Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, October 2, 2017

ஓவியா - தி பிக் பாஸ்

பனிப்பூக்களில் (ஜூலை 2017) வெளிவந்த கட்டுரை.



சமூக வலைத்தளங்கள் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செய்தித் தளங்கள் தினமும் இது குறித்த செய்திகள் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகள் குவிகின்றன. ஒப்பிட்டுக்கவிதை பரவலாகப் பரவுகிறது. மீம்ஸ் கொட்டுகின்றன. எல்லாம் ஸ்கிரிப்ட் தான் என்று சொல்லிக் கொண்டே, தவறாமல் பார்க்கிறார்கள். டிஆர்பி எகிறுகிறது. தியேட்டரில் கூட்டம் குறைகிறது. போட்டி சேனல்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவ்வேளையில் தினமும் ஒளிபரப்புகிறார்கள். ஆனாலும், பிக் பாஸும் அதன் வெற்றியும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

டிவியில் இருந்து சிவகார்த்திக்கேயனை சினிமாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, சினிமாவில் இருந்த கமலஹாசனை டிவிக்குக் கொண்டு வந்த விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றித் தான் எங்கும் பேச்சாக இருக்கிறது.

நாம் புரட்சிப் பெண்ணாகப் பார்த்த ஜுலி, லூசு பெண்ணாக மாறி விட்டார். ஜொள்ளு பார்ட்டியாக நமக்கு இருந்த நமிதாவை, லொல்லு தாங்கவில்லை என்கிறோம். எப்போதும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த ஆர்த்தியை, இப்போது பார்த்துக் கடுப்பாகிறோம். சப்பை ஃபிகராகப் பார்க்கப்பட்ட ஓவியாவுக்கு, இப்போது சப்போர்ட் குவிகிறது. எல்லாம் பிக் பாஸுக்கு பிறகு.

அதிலும், ஓவியாவுக்குச் சமூக வலைத்தளங்கள் எங்கும் ரசிகர் பட்டாளங்கள். ஓவியாவின் கூறும் "நீங்க ஷட்டப் பண்ணுங்க” போன்ற வார்த்தைகளெல்லாம், பஞ்ச் டயலாக்ஸ் ஆக மாறுகின்றன. டி-சர்ட் வாக்கியங்களாக மாறுகின்றன. கூடிய விரைவில் இமான் இவற்றைப் பாடல்களாக மாற்றுவார். வாரா வாரம் அவருக்கு மக்களிடம் இருந்து குவிகிற வாக்குகளைப் பார்த்து, அவருடன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி, அன்புமணி போன்ற அரசியல்வாதிகளே பொறாமைபட்டு பெருமூச்சு விடுகிறார்கள்.

ஹெலன் நெல்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஓவியா, 2007 இல் தனது பதினாறாவது வயதில் சினிமாவில் நடிக்க வந்தார். மலையாளத்தில் ப்ரிதிவிராஜூக்கு ஜோடியாகக் கங்காரு என்ற படத்தில் அறிமுகமானவர், 2010இல் தமிழில் களவாணி படத்தில் அறிமுகமானார். மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்கப் பயமேன் போன்ற சிறு பட்ஜெட் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், அவர் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் பெறாத புகழை , பிக் பாஸில் பத்து நாட்களில் பெற்று விட்டார்.

அவரது நேர்மை, வெளிப்படையான பேச்சு, அன்புடன், பரிவுடன் பழகுவது, காலை எழுந்தவுடன் உற்சாகமாக ஆட்டம் போடுவது, மழை வந்து விட்டால் தயங்காமல் சென்று நனைந்து விட்டு வருவது, எரிச்சலடையும் சமயங்களில் அந்த இடத்தை நகர்ந்து விடுவது, கோபமான சந்தர்ப்பங்களில் "நீங்க ஷட்டப் பண்ணுங்க” என்று ‘மரியாதை'யுடன் எதிர்ப்பைத் தெரிவிப்பது, தனக்கெதிராக மொத்த குழுவும் இருக்கும் போது அவர்களைத் தைரியமாக எதிர்கொள்வது, தேவைப்பட்டால் தயங்காமல் மன்னிப்பு கேட்பது என ஓவியாவின் பண்புகள் அனைத்தும் பார்வையாளர்களைக் கவர்ந்து விட்டது. ஓவியா ஆர்மி, ஓவியான்ஸ், ஓவியா வெறியர்கள் என்று விதவிதமாகப் பெயர்களில் இவரது ரசிகர்கள் வலைத்தளங்களில் வலம் வருகிறார்கள்.

ஒரு நாள் சக்தியும் ஓவியாவும் ஒரு வாக்குவாதத்தில் இருக்கிறார்கள். ஓவியா மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறார். நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த சக்தி கோபத்தில் ‘அறை விடுவேன்’ என்றவாறு கையை ஓங்க, ‘எங்க அடி பார்க்கலாம்’ என்று எழுந்து வந்து அவரது முகத்திற்கு நேராக வந்து நின்றார் ஓவியா. சக்தி தான் இரண்டு அடி பின் செல்ல வேண்டி இருந்தது. தளபதியில் வரும் ‘தொட்றா பார்க்கலாம்’ சீன் போல இருந்தது. இன்னொரு முறை, அங்கிருந்த திரையில் ஜூலி சொல்லிக்கொண்டிருந்தது பொய் என்று நிரூபணம் ஆகிக்கொண்டிருந்த சமயம், எழுந்து ஜூலிக்கு ஒரு குத்து விடுவது போல் ஆக்ஷன் கொடுத்ததைக் கண்டு, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, டிவியில் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். அடுத்த நாள், தனது தனிமையை நினைத்துக் கண் கலங்கினால், பார்த்துக்கொண்டிருப்போரும் கலங்குகிறார்கள். இப்படி, ஒரு மாஸ் ஹீரோ இல்லாத குறையை ஓவியா தான் பிக் பாஸில் தீர்த்து வைத்துக்கொண்டிருக்கிறார்.

இது டிவி நிகழ்ச்சிக்கான நடிப்பல்ல. இது தான் அவரது இயல்பு என்று அவருடன் பழகியவர்கள் கூறுகிறார்கள். சென்ற வருடம் தனது தாயை கேன்சரில் இழந்தவர், அவரைக் காப்பாற்ற பலவாறு போராடி இருக்கிறார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து, தாயைக் காப்பாற்ற முயன்றவரால் அது முடியாமல் போய்விட்டது. இந்த வயதில் தனியாகச் சினிமா போன்ற ஒரு துறையில் தாக்குப் பிடிப்பவரால், பத்து பேரையா ஒரு வீட்டில் தாக்குப் பிடிக்க முடியாமல் போகப் போகிறது? தவிர, இந்த ஆட்டத்தின் விதிமுறையைப் புரிந்து கொண்டு, தனது இயல்பையும் மாற்ற தேவையில்லாத நிலையுடன் விளையாடுவதால், வாரா வாரம் தனது போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டாலும், மக்களால் பெருத்த ஆதரவு ஓட்டுகளால் அடுத்தடுத்த வாரங்களைச் சிரித்தவாறே கடக்கிறார்.

போகிற போக்கைப் பார்த்தால், ரஜினி, கமலை விட்டுவிட்டு ஓவியாவை தான் அரசியலுக்கு அழைப்பார்கள் போல உள்ளது. அரசியல்வாதிக்கே உரிய ஒரு பக்கத் திமிர், மற்றொரு பக்க அரவணைப்பு போன்ற தகுதிகளுடன் இருக்கும் நிலையில் அதிலும் ஜொலிப்பார் என்றே கருத வேண்டி உள்ளது. விஜய் டிவியில் நகைச்சுவை நடிகர்களை ரெடி செய்திருக்கிறார்கள், கதாநாயகர்களை ரெடி செய்திருக்கிறார்கள், இயக்குனர்களை ரெடி செய்திருக்கிறார்கள். கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால், ஒரு அரசியல்வாதியையும் ரெடி செய்து விடுவார்கள் போல் உள்ளது. ஓவியா தான், நமக்கு வாய்த்த அடுத்தப் புரட்சித் தலைவி என்றால், வேறென்ன செய்வது?

எது எப்படியோ, மனித மனங்களின் இயல்பான குணங்களை வைத்துக் கொண்டு, நமது வரவேற்பறையில் ஒரு புதுவித நாடகம் ஓடிக் கொண்டிருக்கிறது. இது வரையிலான காட்சிகளில் இதன் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியா, அதை இனியும் தொடர்வாரா அல்லது, பாஸின் திரைக்கதை பரமபத ஆட்ட மாற்றத்தில் கீழே விழுவாரா என்று தெரியாது. ஆனால், தற்போதைய சூழலில் தனது இயல்பான, நேர்மையான குணத்தால் மக்கள் மனதில் 'தி பிக் பாஸ்’ ஆக ஒரு நல்ல இடத்தைப் பிடித்து விட்டார் என்பது தான் உண்மை.

.

ராஜமெளலி - இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா?

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



எந்தவொரு மனிதனும் அவன் சார்ந்த பிராந்தியத்தில், மக்களின் மனங்கவர்ந்து வெற்றிகளைப் பெற்ற பின், தனது அடுத்த இலக்காகத் தனக்கான எல்லைகளை விரிவாக்க எண்ணுவான். அரசியலோ, சினிமாவோ அல்லது அது எந்தவொரு துறையாக இருந்தாலும் வளர்ச்சி என்பது இப்படியே அடையப்படும்.

சினிமாவிலும் இப்படி ஒரு மாநிலத்தில் பெயர் பெற்ற கலைஞர்கள், புகழ் ஏணியில் மேலும் ஏற, தங்கள் மாநில எல்லையைக் கடப்பார்கள். அதனால் தான், ஒரு மொழியில் நன்கு வெற்றியடைந்த ஹீரோக்கள், அடுத்துப் பக்கத்து மாநிலத்தைக் குறி வைப்பார்கள். தற்சமயம், ரஜினி படங்கள் தமிழ் ஆடியன்ஸ்களுக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. குறைந்தபட்சம், தெலுங்கு மக்களை மனதில் வைத்து அம்மாநிலத்தில் அறிமுகம் உள்ள நாயகிகள், வில்லன்கள் என அவர்களையும் படத்தில் சேர்த்து எடுக்கப்படுகிறது. ஷாருக்கான் போன்ற ஹிந்தி நடிகர்கள், தங்கள் படங்களின் வர்த்தகத்தைக் கூட்ட, தென்னிந்தியாவில் கடை விரிக்க ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் வந்து விடுகிறார்கள்.

இது நடிகர்களுக்கு உரித்தானது மட்டுமல்ல. படத்தின் முக்கியப் பணியான இயக்கத்தை ஏற்றிருக்கும் இயக்குனர்களுக்கும் பொருந்தும். தமிழில் தொடர் வெற்றிகளைப் பெற்ற பாலசந்தர், அடுத்துத் தெலுங்கு, ஹிந்திப் படங்களை எடுத்து, அங்கும் வெற்றிப் பெற்றார். மணிரத்னமும் தமிழ், தெலுங்கு வெற்றிகளைத் தொடர்ந்து மொத்த இந்தியாவுக்கான படங்களை எடுத்தார். அடுத்து வந்த ஷங்கர், முருகதாஸ் போன்றோரும் இப்படி மொத்த இந்திய மார்க்கெட்டையும் குறிவைத்து தான் தற்போது படங்களை எடுத்து வருகிறார்கள்.

இப்படி இந்திய அளவில் வெற்றியைக் கொடுக்கும் இயக்குனர்களைத் தான் இந்தியாவின் நம்பர் 1 டைரக்டர் என்று கமர்ஷியலாகக் குறிப்பிடுவார்கள். நடிகர், நடிகைகளைத் தாண்டி ஒரு இயக்குனருக்கான எதிர்பார்ப்பு இப்படி இந்திய அளவில் ஏற்படும் போது அவர்களை இந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் என்றழைப்பதில் ஏதும் தவறில்லை.

இந்த விஷயத்தில் தமிழக இயக்குனர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்கள். ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் வெற்றிப் பெற்ற போது, மணிரத்னம் நம்பர் 1 ஆக இருந்தார். முதல் ஐந்துப்படங்களின் மாநிலம் கடந்த வெற்றிக்குப் பிறகு, முதல்வன் படத்திற்குப் பிறகு, அப்படத்தை ஷங்கர் இந்தியில் நாயக் என்ற பெயரில் இயக்கினார். அந்தப் படத்தில் டைட்டில் கார்டில் இயக்குனர் பெயர் வரும் போது, ஒரு இயக்குனர் நாற்காலியின் பின்னணியில் 3 , 2 , 1 என்று ஒளிர்ந்து ஷங்கர் என்று பெயர் வரும்.

அந்தப் படம் தோல்வியடைந்தாலும், அக்காலக்கட்டத்தில் அவர் தான் நம்பர் ஒன் இயக்குனர். இன்னமும் அந்த ரேஸ்சில் அவர் இருக்கிறார் என்றாலும், 2000க்கு முன்பு போல் ஸ்ட்ராங்காக இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். 2.0 வரட்டும், பார்க்கலாம். முருகதாஸ் வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் ஹிந்தி கஜினி போன்ற இந்திய அளவிலான ஹிட்டை அதற்குப் பிறகு கொடுக்கவில்லை. தமிழ் ரசிகர்களால் விலங்குப் பட இயக்குனர் என்று கிண்டல் அடிக்கப்படும் மறைந்த இயக்குனர், தயாரிப்பாளர் ராமநாரயணன் அவர்கள் கூட இந்தியாவில் பல்வேறு மொழிகளில் படம் இயக்கியிருக்கிறார். அவை வெற்றிப் பெற்றாலும், அவை மாநிலம் கடந்து பேசப்படவில்லை. தவிர, அவை சிறு பட்ஜெட் தயாரிப்புகள் என்பதால், பெரிதாகக் கவனிக்கப்படவும் இல்லை.

இப்போது தெலுங்கு இயக்குனர் ராஜமெளலியின் வெற்றிக் காலம். இரண்டாயிரம் ஆண்டு ஸ்டுடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் தெலுங்குப் படவுலகில் அறிமுகமானார். ஜூனியர் என்.டி.ஆருக்குத் திருப்புமுனையாக அப்படம் அமைந்தது. அதன் பின்னர், சிம்மாத்ரி என்ற படத்தை மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து எடுத்து அடுத்த வெற்றியைக் கொடுத்தார். அதன் பிறகு, அவர் எடுத்த சை, சத்ரபதி, விக்கிரமார்க்குடு, எமதொங்கா என அனைத்தும் வெற்றிப் பெற்றன. இப்படங்களில் நிறைய மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன.

இதுவரை சராசரி கமர்ஷியல் படங்களை எடுத்து வந்தவர், மகதீரா என்ற சரித்திரம் கலந்த ஆக்ஷன் படத்தை 2009இல் சீரஞ்சிவியின் மகன் ராம்சரணை வைத்து இயக்கினார். இதற்கு முந்தைய படங்கள் அக்கம்பக்கம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்த வகையில் ராஜமௌலி மற்ற மாநிலத் திரைப்படத்துறையினருக்கு அறிமுகமாகியிருந்தார். மகதீராவிற்குப் பிறகு மொத்த இந்தியத் திரையுலகத்தையும் தன் பக்கம் பார்க்க வைத்தார் ராஜமௌலி.

ராஜமௌலியின் வெற்றிக்குப் பின்புலமாக அவரது தந்தை விஜேயந்திர பிரசாத். அவரது கதையைத்தான் ராஜமௌலி தொடர்ந்து கதையாக்கி வருகிறார். அப்பா - மகனும் மிகச் சிறந்த கதைச் சொல்லிகள். தந்தையின் பலமான கதையை, மிகச் சுவாரஸ்யமாகத் திரையில் காட்டுவது மகனுக்குக் கை வந்த வித்தை. மகதீராவில் ராஜாக்கள் காலத்தைத் திரையில் அவர் காட்டிய விதம், பார்ப்போரை வாய் பிளக்க வைத்தது. இச்சமயம், கிராபிக்ஷை எப்படிக் கையாளுவது என்பதிலும் ராஜமௌலி கில்லாடியாக உருவெடுத்தார்.

மகதீரா மிகப்பெரிய வெற்றிப்பெற்று, பெரும் புகழைக்கொடுத்தாலும், ராஜமௌலியை சீரஞ்சிவியின் குடும்பம் நடத்திய விதம், மகிழ்வைக் கொடுக்கவில்லை. படத்தை அவர்கள் குடும்பம் தயாரித்திருந்ததால், மொத்த வெற்றியையும் அவர்கள் குத்தகைக்கு எடுத்துச் சென்றனர். இதனால், ராஜமௌலி ஒரு முடிவுக்கு வந்தார். தனது அடுத்தப் படத்தில் முன்னணி கதாநாயகன் வேண்டாம். ஒரு காமெடியனை ஹீரோவாக நடிக்க வைத்து ஹிட் கொடுக்கிறேன் என்று சுனிலை ஹீரோவாக்கி ‘மரியாதை ராமண்ணா’ படத்தை இயக்கினார். மகதீரா போன்ற ஒரு படத்தை எடுத்துவிட்டு, சுனிலா என்று மொத்தச் சினிமா உலகமும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தது. படம் வந்த பிறகு, வழக்கம் போல் ராஜமௌலியைத் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

காமெடியனை ஹீரோவாக்கி ஹிட் கொடுத்தாயிற்று. அடுத்து, ஒரு ஈயை ஹீரோவாக்கி ஹிட் கொடுப்போம் என்று ஈகா படத்தைத் தொடங்கினார். 2012இல் தெலுங்கிலும், தமிழிலும் வெளியான இந்தப் படம், போட்ட தியேட்டரெங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் மூலம் ராஜமௌலிக்கு தமிழிலும் ரசிகர்கள் உண்டானார்கள். வி.ஃஎப்.எக்ஸ்.இல் புதுப் பரிமாணம் காட்டினார், ராஜமௌலி. தனது படத்திற்கு எந்தப் பெரிய ஹீரோவும் வேண்டாம், கம்ப்யூட்டரில் ஒரு ஈயை உருவாக்கி, அதையும் ஹிட்டாக்கி காட்டுவேன் என்று நிருபித்தார். இப்போது இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் நாற்காலி இவருக்குத் தயாரானது.

அடுத்து, எடுத்து வைத்த அடி தான் - பாகுபலி. 2015 இல் வெளிவந்த பாகுபலி முதல் பாகம், பிரமாண்ட வெற்றிப் பெற்றது. நவீன இந்தியாவின் அடையாளம் என்று இப்படம் புகழப்பட்டது. பெரும் நடிகர் பட்டாளம் இருந்தாலும், இது ஒரு ராஜமௌலி படம் என்று தான் பெருமை பேசப்பட்டது. இதற்குத் தானே ஆசைப்பட்டாய், ராஜமௌலி!!

இந்தாண்டு 2017 ஏப்ரல் 28ஆம் தேதி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியானது. படம் பார்த்த அத்தனை பேரும், தங்களது பெரும் எதிர்பார்ப்பைப் பல மடங்கு இப்படம் பூர்த்திச் செய்ததாகக் கூறி மகிழ்கிறார்கள். இந்தியச் சினிமாக்களின் அனைத்துச் சாதனைகளையும் இப்படம் அடித்து நொறுக்கும் என உறுதியாகக் கூறுகிறார்கள். பிரமாண்டம் என்றால் இதுவரை ஷங்கரைத் தான் கைக்காட்டுவார்கள். இப்போது, ராஜமௌலி.

ரஜினி, ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற டாப் ஹீரோக்களின் பட வசூலைச் சர்வசாதாரணமாக முறியடிக்கிறார் ராஜமௌலி. இன்றைய தேதியில், இந்தியச் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனர் யார் என்ற கேள்விக்குச் சந்தேகமில்லாமல் பதில் சொல்லிவிடலாம் - ராஜமௌலி என்று.

வெல்டன் ராஜமௌலி. வாழ்த்துகள்!!

.

Sunday, May 21, 2017

2016 - டாப் டென் பாடல்கள்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

பாடல்கள் பல தரப்புச் சமூகங்களிடம் எப்படி ஒருமித்த ரசனையை ஏற்படுத்துகிறதோ, அதுபோல் அவை ஒவ்வொருவருக்குமான தனி ரகசிய மொழியும் அழகும் கொண்டிருப்பவை. ஒருவர் கேட்டு ரசித்திராத ஒரு பாடல், இன்னொருவருக்கு மிகவும் நெருக்கமான உணர்வைக் கொடுக்கும்.
இங்கு உள்ளவை, எனது தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு, ரசனையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பத்துப் பாடல்கள். பிடித்த பாடல், நல்ல பாடல் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். அதனால், ஒரு சில விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறேன். எண்ணிக்கை, பத்து மட்டுமே. ஒரு படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே. மற்றபடி, வேறு எந்தக் கோட்டாவும் இல்லை. எந்த வரிசைக்கிரமமும் இல்லை.

உங்களுக்குப் பிடித்த ஏதேனுமொரு பாடல், இதில் இல்லையென்றால் மன்னிக்கவும். கீழே, கமெண்ட் பகுதியில் நீங்களும் பட்டியலிடுங்கள். நல்ல பாடல்களை, மற்றவரும் தெரிந்துக் கொள்ளலாம், அல்லவா?

ரஜினி முருகன் - உன் மேல ஒரு கண்ணு

இந்தாண்டு மட்டும் பத்துப் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் இமான். அவர் வேலையைச் சரியாகச் செய்தும், காலை வாரிய படங்கள் ஏராளம். ரஜினி முருகன், ஆல்பமாக, படமாக வெற்றியைக் கொடுத்த படம். உறவினரிடையே நடக்கும் சிறு நகரத்து வீட்டு விசேஷத்தின் பின்னணியில் அமைந்த காதல் பாடல். இமானின் ஆஸ்தான கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல். சிவகார்த்திக்கேயனும், கீர்த்திச் சுரேஷும் இப்பாடலில் ஆங்காங்கே கொடுத்திருக்கும் எக்ஸ்ப்ரேஷனால், எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பைக் கொடுக்காத பாடல்.

“சொல்லாம கொள்ளாம மூடி வச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட
அள்ளாம கிள்ளாம நோக வச்சு என்ன
முன்னாலும் பின்னாலும் முணங்க விட்ட”

https://www.youtube.com/watch?v=nngwP1WWva4

சேதுபதி - கொஞ்சி பேசிட வேணாம்

சேதுபதி படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், மணமான, குழந்தைகள் உடைய தம்பதிகளிடையே இருக்கும் மெல்லிய ஊடல் கலந்த காதலை, பிரிவைச் சொல்லிய பாடல். பாடலுக்கு இசையமைத்தவர், நிவாஸ் கே. பிரசன்னா. பாடியவர்கள், சித்ராவும், ஸ்ரீராம் பார்த்தசாரதியும். மறைந்த கவிஞர் .முத்துக்குமார் எழுதிய பாடல் இது. கேட்க மட்டுமில்லாமல், விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் காணவும் நன்றாக இருக்கும் பாடல்.

“தனிமை உன்னைச் சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?”

https://www.youtube.com/watch?v=foi_2Id7uaw

கபாலி - மாய நதி

ரஜினி படத்திற்குச் சந்தோஷ் நாராயணன் இசை என்றதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. முதலில் வெளிவந்த 'நெருப்புடா', அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் அதிகம் கூட்ட உதவியது. ஆனால், படத்தில் இருந்த மற்ற பாடல்களால் ரஜினி ரசிகர்களை, அந்த அளவுக்குக் கவர்ந்திழுக்க முடியவில்லை என்றே சொல்லலாம். பொதுவான இசை ரசிகர்களுக்கு 'மாயநதி' பிடித்த மெலடியானது. ரஜினி என்பதற்காகத் தனது பாணியை மாற்றாமல், அவரது ஸ்டைலிலேயே இசையமைத்தது, சந்தோஷிற்குப் பாராட்டையும், கூடவே கொஞ்சம் திட்டையும் கொடுத்தது.

“ஆயிரம் கோடி முறை நான் தினம் இருந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்”

https://www.youtube.com/watch?v=9cHXA6l4e4Q

ஒருநாள் கூத்து - அடியே அழகே

'ஒருநாள் கூத்து'ப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், படத்தைப் போலவே ஆரவாரமில்லாமல் மனதைக் கவர்ந்தது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில், விவேக் எழுதிய பாடல் வரிகளைப் பாடியவர்கள், ஷான் ரோல்டனும், பத்மலதாவும். காதலர்களிடையே இருக்கும் தயக்கம், குழப்பம், கோபம், வலி போன்றவற்றை அழகாகப் பதிவு செய்தப் பாடல்.

“போனாப் போறா தானா வருவா மெதப்புல திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப்போச்சு பொசுக்குனு ஒடஞ்சேன்”

https://www.youtube.com/watch?v=SDAMyv1hbCo


இறுதி சுற்று - ஏய், சண்டக்காரா

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த சுதா அவர்கள் இயக்கி தமிழிலும், இந்தியிலும் வெளியாகிய 'இறுதி சுற்று'ப் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலின் வரிகள், ரொம்பவும் எளிமையானது. அது போலவே, இசையும் பாடிய குரலும். ஆனாலும், ஒரு எளிய பெண்ணின் காதலுக்குப் பொருத்தமாக அமைந்தது. சந்தோஷ் நாராயணனால் ஒரு படத்தின் வண்ணத்தை மாற்ற முடிகிறது. ஆயிரம் முறை பார்த்த சிச்சுவேஷனுக்கும், தனது தனித்துவ இசையால் புதுமையைப் புகுத்த முடிகிறது. இன்னொரு எளிய ட்யூனான 'வா மச்சான்' பாடலும், இப்படத்தில் வெகுஜன ஹிட் ஆனது.

“சிறு ஓடையில் ஒரு ஓரமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உனைப் பாத்ததும் வழியோரமா
உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா”

https://www.youtube.com/watch?v=ywaT2bNkDcg

தெறி - ராங்கு

நடிக்கச் சென்ற பிறகு, ஜி.வி. பிரகாஷ் முத்திரை பதித்த பாடல்கள் என்று சொல்லுவதற்கு அதிகம் இல்லாமல் போனது. இந்த வருடத்தில் அவருடைய பெரிய ஹிட் என்றால் தெறி தான். அதற்கு அவரை மட்டும் காரணம் சொல்ல முடியாது. பாடலாசிரியர், பாடகர் தவிர்த்து, இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், நடிகர்கள், நடன ஆசிரியர் என்று பலரது கைவண்ணத்தில் இப்படப் பாடல்கள் வெற்றியடைந்தன. இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் என்றாலும், என்னைக் கவர்ந்தவை ஈனா மீனா டீகாவும், ராங்கு பாடலும் தான். லிஸ்டில் ஒரு குத்துப்பாட்டிற்கு இடம் கொடுக்கலாம் என்று நம்ம தல டி.ராஜேந்தர் பாடிய 'ராங்கு' பாடலைச் சேர்த்திருக்கிறேன். மனிதர் பேசினாலும், பாடினாலும் கலகலப்பிற்குப் பஞ்சமிருக்காது.

“கண்ண குழி
பொண்ணு நான்தானே.
பல்லாங்குழி
ஆடு நீதானே”

https://www.youtube.com/watch?v=AwMSJlNkOUg

பிச்சைக்காரன் - நெஞ்சோரத்தில்

ஒரு துறையில் நன்றாகப் பேரெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவர், ஏதோ ஒரு காரணத்தால் இன்னொரு துறைக்கு மாறிச் சென்றால், பெரும்பாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சும். விஜய் ஆண்டனி விதிவிலக்கு. தனக்கேற்ற நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இசையிலும் குறை வைப்பதில்லை. ஒரே குறை, இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டது தான். இந்த வருடம் அவர் கொடுத்த ஹிட் படமான பிச்சைக்காரனில் சுப்பிரியா பாடிய "நெஞ்சோரத்தில்", இசையமைப்பாளராக அவர் வெற்றிக் கொண்ட பாடல். ஆனால், இதை விடத் தயாரிப்பாளராக அவர் பெற்ற வெற்றியே பெரிது. இப்பாடலை எழுதிய கவிஞர் அண்ணாமலை இந்தாண்டு மறைந்தது, விஜய் ஆண்டனிக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் இழப்பு.

“உன் கைகள் தொட்ட இடம் பார்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் “

https://www.youtube.com/watch?v=guaGqSR4QE4

தர்மதுரை - மக்கா கலங்குதப்பா

யுவன், "ரீ என்டரி'ன்னு சொல்லாதீங்க, நான் இங்க தான் இருக்கேன்" என்று சொன்னாலும், உண்மையில் இந்தாண்டு வெளிவந்த தர்மதுரையை அவரது ரீ-என்ட்ரியாகக் கருதலாம். இந்தத் தலைமுறை இசையமைப்பாளர்களிலே கிராமத்து இசையை, அதன் அசல் தன்மையின் நெருக்கத்துடன் ரசிக்கும் படி தருவது யுவன் தான் என்று உறுதியாகச் சொல்ல முடியும். "மக்கா கலங்குதப்பா" அதற்கு நல்ல ஒரு உதாரணம். வைரமுத்து எழுதி, மதுரையைச் சேர்ந்த கும்மிப்பாட்டுக் கலைஞர் மதிச்சியம் பாலா பாடிய இப்பாடல், இந்த வருடம் பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. படத்தின் மற்ற பாடல்களும் சிறப்பாகவே வந்திருந்தன.

https://www.youtube.com/watch?v=OxDKZ6WfD7M

ரெமோ - தமிழ்செல்வி

இந்த வருடம் அனிருத்திற்குச் சுமாரான வருடம் தான். பெரிய ஹிட் ஆல்பம் என்று எதையும் சொல்ல முடியாது. ரெமோ தான் அவருக்கு ஆறுதலாக அமைந்த படம். இந்தப் பாடலின் படமாக்கம், பாடலிற்குப் பலமாக அமைந்தது என்று சொல்லலாம். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ராஜு சுந்தரம் நடனம் என்று சீனியர்ஸ் பங்களிப்பு, பாடலின் தரத்தை மேலும் உயர்த்தியது. சிவகார்த்திக்கேயன் - கீர்த்திச் சுரேஷ் ஜோடிக்கு இது வருடத்தின் இரண்டாவது ஹிட்.

“ஒரு வாட்டி நீ சொல்லிப் பாரு
உசுர உனக்கே எழுதி தரேன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோடு மனசு சிங் ஆனா போதும்”

https://www.youtube.com/watch?v=PAhTLB1LBR0


அச்சம் என்பது மடமையடா - அவளும் நானும்

பாரதிதாசன் பாடல்கள் இசை நயம் கூடியது என்று சொல்லுவார்கள். இந்தப் பாடலைக் கேட்டால், அது புரியும். எத்தனை வருடங்கள் ஆனாலும், அதில் இருக்கும் நவீனம் தெரியும். 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, விஜய் ஜேசுதாஸ் பாடிய இப்பாடல், மெல்லிய மெலடி என்றால், சித் ஸ்ரீராமின் 'தள்ளிப் போகாதே' ஒரு அதிரடி மெலடி . அது என்ன டைப் என்கிறீர்களா? அது தான் ரஹ்மான்.

“நானும் அவளும்.. உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்”

https://www.youtube.com/watch?v=LKelAJrI3e0

இவை தவிர, உன்னைப் பார்த்தா போதும் (அழகு குட்டி செல்லம்), அழகே நீ அசைந்தால் (கதகளி), குச்சி மிட்டாய் (அரண்மனை 2), அவள் குழல் (மனிதன்), அடடா (தொடரி), சல்மார் (தேவி), கண்ண காட்டு போதும், கண்ணம்மா (றெக்க), இளந்தாரி (மாவீரன் கிட்டு), மெய் நிகர, நான் உன் (24), நீ கிடைத்தாய், சொப்பனச் சுந்தரி (சென்னை 600028 - 2) போன்ற பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த வரு,டம் வந்த பாடல்களைக் கவனித்துப் பாருங்கள். நிறைய இளம் இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை அளித்திருக்கிறார்கள். பரவலாகத் திறமை, திறமைக்கேற்ற வாய்ப்பு, கிடைத்த வாய்ப்பில் முத்திரை என ஆரோக்கியமான சூழல் 2016ல் இருந்திருக்கிறது. இது போல், இளம் கலைஞர்களும், மூத்த கலைஞர்களும், தொடர்ந்து நம் தமிழ் திரையிசை ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் சூழலே, நமது அடுத்தடுத்த ஆண்டுக்களுக்கான எதிர்பார்ப்பு.

.

ரெமோ

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.




வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, டப்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது.
தமிழர்களுக்கு ஒரு நடிகர் பிடிக்க வேண்டுமென்றால், அவர் நன்றாக நடித்தால் மட்டும் போதாது. அவரைப் பற்றி நேர்மறையான செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சாதாரண நிலையில் இருந்து உயர்ந்து முன்னணிக்குச் செல்கிற பிரபலம் என்றால் ரொம்பவே பிடித்துவிடும். அப்பிரபலங்களைத் தங்கள் வீட்டுச் சொந்தங்களாகவே எடுத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நடிகர்களுக்குத் தங்கள் முழு ஆதரவைக் கொடுப்பது வரை, நடிகர்களுக்குச் சந்தோஷம். இந்த ஆதரவு முற்றிப்போய், அடுத்த கட்டமாக ஒரு உரிமையுடன் "ஏன் வெள்ள நிவாரணத்திற்குக் காசு கொடுக்கவில்லை?", "ஏன் அவர் வீட்டு விசேஷத்திற்குக் கூப்பிட்டு விருந்து கொடுக்கவில்லை?" என்று கேள்வி கேட்கும் நிலைக்குச் சென்று விடுவார்கள். இந்த நிலை வரும்வரை ஜாலி தான். சிகாவுக்கு, இப்ப ஜாலி காலம்.
அதென்ன சிகா? ரெமோவில் அவருக்கு டைட்டில் கார்டில் 'SK' என்று பில்டப் டைட்டில் போடுகிறார்கள். சிவகார்த்திகேயனின் சுருக்கமாம். படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயரும் SK. அதனால், நாம் சிகா என்றழைக்கலாம் என்று முடிவு செய்தோம். கவனிக்க, சிகாவுக்குத் தனி டைட்டில் ஆரம்பித்துவிட்டார்கள். வளர்ச்சி!! வளர்ச்சி!!
படத்தில் சிகா ஒரு பெரிய கதாநாயகன் ஆக வேண்டும் என்னும் லட்சியத்தில், சத்யம் திரையரங்கு முன்னால் ரஜினிக்கு இருக்கும் 'கபாலி' பேனர் போல் தனக்கும் வைக்க வேண்டும் என்ற ஆசையில், நாடகங்களில் நடித்துக்கொண்டு, சினிமா வாய்ப்பு தேடுகிறார். அச்சமயம், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நர்ஸ் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடுகிறார். (நம்புற மாதிரி இல்லைல? அந்தளவுக்கு இது லாஜிக் தேடுற படம் இல்லை!!) அங்கு, கமலைப் போல், வெளிநாட்டு ஒப்பனைக்காரரின் உதவியுடன் ஹைடெக் மேக்கப் போட்டுக்கொண்டு செல்கிறார். (புதுமுகம், வெளிநாட்டு மேக்கப்பா? ப்ளீஸ், நோ லாஜிக்). காதல் காட்சியில் சரியாக நடிப்பு வரவில்லை என்று விரட்டிவிடப்படுகிறார். அதே மேக்கப்பில், கீர்த்தி சுரேஷைச் சந்திக்க நேர, முன்பொரு முறை பார்த்தவுடன் காதல் வயப்பட்டவர், இப்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ரெமோ (ரெஜினா மோத்வானி) என்ற பெயரில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். கீர்த்தி சுரேஷ், ஏற்கனவே திருமணம் நிச்சயமானவர் என்று தெரிந்து, அதன் பிறகும் அவரைக் குழப்பி, ("பொண்ணுங்கள கண்ட்ரோல் பண்ணுறது தான் கஷ்டம், கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி" என்று ஒரு மீம்ஸ் ரகப் பஞ்ச் வேறு பேசி) எப்படித் திருமணம் வரை கொண்டு செல்கிறார் என்பது மிச்சக்கதை. அதை ஜாலியாகத் திரையில் காட்டியிருக்கிறார்கள். முடிவில், ரஜினி பேனர் இருந்த இடத்தில் அவர் பேனர் வருகிறது. (அதுவரை ஓகே, அந்தப் பேனருக்கு கீழே கபாலி பேனர் இருப்பதைக் காணும்போது தான், கொஞ்சம் நறநறவாகிறது!!)
சும்மா டைமிங் காமெடி, மிமிக்ரி பாட்டு, டான்ஸ் என்று ஒரு ஃபார்முலாவில் சென்று கொண்டிருந்தவர், தைரியமாக நர்ஸ் மேக்கப், பெர்ஃபார்மன்ஸ் என்று அடுத்த கட்டம் சென்றிருக்கிறார். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். மிமிக்ரி நன்றாகச் செய்வார் என்றாலும், இதில் பெரும்பாலும் பெண் குரலில் பேசி இருப்பது, அவரது மாற்றுக் குரல் திறமையை இன்னமும் எடுத்துக்காட்டுகிறது. சரியான டைமிங்கில் வரும் இரு சண்டைக்காட்சிகளும் உறுத்தாமல் இருக்கின்றன. எப்போதும் கை கொடுக்கும் பாடல்கள், இந்த முறை சிகாவை ஏமாற்றிவிட்டது எனலாம். ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், குழந்தை ரசிகர்கள், பெண் ரசிகைகள் எனச் சாமர்த்தியமாக அனைவரையும் கவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு நடித்திருக்கிறார்.
இவரது வழுவழு மேக்கப் முன்பு, கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் டல்லாகத் தான் தெரிகிறார். ஆனால், அவரது சிம்பிள் மேக்கப் + அழகான உடைகள், ரசிகர்களைக் கவருவதாக உள்ளன. அந்த பிங்க் பட்டுப் புடவை, பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் கவர்ந்து ஜொள்ளுவிடச் செய்யும். ஒப்பனைக் குழுவிற்கும், உடையலங்காரம் செய்த அனுவிற்கும் பாராட்டுகள்.
சிகா, கீர்த்தி இருவருமே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள். தான் ஏன் ஜீனியஸ் என ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காட்டியிருக்கிறார். ஒரு சாதா படத்தையும், பெரிய படமாகக் காட்ட பி.சி.யின் கேமரா போதும். ஒரு படம் அனிருத், அடுத்த படம் இமான் என்று தொடர் ஹிட்டுகளுடன் சென்று கொண்டிருக்கும் சிகாவுக்கு, இதில் அனிருத் ஏமாற்றத்தை அளித்து விட்டாரோ என எண்ணத்தோன்றும் வகையிலான பாடல்கள். ஆனால், பாடலில் விட்டதை, பின்னணி இசையில் பிடித்து விட்டார் எனலாம். ரொம்பவும் பொருத்தமான, படத்துடன் ஒன்ற வைக்கும் பின்னணி இசை. இந்தப் படத்திற்கு எதற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என்பதைத் தான் எவ்வளவு யோசித்தும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை, இந்தப் பின்னணி இசை நன்றாகக் கேட்டதற்கு அவர் தான் காரணமோ?
ஏற்கனவே நிச்சயம் ஆன பெண்ணைக் காதலித்துத் திருமணம் என்ற கதையையும் பார்த்திருக்கிறோம். பெண் வேடம் போட்டு ஹீரோயினை ஏமாற்றுதல் என்ற கதையையும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு தெரிந்த கதைகளையும் இணைத்து, ஒரு புதுக் கதையாக, தனது சாமர்த்திய காட்சியமைப்புகள் மூலம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர், பாக்யராஜ் கண்ணன். தான் ஒரு சரக்குள்ள இயக்குனர் என்பதைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். படத்தின் கதையை முதலிலேயே சொல்லிவிட்டு, அதுவும் அப்படி ஏற்கனவே சொல்லி படமெடுத்த எஸ்.ஏ.சூர்யா வாய்ஸிலேயே சொல்லி படத்தை ஆரம்பித்து, சலிப்பேதும் இல்லாமல் படத்தைக் கொண்டு சென்றதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். இறுதியில் தான் கொஞ்சம் இழுவை ஃபீலிங். மற்றபடி, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு ஜாலி காமெடி படம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். குழந்தைகளைக் கவர் பண்ணும் வகையிலும் ஒரு சில காட்சிகளை அமைத்து, அதையே இறுதியில் செண்டிமெண்டாகப் பயன்படுத்தியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம்.
நோ லாஜிக், ஒன்லி மேஜிக் என்று அவர்கள் படமெடுத்துவிட்டாலும், திரைப்படங்கள் சில கருத்துகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்வையாளர்களிடம் பதியச் செய்யும் வல்லமை கொண்டவை என்பதில் நமக்கு நம்பிக்கை உண்டு என்பதால், இப்படம் குறித்த சில பார்வைகளைப் பகிரத் தேவையாக இருக்கிறது. வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர், ஊர்ப் பெரிய மனிதர் பெண்ணை விரட்டிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்வார். தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள், கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் போட்டுக் கொண்டு உயர்சாதி பெண்களைத் தொடர்ந்து பின்னால் சென்று காதலித்துத் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள் என்று சில சாதியக் குரல்கள் எழும்பிய நேரம் அது. அந்த வாதம் உண்மை தான் என்பது போல் எடுக்கப்பட்ட படமாக அது இருந்தது. காமெடிப் படம் என்னும் போர்வை போர்த்திக் கொண்டால், யாரும் எதையும் யோசிக்கவில்லை. முதல் படமான மெரினாவில் இருந்து முந்தைய படமான ரஜினிமுருகன் வரை சிகாவின் படங்களைத் தொடர்ந்து கவனித்தால், இளைஞர்களின் பெண் குறித்த பார்வையில், தவறாக முன்னுதாரணங்களைக் காட்டும் பாத்திரங்களாகவே இருக்கின்றன. அதை ஜாலியாகக் காட்டுவதால், பார்ப்பவர்களும் லைட்டாக எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இப்போது, ரெமோவில் சிட்டி காதல் என்ற வகையில் நிச்சயமான டாக்டர் பெண்ணைக் குழப்பிக் காதலிக்கச் செய்வதும் நல்ல லட்சியமே என்று படமெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தோதாக, திரைக்கதை விதியின்படி நிச்சயம் செய்த மாப்பிள்ளையை வில்லனாக ஆக்கிவிட்டார்கள். இல்லாவிட்டால், காமெடியனாகக் காட்டியிருப்பார்கள். ஏற்கனவே, ஹீரோ காமெடி செய்து கொண்டிருப்பதால், அதுவே போதும் என்று நினைத்திருக்கலாம். இப்படியான படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால், அவருடைய பாதையும் அதே வழியில் செல்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் வரும் கதைகளுக்கும், வசனங்களுக்கும் பெண்கள் உட்பட மக்கள் கொடுக்கும் ஆதரவு குறித்துத் தான் நாம் கவலைக்கொள்ள வேண்டியதாக உள்ளது. குடும்பத்துடன் காணும் வகையில் ஆபாசம் இல்லாத, வன்முறை இல்லாத படங்களில் நடித்தாலும் (புகை இல்லை, ஆனால் மது உள்ளது), இது மாதிரி கதையம்சங்களையும் சிகா கருத்தில் கொள்ள வேண்டும்.
மற்றபடி, அவ்வளவு யோசிக்க வேண்டாம் பாஸ், ஊர்ல நடக்காததையா காட்டுறாங்க? என்பவர் எனில், ஒரு நல்ல டைம்பாஸ் என்று சொல்லி, ரெமோவை ஒருமுறை ஜாலியாகப் பார்த்து விட்டு வரலாம்.
டெயில்பீஸ்
இந்தப் படத்தை ஆப்பிள்வேலி கார்மைக் (Applevalley Carmike Cinemas) திரையரங்கில் கண்டோம். நாம் இருந்த வரிசைக்கு முன் வரிசையில், ஒரு அமெரிக்க மத்திய வயதுத் தம்பதியினர் வந்து அமர்ந்தனர். வேறு அரங்கிற்குச் செல்ல நினைத்து, தவறி இங்கு வந்துவிட்டனரோ என்று முதலில் எண்ணினோம். ஆனால், திரையில் படம் தொடங்கியும், எவ்வித ஜெர்க்கும் இல்லாமல் படத்தைப் பார்க்க, அவர்கள் சரியாகத் தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. படம் முழுவதையும் ரசித்து, சிரித்துப் பார்த்தார்கள். படத்தின் சப்-டைட்டில் வசனத்தைப் புரிந்து கொள்ள உதவியிருக்கும். அது இல்லாமலும், படத்தை ரசித்திருப்பார்கள் எனத் தோன்றியது. சில இந்திய, தமிழ்நாடு சார்ந்த நடைமுறைகளை விநோதமாகக் கவனித்தனர். தமிழ் ரசிகர்கள் கைத்தட்டி சிரித்த வெகு சில வசனங்களை மட்டும் புரிந்து கொள்ள முடியா விட்டாலும், முழுப்படத்தையும் உட்கார்ந்து ரசித்துப் பார்த்து விட்டுச் சென்றனர். படம் முடிந்து வெளியே வரும் போது நாம் கேட்டதற்கு, தங்களுக்குப் படம் மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினர். அட, ரெமோவிற்கு இண்டர்நேஷனல் ஆடியன்ஸும் இருக்காங்கப்பா!!!

.

Friday, September 23, 2016

அறுந்த ஆனந்த யாழ் - நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்து கொள்கிறார்
2000 ஆம் ஆண்டில்  டீன்-ஏஜைக் கடந்தவர்களுக்கு, தங்களுக்கான இளமை, காதல், சோகம், பாசம் போன்ற உணர்வுகளைப் பாடல்களாக வார்த்தெடுத்துக் கொடுத்தவர், கவிஞர் நா. முத்துக்குமார். அதனாலேயே, நா. முத்துக்குமார் மறைந்த செய்தியை ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கேட்டபோது, அது இத்தலைமுறையினருக்குப் பெரும் இழப்பைக் கொடுப்பதாக இருந்தது.
1975இல் காஞ்சிபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தார். அந்தச் சோகம் தனது மகன்களை எந்த நிலையிலும் வாட்டக்கூடாது என்று நினைத்த அவரது தந்தை, அதன் பிறகு, அவர்களை எந்த விழாக்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்துச் செல்லாமல், தனக்கிருந்த புத்தகம் மீதான காதலைத் தனது புத்திரர்களுக்கும் புகட்டினார். இதனால், முத்துக்குமாருக்குச் சிறு வயதிலேயே புத்தகங்களுக்குடனான சினேகம் பிறந்தது. புத்தகங்களுடனே வாழ்ந்த முத்துக்குமாருக்கு இயல்பிலேயே தமிழார்வம் மிகுந்து இருந்ததால், தனது இளம் பருவத்தில் இருந்தே கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.
கல்லூரிக் காலத்தில் அவர் எழுதிய ‘தூர்’ என்ற கவிதை, எழுத்தாளர் சுஜாதாவைக் கவர, அவர் ஒரு விழாவில் அதைப்பற்றிப் பேச, அந்த நிகழ்ச்சியில் முத்துக்குமாரும் இருக்க, எழுந்து நின்று தான் தான் அந்தக் கவிதையை எழுதிய முத்துக்குமார் என்று சுஜாதாவிடம் கூறியிருக்கிறார். உடனே, சுஜாதா அவரை மேடைக்கு அழைத்துக் கௌரவித்திருக்கிறார். தந்தை கிணற்றில் தூர் எடுக்கும் அனுபவத்தை வைத்து எழுதிய கவிதை அது.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்த கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!
அப்போது சுஜாதா அவரிடம் கூறிய வார்த்தைகள், "சினிமா உங்களை விழுங்கி விடாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன்". அந்த வேண்டுதலுக்குப் பலனில்லாமல் போனது.
இருபத்து இரண்டு வயதில் அவர் எழுதிய ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகத்தில் தனது இளம் பருவ அனுபவங்களைக் கவிதைகளாக எழுதி கவிஞராக பெயர் எடுத்தார்.
”சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய்ச் சொல்வது
வீடு மாற்றுவதை?”
கவிதைகளில் புகழ் பெற்றவர், பிறகு சென்னை வந்து, கவிஞர் அறிவுமதியுடன் தங்கி, இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். 2000ஆவது ஆண்டில் சீமான் இயக்கிய “வீர நடை” படத்தில் தனது முதல் பாடலை எழுதி, பாடலாசிரியராகத் தனது திரையுலக வாழ்வைத் தொடங்கினார். அதில் தொடங்கிய அவரது ஓட்டம், தடையில்லாமல் வேகமெடுத்தது. விரைவிலேயே, தமிழ் சினிமாவில் அதிகப் பாடல்கள் எழுதும் பாடலாசிரியராக ஆனார்.
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !
ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான படங்களில் பாடல்கள் எழுதுபவர், வருடக்கடைசியில் அந்தக் கணக்கையும் தவறாமல் அறிக்கையாக வெளியிடுவார். எதற்கு இதெல்லாம் என்று நினைத்தவர்கள் கூட, இனி அதைக் காண முடியாதே என்று வருந்தும் நிலை இப்போது. 16 வருடங்களில் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான பாடல்களை எழுதியவர், 2013 ஆம் ஆண்டும், 2014 ஆம் ஆண்டும் தொடர்ச்சியாகத் தங்க மீன்கள், சைவம் படங்களுக்காக தேசிய விருது பெற்றார். பாடல்களின் கணக்கு, அவருடைய பாடல் வரிகளின் தரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவருக்கான விருதுகள், இனி காலம் முழுக்கக் காத்திருக்க வேண்டியது தான்.
“ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழிதேடி வந்தது.. அதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது..” என்று காதலுக்கு எழுதிய வரிகளும், “பிரித்துப் படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்குப் பெண்ணே... உன்னால் தானே நானே வாழ்கிறேன்…” என்று பிரிவின் வலியைச் சொல்லும் வரிகளும், “நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணம் நினைக்கின்றதா” என்று நட்பின் இழப்பைப் பேசிய வரிகளும், “அடி கோயில் எதற்குத் தெய்வங்கள் எதற்கு... உனது புன்னகை போதுமடி…” என்று மகள்களைப் பெற்ற அப்பாக்களின் மனதைப் பேசிய வரிகளும், “தலையணைப் பூக்களில் எல்லாம் கூந்தல் மணம் வருதா?” என்று துணையின் பிரிவைப் பாடிய வரிகளும் முத்துக்குமாரின் நினைவை என்றும் நமக்கு அளித்துக்கொண்டு தான் இருக்கும்.
ஒரு படைப்பாளியாக இல்லாமல், ஒரு மனிதனாகவும் தன்னைச் சுற்றி இருந்தவர்களின் மனங்கவர்ந்தவராக இருந்தவர், நா. முத்துக்குமார். எப்போதும் தனது சக கவிஞர்களிடம் நட்பு பாராட்டியே வந்தவர், தனக்கு மூத்தவர்களிடமும் மரியாதையுடன் நல்ல உறவு பேணியே வந்தார். கவிஞர் வைரமுத்துப் போன்றவர்களே, இவர் மரணத்தின் போது கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து போனார்கள். யார் மனமும் புண்படாதவாறு பேசுபவர், எங்கும் அதிர்ந்து பேசாதவர் என்று இருந்தவரின் மரணம், அனைவரையுமே காயப்படுத்தியிருக்கும்.
இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்
முத்துக்குமார் போன்றவரின் மரணம், இக்கால இளைஞர்கள் தங்கள் உடல் நலன் மேல் கொண்டிருக்கும் அக்கறை குறித்தும் யோசிக்க வைக்கிறது. முத்துக்குமாரின் மரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அதன் மீதான விவாதம் அந்த மனிதனை இழிவுப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாது என்ற கவனமும் அவசியமாகிறது. வேலையின் மீதான கவனம், உடல்நலன் மீதும் அதே அளவில் இருக்க வேண்டும் என்பதை முத்துக்குமார், இத்தலைமுறை இளைஞர்களுக்கும், முக்கியமாகக் கலைஞர்களுக்கும் தனது மரணத்தின் மூலம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம். முத்துக்குமாரை இழந்து வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


.

கபாலி கபளீகரம் - திரையிலும், திரைக்கு அப்பாலும்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை



பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் “கபாலி” திரைப்படம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பது தான் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சென்றவர்களின் பதிலாக இருக்கிறது. அதே சமயம், எவ்வித ரஜினிமேனியாவிலும் தாக்குப்படாமல், படம் பார்க்கச் சென்றவர்களுக்கு, படத்தின் சில அம்சங்கள் பிடித்திருக்கின்றன. இது தவிர, பலவித அரசியல் காரணங்களுக்காகச் சிலருக்குப் படம் பிடித்திருக்கிறது. சிலருக்குப் படம் பிடிக்கவில்லை. எவ்வித அரசியலுக்குள்ளும் நுழையாமல், ஒரு சினிமாவாகக் கபாலி எப்படியிருக்கிறது?
தமிழ்த் திரைப்படங்களில், உலகளாவிய அளவில் இந்த அளவுக்கு எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்ட படம் வேறு எதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. ரஜினி+ரஞ்சித் என்று தானாகவே கிளம்பிய எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படம் வெளியீட்டுக்குத் தயாராகிய நேரத்தில், படத்தின் தயாரிப்புக்குழு பல்வேறு வகைகளில் உருவாக்கிய எதிர்பார்ப்பு, மற்றொரு பக்கம் பெரும் அலையாக எழுந்தது.
படம் பார்த்த பிறகு, படக் குழுவினர் தவறான எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டார்களோ எனத் தோன்றுகிறது. என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இந்தப் படத்தின் கதை, ஒரு மலேசிய தமிழ் டானின் கதை. மலேசியத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களின் தலைவராக உருவாகும் ரஜினிகாந்த், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து, மலேசிய அரசியலையும், வணிகத்தையும் ஆட்டிப் படைக்கும் பல குழுக்களில் ஒரு குழுவின் தலைவராக இருக்கும் நாசரின் இடத்தை, அவரது மரணத்திற்குப் பிறகு அடைகிறார். எதிர்க் குழுவின் சூழ்ச்சியால், தனது கர்ப்பிணி மனைவியை இழந்து, சிறைக்குச் செல்கிறார். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, சிறையில் இருந்து வெளிவரும் அவர் எப்படித் தனது குடும்பத்தைக் கண்டு அடைந்து, எதிரிகளை வெல்கிறார் என்பது தான் கபாலியின் சுருக்கமான கதை.
படத்தில் ரசிகர்களைக் கவரும் விஷயங்கள் என நிறையப் பட்டியலிடலாம். ரஜினியின் ஜெயில் ரிலீஸ் என்ட்ரியும் பறவைக்கடை சண்டைக் காட்சியும், அவரது மாஸ் ரசிகர்களுக்குக் கிடைத்த உடனடித் தீனி. பிரிந்த மனைவியை நினைத்து வாடும் காட்சிகளும், அவரைத் தேடி மகளுடன் செல்லும் காட்சிகளும், ரஜினியிடம் நல்ல நடிப்பை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கும். ரஞ்சித், ரஜினியை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார் எனக் காண வந்தவர்களுக்கு, ரஜினி ஆங்காங்கே பேசும் வசனங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். படம் பார்த்த அனைவரையும், ஒரு முழுமையான சினிமாவாக, ஒரு சேரக் கவரவில்லை என்பது தான் குறை.

இந்தப் படத்தின் திரைக்கதை, கபாலி என்ற டானின் பிரிந்த குடும்பக் கதையையும், அவரது எதிரிகள் கொடுக்கும் சிக்கல்கள் சேர்த்த ஆக்ஷன் கதையையும் ஒன்றாக இணைத்துச் செல்கிறது. படத்தின் முதல் பிரச்சினை இங்கு தொடங்குகிறது. ஜெயிலில் இருந்து வெளிவரும் கபாலி, எதிரிகள் அணிக்குள் ஒரு அதிரடி அட்டாக் கொடுக்கிறார். இந்தக் காட்சிகள் பரபரப்புடன் வேகமாகச் செல்கின்றன. பிறகு, தான் இழந்ததாக நினைத்த தனது மனைவியும், மகளும் உயிருடன் இருப்பதை அறிந்து, அவர்களைத் தேடி செல்கிறார். இந்தக் காட்சிகள் உணர்வு பூர்வமாக மெதுவாகச் செல்கின்றன. இக்காட்சிகளில், ரஜினியும், ராதிகா ஆப்தேவும் மிக நிறைவாக நடித்திருக்கிறார்கள் என்றாலும், மெதுவாக நகரும் காட்சித் தொகுப்புகள், தொடர்ந்து பரபரப்பான திரைக்கதையை எதிர்பார்த்து வந்த FDFS (முதல் நாள் முதல் காட்சி) ரசிகர்களை நெளிய வைக்கிறது. முக்கியமாக, சென்னை, பாண்டிச்சேரி காட்சிகளின் படு ஸ்லோவான வேகம், திரைக்கதைக்கு என்ன வித ஆதாயத்தை அளிக்கிறது என்று அமைத்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னொரு பக்கம், மலேசிய தமிழர்களின் உலகமும், அங்கிருக்கும் ரவுடிகள் உலகமும் அன்னியமாகவும், செயற்கையாகவும் இருப்பதாக ஒரு உணர்வை அளிக்கின்றன. மலேசிய ரசிகர்களுக்கு இக்காட்சிகள் நெருக்கமாக இருக்கலாம். யாரும் தொடாத மலேசியத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பின்னணியாக வைத்து படமெடுத்து இருப்பதைப் பாராட்டலாம் என்றாலும், அது சரியான அழுத்தத்துடன் பதியப்படவில்லை என்பதையும் குறையாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மலேசியத் தமிழும் ஆங்காங்கே புரிபடாமல், நாமாகவே ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. மலேசியத் தமிழர் வரலாற்றுக்காக ரஞ்சித் நிறைய உழைத்திருக்கலாம். ஆனால், அதைச் சராசரித் தமிழ் ரசிகன் சரியாக உள்வாங்கும் விதத்தில் காட்சிகளை அமைக்காததால், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
படத்தின் இறுதியில் ‘இணைத்திருக்கும்’ கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சி, திரைப்படத்துடன் ஒட்டவில்லை. ஒரு இம்பாக்ட்டையும் கொடுக்க வலுவில்லா செயற்கைத் தோரணம். வில்லனின் சாம்ராஜ்யத்தை இருந்த இடத்தில் இருந்தே அழிக்கிறார் கபாலி. ரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்றால், இது முழுமையான ரஜினி படமாகவும் வரவில்லை, இயக்குனர் ரஞ்சித்தின் நேர்மையான சமூகப் பார்வை கொண்ட படமாகவும் வரவில்லை என்பதே சோகமான உண்மை. இந்தக் கமர்ஷியல் கிளைமாக்ஸ் முடிந்த பிறகு, இயக்குனர் ஒரு ‘டைரக்டர் டச்’ கிளைமாக்ஸ் வேறு வைத்து, ரசிகனின் குழப்பத்துக்கு முடிவே இல்லாமல் படத்தை முடிக்கிறார்.
இயக்குனர் ரஞ்சித்தின் சுளீர் பளீர் வசனங்கள் இல்லாமல் இல்லை. “பறவையோட குணமே பறப்பது தான்… அதைப் பறக்க விடு…”, “காந்தி ஆடையை அணியாமல் இருந்ததற்கும், அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் காரணம் இருக்கு… அரசியல்” என்று கவனிக்க வைக்கிற, சிந்தனைத் தூண்டுகிற வசனங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவை காட்சிகளுக்குத் தேவையானதாகத் தோன்றவில்லை. வசனம் சொல்லணும் என்பதற்காகச் சொல்லியதாக இருக்கிறது. அது போலவே, ரஞ்சித் வழக்கமான தனது சமூக அரசியலைப் பேச வேண்டி, அதைத் தமிழன் என்ற பொட்டலத்திற்குள் வைத்து மறைத்து கொடுக்கிறார். அதுவும் திரைக்கதைக்குத் தேவைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம், மலேசிய சமூக அரசியலுக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகனுக்கும் இருக்கும் தூரமாகக்கூட இருக்கலாம்.
ஆரவாரமான பிக்கப் எடுக்கும் முதல் அரை மணி நேரக் காட்சிகள், பிறகு மூன்று, இரண்டு, ஒன்று என்று கியர் குறைத்து, வேகம் இறங்கி, பிறகு இறுதிக் காட்சிகளில் டேக் ஃஆப் எடுக்க நினைத்து, அது முடியாமல், இலக்கை அடையாமல், எங்கோ சென்று நிற்கிறது. இப்படி, படத்தின் inconsistent speed பார்வையாளர்களை நிலை கொள்ளாமல், தடுமாறச் செய்கிறது. ஒன்று கிளம்பிய வேகத்தில் செல்ல வேண்டும், அல்லது அடுத்து எடுத்துக் கொண்ட மெதுவேகத்தில் சீராகச் சென்றிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், சவசவவெனச் சென்று பயணம் கெட்டது தான் மிச்சம்.
அதே நேரத்தில், சில பாராட்டுகளையும் கூறி விடுவது முக்கியம். தனது டெம்ப்ளேட் கதைக்களத்தில் இருந்து விலகி வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்திற்கு முதல் பாராட்டு, ரஜினிக்கு. கிடைத்த வாய்ப்பில், ரஜினியின் இயல்பான நடிப்பை, பல ஆண்டுகளுக்குப் பிறகு காணும் வகையில், சில காட்சிகளை அமைத்த இயக்குனர் ரஞ்சித்திற்கு இரண்டாம் பாராட்டு. ரஜினி படங்களில் கேட்டிராத புது வகை இசையை அளித்த சந்தோஷ் நாராயணனுக்கு மூன்றாவது பாராட்டு. படம் நெடுகிலும், ஏதோ ஒரு வகையில் வந்து, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ராதிகா ஆப்தேவுக்கு நான்காவது பாராட்டு. அவ்ளோ தான்!!
இது தவிர, படத்தில் ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். யார் நடிப்பிலும் குறை சொல்ல முடியாது. ஹீரோ, ஹீரோயினைத் தவிர, மெட்ராஸ் படத்தில் நடித்திருந்த அனைவருக்கும் இதில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஏதும் வாக்குக் கொடுத்திருந்தாரா என்று தெரியவில்லை!! அத்தனை கதாபாத்திரங்களை உருவாக்கி நடமாடவிட்டிருக்கிறார். தினேஷ், தன்ஷிகா, ரித்விகா, ஜான் விஜய் தவிர மற்ற அனைவரும் கெஸ்ட் ரோல் என்பது போல் ஆங்காங்கு வந்து செல்கிறார்கள்.
இனி, படத்திற்கு வெளியே நிகழ்ந்த அரசியலைக் காணலாம்.
இது முழுமையான பரபரப்பு, விறுவிறுப்பு ஆக்ஷன் படம் அல்ல. ஆனால், வெளியிட்ட டீசர் கொடுத்த கண்ணோட்டம் வேறு. இது தற்செயலா அல்லது தெரிந்தே திட்டமிட்டு செய்த மோசடியா என்று தெரியவில்லை. இதனால் தான், படத்திற்கு ட்ரெய்லரே வெளியிடவில்லையா என்ற சந்தேகமும் எழுகிறது. கிஷோர், டீசரில் சொல்லும் “யாருடா, அந்தக் கபாலி” என்ற வசனத்தை யோசித்துப் பார்க்கவும். படத்தில் எங்கு வராத, வர முடியாத காட்சி அது. டீசருக்கு என்றே பிரத்யேகமாக எடுத்து இணைத்திருக்கிறார்கள்.
அடுத்து, அதிகார மையங்களுடன் இணைந்து படத்தின் தயாரிப்புக்குழு நிகழ்த்திய வணிக எதேச்சாதிகாரம். இந்த அளவு அதிகக் கட்டணக் கொள்ளையை, தமிழ்த் திரையுலக வரலாறு கண்டதில்லை. அதிகம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதால் கார்ப்பரேட்டுகளுக்கு முதல் நாள் டிக்கெட்டுகளை அள்ளிக் கொடுத்து விட்டு, கீழ் நிலை ரசிகர்களைத் தியேட்டர் பக்கம் வரவிடாமல் செய்தது சோகம். அது இத்தனை ஆண்டு காலம் திரையரங்குகளைத் திருவிழாக்களாக மாற்றி, சினிமாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அவர்களுக்குச் செய்த துரோகம்.
இவ்வளவு சீர்கேட்டை நிகழ்த்திவிட்டு, படத்தில் சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய கருத்துகளை ஆங்காங்கே பேசினால், அது எடுபடுமா என்ன?
பெரும் எதிர்பார்ப்பைப் பொய்யாகக் கிளப்பி, அதன் மூலம் பெரும் வசூல் வேட்டையை நடத்திவிட்டனர்., இன்னும் சில நாட்களுக்கு எத்தனை கோடி லாபம் எனச் சாதனை செய்திகள் அணிவகுத்து வரும். அதனுடன் சேர்த்துக் கொள்ள இன்னொரு சாதனையும் உள்ளது.
அது, இணைய தளங்களில் திருட்டுத்தனமாகப் படங்களை வெளியிடுபவர்களுக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் நடந்த நிழல் மோதல் பற்றியது. பட வெளியீட்டின் போது, தயாரிப்பாளர் தாணு படத்தை இணைய தளங்களில் வெளியிட தடையுத்தரவு வாங்குகிறார். சில டொமைன்கள் தடையாகின்றன. உடனே கணப்பொழுதில், புது டொமைன்கள் முளைக்கின்றன. பொதுவாக, திருட்டு இணைய தளங்களில் படம் வெளியாகி ஒருநாள் கழித்து வெளிவரும். கபாலியோ, படம் முதல் காட்சி முடிந்து, சில நிமிடங்களில் இணையத்தில் வெளியாகிறது. அது சமூக வலைத் தளங்கள் மூலமும், தகவல் தொடர்பு மொபைல் செயலிகள் மூலமாகவும், உடனே லட்சக்கணக்கில் பார்வையாளர்களைச் சென்று அடைகிறது. சட்ட விரோதமானது எனத் தெரிந்தும், இத்தளங்களுக்குச் சமூக வலைத்தளங்களில் நேரடியான பெரும் ஆதரவு குவிகிறது. ஒரு பக்கம் கட்டணக் கொள்ளை, இன்னொரு பக்கம் அதிவேகத் திருட்டு வெளியீடு, மற்றொரு பக்கம் திருட்டு வெளியீட்டுக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவு - இவை அனைத்துமே கபாலி சார்ந்து நாம் உரையாட வேண்டிய முக்கிய நிகழ்வுகள். பேராசையும், முறைகேடும் சமூகத்தில் நீக்கமற நிறைத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியதும், கபாலியின் சாதனைகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

.