Saturday, July 16, 2016

தீபன் - துரத்தும் துயரம்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8679சென்ற வருடம், கேன்ஸ் மற்றும் பிற திரைப்பட விழாக்களில்  கலந்துக் கொண்டு பல விருதுகளைப் பெற்ற ப்ரெஞ்ச் திரைப்படமான "தீபன்", மினியாபோலிஸ் அப்டவுண் தியேட்டரில் ஜுன் மாத நடு வாரத்தில் திரையிடப்பட்டது. ப்ரான்சில் வசிக்கும் பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஷோபா ஷக்தி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் - ப்ரெஞ்ச் இயக்குனர் அவ்தியாத்.


---


நான் தூத்துக்குடியில் இருந்த பொழுது, சிறு வயதில் அடிக்கடி இரு சாதிகளுக்கிடையே நடைபெறும் சாதி கலவரங்களைக் காணும் பொழுது, இது போன்ற சண்டைச் சச்சரவு  இல்லாத இடத்திற்குச் சென்று விட அவ்வயதில் தோன்றும். பிறகு, கோயமுத்தூரில் படிப்பு. அங்கு அவ்வப்போது மத கலவரங்கள் நிகழ்ந்ததுண்டு. வருடந்தோறும், சில நாட்களில் பாதுகாப்பு சடங்குகள் அதிகமாகி, கலவரம் இல்லாமலே பீதி கிளம்பும்.


அப்புறம், பெங்களூரில் வேலை. கன்னட மொழிப்பற்று உள்ளவர்களிடம் தமிழில் பேசிப் பாருங்கள். இது நம்மூர் இல்லை என்பது உடனே நினைவுறுத்தப்படும்.


அச்சமயம், ஒரு கதை எழுதினேன். இது போன்ற அனுபவங்களையும், அச்சமயம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சில இனவெறி தாக்குதல்களையும் இணைத்து, ஒருவனை எங்கு சென்றாலும் வன்முறை துரத்துவதாக.


தீபன் படத்தின் அடிநாதமும் அதுவே. இலங்கை ஈழ போரில் போராளியாக இருந்த ஒருவன், அகதியாக இடம் பெயரும் போது, வந்த இடத்திலும் அவனைத் துரத்தும் வன்முறை நிகழ்வுகளை எவ்வாறு எதிர்கொண்டு, அதிலிருந்து அமைதியான இல்லற நேச வாழ்வுக்கு மீண்டு செல்கிறான் என்பதே தீபனின் கதை.
இலங்கை ஈழப் போர் உச்சத்தை எட்டி, புலிகள் தோல்வியடைந்த காலக்கட்டத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. போரில் மரணமடைந்த சக போராளிகளை உடல் தகனம் செய்துவிட்டு, ப்ரான்ஸுக்கு அகதியாக கிளம்பும் தீபன், கூடவே முன்பின் அறிமுகமில்லாத யாழினி என்ற பெண்ணை மனைவியாகவும், இளயாள் எனும் சிறுமியை தனது மகளாகவும் தன்னுடன் அழைத்து செல்கிறான். ஐரோப்பியாவில் புகலிடம் பெற ஏதுவாக, ஒரே குடும்பம் எனும் வெளிச்சித்தரிப்பில், மூன்று அறிமுகமில்லாதவர்கள் ப்ரான்சிற்கு பயணிக்கிறார்கள்.


பொதுவாக, உள்ளூரில் அறிமுகமில்லாதவர்களும் வெளியூரில் சந்தித்துக் கொண்டால், ஒரே ஊர் எனும் உறவை உடனே பெற்றுவிடுவார்கள். வெளியுலகிற்காக உறவு எனும் போர்வையில் குடும்பமாக நடிப்பவர்களை, காலம் எப்படி உண்மையான  அன்னியோன்ய குடும்பமாக மாற்றுகிறது என்பதை தீபன் உணர்வுபூர்வமாகக் காட்டுகிறது.


பாரிஸில் கேர்டேக்கர் என்னும் தனிப்பட்ட குடும்ப உதவியாளர்களாக தீபனும், யாழினியும் பணிபுரிய, மகள் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறாள். குழந்தைகள் எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கேற்ப, இளயாள் விரைவிலேயே தீபனையும், யாழினியையும் பெற்றோராக பார்க்க, பெரியவர்களான தீபனையும், யாழினியையும், இந்த போலியான கணவன்-மனைவி என்னும் சங்கிலி அலைக்கழிக்கிறது.


மகிழ்வான பொழுதில் தங்களை அறியாமல் கிண்டல் அடித்துக்கொண்டு, காமப்பொழுதில் தவிர்க்க முடியாமல் இணைந்துக்கொண்டு, சங்கடப்பொழுதில் தங்களுக்குள் அக்கறைக்கொள்பவர்கள், மனஸ்தாபம் கொள்ளும் பொழுது மட்டும், தாம் உண்மையான கணவன் - மனைவி அல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறார்கள். இவ்வெண்ணம் இவர்களுக்குள் ஒரு நிரந்தர கோட்டை எப்பொழுதும் போட்டு வைத்திருக்கிறது. அச்சமயம்,  இவர்கள் ஒரு பெரும் வன்முறைத்தருணத்தை எதிர்க்கொள்ள நேர,  இறுதியில் உண்மையான குடும்பமாக ஒன்றிணைகிறார்கள்.


பாரிஸில் இவர்கள் இருக்கும் பகுதியில், ஒரு வன்முறைச் சூழல் எந்நேரமும் நிகழலாம் என்பது போல் போதைப்பொருளைக் கையாளும் இரு கும்பல்கள் முட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தீபனும், யாழினியும் தாங்கள் பணிபுரியும் இடங்களில் இவர்களைக் கடக்க நேர்கிறது. வாழ்வின் முன் பகுதியில், பிறந்த நாட்டில் போர்ச்சூழலைச் சந்தித்த இவர்களுக்கு இச்சூழல் பெரிதாக இருக்க போவதில்லை. ஆனாலும், அதைத் தவிர்த்து செல்லவே விரும்புகிறார்கள். இருப்பினும், தவிர்க்க இயலா நிலை ஏற்படும் போது, தீபனுக்குள் இறக்காமல் இருக்கும் போராளி திரும்ப வருகிறான். முன்பு, இனத்துக்காக போராடியவன், இச்சமயம் தன் குடும்பத்தைப் போராடிக் காக்கிறான். ஒவ்வொரு குடும்பஸ்தனுமே, தன் குடும்பத்தைக் காக்கும் போராளிதானே!!


யாழினியின் உறவு, இங்கிலாந்தில் இருக்க, இவர்களும் இறுதியில் இங்கிலாந்து சென்று அமைதியான இல்லற வாழ்வில் ஈடுபடுவதாக படம் முடிகிறது. வன்முறையைத் தவிர்க்க நினைப்பவர்கள், எங்கிருந்தாலும் வன்முறையைத் தவிர்ப்பார்கள். வன்முறையை எதிர்கொள்ள நினைப்பவர்கள், எங்கிருந்தாலும் வன்முறையை எதிர்கொள்வார்கள்.


---


பொதுவாக, நான் இதுவரை பார்த்த ஈழப்போர், ஈழ மக்கள் பற்றிய படங்களில் ஒரு அன்னியத்தன்மை இருக்கும். அது பெரும்பாலும் ஈழ கலைஞர்கள் பங்களிப்பு இல்லாமல், வெளி கலைஞர்களின் படைப்பாக்கத்தால் வந்த காரணத்தால் இருக்கும். ஈழம் பற்றிய அவர்களது வெளிபுரிதல் அவ்வாறான ஒரு செயற்கைத்தன்மையை வெளிபடுத்தியிருக்கும். இந்த படத்தையும் காணச் செல்லும் முன்பு, அப்படி ஒரு எதிர்பார்ப்பே இருந்தது. காரணம், படத்தை எடுத்திருப்பது ஒரு ப்ரெஞ்ச் இயக்குனர். ஆனால், எனது அந்த எதிர்மறை எதிர்பார்ப்பு, படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தவிடுபொடியானது. ஒரு ப்ரெஞ்ச் இயக்குனர் எடுத்த படமா? எனும் ஆச்சரியம் மேலோங்கியது. தீபன், யாழினி, இளயாள் என்ற இந்த மூன்று ஈழ மனிதர்கள் உணர்வுபூர்வமாகத் திரையில் நடமாடினார்கள். இவர்களுக்கிடையேயான காட்சிகள், தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டிருந்தன. எழுத்தாளர் ஷோபா சக்தி (ஜேசுதாசன் அந்தோணிதாசன்) யின் பெயர், நடிகராக மட்டுமே படத்தில் க்ரடிட் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரின் பங்களிப்பு அதைத் தாண்டி இருந்ததாக அறிகிறேன். அதுதான் உண்மையாக இருக்குமேன நம்புகிறேன். ஒரு கலைப்படைப்பு தத்ரூபமாகவும், கலாபூர்வமாகவும் வர, அனுபவம் வாய்ந்த இலக்கியவாதி+இயக்குனர் கூட்டணி எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் காட்டுகிறது.


தீபன் என்று படத்திற்கு வைத்திருக்கும் பெயரே, இப்படத்திற்கு ஈழத்துடனான இருக்கும் உண்மையான நெருக்கத்தைக் காட்டுகிறது. ஈழ வரலாற்றில் தீபன், திலீபன் போன்ற பெயர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் அனைவரும் அறிந்தது தானே?


படத்தில் ப்ரெஞ்ச், தமிழ், ஆங்கில மொழிகள் பேசப்பட்டிருக்கின்றன. ப்ரெஞ்ச் பேசப்படும் நேரத்தில், சப்-டைட்டிலைக் காண வேண்டி இருப்பதால், படத்துடன் முழுமையாக ஒன்ற முடியவில்லை. அது படத்தின் குறையல்ல. கதாபாத்திரங்களால் மாறி, மாறி மொழிகள் பேசப்படுவதால், ஒரு சிறு குழப்பம் ஏற்படுகிறது. தவிர, ஒரு புதிய நாட்டிற்கு வந்து சில நாட்களிலேயே, இவ்வளவு சரளமாக ஒரு அன்னிய மொழியைப் பேச முடியுமா? எனும் சந்தேகமும் நம்பகத்தன்மையைச் சிறிது குலைக்கிறது.


அவார்ட் வாங்கிய படமென்றாலே, அது ஆர்ட் படம் என்பது தெரிந்து போகும். ஆர்ட் படம் என்றாலே மெதுவாக தான் செல்லும் என்பது எழுதப்படாத இலக்கணம். அந்த புரிதல் இருந்தால், படம் மெதுவாக செல்கிறது என்பது குறையாக இருக்காது. ஒரு மன சோர்வுற்ற நேரத்தில், தீபன் மதுவருந்திவிட்டு, 'நிலா அது வானத்து மேலே' போட்டுக்கொண்டு, இளையராஜா குரலுடன் தானும் கூடவே சேர்ந்து பாடுகிறான். படத்தில் கமர்ஷியல் ரசிகன் கைத்தட்டி, ஆட்டம் போடவும் ஒரு காட்சியை வைத்திருக்கிறார் இந்த ஆர்ட் டைரக்டர். :-)


(கபாலி வாய்சில் வாசிக்கவும்) "ஆர்ட் டைரக்டர்'ன்னா எப்பவும் மெதுவா போற சீனையும், அழுற சீனையும் மட்டும் தான் எடுப்பார்'ன்னு நினைச்சியா, இது அவ்தியாத்'டா" என்று சொல்லாமல் சொல்லி, படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் சண்டைக்காட்சியையும் தத்ரூபமாக, அதிரடியாக ரத்தம் தெறிக்க எடுத்திருக்கிறார் இயக்குனர்.


யாழினியாக நடித்திருக்கும் தமிழ் நடிகை காளிஸ்வரியும், தீபனாக நடித்திருக்கும் எழுத்தாளர் ஷோபா சக்தியும், இவர்களின் மகளாக நடித்திருக்கும் சிறுமி க்ளாடினும் சிறப்பான நடிப்பை, மற்ற ப்ரெஞ்ச் நடிகர்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கதாபாத்திரங்களுக்கு இவர்களின் தேர்வே, படத்தின் நம்பகத்தன்மையை பெருமளவு கூட்டியிருக்கிறது. படம் பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியாவில் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பொருத்தமான பகுதிகளில் எடுக்கப்பட்டிருப்பதும், படத்துடன் ஒன்றச் செய்கிறது.


முன்பின் அறியாதவர்களுடன் குடும்பமாக வாழும் போதும், பணிபுரியும் போதும் ஏற்படும் தயக்கம் கலந்த உணர்வை, படம் முழுக்க அழகாக வெளிபடுத்தியிருக்கிறார் காளிஸ்வரி. இவர்களைப் பிரிந்து இங்கிலாந்தில் இருக்கும் தனது உறவுகளுடன் சென்று சேர்ந்துவிட நினைக்கும் குழப்ப உணர்வையும் சரியாக வெளிகாட்டி இருந்தார். ஷோபா சக்திக்கு தான் வாழ்ந்த வாழ்க்கையை நடித்து காட்டும் வாய்ப்பு என்பதால் நடிப்பில் குறையே வைக்கவில்லை. சமிபத்தில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருதைப் பெற்ற ஷோபா சக்திக்கு, எமது வாழ்த்துகள்.


ஒரு காட்சியில், ஒரு முன்னாள் போராளியை தீபன் சந்திக்கிறான். போர் முடிவுற்றது என்பதை ஒப்புக்கொள்ள முடியாமல், இன்னமும் ஆயுதங்கள் வாங்கி அனுப்ப செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் அந்த போராளி. சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டும், சிலர் போலித்தனத்துடன் இவ்வாறு வாழ்ந்துக்கொண்டு இருப்பதும், உலகின் பல பகுதிகளில் இருக்கிறது போலும். எனக்கு தமிழகத்தின் சில இயக்கங்கள் நினைவுக்கு வந்து சென்றன, இக்காட்சியின் போது.


---


இது ஈழத்தைப் பற்றிய படமோ, ஈழப்போர் பற்றிய படமோ அல்ல. முன்பே சொன்னது போல், ஈழப்போர் முடியும் காலக்கட்டத்தில் இப்படம் ஆரம்பிக்கிறது. ஒரு போரால் பாதிக்கப்பட்டு, வெளிநாடுகளில் வாழ்க்கையைத் தொடரும் ஏதிலிகள் அனுபவிக்கும் துயரத்தைக் காட்டும் படம் இது. அதை ஈழப்போரால் பாதிக்கப்பட்டு, ப்ரான்சில் அகதிகளாக வாழும் சில கதாபாத்திரங்கள் மூலம் இயக்குனர் இப்படத்தில் காட்டியிருக்கிறார்.  ஆனால், இது உலகம் முழுக்க வாழும் அனைத்து அகதிகளின் வாழ்விற்கும் பொதுவானது. அகதி வாழ்வின் மீதான நம் கண்ணோட்டத்தை மாற்ற கூடிய படமிது..

No comments: