Monday, March 16, 2015

ப்ளொரிடா டிஸ்னிலேண்ட்

ப்ளோரிடா பயணத்தின் முதல் நாளில் டிஸ்னிலேண்ட் சென்றோம்.

ஏற்கனவே கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் சென்றிருக்கிறோம். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கலிபோர்னியா டிஸ்னிலேண்ட் 1955யில் தொடங்கப்பட்டது. ப்ளோரிடாவில் 1971. உலகில் அதிக பார்வையாளர்கள் கால் பதித்த தீம் பார்க் இது.

 கலிபோர்னியா தீம்பார்க் திறந்தப்பிறகு, இவர்கள் நடத்திய ஆய்வில், மேற்கு பகுதி அமெரிக்கர்களே அதிகமாக கலிபோர்னியா பார்க்கிற்கு வருவதாக தெரிய, கிழக்கு பகுதியில் இன்னொரு பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடங்கிய சமயம், நுழைவு கட்டணம் - மூன்றரை டாலர்.

இதை தீம் பார்க் என்று சுருக்கி விட முடியாது. தீம் பார்க்குகள் மற்றும் ரிசார்ட்டுகளான ஒரு குட்டி, இல்லை பெரிய ஊர் என்றே சொல்லலாம். 27000 ஏக்கர். தூத்துக்குடியை விட பெரியது. இவ்வளவு இடத்தை 1960களில் டிஸ்னி வாங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. நிலத்தின் விலை தாறுமாறாக ஏறிவிட கூடாதென்று, மிகவும் ரகசியமாக, அவ்வப்போது பொய் சொல்லி வாங்கி, இப்படி ஒரு பொழுதுபோக்கு உலகத்தை நிர்மாணித்திருக்கிறார்கள்.

மேஜிக் கிங்டம், எப்காட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ், அனிமல் கிங்டம் என்று நான்கு தீம் பார்க்குகள், இரண்டு வாட்டர் பார்க்குகள், இதை தவிர பல ரிசார்டுகள் என்று நாட்கணக்கில் தங்கி இருந்து பொழுதுப் போக்கலாம். ஒர்லண்டோவில் டிஸ்னி தவிர இன்னமும் ஏகப்பட்ட தீம் பார்க்குகள் இருக்கின்றன. மியாமியும் ப்ளோரிடாவில் இருக்கும் முக்கிய பீச் பகுதி என்பதால், என்னால் இப்பயணத்தில் அதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால், டிஸ்னிக்கு அதிக நாட்களை இம்முறை அளிக்கவில்லை. என் பெண் வயதிற்கு மேஜிக் கிங்டம் செல்வது சரியாக இருக்கும் என்பதால், அதற்கே சென்றோம்.


காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே நடக்க, ட்ராமில் அழைத்துசென்றார்கள். பிறகு படகில். பஸ், ரெயில் என்று பலவகை போக்குவரத்து கழகங்களும் சேவையில் இருக்கின்றன. அது ஒரு வியாழக்கிழமை என்றாலும், டிஸ்னிலேண்ட்டில், வரும் கூட்டத்திற்கு, அப்படி எந்த வேறுபாடும் கிடையாது. வாரயிறுதியில், விடுமுறை காலத்தில், லாங் வீக் எண்ட்டில் எல்லாம் கூட்டம் அலை மோதும். அந்நேரங்களில் செல்வதற்கு செல்லாமலே இருக்கலாம்.

ரைடுகளில் செல்வதற்கு வரிசையில் காத்திருக்கும் நேரம் - அரை மணியில் இருந்து ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் என்று இருக்கும். கொடுமையாக இருக்கும் இல்லையா? வேறு வழி. மக்கள் நிற்பார்கள்.

இப்பொழுது சில வசதிகள் செய்திருக்கிறார்கள். ஆன்-லைனில் ரிசர்வேசன் செய்ய தொடங்கும் போது, பல பில்-டப்கள் தொடங்கிவிடும். வீட்டிற்கு நுழைவுச்சீட்டிற்கு பதிலாக ஆளுக்கொரு கை பேண்ட்கள் அனுப்புவார்கள். இது பார்க்கிற்குள், ரிசார்ட்டிற்குள் செல்லவும், நம்மை பணம் செலுத்த, புகைப்படங்கள் பெற என்று இன்னும் வேறு சில வசதிகளுடன் இணைத்துக்கொள்ளவும் உபயோகப்படுகிறது. கையில் கட்டிக்கொண்டு அலைந்தோமானால், நாம் எங்கு இருக்கிறோம் என்று கூட கண்டுக்கொள்வார்கள்.ஒவ்வொருவரும் மூன்று ரைடுகளில் மட்டும் ரொம்பவும் காத்துக்கிடக்காமல், உடனடியாக செல்ல சலுகை அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் புக் செய்தவுடன், எந்த தினத்தில் செல்ல நினைத்திருக்கிறோமோ, அன்றைய தினத்திற்கான ரைடுகளில் மூன்றை தேர்வு செய்து கொள்ளலாம். சிறப்பு தரிசனம் போல. அன்றைய தினத்தில், ஒரு கால அவகாசம் கொடுக்கிறார்கள். அந்த டைமிங்கில் சென்றால், சீக்கிரம் தரிசனத்தை முடித்துவிட்டு வரலாம்! பேமஸான ரைடுகள், உடனே புக் செய்யப்படுவதால், நமது தேர்வை சீக்கிரமே செய்தால் நல்லது.இது தவிர, உள்ளே இருக்கும் உணவகங்களிலும் முன்பே ரிசர்வ் செய்தால் தான் நுழைய முடியும். இதையும் ஆன்லைனிலேயே செய்துவிடலாம். சில உணவகங்களில் கார்ட்டூன் கேரக்டர்கள் நாம் உணவருந்தும் போது, நம்மிடம் வந்து ஆடி, பாடி, போட்டோ எடுத்து செல்வார்கள்.

இப்படி எல்லாவற்றையும் திட்டமிட வழிமுறைகள் செய்திருக்கிறார்கள். நாமும் திட்டமிட்டு சென்றால், சிறப்பாக அனைத்தையும் கண்டுக்களித்துவிட்டு வரலாம். ஆனால், எப்படி திட்டமிட்டாலும், அங்கே இருக்கும் அனைத்து ரைடுகளிலும், அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்துக்கொண்டு, ஒரு நாளில் செல்லமுடியாது. நாம் எதுவெல்லாம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறமோ, அப்படி ஒரு லிஸ்ட் எடுத்து சென்றால், ஒரளவுக்கு பார்க்க முடியும். அதனால், போகும் முன்பு, ஹோம் ஒர்க் செய்துவிட்டு செல்வது சால சிறந்தது.

உள்ளேயே தங்கி இருந்தோமானால், மற்றவர்களை விட ஒரு மணி நேரம் முன்பு செல்லலாம். அப்படியும் உள்ளே ஒரு பெருங்கூட்டம் தங்கியிருப்பதால், ரொம்பவும் ப்ரீயாக இருக்க போவதில்லை.ஒரு நாளில் ரெண்டு பார்க் போவது போன்ற திட்டங்கள் சரி வரப்போவதில்லை. போனாலும், ரெண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் தான் பார்க்க முடியும். ஒரு நாளுக்கு ஒன்று என்று பார்த்தால், டிஸ்னியிலேயே ஒருவாரத்திற்கு மேல் குடி இருக்க வேண்டியது தான். அதனால் எது எது பார்க்க போகிறோம் என்று நம்முடன் யார் வருகிறார்கள், அவர்களுக்கு எது பிடிக்கும், எது வசதிப்படும் என்று யோசித்து முடிவு செய்ய வேண்டியது அவசியம். சாய்ஸ் அதிகம் இருப்பதால், இப்படி முடிவு செய்வதும் சிரமம் தான்.

டிஸ்னி, யுனிவர்சல் போன்றவர்களின் திட்டமும் அதுதான். ஒரு பார்க்கிற்கு மேலோ, ஒரு நாளுக்கும் மேலோ அவர்களது குழும பார்க்கிற்கு சென்றால், நுழைவுக் கட்டணத்தில் சலுகை தருகிறார்கள். ப்ளாரிடாவிற்கு வரும் கூட்டத்தை, தங்கள் இடத்திற்குள் அதிக நாட்கள் வைத்திருந்தால், அதற்கேற்றார் போல் அவர்களுக்கு அதிக லாபம்.மேஜிக் கிங்டமில் சில ரைடுகளைத் தவிர, பெரும்பாலானவை சிறு குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் இருப்பவை. அந்த காரணத்திற்காகவே, இதை தேர்ந்தெடுத்தோம். ரைடுகளைத்தவிர, இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் போல் உடையணிந்துக்கொண்டு வருபவர்களைக் காண, குழந்தைகள் பேரார்வம் கொள்கிறார்கள். குழந்தைகள் மட்டுமல்ல, அனைத்து வயதினரும் அப்படி தான் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை, பெரும்பாலும் பெண்களே, இப்படி இதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இளம் பெண்கள், வயதான பெண்கள் அனைவரும் இந்த கேரக்டர்கள் மேல் காதலாக இருக்கிறார்கள். குழந்தைகளுடன் சேர்ந்துக்கொண்டு, கையில் ஆட்டோக்கிராப் புத்தகத்துடன் அலைகிறார்கள். அப்படி ஒரு பாட்டியம்மாவைக் கண்ட பொழுது தான், மிக்கியின் வயது நினைவுக்கு வருகிறது. மிக்கிக்கு தற்சமயம் 86 வயது. யோசித்து பாருங்கள், நீங்கள் சிறு வயதில் நேசித்த ஒரு கதாபாத்திரம், இத்தனை வருடங்கள் கழித்து அதேப்போல் வந்து நின்றால், உங்களுக்கு உங்களுடைய பழைய வயது திரும்பிவிடாது?இந்த உளவியல் தான், டிஸ்னிக்கு பிசினஸை அள்ளிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதனால் தான், அவர்களும் மிக்கி, மின்னி என்று நின்று விடாமல், புதியது புதியதாக கேரக்டர்கள் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு கேரக்டர் பிடிக்காவிடிலும், இன்னொன்று பிடிக்கும். அதுவும் இங்கே உள்ளே சுற்றிக்கொண்டிருக்கும். உங்கள் மகிழ்ச்சிக்கும் நாங்கள் கேரண்டி. உங்கள் பர்ஸ். எங்கள் உரிமை.அவர்களது படங்கள், தொடர்கள், சேனல்கள், ஹோட்டல்கள், பார்க்குகள் என்று ஒவ்வொன்றும் இது போன்ற இழைகளால் இணைக்கப்பட்டுள்ளது.சரி, எங்க கதைக்கு வருவோம். நாங்களும் தொடர்ச்சியாக ரைடுகள், கேரக்டர்களுடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, மதிய உணவிற்கு ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த 'க்ரிஸ்டல் பேலஸ்' என்னும் ரெஸ்டாரண்டுக்குள் சென்றோம். அங்கு பபே. நன்றாக பசித்திருந்ததால், நன்றாகவே சாப்பிட்டோம்.
அவ்வப்போது கார்ட்டூன் கேரக்டர்கள் சுற்றி வந்து, பாட்டு பாடி, ஆட்டோகிராப் போட்டுக்கொண்டு, போட்டோ எடுத்துக்கொண்டு சென்றார்கள்.சாப்பிட்டப்பிறகு திரும்பவும் ரைடுகள். நடு நடுவே அங்கிருக்கும் சாலைகளில் பரேடு செல்வார்கள். கார்ட்டூன் கேரக்டர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் ஆடிக்கொண்டு செல்ல, சாலையின் இருப்பக்கமும் நாம் நின்று பார்க்கலாம். இந்த கேரக்டர்களது உடை, நடை, பாவனை, அலங்காரம் அனைத்தும் உயர்தரமானவை. எதிலும் குறை சொல்லமுடியாது. இங்கிருக்கும் சின்ட்ரெல்லா கேசிலிலும் அவ்வப்போது நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைப்பதிலும், இடத்தை, மக்களை நிர்வகிப்பதிலும் அவ்வளவு நேர்த்தி. ப்ளோரிடாவில் மட்டும் 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் டிஸ்னியில் பணிபுரிகிறார்கள்.

இருட்ட தொடங்கியவுடன், வண்ண விளக்குகளிலான பரேடு துவங்கியது. என் பெண், டயர்டில் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தாள். சாலைகளில் இருந்த விளக்குகளை அணைத்துவிட்டு, இந்த பரேடு நடந்ததால், ஒரே ஜொலி ஜொலிப்பு.அதற்கு அங்கு இருந்த சிண்ட்ரெல்லா கேஸில் மாளிகை மேல் ஒளி பாய்ச்சி நடைபெறும் ஒளி-ஒலி நிகழ்ச்சி தொடங்கியது. இது புது வரவு போல. இம்மாதிரி ஷோக்களை இணையத்தில் பார்த்திருக்கிறேன். முதன்முதலில் நேரில். வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அடுத்ததாக, டிஸ்னி சிறப்பம்சமான வாண வேடிக்கை. எவ்வளவு பட்டாசுகள்? எவ்வளவு ஒருங்கிணைப்பு? ஒரு கதையுடன், டிஸ்னி சிண்ட்ரல்லா கேஸில் மாளிகை பின்னணியில் இந்த வாண வேடிக்கை என்பது பிரமாண்டம். நடுவே ஒரு பெண், கயிறு கட்டிக்கொண்டு பறந்தாலும், அவ்வளவு உயரத்தில் பறப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக பிரமிப்பாக இருக்கும். உள்ளே எவ்வளவு சுற்றினாலும், இந்த வாணவேடிக்கை பார்ப்பதே, டிஸ்னிலேண்ட் வந்ததின் முழு திருப்தியை கொடுப்பது.இதற்கு பின்பும், சில ரைடுகள் செயல்பட்டுக்கொண்டிருந்தது. முடிந்த வரை அனைத்தையும் கவர் செய்வோம் சென்று அங்கிங்கு அனைத்திலும் இரவு பத்து மணி வரை சுற்றி விட்டு, வீடு திரும்பினோம். இரவு டிஸ்னி ஆல் ஸ்டார்ஸ் மூவிஸ் ரிசார்டில் தங்கினோம். ஒவ்வொரு ரிசார்ட்டும், ஒவ்வொரு தீமில் அமைத்திருக்கிறார்கள். இது மூவி தீம். இங்கிருக்கும் திரையரங்கில் தினமும் ஏதேனும் ஒரு படம் போடுவார்கள். எங்கு பார்த்தாலும், டிஸ்னி வெளியிட்ட படங்கள் சம்பந்தமாக ஏதெனும் காணலாம். இது போல், ஸ்போர்ட்ஸ், மியூசிக் தீம் ரிசார்ட்டுகளும் உள்ளன.


இரவு உணவை இங்கிருக்கும் புட்கோர்ட்டில் சாப்பிட்டு விட்டு, ரூமிற்கு சென்று உறங்கினோம். ரூமில் டிஸ்னி தீம், கதவு, டிவி, தலையணை, சோப்பு போன்றவற்றில் தொடர்ந்தது. அவரவர் கனவிலும் தொடர்ந்தாலும் தொடர்ந்திருக்கும்.

(தொடர்ந்தாலும் தொடர்வேன்)

4 comments:

S.P.SENTHIL KUMAR said...

பைசா செலவில்லாமல் உங்களுடன் சேர்ந்து நானும் தீம் பார்க்கை சுற்றிவிட்டேன். அருமையான தகவல்கள், அற்புதமான படங்கள்.

Unknown said...


படிக்கவே இனிக்கிறது! விளக்க நடை
நன்று!

சரவணகுமரன் said...

நன்றி செந்தில் குமார். உங்கள் பின்னூட்டம் ஊக்கமளிக்கிறது.

சரவணகுமரன் said...

நன்றி புலவர் அவர்களே.