Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, May 21, 2017

ரெமோ

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.




வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, டப்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது.
தமிழர்களுக்கு ஒரு நடிகர் பிடிக்க வேண்டுமென்றால், அவர் நன்றாக நடித்தால் மட்டும் போதாது. அவரைப் பற்றி நேர்மறையான செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சாதாரண நிலையில் இருந்து உயர்ந்து முன்னணிக்குச் செல்கிற பிரபலம் என்றால் ரொம்பவே பிடித்துவிடும். அப்பிரபலங்களைத் தங்கள் வீட்டுச் சொந்தங்களாகவே எடுத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நடிகர்களுக்குத் தங்கள் முழு ஆதரவைக் கொடுப்பது வரை, நடிகர்களுக்குச் சந்தோஷம். இந்த ஆதரவு முற்றிப்போய், அடுத்த கட்டமாக ஒரு உரிமையுடன் "ஏன் வெள்ள நிவாரணத்திற்குக் காசு கொடுக்கவில்லை?", "ஏன் அவர் வீட்டு விசேஷத்திற்குக் கூப்பிட்டு விருந்து கொடுக்கவில்லை?" என்று கேள்வி கேட்கும் நிலைக்குச் சென்று விடுவார்கள். இந்த நிலை வரும்வரை ஜாலி தான். சிகாவுக்கு, இப்ப ஜாலி காலம்.
அதென்ன சிகா? ரெமோவில் அவருக்கு டைட்டில் கார்டில் 'SK' என்று பில்டப் டைட்டில் போடுகிறார்கள். சிவகார்த்திகேயனின் சுருக்கமாம். படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயரும் SK. அதனால், நாம் சிகா என்றழைக்கலாம் என்று முடிவு செய்தோம். கவனிக்க, சிகாவுக்குத் தனி டைட்டில் ஆரம்பித்துவிட்டார்கள். வளர்ச்சி!! வளர்ச்சி!!
படத்தில் சிகா ஒரு பெரிய கதாநாயகன் ஆக வேண்டும் என்னும் லட்சியத்தில், சத்யம் திரையரங்கு முன்னால் ரஜினிக்கு இருக்கும் 'கபாலி' பேனர் போல் தனக்கும் வைக்க வேண்டும் என்ற ஆசையில், நாடகங்களில் நடித்துக்கொண்டு, சினிமா வாய்ப்பு தேடுகிறார். அச்சமயம், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நர்ஸ் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடுகிறார். (நம்புற மாதிரி இல்லைல? அந்தளவுக்கு இது லாஜிக் தேடுற படம் இல்லை!!) அங்கு, கமலைப் போல், வெளிநாட்டு ஒப்பனைக்காரரின் உதவியுடன் ஹைடெக் மேக்கப் போட்டுக்கொண்டு செல்கிறார். (புதுமுகம், வெளிநாட்டு மேக்கப்பா? ப்ளீஸ், நோ லாஜிக்). காதல் காட்சியில் சரியாக நடிப்பு வரவில்லை என்று விரட்டிவிடப்படுகிறார். அதே மேக்கப்பில், கீர்த்தி சுரேஷைச் சந்திக்க நேர, முன்பொரு முறை பார்த்தவுடன் காதல் வயப்பட்டவர், இப்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ரெமோ (ரெஜினா மோத்வானி) என்ற பெயரில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். கீர்த்தி சுரேஷ், ஏற்கனவே திருமணம் நிச்சயமானவர் என்று தெரிந்து, அதன் பிறகும் அவரைக் குழப்பி, ("பொண்ணுங்கள கண்ட்ரோல் பண்ணுறது தான் கஷ்டம், கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி" என்று ஒரு மீம்ஸ் ரகப் பஞ்ச் வேறு பேசி) எப்படித் திருமணம் வரை கொண்டு செல்கிறார் என்பது மிச்சக்கதை. அதை ஜாலியாகத் திரையில் காட்டியிருக்கிறார்கள். முடிவில், ரஜினி பேனர் இருந்த இடத்தில் அவர் பேனர் வருகிறது. (அதுவரை ஓகே, அந்தப் பேனருக்கு கீழே கபாலி பேனர் இருப்பதைக் காணும்போது தான், கொஞ்சம் நறநறவாகிறது!!)
சும்மா டைமிங் காமெடி, மிமிக்ரி பாட்டு, டான்ஸ் என்று ஒரு ஃபார்முலாவில் சென்று கொண்டிருந்தவர், தைரியமாக நர்ஸ் மேக்கப், பெர்ஃபார்மன்ஸ் என்று அடுத்த கட்டம் சென்றிருக்கிறார். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். மிமிக்ரி நன்றாகச் செய்வார் என்றாலும், இதில் பெரும்பாலும் பெண் குரலில் பேசி இருப்பது, அவரது மாற்றுக் குரல் திறமையை இன்னமும் எடுத்துக்காட்டுகிறது. சரியான டைமிங்கில் வரும் இரு சண்டைக்காட்சிகளும் உறுத்தாமல் இருக்கின்றன. எப்போதும் கை கொடுக்கும் பாடல்கள், இந்த முறை சிகாவை ஏமாற்றிவிட்டது எனலாம். ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், குழந்தை ரசிகர்கள், பெண் ரசிகைகள் எனச் சாமர்த்தியமாக அனைவரையும் கவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு நடித்திருக்கிறார்.
இவரது வழுவழு மேக்கப் முன்பு, கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் டல்லாகத் தான் தெரிகிறார். ஆனால், அவரது சிம்பிள் மேக்கப் + அழகான உடைகள், ரசிகர்களைக் கவருவதாக உள்ளன. அந்த பிங்க் பட்டுப் புடவை, பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் கவர்ந்து ஜொள்ளுவிடச் செய்யும். ஒப்பனைக் குழுவிற்கும், உடையலங்காரம் செய்த அனுவிற்கும் பாராட்டுகள்.
சிகா, கீர்த்தி இருவருமே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள். தான் ஏன் ஜீனியஸ் என ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காட்டியிருக்கிறார். ஒரு சாதா படத்தையும், பெரிய படமாகக் காட்ட பி.சி.யின் கேமரா போதும். ஒரு படம் அனிருத், அடுத்த படம் இமான் என்று தொடர் ஹிட்டுகளுடன் சென்று கொண்டிருக்கும் சிகாவுக்கு, இதில் அனிருத் ஏமாற்றத்தை அளித்து விட்டாரோ என எண்ணத்தோன்றும் வகையிலான பாடல்கள். ஆனால், பாடலில் விட்டதை, பின்னணி இசையில் பிடித்து விட்டார் எனலாம். ரொம்பவும் பொருத்தமான, படத்துடன் ஒன்ற வைக்கும் பின்னணி இசை. இந்தப் படத்திற்கு எதற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என்பதைத் தான் எவ்வளவு யோசித்தும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை, இந்தப் பின்னணி இசை நன்றாகக் கேட்டதற்கு அவர் தான் காரணமோ?
ஏற்கனவே நிச்சயம் ஆன பெண்ணைக் காதலித்துத் திருமணம் என்ற கதையையும் பார்த்திருக்கிறோம். பெண் வேடம் போட்டு ஹீரோயினை ஏமாற்றுதல் என்ற கதையையும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு தெரிந்த கதைகளையும் இணைத்து, ஒரு புதுக் கதையாக, தனது சாமர்த்திய காட்சியமைப்புகள் மூலம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர், பாக்யராஜ் கண்ணன். தான் ஒரு சரக்குள்ள இயக்குனர் என்பதைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். படத்தின் கதையை முதலிலேயே சொல்லிவிட்டு, அதுவும் அப்படி ஏற்கனவே சொல்லி படமெடுத்த எஸ்.ஏ.சூர்யா வாய்ஸிலேயே சொல்லி படத்தை ஆரம்பித்து, சலிப்பேதும் இல்லாமல் படத்தைக் கொண்டு சென்றதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். இறுதியில் தான் கொஞ்சம் இழுவை ஃபீலிங். மற்றபடி, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு ஜாலி காமெடி படம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். குழந்தைகளைக் கவர் பண்ணும் வகையிலும் ஒரு சில காட்சிகளை அமைத்து, அதையே இறுதியில் செண்டிமெண்டாகப் பயன்படுத்தியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம்.
நோ லாஜிக், ஒன்லி மேஜிக் என்று அவர்கள் படமெடுத்துவிட்டாலும், திரைப்படங்கள் சில கருத்துகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்வையாளர்களிடம் பதியச் செய்யும் வல்லமை கொண்டவை என்பதில் நமக்கு நம்பிக்கை உண்டு என்பதால், இப்படம் குறித்த சில பார்வைகளைப் பகிரத் தேவையாக இருக்கிறது. வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர், ஊர்ப் பெரிய மனிதர் பெண்ணை விரட்டிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்வார். தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள், கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் போட்டுக் கொண்டு உயர்சாதி பெண்களைத் தொடர்ந்து பின்னால் சென்று காதலித்துத் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள் என்று சில சாதியக் குரல்கள் எழும்பிய நேரம் அது. அந்த வாதம் உண்மை தான் என்பது போல் எடுக்கப்பட்ட படமாக அது இருந்தது. காமெடிப் படம் என்னும் போர்வை போர்த்திக் கொண்டால், யாரும் எதையும் யோசிக்கவில்லை. முதல் படமான மெரினாவில் இருந்து முந்தைய படமான ரஜினிமுருகன் வரை சிகாவின் படங்களைத் தொடர்ந்து கவனித்தால், இளைஞர்களின் பெண் குறித்த பார்வையில், தவறாக முன்னுதாரணங்களைக் காட்டும் பாத்திரங்களாகவே இருக்கின்றன. அதை ஜாலியாகக் காட்டுவதால், பார்ப்பவர்களும் லைட்டாக எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இப்போது, ரெமோவில் சிட்டி காதல் என்ற வகையில் நிச்சயமான டாக்டர் பெண்ணைக் குழப்பிக் காதலிக்கச் செய்வதும் நல்ல லட்சியமே என்று படமெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தோதாக, திரைக்கதை விதியின்படி நிச்சயம் செய்த மாப்பிள்ளையை வில்லனாக ஆக்கிவிட்டார்கள். இல்லாவிட்டால், காமெடியனாகக் காட்டியிருப்பார்கள். ஏற்கனவே, ஹீரோ காமெடி செய்து கொண்டிருப்பதால், அதுவே போதும் என்று நினைத்திருக்கலாம். இப்படியான படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால், அவருடைய பாதையும் அதே வழியில் செல்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் வரும் கதைகளுக்கும், வசனங்களுக்கும் பெண்கள் உட்பட மக்கள் கொடுக்கும் ஆதரவு குறித்துத் தான் நாம் கவலைக்கொள்ள வேண்டியதாக உள்ளது. குடும்பத்துடன் காணும் வகையில் ஆபாசம் இல்லாத, வன்முறை இல்லாத படங்களில் நடித்தாலும் (புகை இல்லை, ஆனால் மது உள்ளது), இது மாதிரி கதையம்சங்களையும் சிகா கருத்தில் கொள்ள வேண்டும்.
மற்றபடி, அவ்வளவு யோசிக்க வேண்டாம் பாஸ், ஊர்ல நடக்காததையா காட்டுறாங்க? என்பவர் எனில், ஒரு நல்ல டைம்பாஸ் என்று சொல்லி, ரெமோவை ஒருமுறை ஜாலியாகப் பார்த்து விட்டு வரலாம்.
டெயில்பீஸ்
இந்தப் படத்தை ஆப்பிள்வேலி கார்மைக் (Applevalley Carmike Cinemas) திரையரங்கில் கண்டோம். நாம் இருந்த வரிசைக்கு முன் வரிசையில், ஒரு அமெரிக்க மத்திய வயதுத் தம்பதியினர் வந்து அமர்ந்தனர். வேறு அரங்கிற்குச் செல்ல நினைத்து, தவறி இங்கு வந்துவிட்டனரோ என்று முதலில் எண்ணினோம். ஆனால், திரையில் படம் தொடங்கியும், எவ்வித ஜெர்க்கும் இல்லாமல் படத்தைப் பார்க்க, அவர்கள் சரியாகத் தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. படம் முழுவதையும் ரசித்து, சிரித்துப் பார்த்தார்கள். படத்தின் சப்-டைட்டில் வசனத்தைப் புரிந்து கொள்ள உதவியிருக்கும். அது இல்லாமலும், படத்தை ரசித்திருப்பார்கள் எனத் தோன்றியது. சில இந்திய, தமிழ்நாடு சார்ந்த நடைமுறைகளை விநோதமாகக் கவனித்தனர். தமிழ் ரசிகர்கள் கைத்தட்டி சிரித்த வெகு சில வசனங்களை மட்டும் புரிந்து கொள்ள முடியா விட்டாலும், முழுப்படத்தையும் உட்கார்ந்து ரசித்துப் பார்த்து விட்டுச் சென்றனர். படம் முடிந்து வெளியே வரும் போது நாம் கேட்டதற்கு, தங்களுக்குப் படம் மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினர். அட, ரெமோவிற்கு இண்டர்நேஷனல் ஆடியன்ஸும் இருக்காங்கப்பா!!!

.

Friday, September 23, 2016

கபாலி கபளீகரம் - திரையிலும், திரைக்கு அப்பாலும்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை



பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் “கபாலி” திரைப்படம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பது தான் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சென்றவர்களின் பதிலாக இருக்கிறது. அதே சமயம், எவ்வித ரஜினிமேனியாவிலும் தாக்குப்படாமல், படம் பார்க்கச் சென்றவர்களுக்கு, படத்தின் சில அம்சங்கள் பிடித்திருக்கின்றன. இது தவிர, பலவித அரசியல் காரணங்களுக்காகச் சிலருக்குப் படம் பிடித்திருக்கிறது. சிலருக்குப் படம் பிடிக்கவில்லை. எவ்வித அரசியலுக்குள்ளும் நுழையாமல், ஒரு சினிமாவாகக் கபாலி எப்படியிருக்கிறது?
தமிழ்த் திரைப்படங்களில், உலகளாவிய அளவில் இந்த அளவுக்கு எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்ட படம் வேறு எதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. ரஜினி+ரஞ்சித் என்று தானாகவே கிளம்பிய எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படம் வெளியீட்டுக்குத் தயாராகிய நேரத்தில், படத்தின் தயாரிப்புக்குழு பல்வேறு வகைகளில் உருவாக்கிய எதிர்பார்ப்பு, மற்றொரு பக்கம் பெரும் அலையாக எழுந்தது.
படம் பார்த்த பிறகு, படக் குழுவினர் தவறான எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டார்களோ எனத் தோன்றுகிறது. என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இந்தப் படத்தின் கதை, ஒரு மலேசிய தமிழ் டானின் கதை. மலேசியத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களின் தலைவராக உருவாகும் ரஜினிகாந்த், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து, மலேசிய அரசியலையும், வணிகத்தையும் ஆட்டிப் படைக்கும் பல குழுக்களில் ஒரு குழுவின் தலைவராக இருக்கும் நாசரின் இடத்தை, அவரது மரணத்திற்குப் பிறகு அடைகிறார். எதிர்க் குழுவின் சூழ்ச்சியால், தனது கர்ப்பிணி மனைவியை இழந்து, சிறைக்குச் செல்கிறார். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, சிறையில் இருந்து வெளிவரும் அவர் எப்படித் தனது குடும்பத்தைக் கண்டு அடைந்து, எதிரிகளை வெல்கிறார் என்பது தான் கபாலியின் சுருக்கமான கதை.
படத்தில் ரசிகர்களைக் கவரும் விஷயங்கள் என நிறையப் பட்டியலிடலாம். ரஜினியின் ஜெயில் ரிலீஸ் என்ட்ரியும் பறவைக்கடை சண்டைக் காட்சியும், அவரது மாஸ் ரசிகர்களுக்குக் கிடைத்த உடனடித் தீனி. பிரிந்த மனைவியை நினைத்து வாடும் காட்சிகளும், அவரைத் தேடி மகளுடன் செல்லும் காட்சிகளும், ரஜினியிடம் நல்ல நடிப்பை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கும். ரஞ்சித், ரஜினியை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார் எனக் காண வந்தவர்களுக்கு, ரஜினி ஆங்காங்கே பேசும் வசனங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். படம் பார்த்த அனைவரையும், ஒரு முழுமையான சினிமாவாக, ஒரு சேரக் கவரவில்லை என்பது தான் குறை.

இந்தப் படத்தின் திரைக்கதை, கபாலி என்ற டானின் பிரிந்த குடும்பக் கதையையும், அவரது எதிரிகள் கொடுக்கும் சிக்கல்கள் சேர்த்த ஆக்ஷன் கதையையும் ஒன்றாக இணைத்துச் செல்கிறது. படத்தின் முதல் பிரச்சினை இங்கு தொடங்குகிறது. ஜெயிலில் இருந்து வெளிவரும் கபாலி, எதிரிகள் அணிக்குள் ஒரு அதிரடி அட்டாக் கொடுக்கிறார். இந்தக் காட்சிகள் பரபரப்புடன் வேகமாகச் செல்கின்றன. பிறகு, தான் இழந்ததாக நினைத்த தனது மனைவியும், மகளும் உயிருடன் இருப்பதை அறிந்து, அவர்களைத் தேடி செல்கிறார். இந்தக் காட்சிகள் உணர்வு பூர்வமாக மெதுவாகச் செல்கின்றன. இக்காட்சிகளில், ரஜினியும், ராதிகா ஆப்தேவும் மிக நிறைவாக நடித்திருக்கிறார்கள் என்றாலும், மெதுவாக நகரும் காட்சித் தொகுப்புகள், தொடர்ந்து பரபரப்பான திரைக்கதையை எதிர்பார்த்து வந்த FDFS (முதல் நாள் முதல் காட்சி) ரசிகர்களை நெளிய வைக்கிறது. முக்கியமாக, சென்னை, பாண்டிச்சேரி காட்சிகளின் படு ஸ்லோவான வேகம், திரைக்கதைக்கு என்ன வித ஆதாயத்தை அளிக்கிறது என்று அமைத்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னொரு பக்கம், மலேசிய தமிழர்களின் உலகமும், அங்கிருக்கும் ரவுடிகள் உலகமும் அன்னியமாகவும், செயற்கையாகவும் இருப்பதாக ஒரு உணர்வை அளிக்கின்றன. மலேசிய ரசிகர்களுக்கு இக்காட்சிகள் நெருக்கமாக இருக்கலாம். யாரும் தொடாத மலேசியத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பின்னணியாக வைத்து படமெடுத்து இருப்பதைப் பாராட்டலாம் என்றாலும், அது சரியான அழுத்தத்துடன் பதியப்படவில்லை என்பதையும் குறையாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மலேசியத் தமிழும் ஆங்காங்கே புரிபடாமல், நாமாகவே ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. மலேசியத் தமிழர் வரலாற்றுக்காக ரஞ்சித் நிறைய உழைத்திருக்கலாம். ஆனால், அதைச் சராசரித் தமிழ் ரசிகன் சரியாக உள்வாங்கும் விதத்தில் காட்சிகளை அமைக்காததால், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
படத்தின் இறுதியில் ‘இணைத்திருக்கும்’ கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சி, திரைப்படத்துடன் ஒட்டவில்லை. ஒரு இம்பாக்ட்டையும் கொடுக்க வலுவில்லா செயற்கைத் தோரணம். வில்லனின் சாம்ராஜ்யத்தை இருந்த இடத்தில் இருந்தே அழிக்கிறார் கபாலி. ரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்றால், இது முழுமையான ரஜினி படமாகவும் வரவில்லை, இயக்குனர் ரஞ்சித்தின் நேர்மையான சமூகப் பார்வை கொண்ட படமாகவும் வரவில்லை என்பதே சோகமான உண்மை. இந்தக் கமர்ஷியல் கிளைமாக்ஸ் முடிந்த பிறகு, இயக்குனர் ஒரு ‘டைரக்டர் டச்’ கிளைமாக்ஸ் வேறு வைத்து, ரசிகனின் குழப்பத்துக்கு முடிவே இல்லாமல் படத்தை முடிக்கிறார்.
இயக்குனர் ரஞ்சித்தின் சுளீர் பளீர் வசனங்கள் இல்லாமல் இல்லை. “பறவையோட குணமே பறப்பது தான்… அதைப் பறக்க விடு…”, “காந்தி ஆடையை அணியாமல் இருந்ததற்கும், அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் காரணம் இருக்கு… அரசியல்” என்று கவனிக்க வைக்கிற, சிந்தனைத் தூண்டுகிற வசனங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவை காட்சிகளுக்குத் தேவையானதாகத் தோன்றவில்லை. வசனம் சொல்லணும் என்பதற்காகச் சொல்லியதாக இருக்கிறது. அது போலவே, ரஞ்சித் வழக்கமான தனது சமூக அரசியலைப் பேச வேண்டி, அதைத் தமிழன் என்ற பொட்டலத்திற்குள் வைத்து மறைத்து கொடுக்கிறார். அதுவும் திரைக்கதைக்குத் தேவைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம், மலேசிய சமூக அரசியலுக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகனுக்கும் இருக்கும் தூரமாகக்கூட இருக்கலாம்.
ஆரவாரமான பிக்கப் எடுக்கும் முதல் அரை மணி நேரக் காட்சிகள், பிறகு மூன்று, இரண்டு, ஒன்று என்று கியர் குறைத்து, வேகம் இறங்கி, பிறகு இறுதிக் காட்சிகளில் டேக் ஃஆப் எடுக்க நினைத்து, அது முடியாமல், இலக்கை அடையாமல், எங்கோ சென்று நிற்கிறது. இப்படி, படத்தின் inconsistent speed பார்வையாளர்களை நிலை கொள்ளாமல், தடுமாறச் செய்கிறது. ஒன்று கிளம்பிய வேகத்தில் செல்ல வேண்டும், அல்லது அடுத்து எடுத்துக் கொண்ட மெதுவேகத்தில் சீராகச் சென்றிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், சவசவவெனச் சென்று பயணம் கெட்டது தான் மிச்சம்.
அதே நேரத்தில், சில பாராட்டுகளையும் கூறி விடுவது முக்கியம். தனது டெம்ப்ளேட் கதைக்களத்தில் இருந்து விலகி வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்திற்கு முதல் பாராட்டு, ரஜினிக்கு. கிடைத்த வாய்ப்பில், ரஜினியின் இயல்பான நடிப்பை, பல ஆண்டுகளுக்குப் பிறகு காணும் வகையில், சில காட்சிகளை அமைத்த இயக்குனர் ரஞ்சித்திற்கு இரண்டாம் பாராட்டு. ரஜினி படங்களில் கேட்டிராத புது வகை இசையை அளித்த சந்தோஷ் நாராயணனுக்கு மூன்றாவது பாராட்டு. படம் நெடுகிலும், ஏதோ ஒரு வகையில் வந்து, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ராதிகா ஆப்தேவுக்கு நான்காவது பாராட்டு. அவ்ளோ தான்!!
இது தவிர, படத்தில் ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். யார் நடிப்பிலும் குறை சொல்ல முடியாது. ஹீரோ, ஹீரோயினைத் தவிர, மெட்ராஸ் படத்தில் நடித்திருந்த அனைவருக்கும் இதில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஏதும் வாக்குக் கொடுத்திருந்தாரா என்று தெரியவில்லை!! அத்தனை கதாபாத்திரங்களை உருவாக்கி நடமாடவிட்டிருக்கிறார். தினேஷ், தன்ஷிகா, ரித்விகா, ஜான் விஜய் தவிர மற்ற அனைவரும் கெஸ்ட் ரோல் என்பது போல் ஆங்காங்கு வந்து செல்கிறார்கள்.
இனி, படத்திற்கு வெளியே நிகழ்ந்த அரசியலைக் காணலாம்.
இது முழுமையான பரபரப்பு, விறுவிறுப்பு ஆக்ஷன் படம் அல்ல. ஆனால், வெளியிட்ட டீசர் கொடுத்த கண்ணோட்டம் வேறு. இது தற்செயலா அல்லது தெரிந்தே திட்டமிட்டு செய்த மோசடியா என்று தெரியவில்லை. இதனால் தான், படத்திற்கு ட்ரெய்லரே வெளியிடவில்லையா என்ற சந்தேகமும் எழுகிறது. கிஷோர், டீசரில் சொல்லும் “யாருடா, அந்தக் கபாலி” என்ற வசனத்தை யோசித்துப் பார்க்கவும். படத்தில் எங்கு வராத, வர முடியாத காட்சி அது. டீசருக்கு என்றே பிரத்யேகமாக எடுத்து இணைத்திருக்கிறார்கள்.
அடுத்து, அதிகார மையங்களுடன் இணைந்து படத்தின் தயாரிப்புக்குழு நிகழ்த்திய வணிக எதேச்சாதிகாரம். இந்த அளவு அதிகக் கட்டணக் கொள்ளையை, தமிழ்த் திரையுலக வரலாறு கண்டதில்லை. அதிகம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதால் கார்ப்பரேட்டுகளுக்கு முதல் நாள் டிக்கெட்டுகளை அள்ளிக் கொடுத்து விட்டு, கீழ் நிலை ரசிகர்களைத் தியேட்டர் பக்கம் வரவிடாமல் செய்தது சோகம். அது இத்தனை ஆண்டு காலம் திரையரங்குகளைத் திருவிழாக்களாக மாற்றி, சினிமாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அவர்களுக்குச் செய்த துரோகம்.
இவ்வளவு சீர்கேட்டை நிகழ்த்திவிட்டு, படத்தில் சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய கருத்துகளை ஆங்காங்கே பேசினால், அது எடுபடுமா என்ன?
பெரும் எதிர்பார்ப்பைப் பொய்யாகக் கிளப்பி, அதன் மூலம் பெரும் வசூல் வேட்டையை நடத்திவிட்டனர்., இன்னும் சில நாட்களுக்கு எத்தனை கோடி லாபம் எனச் சாதனை செய்திகள் அணிவகுத்து வரும். அதனுடன் சேர்த்துக் கொள்ள இன்னொரு சாதனையும் உள்ளது.
அது, இணைய தளங்களில் திருட்டுத்தனமாகப் படங்களை வெளியிடுபவர்களுக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் நடந்த நிழல் மோதல் பற்றியது. பட வெளியீட்டின் போது, தயாரிப்பாளர் தாணு படத்தை இணைய தளங்களில் வெளியிட தடையுத்தரவு வாங்குகிறார். சில டொமைன்கள் தடையாகின்றன. உடனே கணப்பொழுதில், புது டொமைன்கள் முளைக்கின்றன. பொதுவாக, திருட்டு இணைய தளங்களில் படம் வெளியாகி ஒருநாள் கழித்து வெளிவரும். கபாலியோ, படம் முதல் காட்சி முடிந்து, சில நிமிடங்களில் இணையத்தில் வெளியாகிறது. அது சமூக வலைத் தளங்கள் மூலமும், தகவல் தொடர்பு மொபைல் செயலிகள் மூலமாகவும், உடனே லட்சக்கணக்கில் பார்வையாளர்களைச் சென்று அடைகிறது. சட்ட விரோதமானது எனத் தெரிந்தும், இத்தளங்களுக்குச் சமூக வலைத்தளங்களில் நேரடியான பெரும் ஆதரவு குவிகிறது. ஒரு பக்கம் கட்டணக் கொள்ளை, இன்னொரு பக்கம் அதிவேகத் திருட்டு வெளியீடு, மற்றொரு பக்கம் திருட்டு வெளியீட்டுக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவு - இவை அனைத்துமே கபாலி சார்ந்து நாம் உரையாட வேண்டிய முக்கிய நிகழ்வுகள். பேராசையும், முறைகேடும் சமூகத்தில் நீக்கமற நிறைத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியதும், கபாலியின் சாதனைகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

.

Saturday, July 16, 2016

தீபன் - துரத்தும் துயரம்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8679



சென்ற வருடம், கேன்ஸ் மற்றும் பிற திரைப்பட விழாக்களில்  கலந்துக் கொண்டு பல விருதுகளைப் பெற்ற ப்ரெஞ்ச் திரைப்படமான "தீபன்", மினியாபோலிஸ் அப்டவுண் தியேட்டரில் ஜுன் மாத நடு வாரத்தில் திரையிடப்பட்டது. ப்ரான்சில் வசிக்கும் பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஷோபா ஷக்தி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் - ப்ரெஞ்ச் இயக்குனர் அவ்தியாத்.


---


நான் தூத்துக்குடியில் இருந்த பொழுது, சிறு வயதில் அடிக்கடி இரு சாதிகளுக்கிடையே நடைபெறும் சாதி கலவரங்களைக் காணும் பொழுது, இது போன்ற சண்டைச் சச்சரவு  இல்லாத இடத்திற்குச் சென்று விட அவ்வயதில் தோன்றும். பிறகு, கோயமுத்தூரில் படிப்பு. அங்கு அவ்வப்போது மத கலவரங்கள் நிகழ்ந்ததுண்டு. வருடந்தோறும், சில நாட்களில் பாதுகாப்பு சடங்குகள் அதிகமாகி, கலவரம் இல்லாமலே பீதி கிளம்பும்.


அப்புறம், பெங்களூரில் வேலை. கன்னட மொழிப்பற்று உள்ளவர்களிடம் தமிழில் பேசிப் பாருங்கள். இது நம்மூர் இல்லை என்பது உடனே நினைவுறுத்தப்படும்.


அச்சமயம், ஒரு கதை எழுதினேன். இது போன்ற அனுபவங்களையும், அச்சமயம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சில இனவெறி தாக்குதல்களையும் இணைத்து, ஒருவனை எங்கு சென்றாலும் வன்முறை துரத்துவதாக.


தீபன் படத்தின் அடிநாதமும் அதுவே. இலங்கை ஈழ போரில் போராளியாக இருந்த ஒருவன், அகதியாக இடம் பெயரும் போது, வந்த இடத்திலும் அவனைத் துரத்தும் வன்முறை நிகழ்வுகளை எவ்வாறு எதிர்கொண்டு, அதிலிருந்து அமைதியான இல்லற நேச வாழ்வுக்கு மீண்டு செல்கிறான் என்பதே தீபனின் கதை.




இலங்கை ஈழப் போர் உச்சத்தை எட்டி, புலிகள் தோல்வியடைந்த காலக்கட்டத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. போரில் மரணமடைந்த சக போராளிகளை உடல் தகனம் செய்துவிட்டு, ப்ரான்ஸுக்கு அகதியாக கிளம்பும் தீபன், கூடவே முன்பின் அறிமுகமில்லாத யாழினி என்ற பெண்ணை மனைவியாகவும், இளயாள் எனும் சிறுமியை தனது மகளாகவும் தன்னுடன் அழைத்து செல்கிறான். ஐரோப்பியாவில் புகலிடம் பெற ஏதுவாக, ஒரே குடும்பம் எனும் வெளிச்சித்தரிப்பில், மூன்று அறிமுகமில்லாதவர்கள் ப்ரான்சிற்கு பயணிக்கிறார்கள்.


பொதுவாக, உள்ளூரில் அறிமுகமில்லாதவர்களும் வெளியூரில் சந்தித்துக் கொண்டால், ஒரே ஊர் எனும் உறவை உடனே பெற்றுவிடுவார்கள். வெளியுலகிற்காக உறவு எனும் போர்வையில் குடும்பமாக நடிப்பவர்களை, காலம் எப்படி உண்மையான  அன்னியோன்ய குடும்பமாக மாற்றுகிறது என்பதை தீபன் உணர்வுபூர்வமாகக் காட்டுகிறது.


பாரிஸில் கேர்டேக்கர் என்னும் தனிப்பட்ட குடும்ப உதவியாளர்களாக தீபனும், யாழினியும் பணிபுரிய, மகள் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறாள். குழந்தைகள் எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கேற்ப, இளயாள் விரைவிலேயே தீபனையும், யாழினியையும் பெற்றோராக பார்க்க, பெரியவர்களான தீபனையும், யாழினியையும், இந்த போலியான கணவன்-மனைவி என்னும் சங்கிலி அலைக்கழிக்கிறது.


மகிழ்வான பொழுதில் தங்களை அறியாமல் கிண்டல் அடித்துக்கொண்டு, காமப்பொழுதில் தவிர்க்க முடியாமல் இணைந்துக்கொண்டு, சங்கடப்பொழுதில் தங்களுக்குள் அக்கறைக்கொள்பவர்கள், மனஸ்தாபம் கொள்ளும் பொழுது மட்டும், தாம் உண்மையான கணவன் - மனைவி அல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறார்கள். இவ்வெண்ணம் இவர்களுக்குள் ஒரு நிரந்தர கோட்டை எப்பொழுதும் போட்டு வைத்திருக்கிறது. அச்சமயம்,  இவர்கள் ஒரு பெரும் வன்முறைத்தருணத்தை எதிர்க்கொள்ள நேர,  இறுதியில் உண்மையான குடும்பமாக ஒன்றிணைகிறார்கள்.


பாரிஸில் இவர்கள் இருக்கும் பகுதியில், ஒரு வன்முறைச் சூழல் எந்நேரமும் நிகழலாம் என்பது போல் போதைப்பொருளைக் கையாளும் இரு கும்பல்கள் முட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தீபனும், யாழினியும் தாங்கள் பணிபுரியும் இடங்களில் இவர்களைக் கடக்க நேர்கிறது. வாழ்வின் முன் பகுதியில், பிறந்த நாட்டில் போர்ச்சூழலைச் சந்தித்த இவர்களுக்கு இச்சூழல் பெரிதாக இருக்க போவதில்லை. ஆனாலும், அதைத் தவிர்த்து செல்லவே விரும்புகிறார்கள். இருப்பினும், தவிர்க்க இயலா நிலை ஏற்படும் போது, தீபனுக்குள் இறக்காமல் இருக்கும் போராளி திரும்ப வருகிறான். முன்பு, இனத்துக்காக போராடியவன், இச்சமயம் தன் குடும்பத்தைப் போராடிக் காக்கிறான். ஒவ்வொரு குடும்பஸ்தனுமே, தன் குடும்பத்தைக் காக்கும் போராளிதானே!!


யாழினியின் உறவு, இங்கிலாந்தில் இருக்க, இவர்களும் இறுதியில் இங்கிலாந்து சென்று அமைதியான இல்லற வாழ்வில் ஈடுபடுவதாக படம் முடிகிறது. வன்முறையைத் தவிர்க்க நினைப்பவர்கள், எங்கிருந்தாலும் வன்முறையைத் தவிர்ப்பார்கள். வன்முறையை எதிர்கொள்ள நினைப்பவர்கள், எங்கிருந்தாலும் வன்முறையை எதிர்கொள்வார்கள்.


---


பொதுவாக, நான் இதுவரை பார்த்த ஈழப்போர், ஈழ மக்கள் பற்றிய படங்களில் ஒரு அன்னியத்தன்மை இருக்கும். அது பெரும்பாலும் ஈழ கலைஞர்கள் பங்களிப்பு இல்லாமல், வெளி கலைஞர்களின் படைப்பாக்கத்தால் வந்த காரணத்தால் இருக்கும். ஈழம் பற்றிய அவர்களது வெளிபுரிதல் அவ்வாறான ஒரு செயற்கைத்தன்மையை வெளிபடுத்தியிருக்கும். இந்த படத்தையும் காணச் செல்லும் முன்பு, அப்படி ஒரு எதிர்பார்ப்பே இருந்தது. காரணம், படத்தை எடுத்திருப்பது ஒரு ப்ரெஞ்ச் இயக்குனர். ஆனால், எனது அந்த எதிர்மறை எதிர்பார்ப்பு, படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தவிடுபொடியானது. ஒரு ப்ரெஞ்ச் இயக்குனர் எடுத்த படமா? எனும் ஆச்சரியம் மேலோங்கியது. தீபன், யாழினி, இளயாள் என்ற இந்த மூன்று ஈழ மனிதர்கள் உணர்வுபூர்வமாகத் திரையில் நடமாடினார்கள். இவர்களுக்கிடையேயான காட்சிகள், தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டிருந்தன. எழுத்தாளர் ஷோபா சக்தி (ஜேசுதாசன் அந்தோணிதாசன்) யின் பெயர், நடிகராக மட்டுமே படத்தில் க்ரடிட் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரின் பங்களிப்பு அதைத் தாண்டி இருந்ததாக அறிகிறேன். அதுதான் உண்மையாக இருக்குமேன நம்புகிறேன். ஒரு கலைப்படைப்பு தத்ரூபமாகவும், கலாபூர்வமாகவும் வர, அனுபவம் வாய்ந்த இலக்கியவாதி+இயக்குனர் கூட்டணி எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் காட்டுகிறது.


தீபன் என்று படத்திற்கு வைத்திருக்கும் பெயரே, இப்படத்திற்கு ஈழத்துடனான இருக்கும் உண்மையான நெருக்கத்தைக் காட்டுகிறது. ஈழ வரலாற்றில் தீபன், திலீபன் போன்ற பெயர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் அனைவரும் அறிந்தது தானே?


படத்தில் ப்ரெஞ்ச், தமிழ், ஆங்கில மொழிகள் பேசப்பட்டிருக்கின்றன. ப்ரெஞ்ச் பேசப்படும் நேரத்தில், சப்-டைட்டிலைக் காண வேண்டி இருப்பதால், படத்துடன் முழுமையாக ஒன்ற முடியவில்லை. அது படத்தின் குறையல்ல. கதாபாத்திரங்களால் மாறி, மாறி மொழிகள் பேசப்படுவதால், ஒரு சிறு குழப்பம் ஏற்படுகிறது. தவிர, ஒரு புதிய நாட்டிற்கு வந்து சில நாட்களிலேயே, இவ்வளவு சரளமாக ஒரு அன்னிய மொழியைப் பேச முடியுமா? எனும் சந்தேகமும் நம்பகத்தன்மையைச் சிறிது குலைக்கிறது.


அவார்ட் வாங்கிய படமென்றாலே, அது ஆர்ட் படம் என்பது தெரிந்து போகும். ஆர்ட் படம் என்றாலே மெதுவாக தான் செல்லும் என்பது எழுதப்படாத இலக்கணம். அந்த புரிதல் இருந்தால், படம் மெதுவாக செல்கிறது என்பது குறையாக இருக்காது. ஒரு மன சோர்வுற்ற நேரத்தில், தீபன் மதுவருந்திவிட்டு, 'நிலா அது வானத்து மேலே' போட்டுக்கொண்டு, இளையராஜா குரலுடன் தானும் கூடவே சேர்ந்து பாடுகிறான். படத்தில் கமர்ஷியல் ரசிகன் கைத்தட்டி, ஆட்டம் போடவும் ஒரு காட்சியை வைத்திருக்கிறார் இந்த ஆர்ட் டைரக்டர். :-)


(கபாலி வாய்சில் வாசிக்கவும்) "ஆர்ட் டைரக்டர்'ன்னா எப்பவும் மெதுவா போற சீனையும், அழுற சீனையும் மட்டும் தான் எடுப்பார்'ன்னு நினைச்சியா, இது அவ்தியாத்'டா" என்று சொல்லாமல் சொல்லி, படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் சண்டைக்காட்சியையும் தத்ரூபமாக, அதிரடியாக ரத்தம் தெறிக்க எடுத்திருக்கிறார் இயக்குனர்.


யாழினியாக நடித்திருக்கும் தமிழ் நடிகை காளிஸ்வரியும், தீபனாக நடித்திருக்கும் எழுத்தாளர் ஷோபா சக்தியும், இவர்களின் மகளாக நடித்திருக்கும் சிறுமி க்ளாடினும் சிறப்பான நடிப்பை, மற்ற ப்ரெஞ்ச் நடிகர்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கதாபாத்திரங்களுக்கு இவர்களின் தேர்வே, படத்தின் நம்பகத்தன்மையை பெருமளவு கூட்டியிருக்கிறது. படம் பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியாவில் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பொருத்தமான பகுதிகளில் எடுக்கப்பட்டிருப்பதும், படத்துடன் ஒன்றச் செய்கிறது.


முன்பின் அறியாதவர்களுடன் குடும்பமாக வாழும் போதும், பணிபுரியும் போதும் ஏற்படும் தயக்கம் கலந்த உணர்வை, படம் முழுக்க அழகாக வெளிபடுத்தியிருக்கிறார் காளிஸ்வரி. இவர்களைப் பிரிந்து இங்கிலாந்தில் இருக்கும் தனது உறவுகளுடன் சென்று சேர்ந்துவிட நினைக்கும் குழப்ப உணர்வையும் சரியாக வெளிகாட்டி இருந்தார். ஷோபா சக்திக்கு தான் வாழ்ந்த வாழ்க்கையை நடித்து காட்டும் வாய்ப்பு என்பதால் நடிப்பில் குறையே வைக்கவில்லை. சமிபத்தில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருதைப் பெற்ற ஷோபா சக்திக்கு, எமது வாழ்த்துகள்.


ஒரு காட்சியில், ஒரு முன்னாள் போராளியை தீபன் சந்திக்கிறான். போர் முடிவுற்றது என்பதை ஒப்புக்கொள்ள முடியாமல், இன்னமும் ஆயுதங்கள் வாங்கி அனுப்ப செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் அந்த போராளி. சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டும், சிலர் போலித்தனத்துடன் இவ்வாறு வாழ்ந்துக்கொண்டு இருப்பதும், உலகின் பல பகுதிகளில் இருக்கிறது போலும். எனக்கு தமிழகத்தின் சில இயக்கங்கள் நினைவுக்கு வந்து சென்றன, இக்காட்சியின் போது.


---


இது ஈழத்தைப் பற்றிய படமோ, ஈழப்போர் பற்றிய படமோ அல்ல. முன்பே சொன்னது போல், ஈழப்போர் முடியும் காலக்கட்டத்தில் இப்படம் ஆரம்பிக்கிறது. ஒரு போரால் பாதிக்கப்பட்டு, வெளிநாடுகளில் வாழ்க்கையைத் தொடரும் ஏதிலிகள் அனுபவிக்கும் துயரத்தைக் காட்டும் படம் இது. அதை ஈழப்போரால் பாதிக்கப்பட்டு, ப்ரான்சில் அகதிகளாக வாழும் சில கதாபாத்திரங்கள் மூலம் இயக்குனர் இப்படத்தில் காட்டியிருக்கிறார்.  ஆனால், இது உலகம் முழுக்க வாழும் அனைத்து அகதிகளின் வாழ்விற்கும் பொதுவானது. அகதி வாழ்வின் மீதான நம் கண்ணோட்டத்தை மாற்ற கூடிய படமிது.



.

Friday, April 17, 2015

ஒகே கண்மணி - ஒகேவான மணிரத்னம்



பல நாட்களாக ஒரு ஆசை. மணிரத்னம் உட்கார்ந்து பார்க்குற மாதிரி ஒரு படம் எடுத்துற மாட்டாரா? என்று. ஆசையை இன்று நிறைவேற்றிவிட்டார்.

எத்தனை ப்ளாப் கொடுத்தாலும், மணிரத்னத்தை ரசிப்பவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். நம்பிக்கை வைத்து, முதல் நாளே செல்கிறார்கள். நான் எதிர்பார்க்கவேயில்லை. எங்கூர் (மின்னியாபோலிஸ்) தியேட்டர் இப்படி நிரம்பி கிடக்கும் என்று. நானும் நண்பரும் குடும்பத்துடன் சென்றிருந்தோம். கொஞ்சம் லேட்டாக சென்றதால், இடம் கிடைக்காமல் மனைவிமார்கள் தனியாக உட்கார, நாங்கள் தனியாக உட்கார்ந்தோம். இம்மாதிரி நடந்தது முதல் முறை.

கதை ஏற்கனவே வைரமுத்து சொன்னது தான். லிவிங் டூகெதர் பற்றியது. அதை சிரமப்படாமல், மணிரத்னத்திற்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்.

படம் எனக்கு பிடித்திருந்தது. நான் எதிர்பார்ப்பே இல்லாமல் சென்றிருந்தேன். என்னை உட்கார்ந்து நெளியாமல் பார்க்க வைத்தால் போதும் என்பது தான் எனது அதிகபட்ச எதிர்பார்ப்பு. அதை படம் நிறைவேற்றிவிட்டது.

சிறிய நடிக பட்டாளம். அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள். மணிரத்னம் டெம்ப்ளேட் புரிந்தவர்களுக்கு, யார் யார் எதற்கு எதற்கு திரைக்கதையில் உதவ போகிறார்கள் என்று கதாபாத்திர அறிமுகங்களின் போதே தெரிந்திருக்கும். அலைபாயுதேவில் கொஞ்ச நேரம் வரும் அரவிந்த்சாமி என்றால் இதில் படம் முழுக்க வரும் பிரகாஷ்ராஜ். யாரையும் போட்டு தாக்காமல், பில்குட்டுடனே படம் முடிகிறது.

படம் வருவதற்கு முன்பு 'மெண்டல் மனதில்' பாடல் மட்டுமே கேட்க பிடித்திருந்தது. படத்தில் கேட்க, அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது. 'பறந்து செல்லவா' முதலில் கேட்கும் போது, என்னடா இதுவென்பது போல் இருந்தது. படத்தில் லூபி ஆப் பற்றி சொல்லிவிட்டு வரும்போது, ரஹ்மான் இசையின் மேஜிக் தெரிந்தது. அது யாருப்பா? பிஜிஎம்மில் ரஹ்மானுடன் பங்கு போட்டுக்கொண்டது?

பொதுவாக மணிரத்னம் படங்களில் ரஹ்மான் பாடல்கள் நன்றாக படமாக்கப்படும் என்பது போல், வேஸ்ட் செய்யப்படுவதும் நடக்கும். இந்த படத்தில் நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஹ்மான் மகன் பாடல் கூட சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பி.சி. ஸ்ரீராம் கேமராவை ஆட்ட வேண்டிய இடத்தில் ஆட்டி, நனைக்க வேண்டிய இடத்தில் நனைத்து, நம்மை காட்சிக்குள் கொண்டு செல்கிறார்.

படமாக்கத்தில் பணிபுரிந்திருக்கும் அனைத்து கலைஞர்களும் லெஜண்ட்ஸ் என்றாலும் லைட்டாக, ஜாலியாக ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்.

ரயில், கடற்கரை, புறா என்று மணிரத்னம் க்ளிஷே இல்லாமல் இல்லை. அதெல்லாம் சேர்ந்ததுதானே 'ஏ மணிரத்னம் பிலிம்'.

யூகிக்கக்கூடிய திரைக்கதை, அழுத்தமில்லா காட்சிகள் என்று இருந்தாலும் போதிய நடைச்சுவையுடன் சலிப்பில்லாமல் செல்லும் படம் என்பதால் ஒகே கண்மணி ஓகே ஓகே.

மணிரத்னம் 80-90களில் ஸ்கோர் செய்த படங்களினால், இப்பொழுதும் அவர் படங்களுக்கு மார்க் போட ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர் தான் தயாரில்லாமல் இருந்தார். இதோ, இப்பொழுது இன்று மார்க் வேண்டி ரசிகர்களின் தேவைக்கேற்ப படம் எடுத்திருக்கிறார். ரசிகர்கள் மார்க் கேரண்டி.

மணிரத்னத்தின் அடுத்த 10 படங்களுக்கும் கூட்டம் தயார்.

.

Thursday, March 26, 2015

ஆச்சர்ய சிண்ட்ரெல்லா




மளிகை சாமான் வாங்க செல்லும் கடைக்கு பக்கத்தில் ஒரு திரையரங்கு இருக்கிறது.  வந்த புதிதில் மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆங்கிலப்படங்கள் மட்டும் திரையிடப்படுகிறது.

திரையரங்கை அடிக்கடி பார்த்தாலும், என்றும் போக தோன்றியதில்லை. எந்த படத்தையும் அப்படி அவசியம் பார்க்க வேண்டும் என்று தோன்றாததே காரணம்.

செவ்வாய்க்கிழமைகளில் சலுகை விலை போலும். சிண்ட்ரெல்லா பார்க்கலாம் எனத் தோன்ற, என் பொண்ணுக்கு பிடிக்காமல் போனாலும், 'சரி பரவாயில்லை, கம்மி ரேட் தானே' மனநிலையில் சென்ற செவ்வாய் அன்று சென்றோம்.

டிக்கெட் எடுக்கும்போதே, சீட் செலக்ட் செய்ய சொன்னார்கள். நான் இதை அமெரிக்காவில் முதன்முறை பார்க்கிறேன். ஏஎம்சி, ரீகல், யூனைடட் ஆர்ட்டிஸ்ட்ஸ் போன்ற பெரிய சங்கிலி திரையரங்குகளிலும் இவ்வாறு பார்த்ததில்லை. இந்த முறையால், சீக்கிரம் வந்தால் வசதி. இல்லாவிட்டால், சங்கடம்.

புதிதாக சீரமைக்கப்பட்டதால், சுத்தமாக இருந்தது. அரங்கின் கதவின் திறந்துக்கொண்டு உள்ளே செல்லவே, ஆச்சரியங்கள் தொடங்கியது.

மெல்லிய சிகப்பு விளக்குகள், இருட்டில் நடைப்பாதையைக் காட்ட, அழகாக இருந்தது.

அகண்ட திரை. ஆனால், குறைந்த இருக்கை வரிசைகள். அனைத்து இருக்கைகளும், லக்ஸரி குஷன் சோபா வகை. பட்டனை அழுத்தினால், இருக்கை கிட்டத்தட்ட படுக்கை ஆகிறது. படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, என் பொண்ணுக்கு பெரிய விளையாட்டு சாமான் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டேன்.

உள்ளே செல்லும்போதே, திரையில் ஃப்ரோசென் ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ கொஞ்ச நேரம் ஓட்டுகிறார்கள் என்று நினைத்தால், தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. சரி, அரங்கு மாறி வந்துவிட்டோமோ? இல்லையே, ஃப்ரோசென் எங்கும் ஓடவில்லையே! என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, அதை நிறுத்திவிட்டு சிண்ட்ரெல்லா தொடங்கினார்கள்.

சிண்ட்ரெல்லா - உலகில் எல்லோருக்கும் தெரியும் கதை. ஆனால், பாருங்கள். எனக்கு மறந்துவிட்டது!!! ஒரு சின்ன பெண், சித்தி, ஏதோ மாயாஜாலம் - எவ்வளவு யோசித்தும், இவ்வளவு தான் நினைவுக்கு வருகிறது. என்னடா, நம்ம மெமரி என்று படம் பார்க்கும் முன்பு நொந்துக்கொண்டேன்.

ஆனால், படம் பார்க்கும் போது, இது நல்லதாகப் போய்விட்டது. கொஞ்சம் கதை திருப்பங்கள் தெரியாமல் படம் பார்த்தேன். பார்த்தப்பிறகு, இது நமக்கு தெரியுமே என்று தோன்றிக்கொண்டே இருந்தது, புது அனுபவம். முடிவு, எல்லோராலும் யூகிக்க முடியும் என்றாலும், உணர்வுபூர்வ நடிப்பால் சலிப்படைய செய்யவில்லை.

சிம்பிளான கதை. நடிகர்களும் சிம்பிளாக இருந்தார்கள். நாயகி, ரொம்ப சிம்பிள். வழக்கமான சினிமா நாயகிக்குரிய எந்த அம்சமும் இல்லை. படத்தை பெரும்பாலான இளம் குமாரிகளிடம் கொண்டு சேர்க்கும் டிஸ்னியின் முயற்சியாக இருக்கலாம்.

ஃப்ரோசென் மூலம் சிறுமிகளைக் குறி வைத்தது போல், இப்படத்தின் மூலம் வயதிற்கு வந்த குமரிப்பெண்கள் குறி வைக்கப்பட்டிருக்கலாம். சிண்ட்ரெல்லா மெர்கண்டைஸ் வாங்க, பர்ஸை ரெடி செய்யுங்கள் பெற்றோர்களே!

சின்ன கதை என்றாலும், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஓடுகிறது. சிம்பிள் கதை என்றாலும், உழைப்பதற்கு ஏகப்பட்ட காரணிகள் இருக்கிறது. ராஜா காலத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எளிமையான அறைகளும், பிரமாண்டமான மாளிகைகளும் காணக்கிடைக்கின்றன. எலி, வாத்து போன்றவை பேசிக்கொண்டு திரிகின்றன. எது கிராபிக்ஸ், எது பயிற்றுவிக்கப்பட்ட நடிப்பு என்று தெரியவில்லை. பின்னணியில் ஒரு வாத்து அங்கிட்டும், இங்கிட்டும் நடந்துக்கொண்டு, சாலையில் வரும் வாகனங்களுக்கு மிரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அது கூட, கிராபிக்ஸாக இருக்கலாம்!

செண்டிமெண்ட், காதல், மாயாஜாலம் கொண்ட கதை. மாயாஜாலக் காட்சிகளில் மட்டும் என் பொண்ணு ஆக்டிவ்வாக திரையைப் பார்த்தாள்.

மெல்லிய நீரோடை போன்ற கதையமைப்புடன் கூடிய படத்தை, கிட்டத்தட்ட படுக்கை அமைப்புடன் அமைதியான ஜென் மனநிலையுடன் பார்த்தது பொருத்தமாக இருந்தது.

வெளியே வரும் போது, என் மனைவி சொன்னாள்.

"ஏங்க நம்ம தமிழ் படம் போடும் தியேட்டரும் இது போல இருந்தா நல்லாயிருக்கும் இல்ல?"

"ஏன்?"

"படம் ரொம்ப நேரம் ஓடும். உட்கார்ந்து, சாய்ந்து படம் பார்க்க நல்லாயிருக்கும். நீங்க கோச்சடையான் மாதிரி ரெண்டாம் முறை படத்துக்குக் கூட்டிட்டு போனா, தூங்க வசதியா இருக்கும்"

#$%^&*

.

Friday, January 25, 2013

விஸ்வரூபம்

நான் விஸ்வரூபம் எங்குமே வெளியிட மாட்டார்கள் என நினைத்திருந்தேன். இரவு 8:30 க்கு தான் ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன். 9 மணிக்கு ப்ரிமீயர் என்று. மனைவி வரவில்லை என்று சொல்ல, தனியே கிளம்பினேன்.

இந்த தியேட்டருக்கு இதற்கு முன்னால் சென்றதில்லை. என் நேரத்திற்கு ஜிபிஎஸ் காட்டிய வழியில் சாலையை மூடி வைத்திருந்தார்கள். திரும்ப வேறொரு வழியை சொல்ல, ஒரு வழியாக தியேட்டர் போய் சேர்வதற்குள், படம் பத்து நிமிடங்கள் ஓடி விட்டது. படத்தில் வரும் ஒரு சேசிங் சீன் போல இருந்தது, என் அனுபவமும்.

---

விஸ்வரூபம் எந்த விளம்பரமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டது. 100 கோடி பட்ஜெட் என்று சொன்ன போதும், எனக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியான போது இருந்து ஆரம்பித்த எதிர்பார்ப்பும் கூடவே எதிர்ப்பும் உச்சத்திற்கு சென்று எகிறியடித்தது.

முடிவில் இரண்டு வார தடையுத்தரவும் வந்து சேர, எவ்வளவு செலவு செய்தும் கிடைக்காத ஹைப் படத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

---

கமல் இயக்கம் என்பது தான் என்னளவில் இந்த படத்தின் மீது பெரிய ஆர்வம் கிளம்பாதற்கான காரணம். எப்படியும் ஒரு தடவை பார்த்தால் புரிந்து விடாத மொழியில் படமெடுப்பவர் என்பது அவர் மீதான என் அபிப்ராயம். தியேட்டரில் பார்த்த பிறகு, பின்பு அந்த படத்தைப் பற்றிய கட்டுரை படித்தாலோ, டிவியில் பார்த்தாலோ, சிலாகிக்க விஷயங்கள் வந்து சேர்ந்தாலும், தியேட்டரில் முதல்நாள் கொண்டாடும் விதத்தில் படமெடுக்க மாட்டார் என்பது ‘இயக்குனர் கமல்’ மீதான என் ஆழ்ந்த நம்பிக்கை.

இந்த படத்தில் அந்த நம்பிக்கையை கொஞ்சம் பெயர்த்து எடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ‘இயக்குனர் கமல்’ முதன் முறையாக கமர்ஷியல் படமெடுத்து இருக்கிறார். அம்பி போல இருந்து, திடீரென்று வீராவேசம் காட்டுவது எல்லாம் காலகாலமாக தமிழ் படங்களில் பார்த்தாலும், கமல் இயக்கத்தில் நான் எதிர்பாராதது.

---

கமல், எந்த நம்பிக்கையில் ‘இஸ்லாமியர் இந்த படத்தை பார்த்த பின்பு, எனக்கு பிரியாணி விருந்தளிப்பார்கள்’ என்று சொன்னார் என்பது தெரியவில்லை. மிலாடி நபிக்கு வீட்டில் பிரியாணி செய்திருந்தால் கூட தர மாட்டார்கள்.

அதற்காக அவரை குறை சொல்லவில்லை. தாலிபன் தீவிரவாதிகள், அல்-கொய்தா, பின்லேடன் என்று கதை களன் இருக்க, இப்படி தான் காட்ட முடியும். இல்லாவிட்டால், இந்த கதைக்களனை விட்டுவிட்டு, பாலக்காட்டு சமையல்காரர் கதையைத்தான் எடுக்க வேண்டும்.

நம்மூர் இஸ்லாமிய அமைப்புகள், இந்த படத்திற்கு காட்டும் எதிர்ப்பைப் பார்க்கும் போது, அவர்கள் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. இப்படி அடாவடியாக மிரட்டி, படத்தை தடை செய்திருப்பதே, தீவிரவாத செயலாகத்தான் தெரிகிறது.

---

நடிகர் கமலை பற்றி சொல்ல எதுவும் இல்லை. பெண்மை நளினத்துடன் அவர் நடக்கும் காட்சிகளில், அவரின் நடிப்பை கண்கொட்டாமல் பார்க்கலாம். அவர் புத்திசாலித்தனமாக பேசும் காட்சிகளில் தான் சலிப்பு வருகிறது.

டெக்னிக்கலி சில விஷயங்கள் பாராட்டும்படி இருந்தாலும், சில பல்லிளிக்கும் காட்சிகளும் இருக்கிறது. கமல் (சர்க்கஸ்) சாகசங்கள் பண்ணுவதாக காட்டும் காட்சியில், அவருக்கு பொருத்தமில்லாத உடலில் அவர் தலையை ஒட்டி... நல்லா இல்லை போங்க.... வன்முறை காட்சிகளை (கை துண்டாவது, உடல் இரண்டாக போவது) நல்ல தொழில்நுட்பத்தில் அமைத்திருப்பதை, எப்படி பாராட்டுவது?

மற்றபடி, நம்ம கண்ணுக்கு சுலபத்தில் புலப்படாத வகையில் டெக்னிக்கல் அம்சங்கள் இருப்பது, பாராட்டத்தக்கது.

பொதுவாக, படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாவிட்டால், இரண்டாம் பாகம் என்று முடிப்பார்கள். இதில் நச்சென முடிக்கவில்லை என்ற காரணத்தால், இரண்டாம் பாகம் என்று சொல்லி முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

படத்தில் லாஜிக்கல் தவறுக்கள் பல இருக்கிறது. உதாரணமாக, இந்திய பிரதமர் அவராகவே முடிவெடுப்பதாக ஒரு காட்சியில் காட்டியிருக்கிறார்!!! துரோகம் செய்யும் மனைவி, இறுதியில் கணவன் மீது பாசத்தில், ஒன்றாக சாவோம் என்று சொல்லும் கிளிஷேக்களும் உண்டு. அதே சமயம், செல்போன் இயக்கத்தை தடுக்க மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தும் புத்திசாலித்தனமான காட்சிகளும் உண்டு.

படத்தின் ப்ளஸ் என்று லொக்கேஷன்களை சொல்லலாம். நியுயார்க் நகரம், அதன் வேறொரு மறுபக்கம்,ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களை சொல்லலாம்.

நிஜ உலக சம்பவங்கள், நபர்கள் என்று இணைத்து கதை அமைத்திருப்பது இண்ட்ரஸ்டிங்.

---

மொத்தத்தில், இந்த பாகத்தை இம்ப்ரஸிவாக முடிக்காவிட்டாலும், ’கமர்ஷியல் இயக்குனர்’ கமல், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை என்னுள் கிளப்பி விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ’இந்திய ஜேம்ஸ்பாண்ட்’ ரகத்தில் கமல் என்றால் எதிர்பார்ப்பு இருக்க வேண்டாம்?

.

Monday, December 5, 2011

வாங்க பாக்யராஜ் பத்தி பேசலாம்

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக பாக்யராஜ் படங்களை விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியாக ‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’ என்றொரு ப்ரோக்ராம் வருகிறது. சென்ற வாரம், வித்தகன். இந்த வாரம் - மயக்கம் என்ன.



நிகழ்ச்சியின் பெயராக ‘வாங்க சினிமா பத்தி பேசறேன்’ என்று வைத்திருக்கலாம் என்ற தோன்றும் அளவுக்கு பாக்யராஜ் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். பாக்யராஜ் நூறு வரிகள் பேசினார் என்றால் தனுஷும், செல்வராகவனும் சேர்ந்தே 10 வரிகள் தான் பேசியிருப்பார்கள்.

எனக்கு பாக்யராஜ் மேல் பெரும்மதிப்பு உண்டு. அவருடைய பழைய படங்கள் அப்படி. ரொம்ப பிடித்த படங்கள். டிவியில் எப்ப போட்டாலும் பார்க்கலாம். காமெடியையும், செண்டிமெண்டையும் கலந்து புத்திசாலித்தனமாக காட்சியமைப்பதில் ‘இந்தியாவின் நம்பர் 1’ திரைக்கதையாசிரியர் என்று புகழப்பட்டவர்.

ஆனால், இப்போது அவர் படங்களைப் பார்க்கும் போது, சில வசனங்கள் ரொம்ப பிற்போக்குத்தனமாக தோன்றும். பெண்களைப் போற்றும் விதமாக காட்சியோ, வசனமோ இருந்தாலும், ஆண் ஒருபடி மேலிருந்தே அதை செய்வான். இன்னும் நிறைய உண்டு. எப்படி காலம் மாறினாலும், எடுத்த படங்கள் மாறதோ, அதுபோல் அந்த படங்களை எடுத்த படைப்பாளியும் மாறாமல் இருந்தால், படைப்பாளிக்கும் நஷ்டம். படைப்பாளியின் ரசிகர்களுக்கும் நஷ்டம். இங்கு பாக்யராஜ் பெர்பெக்டாக மேட்ச் ஆகிறார்.

அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கும் விஷயங்கள் பல காலாவதியாகிவிட்டது.

இந்த வார நிகழ்ச்சியில் அவர் படத்தின் குறையாக சொன்ன விஷயம் - படத்தின் இரண்டாம் பாதியில் காமெடி குறைந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், காமெடி காமெடி என்ற அளவுகோலுடனேயே இந்த படத்தை மதிப்பீடு செய்தார். படத்தின் மையக்கருத்தான மனித உறவுகளை பற்றியோ, உணர்ச்சிகளையோ பற்றியோ ஒன்றுமே சொல்லவில்லை. தனுஷின் நடிப்பை புகழ்ந்தவர், ரிச்சா நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றார்.

தனுஷுடன் ‘நாய் போல் வேலை பார்’ காட்சியைப் பற்றி பேசும் போது, ”நீங்கள் ஏன் முட்டிப்போட்டு நான்கு கால்களுடன் நடந்துக் காட்டவில்லை?” என்றார். என்ன பாக்யராஜ் சார் இது?

சென்றவாரம், வித்தகன் விமர்சனத்தின் போது, பல இடங்களில் இதை அப்படி எடுத்திருக்கலாம், அதை இப்படி எடுத்திருக்கலாம் என்று பாக்யராஜ் சொல்ல, பார்த்திபனும் ஆமாம் என்பது போல் ஒத்துக்கொண்டு தலையாட்டினார். (மதனுடனான நிகழ்ச்சியிலும் பார்த்திபன் இவ்வாறே பரிதாபமாக காட்சியளித்தார்) செல்வராகவன் அப்படியெல்லாம் இல்லாமல், ரொம்ப தன்னம்பிக்கையுடன் அது அப்படிதான் என்று பேசினார். (”தலைல பாட்டில் உடைக்கிறதுக்கூட காமெடித்தான்!!!”)

படைப்பாளியின் பலமும் பலவீனமும் தெரியும் இடங்கள் இவை.

.

Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு

தியேட்டர் சென்று பார்க்க மாட்டேன் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். சனிக்கிழமை போரடித்தால் செல்லலாம் என்றொரு எண்ணம் இருந்ததால், லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

ஏனோ தெரியவில்லை. நண்பருக்கு படம் பிடித்திருந்தது. சூர்யாவை புகழ்ந்துக்கொண்டிருந்தார்.

இன்று மதியம் அவரிடம் ‘ஏழாம் அறிவு போறேன். வாரீங்களா?’ என்றேன். எப்படியும் பார்த்தாச்சே! வர மாட்டார் என்றேண்ணினேன். ‘கண்டிப்பா வருவேன்’ என்று ஆச்சரியம் கொடுத்தார்.



இங்கு மூணு மணி ஷோவுக்கு சென்றோம். வெளியே சென்று ரொம்ப நாள் ஆவதால், எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்து, இந்த படத்துக்கு சென்றோம்.

---

படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வந்த நாளே பார்த்திருந்தால், அதை பற்றி சொன்னால் ஏதேனும் பிரயோஜனம் இருக்கும். டோங்லீ நாய்க்கு போட்ட கிருமி மாதிரி அதான் நல்லா பரவிடுச்சே!

இந்த படத்தின் மைனஸ் என்றால் அது படத்திற்கு கொடுத்த பில்டப் தான். அட்லீஸ்ட், போதிதர்மரையாவது கொஞ்சம் சஸ்பெஸ்சாக வைத்திருக்கலாம். அவரைப் பற்றி படம் வருவதற்கு முன்பே எல்லா சானல்களிலும் டாகுமெண்டரி ஒளிபரப்பி பெப்பை குறைத்துவிட்டார்கள்.

விமர்சனஃபோபியாவுக்கு பயந்து முன்ஜாக்கிரதையோடு இருப்பேன். இனி, பில்டப்ஃபோபியாவுக்கும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் போல?

பில்டப்பும் வித்தியாசமான பில்டப். அடக்கமாக கையை கட்டிக்கொண்டே பில்டப் கொடுத்தார்கள்.

முன்பு, நீதி உபதேசக்கதைகளில் தன்னடக்கம் முக்கியம், தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பது போல் நீதி வைத்து இருப்பார்கள். ஆனால், அப்ரைசல் வந்து விட்டால், நாம் அப்படியா இருக்கிறோம்? அதை செய்தோம், இதை செய்தோம் என்று பில்டப் கொடுப்போம் இல்லையா? அப்படி தான் எங்கும் ஆகிவிட்டது. பிழைக்க வேண்டும் என்றால் இப்படியொரு விளம்பரம் அவசியமாகிவிட்டது இக்காலத்தில். மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி!

---

இங்கு ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிட்டு இருந்தார்கள். சைனீஸ் கவர்மெண்ட் என்று வரும் இடங்களை, சைனீஸ் என்றே படத்தில் சொல்கிறார்கள். சப்-டைட்டிலுக்கு சென்சார் கிடையாதே!

கமல் பொண்ணு என்பதால் சில இடங்களில் கேமரா சுட்டதை கிராபிக்ஸ் துணைக்கொண்டு கண்ணியம் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் பெருமையை இவருடைய டமிழைக் கொண்டு சொல்கிறார்கள்.

ஏதாச்சும் பெருசா பண்ணனும், பண்ணனும் என்று யதார்த்ததை பல இடங்களில் விட்டுவிட்டு படம் செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கிய பல பிரச்சினைகளுக்கு முடிவு சொல்லாமல் படத்தை அம்போவென்று முடித்தது போல் இருக்கிறது.

---

நண்பருக்கு திரும்ப பார்த்தாலும், படம் பிடித்திருந்தது. ஆச்சரியமான விஷயம் தான். அதற்கு காரணம், தியேட்டரில் பார்த்தது தான். வீடு வரும்வரை புகழ்ந்துக்கொண்டு வந்தார்.

படம் சுமார் தான் என்று சொன்ன பிறகும், தியேட்டர் சென்று காசு செலவழித்து படம் பார்த்த எனக்கு எவ்வளவு பெரிய மனசு? என்னைப்போல் ரசிகர்கள் இருக்கும் வரை, தமிழ் சினிமா அழியாது. தமிழ் சினிமாவை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். (அது என்னமோ தெரியவில்லை. இந்த படத்தின் எபெக்ட். பில்டப் அதுவாக வருகிறது!!!)

.

Tuesday, August 25, 2009

நாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்



ஸ்வைன் ப்ளூ இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள, ரூபாய் 700 இல் இருந்து ரூபாய் 2500 வரை ஆகுமாம். இந்திய மாநில அரசுகளில் முதல்முறையாக, கர்நாடகாவில் இச்சோதனைகளை அரசின் செலவில், இலவசமாக செய்து கொள்ளலாமாம்.

தமிழ்நாட்டில் ஏதேதோ இலவசமாக கொடுக்கிறார்கள். இதையும் கொடுக்கலாமே?

---

எனக்கு பயணங்கள் பிடிக்கும். ஜன்னல் இருக்கை என்றால் ரொம்ப, ரொம்ப. இதற்காக ரயிலில் முன்பதிவு செய்யும்போது, சைட் லோயரை விருப்பமாக தேர்வு செய்வேன். கிடைத்தால் கொஞ்ச நேரம் ஜாலியாக இருப்பேன். இருட்டும் போது, யாராவது வருவார்கள். லேடிஸ் சார், (இல்லையென்றால், வயதானவர்கள்) மேலே ஏறி படுக்க முடியாது, நீங்க கொஞ்சம் மேலே போங்களேன் என்பார்கள். நானும் மறுபேச்சில்லாமல், இடத்தை காலி செய்வேன். இதற்காகவா, நான் கஷ்டப்பட்டு முன்பதிவு செய்தேன்? என முன்பெல்லாம் தோணும்.

இப்ப பழக்கமாயிடுச்சு. கடந்த இரு வாரங்களாக, ரயிலில்தான் பயணம் செய்து கொண்டிருந்தேன். இரவு உணவை முடித்து விட்டு, காத்து கொண்டிருந்தேன். என்னடா, இன்னும் யாரும் வரலை என்று. நினைத்து கொண்டிருந்த போதே, டிடிஆர் வந்தார். எதிர்பார்த்ததை கேட்டார். இந்த முறை இரு குழந்தைகளுடன் ஒரு பெண்ணாம். சரியென்று மேலே ஏறினேன். இன்னொருமுறையும் அதேப்போல்.

சுயநலம் தான். நாளை என் அப்பாவோ, அம்மாவோ வருவாங்க, இல்லை?

---

அதிமுகவுக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கட்சியின் நிதிநிலை சரியில்லை என்கிறார்கள். இரண்டாம் வரிசை பெரிய தலைகள், அதிமுகவாலேயோ அல்லது திமுகவாலேயோ தூக்கப்படுகிறார்கள். அதிமுக பற்றி இன்னொரு ஆச்சரியமூட்டும் செய்தி கேட்டேன். கருணாநிதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்ததற்கு ஆதரவு தெரிவித்துள்ளார், ஜெயலலிதா.

’திருவள்ளுவரும் சர்வக்ஞரும் சமமானவர்களா?’ அப்படின்னு ஏதாச்சும் கேள்வி கேட்டு குற்றம் சாட்டியிருக்கலாமே? நான் சமீபத்தில் இப்படியொரு கேள்வி கேட்டு ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் கண்டேன். ஏதோ திருவள்ளுவர் சொல்லி, எல்லாம் கேட்டுட்ட மாதிரி.

---

அதிமுக இடைதேர்தலை புறக்கணிப்பதாக சொல்லியும், ஓட்டு சதவிகிதம் அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்க போகிறார்கள்? ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில், ஓட்டுப்போட்ட மை கையில் இருந்தால், விரல் வெட்டப்படும் என்று சொல்லியும் மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.

சும்மா சொல்லி வதந்தி கிளப்பவில்லை. நிஜமாகவே, இருவரின் ஓட்டு போட்ட விரலை வெட்டி எறிந்திருக்கிறார்கள். நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்? கையில நோட்டு. குத்துறேன் ஓட்டு.

---

ஷாருக்கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் இழைக்கப்பட்ட ’அநீதி’, இன்று இந்தியா முழுமைக்கும் தெரிந்திருக்கிறது. வேறு எந்த நாட்டிலும், மீடியா இது போன்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையாம். ஜப்பானில், இது எல்லாம் ஒரு செய்தி, என்று பேப்பரில் வரவே வராதாம்.

ரூல்ஸ் இஸ் ரூல்ஸ். அவ்வளவுதான். இது பரவாயில்லை. போன ஞாயிறு, நம்ம தினத்தந்தியின் தலைப்பு செய்திகளில் ஒன்று.

ரம்பா வீட்டின் முன் ரசிகர் ரகளை.

---

விநாயகர் சதுர்த்தி அன்று ஈச்சனாரி பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன். அவருடைய பிறந்தநாள் என்பதால் (பிறந்தநாள் தானே?), அவருக்கு வாழ்த்து சொல்ல வழக்கத்திற்கு மாறான கூட்டம். ஆனால், நம்மூர் அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கு, லைன் கட்டி நிற்பார்களே? அந்த அளவுக்கு இல்லை. சின்ன வரிசைதான் என்று எப்போதும் தோன்றும் வகையில் அனுப்பிகொண்டிருந்தார்கள்.

வெளியே ஒருவர், வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பிள்ளையார் பாடல்கள் கொண்ட வீடியோ டிவிடியை இலவசமாக வழங்கி கொண்டிருந்தார். தமிழக இல்லங்கள், டிவிடி ப்ளேயரில் தன்னிறைவு அடைந்துவிட்டது போலும்.

---

சல்மான்கான், விநாயகர் சதுர்த்திக்கு ஆடிபாடுவது போல் ஒரு பாடலை, ஹிந்தி போக்கிரிக்கு பிரபுதேவா எடுத்திருக்கிறார். சல்மான்கான், விநாயகர் சதுர்த்திக்கா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். சல்மான் உண்மையிலேயே பிள்ளையார் பக்தராம். அவருடைய குடும்பம் மத நல்லிணக்கத்தை பேணும் குடும்பம்.

சல்மான்கான் தந்தையின் முதல் மனைவி இந்து. இரண்டாம் மனைவி கிரிஸ்டியன். மத நல்லிணக்கம் தானே?

Friday, August 21, 2009

கந்த கந்த கந்த கந்தல்சாமி

ரஜினி மாதிரி ஏழைகளுக்கு பணத்தை வாரி வழங்கணும், கமல் மாதிரி பெண் வேடம், தாத்தா வேடமெல்லாம் போடணும், அஜித் மாதிரி கூலிங் கிளாஸ், கோட் போட்டு நடக்கணும், சூர்யா மாதிரி வெளிநாட்டுக்கு போயி ஸ்மக்லிங் பண்ணனும் - இப்படியெல்லாம் விக்ரம் ஆசைப்பட்டு இருப்பாரு போல. ஒரே படத்துல அத்தனை ஆசையையும் நிறைவேத்தி வச்சிருக்காரு, சுசி கணேசன்.

சூப்பர் ஹீரோ படம்’ன்னு சொன்னது மட்டுமில்லாமல், முதல் ரீலிலேயே தெரிந்து விடுகிறது, இது லாஜிக் பார்க்காமல் பே’ன்னு பார்க்க வேண்டிய பேண்டஸி படம்’ன்னு. சில காட்சிகளிலேயே அந்த சுவாரஸ்யம் காணாமல் போயி, சீக்கிரம் விடுங்கடா, வீட்டுக்கு போகணும்’ன்னு அழ வைத்துவிடுகிறார்கள்.

ஸ்ரேயா வரும் காட்சிகள், எரிச்சலாக இருந்தது. ஒரு சீன்ல மட்டும் முழுசா மூடிக்கிட்டு வந்தாங்க. அதுலயும் கடைசில, அவுங்களே கிழிச்சிக்கிட்டாங்க. அவுங்க உடைய குறைச்ச மாதிரி, அவுங்க வந்த சீன்களையும் குறைச்சிருக்கலாம். அதேப்போல், மெக்ஸிகோ காட்சிகள். பிரமாண்டமா எடுக்குறேன்னு, இவ்ளோ சீன்ஸா எடுக்குறது? ஹீரோதான் பறக்குறாருன்னு பார்த்தா, இவுங்களும் பறக்குறாங்க.

வடிவேலுவின் காமெடி ட்ராக், படத்திற்கு அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனாலும், படத்தில் வடிவேலு சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி, தியேட்டரில் மக்கள் குலுங்குகிறார்கள். இப்போது வரும் படங்களில், பிரபுவுக்கு என்று மறக்காமல் ஒரு கேரக்டர் வைத்து விடுகிறார்கள். இதிலும் மறக்கவில்லை.

தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் குத்து குத்து குத்தி எடுத்திருக்கிறார். பின்னணியில் அடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார். சில படங்கள் சரி இல்லாவிட்டாலும், அடுத்த பாட்டு எப்ப’ன்னு உட்கார்ந்திருப்பேன். இதில் ஒரு கட்டத்தில் சலிப்பாகிவிட்டது. ஸ்ரேயா கொடுமை தான் தாங்க முடியவில்லை என்றால், அந்த முமைத்கான் பாடலில் நடன அசைவுகள் - கண்றாவி.

சுசி கணேசன், திருட்டு பயலே’வை தொடர்ந்து இதிலும் அதேப்போல் ரகசியமாய் பின்தொடர்ந்து நடித்திருக்கிறார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார் என்று ‘அட’ போட வைத்த இயக்குனர் (என்னையை இல்ல!), இப்போது ஷங்கர் பாணியில் இங்கு வந்து நிற்கிறார். இனி எங்க போயி நிற்பாரோ?

ஆமாம், சுசி கணேசன் சார், நீங்க மணிரத்னம் சீடராச்சே!

கடவுள் பெயரில் உதவி செய்வது, சிட்டு பேப்பரில் எழுதிய வேண்டுதல்களை நிறைவேற்றுவது, கோழி வேடத்தில் செய்யும் கோணாங்கி மேஜிக் செயல்களுக்கு பின்னணி டெக்னாலஜி லாஜிக் கொடுப்பது போன்றவை நிமிர்ந்து உட்கார வைத்தாலும், உரிச்ச கோழியாய் ஸ்ரேயா, சலிப்படைய வைக்கும் நீளம் என்று மற்றவை நெளிய வைக்கிறது.

கொஞ்சம் வெட்டி ஒட்டு போட்டிருந்தால், கந்தல் குறைந்திருக்கும். தாணு நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சிங்கன்னா, போயி படத்தை பாருங்க. நீங்க நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சா...

மற்றவர் கண்ணீர் துடைப்பவனே, கடவுள்.

Wednesday, August 19, 2009

நாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே?

பியரா சிங், வயது 80. ஒரு கொலைக்குற்றத்துக்காக தூக்கு தண்டனை பெற்றவர், கடந்த 20 ஆண்டுகளாக அமிர்தசரஸ் சிறையில், 12க்கு 6 அடி அறையில் அடைப்பட்டுக்கிடக்கிறார். கருணை வேண்டி, 12 வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதிக்கு மனு செய்திருந்தார். இன்னும் பதில் வரவில்லையாம். போய் சேர்ந்திருச்சான்னே தெரியலை.

கருணையே வேண்டாம். என்னை கொன்றுவிடுங்கள் என்கிறார். ”எனக்கு தூக்கு என்று தீர்ப்பு வழங்கிய நாளே, என்னை தூக்கிலிட்டு இருக்க வேண்டும்.”

தாமதிக்கப்படும் கருணை, பெருங்கொடுமை. இதற்கு மேல், அவருக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?

---

சாலைகளில் மூடப்படாத சாக்கடை துவாரங்களில், மனிதர்கள் விழும் விபத்தை பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். அப்படி ஒரு செய்தியை படித்தேன். இந்த முறை விழுந்தது - ஒரு யானை. தாய்லாந்தில். அவ்வளவு பெரிய சாக்கடை குழியா?

சில விஷயங்களில், நம் நாடு பரவாயில்லை என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.

---

தமிழ் படங்களுக்கு பொருத்தமான டைட்டில் வைக்கிறார்களோ, இல்லையோ, தமிழில் மொழிமாற்றம் செய்து வரும் ஆங்கில படங்களுக்கு பொருத்தமாகத்தான் பெயர் வைக்கிறார்கள். சமீபத்தில் நான் அப்படி பார்த்த ஒரு தலைப்பு - ருத்ர மனிதர்கள் 2009. மனிதர்களை உண்ணுபவர்களை பற்றிய கதையாம். ’நான் கடவுள்’ படத்தில் ருத்ரன் தானே, மனிதர்களை தின்பான். அதான், அப்படி தின்பவர்களை பற்றிய படத்திற்கு ருத்ர மனிதர்கள் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

கொஞ்சம் நாள் முன்னாடி, இப்படித்தான் ‘300 பருத்தி வீரர்கள்’ என்று ஒரு படம் வந்தது.

---

போன விநாயகர் சதுர்த்திக்கு, விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று சொல்லி கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டார்கள். இந்த வருடம் விடுமுறை தினமான ஞாயிறு அன்று தான் சதுர்த்தியே வருகிறது.

இப்ப, என்ன செய்வீங்க...???

---

தவணை முறையில மிக்ஸி வாங்கிருப்போம்... கிரைண்டர் வாங்கியிருப்போம்... டிவி வாங்கியிருப்போம்... இனி ஜீன்ஸும் வாங்கலாம். இப்படி ஒரு அருமையான திட்டத்தை கொண்டு வந்திருப்பது, லெவிஸ் நிறுவனம். முதல் கட்டமாக, பெங்களூரில் மட்டும். மூணு மாச வட்டியில்லா தவணையில, ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக்கலாம்.

கடனை கட்டி முடிக்கறதுக்குள்ள, எப்படியும் எவனும் ஜீன்ஸை துவைச்சி இருக்க மாட்டான். இப்ப, கடனை கட்ட முடியாட்டி, என்ன பண்ணுவாங்க? ஜீன்ஸை புடுங்கிட்டு போயிடுவாங்களா?

ச்சீய்...

---

பன்றி காய்ச்சல் இந்தியாவில் பரவுவதற்கு காரணம், அமெரிக்க சதியாம். புலனாய்வு பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரி இது. ஷாருக் விவகாரத்தில், அம்பிகா சோனி சொன்னது போல், இதற்கும் நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.

ஊருக்குள் சேரனால் தான் முடியும் என்கிறார்கள்.

சேரன் சார், பொக்கிஷம் படத்தை ஆஸ்கர்க்கு அனுப்புங்க.

.

Sunday, August 9, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு

இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை. கதாநாயக வழிபாடு கிடையாது. பஞ்ச் வசனங்கள் கிடையாது. குத்து பாட்டு கிடையாது. இரட்டை அர்த்த வசனம் கிடையாது. ஆபாச பாடல்கள் கிடையாது. வெட்டுக்குத்து கிடையாது. அட போப்பா! ஒண்ணும் கிடையாது. ஒரு திருப்பமும் இல்லாமல், ப்ளேனாக இருக்குது.

ரெட் ஒன் கேமராவில் எடுத்த முதல் இந்திய சினிமா என்று சொல்லிவிட்டு டாக்குமெண்டரி போடுகிறார்கள். முடிவில் டாக்குமெண்டரியே தான் என்று முடிவு செய்து அனுப்புகிறார்கள். என்ன, பிரசன்னா, சினேகாவை வைத்து கொஞ்சம் காஸ்ட்லியாக எடுத்திருக்கிறார்கள். இதில் டிவி சீரியலை வேறு நக்கல் செய்து டயலாக்.

சொல்லி இருப்பது சொல்ல வேண்டிய விஷயம் தான். உலகமெங்கும் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியது. ஆனால், ஒரு சினிமாவாக ரொம்ப ஸ்லோ. முடியும் வரை, ’படத்தை’ போட சொல்லி தியேட்டரில் ஒரே கூச்சல். எனக்கு தியேட்டரில் இருந்தவர்கள் கொடுத்த கமெண்ட்ஸ்தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. (’தக்காளி ரசம் வைச்சுடு. வந்துடுறேன்’ - ரசத்துக்கே இப்படியா?)

அமெரிக்காவை படம் முழுக்க காட்டி, அங்கே ஒரு வெள்ளைக்கார வில்லனைக் காட்டி, முடிவில் இந்தியாவில் தான் பாலியல் குற்றங்கள் அதிகம் என்கிறார்கள். அப்புறம் எதற்கு அமெரிக்கா?

படத்தில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரே ஹீரோ - இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. பிண்ணனி இசை சூப்பர். படத்திற்கு வெயிட் கொடுப்பது இசைதான். சௌம்யா பாடிய ”கண்ணில் தாகம்” நன்றாக இருந்தது. படம் பார்க்க போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஹிந்திக்காரன், தமிழை மென்னு துப்புனா, போட்டு பந்தாடுறாங்க. அம்மணி, ‘சொல்லி’யை ‘ஷொல்லி’ன்னு சொல்லுவது தப்பில்லையா?

ஒளிப்பதிவும் நன்றாக இருந்தது. ஏதோ ஒரு அமெரிக்கர். செம துல்லியம். இதுதான் ரெட் ஒன் கேமராவின் ஸ்பெஷலா? சில இடங்களில் ஷார்ப்னெஸ் குறைந்து குறைந்து மாறியது போல் இருந்தது.

படத்தில் நான்கே... இல்லை மூன்றரை பேர்கள். அதில் வில்லனாக வந்த அமெரிக்கர் நல்லா நடித்திருந்தார். இந்தியர்களின் அமெரிக்க வாழ்வை காட்டியது, கொஞ்சம் பார்க்க வைத்தது. அதையும் எவ்வளவு நேரம்தான் பார்க்க முடியும்? ஒன்றிரண்டு சீனில் காட்ட வேண்டியதை, படமாக எடுத்து சிரமப்பட்டது போல் உள்ளது. இதற்கும் படம் இரண்டு மணி நேரம் தான் இருக்கும். அதிலும், ஒரே மாதிரியான காட்சிகள், இரண்டு முறை வந்தது போன்ற காட்சியமைப்புகள்.

விழிப்புணர்வு தேவைப்படும் விஷயத்தை சொல்ல வந்ததற்கு பாராட்டலாம். ஆனால், அதற்கான காரணமும் சொல்லாமல், தீர்வும் சொல்லாமல் விட்டகுறை தொட்டகுறையாக வந்திருக்கிறது.

அச்சமுண்டு அச்சமுண்டு - இந்த மாதிரி படத்திற்கு என்னை யாராவது கூப்பிட்டால்...

.

Monday, July 13, 2009

சர்ச்சை சாவர்க்கர்

வரலாற்று நிகழ்வை திரும்பி பார்க்கும் போது அதில் பல வியப்புகள் இருக்கும். வியப்பு மேலிடும் போது, இன்னமும் திரும்பி பார்க்கும் ஆர்வம் துளிர்க்கும்.

காந்தியை கோட்சே சுட்டு கொன்ற அன்று, சாவர்க்கரின் வீடு தாக்கப்பட்டது. கோட்சே உறுப்பினராக இருந்த இந்து மஹாசபையை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் சாவர்க்கர். சில நாட்களில் சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு, கோட்சே காந்தியை கொல்லும் முன்பு சாவர்க்கரை சந்தித்தார் என்பதும் சாவர்க்கர் அவரிடம் ‘வென்று வா’ என கூறி ஆசி வழங்கினார் என்பதும். அதாவது காந்தியை கொல்ல வேண்டுமென்பது சாவர்க்கரின் ஆணை என்பது அவர் மேலான குற்றச்சாட்டு. பிறகு, கோட்சே கூறியிருந்த பதிலில் ‘இது தான் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு என்றும் முன்பொருமுறை காந்தியின் கூட்டத்தில் குழப்பம் விளைத்ததற்கே தங்களை சாவர்க்கர் கண்டித்தார்’ எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் சாவர்க்கர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

-----

சில வருடங்கள் கழித்து அவர் இறந்த பிறகு, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, சாவர்க்கர் நினைவாக தபால் தலை வெளியிடப்பட்டது. அவரது நூற்றாண்டு விழா, அந்தமான் சிறைச்சாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிஜேபி ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் காந்தியின் படத்திற்கு எதிரே சாவர்க்கரின் படம் மாட்டப்பட்டது.



சாவர்க்கர் யார்? என்ன செய்தார்? அவர் அரசால் கொண்டாடப்படுவதற்கும் தூற்றப்படுவதற்கும் காரணம் என்ன? வேறு வழியில்லை. ப்ளாஷ்பேக் போகத்தான் வேண்டும்.

இலந்தை. சு. இராமசாமியின் ‘வீர் சாவர்க்கர்’.

-----

சாவர்க்கர் மஹாராஷ்ராவில் ஒரு மராத்தி கவிஞருக்கு மகனாக 1883 இல் பிறந்தார். கற்பூர மூளையென்பதால், படிப்பில் கெட்டி. இலக்கியத்திலும் ஆர்வம் அதிகம். புத்தகங்கள் மூலம் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டங்களை அறிந்தார். கல்லூரியில் இது பற்றி பேசினார். கூட்டங்கள் நடத்தினார். அவரை சுற்றி கூட்டம் கூடியது. அபிநவ பாரத் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஆங்கிலேய அரசு, இவர் மேல் ஒரு கண் வைத்தது.

இந்நிலையில் லண்டனில் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் லண்டனுக்கு கப்பலேறினார். அவர் லண்டன் சென்றது படிப்பதற்கு மட்டுமில்லை. அவருக்கு வேறு திட்டங்கள் இருந்தது. வன்முறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தால், ஆயுதங்களை நெருங்குவதற்காகவும் வெளிநாடு சென்றார். தனது இயக்கத்தை கடல் கடந்து கொண்டு சென்றார். லண்டன் சென்று புரட்சிகள் பற்றி, புரட்சியாளர்கள் பற்றி புத்தகங்கள் எழுதினார். துப்பாக்கி சுட கற்று கொண்டார். அங்கு அவருடைய கூட்டாளி, வ.வே.சு. ஐயர். இந்தியர்களை கூட்டி கூட்டங்கள் நடத்தினார். மற்ற வெளிநாடுகளுக்கும் இந்த எழுச்சியை பரவ செய்தார்.

இந்தியாவில் நடப்பதையும் சாவர்க்கர் கவனித்து வந்தார். துப்பாக்கிச் சூடு, கலகம், ஆயுத கொள்முதல் என்று திட்டங்கள் செல்ல, ஒரு கட்டத்தில் சாவர்க்கர் லண்டனில் கைது செய்யப்பட்டார். பிறகு, இந்தியா கொண்டு வரப்பட்டார். வரும் வழியில் கப்பலில் இருந்து குதித்து தப்பிக்க அவர் செய்த முயற்சி, தோல்வியில் முடிந்தாலும் உலகமெங்கும் அவர் புகழ் பரவ செய்தது. இந்தியாவில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை. ஆயுள் தண்டனை. 25 ஆண்டுகள்.

சில காலம் இந்திய சிறையில் அனுபவித்த பிறகு, அந்தமான் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுபவித்த சோதனைகள் ஏராளம். இருந்தாலும் இலக்கிய பணியில் கவனத்தை செலுத்தினார். மற்ற சிறை கைதிகளுக்கு ஆலோசனைகள் கூறினார். சிறைச்சாலை படத்தில் அம்ரிஷ் பூரி ஒரு கொடூரமான கேரக்டரில் வருவாரே? பாரி. வார்டர். அங்கு அவருடைய கொடுமைகள் எக்கச்சக்கம். சாவர்க்கர் சிறையில் அதிகாரிகளை எதிர்த்து செயல்பட்டாலும், கொஞ்சம் அடங்கிதான் சென்றிருக்கிறார். அவருக்கு சிறையை விட்டு வெளியே வருவதில் தான் ஆர்வமிருந்தது. அதற்காக விண்ணப்பிக்கவும் செய்தார்.

ஆனால் அவ்வளவு சீக்கிரமாக அவரை விட்டு விடவில்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு, அவரை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். இந்தியாவில் மூன்று ஆண்டுகள். மொத்தம் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவரின் பார்வை, இந்திய சுதந்திரம் என்பதை விட்டு இந்து மதத்தின் மேல் பதிந்தது. காரணம், சிறையிலும் வெளியிலும் அவர் கண்ட மதமாற்றங்கள். சிறையிலேயே யார் இந்து? என்ற கேள்விக்கு பதிலாக ‘ஹிந்துத்வா’ என்ற புத்தகத்தை எழுதினார். இந்து மதத்தில் இருந்த குறைப்பாடுகளை களைய, சீர்திருத்தங்களை மேற்கொண்டார். முக்கியமாக, தீண்டாமை. அனைத்து சாதியினரையும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வைத்தார். தலித்களை ஆலயப்பிரவேசம் செய்ய வைத்தார். மராத்தி மொழிக்காக இயக்கம் ஆரம்பித்தார்.

83 வயதில் அவர் இறந்தபோது, அவருக்கு அணிவகுப்பு செய்து முழு மரியாதை செய்தது - ஆர்.எஸ்.எஸ்.

-----

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டாலும், இன்று அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிந்தவராக இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பிஜேபி போன்ற இந்து அமைப்புகள் மட்டும் சாவர்க்கரை ஹீரோவாக தூக்கி பிடித்து கொண்டிருப்பதற்கு காரணம் - சிறையில் அடைக்கப்பட்ட பிறகு சாவர்க்கரிடம் ஏற்பட்ட மாற்றம். அஹிம்சை வழியில் போராடிய காந்தி எந்நிலையிலும் தயக்கமின்றி தைரியமாக ஆங்கிலேய அரசை எதிர்த்த போது, வன்முறை வழியில் சென்ற சாவர்க்கர் சிறையில் எழுதிய மன்னிப்பு கடிதங்கள். சர்ச்சைகளை கிளப்பும் ஹிந்துத்துவாவை உருவாக்கியவர் என்ற பெயர். சமூகப்பணியாக இந்துக்களாக இருந்து முஸ்லீமானவர்களை திரும்பவும் இந்துக்களாக மாற்றியது போன்றவைகளேயாகும்.

சாவர்க்கர் என்றாலே சர்ச்சைதான் போலும். சமீபத்தில் கூட மும்பை கடல் பாலத்திற்கு சாவர்க்கர் பெயரை வைக்க சொல்லி வேண்டுகோள் வைக்கப்பட, ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்பட்டது. காந்திக்களுடனான சண்டை சாவர்க்கருக்கு ஓயாது போல. சாவர்க்கர் என்ற புதிரை அவிழ்ப்பது சுலபமில்லை. ஒன்று முழு ஆதரவாக இருக்கும். இல்லையென்றால், முழு எதிர்ப்பாக இருக்கும். அவரை பற்றிய நேர்மையான பார்வை எங்கும் இருக்காதா?

இலந்தை சு. இராமசாமியின் ‘வீர் சாவர்க்கர்’ புத்தகத்தில், ஆசிரியர் சாவர்க்கரின் முழு வாழ்வையும் பதிவு செய்துள்ளார். சிறையில் அவர் அரசுடன் மேற்கொண்ட அணுகுமுறைகள், அவரின் மதரீதியான செயல்பாடுகள் போன்றவற்றிற்கு கூறப்பட்டுள்ள சாதகமான காரணங்களால், இப்புத்தகம் படித்தபிறகு வருவதென்பதோ, ஹீரோ பிம்பம்தான். தமிழில் சாவர்க்கர் பற்றிய ஒரு புத்தகத்தை கொடுத்து, புதிரின் பல முடிச்சுக்களை அவிழ்த்ததற்காக நூலாசிரியர் இலந்தை சு. இராமசாமிக்கு வாழ்த்துக்கள்.

-----

வீர் சாவர்க்கர் - இலந்தை சு. இராமசாமி
கிழக்கு பதிப்பகம்
புத்தகம் வாங்க இங்கே செல்லவும்

Friday, July 3, 2009

நாட்டு சரக்கு - உயிர் காத்த வயாகரா

கணவன் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறான். மனைவி சமையல் செய்து கொண்டிருக்கிறாள். அவர்களது 6 மாத குழந்தை கட்டிலில் படுத்தவாறே, தந்தையை பார்த்து கொண்டிருக்கிறது.

அடுப்பாங்கரையில் இருக்கும் மனைவியிடம், கணவன் பெருமையுடன்,

“ஏண்டி, பிள்ளை என்னையே பார்த்துக்கிட்டு இருக்கான். புள்ளைக்கு என்ன யோசனையோ?”

சலிப்புடன் “என்ன யோசிப்பான்? யாருடா இது? காலையிலேயே கிளம்பி போறாரு? கையில பெரிய சாப்பாடு கூடை வேற மறக்காம எடுத்துட்டு போறாரு. நைட் திரும்ப வாராரு. சாப்பிட்டுட்டு தூங்க போயிடுறாரு. மறுபடியும் காலையிலேயே எந்திரிச்சு போறாரு. எதுக்கு இவரு இப்படி இருக்காரு?’ன்னு ஆச்சரியத்தோடு யோசிச்சிட்டு இருப்பான்.”

---

அருந்ததீ பார்த்துட்டு வந்த அனுஷ்காவின் தீவிர ரசிகனான நண்பனிடம்,

“படம் எப்படி?”

“ம்ம்ம்... நல்லாயிருந்துச்சு”

”பயந்திட்டியா?”

“ஆமாம். ’நல்லா’ நடிச்சிட்டு இருந்த அனுஷ்கா, இந்த படத்தோட வெற்றியால, இனி இப்படி தான் நடிப்பாங்களோன்னு பயமாயிருந்துச்சு.”

----

ராஜஸ்தானில் ஒரு வேலை இருக்கிறது. ஷிப்ட் 5 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை. கிட்டத்தட்ட 100 பேர் இந்த தொழிலில் அங்கு ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். தினசரி சம்பளம். ஒருநாளுக்கு 500 ரூபாயிலிருந்து 2000 வரை சம்பாதிக்கிறார்கள். உடனே, என்ன? எது? என்று கிளம்பி விடாதீர்கள். சராசரி மக்களால் முடியாதது அது.

அஜ்மீர் தர்காவில் பிச்சை எடுப்பது தான் அந்த தொழில். ஆனால், இந்த சம்பாத்தியம் எல்லாம் வருடத்திற்கு 10 நடக்கும் உருஸ் விழாவில் மட்டும் தான். 10 கோடி வரை டர்னொவர் வருமாம். தினமலரில் வந்த இந்த செய்தியில், இவ்வாறு பிச்சை எடுத்து சம்பாதிப்பவர்களை, ‘பிச்சைக்கார தொழிலதிபர்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். என்ன முரண்பட்ட வார்த்தைகள்?

----

பொல்லாதவன் வந்த சமயம். டீக்கடையில் இருவர். (ஜூ.வி. பாணி!)

“இயக்குனர் மேல கேஸ் போட போறாங்களாம்”

“ஏன்?”

“பைக் வாங்கினதுக்கப்புறம், ஹீரோயின் லவ் பண்றதா காமிச்சிருக்கதால, பெண்கள இழிவுப்படுத்தியிருக்கறதா சொல்லி கேஸ் போட போறாங்களாம்.”

“அடப்பாவமே!”

“விடு... எப்படி தனுஷ லவ் பண்றதா காட்டலாம்?ன்னு சொல்லி கேஸ் போடலயே?”

----

அமெரிக்காவுல இருக்குற ஒரு யூனிவர்சிட்டில ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஆணி அடிப்பதில் யார் சிறந்தவர்கள்? ஆண்களா? பெண்களா? வேலையத்தவனுங்க. என்ன கண்டுப்பிடிச்சிருக்காங்கன்னா, பெண்கள் தான் நல்லா, கரெக்டா ஆணி அடிப்பாங்களாம். ஆனா, வெளிச்சத்துல தான் பெண்களோட துல்லியம் எல்லாமுமாம். இருட்டுனா, ஆண்கள் தானாம்.

டேய், என்னடா சொல்ல வாரீங்க?

---

லண்டலில் போன வருடம் பிறந்த ஆலிவருக்கு, பிறக்கும் போதே இதயத்தில் ஒரு குறைபாடு. பிறந்து 16 நாட்களில், ஒரு ஆபரேஷன் செய்து அதை சரி செய்திருக்கிறார்கள் லண்டன் டாக்டர்கள். மூன்றாம் மாதத்தில், ஆலிவர் ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட, ரயில்வேயில் வேலை பார்க்கும் அவன் தந்தையிடம், ”உங்க பிள்ளை பிழைக்குறது கஷ்டம். இன்னும் ரெண்டு மாசம் தான்.” என்றிருக்கிறார்கள். என்னன்னமோ சொல்லியிருக்கிறார்கள். ரத்த நாளத்தின் சுருக்கத்தால், ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால், ரத்த அழுத்தம் என்று.

பிறகு, திரவ நிலையில் இருக்கும் வயாகரா கொடுத்து பாருங்க. ரத்தம் ஓட்டம் இம்ப்ருவ் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க. அன்னையிலிருந்து, தினமும் ஆறு வேலை வயாகரா எடுத்துக்கிறான். இதோ, இன்னும் சில நாட்களில் தனது முதல் பிறந்த நாளை கொண்டாடப் போகிறான் ஆலிவர். ”வயாகரா, நயாகரா” என்று மற்றவர்கள் பாடிக்கொண்டிருக்க, “வயாகராதான் ஆலிவரின் உயிர்காப்பான்” என்கிறார் ஆலிவரின் தந்தை.

Saturday, June 27, 2009

நாடோடிகள் - பாதி வேகம் மீதி சோகம்

ஒரு நண்பனின் காதலை சேர்த்து வைத்து, அதனால் மூன்று நண்பர்களுக்கு ஏற்படும் பாதிப்பும், சேர்த்த வைத்த காதல் தோற்கும்போது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தான் கதை. கதையாக முழு திருப்தி இருந்தாலும், படமாக பாதி திருப்தி தான். முதல் பாதி ஏற்படுத்தும் எதிர்ப்பார்ப்பை, இரண்டாம் பாதி பூர்த்தி செய்யவில்லை. அட்லீஸ்ட் எனக்கு.

முதல் பாதியில் வரும் மாமன் மகள் காதல், அப்பா அட்வைஸ் காதல் ஸ்வீட். இரண்டாம் பாதியில் வரும் பின்விளைவுகள், கஷ்டம்மப்பா... பின்விளைவுகள், கொஞ்சம் அதிகம்.

படத்தின் முக்கிய காட்சியான, அந்த நாமக்கல் கடத்தல் கல்யாணம் காட்சி, எக்ஸ்பிரஸ். குழாயை எடுத்து காதில் அடித்தது, ஒரு நொடி தியேட்டரில் இருக்கும் அனைவரையும் செவிடாக்கி இருக்கும். சம்போ சிவ சம்போ பாடல் விறுவிறுப்பை கூட்டுகிறது. நேற்று கலைஞர் டிவியில் 'அஞ்சாதே' படத்தின் பின்னணி இசையை கேட்டப்போது, சுந்தர் சி. பாபுவை ஏன் இன்னும் நிறைய படங்களில் காணவில்லை என்று எண்ணியிருந்தேன். இந்த படத்திலும் பின்னணியில் கலக்கியிருந்தார். சில சப்பை சீன்களுக்கு கூட அதிர வைத்திருந்தார். பாடல்களில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஒன்று தேவையில்லாதது கூட. சம்போ, ஸ்டார் ”தோம் கருவில் இருந்தோம்”யை நினைவுப்படுத்தியது.

சசிக்குமார் ஆக்ரோஷ காட்சிகளில் கலக்குவார் என்பது தெரிந்தது தான். இதில் எக்ஸ்ட்ராவாக காதலிலும், காமெடியிலும் இறங்கியிருக்கிறார். டான்ஸ் வேறு. இருந்தாலும் சண்டைக்காட்சிகளிலும், சோகக்காட்சிகளிலும் தான் பின்னுகிறார். தாடி இல்லாத காட்சி, இவரது யூத் இமேஜிற்கு டேமெஜ் பண்ணும். இந்த படம் வெற்றி பெற்று, இவரும் நடிக்கிறேன்னு, இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தாமல் போயிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.

ரெண்டு ஹீரோயின்கள். ரெண்டு பேரும் சூப்பர். அதிலும், ஒருவர் ஜோதிகாவின் கலை வாரிசாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இதற்கு நேர்மாறாக ஏதாவது உடையணிந்து வந்து அதிர்ச்சி கொடுக்காமல் இருக்க வேண்டும். மன்சூர் அலிகான் மாதிரி ஒருத்தர் வருகிறார். கஞ்சா கருப்பு செய்ய வேண்டிய வேலையை, இவர் செய்திருக்கிறார்.

நிறைய புதுமுகங்கள். எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் நடித்தவர்களில் தமன்னாவை தவிர மற்றவர்களை காணோமே என்றிருந்தேன். இதில் ஒருவர் நடித்திருக்கிறார். கல்லூரி ஹீரோ நடித்த வால்மீகி, இந்த படத்துடன் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழ் சினிமா காதல், நட்பு என்று இத்தனை நாள் கற்று கொடுத்து, அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், உயிரை கொடுக்கலாம் என்று சொல்லிக்கொடுத்து, அதில் நாசமாக போனவர்கள் எத்தனை பேரோ? இதில் இயக்குனர் சமுத்திரகனி, அதற்கு பிராயச்சித்தம் செய்திருக்கிறார். சொல்லப்படாத கதை. சொல்ல வேண்டிய கதை. சொல்லிவிட்டார். பாராட்டுக்கள்.

----

இயக்குனரிடம் படப்பெயரை பற்றி கேட்டபோது, இதில் நண்பர்கள் ராஜபாளையம், நாமக்கல், கன்னியாக்குமரி என்று பல ஊர்களுக்கு செல்கிறார்கள். அதனால், இந்த பெயர் என்றார். நான் கூடத்தான் இங்கே எல்லாம் சென்றிருக்கிறேன்.