Sunday, May 21, 2017

ரெமோ

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.
வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, டப்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது.
தமிழர்களுக்கு ஒரு நடிகர் பிடிக்க வேண்டுமென்றால், அவர் நன்றாக நடித்தால் மட்டும் போதாது. அவரைப் பற்றி நேர்மறையான செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சாதாரண நிலையில் இருந்து உயர்ந்து முன்னணிக்குச் செல்கிற பிரபலம் என்றால் ரொம்பவே பிடித்துவிடும். அப்பிரபலங்களைத் தங்கள் வீட்டுச் சொந்தங்களாகவே எடுத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நடிகர்களுக்குத் தங்கள் முழு ஆதரவைக் கொடுப்பது வரை, நடிகர்களுக்குச் சந்தோஷம். இந்த ஆதரவு முற்றிப்போய், அடுத்த கட்டமாக ஒரு உரிமையுடன் "ஏன் வெள்ள நிவாரணத்திற்குக் காசு கொடுக்கவில்லை?", "ஏன் அவர் வீட்டு விசேஷத்திற்குக் கூப்பிட்டு விருந்து கொடுக்கவில்லை?" என்று கேள்வி கேட்கும் நிலைக்குச் சென்று விடுவார்கள். இந்த நிலை வரும்வரை ஜாலி தான். சிகாவுக்கு, இப்ப ஜாலி காலம்.
அதென்ன சிகா? ரெமோவில் அவருக்கு டைட்டில் கார்டில் 'SK' என்று பில்டப் டைட்டில் போடுகிறார்கள். சிவகார்த்திகேயனின் சுருக்கமாம். படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயரும் SK. அதனால், நாம் சிகா என்றழைக்கலாம் என்று முடிவு செய்தோம். கவனிக்க, சிகாவுக்குத் தனி டைட்டில் ஆரம்பித்துவிட்டார்கள். வளர்ச்சி!! வளர்ச்சி!!
படத்தில் சிகா ஒரு பெரிய கதாநாயகன் ஆக வேண்டும் என்னும் லட்சியத்தில், சத்யம் திரையரங்கு முன்னால் ரஜினிக்கு இருக்கும் 'கபாலி' பேனர் போல் தனக்கும் வைக்க வேண்டும் என்ற ஆசையில், நாடகங்களில் நடித்துக்கொண்டு, சினிமா வாய்ப்பு தேடுகிறார். அச்சமயம், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நர்ஸ் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடுகிறார். (நம்புற மாதிரி இல்லைல? அந்தளவுக்கு இது லாஜிக் தேடுற படம் இல்லை!!) அங்கு, கமலைப் போல், வெளிநாட்டு ஒப்பனைக்காரரின் உதவியுடன் ஹைடெக் மேக்கப் போட்டுக்கொண்டு செல்கிறார். (புதுமுகம், வெளிநாட்டு மேக்கப்பா? ப்ளீஸ், நோ லாஜிக்). காதல் காட்சியில் சரியாக நடிப்பு வரவில்லை என்று விரட்டிவிடப்படுகிறார். அதே மேக்கப்பில், கீர்த்தி சுரேஷைச் சந்திக்க நேர, முன்பொரு முறை பார்த்தவுடன் காதல் வயப்பட்டவர், இப்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ரெமோ (ரெஜினா மோத்வானி) என்ற பெயரில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். கீர்த்தி சுரேஷ், ஏற்கனவே திருமணம் நிச்சயமானவர் என்று தெரிந்து, அதன் பிறகும் அவரைக் குழப்பி, ("பொண்ணுங்கள கண்ட்ரோல் பண்ணுறது தான் கஷ்டம், கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி" என்று ஒரு மீம்ஸ் ரகப் பஞ்ச் வேறு பேசி) எப்படித் திருமணம் வரை கொண்டு செல்கிறார் என்பது மிச்சக்கதை. அதை ஜாலியாகத் திரையில் காட்டியிருக்கிறார்கள். முடிவில், ரஜினி பேனர் இருந்த இடத்தில் அவர் பேனர் வருகிறது. (அதுவரை ஓகே, அந்தப் பேனருக்கு கீழே கபாலி பேனர் இருப்பதைக் காணும்போது தான், கொஞ்சம் நறநறவாகிறது!!)
சும்மா டைமிங் காமெடி, மிமிக்ரி பாட்டு, டான்ஸ் என்று ஒரு ஃபார்முலாவில் சென்று கொண்டிருந்தவர், தைரியமாக நர்ஸ் மேக்கப், பெர்ஃபார்மன்ஸ் என்று அடுத்த கட்டம் சென்றிருக்கிறார். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். மிமிக்ரி நன்றாகச் செய்வார் என்றாலும், இதில் பெரும்பாலும் பெண் குரலில் பேசி இருப்பது, அவரது மாற்றுக் குரல் திறமையை இன்னமும் எடுத்துக்காட்டுகிறது. சரியான டைமிங்கில் வரும் இரு சண்டைக்காட்சிகளும் உறுத்தாமல் இருக்கின்றன. எப்போதும் கை கொடுக்கும் பாடல்கள், இந்த முறை சிகாவை ஏமாற்றிவிட்டது எனலாம். ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், குழந்தை ரசிகர்கள், பெண் ரசிகைகள் எனச் சாமர்த்தியமாக அனைவரையும் கவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு நடித்திருக்கிறார்.
இவரது வழுவழு மேக்கப் முன்பு, கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் டல்லாகத் தான் தெரிகிறார். ஆனால், அவரது சிம்பிள் மேக்கப் + அழகான உடைகள், ரசிகர்களைக் கவருவதாக உள்ளன. அந்த பிங்க் பட்டுப் புடவை, பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் கவர்ந்து ஜொள்ளுவிடச் செய்யும். ஒப்பனைக் குழுவிற்கும், உடையலங்காரம் செய்த அனுவிற்கும் பாராட்டுகள்.
சிகா, கீர்த்தி இருவருமே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள். தான் ஏன் ஜீனியஸ் என ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காட்டியிருக்கிறார். ஒரு சாதா படத்தையும், பெரிய படமாகக் காட்ட பி.சி.யின் கேமரா போதும். ஒரு படம் அனிருத், அடுத்த படம் இமான் என்று தொடர் ஹிட்டுகளுடன் சென்று கொண்டிருக்கும் சிகாவுக்கு, இதில் அனிருத் ஏமாற்றத்தை அளித்து விட்டாரோ என எண்ணத்தோன்றும் வகையிலான பாடல்கள். ஆனால், பாடலில் விட்டதை, பின்னணி இசையில் பிடித்து விட்டார் எனலாம். ரொம்பவும் பொருத்தமான, படத்துடன் ஒன்ற வைக்கும் பின்னணி இசை. இந்தப் படத்திற்கு எதற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என்பதைத் தான் எவ்வளவு யோசித்தும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை, இந்தப் பின்னணி இசை நன்றாகக் கேட்டதற்கு அவர் தான் காரணமோ?
ஏற்கனவே நிச்சயம் ஆன பெண்ணைக் காதலித்துத் திருமணம் என்ற கதையையும் பார்த்திருக்கிறோம். பெண் வேடம் போட்டு ஹீரோயினை ஏமாற்றுதல் என்ற கதையையும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு தெரிந்த கதைகளையும் இணைத்து, ஒரு புதுக் கதையாக, தனது சாமர்த்திய காட்சியமைப்புகள் மூலம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர், பாக்யராஜ் கண்ணன். தான் ஒரு சரக்குள்ள இயக்குனர் என்பதைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். படத்தின் கதையை முதலிலேயே சொல்லிவிட்டு, அதுவும் அப்படி ஏற்கனவே சொல்லி படமெடுத்த எஸ்.ஏ.சூர்யா வாய்ஸிலேயே சொல்லி படத்தை ஆரம்பித்து, சலிப்பேதும் இல்லாமல் படத்தைக் கொண்டு சென்றதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். இறுதியில் தான் கொஞ்சம் இழுவை ஃபீலிங். மற்றபடி, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு ஜாலி காமெடி படம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். குழந்தைகளைக் கவர் பண்ணும் வகையிலும் ஒரு சில காட்சிகளை அமைத்து, அதையே இறுதியில் செண்டிமெண்டாகப் பயன்படுத்தியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம்.
நோ லாஜிக், ஒன்லி மேஜிக் என்று அவர்கள் படமெடுத்துவிட்டாலும், திரைப்படங்கள் சில கருத்துகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்வையாளர்களிடம் பதியச் செய்யும் வல்லமை கொண்டவை என்பதில் நமக்கு நம்பிக்கை உண்டு என்பதால், இப்படம் குறித்த சில பார்வைகளைப் பகிரத் தேவையாக இருக்கிறது. வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர், ஊர்ப் பெரிய மனிதர் பெண்ணை விரட்டிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்வார். தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள், கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் போட்டுக் கொண்டு உயர்சாதி பெண்களைத் தொடர்ந்து பின்னால் சென்று காதலித்துத் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள் என்று சில சாதியக் குரல்கள் எழும்பிய நேரம் அது. அந்த வாதம் உண்மை தான் என்பது போல் எடுக்கப்பட்ட படமாக அது இருந்தது. காமெடிப் படம் என்னும் போர்வை போர்த்திக் கொண்டால், யாரும் எதையும் யோசிக்கவில்லை. முதல் படமான மெரினாவில் இருந்து முந்தைய படமான ரஜினிமுருகன் வரை சிகாவின் படங்களைத் தொடர்ந்து கவனித்தால், இளைஞர்களின் பெண் குறித்த பார்வையில், தவறாக முன்னுதாரணங்களைக் காட்டும் பாத்திரங்களாகவே இருக்கின்றன. அதை ஜாலியாகக் காட்டுவதால், பார்ப்பவர்களும் லைட்டாக எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இப்போது, ரெமோவில் சிட்டி காதல் என்ற வகையில் நிச்சயமான டாக்டர் பெண்ணைக் குழப்பிக் காதலிக்கச் செய்வதும் நல்ல லட்சியமே என்று படமெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தோதாக, திரைக்கதை விதியின்படி நிச்சயம் செய்த மாப்பிள்ளையை வில்லனாக ஆக்கிவிட்டார்கள். இல்லாவிட்டால், காமெடியனாகக் காட்டியிருப்பார்கள். ஏற்கனவே, ஹீரோ காமெடி செய்து கொண்டிருப்பதால், அதுவே போதும் என்று நினைத்திருக்கலாம். இப்படியான படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால், அவருடைய பாதையும் அதே வழியில் செல்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் வரும் கதைகளுக்கும், வசனங்களுக்கும் பெண்கள் உட்பட மக்கள் கொடுக்கும் ஆதரவு குறித்துத் தான் நாம் கவலைக்கொள்ள வேண்டியதாக உள்ளது. குடும்பத்துடன் காணும் வகையில் ஆபாசம் இல்லாத, வன்முறை இல்லாத படங்களில் நடித்தாலும் (புகை இல்லை, ஆனால் மது உள்ளது), இது மாதிரி கதையம்சங்களையும் சிகா கருத்தில் கொள்ள வேண்டும்.
மற்றபடி, அவ்வளவு யோசிக்க வேண்டாம் பாஸ், ஊர்ல நடக்காததையா காட்டுறாங்க? என்பவர் எனில், ஒரு நல்ல டைம்பாஸ் என்று சொல்லி, ரெமோவை ஒருமுறை ஜாலியாகப் பார்த்து விட்டு வரலாம்.
டெயில்பீஸ்
இந்தப் படத்தை ஆப்பிள்வேலி கார்மைக் (Applevalley Carmike Cinemas) திரையரங்கில் கண்டோம். நாம் இருந்த வரிசைக்கு முன் வரிசையில், ஒரு அமெரிக்க மத்திய வயதுத் தம்பதியினர் வந்து அமர்ந்தனர். வேறு அரங்கிற்குச் செல்ல நினைத்து, தவறி இங்கு வந்துவிட்டனரோ என்று முதலில் எண்ணினோம். ஆனால், திரையில் படம் தொடங்கியும், எவ்வித ஜெர்க்கும் இல்லாமல் படத்தைப் பார்க்க, அவர்கள் சரியாகத் தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. படம் முழுவதையும் ரசித்து, சிரித்துப் பார்த்தார்கள். படத்தின் சப்-டைட்டில் வசனத்தைப் புரிந்து கொள்ள உதவியிருக்கும். அது இல்லாமலும், படத்தை ரசித்திருப்பார்கள் எனத் தோன்றியது. சில இந்திய, தமிழ்நாடு சார்ந்த நடைமுறைகளை விநோதமாகக் கவனித்தனர். தமிழ் ரசிகர்கள் கைத்தட்டி சிரித்த வெகு சில வசனங்களை மட்டும் புரிந்து கொள்ள முடியா விட்டாலும், முழுப்படத்தையும் உட்கார்ந்து ரசித்துப் பார்த்து விட்டுச் சென்றனர். படம் முடிந்து வெளியே வரும் போது நாம் கேட்டதற்கு, தங்களுக்குப் படம் மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினர். அட, ரெமோவிற்கு இண்டர்நேஷனல் ஆடியன்ஸும் இருக்காங்கப்பா!!!

.

No comments: