Tuesday, June 30, 2009

குழந்தையும் தெய்வமும்

லாஜிக் கேள்விகள் தடை செய்யப்படுகிறது.

---

ஒரு குட்டி குழந்தைக்கு, கடவுள் சொர்க்கத்துல மனிதர்களுக்கு ஆப்பிள் கொடுக்குற விஷயம் தெரியவருது. ஆப்பிள் வாங்கும் சந்தோஷத்துடன், சொர்க்கம் செல்கிறது. அங்கு, கடவுளிடம் ஆப்பிள் வாங்க, திருப்பதியில் லட்டு வாங்க நிற்பதை விட பெரிய க்யூ நிற்கிறது. குழந்தையும் வரிசையில் சேர்ந்து கொள்கிறது. நிற்கும்போது, குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி. கடவுள் கையால் ஆப்பிள் வாங்க போகிறோமே? என்று.

குழந்தை கடவுள் அருகே நெருங்கிவிட்டது. கடவுள் பழத்தை குழந்தையின் கையில் கொடுக்கும்போது, குழந்தையின் பிஞ்சு கரங்களில் அப்பெரும் பழம் நிலைகொள்ளாமல், கீழே மண்ணில் விழுந்து விட்டது. அச்சச்சோ! குழந்தைக்கு வருத்தம். அங்கு இருக்கும் விதிமுறைப்படி, அந்த பழம் வேண்டுமானால், திரும்பவும் வரிசையில் நிற்க வேண்டும். தேவதூதர்கள், இந்த சட்டத்திட்டத்தை குழந்தையிடம் சொல்கிறார்கள். ’வந்தது வந்து விட்டோம். சும்மா போவதா?’ வெறும் கையோடு வீடு திரும்ப குழந்தைக்கு விருப்பமில்லை. திரும்பவும், க்யூவின் வாலில் தொடங்கியது.

இம்முறை வரிசையின் நீளம் முன்பைவிட அதிகம். முன்னர், குழந்தைக்கு பின்னால் நின்றவர்கள், இப்போது திருப்தியுடன் பழத்தை வாங்கி செல்கிறார்கள். வரிசையில் நின்று இதை கண்ட குழந்தைக்கு ஏக்கமாகிவிடுகிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு? மத்தவங்க எல்லாம் சுலபமா வாங்கிட்டு போறாங்க? எனக்கு மட்டும் ஏன்? நான் என்ன பாவம் செய்தேன்? கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது. கூடவே, பயமும் வந்தது. இந்த முறையும் தவறவிட்டு விட்டால்?

குழந்தை பழத்தை பெறும் நேரம் வந்தது. கடவுள் பழத்தை நீட்ட, குழந்தையின் கைகள் நடுக்கத்துடன் பெற்று கொண்டன.

கொடுத்து விட்டு கடவுள் பேச தொடங்கினார்.

”என்னருமை மழலையே, நான் போன முறை பழத்தை உன்னிடம் கொடுக்கும் போது தான் கவனித்தேன். அது ஒரு அழுகிய பழம். அது உனக்கு வேண்டாம் என்று தான் கீழே விழும்மாறு தவறவிட்டேன். உனக்கு அழுகிய பழத்தை கொடுக்க நேர்ந்ததை எண்ணி, வருந்தி, அடுத்த முறை உனக்கு ஒரு சிறப்பான பழத்தை கொடுக்க எண்ணினேன். அந்நேரம் அந்த பழம் தேவ தோட்டத்தில் செழுமை அடைந்து கொண்டிருந்தது. அப்பழம் முழுமையடையவே, உன்னை நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைக்க வேண்டி இருந்தது. இப்பொழுது, அது உன் கையில். இன்றைய தேதிக்கு, அத்தோட்டத்தில் வளர்ந்த சிறந்த பழம் இது தான். அது உனக்கு தான். மகிழ்ச்சியுடன் சென்று வா.”

கடவுள் குழந்தையை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

ஆகவே, நண்பர்களே, சில சமயம் நம்மை நூறு சதவிகிதம் ஒரு வேலைக்கு அர்பணித்தும், அதன் பலன் தாமதமாக கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலும் போகலாம். அந்நேரம் நாம் நினைத்து கொள்ள வேண்டியது. அதற்கான சிறப்பான வெகுமதி நமக்காக காத்திருக்கிறது என்றும், அதற்காகவே இந்த தாமதம் என்றும். நடப்பவை ஒவ்வொன்றையும் நல்லதென்றெண்ணி நன்றி கூறுங்கள். மேலும், நம் வாழ்வில் நன்மை பயக்கும்.

இதே நம்பிக்கையில், இதே கண்ணோட்டத்தில் இவ்வுலகை கண்டால், இதுவும் சொர்க்கம் தான்.

----

மின்னஞ்சலில் வந்தது. நல்லா இருக்குதேன்னு, இங்கே.. :-)

Monday, June 29, 2009

பொத்தி வெச்ச மல்லிக மொட்டு

எனக்கு பிடிச்ச இளையராஜா பாடல்களில் ஒண்ணு இது. கேட்க ஆரம்பிச்சன்னா, சில சமயம் கேட்டுக்கிட்டே இருப்பேன். அவ்ளோ பிடிக்கும்.

அந்த பாட்டை பற்றி மகேந்திரன்.பாட்டு கேட்டுக்கிட்டே வாசிங்க.

---

மிகத்தேர்ந்த ஒரு கலைஞன் கோர்த்த ஹிந்துஸ்தானி மெட்டுக்கு, தென்னிந்தியாவின் பிரத்யேக இசையமைப்பு சேர்த்தால் எப்படி இருக்கும்? அறிந்துகொள்ள ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

பாடல் - "பொத்திவெச்ச மல்லிக மொட்டு"
படம் - "மண்வாசனை"
வெளியான ஆண்டு - 1983

வைரமுத்துவின் மண் மணக்கும் வரிகளுக்கு, எஸ்.பி.பி, ஜானகி உயிரளித்திருப்பார்கள். இந்த பாடலை கேட்ட பிறகு, பிடில் (வயலின்) என்பது மேல்நாட்டு இசைக்கருவி என்று கண்டிப்பாக நம்பமாட்டீர்கள். பாடல் முழுவதுமே வயலின் ராஜாங்கம் பிரமாதப்படுத்தியிருக்கும்.பாடலுக்கு முன் ஒரு சுவாரஸ்யமான செய்தி. எஸ்.பி.பியின் உடன்பிறந்த தங்கை எஸ்.பி.ஷைலஜா, ஒரு அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகி. ராஜா நிறைய பாடல்களில் அவரை அழகாக பயன்படுத்தியிருப்பார். பின்னணிப்பாடலேயானாலும் அண்ணனை தங்கையுடன் காதல் பாட்டுகளைப் பாட வைக்க, ராஜா ஒருபோதும் விழைந்ததில்லை. சிலபாடல்களை இருவரையும் பாட வைத்திருப்பார், அது காதல் உணர்வுடன் கூடிய பாடலாக இருக்காது. உதாரணம் ”புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா...”. முதல் பாதி எஸ்.பி.பி பாடியபின், ஷைலஜா துவங்குவார். நம் கலாச்சாரம் அப்படி.

ஷைலஜாவை பயன்படுத்த ராஜா நினைத்தால் மலேசியா அல்லது மனோவுக்கு அடிக்கும் யோகம். அதேபோல மண்வாசனையிலும் கூட "அரிசி குத்தும் அக்கா மகளே.."வுக்காக மலேசியா, ஷைலஜா கைகோர்த்திருப்பார்கள். ஷைலஜா சொல்லும்
"ம்ஹூம்" க்காகவே மீண்டும் கேட்கலாம்...

பொத்திவெச்ச மல்லிக மொட்டுவின் மிகப்பிரதானமான விஷயம் இசை. பாடல் துவக்கத்தில் (Lead) பிடில் சேர்ந்திசை (Chorus Violin) இப்படிக்கூட இசையமைக்க முடியுமா என்று வியக்க வைக்கும். எப்போதேனும் இசையின்றி பாடல் போக்கை மட்டும் கவனித்துப்பாருங்கள். ஒவ்வொரு வரியிலும் ராஜா மிதப்பார்.. நம்மையும் மிதக்க வைப்பார். ஒவ்வொரு வரியுமே ஒரு ஆலாபனை போலிருக்கும். ராஜாவின் இசைக்கோர்ப்பு என்று நாம் கணிக்கும் இடம் எது தெரியுமா? சரணம் முடிந்து மீண்டும் பல்லவி துவங்கும் இடம்.. "அட வாடக்காத்து சூடு ஏத்துது.." மற்றும் "சின்னக்காம்பு தான பூவத்தாங்குது.." இரண்டு இடங்களும் ராஜாவுக்கே சொந்தமானது..

இரண்டு பேரும் அறிமுகங்களா? என் சிறு வயதில் அம்மா சொன்னது, படத்திற்கு நாயகன் சரியாக அமையாமல், நாயகன் இல்லாமலேயே பாரதிராஜா வெளிப்புற படப்பிடிப்புக்கான பயணத்தை துவக்கினார். மதுரையை கடக்கும்போது அங்கே வளையல் வியாபாரம் செய்து வந்த பாண்டியனை அப்படியே படத்தில் நடிக்க அழைத்துச்சென்றாராம். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. நாயகி ஆஷாவாக இருந்து பெயர் மாற்றம் செய்யப்பட ரேவதி. கலாக்ஷேத்ராவின் மாணவி.

முறைப்பெண்ணை வேண்டுமென்றே ஒரு குழிக்குள் தள்ளி, மாமன் அவளை ஆலம்விழுது மூலம் மேலே தூக்குவதாக பாடல் படமாக்கப்பட்டிருக்கும். இதெல்லாமே சரியாக கவனிக்காமல் போன சின்ன சின்ன கவிதைகள். இதே பாடலின் சோகப்பதிவும் (pathos version) உண்டு. கனியிருப்பக்காய் கவர்ந்தற்று என்பதால் அதை நிறைய கேட்டதில்லை. அப்போதெல்லாம் பாடல்பதிவு முடியும் வரை கவிஞரும் உடனிருப்பார். இதனால் தான் எஸ்.பி.பி, ஜானகியின் தாய்மொழி தெலுங்கு என்பது பாதிபேருக்கு இன்னும் தெரியவில்லை. அழகான கிராமத்து உச்சரிப்பு. அது "மல்லிகை" கூட இல்லை, "மல்லிக" அவ்வளவு தான். இதைக்கேட்கும் போதெல்லாம் இன்னுமொரு 20 வருடம் முன்பே பிறந்திருந்தால் சரியான வயதில் இதை சுடச்சுட ரசித்திருக்கலாமே என்று தோன்றும்.. முறைப்பெண்ணோ அல்லது முறைமாமனோ இருந்து இந்த பாடலை ரசிப்பவர்கள், நிஜமாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தானே?

இனி பாடல்..

பொத்திவெச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சி வெக்கத்த விட்டு
பேசிப்பேசி ராசியானதே..
மாமம்பேர சொல்லி சொல்லி ஆளானதே.. ரொம்ப நாளானதே..

மாலயிடக்காத்து அல்லி இருக்கு,
தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு..
இது சாயங்காலமா மடி சாயுங்காலமா?
முல்லப்பூச்சூடு மெல்ல பாய்போடு..
அட வாடக்காத்து சூடு ஏத்துது..

ஆத்துக்குள்ள நேத்து உன்னநினச்சேன்,
வெக்க நிறம் போக மஞ்சக்குளிசேன்..
கொஞ்சம் மறஞ்சிப்பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா?
அது கூடாது இது தாங்காது..
சின்னக்காம்பு தான பூவத்தாங்குது..

பொத்திவெச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சி வெக்கத்த விட்டு
பேசிப்பேசி ராசியானதே..
மாமம்பேர சொல்லி சொல்லி ஆளானதே.. ரொம்ப நாளானதே..
ஆளானதே.. ரொம்ப நாளானதே....


-மகேந்திரன்

---

இப்பவும் லவ் பண்றவுங்க, புதுமண தம்பதிகள் இந்த பாட்டை கேட்கலாம். கண்டிப்பா ரசிப்பீங்க. என்ஜாய்...

பள்ளிக்கூடம் போவலாமா?

என்னை போயி பதிவர் நண்பர் சுகுமார் சுவாமிநாதன், இந்த ’பள்ளிக்கூடம் போவலாமா?’ தொடர்பதிவு எழுத கூப்பிட்டு இருக்காரு. நான் ஒரு ஞாபக மறதி கேஸ். என்னத்தை எழுத? தவிர, நல்ல பையன்! அமைதியான பையன்! சொல் பேச்சு கேக்குற பையன்! சுவாரஸ்யமா சொல்ற மாதிரி, தப்பு எதுவும் பண்ணியதில்லை. :-)

---

என்னை எல்.கே.ஜி சேர்த்த போது நடந்தது எதுவும் ஞாபகமில்லை. எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை ஒரு பள்ளி. பிறகு, மூன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டு மற்றொன்றில். மொத்தம் இரண்டு பள்ளிகள்.

தொடக்க பள்ளியில் தான் போட்டிகளில், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். பிறகு, எதுவும் இல்லை. ராமராஜன் போல் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு ”நான் சிரித்தால் தீபாவளி” பாட்டுக்கு நடனமாடியது, அந்த போட்டோவை பார்க்கும்போது தான் ஞாபகம் வரும்.

மூன்றாம் வகுப்பில் என்னை சேர்த்து விட்டது, என் அண்ணன். சேர்க்கை தேர்வுக்கு கூட்டி சென்றது அவர்தான். முதல் நாள் பள்ளியில் கொண்டு விட்டதும் அவர்தான். என்னை ஒரு நல்ல இடமாக பார்த்து இருக்க வைத்து விட்டு, பள்ளி விட்டதும் கூட்டி சென்றார். இதோ, பல வருடங்கள் கழித்து, சென்ற வருடம் என் அண்ணனின் மகளை பள்ளியில் சேர்க்கும் சமயம், அவர் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது. நான் அவளை பள்ளிக்கு கூட்டி சென்று, வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு, வெளியே நின்ற போது, என் நினைவுக்கு நான் என் அண்ணனுடன் பள்ளி சென்ற முதல் நாள் நினைவுக்கு வந்தது.

---

என் பள்ளி வீட்டிற்கு வெகு தொலைவில் இருந்தது. முதலில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். பிறகு, ரிக்‌ஷா. அப்புறம். சைக்கிள். கடைசியில் ஹீரோ புக்.

எங்கள் பஸ் டிரைவருக்கு ரஜினி என்று நினைப்பு. தலைமுடியை m ஷேப்பில் வைத்திருப்பார். ஒரே டிரைவர். பல ட்ரிப்கள் அடிப்பார். நல்லா இருப்பார். இப்ப, இப்ப உள்ள ரஜினி மாதிரி ஹேர் ஸ்டைல் (!) வச்சிருப்பாரோ என்னமோ தெரியவில்லை. :-)

எங்க ரிக்‌ஷா மாமா பேரு, மோகன். சாயந்தரம் பள்ளி விட்டு சாவகாசமா வரும் போது, எங்களை ஓட்ட விடுவாரு. மேடான இடங்களில், அவர் இழுப்பார். மத்த நேரங்களில், நாங்க ஜாலியா ஓட்டுவோம். வீட்டுக்கு முன்னாடி, அவர்கிட்ட கொடுத்துடுவோம். இப்ப கூட, அவரை பார்க்கறதுண்டு. பேசுறதுண்டு. ட்ரை சைக்கிள் ஓட்டிட்டு இருக்காரு.

---

எங்க ஸ்கூலுக்கு போற வழியில, ரெண்டு முக்கியமான இடங்களை கடந்து போகணும். ஒண்ணு, எங்க ஊரு கூவம். இன்னொண்ணு, ரயில்வே கிராஸிங்.

மழை சமயம், எங்க ஊரு கூவத்துல, தண்ணி (சாக்கடை தண்ணி) முழங்காலுக்கு மேல வரை ஓடும். அந்த நிலையில கூட, படிப்பு மேல எனக்கு இருக்குற ஆர்வத்துல, ஓவரா இருக்குல்ல? சரி, வேற வழியில்லாம, ஸ்கூலுக்கு போவேன். போவேன்ன்னு சொல்றத விட, கூட்டி செல்லப்படுவேன்ன்னு சொல்றது தான் சரி. எங்க அண்ணன், அவரோட சைக்கிள்ல கூட்டிட்டி போவாரு. என் மேல தண்ணி படாம, அவர் தண்ணில இறங்கி கூட்டிட்டு போவாரு. இத எழுதும் போது, ’வானத்தை போல’ பேக்ரவுண்ட் மியூசிக் எனக்குள்ள ஓடுது. :-)தினமும் ரயிலை பார்த்துட்டு தான், ஸ்கூலுக்கு போகணும். கேட் பூட்டிக் கிடக்கும். ஆனா, பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுனர்கள் எல்லாரும் போயிட்டு தான் இருப்பாங்க. சைக்கிள்கள் கேட்டை தாண்டி போய்க்கிட்டு இருக்கும். யாருன்னே தெரியாது. ஆனா, பரஸ்பரம் சைக்கிளை தூக்கி கொடுத்து மாற்றி கொள்வார்கள். எனக்கு சைக்கிளை தூக்கும் தெம்பில்லாததால், ரயில் வரும்வரை பார்த்து விட்டு, சைக்கிளை உருட்டி கொண்டு செல்வேன். இப்ப, அந்த ரயிலில் நான் செல்லும்போது, மறக்காமல் வெளியே பார்ப்பேன். என்னை போல் சிலர் இருப்பார்கள்.---

நான் பிறந்ததற்கு முன்னால் வந்த ரஜினி படங்கள், நினைவு தெரிவதற்கு முன்னால் வந்த படங்கள், எங்கள் ஊரில் உள்ள தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டு கொண்டே இருக்கும். நானும் பார்த்துக்கொண்டே இருந்தேன். உபயம் : மறுபடியும் என் அண்ணன். லா... லா. லா... லா.

இப்படி பார்த்த படத்தின் கதை, அதாவது எனக்கு புரிந்த கதை, மறுநாள் வகுப்பில், இரண்டு பெஞ்ச்களுக்கு வாரியார் பாணியில் சொல்லப்படும். நாளடைவில், புது படங்களின் கதையும் மறுநாள் வகுப்பில் சொல்லப்பட்டது. எப்ப ஆரம்பித்தது என்று தெரியவில்லை. இன்று வரை, ரஜினி படங்களை முதல் நாள் பார்த்து வருகிறேன். பார்க்காமல் இருக்கலாம். இருந்தாலும், ’பாரம்பரியம்’ தொலைந்துவிட கூடாது என்று கட்டி காத்து வருகிறேன்.

---

நான் படித்தது கிருஸ்துவ பள்ளி என்பதால், ’டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ போன்ற படங்கள் வந்தால் கூட்டி சென்று விடுவார்கள். தவிர, ஜுராஸிக் பார்க், அனகோண்டா போன்ற ஹாலிவுட் ராமநாராயணன் படங்களுக்கும் கூட்டி செல்வார்கள். இந்த படங்கள் ஓடும் தியேட்டரில் தான், சில நாட்களுக்கு முன்னால் பிட்டு படங்கள் ஓடி இருக்கும். அது குறித்து, சில ரகசிய பேச்சுவார்த்தைகளும் பசங்களுக்குள் நடக்கும். எல்லாம் படம் தொடங்கும் வரை. படம் தொடங்கிய பிறகு, எதற்கெடுத்தாலும் கத்துவார்கள். பல்லியா இருந்தாலும் சரி. டினோசரா இருந்தாலும் சரி.

இரண்டு மாதங்களுக்கு முன்னால், திருநெல்வேலியில் ஒரு பள்ளியில் +2 தேர்வு முடிந்த கடைசி நாளன்று, அயன் படத்திற்கு கூட்டி சென்றார்களாம். நல்ல முன்னேற்றம் என்று நினைத்து கொண்டேன்.

---

எனக்கு காலையிலேயே, எங்க அம்மா டிபன் பாக்ஸ்ல, மதியத்துக்கு சாப்பாடு வச்சி கொடுத்து விடுவாங்க.

எனக்கு பிடிச்ச பேவரைட்ஸ். இட்லி வித் எண்ணை கலந்த பொடி. எலுமிச்சம் சாதம் வித் துவையல் & பிரட்டி போட்ட ஆப்பாயில்.இட்லி, பொடில தொட்டு தொட்டு சாப்டுட்டு வருவேன். முடியிற நேரத்துல, அப்படியே பொடியில போட்டு பிணைஞ்சி சாப்பிட்டா... ஆஹ்ஹா... அதே போல, ஆப்பாயில் வெள்ளை பாகத்தை சாப்பிட்டு கொண்டே வருவேன். கடைசில, மஞ்ச கருவ சாதத்துல பிணைஞ்சி, ஒரு புது டிஷ் உருவாக்கி சாப்பிடுவேன்.

ஸ்கூல் முடிஞ்சதும், வெளியே இருக்குற தள்ளுவண்டி கடையில, ஐஸ்ஸை தேய்ச்சி, சீவலாக்கி, ஒரு கண்ணாடி டம்ளர்ல போட்டு, எழுமிச்சம் பழ சாறு சேர்த்து, எசன்ஸ் ரெண்டு டைப் ஊத்தி, ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் போட்டு தருவாங்க. ஓ! வாட் ஏ ஐட்டம். சூப்பரா இருக்கும். என்ன, தொண்டை வலி, டான்சில்ஸ் எல்லாம் வரும்.

அப்புறம், மிளகா பொடி போட்ட மாங்கா. ஒரு பாட்டி வித்துட்டு இருப்பாங்க. இப்ப, ரெண்டு வாரம் முன்னாடி, பிரண்ட் உடன், ஒரு ஸ்கூலை கடந்து போனப்ப, ஒருத்தர் இதே மாதிரி மாங்காயை வெட்டி கவர் போட்டு வச்சிருந்தாரு. பார்க்கவே நல்லா இருந்ததால வாங்குனோம். அதே இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவை. பாட்டி, கண் முன்னாடி வந்துட்டு போனாங்க.

இதெல்லாம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போனத்துக்கப்புறம், சாயந்தரம் ஒரு வேளை, நைட் ஒரு வேளைன்னு ஒரு நாளைக்கு நாலு வேளை ஸ்கூல் படிச்சப்ப சாப்பிடுவேன்.

---

அது ஒரு தீபாவளி சமயம். பொட்டு வெடி போட்டுட்டு இருப்போம்ல? அதுல ஒரு வெடி என் பையில விழுந்திருக்கு. தீபாவளி முடிஞ்சப்புறம், ஏதோ ஒரு தேர்வுக்கு அந்த பையை எடுத்து சென்றிருக்கேன். அந்த பொட்டு வெடி, இப்ப என் பரீட்சை பேடுல.

பரீட்சை ஆரம்பித்து கொஞ்ச நேரத்துல, நான் பரீட்சை அட்டை கிளிப்பை சரி செய்ய, டம் என்று சத்தம். பொட்டு வெடி என்றாலும், தேர்வு அறை அமைதியில், எல்லோரையும் அதிர செய்தது. வாத்தியார் என்னை பிடித்து கொண்டார். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. பளார் என்று ஒரு அறை வாங்கினேன். அழுதுக்கொண்டே பரீட்சை எழுதுனேன்.

தேர்வு அறையில் வெடி போட்டேன் என்றொரு அபாண்ட குற்றச்சாட்டை சாத்தி, அன்று என்னையும் ‘ரவுடி’ ஆக்கிவிட்டார்கள். :-)

---

இப்ப, நான் படித்த பள்ளியில் ஏகப்பட்ட மாற்றங்கள். ஒன்றை கேட்டப்போது, நல்லவேளை நாம இருந்தபோது, இது இல்லை என்று நினைத்தேன். இன்னொன்றை கேட்டப்போது, ஐயைய்யோ! நாம இருந்தபோது, இது இல்லையே என்று நினைத்து கொண்டேன்.

ஒன்று, பள்ளி கோ-எட்டா மாறியது. இன்னொன்று, ஸ்கூல்லுக்கு நேரத்துக்கு போகாட்டி, வீட்டுக்கு எஸ்.எம்.எஸ். வருதாம். டெக்னாலஜி.

---

மூணு பேரை அழைக்கணுமா? நான் அழைப்பது,

1) முகில்
2) கணேஷ்
3) நரேஷ்

கோத்துவிட்டதுக்கு மன்னிச்சுக்கோங்க. முடிஞ்சா எழுதுங்க. :-)

Saturday, June 27, 2009

அனானியின் புகாருக்கு ரெட்பஸ் பதில்

இந்த பதிவில், ஒருவர் அனானியாக ரெட்பஸ் மேல் இரு புகார்கள் சொல்லியிருந்தார். அதில் ஒரு புகாருக்கு ரெட்பஸ் பதில் சொல்லியுள்ளது.

அனானியின் புகார்.

They never refund money if you cancel their ticket and instead give a coupon to redeem at a later day. I don't like this.

All they get is 5 seats in each of these carriers. Try BLR-CBE route any day, all the Volvo buses are shown full.


ரெட்பஸ் பதில்

On cancellation we provide cash coupon id for customer convenience to book tickets again in redBus, if the customer is not interested he may place a phone request or send a mail to support@redbus.in and the amount for the same would be reversed.

நாடோடிகள் - பாதி வேகம் மீதி சோகம்

ஒரு நண்பனின் காதலை சேர்த்து வைத்து, அதனால் மூன்று நண்பர்களுக்கு ஏற்படும் பாதிப்பும், சேர்த்த வைத்த காதல் தோற்கும்போது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தான் கதை. கதையாக முழு திருப்தி இருந்தாலும், படமாக பாதி திருப்தி தான். முதல் பாதி ஏற்படுத்தும் எதிர்ப்பார்ப்பை, இரண்டாம் பாதி பூர்த்தி செய்யவில்லை. அட்லீஸ்ட் எனக்கு.

முதல் பாதியில் வரும் மாமன் மகள் காதல், அப்பா அட்வைஸ் காதல் ஸ்வீட். இரண்டாம் பாதியில் வரும் பின்விளைவுகள், கஷ்டம்மப்பா... பின்விளைவுகள், கொஞ்சம் அதிகம்.

படத்தின் முக்கிய காட்சியான, அந்த நாமக்கல் கடத்தல் கல்யாணம் காட்சி, எக்ஸ்பிரஸ். குழாயை எடுத்து காதில் அடித்தது, ஒரு நொடி தியேட்டரில் இருக்கும் அனைவரையும் செவிடாக்கி இருக்கும். சம்போ சிவ சம்போ பாடல் விறுவிறுப்பை கூட்டுகிறது. நேற்று கலைஞர் டிவியில் 'அஞ்சாதே' படத்தின் பின்னணி இசையை கேட்டப்போது, சுந்தர் சி. பாபுவை ஏன் இன்னும் நிறைய படங்களில் காணவில்லை என்று எண்ணியிருந்தேன். இந்த படத்திலும் பின்னணியில் கலக்கியிருந்தார். சில சப்பை சீன்களுக்கு கூட அதிர வைத்திருந்தார். பாடல்களில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஒன்று தேவையில்லாதது கூட. சம்போ, ஸ்டார் ”தோம் கருவில் இருந்தோம்”யை நினைவுப்படுத்தியது.

சசிக்குமார் ஆக்ரோஷ காட்சிகளில் கலக்குவார் என்பது தெரிந்தது தான். இதில் எக்ஸ்ட்ராவாக காதலிலும், காமெடியிலும் இறங்கியிருக்கிறார். டான்ஸ் வேறு. இருந்தாலும் சண்டைக்காட்சிகளிலும், சோகக்காட்சிகளிலும் தான் பின்னுகிறார். தாடி இல்லாத காட்சி, இவரது யூத் இமேஜிற்கு டேமெஜ் பண்ணும். இந்த படம் வெற்றி பெற்று, இவரும் நடிக்கிறேன்னு, இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தாமல் போயிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.

ரெண்டு ஹீரோயின்கள். ரெண்டு பேரும் சூப்பர். அதிலும், ஒருவர் ஜோதிகாவின் கலை வாரிசாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இதற்கு நேர்மாறாக ஏதாவது உடையணிந்து வந்து அதிர்ச்சி கொடுக்காமல் இருக்க வேண்டும். மன்சூர் அலிகான் மாதிரி ஒருத்தர் வருகிறார். கஞ்சா கருப்பு செய்ய வேண்டிய வேலையை, இவர் செய்திருக்கிறார்.

நிறைய புதுமுகங்கள். எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் நடித்தவர்களில் தமன்னாவை தவிர மற்றவர்களை காணோமே என்றிருந்தேன். இதில் ஒருவர் நடித்திருக்கிறார். கல்லூரி ஹீரோ நடித்த வால்மீகி, இந்த படத்துடன் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழ் சினிமா காதல், நட்பு என்று இத்தனை நாள் கற்று கொடுத்து, அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், உயிரை கொடுக்கலாம் என்று சொல்லிக்கொடுத்து, அதில் நாசமாக போனவர்கள் எத்தனை பேரோ? இதில் இயக்குனர் சமுத்திரகனி, அதற்கு பிராயச்சித்தம் செய்திருக்கிறார். சொல்லப்படாத கதை. சொல்ல வேண்டிய கதை. சொல்லிவிட்டார். பாராட்டுக்கள்.

----

இயக்குனரிடம் படப்பெயரை பற்றி கேட்டபோது, இதில் நண்பர்கள் ராஜபாளையம், நாமக்கல், கன்னியாக்குமரி என்று பல ஊர்களுக்கு செல்கிறார்கள். அதனால், இந்த பெயர் என்றார். நான் கூடத்தான் இங்கே எல்லாம் சென்றிருக்கிறேன்.Friday, June 26, 2009

நாட்டு சரக்கு - உலக கண்டுப்பிடிப்பும் உள்ளூர் கண்டுப்பிடிப்பும்

லண்டனில் இருக்கும் ஹென்றி, இன்றைய தேதிக்கு உலகின் வயதான மனிதர். வயசு அதிகமில்லை. 113 ஆண்டுகள். 16 நாட்கள். இவர் இதுவரை 3 நூற்றாண்டுகள், 6 அரசாட்சிகள், 2 உலக போர்களை பார்த்திருக்கிறார்.

“நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்?”

“சிகரெட், விஸ்கி... அப்புறம் பொண்ணுங்க, அடங்காத பொண்ணுங்க”

அட, உண்மையாங்க.

-----

வாஷிங்மெஷின்ல துணியை துவைக்க போட்டா, ஒரு பிரச்சினை. தண்ணி எக்கச்சக்கமா எடுக்கும். அதுக்கு முடிவு கட்ட, புது மாதிரியா ஒரு வாஷிங்மெஷின் கண்டுப்பிடிச்சிருக்காங்க. ஒரு கப் தண்ணி போதுமாம். 90% சதவிகித தண்ணீரை மிச்சம் பிடிக்கலாமாம்.

படிச்சிட்டு நண்பன் கேட்டான்.

“இதே மாதிரி ஒரே கப்புல மப்பு வர ஏதாச்சும் கண்டுபிடிப்பாங்களா?”

-----

ரயில் தண்டவாளத்தை தாண்டலாமா? தாண்டலாமே, இதுல என்ன இருக்குன்னு கேக்குறீங்களா? ஜாக்கிரதை.

அதுக்கு தண்டனை, ஆறு மாதம் வரைக்குமான ஜெயில். இந்திய தண்டவாள வரலாற்றில் முதல் முறையாக இந்த தண்டனையை பெற்றிருப்பவர், மும்பையை சேர்ந்த பிரகாஷ். மேலே கடந்து செல்ல பாலம் இருக்க, குறுக்கு வழியா குறுக்க போயிருக்கார். பிடிச்சு, ஒரு வாரம் ஜெயில வச்சிட்டாங்க.

ரயில் டிக்கெட் எடுக்காம வந்தவுங்க, தண்டவாளத்துல தலை வச்சவுங்க, மறியல் பண்றவுங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வருவீங்க.

----

உத்தரபிரதேச அரசாங்கம், கட்டுமான வேலைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எல்லாம் ரொம்ப முக்கியமான வேலைகள்.

இதுவரை கன்ஷிராம், மாயாவதி சிலைகளை ஊரு பூரா வைக்க, 7 கோடி செலவு பண்ணியிருக்காங்க. 52 கோடிக்கு மார்பிள்ல யானை சிலை செஞ்சிருக்காங்க. 2008-09 ஆண்டு மட்டும் பெரிய தலைவர்களுக்கு சிலை வைக்க, 194 கோடி. அம்பேத்கர் நினைவு மண்டபத்துக்கு 231 கோடி. அடுத்ததா, 40 சிலைகளை மாயாவதி திறந்து வைக்க போறாங்களாம். அதுல, ஆறு அவுங்க சிலை.

ரொம்ப முக்கியம்...

-----

போன வாரம், கர்நாடக மின் துறை அமைச்சரை சந்திக்க வந்த ஒரு முதலீட்டாளரை, சென்னை ஏர்போர்ட்ல கைது பண்ணிட்டாங்க. ஏன்னா, அவரு தீவிரவாதியாம். பேரு, அப்பாஸி. அல்ஜீராவை சேர்ந்தவர். அந்த நாட்டு ஏர்போர்ட் குண்டு வெடிப்பில் அவரும் குற்றம் சாட்டப்பட்டவராம். சென்னையில ஜெயிலுல வச்சிட்டாங்க. அப்புறம், இண்டர்போல் எச்சரிக்கையை விலக்கிக்கொள்ள, ரிலீஸ் பண்ணிட்டாங்க.

அமைச்சர்கிட்ட ஏன் இப்படின்னு கேட்டா, மின் ஆலை நிறுவ அவரோட டீலிங் நல்லாயிருந்தது. அதான் வர சொன்னோம்ங்கறாரு. கடைசில, சர்ச்சையில இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரியை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அவரும், ஒண்ணும் பிரச்சினை இல்லை, நல்லதுன்னு அப்பாஸியோட கம்பெனியில சி.இ.ஓ.வா சேர்ந்துட்டாரு.

இப்ப, தமிழ்நாட்டு கவர்மெண்டோட பேச்சுவார்த்தை நடந்திட்டு இருக்காம் !

-----

ஒரு கோவிலுக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதற்காக. கோவிலுக்கு உள்ளே போகிறவர்கள் எல்லோரும், கதவில் இருந்த ஒரு உலோக வளையத்தை தட்டி கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும். பக்கத்தில் வந்த கோவில் ஊழியரிடம் கேட்டேன்.

“ஏங்க, அது என்னதுங்க? ஏன் அதை தட்டணும்?”

“அது கதவு தாழ்பாளுங்க. எவனோ ஒருத்தன் தட்டிட்டு போயிருப்பான். அதை பார்த்துட்டு எல்லோரும் ஆரம்பிச்சுருப்பாங்க.”

Wednesday, June 24, 2009

பெரியார்

இந்திய மொழிகளில், இணையத்தில் தமிழில் தான் அதிக பக்கங்கள் இருக்கிறதென்று ஒரு தகவல் படித்திருக்கிறேன். அப்படியே இல்லையென்றாலும், ஹிந்திக்கு அடுத்தப்படியாக கண்டிப்பாக இருக்கும். இன்னும் நிறைய விஷயங்களில் இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தப்படியாக தமிழ் இருக்கும். காரணம்?

தமிழகத்தை தவிர மற்ற மாநிலத்தவர்களிடம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நான் சந்தித்தவர்கள் மிகவும் குறைவு. தமிழகத்திலும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள் நிறைய இருந்தாலும், அதை மறுப்பவர்கள் கணிசமான சதவிகிதம் உள்ளனர். அப்படியே, சாமி கும்பிடுபவர்கள் என்றாலும், அதை லைட்டாக எடுத்து கொள்பவர்கள் அதிகம். ஏதேனும், மத சர்ச்சை கிளம்பும் போது, அதிக பாதிப்பு இல்லாதது, தமிழகம். காரணம்?

இன்று மற்ற மாநிலங்களில் போட்டு கொள்வது போல், தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதியை பெருமையாக போட்டுக் கொள்ளும் வழக்கம் குறைவு. சில திருமணப் பத்திரிக்கைகளில் இருக்கிறது. இருந்தாலும் பேசிக் கொள்ளும் போது, சாதியை பெருமையாக பேசிக் கொள்வது குறைவு. பேசுபவர்களை பார்க்கும் பார்வையும் வேறு. காரணம்?

நான் காரணமாக நினைப்பது பெரியாரைத்தான்.

தமிழ் வலைப்பதிவு உலகில் அதிக விவாதங்களுக்கு உட்படும் ஆளுமை, பெரியார். பெரியார் பற்றிய தகவல்கள் இங்கு ஏராளம். தவிர, புத்தகங்களும் பல உண்டு. பெரியார் எழுதிய சுயசரிதை உட்பட. நானும் சில சிறிய புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆர். முத்துக்குமார் எழுதிய, கிழக்கு பதிப்பகத்தின், பெரியார் புத்தகத்தை முதலில் கண்ட போது, ஒரு சின்ன ஆச்சரியம். அதன் அளவு பற்றியது. பெரியார் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறதே? சிலர் போல், வாழ்க்கையின் ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் கொண்டவரல்ல, பெரியார். துள்ளும் இளம் வயதில் இருந்து, தள்ளாடும் இறுதி காலம் வரை தெரிந்து கொள்ள வேண்டியவர் பெரியார். எப்படி அது, 160 பக்கத்தில்? என்பதுதான் ஆச்சரியம்.நூலாசிரியர், பெரியார் மேல் தனிப்பட்ட ஆர்வம் வைத்திருப்பவர். பல காலமாகவே, பெரியார் பற்றி படித்து வருபவர். அவர், புத்தகத்தை ஆரம்பித்தது, பெரியாரின் அப்பா காலத்தில் இருந்து. பெரியார் அப்பா வாழ்க்கையில் முன்னேறியது, தவமிருந்து பெரியாரை பெற்றது, பெரியாரின் இளமைக்காலம், வணிக வாழ்க்கை, உள்ளூர் செயல்பாடுகள், அரசியல் வாழ்க்கை, போராட்டங்கள், மற்ற தலைவர்களுடனான தொடர்பு என்று அவரது இறுதிக்காலம் வரை நிறைவாகவே இப்புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார். ஒரே மாதிரி உள்ளது என்று விமர்சிக்கப்படும் எழுத்து வடிவம், இதற்கு பெரிதும் கைக்கொடுத்துள்ளது. இவ்வகை எழுத்து முறையின் பலம், சுருங்க சொல்லுதல், அதை சுவாரஸ்யமாக சொல்லுதல். இது வரலாறை சலிப்பில்லாமல் படிக்க உதவுகிறது.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசால், தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படும் போதும், அதற்கு தனது கடும் எதிர்ப்பை காட்டியவர், பெரியார். தமிழகம் எங்கும் நடந்த போராட்டத்திற்கு மூல காரணம் பெரியார். ஹிந்தி போராட்டத்திற்காக அவர் சொன்னது. “குண்டடிபட்டு இறந்தாலும் குண்டு மார்பில் பாய்ந்திருப்பது நல்லது.”

மக்களின் பல பிரச்சினைக்களுக்கு, குறிப்பாக உரிமை பிரச்சினைக்களுக்கு அவர் காரணமாக கண்டது, சாதியை. கடவுள் நம்பிக்கையை. இல்லாத ஒன்றுக்காக ஏன் இத்தனை பிரச்சினை? என்று கேள்வி எழுப்பியவர்.

“மனிதனை மனிதன் தொடக்கூடாது. பார்க்கக்கூடாது. தெருவில் நடக்கக்கூடாது. கோயிலுக்குப் போகக்கூடாது. பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. இது போன்ற கொள்கைகள் நிரம்பியிருக்கும் ஒரு நாட்டை எதுவும் செய்யாமல், கடவுள் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இம்மாதிரியான மக்கள் உயிரோடு இருப்பதைக் காட்டிலும் இறந்துவிடலாம்.”

சாகும் வரை கடவுள் மறுப்பையும், சாதி ஒழிப்பையுமே தனது கொள்கையாக வைத்து அதற்கேற்ப தனது பாதையை வகுத்துக் கொண்டவர்.

இப்படி ஒரு சமுதாய மாற்றத்திற்கு ஒருவரை காரணமாக சொல்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். எவ்வளவு பெரிய விஷயத்தை தன் நூறாண்டு கால வாழ்க்கையில் செய்துள்ளார் பெரியார்? ஒரு மனிதனால் இப்படியும் வாழ முடியுமா? என்று ஆச்சரியப்படுத்தும்படியான வாழ்க்கை, பெரியாருடையது.

பெரியாரின் ஒவ்வொரு பரிணாமத்தையும் சொல்ல தனித்தனி புத்தகங்களே தேவை. ராஜாஜி, அண்ணா, காமராஜர் என்று ஒவ்வொரு தலைவரிடமும் அவர் கொண்டிருந்த உறவு தேவைப்படும் இடங்களில் கொள்கையடிப்படையிலும், தேவைப்படும் இடங்களில் நட்படிப்படையிலும், இருந்தது. கொள்கை அடிப்படையில் முற்றிலும் வேறுப்பட்டிருந்த ராஜாஜியிடம், தன் சொந்த விவகாரமான திருமணம் பற்றி கலந்தாலோசித்தார். காங்கிரஸை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்றிருந்தவர், காமராஜரின் செயல்பாட்டால் காங்கிரஸை ஆதரித்தார். அண்ணாவுடன் சில மனஸ்தாபங்கள் இருந்தாலும், இருவருக்கிடையேயான ஆளமான நேசம் என்றும் குறைந்ததில்லை.

திமுக பிறப்பிற்கு காரணமாக இருந்தது, பெரியார் தன்னுடைய தளபதியாக இருந்த அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், கட்சியின் சொத்தை காக்க, தன் வாரிசாக மணியம்மையை கொண்டு வர, அவரை திருமணம் செய்து கொண்டதும், அதனால் அவருக்கும் மற்ற தலைவர்களுக்கும் ஏற்பட்ட விரிசலும் ஆகும். பெரியாரை குருவாக ஏற்ற அண்ணாவை, ஏன் பெரியார் நம்பவில்லை? கருப்பு சட்டை, இந்திய சுதந்திரம் போன்றவற்றில் அவர்கள் கொண்ட கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணமா? இவ்விவகாரத்தில் பெரியாரின் செயல்பாடு, எனக்கு புதிராக இருந்தது.

பெரியாரின் பிடிவாதத்துடன் கூடிய போராட்டக்குணம், அவருடைய இறுதி நொடி வரை அவரோடிடையிருந்தது. பல மாறுதல்களுக்கு அடிப்படையாக இருந்தது இது. இதுவே அவரை வெறுப்பவர்களுக்கு காரணமும் ஆயிற்று. கடவுள் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டம், தொழிலாளர் உரிமை போன்றவற்றில் அவருடைய பங்கு நமக்கு தெரியும். தமிழ் எழுத்துக்களில் அவர் செய்த மாற்றங்களை எத்தனை பேர் அறிவோம்?

ண, ன, ள போன்ற எழுத்துகளின் நெடில் வடிவங்களை எழுதுவது சிரமமாக இருக்கவே, அவற்றை ணா, னா, ளா என்று மாற்றினார். அதேப்போல், லை, னை, ணை போன்ற எழுத்துகளை எழுதும்போது, முன்பெல்லாம் ஒரு வளைவு பயன்படுத்தப்பட்டது. அதை அறவே ஒதுக்கித் தள்ளிவிட்டார்.

ஒரு தமிழனாக பெரியார் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பெரியாரை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆரம்பமாக இந்த புத்தகம் ஒரு நல்ல சாய்ஸ்.

பெரியார் கடைசியாக மேடையில் பேசியது.

“கடவுள் என்றால் என்னவென்று சொல்லுங்கள் முதலில். அதைவிட்டுவிட்டு எந்த முட்டாளோ சொன்னான் என்பதற்காக மரம், மட்டை, பாம்பு, பல்லி எல்லாவற்றையும் கடவுள் என்று சொன்னால் அது முட்டாள்தனம். பைத்தியக்காரத்தனம்.”

-----

கிழக்கு பதிப்பகம் வெளியீடு. புத்தகம் வாங்க இங்கே கிளிக்கவும்.

இந்திய ரயில்வேக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்!

நான் முன்பொருமுறை இப்படி புலம்பி இருந்தேன்...

---

ரயிலில் சைடில் மூன்று பெர்த் வைத்துள்ளார்கள். எந்த கிறுக்கன் ஐடியா கொடுத்தானோ? இப்போது, அந்த திட்டம் வாபஸ் என்றார்கள். ஆனால், இன்னமும் இருக்க தான் செய்கிறது.

மேலே உள்ள இரண்டு பெர்த்களிலும், ஏறி உட்கார்ந்து படுக்க முடியாது. படுத்தவாறே ஏற வேண்டும். படுத்தவாறே இறங்க வேண்டும். இதற்கென்றே தனியாக பிராக்டிஸ் செய்து விட்டு பயணம் செய்ய வேண்டும்.

சின்ன குழந்தைகள், இளைத்த வாலிபர்கள் - இவர்களை தவிர வேறு யாராலும் சுலபமாக இதில் ஏறி படுக்க முடியாது. நான் பார்த்த வயதானவர்கள், பெண்கள் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள். ரயிலில் அதிகம் பயணம் செய்பவர்கள், இவர்கள் தான்.

இதிலும் மேல் பெர்த்தில் படுக்கிறவர்கள், பேனுக்கு இணையாக படுக்க வேண்டும். கொஞ்சம் கூட காத்து வராது. அடிக்குற வெக்கையில் தூங்கவும் முடியாது. இறங்கவும் முடியாது. சாவுங்கடா! என்பது போல் ஒரு சித்திரவதை வடிவமைப்பு.

---

நேற்றைய தினமலரில் வந்த செய்தி...


எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜன்னலோரம் கூடுதலாக பொருத்தப்பட்ட மூன்றாவது படுக்கையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வந்ததால், வரும் ஜூலை 13ம் தேதியுடன் இப்படுக்கை அப்புறப்படுத்தப்படுகிறது. இப்படுக்கைக்கான முன்பதிவும் ரத்து செய்யப்படுகிறது.

ரயில் போக்குவரத்தில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2007ம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) மற்றும் ஏ.சி., மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் ஜன்னலோரம் மேல் படுக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் இடையே கூடுதலாக மூன்றாவது படுக்கை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியால் ஒரு பெட்டியில் 9 படுக்கைகள் அதிகமானது. ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. ஜன்னலோரம் மையப் பகுதியில் பொருத்தப்பட்ட இந்த படுக்கைக்கும் மேல் படுக்கைக்கும், இடையே இடைவெளி 1.5 அடி உயரம் மட்டுமே இருந்ததால் பயணிகள் இந்த படுக்கையிலும், இதற்கு கீழ் உள்ள படுக்கையிலும் அமர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது கூடுதல் படுக்கையை அப்புறப்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

லாலு எவ்ளோ நல்லது பண்ணி இருந்தாலும், இந்த விஷயத்துல மக்கள் கொடுத்த சாபத்துனால தான், திரும்ப ரயில்வே அமைச்சர் ஆகவில்லையோ?

எது எப்படியோ, ரயில்வேக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்...

நன்றி : தினமலர்

Tuesday, June 23, 2009

மழை பொழிய வைத்த இளையராஜா - மகேந்திரன்

அக்னி நட்சத்திரத்தில் மழை கொண்டு வந்த இளையராஜா
-மகேந்திரன்1988 ல் வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது பெற்ற "அக்னி நட்சத்திரம்", ராஜாவின் இசையில் இன்னுமொரு மைல்கல். மிகச்சிறந்த குறிப்பிடும்படியான இசையும் பாடல்களும்.

பெண்குரலில் தனிப்பாடல்கள் அருகிவிட்ட பொழுதுகளில், தைரியமாக ஆறு பாடல்களில், மூன்று பெண்குரல் தனிப்பாடல்களை (Female Solos) வைத்தார். ஒரு பூங்காவனம் புதுமணம், நின்னுக்கோரி வரணும், ரோஜாப்பூ ஆடிவந்தது - இவை மூன்றும். ஜேசுதாஸ், சித்ராவின் வா வா அன்பே அன்பே, எப்போதுமே என் விருப்ப எண்களில் ஒன்று. மற்றொன்று.. ஆமாம்.. அதேதான்..

தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
செம்பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்,
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..


படிக்கும் போதே தெரிந்திருக்கும், வாலி எழுதியதென்று... ஆறு பாடல்களுமே வாலியின்
கைவண்ணம்..

பாடல் பதிவு ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது. பாடல் அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டது. மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகமது. முறையாக பாடினால் மட்டுமே!

மாதிரிப்பதிவை (Track) கேட்டவுடனேயே, ஜேசுதாசும் ஜானகியும் அமிர்தவர்ஷினியை கண்டு சிரித்துக்கொண்டு ராஜாவை கேலிசெய்தனராம். சுட்டெரிக்கும் வெயிலில் இதைப்பாட வைக்கிறாரே என்று.

"மழை வரலன்னா, எங்களைத் திட்டாதீங்க" என்று கூட சொன்னனராம். பாடல் பதிவும் முடிந்தது. பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி. யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை, யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில். நம்பமுடியவில்லை அல்லவா?

இது, எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது. தற்செயலான நிகழ்வு தான் எனினும், கேட்கும் போது மிகுந்த ருசியாயிருக்கிறது அல்லவா?...

அடுத்தமுறை கேட்க நேர்கையில் இதை நினைத்துக்கொள்ளுங்கள்...

"ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ?.."

நானில்லைங்க.. வாலி..வாலி..!!!

-மகேந்திரன்
இப்பக்கூட கேளுங்க... மழை பெஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... :-)

Monday, June 22, 2009

பசங்க - எப்பூடீ...

குழந்தைகள் கதையை வைத்து பெரியவர்களுக்கு படம் காட்டியுள்ளார் இயக்குனர். கமர்ஷியல் படங்களில் வரும் கேரக்டர்கள் செய்யும் வேலையை, சிறுவர்களை செய்ய வைத்து, ஜாலியாக சோர்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். பள்ளிக்கூட காட்சிகள், கடந்து வந்த காலத்தை நினைவுப்படுத்தும். இதற்காக இயக்குனரும், டைட்டிலில் ஏகப்பட்ட அறிமுகங்களை கண்டதால் தயாரிப்பாளர் சசிக்குமாரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஏனோ தெரியவில்லை. எனக்கு ஆரம்பத்தில் கதையின் நாயகர்களான அன்பு-ஜீவா கதாபாத்திரங்கள் சண்டை போடும் காட்சிகளை விட, அந்த லவ் சீன்கள் பிடித்திருந்தன. இளையராஜா இசையை இப்போது பிண்ணனி இசையாக, டிடிஎஸில் கேட்பது நன்றாக இருந்தாலும், நிறைய படங்களில் பயன்படுத்துவதால், வர வர ஓவர் டோஸாக மாறுகிறது. படத்தில் தொடர்ச்சியாக வரும் வெவ்வேறு செல்போன் காட்சிகள், ரிங்டோன்கள், தமிழ்நாட்டு செல்போன் நிலவரத்தை எதார்த்தமாக பதிவு செய்துள்ளது.

ஜீவாவின் அப்பாவாக வரும் வாத்தியார் நடிகர் அருமையாக நடித்துள்ளார். யார் அவர்? பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால், பார்த்தது போலவும் உள்ளது. அன்பின் அப்பாவாக வருவது, கல்லூரி படத்தில் நடித்தவர்தானே? அவர் பாலாஜி சக்திவேலின் உதவியாளர் என்று ஞாபகம். புதுசாக இருந்தாலும் பட்டாசாக நடித்திருக்கிறார்கள் அனைவரும். பக்கடா டிரிபில்ஸ் ஏற்றியவாறு, சைக்கிளை பேசி கொண்டு அழுத்தும் அந்த நீண்ட சிங்கிள் ஷாட் காட்சி சூப்பர்.

படமெங்கும் மற்ற தமிழ் படங்களை சிறுவர்கள் மூலம் கிண்டல் அடித்துள்ளார்கள். அதற்காக இது ஒன்றும் வேறு டைப் படம் கிடையாது. இதுவும் சினிமாத்தனங்கள் நிறைந்த பீல் குட் படம் தான். ஆரம்பத்தில் ஜீவா கேங்கிற்கு கொடுக்கும் பில்ட்-அப், கமர்ஷியல் பட ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்ட் அப்புக்கு குறைந்ததில்லை. எரிச்சலை வரவழைத்தது. பள்ளியில் தேசிய கீதத்திற்கு அனைவரும் வேலை விட்டுவிட்டு அப்படியே நிற்கிறார்கள். தேசிய கீதம் பாதி ஓடிய பிறகு தான், எனக்கு உறைத்தது. நாம் ஏன் எழுந்து நிற்கவில்லை? ஸோ, எதார்த்ததில, யாரும் இப்படி நிற்க மாட்டாங்க.

எனக்கு படத்தில் ரொம்ப பிடித்தது புஜ்ஜிமா தான். அவன் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாலும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். இடைவேளையின் போது வரும் குடும்ப சண்டையின் குறுக்கே புகுந்து, வாத்தியாரைக் குத்துவிட்டு விட்டு போவது கலக்கல்.

வெளி மாநில நண்பர்களுடன் சினிமா பற்றிய உரையாடல்களின் போது, தமிழ் சினிமாவை பற்றி உயர்வாக பேச நிறைய விஷயங்கள் இருக்கும். ’தாரே ஜமீன் பார்’ படம் வந்த சமயம், குழந்தைகள் உலகம் பற்றிய பேச்சு வந்த போது, அதற்கு இணையாக சொல்ல ஏதும் இல்லாத ஏக்கம் இருந்தது. இனி இருக்காது. நன்றி, பாண்டிராஜ் - சசிக்குமார்.

பஸ் டிக்கெட் கிடைக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?

2005. அக்டோபர் மாதம். தீபாவளி சமயம்.

பனிந்தர சாமா. இருபத்தியெட்டு வயது. பிட்ஸ் பிலானியில் படித்தவர். பெங்களூரில் டெக்ஸாஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். தீபாவளிக்கு சொந்த ஊரான ஹைதராபாத் செல்ல வேண்டும். பின்ன, தீபாவளிக்கு பெங்களூரில் என்ன செய்ய முடியும்? எப்போதும் பிதுங்கி வழியும் பெங்களூர் சாலைகள், விழா விடுமுறைகளின் போது, வெறிச்சோடி கிடக்கும். சாப்ட்வேர் கம்பெனிகளில், சில சமயம், என்ன எப்போது நடக்கும் என்று தெரியாததால். கடைசி வரை ஊருக்கு எப்போது போவோம் என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் முன்கூட்டியே ரயிலில் டிக்கெட் எடுக்கும் பிளான் இல்லை.

ஆனால், கடைசி நேரத்தில் ஊர் செல்லுவது என்று முடிவாகி விட்டது. ரயிலை கேட்கவே வேண்டாம். டிக்கெட், கண்டிப்பாக இருக்காது. சரி, பஸ்ஸில் எடுத்து விடலாம் என்று பஸ்ஸில் டிக்கெட் எடுக்க செல்கிறார். எங்கேயும் இல்லை. நகரில் இருக்கும் டிராவல்ஸ், டிராவல் ஏஜெண்ட்ஸ் எங்கும் இல்லை. இருக்கும் நெரிசலில், கடை கடையாக சென்று நொந்து விட்டார்.

ஒரு பஸ் டிக்கெட் எடுக்கணும்ன்னா இவ்ளோ கஷ்டப்படணுமா? தெரு தெருவா சுத்தணுமா? ரயிலுக்கு இருப்பது போல், ஏன் பஸ் டிக்கெட்டை இன்டர்நெட்டில் புக் செய்ய முடியாதா? இந்தியா முழுக்க ரயிலை நடத்துவது ஒரே நிறுவனம். அரசாங்கம். பஸ், அப்படி இல்லையே? எல்லா ஊருக்கும், எல்லா பஸ் கம்பெனிகளின் பஸ் டிக்கெட்டுக்கும் சேர்த்து ஒரே வெப்சைட் இருந்தால் எப்படி இருக்கும்?

கனவை வெறும் புலம்பலாக உதிர்த்துவிட்டு போகவில்லை அவர். தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார். சுதாகர், ஐபிஎம்மில் பணிபுரிகிறார். சரண் ஹனிவெல்லில். அவர்களுக்கும் நியாயம் புரிந்தது. ஆர்வம் துளிர் விட்டது. கலந்து பேசினார்கள். பேருந்துகளில் பிரயாணம் செய்யும் மக்களை சந்தித்து பேசினார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை புரிந்து கொண்டார்கள். பஸ் நிறுவனங்களுக்கு சென்று பேசினார்கள். அவர்களால் என்ன செய்யமுடியும் என்று தெரிந்து கொண்டார்கள். பணம்? முதலீட்டாளர்களை தொடர்பு கொண்டார்கள். இது முடியும் என்ற தெம்பு கிடைத்தது. அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம்.

பார்த்து வந்த வேலையை விடும் எண்ணமே இல்லை. சரியாக திட்டமிட்டால், எவ்வளவு நேரம் என்றாலும் கிடைக்கும். வாரயிறுதிகளில், ஒன்றாக இருந்து ப்ரோக்ராமிங் செய்தார்கள். இன்டர்நெட்டில் உட்கார்ந்து பஸ் இருக்கை தேடும் வசதி. சீட் இருந்தால் புக் செய்யும் வசதி. ஈ-பஸ் டிக்கெட். முடிந்தது வேலை. இண்டஸ் எண்டர்பிரனர்ஸில் தங்கள் கனவை செயலில் காட்டினார்கள். அவர்களும் மனது வைத்தார்கள். இனி வேலையை விடலாம். நல்ல சம்பளம் தந்த பாதுக்காப்பான வேலையை விட்டார்கள். முடிவு அல்ல அது. தொடக்கம். பயணம் இனிதே தொடங்கியது.

http://www.redbus.in

சுலபமாக சொன்னாலும், பின்னால் இருக்கும் உழைப்பு பெரியது. ஒவ்வொரு பஸ் நிறுவனத்தையும் சம்மதிக்க வைப்பது மிக பெரிய காரியம். பஸ் நிறுவனத்தை சம்மதிக்க வைத்தால் போதுமா? யார் டிக்கெட் எடுப்பார்கள்? யாருக்கு தெரியும்? தெரிய வைத்தார்கள். எடுத்தவர்களுக்கு பிடித்திருந்ததால், வாய் மொழி விளம்பரமாக பரவியது. நான் கூட என் நண்பர்களுக்கு பரிந்துரைத்திருக்கிறேன். இன்று 350க்கும் மேற்பட்ட பஸ் கம்பெனிகளின் டிக்கெட்டை ரெட்பஸ் மூலம் பெற்று கொள்ளலாம். இண்டர்நெட் என்றில்லை. வெளியிலும், கடைகள் மூலமாக பெறலாம். சரியான பார்ட்னர்களை தேர்ந்தெடுத்தார்கள். இன்று, ரெட்பஸ் டிக்கெட் கொடுக்க, 75000க்கும் அதிகமான கடைகள் உள்ளது. போன் செய்தால், டிக்கெட் வீட்டுக்கு வரும். எஸ்.எம்.எஸ்ஸில் கூட டிக்கெட் எடுக்கலாம்.

வெற்றி, தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ளது. அது மக்களுக்கு சரியாக உதவிடும் போது, வெற்றி மகிழ்ச்சியை கொடுக்கிறது. எண்ணங்களை சரியான திட்டமிடலுடன் செயலில் காட்டினால், சாதனை புரியலாம் என்பது ரெட்பஸ் மூலம் இன்னுமொருமுறை நிருப்பிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இலவச கல்வி

மின்னஞ்சலில் வந்தது.

K.S.G.COLLEGE OF ARTS AND SCIENCE is giving a free college education to those who are unable to continue Education beyond Plus Two due to financial limitations.

Applicable only for the students from Poor families!
Students presently taking part in Plus Two examinations are also eligible!

CONDITIONS APPLY AS UNDER:-

Only Two Students, (Boy or Girl) can avail.
Selected student will be exempted from all kinds of College Fees & Hostel Fees.
Seats available only in K.S.G College of Arts & Science under their own scheme of free education.
College situated at Kamarajar Road, Near ESI Hospitals, Varadharajapuram, Singanallur, Coimbatore – 641 015
Website- www.jksgtrust.org

Courses offered:
B.Sc (Computer Science), (Electronics & Communication System), (Information Technology), (Bio-Technology) & Catering Science & Management)
B.Com & (Computer Application)
BCA (Bachelor of Computer Application)
BBM (Bachelor of Business Management)
Academic Years – 2009-12


LAST DATE FOR RECEIPT OF APPLICATION- 30.06.09

For Further details, Please contact
Surya Seva Sangam Members,
Surya Apartments,
Ganapathy,
Coimbatore.

தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, June 20, 2009

தேர்வு

சென்ற இரு வாரங்கள் எம்.பி.ஏ. தேர்வுகள் இருந்தன.

எவ்ளோ அக்கறையா எழுதினேன்’ன்னு சொல்றேன்...

---

தேர்வுக்கு முந்திய தினங்களில் தான் படிப்பதால், அந்த தேர்வுக்கு காலையிலேயே எழுந்துவிட்டேன். படித்து விட்டு கிளம்ப நிறைய நேரம் இருந்தது. பொறுமையாக பேனா, பென்சில எல்லாம் எடுத்துவிட்டு கிளம்பினேன். போறப்ப, பாட்டு கேட்க எம்பி3 உள்பட.

காலேஜ் கிட்ட நெருங்கும்போது தான் நினைவுக்கு வந்தது. ஹால் டிக்கெட்டும் எடுக்கலை. ஐடி கார்டும் எடுக்கலை. சுத்தம். நின்னு யோசிச்சேன். இருக்குற டைம்முக்கு வீட்டுக்கு போயி எடுக்க முடியாது.

பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டர் போனேன். யூனிவர்சிட்டி சைட்ல இருந்து ஹால் டிக்கெட் டவுன்லோட் பண்ணி பிரிண்ட் அவுட் எடுத்தேன். (டெக்னாலஜி வாழ்க!) அதுல ஐடி கார்டு அவசியம்ன்னு போட்டு இருந்திச்சு. சரி, போய் பார்த்துக்கலாம்ன்னு போயிட்டேன்.

அப்புறம் அங்க இருக்குற பெரிய வாத்தியார பார்த்து, ’ஐயா, ஐடி கார்டு இல்ல’ன்னு சொல்லி, பர்ஸ்ல பால் கார்டு, விசிட்டிங் கார்டு மாதிரியான கார்டுகளை எல்லாம் எடுத்து காட்டி எக்ஸாம் எழுதினேன்.

என் அக்கறையை நினைச்சு, என்னை நானே திட்டிக்கிட்டேன்.

----

பதிவு எழுதுறதுல ஒரு நல்ல விஷயம். கை வலிக்க வலிக்க, பரீட்சையில கதை எழுத முடியுது. நாலு பரீட்சையில எழுதி, ஒரு பேனாவை காலி பண்ணிட்டேன்னா, பாருங்களேன். ஆனா, கால்குலேஷன் பண்ண வேண்டிய பரீட்சைன்னா, திணறல்தான்.

நம்ம பாடுதான் திண்டாட்டம்ன்னு நினைச்சு போனா, அங்க எல்லோரும் அப்படி தான் போல. நான் போட்ட கணக்குல அசந்து போயி, முன்னாடி இருந்த பொண்ணுங்க, கண்காணிப்பாளர் வெளியே போன நேரத்துல, என் பேப்பர பாத்து எழுதினாங்க. அந்த பதில்ல நானும் ரொம்ப நம்பிக்கையா இருந்ததால, சரின்னு விட்டுட்டேன்.

அந்த பரீட்சைக்கு கால்குலேட்டர் எடுத்துட்டு போகாதது, நானாத்தான் இருக்கும்.

----

நான் கோர்ஸ் சேர்ந்து கொஞ்சம் நாள்ல, செல்வராகவன் ’ஆயிரத்தில் ஒருவன்’ ஆரம்பிச்சாரு. அவரு முடிக்கறதுக்குள்ள, நான் முடிச்சிடலாம்ன்னு பார்த்தா, அவர் முடிச்சிடுவாரு போல. கடைசி பரீட்சைக்குள்ள, பாட்ட ரீலிஸ் பண்ணிட்டாரு. நான் பிராஜக்ட் முடிக்கறதுக்குள்ள, படத்த ரீலிஸ் பண்ணிடுவாரா?

----

ஒண்ணுமே தெரியாம போனாலும், எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதிட்டு வந்திட்டேன். இதுவும் ப்ளாக் எழுதி, பார்த்து கத்துக்கிட்டது தான். :-)

----

எல்லா பரீட்சைக்களுக்கும் ஒரு நாள், ரெண்டு நாட்கள் முன்னாடிதான் படிக்க ஆரம்பிச்சேன். ஆனாலும், ஒரளவுக்கு திருப்தியாத்தான் முடிச்சிட்டு வந்திருக்கேன்.

நம்ம மெத்தட் என்னன்னா,

1) முழு புக்ஸையும் முழுசா வாசிக்கணும். ஒவ்வொரு புக்கு’கும் ஒரு டைம் டார்க்கெட். அதுக்குள்ள முடிக்க (படிக்க’ன்னு போடலை, பாருங்க) முடியாட்டி, அடுத்த புக். முடிவுல, விட்டது எல்லாம்.
2) கடைசியா வந்த நாலு பழைய கொஸ்டின் பேப்பர்கள எடுத்துக்கிட்டேன். அதுக்கான பதில்களை எல்லாம் பார்த்துக்கிட்டேன்.
3) பரீட்சைக்கு முன்னாடி, என்ன பாத்துட்டு போறோமோ, அதுதான் பிரஷ்சா நினைவுக்கு நிக்கும். ஸோ, காலையில எல்லா புக்கையும் புரட்டி, பெரிய தலைப்பு, சின்ன தலைப்பு, படங்கள் இதெல்லாம் பாத்துக்கிட்டேன்.
4) படம் போடுறதால சில நன்மைகள் உண்டு. புரிஞ்சத, புரிஞ்சதுன்னு பேப்பருல காட்டலாம். சில நேரங்களில், படம் வரையும் போது தான், நமக்கே புரியும்! படத்த பார்த்து பார்த்து, கருத்து சொன்னா, பதில் ரெடி. கொஞ்ச நேரத்துல, நிறைய பேப்பர் வாங்கி ஹால்ல இருக்குறவங்கள அசர வைக்கலாம். வெளியே வந்து, பரீட்சைல படம் போட்டேன்னு பந்தா பண்ணிக்கலாம்.
5)பரீட்சைல, புக்குல உள்ளது மட்டும் இல்லாம, பொதுவா யோசிச்சு எழுதுற மாதிரியும் கேட்பாங்க. செம ஜாலியா இருக்கும். அப்படியே கற்பனையை தட்டி விட்டோம்னா, நாலைஞ்சு பக்கம் காலியாயிரும்.
6) தெரியாதது கேட்டா, மிரள கூடாது. அது சம்பந்தப்பட்டத, படிச்சத எழுத ஆரம்பிச்சா, தேவையானது கூட வரும். வராட்டியும் பிரச்சினை இல்லை.
7) முடிஞ்ச அளவுக்கு எல்லா கேள்வியும் அட்டெண்ட் பண்ணவேன். தப்பா கேள்வி கேட்டு இருந்தா, அட்டெண்ட் பண்ணுறதுக்கு மார்க் போடுவாங்கலாமே? (இன்னுமா இந்த எண்ணம்?)
8) யோசிச்சு கணக்கு போடுற பதில்களை, முதல்ல போடுவேன். கடைசில நேரம் இல்லாட்டி, மண்டைக்குள்ள ஒண்ணும் ஒடாது. முடிவுல ரிசல்ட் வராட்டி, மார்க்கும் வராது.
9) பரீட்சை எழுதி வெளியே வந்தவுடனே, அந்த பரீட்சையை மறந்திருவேன். அடுத்த பரீட்சைக்கு ப்ளான் ஆரம்பிச்சிருவேன்.
10) மொத்ததுல, பரீட்சையை பரீட்சை மாதிரி எழுதலை. பரீட்சைக்கு படிக்குற புக் மாதிரி எழுதியிருக்குறேன். அவ்ளோ நம்பிக்கை. ரிசல்ட் வந்தாதான் தெரியும். இதுவரைக்கும் ஒழுங்காத்தான் வந்திருக்கு.

அட்வைஸ் இல்ல. அனுபவம் மட்டுமே.

----

சும்மாவே நமக்கு பிடிக்காத புத்தகத்தை எடுத்து வச்சா, தூக்கம் வரும். அதுலயும், பரீட்சை நேரத்துல, தூங்குறதுன்னா ரொம்ப ஆசையா இருக்கும். பத்து பதினொண்ணுக்கே சொக்கும். காலையில எழுந்திரிக்க மனசே வராது. எல்லாம் முடியட்டும். நல்லா தூங்கணும்ன்னு நினைச்சிருந்தேன்.

இப்ப பாருங்க, மணி ஒண்ணாச்சு... இன்னமும் தூங்கலை.

ஒரு விஷயம் முடியாத போது தான், அது மேல ஆசை வரும், இல்ல?

Thursday, June 18, 2009

பெங்களூர் ‘பசங்க’ளுக்கு ஒரு நற்செய்திஏற்கனவே ‘பல்ப்’ வாங்குன கதை இங்கே.

தியேட்டரில் பார்க்க முடியாமல் போன படங்களில் ஒன்றாகி விடுமோ என்றிருந்தேன். நல்லவேளை!

இது ஒரு பொழப்பா?ன்னு கேட்குறீங்களா?

----

சரி, ஒரு உருப்படியான நியூஸ்.

பெங்களூர் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க, ரகசிய கேமராக்கள் வைக்க போகிறார்களாம். எங்க வைப்பாங்க? ராகிங், கல்லூரிகளில் மட்டுமா நடக்கும்? உண்மையிலேயே இது ராகிங்கை தடுக்குமா?

கல்லூரி கேண்டீன்
கல்லூரி எதிர்க்கடை
ஹாஸ்டல்
ஹாஸ்டல் மெஸ்
ஹாஸ்டல் பாத்ரூம்

இங்கெல்லாம் நடக்குமே? அதுக்கு என்ன பண்ணுவாங்க?

ஒண்ணு நிச்சயம். எங்கனாலும் வைப்பாங்க. ஆனா, ஆபிஸ் ரூம்ல மட்டும் வைக்க மாட்டாங்க. :-)

Saturday, June 13, 2009

யாரடி நீ மோகினி - தெலுங்குடன் ஓரு ஒப்பீடு

இது எதற்கு இப்போது? ஏனென்றால் இப்பொழுது தான் நான் தெலுங்கில் பார்த்தேன். ஜீ தெலுங்கில்.

தெலுங்கில் வெங்கடேஷ். சீனியர் அல்லவா? அதனால், அவர் கதைப்படி வேலையை ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் தேடுகிறார். இங்கே, தனுஷ் வழக்கம்போல் வேலை தேடுகிறார். வெங்கடேஷ்-தனுஷ் இருவருமே பல இடங்களில் ஒரே மாதிரி எக்ஸ்பிரஷன்ஸ் காட்டுகிறார்கள். வெங்கடேஷ் பல இடங்களில் நன்றாக செய்திருந்தாலும், தனுஷ் சில இடங்களில் கலக்கி இருந்தார்.

வெங்கடேஷ் அப்பா கோட்டா சீனிவாச ராவ். கலகலப்பாகவே நடித்திருக்கிறார். இங்கு ரகுவரனும் படம் வந்த டைமிங்கும். ச்சே. :-(

அப்புறம் நயன் தாரா. த்ரிஷா. என்ன இருந்தாலும் நயன் போல வருமா? நண்பனாக ஸ்ரீகாந்த். எனக்கென்னமோ, கார்த்திக் தான் இயல்பாக இருந்தது போல் இருந்தது. த்ரிஷா தங்கையாக சுப்பிரமணியபுரம் ஸ்வாதி. இதற்கு போனஸ் மார்க்ஸ். :-)

நான் படம் முழுக்க முழுக்க ஒரே மேக்கிங் என்று நினைத்திருந்தேன். ஆனால், கிளைமாக்ஸ் வேறு.

தமிழில், நயன்தாரா கல்யாணத்திற்கு முதல் இரவில் தனுஷைப் பார்த்து காதலை சொல்லி, கட்டி பிடித்திருப்பதை கார்த்திக் பார்ப்பார். இருவரையும் திட்டுவார். மறுநாள். தாலி கட்டும் போது, அடம் பிடிப்பார்கள். நீ கட்டு, நீ கட்டு என்று. விஷயம் தாத்தாவிற்கு தெரிய வர, பிரச்சினையாகி, தனுஷ் டயலாக் பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியே வருவார். வருபவர் பாட்டியையும் கூட்டி கொண்டு சென்னை வந்து விடுவார். பிறகு, சென்னைக்கு மொத்த குடும்பமும் வந்து, தனுஷை உருட்டி எடுப்பார்கள். தாத்தா மட்டும் எனக்கு செட் ஆகலை. கொஞ்சம் நாள் ஆகலாம். அதுவரை மயிலாப்பூரில் உள்ள என் நண்பன் வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லி சென்று விடுவார். அவ்வளவே படம். இது முதலில் வெளியான கிளைமாக்ஸ். பிறகு, இதன் கூட கிச்சனில் நயன்தாராவை தனுஷ் பின்னால் இருந்து கட்டிப்பிடிப்பதாக சேர்த்து முடித்தார்கள். ஒரு மாதிரி வித்தியாசமாக, இருந்தாலும் இது ஒன்றும் சூப்பர் முடிவு கிடையாது.

தெலுங்கிலோ, த்ரிஷா வெங்கடேஷுடன் பேசுவதை தாத்தா பார்க்கிறார். வீட்டுக்கு வந்த த்ரிஷாவுக்கு டோஸ் விழுகிறது. தலை முழுகச் செய்து, பூஜை செய்து வெங்கடேஷை மறக்க சொல்லி சத்தியம் வாங்குகிறார் தாத்தா. பிறகு, வெங்கடேஷையும் திட்டி அனுப்புகிறார்கள். இங்கு பாட்டியை அவர் கூட்டி செல்லவில்லை. போகும் வழியில், ஒரு திருவிழா கூட்டத்தில், முன்னால் ஒரு சீனில் அடி வாங்கிய வில்லன், வெங்கடேஷை கத்தியால் குத்துகிறார். மறுநாள், கல்யாணத்தின் போது, வெங்கடேஷ் குத்துப்பட்ட விஷயத்தை ஒருவர் வந்து சொல்கிறார். தாத்தா அசைந்து கொடுக்கவில்லை. மற்றவர்களும். பாட்டி மட்டும் தாத்தா சொல்லை மீறி செல்கிறார். பிறகு, குழந்தைகள். கடைசியில், ஸ்ரீகாந்தும் பிற மக்களும். த்ரிஷாவும், தாத்தாவும் மட்டும் இருக்கிறார்கள். ஏன் என்று தாத்தா கேட்க, உங்களுக்கு செய்த சத்தியத்திற்காக மறந்து விட்டேன் என்று பீலிங்கை கூட்டுகிறார்.

இரவு ஆஸ்பிட்டலில், படுத்து கிடந்த வெங்கடேஷ் பெட்டில் இருந்து எழுந்து வெளியே வருகிறார். மொத்த உறவினர் கூட்டமும் வெளியே தூங்கி கொண்டிருக்கிறது. அவர்களை கடந்து அடுத்த அறைக்கு வர, அங்கே தாத்தா. தாத்தா எழுந்து செல்ல, பின்னால் த்ரிஷா. யுவன் பேக்ரவுண்ட் ம்யூசிக்.

அப்புறம், சிட்டியில் வெங்கடேஷ் வீடு. தமிழ் கிளைமாக்ஸ் போல், பாத்ரூமிலிருந்து வெளியே வந்து பாட்டி திட்டுகிறாள். குழந்தைகள் விளையாடுகிறார்கள். வீட்டுப்பெண்கள் பெரிய லிஸ்ட் கொடுக்கிறார்கள். ஸ்ரீகாந்தும், நண்பர்களும் தண்டால் எடுக்கிறார்கள். ப்ராஜக்ட் மேனேஜர் (!) த்ரிஷா குக்கரில் ஏதோ வைத்து சமையல் செய்கிறார். முன்னாள் வெட்டி, இந்நாள் சாப்ட்வேர் இன்ஜினியர் கணவர் வெங்கடேஷ் பின்னால் வந்து கிஸ் கொடுத்து விட்டு, டை கட்டியவாறு ஐ.டி. கம்பெனிக்கு செல்கிறார். வெளியே கோயிலில் தாத்தா உட்கார்ந்து அதே டயலாக் அடிக்க படம் முடிகிறது.

கொஞ்சம் இழுத்ததுப்போல் இருந்தாலும், இதுவும் நல்லாதான் இருந்தது. பொதுவா, ஹிட்டான படங்களின் கிளைமாக்ஸை மாற்ற மாட்டார்கள். (கஜினியில் மாற்றினார்கள்). இதில் ஏன் மாற்றினார்கள்? தமிழ் மக்கள் வித்தியாசமான கிளைமாக்ஸை தான் எதிர்ப்பார்ப்பார்கள் என்றா? எனக்கு படம் முழுக்க தமிழில் பிடித்திருந்தாலும், குழப்பமில்லாத தெலுங்கு கிளைமாக்ஸ் பிடித்திருந்தது.

நாட்டு சரக்கு - போலி ஸ்டேட்மெண்ட்ஸ்

ஐ.டி. பாதிப்பால் வேலை இழந்தவர்கள் வெறும் 1 % மட்டுமே என்று சொல்லியிருக்கிறார், நாஸ்காம் தலைவர்.

ஒரு உண்மை சம்பவம். ஒரு முன்னணி ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் ஒருவர், அவர்களது நிறுவனத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவருக்கு வருடாந்திர ரேட்டிங்கில் 6 இல் ஒன்று சரியில்லாமல் போய்விட்டது. தேர்வு ஒன்றும் சுலபமில்லை. இதுவரை பணிப்புரிய வாய்ப்பு கிடைத்திராத தொழில்நுட்பங்களில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். கால நேரம் பார்க்காமல் பார்க்கும் அலுவலக வேலையுடன். அதே சமயம் அவருடைய ப்ராஜக்ட் அந்த வாரம் தான் முடிந்திருந்தது. ஃப்ரி பூல்.

மனிதவள மேலாளரிடம் இருந்து அழைப்பு. “இங்க பாருங்க. உங்களுக்கு ரேட்டிங் குறைந்து விட்டது. நீங்க வேலையும் இல்லாம இருக்கீங்க. அதனால, இன்னைக்கே ரிசைன் பண்ணிருங்க. நீங்களே ரிசைன் பண்ணிட்டுங்கன்னா, ரெண்டு மாச நோட்டீஸ் ப்ரியட் சம்பளம். நாங்களே உங்கள வேலையை விட்டு நிறுத்தினா, அப்புறம் சம்பளமும் கிடைக்காது. டாக்குமெண்ட்ஸும் ஒழுங்கா வராது.”

இதற்கும் சம்பந்தப்பட்ட நபர் ஒரு நல்ல பெர்பார்மர். அலுவலகத்தில் அவார்டுகள் வாங்கியுள்ளார். அதை சொல்லி கேட்டதற்கு, இந்த மாதம் நாங்க இத்தனை ஊழியர்களை நீக்க வேண்டி உள்ளது, வேறு வழியில்லை என்றிருக்கிறார். பேசி பார்த்து ஒன்றும் முடியாததால், வந்து மெயில் அனுப்பி விட்டார். நல்ல காலத்தில், தாமதமாகும் ஆள் விடுவிப்பு பாலிஸி, இப்ப செம பாஸ்ட்.

”கம்பெனியில வேலை இல்லங்கறத சொல்றத விட்டுட்டு, என் வேலை சரியில்லை, என் தகுதி சரியில்லைன்னு சொல்றது கஷ்டமா இருக்கு. ஹச்.ஆர். கூப்பிட்டா மொபைல்ல வாய்ஸ் அல்லது வீடியோ ரிக்கார்டரை ஆன் பண்ணிட்டு உள்ளே போங்க”ன்னு பார்ப்பவர்களிடம் சொல்லி வருகிறார்.

-----

மணி சங்கர் அய்யரிடம் இருந்து அவருடன் தொடர்புள்ளவர்களுக்கு மெயில் வந்திருக்கிறது.

“ஸாரி. இங்கிலாந்துக்கு ஒரு செமினாருக்கு வந்தேன். வந்த இடத்தில், என் பர்ஸை தொலைத்து விட்டேன். செலவுக்கு காசில்லை. ரூம் ரெண்ட் கட்டணும். உடனே 3500 டாலர் அனுப்பி வைக்கவும்.

இப்படிக்கு,
மணி.”

இப்படி. என்னன்னு அவருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் இப்ப நியூயார்க்கில் இருக்கிறேன். என் இமெயில் ஐடி ஹாக் செய்யப்பட்டு உள்ளது. அந்த மெயில லூஸ்ல விடுங்கன்னு சொல்லியிருக்கார்.

எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. :-)

-----

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, மகாராஷ்ட்ரா அரசு குழந்தை நட்சத்திரங்களை பயன்படுத்தும் சானல்கள் மீது கேஸ் போட போவதாக அறிவித்துள்ளது. குழந்தைகள் என்ன கொடுமைகள் அனுபவித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த தடை கொஞ்சம் ஒவரா தெரியுது. குழந்தைகளை நடிக்க வைத்தால், என்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்ட வடிவம் கொடுத்திருக்கலாம்.

மிருக வதை என்று படங்களில் மிருகங்கள் பயன்படுத்துவதை தடை செய்தார்கள். மது, சிகரெட் காட்சிகளை தடை செய்தார்கள். அடுத்தது, குழந்தை நட்சத்திரங்களா?

மூட நம்பிக்கை என்று சாமி படங்கள் எடுப்பதையும் தடை செய்தால், இராம நாராயணனின் முழு போர்ட்பொலியோவையும் மூடிய மகிழ்ச்சி கிடைக்கும். கமல், சூர்யா படங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களே குழந்தை வேஷமும் போட்டுவிடுவார்கள்.

----

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆக போகிறது. மும்பை தாக்குதல் நடந்து. இறந்தவர்களை புதைத்திருந்தால், வெறும் எலும்பு கூடு தான் மிச்சம் இருக்கும். ஆனால், இன்னமும் அந்த கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. மாட்டிய கஸாப்பை இன்னமும் அடையாளம் காட்ட, சாட்சியங்களை கோர்ட்டுக்கு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். எத்தனை ரயில்வே கேமராக்கள். எத்தனை டிவி சானல் கேமராக்கள். படித்து உருண்டு எல்லாம் எடுத்தார்கள். ஆனால், இன்னமும் சாட்சி வேண்டுமாம். மாட்டியவனிடம் கேட்டால், அவனே ஒத்து கொள்வான்.

எல்லாம் சட்டப்படியே நடக்கட்டும். அதற்காக இப்படியா? உங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கவில்லை. வயியெரிய வைக்கிறது. எலும்புகளும் மக்குவதற்குள் தீர்ப்பு சொல்லுவீங்களா?

இப்படித்தான் போன வாரம் சம்பவத்தில் குண்டடிப்பட்ட ஒரு பத்து வயது சிறுமியை சாட்சி சொல்ல அழைத்திருக்கிறார்கள். அவளும் ஊன்றுகோல் ஊன்றியப்படி கோர்ட்டுக்கு வந்து, ’நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லை’ என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு கஸாப்பை அடையாளம் காட்டி சாட்சியம் கொடுத்திருக்கிறாள்.

எனக்கு இதுதான் குழந்தைகளுக்கெதிரான கொடுமையாக தெரிகிறது.

Friday, June 12, 2009

எல்லா... இல்ல, எல்லாரோட புகழும் இளையராஜாவுக்கே

மகேந்திரன் என்றொரு நண்பர். நல்ல ரசனைக்காரர். கவிதைகள் எழுதுவார். இவர் வாழ்வதற்கு காற்று தேவையோ இல்லையோ, பாடல்கள் தேவை. குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள். பாடல்கள் பற்றிய தகவல் களஞ்சியம். ஒருமுறை ‘பூஜைக்கேத்த பூவிது’ பாடல் அனுப்ப சொல்லி கேட்ட போது (நான் கேட்டது எம்பி3 வடிவத்தில்), முழு பாடலையும் ஐந்து நிமிடத்தில் தமிழில் டைப் செய்து அனுப்பினார். அரண்டுவிட்டேன்.

தீவிர வாசிப்பாளர். முக்கியமாக கவிதைகள். எந்த சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற கவிதைகளை எங்கிருந்தெல்லாமோ எடுத்து கொடுப்பார். கவிதை வரலாற்றை, கவிஞர்களின் வரலாற்றுடன் சேர்ந்து தெரிந்து வைத்திருப்பவர். இவருக்குள் எப்போதும் ஏதாவது கவிதை வடிந்து கொண்டிருக்கும். கதிர் படத்தில் வரும் ஹீரோவை போல்.

இதுவரை வலைப்பதிவு ஆரம்பிக்கவில்லை. ஆரம்பிக்க சொல்லி இருக்கிறேன். ஆரம்பிப்பார் என்று நம்புகிறேன். அவர் அனுப்பிய மின்னஞ்சல் பதிவு இது. அவர் அனுமதியுடன்... ஆமா... எல்லாம் அனுமதி கேட்டா போடுறோம்?

இந்த இடுகைக்கு வரும் ஓட்டுகள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள், வசவுகள் அனைத்திலும் பத்து பர்சென்டை சர்வீஸ் சார்ஜாக எடுத்து கொண்டு மீதியை மகேந்திரனுக்கு பார்வர்ட் செய்கிறேன். :-)

இனி ஓவர் டூ மகேந்திரன்...

----

நீங்கள் செய்யாத ஒரு வேலைக்காக, உங்களுக்கே தெரியாமல் உங்களைப்பற்றி பலர் பெருமையாக நினைத்துக்கொள்வது நடந்திருக்கிறதா? அதில் உங்கள் தவறு எதுவுமில்லை, இன்னும் சொல்வதானால் ஒரு சிறப்பான, குறிப்பிடும்படியான ஒரு வேலை உங்களிடமிருந்து வெளிப்படும் என்ற உங்கள் மீதான ஒரு நம்பிக்கை அது.. உங்களுக்கான ஒரு தனித்துவம் என்பதை எல்லோரும் அறிந்திருக்கும் பட்சத்தில், அதே தரத்துடனான செயல் இன்னொருவரிடமிருந்து வருகையில் அது உங்கள் பெயரில் பதியப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம்.

இசையுலகில் இது எப்போதும் நிகழ்வது, மிகுந்த மென்மையான இனிய குரலிருந்தும் கூட ஏ.எம்.ராஜாவின் பல பாடல்கள், பி.பி,எஸ்ஸின் பெயரில் புழங்கி வந்தன. ஜேசுதாசின் குரலுடன் இருந்த ஒற்றுமையாலேயே, ஜெயச்சந்திரன் என்ற அற்புதப்பாடகரை இன்னும் பலபேருக்கு தெரியவில்லை. பல ஆயிரம் பாடல்களுக்கு பிறகும் மனோ பாடிய பாடல்கள், எஸ்.பி.பியினுடையதாக கணிக்கப்படுகின்றன.

இது யாருக்கு வெற்றி, தோல்வி என்பதை விட, இதன் பின்னணியில் மறைந்து போன பல பாடல்கள் பற்றி கேள்விப்படும் போது, நீங்களும் கூட வியப்படையக்கூடும்.
என் பால்யகாலங்களில் வானொலியில் பாடல்கள் கேட்கும் பொழுதில் , இளையராஜாவின் மிகப்பிரபலமான இனிமையான பாடல் ஒன்று, "ஆயிரம் மலர்களே மலருங்கள்.. அமுத கீதம் பாடுங்கள்.." அதே கால கட்டத்தில் வெளியான " பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம்.." கூட ராஜாவினுடையது என்று வெகு நாட்களுக்கு எண்ணிக்கொண்டிருந்தேன், அது சலீல் சவுத்ரி என்றொரு வங்காளத்தின் இசையமைப்பாளருடைய இசைக்கோர்வை என்று பின்பொரு நாளில் அறிந்தேன்.

ராஜா மட்டுமே இசையமைப்பாளர் என்ற நிலை இருந்த பொழுதுகளில் வந்த இன்ன பிற நிஜமாகவே நல்ல பல பாடல்கள் இன்னும் ராஜாவினுடையதே என்று நம்பப்படுகின்றன.

"கண்ணுக்குள் நூறு நிலவா? இது ஒரு கனவா?.." "மந்திரம் சொன்னேன் வந்துவிடு.." "புத்தம் புது ஓலை வரும், இந்த பூவுக்கொரு மாலை வரும்" போன்ற வேதம் புதிது படத்திலிடம் பெற்ற மிக இனிய பாடல்கள் இன்றும் ராஜா ஹிட்ஸ் பகுதிகளில் இடம் பெற்றிருப்பதை காணலாம். அதெல்லாம் தேவேந்திரன் என்ற மிகவும் மென்மையான ஒரு மலையாளியினுடையது. சிறுவயதில் நான் எப்போதும் முணுமுணுத்த "ஆவாரம்பூவு ஆறேழு நாளா.." , "ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த.." போன்றவை வி.எஸ்.நரசிம்மன் என்றொரு இசையமைப்பாளர் அளித்தது, இன்றைய தலைமுறையால் ராஜா கணக்கில் வரவுவைக்கப்பட்டது.

என்ன இருந்தாலும் அண்ணன் தானே.. கொஞ்சம் சாயல் இருந்தால் என்ன கெட்டுவிடும்? அதனாலேயே கங்கை அமரன் போட்ட "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே.." "வந்தனம் என் வந்தனம்.." "மழைக்கால மேகம் ஒன்று" எல்லாம் இளையராஜா ஹிட்சில் இடம் பெற்றன. என் பதின்மவயதுகளில் எனைக்கவர்ந்த "தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே", "புத்தம்புது மலரே என்னாசை சொல்லவா", " உன்னைத்தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு சொன்னதொரு சேதி" எல்லாம் பாலபாரதியால் போடப்பட்டவை. ஹம்சலேகா என்றொரு கன்னடத்தவரால் இசையமைக்கப்பட்ட கொடிப்பறக்குது "சேலை கட்டும் பெண்ணுக்கொரு", "ஹோ காதல் என்னை காதலிக்கவில்லை" எல்லாமும் கூட ராஜாவினுடையதாக சத்தியம் செய்யப்படும்.

ராஜாவுடனான ஊடலுக்குப்பிறகு கே.பாலசந்தர் கைகோர்த்துக்கொண்ட மரகதமணி என்றொரு இசையமைப்பாளர் தந்த பாட்டுகளும் இதே போல. அவை "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.." "ஜாதிமல்லி பூச்சரமே.." ஆகியவையாகும். இளையராஜா பாடல் தொகுப்புகளில் முதல் பத்து பாடல்களில் கண்டிப்பாக இடம் பெரும் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" அண்ணா நகர் முதல் தெருவுக்காக சந்திர போஸ் என்பவரின் படைப்பு.

இதெல்லாம் நிஜமாகவே ராஜாவுக்கான அங்கீகாரத்தின் மறுவடிவம். "இதெல்லாம் எனக்கு முன்னையே தெரியுமே" என்ற இசையின் நுட்பமான பகுதிகளில் புகுந்து கொள்பவரெனில், உங்களுக்கான பதிவு இல்லை இது. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் என்னைப்போன்ற பாமரர்களின் எண்ணத்தொகுப்பு. ஏனெனில் ராஜா பாமரர்களுக்கான இசைக்கலைஞன்.


----

சூப்பர்'ஆ சொல்லியிருக்காருல்ல?

இனி நம்ம கச்சேரி...

இது மட்டும் இல்லை. இன்னமும் இருக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதனின் ”எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்”, "சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது”, எஸ்.ஏ.ராஜ்குமாரின் ”சின்ன பூவே... மெல்ல பேசு...”, எஸ்.பி.பி.யின் ”சந்தனம் பூசும் மஞ்சள் நிலவும்”, “அகரம் இப்ப சிகரம் ஆச்சு”, சங்கர் கணேஷின் “ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்”, டி.ராஜேந்தரின் “மூங்கில் காற்றோரம்”, "வசந்தம் பாடி வர”, பாக்யராஜின்...

இப்படி போய்கிட்டே இருக்கும்.

எம்.எஸ்.விஸ்வநாதனுடன் சேர்ந்து இளையராஜா இசையமைத்த “மெல்ல திறந்தது கதவு”ம், இளையராஜாவுக்கு மட்டுமே நன்றாக திறந்திருக்கிறது.

அதாவது மற்றவர்கள் இசையமைத்த பாடல்களுக்கு கிடைக்கும் பாராட்டுகளும் இளையராஜாவுக்கு போய் சேருகிறது. இதற்கு இளையராஜாவையோ, இல்லை மற்ற இசையமைப்பாளர்களையோ குறை கூற முடியாது. யாருடைய திறமையிலும் குறை கிடையாது.

----

குறை சொல்றதுன்னா, யாரு இசையமைச்சதுன்னு தெரியாம பாட்டு கேட்குற நம்மளைத் தான் சொல்லணும். தெரியாம இருக்குறது, குத்தம் இல்ல. தெரியாம, வேற ஒருத்தர் இசையமைச்சத, இளையராஜா இசையமைச்சதுன்னு சொல்றது, உண்மையான இசையமைப்பாளருக்கு நாம் செய்யும் மோசடி.

இப்ப பெரும்பாலோர் பாட்டு கேட்குறது, சிடியில், எம்பி3 பிளேயரில், ஐ-பாடில். ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் இருக்கும். இதில் அதிகம் கேட்கப்படுவது எண்பது தொண்ணூறில் வந்த இளையராஜாவின் பாடல்களை தான் என்பதை மறுப்பதற்கில்லை.

அம்மாதிரியான கலக்‌ஷனை லேபிள் பண்ணும் போது, 80-90 ஹிட் கலக்‌ஷன்ஸ்ன்னு போட்டு வைக்கலாம். அதைவிட்டு, அப்ப வேற யாரு இசையமைச்சா என்று சொல்லி, இளையராஜா ஹிட்ஸ் என்று போடும் போது தான், மற்ற இசையமைப்பாளர்கள் மறைகிறார்கள். அதேப்போல், எம்பி3 பாடல் இன்பர்மேஷனில் ஆர்டிஸ்ட் பெயர் போடும் போது, தெரிந்தால் மட்டும் இளையராஜா என்று போடலாம். தெரியாமல் இளையராஜா என்று போடுவது, சின்ன மிஸ்டேக் தான். ஆனா...

----

மற்றவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அவ்வளவு ஹிட் பாடல்கள் கொடுத்ததால் வேண்டுமானால், இதற்கு இளையராஜா காரணமாகலாம்.

இன்றைக்கு சொல்கிறோம். இப்பொழுது ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் என்று. பார்த்தால் அன்றும் ஒரளவுக்கு இருந்திருக்கிறார்கள். இளையராஜாவின் பல ஆண்டு கால அலையில் அடியிலேயே தங்கி விட்டார்கள். அவர்களின் படைப்புகள் இருக்கிறது. அவர்களைத்தான் காணவில்லை.

இளையராஜாவின் ஹிட் பாடல்கள் என்னும் கடலில் மறைந்து போன முத்துகள் அவை. அவ்வளவு எண்ணிக்கையில் கவனம் பெறுவது சிரமம். பகலில் அடிக்குற சூரிய ஒளியில், மெழுகுவர்த்தி ஏற்றினாலோ இல்லை டார்ச் அடித்தாலோ எங்கே தெரிய போகிறது?

இதுக்கு தான் எங்காளு மாதிரி ராத்திரி அடிக்கணும். :-)

Tuesday, June 9, 2009

முதல்வர் விஜய்

ஜூன் 22 ஆம் தேதி நடக்க போறதா சொல்லி வருற நியூஸை பார்க்கும்போதெல்லாம் ரொம்ப பயமா இருக்கு. தினசரி காலண்டரை எடுத்து பார்க்குறேன். அன்னிக்கு ஏதாச்சும் விசேஷம்ன்னு போட்டு இருக்கான்னு. நல்ல வேளை, அப்படி ஏதும் இல்லை. இதையே நினைச்சு நினைச்சு, தூக்கத்துல கூட இது தான் கனவுல வருது. என்ன வருதா?

எஸ்.ஜே.சூர்யா பாணியில் வாசிக்கவும்.

கனவுல என்ன நடக்குது? அதான் இந்த பதிவு. வாங்க. லெட் அஸ் வாட்ச் த ட்ரீம்....

----வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016. எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல் பிரஸ் மீட்.

“சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?”

“தம்பி, நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல, சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?”

“என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?”

எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?”

அந்த நிருபர் மறைகிறார்.

இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?”

“இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.”

“சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?”

“ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.”

“அது எப்படி?”

“என்னோட முத மாச சம்பள பணத்தை (ஒரு ரூபா) இதுக்காக கொடுக்குறேன். நீங்களும் கொடுங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்களே எடுத்துக்குறோம்?”

”ஐய்யயோ! மக்கள்கிட்ட இதுக்கு எதிர்ப்பு வருமே? என்ன பண்ணுவீங்க”

”மக்களுக்கு பிடிக்கலைங்கறதால நான் என்ன நடிக்காமலா இருந்தேன்? நடிச்சேன்ல. அது மாதிரிதான்”

“ஆனா, அடுத்த தேர்தல்ல ஓட்டு விழாம போச்சுனா?”

விஜய் வாயை இறுக்க மூடி கொண்டு அப்பாவை பார்க்கிறார். அவர் விஜய் காதில் ஏதோ சொல்கிறார்.

“அதுக்கு நாங்க இன்னொரு வழி வச்சிருக்கோம்.”

“என்ன?”

“மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சி போயி பணம் திரட்டுவோம்.”

“நீங்க நாலு படத்துக்கு மூணு ப்ளாப் கொடுப்பீங்களே? அந்த ப்ளாப் பட தயாரிப்பாளர்களோட கடன்களுக்கு ஏதாவது திட்டம் இருக்கா?” கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலாக வரும் முறைப்பை கண்டு அந்த நிருபரும் எஸ்ஸாகிறார்.

நெக்ஸ்ட்.

“மாநிலத்தொட உள் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு என்ன பண்ண போறீங்க?”

“அதான் ஏற்கனவே, சொல்லி ஆரம்பிச்சிருக்கோமே? மாவட்டம் தோறும் கல்யாண மண்டபம் கட்டுறோம். கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!.”

”வறுமை கோட்டுக்கு கீழே இருக்குற மக்களுக்கு என்ன பண்ண போறீங்க?”

“பிரியாணி பண்ண போறோம்.”

”என்ன?”

“ஆமாம். டெய்லி இலவசமா பிரியாணி போட போறோம்”

எஸ்.ஏ.எஸ். வந்து காதை கடிக்கிறார். “மகனே, பிரியாணி போடுறதுக்கு அவுங்க என்ன நாம நடத்துற உண்ணாவிரதத்துக்கு வந்தவுங்களா?”

“சரி, சட்ட ஒழுங்கு மேம்பட என்ன திட்டங்கள் வச்சிருக்கீங்க?”

“அது எங்க அப்பா செக்‌ஷன். அவர் சொல்லுவார்?”

எஸ்.ஏ.எஸ் - ”சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு இருக்கோம்.”

“ஸ்ஸ்ஸ்... எப்பா! போதும்.”

கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, “முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க”

“என்ன சத்தம்?”

“இல்ல சார், சைலன்ஸ் சைலண்டா தான் இருக்கோம். நீங்க தான் பேசிட்டு இருக்கீங்கல்ல?”

“வெளிநாட்டு முதலீடுகளை நம்ம மாநிலத்துக்கு கொண்டு வர, என்ன பண்ண போறீங்க?”

“அத பத்தி ஏற்கனவே பேசிருக்கோம், ஒரு லண்டன் நிறுவனத்துடன். அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பிச்சுட வேண்டியது தான்.”

“என்ன அக்ரிமெண்ட்?”

“ஒன் இயர் அக்ரிமெண்ட். பிடிச்சிருந்தா வச்சிருப்போம். இல்லாட்டி திருப்பி அனுப்பிடுவோம்.”

“அது சரி. நீங்க ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர். பட பேரு, எம்.ஜி.ஆர். பாட்டு அப்படின்னு இருந்தீங்க. இப்பல்லாம் அப்படி இல்லாம, பெரியார், பெரியார்ன்னு பேசுறீங்களே? ஏன்?”

“பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு.”

“என்னன்ன?”

“பெரியார் அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன் வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு வந்தாரு”

என்று சொல்லிய படி, திரும்பி அப்பாவை பார்க்கிறார். அப்பா பெருமையில் கண்ணீர் விட்டு, அதை துடைத்து விட, இது தான் சாக்கு என்று எஞ்சியிருந்த நிருபர் கூட்டம், சும்மா ’கில்லி’ மாதிரி எஸ்ஸாகிறார்கள்.

.

Monday, June 8, 2009

என்னது? உங்க மனைவிக்கு கல்கத்தாவா?

பேசும்போது கவனமா பேசுனாலே, பல சங்கடங்களை, சண்டைகளை தவிர்க்கலாம். பல பெரிய பிரச்சினைக்களுக்கு காரணம், நாக்குல சனின்னு சொல்லுவாங்க. ஒரு பேச்சாற்றல் வகுப்பில் சொன்னது. ஒருவர் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்கும் போது, நம் மூளை அதற்காக திருப்பி கூற ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை யோசித்து, நமது நாக்குக்கு அனுப்பிவிடுமாம். நாம் முந்திரிகொட்டையாக இருந்தால், முதல் பதிலை டக்கென்று கூறி விடுவோம். அப்படி இல்லாமல், கொஞ்சம் சூது வாது தெரிஞ்ச ஆளா இருந்தால், அந்த பதில்களில் பெஸ்ட்ட தேர்ந்தெடுத்து கூறுவோம். எவ்ளோ பதில்கள யோசிக்கறோமோ, அவ்வளவு அறிவாளி. எந்தளவுக்கு பெஸ்ட் பதில தேர்ந்தெடுக்கோமோ, அவ்வளவு புத்திசாலி.

ஆனா, கீழே வருற கதையில இருக்குற ஹீரோ இதுல விதிவிலக்கு. இவ்ளோ ஸ்பீடா யோசிச்சு பேச முடியுமா? அப்படி யாராச்சும் இருந்தா, பேசிட்டே இருக்கலாம். கதை மின்னஞ்சலில் வந்தது. இனி இத சொல்ல போறது இல்ல.

----

நம்மூர்ல இருக்குற நீல்கிரிஸ், புட் வேர்ல்ட், மோர், பிக் பஜார் இது போல ஒரு சூப்பர் மார்க்கெட். அதுல நம்மாளு சேல்ஸ் சர்வீஸ் பாய் வேலை பார்க்குறான். ஒரு நாள், ஒரு கஸ்டமர் வந்து இருக்குற சீனி பாக்கெட்ட எல்லாம் பார்க்குறாரு. அவருக்கு தேவை, அரை கிலோ சீனி. ஆனா, இருக்குறது எல்லாம் ஒரு கிலோ பாக்கெட்டுகள்.

“தம்பி, அரை கிலோ எங்க இருக்குது?”

நம்மாளும் பார்க்குறான். எங்கயும் இல்லை.

“ஸ்டாக் இல்லை, சார்”

“வேணுமே. கொஞ்சம் பாருப்பா...” அடம் பிடிக்குறாரு.

வேறு வழியில்லாமல், ”இல்லையே சார். நான் வேணும்ன்னா மேனேஜர்கிட்ட கேட்குறேன்”

மேனேஜர் ரூமுக்கு போகிறான்.

மேனேஜர் நல்ல பிரண்ட்லி டைப். அவர் கிட்ட, “சார், ஒரு சாவுகிராக்கி காலையிலேயே வந்து அரை கிலோ சீனி தான் வேணும்ன்னு கேட்டு அடம் பிடிக்குறான்.”

சொல்லிட்டு திரும்பி பார்க்க, அந்த கஸ்டமர் பின்னாடி நிற்குறாரு.

பையன் பார்த்துட்டு, நிலைமையை சமாளிக்க, அப்படியே தொடர்ந்து சொல்றான், “இந்த சாருக்கு இன்னொரு அரை கிலோ வேணுமாம்” (எப்படி?)

உடனே, மேனேஜர் அவருக்கே உரிய திறமையோட(!), பிஸினஸை முடிச்சி கஸ்டமரை அனுப்புறாரு.

அனுப்பிட்டு, பையனை பாராட்டுறாரு. “தம்பி, ஒவரா பேசி நீயும் சிக்கல்ல மாட்டி, என்னையும் மாட்டி விட்டுடுவேன்னு நினைச்சேன். சூப்பரா பேசி சமாளிச்சுட்டே. இப்படித்தான் இருக்கணும். நல்ல சமயோசித புத்தி உனக்கு. கீப் இட் அப். எந்த ஊரு உனக்கு?”

நம்மாளு, “கல்கத்தா, சார்...”.

“ஓ! அப்படியா? அங்க இருந்து எதுக்கு இங்க வந்த?”

”பிடிக்கலை. அந்த ஊரு முழுக்க வெறும் விபச்சாரிகளும், புட்பால் ப்ளேயர்ஸும் தான்.”

குனிந்து கொண்ட மேனேஜர், “என் மனைவிக்கும் கல்கத்தா தான்”. சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“அவுங்க எந்த டீம்ல சார் விளையாடினாங்க?”

Saturday, June 6, 2009

விடாது வெறி !!!

"என்ன மாப்ளே? இன்னும் தூக்கமா?” தாத்தா குரல். அப்பா அவர் மேல் இருந்த என் கையை விலக்கிய படி எழுந்தார். எனக்கு எழுந்திருக்க மனமில்லை. அப்பா கூட சேர்ந்து இன்னும் கொஞ்சம் நாள் தான் படுக்க முடியும்.

தாத்தா பெரியகுளத்திலிருந்து வந்திருந்தார்.

“வாங்க, மாமா... இராத்திரியே வருறதா சொன்னா...”

“ஆமாம், மாப்ளே... நம்ம ஊருக்குள்ள இருந்த .... சிலையை எவனோ போக்கத்தவன் உடைச்சிட்டான். அதுக்கு பயபுள்ள எவனோ பஸ்சுல கல் எறிய, பஸ் சர்வீஸை நிறுத்திப்புட்டாங்க. அதான், காலையில தேனி மார்க்கட்டுக்கு வந்த சண்முகம் கூட அவன் பைக்ல வந்திட்டேன். இந்தாம்மா”

“என்னப்பா?”

“வருற வழில அல்லிநகரத்துல வாங்குனேன். ஸ்வீட் முட்டாய். புள்ளைக்கு பிடிக்குமேன்னு”

“ஏலேய், செல்வம் எந்திரிடா... யாரு வந்துருக்கா பாரு... போயி பால் வாங்கிட்டு வா...”

“பேராண்டி, எந்திரிக்க மனமுல்லையோ?”

“பரீட்சை முடிஞ்சாச்சு.. ரிசல்ட் வருற வரைக்கும் துரை இப்படித்தான் தூங்குமாம்.”

மூஞ்சை கழுவி தலை சீவினேன்.

“அடுத்து எந்த காலேஜ்ல சேர்க்க போறீக?”

“அவன் இந்த ஊருல படிக்க மாட்டானாம். வெளியூர் போறானாம்.” என்னிடம், “தேங்காயும் வாங்கிட்டு வாடா.”

”ஏனாம்?”

அலமாரி டப்பாவில் இருந்து காசு எடுத்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நடக்க நடக்க, அம்மா குரல் குறைந்தது.

எனக்கு சண்டை சச்சரவு எல்லாம் பிடிக்காது. உண்மையில எனக்கு பயம். யாராவது கத்தினாலே, எனக்கு உள்ளுக்குள் நடுங்கும். ஆனா, இந்த ஊருல எப்ப பார்த்தாலும் சண்டை. எதுக்கெடுத்தாலும் சண்டை.

பால் வாங்கி வீடு திரும்பும் போது, இருவர் கையில் அறுவாலுடன் உள்ளுக்குள் கோபத்துடன் என்னை கடந்தனர். பழிக்கு பழி கிளம்பியாச்சு.

கண்டிப்பா காலேஜ் வெளியூர் தான். இந்த சாதி வெறி மனிதர்களுடன் இருக்கவும் பிடிக்கவில்லை. படிக்கவும் பிடிக்கவில்லை.

----

கோயமுத்தூர் ஆரம்பத்துல எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எங்க ஊர விட வெயில் கம்மி. மரியாதை கொடுக்குற மனுசங்க. இப்படி மரியாதையா பேசுற பஸ் கண்டக்டர இங்க தான் பார்க்குறேன். நவீன நாகரிகத்தை தொடும் மையப் பகுதி, கிராமிய மணம் இன்னும் விட்டு போகாத சுற்றுப்புறங்கள். எனக்கு ஊரை விட்டு வந்தது, ஒன்றும் பெரிய கவலையை கொடுக்கவில்லை. சில நேரங்களில், வீட்டு ஞாபகம் வந்தால், குளிக்க போய் விடுவேன். கண்ணீர், பாத்ரூம் தண்ணீருடன் கலந்து விடும். அதுவும், சேர்ந்து புதிதில் தான்.

நல்லாவே படிச்சேன். எந்த சிக்கலிலும் மாட்டவில்லை.அலுங்காத தண்ணீராய் இருந்த என் கல்லூரி நாட்களில், கல்லாய் விழுந்தது அந்நாள். ப்ராஜக்ட் ஓர்க் விஷயமாய் ஜெராக்ஸ் எடுக்க காந்திபுரம் சென்றிருந்தேன். எடுத்து கொண்டிருக்கும் போது, படீரென சத்தம். கடையை விட்டு வெளியே வர, மக்கள் கூட்டம் தாறுமாறாய் ஓட ஆரம்பித்தது. கூட்டத்துடன் சேர்ந்து நானும் ஓடினேன். எல்லோருடைய முகத்திலும் கலக்கம். குழப்பம். ஊர் முழுக்க வெடிகுண்டுகள்.

எங்கெங்கோ சென்று பத்து கிலோமீட்டர் நடந்தே, ஹாஸ்டல் வந்து சேர்ந்தேன். அன்று முழுக்க தூங்கவே இல்லை. கனவிலும், ரத்தத்துடன் தள்ளுவண்டி பழங்கள். எரிந்த கட்டிடங்களின் வெப்பம்.

எனக்கு மேல்படிப்பு படிக்க வெளிநாடு செல்ல ஆசை. கூட படிக்கும் நண்பர்களால் புரிந்த கொண்ட ஆசை அது. என் தகுதிக்கு கண்டிப்பாக செல்லலாம் என்றார்கள். ஆனால், என் குடும்பத்தின் பொருளாதார நிலைதான் அதற்கு தகுதி இல்லாமல் இருந்தது. அதனால், படித்து முடித்து வேலை பார்க்கும் எண்ணத்திலேயே இருந்தேன். அதுவரை கோவையில் தான் வேலை பார்க்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால், அந்த நாள் எல்லாவற்றையும் மாற்றியது.

அதை தொடர்ந்த நாட்களிலும், நான் அதுவரை கண்ட அமைதியை அந்த ஊரில் காணவில்லை. அமைதியும் இருந்தது. ஆனால், வேறு விதமானது. பயம் கலந்தது. யாரை கண்டாலும் சந்தேகம். சோதனை. எங்க ஊர் சாதி சண்டையை விட இதோட வீரியம் அதிகமாயிருந்தது.

ஏற்கனவே, என் கல்லூரி சீனியர்கள் பெங்களூரில் இருக்க, வேலைக்கு அங்கே செல்ல முடிவெடுத்தேன். தமிழ்நாடே வேண்டாம்.

----

”செல்வம் கிளம்பு, மீட்டிங் ஆறு மணிக்கு”

”இதோ, ஒரு மெயில் மட்டும் தான். பைக்ல தானே போறோம். இன்னர் ரிங் ரோட்ல போனா, பத்தே நிமிஷத்துல லீலாவுக்கு போயிடலாம்.”

“சீக்கிரம் சீக்கிரம்”

“ஏன் இவ்ளோ அவசரப்படுறே? அவுங்க பேசுறதைய கேட்க போற? டின்னர்தானே முக்கியம். செவன் தர்ட்டிக்கு போனா போதும்”

”உனக்கென்னடா மச்சி! பேப்பர போட்டுட்ட... இன்னும் ரெண்டு மாசம்தான். கிளம்பிடுவே...”

பெங்களூர் வந்து ரெண்டு வருஷமாச்சு. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், சீனியர்ஸ், நண்பர்கள் கொடுத்த சப்போர்ட்ல இன்னைக்கு நல்ல கம்பெனியில இருக்கேன். அப்புறம் ஏன் வேலையை விட்டேனா?

நான் தான் சொன்னேன் இல்லையா? மேல் படிப்பு படிக்கணும்ன்னு இருந்தேன். குடும்ப பொருளாதாரத்தால போகலைன்னு. இந்த ரெண்டு வருஷத்துல, அதை ஒரளவுக்கு சரி பண்ணிட்டேன். அனிமேஷன் மேல இருந்த ஆர்வம், மெல்போர்ன் யூனிவர்சிடிக்கு அப்ளை பண்ண வச்சது. இடமும் கிடைச்சது. வேலையை விட்டுட்டேன்.

அது மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருக்குது.

----

ரெண்டு மாசம் முன்னாடி, வழக்கம் போல் மதியம் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பிக்கும் போது, என் டீமில் இருந்தவர்கள் கிளம்ப ஆரம்பித்தார்கள்.

“என்ன, அரை நாள் லீவா?”

“முண்டம். மெயில் செக் பண்ணு.”

ஹச்.ஆரிடம் இருந்து மெயில் வந்திருந்தது. காவிரி விஷயமா, தமிழ் நாட்டு தலைவர் ஒருவர் ஏதோ சொல்ல, இங்கே கலவரமாம். டி.என். ரெஜிஸ்ரெஷன் வண்டின்னா, ஆபிஸ்லேயே விட்டுட்டு போக சொல்லியிருக்காங்க.

பஸ்ஸில் ரூமுக்கு கிளம்பினேன். கண்டக்டரிடம், “மடிவாளா ஒண்ணு கொடுங்க”, கண்டக்டர் நிமிர்ந்து பார்க்க, மற்றவர்களும் என்னையே பார்த்தது போல் ஒரு உணர்வு.

“மடிவாளா ஒந்து கொடி”

----

ஏன் இந்த ஊர் இப்படி இருக்குது? இந்த ஊருன்னு இல்ல. எந்த ஊருனாலும் வெளியூர்காரன்னா வெறுப்புதான்.

இது எல்லாத்தையும் மறந்து வாழணும்ன்னா, எனக்கு பிடிச்ச துறையில மூழ்கணும். அதுக்காக தான் முக்கியமா அனிமேஷன் படிக்க போறேன். நல்ல எதிர்காலம் இருக்காம். எனக்கு பிடிச்சதும் கூட. இப்போதைக்கு வெளிநாட்டுல வேலை பார்க்க தான் முடிவு பண்ணியிருக்கேன்.

----

ஒரு வழியா இங்க மெல்போர்ன்ல செட்டில் ஆகியாச்சு. காலேஜ்ல இருந்து அபார்ட்மெண்ட்டுக்கு ட்ரெயின் தான். கிளாஸ் முடிஞ்சதும், கொஞ்சம் நேரம் டிஸ்கஸ் பண்ணுவோம். அப்புறம், வீடுதான். டின்னர் அங்க நாங்களே பண்றோம்.

இதோ, அபார்ட்மெண்ட்டுக்கு கிளம்பிட்டேன். ரயில்வே ஸ்டேஷனில், ஒரு கோக் வாங்கிவிட்டு, ரயிலில் ஜன்னலோரம் உட்கார்ந்தேன்.

இந்த நேரம் எப்பவும் கூட்டம் இருக்காது. இன்று சுத்தமாக.

ரயில் ஓட ஆரம்பித்து, பத்து நிமிடம் இருந்திருக்கும். என்னை கடந்து நாலு பேர் சென்றார்கள். அதில் என்னை கண்ட ஒருவன், மற்றவர்களிடம் ஏதோ கூற, நாலு பேரும் என்னை நோக்கி வந்தார்கள். என்னை சுற்றி உட்கார்ந்தார்கள்.

பெண்கள் இட ஒதுக்கீடு - கலைஞர் சம்மதம்?

இப்படியா?இல்ல, இப்படியா?எப்படின்னாலும் சரி.

Thursday, June 4, 2009

எம்.ஜி.ஆரின் டெல்லி உண்ணாவிரதம்

நேரு முதல் நேற்று வரை
- ஒரு பார்வை

ப.ஸ்ரீ.இராகவன் தெரியுமா? செய்திகளை ரொம்ப ரொம்ப ஆழமாக படித்திருந்தால், இவரை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக தி ஹிந்து, பிஸினஸ்லைன். இவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஐ.ஏ.எஸ். படித்தது இந்தியா சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில். கல்கத்தா, டெல்லி, ஐ.நா. என்று வெயிட்டான இடங்களில், நேரு, சாஸ்திரி, ஜோதிபாசு, இந்திரா என்று வெயிட்டான மனிதர்களுடன் பணிபுரிந்து 1987 இல் ஓய்வு பெற்றவர். இவர் அவருடைய பணிக்கால அனுபவங்களை, ஒரு அலுவல் சுயசரிதையாக ”நேரு முதல் நேற்று வரை” என்கின்ற இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். என்பது கலெக்டர் என்பதோடு நிற்பதில்லை. நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது. பெரும்பாலான நேரங்களில் அரசியல்வாதிகள் என்பவர்கள், நம் உடலில் இருக்கும் கண், வாய் போல ஒரு செய்தி தொடர்பாளர் போல் இருப்பவர்கள் தான். முகம் காட்டாத அதிகாரிகள் தான், நிர்வாகத்தின் இதய துடிப்பு, மூளை எல்லாம். ஒரு அமைச்சரோ, பிரதமரோ முடிவெடுப்பது ஒரு அதிகாரி கொடுக்கும் குறிப்புகளை கொண்டுதான். குறிப்பு எவ்வாறு, விளக்கம் எவ்வாறு என்பதை பொறுத்து தான், முடிவுகள். கொள்கைகள். நாட்டின் விதி.இப்புத்தகத்தின் ஆசிரியர் இராகவன், சீர்காழியில் பிறந்தவர். சென்னையில் படித்தவர். உத்தியோக காலத்தை முழுவதும் வடநாட்டிலும், வெளிநாட்டிலும் கழித்தவர். ஓய்வு பெற்ற பிறகே தமிழகத்திற்கு திரும்பினார். ஒய்வுக்கு பிறகும் பெரிய நிறுவனங்களில், முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.

இவர் இப்புத்தகத்தில் விவரித்துள்ள அரசியல்வாதிகளுடனான அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. சில வியப்பளிக்க கூடியவை.

----

1965. இந்தியா மேல் பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்திருந்தது. சாஸ்திரி தான் பிரதமர். எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று ஆலோசிக்க ஜெனரல் ஜே.என். சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார். சாதக பாதகங்களை கேட்டார். அதற்கு ஜெனரல், போருக்கு என்னவெல்லாம் தேவை, எவ்வளவு தேவை, எவ்வளவு இருக்கிறது என்று அடுக்கி விட்டு, “எதிரியிடம் எவ்வளவு இருக்கிறதோ, அதை விட மூன்று மடங்கு நம்மிடம் இருக்க வேண்டும். இருந்தால் தான் போர் சாத்தியம்” என்று பேசிக்கொண்டே போனார்.

முழுவதையும் கேட்டு விட்டு, சாஸ்திரி சொன்னார். “எல்லாம் பாட புத்தகத்தில் உள்ளது போல், கணக்கு தவறாமல் இருந்து விட்டால், நான் கூட போர்க்களத்தில் குதித்து வெற்றி பெற்று விடுவேனே? அப்புறம் ஜெனரல் எதற்கு?”

ஜெனரல் ஒடுங்கிப்போய், “ இப்போதே தயார் ஐயா! உத்தரவிடுங்கள்” என்றார்.

----

மத்திய அரசின் உணவு வாரியத்தின் சேமிப்பில் இருந்து தான் மாநிலங்களுக்கு மாதா மாதம் உணவு பொருட்கள் பகுத்து வழங்கப்படும். உணவு வாரியம் அளிக்கும் அளவு, மாநிலங்களின் தேவைக்கு குறைவாக இருந்தால், மாநில அரசு சிக்கலில் மாட்டும். அந்நேரம் மாநில முதலமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரை, உணவு அமைச்சரை பார்த்து பேசுவார்கள். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, தமிழகம் சார்பில் எம்.ஜி.ஆரும் பண்ருட்டி ராமசந்திரனும் சென்று வருவார்கள். அரிசி, கோதுமை தரம் சரியாக இல்லாத பட்சத்தில் அதை கொண்டு போய் காட்டி, தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க செய்வார்கள்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது, ஒருமுறை தமிழகத்திற்கான பங்கீடு சரிவர இல்லை. அதற்காக எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். மத்திய அரசு உணவுப் பொருள்கள் பங்கீட்டில் காட்டும் மெத்தனத்தை எதிர்த்து, எம்.ஜி.ஆர். காந்தி சிலைக்கு முன்னால் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். ஒரே நாள் உண்ணாவிரதத்தில் எம்.ஜி.ஆர். மத்திய அரசை அடிபணிய வைத்தார்.

மக்களின் உணவுக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

----

நேரு பாராளுமன்றத்துக்குள் துள்ளி குதித்து கொண்டு செல்வாராம். எதிரில் வரும் அமைச்சர்களையும், மற்ற உறுப்பினர்களையும் தோளில் தட்டி கொண்டும், கையில் கிள்ளி கொண்டும் செல்வாராம். எல்லாம் சீனா படையெடுப்பு வரை. எழுபது வயதில் படிகளில் ஒரு சிறுவன் போல் தாண்டி ஓடி ஏறியவர், சீனாவின் துரோக தாக்குதலுக்கு பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பத்திரிக்கையாளர்களிடன் அது பற்றி பேசும் போது, “நாம் நமக்கென்றே ஒரு மாய உலகைப் புனைந்து கொண்டு மோசம் போனோம் என்பதை உணர்கிறேன்” என்று கண் கலங்க கூறினார்.

தேஹ்ராதுனில் நேரு ஓய்வெடுத்து கொண்டிருந்த சமயம், ஒரு பத்திரிக்கையாளர் அவரை சந்தித்து,

“காஷ்மீர் பிரச்சினை உங்கள் வாழ்நாளுக்குள் தீர்ந்துவிடும் என்று நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு நேரு, “நான் அவ்வளவு சீக்கிரம் சாவதாக இல்லை” என்றார்.

அடுத்த நாள் டெல்லி திரும்பினார். அதற்கடுத்த நாள் அவர் மறைந்தார்.

----

அரசியலில் ஈடுபடும் அதிகாரிகளைப் பற்றி இப்படி சொல்கிறார் இராகவன்.

இந்திரா காந்தி காலத்திலிருந்தே, ஓய்வு பெற்ற, ஏன், பணியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக்கூட கட்சியில் சேர்த்து, மக்கள் மன்றப் பிரதிநிதிகளாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. இப்போது பல கட்சிகளில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமின்றி, மற்ற பணிகளில் உயர் நிலையிலிருந்தவர்களும், முப்படைத் தளபதிகளாகப் பொறுப்பு வகித்தவர்களும், மாஜி நீதிபதிகளும் கூட இருப்பதைக் காண்கின்றோம்.

ஜக்மோஹன், மன்மோகன் சிங், மணி ஷங்கர் ஐயர், டி.என்.சதுர்வேதி, யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், நித்தீஷ் சென்குப்தா, விக்ரம் சர்க்கார் போன்றவர்கள் சேர்ந்துள்ள கட்சிகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அவர்களுடைய சகவாசத்தினால் அந்தக் கட்சிகள் மக்களுக்குப் பழக்கமாகிவிட்ட தில்லுமுல்லுகளிலிருந்து விடுபட்டு விட்டனவா, சீரிய பண்புகளுடன் இயங்குகின்றனவா என்றால் அதுதானில்லை. அதற்கு முற்றிலும் மாறாக, நிர்வாகத்தின் தூண்களாக திண்மைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக விளங்கிய இவர்கள் அரசியல் கட்சிகளின் அத்தனை அவலக் குணங்களுக்கும் அடையாளச் சின்னங்களாக மாறிவிட்டார்கள்.

----

ஆசிரியர் ஐ.ஏ.எஸ். இல் சேர்ந்ததில் இருந்து ஒய்வு பெற்றது வரை இப்புத்தகத்தில் பதிவு செய்திருப்பதால், அந்த பணியை பற்றிய 360 டிகிரி பார்வை நமக்கு கிடைக்கிறது. ஒரு தனி மனிதனின் அலுவல்கள் என்றில்லாமல், நாட்டின் முக்கிய நிகழ்வுகள், ஆட்சி மாற்றங்கள், தலைவர்களின் சுபாவங்கள், கால மாற்றம் எல்லாம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கால ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை, மன மாற்றங்களை ஆசிரியர் வேறுபடுத்தி காட்டியுள்ளார். அதுவே, “எங்க காலத்துல நாங்கெல்லாம்...” என்பது போன்ற ஆசிரியரின் வாதங்கள் சலிப்பை கொடுத்தாலும், உண்மை என்பதால் ஒத்துக்கொள்ள வேண்டியது தான்.

இந்த புத்தகத்தில் சம்பவங்களை மட்டும் அடுக்கி கொண்டு போகவில்லை. பல விஷயங்களில் தனது பார்வையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பெரும்பாலான ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் காணப்படும் குறைகளையும், அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவது எப்படி? பேச்சுவார்த்தைகளை நடத்துவது எப்படி? உட்பூசல்களை சரிப்படுத்துவது எப்படி? பத்திரிக்கை, தொலைக்காட்சி நிருபர்களுடன் பழகுவது எப்படி? அரசியல்வாதிகளுடம் பழகுவது எப்படி? ஆளுமைத் தரத்தை உயர்த்துவது எப்படி? என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் பல வழிகளை சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஐ.ஏ.எஸ். படிப்பின் மேல் வரும் ஆர்வத்தை தவிர்க்க முடியவில்லை. ஐ.ஏ.எஸ். படிக்க நினைப்பவர்களுக்கு இந்த புத்தகம் நிறைய ஊக்கத்தை கொடுக்கும். யாரையாவது ஐ.ஏ.எஸ். படிக்க வைக்க நினைத்தால், முதலில் இந்த புத்தகத்தை படிக்க சொல்லலாம்.

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு. புத்தகம் வாங்க இங்கு கிளிக்கவும்.

Wednesday, June 3, 2009

சூப்பர் சிங்கர் - 2008 டூ 2009

ஒரு வழியா 2008 இன் சூப்பர் சிங்கரை 2009 முடிவதற்குள் அறிவித்து விட்டார்கள்.கிரிஷும் கார்த்திக்கும் வந்திருந்த கூட்டத்திடம் கெஞ்சி கேட்டு கொண்டார்கள். சவுண்டு கொடுக்க சொல்லி. கச்சேரி பார்க்க வந்த கூட்டம் போல் இல்லை. ரொம்ப அமைதி. அஞ்சலை பாட்டுக்கு கூட அதிகம் கத்தலை. சாத்வீகம்.

யுவன் கொஞ்சம் அலட்டலாக தான் இருந்தார். டிவி பேரையும், நிகழ்ச்சி பேரையும் பின்னால் திரையை பார்த்து பார்த்து சொன்னார். எப்படா கிளம்புவோம் என்பது போல் இருந்தார்.
இடம் மூணு - போனது ரேணுஇரண்டு - ரவிசூப்பர் சிங்கர் - அஜிஸ்தொகுப்பாளர் என்ற பேரில் யுகேந்திரன் பண்ணும் காமெடி இதிலும் தொடர்ந்தது.

அஜிஸ் அம்மா - இதுக்கெல்லாம் காரணம் விஜய் டிவிதான்
யுகேந்திரன் - அதெல்லாம் இல்லம்மா!

:-)

இனி ஒரு வாரமோ, ஒரு மாதமோ, இவர்கள் குடும்பத்தினர் அழுவதை காட்டுவார்கள்.

கருணாநிதியும் சோவும் சேர்ந்தால் ஜோசியம்தான்

சோவின் வார்த்தைகளில்,

“’பராசக்தி’, ’திரும்பிப்பார்’, ‘மனோகரா’ - போன்ற படங்களைப் பார்த்து, கருணாநிதியின் வசனங்களால் பெரிதும் கவரப்பட்ட ஒரு மாணவர் கூட்டமே அன்றிருந்தது. அக்கூட்டத்தில் நானும் ஒருவன். அப்படிப்பட்ட திறமையாளர், எங்கள் நாடகங்கள் சிலவற்றுக்குத் தலைமை வகித்து, பெரிதும் பாராட்டியிருந்தார். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, நான் திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியபோது, எனக்கு வந்த முதல் வாய்ப்புகளில், கருணாநிதி அவர்களின் ‘மறக்க முடியுமா?’ படமும் ஒன்று.

படப்பிடிப்பின் இடைவேளைகளின் போது, கருணாநிதியுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்கு பலமுறை கிட்டியது. யாருக்கும் தோன்றாத கோணம், அவருக்கு திடீரென்று தோன்றும். அந்த உரையாடல்களில் அவருடைய குணாதிசயம் அடிக்கடி வெளிப்படும்.

ஒருமுறை நாங்கள் பேசிக் கொண்டிக்கும்போது, ‘மறக்க முடியுமா?’ படத்திற்காக தயாரான விளம்பரப் போஸ்டர் வடிவமைப்பு வந்தது. அதைக் காண்பித்து எல்லோரிடமும் அபிப்பிராயம் கேட்டார் கருணாநிதி. எனக்கு அந்த டிஸைன் பிடிக்கவில்லை. பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு... என்று பல வண்ணங்களும் சேர்ந்து, முகத்தில் அறைகிறாற் போல் இருந்தது அந்த டிஸைன். இதை நான் அவரிடம் சொன்னேன்.

கருணாநிதி ஒரு கணம் கூட தயங்கவில்லை. ‘அந்த டிஸைன் போட்டவருக்கு பாலிடிக்ஸும் தெரியும் போல இருக்குது. எங்க கூட்டணியிலே இருக்கற எல்லா கலர்களையும் போட்டுட்டாரு! சுதந்திரா கட்சிக்காக நீலம், முஸ்லிம் லீக்குக்காக பச்சை, எங்கள் கட்சிக்காக கருப்பு, சிவப்பு...’ என்று ஆரம்பித்து, அந்த போஸ்டரிலிருந்த மற்ற எல்லா நிறங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொடுத்தார் அவர். இப்படி பளீர் என பேசக் கூடிய அவர், மற்றவர்கள் அப்படி பேசும் போதும், அதை ரசிக்கக் கூடியவரே.

மற்றொரு நிகழ்ச்சி. வி.பி.சிங் அரசு கவிழ இருந்த நேரம். சந்திரசேகருக்கு ஆதரவாக சில பணிகளைச் செய்ய, நான் விமானம் மூலம் டெல்லி சென்று கொண்டிருந்தேன். அதே விமானத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, வி.பி. சிங்கை சந்திப்பதற்காகவும், தேசிய முன்னணியின் தலைவர்களோடு கலந்து பேசுவதற்காகவும் டெல்லி சென்று கொண்டிருந்தார்.

விமானப் பயணத்தின் போது நான் அவரை அணுகி, வணக்கம் தெரிவித்தேன். அவரும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, என்னுடைய நலனைப் பற்றி விசாரித்த பிறகு, அருகில் இருந்தவர்களிடம், ‘இந்த சந்திப்பு என்ன தெரியுமா?’ என்று கேட்டார். மற்றவர்களுக்கும், எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவரே தொடர்ந்தார். என்னைச் சுட்டிக்காட்டி, ‘சோ’ என்று கூறி, தன்னையே சுட்டிக்காட்டி ‘சி.எம்.’ என்று சொல்லிவிட்டு. இரண்டையும் சேர்த்து ‘சோ சிஎம் - சோசியம்’ என்றார்!

‘டெல்லியிலே இப்ப எல்லாரும் பார்க்கறது ஜோசியம்தானே! இப்ப நீங்க எல்லாரும் இங்கேயே ஜோசியம் பார்த்துட்டீங்களே’ என்று நான் விளக்கம் அளிக்க, மற்றவர்களுக்கு விஷயமே அப்போதுதான் புரிந்தது! இப்படிப்பட்ட நகைச்சுவை அவருக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது.”

சோவின் ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ புத்தகத்திலிருந்து

-----

இன்றும், எண்பத்தி ஆறு வயதில் அதே நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்து வரும் முதல்வருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, June 2, 2009

தோரணை - மசாலா பாப்கார்ன்பதிவின் நோக்கம் கருதி படத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எழுதுகிறேன்.

---

புது முயற்சி என்று சொல்லி எந்த சோதனையும் செய்யவில்லை. யாரையும் சோதிக்கவும் இல்லை. அண்ணனை தேடி சென்னை வரும் தம்பி, அண்ணனை கூட்டி கொண்டு ஊர் திரும்பும் சாதா கதைதான். அதை எஸ்.பி.முத்துராமன் ஸ்டைல் மசாலா பாணியில் போதிய இடைவெளியில் பாடல், சண்டையுடன் சென்டிமெண்ட், காதல், காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். இயக்குனர் சபா ஐயப்பன், பூபதிபாண்டியன் கேங் என்பதால் நகைச்சுவையே பிரதானம்.

படம் முழுவதும் எதுகை மோனையுடன் வசனங்கள். முன்பாதியில் காமெடிக்காகவும், பின்பாதியில் சவாலுக்காகவும், வசனகர்த்தா ஜாலியான கலகலப்பான வசனத்தில் கலக்கியிருக்கிறார். ஆங்காங்கே தங்களை பற்றியே சுய எள்ளலும் செய்து கொள்கிறார்கள். பாடல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் ப்ரியன் வைக்கும் ஆங்கிள்கள் அபாரம். அவருடைய ஒளிப்பதிவின் மேல் ப்ரியம் கொள்ளவைக்கிறார்.படம் வெளியான போன வாரத்துடன் அக்னி நட்சத்திரம் முடிந்தது. படத்தில் அந்த அளவுக்கு ஸ்ரேயா ஜிலுஜிலுவெனயிருக்கிறார். படம் கொஞ்சம் முன்னமே வந்திருக்கலாம். கண்டிப்பாக குறிப்பிடவேண்டியது ஸ்ரேயாவின் வயிறு. யப்பா. (கவனிக்கவும், இடுப்பை அல்ல). இதுபோல் பெண்கள் அவரவர் வயிறை பேணி காத்து வந்தால், வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

விஷால் - சந்தானம் காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி நடுவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், நல்ல கெமிஸ்ட்ரி. கோவிலில் உருண்டு புரண்டு ஓடும் காட்சியிலும், பாட்டிக்கு லிப் கிஸ் கொடுத்து பஞ்சாயத்தில் மாட்டும் காட்சியிலும் தியேட்டர் குலுங்குகிறது. ஏற்கனவே சொன்னது போல், சந்தானம் தான் தற்போதைய கவுண்டமணி. மனிதர் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார். விஷால் வைரமுத்து மாதிரி உடையணிய, அவரையும் வாரி இருக்கிறார்கள்.படம் முழுவதும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். சின்ன சின்ன வேடத்திலும் பிரபல நட்சத்திரங்கள். பிரகாஷ்ராஜ், கிஷோர், கீதா, ஷாயாஜி ஷிண்டே, லால், பாஸ்கர், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், ஆர்த்தி, மயில்சாமி, பரவை முனியம்மா, டி.பி.கஜேந்திரன், என்னைத்த கன்னையா என்று லிஸ்ட் நீளம். எம்மாடி! எவ்ளோ பேர்?

பாதிக்கு மேல் படத்தில் சில குறைகள் இருந்தாலும் வழக்கமான கமர்ஷியல் படம் என்னும் விதத்தில் எண்டர்டெயின்மெண்டிற்கு செல்லலாம். ஒ.கே. தான்.

பி.கு. - இப்படத்தை செகண்ட் கிளாஸில் பார்த்தேன்.

---

தோரணை என்ற பெயரே படம் மசாலா டைப் என்று சொல்லிவிடுகிறது. அங்கு சென்று உலக சினிமாவை தேட கூடாது.

பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சசிக்குமார் போன்ற இயக்குனர்கள்தான் தமிழ் சினிமாவை கை கொடுத்து தூக்கிவிட போகிறவர்கள் என்றால், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, பூபதி பாண்டியன் போன்ற கமர்ஷியல் இயக்குனர்கள் தான் அதற்கு தேவையான ஆக்ஸிஜனை கொடுத்து கொண்டிருப்பவர்கள். தூக்குவது பிணமாக இருக்க கூடாதே?

இம்மாதிரி மசாலா படங்களில் நடித்தால்தான், பிரகாஷ்ராஜ் போன்ற கலைஞர்களால் நல்ல படங்கள் என்று பாராட்டப்படும் யதார்த்த சினிமாவை, கிளாஸ் சினிமாவை கொடுக்க முடியும். அதற்காவது மசாலா படங்களையும் காண வேண்டும். பாராட்ட வேண்டும். ஆதரிக்க வேண்டும்.

சினிமா உருக வைக்கட்டும், உணர்வுவயப்பட வைக்கட்டும், நெகிழ வைக்கட்டும், அழ வைக்கட்டும். வரவேற்போம். அத்துடன் துள்ளி குதித்து, ஆட வைத்து, சந்தோஷத்தில் குலுங்க செய்யும் படங்களையும் வரவேற்போமே?