Tuesday, December 27, 2016

பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்


பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, நண்பரொருவர் ஒரு திங்கள் கிழமையின் மதிய உணவுவேளையில் சொன்ன விஷயம் இது. வாரயிறுதியில் ஓசூரில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். நீள வரிசை. பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது, பக்தர் குழுக்கள். ஒரு பெரிய கதவைக் கடக்கும் போது, நமது நண்பர் அந்தக் கதவில் மாட்டியிருந்த ஒரு உலோக வளையத்தைத் தட்டியவாறு சென்றிருக்கிறார். அதைப் பார்த்த அவரது மனைவியும் அதை ஒரு தட்டுத் தட்ட, பின் தொடர்ந்த நண்பர் குடும்பமும் அந்தச் செய்கையைத் தொடர, அந்த முழு வரிசைக்கும் அது வழக்கமாகி விட்டது. பிறகு, சாமி கும்பிட்டு விட்டு திரும்ப வரும் போது கவனித்த போதும், ஒன்றிரண்டு பேர்கள் அதைத் தட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். நண்பருக்கே சந்தேகம் வந்து விட்டது. நமது செய்கையே, இக்கோவிலின் வழக்கம் தானோ? என்று.
இதில் எவ்வளவு கற்பனை கலந்திருக்கிறது என்ற ஆய்விற்குள் நுழையாமல், ஒன்று புரிந்துக் கொள்ளலாம். இப்படி யாரோ ஒருவர் ஆங்காங்கே ஆரம்பித்து வைக்கும் கிறுக்குத்தனத்தைப் பின் தொடர, ஏதோ ஒருவகை நம்பிக்கை அல்லது உணர்வு காரணமாகிறது.
சமீபத்தில் மினசோட்டாவில் இருக்கும் வெர்மிலன் (Vermillion Falls) நீர் வீழ்ச்சியைக் காணச் சென்றபொழுது , அங்கிருந்த பாலத்தில் மாட்டப்பட்டிருந்த பூட்டுகளைக் கண்டபொழுது, மனிதர்களின் இந்த உலகளாவிய உணர்வு பூர்வ 'கிறுக்குத்துவ' நம்பிக்கைக்கு இன்னுமொரு சான்று கிடைத்தது.
ஐரோப்பிய நாடுகளில் உருவான வழக்கம் இது. ஒரு பாலத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. "லவ் லாக்" என்ற பெயரில் காதலர்களாக இருப்பவர்கள், அவர்களது பெயரை ஒரு பூட்டில் எழுதி, அந்தப் பூட்டைப் பாலத்தின் ஏதோ ஒரு பகுதியில் மாட்டிவிட்டு, சாவியை எறிந்து விட வேண்டியது. அதாவது, சாவியைத் தேடிக் கண்டறிந்து, அந்தப் பூட்டைப் பிரித்தெடுக்க முடியாதது போல, அவர்களது காதலையும் பிரிக்க முடியாதாம்.
பாண்ட் டே ஆர்ட்ஸ் (Pont des Arts) எனும் பாலத்தில் ஆரம்பித்து, பாரிஸின் பல பாலங்கள், காதலர்களின் இச்செய்கையினால் பூட்டுகளால் சூழ்ந்து கிடக்கின்றன. நகரின் சில நிர்வாக அமைப்புகள், இச்செய்கைக்கு ஆதரவளித்து, காதல் பூட்டுக்கு வரவேற்பு கொடுத்து, சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர் நோக்கி காத்திருக்கின்றன. சுற்றுச்சூழல் குறித்தும், கட்டுமானப் பாதுகாப்பு குறித்தும் விவரமறிந்த, அக்கறையுடைய அமைப்புகள் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது, பூட்டுகளை உடைத்து எறிகின்றன. இருந்தும், பூட்டு ஆர்வலக் காதலர்கள் இப்பழக்கத்தை விடுவதாக இல்லை. பூட்டுகளைத் தொடர்ந்து போட்டு நிர்வாகத்தினரை டார்ச்சர் செய்து வருகிறார்கள்.
மினசோட்டா காதலர்கள் அந்தளவுக்கு மோசமானவர்கள் இல்லை. இதுவரை கொஞ்சம் பூட்டு தான் போட்டு இருக்கிறார்கள். இருந்தாலும், கவனிக்கத்தக்க அளவில் உள்ளது. நிலைமை எல்லை மீறும் போது, இங்கும் நிர்வாகத்தினர் களத்தில் இறங்க வேண்டிவரும்.
ஒரு பாலத்தை வடிவமைக்கும் போது, அதில் நடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், அதில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் தான், அது எவ்வளவு எடையைத் தாங்க வேண்டி வரும் என ஆராய்ந்து திட்டமிட்டுக் கட்டுவார்கள். போகிற போக்கைப் பார்த்தால், இம்மாதிரி பூட்டுகளையும் கணிக்க வேண்டிவரும் போலும்.

இதை முதலில் பார்த்த போது, நம்மூரில் சில கோவில்களில் இருக்கும் தொட்டில் மரம் நினைவுக்கு வந்தது. மரத்திற்குப் பக்கத்திலேயே தொட்டில் விற்பார்கள். மகான் கவுண்டமணி அந்தக் காலத்திலேயே வாழைப்பழ வியாபாரம் அதிகரிக்கக் கொடுத்த ஐடியா நினைவுக்கு வருகிறது. நல்லவேளை, இங்குப் பக்கத்தில் எங்கும் பூட்டுக்கடை இல்லை!!

.