Showing posts with label கண்காட்சி. Show all posts
Showing posts with label கண்காட்சி. Show all posts

Sunday, June 19, 2016

உள்ளூரில் ஒரு உலகச் சுற்றுப்பயணம்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8391

மினசோட்டாவின் செயிண்ட் பால் ரிவர்செண்டரில் வருடாவருடம் நடைபெறும் 'பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்' (Festival of Nations) திருவிழா, இவ்வருடம் மே மாதத்தின் 5, 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.



சென்ற வருட விழாவைப் பற்றிய நமது கட்டுரையில், இந்த நிகழ்வு பற்றிய பல தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். அதை இந்த இணைப்பில் காணலாம்.


இந்த வருட விழாவின் சிறப்பம்சமாக, நம் தமிழர் (கவனிக்க, நாம் தமிழர் அல்ல!!) குழுவின் பங்களிப்பை, முக்கிய நிகழ்வாக தமிழர்கள் நாம் எடுத்துக்கொள்ளலாம். தமிழர்களின் பங்களிப்பை, அங்கிருந்த மற்ற சங்கதிகளுடன் சேர்த்து ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.



நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு, ரிவர்செண்டர் அரங்கிற்குள் நுழையும் பொழுது, முதலில் வரவேற்பு தளத்திலேயே ஏதேனும் நாட்டின் நடனம் நடைபெற்றுக்கொண்டிருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களை வரவேற்கவே அந்த நடனம் என்று எண்ணிக்கொள்ளலாம்.

பக்கத்திலேயே தகவல் மையம். எங்கே, என்ன, ஏது நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்துக்கொண்டு நடக்க தொடங்கலாம். நமது வசதிக்காகவே, ஆளுக்கொரு தகவல் கையேடு, கையோடு கொடுக்கிறார்கள். ரிவர்செண்டர் அரங்கில், இத்திருவிழாவை ஐந்து தளங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கலாச்சார அடுக்கையும், ஒவ்வொரு தளத்தில் பார்வையிட்டு, அறிந்துக்கொண்டு, அனுபவம் கொண்டு, உணரச்செய்து செல்லும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

முகப்பு வாயிலில் இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்தவாறு இருந்தன. ஒவ்வொரு மணி நேரமும், ஒரு நாட்டின் கலாச்சார நடனம் அல்லது பாரம்பரிய இசை. உங்களை உலக கலாச்சாரத்தினுள் மூழ்கடிக்க, வேறென்ன வேண்டும்?

அடுத்தது, பெரும்பாலான மக்களின் ஆர்வமான, உலக உணவு உற்சவம். உற்சாகத்திற்கு குறைவிருக்குமா என்ன? முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள் வரிசை கட்டி அமைந்திருந்தன. இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா, சீனா, துருக்கி, இத்தாலி, மெக்சிகன் என உலக நாடுகளின் சமையற்கட்டுகள் அனைத்தும் அக்கம்பக்கத்தில் அமைந்திருந்தன. நகர, நகர ஒவ்வொரு நாட்டின் உணவு மணமும், சுவையும், பார்வையாளர்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கும்.  ஒரு வாய் திபேத் மொமொ, ஒரு கடி ஹங்கேரியன் டம்ப்ளிங், ஒரு மடக்கு பிலிப்பினோ பப்புள் டீ என்று திவ்வியமாக உலக உணவுகளை ரவுண்டு கட்ட ஏற்ற இடம். இந்திய கடையில் சமோசாவும், தந்தூரி சிக்கனும் விற்றுக்கொண்டிருந்தார்கள். அடுத்த முறை, ஒரு தமிழ் கடையைத் திறந்து இட்லியும், பொங்கலும் விற்றால், யாம் பெற்ற இன்பத்தை, உலக மக்களுக்கும் அறிமுகப்படுத்தியதாக இருக்கும்.



உணவு அரங்கிலும், கலை நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு மேடை அமைத்திருந்தனர். நிகழ்ச்சி இடைவேளையில் உண்ணவும், உணவு இடைவேளையில் நிகழ்ச்சியைப் பார்க்கவும் தோதாக. ஆங்காங்கே, இள வயதினோர் ஆர்வத்துடன் விளையாட ஒரு 'மெகா' செஸ் போர்டும், ஒரு 'மினி' கோல்ப் க்ரவுண்டும் அமைத்திருந்தனர்.

இங்கிருந்த கடை ஒன்றில், பச்சை திரை (Green Mat) மூலம் கிராபிக்ஸில் நமது படத்தை, உலக புகழ்பெற்ற இடங்களின் முன் இணைத்து விற்றுக்கொண்டிருந்தனர். எங்கூரில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில், இந்த மாதிரி படமெடுக்கும் வசதி இருந்ததை, சிறு வயதில் பார்த்தது நினைவுக்கு வந்தது. என்ன, அது பெயிண்டில் வரையப்பட்ட திரை, இது டிஜிட்டல் க்ரின் மேட் டெக்னாலஜி. அவ்ளோ தான்!!



உணவு அரங்கிற்கு அடுத்தது, உலகக் கடைவீதி. ஒவ்வொரு நாட்டின் கைவினை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, நாம் ஒரு ஊருக்கு பயணப்பட்டால், அந்த ஊர் ஞாபகார்த்தமாக ஏதேனும் வாங்கி வருவோம். இங்கு எதை வாங்க, எதை விட என்று குழப்பம் தான் வரும். அவ்வளவு கண்ணை கவரும் பொருட்கள். குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் பக்கம் ஓட, பெண்கள் அலங்கார, உடை பகுதிகளுக்கு செல்ல, ஆண்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டமாக இருந்தது. இங்கிருந்த இந்தியக்கடையில் பட்டம் விற்றுக்கொண்டிருந்தார்கள். கவனிக்க, வானில் பறக்க விடும் பட்டம் தான்!!

இத்தளத்திற்கு மேல், 'வேர்ல்ட் ஸ்டேஜ்' என்றழைக்கப்படும் பெரிய ஆடிட்டோரியம் உள்ளது. மற்ற அரங்கில், சிறு சிறு குழுக்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் என்றால், இங்கு பெரிய குழுக்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாம் சென்றிருந்த சமயம், தமிழ் குழுவின் நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது. அரங்கில் அமைக்கப்பெற்றிருந்த அகண்ட திரையில், எகிப்து, துருக்கி, செக் ஆகிய நாட்டின் பெயர்களுடன் தமிழ் என்ற எழுத்துகள் ஒளிர்ந்தபோது, அதை காணவே ஜிவ்வென்றிருந்தது.


ஒவ்வொரு குழு வரும்பொழுதும், அந்த இனத்தைப் பற்றிய அறிமுகமும், அவற்றின் பண்பாடு குறித்த தகவல்களும் சொல்லப்பட்டது. தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பல பகுதிகளில் பேசப்படும் மொழியாக தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்றமுறை, நாம் இங்கு பார்த்த அனுபவத்தை எழுதியிருந்தபோது, யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின் 'உலக இசை'க்கு நம்மவர்கள் ஆடியதை சிறு வருத்தத்துடன் குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை அந்த வருத்தம் சுத்தமாக போக்கப்பட்டிருந்தது. கரகாட்டம், சிலம்பாட்டம், பறை, பொய்கால் குதிரை ஆட்டம் என நம்மூர் கலைகள் முதன் முறையாக, பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ் திருவிழாவில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. இவற்றுக்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இன்னும் பல கலைஞர்கள் ஒன்று சேர ஒருங்கிணைந்து பங்குபெற்று இருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும். வரும் காலத்தில் இது போல் கண்டிப்பாக நடைபெற்று, நமது கலைகள் இங்கு உலக புகழ் பெறும் என்று நிச்சயம் நம்பலாம்.


இதற்கு பக்கத்தில் இருந்த அடுத்த அரங்கில் பண்பாட்டு கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் ஒரு தகவல் மையம் அமைத்து, அந்நாட்டின் சிறப்பைப் பற்றி பகிர்ந்துக்கொண்டிருந்தனர். இங்கும் ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டு, இசை கச்சேரி நடைபெற்று வந்தது. நாம் சென்ற சமயம், ஒரு துருக்கிய குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அங்கு அமர்ந்து அதைக் கேட்டபோது, அதனுள் நம்மால் சுலபமாக ஒன்றி ரசிக்க முடிந்தது. அதற்கு இசை - ஒரு உலக பொது மொழி என்பது ஒரு காரணமென்றால், நம்மூர் திரையிசை பாடல்களிலேயே, தற்சமயம் பல்வேறு நாடுகளின் இசை கருவி பங்களிப்பையும், இசை வடிவத்தையும் கேட்க முடிவது, இன்னொரு காரணமாக இருக்கக்கூடும்.

இங்கிருந்த தமிழ் அரங்கில் சிலப்பதிகாரம் குறித்த ஓவியங்களும், தமிழ் கலைஞர்களின் அலங்கரித்த புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. கரகம், பறை, சலங்கை, நாட்டுபுற கலைஞர்களின் ஆடைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரங்கில் இருந்த அன்பர், திரு. சச்சிதானந்தம் அவர்கள் அங்கு வருகை தந்த அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் சோர்வில்லாமல் தமிழ் பற்றியும், தமிழ் பண்பாட்டு கலைகள் பற்றியும் கூறி வந்தார். குழந்தைகளுக்கு அவர்களது பெயர்களைத் தமிழில் எழுதியும்,  'வணக்கம்', 'நன்றி' போன்ற தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்தும் சலிப்பில்லாமல், தமிழ் சேவையாற்றிக் கொண்டிருந்தார். இதுபோல், பல்வேறு நாடுகளின் சிறப்பம்சங்களை, இங்கிருந்த அரங்குகளில் சென்று அறிந்துக்கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது. இந்திய மருதாணிக்கடையிலும் வழக்கம் போல் இங்குள்ளவர்கள் ஆர்வத்துடன் 'தற்காலிக பச்சை' குத்திக்கொண்டிருந்தனர்.

எண்பது வருடங்களுக்கு முன்பு, முதன் முதலில் இந்த விழா ஆரம்பிக்கப்பட்டபோது, பத்திற்கும் குறைவான இனக்குழுக்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது, எண்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்துகொள்கிறார்கள். வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னமும் கூடும். பலன் - மினசோட்டா மக்கள், விசா இல்லாமல் உள்ளூர் ரிவர்செண்டரிலேயே உலகைச் சுற்றிப்பார்க்கலாம். இது மினசோட்டாவாசிகள் மிஸ் பண்ணக்கூடாத நிகழ்வு.

.

Sunday, November 22, 2009

பஞ்சரான டயரும் பெங்களூர் புத்தகத் திருவிழாவும்

இந்த முறை புத்தகத்திருவிழாவில் கலந்துக்கொள்ள ஏகப்பட்ட தடைகள். பத்து நாட்களாக நடந்து கொண்டிருந்தாலும், கடைசி நாளில் தான் போக முடிந்தது. அன்றும் பல தடைகள்.

பைக்கில் என் நண்பனுடன் கோரமங்களா ஃபோரமை கடக்கும்போது, வண்டி லம்ப தொடங்கியது. நிறுத்தி வீலை பார்த்தால், புஸ். என்ன பண்ணலாம்? கொஞ்சம் யோசித்துவிட்டு, வண்டியை கோரமங்களாவிற்குள் உருட்ட தொடங்கினோம். ஆட்டோகாரர்களிடம் பஞ்சர் கடையை கேட்ட போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் கையை காட்டினார்கள். ஆனால், விரைவிலேயே ஒரு இன்ஸ்டண்ட் பஞ்சர் கடையை கண்டுப்பிடித்தோம்.



அடையார் ஆனந்த பவன் பக்கத்தில், ஒருவர் மரத்தடியில் ஒரு பெட்டியுடன் அமர்ந்திருந்தார். பெட்டிக்குள் பஞ்சர் பார்க்கும் உபகரணங்கள். ஆஹா! நமக்குன்னு பஞ்சர் பார்க்க, இப்படியெல்லாம் வழி செஞ்சு வச்சிருக்காங்களே’ன்னு அவர் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. அது கொஞ்ச நேரம் தான் நிலைத்தது.

டயரை கழற்றும் முன்பே, எனக்கு இன்று கண்டிப்பாக ட்யூப் மாற்றவேண்டியிருக்கும் என்று தீர்மானமாக தெரியும். ஏனெனில், பல முறை பஞ்சர் போடப்பட்டு எச்சரிக்கைக்கு உள்ளாகியிருந்தேன். ஒவ்வொரு முறையும் வேறு எங்காவது நல்ல ட்யூப் வாங்கி மாற்றலாம் என்றிருந்தேன். டயரை கழற்றி ட்யூப்பை பார்த்தால், பேரதிர்ச்சி. எனக்கல்ல.



ஒரு ஆணி குத்தி, அதன் பிறகு வண்டியை உருட்டியதில் ட்யூப் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.



”ட்யூப் இன்னைக்கு (சண்டே) கிடைக்குமா?”

”கிடைக்கும். நான் வாங்கிட்டு வந்திருவேன்.”

“எவ்ளோ?”

“கடையில 290. நான் 260க்கு வாங்கி தாரேன்”

யம்மாடி. நான் கேள்விப்பட்டவரை 100-150 தான் இருக்கும். வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோரமங்களாவில் இருக்கும் நண்பருக்கு போன் செய்தேன். அவர் பக்கத்திலேயே ஒரு கடையை சொன்னார். அது பூட்டிக்கிடந்தது. கொஞ்சம் நடந்ததில் இன்னொரு கடையை கண்டுப்பிடித்தேன். 140க்கு வாங்கி கொடுத்து, பழையப்படி கிளம்பினோம்.

---

புத்தக கண்காட்சி நடக்கும் மைதானம் அருகே இருக்கும் சாலை எங்கும் வாகன நெரிசல். இவ்வளவு மக்களும் புத்தகம் வாங்கவா வந்தார்கள்? என்றால் இல்லை.

அதே சாலையில் கொஞ்சம் தொலைவில் இருக்கும் தியேட்டரில் இருந்து வந்த மக்கள் வெள்ளம் கொஞ்சம். அப்படி என்ன படம் என்றால், 2012. உலகம் அழியிறத பார்க்க, எவ்ளோ ஆர்வம்? அதுவும் எவ்வளவு குதூகலத்தோடு, மகிழ்ச்சியோடு பார்த்துவிட்டு வருகிறார்கள்?

அந்த மைதானத்தில் பக்கத்தில் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒன்று, ஆட்டோ எக்ஸ்போ. இன்னொன்று, ஒரு நடன நிகழ்ச்சி.

அது ஒரு கன்னட சானலில் நடைபெற்றுக்கொண்டிருந்த நடன நிகழ்ச்சியின் இறுதி போட்டி. நடுவர் - பிரபுதேவா. என் நண்பனிடம் விளையாட்டுக்கு கேட்டேன்.

“நாமளும் பார்க்க போவோமா?”

அவன் ஆவலுடன் கேட்டது, “நயன்தாராவும் இருப்பாங்களா?”

---

நான் போன நேரத்திற்கு புத்தகக்கண்காட்சியில் நல்ல கூட்டம். நுழைவு கட்டணம் - 20 ரூபாய். ஓவர் தான். இருந்தாலும், பார்க்கிங்கிற்கே சில இடங்களில் அவ்வளவு கொடுக்கவேண்டி இருப்பதால், ஒகே. ஒருமுறை எல்லாக்கடையையும் பார்த்துவிட்டு பிறகு வாங்க துவங்கலாம் என்று முடிவு செய்தோம்.



நிறைய சாமியார்கள் கடை போட்டிருந்தார்கள். எல்லா மொழிகளிலும் சாமியார்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். கொஞ்சம் புத்தகங்களை வைத்துக்கொண்டு, மற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தது.

ஒருமுறை நான் எழுதிய கதைக்கு முரளிகண்ணன் பின்னூட்டத்தில் ஓ. ஹென்றியின் கதை போலுள்ளது என்று பாராட்டியிருந்தார். யார்ரா அது? நம்மள மாதிரி (டேய்...) சரி, நாம யாரு மாதிரியோ எழுதுறோமாமே, அவரு யாரு? அவரு கதை எப்படி இருக்கும்’ன்னு படிக்க ஒரு ஆர்வம் இருந்தது. அவருடைய அனைத்து கதைகளும் கொண்ட புத்தகம் ஒன்று மலிவு விலையில் ரூ. 150க்கு வைத்திருந்தார்கள். கவனித்துக்கொண்டேன்.

குழந்தைகளை கவரும் வகையில் தான் நிறைய புத்தகக்கடைகள் இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட, நிறைய கன்னடப்புத்தகக் கடைகளும் இருந்தன. ஒரு ரவுண்ட் வருவதற்குள்ளேயே, கால் வலிக்க ஆரம்பித்தது. நேரமும் நிறைய போயிருந்தது. அதனால், புத்தகங்கள் வாங்க துவங்கினேன். வாங்க நினைத்திருந்த பல புத்தகங்கள் மறந்து போய்விட்டது.

கிரடிட் கார்டு வசதி இல்லாத கடைகளுக்காக, ஒவ்வொரு கடைவரிசையின் ஆரம்பத்திலும் ஒரு டேபிளில் கிரடிட் கார்ட் மெஷினுடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஸ்வைப் பண்ணியபிறகு, கடை பெயருக்கு பணத்தை வரவு வைத்துக்கொண்டார். கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் மெஷின் இருந்தும், நான் போன நேரம் அது வேலை செய்யவில்லை.

லேட்டாக சென்று, மெதுவாக எல்லாக்கடையையும் சுற்றி பார்த்து, பிறகு வாங்கி வெளியே வந்ததால், நேர நெருக்கடியின் காரணமாக இரண்டே இரண்டு மிளகாய் பஜ்ஜியுடன் முடித்து கொண்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு செல்ல செல்ல, வாங்க மறந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. சரி, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.

.

Sunday, February 8, 2009

பெங்களூர் கார்ட்டூன் கண்காட்சி (புகைப்பட பதிவு)

இன்று ஒரு பேங்க் வேலையாக பெங்களூர் எம்.ஜி. ரோடு சென்றிருந்தேன். வேலை முடிந்து வண்டியை எடுக்கும்போதுதான் அதை கவனித்தேன். ஆர்.கே.லக்‌ஷ்மண் கார்ட்டூன் கண்காட்சி. வண்டியை விட்டுவிட்டு அப்படியே உள்ளே சென்று விட்டேன்.



இதை நடத்துவது இந்தியன் இன்ஸ்ட்டிடூட் ஆஃப் கார்ட்டூனிஸ்ட்ஸ். கார்ட்டூன் ரசிகர்களும், பொழுது போகாதவர்களும் போய் பாருங்க. பிப்ரவரி 21 வரை நடைபெறுகிறது.



கார்ட்டூனில் உள்ள வாக்கியம் தெளிவாக தெரிய, க்ளிக்கி, பெரிதாக்கி காணுங்கள்.



ஆர்.கே. லக்‌ஷ்மண் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ”தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிக்கையில் பணியாற்றி வருகிறார். இவர் கர்னாடகத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். ஆர்.கே. என்பது ராசிபுரம் கிருஷ்ணசுவாமி. ஆபிஸில் 8:30க்கு கரெக்டா இருப்பாராம். இப்ப, ஸ்ட்ரோக் வந்த பிறகு, வீட்டில் இருந்து வேலை பார்க்கிறாராம்.



கார்ட்டூன், ஒரு நிகழ்வின் மீதான, வரையும் கலைஞனின் விமர்சனம். இரண்டு-மூன்று பக்கங்களில் சொல்லுவதை ஒரு கார்ட்டூனில் நறுக்கென்று சொல்லிவிடலாம். இதனால்தான் சில சமயம் கார்ட்டூன்களுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் வருகிறது.



பார்க்க வந்தவர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு சிரித்து கொண்டிருந்தார்கள். இந்திராவை கேலி செய்து வைத்திருந்த கார்ட்டூன்கள் தான் ஏராளம்.



தமிழனைக் கிண்டல் செய்து ஒரு கார்ட்டூன்.



எத்தனை வருடங்கள். எவ்வளவு படங்கள். இவரது கார்ட்டூன் தொகுப்பை பார்த்தாலே, வரலாற்று நிகழ்வுகளை தொடர்ச்சியாக வேகமாக தெரிந்து கொள்ளலாம்.



இந்த படத்தில் குடைக்கு மேலே உள்ள ஒளி வட்டம், அந்த கூடத்தில் இருந்த விளக்கின் பிரதிபலிப்பு. இப்ப பார்க்கும்போது, சூரியன் போல் பொருத்தமாக உள்ளது.



ஒரு கார்ட்டூன் போட்டியும் நடைபெறுகிறது. விவரங்கள் இங்கே.

Sunday, November 16, 2008

பெங்களூரில் புத்தக கண்காட்சி

பெங்களூர் பேலஸ் மைதானத்தில் கடந்த வெள்ளி (14-11-08) முதல் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி அடுத்த ஞாயிறு (23-11-08) வரை இருக்கும்.

தமிழ், கன்னடம், ஆங்கிலம் என்று அனைத்து மொழி புத்தகங்களும் கிடைக்கிறது. தமிழ் புத்தக பதிப்பகங்களான விகடன், வானதி, திருமகள், காலச்சுவடு போன்றவை அரங்குகள் அமைத்துள்ளன. இதை தவிர இன்னும் சில கடைகளிலும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கிறது.

விலை உயர்ந்த சில ஆங்கில புத்தகங்கள் ஐம்பது, நூறு ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆன்மிக போதனையாளர்களின் புத்தக அரங்குகளிலும் தமிழ் புத்தககங்கள் கிடைக்கிறது.

இந்த வாரம் தவறவிட்டவர்கள், அடுத்த வாரத்தில் ஒரு விசிட் அடித்து கொள்ளுங்கள்.