Sunday, October 11, 2015

மினியாபோலிஸில் ஒரு வருடம்



மினசோட்டா வந்து ஒரு வருடம் ஆகிறது. மினசோட்டா , மினியாபோலிஸ் என்றெல்லாம் இங்கு வருவதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரை கேள்விப்பட்டதில்லை. நாம் அறியாத ஊர்கள், சிலருக்கு மறக்க இயலாத, வாழ்வில் பிரிக்க இயலாத ஊர்களாக இருக்கின்றன. அறிந்த பிறகு, நமக்கும் மறக்க இயலா ஊர்களாக மாறும். எனக்கும் மினியாபோலிஸ் அப்படியே.

நான் டென்வரில் இருந்து மினியாபோலிஸிற்கு வருவதற்கு சில நாட்கள் முன்பு, அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர், மினியாபோலிஸில் இருந்து டென்வருக்கு வந்திருந்தார். அவரிடம் மினியாபோலிஸைப் பற்றி விசாரிக்கும் போது, ஊரை ரொம்பவும் புகழ்ந்தார். பொதுவாக, அமெரிக்காவில் வந்த முதல் ஊரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்திற்காக பிடித்திருக்கும். அப்படியாக இருக்கும் என நினைத்தேன்.

ஏனென்று கேட்டதற்கு ஏதேதோ சொன்னார். ஆனால், குளிர் ஓவரென்று சொன்னார். அவர் மட்டுமல்ல, மினியாபோலிஸ் என்றதும் பலரும் சொன்னது அது தான்.

ஒரு சிறு மழை பொழிந்த நாளில் தான், இங்கு வந்தோம். இந்த வருடமும், அந்த தினம், அதேபோல் தான் இருந்தது.

புதியதாக எந்த ஊருக்கு சென்றாலும், ஒரு தயக்கமும், உள்ளுக்குள் ஒரு பயமும் இருக்குமே? அப்படித்தான் ஆரம்ப நாட்கள் சென்றது.

ஆரம்ப நாட்கள் என்பதால், டென்வருக்கும் மினியாபோலிஸிற்கும் இடையேயான வித்தியாசங்கள் அப்பட்டமாக தெரிந்தது.

டென்வர் ஏர்போர்ட்டில், லாங் வீக் எண்ட் போன்ற விசேஷ நாட்களில் தான் கூட்டம் கும்மும். ஆனால், மின்னியாபோலிஸிற்கு வந்தது, ஒரு சாதாரண வீக் எண்ட் தான். ஆனாலும், ஏர்போர்ட்டிலும், நன்றாக நினைவிருக்கிறது, ஏர்போர்ட் டாய்லட்டிலும் நல்ல கூட்டம். அதை பார்த்ததுமே கலக்கமாகி விட்டது.

ஒரு முறை, நியூயார்க் - நியூஜெர்சி சென்றிருந்த போது, எங்கும் கூட்டம் நிறைந்திருப்பதை கண்ட போது, கிராமம், சிறுநகரம் போன்றவற்றில் இருந்து நகரம் சென்ற ஒருவன் அடையும் திகைப்பு, எங்களுக்கு கிடைத்தது. மக்கள் பழகும் விதம், மற்றவர்களை நடத்தும் விதம் என ஒழுக்க நிலை பெரிய நகரங்களில் கொஞ்சம் இறங்கி இருப்பதாகவே தோன்றும். அதனால், பெரும் நகரங்களுக்கு சென்று வசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததில்லை.



மின்னியாபோலிஸ், நடுத்தர நகரம் என்று தான் கேள்விப்பட்டிருந்தோம். டென்வரை போல இருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால், இங்கோ ஏர்போர்ட், வால்மார்ட், டார்கெட், பஸ் ஸ்டாப், பஸ் என அனைத்தும் கூட்டமாக இருந்தது. இது ஒரு வகை திகைப்பை முதலில் ஏற்படுத்தியது. பிறகு, இப்போது பழகிவிட்டது.

இணையத்தில் மக்கள் தொகையை பார்த்தால், டென்வரில் தான் அதிகம் எனக் காட்டுகிறது. மாநில அளவில், இரண்டும் ஒரளவுக்கு ஒரே அளவு தான். டென்வர் வேகமாக வளரும் நகரம். மக்கள்தொகை வளர்ச்சிவிகிதம் அதிகம். கட்டிடங்கள் ரொம்ப பழமையாக இருக்காது. இங்கோ, கட்டிடங்களும், நகரின் அமைப்பும் ஒப்பிட்டளவில் பழமையானது.

கூட்டம் அதிகம் இருப்பதால் ஏற்படும் நன்மை, நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறுவது. வாரயிறுதி என்றால் ஏதேனும் செல்வதற்கு இருக்கும். பிசியாகவே எப்போதும் இருக்கலாம்.

விலைவாசியைப் பொறுத்தமட்டில், பெரும்பாலான பொருட்கள் டென்வரைவிட இங்கு அதிகமாக இருப்பதாக தெரியும். ஆனால், 2011 இல் நான் முதலில் வந்த டென்வருக்கும் 2014 இல் நாங்கள் கிளம்பும்போது இருந்த டென்வருக்குமே வித்தியாசம் இருந்தது. $575 இருந்த அதே அபார்ட்மெண்ட் புதுப்பிக்கப்பட்டு $950 என விலைவாசி உயர்ந்திருந்தது. இங்கு ஏற்கனவே அதற்கு மேல் ஏறியிருந்தது. டென்வரில் காலிப்ளவர் $1.50 க்கே வாங்கி பழகியிருந்தோம். இங்கோ, $2.99க்கு கம்மியாக கிடைத்தால் பெரிய விஷயம். குடைமிளகாய் டென்வரில் டாலருக்கு மூன்று கிடைக்கும். இங்கு ஒன்று தான் கிடைக்கும். இதற்கும் இங்கு சுற்றிலும் விவசாய நிலம் தான். (தற்சமயம், இணையத்தில் விலைவாசியை ஒப்பிட்டுப் பார்த்தால், டென்வர் தான் விலைவாசி மிகுந்த நகரம் என்று காட்டுகிறது. இப்ப, உயர்ந்துவிட்டதோ?!!)


மினசோட்டா என்றால் எக்கசக்க ஏரிகள் கொண்ட மாநிலம் என்று அறிந்திருந்தேன். கூகிள் மேப்பில் பார்த்தாலே, திட்டு திட்டாக நீல நிறத்தில் ஏரிகளின் பெரும் எண்ணிக்கை தெரியும். "Land of 10000 lakes" என்று தான் மாநிலத்திற்கே பெயர். பத்தாயிரம் ஏரிகள் என்று கேள்விப்பட்ட போது, சும்மா தேங்கி கிடங்கும் தண்ணீரை எல்லாம் ஏரிகள் என்று கணக்கெடுப்பார்களோ? என்று நினைத்திருந்தேன். அப்படியெல்லாம் இல்லை போலும். குறைந்த பட்சம், இத்தனை பத்து ஏக்கருக்கு மேல் உள்ள நீர் நிலைகளை மட்டுமே கணக்கெடுத்து, அதுவே பத்தாயிரத்திற்கு மேல் உள்ளது.

இதனால் எங்கு பார்த்தாலும் ஏரிகளாக இருக்கும். சில இடங்களில் கூடவே பூங்கா, நண்பர்கள் உறவினர்கள் கூடி உணவு உண்ண மேஜைகள் அமைப்புடன் பிக்னிக் ஏரியாக்கள், குழந்தைகள் விளையாட ஏரியில் மடை அமைத்து சிறு நீச்சல் குளம் போன்ற ஏற்பாடுகள், கடற்கரை போன்று ஏரிக்கரை - இவையனைத்தும் ரம்மியமாக பொழுது போக்க அருமையான இடங்களாக அமைந்திருக்கின்றன.



வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப, ஏரிக்கேற்ப பெடல் போட், கயாக், மோட்டார் போட், வாட்டர் பைக் போன்றவைகளும் உண்டு. தண்ணீரில் மிதக்க ஆசைப்படுபவர்களுக்கு கொண்டாட்டமான ஊர் இது.

டென்வரில் இருக்கும் போது, வீட்டுக்கு பக்கத்திலேயே இந்திய ரெஸ்டாரண்டுகள், நம்மூர் காய்கள், கறிகள், மீன்கள் வாங்க ஆசிய, மத்திய கிழக்கு நாட்டு பலசரக்கு கடைகள் இருந்தன. எது வேண்டுமென்றாலும் உடனே வாங்கி வரலாம். சமைத்துக் கொண்டு இருக்கும்போதே ஏதேனும் இல்லாவிட்டால், அடுப்பை அணைக்காமல் வாங்கி வந்து சமையலை முடிக்கலாம். அதுபோல் தான், தமிழ் திரைப்படங்கள் திரையிடும் திரையரங்குகளும். படம் போடுவதற்கு பத்து நிமிடங்கள் முன்பு வீட்டில் இருந்து கிளம்பலாம்.

இங்கு நாங்கள் இருக்கும் அபார்ட்மெண்ட் அமைந்திருக்கும் பகுதிக்கு தான் இந்த நிலைமையா, தெரியவில்லை. அனைத்தும் 10, 15, 20 மைல் தொலைவுகளில். எதையும் பொடிநடையாக சென்று வாங்கி வர முடியாது. இரண்டு திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்கள் வந்தாலும், சில படங்களுக்கு முதல் நாள் டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும். அதனால், படம் பார்க்க, டிக்கெட் ரிசர்வ் செய்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பே கிளம்பினால் தான், படம் போடும் நேரத்திற்கு திரையரங்கை அடைந்து முதலில் இருந்து படம் பார்க்க முடியும். மற்றபடி, ஆங்கிலப் படங்கள் காண வீட்டின் பக்கத்திலேயே ஒரு நல்ல தியேட்டர் இருக்கிறது. படுத்துக் கொண்டே படம் பார்ப்பதற்கு ஏதுவான சோபாக்கள் கொண்ட தியேட்டர். செவ்வாய்கிழமைகளில் ஐந்து டாலர் டிக்கெட்.



மினசோட்டாவின் முக்கிய அம்சமான குளிரைப் பற்றி பேசுவோம். டென்வரில் செப்டம்பரிலேயே பனி பெய்யத் தொடங்கி பார்த்திருக்கிறேன். போலவே, மே மாதம் வரை பெய்தும் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒருநாள் பனி பெய்தால், அடுத்த நாள் வெயில் அடிக்கும். பனி உருகும். குளிர் ரொம்பவும் வாட்டாது. ஆனால், இங்கு நவம்பரில் தொடங்கும் பனி, பிப்ரவரியில் முடிந்தாலும், அதன் வீரியம் அதிகம். வெளியில் ஒரு நிமிடம் நிற்க முடியாது. கட்டிடங்களுக்குள்ளேயே நம்மை கட்டுப்படுத்தி வைத்துவிடும்.



குளிர் காலங்களில் வெளியில் நடமாடுவதில் இருக்கும் பிரச்சினையைச் கருத்தில் கொண்டு, மினியாபோலிஸ் மற்றும் செயிண்ட் பால் - இரு ஊர்களிலும் ஸ்கைவே எனப்படும் கட்டிடங்களை இணைக்கும் நடைபாதைகளை அமைத்திருக்கிறார்கள். அதை பற்றி விலாவரியாக, நான் எழுதிய கட்டுரை இங்கே.

பஸ் வசதி அனைத்து இடங்களிலுமே மினியாபோலிஸில் உண்டு. ஆனால், அனைத்தும் டவுண்டவுனுக்கு தான். டவுண்டவுனில் வேலை பார்ப்பவர்கள், அனைத்து சுற்று வட்டாரத்தில் இருந்தும் வந்து விடலாம். டவுண்டவுன் வழியில் இல்லாதவர்களுக்கு சிரமம்தான் என்று நினைக்கிறேன். டென்வரில் இவ்வளவு பஸ்கள் பார்த்ததில்லை என்றாலும், பலதரப்பட்ட இடங்களுக்கு செல்வதை, சென்று பார்த்திருக்கிறேன். அதே சமயம், இங்கு மாநில பொருட்காட்சி, விளையாட்டு போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அனைத்து பகுதிகளில் இருந்தும் விடுவார்கள். சில சமயம், இலவச சேவையாக. நிறைய இடங்களில், காரை பார்க் செய்து விட்டு பஸ்ஸில் செல்வதற்கு ஏதுவாக, பார்க் & ரைட் (Park and Ride) வசதிகள் உள்ளன. அது இங்கு இலவசம். டென்வரில் மாத கட்டணம் உண்டு.

பெரும்பாலும், வேலை நாட்களில் பஸ்ஸில் செல்வது தான் வசதி. நகரமெங்கும் நிறைய ஹைவேக்கள் உள்ளன. அதிலும் பேருந்துகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், கூட்டாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செல்லும் வாகனங்களுக்கும் (Car pool) தனி பாதைகள் (Lane) இருக்கும். மொத்த சாலையும் ட்ராபிக்கில் திணறும் போது, இதில் சிரமமில்லாமல் செல்லலாம். மாத கட்டணம் செலுத்தியும் இதில் செல்லலாம்.

நான் டென்வரில் கார் டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருந்தேன். அங்கு டிரைவிங் லைசன்ஸ் எடுக்க, முதலில் ஒரு பரீட்சை எழுத வேண்டும். பிறகு, வெளியிடங்களில் கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் இடங்களிலேயே, நாம் கார் ஓட்டுவதை சோதித்து ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். அதைக் கொண்டு சென்று, அரசு போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்தால், கண் பரிசோதனை செய்து விட்டு விசா ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் லைசன்ஸ் கொடுத்து விடுவார்கள். இங்கும் அதேப்போல் தான். ஆனால், அரசு அதிகாரியே அரசாங்க சோதனை மையத்தில் நாம் கார் ஓட்டுவதைப் பரிசோதிப்பார்கள். சோதனை தான். விசாரித்த வரையில், இது கஷ்டம் என்கிறார்கள். நான் டென்வரில் லைசன்ஸ் எடுத்திருந்ததால், இங்கு வந்த பின் மினசோட்டா லைசன்ஸ் வாங்க வேண்டியிருந்தது. நல்ல வேளை, பரீட்சை மட்டும் எழுத சொன்னார்கள். அதுவே சிரமபட்டு எழுதி தான் வாங்கினேன்.



இந்த ஊர் சிறப்பு என்று farmers market என்றழைக்கப்படும் உள்ளுர் உழவர் சந்தையைச் சொல்லலாம். நகரின் பல இடங்களில் இது நடைபெறுகிறது. டவுண்டவுன் பக்கம் லின்டேல் அவின்யூவில் வாரயிறுதியில் நடைபெறும் சந்தை பெரியது. அனைத்து வித காய்கறிகளும் கீரைகள், பழங்கள், மலர்கள், ரொட்டி, சீஸ் போன்ற உணவு பொருட்களும் கிடைக்கும். விற்பனை பொருட்கள், சின்ன சின்ன அட்டை பெட்டிகளில் பிரித்து வைக்கப்பட்டு ஒரு பெட்டி $3 க்கும் இரண்டு எடுத்தால் $5க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. பட்டர் பீன்ஸ் என்று ஊரில் விற்கப்படும் ஒரு வகை பீன்ஸ்ஸை நீண்ட நாட்கள் கழித்து அமெரிக்காவில் முதல் முறையாக இங்கு வாங்க முடிந்தது. கீரை வகைகள் எக்கச்சக்கமாக இங்கு கிடைக்கும். போய் பார்த்தோமானால், ஆளுக்கொரு மரக்கொப்புடன் சுற்றுவார்கள்.



டைம் பாஸ் என்று பார்த்தால், பார்க், பீல் எல்லாம் ஏரிகள் தான். குளிர்காலத்தில் செல்ல மால் ஆப் அமெரிக்கா. எல்லாம் மால்களைப் போல தான். என்ன, கொஞ்சம் பெரிசு. மாலின் நட்ட நடுவில் ஒரு குழந்தைகள் விளையாட ஒரு தீம் பார்க். அப்புறம், ஒரு அக்வேரியம். மற்றபடி, எல்லா மால்களிலும் உள்ள துணிக்கடைகள், உணவகங்கள் என இருப்பது தான். குளிர்காலத்தில், அவுட்டோர் எங்கும் செல்ல முடியாதபோது, மால் ஆப் அமெரிக்காவும் மற்ற மால்களும் தான் தஞ்சம் புக ஏற்ற இடங்கள். என்னளவில், கோடைக்காலத்தில் இதை யோசிக்க முடியாத வகையில், பல்வேறு நிகழ்வுகள் இங்கே நடைபெறுகிறது.

இந்த ஊரில் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் பிளவுபடாமல் ஒருங்கிணைந்து இருந்தால் நன்றாக இருக்கும். இந்திய நிகழ்ச்சிகளில் இரு வேறு குழுக்களாக தமிழகம் இடம் பெறுவதைப் பார்க்கும் போது நன்றாக இருப்பதில்லை. இச்சங்கங்கள் இரண்டு தமிழ் பள்ளிகளை நடத்துகின்றன. ஆக, குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனக்கும் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, தனிப்பட்ட அளவில் மகிழ்ச்சியை தந்தது. இந்தியாவில் கூட, தமிழ்நாடு தவிர்த்து வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழ் கற்றுக்கொள்ள கிடைக்காத வாய்ப்பு, அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இருக்கிறது.

முன்பே, பனிப் பூக்கள் பற்றி எழுதியிருக்கிறேன். மினசோட்டாவில் இருந்து வெளிவரும் சஞ்சிகை. நான் எழுதிய கட்டுரைகளும் வெளிவருவதுண்டு. பனிப்பூக்கள் மூலமாக தமிழகப் பேச்சாளர் திருமதி. சுமதி ஸ்ரீ அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

ஊரை விட்டு வெளியே பார்த்தோமானால், பக்கத்திலேயே சிகாகோ இருப்பதால், காரை எடுத்துக்கொண்டு அடிக்கடி சென்று வரலாம். சில மாதங்கள் முன்பு, ரஹ்மான் வந்திருந்தபோது, போய் பார்த்துவிட்டு வந்தோம். கச்சேரியில் தான்!!

மொத்தத்தில், மினியாபோலிஸில் முதல் வருடம் நன்றாகவே சென்றது. ஆபிஸ், வீடு என்றில்லாமல் வேறு பல வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்துள்ளதால், அதுவும் மகிழ்ச்சியே. குளிர் நம்மை கட்டுபடுத்தி வைப்பதால், அது ஒரு கடியாக இருக்கிறது. அதை ஆளுவதற்கும் சில திட்டங்கள் உள்ளன. அதை இந்த வருடம் செயல்படுத்தி, என்ன ஆனதென அடுத்த வருடம் சொல்கிறேன்.

.

Tuesday, September 15, 2015

Festival of Nations - ஒற்றை கூடாரத்தில் உலக கலாச்சாரங்கள்

பனிப்பூக்கள் ஜுலை சஞ்சிகையில் வந்த கட்டுரை.

----

ஏப்ரல் 30 ஆம் தேதியில் இருந்து மே 3ஆம் தேதி வரை செயிண்ட் பால் ரிவர் செண்டரில், இவ்வருடத்திய பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ் நடைப்பெற்றது. இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டிடூட் ஆப் மினசோட்டா அமைப்பால், வருடா வருடம் நடைபெறும் இந்த கலாச்சார பரிமாறல் திருவிழா, இந்த வருடமும் சிறப்பாக நடந்து முடிந்தது. இது எண்பத்தி நான்காம் வருடம். இவ்வளவு வருட காலம், இது போல் தொடர்ந்து வேறெங்கும் நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை.



முதலில் இதுபோல் ஒரு நிகழ்வை, எல்லா இடங்களிலும் நடத்த முடியாது. ஏனென்று பார்ப்பதற்கு முன்பு, இந்த அமைப்பை பற்றியும், இந்த நிகழ்வை பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
வந்தேறிகளின் தேசமான அமெரிக்காவிற்கு, உலகின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் குடிபெயர்கிறார்கள். அம்மக்களுக்கு உதவும் விதமாக, அவர்களுக்கு தேவைப்படும் சேவைகளை வழங்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1919இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, புதிதாக அமெரிக்காவில் குடிபுகுபவர்களுக்கும், அகதிகளாக இடம்பெயர்பவர்களுக்கும் தேவையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. 1932இல் இருந்து இந்த அமைப்பு, இவ்வாறு குடிபெயரும் மக்களின் கலாச்சாரத்தை அம்மக்களுடன் கொண்டாடும் விதமாக, 'பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்' என்னும் இந்த நிகழ்வை நடத்திவருகிறது. எண்பதுக்கும் மேற்பட்ட கலாச்சார குழுக்களுடன் இணைந்து, இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 


அதிக எண்ணிக்கையில், உலகின் வேறுபட்ட இனக்குழுக்கள் வசிக்கும் நாடு என்று அமெரிக்காவை தாராளமாக சொல்லலாம். உலகின் குடிபெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 20 சதவிகிதம் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அமெரிக்காவில் வசிப்பவர்களில் 15 சதவிகிதம் - மற்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு எண்ணிக்கையில் குடிபெயருதல் இல்லை. அதனால் தான், இம்மாதிரியான கலாச்சார சங்கமம் நடத்த ஏதுவான இடமாக அமெரிக்கா இருக்கிறது.

----

ஒரு இனக்குழுவின் கலாச்சாரத்தை ஓரளவுக்கு அறிந்துக்கொள்ள, அவர்களின் உணவுகள், உடைகள், உடுப்புகள், அணிகலன்கள், கலைகள், படைப்புகள், மேலும் அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்திருந்தல் தேவை. இவற்றை தான், இந்த விழா நமக்கு அளிக்கிறது. உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்களை சுருக்கமான அறிந்துக்கொள்ள, மினசோட்டா வாழ் மக்களுக்கு ஒரு சுலப வழியை இந்த விழா ஏற்படுத்திக் கொடுக்கிறது. இத்தனை வேறுபட்ட, பெரும் எண்ணிக்கையிலான கலாச்சாரங்களை இந்த விழாவில் காண முடிவது ஒரு சிறப்பு என்றால், இன்னொரு பக்கம், அவற்றை மேலோட்டமாக மட்டுமே தெரிந்துக்கொள்ள முடியும் என்பது தவிர்க்க முடியாத குறை.



செயிண்ட் பால் நகரின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் ரிவர் செண்டரில் மூன்று மிகப்பெரிய தளங்களில் இந்த விழா நடைப்பெற்றது. கீழ்தளத்தில் முதலில் நுழையும் இடத்தில் ஒரு வட்ட வடிவ சிறு அரங்கில் கலை நிகழ்ச்சிகளும், அதற்கு அடுத்த பெரும் அரங்கில் உணவு உலகமும் நடைப்பெற்றது. அடுத்து, பக்கத்தில் இருக்கும் மற்றொரு பெரிய தளத்தில், உலக பொருட்சந்தை. மேல் தளத்தில் இருக்கும், வேர்ல்ட் ஸ்டேஜ் எனப்படும் பெரிய ஆடிட்டோரியத்தில்  பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பக்கத்தில் இருக்கும் அரங்கில் கலாச்சார கண்காட்சியும் நடைபெற்றது.

----

நாங்கள் நுழைந்த நேரம் - ஞாயிறு மதியம் ஒரு மணி. என் சகதர்மிணி தான், இந்த நிகழ்ச்சியை பொருட்டு, சண்டே சமையலில் இருந்து எஸ்கேப் என்று நினைத்தால், வந்திருந்த கூட்டத்தை பார்த்தால், பல வீட்டில் அது தான் நிலைமை என்று தெரிந்தது. ஒரு வாய் ஆப்பிரிக்க உணவு, இன்னொரு வாய் அரேபிய உணவு, அடுத்த வாய் இட்டாலியன் உணவு என கிருஷ்ணன் வாயில் உலகம் இருந்தது போல், நம் வாயில் அன்று உலக உணவு இருந்தது.





இந்திய, பாகிஸ்தானிய, வங்காள தேச உணவுகளில் பெரிய வேறுபாடு இருப்பதில்லை. அங்காளி, பங்காளி வீட்டு உணவுதானே? அப்படி தான் இருக்கும். எப்போதும் சாப்பிடுவதுதானே? என்று அவற்றை ஸ்கிப் செய்துவிட்டோம். செங்கிஸ்கானாய், ஹிட்லராய் அன்னிய உணவு ஸ்டால்களுக்கு படையெடுத்தோம். சாப்பிடாததை சாப்பிடணும், அதற்காக அளவாய் சாப்பிடணும் என்று உணவு போர் விதிமுறை அமைத்துக்கொண்டோம்.



பிரச்சினை என்னவென்றால், உணவு பெயரை வைத்தோ, உணவை பார்த்தோ - அதன் சுவையைக் கணிக்க முடிவதில்லை. பெயரை விசாரித்து, தயாரிப்பு பொருட்களை கேட்டறிந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டியதாக இருந்தது. கடைக்காரர்கள் அனைவரும் பொறுமையாக விளக்கி விற்றார்கள். கடையில் உணவு பரிமாறியவர்கள், அவர்களது கலாச்சாரத்தை பிரதிப்பலிக்கும் உடைகளை அணிந்திருந்தனர். வெளியிலும் அப்படி நிறைய பேர் வித்தியாசமான உடைகளில் சுற்றிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. 




அரிசி மாவும், தேங்காயும் கலந்து செய்த பிலிப்பினோ இனிப்பு வகையான 'கரியகோ' (Carioca) பிடித்திருந்தது. பிலிப்பைன்ஸின் ஜிகர்தண்டாவான 'சகோ'வை (Sago), ஒரு சகோதரியிடம் வாங்கி குடித்தோம். அபார சுவை. சோள மாவுக்குள் மொஸரெல்லா சீஸ் வைத்து செய்த கொலம்பிய 'அரெபஸ்' (Arepas) சுமார். பார்க்க பரோட்டா போல் இருந்ததால் வாங்கி ஏமாந்தோம். சூடான் கீமா உருளைக்கிழங்கில் (Gheema Potatoes) நம்மூர் சுவை. கூடவே கிடைத்த சிக்கன் கபாப்பிலும் அதே. தைவான் எக் ரோலும், பாட் ஸ்டிக்கர்ஸும் (Pot stickers) வழக்கமான சுவை. கொஞ்சமாய் எண்ணெய் அதிகம். பழைய தினத்தந்தி ஏதும் கிடைக்காததால், டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்து சாப்பிட வேண்டியதாக போயிற்று. டனிஷ் கடையில் செய்துக்கொண்டிருந்த ஏபில்ஸ்கிவரை (Aebleskiver) பார்க்க, அப்படியே நம்மூர் குழிப்பணியாரம் செய்வது போல் இருந்தது. சைஸ் தான் பெருசு. சுகர் பவுடர் போட்டு, ஸ்ட்ராபெர்ரி சாஸில் தருகிறார்கள். இனிப்பு.
அந்த அரங்கின் ஒரு ஓரத்தில் இந்திய சங்கீத கச்சேரி நடந்துக்கொண்டிருந்தது. மூன்று வரிசைகளில் பார்வையாளர்கள் இருந்தனர். பெரும்பாலும் இந்தியர்களே.


இந்திய கடையில் தோசையை சுட சுட சுட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். சமோசா, சன்னா மசாலா, மேங்கோ லஸ்ஸி என இந்திய சம்பிரதாயங்கள். இது சிரமமான விஷயம் தான். இந்திய கலாச்சார உணவை, முழுமையாக காட்ட வேண்டுமெனில், அதற்கே தனியாக விழா வேண்டும். நாம் நினைப்பது போல் தானே, மற்றவர்களுக்கும் இருக்கும்? அதனால் ஒவ்வொருவரின் உண்மையான முழுமையான உணவு கலாச்சாரமும், நாம் கண்டிராத வேறொரு கலாச்சாரமாக,  வாழ்ந்தாலொழிய அறிய முடியாததாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, அடுத்த தளத்திற்கு சென்றோம்.







அங்கு பல நாடுகளின் கைவினை பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. வெனிசூலா பொம்மை கடையில் விற்ற, குரங்கு சைக்கிளை, பெரும்பாலான குழந்தைகள் ஓட்டி, உருட்டி சென்றுக்கொண்டிருந்தார்கள். இந்திய பட்டங்கள் (kites) விற்கும் கடையும் ஒன்று இருந்தது. பெரும்பாலான கடைகளில், உடைகளும், அணிகலன்களும், பை வகைகளும் மிகுதியாக காணப்பட்டது. ஒரே பொருளை, ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு எவ்வளவு வேறுபாட்டுடன் செய்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் நம் கலாச்சாரம் புதைந்துக்கிடக்கும் அதிசயம் புரியும்.





அடுத்ததாக, மேல்தளத்தில் இருக்கும் அரங்கில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் காண சென்றோம். நாங்கள் சென்ற போது, செக்கெஸ்லோவியா நடனம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அது முடிய, அடுத்ததாக இந்திய நடனம் தொடங்கியது. ஒரு தென்னிந்திய நடன குழு, தென்னிந்திய உடையில் நடனமாடினார்கள். அனிருத், யுவனின் இசை துணுக்குகள் கொண்ட தொகுப்பிற்கு சுமார் எட்டு நிமிடங்களுக்கு ஆடினார்கள். மொத்தமாக, நான்கு நாட்களில் 30 நிமிடங்களை, இந்திய குழுக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். மற்ற குழுக்கள், என்ன நடனமாடினார்கள் என்று தெரியவில்லை. இதுதான் இந்திய கலாச்சாரமா என ஒரு கேள்வி எழ, பிறகு இப்படிதானே தற்சமயம் நம்மூரிலும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பதிலாக நினைவுக்கு வந்தது. அதற்கு பிறகு, மேடையை பொது சனங்களின் நடனத்திற்கு விட, அங்குள்ள இசைக்குழுவினர் அமைத்த நேரடி மேற்கத்திய இசைக்கு, பல ஊரு குட்டீஸ் புகுந்து ஆட்டம் போட்டார்கள். அவையெல்லாம் மேற்கத்திய புகழ்பெற்ற பாடல்கள் போலும். அங்கிருந்தவர்களின் வாய் தன்னிச்சையாக அப்பாடல்களுக்கு 'டப்மாஷ்' செய்தது. நிறைய பாடல்களைக் கேட்கும் போது, பாரபட்சமில்லாமல் பல நம்மூர் பாடல்கள் நினைவுக்கு வந்தன. நம்மூர் இசையமைப்பாளர்களின் கலாச்சார கடத்தலை பாராட்ட வேண்டாம்?!!






இதற்கு அடுத்த தளத்தில், ஒவ்வொரு நாட்டின் கலாச்சார கலைகளை விளக்கும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. மற்ற தளங்களில் பார்க்க முடியாத இலங்கை, இங்கு இருந்தது.
வெளியில், இந்திய மருதாணி கடையில் நல்ல கூட்டம். அனைத்து நாட்டு மக்களும், ஆர்வத்தோடு கையில் ஹென்னா போட்டுக்கொண்டார்கள். பெரும்பாலும், குழந்தைகளும் பிறகு இளைஞிகளும். வந்த வழியே திரும்பி, விட்ட இடங்களைப் பார்த்து நிரப்பிக்கொண்டு, வெளியே வந்தோம். உள்ளே நுழையும் போது, மழைக்கான அறிகுறியே இல்லாதது போல் இருந்தது. ஆனால், வெளியே வந்த போது, மழை பெய்து முடித்திருந்தது.





----

கலாச்சாரங்கள் மாறிக்கொண்டே வருபவை. கால ஓட்டத்தில் அவை ஒன்றோடு ஒன்று கலக்கும். வெவ்வேறு கலாச்சாரங்கள் உரசும் போது, எழும் எதிர்வினைகள் முக்கியமானவை. நல்லது, கெட்டது என இரண்டுமே அவற்றில் உண்டு. பலவித கலாச்சாரங்கள் கொண்ட இனக்குழுக்கள் வாழும் அமெரிக்கா போன்ற நாட்டில் ஏற்படும் கலாச்சார மாற்றங்களுக்கு, இது போன்ற வேறுப்பட்ட கலாச்சாரங்களின் கலப்புகள் முக்கிய பங்காற்றுகிறது. கால ஓட்டத்தில் கலாச்சார பதிவுகளும், பரிமாற்றங்களும் தேவையானதாக இருக்கிறது. அதற்காகவே, 'பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்' போன்ற விழாக்கள் தேவைப்படுகிறது.



இம்முறை தவற விட்டவர்கள், கவலை வேண்டாம். அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம். வருட வருடம் நடக்கிறதே! இம்முறை வந்தவர்கள், இன்னொரு நாட்டிற்கு குடிப்பெயராமல் இருந்தால், எப்படியும் அடுத்த முறை கண்டிப்பாக மறுபடியும் வருவார்கள்.

மேலும் தகவல்களுக்கு,



Tuesday, June 2, 2015

சிகாகோவில் ஏ ஆர் ரஹ்மான் - ஓர் இசையனுபவம்


இது பல நாள் கனவு.

தேடித் தேடி ரஹ்மான் இசையை கேட்டவன், காலங்கள் கடந்து ரஹ்மானுடன் சேர்ந்து தனது இசை ரசனையையும் கடந்தவன், மொக்கைப்படமாக இருந்தாலும் ரஹ்மான் இசைக்காக முதல் நாளே பார்த்தவன் என இருக்கும் ஒரு ரஹ்மான் ரசிகனின் இயல்பான ஆசையே, ரஹ்மான் இசைக்க நேரில் பார்க்க வேண்டும் என்பது. எனது அந்த ஆசை நேற்று (மே 31) நிறைவேறியது.

இன்று அதை பற்றிய பதிவை, ராஜாவின் பிறந்த நாளன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மின்னியாபொலிஸில் இருக்கிறேன். சிகாகோவில் நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டவுடன் 7 மணி நேர பயணம், மிக சிறிய பயணமாக தோன்றியது. உடனே டிக்கெட் புக் செய்துவிட்டேன். தவறவிட கூடாத சந்தர்ப்பமாக தோன்றியது.

இதற்கென ஒரு பட்ஜெட்டை ஒதுக்க வேண்டி இருந்தாலும், வாழ்வின் மிக முக்கிய செலவாகவே தோன்றியது. வாய்ப்பு எப்போதும் இருக்காதல்லவா?

போன வாரம் தான் லாங்வீக் எண்ட் என்று சவுத் டக்கோட்டாவிற்கு, நண்பர்கள் குடும்பத்துடன் சென்றிருந்தேன். திரும்ப அடுத்த வாரமே மற்றுமொரு பயணம் என்று கொஞ்சம் சலிப்பாகவும், மற்றவர்களிடம் கூற சங்கடமாகவும் இருந்தது. ஆனாலும், ரஹ்மான்...

இது தான் முதல் முறை சிகாகோ செல்கிறேன். விமானப்பயணத்தின் போது, விமானம் மாறுவதற்கு சென்றிருக்கிறேன். ஊருக்குள் செல்வது இப்போது தான்.

வாடகைக்கார் எடுத்து செல்வது வசதியாக இருந்தது. காரில் பெரும்பாலும் ரஹ்மான் இசையே. ஆரம்பத்தில் அப்படியே சிகாகோவையும் சுற்றிப்பார்த்துவிட்டு வருவது தான் திட்டமாக இருந்தது. பிறகு, இந்த வாரம் சிகாகோவில் பெய்த மழையும், மனைவி உடல் நிலை காரணமாக கொஞ்சம் டல்லாக இருந்ததாலும், பெரிதாக எங்கும் சுற்றவில்லை. சிகாகோ பெருமாள் கோவில் சென்று முருகனுக்கு முதலில் அர்ச்சனை செய்தோம்.

கோவிலில் உணவு சூப்பர். இட்லி, வடை, புளி சாதம், பொங்கல் என கொஞ்சம் கொஞ்சம் பல வெரைட்டி சாப்பிட்டோம். இந்த புளி சாதத்தின் பெருமையை மின்னியாபொலிஸ் வரை பேசுகிறார்கள்.

நிகழ்ச்சி இரவென்றாலும், மதியமே டவுண்டவுன் சென்று விட்டோம். கால் நடையாக அப்படியே ஊரைச் சுற்றி வந்தோம். சைனா டவுண் வரை சென்று ஒரு பார்வை விட்டு வந்தோம்.

தெருவெங்கும் இந்தியர்களை காண, அனைவரும் ரஹ்மானைக் காண வந்தது போலவே தோன்றியது. ஆங்காங்கே குழுமி இருந்த கூட்டம், நேரமாக ஆக அரங்கின் முன் குவிய தொடங்கினர். எப்படியும் டிக்கெட்டில் இருக்கும் சீட் நம்பர் தான் என்பதால், நான் சாவகாசமாக செல்லலாம் என்றிருந்தேன். மனைவிக்கோ கூட்டத்தைக் கண்டு டவுட். சீக்கிரம் செல்ல கூறிக்கொண்டே இருந்தார். சமாதானப்படுத்தி அழைத்து சென்றேன்.

அரங்கின் பெயர் - ஆடிட்டோரியம் தியேட்டர். சிகாகோவின் பழைமையான அரங்கம். பழமையும், பிரமாண்டமும், கம்பீர அழகும் கூடியதாக இருந்தது. மஞ்சள் விளக்குகளின் பிரகாசத்தில் தங்கமாக ஜொலித்தது. நிகழ்ச்சிக்கு காத்திருக்கும் நேரத்தில், கண்கள் கட்டிட கலையின் அழகில் நேரத்தை செலவிட்டது.

எங்காவது ஒரு சின்ன ஒளிகீற்றல் தெரிந்தாலே, அரங்கம் கதறியது. ரஹ்மான் இசையமைப்பாளர் மட்டுமல்ல. பலருக்கு ரோல் மாடல் என்று தெரியும். வெறித்தனமான ரசிகர்கள் கொண்ட தலைவராகவும் அங்கு தெரிந்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, ரஹ்மான் பற்றிய ஒரு விஷுவலுடன் தொடங்கினார்கள். அது வெறியை இன்னமும் ஏற்றியது. ரஹ்மான், ரஜினி படங்களுக்கு கூட அடித்திராத மாஸ் ஓப்பனிங்க் இசை அதற்குக் கொடுத்திருந்தார்.

என்னை அறியாமல் கத்துவேன் என்று முன்பே அறிந்திருந்தேன். அறிந்தே கத்தினேன். கத்தினோம். என் பொண்ணுக்கு என்னுடைய இந்த செய்கை வித்தியாசமாக இருந்திருக்கும். ஸ்கூலில் டீச்சர் சொல்வது போல், ஆள்காட்டி விரலை வாயின் குறுக்காக வைத்து, 'உஸ் உஸ்' என்றாள். சிரிப்பாக வந்தது. மனைவி டல்னெஸ் முற்றிலும் போயிருந்தது.

என்னை விடுங்கள். தன்னிலை மறந்த பலரை அங்கு கண்டேன். குடும்பமாக வந்த பலரும் தரை டிக்கெட் ரசிகர்களாக கூச்சலிட்டுக்கொண்டு இருந்தனர். வந்திருந்த குழந்தைகள், குழம்பிப் போயிருப்பார்கள்.

விஷுவல் முடிய, ரஹ்மான் வெள்ளை உடையில் மேடையில் தோன்றினார். பலத்த கரவோஷம். ஆரவாரம். அடங்க நேரமாயிற்று. ரஹ்மான் பேசுவது, நிகழ்ச்சி முழுக்க காதில் விழாதவாறு சத்தம், சத்தம். சத்தம்.







சிறு குழுதான். ஆனால், அவர்களது தரம் - துல்லியம், உலகத்தரம்.









மேடையின் ஒளியமைப்பும், ஒலியமைப்பும் சர்வதேச தரம் எனலாம். பாடலுக்கு ஏற்ற காட்சிகள், பின்னால் திரையில் காட்டப்பட்டது. ஒரு பெண்மணி நடனமும் ஆடினார். அதுவே, தேவையே இல்லை என்பது போல் இருந்தது.



ஒவ்வொரு நிமிடமும் கனவைப்போல் இருந்தது.



டிவியில் மட்டுமே கண்ட ரஹ்மான், நேரில். இங்கும் அப்படியே இருக்கிறார். அப்படியே தானே இருப்பார்? கைக்குலுக்குவது தான் அடுத்த நோக்கம்!!!



வந்திருந்தவர்களில், தமிழர்கள், தெலுங்கர்கள், ஹிந்தியர்கள்(!!!), வெள்ளையர்கள் என பல வெரைட்டி இருந்தார்கள். ரஹ்மான் எப்படி அனைவரையும் திருப்திப்படுத்துவார்? என்பது சுவாரஸ்ய கேள்வியாக இருந்தது. எத்தனை மேடைகள் பார்த்திருப்பார்? ரசிகர்கள் நாடித்துடிப்பை அறிந்தவர். அதனால் தான் இத்தனை உயரம்.






பாடல் வரிசை இந்த காலத்திற்கு ஏற்ப, புதுப்பாடல்களுடனும், அவருடைய கிளாசிக் பாடல்களுடனும் அமைந்திருந்தது. தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் வந்த பாடல்கள், மிக்ஸ் செய்து பாடப்பட்டது. சரணம் ஒரு மொழி, பல்லவி ஒரு மொழி என. இரு ஆங்கில பாடல்கள் பாடப்பட்டது. பின்னணி இசை இசைக்கப்பட்டது.

முதலில் பாடப்பட்டது, அவருடைய 'சாமி' பாட்டு என நினைக்கிறேன். ஹரிசரணும் ரஹ்மானும் பாடினார்கள். ஹரிசரண், ரஹ்மானின் ஆஸ்தான பாடகராகிவிட்டார். பெண் பாடகிகளில், ஜோனிதா காந்தி. இருவரும் அவ்வப்போது ஆட்டமும் போட்டார்கள்.



ஒரு குறை. முதன்முதலில், இசை கலைஞர்களுக்கு கேசட்டில் பெயர் போட்டவர், இங்கு மேடையில் ஒவ்வொரு இசைக்கலைஞரையும் பெயர் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தவில்லை.

ரோஜா, பம்பாய், ஐ, ஓகே கண்மணி, அலைப்பாயுதே, சில்லென ஒரு காதல், கடல், குரு, ராக் ஸ்டார், தால், ஹைவே, உயிரே, 127, ஸ்லம் டாக் மில்லினியர் படங்களில் இருந்து பாடல்கள் பாடப்பட்டது. ஒரு ரஜினி பாடல் எதிர்ப்பார்த்தேன். இல்லை. இந்த லிஸ்ட்டை இப்போது பார்க்கும் போது தான் தெரிகிறது. மெஜாரிட்டி, மணிரத்ன படங்கள். அதற்கே வரவேற்பும் பலமாக இருந்தது.




நிகழ்ச்சியும் வடிவமைப்பு, ஒரு பிரமாண்ட திரைப்படத்திற்கு உரிய நேர்த்தியுடன் இருந்தது. இரண்டு- இரண்டரை மணி நேர நிகழ்ச்சியில் ரஹ்மான், மூன்று உடைகள் மாற்றினார். (உடைகள் - அவருடைய மனைவியாம். கடைசியில் கிரடிட்ஸ் போட்டார்கள்). நிகழ்ச்சியின் பேக்கேஜிங்கிற்கு பெரிய டீமே உழைத்திருப்பார்கள் போலும். நேர்த்தியான திட்டமிடல். எங்கும் வெயிட்டிங் டைமே இல்லை. ஒரு பாடல் இன்னொரு பாடல் தொடங்கியது. ஒரு சிலரை தவிர, ஒவ்வொருவருக்கும் இடை இடையே சிறு ஒய்வு இடைவெளி கிடைத்தது.






இசைக்கருவியே இல்லாமல் காற்றில் இசையமைக்க இண்டெல் உருவாக்கி இருக்கும் டெக்னாலஜிக்கு 'தீ தீ தித்திக்கும் தீ' பாடல் மூலம் ரஹ்மான் டெமோ கொடுத்தார்.

ரஹ்மான் அமைதியாக இருந்தாலும், இன்ஸ்டாடேனியஸாக ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார். உடனே பாராட்டுகிறார். கூட்டத்தை பாட வைக்கிறார். ஆட வைக்கிறார். தமிழ் பாடல் பாட போவதாக சொல்லி, பஞ்சாபி பாடல் பாடி ஏமாற்றிகிறார். முடிவில் சொல்லாமல், கொள்ளாமல் சென்று விட்டு, பிறகு சர்ப்ரைஸாக வந்து தெறிமாஸ் பாடல்கள் பாடி மெலிதாக ஆடுகிறார். கிரெட்.

அதுவரை உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கூட்டம், கடைசியாக பாடிய பாடலுக்கு நின்றுக்கொண்டு ஆட்டம் போட்டது. அவரது குரலை போலவே, ஒரு ஹை பிட்ச்சிற்கு, ரசிகர்களது உற்சாகமும் உச்சம் தொட்டது. ஜெய்ஹோ பாடலுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.





நிகழ்ச்சி முடிந்தாலும், மக்கள் நகர மனமில்லாமல் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வேறு வழியே இல்லாமல், ஆடிட்டோரிய பணியாளர்கள் கெஞ்சி வெளியே அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு புது அனுபவமாக இருந்திருக்கலாம்.

நமக்கு பிடித்த படைப்பாளியை நேரில் காணும் போது, பல சங்கடங்கள் ஏற்படலாம். அதை நினைத்தே, எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தபோது, ரொம்பவும் மகிழ்வாக இருந்தது. ரஹ்மான் ரசிக மனோபாவம் பல மடங்கு ஏறியிருந்தது. ஏதோ சாதனை செய்த உணர்வு. பல நாட்களுக்கு தேவையான சார்ஜ் ஏறியது போல் இருந்தது. இரவு தூக்கம் வருமா என்றுக்கூட ஒரு சந்தேகம் இருந்தது.

ஆனால், அன்று நடந்த நடை, செய்த பயணங்கள், அனைத்திற்கும் மேல் ஓவர் உற்சாகத்தில் இருந்த மனம் களைத்து கொஞ்சம் ஓய்வை தேட, அன்றிரவு தூக்கம் நன்றாகவே வந்தது.


ஜெய்ஹோ.

எல்லா புகழும் இறைவனுக்கே.

பிகு.- திருஷ்டியாக 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற வாக்கியம் சரியான தமிழ் பாண்ட் இல்லாமல் உடைந்து இறுதியில் திரையில் தோன்றியது.

வீடியோவை விரைவில் இணைக்கிறேன்.

.