Thursday, March 26, 2015

ஆச்சர்ய சிண்ட்ரெல்லா




மளிகை சாமான் வாங்க செல்லும் கடைக்கு பக்கத்தில் ஒரு திரையரங்கு இருக்கிறது.  வந்த புதிதில் மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆங்கிலப்படங்கள் மட்டும் திரையிடப்படுகிறது.

திரையரங்கை அடிக்கடி பார்த்தாலும், என்றும் போக தோன்றியதில்லை. எந்த படத்தையும் அப்படி அவசியம் பார்க்க வேண்டும் என்று தோன்றாததே காரணம்.

செவ்வாய்க்கிழமைகளில் சலுகை விலை போலும். சிண்ட்ரெல்லா பார்க்கலாம் எனத் தோன்ற, என் பொண்ணுக்கு பிடிக்காமல் போனாலும், 'சரி பரவாயில்லை, கம்மி ரேட் தானே' மனநிலையில் சென்ற செவ்வாய் அன்று சென்றோம்.

டிக்கெட் எடுக்கும்போதே, சீட் செலக்ட் செய்ய சொன்னார்கள். நான் இதை அமெரிக்காவில் முதன்முறை பார்க்கிறேன். ஏஎம்சி, ரீகல், யூனைடட் ஆர்ட்டிஸ்ட்ஸ் போன்ற பெரிய சங்கிலி திரையரங்குகளிலும் இவ்வாறு பார்த்ததில்லை. இந்த முறையால், சீக்கிரம் வந்தால் வசதி. இல்லாவிட்டால், சங்கடம்.

புதிதாக சீரமைக்கப்பட்டதால், சுத்தமாக இருந்தது. அரங்கின் கதவின் திறந்துக்கொண்டு உள்ளே செல்லவே, ஆச்சரியங்கள் தொடங்கியது.

மெல்லிய சிகப்பு விளக்குகள், இருட்டில் நடைப்பாதையைக் காட்ட, அழகாக இருந்தது.

அகண்ட திரை. ஆனால், குறைந்த இருக்கை வரிசைகள். அனைத்து இருக்கைகளும், லக்ஸரி குஷன் சோபா வகை. பட்டனை அழுத்தினால், இருக்கை கிட்டத்தட்ட படுக்கை ஆகிறது. படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, என் பொண்ணுக்கு பெரிய விளையாட்டு சாமான் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டேன்.

உள்ளே செல்லும்போதே, திரையில் ஃப்ரோசென் ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ கொஞ்ச நேரம் ஓட்டுகிறார்கள் என்று நினைத்தால், தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. சரி, அரங்கு மாறி வந்துவிட்டோமோ? இல்லையே, ஃப்ரோசென் எங்கும் ஓடவில்லையே! என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, அதை நிறுத்திவிட்டு சிண்ட்ரெல்லா தொடங்கினார்கள்.

சிண்ட்ரெல்லா - உலகில் எல்லோருக்கும் தெரியும் கதை. ஆனால், பாருங்கள். எனக்கு மறந்துவிட்டது!!! ஒரு சின்ன பெண், சித்தி, ஏதோ மாயாஜாலம் - எவ்வளவு யோசித்தும், இவ்வளவு தான் நினைவுக்கு வருகிறது. என்னடா, நம்ம மெமரி என்று படம் பார்க்கும் முன்பு நொந்துக்கொண்டேன்.

ஆனால், படம் பார்க்கும் போது, இது நல்லதாகப் போய்விட்டது. கொஞ்சம் கதை திருப்பங்கள் தெரியாமல் படம் பார்த்தேன். பார்த்தப்பிறகு, இது நமக்கு தெரியுமே என்று தோன்றிக்கொண்டே இருந்தது, புது அனுபவம். முடிவு, எல்லோராலும் யூகிக்க முடியும் என்றாலும், உணர்வுபூர்வ நடிப்பால் சலிப்படைய செய்யவில்லை.

சிம்பிளான கதை. நடிகர்களும் சிம்பிளாக இருந்தார்கள். நாயகி, ரொம்ப சிம்பிள். வழக்கமான சினிமா நாயகிக்குரிய எந்த அம்சமும் இல்லை. படத்தை பெரும்பாலான இளம் குமாரிகளிடம் கொண்டு சேர்க்கும் டிஸ்னியின் முயற்சியாக இருக்கலாம்.

ஃப்ரோசென் மூலம் சிறுமிகளைக் குறி வைத்தது போல், இப்படத்தின் மூலம் வயதிற்கு வந்த குமரிப்பெண்கள் குறி வைக்கப்பட்டிருக்கலாம். சிண்ட்ரெல்லா மெர்கண்டைஸ் வாங்க, பர்ஸை ரெடி செய்யுங்கள் பெற்றோர்களே!

சின்ன கதை என்றாலும், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஓடுகிறது. சிம்பிள் கதை என்றாலும், உழைப்பதற்கு ஏகப்பட்ட காரணிகள் இருக்கிறது. ராஜா காலத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எளிமையான அறைகளும், பிரமாண்டமான மாளிகைகளும் காணக்கிடைக்கின்றன. எலி, வாத்து போன்றவை பேசிக்கொண்டு திரிகின்றன. எது கிராபிக்ஸ், எது பயிற்றுவிக்கப்பட்ட நடிப்பு என்று தெரியவில்லை. பின்னணியில் ஒரு வாத்து அங்கிட்டும், இங்கிட்டும் நடந்துக்கொண்டு, சாலையில் வரும் வாகனங்களுக்கு மிரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அது கூட, கிராபிக்ஸாக இருக்கலாம்!

செண்டிமெண்ட், காதல், மாயாஜாலம் கொண்ட கதை. மாயாஜாலக் காட்சிகளில் மட்டும் என் பொண்ணு ஆக்டிவ்வாக திரையைப் பார்த்தாள்.

மெல்லிய நீரோடை போன்ற கதையமைப்புடன் கூடிய படத்தை, கிட்டத்தட்ட படுக்கை அமைப்புடன் அமைதியான ஜென் மனநிலையுடன் பார்த்தது பொருத்தமாக இருந்தது.

வெளியே வரும் போது, என் மனைவி சொன்னாள்.

"ஏங்க நம்ம தமிழ் படம் போடும் தியேட்டரும் இது போல இருந்தா நல்லாயிருக்கும் இல்ல?"

"ஏன்?"

"படம் ரொம்ப நேரம் ஓடும். உட்கார்ந்து, சாய்ந்து படம் பார்க்க நல்லாயிருக்கும். நீங்க கோச்சடையான் மாதிரி ரெண்டாம் முறை படத்துக்குக் கூட்டிட்டு போனா, தூங்க வசதியா இருக்கும்"

#$%^&*

.

மினசோட்டா பனிப்பூக்கள்



வட அமெரிக்கத் தமிழர்களுக்கு தென்றல் பத்திரிக்கையைப் பற்றி தெரிந்திருக்கும். வட அமெரிக்க தமிழர்களுக்கான இந்த மாத இதழ், கலிபோர்னியாவில் இருந்து வெளியாகிறது. இலவசமாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியக்கடைகளில் கிடைக்கும். ஆன்லைனிலும் இருக்கிறது. விளம்பரங்களின் மூலம் இலவசம் சாத்தியமாகிறது. அதே சமயம், பக்கத்திற்கு பக்கம் விளம்பரங்களாய் இருக்கும். இந்திய ஹோட்டல்கள், மளிகைக்கடைகள், ஜோசியர்கள், டாக்டர்கள், அர்ச்சகர்கள் வகை விளம்பரங்களைக் காணலாம். தவிர, கதை, கவிதை, பேட்டிகளும் இருக்கும்.

மினசோட்டா வந்தப்பிறகு, பனிப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது. இது ஒரு காலாண்டிதழ்.  வருடத்திற்கு நான்கு முறை, அந்தந்த காலத்தின் பெயரில் வெளிவருகிறது. இம்மாதம் பனிக்கால இதழ் வெளிவந்துள்ளது.

விலை நான்கு டாலர்கள். வருட சந்தா என்றால் பனிரெண்டு டாலர்கள். சென்ற முறை, தமிழ் சங்க விழாவிற்கு சென்ற பொழுது, சந்தா கட்டிவிட்டு வந்தேன்.

ஆன்லைனிலும் இருக்கிறது. ஆனால் அது வேறு. இது வேறு. அதில் வரும் படைப்புகள் இதில் இருக்காது, இதில் வரும் படைப்புகள் அதில் இருக்காது.



மொத்தத்தில் ஆன்லைனோ, தாளோ - வேறெதிலும் வரும் படைப்புக்கள் இதில் வருவதில்லை. அதாவது, பனிப்பூக்களுக்கென எழுதப்பட்ட பிரத்யேக படைப்புகள் மட்டுமே இதில் வரும்.

இதன் மற்றொரு சிறப்பம்சம் - இதில் வரும் படைப்புகள் அனைத்தும் மின்னசொட்டா தமிழர்களுக்கு நெருக்கமானதாக இருப்பது. அதாவது, மின்னசொட்டா நிகழ்வுகள், இடங்கள் பற்றிய கட்டுரைகள், மினசோட்டாவில் இருக்கும் பிரபலங்கள் அல்லது மினசொட்டாவிற்கு வருகை தந்த பிரபலங்களின் பேட்டிகள், மினசோட்டா சார்ந்த கதைகள் நிறைந்திருக்கும்.

அதே சமயம், இதனால், மற்ற ஊர் தமிழர்களுக்கு இதை வாசிக்க எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. மற்ற ஊர் தமிழர்கள், தங்கள் ஊரில் வரும் இது போன்ற தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி சொல்லலாம். இணைப்புகள் இருந்தால் கொடுக்கவும்.

கடந்த இரு வருடங்களாக வெளிவரும் இந்த சஞ்சிகை, சமீபத்தில் தனது இரண்டாம் வயதைக் கொண்டாடியது. வாழ்த்துக்கள்!!!

பனிக்கால ஆன்லைன் சஞ்சிகையில், தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா பற்றிய எனது கட்டுரை வெளிவந்துள்ளது.

படிக்க இங்கே செல்லவும்.

.

Wednesday, March 18, 2015

ப்ளோரிடா சீவேர்ல்ட்


சென்ற முறை கலிபோர்னியா சென்றபோது, சாண்டியாகோ சீவேர்ல்ட்  செல்ல முடியவில்லை. எங்கேனும் சீவேர்ல்ட் டால்பின் சர்க்கஸ் காட்சிகளைக் காணும்போதெல்லாம், அது ஒரு ஏக்கமாகவே கடந்து செல்லும். அதனால் அடுத்த முறை சீவேர்ல்ட் இருக்கும் ஊருக்கு சென்றால், சீவேர்ல்ட் போகாமல் வர கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.

அன்றைய தினம், சீவேர்ல்டையும், நாசாவையும் பார்ப்பதாக திட்டம். இரண்டையும் பார்க்கமுடியுமா? என்று ஒரு பக்கம் யோசனை. பார்க்கமுடியுமானால், முதலில் எதற்கு செல்வது என்று இன்னொரு யோசனை. நாசா சென்று பிறகு சீவேர்ல்ட் வருவது என்றால், கொஞ்சம் வெட்டி அலைச்சல். தவிர, அன்று இரவு மியாமி நோக்கி பயணம் என்பதால், முதலில் சீவேர்ல்ட் சென்று விட்டு, பிறகு நேரமிருந்தால், நாசா செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

இவ்வளவு ப்ளான் இருந்ததால், எங்கள் அறையில் இருந்து வெகு சீக்கிரமே கிளம்பிவிட்டோம். ரொம்பவும் தூரத்தில் இல்லையென்பதால், உடனடியாக சீவேர்ல்ட் வந்து சேர்ந்தோம். 9 மணிக்கு பார்க் திறக்கும் நேரத்திலேயே வந்து சேர்ந்தோம். கூட்டம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. பார்க் மேப் பார்த்து ஒரு ரூட் போட்டுக்கொண்டேன்.



சீவேர்ல்ட் என்பது கடல் வாழ் உயிரினங்கள் சார்ந்த தீமில் அமைந்த பார்க். இங்கு ஒர்லண்டோவில் பெயருக்கேற்றார் போல், ஒவ்வொரு தீம் பார்க்கிற்கும் ஒரு தீம் இருக்கிறது. ஒஹோ! அதனால் தான் இவற்றை தீம் பார்க்குகள் என்று கூறுகிறார்களோ என இங்கு வந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.

சீவேர்ல்ட் குழுமத்தில் ஏகப்பட்ட தீம் பார்க்குகள் ப்ளோரிடாவிலும், வேறு சில நகரங்களிலும் இருக்கின்றன. எதுவுமே பார்த்தது இல்லை என்பதால், அவர்களது சிக்னேச்சர் தீம் பார்க்கான சீவேர்ல்ட் தீம் பார்க்கையே பார்ப்பது என்று முடிவு செய்திருந்தோம். டிக்கெட்டுகளை இணையத்திலேயே வாங்கி விட்டோம். என்னென்ன ஷோக்கள், என்னென்ன நேரத்தில் நடக்கிறது என்று தெரிந்துக்கொண்டோம். முக்கியமாக, டால்பின் ஷோவான ப்ளூ ஹரிஸான் மற்றும் திமிங்கில ஷோவான ஒன் ஓஷன் நிகழ்ச்சிகளைத் தவறவிடக்கூடாது என்று முடிவு செய்திருந்தோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பிறகு மற்றவற்றை கவர் செய்ய எண்ணி, உள்ளே புகுந்தோம்.



முன்பே சொன்னது போல், இது கடல்சார் உயிரினங்கள் தீமில் அமைந்த பார்க் என்பதால், இங்குள்ள ரைடுகளும் அப்படியே வடிவமைக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு, மண்டா என்னும் ரைடு, மண்டா ரே என்னும் உயிரினம் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் டிசைனும், அது செல்லும் ஸ்டைலும் அப்படி இருந்தது. வெளியே சென்று பார்க்கும் போது, கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. பார்க் உள்ளே நுழைந்தவுடன் இருந்த ரைடு, கூட்டமே இல்லாமல் இருந்ததால், உள்ளே சென்று விட்டேன். இதில் சிறு குழந்தைகள் அனுமதி இல்லை. அது செல்லும் தினுசைப் பார்த்து, மனைவியும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.



எனக்கும் அதை முதலில் பார்க்கும் போது, பயமாகத்தான் இருந்தது. உயரத்தில் இருந்து கீழே பார்த்து பயந்தால், ஏதோவொரு போபியா என்பார்களே? எனக்குக் கூட அந்த போபியா இருப்பதுண்டோ என்று யோசிப்பதுண்டு. ஊரில் வீட்டில் கருவேப்பிலை பறிக்க சுவர் மேல் ஏறிய காலத்திலேயே வந்த நினைப்பு அது. ஆனால், இம்மாதிரி ரைடுகளில் முதலில் அம்மாதிரி பயம் வந்தாலும், உடனே லாஜிக்கலாக யோசித்து (இவ்வளவு பேர் போகிறார்களே!, என்னவாகிவிடும்?, அதான் இப்படி சுற்றி டைட்டாக கட்டி வைக்கிறார்களே!, அப்படியே பயமாக இருந்தால் கண்ணை மூடிக்கொள்ள வேண்டியது தான்!!!) வண்டியேறிவிடுவேன்.

இம்மாதிரி ரைடு எனக்கு முதல்முறை என்று சொல்லவேண்டும். வளைத்து, வளைத்து, தலைக்கீழாக, தலைக்குப்புற, சுழற்றியடித்து என திகிலாக இருந்தாலும், ஏறிய பிறகு எஞ்சாய்மெண்ட் தான். முடித்தப்பிறகு இன்னொரு முறை போனால் என்ன? என்று தோன்றுமே... அப்படித்தான் தோன்றியது.



அதன் பிறகு, முதல் ஷோவாக, ப்ளூ ஹரிஸான்ஸ் சென்றோம். இது டால்பின்கள் கொண்டு நடத்தப்படும் ஷோ. அரைவடிவத்தில் ஒரு ஸ்டேடியம். பெயர் - டால்பின் தியேட்டர். கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக சேர தொடங்கி, முழுவதும் நிறைந்தது. நட்ட நடுவில், சீட்டுகள் எம்டியாக இருந்தது. என்னவென்று பார்த்தால், ரிசர்வ் செய்யப்பட்ட சீட்டுகளாம். நல்ல அம்சமான இடம் தான். இம்மாதிரி ரிசர்வ் செய்யப்பட்ட சீட்டுகளுக்கு, தனி கட்டணம். நாங்கள் சீக்கிரமே சென்றதால், ரிசர்வ் செய்யப்பட்ட வரிசைக்கு ஒரு வரிசை பின்னால் இடம் பிடித்துக்கொண்டோம்.







ஒரு கதையைச் சொல்லி, அதில் டால்பின்களை வித்தைக் காட்டவிட்டார்கள். நாய்க்குட்டியைப் பழக்கி வைத்திருப்பதைப்போல பழக்கி வைத்திருக்கிறார்கள். தண்ணீரில் டால்பின்கள் நீந்தும் வேகம் செம. டால்பின் வித்தை 40% என்றால், மனித வித்தை 60% எனலாம். உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிப்பது, பறவைப்போல் கயிறு கட்டிக்கொண்டு பறப்பது என்று ஒரு கலவையில் இருந்தது. ஒவ்வொரு முறை டால்பின்கள் துள்ளிக் குதிக்கும் போதும், கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.






இங்கு இதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, சில எண்ணங்கள் வந்தது. பொதுவாக, அமெரிக்காவில் மிருகக்காட்சிச்சாலைகள் வெளியே, அமைதியாக சிலர் பேனர் பிடித்துக்கொண்டு போராட்டம் செய்துக்கொண்டிருப்பார்கள். ப்ளு கிராஸ் போன்ற அமைப்புகளாக இருக்கும். முதல்முறை இம்மாதிரி போராட்டங்களைப் பார்த்தப்போது, கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. மிருகக்காட்சிச்சாலைகளில் மிருகங்கள் பாவமாக இருக்கும், பார்த்ததுண்டு. ஆனால், அதற்காக போராட்டம் என்பது நான் பார்த்திராதது. (நம்மூரில் உள்ளே செல்லும் மக்களே அவற்றை துன்புறுத்துவதைக் கண்டும், சமீபத்தில் டெல்லியில் ஒரு மனிதனை புலி கொன்றபோது, புலியை ஏன் சுட்டுக்கொள்ளவில்லை என்று கேள்வி கேட்டவர்களைக் கடந்தும் வந்ததால் இருக்கலாம்.) அவர்களது கோரிக்கை என்னவாக இருக்கும்? மிருகக்காட்சிச்சாலைகளை மூடுவதாக இருக்கும். உலகம் முழுக்க இருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளை, சர்க்கஸுக்களை, மிருகங்களைக்கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தடைச் செய்ய முடியுமா? நமக்கு ஜஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மட்டும் தான் என்றாலும், இவை இல்லாத உலகம் சாத்தியமா? அப்புறம் எங்கே தான், எப்போது தான் மிருகங்களைப் பார்ப்பது? என்று கேள்விக்கு அப்படி பார்ப்பது அவசியமா? என்ற கேள்வி தான் ஒரே பதிலாக இருக்க முடியுமா? எனிவே, லெட்ஸ் வாட்ச் திஸ் அவுட் பர்ஸ்ட்.





டால்பின்கள் பார்க்க, நல்ல பிள்ளையாட்டம், பயிற்சியாளர்கள் குழு சொல்வதைக் கேட்டு டைவ் அடித்தது, அவர்களை சுமந்துக்கொண்டு நீந்தியது, சத்தமிட்டது, முத்தமிட்டது. வந்திருந்த குழந்தைகள், இந்த ஷோவை ஆர்வமுடன் கண்டுக்களித்தார்கள்.



அடுத்ததாக, பென்குயினை ஒரு சில்லிடும் செட்டப்பில் பார்த்தோம். இன்னும் சில ரைடுகளில் சென்றோம். சில ரைடு/அரங்கு மூடியிருந்தது.



அன்று காலையில் ஒன்றும் சாப்பிடாததால், பசியெடுக்கவே, ஒரு இட்டாலியன் கடையில் வெஜ் கார்டன் 'லசான்யா' வாங்கினோம். அதான்யா விஜய் டிவியில் அடிக்கடி சொல்லுவாங்களே!! வெள்ளிக்கிழமை என்பதால், வெஜ் தானாம். உள்துறை உத்தரவு.

அடுத்த ஷோ துவங்கும் நேரமென்பதால், உணவுடன் ஷோ நடக்கும் ஷாமு ஸ்டேடியத்திற்கு விரைந்தோம். போன முறை, சீக்கிரம் சென்றதால், நல்ல இடம் கிடைத்தது. இந்த முறை, லேட்டாக சென்றதால். அதுவரை ரிசர்வ் சீட்டுகளைப் பாதுகாத்தவர், நிகழ்ச்சி தொடங்கியபிறகும், அவ்விடங்களுக்கு யாரும் வராததால், அதனை ஓபன் செய்துவிட்டுக் கிளம்பினார்.

ஷாமு, இங்கு முதல்முறையாக தன் திறமையைக் காட்டிய திமிங்கலத்தின் பெயர். அது இறந்து 45 ஆண்டுகள் ஆனாலும், அதற்கு பிறகு வந்த மற்ற முன்னணி நட்சத்திர திமிங்கலங்களுக்கும் அதே பெயரைச் சூட்டி, இந்த ஸ்டேடியத்திற்கும் அதே பெயரைச் சூட்டிவிட்டார்கள். ஷாமு போல் ஒரு ராமும் இருக்கிறதாம்.



திமிங்கலமும் டால்பினும் ஒரே குடும்பம் தான். என்ன, திமிங்கலங்கள் சோவாறிகள். பெரியவை. மனிதர்களுடன் அவ்வளவாக ஒத்து போகாது. நாம் நினைப்பது போல் இல்லாமல், ரெண்டுமே ஒரே அளவு அறிவாளிகள் தான்.



டால்பினை விட எடை அதிகமாக இருந்தாலும், துள்ளிக் குதிப்பதில் அதற்கு இது சளைத்ததில்லை. இந்த ஸ்டேடியத்தில், முதல் பத்து பதினைந்து வரிசைகள், ஈரமாகும் இடங்கள் என்று வகைமைப்படுத்தி, நிகழ்ச்சித் தொடங்கும் முன்பு, அவ்வப்போது எச்சரிக்கைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அங்கு உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம், மழைக்கு அணியும் ப்ளாஸ்டிக்கிலான உடைகளை அணிந்திருந்தார்கள். கையில் உணவு இருந்ததால், அங்கு உட்காரவில்லை.



ஷோவின் போது, இந்த திமிங்கலங்கள் துள்ளிக் குதிக்கும் போதெல்லாம், இந்த பார்வையாளர்கள் மீது தண்ணீர் சிதறியது. அது மட்டுமில்லாமல், இந்த திமிங்கலங்கள் வாலை கொண்டு, குறி வைத்து, பார்வையாளர்கள் தண்ணீரை அடித்துவிட்டுக்கொண்டே இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாம் எஞ்சாய் செய்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் மட்டும் நனைந்தது போதும் என்று கிளம்பி, வேறு இடங்களுக்கு பெயர்ந்தார்கள்.



இதன் பிறகு, வீட்டு பிராணிகளை வைத்து ஒரு ஷோ. அதில் ஒன்றும் பெரிதாக விசேஷமில்லை. ஆனால், அந்த மிருகங்கள் மிகுந்த தேர்ச்சியுடன் தங்கள் திறமைகளைக் காட்டியது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு சிறப்பு.

அதற்கு பிறகு, வேறு சில ரைடுகளுக்கும், ஒரு 360 டிகிரி 3டி படமும் பார்த்தோம். அப்போது பிற்பகல் ஆகியிருந்தது. மெல்ல மழை பொழிய தொடங்கியது. சில சின்ன சின்ன ரைடுகள் மிச்சமிருந்தன. யோசித்தோம். சரி, தற்சமயம், நாசாவின் கென்னடி ஸ்பேஸ் செண்டர் செல்ல சரியான நேரம் என்று நினைத்து, அங்கிருந்து கிளம்பினோம்.

கிளம்புவதற்கு முன், சீவேர்ல்ட் மேலிருக்கும் சில புகார்கள் பற்றி. எனக்கு இல்லைங்க, சமூக ஆர்வலர்களுக்கு. (யாரு? நீயா நானாவிலும், செய்தித் தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களிலும் வருவார்களே! அவர்களா?)



சீவேர்ல்ட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுவது - இங்கிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் தத்தெடுக்கப்பட்டவை, விபத்தில் இருந்து, ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டவை, அவை இங்கு நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது என்று. ஆனால், சீவேர்ல்ட்டை எதிர்ப்பவர்கள் அதை மறுக்கிறார்கள். இவை அனைத்தும் பொய். இந்த உயிரினங்கள் கடத்தப்பட்டவை, கடலில் இருந்து அதன் குடும்பத்தில் இருந்து, இயற்கை சூழலில் இருந்து, நிறுவனங்களின் லாபத்திற்காக பிரிக்கப்பட்டு, இங்கிருக்கும் டேங்குகளில் மோசமாகப் பராமரிக்கப்படுகிறது என்கிறார்கள்.

தவிர, அவை தாக்கி, இங்கிருக்கும் பணியாளர்கள், பார்வையாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இணையத்தில் இது பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் - சீவேர்ல்டை மூட வேண்டும். மக்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும்.

எனக்கு முன்னமே தெரிந்திருந்தால், புறக்கணிக்க யோசித்திருப்பேன்! இப்ப லேட். நாசா கிளம்பலாம்.

(தொடர்ந்தாலும் தொடருவேன்)

.

Monday, March 16, 2015

ப்ளொரிடா டிஸ்னிலேண்ட்

ப்ளோரிடா பயணத்தின் முதல் நாளில் டிஸ்னிலேண்ட் சென்றோம்.

ஏற்கனவே கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் சென்றிருக்கிறோம். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கலிபோர்னியா டிஸ்னிலேண்ட் 1955யில் தொடங்கப்பட்டது. ப்ளோரிடாவில் 1971. உலகில் அதிக பார்வையாளர்கள் கால் பதித்த தீம் பார்க் இது.

 கலிபோர்னியா தீம்பார்க் திறந்தப்பிறகு, இவர்கள் நடத்திய ஆய்வில், மேற்கு பகுதி அமெரிக்கர்களே அதிகமாக கலிபோர்னியா பார்க்கிற்கு வருவதாக தெரிய, கிழக்கு பகுதியில் இன்னொரு பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடங்கிய சமயம், நுழைவு கட்டணம் - மூன்றரை டாலர்.

இதை தீம் பார்க் என்று சுருக்கி விட முடியாது. தீம் பார்க்குகள் மற்றும் ரிசார்ட்டுகளான ஒரு குட்டி, இல்லை பெரிய ஊர் என்றே சொல்லலாம். 27000 ஏக்கர். தூத்துக்குடியை விட பெரியது. இவ்வளவு இடத்தை 1960களில் டிஸ்னி வாங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. நிலத்தின் விலை தாறுமாறாக ஏறிவிட கூடாதென்று, மிகவும் ரகசியமாக, அவ்வப்போது பொய் சொல்லி வாங்கி, இப்படி ஒரு பொழுதுபோக்கு உலகத்தை நிர்மாணித்திருக்கிறார்கள்.

மேஜிக் கிங்டம், எப்காட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ், அனிமல் கிங்டம் என்று நான்கு தீம் பார்க்குகள், இரண்டு வாட்டர் பார்க்குகள், இதை தவிர பல ரிசார்டுகள் என்று நாட்கணக்கில் தங்கி இருந்து பொழுதுப் போக்கலாம். ஒர்லண்டோவில் டிஸ்னி தவிர இன்னமும் ஏகப்பட்ட தீம் பார்க்குகள் இருக்கின்றன. மியாமியும் ப்ளோரிடாவில் இருக்கும் முக்கிய பீச் பகுதி என்பதால், என்னால் இப்பயணத்தில் அதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால், டிஸ்னிக்கு அதிக நாட்களை இம்முறை அளிக்கவில்லை. என் பெண் வயதிற்கு மேஜிக் கிங்டம் செல்வது சரியாக இருக்கும் என்பதால், அதற்கே சென்றோம்.


காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே நடக்க, ட்ராமில் அழைத்துசென்றார்கள். பிறகு படகில். பஸ், ரெயில் என்று பலவகை போக்குவரத்து கழகங்களும் சேவையில் இருக்கின்றன. அது ஒரு வியாழக்கிழமை என்றாலும், டிஸ்னிலேண்ட்டில், வரும் கூட்டத்திற்கு, அப்படி எந்த வேறுபாடும் கிடையாது. வாரயிறுதியில், விடுமுறை காலத்தில், லாங் வீக் எண்ட்டில் எல்லாம் கூட்டம் அலை மோதும். அந்நேரங்களில் செல்வதற்கு செல்லாமலே இருக்கலாம்.

ரைடுகளில் செல்வதற்கு வரிசையில் காத்திருக்கும் நேரம் - அரை மணியில் இருந்து ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் என்று இருக்கும். கொடுமையாக இருக்கும் இல்லையா? வேறு வழி. மக்கள் நிற்பார்கள்.

இப்பொழுது சில வசதிகள் செய்திருக்கிறார்கள். ஆன்-லைனில் ரிசர்வேசன் செய்ய தொடங்கும் போது, பல பில்-டப்கள் தொடங்கிவிடும். வீட்டிற்கு நுழைவுச்சீட்டிற்கு பதிலாக ஆளுக்கொரு கை பேண்ட்கள் அனுப்புவார்கள். இது பார்க்கிற்குள், ரிசார்ட்டிற்குள் செல்லவும், நம்மை பணம் செலுத்த, புகைப்படங்கள் பெற என்று இன்னும் வேறு சில வசதிகளுடன் இணைத்துக்கொள்ளவும் உபயோகப்படுகிறது. கையில் கட்டிக்கொண்டு அலைந்தோமானால், நாம் எங்கு இருக்கிறோம் என்று கூட கண்டுக்கொள்வார்கள்.



ஒவ்வொருவரும் மூன்று ரைடுகளில் மட்டும் ரொம்பவும் காத்துக்கிடக்காமல், உடனடியாக செல்ல சலுகை அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் புக் செய்தவுடன், எந்த தினத்தில் செல்ல நினைத்திருக்கிறோமோ, அன்றைய தினத்திற்கான ரைடுகளில் மூன்றை தேர்வு செய்து கொள்ளலாம். சிறப்பு தரிசனம் போல. அன்றைய தினத்தில், ஒரு கால அவகாசம் கொடுக்கிறார்கள். அந்த டைமிங்கில் சென்றால், சீக்கிரம் தரிசனத்தை முடித்துவிட்டு வரலாம்! பேமஸான ரைடுகள், உடனே புக் செய்யப்படுவதால், நமது தேர்வை சீக்கிரமே செய்தால் நல்லது.



இது தவிர, உள்ளே இருக்கும் உணவகங்களிலும் முன்பே ரிசர்வ் செய்தால் தான் நுழைய முடியும். இதையும் ஆன்லைனிலேயே செய்துவிடலாம். சில உணவகங்களில் கார்ட்டூன் கேரக்டர்கள் நாம் உணவருந்தும் போது, நம்மிடம் வந்து ஆடி, பாடி, போட்டோ எடுத்து செல்வார்கள்.

இப்படி எல்லாவற்றையும் திட்டமிட வழிமுறைகள் செய்திருக்கிறார்கள். நாமும் திட்டமிட்டு சென்றால், சிறப்பாக அனைத்தையும் கண்டுக்களித்துவிட்டு வரலாம். ஆனால், எப்படி திட்டமிட்டாலும், அங்கே இருக்கும் அனைத்து ரைடுகளிலும், அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்துக்கொண்டு, ஒரு நாளில் செல்லமுடியாது. நாம் எதுவெல்லாம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறமோ, அப்படி ஒரு லிஸ்ட் எடுத்து சென்றால், ஒரளவுக்கு பார்க்க முடியும். அதனால், போகும் முன்பு, ஹோம் ஒர்க் செய்துவிட்டு செல்வது சால சிறந்தது.

உள்ளேயே தங்கி இருந்தோமானால், மற்றவர்களை விட ஒரு மணி நேரம் முன்பு செல்லலாம். அப்படியும் உள்ளே ஒரு பெருங்கூட்டம் தங்கியிருப்பதால், ரொம்பவும் ப்ரீயாக இருக்க போவதில்லை.



ஒரு நாளில் ரெண்டு பார்க் போவது போன்ற திட்டங்கள் சரி வரப்போவதில்லை. போனாலும், ரெண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் தான் பார்க்க முடியும். ஒரு நாளுக்கு ஒன்று என்று பார்த்தால், டிஸ்னியிலேயே ஒருவாரத்திற்கு மேல் குடி இருக்க வேண்டியது தான். அதனால் எது எது பார்க்க போகிறோம் என்று நம்முடன் யார் வருகிறார்கள், அவர்களுக்கு எது பிடிக்கும், எது வசதிப்படும் என்று யோசித்து முடிவு செய்ய வேண்டியது அவசியம். சாய்ஸ் அதிகம் இருப்பதால், இப்படி முடிவு செய்வதும் சிரமம் தான்.

டிஸ்னி, யுனிவர்சல் போன்றவர்களின் திட்டமும் அதுதான். ஒரு பார்க்கிற்கு மேலோ, ஒரு நாளுக்கும் மேலோ அவர்களது குழும பார்க்கிற்கு சென்றால், நுழைவுக் கட்டணத்தில் சலுகை தருகிறார்கள். ப்ளாரிடாவிற்கு வரும் கூட்டத்தை, தங்கள் இடத்திற்குள் அதிக நாட்கள் வைத்திருந்தால், அதற்கேற்றார் போல் அவர்களுக்கு அதிக லாபம்.



மேஜிக் கிங்டமில் சில ரைடுகளைத் தவிர, பெரும்பாலானவை சிறு குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் இருப்பவை. அந்த காரணத்திற்காகவே, இதை தேர்ந்தெடுத்தோம். ரைடுகளைத்தவிர, இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் போல் உடையணிந்துக்கொண்டு வருபவர்களைக் காண, குழந்தைகள் பேரார்வம் கொள்கிறார்கள். குழந்தைகள் மட்டுமல்ல, அனைத்து வயதினரும் அப்படி தான் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை, பெரும்பாலும் பெண்களே, இப்படி இதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இளம் பெண்கள், வயதான பெண்கள் அனைவரும் இந்த கேரக்டர்கள் மேல் காதலாக இருக்கிறார்கள். குழந்தைகளுடன் சேர்ந்துக்கொண்டு, கையில் ஆட்டோக்கிராப் புத்தகத்துடன் அலைகிறார்கள். அப்படி ஒரு பாட்டியம்மாவைக் கண்ட பொழுது தான், மிக்கியின் வயது நினைவுக்கு வருகிறது. மிக்கிக்கு தற்சமயம் 86 வயது. யோசித்து பாருங்கள், நீங்கள் சிறு வயதில் நேசித்த ஒரு கதாபாத்திரம், இத்தனை வருடங்கள் கழித்து அதேப்போல் வந்து நின்றால், உங்களுக்கு உங்களுடைய பழைய வயது திரும்பிவிடாது?



இந்த உளவியல் தான், டிஸ்னிக்கு பிசினஸை அள்ளிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதனால் தான், அவர்களும் மிக்கி, மின்னி என்று நின்று விடாமல், புதியது புதியதாக கேரக்டர்கள் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு கேரக்டர் பிடிக்காவிடிலும், இன்னொன்று பிடிக்கும். அதுவும் இங்கே உள்ளே சுற்றிக்கொண்டிருக்கும். உங்கள் மகிழ்ச்சிக்கும் நாங்கள் கேரண்டி. உங்கள் பர்ஸ். எங்கள் உரிமை.



அவர்களது படங்கள், தொடர்கள், சேனல்கள், ஹோட்டல்கள், பார்க்குகள் என்று ஒவ்வொன்றும் இது போன்ற இழைகளால் இணைக்கப்பட்டுள்ளது.



சரி, எங்க கதைக்கு வருவோம். நாங்களும் தொடர்ச்சியாக ரைடுகள், கேரக்டர்களுடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, மதிய உணவிற்கு ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த 'க்ரிஸ்டல் பேலஸ்' என்னும் ரெஸ்டாரண்டுக்குள் சென்றோம். அங்கு பபே. நன்றாக பசித்திருந்ததால், நன்றாகவே சாப்பிட்டோம்.




அவ்வப்போது கார்ட்டூன் கேரக்டர்கள் சுற்றி வந்து, பாட்டு பாடி, ஆட்டோகிராப் போட்டுக்கொண்டு, போட்டோ எடுத்துக்கொண்டு சென்றார்கள்.



சாப்பிட்டப்பிறகு திரும்பவும் ரைடுகள். நடு நடுவே அங்கிருக்கும் சாலைகளில் பரேடு செல்வார்கள். கார்ட்டூன் கேரக்டர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் ஆடிக்கொண்டு செல்ல, சாலையின் இருப்பக்கமும் நாம் நின்று பார்க்கலாம். இந்த கேரக்டர்களது உடை, நடை, பாவனை, அலங்காரம் அனைத்தும் உயர்தரமானவை. எதிலும் குறை சொல்லமுடியாது. இங்கிருக்கும் சின்ட்ரெல்லா கேசிலிலும் அவ்வப்போது நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைப்பதிலும், இடத்தை, மக்களை நிர்வகிப்பதிலும் அவ்வளவு நேர்த்தி. ப்ளோரிடாவில் மட்டும் 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் டிஸ்னியில் பணிபுரிகிறார்கள்.





இருட்ட தொடங்கியவுடன், வண்ண விளக்குகளிலான பரேடு துவங்கியது. என் பெண், டயர்டில் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தாள். சாலைகளில் இருந்த விளக்குகளை அணைத்துவிட்டு, இந்த பரேடு நடந்ததால், ஒரே ஜொலி ஜொலிப்பு.







அதற்கு அங்கு இருந்த சிண்ட்ரெல்லா கேஸில் மாளிகை மேல் ஒளி பாய்ச்சி நடைபெறும் ஒளி-ஒலி நிகழ்ச்சி தொடங்கியது. இது புது வரவு போல. இம்மாதிரி ஷோக்களை இணையத்தில் பார்த்திருக்கிறேன். முதன்முதலில் நேரில். வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.





அடுத்ததாக, டிஸ்னி சிறப்பம்சமான வாண வேடிக்கை. எவ்வளவு பட்டாசுகள்? எவ்வளவு ஒருங்கிணைப்பு? ஒரு கதையுடன், டிஸ்னி சிண்ட்ரல்லா கேஸில் மாளிகை பின்னணியில் இந்த வாண வேடிக்கை என்பது பிரமாண்டம். நடுவே ஒரு பெண், கயிறு கட்டிக்கொண்டு பறந்தாலும், அவ்வளவு உயரத்தில் பறப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக பிரமிப்பாக இருக்கும். உள்ளே எவ்வளவு சுற்றினாலும், இந்த வாணவேடிக்கை பார்ப்பதே, டிஸ்னிலேண்ட் வந்ததின் முழு திருப்தியை கொடுப்பது.







இதற்கு பின்பும், சில ரைடுகள் செயல்பட்டுக்கொண்டிருந்தது. முடிந்த வரை அனைத்தையும் கவர் செய்வோம் சென்று அங்கிங்கு அனைத்திலும் இரவு பத்து மணி வரை சுற்றி விட்டு, வீடு திரும்பினோம். இரவு டிஸ்னி ஆல் ஸ்டார்ஸ் மூவிஸ் ரிசார்டில் தங்கினோம். ஒவ்வொரு ரிசார்ட்டும், ஒவ்வொரு தீமில் அமைத்திருக்கிறார்கள். இது மூவி தீம். இங்கிருக்கும் திரையரங்கில் தினமும் ஏதேனும் ஒரு படம் போடுவார்கள். எங்கு பார்த்தாலும், டிஸ்னி வெளியிட்ட படங்கள் சம்பந்தமாக ஏதெனும் காணலாம். இது போல், ஸ்போர்ட்ஸ், மியூசிக் தீம் ரிசார்ட்டுகளும் உள்ளன.






இரவு உணவை இங்கிருக்கும் புட்கோர்ட்டில் சாப்பிட்டு விட்டு, ரூமிற்கு சென்று உறங்கினோம். ரூமில் டிஸ்னி தீம், கதவு, டிவி, தலையணை, சோப்பு போன்றவற்றில் தொடர்ந்தது. அவரவர் கனவிலும் தொடர்ந்தாலும் தொடர்ந்திருக்கும்.

(தொடர்ந்தாலும் தொடர்வேன்)

Friday, March 13, 2015

ப்ளோரிடா ப்ளான்

எனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நினைக்கவே இல்லை. குளிர் சலித்து, வெயிலைத் தேடி ஒரு ட்ரிப் போவேன் என்று என்றும் நினைத்ததில்லை.

மின்னியாபொலிஸ் குளிரைப் பற்றி பலர் சொல்லியிருந்தார்கள். அதுவும் சென்ற வருடம், ரொம்பவே ஓவர் என்று சொல்லியிருந்தார்கள். எப்படின்னா, வெளியே சென்று, ஒரு டம்ளர் தண்ணீரை கீழே ஊற்றினோம் என்றால், அது ஐஸாக கீழே விழும் என்றார்கள். கேட்க நல்லாத்தான் இருக்கிறது. இந்த குளிரில் வெளியே சென்று வரவேண்டுமே?

இந்த வருடம் அவ்வளவு இல்லை என்றாலும் செல்ஸியஸில் மைனஸ் 20, மைனஸ் 25 டிகிரி என்று சென்றது. இதை சமாளிப்பது ஒன்றும் பெரிய சிரமம் கிடையாது. ஒரு பெரிய ஜாக்கெட்டுக்குள் ஒளிந்துக்கொண்டு, பஸ்ஸில் அல்லது காரில் கிளம்பி, அலுவலகத்துக்கோ, கடைக்கோ செல்வோம். அபார்ட்மெண்ட்டில் அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிங் இருப்பதால், காரைப் பனியில் இருந்து துடைக்க தேவையில்லை. அது ஒரு நல்ல விஷயம். எப்படி இருந்தாலும், காரை விட்டு, பஸ்ஸை விட்டு, ஒரு நிமிடமாவது வெளியில், இந்த குளிரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வரும்.

பனிக்குளிர் ஒரு சைலண்ட் கில்லர். சந்திக்கும் முதல் நொடி சமாளிக்கும்படி இருக்கும். அடுத்தடுத்த நொடிகள், தனது இருப்பைக் காட்டும். உடல் முழுக்க மூடியிருப்போம். வாய், மூக்கு உட்பட. கண்ணை மூட முடியாதல்லவா? சில குளிர் நாட்களில், கண்களை திறக்க சிரமப்பட வேண்டியிருக்கும். க்ளவுஸ் போட்டிருந்தாலும், சில நிமிடங்களில் கைகளுக்கு குளிர் பரவியிருக்கும். இதை சமாளிக்க க்ளவுஸ் போட்டுக்கொண்டு, கைகளை ஜாக்கெட் பாக்கெட்டுகளில் விட்டிருப்பேன். ஐந்து-பத்து நிமிடங்களுக்குள் கடைக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ நுழைந்திருப்போம். அதற்கு மேல் இருக்கவேண்டுமென்றால், வேறு வழியில்லாமல் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கவேண்டி இருந்தால், குளிரில் நடுங்க மாட்டோம். இது அதற்கு மேல!!! கை கால் விரல்கள் விறைத்து, வலி எடுக்க தொடங்கும். ஒரு உறைவிடத்தை அடைந்தபிறகு, கைகளைத் தேய்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஸோ, சமாளிப்பது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், இப்படியே இரண்டு மூன்று மாதங்கள் என்றால்? போரடித்து விடாது? குளிர் சலித்துவிடாது? அதற்கு பயந்து, அடங்கி வீட்டிற்குள்ளே அல்லவா முடங்கி கிடப்போம்! குளிர், ஒரு சர்வாதிகாரமாவது இப்போது தான்.

இந்த சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலை தேடி, இம்முறை ப்ளோரிடா செல்ல முடிவெடுத்தேன்.

பிப்ரவரி இறுதியில் இருந்து, மார்ச் முதல் சில நாட்கள் வரை ட்ரிப். ப்ளோரிடாவில் வருடம் முழுக்க வெயில் தான்.சம்மரில் கொளுத்தும் என்பதால், இந்த சமயத்தில் செல்வது, ஒரு வகையில் நல்லது.

இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், ப்ளோரிடாவில் இருக்கும் தீம் பார்க், சுற்றுலா தலங்கள் அனைத்திலும் உலகம் முழுக்க இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும். இச்சமயம் கொஞ்சம் ஓகேவாக இருக்கும்.

இது தான் ப்ளோரிடா ப்ளான்,

முதல் நாள் - ஒர்லண்டோ - டிஸ்டிலேண்ட்
இரண்டாம் நாள் - ஒர்லண்டோ - சீ வேர்ல்ட்
மூன்றாம் நாள் - மியாமி பீச்
நான்காம் நாள் - கீவெஸ்ட் ட்ரைவ்
ஐந்தாம் நாள் - ஒர்லண்டோ - யுனிவர்சல்

ஐந்து நாட்கள் என்ன, பத்து-இருபது நாட்கள் இருந்தாலும், ஒர்லண்டோவிலே சுற்றலாம். அவ்வளவு எண்டர்டெயிண்ட் இருக்கிறது. ஆனால், எனக்கு தான் எத்தனை நாட்கள் தீம் பார்க்கிலேயே சுற்றுவது? இயற்கை அன்னையையும் தரிசிக்க வேண்டுமே? என்றெண்ணி மியாமி, கீவெஸ்ட் போன்ற இடங்களையும் பயணத்தில் சேர்த்திருந்தேன்.

ஒரு புதன் சாயங்காலம் வீட்டில் இருந்து கிளம்பினோம். பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஏர்போர்ட் சென்றோம். பயணத்தின் ஆரம்பத்திலேயே பஸ், ரயில்வே ஸ்டேசனுக்கு சில தொலைவு முன்பே ப்ரெக் டவுண் ஆனது. சரி, பயணம் சிறப்பாக இருக்க போகிறது என்று நினைத்துக்கொண்டேன். நடந்து, ஓடி சென்று ரயிலைப் பிடித்தோம். ரயில் சரியான நேரத்தில், ப்ரெக் டவுண் ஆகாமல் செல்ல, ப்ளைட்டை பிடிக்க முடிந்தது.

இப்பொழுதெல்லாம் ப்ளைட் பயணங்கள் என்றாலே, ஒரு திகிலோடு தான் செல்ல வேண்டியிருக்கிறது. நடக்கும் போதோ, காரில் போகும் போதோ, வழுக்குகிறதே, இந்த ப்ளைட்டுக்கு வழுக்காதா? என்றெல்லாம் நினைப்பு ஓடிக்கொண்டிக்கிறது. நல்லவேளை, அப்படியெல்லாம் வழுக்கவில்லை. ஒழுங்காகவே டேக் ஆஃப் ஆனது. நானும் இரண்டு மணி நேரங்கள் தூங்கிவிட்டேன். அதற்கு பிறகு, ஒரு ஆட்டம் காட்டினார்கள் பாருங்க? ஒரு நொடி, பைலட் அனைவரையும் தன்னிச்சையாக நிற்கவிட்டார். பயணிகள் அனைவரும் "ஊ" என்று கத்தினார்கள். ("பரமா, சாவு பயத்தை காட்டிடாங்கடா!") பிறகு, அவ்வப்போது குலுக்கிவிட்டார்கள். பக் பக் என்று இருந்தது. கடவுள்கள் நினைக்கப்பட்டார்கள்!!!

பிறகு, லேண்டிங் வரை தூக்கமா, எதுவுமே வரவில்லை. லேண்டிங் ஆனவுடன் பைலட் சொன்னார் - "வெல்கம் டூ ஒர்லண்டோ, வி ஹவ் ஷொன் யூ டிஸ்னி ரைட் பிபோர் லேண்டிங்". நல்லா காட்டுனீங்க என்று நினைத்துக்கொண்டேன்.

(தொடர்ந்தாலும் தொடருவேன்)