Showing posts with label மின்னியாபொலிஸ். Show all posts
Showing posts with label மின்னியாபொலிஸ். Show all posts

Monday, October 2, 2017

மின்னஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha Falls)

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



மின்னியாபொலிஸில் வாரயிறுதியில் குடும்பத்துடன் எங்குச் செல்வது என்று ரொம்பவும் குழம்ப வேண்டியதில்லை. மதிய உணவு தயார் செய்து விட்டு எங்காவது ஒரு ஏரிக்கரையோரம் தஞ்சம் புகுந்து விடலாம். உட்கார்ந்து சாப்பிடுவதற்குத் தயார் நிலையில் மேஜை நாற்காலி, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுக் கருவிகள், பெரியவர்கள் நடமாட நடை பாதை எனச் சகல அம்சங்களும் இருக்கும்.

மின்னஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls) இருக்கும் பூங்காவும் அப்படியொரு நல்ல வாரயிறுதி புகலிடம். மின்னியாபொலிஸ் நகரின் உள்ளேயே இருக்கும் ஒரு சிறு நீர்வீழ்ச்சி இது. மின்னடொங்கா ஏரியில் (Lake Minnetonka) தொடங்கும் மின்னஹஹா சிற்றோடை, நகரில் இருக்கும் பிற ஏரிகளைக் கடந்து, இங்கு நீர்வீழ்ச்சியாக விழுந்து, பிறகு அருகில் இருக்கும் மிஸ்ஸிசிப்பி ஆற்றில் சேர்கிறது.

பிரமாண்டமான நயகரா நீர்வீழ்ச்சி இருப்பதும் அமெரிக்கா தான் என்றாலும், அமெரிக்காவில் நீர்வீழ்ச்சி என்றால் கொஞ்சம் எதிர்பார்பைக் குறைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். எப்படி நமது நாயகிகள் அனைவருமே நயன்தாராவாக இருப்பதில்லையோ, அதுபோல் இங்கிருக்கும் நீர்வீழ்ச்சிகள் அனைத்துமே நயகராவாக இருப்பதில்லை!!

தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்தாலும் சரி, பெருக்கெடுத்துப் பொங்கி விழுந்தாலும் சரி, ஆங்கிலத்தில் அதன் பெயர் ஃபால்ஸ் (falls) தான். அதனால் எந்த நீர்வீழ்ச்சி என்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் செல்வது நன்மை பயக்கும் என்பது நம் அனுபவம்.

இவ்வளவு பீடிகை போடுவதால், மின்னஹஹா நீர்வீழ்ச்சி ரொம்பவும் சிறியதாக இருக்குமோ என்று எண்ணி விட வேண்டாம். இது ஒரு நடுத்தர வகை நீர்வீழ்ச்சி. புகைப்படங்கள் எடுப்பதற்கு அருமையான இடம். நிச்சயதார்த்தம், கல்யாணம் என்றால் விசேஷ உடைகளுடன் புகைப்படம் எடுக்க உள்ளூர்வாசிகள் கேமராவும் கையுமாக வந்து விடுவார்கள். அதன் பிறகு, பிள்ளை குட்டிகளோடு சில வருடங்களுக்கு வருவார்கள்.

இந்தப் பூங்காவின் இன்னொரு சிறப்பம்சம், இங்கு வாடகைக்குக் கிடைக்கும் சைக்கிள்கள். பேருதான் சைக்கிள். ஆனால், நம்மூர் ரிக்ஷா மாதிரி இருக்கும். ஒன்றிரண்டு குடும்பங்கள் சேர்ந்துச் செல்லலாம். அனைவரும் அழுத்துவதற்குப் பெடல்கள் இருக்கும். அனைவரும் அழுத்தினால், வண்டி வண்டிக்கான வேகத்தில் செல்லும். ஒருவர் அழுத்த, மற்றவர்கள் எல்லாம் அழுத்துவது போல் நடித்தால், பாதசாரிகளைக் கடந்து செல்வதே பெரும்பாடாகி விடும். எப்படி இருந்தாலும், உடற்பயிற்சியுடன் கூடிய நல்லதொரு வேடிக்கை விளையாட்டு.

இவை தவிர, லாங்ஃபெல்லோ பூங்கா (Longfellow park), பெர்கோலா பூங்கா (Pergola park) எனப் பிற பூங்காகளும் இந்த வளாகத்தில் உள்ளன. மின்னியாபொலிஸை சிகாக்கோவுடன் இணைக்கும் இருப்புப்பாதை தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்த ரயில் நிலையமும், வரலாற்றுச் சாட்சியாக இங்கு இன்னமும் பாதுகாக்கப்படுகிறது.

இது 1889 ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டேட் பார்க். அந்தச் சமயத்தில், நியூயார்க்கில் மட்டும் தான், ஸ்டேட் பார்க் இருந்தது. பாஸ்டன், சிகாகோ மற்றும் பல வட அமெரிக்க மாகாணங்களில், பல பூங்காகளை அமைத்துக் கொடுத்த, புகழ் பெற்ற நிலப்பரப்பு வடிவமைப்பு வல்லுனரான கிளெவ்லேண்ட்டிடம் (Cleveland), இந்தப் பூங்காவை உருவாக்கும் பணி கொடுக்கப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பெரும் அக்கறை கொண்ட கிளைவ்லேண்ட், இதன் இயற்கை அம்சம் குறையாமல் இந்தப் பூங்காவை அமைத்துக் கொடுத்தார். மின்னியாபொலிஸின் மத்திய பகுதியில், மிஸ்ஸிசிப்பி ஆற்றைச் சுற்றி அமைந்திருக்கும் ஏரிகளை இணைக்கும் பாதையைப் போட்டுக் கொடுத்தவரும் இவரே.

இதற்கான திட்டமிடல் நடக்கும் சமயத்தில், ஒரு திருவாளர் அருவியின் கீழ்புறத்தில் புகைப்படம் எடுக்க ஒரு மேடை அமைத்துக் கொடுக்கலாம் என்றாராம். மூச், தேவையில்லாமல் எந்தவிதக் கட்டுமானமும் தேவையில்லை என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனுஷன் உருவாக்கிக் கொடுத்த பூங்கா. பார்க்காதவர்கள், ஒரு எட்டுப் போய்ப் பார்த்துவிட்டு வாங்க!!

.

ஃபெட்னா பேரவை விழா - தயாராகும் மின்னசோட்டா

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் (FETNA) பேரவை விழா, இந்தாண்டு மின்னசொட்டாவில் மின்னியாபொலிஸ் கன்வென்சன் சென்டரில் (Minneapolis Convention Center) நடைபெறவுள்ளது. இதற்காக அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் ட்வின் சிட்டீஸிற்கு ஜூலை முதல் வாரம் (July 1st and 2nd) வருகை தர உள்ளனர்.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாகக் கயானா பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, இலினொய் மாநிலத்தின் கீழவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், ரோகிணி, கிட்டி, மிஷ்கின், எழுத்தாளர்கள் சுகிர்தராணி, சுகுமாரன், மரபிசை பாடகர்கள் நல்லசிவம், ஜெயமூர்த்தி, நடிகர் சின்னி ஜெயந்த், திரைத்துறை பாடகர் அருண்ராஜா ஆகியோர் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள்.

இவர்கள் இவ்விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக்கொள்ள இருக்கிறார்கள். “தமிழர் கலையைப் போற்றிடுவோம்!! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!!” என்னும் கருப்பொருளைக் கொண்டு இவ்விழா நடைபெற இருப்பதால், அது சார்ந்த தலைப்புகளில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரோகிணி அவர்கள் “தமிழ் மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா?” என்னும் தலைப்பில் கருத்துக்களம் நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். கவிஞர் சுகிர்தராணி அவர்கள் “தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

தமிழறிஞர் வானமாமலை அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றிடும் வகையில், அவருடைய மூலக்கதையில் உருவான “மருதநாயகம்” நாடகம் பேராசிரியர் ராஜூ அவர்களின் குழுவினரால் ஃபெட்னா பேரவை விழாவில் மேடையேற்றப்படுகிறது. தமிழர்களின் பலநாள் வெள்ளித்திரை எதிர்பார்ப்பான “மருதநாயகம்”, மின்னசோட்டாவில் அரங்கேறப்போவது இந்த நிகழ்வின் சிறப்பு. இதற்கெனப் பேராசிரியர் ராஜுவுடன், இசை ஆய்வாளர் முருகவேல், ஆய்வாளர் சமணராஜா, ஆராய்ச்சியாளர் சந்தோஷ், முனைவர் பினுகுமார் ஆகியோர் இந்தியாவில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு மின்னசோட்டா வந்தனர். அவர்களுடன் தேர்ந்தெடுக்க உள்ளூர்வாசிகள் இணைந்து இதற்கான நாடகப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல், தமிழ் நாடகக்கலையின் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றியைம்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவருடைய “சாரங்கதாரா” நாடகமும் இவ்விழாவில் இடம்பெறுகிறது.

விழாவின் கருப்பொருள் (Theme), சின்னம் (Logo) உருவாக்கத்தில் தொடங்கி, இந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்னசொட்டா தமிழ் சங்கத்தினர், ஃபெட்னா அமைப்பினருடனும், பிற தமிழ் சங்க உறுப்பினர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து செய்துக்கொண்டு வருகின்றனர்.

மின்னசொட்டா மாநில அரசின் நிதி உதவியுடன், இங்கிருப்போருக்குத் தமிழ் பண்பாட்டு இசைக் கருவிகளான பறை, தவில், நாகசுரம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்க, நாகசுர வித்வான் மாம்பலம் ராமசந்திரன், தவில் வித்வான் அடையார் சிலம்பரசன், பறை கலைஞர் சக்தி ஆகியோர் ஏற்கனவே மின்னியாபொலிஸ் வந்திருந்து இங்கிருக்கும் ஆர்வமிக்க மாணவர்களுக்குக் கடந்த சில வாரங்களாகப் பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஹாப்கின்ஸ் பள்ளிகளுக்கு, இவர்கள் பயிற்சியளிக்கும் சமயம் ஒருநாள் சென்று வந்தால், நாமிருப்பது அமெரிக்காவா என்ற சந்தேகம் வந்து விடும்.

இந்த இசை கலைஞர்கள், இவர்களிடம் பயின்ற மாணவர்களும் இணைந்து, ஃபெட்னா பேரவை விழாவில் இசைக்கப் போகிறார்கள். விருந்தினராக வருகை தரும் மற்ற இசை கலைஞர்களுடன் இணைந்தும், இசை நிகழ்ச்சி வழங்கப் போகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு அடுத்தப்படியாகப் பறைக்குழுக்கள் அதிகம் உள்ள அமெரிக்காவில், முதல்முறையாக இவ்விழாவில் 133 அதிகாரப் பறை முழக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 133 பறை இசைகலைஞர்கள் மேடையில் தோன்றி பறை இசையில் அதிர வைக்கப் போகிறார்கள். பண்ணிசை பாடகரும், பேராசிரியருமான நல்லசிவம் அவர்கள் பண்ணிசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். 'நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ், மக்களிசை கலைஞர் ஜெயமூர்த்தி, சின்னதிரை பாடகர்கள் நிரஞ்சனா, ஸ்ரதா, ராஜகணபதி ஆகியோர் இணைந்து மெல்லிசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்கள்.

மக்களிசையுடன் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், புலியாட்டம் போன்ற மரபு ஆட்டமும் இடம்பெற இருக்கின்றன. இவற்றுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்று தமிழர் நில ஐந்திணைகளையும் கருப்பொருளாகக் கொண்டு ஒரு பரத நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இசையுடன் கூடிய சிலம்ப நிகழ்ச்சியும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழர் மரபு கலைகளை, அமெரிக்காவில் உள்ள அடுத்தத் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இலக்கிய ஆர்வலர்களைக் கவரும் இலக்கிய வினாடி வினா, குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, வினாடி வினா ஆகியவை கொண்ட தமிழ்த் தேனீ, திருக்குறளைக் கூறும் குறள் தேனீ ஆகிய போட்டிகளும் இந்த விழாவில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இதற்கான பயிற்சிகளில் கடந்த சில வாரங்களாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

முதன்மை மேடையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற, இணையரங்க நிகழ்வுகளாகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம், திரைப்பட, குறும்படப் பயிற்சி பட்டறை, பேலியோ டயட் கருத்தரங்கம், குடியேற்ற சட்ட மாற்றங்கள் குறித்த கருத்தரங்கம், பண்ணிசை பயிற்சி பட்டறை எனப் பல்வேறு இணையரங்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முழு நாள் நிகழ்வாக நடைபெற உள்ள தொழில்முனைவோர் கருத்தரங்கில், அமெரிக்க அவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஆச்சி குழும தலைவர் பத்மசிங், வேல்ஸ் பல்கலைகழகத் தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு பேச இருக்கின்றனர். அமெரிக்காவில் தொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி பெரும் உதவிகரமாக இருக்கும் என நம்பலாம். திரைப்படப் பட்டறையை இயக்குனர் மிஷ்கினும், பேராசிரியர் சுவர்ணவேலும் நடத்த இருக்கிறார்கள். பேலியோ டயட் கருத்தரங்கில், சமூக வலைத்தளங்களிலும், தமிழகத்திலும் பேலியோ டயட்டைப் பெருமளவு கொண்டு சேர்த்த நியாண்டர் செல்வன் அவர்கள் பேச இருக்கிறார்.

இவ்விழா நடக்கும் சனி, ஞாயிறு இரண்டு தினமும் மதிய உணவும், இரவு உணவும் விழா நடைபெறும் மின்னியாபொலிஸ் கன்வென்ஷன் செண்டரில் பரிமாறப்படுகிறது. வெள்ளி இரவு நடக்கும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இருந்து ஞாயிறு இரவு வரையான விருந்துகளில் பல தமிழ் மரபு உணவுவகைகளும் பல்வேறு பிற வகை உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ளன. கருப்பட்டி மைசூர்பாகு, கருப்பட்டி பொங்கல், அதிரசம், கேழ்வரகு அடை, பச்சைபயிறு பாயாசம், பனங்கற்கண்டு பால் போன்ற சிறப்பு உணவுவகைகளுடன், தலப்பாகட்டி கோழிக்கறி, ஆட்டுக்கறி சுக்கா வறுவல், செட்டி நாட்டுக்கோழிக்கறி போன்ற அசைவ உணவுவிரும்பிகளைக் கவரும் பலவகை உணவுவகைகளும் உண்டு.

இந்த நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களுக்கான விழா முன்பதிவு, பயண ஏற்பாடுகள், தங்கும் வசதிகள், விழா மலர் தயாரிப்பு, விழா அரங்க அலங்காரம், பரிசுப் பொருட்கள் ஏற்பாடு, போக்குவரத்துத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல், பயிற்சி, ஒத்திகை என இந்த நிகழ்வில் பங்குபெறும் ஒவ்வொருவரும் கடந்த சில வாரங்களாகக் கடும் உழைப்பைப் கொட்டி வருகின்றனர். மின்னசோட்டாவில் நடைபெறும் மிகப்பெரும் தமிழர் சார்ந்த விழா என்பதால், இதில் கலந்து மின்னசோட்டாவாசிகள் மட்டுமின்றிப் பிற மாகாணத்தினரும் பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மின்னசோட்டா வருவது மூலம், அவர்களுக்கு மின்னசோட்டாவைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் சேர்ந்து கிடைக்கிறது.

ஆக, மின்னசோட்டா தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணமாக, ஜூலை 1ஆம், 2ஆம் தேதிகளில் நடைபெறும் இந்தப் பேரவை விழா இருக்கப்போகிறது. இதில் கலந்துக்கொள்ள வாய்ப்புடைய அனைவரும் இந்த விழாவில் கலந்துக்கொண்டு, இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்குக்கொள்வது, இவ்விழாவின் வெற்றிக்குச் சாட்சியாக அமையும். இவ்விழாவில் பங்குக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எமது வாழ்த்துகள்.

.

மினசோட்டா குளிர்

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



மினசோட்டாவின் ஒரு சிறப்பம்சம், அதன் குளிர். என்னது, குளிரா? அதான், இங்கே கடியான விஷயம், பாஸ்!! என்பவரா? 13000 ஆண்டுகளுக்கு முன்பு, பனியுகம் (Ice Age) முடிவுற்ற சமயத்தில், இங்குச் சராசரி தட்பவெட்ப நிலை -16 டிகிரிக்கும் கீழே இருந்தது. இது ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருக்கும் தட்ப நிலை. கால ஓட்டத்தில், நல்லதோ, கெட்டதோ இந்த நிலை மாறி, தற்போது மனிதர்கள் வாழும் நிலைக்கு வந்திருக்கிறது.


இந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதியன்று, மினசோட்டாவின் குளிர் -20 டிகிரி ஃபரன்ஹீட்டுக்குச் சென்றது. அதாவது, செல்சியஸில் -30 டிகிரிகள். ஊரே சிறிது நேரத்திற்கு வீட்டுக்குள் முடங்கியது. அடுத்த நாளே, அதாவது 48 மணி நேரத்திற்குள், +26 டிகிரிக்கு என்றது. அதளப் பாதாளத்திற்கு இறங்கி தட்பவெப்பம், உடனே பரமபதம் ஆடி, மேலெழும்பி வந்தது.


இதுவரை மினசோட்டாவில் பதிவான தட்பவெப்பங்களில் குறைவானது, மின்னியாபொலிஸில் இருந்து 220 மைல்கள் தொலைவில் உள்ள டவர் (Tower) என்ற ஊரில், 1996 ஆம் ஆண்டுப் பிப்ரவரி இரண்டாம் தேதி பதிவான -60 டிகிரி ஃபரன்ஹீட் தான். குறைந்த தட்பவெப்பம் நிலவி, அதில் மக்கள் வாழும் இடங்களில் உலகில் இதுவும் ஒன்று.


இப்படிப்பட்ட குளிர் நிலைகளில் நமது உடல் என்னவாகும்? இம்மாதிரி குளிர் நிலைகளைத் தாங்குவதற்கு ஏற்ப, நமது உடல் வடிவமைக்கப்பட்டதல்ல. அதனால், நாம் தான் சில பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


பொதுவாக, குளிர் காலத்தில் நமது உடலே சில பாதுகாப்பு முயற்சிகளை எடுக்கும். உடல் தொடர்ந்து அப்படிப்பட்ட குளிர் நிலையில் இருக்கும்பட்சத்தில், அவை பலனளிக்காமல் உடலின் சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையோ அல்லது உயிரே பிரியும் ஏற்படும் நிலையோ உண்டாகும்.


காற்றியக்கக் குளிர்வு (Wind Chill) என்பது காற்றில் குளிர் அதிகரிக்கும் போது, நமது உடல் நேரடியாக அதை எதிர்க்கொள்ளும் சமயம் உணரப்படும் குளிர். இச்சமயத்தில் காற்றில் இருக்கும் குளிருக்கு ஏற்ப, அதில் உடல் எவ்வளவு நேரம் நேரடியாக இருக்குமோ, அதைப் பொறுத்து உடலில் பனிப்புண்கள் (Frost bite) உண்டாகும். -28 டிகிரி ஃபரன்ஹீட் வரை பனிப்புண் அபாயம் குறைவு. அதற்கு மேலும் டிகிரிகள் குறையும் போது, ஆபத்து நிச்சயம். -28 முதல் -39 காற்றியக்கக் குளிர்வு நிலையில், உடலின் பாகங்கள் பத்தில் இருந்து முப்பது நிமிடங்கள் திறந்த நிலையில் இருக்கும் போது, உறை நிலை தொடங்கிப் பனிப்புண் ஏற்படத் தொடங்கும். -40 இல் இருந்து -47 செல்லும் போது, இந்தப் பாதிப்பு ஏற்பட ஐந்தில் இருந்து பத்து நிமிடங்களே போதும். அதற்கும் கீழே, -48 இல் இருந்து -54 செல்லும் போது, இரண்டில் இருந்து ஐந்து நிமிடங்களும், மேலும் குறைந்தால், இரண்டு நிமிடங்களில் ஆபத்து நெருங்கும்.


பனிப்புண் அல்லது ப்ராஸ்ட் பைட்டின் போது, உடலின் தோல் மட்டும் இல்லாமல், அதற்குக் கீழே இருக்கும் தசை, திசு, கொழுப்பு இவை அனைத்தும் உறைந்துப்போகும். அதிக நேரம் இக்குளிரில் இருக்க நேர்ந்தால், மேலும் பாதிப்பைத் தடுக்க, பாதிக்கப்படும் உடல் பாகங்களை வெட்டி எடுக்கவும் நேரும்.


குளிர்காலத்தில் வெளியிடங்களில் பணிபுரியும் அவசியம் இருப்பவர்கள், கண்ணாடி அணிவது முக்கியம். குளிர் கூடும் போது, கண்ணை மூடி முடி திறக்கும் போது, கண்ணில் அப்போது உருவாகும் திரவத்தால், கண்ணில் விழித்திரை பாதுகாக்கப்படும். இது குறைந்த நேர குளிர் உட்படுதலுக்கே. நீண்ட நேரம், குளிர் காற்றும் சேர்ந்து வீசும் போது, கண்ணாடி இல்லையென்றால், கண் விழித்திரை உறையத் தொடங்கும். கான்டக்ட் லென்ஸ் அணிபவர்கள், இன்னும் கவனமாக இருக்க வேண்டும். லென்ஸ், கண் திரையுடன் ஒட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.


நமது உடலின் வெப்ப நிலை, பொதுவாகச் சராசரியாக 37 டிகிரியில் இருக்கும். எப்போதும் அவ்வாறு இருக்கவே முயலும். தொடர்ந்து குளிரில் இருக்க நேர்ந்தால், உடலின் இந்த வெப்பமும் குறையும். அச்சமயம், உடல் நடுக்கம், சோர்வு, வேகமாக மூச்சுவிடுவது போன்றவற்றை உடலில் உணருவோம். 28 டிகிரிக்கு கீழே செல்லும் போது, தீவிரத்தின் உச்ச நிலை அடைந்து, உடல் அதன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். இதை ஹைப்போதெர்மிக் நிலை (Hypothermia) என்பார்கள்.


ஆகவே, தனிநபர் குளிர்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துக்கொள்ளலாம்.


இது போன்ற காலக்கட்டத்தில், முடிந்தளவு பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பனிக்காலத்தில் வாகனங்கள் ஓட்டுவதும் சிரமம், ஒடுவதும் சிரமம். பனிக்குளிர், மனிதர்களை மட்டுமில்லாமல், வாகனங்களையும் பாதிக்கும். கார் டயர் உறையலாம். கார் பேட்டரி செயலிழக்கலாம். கார் இஞ்சினில் இருக்கும் ஆயில் கெட்டியாகலாம். பனிக்காலத்தில் வாகனங்கள் எங்காவது நின்று விட்டால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இவை பேராபத்தை விளைவிக்கும். முக்கியமாக, காரை விட்டு இறங்காமல் இருக்க வேண்டும். அப்போது தேவைப்படும் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, போன் சார்ஜர், பேப்பர், பென்சில், விசில், உணவுப்பொருட்கள் போன்றவற்றை முன்னெச்சரிக்கையாக மறவாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


சாலை பாதுகாப்புத் தகவல்களை, 511 என்ற எண்ணுக்கு அழைத்துக் கேட்டுக் கொள்ளலாம். இது தவிர, http://www.511mn.org என்ற தளத்திற்குச் சென்றோ, அல்லது அவர்களது பொபைல் செயலியை நிறுவியோ இத்தகவல்களை அறிந்துக்கொள்ளலாம். பனிக்குளிரில் மாட்டிக்கொள்ளும், இக்கட்டான சூழ்நிலையில் தாமதிக்காமல், 911 அழைத்துவிட வேண்டும்.

முன்னெச்சரிக்கைகளைக் கண்டோம். இது போல், முன்னெரிக்கையாக இருந்தோமானால், இந்தக் குளிரில் ரசித்து, ஆராய்ந்து செய்வதற்குப் பல விஷயங்கள் மினசோட்டாவில் உள்ளன. உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிந்துக்கொண்டு, வீட்டுக்கு வெளியே சென்று பனி மனிதன் செய்யலாம். பனிக்கோட்டைகள் உருவாக்கலாம். பனிப்பந்து செய்து வீசியெரிந்து விளையாடலாம். ஸ்கேட்டிங், ட்யூபிங் எனப் பனி சறுக்கு முயலலாம். ஸ்னோ ஷூயிங் (Snowshoeing) எனப்படும் பனி நடை பயலலாம். பனியில் மூடியிருக்கும் ஏரிகளுக்குச் சென்று அதன் அழகை ரசிக்கலாம். அங்கு உறைபனியில் மீன் பிடித்துக்கொண்டிருப்பவர்களிடம் பேச்சுக் கொடுக்கலாம். ஆர்வமும், பொறுமையும் இருந்தால் கூடச் சேர்ந்து மீன் பிடிக்கலாம்.


குளிர், பனி சார்ந்த இயற்பியல் பரிசோதனைகளைக் குழந்தைகளுடன் இணைந்து செய்து பார்க்கலாம். கடும் குளிரில் வெந்நீரை மேலே வீசினால் என்னவாகும் எனக் காணலாம். குளிரில் சென்று சோப்பு நுரை குமிழ்கள் (Bubbles) விட்டால், அவை என்னவாகும் என்பதைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம். வெள்ளைப்பனிக்கு வண்ணங்கள் சேர்த்து, பனியில் கலை வண்ணம் காணலாம். பனியின் அழகைப் புகைப்படங்களாகப் பதிவு செய்து சேர்க்கலாம். இப்படிக் குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடுவதற்குப் பனிக்காலத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன.


முக்கியமாக, இவை எதிலும் இறங்குவதற்கு முன்பு, குளிரின் பாதிப்புகளைப் பற்றி அறிந்துக்கொண்டு இறங்குவது அவசியம். அதுவே இக்கட்டுரையின் நோக்கம். மினசோட்டாவின் குளிரை, பனியை இடைஞ்சலாக நினைக்காமல், இயற்கையின் நியாயத்தைப் புரிந்து, அதன் வழியே நாமும் நம் வாழ்வை இணைத்து, ரசித்து வாழ்வோம்.


உங்களது குளிர்கால நாட்கள் ரம்மியமாகச் செல்லுவதற்கு வாழ்த்துகள்!!


மேலும் தகவலுக்கு,


Sunday, May 21, 2017

நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.




நவம்பர் மாதம் வந்து விட்டால், தேங்க்ஸ் கிவிங்கிற்கு (Thanksgiving) என்ன செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசிப்பார்களோ, இல்லையோ, என்ன வாங்கலாம் என்று அமெரிக்காவில் இந்தியர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பொருள் தேவையோ, இல்லையோ, டிஸ்கவுண்ட் என்ற சொல் மீது அலாதி ப்ரியம் நம்மவர்களுக்கு.
டிஸ்கவுண்ட் என்று வந்து விட்டால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்போம், டீல் இல்லையென்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது போல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கத் தேங்க்ஸ் கிவிங் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. விவசாயப் பெருங்குடி மக்கள், விளைச்சல் காலத்திற்குப் பிறகு நன்றி தெரிவிக்கும் காலமாக இது ஆரம்பித்தது. பிறகு, மத ரீதியான நன்றி நவிலல் வழிபாடுகள் ஆரம்பித்தன. தற்சமயம், நவம்பர் மாதத்தின் நாலாம் வியாழன் அன்று அதிகாரபூர்வமாக விடுமுறை விடப்பட்டு, அமெரிக்கா எங்கும் தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
வருமானம் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், அவர்களுக்கு இந்த நாளில் குறைந்த விலையில் பொருட்கள் விற்கிறார்கள் என்று நம்பப்படும் கன்ஸ்யூமர் ஐதீகம் இது. "அவ்வளவு நல்லவங்களாடா நீங்க?" என்று எந்தக் கேள்வி கேட்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி, அடிக்கிற கார்த்திகை மாசக் குளிரில், தெருத் தெருவாக, கடை கடையாக நம்ம ஜனங்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். நாமதான் ஓ.பி.கொ.கு ரகமாச்சே!!!
இந்த நுகர்வோர் சடங்கு நம்மவர்களுக்கு ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்குகிறது என்றால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. மலிவாகத் தோன்றும் வகையில், ஒரு பொருளின் விற்பனை விலையை நிர்ணயித்துவிட்டு, அதற்கேற்றாற் போல் வடிவமைத்து, கண்டிப்பாக லாபம் இருக்கும் வகையில் ஆசியத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து, நவம்பர் நாலாம் வியாழன் கிழமை கடையில் பண்டல் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். நம்மவர்களும் பிற்பகலிலேயே கிளம்பி, இந்தப் பண்டலின் மீது கையை வைத்துக் கொண்டு, விஜிபி கோல்டன் பீச் சிப்பாய் போல் நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தப் பண்டல் 6 மணிக்கோ, 8 மணிக்கோ அல்லது 10 மணிக்கோ திறக்கப்படும். அதுவரை, தீபாவளிக்குத் தட்கலில் ட்ரெயின் டிக்கெட் எடுக்கக் காத்துக் கிடப்பவர்கள் போல், நம்மவர்கள் இங்கு நிற்பார்கள். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன், பிள்ளையார் கோவில் முன்பு உடைக்கப்பட்ட சிதறு தேங்காயைப் பொறுக்கிக் கொண்டு ஓடுவதுபோல் இங்கு பொருட்களை அள்ளிக்கொண்டு ஓடுவார்கள்.
இப்படிக் கொரில்லாத் தாக்குதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கடைக்குள் நீண்ட நீண்ட க்யூக்கள் ஆங்காங்கே நிற்கும். எங்கு ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது, என்ன கொடுப்பார்கள், அது நமக்குக் கிடைக்குமா என்பது எல்லாம் புரிந்தும், புரியாமலும் பேங்கில் செல்லாத 500-1000 ரூபாயை மாற்ற வந்தவர்கள் போல் நிற்பார்கள். இதிலேயே பக்காவாக ப்ளான் செய்து, குடும்ப உறுப்பினர்களையோ, அல்லது நண்பர்களையோ ஆங்காங்கே அனுப்பி விட்டு, பொருட்களை வாங்கி வர, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் முறையில் ஷாப்பிங் செய்பவர்களும் உண்டு.
இப்படி எதுவும் இல்லாமல் வேடிக்கை பார்க்க மட்டுமே ஒரு கூட்டம் வரும். என்ன விற்கிறார்கள், என்ன வாங்க வந்தோம் என்று தெரியாமல், எல்லாக் களேபரமும் முடிந்த பின்னர், அப்பல்லோ வாசல் அப்பாவித் தொண்டர்கள் போல் கலைந்து, களைத்துச் செல்வார்கள்.
இவர்கள் எல்லோரையும் விடப் போற்றிப் புகழ வேண்டிய பாகுபலிகள், கடைக்கு வெளியே அடிக்கிற சில்லென்ற குளிரில், போர்வை போர்த்திக் கொண்டு நிற்கும் நமது ஷாப்பிங் ஜவான்ஸ். நடுஇரவு பனிரெண்டு மணிக்குத் திறக்கும் கடைக்கு, இரவு எட்டு மணிக்கே டின்னர் முடித்துப் பங்ச்சுவலாக வந்து நிற்பார்கள். நேரமாக நேரமாக க்யூ வளைந்து அங்கிங்கு செல்லும். பனிரெண்டு மணிக்குக் கடை திறந்த பின்பு, உள்ளே ஓடும் கூட்டத்தில் முதல் பத்து - பதினைந்து பேருக்குத் தான் சொல்லிக் கொள்ளும்படி ஏதேனும் கிடைக்கும். மற்றவர்கள், அந்தப் பத்து - பதினைந்து பொருட்களைத் தூக்கிக் கொண்டு பில்லிங் முடித்துச் செல்லும் அழகைத் தான் காண முடியும்.
இந்த நாளுக்காக இவர்கள் ஆயத்தமாவதையும் குறிப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே, இந்த வருடம் என்ன சீப்பாகக் கிடைக்கும் என்று தங்கள் எஃப்.பி.ஐ. மூளையை முடுக்கிவிட்டு, இணையத்தில் தேட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஏற்றாற்போல் தகவல் கொடுக்கவும் இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. இருக்குற தளங்களை எல்லாம் க்ரால் செய்து, டேட்டா மைனிங், ஆனலிட்டிக்ஸ் எல்லாம் புரிந்து, எக்ஸல் ரிப்போர்ட் தயார் செய்வார்கள். எந்தக் கடைக்கு, எப்ப போனா, என்ன கிடைக்கும் என்பதைப் பாய்ஸ் படத்தில் வரும் செந்தில் போல் ரெடி செய்து (இன்பர்மேஷன் இஸ் வெல்த்!!), தாங்கள் கொண்ட செல்வம், பெறுக இவ்வையகம் என்ற பொதுவுடமைத் தத்துவத்தின்படி, வாட்ஸ் அப், மெஸ்ஸஞ்சர், ஃபேஸ்புக், ட்வீட்டர், ப்ளஸ் என்று சமூக ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி நம்மை நெருக்குவார்கள்.
மெய்யுலக ஷாப்பிங் மட்டுமில்லாமல், மெய்நிகர் உலக ஷாப்பிங்கும் குறைவில்லாமல் நடக்கும். இதற்காக ப்ளாக் ஃப்ரைடே, சைபர் மண்டே, காதல் செவ்வாய், காவிய புதன் என்று வகைவகையான பெயரில், நமது மெயில்பாக்ஸிற்கு அழைப்பிதழ் அனுப்புவார்கள். நாமும் சும்மா இல்லாமல், இங்கே இந்த ரேட், அங்க என்ன ரேட் என்று ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் போல் சுற்றியலைந்து கொண்டிருப்போம்.
அடுத்தக்கட்டமாக, இந்த ஜூரம் கண்டம் கடந்து இந்தியா வரை சென்றுவிட்டது. ஆடிக் கழிவுப் பாரம்பரியத்தில் இருந்து பிக் பில்லியன் டே கலாச்சாரத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கோம். அது போதாது என்று, அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஃபோன் போட்டுத் தேங்க்ஸ் கிவிங் வாழ்த்துச் சொல்லிவிட்டு, ஷாப்பிங் ஆர்டர் கொடுக்கவும் தயாராகிவிட்டார்கள். 'எப்படி அனுப்புவது?' என்று கேட்டால், அதற்கும் ஃபோன் போட்டு யாரையாவது தயார் செய்து வைத்திருக்கிறார்கள். நமது நேரம் எப்படியோ, சமயங்களில் நாமும் குருவி வேலை பார்க்க வேண்டி வரும்.
இத்தனை கலாட்டாவில், இந்தத் தினத்தின் முக்கிய அம்சமான நன்றி நவிலலை மறந்து விட்டு, மற்றவரை இடித்துக்கொண்டு, காலை மிதித்தாலும் மன்னிப்புக் கேட்க நேரம் இல்லாமல் ஓடும் நுகர்வோர் வெறியை உருவாக்கியிருக்கும் கார்ப்பரேட் உலகிற்கு நம்மால் எப்படி நன்றி கூற முடியும் என்று தெரியவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் ஜப்பானில் பிரபலமாகிவரும் மினிமலிஸம் (Minimalism) போன்ற வாழ்க்கைமுறை அறிதல் தான் அவசியமாகிறது. பழகிவிட்ட இந்த யுகத்தில், எல்லோராலும் மினிமலிஸத்தை எந்த அளவிற்குக் கடைப்பிடிக்க முடியுமோ, தெரியாது. ஆனால், அது போன்ற வாழ்வு முறையைத் தெரிந்து கொண்டு, நமது அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுப்பது, அவர்களது நன்றியை நாம் பெறுவதற்குத் தகுதியை ஏற்படுத்திக்கொடுக்கும்.
அனைவருக்கும் நன்றி நவிலல் வாழ்த்துகள்.


.

மினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.


பொறுப்புத் துறப்பு - இது தனிப்பட்ட, சொந்த அனுபவம் சார்ந்து எழுதபட்டது. ஆளாளுக்கு வேறுபடலாம்.
ஓட்டுனர் உரிமம் வாங்க, கார் ஓட்ட தெரிந்தால் மட்டும் போதாது. அது ஓரளவுக்குச் சுலபம். வாகனத்துறை தேர்வாளரைத் திருப்திபடுத்துமளவுக்கு, கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் சிரமம். தேர்வாளர் மனதிற்குள் வைத்திருக்கும் அளவுகோல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். ஆளாளுக்கு மாறுபடும். அது புரிபட்டு விட்டால், உங்களுக்கான லைசன்ஸ் தயார்.
மேலோட்டமாகச் சொல்லுவது என்றால், கார் லைசன்ஸ் என்னும் மாயக் கிளியை நெருங்க, இரு மலைகளைத் தாண்ட வேண்டும். முதல் மலை, இன்ஸ்ட்ரக்ஷன் பெர்மிட் (Instruction Permit) எனப்படும் பயிலுவதற்கான உரிமச் சான்றிதழ் வாங்குவதற்கு நடத்தப்படும் கணினி தேர்வு. கணினி தேர்வு தானே என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

புதிதாக ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும் என்றாலும் சரி, வேறு ஊரில் உரிமம் வைத்திருந்து மினசோட்டா உரிமம் வாங்க வேண்டுமென்றாலும் சரி, கணினி தேர்வு கட்டாயம் உண்டு. நான் மினசோட்டா வந்த சமயம், டென்வர் மாநில ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தேன். அதை மினசோட்டா மாநில உரிமமாக மாற்ற பரீட்சை எடுக்க வேண்டி இருந்தது. நமக்குத் தான் கார் ஓட்ட தெரியுமே என்று படிக்காமல் சென்று விட்டேன். முதலில், ஒரு உதாரணக் கேள்வி காட்டினார்கள். மினசோட்டாவின் தலைநகரம் எது? ரொம்ப மப்பாக, மினியாபோலிஸ் என்று பதிலளித்துப் பல்ப் வாங்கினேன். அந்த உதாரணக் கேள்வியே எனது அன்றைய ரிசல்ட்டைக் காட்டிவிட்டது.

அடுத்த முறை, ஒழுங்காகப் படித்துச் சென்று பயிலுனர் உரிமம் வாங்கி வந்தேன். அதனால், இந்தத் தேர்வுக்குப் போக்குவரத்து விதிகளை வாசித்தல் அவசியமாகிறது. இதற்கான மினசோட்டாவின் போக்குவரத்து விதிகள் கையேடு, வாகனத்துறை இணையத்தளத்தில் பிடிஎப் வடிவிலும், ஒலிவடிவிலும், வாகனத்துறை அலுவலகங்களில் காகிதப்புத்தக வடிவிலும் கிடைக்கின்றன. அவரவர் வசதிக்கேற்ப, இதை வாங்கிப் படிக்கலாம். கேட்கலாம்.




அடுத்து, படித்தது ஒழுங்காக மண்டையில் ஏறியிருக்கிறதா என அறிந்து கொள்ள, மாதிரி தேர்வுகளை எடுக்கலாம். மாதிரி தேர்வுகள், பல இணையத்தளங்களில் கிடைக்கின்றன. அவுட்டான கேள்வித் தாள் கிடைக்குமா என்று தேடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஓரிரு முறை இந்த மாதிரி தேர்வுகளில் பாஸ் செய்து விட்டீர்கள் எனில் நேரடியாகத் தேர்வுக்குச் சென்று விடலாம்.
நகரைச் சுற்றி பல இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளன. போவதற்கு முன், அங்குக் கணினி தேர்வு எடுக்க முடியுமா என்று இணையத்தில் பார்த்து விட்டு செல்லவும். சில வாகனத்துறை அலுவலகங்களில் தேர்வு எடுக்க முடியாது. எந்த அலுவலகத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.




மறக்காமல், தேவைப்படும் டாகுமெண்ட்ஸை எடுத்து செல்லவும். அடையாள அட்டைகள், முகவரி சான்றிதழ் போன்றவை இதற்குத் தேவை. மேலும் தகவலுக்கு, இந்த லிங்கைக் காணவும்.


தேர்வு நிலையத்தில் கணினியும், ஹெட் போனும் இருக்கும். ஒவ்வொரு கேள்வியையும் ஒலிவடிவத்தில் கேட்கவும் செய்யலாம். நன்கு நிதானமாகப் பார்த்து, கேட்டு எழுத அவகாசம் இருக்கும். மொத்தம் 40 கேள்விகள். 32 கேள்விகளுக்காவது சரியான பதில்களை அளித்திருக்க வேண்டும். பாஸா, ஃபெயிலா என்பதைப் பரீட்சை முடிந்தவுடன் உடனே தெரிந்துக் கொள்ளலாம். சிலருக்குப் பரீட்சை நடக்கும் போதே தெரிந்து விடும். தேர்ச்சி பெறாவிட்டால், இன்னொரு முறை இலவச தேர்வு எடுக்கலாம். மூன்றாவது முறையில் இருந்து பத்து டாலர் கட்டணம் உண்டு.

பாஸானால், விண்ணப்பம் பூர்த்திச் செய்து, கட்டணம் செலுத்தி, ஃபோட்டோ எடுத்து, பயிலுனர் உரிமச் சான்றிதழை உடனே வாங்கிக் கொள்ளலாம். அட்டை வீட்டிற்குச் சில வாரங்கள் ஆகும். அது வரும் வரை கார் ஓட்டிப் பழகக் காத்திருக்கத் தேவையில்லை. பயிற்சியைத் தொடங்கிவிடலாம்.

இனி அடுத்தக் கட்டம். பயிற்சி மற்றும் சாலை தேர்வு. இந்தியாவில் கார் ஓட்ட தெரிந்திருந்தால், இங்குக் கார் ஓட்ட சிரமம் இருக்காது. அங்குச் சாலை விதிகளைக் கண்டு கொள்ளாமல் ஓட்டி விட்டு, அவற்றை இங்குக் கடைபிடிப்பது தான் முதலில் சிரமமாக இருக்கும். இன்னொன்று, ஹைவேயில் வேகமாகக் கார் ஓட்டுவது மற்றும் அதே வேகத்தில் லேன் மாறுவது. இதுவும், சிலருக்குச் சிரமமாக இருக்கும். இந்திய லைசன்ஸ் வைத்திருந்து, சாலை தேர்வுக்கு இடமிருந்து, உங்களுக்கு ரொம்பவும் தன்னம்பிக்கை இருந்தால், கணினி தேர்வை முடித்த கையோடு, சாலை தேர்வையும் ஒரு கை பார்த்துவிடலாம். அப்படி இல்லையெனில், பயிற்சி எடுத்துக்கொண்டு, சாலை தேர்வுக்கு முன்பதிவு செய்துவிட்டு செல்லவும்.

இங்குள்ள கார்களில் கியர், கிளட்ச் இருப்பதில்லை என்பதால், கார் ஓட்ட பயில்வது சுலபமே. தொடர் பயிற்சி இருந்தால், உள்ளூர இருக்கும் சாலைகளில் ஓட்டி, ஓரிரு வாரங்களில் ஓட்டப் பழகிவிடலாம். அதிக வாகனங்கள் இல்லாத தொலைத்தூர பயணங்களில் ஓட்டுவதும் ஓகே தான். உடன் வருபவரின் கண்காணிப்புச் சரியாக இருக்க வேண்டும். நகருக்குள் இருக்கும் நெடுஞ்சாலைகளில், வாகனகங்களுக்கிடையே ஓட்ட, திறமையைக் காட்ட வேண்டியிருக்கும். சாலை தேர்வில், அனைத்துவகைப் பார்க்கிங் (Parallel parking, 90 degree parking, Uphill parking & downhill parking) பற்றியும் கேட்டு, காரை நிறுத்த சொல்லி சோதிப்பார்கள். அதனால், இவை அனைத்தையும் முறையாகப் பயிற்சி செய்து, இவற்றில் தேர்ச்சிப் பெறுவது அவசியமாகிறது. இதற்காக, கோன்களுடன் (cones) கூடிய மாதிரி பார்க்கிங் இடங்கள் சில பள்ளி கார் நிறுத்துமிடங்களில் இருக்கும். பக்கத்தில் இருக்கும் பள்ளிகளில் சென்று, இந்தப் பயிற்சியைப் பெறலாம். பார்க்கிங் சரியாக வராதவரை, லைசன்ஸ் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு பயிற்சி பெறவேண்டும். இணைவான கார் நிறுத்தல், செங்குத்தான கார் நிறுத்தல் - இவை இரண்டிற்கும் சில சுலப வழிமுறைகள் உள்ளன. அவற்றை யூ-ட்யூபில் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். இது பற்றி தெரிந்தவர்கள் நேரடியாகச் சொல்லிக்கொடுத்தால் இன்னும் உசிதம். ஏற்றமான இடங்களில் காரை நிறுத்துவதற்கும், இறக்கமான இடங்களில் காரை நிறுத்துவதற்கும், கார் டயரை எந்தப் பக்கமாகத் திருப்பி வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

கற்றுக்கொள்வதற்கு, அடுத்த முக்கியமான விஷயம் - லேன் எனப்படும் சாலைகளில் இருக்கும் கோடுகளைப் பற்றி அறிந்துக்கொள்வதும், எங்கு எப்போது எப்படி மாறுவது என்று தெரிந்துக்கொள்வது. தேர்வின் போது, திருப்பங்களில் எந்த லேனில் இருந்து எந்த லேனிற்கு மாற வேண்டும் என்பதைத் தெரிந்து மாற வேண்டும். நாம் சாலையில் ஓட்டிக் கற்றுக்கொள்ளும் போது, இவற்றைப் பெரிதாகக் கவனிக்க மாட்டோம். தேர்வின் போது, இவற்றை நுணுக்கமாகக் கவனிப்பார்கள். நிறையப் பேரின் முதல் தோல்விகளுக்கு, இவையே காரணமாக இருக்கும். தேர்வு நடைபெறும் மையங்களில் இருக்கும் சில சாலைகளில், இந்தக் கோடுகளே இருக்காது. இது மேலும் குழப்பத்தைக் கொடுக்கும். அதனால், கோடுகள் இல்லாவிட்டாலும், கோடுகள் இருப்பதாக நினைத்து ஓட்டுவது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ஒரு சுலப வழி - கூகிள் மேப்ஸ் போன்று ஏதேனும் ஒரு மேப்ஸ் இணையத்தளத்திற்குச் செல்லவும். நாம் தேர்வு எடுக்கப்போகும் தேர்வு மையத்தை வரைப்படமாகப் பார்க்கவும். எந்தச் சாலைகள் எப்படிச் செல்கிறது என்று தெரியும். எது ஓர் வழி சாலை, எது இருவழி சாலை என்று தெரியும். எங்குக் கோடுகள் உள்ளன, எங்கு இல்லை என்று தெரியும். நமது சாலைத் தேர்வை, வீட்டிலேயே பேப்பரில் ஹோம் வொர்க் செய்துக்கொள்ள இது உதவும்.


கார் ஓட்டுவதைத் தவிர, இன்னும் சிலவற்றை அறிந்துக்கொள்ள வேண்டும். சில பரிசோதகர்கள், நாம் காலணி அணிந்து கார் ஓட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால், காலணி அணிந்து கார் ஓட்டவும். சிலர் நாம் எப்படிக் கார் ஸ்ட்டியரீங்கை பிடிக்கிறோம், எப்படி ப்ரேக் பிடிக்கிறோம் என்பதைக் கவனிப்பார்கள். என்ன வேகத்தில் ஓட்டுகிறோம் என்று கவனிப்பார்கள். பதட்டமாக இருக்கிறோமா என்று பார்ப்பார்கள். அதனால், சகஜமாக இருப்பது அவசியம். சில சந்தேகங்கள் இருந்தால், தேர்வாளரிடம் தேர்வு தொடங்குவதற்கு முன்பு கேட்டுக்கொள்ளலாம். சந்தேகத்தில், பயத்தில் கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

தேர்வின் போது, காரில் ஏறி உட்கார்ந்தவுடன், காரில் இருக்கும் கருவிகளைப் பற்றிக் கேட்பார்கள். உதாரணத்திற்கு, எமர்ஜென்ஸி விளக்குப் பொத்தான்கள், ஹாண்ட் ப்ரெக் போன்றவை எங்கு இருக்கும் என்று கேட்பார்கள். அதனால், அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும். தேர்வு முடிந்தவுடன், நாம் கார் ஓட்டியதைப் பற்றிய அவர்களது கருத்தைக் கேட்டுக் கொள்வது நல்லது. தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால், இது அடுத்தத் தேர்வுக்கு உதவும். மூன்றாவது தேர்வில் இருந்து இருபது டாலர்கள் கட்டணம் உண்டு. தேர்ச்சி அடைந்துவிட்டால், அடுத்து அலுவலகத்திற்குள் சென்று விண்ணப்பம் பூர்த்திச் செய்து, புகைப்படம் எடுத்துவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்பலாம். ஓட்டுனர் உரிம அட்டை வீடு வந்து சேர, சில வாரங்கள் எடுக்கும். அதுவரை, அவர்கள் கொடுக்கும் சான்றிதழ் கொண்டு கார் ஓட்டலாம்.


மினசோட்டாவில் சாலை தேர்வுக்கு அப்பாயின்மெண்ட் எடுக்க வேண்டும். இந்த அப்பாயின்மெண்ட் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. அப்பாயின்மெண்ட் இல்லாமல், அங்குச் சென்று காத்திருந்து தேர்வு எடுக்கவும் வழியுண்டு. ஆனால், தேர்வு எடுப்பது உறுதி கிடையாது. வேறு ஏதும் வேலை இல்லை எனில், இப்படிக் காத்திருக்கலாம். இல்லாவிட்டால், முன்பதிவு உதவும். நமக்குப் பக்கத்தில் இருக்கும் மையத்தில் முன்பதிவு இல்லை என்றால், அடுத்துத் தொலைவில் இருப்பதில் முயற்சி செய்யலாம். சிலர் ஒரு மையத்தில் எடுப்பது சுலபம், மற்றதில் கடினம் என்பார்கள். அதை நம்பாதீர்கள். உங்களது பயிற்சி சரியாக இருந்தால் எங்கு வேண்டுமென்றாலும் உங்களால் தேர்ச்சி பெற முடியும்.


தனியார் பயிற்சி மையங்களில் ஒரு மணி நேர பயிற்சிக்கு 40-50 டாலர்கள் கட்டணம் பெற்றுக்கொண்டு பயிற்சி அளிப்பார்கள். அங்குச் சென்று பயிற்சி எடுக்க வேண்டுமா என்றால் அது கட்டாயம் தேவையில்லை. உங்களுடன் நேரம் செலவிட்டு, கார் ஓட்ட கற்றுக்கொடுக்க ஒரு ஜீவன் இருக்கிறதென்றால் அதுவே போதும். சில டெக்னிக்ஸ் தெரிந்து கொள்ள, இது போன்ற தனியார் பயிற்சியாளர்கள் உதவுவார்கள். மற்றபடி, தொடர் பயிற்சி கண்டிப்பாகத் தேர்ச்சியினைக் கொடுக்கும். விரைவில் தேர்ச்சி பெற்று உரிமம் பெறவும், பாதுகாப்பாகக் கார் ஓட்டவும் எங்களது வாழ்த்துகள்.

மேலும் தகவலுக்கு,

https://dps.mn.gov

.

அனோகா ஹாலோவீன் அணி வகுப்பு

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



96 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது, மினசோட்டாவின் அனோகாவில் (Anoka) நடக்கும் ஹலோவீன் கொண்டாட்டங்கள். 1920 ஆம் ஆண்டில், அனோகாவின் இளைஞர் பட்டாளம், ஹலோவீனின் போது நடத்தும் வேடிக்கை விளையாட்டுகள், மக்களிடையே திண்டாட்டத்தை ஏற்படுத்த, அனோகா நிர்வாகத்தினர் கூடி, எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல், ஒருமித்த திட்டத்துடன் நடத்தத் தொடங்கியவை, இக்கொண்டாட்ட நிகழ்வுகள்.
இங்கு அக்டோபர் மத்தியில் இருந்தே ஹாலோவீன் நிகழ்வுகள் தொடங்கிவிடுகின்றன. குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுகள், வேடிக்கையாக திகில் ஏற்படுத்தும் வீடுகள், ஒப்பனை நிகழ்வுகள், திரைப்பட ஒளிபரப்பு என ஒரு பெரிய ஊர்த் திருவிழாவாக அக்டோபர் மாத இறுதிவரை நடைபெறுகிறது. அனோகாவில் மட்டுமின்றி, மினசோட்டாவின் மற்ற ஊர்களில் இருந்தும் மக்கள், இங்கு இந்த விழாவின் போது குவிகிறார்கள். பக்கத்தில் இருக்கும் மற்ற மாநிலங்களில் இருந்தும் பங்களிப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் இது போன்ற ஒரு கொண்டாட்டம், அனோகாவில் தான் முதன்முதலில் தொடங்கியது என்பதால், அனோகாவை உலகின் ஹலோவீன் தலைநகர் (The Halloween Capital of the World) என்று குறிப்பிடுகிறார்கள்.
இக்கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக இங்கு நடக்கும் பெருதின அணிவகுப்பைச் (Grand Day Parade) சொல்லலாம். விதவிதமான உடைகள், இசை வாத்தியங்கள், நடனங்கள், விளையாட்டுகள், இனிப்பு வகைகளை, இந்த அணிவகுப்பில் காணலாம். அக்டோபர் 29ஆம் தேதி நடந்த அணிவகுப்பில் எடுத்த புகைப்படங்களை இங்கு காணலாம்.

கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள், வணிக நிறுவனங்கள், அரசு நிர்வாகங்கள் என பலதரப்பட்ட அமைப்புகளின் கூட்டு ஒருங்கிணைப்பில் அழகாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. மெல்லிய சாரலும், குளிரும் இருந்தாலும், மக்கள் பெரும் திரளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களை உற்சாகத்துடன் ஊக்கப்படுத்தினர்.

.