டு பட்றி

யாரையாவது பாட்டு பாட சொல்லும்போது, கிண்டலாக இப்படித்தான் சொல்லுவார்கள். கவுண்டமணி ஏதோவொரு படத்தில் நக்கல் செய்திருப்பார்.

நாட்டமை - நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லு

கல்லூரி மாணவர்களால் பல இடங்களில் ரீ-மிக்ஸ் செய்யப்படும் வசனம். தியேட்டரில் படம் போடலையா? ஆபரேட்டர், படத்தை போடு. கரண்டு போச்சா? லைட்டை போடு. இப்படி.

ரெட் - அது...

ஹி... ஹி... இந்த ரெண்டு எழுத்து சாதாரணமான வார்த்தை, இவ்வளவு ஸ்பெஷல் ட்ரிட்மெண்ட் கொடுக்கும்ன்னு யாரும் நினைச்சு இருக்க மாட்டாங்க.

ரமணா - தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, மன்னிப்பு

விவேக்கால் பல படங்களில் கிண்டல் செய்யப்பட்ட வசனம். மக்களும் அவரவர் வசதிக்கேற்ப வார்த்தைகளை போட்டு பிரபலமான வசனம்.

அந்நியன் - அஞ்சு கோடி பேரு அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுனா தப்பா?

சுஜாதாவால் சுவையாக கருத்து சொல்லப்பட்ட வசனம். படம் வெளிவந்த பிறகு டரியல் செய்யப்பட்டது.

சந்திரமுகி - என்ன கொடுமை சரவணன்...

பஞ்ச் டயலாக்கும் இல்லை. உணர்ச்சிமயமா எழுதப்பட்டு பேசப்பட்ட வசனமும் இல்லை. பின்ன, எப்படி இவ்ளோ பிரபலம்? எல்லா புகழும் பிரபுக்கே! பிளஸ் வெங்கட் பிரபு.


இந்த வசனங்களை இப்ப படங்களில் கேட்கும்போது காட்சியை மீறி சிரிக்க வைத்து விடுகிறது.

உங்களுக்கு தோணுறதையும் சொல்லுங்க..

Wednesday, February 11, 2009

எஸ். வீ. சேகர் காமெடி

இது அவருடைய அரசியல் வாழ்வை பற்றிய பதிவு இல்லை.

சின்ன வயசுல, எஸ்.வீ.சேகர் நாடகங்கள வீட்டுல டேப்புல போட்டு சுத்தி உக்கார்ந்து கேட்போம். ரொம்ப நாள் கழிச்சு, இப்ப கேட்டேன்.

இப்ப, நான் படங்களில் பார்த்து சிரிக்குற காமெடி கூட ஒப்பிட்டு பார்த்தால், நகைச்சுவையில் உள்ள மாற்றம் தெரியுது. ஒரு வேளை, இன்னமும் நாடக நகைச்சுவை இப்படித்தான் இருக்குமோ?

யாமிருக்க பயமேன் நாடகத்தில் இருந்து சில.

---

என் வீட்டுல ரெண்டு பொண்டாட்டிக அடிக்குற கொட்டம் தாங்க முடிலப்பா...
என்கிட்டே விட்ருங்க.
ஆங்!
நான் டைவர்ஸ் வாங்கி தாரேன்.
டைவர்ஸ் வாங்குறது தமிழ் பண்பாடு இல்லையே?
ரெண்டு பொண்டாட்டி கட்டுறது மட்டும் தமிழ் பண்பாடா?
அது சங்ககால தமிழ் பண்பாடு.
இப்படி சொல்லியே ஆளாளுக்கு அஞ்சாறு ஒதுக்கிருவீங்களே?

---

யோவ்! முதல்ல என்னோட சொத்தை பிரிச்சி கொடு
சொத்த பிரிக்கறதா? நான் சாகறது வரை அது நடக்காது.
ஓகே. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.

----

மூதாதையர் உயில் என்ன சொல்லுது, தெரியுமா?
என்ன சொல்லுது?
பிரிக்க கூடாதுன்னு.
உயில் கவரையேவா?

----

சித்தப்பா : எனக்கு சின்ன வயசுலேயே பொய் பல். அதாண்டா எனக்கு கல்யாணம் ஆகல.
சேகர் : அதான். பொய் பல், பொய் கண் இப்படி என்னலாம் பொயோன்னு நினைச்சி பொண்ணுங்க பயந்திருப்பாங்க.
சித்தப்பா : எனக்கு செவ்வாய் தோஷம்'டா
சேகர் : இல்ல... வேறென்னமோ மர்மமான காரணம் இருக்கு.
சித்தப்பா : இல்லடா...
சேகர் : இருக்கு.
சித்தப்பா : இல்லடா...
சேகர் : இருக்கு.
சித்தப்பா : முடியலடா...
சேகர் : அப்படி ஒத்துக்க.
சித்தப்பா : ஐயோ...... உன்னோட மல்லு கட்ட முடியலடான்னு சொன்னேன்.

---

தரகர் : பொண்ண பத்தி சொல்றேன், நல்லா கேட்டுக்க.
சேகர் : ம்ம்ம்....
தரகர் : இந்த நெத்தி இருக்கே நெத்தி, ஸ்ரீதேவி நெத்தி.
சித்தப்பா : நெத்தியடி
சேகர் : சித்தப்பா, உணர்ச்சிவசப்படதே. பொண்ணு எனக்கு.
தரகர் : காது இருக்கே, ஒரு காது குஷ்பு காது; ஒரு காது ரூபிணி காது
சேகர் : பொண்ணுக்கு மொத்தம் ரெண்டு காது தானே?
தரகர் : ஆமாம் தம்பி. கண்ணு ரெண்டும் ஸ்ரீவித்யா கண்ணு.
சேகர் : ஓஹோ!
தரகர் : இந்த மூக்கு இருக்குல்ல, மூக்கு?
சேகர் : சுகன்யா மூக்கா?
தரகர் : அதான் இல்ல.
சேகர் : மூக்கே இல்லையா? அந்த இடத்துல என்ன இருக்கு? பிளாட் போட்டு வித்துடாங்களா?
தரகர் : ஐயோ, தம்பி! இந்திரா காந்தி மூக்குன்னு சொல்ல வந்தேன்.
சேகர் : என்னய்யா இது? நீ சொல்றது எல்லாம் மொத்தமா கூட்டி பார்த்தா, நம்ம ஜனகராஜுக்கு பொம்பள வேஷம் போட்டமாதிரி வருதேயா?

---

சித்தப்பா : இந்த கிழவியை நான் டைவர்ஸ் பண்றேன்.
சித்தி : அய்யய்யோ! என்ன வார்த்தை சொல்லிடீங்க? கிழவியா?
சேகர் : ஒ! அதுக்குதான் அதிர்ச்சியா? டைவர்சுக்கு இல்லையா?

----

Monday, February 9, 2009

நான் கடவுளும் வாழ்வதற்கான உரிமையும்

நான் கடவுள் ரிலீசான அதே சமயம் அந்த படத்தின் மூலக்கருத்தான "வாழ இயலாதவர்களுக்கு கொடுக்கப்படும் மரணம் வரம்" என்பதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை போப் சொல்லியிருக்கிறார். உலக உடல்நல குன்றியவர்களுக்கான தினத்தில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

"இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு நோய்வுற்றவருக்காகவும் வேண்டுவோம். குறிப்பாக முற்றிலும் மற்றவர் துணையுடன் வாழும் ஜீவன்களுக்கு கடவுளின் அன்பை உணர உதவுவோம்."

---

இத்தாலியில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கியவர், என்க்லரோ. அப்போதிருந்து ஒரு உயிரற்ற உடலாகவே ஆஸ்பத்திரியில் வாழ்ந்து வருகிறார். இத்தனை வருடம் குழாய் மூலமாகவே உணவு உடலில் ஏற்றப்பட்டு வருகிறது.

அவருடைய தந்தைக்கு இது கொடுமையாக தெரிய, தன் மகளின் வாழ்வை முடித்து கொள்ள சம்மதித்து கோர்ட்டில் வேண்டுகோள் எழுப்பியிருந்தார். அவருடைய வாதத்தின் படி விபத்திற்கு முன்பு தன் மகள் இதுப்போல் வாழ விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறாள் என்கிறார். ஒரு முறை, அவள் தோழியின் நிலை கண்டு இவ்வாறு கூறியதாக சொல்கிறார்.

இவருடைய வேண்டுகோள் நீதிமன்றத்தில் இருமுறை நிராகரிக்கப்பட்டு பின்பு ஏற்றுகொள்ளப்பட்டது. இது இத்தாலியில் பெரும் சர்ச்சையானது. இது கொலை என்றும் கருணை அடிப்படையானது என்றும் வாக்குவாதங்கள். தற்போது அரசாங்கம் இந்த பிரச்சனையில் தலையிட்டுள்ளது.

போப் இப்போது இப்பிரச்சனையைதான் மறைமுகமாக தன் அறிவிப்பில் கூறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் டெர்ரி என்பவரது வாழ்வு இதுபோன்று முடித்து வைக்கப்பட்டது.

---

இனி வாழவே முடியாதவர்களுக்கு எதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, அவர்களையும் கஷ்டபடுத்த வேண்டும்? என்பது சிலரின் வாதம். வாழ்வில் எது வேண்டுமென்றாலும் நடக்கும். கண்டிப்பாக இதுதான் நடக்கும், இது நடக்காது என்று யாராலும் கூற முடியாது. இன்று பிழைக்கவே மாட்டார் என கூறும் மருத்துவர்கள், நாளையே ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டால், "இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்" என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். அதனால், முடிந்த அளவுக்கு ஒரு உயிரை காக்கவும், பராமரிக்கவும் நம்மால் இயன்றவற்றை, இயன்றவரை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

---

சன் டிவியில் படிக்காதவன் படத்திற்காக தனுஷ், விவேக், தமன்னா ஆகியோரை உக்காரவைத்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

காம்பியர் : இந்த படத்துல என்ன மெசேஜ் சொல்றீங்க?
தனுஷ் (யோசித்துவிட்டு) : அப்படி ஒண்ணும் இல்ல.

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

காம்பியர் (சமாளிக்கும் விதமாக): இல்ல... இப்படி எடுத்துக்கலாம். படிக்காம இருந்தாலும் வாழ்க்கைல முன்னேறலாம்.
தனுஷ்: இந்த படத்துல நான் முன்னேறவே இல்லையே?

காம்பியர் அசடு வழிகிறார்.

விவேக் : படத்த படமா எடுத்துகோங்க. அது தான் மெசேஜ்.

சில நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படும் படங்கள் தவறான கருத்தினாலோ, தவறாக சித்தரிக்கபடுவதாலோ தோல்வியடைய கூடும். மாயக்கண்ணாடி ஒரு உதாரணம். தகுதியை மீறி பேராசைப்படக்கூடாது என்பது சொல்ல வந்த கருத்து. ஆனால், அது புரிந்து கொள்ளப்பட்ட விதம், யாரும் தகுதியை மீறி ஆசைப்பட கூடாது என்பது போல். தகுதிக்கு மேல் உள்ளவற்றை தகுதியை வளர்த்துக்கொண்டு அடையலாமே? தகுதியை வளர்த்து கொண்டு சேரன் வளர்கிறார், ஆனால், மக்களுக்கு தவறான பாடத்தை அல்லவா எடுக்கிறார்? என்பது போல் நெகடிவ் ரிவ்யுஸ்.

சேரனுக்கு அது ஒரு பாடம்.

கருத்து சொல்ல வேண்டும். அதை விட முக்கியம். தவறான கருத்தை சொல்லக்கூடாது. அதற்கு கருத்தே இல்லாமல் இருப்பது மேல்.

Sunday, February 8, 2009

பெங்களூர் கார்ட்டூன் கண்காட்சி (புகைப்பட பதிவு)

இன்று ஒரு பேங்க் வேலையாக பெங்களூர் எம்.ஜி. ரோடு சென்றிருந்தேன். வேலை முடிந்து வண்டியை எடுக்கும்போதுதான் அதை கவனித்தேன். ஆர்.கே.லக்‌ஷ்மண் கார்ட்டூன் கண்காட்சி. வண்டியை விட்டுவிட்டு அப்படியே உள்ளே சென்று விட்டேன்.



இதை நடத்துவது இந்தியன் இன்ஸ்ட்டிடூட் ஆஃப் கார்ட்டூனிஸ்ட்ஸ். கார்ட்டூன் ரசிகர்களும், பொழுது போகாதவர்களும் போய் பாருங்க. பிப்ரவரி 21 வரை நடைபெறுகிறது.



கார்ட்டூனில் உள்ள வாக்கியம் தெளிவாக தெரிய, க்ளிக்கி, பெரிதாக்கி காணுங்கள்.



ஆர்.கே. லக்‌ஷ்மண் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ”தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிக்கையில் பணியாற்றி வருகிறார். இவர் கர்னாடகத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். ஆர்.கே. என்பது ராசிபுரம் கிருஷ்ணசுவாமி. ஆபிஸில் 8:30க்கு கரெக்டா இருப்பாராம். இப்ப, ஸ்ட்ரோக் வந்த பிறகு, வீட்டில் இருந்து வேலை பார்க்கிறாராம்.



கார்ட்டூன், ஒரு நிகழ்வின் மீதான, வரையும் கலைஞனின் விமர்சனம். இரண்டு-மூன்று பக்கங்களில் சொல்லுவதை ஒரு கார்ட்டூனில் நறுக்கென்று சொல்லிவிடலாம். இதனால்தான் சில சமயம் கார்ட்டூன்களுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் வருகிறது.



பார்க்க வந்தவர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு சிரித்து கொண்டிருந்தார்கள். இந்திராவை கேலி செய்து வைத்திருந்த கார்ட்டூன்கள் தான் ஏராளம்.



தமிழனைக் கிண்டல் செய்து ஒரு கார்ட்டூன்.



எத்தனை வருடங்கள். எவ்வளவு படங்கள். இவரது கார்ட்டூன் தொகுப்பை பார்த்தாலே, வரலாற்று நிகழ்வுகளை தொடர்ச்சியாக வேகமாக தெரிந்து கொள்ளலாம்.



இந்த படத்தில் குடைக்கு மேலே உள்ள ஒளி வட்டம், அந்த கூடத்தில் இருந்த விளக்கின் பிரதிபலிப்பு. இப்ப பார்க்கும்போது, சூரியன் போல் பொருத்தமாக உள்ளது.



ஒரு கார்ட்டூன் போட்டியும் நடைபெறுகிறது. விவரங்கள் இங்கே.

Saturday, February 7, 2009

நான் கடவுள் - உச் உச் உச்

பாலா, படம் பார்க்க வருபவர்களை எல்லாம் கதிகலங்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் படம் எடுப்பார். இதுவும் அப்படியே.

பிச்சைக்காரர்களின் உலகம்தான் இந்த படத்தின் கதைக்களம். பாலா, பிச்சைக்காரர்களை பரிதாபமாக காட்டி படம் பார்ப்பவர்களின் அனுதாபத்தை பெறுகிறார். தியேட்டர் முழுவதும் ஒரே உச் உச் சத்தம். அந்த மொட்டை வில்லனும் இதையே தான் படத்தில் செய்தான்.

ரஹ்மான், ஹாரிஸ், யுவன், டிஎஸ்பி இப்படி தமிழ் சினிமாவின் இசையே மாறி போய் கிடக்க, இளையராஜாவின் அதே பழைய கால இசை இப்ப வித்தியாசமா தெரியுது. வயலினும் உடுக்கையும் தான் முக்கிய இசை கருவிகள்.

ஹீரோ அறிமுகம் ஒரு பாடல் மூலம்தான். ஆனால் இந்த மாதிரி அறிமுகமாக எந்த ஹீரோவும் ஆசைப்பட மாட்டார்கள்.

ஆர்யாவின் கர கர குரல் மாற்றம் நன்றாக இருந்தது. படத்தில் அவருக்கு ரெண்டே காஸ்ட்யூம் கெட்டப். கருப்பு முழு உடை. கருப்பு ஜட்டி. அஜித் நடிப்பதாக இருந்ததால், வெற்றுடம்புடன் ஆர்யா நடக்கும்போது, தொப்பையுடன் தலயை நினைச்சி பார்த்தேன். ஹா ஹா ஹா.

எதுக்கு அழகான பூஜாவை கஷ்டப்பட்டு கறுப்பாக்கி, அடையாளம் தெரியாம ஆக்கி நடிக்க வைக்கணும்? பாலா நினைச்சா யாரைனாலும் நடிக்க வைச்சிடுவாரு. படம் முழுக்க, பல கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேடி பிடித்து நடிக்க வைத்திருப்பது போல், இதற்கும் பொருத்தமான யாரையாவது நடிக்க வைத்திருக்கலாமே? பூஜா நன்றாக செய்திருந்தார்.

சண்டைக்காட்சிகளில் ஆர்தர் வில்சன் கேமராவை விரட்டியிருந்தார். நல்ல விறுவிறுப்பு.

கிளைமாக்ஸ் முடிஞ்ச பிறகும், மக்களுக்கு புரியலை. இன்னும் என்னமோ இருக்கும்ன்னு உக்கார்ந்திருக்காங்க. அப்புறம், பாலான்னு டைட்டில் போட்டதுக்கப்புறம் தான், ஏமாற்றத்தை காட்டிக்காம எந்திரிச்சு போனாங்க. யாரும் திருப்தியா போன மாதிரி தெரியலை. இதையா மூணு வருஷம் எடுத்தாங்கன்னு பேசி கொண்டு சென்றார்கள்.

சில இடங்களில் என்னால் வசனத்தை சரியாக பின் தொடர முடியவில்லை. தியேட்டர் பிராப்ளமா, இல்லை, தமிழ்-சமஸ்கிருதம்-மலையாளம்-தேனி ஸ்லாங் என்ற கலவை பிராப்ளமா என்று தெரியவில்லை.

மற்ற பாலா படங்களில் இருந்தது போல், இதில் எனக்கு முழு திருப்தியில்லை.

பிரிச்சா எல்லாம் சரியாயிடுமா?

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை பற்றி மருதன் எழுதி சமீபத்தில் வந்துள்ள ”இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு” புத்தகத்தை படித்தேன். பதற வைக்கும்படியான வரலாற்று நிகழ்வுகளை பற்றிய நூல். முஷாரப் அவருடைய புத்தகத்தில் பிரிவினை பற்றி குறிப்பிட்டு இருந்ததே, இந்த நூலை படிக்கும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது.

சுதந்திரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஆங்கிலேயரிடம் இருந்து நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம் மட்டும்தான். சுதந்திரம் பெற்றது எப்படி என்றால் உடனே சொல்லுவோம். காந்தி அஹிம்சை மூலம் பெற்று தந்தார் என்று. ஆனால் அதற்கு பின்னால் உள்ள காரணம், அப்போது ஏற்பட்ட பிரிவினை, தலைவர்களிடையே இருந்த இடைவெளிகள், மதத்தால் ஏற்பட்ட வலிகள் போன்றவை இப்போதுள்ள தலைமுறைக்கு தெரிந்திருக்காது. இப்படி மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதுமே பெரிய கொடுமைதான்.

நவீன படங்களில் வருவது போல் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி சொல்லாமல் காரணத்தின் அடிப்படையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

நினைச்சி பாருங்க. ஒரு வீட்டை பிரிக்குறதுன்னாவே எவ்ளோ பிரச்சினை வரும். நாட்டையே பிரிக்கும்போது? இப்படியெல்லாம் நடந்ததா? என்று ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள்.

முஸ்லிம் மதவாதிகள் சிலர் தங்கள் விண்ணப்பத்தை இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஐயன்மீர், டில்லியில் ஆக்ரா பகுதியில் அமைந்துள்ள தாஜ்மகாலை உருவாக்கியவர்கள் மொகலாயர்கள். இதுகாறும் அது இந்தியாவில் இருந்து வந்ததைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், நாங்கள் பாகிஸ்தானுக்குப் போகும்போது, எங்கள் உயிருக்குயிரான தாஜ்மகாலையும் கொண்டு செல்ல விரும்புகிறோம். ஹிந்துக்களின் தேசத்துக்கு இனி தாஜ் தேவைப்படாது என்று நம்புகிறோம். அருள் கூர்ந்து தாஜ்மகாலை அப்படியே பெயர்த்து எடுத்து பாகிஸ்தானில் நிறுத்திவிடுங்கள்.

குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டிகள் பிரிக்கப்பட்டன. உனக்கொரு குதிரை. எனக்கொன்று. உனக்கொரு வண்டி. எனக்கொன்று. ஹார்ன் மட்டும் எஞ்சியிருந்தது. அந்த பிரிட்டிஷ் அதிகாரிக்கு குழப்பம். என்ன செய்யலாம்? காசு சுண்டிப் போடலாம் என்று நினைத்தார். ஆனால் அதில் ஒரு சிக்கல். தலையா பூவா என்பதை யார் முதலில் சொல்வது? இறுதியில் அந்த அதிகாரி சொன்னார். துரதிர்ஷ்டவசமாக இந்த ஹாரனை இரண்டாக உடைக்க முடியாது. ஆகவே, இதை நானே வைத்து கொள்கிறேன்.


இன்றைக்குதான் காங்கிரஸை மதசார்ப்பற்ற கட்சியாக சொல்லி கொள்கிறார்கள். அன்றைக்கு அது இந்தியாவின் ஹிந்து கட்சி. முஸ்லீம் லீக் முஸ்லிம்களுக்கான கட்சி. காங்கிரஸ் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராட, முஸ்லீம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்காக போராடியுள்ளது. இரண்டுமே அதனதன் கோரிக்கையில் வெற்றி பெற்றது. வெற்றியின் பலன், சந்தோஷம் அல்ல. இன்று வரை தொடரும் துயரம்தான்.

ஹிந்து-முஸ்லீம் பிரச்சினை ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சினை இல்லை. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் பிரச்சினை. ஒரு வகையில் சுதந்திரம் கிடைக்க காரணமாக இருந்த பிரச்சினை. பிரிட்டிஷாரரை ஓட வைத்த பிரச்சினை.

ஒட்டுமொத்த தேசத்துக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் மனநோய் பீடிக்குமா? ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், 1947. இந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற வன்முறைகளைக் கூட்டிப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

மரணம் மட்டுமே நிச்சயம். ஓர் ஹிந்துவாக இருந்தால் ஒரு முஸ்லிம் மூலமாக. ஒரு முஸ்லிமாக இருந்தால் ஓர் ஹிந்துவால். அல்லது சீக்கியரால்.

ஒரு மதத்தை இழிவுபடுத்தவேண்டும் என்றால் அந்த மதத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தினால் போதும். பர்தா அணிந்த பெண்னை பிடித்து இழுத்து வந்து அவள் அடிவயிற்றில் சூலத்தை பொறித்தால், இஸ்லாத்தை அவமதித்ததற்குச் சமம். ஓர் ஹிந்துப் பெண்ணின் மார்பில் பிறை நட்சத்திரத்தைப் பொறிப்பதன் மூலம், ஹிந்து மதத்தை இழிவு செய்யலாம். ஒரு சீக்கியப் பெண்ணைச் சித்திரவதை செய்வதன் மூலம் அவள் மதம் சாகும். இது அவர்களாகவே கற்பிதம் செய்து வைத்திருந்த ஒரு தத்துவம்.


இன்று வரை ஏதும் மாற்றம் தெரிகிறதா என்ன?

இந்த புத்தகத்தில் ஆசிரியர் காந்தியின் மனநிலை, நேருவின் திட்டங்கள், ஜின்னாவின் பிடிவாதம், வல்லபாய் படேலின் கிடுக்குப்பிடி இணைப்புகள், கோட்சேவின் கோபம் என்று எல்லாவற்றையும் அறிய வைத்து புரிய வைக்கிறார். ஒவ்வொரு இந்தியனும் உண்மையான சுதந்திர வரலாற்றை பற்றி அறிய வேண்டுமானால் பிரிவினை பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.

இன்றும் நமது நாட்டுக்குள்ளேயும், வெளியேயும் பிரிவினை கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பிரிவினை நல்ல தீர்வா? பிரிவினை பிரச்சினையை தீர்த்து வைக்குமா? வரலாற்றை பார்த்தால் கண்டிப்பாக இல்லை. பிரச்சினை வேறு விதமாக மாறுகிறது. அவ்வளவே. வரலாற்றில் இருந்து பாடம் கற்பது அவசியம். இல்லாவிட்டால், வேதனை தரும் நிகழ்வுகள் நிகழ்ந்துக்கொண்டே தான் இருக்கும்.

Friday, February 6, 2009

முன்னணி நடிகர்களின் கால்ஷீட்

தமிழ் நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டமா? கதை சொல்லி அவர்களை கவிழ்ப்பது எப்படி? சில டிப்ஸ்.

விஜய்

கதையை நீங்க தான் சொந்தமா எழுதி இருந்தாலும், அப்படி சொல்ல கூடாது. தெலுங்கு ரீமேக், ஹிந்தி ரீமேக், மலையாளம் ரீமேக் இப்படி அடிச்சி விட்டுடனும். மறக்காம சந்திரசேகரை பார்த்து டைட்டில் எப்படி போடணும்ன்னு டிஸ்கஸ் பண்ணிடனும். ஏன் சார், இன்னும் சாருக்கு பாரத ரத்னா கொடுக்காம இருக்காங்கன்னு கேட்டுட்டு அத கபிலன் கிட்ட சொல்லி முத பாட்டுல சேர்க்க சொல்லுங்க.

தனுஷ்

"நீங்க ஒரு தண்டசோறு, உதவாக்கரை, தறுதலை" இப்படியெல்லாம் யார்கிட்ட சொன்னாலும் கோபப்படுவாங்க. ஆனா, இவர்கிட்ட சொன்னாக்க, "ஓகே, நான் ரெடி"ன்னு சொல்லிடுவாரு. இவரை கவிழ்க்க இன்னொரு வழியும் இருக்கு. டைட்டில் மனிதன், பணக்காரன் இப்படி ஏதாச்சும் வச்சிக்கலாம்ன்னு சொல்லுங்க.

விஜயகாந்த்

"சார், ஒரு ஊர்ல ஒரு வயசான பண்ணையார். அவரும் அவுங்க குடும்பமும் ஊரையே வளைச்சி போடுது. நீங்க அத தட்டி கேக்குறீங்க. இதனால உங்களுக்கு பல இடைஞ்சல்கள். முடிவுல நீங்க தான் அந்த ஊரை ஆளுறீங்க." இது போதாது?

சிம்பு

ஏதாவது ஒரு பழைய ரஜினி படம் இல்ல கமல் படம் பார்த்துட்டு போங்க. பார்த்த கதையை சொல்லுங்க. நடுவில, அவரு பேசிட்டே இருப்பாரு. அதையெல்லாம் கவனிக்க வேண்டாம். எல்லாத்துக்கும் சரி சொல்லிடுங்க. மத்ததெல்லாம் அவரு பாத்துக்குவாரு. டைட்டில உங்க பேரு வந்தாலும் வரும்.

விக்ரம்

இப்ப அவரு இருக்குற நிலைமைல, படத்த சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடலாம்ன்னு வாக்குறுதி கொடுத்தாலே ஒத்துக்குவாரு.

விஷால்

இவருக்கிட்ட போயி லவ் ஸ்டோரி சொல்லிடாதீங்க. ஒன்லி ஆக்ஷன்தான். "விஜய்க்கு ரெடி பண்ணின கதை. நீங்கதான் கரெக்டா இருப்பீங்க"ன்னு ஒரு பிட்டு அவசியம். கேட்க ஆரம்பிச்சிடுவாரு. அப்புறம் ஒண்ணோ, ஒண்ணுக்கு மேற்பட்ட ரவுடிகளை பின்னி பெடலெடுக்கிற மாதிரி ஒரு கதைய சொல்லுங்க. பினிஷ்.

சூர்யா

இப்ப இருக்குற நடிகர்ல வேஷம் கட்ட ஆர்வமா இருப்பவரு. அதனால, கதைய விட என்ன வேஷம் கட்டலாம், எத்தன வேஷம் கட்டலாம்னு யோசிச்சாலே போதும்.

அஜித்

இது ரொம்ப கஷ்டம். அவரு எப்படி கதையை செலக்ட் பண்ணுறாருன்னு அவருக்கே தெரியாத போது, நமக்கு எப்படி தெரியும்?

இது ஒரு லுல்லாயி பதிவு. இத படிச்சிட்டு நம்ம நடிகர்கள முட்டாளா நினைக்க வேண்டாம். அவுங்க எத நடிச்சாலும், போயி பார்க்குற நாமதான் ....

ஒபாமா

எந்த அமெரிக்க அதிபருக்கும் இல்லாத ஆர்ப்பாட்டம் இருந்தது ஒபாமாவுக்கு. அனைத்து வகை ஊடகங்களிலும் அவரை பற்றிய செய்திகள் தான். ஒரே சமயத்தில் ஒரு மனிதரை பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள். ஆங்கிலத்தில் இல்லை. இங்கே தமிழில். அதில் ஒன்று. ஆர். முத்துக்குமார் எழுதிய “ஒபாமா, பராக்!”. ஒபாமாவின் கதையை மட்டும் சொல்லாமல், அமெரிக்காவின் அடிமைகள் கதை, அமெரிக்க கட்சிகளின் கதை, அமெரிக்க தேர்தல் கதை, அதிபருடைய வேலைகள் என்று எல்லாவற்றையும் சேர்த்து அளித்திருக்கிறார், முத்துக்குமார்.

---

ஒபாமா யார்?

அமெரிக்கர்.

ஆப்பிரிக்கர்.

கிறிஸ்தவர்.

முஸ்லீம்.

கறுப்பர்.

வெள்ளையர்.

இப்படி எது சொன்னாலும் ஒபாமா ஒத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்டது அவரின் பாரம்பரியம். ஒபாமாவின் தாத்தா கென்யாவை சேர்ந்தவர். தான்சானியா, பர்மா, இலங்கை, அரேபியா என்று உலகம் முழுக்க சுற்றியுள்ளார். கிறிஸ்துவராக இருந்து இஸ்லாமியத்திற்கு மதம் மாறியவர் ஒபாமா வின் தாத்தா. அமெரிக்காவில் பிறந்தவர் ஒபாமா. இளம் வயதில் இந்தோனெஷியாவில் வளர்ந்திருக்கிறார். அமெரிக்க அதிபரை சொந்தம் கொண்டாட உலகம் முழுக்க ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல வேளை, இந்த பக்கம் வரவில்லை.

--

அவர் பரம்பரை, வாழ்க்கை இப்படி உலகளாவியளவில் இருந்தாலும் அவர் தன்னை சொல்லி கொள்வது அமெரிக்க கிறிஸ்துவராகதான். அவரது வம்சமே, குறுகிய வட்டத்திற்குள் வாழாமல் பரந்த மனப்பான்மையோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஒபாமா தாத்தாவுக்கு மூன்று மனைவிகள். ஒபாமா அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். ஒபாமா அம்மாவுக்கு இரு கணவர்கள்.

---

ஒபாமா, அமெரிக்க அதிபராக ஜெயித்திருப்பதற்கு காரணமாக எதை சொல்லலாம்? பேச்சு. பேச்சு. பேச்சுதான்.

”இங்கே லிபரல் அமெரிக்கா என்று எதுவும் இல்லை. கன்சர்வேட்டிவ் அமெரிக்காவும் கிடையாது. கறுப்பு அமெரிக்காவும் இல்லை. வெள்ளை அமெரிக்காவும் இல்லை. ஹிஸ்பானிய அமெரிக்காவும் இல்லை. ஆசிய அமெரிக்காவும் இல்லை. இங்கே இருப்பதெல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா. நாம் அனைவரும் ஒரே மக்கள்”

பேசும் இடத்தில் எல்லாம் கைத்தட்டல்கள். ஆதரவுகள். அப்படி ஒரு பேச்சு திறமை. அவர் அதிபர் ஆனதில் என்ன மாற்றம் வர போகிறதோ தெரியவில்லை, அமெரிக்க மக்கள் சந்தோஷப்படும் வகையில் நிறைய சொற்பொழிவுகள் கேட்கலாம்.

---

ஒபாமா கல்லூரியில் படித்தது அரசியல் பாடம். நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறார். நிறைய படித்தாலே அதையெல்லாம் யாரிடமாவது பேச தோன்றும். வாதம் செய்திருக்கிறார். சட்டத்திட்டம் தெரியாததால் அதிகாரிகளிடம் வாதம் புரிய முடியவில்லை. சட்டம் படித்து வக்கீலாகிவிட்டார்.

கறுப்பின மக்களுக்காக வாதாடுகிறார். அரசியல் ஆசை வருகிறது. ஒரு கட்சியை பார்த்து சேர்கிறார். கிளிண்டனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். அப்படியே வட்டம், மாவட்டம்ன்னு போயி அதிபர் தேர்தலில் யாருக்காக பிரச்சாரம் செய்து அரசியல் அடியை எடுத்து வைத்தாரோ, அவரின் மனைவியையே ஜனாதிபதி பிரைமரி தேர்தலில் தோற்கடிக்கிறார். அதிபர் ஆகிறார். சுலபமாக தெரிகிறதல்லவா? எந்த பிரிவு மக்களையும் நோகடிக்காமல் பேசுவது என்பது கஷ்டமான கலை. அதில் இவர் எக்ஸ்பர்ட் போல? எல்லோரையும் பேசியே வளைச்சி போட்டுடாரு. நம்ம அரசியல்வாதிகள் இதில் வீக்கு.

---

ஒபாமாவின் அப்ரோச் எப்படி என்று இப்படி சொல்கிறார் ஆசிரியர்.

வணக்கம் நண்பரே. உங்கள் தொகுதியில் போக்குவரத்துக் சிக்கல்கள் அதிகமாகிவிட்டன என்று கேள்விப்பட்டேனே. இப்போது நிலைமை சரியாகிவிட்டதா? ஆங். கேட்கவேண்டும் என்று நினைத்தேன். சாக்கடைப் பிரச்னை உங்கள் ஏரியாவில் வந்தபோது எப்படி சரி செய்தீர்கள்? கொஞ்சம் எனக்கு சொன்னால் உபயோகமாக இருக்கும். இப்போது குடியரசுத்தலைவர் அறிவித்திருக்கும் புதிய பென்ஷன் கொள்கையில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. கண்டனக் கூட்டம் ஒன்று நடத்த இருக்கிறோம். நேரம் ஒத்துழைத்தால் அவசியம் வாருங்கள்.

ஒபாமாவின் பேச்சை பற்றி குறிப்பிடும்போது, அங்குள்ள சூழல், வரவேற்பு பற்றியும் குறிப்பிடுகிறார்.

தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறீர்கள். திடீரென ஒருவர் உங்கள் தோள்மீது கைபோட்டு, ‘என்ன நண்பரே, எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வீட்டுக்குச் சாப்பிட வரலாமா?” என்று கேட்டார் என்ன செய்வீர்கள்? ‘நீ யாருய்யா?’ என்றுதானே கேட்கத் தோன்றும்> ஒரு வேளை கேட்கும் நபர் மாகாண முதல்வர் என்றால்? அப்படியொரு பரவச அனுபவத்தை அமெரிக்க வாக்காளப் பெருங்குடி மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் பராக் ஒபாமா.

---
அமெரிக்க அரசியல் அமைப்பு, தேர்தல் முறை போன்றவை எல்லாம் குழப்பமானவை. நமக்கு. அதையெல்லாம் விலாவரியாக விளக்கியுள்ளார் ஆசிரியர். இன்னும் டேபிள், ட்ரீ படங்கள் போட்டு விளக்கி இருந்தால் ரெபரன்ஸுக்கு உதவியாக இருந்திருக்கும்.

ஒரு இடத்தில் ஒபாமா பேச்சின் தமிழ் வடிவம் பின்னிணைப்பில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது (பக்கம்-112). ஆனால் பின்னிணைப்பில் அப்படி எதுவும் இல்லை.

லிங்கன், லிண்டா பிரவுன், ரோஸா பார்க்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களை பற்றி சொல்லி இருப்பது அமெரிக்க கறுப்பின கொடுமைகளின் வரலாறை புரிந்து கொள்ள உதவுகிறது. அவரின் பிரச்சாரத்திற்கு பெரிதும் துணையாக இருந்த அவரின் பிரச்சார ஆலோசனை குழுவை பற்றிய குறிப்பும் இப்புத்தகத்தில் உள்ளது.

---

கென்ய ஓலைகுடிசையில் இருந்து ஆரம்பித்து அமெரிக்க அதிபர் இருக்கை வரை ஒபாமாவை இந்த புத்தகத்தில் கவர் செய்திருந்தாலும், அவருடைய வாழ்வின் மிக முக்கிய தருணங்கள் இனி தான் வரும் என்று நான் எண்ணுகிறேன். அந்த வகையில் இந்த புத்தகத்தை ஒரு முன்னோட்டமாக தான் கருத முடியும். ஆக்‌ஷன் இனிதான். ஆக்‌ஷனின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த புத்தகம் உதவும். கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வெளிவந்துள்ள இப்புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும்.

முடிவா அமெரிக்க தேர்தலுக்கும் இந்திய தேர்தலுக்கும் ஒரு வித்தியாசத்த நான் சொல்லுறேன். அமெரிக்க தேர்தலப்ப மக்கள்கிட்ட வசூல் செய்யுறாங்க. இந்திய தேர்தலப்ப மக்கள் வசூல் செய்யுறாங்க. அப்ப, நாம தானே கொடுத்து வச்சவங்க (கொடுக்காட்டியும்).

Thursday, February 5, 2009

தூத்துக்குடி உப்பு (புகைப்பட பதிவு)

ஒவ்வொரு ஊருக்கு ஒரு பெருமை. தூத்துக்குடிக்கு உப்பு. உணவில் தவிர்க்கமுடியாத தூத்துக்குடி உப்பை பற்றி சில தகவல்களும் உப்பள புகைப்படங்களும் இந்த பதிவில்.



கடலோரத்தில் அமைந்துள்ள நகரமானதால் உப்பு உற்பத்திக்கு தூத்துக்குடி பல வருடங்களாக பேமஸ். ஆனால், சமீபகாலமாக உப்பு உற்பத்தியில் திண்டாடுவது, அத்தொழில் செய்பவர்களிடம் பேசும்போது தெரிகிறது.



உப்பளம் பார்த்திருக்கீங்களா? அதான், ஐயா படத்துல ”ஒரு வார்த்தை பேச” பாட்டுலயும், திருவிளையாடல் படத்துல “விழிகளில்” பாட்டுலயும் வருமே? அதான். அங்க இருந்துதான் உப்பு விவசாயம் பண்ணுகிறார்கள். சில இடங்களில் கடல் நீர்ல இருந்தும் சில இடங்களில் போர் போட்டு எடுத்த தண்ணியிலயும் உப்பு எடுக்குறாங்க.



தூத்துக்குடி உப்புக்கு போட்டி குஜராத்துல இருந்து உற்பத்தி ஆகுற உப்பு. அங்க உள்ள உப்பளத்துல உருவாகுற உப்பின் ஆழம் அதிகம். இங்கு மனிதர்கள் செய்யும் வேலையை அங்கு இயந்திரங்கள் செய்கிறதாம். உப்பின் அளவு அதிகமென்பதால் குஜராத் உப்பின் விலையும் குறைவாம். போட்டியை சமாளிக்க முடியாம இருக்காங்க. டாடா, அன்னபூர்ணா உப்பு கவரில் பாத்தீங்கன்னா, ஏதோவொரு குஜராத் உப்பு கம்பெனியின் பேரும், தூத்துக்குடி உப்பு கம்பெனி பேரும் இருக்கும்.



நம்ம உடம்புக்கு தேவையானது அயோடின். சில தைராய்டு தொடர்பான நோய்கள் வராம தடுப்பது அயோடின். இது மக்களை சேர்ந்தடைய உப்பில் இதை கலக்க வேண்டும் என்பது அரசு கட்டளை. இதற்காக கனடா அரசு, கவனிக்கவும், இந்திய அரசு இல்லை, கனடா அரசு இங்குள்ள உப்பு நிறுவனங்களுக்கு இலவசமா அயோடின் கொடுக்குறாங்க. ஓசியில கொடுக்குறதையும் உப்புல போடாம, வெளி மார்க்கட்டுல வித்து பைசா தேத்துதாம் ஒரு குரூப். அதனால அங்கயே ஒரு லேப் வச்சி செக் பண்ணுறாங்க.



இந்த சோதனை கூடத்துல ஒரு ரசாயன கலவையில சாம்பிள் உப்பை போடுறாங்க. உப்புல அயோடின் இருந்துச்சுனா, அது நீலமா மாறுது. அந்த சாம்பிள் உப்பை இவுங்களே நேரடியா உப்பளத்திற்கு சென்று எடுத்துட்டு வாராங்க. இல்லாட்டி அவுங்க கண்ணுலயே உப்ப தேய்ச்சுடுவாங்களே?



தமிழ்நாட்டில் வாழை ஏற்றுமதியிலும் முன்னணியில் இருப்பது தூத்துக்குடி. இங்கு சில இடங்களில் உப்பளத்திற்கு நெருங்கிய தூரத்தில் வாழை தோட்டங்கள் அமைந்துள்ளது ஒரு ஆச்சரியமான விஷயம்.

உப்பு போடுறவுங்கள மறக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.அதனால, உப்பு போடுற தூத்துக்குடியையும் மறக்காம நினைவில் வச்சிக்கோங்க.