Tuesday, September 15, 2015

Festival of Nations - ஒற்றை கூடாரத்தில் உலக கலாச்சாரங்கள்

பனிப்பூக்கள் ஜுலை சஞ்சிகையில் வந்த கட்டுரை.

----

ஏப்ரல் 30 ஆம் தேதியில் இருந்து மே 3ஆம் தேதி வரை செயிண்ட் பால் ரிவர் செண்டரில், இவ்வருடத்திய பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ் நடைப்பெற்றது. இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டிடூட் ஆப் மினசோட்டா அமைப்பால், வருடா வருடம் நடைபெறும் இந்த கலாச்சார பரிமாறல் திருவிழா, இந்த வருடமும் சிறப்பாக நடந்து முடிந்தது. இது எண்பத்தி நான்காம் வருடம். இவ்வளவு வருட காலம், இது போல் தொடர்ந்து வேறெங்கும் நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை.



முதலில் இதுபோல் ஒரு நிகழ்வை, எல்லா இடங்களிலும் நடத்த முடியாது. ஏனென்று பார்ப்பதற்கு முன்பு, இந்த அமைப்பை பற்றியும், இந்த நிகழ்வை பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
வந்தேறிகளின் தேசமான அமெரிக்காவிற்கு, உலகின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் குடிபெயர்கிறார்கள். அம்மக்களுக்கு உதவும் விதமாக, அவர்களுக்கு தேவைப்படும் சேவைகளை வழங்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1919இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, புதிதாக அமெரிக்காவில் குடிபுகுபவர்களுக்கும், அகதிகளாக இடம்பெயர்பவர்களுக்கும் தேவையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. 1932இல் இருந்து இந்த அமைப்பு, இவ்வாறு குடிபெயரும் மக்களின் கலாச்சாரத்தை அம்மக்களுடன் கொண்டாடும் விதமாக, 'பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்' என்னும் இந்த நிகழ்வை நடத்திவருகிறது. எண்பதுக்கும் மேற்பட்ட கலாச்சார குழுக்களுடன் இணைந்து, இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 


அதிக எண்ணிக்கையில், உலகின் வேறுபட்ட இனக்குழுக்கள் வசிக்கும் நாடு என்று அமெரிக்காவை தாராளமாக சொல்லலாம். உலகின் குடிபெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 20 சதவிகிதம் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அமெரிக்காவில் வசிப்பவர்களில் 15 சதவிகிதம் - மற்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு எண்ணிக்கையில் குடிபெயருதல் இல்லை. அதனால் தான், இம்மாதிரியான கலாச்சார சங்கமம் நடத்த ஏதுவான இடமாக அமெரிக்கா இருக்கிறது.

----

ஒரு இனக்குழுவின் கலாச்சாரத்தை ஓரளவுக்கு அறிந்துக்கொள்ள, அவர்களின் உணவுகள், உடைகள், உடுப்புகள், அணிகலன்கள், கலைகள், படைப்புகள், மேலும் அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்திருந்தல் தேவை. இவற்றை தான், இந்த விழா நமக்கு அளிக்கிறது. உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்களை சுருக்கமான அறிந்துக்கொள்ள, மினசோட்டா வாழ் மக்களுக்கு ஒரு சுலப வழியை இந்த விழா ஏற்படுத்திக் கொடுக்கிறது. இத்தனை வேறுபட்ட, பெரும் எண்ணிக்கையிலான கலாச்சாரங்களை இந்த விழாவில் காண முடிவது ஒரு சிறப்பு என்றால், இன்னொரு பக்கம், அவற்றை மேலோட்டமாக மட்டுமே தெரிந்துக்கொள்ள முடியும் என்பது தவிர்க்க முடியாத குறை.



செயிண்ட் பால் நகரின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் ரிவர் செண்டரில் மூன்று மிகப்பெரிய தளங்களில் இந்த விழா நடைப்பெற்றது. கீழ்தளத்தில் முதலில் நுழையும் இடத்தில் ஒரு வட்ட வடிவ சிறு அரங்கில் கலை நிகழ்ச்சிகளும், அதற்கு அடுத்த பெரும் அரங்கில் உணவு உலகமும் நடைப்பெற்றது. அடுத்து, பக்கத்தில் இருக்கும் மற்றொரு பெரிய தளத்தில், உலக பொருட்சந்தை. மேல் தளத்தில் இருக்கும், வேர்ல்ட் ஸ்டேஜ் எனப்படும் பெரிய ஆடிட்டோரியத்தில்  பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பக்கத்தில் இருக்கும் அரங்கில் கலாச்சார கண்காட்சியும் நடைபெற்றது.

----

நாங்கள் நுழைந்த நேரம் - ஞாயிறு மதியம் ஒரு மணி. என் சகதர்மிணி தான், இந்த நிகழ்ச்சியை பொருட்டு, சண்டே சமையலில் இருந்து எஸ்கேப் என்று நினைத்தால், வந்திருந்த கூட்டத்தை பார்த்தால், பல வீட்டில் அது தான் நிலைமை என்று தெரிந்தது. ஒரு வாய் ஆப்பிரிக்க உணவு, இன்னொரு வாய் அரேபிய உணவு, அடுத்த வாய் இட்டாலியன் உணவு என கிருஷ்ணன் வாயில் உலகம் இருந்தது போல், நம் வாயில் அன்று உலக உணவு இருந்தது.





இந்திய, பாகிஸ்தானிய, வங்காள தேச உணவுகளில் பெரிய வேறுபாடு இருப்பதில்லை. அங்காளி, பங்காளி வீட்டு உணவுதானே? அப்படி தான் இருக்கும். எப்போதும் சாப்பிடுவதுதானே? என்று அவற்றை ஸ்கிப் செய்துவிட்டோம். செங்கிஸ்கானாய், ஹிட்லராய் அன்னிய உணவு ஸ்டால்களுக்கு படையெடுத்தோம். சாப்பிடாததை சாப்பிடணும், அதற்காக அளவாய் சாப்பிடணும் என்று உணவு போர் விதிமுறை அமைத்துக்கொண்டோம்.



பிரச்சினை என்னவென்றால், உணவு பெயரை வைத்தோ, உணவை பார்த்தோ - அதன் சுவையைக் கணிக்க முடிவதில்லை. பெயரை விசாரித்து, தயாரிப்பு பொருட்களை கேட்டறிந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டியதாக இருந்தது. கடைக்காரர்கள் அனைவரும் பொறுமையாக விளக்கி விற்றார்கள். கடையில் உணவு பரிமாறியவர்கள், அவர்களது கலாச்சாரத்தை பிரதிப்பலிக்கும் உடைகளை அணிந்திருந்தனர். வெளியிலும் அப்படி நிறைய பேர் வித்தியாசமான உடைகளில் சுற்றிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. 




அரிசி மாவும், தேங்காயும் கலந்து செய்த பிலிப்பினோ இனிப்பு வகையான 'கரியகோ' (Carioca) பிடித்திருந்தது. பிலிப்பைன்ஸின் ஜிகர்தண்டாவான 'சகோ'வை (Sago), ஒரு சகோதரியிடம் வாங்கி குடித்தோம். அபார சுவை. சோள மாவுக்குள் மொஸரெல்லா சீஸ் வைத்து செய்த கொலம்பிய 'அரெபஸ்' (Arepas) சுமார். பார்க்க பரோட்டா போல் இருந்ததால் வாங்கி ஏமாந்தோம். சூடான் கீமா உருளைக்கிழங்கில் (Gheema Potatoes) நம்மூர் சுவை. கூடவே கிடைத்த சிக்கன் கபாப்பிலும் அதே. தைவான் எக் ரோலும், பாட் ஸ்டிக்கர்ஸும் (Pot stickers) வழக்கமான சுவை. கொஞ்சமாய் எண்ணெய் அதிகம். பழைய தினத்தந்தி ஏதும் கிடைக்காததால், டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்து சாப்பிட வேண்டியதாக போயிற்று. டனிஷ் கடையில் செய்துக்கொண்டிருந்த ஏபில்ஸ்கிவரை (Aebleskiver) பார்க்க, அப்படியே நம்மூர் குழிப்பணியாரம் செய்வது போல் இருந்தது. சைஸ் தான் பெருசு. சுகர் பவுடர் போட்டு, ஸ்ட்ராபெர்ரி சாஸில் தருகிறார்கள். இனிப்பு.
அந்த அரங்கின் ஒரு ஓரத்தில் இந்திய சங்கீத கச்சேரி நடந்துக்கொண்டிருந்தது. மூன்று வரிசைகளில் பார்வையாளர்கள் இருந்தனர். பெரும்பாலும் இந்தியர்களே.


இந்திய கடையில் தோசையை சுட சுட சுட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். சமோசா, சன்னா மசாலா, மேங்கோ லஸ்ஸி என இந்திய சம்பிரதாயங்கள். இது சிரமமான விஷயம் தான். இந்திய கலாச்சார உணவை, முழுமையாக காட்ட வேண்டுமெனில், அதற்கே தனியாக விழா வேண்டும். நாம் நினைப்பது போல் தானே, மற்றவர்களுக்கும் இருக்கும்? அதனால் ஒவ்வொருவரின் உண்மையான முழுமையான உணவு கலாச்சாரமும், நாம் கண்டிராத வேறொரு கலாச்சாரமாக,  வாழ்ந்தாலொழிய அறிய முடியாததாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, அடுத்த தளத்திற்கு சென்றோம்.







அங்கு பல நாடுகளின் கைவினை பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. வெனிசூலா பொம்மை கடையில் விற்ற, குரங்கு சைக்கிளை, பெரும்பாலான குழந்தைகள் ஓட்டி, உருட்டி சென்றுக்கொண்டிருந்தார்கள். இந்திய பட்டங்கள் (kites) விற்கும் கடையும் ஒன்று இருந்தது. பெரும்பாலான கடைகளில், உடைகளும், அணிகலன்களும், பை வகைகளும் மிகுதியாக காணப்பட்டது. ஒரே பொருளை, ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு எவ்வளவு வேறுபாட்டுடன் செய்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் நம் கலாச்சாரம் புதைந்துக்கிடக்கும் அதிசயம் புரியும்.





அடுத்ததாக, மேல்தளத்தில் இருக்கும் அரங்கில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் காண சென்றோம். நாங்கள் சென்ற போது, செக்கெஸ்லோவியா நடனம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அது முடிய, அடுத்ததாக இந்திய நடனம் தொடங்கியது. ஒரு தென்னிந்திய நடன குழு, தென்னிந்திய உடையில் நடனமாடினார்கள். அனிருத், யுவனின் இசை துணுக்குகள் கொண்ட தொகுப்பிற்கு சுமார் எட்டு நிமிடங்களுக்கு ஆடினார்கள். மொத்தமாக, நான்கு நாட்களில் 30 நிமிடங்களை, இந்திய குழுக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். மற்ற குழுக்கள், என்ன நடனமாடினார்கள் என்று தெரியவில்லை. இதுதான் இந்திய கலாச்சாரமா என ஒரு கேள்வி எழ, பிறகு இப்படிதானே தற்சமயம் நம்மூரிலும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பதிலாக நினைவுக்கு வந்தது. அதற்கு பிறகு, மேடையை பொது சனங்களின் நடனத்திற்கு விட, அங்குள்ள இசைக்குழுவினர் அமைத்த நேரடி மேற்கத்திய இசைக்கு, பல ஊரு குட்டீஸ் புகுந்து ஆட்டம் போட்டார்கள். அவையெல்லாம் மேற்கத்திய புகழ்பெற்ற பாடல்கள் போலும். அங்கிருந்தவர்களின் வாய் தன்னிச்சையாக அப்பாடல்களுக்கு 'டப்மாஷ்' செய்தது. நிறைய பாடல்களைக் கேட்கும் போது, பாரபட்சமில்லாமல் பல நம்மூர் பாடல்கள் நினைவுக்கு வந்தன. நம்மூர் இசையமைப்பாளர்களின் கலாச்சார கடத்தலை பாராட்ட வேண்டாம்?!!






இதற்கு அடுத்த தளத்தில், ஒவ்வொரு நாட்டின் கலாச்சார கலைகளை விளக்கும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. மற்ற தளங்களில் பார்க்க முடியாத இலங்கை, இங்கு இருந்தது.
வெளியில், இந்திய மருதாணி கடையில் நல்ல கூட்டம். அனைத்து நாட்டு மக்களும், ஆர்வத்தோடு கையில் ஹென்னா போட்டுக்கொண்டார்கள். பெரும்பாலும், குழந்தைகளும் பிறகு இளைஞிகளும். வந்த வழியே திரும்பி, விட்ட இடங்களைப் பார்த்து நிரப்பிக்கொண்டு, வெளியே வந்தோம். உள்ளே நுழையும் போது, மழைக்கான அறிகுறியே இல்லாதது போல் இருந்தது. ஆனால், வெளியே வந்த போது, மழை பெய்து முடித்திருந்தது.





----

கலாச்சாரங்கள் மாறிக்கொண்டே வருபவை. கால ஓட்டத்தில் அவை ஒன்றோடு ஒன்று கலக்கும். வெவ்வேறு கலாச்சாரங்கள் உரசும் போது, எழும் எதிர்வினைகள் முக்கியமானவை. நல்லது, கெட்டது என இரண்டுமே அவற்றில் உண்டு. பலவித கலாச்சாரங்கள் கொண்ட இனக்குழுக்கள் வாழும் அமெரிக்கா போன்ற நாட்டில் ஏற்படும் கலாச்சார மாற்றங்களுக்கு, இது போன்ற வேறுப்பட்ட கலாச்சாரங்களின் கலப்புகள் முக்கிய பங்காற்றுகிறது. கால ஓட்டத்தில் கலாச்சார பதிவுகளும், பரிமாற்றங்களும் தேவையானதாக இருக்கிறது. அதற்காகவே, 'பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்' போன்ற விழாக்கள் தேவைப்படுகிறது.



இம்முறை தவற விட்டவர்கள், கவலை வேண்டாம். அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம். வருட வருடம் நடக்கிறதே! இம்முறை வந்தவர்கள், இன்னொரு நாட்டிற்கு குடிப்பெயராமல் இருந்தால், எப்படியும் அடுத்த முறை கண்டிப்பாக மறுபடியும் வருவார்கள்.

மேலும் தகவல்களுக்கு,



1 comment:

Jana said...

Nalla coverage...