Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

Saturday, July 16, 2016

இந்திய தரிசனம் - 2016

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8674



நான் அமெரிக்காவில் கம்பெனி மாறியவன். பெங்களுர் ஏர்போர்டில், என்னை அமெரிக்காவிற்கு அனுப்பிய, நான் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தின் வரவேற்பு விளம்பரத்தைப் பார்த்த போது, "வாடா மவனே வா" என்று எனக்காகவே வைத்ததை போல் மற்றும் வைவதை போல் இருந்தது.


பெங்களூர் ஏர்போர்ட்டில் வை-ஃபை தேவையென்றால், அதற்கு நாம் நமது மொபைல் நம்பரைக் கொடுத்து, அதில் அவர்கள் அனுப்பும் OTPயை எடுத்து எண்டர் செய்து, அதை அவர்கள் சரி பார்த்து, பிறகு இலவச வை-பை கொடுக்கிறார்கள். எந்த நாட்டு மொபைல் நம்பராக இருந்தாலும் OTP அனுப்பி வைக்கிறார்கள். ஏர்போர்ட்டில் வை-ஃபைக்கும் இவ்வளவு செக்யூரிட்டியா? என்று நினைத்துக்கொண்டேன்.


விமான பயணங்களில் பொதுவாக ஒரு பயம் வரும். அதற்கு மேலான பயம், பெங்களுர் சாலைகளில் பைக்கில் செல்லும் போது வருகிறது. நாம் தான் பைக்கில் சாலையின் ஓரமாக இடது பக்கம் செல்கிறோம் என்று நினைத்து சென்று கொண்டிருக்கும் போது, நமக்கு இடது பக்கம் சடாரென ஒரு எஸ்யூவி செல்லும்.


அமெரிக்க சாலைகளில் தட்டுப்படும் அனைத்து ப்ராண்ட் நேம்களும், பெங்களுர்  சாலைகளில் காணக் கிடைக்கின்றன. மோசமாகப் பிரதியெடுத்த அமெரிக்க நகரமாகத் தான், பெங்களூர் காட்சித் தருகிறது. பல வருடங்களாகவே, பிஸ்ஸா ஹட், டாமினோஸ், சப்வே இருக்கின்றன. ஜந்து வருடங்களுக்கு முன்பு, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி, பேஸ்கின் ராபின்ஸ் போன்றவைகள் வந்தன. மூன்று வருடங்களுக்கு முன்பு, பர்கர் கிங், டேகோ பெல்ஸ், பாப்பா ஜோன்ஸ் போன்றவைகளைப் பார்த்தேன். தற்சமயம்,  ஆவ் போன் பெய்ன் (Au Bon Pain), டனான் (Danone) வகையறாக்களைக் கண்டேன். இந்த வெளிநாட்டு உணவகங்கள், இத்தாலிய , அமெரிக்க, மெக்சிகன், ப்ரென்ச் உணவுகளை விற்றாலும், அதில் இந்திய சுவையைப் புகுத்தி, லோக்கல் கஸ்டமைசேஷன் செய்து இந்தியாவில் கடை பரப்புவது கவனிக்க வேண்டியது. அமெரிக்காவில் இந்திய உணவகங்கள் இருந்தாலும், அவை எல்லாம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களையே முக்கிய வாடிக்கையாளர்களாக கொண்டது. ஏன் இன்னமும் அமெரிக்கர்களை, மற்ற நாட்டினரை டார்க்கெட் செய்யும் இந்திய சார் சங்கிலி உணவகங்கள் வரவில்லை? என்ற கேள்விக்கான பதில், பெரும்பாலான இந்தியர்களின் குணாதிசயத்தோடு சம்மந்தப்பட்டது.


H & R Block, Kumon நிறுவன போர்டுகளையும் பார்த்தேன். முன்பு, உலகமயமாக்கலின்  பயனாக இந்தியாவுக்குள் நிதியின் வரவு தெரிந்தது. தற்சமயம், நம்மவர்களின் பாக்கெட்டில் இருந்து வெளியே செல்லும் செலவுகள் தெரிகின்றன. ஒரு கை இந்திய மார்க்கெட்டில் பணத்தைப் போட, இன்னொரு கை எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதே சமயம், இந்த மாதிரியான வெளிநாட்டு நிறுவனங்களின் பிஸினஸ் மாடலை நெருங்கி கவனித்து, அதனுடன் போட்டியிட்டு, நம் நாட்டு நிறுவனங்களும் வெளிநாடுகளில் வளர வாய்ப்பு பெருகியுள்ளது.


ஒரு நாள் பெங்களுர் மன்யதா டெக் பார்க் செல்ல வேண்டி இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு, அவுட்டர் ரிங் ரோடு என்பது வெறும் சாலை தான். சுற்றிலும் வெட்டவெளி. பிறகு, கடைகள், அலுவலகங்கள் பெருகின. ட்ராபிக் அதிகரிக்க, ஒவ்வொரு சிக்னலிலும் பாலங்கள், கீழ் வழி பாதைகள் உருவாக்கப்பட்டன. தற்சமயம், வெகு சொற்ப சிக்னல்களே இருந்தாலும், ட்ராபிக் ப்ளோ ஒன்றும் ஃப்ரியாக இருப்பதில்லை. வெயில் + ட்ராபிக் + பொல்யூசன் என்ற டெர்ரிஃபிக் காம்போவுக்கு பயந்து, பதினொரு மணி அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு, காலையில் ஏழு மணிக்கே கிளம்பி சென்றேன். அன்றைய தினம், ஒரு மணி நேரத்தில் சென்றது நன்றாகவே இருந்தது. அலுவலக ஏசி ரிசப்ஷனில் அன்றைய செய்தித்தாள்களை ஒரு மணி நேரமாக வாசித்தது, நேர விரயமாகப் படவில்லை. இன்னொரு முறையும் செல்ல வேண்டி இருந்தது. அந்த சமயம், பத்தரைக்கு தான் கிளம்பு முடிந்தது. அன்று இரண்டரை மணி நேரம் ஆனது. ஸப்பா!! ஒரு மாதம் இருந்தால், இந்த ட்ராபிக் எல்லாம் பழகி ஜென் நிலைக்கு சென்றுவிடுவோம்.


நெடுஞ்சாலைப் பயணங்களில் எளிய மனிதர்களின் சாலையோரக் கடைகள் தான், ட்ரைவ் இன். ஊரின் சிறப்பிற்கேற்றாற்படி, நொங்கு, மாம்பழம், திராட்சை, பனங்கிழங்கு, பதனி, கருப்பட்டி, நவ்வாப்பழம், கொய்யாபழம், இளநீர் என ப்ரெஷ்ஷாக கிடைக்கின்றன. என்று வளர்ச்சி என்ற பெயரில் இவர்களையும் விரட்டியடிப்பார்களோ, தெரியாது.


2016 இந்திய விலைவாசி குறிப்பு - அடையார் ஆனந்த பவனில் மினி டிபன் எண்பது ரூபாய், காப்பி இருபத்து ஐந்து ரூபாய். 3ஜி 1 ஜிபி டேட்டா தோராயமாக 150 ரூபாய். பெங்களுர் - தூத்துக்குடி தனியார் பஸ் கட்டணம், தொள்ளாயிரம் ரூபாய். பஸ்ஸில் ப்ரீ வை-பை (வித் ஃபுல் ஆப் இன்ட்ரப்சன்ஸ்). மட்டன் கிலோ ஐநூறு ரூபாய். சிக்கன் நூற்றைம்பது ரூபாய். திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் அரை ப்ளேட் பிரியாணி, இருநூறு ரூபாய். லெவிஸ் ஷோரூமில் ஜீன்ஸ் ஸ்டார்டிங் ப்ரைஸ் இரண்டாயிரத்து ஐநூறாம். டாலரில் கால்குலேட் செய்தால் மட்டுமே கொஞ்சம் நிம்மதி வந்தது. பல பொருட்கள் அமெரிக்காவில் வாங்கிக் கொள்ளலாம் எனத் தோன்றும் அளவுக்கு இந்திய விலைவாசி இருந்தது. வளர்ச்சி!!


எலக்ஷன் ரிசல்ட் பற்றி நண்பர்களிடம் கேட்டபோது, பெரும்பாலோர் சொன்னது. ஆண்ட கட்சிகள் ஜெயிக்கக் கூடாது. மற்றவர்கள் கவனிக்கத்தக்க இடங்களில் வெல்வார்கள் என்று எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். ரிசல்ட் ஆச்சரியம் அளித்ததாகக் கூறினார்கள். நான் சென்ற பல வீடுகளில் மிக்ஸி, ஃபேனில் அம்மாவின் ஸ்மைல்லிங்கைப் பார்த்த போது, வெற்றியின் ரகசியம் கொஞ்சம் புலப்பட்டது. தமிழர்கள் நன்றி மறக்கவில்லை போலும். அவ்வளவு ஏன், ஒரு பெங்களூர் சாட் கடையில் கூட, இப்புன்னகையை அங்குள்ள டிவி, ஃபேனில் கண்டேன். கர்நாடகத்திற்குள்ளும் கூடிய விரைவில் வாரோம்.


எங்கெங்கு காணிலும் சிசிடிவி கேமராக்கள் மயம். தெருமுனை இருபதுக்கு  பத்து டீக்கடையில் நான்கு சிசிடிவி. ஜெராக்ஸ் கடையில் சிசிடிவி. மொபைல் ரீசார்ஜ் கடையில் சிசிடிவி. கல்யாண மண்டப சமையல் கட்டில் சிசிடிவி. தீவிரவாத கண்காணிப்பு என ஆரம்பித்தது, பெட்டிக்கடை திருட்டை கண்காணிப்பதில் வந்து நிற்கிறது. அடுத்து, அப்பா சட்டைப்பை திருட்டைக் கண்காணிப்பிலும் முக்கிய பங்கை ஆற்றும் நாள், வெகு தொலைவில் இல்லை. பிறகு, விசாரித்ததில், காவல் துறை ரெக்யூர்மெண்ட்டாம் அது. எனக்கென்னமோ, சிசிடிவி கம்பெனிக்களின் வேலை என்று தோன்றுகிறது.


வெயில் - இதைச் சமாளிக்க, யூட்டா நேஷனல் பார்க்கில் ஒதுங்க இடம் இல்லாமல் நடந்து சென்ற அனுபவத்தை நினைவுபடுத்திக் கொண்டேன். பரவாயில்லை என இருந்தது. மினசோட்டா குளிரை நினைத்தேன். ரொம்ப பரவாயில்லை எனத் தோன்றியது. வெளியில் செல்லும் வேலைகளை, காலையில் சீக்கிரம் தொடங்குவதும் அல்லது மாலையில் முடித்துக் கொள்வதும் உதவிகரமாக இருந்தன. மே மாத இறுதியில் ஆங்காங்கே மழை பொழிந்து, வெப்பத்தைத் தணித்தது.


ஓய்வு விடுமுறையில் தூங்குவது கூட ப்ரொடக்டிவ் வேலைதான். இருந்தாலும், ரொட்டின் பழக்கத்தில் தினமும் ஆறு, ஏழு மணிக்கே விழிப்பு தட்டியது. பல ஊர்களுக்கிடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருந்தது. பெரும்பாலும், தனியார் ஸ்லீப்பர் பேருந்துகளில் பயணம். வழக்கம் போல், ஆறு மணிக்கோ அல்லது அதற்கு முன்போ விழிப்பு வரும். நம்மூர் அழகை அதிகாலையில் ரசிக்கும் வாய்ப்பாக அது இருக்கும். பிறகு, ஊருக்கு சென்று சேரவும், அடுத்த வேலையைப் பார்க்கவும் சரியாக இருக்கும். பயணக் களைப்பு இருக்காது. ஒரே ஒரு முறை, கர்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்தேன். அது ஸ்லீப்பர் பஸ். இரவு மூணு மணிக்கு எழுப்பி விட்டார்கள். ஹெட்லைட் எரியவில்லையாம். அதனால், வேறு பஸ் மாறச் சொன்னார்கள். அது செமி ஸ்லீப்பர். ஏனோ, அதற்கு பிறகு, தூக்கம் வரவில்லை. வீட்டுக்கு சென்ற பிறகு அன்று மதியம் வரை தூக்கம். சரி, ரிடர்ன் செல்லும் போது, கர்நாடக அரசு பேருந்தை விட பெட்டரான தனியார் சேவை எது என்று விசாரித்ததற்கு, அரசு பேருந்தே பெட்டர் என்றார்கள். தமிழ்நாட்டு நிலை வேறாக இருக்கும்.


நான் முன்பு பெங்களுரில் இருந்த சமயம், அச்சமயம் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டு இருந்த பல கட்டுமான வேலைகள் முடிவுற்று, தற்சமயம் மக்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. புதிதாக பல வேலைகள் தொடங்கப்பட்டு, நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. சில பல   இடங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயுள்ளன. எம்.ஜி. ரோடு என்றாலே காதல் தேசம் படத்தில் காட்டப்படும் இளமையான சாலை தான், என் மனப்பதிவில் இருந்தது. இப்போது மெட்ரோ பில்லர்கள் சேர்ந்து உருமாறி போய், திருமணம் ஆகி இரு குழந்தை பெற்று விட்ட பெண்ணிடம், பழைய காதலியைத் தேடும் நிலைக்கு உள்ளாகிறது நமது கண்கள்.


உபெரும், ஓலாவும் இந்திய வாடகை சவாரி போக்குவரத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டாலும், ஆட்டோக்களுக்கான இடம் அதற்குரிய எக்ஸ்க்ளுசிவ் தேவைக்காக, இன்னமும் இருப்பதாக தெரிகிறது. மற்ற வகை டாக்ஸிக்களுக்கு தான் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. பொபைல் ஆப் டாக்ஸி சேவை இல்லாத இடங்களில், இது போன்ற சிறு உள்ளூர் சேவைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலும் தெரிந்த ட்ரைவர்களுக்கு போன் செய்து, அழைத்து செல்கிறார்கள். ஏர்போர்டில், இவ்வகையான ஆப் சார்ந்த சேவை வாகனங்களுக்கு தனி இடம் ஒதுக்கி உள்ளார்கள். சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்களுக்கு உள்ளே உற்று நோக்கினால், டாஷ்போர்டில் ஸ்மார்ட் போன் மாட்டப்பட்டு மேப் ஆப் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்.  கண்டிப்பாக, சார்ஜ் இல்லாமல் சார்ஜ் ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். ஸ்மார்ட்போனும், மொபைல் மேப்ஸ் ஆப்களும் சேர்ந்து, இந்தியாவில் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டத்திற்கான மார்க்கெட்டைப் பிடித்து வைத்திருக்கின்றன. முகவரியை இணைக்கும் சிக்கலை, கோ-ஆர்டினேட்ஸ் கொண்டு சமாளிக்கிறார்கள். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வண்டியை நிறுத்தி, ரோட்டில் செல்லும் யாரை வேண்டுமானாலும் வழி மறித்து, வழி கேட்டுச் செல்லும் வசதியை, எந்த ஜிபிஎஸ் சிஸ்டமும் கொண்டு வர முடியாது!!


மொபைல் போன் வளர்ச்சியால், எங்கும் எஸ்டிடி பூத்தே கண்ணில் படவில்லை. கூடிய விரைவில், ஸ்மார்ட்போன் புண்ணியத்தில் ப்ரவுசிங் செண்டர்களும் மூடப்படும். ப்ரிண்டிங், போட்டோ காப்பி தயவு தேவையிருக்கும். தெருவெங்கும் மொபைல் போன் சர்வீஸ் ரீசார்ஜ் கடைகள் என்றால், டூரிஸ்ட் தலங்களில் டிவைஸுக்கும் ரீசார்ஜ் கடைகள்.


முன்பு கையால் முற்றம் தெளித்த அம்மா, தற்சமயம் ஹோஸ் பைப்பில் தண்ணீர் அடிக்கிறார். போட்ட ரோடு மேலேயே ரோடு போட , சாலை உயர்ந்து கொண்டே போகிறது. சாலையில் இருந்து வீட்டின் உயரம், வீட்டின் வயதைக் காட்டும் அறிகுறியாகி விட்டது. வீட்டை இடிக்காமல் உயர்த்திக் கட்டும் டெக்னாலஜிக்கள் வந்துவிட்டதால், அடுத்து அதுதான் டிரெண்டாக இருக்கும். முன்பு, முன்பக்கம் இடம் விட்டு வீடு கட்டினார்கள். இப்ப, விட்ட இடங்களிலும் கான்கிரீட் கூரைகள்.


ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, பெருச்சாளி, யானை, பாம்பு, மயில் ஆகியவற்றை Zooக்கு செல்லாமல் சாலைகளிலோ அல்லது வீட்டிலேயே காண முடிந்தது. ஐம்பது ரூபாய்க்கு யானை சவாரி, வீட்டு படிக்கட்டில் கிடைக்கிறது. பெங்களூர் புறநகர் பகுதிகளில், பாம்புகள் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு, ஹாயாகச் சுற்றுகிறனவாம். பின்ன, அவுங்க ஏரியாவுல நாம வீடு கட்டுனா, என்ன செய்யும்? என்று கேட்டு விட்டு, கழற்றிப்போடப்பட்ட சட்டைகளை ஒதுக்கிவிட்டு செல்கிறார்கள் புறநகர்வாசிகள்.


ஊரில் யாரைப் பார்த்தாலும், சுகர், பிபி என்று மாத்திரையும், கையுமாக தான் சுற்றுகிறார்கள். அது எந்த லெவலில் இருந்தாலும், மாத்திரை போட்டுக்கொள்ளலாம் என்று இன்னொரு பக்கம் சுவையாகச் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்மூர் உணவு ரசனையைப் பற்றி சொல்லவா வேண்டும்? பதனியில் நொங்கைப் பிச்சுப் போடுவது, மாம்பழத்தை வெட்டி போடுவது, பரோட்டாவை சால்னாவில் ஊறவிடுவது, தோசைக்குள் கறியை ஒளித்து வைப்பது என அபாரமான சமையல் ரசனைவாதிகள்.


சனிக்கிழமை மதியம் ஆன்லைனில் ஒரு மொபைல் வாங்கினால், ஞாயிற்றுக்கிழமை காலை வந்து டெலிவரி செய்துவிட்டு போகிறார்கள். எதிர்பார்ப்புகளைச் சமயங்களில் எகிறியடித்து செல்கிறார்கள். எனக்கு நேர்ந்தது, விதிவிலக்குகளாக கூட இருக்கலாம். நல்ல விதிவிலக்குகளில் நாம் இருப்பது நமது அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான். இந்த டெலிவரி மக்கள், ஒரு குட்டி வேனில் எடுத்து செல்லக்கூடிய அளவுக்கு பொருட்களை முதுகில் சுமந்து செல்லும் வகையில் அமைந்த விநோத பைகளைத் தோளில் மாட்டிக்கொண்டு, டெலிவரி கங்காருங்களாக பைக்கில் சல்லென வந்து செல்கிறார்கள்.


எங்கும் இருப்பது போல், மக்கள் கால் வைக்கா இடங்களில் உச்சக்கட்ட அழகு மிச்சம் இருக்கிறது. அப்படி அழகான இடங்களில், ஆக்கிரமிக்க நினைக்கும் மனிதன் நுழைந்தவுடன் ஒரு சிலையை வைத்து விடுகிறான். இடங்கள் பிரபலமடைகின்றன. மனிதர்கள் படையெடுக்கிறார்கள். கடவுளுடன் சேர்ந்து, இயற்கையையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பிறகு, அந்த இயற்கை அழகை சீரழிக்க தொடங்குவது தான் துரதிஷ்ட நிகழ்வாகி போகிறது. இருந்தாலும், அந்த மிச்ச சொச்ச அழகே கண்களுக்கு பெருவிருந்தாகி போகிறது.


அவ்வப்போது, வழமையான அலுவல்களில் இருந்து விடுபட்டு, புது இடங்களுக்கு சென்று வருகிற பயணங்கள், சலிப்புற்ற வாழ்வில் புத்துணர்ச்சியைக் கொடுக்கவல்லது. அதேப்போல், வெளியூர்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு, சொந்த ஊருக்கு சென்று வருகிற அனுபவம், நமது மறந்த நினைவை மீட்டுவதாகவும், மறந்துக்கொண்டு இருக்கும் குறிகோள்களை நினைவுப்படுத்துவதாகவும் அமைகின்றன. பல ஆண்டுகளுக்கு கழித்து செல்பவர்களுக்கு, சொந்த ஊர் பயணம், அவர்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய திருப்புமுனைப் பயணமாகக் கூட அமையக்கூடும். நாம் தான் தினமும் கஷ்டப்பட்டு வாழ்கிறோம் அல்லது நாம் சுகவாசியாக வாழ்கிறோம் என்ற இருவேறு எண்ணங்களையுமே மறுபரிசீலனைக்கு உட்படும் தருணங்களை, இந்திய பயணங்கள் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

.

Sunday, November 21, 2010

பெங்களூர் புத்தகத்திருவிழா 2010

இந்த வருடம், புத்தகங்கள் வாங்கி நெடுநாளாகிவிட்டது. ஆனால், தினமும் ஏதேனும் புத்தகம் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். புத்தகங்கள் கடைவில் வாங்கவில்லையே தவிர, இரவலாக வாங்கி சில புத்தகங்கள் வாசித்தேன். இரவலாக வாங்கி வாசிக்கும் போது, ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. தவிர, சீக்கிரம் வாசித்துக்கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ஒரு வேலையை முடிப்போம்’ என்ற கணக்கிலேயே வாசிக்க வேண்டி இருக்கும். அதனால், அடுத்ததாக எப்போது புத்தகம் வாங்குவோம் என்ற ஆர்வத்தில் இருந்தேன்.

பெங்களூர் புத்தகக்கண்காட்சி, இந்த வருடமும் அதே பேலஸ் க்ரவுண்டில் தான். ஆனால், உள்ளூக்குள் வேறொரு இடம். வழக்கம்போல், பைக்கிற்கு 10 ரூபாயும், அனுமதி சீட்டுக்கு 20 ரூபாயும். புத்தகங்களை நெருங்குவதற்கே 30 ரூபாய் செலவாகிறது. உள்ளே புத்தகங்களை கண்டபோது, அவையும் விலை உயர்ந்து இருந்தன. இருந்தாலும், புத்தகங்களுக்கு என்று ஒரு மதிப்பு இருப்பதால், இந்த மதிப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஸ்டால் வாடகை, பதினைந்தாயிரம் என்றார்கள். யப்பா! சில ஸ்டால்களை கண்டபோது, பாவமாக இருந்தது.

ஒருமுறை ஒரு முழு ரவுண்ட் சென்றுவிட்டு, வாங்க நினைத்த புத்தகங்களை பார்த்து வைத்துவிட்டு, திரும்ப வந்து வாங்கிக்கொண்டேன். எப்போதும் இருப்பதை விட, இந்த முறை கன்னட புத்தகங்கள் அதிகம் இருப்பதாக தோன்றியது. ஆனாலும், இந்த முறையும் அதிகம் இருந்தது, ஆங்கில புத்தகங்களே. தமிழ் வழக்கம் போல. வானதி, அல்லயன்ஸ், கண்ணதாசன், விகடன், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு பதிப்பக புத்தகங்கள் கிடைத்தன.

நான் சென்றதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்திருக்கும் போல. அந்த மேக்கப்பில் சில பெண்கள் வெளியே சென்றுக்கொண்டு இருந்தார்கள். புத்தக அரங்கை விட்டு, வெளியே வரும் வழியில் ஊறுகாய், ஊதுபத்தி கடைகளும் வழக்கம்போல இருந்தன.

கண்காட்சி என்றாலே டெல்லி அப்பளம், பஜ்ஜி, பேல் பூரி, பானி பூரி, ப்ரெட் ஆம்லெட், பஞ்சு மிட்டாய், ரோஸ் மில்க், சோடா இல்லாமலா? இருந்தது, ரொம்பவும் காஸ்ட்லியாக.

---

இந்த முறை நித்தியானந்தாவின் புத்தகங்கள் கிடைக்கவில்லை. இரண்டு புது சாமியார்களை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய இஸ்லாமிய புத்தக ஸ்டால்கள் இருந்தன.

மத்தியில் ஒரு பெரிய இடத்தில், குரானை இலவசமாக கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் கொடுத்து தள்ளினார்கள்.

பகவத் கீதை தள்ளுபடி விலையில் கிடைத்தது. 1000 ரூபாய் மதிப்புள்ளது, 120 ரூபாய்க்கே என்று விற்றார்கள்.

குரான் இலவசமாகவும், பகவத் கீதை தள்ளுபடியில் கிடைக்க, பைபிள் நிலை என்னவென்று தெரியவில்லை.

---

பெரிதாக எதுவும் திட்டமிட்டு வாங்கவில்லை. வாசிக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் தோன்றிய புத்தகங்களை எல்லாம் கையில் எடுத்தேன். பெரும்பாலும், ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த புத்தகங்களையே என் கைகள் தேர்வு செய்தன. அனைத்துமே, இணையத்தில் ஏதோ ஒருவகையில் அறிமுகம் கிடைத்தவை.

இன்னொரு விஷயம், கொஞ்சம் பிரபலமான ஆசிரியர்களையே வாங்கினேன். எதுவுமே திட்டமிடவில்லை. மனநிலை அப்படி இருந்தது.

வாங்கிய புத்தகங்களை, ஒரு சின்ன அனாலிஸிஸ் செய்து பார்த்த போது, இப்படி வந்தது.



இன்னும் ஒரு லெவல் உள்ளே சென்றபோது, இப்படி வந்தது.



பெரும்பாலானவை, வாழ்க்கை வரலாறும், கட்டுரை வடிவிலான புத்தகங்களும். அதுவும், எப்படிப்பட்ட புத்தகங்கள் என்று பார்த்த போது, திரைத்துறையும் அரசியலுமே முன்னிலை வகித்தன. பயணமும், வணிகமும் சின்ன இடத்தை பிடித்ததே ஆறுதலான விஷயம். இதன் மூலம், எனது வாசிப்பு விருப்பங்கள் எனக்கே தெரிகிறது.

இனி அடுத்த முறை எப்படி வருகிறது என்று பார்ப்போம். சென்ற வருட வரலாறு, இங்கே.

என்னென்ன புத்தகங்கள் என்பதை இனிவரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

.

Sunday, August 15, 2010

பெங்களூரில் சோழர் கோவில் - சுதந்திர தின ஸ்பெஷல்

”சுதந்திர தினத்திற்கு என்னப்பா ப்ளான்?”

“காலையில் எந்திரிச்சு, குளிச்சு, கோவிலுக்கு போய் இந்தியா நல்லா இருக்கணும்’ன்னு வேண்டிக்க போறேன்!”

“என்னது?!!!”

---

அவன்கிட்ட காமெடியாக சொன்னாலும், கோவிலுக்கு போவது தான் ப்ளான். இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது, இது கண்ணில் பட்டது. இன்னும் தேடி பிடித்து வாசித்ததில், சோழர் காலத்து ஊர் என்றும், முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில்களில் ஒன்று என்றும் தெரிய வந்தது. இந்த பக்கங்களின் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை. இங்கே சில புகைப்படங்களைப் பார்த்த போது, ரொம்ப பழைய காலத்து கோவில் என்பது மட்டும் புரிந்தது.

கண்டிப்பாக பார்க்க வேண்டும் என கிளம்பிவிட்டேன்.

---

பெங்களூர் ஓசூர் ரோட்டில், பொம்மன்னஹள்ளி சிக்னலில் பேகூர் ரோட்டில் சென்றால், சிறிது தூரத்தில் பேகூர் என்ற கிராமம் வருகிறது. கிராமம் என்பதை விட, பெங்களூரின் ஒரு ஏரியா என்று சொல்லிவிடலாம். ஊரோடு ஊராக கலந்துவிட்டது.

ஒரு ஏரி இருக்கிறது. ஏரியின் பக்கத்தில் இந்த கோவில். ஏரியின் மறுபக்கம் ப்ளாட் போட்டு விற்று, வீடுகள் பெருகி விட்டது. இங்கே இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 1500 மேல்.



பழைய கோவிலுக்கு முன்பு, ஒரு புதிய கோவில் கட்டும் பணி நடந்துக்கொண்டிருந்தது. கோவில் சின்னது தான். வரிசையாக நிறைய லிங்கங்கள் இருந்தது. கோவிலுக்குள் ரொம்ப தாழ்வாரமாக இருந்தது. குனிந்துக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது. நிறைய சிற்பங்கள் பார்த்தேன். கூரையின் மேல்பக்கமும் சிற்பங்கள் இருந்தது.

பழைய கோவிலுக்கு என்றே ஒரு மணம் இருக்கிறது. அப்படி ஒரு மணத்தை சுவாசித்துக்கொண்டே சாமி கும்பிடும் அனுபவம், நவீன கோவில்களில் கிடைக்காது. பக்கத்தில் பழைய காலத்து கிணறு ஒன்றும் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு பேமிலி புளியோதரை கட்டி கொண்டு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இந்த கோவில் எனக்கு பிடித்து போய்விட்டது.

---

ஒரு நடுத்தர வயது தம்பதி கோவில் பூசாரியிடம் வந்து கோவிலைப் பற்றி கன்னடத்தில் ஏதோ கேட்டார்கள். ’வைப்ரேஷன்’ என்று நடுவே சில வார்த்தைகள் வந்து விழுந்தது. இப்படி ஒட்டுக்கேட்டதில் புரிந்தது. ‘இங்கே எங்கோ அமர்ந்து பூஜித்தால், உள்ளுக்குள் அதிர்வு ஏற்படுமாமே?’ என்பது அவர்கள் கேள்வி. அதற்கு பூசாரி சில இடங்களை சொல்லி அனுப்பினார்.

நான் கிளம்பி, கோவிலை ஒரு ரவுண்ட் வந்தேன். பின்பக்கத்தில் கோபுரத்தை பார்க்க நன்றாக இருக்க, கேமராவை எடுத்தேன். பொசிஷன் செய்து, க்ளிக் செய்ய, சுவிச் ஆப் ஆகிவிட்டது. திரும்ப, திரும்ப முயற்சி செய்ய, வெளிவந்த லென்ஸ் உள்ளே செல்லாமல், அப்படியே அணைந்தது. ”என்னடா இது! வைப்ரேஷனா இருக்குமோ?” என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்து சோதித்துப்பார்த்தால், பேட்டரி ப்ராப்ளம்.

---

ஒரு சுதந்திர தின தகவல்.

நாம் விசேஷமாக கொண்டாடும் சுதந்திர தினத்தை, எந்த விசேஷமும் இல்லாமல், திட்டமும் இல்லாமல், சட்டென்று நினைவுக்கு தோன்ற, ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சொன்னது மவுண்ட்பேட்டன். மதராஸப்பட்டினத்தில் பார்த்திருப்பீகளே?

“அதிகார மாற்றம் எப்போது நடைபெறவுள்ளது?”

“கூடிய விரைவில்”

”முக்கியமான இந்த நிகழ்வுக்கு ஒரு தேதி குறித்திருப்பீர்களே?”

“ஆமாம்” உண்மையில் இல்லை!

“எந்த தேதி?”

ஐப்பானை வெற்றிக்கொண்ட 15ஆம் தேதி மவுண்ட் பேட்டனுக்கு நினைவுக்கு வந்தது.

“ஆகஸ்ட் 15”

அவ்வளவு தான். நாம் வருடா வருடம் கொடியேற்றி மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

நன்றி : மருதனின் “இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு”.

---

ஒரு சுதந்திர தின கருத்து.

இந்தியா என்ற அமைப்பின் மேல் நம்பிக்கை இல்லாமல், ஏன் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என எழுப்பப்படும் கேள்வி பார்வையில் பட்டது.

வாழ்க்கையில் கொண்டாடப்படும் நிகழ்வுகள் எதுவும் மறுக்கப்படக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவை இவர்கள் வெறுப்பதற்கான காரணங்கள் எதற்கும் இந்தியா என்ற அமைப்பு அடிப்படையாக இருப்பது கிடையாது. காரணம் - சில அரசியல்வாதிகள். அதிகாரிகள். அவர்களை மாற்றுவதற்கான வழியை தான் காணவேண்டுமே ஒழிய, இந்தியாவை எதிர்ப்பதற்கான வழியை அல்ல.

அன்பு, வெறுப்பு - இதில் அன்பு வழியை தேர்ந்தெடுத்தால், எல்லைக்கோடுகள் மறையும். வெறுப்பு வழி, மேலும் பிரிவினையை வளர்க்கும். சிறு சிறு துன்பங்கள் நேர்ந்தாலும், நம்பிக்கையுடன் அன்பு வழியை தேர்ந்தெடுப்போம். வேறுபாடுகளை குறைப்போம். களைவோம்.

துண்டு, துண்டாக சிதறாமல், ஓர் மனித இனமாக மாற கனவு காண்போம்.

.

Monday, July 5, 2010

பாரத் பந்த் - இன்று பதிவு கிடையாது!

பெட்ரோல் விலை உயர்வை முன்னிட்டு, எதிர்கட்சிகளால் அறிவிக்கப்பட்டு, மக்களால் கொண்டாடப்பட்டு வரும் பாரத் பந்த்தை முன்னிட்டு இன்று பதிவு எதுவும் கிடையாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

அவ்வளவுதான் சொல்ல திட்டமிட்டு ஆரம்பித்தாலும், இன்னும் சில விஷயங்கள்...

பாஜக அழைப்புவிட்டிருக்கும் பந்த் என்பதால், பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் பந்த் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. பெங்களூரில் மெடிக்கல் ஷாப் தவிர இதர கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பேச்சிலர் ரூம்களில் கஷ்டப்பட்டு ஹோட்டல் கண்டுபிடித்து, ரகசியமாக பார்சல் வாங்கி உணவருந்தினார்கள். கிச்சன் வசதி இல்லையென்றால் இவர்களுக்கு வேலை நிறுத்தத்துடன் உண்ணாவிரதமும்.

காலையில் சொற்ப அளவில் பஸ்கள் ஓடிக்கொண்டிருந்தது. மதியத்திற்கு மேல் ஒன்றையும் காணவில்லை.



ஒரு நல்ல விஷயம். எங்குமே சிக்னல் இல்லை. ஞாயிற்றுக்கிழமை கூட ஓயாமல் வேலை பார்க்கும் சிக்னல்கள் இன்று ரெஸ்ட் எடுத்தது. ஆரஞ்ச் விளக்கு மட்டும் கண்ணடித்துக் கொண்டிருந்தது. மையபகுதியான எம்.ஜி. ரோடு பக்கமிருக்கும் சிக்னல்கள் மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது.

ஒரு இடத்தில் சிகப்பு கொடியுடன் ஒரு கோஷ்டியும், இன்னொரு இடத்தில் காவி கொடியுடன் ஒரு கோஷ்டியும் ஆளே இல்லாத ரோட்டில் ஆர்ப்பாட்டிக்கொண்டிருந்தனர்.

போலீஸ் ஆங்காங்கே நின்று கண்காணித்துக்கொண்டிருந்தனர். யாராவது பிரச்சினை செய்கிறார்களா? என்று பார்த்தார்களா அல்லது யாராவது கடையை திறக்கிறார்களா? என்று பார்த்தார்களா என்று தெரியவில்லை.

ஆளே இல்லாத ரோட்டில் பைக் ஓட்டுவது சுகம். அதிலும் இன்று சிறிது நேரம் மழை தூற... வாவ்!

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தம். பைக் வேலையை நிறுத்திவிட கூடாதென்று, பந்த் என்றும் கண்டுக்கொள்ளாமல் பெட்ரோல் போட வேண்டியிருந்தது. மடிவாளாவில் இருந்த பெட்ரோல் பங்க் மட்டும் திறந்திருந்ததை கண்டேன்.

கல்வி நிலையங்களுக்கும், பெரும்பாலான நிறுவனங்களும் இன்று விடுமுறை என்று வெள்ளியன்றே அறிவித்துவிட்டார்கள். மீதி நிறுவனங்கள், வாரயிறுதியில் மெயில் அனுப்பியும், மெசேஜ் அனுப்பியும் லீவு விட்டார்கள். சில நிறுவனங்கள் முக்கியமான, தேவையான இன்ஜினியர்களை ஞாயிறு இரவே ஆபிஸ் வந்து படுக்க சொல்லிவிட்டார்கள். பந்த் இந்திய அளவில் தானே? உலகளாவிய வேலை நிறுத்தமாக இருந்திருந்தால், அவர்களுக்கும் விடுமுறை கிடைத்திருக்கும்.

விடுமுறை என்று மகிழ்ச்சியாகவும் இருக்க முடியவில்லை. வரும் சனிக்கிழமை போக வேண்டுமாம். அப்புறம் என்ன வேலை நிறுத்தம்? வேலையை தள்ளி வைத்தல் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வீட்டில் இருந்து என்ன செய்ய? தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி பந்த்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால், சன் டிவி, கலைஞர் டிவி, கே டிவிக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளோ, சிறப்பு திரைப்படங்களோ இல்லை.

ஏடிஎம்களுக்கு வேலை நிறுத்தம் இல்லையென்பதால், பணமெடுக்க பிரச்சினை இல்லை. இம்மாதிரி எவ்வளவுக்கெவ்வளவு மனித வேலையை தானியங்கியாக மாற்றுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு வேலை நிறுத்ததால் வரும் பாதிப்பு குறையும்.

இன்று மாலை, பந்த் மாபெரும் வெற்றி என்று சொல்லுவார்கள். ஆனால், பெட்ரோல் விலை? அதே தான். லிட்டர் 58 ரூபாயும் சில்லறைகளும்.

.

Wednesday, May 26, 2010

பெங்களூர் டைம்ஸ்

பசங்களை விட பொண்ணுங்க நல்லா படிப்பாங்க என்பது உலக நியதியாகிவிட்டது. பெங்களூரிலும் தான். இங்கு பத்தாவதிற்கு பிறகு பியுசி. இதற்கான கட்-ஆப் மார்க்கை கல்லூரிகள் முடிவு செய்வதற்கு, எங்கு ரூம் போட்டு யோசித்தார்கள் என்று தெரியவில்லை. பையன்களை விட பொண்ணுகளுக்கு கட்-ஆப் மார்க் அதிகம் வைத்துவிட்டார்கள். ஒரு பெண்ணை விட, ஒரு பையன் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவனுக்கு இடம் கிடைத்துவிடும். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பசங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க மாட்டேங்கிறதாம்.

பசங்களா, மார்க் அதிகம் வரலை’ன்னு வருத்தப்பட வேண்டாம். உங்களுக்காக, திட்டமிட இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

---

பெங்களூர் மடிவாளா ஐயப்பன் கோவில் அருகே அண்டர் பாஸ் அமைக்கிறார்களாம். திடீரென அந்த வழியை அடைத்துவிட, இன்று அந்த ஏரியா முழுக்க ட்ராபிக் ஜாம். இரண்டு கிலோமீட்டரை சர்வ சாதாரணமாக இரண்டு மணி நேரம் எடுத்துக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு வழிப்பாதையாக இருந்த மடிவாளா மார்க்கெட் சாலையை, இரு வழியாக மாற்றும்போதே மைல்டாக டவுட் வந்தது.

இன்று க்ளியர் செய்து விட்டார்கள். அந்த பக்கம் போகும் ஐடியா இருந்தால், மாற்றுக்கொள்ளுங்கள். குறைந்தது, மூன்று மாதத்திற்கு.

---

இந்த வாரயிறுதியில், பெங்களூரில் எஸ்.வி.சேகரின் ‘ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி’ நாடகமும், ’வால் பையன்’ நாடகமும் நடைபெறுகிறது.

மேலும் விவரங்கள் மற்றும் டிக்கெட் புக் செய்ய, இங்கு செல்லவும்.

.

Wednesday, April 7, 2010

பெங்களூரில் கிரேஸி மோகன்

வருகிற மே மாதம், 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கிரேஸி மோகனின் இரு நாடகங்கள் நடைபெற இருக்கிறது.



மதியம் மூணு மணிக்கு ஜூராசிக் பேபிவும், இரவு ஏழு மணிக்கு சாக்லேட் கிருஷ்ணாவும்.

மற்ற தகவல்களுக்கும், டிக்கெட் புக் செய்யவும், மேலே உள்ள லிங்க்களை க்ளிக் செய்யவும்.

நான் போன வருஷம், எஸ்.வி.சேகர் நாடகம் பார்த்த அனுபவம் இங்கே.

.

Friday, March 19, 2010

பெங்களுர் தேர்தல்

பெங்களுரில் விரைவில் மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது. ஏற்பாடு என்றது, தேர்தல் கமிஷன் செய்வதை சொல்லவில்லை. வேட்பாளர்கள் பல விஷயங்கள் செய்து வருகிறார்கள். உதாரணமாக, நேற்று முன்தினம் கர்னாடகாவில் ஒரு விசேஷம். உகாதிக்கு அடுத்த நாள், கறி சோறு சமைத்து சாப்பிடுவார்களாம். அதனால், சில இடங்களில் வீட்டுக்கு வீடு மட்டனும், சிக்கனும் காலையிலேயே வந்திருக்கிறது.

இது ஒருபுறம் என்றால், இளைஞர்களை வளைத்துப்போட, ஐபிஎல் டிக்கெட்டுகளை சில வேட்பாளர்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆண்களுக்கு சரக்கு, பெண்களுக்கு சேலை என்று ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தேர்தல் பரிசு. எல்லா ஊரும் ஒரே மாதிரி தான் இருக்கு.

---

ஜனதா தளம், தனது வேட்பாளர்களுக்கு ‘பிரச்சாரம் செய்வது எப்படி?’ என்று வகுப்பு நடத்தியிருக்கிறது. ஒழுங்காக சட்டையில பட்டன் போட்டுட்டு போ, படிச்சவன் இருக்குற இடத்துல வெடி போடாதே; அது உனக்கே வெடிச்சிரும், எவன் என்ன திட்டுனாலும் சிரிச்சிட்டு வந்துரு என பல அரசியல் பாலப்பாடங்களை நடத்தியிருக்கிறார்கள் குமாரசாமியின் தலைமையிலான கட்சியின் தலைவர்கள்.

ஏதாவது பதிப்பகம் “30 நாளில் அரசியல்வாதி ஆவது எப்படி?”, “நீங்களும் பிரச்சாரம் செய்யலாம்” போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட்டால், இவர்களின் சிரமத்தை குறைக்கலாம்.

---

தேர்தல்’ன்னா போதும். எங்கிருந்து தான் இவ்ளோ பவ்யம் வருமோ?



நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா.

.

Thursday, February 11, 2010

பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஹைவே - ஜாக்கிரதை

இந்த பதிவில் நண்பர் குப்பன்.யாஹூ, பகலில் எடுத்த புகைப்படங்களை போடுமாறு கேட்டிருந்தார். அவருக்காக சில படங்கள்... எச்சரிக்கை இறுதியில்...



அறுபதிலேயே சென்றாலும், பத்து கிலோமீட்டரை பத்து நிமிடத்திற்குள் கடந்துவிட முடிகிறது. ஆனால், அதற்கே போர் அடித்துவிடுகிறது.



கீழே சாலையில் செல்லும்போது, அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஆனாலும், குறுக்கே செல்லும் நாய், வழியை மறித்துக்கொண்டு ஓடும் மனிதர்கள், ட்ராபிக் சிக்னல், சாலையோர கடைகள், விளம்பர பேனர்கள் என சுவாரஸ்யமாக பல விஷயங்களை கடந்து செல்வோம்.



ஆனால், மேலே செல்லும்போது ஒரே பொசிஷனில் அப்படியே போவதால், பத்து நிமிடம் ஆனாலும் ரொம்ப நேரம் ஆவது போல் தெரிகிறது. காரில் செல்பவர்களுக்கு, எந்த இடத்தில் சென்றுக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிவது கடினம்.



டோல் கேட்டில் இன்னமும் வேலை நடந்துக்கொண்டிருப்பதால், இதுவரை கட்டணம் வசூலிக்கவில்லை.



இது கடந்த வாரம் நடந்த ஆக்ஸிடண்ட். சரியான விபரங்கள் தெரிவில்லை. பைக் இருக்கும் நிலையை கண்டால், ஓட்டியவர் என்ன ஆகியிருப்பார்?



சாதாரணமான சாலையில் பைக்கில் இருந்து கீழே விழுந்தால், அதிகபட்சம் எலும்பு முறிவோடு முடிந்துவிடும். இங்கோ, மொத்தமும் முடிந்துவிடும்.


பெரிதாக்கி காண படத்தின் மீது க்ளிக்கவும்.

.

Friday, January 22, 2010

பெங்களூரில் இந்தியாவின் நீள ’ஹை’ ஹைவே

இது போன வருடம் இந்நேரம் எழுதியது. இதோ இன்று இந்த பாலத்தை (Bangalore Elevated National Highway) திறந்துவிட்டார்கள். பாலு திறக்க வேண்டியது. ம்ம்ம். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல்நாத் துவங்கிவைக்க வேண்டியதாகிவிட்டது.



தேசிய நெடுஞ்சாலை அமைந்த இந்தியாவின் நீளமான பாலம் இது தான் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது - இந்தியாவின் நீளமான பாலம். ஆனால், அது தேசிய நெடுஞ்சாலை அல்ல.



2008 செப்டம்பரில் முடியவேண்டிய பாலம். 2009 ஏப்ரலில் திறக்கப்படும் என்று நீட்டிக்கப்பட்டு ஒரு வழியாக இன்று திறந்துவிட்டார்கள். கட்டி முடிக்க ஆன செலவு அதிகமில்லை. 776 கோடி தான். கூடுதலாக 100 கோடி ஆனது என்கிறார்கள். அவதார் என்கிற மூன்று மணி நேரம் ஓடுகின்ற பொழுதுபோக்கு சினிமா எடுக்கவே 1200 கோடி ஆகும் எனும்போது, நாட்டிற்கு தேவையான சாலைக்கு 800 கோடி என்பது ஓகே.



இந்த பாலத்தில் மடிவாளா தாண்டி பொம்மன்னஹல்லியில் ஏறிவிட்டோம் என்றால் ஒரே மூச்சில் பத்து கிலோ மீட்டர் தள்ளி எலக்ட்ரானிக் சிட்டியில் இறங்கிவிடலாம். ஓசூர் செல்லவேண்டி இருந்தால், இந்த பாலத்திற்கு பிறகும் எங்கும் நிற்க வேண்டியதில்லை. பொம்மசந்த்ரா, சந்தாபுரா, அத்திப்பள்ளி என தொடர்ந்து இருக்கும் பாலங்களால் நிமிடங்களில் ஓசூர் வந்து சேர்ந்துவிடலாம்.



இரவு பாலம் முழுக்க தகதகவென வெளிச்சத்தில் ஒளிர்கிறது. இன்று முதல்நாள் என்பதால், சீரியல் செட் வேறு. ஒரு போஸ்ட்டில் மூன்று விளக்குகள். மார்கழி மாத பனியில், காலை நேரங்களில் இந்த வெளிச்சம் தான் சாலையை காட்டுகிறது.



பெங்களூர் சாலைகள் எல்லா இடங்களிலும் ஏறி ஏறி இறங்கும். அதன் மீது கட்டப்பட்ட இந்த பாலமும் ஏறி ஏறி இறங்குகிறது.



நடுவே பார்க்கிங் செய்ய ஒரு இடம் இருக்கிறது. இன்று அது பிக்னிக் ஸ்பாட் போல இருந்தது. சிலர் நண்பர்களுடனும், சிலர் கேர்ள் பிரண்ட்ஸ்களுடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.



அதிகப்பட்சம் 80 கிலோமீட்டர் ஸ்பீடில் போகலாம் என்கிறார்கள். ஆனால், மக்கள் பறக்கிறார்கள். இந்த படத்தை பாருங்கள்.



தகவல் சொல்ல எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேகள், வாகன ஓட்டத்தை கண்காணிக்க கேமராக்கள், ஏதேனும் வண்டி நின்று விட்டால் மேலிருந்து கீழிறக்க கிரென் என ஏற்பாடுகள் பல.



டோல் கட்டியே இந்தியன் நொந்துருவான் போல இருக்கே? இந்த பாலத்தில் போகவும் கட்டணம் தான். பைக்கிற்கு பத்து, காருக்கு முப்பது. ஒரு மாசத்திற்கு என்று பாஸ் வாங்கிக்கொள்ளலாம். இது ஸ்மார்ட் கார்டில் வருகிறது. எலக்ட்ரானிக் டோலும் இருக்கிறது. அதாவது உங்கள் காரின் உள்ளே ஒரு சின்ன சாதனத்தை நிறுவிவிடுவார்கள். நீங்கள் கேட் பக்கம் வரும்போதே, கேட்டில் இருக்கும் இன்னொரு சாதனம் உங்கள் காரில் உள்ள சாதனத்துடன் தொடர்புக்கொண்டு அதற்கேற்றாற்போல் கேட்டை திறந்துவிடும்.

மேலும் டீட்டெயில்ஸ் இங்கே.

ஓசூர் போறவங்க, மேலே போனாத்தானே காசு’ன்னு கீழே போனாலும், அத்திப்பள்ளியில் பிடுங்கிவிடுவார்கள். ஆனால், நல்லவேளை அங்கு பைக்கிற்கு கிடையாது.



இன்றும், இன்னும் சில நாட்களும் டோல் கிடையாது. எல்லாரும் ஜாலியா ஏறி இறங்கிட்டு இருக்காங்க. வழக்கமான சாலையாகத்தான் மேலே பாலத்தில் தெரிந்தாலும், ஓரத்தில் போகும்போது, பக்கமிருக்கும் உயர்ந்த கட்டிடங்களால், நாம் இருக்கும் உயரம் உணர்ந்து, ஒரு கிறுகிறு உணர்வு வரத்தான் செய்கிறது.

படங்களை பெரிதாக காண க்ளிக்கவும். ஏதேனும் உயரமான பில்டிங் மேலிருந்தோ, ஹெலிகாப்டரில்(!) இருந்தோ எடுத்தால், இன்னும் அருமையாக வரும்.

ஏர்போர்ட் ரன்வே என்று நினைத்து, பைலட் யாராவது ப்ளைட்டை இங்கு இறக்கிவிடக்கூடாது.

.

Sunday, November 22, 2009

பஞ்சரான டயரும் பெங்களூர் புத்தகத் திருவிழாவும்

இந்த முறை புத்தகத்திருவிழாவில் கலந்துக்கொள்ள ஏகப்பட்ட தடைகள். பத்து நாட்களாக நடந்து கொண்டிருந்தாலும், கடைசி நாளில் தான் போக முடிந்தது. அன்றும் பல தடைகள்.

பைக்கில் என் நண்பனுடன் கோரமங்களா ஃபோரமை கடக்கும்போது, வண்டி லம்ப தொடங்கியது. நிறுத்தி வீலை பார்த்தால், புஸ். என்ன பண்ணலாம்? கொஞ்சம் யோசித்துவிட்டு, வண்டியை கோரமங்களாவிற்குள் உருட்ட தொடங்கினோம். ஆட்டோகாரர்களிடம் பஞ்சர் கடையை கேட்ட போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் கையை காட்டினார்கள். ஆனால், விரைவிலேயே ஒரு இன்ஸ்டண்ட் பஞ்சர் கடையை கண்டுப்பிடித்தோம்.



அடையார் ஆனந்த பவன் பக்கத்தில், ஒருவர் மரத்தடியில் ஒரு பெட்டியுடன் அமர்ந்திருந்தார். பெட்டிக்குள் பஞ்சர் பார்க்கும் உபகரணங்கள். ஆஹா! நமக்குன்னு பஞ்சர் பார்க்க, இப்படியெல்லாம் வழி செஞ்சு வச்சிருக்காங்களே’ன்னு அவர் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. அது கொஞ்ச நேரம் தான் நிலைத்தது.

டயரை கழற்றும் முன்பே, எனக்கு இன்று கண்டிப்பாக ட்யூப் மாற்றவேண்டியிருக்கும் என்று தீர்மானமாக தெரியும். ஏனெனில், பல முறை பஞ்சர் போடப்பட்டு எச்சரிக்கைக்கு உள்ளாகியிருந்தேன். ஒவ்வொரு முறையும் வேறு எங்காவது நல்ல ட்யூப் வாங்கி மாற்றலாம் என்றிருந்தேன். டயரை கழற்றி ட்யூப்பை பார்த்தால், பேரதிர்ச்சி. எனக்கல்ல.



ஒரு ஆணி குத்தி, அதன் பிறகு வண்டியை உருட்டியதில் ட்யூப் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.



”ட்யூப் இன்னைக்கு (சண்டே) கிடைக்குமா?”

”கிடைக்கும். நான் வாங்கிட்டு வந்திருவேன்.”

“எவ்ளோ?”

“கடையில 290. நான் 260க்கு வாங்கி தாரேன்”

யம்மாடி. நான் கேள்விப்பட்டவரை 100-150 தான் இருக்கும். வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோரமங்களாவில் இருக்கும் நண்பருக்கு போன் செய்தேன். அவர் பக்கத்திலேயே ஒரு கடையை சொன்னார். அது பூட்டிக்கிடந்தது. கொஞ்சம் நடந்ததில் இன்னொரு கடையை கண்டுப்பிடித்தேன். 140க்கு வாங்கி கொடுத்து, பழையப்படி கிளம்பினோம்.

---

புத்தக கண்காட்சி நடக்கும் மைதானம் அருகே இருக்கும் சாலை எங்கும் வாகன நெரிசல். இவ்வளவு மக்களும் புத்தகம் வாங்கவா வந்தார்கள்? என்றால் இல்லை.

அதே சாலையில் கொஞ்சம் தொலைவில் இருக்கும் தியேட்டரில் இருந்து வந்த மக்கள் வெள்ளம் கொஞ்சம். அப்படி என்ன படம் என்றால், 2012. உலகம் அழியிறத பார்க்க, எவ்ளோ ஆர்வம்? அதுவும் எவ்வளவு குதூகலத்தோடு, மகிழ்ச்சியோடு பார்த்துவிட்டு வருகிறார்கள்?

அந்த மைதானத்தில் பக்கத்தில் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒன்று, ஆட்டோ எக்ஸ்போ. இன்னொன்று, ஒரு நடன நிகழ்ச்சி.

அது ஒரு கன்னட சானலில் நடைபெற்றுக்கொண்டிருந்த நடன நிகழ்ச்சியின் இறுதி போட்டி. நடுவர் - பிரபுதேவா. என் நண்பனிடம் விளையாட்டுக்கு கேட்டேன்.

“நாமளும் பார்க்க போவோமா?”

அவன் ஆவலுடன் கேட்டது, “நயன்தாராவும் இருப்பாங்களா?”

---

நான் போன நேரத்திற்கு புத்தகக்கண்காட்சியில் நல்ல கூட்டம். நுழைவு கட்டணம் - 20 ரூபாய். ஓவர் தான். இருந்தாலும், பார்க்கிங்கிற்கே சில இடங்களில் அவ்வளவு கொடுக்கவேண்டி இருப்பதால், ஒகே. ஒருமுறை எல்லாக்கடையையும் பார்த்துவிட்டு பிறகு வாங்க துவங்கலாம் என்று முடிவு செய்தோம்.



நிறைய சாமியார்கள் கடை போட்டிருந்தார்கள். எல்லா மொழிகளிலும் சாமியார்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். கொஞ்சம் புத்தகங்களை வைத்துக்கொண்டு, மற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தது.

ஒருமுறை நான் எழுதிய கதைக்கு முரளிகண்ணன் பின்னூட்டத்தில் ஓ. ஹென்றியின் கதை போலுள்ளது என்று பாராட்டியிருந்தார். யார்ரா அது? நம்மள மாதிரி (டேய்...) சரி, நாம யாரு மாதிரியோ எழுதுறோமாமே, அவரு யாரு? அவரு கதை எப்படி இருக்கும்’ன்னு படிக்க ஒரு ஆர்வம் இருந்தது. அவருடைய அனைத்து கதைகளும் கொண்ட புத்தகம் ஒன்று மலிவு விலையில் ரூ. 150க்கு வைத்திருந்தார்கள். கவனித்துக்கொண்டேன்.

குழந்தைகளை கவரும் வகையில் தான் நிறைய புத்தகக்கடைகள் இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட, நிறைய கன்னடப்புத்தகக் கடைகளும் இருந்தன. ஒரு ரவுண்ட் வருவதற்குள்ளேயே, கால் வலிக்க ஆரம்பித்தது. நேரமும் நிறைய போயிருந்தது. அதனால், புத்தகங்கள் வாங்க துவங்கினேன். வாங்க நினைத்திருந்த பல புத்தகங்கள் மறந்து போய்விட்டது.

கிரடிட் கார்டு வசதி இல்லாத கடைகளுக்காக, ஒவ்வொரு கடைவரிசையின் ஆரம்பத்திலும் ஒரு டேபிளில் கிரடிட் கார்ட் மெஷினுடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஸ்வைப் பண்ணியபிறகு, கடை பெயருக்கு பணத்தை வரவு வைத்துக்கொண்டார். கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் மெஷின் இருந்தும், நான் போன நேரம் அது வேலை செய்யவில்லை.

லேட்டாக சென்று, மெதுவாக எல்லாக்கடையையும் சுற்றி பார்த்து, பிறகு வாங்கி வெளியே வந்ததால், நேர நெருக்கடியின் காரணமாக இரண்டே இரண்டு மிளகாய் பஜ்ஜியுடன் முடித்து கொண்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு செல்ல செல்ல, வாங்க மறந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. சரி, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.

.

Sunday, August 30, 2009

பெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்

கடந்த ஒரே வாரத்தில், பெங்களூரில் இரு சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தங்கள் நிறுவனங்களின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். இரண்டுமே இந்திய முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் - எச்.சி.எல். & விப்ரோ. இதைப் பற்றி இரண்டு நிறுவனங்களுமே, எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எச்.சி.எல். அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலை பற்றி காவல்துறையிடம் கூட தெரிவிக்கவில்லை. மருத்துவமனை சொல்லி, காவல்துறை தெரிந்து கொண்டு இருக்கிறது. இரு நிறுவனங்களும், இது பற்றி எந்த அறிக்கையோ, விளக்கமோ வெளியிடவில்லை. தனியார் நிறுவனங்களின் பொது அம்சங்கள் இவை.

இந்த தற்கொலைகளுக்கு வேலை இழப்பு காரணமாக இருக்கலாம் என்று ஊகங்கள் வெளிவருகிறது. இந்த தற்கொலைகளுக்கான காரணம் எதுவாக இருந்தாலும், இன்னமும் நிறைய தற்கொலைகள் வேலை இழப்பினால் நடக்கிறது என்பது உண்மை.

---

முதலில் எந்த பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கோழைகள் எடுக்கும் தைரியமாக முடிவு என்று தற்கொலையைக் கூறுவார்கள். வேலை இழப்பிற்கு உயிர் இழப்பது கோழைத்தனமானது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் கூட.

இந்த வாழ்க்கை வாழ்வதற்கானது. வேலை அதில் ஒரு அங்கம். வாழ்க்கையை வசதியாக வாழ வழி செய்து கொடுப்பது வேலை. அவ்வளவே. இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொன்று. தற்போது, இந்த ஐடி துறை மேலேயெழும்பி வருவதாகவே கூறுகிறார்கள். வேலை இழந்தவர்கள், ஓரிரு மாதங்களில் வேலை பெற்று விடுகிறார்கள். அப்படியே, இந்த துறை விழுந்தாலும், வேறு துறைகள் இருக்கிறது. எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது.

இதற்காக எதற்கு உயிர் விட வேண்டும்?

---

நல்ல காலத்திலேயே, வேலைக்காக பிழிந்தெடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள், இந்த நெருக்கடிக்காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பல கொடூரமானவை. இவை, ஒரு சிலரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி சித்ரவதைக்குள்ளாக்கிறது என்பது உண்மை. சரியான ஆறுதலும், துணையும் இல்லாத பட்சத்தில், தற்கொலைக்கு தூண்டப்படும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றது.

நம் நாட்டின் பொருளாரத்தை இயக்குவது பங்கு சந்தை. ஏறத்தாழ இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பங்குசந்தையில் பணம் திரட்டப்பட்டு நடத்தப்படுபவையே. ஒரு நிறுவனத்தின் ஏற்றமும் தாழ்வும் சந்தையை பாதிக்கிறது. சந்தையை பாதிக்கும் விஷயங்கள் அனைத்தும், நிறுவனங்களை பாதிக்கிறது. அதனால், நிறுவனங்கள் பங்குசந்தையை சார்ந்தே இருக்கிறது. அவரவர் நிறுவன பங்கு மதிப்பின் மேல் கவனம், நிறுவனங்களுக்கு எப்போதும் உண்டு.

ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பை, பாதிக்கும் விஷயங்களில் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாட்டை விட, சமயத்தில் நிறுவனத்தை பற்றிய செய்திகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறுவனம் புது ஆர்டர் பெற்றால், மதிப்பு உயரும். ஆர்டர் இழந்தால், மதிப்பு குறையும்.

ஊழியர்களை பணி நீக்கம் செய்தால்? நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை என்று சந்தையில் அது பிரதிபலிக்கும். இந்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தான், நிறுவனங்கள் வேறு வழிகளை பயன்படுத்துகிறது.

---

உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது, வணிக வாய்ப்புகள் குறைகிறது. வேலைகள் குறைகிறது. ஆட்குறைப்பு அவசியமாகிறது. பணி நீக்கம் என்று சொல்லி, நல்ல பெயரை இழக்காமல், ஊழியர்களை அவர்களாகவே வேலையை விட்டு விலகுமாறு சொல்லி, நிறுவனத்திற்கு இருக்கும் பெயரை பாதுகாக்கிறார்கள்.

விலக மறுத்தால்?

1) நாங்களே உன்னை வேலையை விட்டு நீக்குவோம்.
2) தவிர, உனக்கு வேலைக்கான அனுபவ சான்றிதழ்களும், மற்ற சான்றிதழ்களும் ஒழுங்காக வந்து சேராது.
3) தவிர, சம்பள பைசல் ஒழுங்காக இருக்காது.
4) தவிர, வேறு வேலையில் சேர முடியாதபடி, மத்திய தகவல் மையத்தில் உன் பெயருக்கு கரும்புள்ளி வைத்து விடுவோம்.
5) நீயாகவே போனால், எல்லாம் ஒழுங்காக வந்து சேரும்.

வேறு வழியில்லாமல், ஊழியர்கள் வேலையை விட வேண்டியிருக்கிறது, அவர்களாகவே விடும்படி. நிறுவனங்கள், இந்த மந்தநிலையிலும் யாரையும் வேலையை விட்டு நீக்கவில்லை என மார்தட்டி கொள்ளும் சூழலை வைத்துக்கொள்கிறார்கள்.

துறை உச்சத்தில் இருக்கும் போது, ஓங்கும் ஊழியர்களின் கைகள், இச்சமயம் மேலெழும்புவதில்லை. அடங்கி, அமைதியாக ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடுகின்றன.

---

இதனால் மனமொடிந்து செய்யப்படும் தற்கொலைகளும், நிறுவனங்கள் செய்யும் கொலைகளாகவே கருதப்பட வேண்டும். நிறுவனங்கள் மூடிய கதவினுள் செய்யும் இக்கொடுமைகளை பற்றி தெரிந்தும், ஏதும் கேள்வி கேட்காமல், எதிர்ப்பை பதிவு செய்யாமல், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற ஊழியர்களும், இதற்கு மறைமுகமாக உடந்தையாகிறார்கள். அவரவருக்கு ஏதும் நிகழாதவரை, ஏதும் தோன்றுவதில்லை.

நிறுவனத்தின் சாதனைகளை பங்கு போட்டுக்கொண்டு, லாபங்களை பங்கு போட்டுக்கொண்டு, வசதிகளைப் வசதியாக பெற்றுவரும் ஊழியர்கள், இந்த உயிர் இழப்புகளின் பாவத்தையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்.

உலகில் மற்ற நாடுகளில் போர் என்ற பெயரில், அமெரிக்கா நடத்தி வந்த வெறியாட்டத்தின் பலனை, ஏற்கனவே அந்நாடு சிறிது அனுபவித்து விட்டது. நம் அண்டை நாட்டில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்த நம் நாடும், அதற்கான பலனை பெறும். போலவே, நிறுவனங்கள் ஊழியர்களுக்கெதிராக மேற்கொள்ளூம் கொடுமைகளை, கண்டுக்கொள்ளாமல் இருப்பதின் மூலம் ஊக்கமளித்து வருவதின் பலனை, நிறுவனங்களுடன் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர்களான நாமும் அனுபவிப்போம்.

வேறென்ன செய்ய? தண்டனை நாளின்போது, நேர்மையுடன், நிறைவுடன் இருப்போம்.

.

Tuesday, August 11, 2009

கன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்

திரும்ப திரும்ப திருவள்ளுவர் சிலையைப் பற்றி எழுதவது போல் உள்ளது. இருந்தாலும் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

சிலை திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி தினகரன் கூறியது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

வழக்கு தொடர்ந்த கன்னட அமைப்பினர், அதை எதிர்க்க காரணமாக கூறியது - இடத்திற்கான அனுமதியையும், வீரப்பன் கோரிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும் என்பதையும்.

தீர்ப்புக்கு முன் நீதிபதி பேசிய வார்த்தைகள், ஒவ்வொன்றும் சவுக்கடி.

----

சிலையைத் திறப்பதற்கான அனுமதியை மாநகராட்சியும், அரசும் வழங்கிவிட்டதைத் தெரியாமல் மனுதாரர்களாகிய கன்னட சங்கத்தினர் பொதுநல வழக்குத் தொடர்ந்தது சரியல்ல. மாநகராட்சி நிலம் என்பது அரசு நிலம்தானே? நீங்கள் தவறான முறையில் வழக்கைத் தொடர்ந்துள்ளீர்கள்.

நீங்கள் திருவள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தீர்களா அல்லது ஒட்டு மொத்தமாக நகரில் சிலைகள் அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்தீர்களா? வழக்கை விட்டு வேறு பக்கம் போகாதீர்கள். நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?

நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இப்போது கர்நாடக தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறேன். கடந்த ஓராண்டாக கர்நாடகத்தில் வாழ்கிறேன். கன்னடராக வாழ்ந்து வருகிறேன். பெங்களூரில் நடக்கும் சிலை திறப்பு விழாவில், மனுதாரர்கள் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

குடகு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் முன்பு கோவை ஆ‌ட்‌சிய‌‌ரி‌ன் ஆளுகையின் கீழ் இருந்தன. காவிரி நீரை தரமாட்டேன் என்கிறீர்களே, காவிரியை கர்நாடக எல்லைக்குள்ளே கட்டுப்படுத்த முடியுமா? அது இயற்கையாகவே தமிழகம் நோக்கி பாயத்தானே செய்யும்? மொழியின் பெயரால் நாட்டை பிரிக்காதீர்கள்.

வீரப்பன் கோரிக்கை விடுத்ததாலேயே, ஒரு விஷயம் சட்டவிரோதம் ஆகிவிடுமா? திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். 50 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் கூறியதற்காக சிலை திறப்பை தவிர்க்க முடியாது. தமிழகத்துடன் ஆயிர‌ம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக திருவள்ளுவர் சிலை திறப்பை தடுப்பது நியாயமாகாது. பிரச்சனைகள் இருப்பதால் தமிழகத்துடன் போருக்கு போக முடியுமா? அப்படி போரிட்டால் என்னை எந்த அணியில் சேர்ப்பீர்கள்?

நமது நாடு மிகுந்த பலம் வாய்ந்த நாடாகும். கூட்டமைப்பின் கீழ் நாடு செயல்படுகிறது. இதனால் நாம் நம்மிடம் உள்ள கருத்துவேறுபாடுகளை மறக்க வேண்டும். நம் அனைவருக்குள்ளும் இந்தியன் என்ற மனப்பான்மை வளர வேண்டும். தமிழர், கன்னடர், மலையாளிகள் என்ற வேறுபாடு கூடாது.

மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. காவிரி, ஒகேனக்கல் பிரச்சினையுடன் இதை சம்பந்தப்படுத்த வேண்டாம். கர்நாடக எல்லைக்குள்ளேயே காவிரி நீரை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? அது இயற்கையுடன் ஒன்றுபட்டது. உங்களது முயற்சி இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது எளிது. ஆனால் தீயை அணைப்பது கஷ்டம். குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழி வகுப்பது எளிது. ஆனால் போராட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்.

கோர்ட்டில் மனு செய்வது சுலபம். ஆனால் இதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்களா?.

இதுபோன்ற வழக்குகளை கோர்ட்டுக்கு கொண்டு வந்து, பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த வழக்கில் எந்த ஓர் அவசரமும் இருப்பதாக தெரியவில்லை. இதை ஒரு பொது நலன் வழக்கு என்றுகூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும்போது வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதற்காக அவசரம் காட்டுகிறீர்கள். இது முக்கியமான பொதுநல வழக்கு என்று கூறுகிறீர்கள். ஆனால் மனுதாரர்களில் ஒருவர் கூட கோர்ட்டுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் இதை முக்கியமான வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அரசு விழா இல்லை என்பதுபோல நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து, விழாவில் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது இது எப்படி தனியார் நிகழ்ச்சியாக இருக்க முடியும்? அப்படியே இது அரசு விழா இல்லை என்று நீங்கள் கூறினால், அதையும் நீதிமன்றத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லது நீங்கள் தான் பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

முதலில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அழைப்பிதழை கொண்டு வாருங்கள். அதில் கர்நாடக அரசு சின்னம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம். அது அரசு விழாவா இல்லையா என்பதை நானே உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன். எனவே மொழி, மதம், சாதி போன்றவற்றை காரணம் காட்டி, நாட்டை துண்டாடாதீர்கள். கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள இதயப்பூர்வமான உறவை கெடுக்கக்கூடாது.

திருவள்ளுவர் சிலைக்கு எதிராக போராடினீர்கள் என்றால் அதை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்திற்குள் அதை எடுத்து வராதீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கக் கூடாது என்று தமிழக நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள்.

மாநகராட்சி தேர்தலை முன்வைத்து சிலை திறக்க அரசு முயற்சிப்பதாக கூறுகிறீர்கள். திருவள்ளுவர் ஒரு அரசியல்வாதி அல்ல.

திருவள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோர் நாட்டின் கலாசார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள பெரும் புலவர்கள். இதன் மூலம் மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் நாட்டைப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்துள்ளீர்கள். இது தவறு. தவறான வழக்கை தாக்கல் செய்துள்ள உங்கள் மீது அபராதம் விதிக்க முடியும். ஆனால் மனுதாரர்களுக்கு, நீதிமன்றம் எச்சரிக்கை மட்டும் விடுக்கிறது.

9-ந் தேதி நடை பெறும் சிலை திறப்பு விழா முழு வெற்றி பெறட்டும். இதன் மூலம் சாதி, மதம், இனம், மொழிபேதம் இல்லாத சமுதாயத்தை படைப்போம்.

----

நீதிபதி ஐயா, சபாஷ்!

நன்றி : தினத்தந்தி, தினமணி, தமிழ்செய்தி

Monday, August 10, 2009

பெங்களூரை கலக்கிய வள்ளுவர்

"நமக்கு துன்பம் தருபவனுக்கும், நாம் நன்மையே செய்யவேண்டும்"

தேசபிதா காந்தியடிகளுக்கு, இதை கற்றுகொடுத்தது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள். அவரது எழுத்துக்கள் மூலமாகத்தான், தனது காந்திய கொள்கைக்கு வடிவம் கொடுத்தார். அவரது எழுத்துக்களால் கவரப்பட்டு, காந்தி அவருடன் கடிதங்கள் மூலமாக தொடர்பு வைத்திருந்தார்.

ஒருமுறை காந்தி அவரிடம், தங்கள் எழுத்துக்களுக்கு எது முன்மாதிரி, மூலம் என்று கேட்டதற்கு, உங்கள் நாட்டை சேர்ந்த, தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ என்ற பதில் காந்தியை ஆச்சர்யமடைய வைத்தது.



பிறகு, காந்தி திருக்குறள் படிப்பதற்காகவே, தமிழ் கற்றார். அடுத்த ஜென்மத்தில் தான் பிறந்தால், தமிழனாக, தமிழ்நாட்டில் பிறக்கவே ஆசைப்படுகிறேன் என்றார்.

---

ஒருவழியாக பல வேண்டுக்கோளுக்கு பிறகு, கெஞ்சல்களுக்கு பிறகு, பெங்களூரை காண திருவள்ளுவருக்கு வழி செய்துவிட்டார்கள். இனி, தினமும் வள்ளுவர் தன் முன்னால் இருக்கும் அல்சூர் ஏரிக்கரையை பார்த்துக்கொண்டிருக்கலாம். ட்ராபிக் ஜாம், பிழைப்புக்காக மாநிலம் தாண்டி வந்தவர்கள், தான் எழுதியது எதையும் கண்டுக்கொள்ளாமல் ஓடி கொண்டிருக்கும், ஓட்டிக் கொண்டிருக்கும் மக்கள் யாவரையும் காணலாம்.



வெண்கலச்சிலையில், நல்லா ஸ்ட்ராங்காகவே இருக்கிறார், வள்ளுவர்.

---

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து கடைக்கோடி கன்னியாக்குமரி வரை வள்ளுவருக்கான நினைவு சின்னங்களை பிரமாண்டமாக கவனம் பெறும்வகையில் அமைத்து, அவருக்கு புகழ் சேர்ப்பதில் முண்ணனியில் இருப்பவர் கலைஞர்.

சிலரின் மடத்தனமான எண்ணங்களால், பெங்களூரில் இழுபறியாகிக் கொண்டிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பிற்கும் முழு முயற்சி எடுத்தவர் கலைஞர். மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்த மாற்றுக்கூட்டணி, மாற்றுக்கட்சி கர்நாடக முதல்வரை விரோதம் பாராட்டாமல், தான் சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பி, தன் வீட்டிற்கு வரவழைத்து, சிலை திறக்க வேண்டுக்கோள் விடுத்து, சர்வக்ஞர் சிலை திறக்க தாங்கள் எப்போதும் தயார் என்று அறிவித்து, விழா ஏற்பாட்டிற்கு பணம் செலவழித்து, ஒருவாரம் முன்பே பெங்களூர் வந்து, சிலை திறந்து, விழாவை சிறப்பித்து சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் கலைஞர்.

இதற்கு எந்தவிதமான காரணங்கள் கூறினாலும், தமிழக மக்களின் நன்றிக்குரியவர் கலைஞர். தனது பேச்சால், ஒரு சுமூக சூழலுக்கு தொடக்கப்புள்ளி வைத்து சென்றிருக்கும் கலைஞருக்கு கோடானு கோடி நன்றிகள்.

ஜாக்கிசான் வந்த விழாவில்கூட அவரை பற்றிய புள்ளிவிவரங்களை அடுக்கிய முதல்வர், இங்கு சர்வக்ஞரை பற்றி சொல்லாமல் விடுவாரா? அவரை பற்றிய விவரங்களையும், அவருடைய படைப்புகள் பற்றியும், அதற்கு விளக்கங்களும் கொடுத்தார்.

விழாவில் எடியூரப்பாவை வழக்கம்போல் தம்பி என்றழைத்தார். நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். எடியூரப்பாவிற்கு புதிதல்லவா? கண் கலங்கிவிட்டார். கலக்குறீயே தலைவா!

---

இன்னொரு மாநில முதல்வர் கலந்துக்கொள்ளும் விழா என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்திருந்தார்கள். பிரச்சினை செய்பவர்கள் என்று கருதப்பட்டவர்களும், அவர்களது அடிப்பொடிகளையும் ஒருநாள் முன்பே தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.



பொதுவாக நகரமெங்குமே காக்கிச்சட்டைகளை காணமுடிந்தது. களத்தில் 3000 போலீசார்கள் இருந்தார்களாம்.

ஆட்டோ, தனியார் நிறுவன பஸ், கேப் உள்ளிட்ட வாகனங்களுக்கும், கண்ணாடி கட்டிடங்களுக்கும் பாதுக்காப்பாக, பெங்களூரில் வழக்கமாக கட்டப்படும், சிகப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு இருந்தது.



விழா நடந்த நகரின் மையப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் கலைஞர் முகத்துடன் கூடிய ப்ளெக்ஸ் போர்டுகள். தமிழில் வாழ்த்துக்கள், நன்றிகளுடன் உள்ளூர் மார்க்கெட்டிங் அரசியல்வாதிகள். கூடவே தமிழர்களின் தனித்தன்மையுடன் கூடிய, கைக்கூப்பிய நிலையில் இருக்கும் நடிகர்களின் படங்கள். எம்.ஜி.ஆரில் இருந்து தனுஷ் வரை. ரெட் அஜித் ரசிகர் மன்றம், சுள்ளான் தனுஷ் ரசிகர் பேரவை என்று கட்-அவுட்கள் வைக்காததுதான் பாக்கி.



சிலை தான் என்றாலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திறந்தது என்பதால், சிலையை கணிசமான தூரத்தில் இருந்து மொய்த்து கொண்டிருந்த மக்கள் முகத்தில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. தமிழ்நாட்டில் இருந்து சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு இன்னொரு ஸ்பாட். நடைப்பாதையில், திடீர் புத்தக்கடை, திருக்குறள் சிடிக்கடைகள் உருவாகியிருந்தது.



இனி வரும் நாட்கள் எப்படி என்று தெரியவில்லை. பூக்கள் அலங்காரம், வண்ண ஒளி விளக்குகள், போலீஸ் பந்தோபஸ்து, மகிழ்ச்சியுடன் உணர்வுவயப்பட்ட நிலையில் சுற்றி வலம் வந்த மக்கள் என்று வள்ளுவருக்கு முதல் நாள் இனிமையாகவே முடிந்தது.



படங்களை பெரிதாக்கி காண, படத்தின் மேல் க்ளிக்கவும்.

.

Friday, August 7, 2009

திருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது?

இன்று பெங்களூர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருந்த கர்நாடக அரசு விளம்பரம்.



அப்பப்பா! ஒரு சிலை வைக்க எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது...

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

.

Tuesday, July 28, 2009

எஸ்.வீ.சேகர் - நாடகம் - என் முதல் அனுபவம்

இன்றைய இளம் தலைமுறைக்கும் இதற்கு பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் நாடகம் என்றால் டிவியில் போடும் சீரியல்கள் தான் ஞாபகத்திற்கு வரும். நாடகம் என்ற சினிமாவின் தாய் கலையை, இதுவரை நான் நேரில் கண்டதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது, ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்று இருந்தேன். சென்ற ஞாயிறு எஸ்.வீ.சேகரின் ‘பெரிய தம்பி’ பார்த்தேன்.

---

நான் பைக்கில் உள்ளே நுழையும்போதே, சேகர் வாசலில் நின்று கொண்டிருந்தார். தேனீர் சட்டையின் (டி-சர்ட்) மேல் பட்டன்களை திறந்து விட்டு கொண்டு, பூணூல் தெரியும்வாறு. அப்போது தான் காரில் இருந்து இறங்கியிருப்பார் போல். யாருக்காக காத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. நாடகம் ஆரம்பிப்பதற்கு நிமிஷம் முன்வரை மேடையின் அருகே இருக்கும் கதவுக்கு வெளியேவே நின்று கொண்டிருந்தார். அவருக்கு மெஷின் கன்னுடன் ஒரு பாதுகாப்பு காவலர். எம்.எல்.ஏ. அல்லவா?

---

நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பூஜை பண்ணினார்கள். முடிவில், தேங்காய் உடைத்து முடித்து கொண்டார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் ஸ்கிரினை ஒருவர் ஓடிகொண்டே மாற்றியது, மேடையில் நாலு மைக் வைத்து, நாடகத்தின் கதாபாத்திரங்கள் அதில் தங்களை மாறி மாறி பொசிஷன் செய்து கொண்டே நடித்தது - எனக்கு புது அனுபவம். அவர் வீடு என்பதற்கு வரும் ஸ்கிரினில், அவர் தந்தை புகைப்படம், சங்கராச்சாரியார், ஜெயந்திரர் படங்களை மாட்டி வைத்திருந்தார்கள்.

---




இந்த நாடகத்தில் கிராமத்து வழக்கங்களையும் அப்படி சொல்லிவரும் திரைப்படங்களையும் கிண்டல் செய்து கதை அமைத்திருந்தார். 2 மணி நேரத்தில் 200க்கு மேல் ஜோக்ஸ் என்று டார்க்கெட் வைத்து அடிக்கிறார். அவர் சும்மா பேசினாலே, டைமிங் காமெடி சிதறும். அதனால் ரொம்ப சுலபமாகவே டார்க்கெட்டை கடக்கிறார். ஹிந்தி எதிர்ப்பு, டெல்லி, அம்மா, சன் டிடிஎச், மெகா சீரியல் காமெடிக்களுக்கு நல்ல கைத்தட்டல். லோக்கல் மேட்டர் திருவள்ளுவர் சிலை பற்றி சொல்லியும் கைத்தட்டல் அள்ளினார். நாடகத்தின் முடிவில் அவரே சொன்னதுபோல், எத்தனை நாடகங்கள் வேண்டுமானாலும் போடலாம், டைட்டிலை மாற்றி கொண்டு. டைட்டிலில் என்ன இருக்கிறது என்றார்.

---

அவர்களுக்குள் என்ன நகைச்சுவையோ தெரியவில்லை. மேடையிலேயே ஒரு பெண்மணி (இவர் மீண்டும் மீண்டும் சிரிப்பில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் வருபவர்) அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தார். நாடகம் முடிந்து குழுவினரை அறிமுகப்படுத்தி, வந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லி இருபது நிமிடம் பேசியபோது, எஸ்.வீ.சேகரின் காமெடி இன்னும் அதிகமாக தொடர்ந்தது. அரங்கத்தில் சிரிப்பொலியும் அதிகமானது.

சிவசங்கரன் - மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இப்ப, கரண்ட் பிரச்சினைக்கு இவர் காரணம் கிடையாது. ரிட்டையர் ஆகிவிட்டார். இவர் சர்வீஸில் இருக்கும்போது, இவ்ளோ பிராப்ளம் கிடையாது. இன்னும் ஜாஸ்தியாத்தான் இருந்திருக்கும்.

டெலிபோன் மணி - நிறைய படங்களில் பார்த்திருப்பீர்கள். இவரோடுதான் ரஜினி, கமல் நடித்திருப்பார்கள். அந்த படங்கள் எல்லாம் பாருங்க. கண்டிப்பா இவரை தேடி கண்டுப்பிடிப்பீங்க.

கிருஷ்ணக்குமார் - இவர்தான் நாடக இன்சார்ஜ். எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ஏதாவது பழி வந்தா, இவர் மேலத்தான் போடுவோம்.

ராஜேந்திரன் - இவர் மதிமுகவில் இருக்கிறார். என்ன பொறுப்புன்னு கேட்டுக்கிட்டதில்லை. பதிலுக்கு அதிமுகவில் நீ என்னவா இருக்கன்னு கேட்டுட்டா?

முரளிதரன் - எங்க ட்ருப் ஆரம்பித்ததிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவில் இருக்கிறார். காலேஜில் படித்த மாணவன் ஒருவன், அங்கேயே லெக்சரர் ஆன போது, அவனிடம் கல்லூரி முதல்வர் ‘இதை பத்தி என்ன நினைக்கிற?’ என்று கேட்டதற்கு, ’இங்க படிச்சா, வேற எங்கயும் வேலை கிடைக்காது’ என்றானாம். அது போல், என்னைக்கு எங்களுக்கு வாசிக்க ஆரம்பித்தாரோ, வேற எங்கயும் அவரால் போக முடியலை.

தனது மகன் அஸ்வீனையும் அறிமுகப்படுத்தினார். அவரிடம் “நீ ஆக்‌ஷன் ஹீரோவானதற்கு பிறகுதான் கல்யாணம்” என்றிருக்கிறாராம். அதனால், அவரும் சீக்கிரம் ஆக்‌ஷன் ஹீரோ ஆவதாக சொல்லியிருக்கிறாராம். இன்னொரு ஆக்‌ஷன் ஹீரோவா?

ம்ம்ம். அவருக்கென்ன? நடிச்சிட்டு போயிடுவாரு.

---



தொடர்பு கொள்ள அவருடைய மெயில் ஐடி கொடுத்தார். மயிலாப்பூர் எம்.எல்.ஏ. அட் ஜிமெயில் டாட் காம். ”எம்.எல்.ஏ.வா இருக்கேனோ, இல்லயோ, ஐ.டி. என்னிடம் தான் இருக்கும். எப்படியும், இன்னும் கண்டிப்பா ரெண்டு வருஷம் எம்.எல்.ஏ.வாத்தான் இருப்பேன். ரொம்ப வருத்தப்படாதீங்க. அதுக்கப்புறம் எம்.பி.யா ஆயிருவேன். தன்னம்பிக்கைதான்.”

இப்படி நம்பிக்கை அவருக்கு இருந்தா சரி. மூடநம்பிக்கை என்று கருதும் பலவற்றை ஆதரித்து, பரிந்துரைத்து தகுந்த விளக்கம் கொடுக்காமல் பேசுவது சரியா?

---

அவரின் அரசியல் சண்டைகளே காமெடியாகத்தான் இருக்கும். உ.தா. சமீபத்தில் சட்டசபையில் கலைராஜனுடனான சண்டை.

எஸ்.வீ.சேகர் - ”நான் பேசினால் என்னை போட்டுவிடுவதாக கலைராஜன் மிரட்டுகிறார். எனது உயிருக்கோ, உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன்.”

கலைராஜன் - “'எட்டப்பன்' எஸ்.வீ.சேகர் நாளை பன்றிக் காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல”

எஸ்.வீ.சேகர் - ”பன்றிக் காய்ச்சலெல்லாம் எனக்கு வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்”

---

நாடகம் அழிந்து வரும் கலை என்று பல வருடங்களாக சொல்கிறார்கள். இன்னும் உயிர் பிழைத்து வருவதற்கு, எஸ்.வீ.சேகர், கிரேஸி மோகன், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றவர்களது குழுக்களே முக்கிய காரணமாக இருக்கிறது. இவர்களின் பலம் - நகைச்சுவை, சினிமா தந்த பிரபலம். நாடக ஆர்வம் குறைவதற்கு காரணம் - எத்தனை தடவை, பார்த்ததையே பார்ப்பது?, ஒரு நாடகம் பார்க்கும் காசில், நாலு படங்கள் பார்த்து விடலாம் போன்ற எண்ணங்கள்.

நாடகங்களை பற்றி அவர் சொன்னபோது, ‘சினிமா பிடிக்கவில்லையென்றால், வெளியே தான் போகணும். இங்க பிடிக்கலைன்னா, உள்ளே வரலாம்’. அதாவது அவரை சந்தித்து சொல்லலாமாம். சொன்னபடியே, எல்லாம் முடிந்தபிறகு, வெளியே செல்லும் கதவருகே நின்று, கை குலுக்கி பாராட்டு பெற்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.

ஏதாவது புதுசா முயற்சி பண்ணினால், நாடகங்களுக்கு மீண்டும் வரவேற்பு வரலாம். என்ன செய்வது? யார் செய்வது? தெரியவில்லை. பார்க்கலாம்.

மார்க்கெட் போன காமெடி நடிகர்கள் ட்ரை பண்ணலாம். கவுண்டமணி? கூட்டம் அம்மும்.

---

கடைசியா அவர் சொன்னது,

“உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரணம், ஒரு ஞாயித்துக்கிழமை... தொலைக்காட்சிகளில் எத்தனை படங்கள், எவ்ளோ நிகழ்ச்சிகள்... எல்லாத்தையும் விட்டுட்டு இவ்ளோ பேரு வந்திருக்கீங்கன்னா, அதற்கு காரணமா இருக்கும் அனைத்து தொலைக்காட்சிக்களும் எனது மனமார்ந்த நன்றிகள்.”

:-)

Friday, July 24, 2009

பெங்களூரில் எஸ்.வீ.சேகர்

இந்த வார இறுதியில் பெங்களூரில் எஸ்.வீ.சேகரின் இரு நாடகங்கள் நடைபெறவுள்ளது.



சனிக்கிழமை - 25 ஜூலை 2009 - 'தத்துப்பிள்ளை'
ஞாயிற்றுக்கிழமை - 26 ஜூலை 2009 - 'பெரியதம்பி'

டிக்கெட் புக் செய்ய, இங்கே செல்லவும்.
http://www.ticketnew.com/Calender.aspx

பார்க்கிறதுக்கு இப்படி போங்க.


View Larger Map

அவரோட காமெடி கொஞ்சம்... இங்கே...

Thursday, June 18, 2009

பெங்களூர் ‘பசங்க’ளுக்கு ஒரு நற்செய்தி



ஏற்கனவே ‘பல்ப்’ வாங்குன கதை இங்கே.

தியேட்டரில் பார்க்க முடியாமல் போன படங்களில் ஒன்றாகி விடுமோ என்றிருந்தேன். நல்லவேளை!

இது ஒரு பொழப்பா?ன்னு கேட்குறீங்களா?

----

சரி, ஒரு உருப்படியான நியூஸ்.

பெங்களூர் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க, ரகசிய கேமராக்கள் வைக்க போகிறார்களாம். எங்க வைப்பாங்க? ராகிங், கல்லூரிகளில் மட்டுமா நடக்கும்? உண்மையிலேயே இது ராகிங்கை தடுக்குமா?

கல்லூரி கேண்டீன்
கல்லூரி எதிர்க்கடை
ஹாஸ்டல்
ஹாஸ்டல் மெஸ்
ஹாஸ்டல் பாத்ரூம்

இங்கெல்லாம் நடக்குமே? அதுக்கு என்ன பண்ணுவாங்க?

ஒண்ணு நிச்சயம். எங்கனாலும் வைப்பாங்க. ஆனா, ஆபிஸ் ரூம்ல மட்டும் வைக்க மாட்டாங்க. :-)

Monday, May 25, 2009

பெங்களூர் - டைம்பாஸ் வித் சயின்ஸ்

பெங்களூர் மையப்பகுதியில் உள்ளது விஸ்வேஸ்வரய்யா மியூசியம். இப்ப இல்ல, ரொம்ப வருஷமா இருக்குது. கிட்டத்தட்ட 47 வருசமா. யாரு விஸ்வேஸ்வரய்யா? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே, பொறியியல் வல்லுனரா பல சாதனைகளை பண்ணியவர். பல முக்கியமான இடங்கள் இன்றும் இவர் பெயரை சொல்லி கொண்டு இருக்கிறது. உதாரணமாக, மைசூர் அணை, திருப்பதி மலை சாலை. இவர் மைசூர் திவானாகவும் இருந்திருக்கிறார். கர்நாடகாவில் இவர் பெயரில் நிறைய கல்வி மையங்கள் உள்ளது.



இப்ப நீ எதுக்கு அந்த பக்கம் போனன்னு கேட்கறீங்களா? ஸ்கூல்ல படிக்குற பையன், பெங்களூர் சுத்தி பாக்கணும்ன்னு சொன்னா, இங்க தானே கூட்டிட்டு போகணும்? நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும் போது, என்னை இங்க தான் டூர்ல கூட்டிட்டு வந்தாங்க. அதுக்கு அப்புறம் இப்பதான் போறேன்.



அப்படி என்ன இருக்குது? அறிவியல் வளர்ச்சிகள், அறிவியல் பயன்பாடுகள், தொழில்நுட்ப புதுவரவுகள் என்று அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை காணலாம். நல்லா இருக்குதா? அறிவியல் ஆர்வம் இருந்தால், இந்த இடம் கண்டிப்பாக பிடிக்கும். அது மட்டும் இல்லை. குழந்தைகளை கவரும் நிறைய அறிவியல் விளையாட்டு சமாசாரங்களும் உள்ளது.



உள்ள போனவுடன் உங்களை வரவேற்பது இந்த டைனோசர்தான். அசையுது. உறுமுது. என்ன, திருப்பி திருப்பி அதையே செஞ்சிட்டு இருக்குது.



இங்க இருபது ரூபாய்க்கு 3டி படம் காட்டுறாங்க. அவுங்க கொடுக்குற கண்ணாடிய போட்டுக்கிட்டு பார்த்தா, பாம்பு வந்து மூக்க கொத்துது, மீன் நம்ம சுத்தி வருது, அலாவுதீன் கூட பறந்து போகலாம், தண்ணிக்குள்ள தவழ்ந்து போகலாம். இன்னும் பல. அதுக்காக ஹாலிவுட் ரேஞ்சுக்கு எதிர்ப்பார்க்காதீங்க. 20 ரூபாய்க்கு எவ்வளவோ, அவ்வளவு. குழந்தைகளை விட, பெரியவுங்க தான் கைய, காலா ஆட்டிட்டு இருந்தாங்க.



இதோ, இந்த பையன் ஆடிட்டு இருக்குறது, வெர்சுவல் கேம். அந்த பையனுக்கு எதிர இருக்குற டிவில வருற கேமுக்கு ஏத்தப்படி கைய கால ஆட்டினா, அதாவது டிவில, பால் வரும். பையன் கைய, கால யூஸ் பண்ணி அத அடிப்பான். அவனோட செய்கைகள், அவன் முகத்தோட பின்னாடி இருக்குற டிவில வரும்.





இந்த மியூசியத்துல ஒவ்வொரு தளமாக, அறிவியல் களங்களை பிரித்திருக்கிறார்கள். ஒன்றில் விண்வெளி, இன்னொன்றில் மின்னணு, மற்றொன்றில் உயிரி தொழில்நுட்பம் என்று பல தளங்கள். இவற்றுக்கிடையே குழந்தைகள் விரும்பும் இயற்பியல் விளையாட்டுகளும் உண்டு.






பசித்தால் சாப்பிட கேண்டீனும் உண்டு. நல்ல அசைவ சாப்பாடு சாப்பிட விரும்புபவர்கள், பக்கத்தில் உள்ள செயிண்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ள நந்தினிக்கு சென்று நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிடவும்.



சரியான சகோதரர்கள், அதான் ரைட் பிரதர்ஸ் கண்டுபிடித்த முதல் விமானத்தின் மாடல், அதே சைஸில் இங்கு உள்ளது. அவரு அதுல எப்படி பறந்து போனாருன்னு பார்த்து தெரிஞ்சிக்கலாம்.



எப்படித்தான் இப்படி பறக்க தோணிச்சோ?



பூட்டு உடைக்க ஆசைப்படுபவர்கள் இதை பார்த்து கற்று கொள்ளலாம்.



பொதுவா, சனி, ஞாயிறு நல்லா கூட்டமா இருக்கும். முக்கால்வாசி, சிறுவர் பட்டாளம் தான். வெளியூரில் இருந்து வந்திருக்கும் பள்ளி சுற்றுலா கூட்டங்களை காணலாம். நாம போன சுற்றுலா நினைவுக்கு வரலாம். மியூசியம் பார்க்கும் ஆர்வமில்லாதவர், ஏதோ காணாததை காணும் பரவசத்துடன் இருக்கும் இவர்களை காண கூட சென்று வரலாம்.

அதுவும் வேண்டாமா? இது பெண்களூர்ங்க! கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.