இந்த வருடம், புத்தகங்கள் வாங்கி நெடுநாளாகிவிட்டது. ஆனால், தினமும் ஏதேனும் புத்தகம் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். புத்தகங்கள் கடைவில் வாங்கவில்லையே தவிர, இரவலாக வாங்கி சில புத்தகங்கள் வாசித்தேன். இரவலாக வாங்கி வாசிக்கும் போது, ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. தவிர, சீக்கிரம் வாசித்துக்கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ஒரு வேலையை முடிப்போம்’ என்ற கணக்கிலேயே வாசிக்க வேண்டி இருக்கும். அதனால், அடுத்ததாக எப்போது புத்தகம் வாங்குவோம் என்ற ஆர்வத்தில் இருந்தேன்.
பெங்களூர் புத்தகக்கண்காட்சி, இந்த வருடமும் அதே பேலஸ் க்ரவுண்டில் தான். ஆனால், உள்ளூக்குள் வேறொரு இடம். வழக்கம்போல், பைக்கிற்கு 10 ரூபாயும், அனுமதி சீட்டுக்கு 20 ரூபாயும். புத்தகங்களை நெருங்குவதற்கே 30 ரூபாய் செலவாகிறது. உள்ளே புத்தகங்களை கண்டபோது, அவையும் விலை உயர்ந்து இருந்தன. இருந்தாலும், புத்தகங்களுக்கு என்று ஒரு மதிப்பு இருப்பதால், இந்த மதிப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஸ்டால் வாடகை, பதினைந்தாயிரம் என்றார்கள். யப்பா! சில ஸ்டால்களை கண்டபோது, பாவமாக இருந்தது.
ஒருமுறை ஒரு முழு ரவுண்ட் சென்றுவிட்டு, வாங்க நினைத்த புத்தகங்களை பார்த்து வைத்துவிட்டு, திரும்ப வந்து வாங்கிக்கொண்டேன். எப்போதும் இருப்பதை விட, இந்த முறை கன்னட புத்தகங்கள் அதிகம் இருப்பதாக தோன்றியது. ஆனாலும், இந்த முறையும் அதிகம் இருந்தது, ஆங்கில புத்தகங்களே. தமிழ் வழக்கம் போல. வானதி, அல்லயன்ஸ், கண்ணதாசன், விகடன், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு பதிப்பக புத்தகங்கள் கிடைத்தன.
நான் சென்றதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்திருக்கும் போல. அந்த மேக்கப்பில் சில பெண்கள் வெளியே சென்றுக்கொண்டு இருந்தார்கள். புத்தக அரங்கை விட்டு, வெளியே வரும் வழியில் ஊறுகாய், ஊதுபத்தி கடைகளும் வழக்கம்போல இருந்தன.
கண்காட்சி என்றாலே டெல்லி அப்பளம், பஜ்ஜி, பேல் பூரி, பானி பூரி, ப்ரெட் ஆம்லெட், பஞ்சு மிட்டாய், ரோஸ் மில்க், சோடா இல்லாமலா? இருந்தது, ரொம்பவும் காஸ்ட்லியாக.
---
இந்த முறை நித்தியானந்தாவின் புத்தகங்கள் கிடைக்கவில்லை. இரண்டு புது சாமியார்களை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய இஸ்லாமிய புத்தக ஸ்டால்கள் இருந்தன.
மத்தியில் ஒரு பெரிய இடத்தில், குரானை இலவசமாக கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் கொடுத்து தள்ளினார்கள்.
பகவத் கீதை தள்ளுபடி விலையில் கிடைத்தது. 1000 ரூபாய் மதிப்புள்ளது, 120 ரூபாய்க்கே என்று விற்றார்கள்.
குரான் இலவசமாகவும், பகவத் கீதை தள்ளுபடியில் கிடைக்க, பைபிள் நிலை என்னவென்று தெரியவில்லை.
---
பெரிதாக எதுவும் திட்டமிட்டு வாங்கவில்லை. வாசிக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் தோன்றிய புத்தகங்களை எல்லாம் கையில் எடுத்தேன். பெரும்பாலும், ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த புத்தகங்களையே என் கைகள் தேர்வு செய்தன. அனைத்துமே, இணையத்தில் ஏதோ ஒருவகையில் அறிமுகம் கிடைத்தவை.
இன்னொரு விஷயம், கொஞ்சம் பிரபலமான ஆசிரியர்களையே வாங்கினேன். எதுவுமே திட்டமிடவில்லை. மனநிலை அப்படி இருந்தது.
வாங்கிய புத்தகங்களை, ஒரு சின்ன அனாலிஸிஸ் செய்து பார்த்த போது, இப்படி வந்தது.
இன்னும் ஒரு லெவல் உள்ளே சென்றபோது, இப்படி வந்தது.
பெரும்பாலானவை, வாழ்க்கை வரலாறும், கட்டுரை வடிவிலான புத்தகங்களும். அதுவும், எப்படிப்பட்ட புத்தகங்கள் என்று பார்த்த போது, திரைத்துறையும் அரசியலுமே முன்னிலை வகித்தன. பயணமும், வணிகமும் சின்ன இடத்தை பிடித்ததே ஆறுதலான விஷயம். இதன் மூலம், எனது வாசிப்பு விருப்பங்கள் எனக்கே தெரிகிறது.
இனி அடுத்த முறை எப்படி வருகிறது என்று பார்ப்போம். சென்ற வருட வரலாறு, இங்கே.
என்னென்ன புத்தகங்கள் என்பதை இனிவரும் பதிவுகளில் எழுதுகிறேன்.
.
10 comments:
அருமை நண்பரே,
உங்களைப்பார்த்து புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்னும் அதிகரிக்கிறது,
உங்கள் அனுபவங்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை...
பகிர்வுக்கு நன்றி
வித்தியாசமா அனலைஸ்லாம் பண்ணியிருக்கீங்க! சூப்பர்!
ரமண மகரிஷி தனது ஆசிரம சொத்துகளை தனது தம்பிக்கு எழுதி வைத்தாராம்.அது உண்மையா தெரிந்தவர்கள் விளக்க அன்புடன் வேண்டுகிறேன்.வலை உலக அன்பர்களும் தான்.நிறைய படிக்கும் நீங்கள் சொல்லுவீர்கள் என்ற நம்பிஹையும் தான்
when is the last date?
plzz reply me
பகிர்வுக்கு நன்றி
நன்றி மாணவன்
நன்றி எஸ்.கே.
தெரிந்துக்கொண்டு சொல்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும். போன வாரமே முடிந்துவிட்டது. :-(
நன்றி KANA VARO
Post a Comment