Thursday, July 31, 2008

குசேலன் - சிங்கம் அசிங்கமானது

“கலாட்டா பண்றவங்கள உதைக்க வேண்டாம்?”

“நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? படத்தை ரிலிஸ் பண்ணலைன்னா எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை.”

“படத்த ரிலிஸ் பண்ண விடுங்க. நான் தவறை உணர்ந்து விட்டேன். நான் இனி இத்தவறை செய்ய மாட்டேன்”
என்ன இது? அரசியல்வாதி தோத்தான்.

இந்த மன்னிப்பு தேவையா?

பெங்களூர்ல இருக்குற உண்மையான ரஜினி ரசிகன்கிட்ட “உனக்கு குசேலன் பார்க்கணுமா? இல்ல உன் தலைவன் மன்னிப்பு கேட்கணுமா?”ன்னு கேட்டா, அவன் ஆணியே புடுங்க வேண்டாம்’ன்னு சொல்லியிருப்பான்.இந்த மன்னிப்பு, பெங்களூர்ல உள்ள ரஜினி ரசிகர்களைக் குசேலன் பார்க்க வச்சியிருக்கலாம். சாய்மீரா நிறுவனத்துக்கு ஒரு அஞ்சு சதவிகிதம் (?) அதிகம் லாபம் தரலாம். ஆனால், ரஜினி இனி எடுக்க போகும் ஒவ்வொரு முடிவின் ஸ்திரத்தன்மையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

படம் வெளியாகும் முன்பே, ரஜினிக்கு ஒரு தோல்வி.

இதுக்கும் மேலே எவனாவது “மன்னிக்கறவன் மனுசன்… மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுசன்”ன்னு சொன்னா, ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை. :-)

Wednesday, July 30, 2008

குடகு மலை காற்று (புகைப்படப் பதிவு)

கூர்க்'கில் எடுத்த சில புகைப்படங்கள்...

அழகை மறைக்கும் அழகு பனி...
இருட்டில் வித்தை காட்டும் வெளிச்சம்


போட்டோ எடுத்தா கொன்னுடுவேன் கொன்னு...


அபி பால்ஸ் (அபினாலும் நீர்வீழ்ச்சிதான்... பால்ஸ்னாலும் நீர்வீழ்ச்சிதான்)பல தலைகளை உருளவைக்கும் காவிரியின் தலை - தலைகாவிரி


காவிரி இங்கேதான் ஆரம்பிக்குதாம்... கோவில் கட்டி கும்பிடுறாங்க...
பசுமை போர்த்தப்பட்ட பாதை


இப்படியே போனா ப்ரீ'ஆ திருச்சி போயிடலாம்...


இந்தியாவுக்குள் ஒரு திபெத்

தீபாவளி ட்ரெயின் டிக்கெட்
இன்றைய பகுத்தறிவு பகலவர்கள்

குமுதம்.com இல் இயக்குனர் வேலு பிரபாகரனின் பேட்டியை “ஞாநி பேசுகிறேன்” பகுதியில் காண நேரிட்டது. அவரது பேச்சைக் கேட்க ரொம்ப பரிதாபமாக இருந்தது. அவர் பேச்சின் சில துளிகள்.

o படப்பிடிப்பில் முப்பது நிமிடம் காத்திருந்து தேங்காய் உடைத்தவுடன் தான் கேமராவை ஆன் செய்ய வேண்டும் என்றவரிடம் சண்டை.
o படப்பிடிப்பு சாதனம் மேல் கால் வைத்திருந்த போது, காலை எடுக்க சொன்னவரிடம் வாக்குவாதம்.
o பகுத்தறிவாளர் என்று சொல்லிக்கொள்ளும் கமல், கடவுளை நம்பும்விதமாக தசாவதாரம் படம் எடுக்கிறார். சாதி பெருமைக் கொள்ளும் விதமாக தேவர் மகன் படம் எடுக்கிறார்.
o திராவிடர் கழகம் ஒரு வட்டி கடை.
o இரவு பகலாக ஊர் ஊராக பிரச்சாரம் செய்த தன்னிடம் வீட்டை வட்டிக்காக பிடுங்கி கொண்டது.
o காதல் அரங்கம் என்று ஒரு படம் எடுத்து சென்சார் போர்டு, டெல்லி ட்ரிபனல் தணிக்கை போன்றவற்றால் படம் வெளியிட முடியாமல் போனது. (படத்தில் கதாநாயகி மேலாடை அணியாமல் வரும் காட்சி ஒன்று உள்ளதாம்.) அடுத்தது சுப்ரிம் கோர்ட் போக போகிறாராம்.

இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.

பகுத்தறிவு கூறி பிழைப்பவர்கள் இருக்கிறார்கள். பகுத்தறிவு பேசி ஒரு பைசா பிரயோஜனம் இல்லா விதண்டாவாதம் செய்பவர்கள் இருக்கிறார்கள். உண்மையில் பகுத்தறிவால் அறியாமையில் கஷ்டப்படும் மக்களைக் காப்பாற்றுபவர்கள் இருக்கிறார்களா?

பகுத்தறிவு என்பது எதையும் அலசி ஆராய்வது. சமூகத்தில் மூடநம்பிக்கையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைய உதவுவது. ஆனால் இன்று பகுத்தறிவாளர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் என்ன செய்கிறார்கள்?

இன்று பகுத்தறிவாளர்கள் என்று சொல்லி கொள்ளும் பெரும்பாலோனர் பகுத்தறிவு பேசுவது கண்டிப்பாக சமூகத்தின் மேல் உள்ள அக்கறையினால் இல்லை. இவர்கள் இவர்களது செயல்களில், எதையும் பகுத்தறிய வேண்டும். ஆனால் இவர்கள் இப்படி இருப்பதில்லை. இவர்களது ஒரே பலம், வாதம் செய்வது சுலபம். இவர்கள் நியாயம் பேசி என்ன சாதித்திருக்கிறார்கள்?

அரசியலில் உள்ள பகுத்தறிவாளர்களுக்கு ஓட்டு தான் முக்கியம். ஓட்டு தேவைப்படும் போது இவர்களுக்கு பகுத்தறியும் திறன் வேலை செய்வதில்லை. இவர்களது அடிப்படை கொள்கை இதுவென்பதால் மட்டுமே இதை இன்னமும் பேசி கொண்டிருக்கிறார்கள். பகுத்தறிவு, பேச்சில் மட்டும் இருக்க கூடாது. செயலிலும் இருக்க வேண்டும். சாதியை ஒழிக்க வேண்டியவர்கள், சாதியை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைக்கிறார்கள். சீட் கொடுக்கிறார்கள். பதவி கொடுக்கிறார்கள். மத வேறுபாடுகளைக் களைய வேண்டியவர்கள், மத ரீதியான ஓட்டு சதவிதத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.

திரைப்படங்களில் பகுத்தறிவு பேசுபவர்கள், தங்கள் சொந்த வாழ்க்கை என்று வரும்போது சமரசம் செய்து கொள்கிறார்கள். சின்ன கலைவாணர், வீடு கட்டும் போது வாஸ்து பார்த்து கட்டுக்கிறார். புரட்சி தமிழன், மகன் திருமணத்தை சம்பிரதாயப்படி பண்ண போகிறாராம். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமல்லவா?

இப்படி சமரசம் செய்து கொண்டு, பகுத்தறிவை பேச்சில் மட்டும் கொண்டு வாழ்பவர்கள் தான், சந்தொஷமாக இருக்கிறார்கள். வேலு பிரபாகரன் போன்றவர்கள் கஷ்டப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். உபயோகம் இருக்குமா? தெரியவில்லை.

நம்மவர்களின் பகுத்தறிவு நகைச்சுவைக்குரியது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், பாவம், புண்ணியம் என்று சொன்னால் சிரிப்பார்கள். அதுவே, ஏதாவது ஒரு வெள்ளைக்கார துரை சொன்னதாக கூறி “Chaos theory”, “Butterfly Effect” என்று சொன்னால், எதை வேண்டுமானாலும் நம்பி “ஆ” என்று வாயைப் பிளப்பார்கள்.

உலக புகழ் பெற்ற அறிஞர் டேல் கார்னெகி தன்னுடைய “How to Stop Worrying and Start Living” புத்தகத்தில் கவலையைக் களைய உற்ற வழியாக இறை வழிப்பாடை கூறிப்பிட்டுள்ளார். யாருக்கும் இடையுறு தராத இறை வழிப்பாடானாலும் அதை விமர்சிக்கும் பகுத்தறிவாளர்கள் கண்களுக்கு, தங்கள் தலைவர்களின் சுயநல, லஞ்ச, அதிகார துஷ்பிரயோக செயல்கள் தெரிவதில்லை. உண்மையிலேயே இவர்களுக்கு பகுத்தறிவு இருந்தால், வேண்டாம், அறிவு இருந்தால், தங்கள் தலைவர் நல்லது செய்யும்போது எப்படி புகழ்கிறார்களோ, அதேப்போல் தவறு செய்யும் போது அதையும் விமர்சிக்க வேண்டும். சும்மா சப்பைக்கட்டு கட்டினால், அப்புறம் இவர்களுக்கும் போலி சாமியார்களுக்கும் என்ன வித்தியாசம்?இன்றைய சூழலில் மத நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் மேல்தட்டு மக்களிடமும், வசதியானவர்களிடமும் பகுத்தறிவு பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்கள் இந்த நிலையை அடைத்திருக்கிறார்கள் என்றால், அதற்கேற்ற திறமையும், உழைப்பும் இவர்களிடம் இருந்திருக்கும். அது குறித்த நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் வேறு வேறு அளவில் இருக்கும்.

வலையில் பகுத்தறிவு பேசுபவர்களின் எழுத்து இவர்களை மட்டுமே அடையும். அடைந்து என்ன பயம்? உண்மையில் இதுக்குறித்த புரிதல் தேவைப்படுவது, கிராமங்களில் அறியாமையில் வாழும் மக்களுக்கு. அவர்கள் தாம், தீண்டாமை, சாதி கலவரம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள். பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டியது அங்குதான்.

நாம் வலையில் வெட்டியாக, பொழுதுபோக்கிற்காக பகுத்தறிவு குறித்து செலவிடும் சக்தியை ஆக்கபூர்வமாக்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும். இது சாத்தியமா?

Thursday, July 24, 2008

கமல்ஹாசன் – கிளப்புறாங்கயா பீதியை!!!

இது மின்னஞ்சலில் வந்தது. ஏற்கனவே இதேப்போல் முரளிகண்ணன் ஒரு பதிவு போட்டிருந்தார்.

--------------------

தற்செயலாக நடப்பவை. நம்பினால் நம்புங்கள்.

1) 1978 இல் கமல் சைக்கோ கொலைக்காரன் வேடத்தில் நடித்த “சிகப்பு ரோஜாக்கள்” வெளிவந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு, சைக்கோ ராமன் என்பவன் கொடுரமாக கொலை செய்ததற்க்காக கைது செய்யப்பட்டான்.
2) 1988 இல் வேலை இல்லா இளைஞனாக “சத்யா” படத்தில் நடித்தார். 89-90 காலக்கட்டத்தில், இந்தியா வேலை இல்லா திண்டாட்டத்தால் பெரும் அவதியை சந்தித்தது.
3) 1992 இல், அவரின் வெற்றிப்படமான “தேவர் மகன்” வெளிவந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து, 1993 இல், தென்மாவட்டங்களில், சாதி கலவரம் ஏற்பட்டது.
4) 1994 இல் வெளிவந்த “மகாநதி” படத்தில் ஏமாற்றிக்கொண்டு ஒடும் சீட்டு கம்பெனியை காட்டியிருந்தார். 1996 இல், பல கம்பெனிகள் ஒடியது.
5) ஹேராமில் (2000) இந்து-முஸ்லிம் சண்டை பிண்ணனி. இரண்டு வருடம் கழித்து, கோத்ரா.
6) 2003 இல் வெளிவந்த “அன்பே சிவ”த்தில், ஒரு இடத்தில் சுனாமி என்று சொல்லியிருந்தார். அதுவரை, அறிந்திராத சுனாமி, 2004 இல், ஒரு காட்டு காட்டியது.
7) வேட்டையாடு-விளையாடுவில் (2006) இரு சீரியல் சைக்கோ கொலைகாரக் கதாபாத்திரங்கள் (இளா-அமுதன்) இருந்தன. மூன்று மாதத்திற்கு பிறகு, நொய்டா கொலைகள் (மொநிந்தர்-சதீஷ்) வெளிச்சத்திற்கு வந்தது.

இப்ப 2008 – தசாவதாரம். அப்புறம்?

ரஜினி ரஜினிதான்…

ஆரம்பிச்சிட்டாங்கப்பா…

நேத்துத்தான் குசேலன் டிரேய்லர் ரிலிஸ் பண்ணினாங்க. அதுக்குள்ள வட இந்திய சேனல்களான என்டிடிவி, ஹெட்லைன்ஸ் டுடேயில் படத்தைப் பற்றிய செய்தி, நிகழ்ச்சின்னு அமர்க்களப் படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.
இதுக்கும் இது ஒரு முழுமையான ரஜினி படம் கிடையாது.


ரஜினி பற்றிய டப்பா செய்திகளுக்கு தமிழ்நாட்டில் தான் வரவேற்பு என்று நினைத்தால், இப்போது இந்திய அளவிலா?இனி இத பாத்து மத்த சேனல்களும் ஆரம்பிப்பாங்க. அடுத்த வாரம் படம் ரிலிஸா? களைக்கெட்ட போகுது.தசாவதாரத்தில் கமல் பத்து வேடத்தில் நடித்ததை குறிப்பிட்டு, இந்த படத்தில் ரஜினி இருபது வேடத்தில் நடித்திருப்பதாக கூறி, கமலை ஒரு நொடியில் காலி பண்ணிவிட்டார்கள்.ஹைய்யோ… ஹைய்யோ…

நல்லவேளை, ஒரு நாள் முன்னாடி இந்த டிரேய்லர ரிலிஸ் பண்ணலை. பாராளுமன்றத்தை கவர் பண்ணாம இத கவர் பண்ணிருப்பானுங்க. :-)

Friday, July 18, 2008

தங்கத்தலைவி நயன்தாரா வாழ்க!!!


சேர காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் தமிழக-கேரள கலாச்சார கலை உறவின் தற்போதைய பிரதிநிதி, நயன்தாரா. சுமார் பத்து படங்களில் தான் நடித்து இருந்தாலும் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் இவர் பிரபலம். தொங்கலில் இருக்கும் மத்திய அரசை பற்றி செய்தி வருகிறதோ இல்லையோ, இவர் பற்றிய செய்தி இல்லாத பத்திரிகை தமிழகத்தில் இல்லை.

தமிழன் தன் அடையாளத்தை சிறிது காலம் இழந்து ஒல்லிபிச்சான் நடிகைகளுக்கு வேண்டாவெறுப்பாக வேறுவழியில்லாமல் ஆதரவு அளித்து கொண்டிருந்த போது, அவர்களுக்கு தன் புது பரிணாமத்தை ஐயா படத்தில் காட்டி, அவர்களின் தூக்கத்தை கெடுக்க தொடங்கியவர்தான் நயன்தாரா. பிரபல நடிகர்களே 'நயன்தாரா நயன்தாரா' என்று அலையும் போது, அவர்களையே உதாரண புருஷர்களாக கொண்ட நம் தமிழ் இளைஞர்கள் என்ன செய்வார்கள்?

மார்க்கெட்டை இழந்து கொண்டிருந்த பல நட்சத்திரங்களுக்கு இவர்தான் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்றால் அது மிகையில்லை. சந்திரமுகி படம் மூலம் ரஜினிக்கும், பில்லா படம் மூலம் அஜித்துக்கும் பெரும் வெற்றிகளை கொடுத்தவர். சிவாஜி, பில்லா படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கே பல தேசங்களை கடந்த புது திசையை காட்டியவர்.

தினத்தந்தி பத்திரிகை இவருக்கென ஒரு தனி செய்திதுறையையே அமைத்து, இவர் பற்றிய செய்திகளை துல்லியமாகவும், விரைவாகவும் வாசகர்களுக்கு அளித்து வருகிறது. சமீபத்தில் இவரது துணிச்சல், சாதனை பற்றிய செய்திகள் தமிழக வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இவருக்கென நியமிக்கப்பட்ட பிரத்யேக நிருபர் ஒருவர், விஷால், சிம்பு, திரிஷா போன்றோர்களை விரட்டி விரட்டி பேட்டியெடுத்து தினமும் வெளியிட்டு வருகிறார்.

தமிழ் திரை உலக வரலாறில் முதன்முதலில் ஒரு லட்சம் பணம் சம்பளமாக பெற்று சாதனை படைத்த நடிகை, கே. பி. சுந்தரம்பாள். சுமார், எழுபது வருடங்களுக்கு பிறகு அதுபோன்று ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்ற மைல் கல்லை தாண்டி சரித்திரத்தில் இடம் பிடித்தவர் நயன்தாரா. அவரை போலவே இவரும் அரசியலில் புகழ் பெறுவார் என்ற தொலைநோக்கு பார்வையிலையே, வருங்கால முதல்வர்களில் ஒருவரான நடிகர் விஜய், தான் வெளியிட்ட ரசிகர் மன்ற கொடி விழாவில் இவர் பக்கத்தில் இருக்கும்வாறு பார்த்துக்கொண்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இதுவரை நடிகைகளுக்கு தமிழகத்தில் கோவில்தான் கட்டப்பட்டு உள்ளது. முதன் முதலில் நயன்தாராவுக்கு தான் அனைத்து சாதி மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் சமத்துவ தலம் அமைக்க படும் என்று, நயன்தாராவின் முதல் படத்தில் நடித்த நடிகர் என்ற பெருமை கொண்ட நடிகர் சரத்குமார், தன் சமத்துவ கட்சியின் நாடளுமன்ற மன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி சேர்த்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அரசுடன் நடந்த ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டத்தில் கூட நயன்தாரா பேரில் உணவு பண்டங்கள் வெளியிட்டு, விலைவாசி உயர்விலிரிந்து மக்களைத் திசை திருப்ப ஆலோசனை கூறப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன.

இவ்வளவு சிறப்பு கொண்ட நயன்தாராவின் வெற்றி பயணம் தொடர வாழ்த்தி ஆதரவளிப்பது மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

வாழ்க நயன்தாரா...

வளர்க அவர்தம் கலை துண்டு... மன்னிக்க, கலைத்தொண்டு...

இவண்,
நயன்தாரா இளைஞர் பாசறை.

பின்குறிப்பு: எப்போதும் தமிழ்மணத்தின் இடதுபக்கம் மட்டும் உள்ள சூடு, தற்போது முழு பக்கத்திலும் பரவி கிடப்பதால், அதை தணிப்பதற்கான சிறு முயற்சியே இப்பதிவு.

Thursday, July 10, 2008

கவிதை (கண்டிப்பா சிரிப்பீங்க!!!)

மின்னஞ்சலில் வந்த கவிதை...


ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...

மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள்...

கொய்யாலே சாவட்டும்....
இந்த கவித எழுதின கவிஞர (!) வாழ்த்தலாம்னு பார்த்தா, யாருன்னு தெரியல... :-(

இன்னும் சில தினங்களில் தமிழ்மணம் சூடான இடுகைகள் பகுதி :-)


டிஸ்கி : சும்மா தமாசு....

Wednesday, July 9, 2008

ஜுலை PIT போட்டி - உதவி தேவை

நண்பர்களே,

முதல்முறையா இந்த புகைப்பட போட்டியில கலந்துக்க போறேன். இதுக்காக காமிரா தூக்கிட்டு போய் எங்கேயும் எதையும் புதுசா எடுக்கல. ஏற்கனவே எடுத்ததுல எது பொருத்தமா இருக்குனு எனக்கு தோணுனத இந்த பதிவுல கொடுத்துருக்கேன். பார்த்திட்டு எது இதுல கொஞ்சமாச்சும் நல்லா இருக்குறதா தோணுனத சொல்லுங்க. அதையே போட்டிக்கு அனுப்பிடுவோம். எதுவும் நல்லா இல்லனாலும் பரவாயில்லை. அடுத்த போட்டில கலந்துக்கிறேன். :-)

1. இது ஒரு மாலை வேளை பெங்களூர் விதான் சவுதா முன்பு எடுத்தது....
2. சுதந்திரமும் ஜனநாயகமும்


3. ஹம்பி பக்கமுள்ள துங்கபத்ரா அணை பூங்காவில் எடுத்தது.


4. இதுவும் ஹம்பி அருகே எடுத்தது.


5. இது ஒரு இரவு உணவகத்தில் எடுத்தது.6. மதுரை நாயக்கர் மஹால் உள்ளே.


7. இதுவும் நாயக்கர் மகாலில் எடுத்தது.8. நாயக்கர் மஹால் வெளிப்புறம்.


9. கேம்ப் போர்ட் சிவன் கோவில் - பிரம்மாண்ட சிவனும் சின்ன நிலவும்


மறக்காம பிடித்த புகைப்படத்தைப் பின்னுட்டத்தில் தெரிவிங்கோ!!!!

Tuesday, July 8, 2008

பேச்சு துணை

கட்ட கட்டமான கேபின்களில், விரல்களை கீபோர்டில் புதைத்துக்கொண்டு, மானிட்டரில் தகவல்களை தேடிகொண்டிருக்கும், உணர்வுகள் பாதியை இழந்த கூட்டத்தின் நடுவே நான்.தலை வலித்தது."டீ போலாமா?" கேட்டேன் பக்கத்திலிருந்த ஆரியனிடம்.ஏதோ டெலிவரி செய்யவேண்டுமென்று வர மறுத்தான். அவன் மனைவி டெலிவரிக்கு கூட இவ்வளவு டென்சனாக இருந்திருப்பானா என்பது சந்தேகம்.சலிப்புடன் மேஜையில் இருந்த மின்னணு எலியை உருட்ட தொடங்கியபோது,, என் மொபைல் போன் ரிங்கியது."ஹலோ""ஐ யம் கால்லிங் ப்ரம் ......... பேங்க். கேன் யு ஸ்பர் சம் டைம் வித் அஸ்?" என்றது ஒரு பெண் குரல்."ரெகார்டிங்?""திஸ் இஸ் ரெகார்டிங் ....... இன்சூரன்ஸ் பிளான் சார்?""நோ ஸாரி, ஐ அம் நாட் இண்டரஸ்டட்.""சார், யு டோன்ட் ஹவ் டு பய் சார். லேட் மீ எக்ஸ்ப்ளைன் அபௌட் த பிளான் சார்."சிறிது யோசித்து, சரி என்று சொல்லி விட்டு என் அலுவலக வேலையை தொடர்ந்தேன்.அம்மணி கொஞ்சம் நேரம், இன்சூரன்ஸ், போனஸ், டேக்ஸ் ரெலிப் என்றல்லாம் சொல்லியது.பின்பு நான், "ஆக்சுவலி ஐ அல்ரெடி ஹவ் இன்சூரன்ஸ். ஸோ ஐ டோன்ட் வான்ட் இட் நவ்" என்றேன்."பட் சார், ஹீயர் யு கெட் குட் ரிடன்ஸ் சார்""ஐ ஹவ் அல்சோ இன்வேஸ்டட் இன் மியுச்சுவல் பண்ட். ஸோ ஐ வில் கெட் குட் ரிடன்ஸ் தேர்"அம்மணி யோசித்து விட்டு, "சார், நீங்க தமிழ்நாடா?""ஆமாம்""எந்த ஊரு?""மதுரை பக்கம்""சார், நீங்க இதுல இன்வெஸ்ட் பண்ணலாமில?"பார்த்து கொண்டிருந்த வேலையை விட்டு, "பண்ணலாம், ஆனா இப்ப காசு இல்லையே!"சிரித்து விட்டு, "சார், மதுரையில இருந்து இங்க வந்து வேலை பாக்குறீங்க. பணம் இல்லன்னு சொல்றீங்க?""நான் பணத்தை ஏற்கனவே இன்வெஸ்ட் பண்ணிட்டேன்.""!!!... ம்ம்ம்...""நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல? இப்போதைக்கி என்கிட்டே ஏதும் இன்வெஸ்ட்மென்ட் பிளான் இல்ல.""ஓகே, சார், நான் அப்புறம் எப்ப கால் பண்றது?""ஒரு ரெண்டு-மூணு மாசம் கழிச்சு கால் பண்ணுங்க""ரெண்டு மூணு மாசமா? அப்ப நான் இருக்கேனோ, இல்லையோ?""ஏன் கம்பெனி மாறிடுவீங்களா?""அப்படி சொல்லல... இந்த உலகத்துல இருக்கேனோ இல்லையோ சொன்னேன்"ஒரு நொடி நிதானித்துவிட்டு தொடர்ந்தேன்...."அப்ப நீங்க ஒரு இன்சூரன்ஸ் வாங்கிகோங்க. உங்க வீட்டுக்கு யூஸ் புல்லா இருக்கும்""எங்க மம்மி ஏற்கனவே எனக்கு வாங்கி இருக்காங்க""அப்ப என்னைய மட்டும் எதுக்கு இன்னொன்னு வாங்க கட்டாயப்படுத்துறீங்க?""நீங்க பசங்க சார். உங்களுக்கு ரொம்ப யூஸா இருக்கும்.""ஏன்?""நீங்க நாலு இடத்துக்கு பைக்குல போவீங்க. ஏதாச்சும் ஆச்சின்னா...""ஹலோ... ஏங்க இப்படி போன் பண்ணி செத்து போவிடுவேன்னு சொல்லுறீங்க?"சிரித்து கொண்டே, "அப்படி இல்ல சார்...""பின்ன?""சரிங்க... உங்க பிரண்ட் நம்பர் எதாச்சும் கொடுங்க?""அப்படி, ஏதும் இல்ல..""ஓகே...பை..."முகம் தெரியா பெண்ணுடனான பயனில்லா உரையாடல் கொடுத்த புத்துணர்ச்சியுடன் வேலையை தொடர்ந்தேன்.

20க்கும் மேற்பட்ட ரஜினி படங்களின் கதை ஒரே பதிவில்...

ரஜினியின் 20 க்கும் மேற்பட்ட படங்களின் கதைகள்ன்னோன பதிவு ரொம்ப நீளமா இருக்கும்னு நினைக்கிறீங்களா? ரஜினி படங்கள்'ங்க... அப்படியெல்லாம் இருக்காது... சரி, கதை சுருக்கத்த சொல்றேன்...

"ஏழை பணக்காரனா ஆனா"

இதுதாங்க இருபதுக்கும் மேற்பட்ட படங்களின் கதை சுருக்கம். இதை திரைக்கதையில் "எப்படி ஆனாரு, ஆனா பிறகு என்ன ஆச்சு?"ன்னு வேற வேற மாதிரி சொன்னாக்க இருபது படம் ரெடி.

இதுல மொத வெரட்டி "ஹீரோ ஏழையா இருப்பாரு... ஆனா உண்மையில அவரு பெரிய பணக்காரரு". இந்த டைப்'ல சுமார் 7-8 படங்கள் தலைவரு நடிச்சி இருக்காரு... எதுன்னா, அருணாச்சலம், முத்து, உழைப்பாளி, அதிசய பிறவி, பணக்காரன், வேலைக்காரன், மிஸ்டர். பாரத், தாய் வீடு'ன்னு இப்படி லிஸ்ட் போகுது.

ரெண்டாவது வெரட்டி என்னனா, "பணக்கார, வசதியான ஹீரோ ஏழையாகி, திரும்ப கஷ்டப்பட்டு பணக்காரராகுறது". இந்த கதையில வந்த படங்கள் தான், சிவாஜி, படையப்பா, அண்ணாமலை, ராஜாதி ராஜா எல்லாம்.

அடுத்த வெரட்டி, இந்த ஸ்டோரி லைனையே திருப்பி போடுறது. "நல்ல வசதியா, அதிகாரமா பிறந்தவன் இல்ல இருந்தவன், ஏழையா இருந்தா" எப்படிங்கறது இந்த வகை. இந்த டைப்'ல வந்தது தான், இது எல்லாம். பாட்ஷா, தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மனிதன்.

அடுத்தது நார்மல் ஆனது. ஏழை ஹீரோ வளர்ந்து பணக்காரனாவது. (அய்யோ, இத தானடா பர்ஸ்ட் இருந்து சொல்ற'ங்கிறீங்களா? நல்ல வாசிச்சு பாருங்க :-)) இந்த வகை கதைகளில், நல்ல வழியாகவோ கெட்ட வழியாகவோ, செல்வம் ஹீரோ'க்கிட்ட வந்து சேரும். அப்ப அவர சுத்தி நடக்கிறது என்னங்கறது தான் திரைக்கதை. இப்படிக்கா தலைவரு நடிச்ச படங்கள், வீரா, நல்லவனுக்கு நல்லவன், தீ, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, பாபா, மன்னன்.

என்னங்க ஆச்சரியமா இருக்கா? இத தான் நம்ம சூப்பர் ஸ்டார் எண்பதுகளில் இருந்து இப்ப வரை நடிச்சிக்கிட்டு இருக்காரு. அதுவும், வெள்ளி விழா படங்களா ஓடிக்கிட்டு இருக்கு. இத கின்னசுல போடலாம். இப்படி ஒருத்தர் ஒரே கதையில பல வருஷங்களா நடிச்சிக்கிட்டு இருக்காருன்னு ரஜினி'யா கின்னசுல சேர்க்கலாம். இல்லாட்டி, இப்படி ஒரே கதைய பல வருஷங்களா, சந்தோசமா பார்க்கிற மக்கள் இருக்குறாங்கன்னு, தமிழக மக்களை கின்னசுல சேர்க்கலாம்.:-) ஆனா இன்னொரு பக்கம், என்ன கதை, என்ன கதை'ன்னு ஒரு கூட்டம் மண்டைய ஒடைச்சிகிட்டு இருக்கு.

சரி, சரி, இப்ப அடுத்து வெளிவர போற குசேலன் கதை என்ன? இரண்டு ஏழை நண்பர்கள். அதுல ஒருத்தர் நடிச்சு பெரிய பணக்காரரு ஆகிடுறாறு. அது தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். அடே, இதுலயும் அதுதானா? :-)

Monday, July 7, 2008

சிரிக்க வைத்தவை : 11-07-2008

ரயிலில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, தான் முந்திய தினம் தசாவதாரம் படம் பார்த்ததை கூறி கொண்டு வந்தார்.


"படம் நல்லா இருந்திச்சி. ஆனா ஏதோ யோகி கேரக்டர், யோகி கேரக்டர்'ன்னு சொன்னாங்களே, அது படத்துல வரவே இல்லையே?"


எனக்கு கொஞ்சம் நேரம் ஒண்ணும் புரியல. அப்புறம் கேட்டேன்.


"ஏங்க... கமலோட அடுத்த படம் மர்ம யோகி. அத சொல்றீங்களா?"


நண்பர் ஹி ஹி என்று அசடு வழிந்தார்.


-------------------------------------------------------
என் கல்லூரி நண்பன் வேலையில் சேர்ந்த பிறகு என்னிடம் ஒரு வீடோ அல்லது பேயிங் கெஸ்ட் மாதிரியோ ஒன்றை பார்த்து தர சொன்னான். நானும் என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடன் இது குறித்து கேட்டேன். அவர், "என் வீட்டு பக்கம் பெண்கள் தங்கும் பேயிங் கெஸ்ட் வீடு தான் உள்ளது" என்றார்.


பின்பு ஒரு நாள், அவனை சந்தித்த போது, "டேய், கேர்ள்ஸ் பேயிங் கெஸ்ட் வீடு தான் டா இருக்குதாம்" என்றேன்.


அதற்கு அவன் சொன்னான்,


"அவங்களுக்கு பிரச்சனை இல்லன்னா, எனக்கு ஓகே தான்"-------------------------------------------------------இன்னொரு நாள், அதே நண்பனுடன், ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். அசைவ உணவை பற்றி பேசி கொண்டிருந்தோம். சிக்கன், மட்டன், மீன் போன்றவை சலித்து விட்டதாகவும், தற்போது காடை, முயல், நண்டு போன்றவற்றையே விரும்பி சாப்பிடுவதாகவும் கூறினான்.


"முயலா, ச்சே ச்சே, நான் சாப்பிட மாட்டேன்பா" என்றேன்.


"ஏன்?"


"(பார்க்க) நல்லா இருக்கும்டா... அத போயி..."


"நல்லா இருக்கும்கிறதுக்காக தான் நான் சாப்பிடுறதே..."


"!?!"

Wednesday, July 2, 2008

உளியின் ஓசை - யார் மனசுல என்ன?

உளியின் ஓசை படத்தின் பிரிவ்யு ஷோ (இது வேறயா?) நேற்று நடந்ததாம். அங்கு எடுத்த போட்டோ இங்கே (மனசாட்சியுடன் சேர்த்து).
Tuesday, July 1, 2008

குசேலன் - ஹீரோ பசுபதி எங்கே?


குசேலன் படம் ஆரம்பிக்கும்போது ரஜினி இப்படி சொன்னார் "இந்த படத்தில் நான் 25%, வடிவேலு 25%, பசுபதி தான் 50%". ஆனா படம் ஆரம்பித்ததிலிருந்து இப்ப பாடல் வெளியீட்டு விழா வரை எங்கேயேயும் பசுபதி தலையே தெரியவில்லை.

கதையில் புதியதாக சேர்க்கப்பட்ட நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு மீடியாவில் கொடுக்கும் முக்கியத்துவம் பசுபதிக்கு இல்லை.

ஒரு வேளை, ரஜினியை காட்டினால் தான் எதிர்பார்ப்பு அதிகமாகும். வியாபாரத்துக்கு நல்லது என்று நினைத்து இருப்பார்களோ? இந்த எதிர்ப்பார்ப்பில் போய் படம் பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாறுவதற்குத்தான் வாய்ப்புண்டு.

தசாவதாரம் இசை வெளியீட்டு விழா மேடையில் இசையமைப்பாளர் ஹிமேஷ் இல்லை. அப்போது கூட, ஏன் ரஜினி வரவில்லை, ரஜினி வரவில்லை என்று தான் கேட்டார்களே ஒழிய, யாரும் படத்தின் இசையமைப்பாளர் வரவில்லையே? என்று கேட்கவில்லை. உண்மையில் அந்த விழாவின் நாயகனாக இருக்கவேண்டியது இசையமைப்பாளர்தான். இப்போது, குசேலன் பாடல் வெளியீட்டு விழாவிலும், படத்தின் ஸ்டில்ஸ்'களிலும், கதையின் நாயகன் பசுபதியே இல்லை.

தமிழ் சினிமாவில், இது போன்ற முன்னணி நட்சத்திரங்களின் கண் கூசும் வெளிச்சத்தில் தெரியப்படாமல் போகும் திறமையான மற்ற நட்சத்திரங்களின், தொழில்நுட்ப கலைஞர்களின் நிலை என்று தான் மாறுமோ?