Thursday, October 28, 2010

3டி

3டி என்பது எனக்கு எப்பொழுதுமே கவர்ந்திழுக்கும் வார்த்தை. நாம் நமது கண்களால் சாதாரணமாக பார்க்கும் எவையும் முப்பரிமாண காட்சி தான் என்றாலும், பேப்பரில் இருப்பதை முப்பரிமாணத்தில் காண்பது விசேஷமாகிவிடுகிறது. திரையில் காண்பது இன்னமும்.

விகடனில் முன்பு சில பக்கங்களில் சில புகைப்படங்களை 3டியில் கொடுத்திருப்பார்கள். கூடவே, ஒரு கண்ணாடியும் கொடுப்பார்கள். ஒருபக்கம் சிகப்பு கண்ணாடி தாளும், இன்னொரு பக்கம் நீல கண்ணாடி தாளும் கொண்டு பேப்பரில் செய்யப்பட்ட கண்ணாடி. ஒரு டினோசர் படம் நினைவில் இருக்கிறது. பார்க்கும்போது, டினோசர் தாளில் இருந்து கொஞ்சம் முன்பக்கம் வந்தது போல் தெரியும்.



’மை டியர் குட்டிசாத்தான்’ முதல் முறை (1984) ரிலீஸ் ஆன சமயம், எனக்கு (3டி படம் பார்க்கும் அளவுக்கு) நினைவு தெரிந்த வயதில்லை. பிறகு, அப்படியொரு 3டி வந்தது தெரிந்த போது, அதை காண்பதற்கு ரொம்பவும் ஆர்வமாக இருந்தது. டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால், அதை 3டியில் திரையில் காண வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை. இருந்தும், என் ஆசையை நிறைவேற்றும் விதமாக, 1997இல் மறு திரையிடல் செய்யப்பட்டது. 2 முறை பார்த்தேன். 3டித்தனமாக நிறைய காட்சிகள் அப்படத்தில் இருக்கும். அதாவது, குச்சியை கண்ணுக்கு முன்னால் நீட்டுவது, ஐஸ்கிரிம் கொடுப்பது, பாம்பு வருவது என.

இந்த படம் கொடுத்த 3டி'த்தன மகிழ்ச்சியை ஏனோ ஹாலிவுட் பிரமாண்ட ’அவதார்’ கொடுக்கவில்லை. அவதாரை 3டியில், நல்ல மல்டிப்ளெக்ஸில் பார்க்க வேண்டும் என்பதற்காக, அலுவலகத்தில் இருப்பவர்களை உசுப்பேற்றி விட்டு, கம்பெனி ஸ்பான்சர்ஷிப்புடன் பார்த்தேன். ‘மை டியர் குட்டிசாத்தானின்’ கண்ணுக்கிட்ட வரும் எபெக்ட் ஏதும் இல்லாமல், விகடனின் டைனோசர் எபெக்ட் மட்டுமே இருந்தது. அவதாரின் 3டி எபெக்ட்டை புகழ்ந்தவர்கள், மை டியர் குட்டிச்சாத்தானை பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான்.



இப்ப நிறைய 3டி படங்கள் வருகிறது. ஆங்கிலத்தில் வருபவை எல்லாமே 3டியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இவையெல்லாம் சாதா படங்களை 3டியில் மாற்றியது போல் தான் இருக்கிறது. 3டி என்பதற்காக விசேஷமாக எந்த காட்சிகளும் இருப்பதில்லை. அல்லது, குறைவாக இருக்கிறது. பிரன்ஹா பார்த்தப்போது, ரெசிடெண்ட் ஈவில் படத்தின் ட்ரெய்லரையே 3டியில் போட்டார்கள். ஒரு சில காட்சிகள், 3டியில் நன்றாக இருந்தது. படம் சரியில்லை என்றார்கள். விரைவில், மற்ற விளம்பரங்களும் 3டியில் வரலாம்.

சமீபக்காலமாக, எல்லா இடங்களிலும் 3டி 3டி என்பது தான் பேச்சாக இருக்கிறது. பெப்ஸோடண்ட் டூப்பேஸ்ட் வாங்கினால், ஒரு 3டி கதைப்புத்தகமும், 3டி கண்ணாடியும் கொடுக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூர் ஏர்போர்ட்டில் சோனியின் 3டி டிவியை வைத்து அறிமுகம் கொடுத்து, மக்கள் கருத்து கேட்டு கொண்டிருந்தார்கள். அப்போது விலை எவ்வளவு என்று சொல்லவில்லை. தற்போது, பேப்பரை திறந்தால், 3டி டிவிக்களின் விளம்பரமாகத்தான் இருக்கிறது. விலை எல்லாமே லட்ச ரூபாய்க்கு மேல்தான். இதனுடன் படத்தை 3டிக்கு மாற்றும் ப்ளேயரும், கண்ணாடியும் கொடுக்கிறார்கள்.

தொடர்ந்து 3டி படங்களாகவே வருவதால், தியேட்டரில் 3டி கண்ணாடி கொடுக்கும் வைபவம், விழாக்கால விசேஷம் இல்லாமல் மாமூல் நிகழ்வாகிவிட்டது. சில தியேட்டர்களில் நமக்கே நமக்கென்று சொந்தமாக வைத்துக்கொள்ள 3டி கண்ணாடியை விற்கிறார்கள். மை டியர் குட்டிச்சாத்தானின் போது, இந்த கண்ணாடியை பற்றி தனி டாக்குமெண்டரியே போட்டார்கள்.

பல காலம் முன்பு ஒரு செய்தி படித்தேன். மர்ம தேசம் இயக்குனர் டிவியில் 3டியில் பார்க்கும்வாறு ஒரு சீரியல் எடுக்கப்போகிறார் என்று. எடுத்தாரா, வந்ததா என்று தெரியாது. ஆனால், ஏதோ ஒரு சேனலில் (ஜெயா டிவி???) ஏதோ ஒன்றை 3டியில் ஒளிப்பரப்பினார்கள் என்று நினைவு. அதற்கான கண்ணாடியைக்கூட கடைகள் மூலமாக விற்றார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது மொபைலில் கூட 3டி மொபைல்கள் வந்துவிட்டன. ஸ்பைஸ் ஏதோ ஒரு மாடல், 3டி என்று வெளியிட்டு இருக்கிறது. ஏதாவது காமெடி செய்து வைத்திருப்பார்கள். தவிர, 4டி என்று வேறு புதுசாக ஏதோ ஒன்று சொல்கிறார்கள்.

இப்படி 3டியில் பல முன்னேற்றங்கள் சமீபகாலமாக நடந்துவருகிறது. எந்திரனைக்கூட 3டியில் எடுக்கப்போவதாக முன்பு செய்திகள் வந்தது. தற்போது கூட, சில காட்சிகளை 3டியில் மாற்றப்போவதாக வாசித்தேன். என்ன இருந்தாலும், செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்று தெரிகிறது. அதனால் தான், சென்ற வாரம் அந்த செய்தியை வாசித்தப்போது ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு கன்னடப்படத்தை பற்றிய செய்தி.

கன்னடப்படங்கள் குறைந்தப்பட்ஜெட்டில் எடுக்கப்படுபவை. உபேந்திரா இயக்கிக்கொண்டிருக்கும் ‘சூப்பர்’ என்ற படத்தை 3டியில் அவர் புரமோட் செய்கிறார் என்பது செய்தி. ஆர்வத்துடன் வாசித்தேன். என்ன சொல்கிறார்கள் என்றால், போஸ்டரில் இரு படங்கள் இருக்குமாம். அதை நாம் ஒரு தினுசாக பார்க்க வேண்டுமாம். அதாவது, குமரிமுத்து போல் கண் விழிகளை நடுவே கொண்டுவந்து, இரண்டை மூன்று படங்களாக தோன்ற வைத்து, அதில் நடுப்படத்தைப் பார்த்தால், அது 3டியில் தெரியுமாம். சாம்பிளுக்கு உபேந்திராவும் நயன்தாராவும் இருக்கும் ஒரு படத்தை பேப்பரில் கொடுத்திருந்தார்கள். ட்ரை செய்ததில் கண்களால் சில நேரம் தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை!

போங்கடா!... நீங்களும் உங்க 3டியும்!

.

Monday, October 4, 2010

எந்திரன் - கமல் நடித்திருந்தால்?

ஷங்கர் ‘ரோபோ’ கதையை முதலில் சொன்னது கமலிடம் என்பதை நாமறிவோம். ஒருவேளை கமலே நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?



1) ரோபோ மாதிரியே இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு இயந்திரத்தனமான அசைவை படம் முழுக்க முகத்தில் காட்டிக்கொண்டே இருந்திருப்பார். அவர் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடிக்க, இவ்ளோ வேலை செய்கிற ரோபோ இதை மட்டும் ஏன் இப்படி செய்கிறது? என்று நாம் விமர்சித்திருப்போம். உ.தா. அன்பே சிவம் - வெட்டுப்பட்ட மீசை.

2) ரோபோ நாயகியிடம் முத்தம் கேட்கும் காட்சியில், லிப் கிஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கும்.

3) ரோபோ அறிமுகக்காட்சியில், ”கடவுள் இருக்காரா? இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லைன்னு சொல்ல மாட்டேன். இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்று பதில் சொல்லி குழப்பியிருக்கும்.

4) வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, ரோபோ வேடத்திற்கு குரல் கொடுக்கும்போது ஒரு தகர வாய்ஸ் கொடுத்திருப்பார்.

5) நடனக்காட்சிக்கும், சண்டைக்காட்சிக்கும் டூப் போடவோ, மாஸ்க் போடவோ, கிராபிக்ஸ் செய்யவோ மறுத்து, இதற்காக பிரத்யேகமாக பயிற்சி எடுத்து அவரே செய்திருப்பார்.

6) இப்ப ரோபோவை இயந்திரமாக காட்டும்போது, கிராபிக்ஸில் காட்டியுள்ளார்கள். கமல் நடித்திருந்தால், கிராபிக்ஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மேலே மெட்டாலிக் தகடு பதித்துக்கொண்டு உள்ளூக்குள் இருந்துகொண்டு அவரே இயந்திரமாகவும் நடித்திருப்பார்.

7) ரோபோவை வெட்டிப்போடும் காட்சியில், விஞ்ஞானியாகவும், துண்டாக கிடைக்கும் எந்திரனாகவும் கமல் நடித்திருக்கும் நடிப்பைப் பார்த்து, தியேட்டரே கண்ணீரில் மிதந்திருக்கும்.

8) இறுதிக்காட்சியில் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுக்கொல்வது ‘பாசிசமாக இருக்கிறதே?’ என்று இயக்குனரிடம் விவாதித்திருப்பார். நன்றி - இந்த பேட்டி.

9) டைட்டிலில் வசனம் என்று அவருடைய பெயரும் வந்திருக்கும்.

10) டைட்டிலில் பானு பெயர் வந்த இடத்தில் கௌதமி பெயர் வந்திருக்கும்.

11) சிட்டி வெர்ஷன் 2.0 கேரக்டருக்காக, பத்து மணி நேர மேக்கப்பில் அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பார்.

12) விக் வைத்து நடிக்காமல், முடியை குறைத்து, பிறகு வளர்த்து வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். இதனால், படத்தை முடிக்க இன்னும் ஒரு வருடம் அதிகமாயிருக்கும்.

13) கலாநிதி மாறனே தயாரித்து, படத்தின் கிளிப்பிங்ஸ் கிடைக்காவிட்டாலும், ஜெயா டிவியில் சுஹாசினியும், விஜய் டிவியில் அனுஹாசனும் படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

14) படம் நன்றாக வந்திருக்கும்பட்சத்தில், விமர்சகர்கள் அனைவரும் ஷங்கரைவிட கமலை புகழ்ந்திருப்பார்கள். ”கமலை விட்டா, இந்த படத்தில் நடிக்க ஆளே இல்லை!” என்று சொல்லியிருப்பார்கள்.

15) கமர்ஷியல் எண்டர்டெயினராக இல்லாமல், உன்னத கலைப் படைப்பாக இப்படம் பார்க்கப்படும்.

என்ன அப்படித்தானே?

அடுத்தது, அஜித் நடித்திருந்தால்? யாராவது சொல்லுங்களேன்.

.

Friday, October 1, 2010

எந்திரன் - கனவு நிறைவேறியது



நான் ரஜினி ரசிகனானதற்கு ஒரு வகையில் எங்க அண்ணன் தான் காரணம். எங்களுக்குள் வயது இடைவெளி அதிகம். நான் சிறுவனாக இருந்த காலத்தில், அவர் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டார். அவருடைய ஆரம்பகால சம்பாத்தியத்தில், எனக்காக நிறைய சினிமா செலவு செய்திருக்கிறார். அவர் ஒரு கமல் ரசிகர். ஆனாலும், ரஜினி படம் ரிலீஸ் ஆகும் அன்று என்னைக் கூட்டிக்கொண்டு படத்திற்கு சென்று விடுவார். ஒரு படத்தையும் முதல் நாளில் விட்டது கிடையாது. அண்ணனின் நண்பர்கள் யாராவது அடித்து பிடித்து டிக்கெட் எடுத்துக்கொடுத்துவிடுவார்கள். உள்ளே செல்வது தான் கொஞ்சம் சிரமமான விஷயம். சில தியேட்டர்களில் போலீஸும், சில தியேட்டர்களில் ரவுடிகளும் பந்தோபஸ்து கொடுப்பார்கள். நெருக்கி தள்ளுவார்கள். அதிலும், என்னை எப்படியாவது பாதுகாத்து உள்ளே சென்றுவிடுவார்.

பிறகு, அண்ணன் துணையில்லாமல் படம் பார்க்க துவங்கிய போது, நண்பர்கள் எப்படியாவது டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். பெங்களூர் வந்த பிறகு, முதல் நாள் ரஜினி படம் பார்ப்பது சுலபமானது. நிறைய தியேட்டர்களில் வரும். எங்க ஊரில் இருப்பது போன்ற அடிதடி எல்லாம் இருக்காது. ரிசர்வேஷன் இல்லாத சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்கள் இருக்கின்றன. கவுண்டரில் கொடுக்காவிட்டாலும், ப்ளாக்கில் 50 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும்.

தற்போது, இன்னும் நிறைய தியேட்டர்கள் என்பதால் முதல் நாள் பார்க்க வேண்டும் என்கிற பலருடைய கனவு நிறைவேறுகிறது. குடும்பம், குழந்தைகளுடன் வருகிறார்கள். இதெல்லாம் முன்பு சாத்தியமில்லை.

தற்சமயம் அலுவலகத்திற்கு மதியம் மேல் சென்று இரவு வருவதால், பர்ஸ்ட் ஷோவோ, செகண்ட் ஷோவோ பார்க்க சாத்தியமில்லை. மார்னிங் ஷோ போகலாம் என்று பத்து மணிக்கு சென்றால், அதிகாலை ஆறு மணிக்கே ஒரு காட்சி ஆரம்பமாகிவிட்டது. அதற்கு முன்பு இருந்ததா என்று தெரியவில்லை. கவுண்டரிலேயே டிக்கெட் விலை 100, 150. இதற்காகவே புதுசாக டிக்கெட் அடித்திருந்தார்கள். நாலு போலீஸ்காரர்களுக்கு இன்று இங்குதான் டூட்டி போலும். வேலைக்கு லேட்டாக வந்தார்கள். வந்திருந்த கூட்டத்தால், கொஞ்சம் ட்ராபிக் ஜாம் ஆனது. அந்த போலீஸ்காரர்கள் ஏதும் வேலை பார்த்த மாதிரி தெரியவில்லை. படத்தைத்தான் முழுவதும் பார்த்தார்கள். ரஜினி படத்தை முதல் நாள் ஓசியில் பார்ப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கும்.

---

“முதல் நாளே பார்க்கணுமா?”

“நான் இதுவரை பாபா மட்டும் தான் இரண்டாம் நாள் பார்த்தேன். ஒரு சென்டிமெண்ட் தான். பாவம், படம் ஓடாம போயிடுச்சுன்னா?”

“அடேங்கப்பா! சரி, குசேலன் எப்ப பார்த்த?”

“முதல் நாள் தான்”

?

“அது பசுபதி படம்ப்பா!!!”

---

தியேட்டர் கேட்டை திறந்ததற்கே, ஆரவாரம் ஓவர். படத்திற்கு கேட்க வேண்டுமா? ஆனால், எல்லோரும் பொங்கி எழ வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இடைவேளைக்கு பிறகு, அரை மணி நேரம் படம் ஓடியிருக்கும். திடீரென வாய்ஸ் மட்டும் வரவில்லை. கூச்சல் ஆர்ப்பாட்டமானது. காட்சி நிறுத்தப்பட்டது.

என்னலாமோ ட்ரை செய்தார்கள். மைனா பட ட்ரைய்லர் போட்டு, சவுண்ட் செக் செய்தார்கள். சத்தம் வரவே இல்லை. கூட்டம் வெறியேறி, பெப்ஸி பாட்டில்கள் உடைப்பட, திரை சின்னதாக கிழிக்கப்பட, படம் திரும்ப முதலில் இருந்து போடப்பட்டது. மக்கள் கொஞ்சம் அமைதியாக, அந்த கேப்பைப் பயன்படுத்தி, சவுண்ட் சிஸ்டம் சரி செய்யப்பட்டது.

முதல் நாள் ஒரே டிக்கெட்டில் அனைவரும் இரண்டு முறை படம் பார்த்தார்கள்.

---

படத்தை பற்றி, ரஜினி ரசிகன் நான் என்ன சொல்ல? எந்திரன் பற்றிய விமர்சனங்களை பார்க்காமல் படம் பார்க்கவும். இன்னும் பார்க்காதவர்கள், இதற்கே மேல் படிக்கக்கூட வேண்டாம்.



ரஜினி இந்த படத்தில் ‘பத்து வருஷ கனவு’ என்று சொல்லும்போதெல்லாம், ஷங்கர் தான் தெரிந்தார். அவருடைய பத்து வருஷ கனவு, ரஜினியால், ரஜினி என்ற நடிகனுக்கு இருக்கும் மார்க்கெட்டால், அந்த மார்க்கெட்டினால் சாத்தியமான பட்ஜெட்டால், அந்த பட்ஜெட் கொடுத்த பிரமாண்டத்தால் நிறைவேறியிருக்கிறது.

ரொம்ப காலத்திற்கு பிறகு, பில்-டப் இல்லாமல் ரஜினி அறிமுகம். ஆங்காங்கே பழைய ரஜினி போல் நடக்கிறார். பேசுகிறார். ஆடு போல் கத்துவது எல்லாம் அமர்க்களம். போதும்! ரஜினி புகழ் பாடாமல், வேறு விஷயங்கள் பேசலாம்.

மாஸ்க் போடப்பட்டு, கிராபிக்ஸ் செய்யப்பட்டு ரஜினி வேகமாக நடனம் ஆடுவதாகவும், பறந்து சுற்றி சுழண்டு சண்டை போடுவதாகவும் காட்டியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருந்தாலும், ரஜினியை இத்தனை வருஷம் தொடர்ந்து பார்த்துவருவதால், நாம் பார்ப்பது ரஜினி இல்லை என்று தெரிந்து, அவருடைய வயது நினைவுக்கு வந்து, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. :-(

‘என் இனிய இயந்திரா’வில் ஆங்காங்கே இருக்கும் பொறிகள், கமர்ஷியல் திரைப்பட வடிவத்திற்கேற்ப மாற்றமடைந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராயிடம் சிட்டி கேரக்டர் முத்தம் கேட்கும்போதும், ரோபோ பார்ட் பார்ட்டாக பிய்த்தெறியும் போதும் எனக்கு ஜீனோ தான் நினைவுக்கு வந்தது.

ஆனந்த விகடனில் ஜீனோ இப்படி கழட்டப்பட்ட அத்தியாயம் வந்த வாரத்திற்கு பிறகு, சுஜாதாவிற்கு நிறைய கடிதங்கள் சோகமாக எழுதப்பட்டதாம். பல வருடங்கள் கழித்து, அதே உணர்வு ரசிகர்களுக்கு இன்று வந்திருக்கும்.

தரமான கிராபிக்ஸால், பல உழைப்பு சார்ந்த விஷயங்கள் கண்டுக்கொள்ளாமல் போகக்கூடும். எந்த சீனில் எல்லாம் இரண்டு ரஜினிகள் வருகிறார்களோ, எல்லாம் கிராபிக்ஸ். கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளிலும் இருவரும் வருகிறார்கள். சில காட்சிகளில், நூறு பேர் வருகிறார்கள்!

எனக்கு இரண்டாம் பாதியை விட முதல் பாதியே ரொம்ப பிடித்தது. முதல் பாதியில் வசனம் ரொம்ப ஸ்ட்ராங். இரண்டாம் பாதி கிராபிக்ஸ் மேளா, எனக்கு லேசாக சலிப்பு தட்டியது. அதிலும் சாதா போலீஸ்களை, சகட்டுமேனிக்கு பெரிய காரணமில்லாமல் சும்மா சுட்டுத்தள்ளுவது கவரவில்லை.

முதல் நாள் பார்க்கும் போது, இருக்கும் கூச்சலால் நிறைய விஷயங்கள் கவனிக்க முடியாது. வசனங்கள், பின்னணி இசை போன்றவை டிடிஎஸ் ஸ்பிக்கரில் இருந்து வந்தாலும், நம்மவர்களின் விசில் சத்ததிற்கு முன் அதெல்லாம் செல்லுபடியாகாது. திரும்ப பார்க்காமலா விட போறோம்? அப்ப, கவனித்துக்கொள்ளலாம்.

முடிவாக, ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி, ஷங்கருக்கு கனவு ப்ராஜக்ட், கலாநிதி மாறனுக்கு க்ளோபல் வசூல், ரசிகனின் மூன்று வருட காத்திருப்பு என பல பேருடைய கனவு இன்று நிறைவேறியுள்ளது.

.