Thursday, September 30, 2010

ஜட்ஜ்மெண்ட் டே

கல்லூரி காலத்திற்கு பிறகு, அரை நாள் விடுமுறை இன்று அதிகாரப்பூர்வமாக எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் எப்போதுமே அரை நாளுக்கு பிறகுதான், வேலையைத் தொடங்குவேன். நான் வேலையை தொடங்கும் சமயம், எல்லோரும் கிளம்ப தொடங்கிவிட்டார்கள். இரண்டரை மணிக்கு முக்கால்வாசி பேருக்கு மேல் அலுவலகத்தில் வெளியே சென்று விட்டார்கள்.



ஒரு நீதிமன்ற தீர்ப்பு, தேசத்தையே முழு எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. முன்பு ஒருமுறை காவிரி தீர்ப்பு வந்த சமயம், இப்படித்தான் பெங்களூரில் 3-4 மணிக்கே அனுப்பிவிட்டார்கள்.

வழியில் ஒருவர், ‘வெற்றி நமக்குதான்’ என்று ஏதோ கிரிக்கெட் போட்டி ரிசல்ட் மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.

உண்மையிலேயே அக்கறையுடன் சொன்னார்களோ இல்லையோ, எல்லா அரசியல்வாதிகளுமே ‘அமைதி அமைதி’ என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். நியாயப்படி, இது அரசியல்வாதிகளை நோக்கி நாம் கூற வேண்டிய வார்த்தை. அவனவனுக்கு அவன் பிரச்சினை. லீவ் விட்டுவிட்டார்கள்.

அனைத்து டிவி ரிப்போர்ட்டர்களும், நீதிமன்றத்தை சுற்றி சுற்றி வந்தார்கள். நீதிமன்ற கேட், காவலுக்கு நின்ற போலீஸ் ஒருவரையும் விடவில்லை. பார்க்க காமெடியாக இருந்தது.

டைம்ஸ் நவ்வில் தீர்ப்பு வந்தப்பிறகு, அதை ஆராய்ந்து உண்மை நிலையை கூறுவோம். அதுவரை குத்துமதிப்பாக எதுவும் சொல்ல மாட்டோம் என்று நல்ல பிள்ளையாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதற்குள், மற்ற சானல்கள் டிக்கர் போட தொடங்கிவிட்டார்கள். டிஆர்பி போச்சே!

தீர்ப்பை நேரடியாக காண வேண்டும் என்று டிவி முன்பு உட்கார்ந்தவர்கள் எல்லாம், குழம்பிய நிலைக்கு சென்றிருப்பார்கள். கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணும் புரியவில்லை. ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எது தீர்ப்பு, எது கருத்து என்றே தெரியவில்லை. பத்திரிக்கையாளர்களுக்குள் ஒரு அடிதடி வேறு நடந்தது. இவுங்க நம்மள அமைதியாக இருக்க சொல்கிறார்கள்!

தீர்ப்பு ஆன்லைனிலும் கிடைக்கும் என்றார்கள். கண்டிப்பாக சர்வர் தீய்ந்துபோய்விடும் என்று நினைத்திருந்தேன். அப்படியே ஆனது. ஊப்ஸ்! பேஜ் கேனாட்பி டிஸ்ப்ளேயிட்! இங்கு முழு தீர்ப்பும் கிடைக்கிறது.

மசூதியின் மையப் பகுதிக்கு, கீழே உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு ஆதாரமாக எதை எடுத்துக்கொண்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

---

சன் டிவியில் ‘படிக்காதவன்’ ஒளிப்பரப்பினார்கள். ஷங்கர் தான், ரஜினியை வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் எடுப்பாரா? அப்பவே, இயக்குனர் ராஜசேகர் இந்த படத்தில் ரஜினியின் ‘லக்‌ஷ்மி’ டாக்ஸிக்கு ஆர்ட்டிபிஸியல் இண்டலிஜென்ஸ் திறமையை கொடுத்திருந்தார். வண்டியில் கஞ்சா, சாராயம் வைத்துக்கொண்டு யார் ஏறினாலும், சத்தம் கொடுத்தப்படியே கிளம்ப மறுக்கிறது.

இரண்டாம் பகுதியில் வரும் கோர்ட் காட்சி நன்றாக இருக்கும். ‘அண்ணன் நீதிபதி, ஒரு தம்பி குற்றவாளி, இன்னொரு தம்பி சாட்சி’ என்று சிவாஜி சொல்லும் காட்சி அருமை. சிவாஜியிடம் காட்டும் மரியாதை, தம்பியிடம் கொட்டும் பாசம் எதுவும் ரஜினியிடம் வெறும் நடிப்பாக தெரியாது.

---

ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, முடிவில் இன்று தீர்ப்பு வெளிவந்துவிட்டது.

ஆமாம். எந்திரன் நன்றாக இருக்கிறதாம். ரஜினிக்கு ஆஸ்கரோ, தேசிய விருதோ கிடைக்க வாய்ப்புள்ளதாம்! :-)

.

Wednesday, September 29, 2010

இயக்குனர் நாடித்துடிப்பு - ஷங்கர்

எங்க ஊரில் தியேட்டரில் கூட்டம் அதிகமாகி, டிக்கெட் இல்லை என்று திரும்பி வர வேண்டியதே இல்லை. உள்ளே சீட் இல்லாவிட்டாலும், வெளியே டிக்கெட் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதனால், எவ்ளோ பெரிய ஸ்டார் படமாக இருந்தாலும், முதல் நாள் படம் பார்ப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. எக்ஸ்ட்ரா சேர் போட்டோ அல்லது தரையில் உட்கார்ந்தோ எப்படியோ பார்த்து விடலாம். ஆனால், ஒரு படத்திற்கு இரண்டு மூன்று முறை சென்றும் டிக்கெட் கிடைக்காமல், வீடு திரும்ப வேண்டி இருந்தது. அது அப்பொழுதுதான் கட்டப்பட்ட ஒரு நேர்மையான தியேட்டர். ஆனால், டிக்கெட் கிடைக்காததற்கு அது மட்டும் காரணம் அல்ல. படம் அப்படி. ஜென்டில்மேன். அதே போல், ஒரு தீபாவளி அன்று ஒரு இயக்குனரின் திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்தது முதல்வனுக்கு.

இன்று ஜென்டில்மேன் பிரமாண்டமான படமாக தெரியாது. ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து ஸ்டண்ட் காட்சி அமைத்த (முதல்?) படம் அது. பட டைட்டிலுடன் ‘சம்திங் ஸ்பெஷல்’ என்ற tag லைனுடன் வந்த முதல் படம். எலியை கடிப்பது, இருதயம் ரோட்டில் துடிப்பது என ரசிகர்களுக்கு பல பகீர்களைக் கொடுத்த படம். டபுள் மீனிங் தூக்கலாக வந்த படம். இது எல்லாவற்றையும் தாண்டி, இன்றும் பரவலாக விவாதிக்கப்படும் சமூக விஷயமான இட ஒதுக்கீட்டை (சரியோ, தவறோ) மையமாக கொண்டு வந்த படம்.

எனக்கு அந்த சமயம் அப்படத்தினுடைய மையக்கருத்தின் அரசியலெல்லாம் புரியவில்லை. ஒவ்வொரு முறையும் கொள்ளையடிக்க ஹீரோ போடும் புத்திசாலித்தனமான திட்டமும், ஆக்‌ஷன் காட்சிகளும், இசையும், நகைச்சுவையும் மட்டுமே புரிந்தது. பிடித்தது. பிறகு, சில காலம் கழித்து, பத்திரிக்கைகளில் சில கட்டுரைகளை வாசித்த போது, இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் விதமாக அதில் கருத்து சொல்லப்பட்டு இருந்தது லேட்டாக புரிந்தது. எது சரி, எது தவறு என்பது இப்போது விவாதமல்ல. ஒரு முக்கியமான விஷயத்தை, முதல் படத்தில் கருவாக வைத்த தைரியம். சொல்ல வந்த கனமான விஷயத்தை, கமர்ஷியல் கலந்து, இலகுவாக ரசிகனின் மண்டையில் ஏற்றி வெற்றி பெற்றது போன்றவை படத்தின் இயக்குனர் மேலான ஈர்ப்பை கூட்டியது.



ஷங்கர். விமர்சனங்கள் இருந்தாலும் இவர் மேலான ஈர்ப்பு, தமிழகத்திற்கு இன்னமும் குறையவில்லை. 17 வருடங்கள். இதுவரை எட்டே எட்டு தமிழ் படங்கள் இவரின் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது. பத்தாவது படம், இந்த வாரம் வெளியாகிறது. படத்தில் ரஜினி நடித்திருந்தாலும், இது ஷங்கர் படம். இந்த ஒரு வரி போதும், இவர் பெருமை கூற.

முதல் படத்தில் இருந்து இப்போது வரை எடுத்துக்கொண்டால், ஷங்கர் நிறைய மாறி வந்திருக்கிறார். முன்பு போல, காட்டமான அரசியல் விமர்சனம் இருப்பதில்லை. இவருக்கான ரசிகர் வட்டம் கூட கூட, ஆரம்பத்தில் இருந்த டபுள் மீனிங் தற்போது இருப்பதில்லை. பாய்ஸை விட்டுவிடலாம். அது அவர் யதார்த்தமாக எடுக்க நினைத்து, கலாச்சார காவலர்களிடம் பதார்த்தமாக மாட்டிக்கொண்டது.

ஷங்கர் படங்களின் பலம், அவருடைய திரைக்கதை. ‘ஊருக்கு நல்லது செய்யும் ஹீரோ’ கதையை எத்தனை முறை எடுத்தாலும், தமிழ் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. காரணம், அவருடைய ட்ரீட்மெண்ட். அதை போன்ற கதையை, எத்தனை பேர் எடுத்தாலும், ஷங்கர் மட்டுமே வெற்றி பெறுகிறார். (விதிவிலக்கு-முருகதாஸ். ஆனாலும், ரமணாவில் ஷங்கர் படங்களின் ரிச்னெஸ் மிஸ்ஸிங்.) காரணம், திரைக்கதையில் கடைசி வரை அவிழ்க்காமல் ஒரு முடிச்சை வைத்திருப்பார். கிளைமாக்‌ஸுக்கு கொஞ்சம் முன்பு தான், அதை அவிழ்ப்பார். அது வரை அதை வைத்து ரசிகர்களை கட்டிப்போடுபவர், அதற்கு பிறகு கிளைமாக்ஸை வைத்து ரசிகர்களைக் கட்டிப்போடுவார். அந்தியன் நேரத்தில் கதை ரீதியாக அவரிடம் சலிப்பு வந்துவிட்டாலும், அதிலும் மூன்று பேரை ஒரே ஆள் என எப்படி காட்டப்போகிறார் என்ற சஸ்பென்ஸை வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருந்தார்.



படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானதாக இருக்கும். அதையும் இண்ட்ரஸ்டிங்காக கொடுக்க பாடுபடுவார். உதவி இயக்குனர்களை நன்றாக கவனிக்கும் இயக்குனர் இவர். இவர் வழியை தொடர்ந்து, இவருடைய சிஷ்யர்களால் வெற்றியை கொடுக்கமுடியவில்லை. பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், காந்தி கிருஷ்னா, அறிவழகன் என இவர்களுடைய வழி வேறானது. இன்னமும் ஷங்கரின் வழி தனியானதாக இருக்கிறது. அந்தந்த காலக்கட்டத்தின் முக்கியமான திறமையான கலைஞர்களை தனது படத்தில் பயன்படுத்தி, அவர்களது முழுத்திறமையையும் கொண்டுவர வைத்துவிடுவதால், படத்தின் மேக்கிங் தரமானதாக இருந்துவிடும்.

அவருடைய எந்த படத்தின் கிளைமாக்ஸும் சாதாரணமாக முடியாது. ஒரு பைட்டை வைத்து, மகிழ்ச்சியாக நடிகர்கள் எல்லோரையும் சிரிக்க வைத்து முடிக்க மாட்டார். வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமாக இருக்கும். ஆனாலும், அதில் ஆக்‌ஷன் இருக்கும். ரசிகனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் முடிவு இருக்கும்.

நான் ஷங்கரை ஆரம்பத்தில் வெறும் மசாலா இயக்குனராகதான் பார்த்து வந்தேன். முன்பே சொன்னது போல், சிலருடைய விமர்சனங்களை படித்தப்பிறகு தான், அவர் ஒரு அதிபுத்திசாலி இயக்குனராக தெரிந்தார். இதற்கு காரணம், அந்த விமர்சகர்கள் தான். ஷங்கர் அப்படியெல்லாம் யோசித்து எடுத்தாரோ இல்லையோ, அவர்கள் கூறிய குற்றசாட்டுகள் - ‘இவர் இப்படியெல்லாம் கூட நினைச்சு எடுப்பாரா?’ என்று ஷங்கர் மீதான மதிப்பைக் கூட்டியது!



தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை, தமிழ் சினிமாவில் முயன்று பார்த்தவர். கௌதமி மேல் அனிமேஷன் அம்பு விடுவது, பிரபுதேவாவின் கோட்-சூட்-தொப்பி தனியே ஆடுவது, தத்ரூப தாத்தா மேக்கப், ஒரு பிரசாந்த் இன்னொரு பிரசாந்தை கட்டிப்பிடித்து அழுவது, ஒரு ஜனக்கடலையே நடிக்க வைப்பது, ஒரு ஸ்டில்லை 360 டிகிரியில் சுற்றிக்காட்டுவது, ரஜினியை வெள்ளையாக்குவது என டெக்னாலஜி மூலம் வெள்ளித்திரையில் மேஜிக் காட்டுபவர்.

ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் படங்களில், ஹிந்திக்கு அடுத்துப்படியாக அதிகம் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டது தமிழ்ப்படங்கள். இந்த தேர்ந்தெடுப்பு முறையில் படத்தின் தரத்திற்கு அடுத்தப்படியாக முக்கியத்துவம் பெறுவது, படைப்பாளிகளின் செல்வாக்கு. தற்போது, இப்படி செல்வாக்காக இருப்பவர் - அமீர்கான். தமிழில் இருந்து இதுவரை 8 படங்கள் ஆஸ்கருக்கு சென்று இருக்கிறதென்றால், அதற்கு காரணம் சில படைப்பாளிகள். கமல் (இவரால் தமிழ்படங்கள் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது) , மணிரத்னத்திற்கு அடுத்தப்படியாக ஷங்கர். இவருடைய இருப்படங்கள் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவருடைய படங்களில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட தேவையிருக்கிற கச்சாப்பொருள் இருக்கிறதா என்று வேறு விஷயம். இது இந்திய அளவில், தமிழகத்தை சேர்ந்த ஒரு படைப்பாளிக்கு இருக்கும் செல்வாக்கை காட்டுகிறது.

ஒவ்வொரு படத்திலும் தனது முந்தைய படத்தின் பிரமாண்டத்தை, வியாபாரத்தை தாண்டியவர் ஷங்கர். அவர் அடுத்ததாக ‘3 இடியட்ஸின்’ தமிழ்/தெலுங்கு ரீமேக்கை இயக்க போவதாக வரும் செய்திகள், எனக்கு மகிழ்வை கொடுக்கவில்லை. விஜய்/மகேஷ் பாபு என இரு பெரிய பிராந்திய மொழி ஹீரோக்களை வைத்து இயக்க வேண்டி இருப்பதை தவிர்த்து, ஷங்கருக்கு பெரிய வேலை இருப்பதில்லை. அவருக்கே உரிய ஜிகினா வேலைகளை செய்தாலும், அது அந்த கதைக்கு பொருத்தமாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அதற்கு பதில், வேறெதாவது பெரிதாக முயலலாம்.

கமர்ஷியலாக, பிரமாண்டமாக, தரமாக படமெடுப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. அதை வெற்றிக்கரமாக்குவது என்பது எளிதான வேலையல்ல. ஆனாலும், இச்சவாலை பலமுறை முடித்து காட்டியவர், ஷங்கர். வேண்டுமானால், பிறருடைய கதையை, பிறருடைய உதவியுடன் கூடிய திரைக்கதையை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையாக படமெடுக்க தமிழில் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவருடைய தனித்திறமையான பிரமாண்ட டெக்னிக்கல் எக்ஸிக்யூசன் திறமையை கைவிடாமல், அதற்கு பொருத்தமான கதைக்களனுடன் கூடிய படங்களை அவர் தொடர்ந்து படமாக்க வேண்டும் என்பதே ஒரு ரசிகனாக என்னுடைய ஆசை.

.

Sunday, September 26, 2010

வலைச்சரத்தில் நான்

வரும் வாரம், வலைச்சரத்தில் வலைப்பூக்களை கதம்பமாக தொடுக்கிறேன்.



நண்பர்கள் வந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். :-)

.

Friday, September 24, 2010

அயோத்தி வழக்கு - வரலாறும் வருங்காலமும்

அயோத்தி இந்தியாவின் இதயப்பகுதியில் இருப்பதாலோ என்னவோ, அங்கு விழுந்த அடி காலத்திற்கும் இந்தியாவின் தேகமெங்கும் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேண்டுமானால் 1992 நிகழ்வு, பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கலாம். ஆனால், அடிப்படை பிரச்சினை 1885 யிலேயே வேர் விட தொடங்கிவிட்டது.



இந்து மத நம்பிக்கைபடி அயோத்தி, தசரதன் ஆண்ட நகரம். ராமர் பிறந்த மண். தற்போது இங்கு இருக்கும் பாபர் மசூதி, முகாலய அரசர் பாபரின் தளபதி மிர் பஹியால் கட்டப்பட்டது. அவரை இங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டினாரா என்பது இந்தியாவிற்கு தலைவலியை கொடுக்கும் சர்ச்சைக்குரிய கேள்வி. பதிலுக்கு மொத்த நாடும் காத்திருக்கிறது.

1885 இல் ரகுபர் தாஸ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அயோத்தியில் பாபர் மசூதிக்கு பக்கமிருக்கும் அவருடைய நிலத்தில் ஒரு திண்டு (திண்ணை போன்ற மேடை) இருந்தது. அது தான் ராமர் பிறந்ததாக நம்பப்பட்டு வந்த இடம். அதில் கோவில் கட்ட அனுமதியளிக்கும் படி ஒரு வழக்கு தொடர்ந்தார். இடம் அவருடையதாக இருந்தாலும், பக்கத்திலேயே மசூதி இருப்பதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது என்று ஃபைசாபாத் துணை நீதிபதி தீர்ப்பளித்தார். இதே வழக்கு ஃபைசாபாத் மாவட்ட நீதிபதியிடம் செல்ல, அவரும் அனுமதி மறுத்தார். “என்னத்தான் இந்துக்களின் புனிதத்தலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டு இருந்தாலும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும்” என்றார் அந்த ஆங்கிலேயே நீதிபதி சம்பியர்.

பிறகு இரு மதத்தினரும் இந்த இடத்தில் வழிபாடு நடத்தி வந்தனர்.

1934இல் ஒரு பசு கொல்லப்பட்டதால் உருவான கலவரத்தில் மசூதி தாக்கப்பட்டது. அரசே அதை சரி செய்தும் கொடுத்தது.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது. 1949 இல் மசூதிக்குள் ஒரு ராமர் சிலை வைக்கப்பட்டது. யார் வைத்தது? எப்படி வைக்கப்பட்டது? தெரியாது. ஆனால், அதற்கு இந்துக்கள் கூட்டம் கூடியது. பூஜைகளும் நடத்தப்பட்டது. பிறகு கூட்டம் தடுக்கப்பட்டு, மசூதி பூட்டப்பட்டாலும், அந்த சிலை வெளியே எடுக்கப்படவில்லை. அந்த சிலையை வெளியே எடுக்க, யாருக்கும் தைரியம் வரவில்லை. அப்போதைய பிரதமர் நேரு ஆணையிட்டும், யாரும் எடுக்க தயாராக இல்லை. அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட், “என்னை வேலைவிட்டு போக சொன்னாலும் சொல்லுங்க, அந்த சிலை எடுக்க சொல்லாதீங்க” என்றார்.

ஃபைசாபாத் கமிஷனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த சிலையை தற்சமயம் எடுப்பது சரிப்பட்டு வராது. கொஞ்ச நாள் பொறுப்போம். எல்லாம் அடங்கிய பிறகு முடிவெடுப்போம்.

அவர் சொன்னது போலவே சில காலம் ஏதும் பிரச்சினை இல்லாமல் சென்றது. 1949 இல் நகர மாஜிஸ்ட்ரேட் ஆணையின்படி, அந்த இடம் நகராட்சி சேர்மனால் கையகப்படுத்தப்பட்டது.

திரும்ப 1950 இல் கோபால் சிங் என்பவர் மசூதிக்குள் ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும், உள்ளூர் பூசாரி ஒருவர் மட்டும் உள்ளே தினமும் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் வழங்கப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பில், “இந்த மசூதி முஸ்லீம்களால் பல ஆண்டு காலம், வழிப்பாட்டுக்காக பயன்பட்டு வந்ததாகவும், அது ராமரின் வழிப்பாட்டு தலமாக இருந்ததில்லை எனவும்” கூறப்பட்டது. ராமர் சிலை ரகசியமாக, தவறாக உள்ளே வைக்கப்பட்டதாக அந்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது.

1955 இல் அந்த இடத்திற்கு உரிமை கோரி நின்மோஹி அஹாரா என்பவரும், மொகமது ஹசிம் என்பவர் தலைமையில் ஐந்து முஸ்லிம்கள் அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தீர்ப்பளித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், தற்போது நிலவும் நிலையிலேயே நீடிக்குமாறு தீர்ப்பளித்தனர். பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்தில் ஒரு முடிவு கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறினாலும், ஒன்றும் நடக்கவில்லை.

1961 இல் ஹசிம் இடத்தை முஸ்லீம்களிடம் திரும்ப வழங்க கோரி இன்னொரு வழக்கு தொடர்ந்தார். 1964 இல் இதை பற்றிய அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கிற்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. 1968 இல் அந்த இடத்திற்கு ஒரு பொறுப்பாளரை நீதிமன்றம் நியமித்தது. ஆனால், 1971 இல் இன்னொரு வழக்கு தொடரப்பட்டதால் அவருக்கு வேலை இல்லாமல் போனது.

1983 இல் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த பிரச்சினையை பெரியளவில் எடுத்த செல்லும் வரை, அந்த வழக்கு கண்டுக்கொள்ளப்படவில்லை. பிரச்சினையின் தீவிரம் கூட கூட, ஃபைசாபாத் நீதிமன்றம் 1886இல் அந்த இடத்தை இழுத்து மூடியது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டை சந்தித்து ராம தரிசனத்திற்கு அனுமதி கோர, அதற்கு அவர் வழங்கிய ஆணை, கடும் சூட்டை கிளப்பியது. கலவரம் ஆரம்பித்தது.

நீதிபதி பாண்டே கூறியது என்னவென்றால், “இருதரப்பையும் விசாரித்ததில், அந்த இடத்தை திறந்து விடுவதாலும், சிலைகளுக்கு பூஜை செய்வதாலும் முஸ்லீம் மக்களுக்கு எந்த பிரச்சினை இல்லையென்று தெரிகிறது. திறந்துவிடுவதால் ஒன்றும் வானம் இடிந்து விழ போவதில்லை”.

இதை தொடர்ந்து வக்பூ வாரியமும், பாப்ரி மஸ்ஜித் செயல் குழுவும் அலாகாபாத் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மதவாதிகளுக்கு இது முழு நேர தொழிலானது. கரசேவகர்கள் பிஸியானார்கள். 1990 இல் முலாயம் சிங் ஆட்சியில், கரசேவகர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தப்பட, இதை பிரச்சினையாக்கி பாரதீய ஜனதா உத்திரப்பிரதேசத்தில் 1991 ஆட்சியை பிடித்தது. பாஜக முதல்வர், மசூதியை சுற்றி அமைந்துள்ள இரண்டே முக்கால் ஏக்கரை, கோவில் கட்டுவதற்காக கையகப்படுத்தினார். பாப்ரி மஸ்ஜித் செயல் குழு அப்படியேதும் கட்டப்படாமல் இருக்க தடைக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

1992இல் பாஜக தலைமையின் முன்னிலையில் மசூதி தகர்க்கப்பட்டது. இந்தியாவே ஆட்டம் கண்டது. கல்யாண் சிங் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றி 67 ஏக்கர், மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு, இந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு முன்பு, ராமர் கோவில் இருந்ததா? என்று கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, அதன் மேல் முடிவெடுக்க இம்மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் கூடுகிறது.

---

வழக்கின் தீர்ப்பு, அங்கு ராமர் கோவில் இருந்ததா இல்லையா என்பதை குறித்தே அமையும். தீர்ப்பையொட்டி கலவரம் ஏற்படலாம் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட அணி மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்லும். முடிவில், அதுவும் இழுக்கப்பட்டு இழுக்கப்பட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை அறிய, நாமெல்லாம் இருப்போமா என்பதே சந்தேகம் தான்.

ஒரு சாதாரண இடப்பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டால், என்னத்தான் முன்பு ராமர் கோவில் இருந்தாலும், 400 ஆண்டுகளுக்கு மேலாக மசூதி இருப்பதால், அதில் கோவில் கட்ட சட்டரீதியாக இடமில்லை. இல்லாவிட்டால், இப்போது நாம் இருக்கும் இடமெல்லாம் நமக்கில்லாமல் போகலாம். இது என் மூதாதையர் இடம், அது என் மூதாதையர் இடம் என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்.

இப்பிரச்சினை பெரிதாக காரணம், அரசியல்வாதிகளே. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, இது ஒரு முக்கிய காரணம். ஆனால், முன்பு இருந்தது போல தற்போது மக்களிடம் இதற்கு ஈடுபாடு அதிகமில்லை. அதே சமயம், பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, அப்போதைய தொழிலதிபர்களும் காரணமாக இருந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், தொழில் சூழல் நன்றாக அமையும் என்று ஒரு நம்பிக்கையிருந்ததால், அவர்களது ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது தொழிலதிபர்களின் பிரதிநிதியாக பிரதமராக செயல்படுவதால், காங்கிரஸிற்கு அவர்களது முழு ஆதரவும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மதரீதியாக பிரச்சினை ஏற்பட்டு, சுமூகமான தொழிற்சூழல் கெட தொழிற்துறை விரும்பாததால், அவர்களை காப்பதற்காக, காங்கிரஸ் இப்பிரச்சினையை தள்ளிப்போடவும், முக்கியத்துவம் கொடுக்காமல் கண்டுக்கொள்ளாமலும் இருக்கவே முயலும். ஏன், பாஜகவும் இதை பெரிதாக பிரச்சினையாக்காது என்றே கருதப்படுகிறது.

எப்படியோ, இவ்வழக்கின் தீர்ப்பில் நடுநிலைமை சாத்தியம் இல்லை. தலைவலியாகத்தான் இருக்கப்போகிறது. இந்திய நீதித்துறையின் பெரும் பிரச்சினையான கால விரயமே, இப்பிரச்சினையை காக்கக்கூடும். தீர்ப்பு வழங்கப்போகும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறுவதால், அதன் பிறகு உடனே தீர்ப்பு வழங்க முடியாது. அச்சமயம் விசாரணை திரும்ப முதலில் இருந்து நடைப்பெறும்.

நாமும் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

பின்குறிப்பு - இணையத்தில் பல்வேறு தளங்களில் வாசித்ததை பதிந்திருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் குறிப்பிடவும்.

.

Wednesday, September 22, 2010

காமன்வெல்த் சித்து விளையாட்டுக்கள்

ஆரம்பத்தில் இருந்தே டெல்லியில் நடக்க இருக்கும் (நடக்குமா என்பது சந்தேகம் தான்!) காமன்வெல்த் விளையாட்டைப் பற்றி நெகட்டிவ் செய்திகள் தான் வந்துக்கொண்டிருந்தது. நாங்களும் பெரிய ஆட்கள் என்பதை காட்டிக்கொள்ள, இந்த வாய்ப்பை கேட்டு வாங்கி விட்டார்கள். தற்போது உண்மை நிலவரம் புரிந்திருக்கும். காசை அள்ளிக்கொட்டினால், நடத்தி காட்டி விடலாம் என்று நினைத்திருப்பார்கள். 70,000 கோடி ஸ்வாஹா.



இதுவரை நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுகளிலே, இதற்கு தான் செலவு அதிகம். மட்டமான ஏற்பாடும் நடந்தது இதற்கு தான்.

செம்மொழி மாநாடு பாடல், எந்திரன் பாடல் என்று ஹிட் ரூட்டில் சென்றுக்கொண்டிருந்த ரஹ்மானையும் பிடித்து காய்ச்சியது இதில் தான். சம்பந்தபடும் அனைவரும் அடிவாங்குகிறார்கள்.

கொஞ்ச நாள் முன்னாடி ஊழல் செய்திகளாக வந்துக்கொண்டு இருந்தது. இந்தியாவுல ஊழல் இல்லாம எப்படி? நடுவில் கொஞ்சம் நல்ல செய்திகள் அரசு தரப்பில் இருந்து வந்தது. இப்ப, பழையபடி பேக் டூ ட்ராக்.

கமிஷன் அடிச்சாவது வேலையை முடிச்சிடுவாங்க என்றொரு சராசரி இந்திய நம்பிக்கையில் இருந்தேன். ஒழுக்கமில்லாத, தரமில்லாத வேலைக்கு பலனாக தற்போது அடிமேல் அடி வாங்குகிறார்கள்.

விளையாட்டு வீரர்கள் தங்க, புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் நாறுகிறதாம். தண்ணீர் ஒழுகுகிறதாம். நியூசிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ஒரு பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைய, டஜன் கணக்கில் வாசலில் போலீஸ்காரர்கள் இருந்தாலும், யாரும் பெட்டியை பரிசோதிக்கவில்லையாம். துரை மேல நம்பிக்கையாக இருந்திருப்பார்கள். புதிதாக கட்டப்பட்ட நடைபாதை பாலம் இடிந்துவிட்டது.

இதற்கெல்லாம் ஏற்பாடுகளை நடத்தும் பொறுப்பாளர்கள் சொல்லும் பதில்கள், ரொம்ப பொறுப்பானவை.

“வீரர்கள் தங்க இருக்கும் இடங்கள் நாறுகிறதாமே?”

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டாண்டர்ட் இருக்கும். இது இந்திய ஸ்டாண்டர்ட். வேலை செய்பவர்கள், அதே கழிவறையை பயன்படுத்துவதால் இந்த பிரச்சினை. சீக்கிரம் கழுவிடலாம்.”

“பாலம் இடிந்து விழுந்துவிட்டதே?”

”நல்லவேளை, இப்பவே விழுந்துவிட்டதே. விளையாட்டின் போது விழாமல்.”

“விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தபோகும் பாலம் இடிந்ததால் ஏற்படும் பாதிப்பு என்ன?”

“சே, சே... இது விளையாட்டு வீரர்களுக்கான பாலம் இல்லை. சாதாரண பொது ஜனங்களுக்கானது.”

எனக்கு இந்த விஷயங்கள் எதுவும் வருத்ததையோ, கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்திய அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் சந்திக்க போது சங்கடங்களை நினைத்து குஜாலாக இருக்கிறது. கிளாஸ் லீடர் டீச்சரிடம் திட்டு வாங்கும்போது கிளாஸுக்கு இருப்பது போலவும், ப்ராஜக்ட் மேனேஜர் கிளையண்டிடம் டோஸ் வாங்கும்போது டீமுக்கு இருப்பது போலவும்.

பார்க்கலாம், இன்னும் என்னென்ன சித்து விளையாட்டுக்கள் நடத்தி இருக்கிறார்கள் என்று.

.

Tuesday, September 21, 2010

பேசிய பேப்பர் விளம்பரம் - டைம்ஸ் அசத்தல்

டைம்ஸ் நாளிதழில் வித்தியாசமாக விளம்பரங்கள் வரும். செய்தியை விட விளம்பரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்களோ? என தோன்றும் வகையிலான விளம்பரங்கள்.

முதல் பக்கம் முழுக்க விளம்பரம்.

பேப்பரில் ஓட்டைப்போட்டு விளம்பரம்.

செய்திகளுக்குள் விளம்பரம்.

இப்படி பல வேலைகள் செய்திருக்கிறார்கள். இன்றைய நாளிதழில் இன்னொரு வித்தியாசமான முயற்சி. இதற்கு முன் யாரும் இப்படி செய்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. நான் பார்த்தது, பெங்களூர் பதிப்பில்

மடித்த பேப்பரை திறந்தால், கடைசி பக்கத்தில் இருந்து சத்தம். என்னவென்று பார்த்தால் வோல்க்ஸ்வாகன் கார் விளம்பரம். காரின் அருமை பெருமைகளை, ஆண் குரலில் அந்த விளம்பரத்தில் ஒட்டியிருந்த கருவி பேசுகிறது.



முன்பு கிரிட்டிங் கார்ட்டில் பார்த்த விஷயம். இன்று மூன்று ரூபாய் செய்தித்தாளுடன். உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு பொருள் ரெடி.



பேப்பரை மடித்துவைத்துவிட்டால், சத்தம் நின்றுவிடுகிறது. திறந்து வைத்து படிக்க முடியவில்லை. கய்யாமுய்யாவென்று.

இதை வைத்து இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ?

பிற்சேர்க்கை - ஹிந்துவிலும் வந்திருக்கிறது. ஐடியா வோல்க்ஸ்வாகனுடையது போலும். வெறும் குரல் என்றில்லாமல், கார் சத்தம், மியூசிக் என்று இன்னும் சேர்த்திருக்கலாம். நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார்கள்.

.

Sunday, September 19, 2010

2 ஸ்டேட்ஸ்

அலுவலகத்தில் எனக்கு தெரிந்த பலர் கொஞ்ச காலத்திற்கு முன்பு இந்த புத்தகத்தைத்தான் வாசித்துக்கொண்டிருந்தார்கள். சிவப்பு அட்டை. தூரத்தில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். எனக்கு அப்போது வாசிக்கும் ஆர்வமே ஏற்படவில்லை. சமீபத்தில் கைவசம் வேறு எதுவும் இல்லாததால், ஒரு நண்பர் தூண்ட, வாங்கி வாசித்தேன்.



சேத்தன் பகத்திற்கு இது நாலாவது நாவல். அதற்குள் பெரும் புகழுக்கு சொந்தக்காராகிவிட்டார். டைம்ஸ் வெளியிட்ட ‘2010இன் நூறு செல்வாக்கான மனிதர்கள்’ பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார்.

இவருடைய புத்தகங்களின் இப்படியான விற்பனைக்கு நான் காரணமாக நினைப்பது.

* எளிமையான ஆங்கிலம்.
* எள்ளலும் நக்கலும்.
* மலிவான விலை. (95 ரூபாய்)

சென்ற வாரம் லேண்ட்மார்க் சென்றபோது, பகத்தின் புத்தகங்கள் நான்கையும் ஒவ்வொன்றும் ரூபாய் 50 என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். ப்ளாட்பாரத்தில் கூட இப்படி விற்க மாட்டார்கள்.

---

இந்த புத்தகத்தின் கதையை பார்ப்போம். உலகமெங்கும் காதலென்றால் ஆண்-பெண் என்று இருவருக்கிடையே வருவது. ஆனால், இந்தியாவில் காதலுக்கு பல லெவல்கள் இருக்கிறது. பையன் - பொண்ணு, பையன் - பொண்ணோட குடும்பம், பொண்ணு - பையனோட குடும்பம், பையனோட குடும்பம் - பொண்ணொட குடும்பம் என இவ்வளவுக்கு பிறகும் பையனுக்கும் பெண்ணுக்குமான காதல் நீடிக்க வேண்டும். இது தான் கதை சுருக்கம். கதை புரிந்திருக்குமோ?

நாம் பல தமிழ் படங்களில் பார்த்ததுதான்.

கதையின் பலம் - ஆசிரியரின் நகைச்சுவை உணர்வுதான். கல்லூரி பற்றி, பெண்கள் பற்றி, தமிழர்கள் பற்றி, பஞ்சாபிகள் பற்றி, அம்மாக்கள் பற்றி, அப்பாக்கள் பற்றி, வங்கிகள் பற்றி என எல்லாவற்றை பற்றியும் நக்கல் விட்டுக்கொண்டே இருக்கிறார். பெரும்பாலும், இவை இவர் மனதிற்குள் நினைப்பதாக வருகிறது.

பலவீனம் - முடிவு எப்படி, அடுத்தது என்ன நடக்கும் என எல்லாம் முன்பே தெரிந்துவிடுவது தான். இருப்பினும், சேத்தன் பகத்தின் நடை கதையோட்டத்திற்கு கைக்கொடுக்கிறது. இவருடைய கதைகள் தொடர்ந்து படமாக்கப்படுவதாலோ என்னவோ, கதை சில இடங்களில் சினிமாத்தனமாக இருக்கிறது.

---

கதையை படித்த இளசுகள், அகமதாபாத் ஐஐஎம்மில் சேர துடிப்பாக கேட் எக்ஸாமிற்கு படித்தாலும் படிப்பார்கள். பின்ன, கதையின் நாயகி, நாயகனின் ஹாஸ்டல் அறையில் தான் போர்வை போர்த்திக்கொண்டு பரீட்சைக்கு படிக்கிறாள்.

இப்படி ஓவரான விஷயங்கள் இருந்தாலும், ஆசிரியர் தான் கண்ட பலவற்றை கண்முன் நிறுத்துகிறார். சென்னை ஆட்டோ டிரைவர்களின் கெட்ட வார்த்தையை கூட அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கிடைக்கிற கேப்பில் எல்லாம் தமிழர்கள் கேவலப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பஞ்சாபிகளும் கிண்டல் செய்யப்பட்டு இருப்பதால், மன்னித்துவிட வேண்டி இருக்கிறது. சரிசமமாக கேவலப்பட்டு இருக்கிறார்களா என்று அளந்துப்பார்க்க வேண்டும். உண்மையில், ஐஐஎம், சிட்டி பேங்க் போன்றவர்கள் தாங்கள் கேவலப்பட்டதற்கு ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். உண்மைதானே என்று அவர்களே விட்டுவிட்டார்கள் போலும்.

சிரித்துக்கொண்டே பொழுதை போக்க உதவும் புத்தகம். உடனே யாரையாவது காதலித்துவிட வேண்டும் என்றும் நினைக்க வைக்கும். ஜாக்கிரதை!

.

எந்திரனை வரவேற்கிறேன்

கண்கள் இன்னும் தூக்கத்தில் இருந்து விடுபடவில்லை. பல் தேய்த்தால் சரியாகிவிடும்.

பிரஷ்ஷை வாஷ்பேசின் தண்ணீரில் நனைத்தேன். பேஸ்ட்டை பிதுக்கும் போது கவனித்தேன். ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ப்ராடெக்ட். உலகமயமாக்கத்தின் விளைவு. கண்கள் விழிப்படைந்தது. உள்ளூர் விக்கோ வஜ்ரதந்தி வாங்கினால், கேர்ள் பிரண்டுடன் கிஸ் சாத்தியமே இல்லை. தவிர, உள்ளூர்காரனாலும் அவனும் முதலாளிதானே?

என்ன செய்யலாம்? கோபால் பல்பொடி, பயோரியா உபயோகிக்கலாமா? அதற்கு முன்னால், தயாரிப்பவர்களின் குடும்ப விவரங்களை விசாரிக்க வேண்டும்.

செங்கல், வேப்பமரம், சாம்பல் - இப்படி ஏதாவது கிடைக்காமலா போய்விட போகிறது? இல்லாவிட்டால், பல் தேய்ப்பதையே புறக்கணித்துவிடப்போகிறேன். அவ்வளவுதானே?

புறக்கணித்துவிடலாமா?

---

இதே ரீதியில் சிந்தித்துக்கொண்டிருந்தால், இவ்வுலகில் புறக்கணிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. இதோ, இந்த வலைப்பூ உள்பட.



எந்திரன். உலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. சோத்துக்கே வழி இல்லாத நிலை பலருக்கு. இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு படம் தேவையா? அப்படி கேட்பவர்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி - இவ்வளவு பிரச்சினை இருக்கும் உலகில், சினிமா என்ற கேளிக்கைத்துறை தேவையா? அதைவிட்டு விட்டு, கடைகடையாக ஏறி இறங்கி, ஆஸ்கார் நாமினேஷன் படங்களின் பைரேடட் டிவிடி வாங்கினால் அது மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிடப்போகிறதா?

சரி, சினிமா இருக்கலாம். அதில் மக்களின் பிரச்சினையை மட்டுமே பேச வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? பிரச்சினையை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? சினிமாவால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா? சினிமா ஒரு தொழில் அல்லவா? இதில் வேறு மாதிரியான முயற்சிகள் இருக்க கூடாதா? பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க கூடாதா? ஒரு படம் உருவாக காரணமாக இருக்கும் பல தொழிலாளர்களின் உழைப்பிற்கு, சரியான பலனை அளிக்க வேண்டுமே? சரி, நல்ல படங்களாக எடுக்கட்டுமே! உழைப்பிற்கு பலன் வந்துவிட போகிறது என்பது அடுத்த கேள்வியாகிறது.

தயாரிப்பவர்கள் நல்ல படத்தை எடுக்க வேண்டும். ரசிகர்கள் நல்ல படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ரசிகர்கள் நல்ல படத்திற்கு வெற்றியை கொடுத்தால், தயாரிப்பவர்கள் நல்ல படத்தை எடுக்க முன்வருவார்கள். இது ஒரு மியூச்சுவலான விஷயம். ரசிகர்களின் ரசனை என்பது ஒரே மாதிரி இருக்காது. சின்ன வயசில் ’சகலகலா வல்லவனுக்கு’ கையை தட்டியவன், பெரிதானவுடன் ‘அன்பே சிவத்தால்’ கவரப்படுகிறான். அவனுக்கு இப்போது ‘சிங்கம்’ பிடிப்பதில்லை. சரி, அவனுடைய பையனுக்கு? உங்களுக்கு பிடிப்பதில்லை என்பதால், உங்களுடைய பையனுக்கு பிடித்ததை அவனுக்கு தடை செய்வது சர்வாதிக்காரமில்லையா?

சில வயதில் சில விஷயங்கள் தான் புரியும். கால ஓட்டத்தில் ஒவ்வொன்றாக புரிந்து அதற்கான பக்குவம் வரும். பூக்க வைக்கிறேன் என்று மொட்டை பிதுக்கினால், அது வளர்ச்சி அல்ல. சிதைத்தல்.

---

யார் வேண்டுமானாலும் படமெடுத்தால் பார்ப்பேன். சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் சுறாக்களுக்கு ம்ஹும். அவர்கள் மக்களிடம் வெற்றியை வேண்டி படமெடுப்பதில்லை. மக்களின் புத்தியை மழுங்கடித்து, காசை பிடுங்கி வெற்றியை அதிகாரத்துடன் பறிக்கிறார்கள். இதுவா உங்கள் பிரச்சினை?

ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள். படைப்பு ஒன்று நன்றாக இருந்தால் தான் வெற்றியடையும். இங்கு எது ‘நல்லது’ என்பது தான் உங்கள் குழப்பம். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையை சொல்லி அழ வைத்தால், நல்ல படைப்பாக இருக்கலாம். மற்றவருக்கு நிஜ உலகின் பிரச்சினையை, சில மணி நேரங்கள் மறக்கடித்து சிரிக்க வைத்தால், நல்ல படைப்பாக இருக்கலாம். அது வேறு விஷயம். மொத்தத்தில், பெரும்பாலோரை ஏதேனும் வகையில் கவர்ந்தால் மட்டுமே வெற்றி. மற்றபடி, எப்பேர்ப்பட்ட வியாபார காந்தமாக இருந்தாலும், சும்மா மக்களை இழுக்க முடியாது. உதாரணம், ரிலையன்ஸின் ராவணன். சன் பிக்சர்ஸின் சுறா.

எந்திரனும் அப்படியே. முன் தீர்மானத்துடன் ஒரு படைப்பை அணுகுவது சரியா? என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.

தவிர, அவர்களாக ‘வேட்டைகாரன்’ வெற்றி, ‘சுறா’ வெற்றி என்று சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுக்கு என்ன? ரிமோட்டில் இரண்டாவது நம்பரை அழுத்துங்கள்.

---

வறுமைக்கோட்டுக்கு கீழே 37 சதவிகித மக்கள் வாழும் நாட்டில், நூற்றுக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு படம் பார்ப்பது சரியா? தவறு தான்.

முதலில் ஆயிரக்கணக்கில் முடியாதவர்களுக்கு செலவிடுங்கள். ’என்னால் முடிந்ததை செலவிடுகிறேன். இனி படம் பார்க்கலாமா?’ என்று நீங்கள் கேட்பீர்களானால், ’இல்லை, 37 சதவிகித்தினரும் கோட்டை தாண்டியபிறகு தான் படம் பார்க்க வேண்டும்’ என்று சொல்ல முடியுமா?

ஒரு விஷயம் மறக்க வேண்டாம். 37 சதவிகிதத்தில் சில விகிதங்கள் இப்படிப்பட்ட படங்களின் வெற்றியையும் சார்ந்து இருக்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் பணம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவிற்கு மட்டும் போவதில்லை. பெரும்பகுதி போகும் என்பது உண்மை. அதுவும் ஒருக்கட்டத்தில் வெளி வந்தே தீரும். தவிர, ஆத்தூரில் இருக்கும் தியேட்டரிலும், சென்னையில் இருக்கும் தியேட்டரிலும் ஒரே விலையில் டிக்கெட் விற்கப்போவதில்லை. எங்கு பிடுங்க முடியுமோ, அங்கு பிடுங்குகிறார்கள். முடிந்தவன் கொடுக்கிறான்.

முதல் நாள், முதல் வாரம் என்பது கண்டிப்பாக அவசியமில்லை. 2 கோடி ரூபாய் செலவில் எடுத்த படத்தை பார்க்கும் டிக்கெட் விலையில், 190 கோடி ரூபாய் படத்தையும் பார்க்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்.

---

இம்மாதிரி பிரமாண்ட படங்களால், சிறு முதலாளிகளுக்கு கஷ்டம். சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவருவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது இன்னொரு வாதம்.

இரண்டு மாதங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கலாம். ஒரேடியாக வராமல் போகாது.

சிவாஜி, தசாவதாரம் போன்ற படங்களுக்கு பிறகு தானே, சுப்பிரமணியபுரம், பசங்க, அங்காடி தெரு, களவாணி போன்ற படங்கள் வந்தது?

---

நான் பெரும்பாலான படங்களை நண்பர்களுடன் பார்த்தாலும், சில சமயங்களில் என் உறவின சிறார்களை கூட்டிக்கொண்டு திரையரங்கிற்கு செல்லும் பொழுதுகளே மகிழ்ச்சியானவை. அவர்களுக்கான தமிழ்ப்படங்கள் குறைவு. பசங்க போன்ற படங்கள் அவர்களுக்கானது என்றாலும் அவர்கள் பெரிதும் ரசிப்பது தமிழ் கமர்ஷியல் படங்களையும், ஹாலிவுட் டப்பிங் படங்களையும். ரசனை என்பது சூழலால் உருவாக்கப்படுவது என்றாலும், முன்பே சொன்னது போல் காலத்தால் உணர்ந்து பக்குவமடைவது.

நான் சிறுவயதில் ரசித்தது ரஜினியின் ‘ராஜா சின்ன ரோஜா’, ‘அதிசய பிறவி’ போன்ற படங்களை தான். ’பாயும் புலி’, ‘தாய் வீடு’ போன்ற படங்களை செகண்ட் ரிலீஸில் விரும்பி பார்த்திருக்கிறேன். அந்த வயதில் ‘முள்ளூம் மலரும்’ கவர்ந்ததில்லை. அதேப்போல், ரஜினியை பற்றி தெரியாத இந்த தலைமுறை குழந்தைகளைக் கூட ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ போன்ற படங்கள் கவர்ந்தது. காரணம் - இன்றைய காலத்தில் பலர் காப்பியடித்தாலும் ரஜினிக்கே உரிய வித்தியாசமான நடை, உடை, பாவனை தான். (வட இந்தியர்கள் சிவாஜி ரஜினியை முழுக்க காமெடியாகவே பார்த்தார்கள்)

அந்த வகையில் கதை ரீதியாகவும், மேக்கிங் ரீதியாகவும் ‘எந்திரன்’ குழந்தைகளை பெரிதும் கவரும் என்று எண்ணுகிறேன். ஆரம்ப ஆர்ப்பாட்டங்கள் முடிந்த பிறகு, குடும்பத்துடன் பார்க்கவும் சரியான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இக்காரணங்களுக்காக,

எந்திரனை வரவேற்கிறேன்.

---

என்னிடம் இருப்பது சிலரிடம் இருப்பது போன்ற ஸ்பெஷல் புத்தியா, இல்லை சாதாரண பொது புத்தியா என்று தெரியவில்லை. தோன்றியதை சொல்லியிருக்கிறேன். சில நாட்கள் கழித்து இதே விஷயம் வேறு மாதிரியாகவும் தோன்றலாம். தற்போதைய மனநிலையில் நேர்மையாக பதிவிட்டுயிருக்கிறேன். அவ்வளவுதான். இதற்காக என்னையும் முட்டிப்போட்டு பிரார்த்தனை செய்த கூட்டத்துடன் சேர்த்துவிட வேண்டாம்!

.

Wednesday, September 15, 2010

தோசை சுட்டு உயர்ந்த தமிழன்

சமீபகாலங்களில் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் உழைப்பால் உயர்ந்த சிலரை பற்றி வாசிக்கும்போது தெரிய வருகிற விஷயம் - சரியான முறையில் இந்தியர்களை பசியாற்றினால், கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பது தான். இதோ அப்படி உயர்ந்த ஒரு சாதனை தமிழனின் கதை.

ப்ரேம் கணபதி.

---

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார்.



மாத சம்பளம் 250க்கு ஒரு டீக்கடையில் வேலை. கூட வேலை பார்க்கும் பையன், ‘எனக்கு 200 ரூபா கொடு. பம்பாய்ல 1200 ரூபா சம்பளத்துக்கு வேலை ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்ல, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல், பம்பாய்க்கு ஓடி போய் விட்டார். (ஓடி என்றால் ஓடியே இல்லை! ரயிலில்...) அப்போது அவருக்கு வயது 17.

அந்த பையனுக்கு ஓசியில் பம்பாய் வருவது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பம்பாய் வந்தவுடன் கணபதியை பந்த்ராவில் கைகழுவி விட்டு ஓடிவிட்டான். புது ஊரு. புது மனிதர்கள். புரியாத மொழி. கைல காசு இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை, கணபதிக்கு.

அங்கிருந்த ஒரு நல்ல டாக்ஸி டிரைவர், இவர் கதையை கேட்டு, ரயிலுக்கு காசு கொடுத்து ஊருக்கு திரும்ப சொல்ல, கணபதி அதை மறுத்து அங்கேயே இருந்துவிட்டார். ஒரு கோவிலில் படுத்துறங்கி, காலையில் ஒரு பேக்கரில் வேலைக்கு சேர்ந்தார். பாத்திரம் கழுவும் வேலை. சில மாதங்களுக்கு பிறகு, வேறொரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதே பாத்திரம் கழுவும் வேலைதான்.

கொஞ்சம் நாள் கழித்து, அக்கம்பக்கமிருக்கும் கடைகளுக்கு டீ சப்ளை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கடமையே என்று வேலையை பார்க்காமல், வேலையில் முழு ஆர்வத்தையும் காட்டினார். டீ சப்ளை செய்வதில் என்ன ஆர்வம் என்கிறீர்களா? யார் யாருக்கு எப்படி டீ இருக்க வேண்டும் என்று புரிந்து சப்ளை செய்தார். விரைவில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவராகி போனார். இவர் வேலையை பார்த்த ஒருவர், இவரிடம் கூட்டணி அமைத்துக்கொண்டு ரோட்டோரத்தில் கடை போடும் ஐடியாவை சொல்லியிருக்கிறார். கடையையும் போட்டார்கள். ஆரம்பத்தில் லாபத்தில் பாதியை தருவதாக சொன்னவர், வெறும் 1200 ரூபாய் மட்டும் கொடுத்தார். ’இதை நாங்களே பண்ணுவோம்ல’ என்று கணபதி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

ஊருக்கு வந்து நண்பர்களிடம் கொஞ்சம் பணம் புரட்டிக்கொண்டு, தனது சகோதரர்களையும் தன்னுடன் அழைத்து கொண்டு திரும்ப பம்பாய் வந்தார். ஒரு கைவண்டியை வாடகைக்கு எடுத்து, அதில் சாப்பாட்டுக்கடை போட்டார்.

சுத்தம். வகை வகையா சுவை. இதில் தான் முழு கவனத்தையும் செலுத்தினார். வீட்டில் அம்மா எப்படி சமைப்பாரோ, அதை போல் சமைத்தார். மசாலாவை ஊரில் இருந்தே கொண்டு வந்தார். பாம்பேக்கு அந்த சுவை வித்தியாசமாக இருக்க, கூட்டம் கூடியது. அப்போது கணபதி தங்கியிருந்தது, சில மாணவர்களுடன். நட்புடன் பழகிய அவர்கள், கணபதிக்கு ரூமில் கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்க, இணையத்தில் உலவவும் தெரிந்துக்கொண்டார். மெக் டொனால்ட்ஸ், பிஸ்ஸா ஹட் பற்றியெல்லாம் பார்த்தார். படித்தார். வருடங்கள் ஓட, அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்தார். அவருடைய அன்றைய நிலைக்கு பெரிய ஸ்டெப்.

ஐம்பதாயிரம் அட்வான்ஸ், ஐந்தாயிரம் வாடகை கொடுத்து, ’ப்ரேம் சாகர் தோசா ப்ளாஸா’ என்று ஒரு கடையை ஆரம்பித்தார். விதவிதமாக தோசையை சுட்டு விற்றார். விற்று தீர்ந்தது. கூடவே, சைனீஸ் ஐட்டங்களையும் போட்டார். ஆனால், அது போணியாகவில்லை. இருந்தும், விடவில்லை. அந்த ஸ்டைலில் தோசையை சுட்டார். மெகா ஹிட்.



செஸ்வான் தோசை, ஸ்ப்ரிங் ரோல் தோசை என்று மெனு களைக்கட்ட, கல்லாவும் களைக்கட்டியது. பேரும் புகழும் பரவியது. ‘தோசா ப்ளாஸா’ என்பது அந்த வட்டாரத்தில் பிரபல ப்ராண்டானது. ‘தோசா ப்ளாஸா’ என்று சும்மா இவர் பெயர் வைத்துவிடவில்லை. பிஸ்ஸா ஹட், கோக்க கோலா போன்ற பெயர்களை கவனமாக பார்த்து, ஆராய்ந்து இந்த பெயரை வைத்தார். ஒரு ஷாப்பிங் மால் கட்டியவர்கள், இவரை கடை போட அழைத்தார்கள். இவரும் கடை திறந்தார். இன்னொரு ஷாப்பிங் மாலில், ‘தோசா ப்ளாஸா’ என்ற பெயரில் இன்னொருவர் கடை திறக்க உரிமம் கொடுத்தார். வியாபார அடையாளத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார். ‘டாக்டர். டி அங்கீகரித்தது’ (Approved by Doctor. D) என்பது லோகோவானது. தற்போது குறைந்தபட்சம் பத்து லட்சம் இருந்தா தான், ஆட்டத்துக்கே சேர்த்துக்கொள்கிறார்.

போயி அண்ணாமலை ‘வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்!’ பாட்டை கேளுங்க.

---

ஆச்சா! பாட்டு முடிஞ்சுதா?



இப்ப, இதுவரை 35 கடைகள் திறந்துவிட்டார். நியூசிலாந்திலும் ‘தோசா பிளாஸா’ இருக்கிறது. அடுத்து அமெரிக்காவிலும், துபாயிலும் கடை போட போகிறார். ஒரு யூனிவர்சிட்டியில் இவருடைய கடை பற்றிய பாடம் இருக்கிறது. மாணவர்களுடன் கலந்துரையாடி விட்டு வந்திருக்கிறார். முன்னாள் நியூசி பிரதமர், சேவாக், லதா ரஜினிகாந்த் ஆகியோர் இவர் கடை கஸ்டமர்கள். ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு இவரை அழைத்திருக்கிறார். அனிதா கிருஷ்ணமூர்த்தி எழுதி, அப்துல் கலாம் வெளியிட்ட “மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறு” புத்தகத்தில் இவரும் இருக்கிறார்.

---

“உங்கள பாம்பேயில தனியா விட்டுட்டு போன அந்த பையனை நினைப்பதுண்டா?” என்ற கேள்விக்கு,

”நான் இந்த நிலையில் இருக்குறேன்னா, அதுக்கு காரணம் அவன் தான். எங்கிருக்கிறானோ அவன்?” என்று தன்னை கைவிட்டவனையும் நன்றி கூர்கிறார். தமிழன் என்பதால் கேவலப்பட்டது, ரோட்டோர கடையால் போலீஸ் பிரச்சினையை சந்தித்தது போன்றவையை தாண்டி, இன்று தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்.

எம்பிஏ போல் எதுவும் படிக்காமல், இந்த நிலைக்கு எம்பியே வந்திருக்கும் ப்ரேம் கணபதி மேலும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள்.

நன்றி: ரெடிஃப், மணிகண்ட்ரோல் இன்னும் சிலர்.

.

Sunday, September 12, 2010

எந்திரன் பிசினஸ்

நேற்று சன் டிவி தலைப்பு செய்தியில் தியேட்டர்களில் வெடி வெடித்துக்கொண்டிருந்ததையும், ரஜினிக்கு ப்ளெக்ஸ் பேனரில் பால் ஊத்திக்கொண்டிருந்ததையும் காட்டிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் “இன்னைக்கா படம் ரிலீஸ்?” என்று கேட்டார்கள். “ட்ரெய்லர் ரிலீஸாம்?” என்றேன். “அதுக்கே இப்படியா?” என்றார்கள்.

பாடல் வெளியீட்டு விழா உருவான விதம் ஒளிப்பரப்பும் போது, அன்றைய தினம் ராமாயணம் போடவில்லை. ”எந்திரனுக்காக ராமாயணத்தையே கைவிட்டுட்டாங்களே?” என்று ஒரு ராம பக்தர் வருத்தப்பட்டார்.



இனி அடுத்த வாரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா உருவான விதம் வெளிவரும். தியேட்டரில் டிக்கெட் உருவான விதம், பாப்கார்ன் உருவான விதம் கூட காட்டுவார்கள்.

---

கர்நாடகாவில் கிட்டத்தட்ட பத்துக்கோடிக்கும், ஆந்திராவில் 33 கோடிக்கும் படத்தை விற்றதாக செய்திகள் வந்திருந்தன. கர்நாடகாவில் தமிழ்ப்படமாகவும், ஆந்திராவில் தெலுங்குப்படமாக ரிலீஸாவதால் இந்த விலை.

பெங்களூரில் தமிழ்ப்படங்கள் ரிலீஸ் செய்யும் தியேட்டர்கள், நல்ல லாபம் பார்த்துவருவார்கள் என்று நினைக்கிறேன். நல்ல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதோ, இல்லையோ, எண்ணிக்கையில் ஓரளவுக்கு நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும். உதாரணத்திற்கு, இந்த வாரம் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மல்டிப்ளக்ஸ் தவிர்த்து 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இது தவிர பத்து மல்டிப்ளக்ஸ் இருக்கிறது. இதிலும் கணிசமான அளவில் வெளிவரும். சாதா பாஸுக்கு இப்படியென்றால்...

படம் நன்றாக இல்லையென்றாலோ, சுமார் என்றாலோ ஒரு வாரமும், நல்ல ஹிட்டென்றால் இரண்டு வாரமும் ஓடும். சூப்பர் ஹிட் என்றால் நாலைந்து தியேட்டர்களில் நான்கு வாரம் ஓடும். சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் ஓரிரு தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடும்.

---

கர்நாடகாவில் பிறமொழி படங்கள் ரிலீஸ் செய்வதற்கு சில தடைகள் இருக்கிறது. கர்நாடகா முழுவதற்குமாக 21 திரைகளுக்கு மேல் படத்தை திரையிட தடை இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் கைட்ஸ் படத்தையும், ராவண் படத்தையும் திரையிடுவதில் சில பிரச்சினைகளை சந்தித்தது.

கர்நாடக சினிமா உலகுடன் நெருங்கிய தொடர்புடைய சுஹாசினி இது தொடர்பாக, இவர்களிடம் ராவண் படத்திற்காக பேசி பார்த்தும், ஒன்றும் முடியவில்லை. “ரஜினி படத்துக்கும் இதே கண்டிஷன் தானா?” என்று இவர் எரிச்சலில் கேட்டதாக கூட கேள்வி.

இந்த தடை தற்போது வெவ்வேறு இடங்களில் விவாதிக்கப்பட்டு, முறையான வணிக சட்டத்தின்படி முடிவில் கைவிடப்பட்டுள்ளது. கோர்ட் கேஸுக்காக, கர்நாடக திரைப்பட சங்கத்தினர் பத்து லட்சம் வெட்டியாக செலவு செய்ததுதான் மிச்சம்.

---

பெங்களூரில் ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் தியேட்டரிலேயே, எந்திரன் படத்திற்கு டிக்கெட் விலை இருநூறாம். இது கவுண்டரிலேயே. அப்ப இருநூற்றைம்பது ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் மால்களில், ஆயிரம் சொல்வார்களோ?

ஒரு மாநிலத்திற்கு பத்து கோடி என்று விற்கப்பட்ட கர்நாடகாவில் இந்த நிலை என்றால், ஒரு ஏரியாவிற்கு 13 கோடி என்று விற்கப்பட்ட மதுரையில் என்ன நிலையாக இருக்கும்? சென்னை? ரசிகன் பாவம்.

---

அருணாச்சலம் வெளிவந்தபோது, பல கோவில்களில் கவனிப்பாரற்று இருந்த ‘அருணாச்சலேஸ்வரர்’ சீரும் சிறப்புமாக கவனிக்கப்பட்டார். பாபா படத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் பாபா பக்தர்கள் உருவானார்கள். இப்பவே, சிலர் ரோபோக்களை பற்றி ஆராய்ந்து ஜப்பான் விஞ்ஞானிகள் போல பதிவெழுதி வருகிறார்கள். படம் வெளிவந்தபிறகு, இன்னும் என்னென்ன புத்தகங்கள் வரபோகிறதோ? என்னென்ன ரோபோ பொம்மைகள் வரப்போகிறதோ? படத்தின் ட்ரெய்லரில் சாரதா பதிப்பகத்தின் ‘நாலடியார்’ என்ற புத்தகத்தை காட்டுகிறார்கள். புத்தகக்கடைக்காரர்கள், அந்த புத்தகத்தை தயாராக வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த வருடம், தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் ’ரோபோட்ரானிக்ஸ்’ என்றொரு பாடப்பிரிவு வந்து, கவுன்சலிங்கில் அதற்கு கூட்டம் மொய்த்தாலும் மொய்க்கும். நல்லது நடந்தா சரி.

.

Tuesday, September 7, 2010

மார்க்கெட்டிங் யுத்தங்கள்

யாராவது சண்டை போட்டுக்கொண்டிருந்தால், அதை பார்ப்பதில் ஒரு ஆர்வம். கலைஞரும் ஜெயலலிதாவும் திட்டி கொண்டால் தலைப்பு செய்தி, அசினை த்ரிஷா வாரினால் கோலிவுட் டிட்பிட், சாரு - ஜெயமோகன் லடாயே இணைய இலக்கியம் என்று நமது பொழுதுபோகிறது. அட, ரோட்டுல போகும் போது தெரியாத யாரோ ரெண்டு பேர் சண்டைப்போட்டுக்கிட்டா கூட, நின்னு பார்த்துட்டு போக ஒரு கூட்டமே உண்டு.

அரசியல், சினிமா, இலக்கியம் என்றில்லாமல் கோட்டு சூட்டு போட்டுக்கொண்ட வணிக உலகிலும் சண்டை சச்சரவுகள் உண்டு. அவ்வப்போது விளம்பரங்கள் மூலம் இது வெளிவரும். வெளியே தெரியாத உள்ளடி பைட்களும் இவ்வுலகில் உண்டு.

இப்படியான உலகளாவிய வணிக போட்டி சண்டைகளை பற்றிய தொகுப்பு - கிழக்கு பதிப்பகத்தின் ‘மார்க்கெட்டிங் யுத்தங்கள்’.

---



கோகோ கோலா - பெப்ஸி பற்றி சொல்லாமல் மார்க்கெட்டிங் பற்றி சொல்ல முடியுமா? விளம்பரங்களால் இயங்கும் நிறுவனங்கள். விளம்பரங்களால் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ளும் நிறுவனங்கள். நூறு வருடங்களுக்கு மேலாக போட்டிப்போடும் நிறுவனங்கள். இவர்களுடைய ஒவ்வொரு விளம்பர யுக்தியும், மார்க்கெட்டிங் மாணவர்களுக்காக பாடங்கள். பெப்ஸியின் அதிரடி மார்க்கெட்டிங்கை தாங்க முடியாமல், 1985இல் கோகோ கோலா தன்னுடைய சுவையை கூட பெப்ஸி போல் மாற்றியிருக்கிறது. வெறும் 78 நாட்கள். ஆனால், இன்னமும் அமெரிக்காவில் கோகோ கோலா எப்படி நம்பர் 1 என்பது புரியவில்லை.

நிர்மாவை தயாரித்த கஸன்பாய் ஆரம்பத்தில் அதை சைக்கிளில் கடை கடையாக கொண்டு சென்று, வாங்குவதற்கு பயந்த கடைகாரர்களிடம் “விற்பது இருக்கட்டும். நீங்க வீட்டுல யூஸ் பண்ணி பாருங்க.” என்று சொல்லி சும்மா கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த முறை சென்றபோது, இவருக்காக கடைக்காரர்கள் காத்திருக்கிறார்கள். வியாபாரம் சூடு பிடிக்க, “வாஷிங் பவுடர் நிர்மா... பாலை போல வெண்மை, நிர்மாவாலே வருமே...” விளம்பரம், இங்கிலாந்தின் யூனிலீவருக்கே சிறிது காலம் ஆட்டம் காட்டியது.

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மருந்தொன்றில் ஏதோ போட்டி நிறுவனம் சயனைட் தடவி, அதில் ஏழு பேர் இறக்க, ஜே அண்ட் ஜே நிறுவனத்தின் வியாபாரத்தையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். இவர்களும் விட்டுவிடவில்லை. இவர்களது மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று இவர்களே விளம்பரம் கொடுத்து, மருந்து ஸ்டாக் எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொண்டு, வேறு பாதுகாப்பான பேக்கேஜிங் வடிவமைத்து, திரும்பவும் மருந்தை மார்க்கெட்டிங் செய்து, வியாபாரத்தில் ஜெயித்தார்கள்.

நெட்ஸ்கேப் நிறுவனம் தனது ப்ரவுசர்களை இலவசமாக கொடுத்து 85 சதவித மார்க்கெட் ஷேர் வைத்திருந்தது. பில்கேட்ஸ் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ப்ரவுசரை பொட்டலம் கட்டி கொடுக்க, நெட்ஸ்கேப் ஊத்திக்கொண்டது.

இப்படி பல துறைகளில் நடைபெற்றுள்ள மார்க்கெட்டிங் யுத்தங்கள் பற்றி ஆசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, இந்த புத்தகத்தில் சுவைப்பட குறிப்பிட்டுள்ளார். ‘பாம்பே டையிங்’ நூடியா மேலான ரிலையன்ஸ் அதிகாரியின் கொலை முயற்சி போன்ற அதிர்ச்சி தகவல்களும் உண்டு. லேட்டஸ்ட் பன்றி காய்ச்சல் மருந்து வியாபாரம் வரை சொல்லியிருக்கிறார். சமீபத்திய ஹார்லிக்ஸ் - காம்ப்ளான், கூகிள் - மைக்ரோசாப்ட் சண்டை பற்றி ஏதும் இல்லை.

---

வெறும் சண்டைகளை பற்றி மட்டும் சொல்லாமல், ஆங்காங்கே மார்க்கெட்டிங் பாடங்களும் எடுத்திருக்கிறார் ஆசிரியர். ஆனால் குறியெல்லாம் குடுமிபிடியில் தான் இருக்கிறது. மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு தகவல் ரீதியில் தவிர்த்து, இப்புத்தகம் என்ன கற்றுக்கொடுக்கும்? உண்மையில் ஒரு சிலதை தவிர்த்து, பெரும்பாலானவை மோசமான முன்னுதாரணங்களே. இன்றைய உலகில் இதுதான் சரியென்று ஆகிவிட்டது.

சரி, தவறு என்பதை விட்டுவிட்டு ஜெயிப்பதை நோக்கி மட்டும் ஓடவேண்டும் என்பதாகிவிட்டது. நேர்மையாக தொழில் நடத்த வேண்டும் என்பவர்களுக்கு இப்புத்தகம் மார்க்கெட்டிங் நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்குமோ இல்லையோ, கொஞ்சம் பயத்தையும், எச்சரிக்கையுணர்வையும் கொடுக்கும்.

புத்தகம் வாங்க, இங்கு செல்லவும்.

தொடர்புடைய பதிவுகள்

காம்ப்ளான் - ஹார்லிக்ஸ் ஊட்டசத்து சண்டை
ஏர்டெல் - ரிலையன்ஸ் டிடிஎச் அடிதடி
கோனிகாவின் தமிழன் ஓசி ஆபர்
தமிழ்ப்பட விளம்பர தோரணம்
ரெட்பஸ் சக்ஸஸ் ஸ்டோரி

.

Saturday, September 4, 2010

ஜெயமோகன் பற்றி சுஜாதா

சுபமங்களாவில் மார்ச் 1993இல் வந்தது.

---

தற்போது தமிழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்களில் கவனிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஜெயமோகனின் பெயர் இருக்கிறது. சில ஆண்டுகளாக எழுதிவரும் இவர் கதைகளை நான் அவ்வப்போது கவனித்ததுண்டு. போன வருஷம் இவர் கதையான ‘ஜகன் மித்யை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜனாதிபதி பரிசு பெற்றது சந்தோஷமாக இருந்தது. (இவருடைய வேறு நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது வேறு விஷயம்.) சிறு பத்திரிக்கைகளில் எழுதிவரும் ஒரு இளம் எழுத்தாளருக்கு இந்த மாதிரி அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே.



”திசைகளின் நடுவே”. ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் ஏற்கனவே வெளிவந்து ‘நல்ல கவனிப்பு பெற்றது’ என்று பின்னட்டை சொல்லும் இந்த புத்தகம் - பதினாலு சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதை திறமையை கவனிக்க போதுமான கதைகள் உள்ளன.

என்னை பொறுத்த்வரையில் நான் ஒரு சிறுகதையின் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தில் பங்கேற்கும்போது தான் அது எனக்கு நல்ல கதையாகிறது. இல்லையெனில் நான் அதை உடனே நிராகரித்துவிடுகிறேன். மற்றவன் அனுபவம் எனக்கு முக்கியமில்லை.

இந்த பரீட்சையில் ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” தொகுப்பில் பதினான்கு கதைகளில் ஐந்து தேர்ந்தன. இதனால் மற்றவை நல்ல கதைகள் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு அவை உறைக்கவில்லை.

‘பல்லக்கு’ என்ற அபாரமான கதையில் நான் சொன்ன நல்ல கதைக்குரிய அத்தனை அடையாளங்களும் இருக்கின்றன. முதலில் கதாசிரியன் சிருஷ்டிக்கும் தனிப்பட்ட யதார்த்தம். அந்த மலையாளச் சூழல். “ஓர்மிச்சா எனகு கரிச்சல் வரது, ஏமானே” போன்ற வினோத உரையாடல்கள். அற்புதமான வர்ணனைகள். இந்த வகை வர்ணனைகள் அந்தக் கதை சூழலை முழுவதும் அங்கீகரிக்க வைக்கின்றன்.

இந்தச் சூழலில் சொல்லப்படும் சம்பவங்கள் நமக்கு ஏற்படுத்தும் ‘ரியலைஸேஷன்’ தான் அந்த கதையின் இலக்கியத்தரத்தை உயர்த்துகிறது.

ஜெயமோகன் ஒரு வேற்று மொழிக்காரரின் அசாத்திய தைரியத்துடன் சிறுகதையின் பலவித வடிவங்களை முயற்சிப்பதை பாராட்ட வேண்டும். வேதகாலக் கதைகள், சாமியார் கதைகள், பிலாசபி கதைகள் எல்லாமே தயங்காமல் முயற்சிக்கிறார்.

”திசைகளின் நடுவே”யின் முன்னுரையில் “அறச்சார்பே எனது கடவுள். அறச்சார்பற்ற படைப்பை இலக்கியமாக மதிக்க மாட்டேன். கால் சுண்டு விரலால் எற்றித்தள்ள தயங்க மாட்டேன். அவற்றின் சகல அங்கீகாரங்களுடனும் கூட!” என்கிறார். இந்த ஆரவாரமான அலட்டலான முன்னுரையின் தேவையில்லாமலேயே ‘நதி’, ‘வலை’, ‘போதி’, ‘படுகை’ போன்ற கதைகளை ரசிக்க முடிகிறது.

அறசார்பு என்று எதை சொல்கிறார் என்பது குழப்பமாக இருப்பினும் ஒரு தொகுதிக்கு ஒரு ‘பல்லக்கு’ வந்தாலே போதும்.

.

Friday, September 3, 2010

பலே பாண்டியா

ஹீரோவுக்கு வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோல்வி. காதல், தொழில், குடும்பம் என்று எங்கும் கசப்பான அனுபவங்களே. சாகலாம் என்று முடிவெடுத்தால், அதை கூட நிறைவேற்ற முடியவில்லை. ஒரு தாதாவிடம் சென்று பத்தாயிரம் கொடுத்து தன்னை கொல்ல சொல்கிறான். இப்படி தொடங்குகிறது படம். (இங்கிலீஷ் படம் காப்பியாமே?)



புத்திசாலி இயக்குனர். தனது புத்திசாலித்தனத்தை படம் முழுக்க காட்டியிருக்கிறார். முதல் பாதி சிம்புதேவன் டைப்பில் ஜாலியாக செல்கிறது. இரண்டாம் பாதியில் கியர் மாறி வழக்கமான தமிழ்ப்பட பாணி. லாஜிக், ம்ஹும்.

இயக்குனர் சித்தார்த் விளம்பரத்துறையில் பணியாற்றியவர். படத்தின் ஸ்டில்ஸ் அருமையாக, இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. படத்திலும் பல காட்சிகள் இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இது என்ன டைப் படம் என்று அவ்வப்போது புரியாமல் போவது பெரும்குறை.



ஹீரோ ’வெண்ணிலா கபடி குழு’ விஷ்ணு. நகர இளைஞன் வேடத்திலும் மேட்ச் ஆகிறார். ஹீரோயின் பியா, ட்ரஸ் செலக்‌ஷனை அவரே தான் செய்வாரோ? எல்லா படத்திலும் ஒரே மாதிரி ட்ரஸ்களில் வருகிறார்.

விவேக் லண்டனில் இருந்து வருபவராக நடித்திருக்கிறார். வடிவேலு ஆங்கிலம் பேசும்போது சிரிப்பு வருவதை போல, இவர் ஆங்கில உச்சரிப்பில் தமிழ் பேசுவதும் சிரிப்பை வரவழைக்கிறது. நன்றாக செய்திருக்கிறார். இரட்டை அர்த்த வசனத்தை விட்டிருக்கிறார். மெசெஜ் சொல்வதை விடவில்லை. இவர் மட்டுமில்லாமல், படத்தில் பலர் காமெடி செய்திருக்கிறார்கள்.

எக்கசக்க நடிகர் கூட்டம். பார்க்கும் படங்கள் எல்லாவற்றிலும் ஜெயப்பிரகாஷ் இருக்கிறார். இதில் அவருக்கு பெரிதாக வாய்ப்பில்லை.



இசையமைப்பாளராகும் பாடகர்கள் பெரிதாக சோபிப்பதில்லை. தேவன் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இரண்டு பாடல்களிலும், பின்னணி இசையிலும் கவனம் பெறுகிறார். இதுவரை பாடல்களை கேட்டதில்லை. இனிதான் கேட்கணும். சமீபத்தில் இப்படி கேட்க தோன்றியது இதுதான்.

‘ஹாப்பி ஹாப்பி’ பாடலில் கிட்டத்தட்ட தமிழின் அனைத்து இளம் பாடகர்களும் வருகிறார்கள், செம்மொழி பாடல் ஸ்டைலில். விஜய் ஜேசுதாஸ் டீக்கடை சேட்டனாக வருகிறார். டோண்ட் மிஸ் இட்.



சில இடங்கள் நாடக பாணியில் இருப்பதாலும், திருப்பங்கள் பாதியிலேயே காலியாவதாலும் படத்தின் ஓட்டம் சோர்வடைகிறது. வாட்ச் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. மற்றபடி, ரசித்து சிரிக்க பல காட்சிகள் இருக்கிறது, இறுதி டைட்டில் வரை. தியேட்டரில் இருந்த அனைவரும் (பத்து பேரும்) சிரித்தார்கள்.

பலே சித்தார்த்!

.

Wednesday, September 1, 2010

நாட்டு சரக்கு - சேவைகளும் தேவைகளும்

எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடும்போது, ஒரு குற்ற உணர்வுடனேயே சாப்பிட வேண்டி இருக்கும். எந்த டாக்டர் எழுதிய கட்டுரை என்றாலும், எண்ணெய் உடம்புக்கு நல்லதல்ல, கொலஸ்ட்ரால், நெஞ்சு வலி என்று சொல்லிக்கொண்டே போவார்கள். இருந்தாலும், இதற்காக சாப்பிடாமலா இருக்க முடியும்? என்று ஒரு பயத்துடனேயே சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். அதிலும் தேங்காய் எண்ணெய் கூடவே கூடாது என்பார்கள். எங்கூர் பக்கம் ’மஸ்கோத் அல்வா’ என்றொரு தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட அல்வா பேமஸானது. தேங்காய் எண்ணெய் எச்சரிக்கையால் அதையும் பயத்துடனே சாப்பிடுவேன்.

இப்ப என்ன சொல்கிறார்கள் என்றால், தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லதாம். பாக்டிரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் சக்தியையும், காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களை எதிர்க்கும் சக்தியையும் தேங்காய் எண்ணெய் நம் உடலுக்கு அளிக்குமாம். கொலஸ்ட்ரால், ஹார்ட் அட்டாக் எல்லாம் இதனால் வராதாம். இந்த பயத்தையெல்லாம் கிளப்பிவிட்டது, சோயா எண்ணெய் குரூப் என்கிறார்கள். எதை நம்புவது? இவர்கள் அமெரிக்காவில் 99% சதவித சோயாக்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்கிறார்கள். அய்யோடா!!!

எது எப்படியோ, இதையெல்லாம் படிப்பதைவிட்டு விட்டு, இட்லிபொடிக்கு எண்ணெய் ஊற்றி சாப்பிடலாம் என்றிருக்கிறேன்.

---

இந்த போன் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை. புதிதாக ஆப்பிள் ஐபோனில், ‘ஐ-ஸ்டதஸ்கோப்’ என்றொரு அப்ளிக்கேஷனை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் ஸ்டதஸ்கோப் இல்லாமலே, வெறும் ஐபோன் வைத்துக்கொண்டு இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியுமாம்.

விளையாட்டுக்காக லண்டனை சேர்ந்த பீட்டர் என்பவர் செய்த கண்டுபிடிப்பு, மருத்துவ உலகில் இப்ப செம ஹிட். 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதை டவுன்லோட் செய்திருக்கிறார்கள். நீங்களும் டவுன்லோட் செய்ய, இங்க போங்க.

இன்னும் இதை வச்சு என்னவெல்லாம் கண்டுப்பிடிக்க போறாங்களோ? வருங்காலத்தில் போனை காதில் மட்டும் வைக்காமல், வாயினுள், அக்குளில் எல்லாம் மக்கள் வைத்திருப்பார்கள். எந்த சந்தேகமும் வேண்டாம்! காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

---

மால்களில், ஜவுளிக்கடை வாசலில், கடை தெருவில், உதிர்த்த சோளத்தை மசாலாவுடன், மிளகுடன், எலுமிச்சை சாறுடன் கிண்டி ஒரு கப்பில் வைத்து விற்பார்களே? அது ரொம்பவும் லாபம் தரும் வியாபாரம் என்று நினைக்கிறேன். இது போன்ற ஸ்டாலில் நிற்கும் பையன், அவனுடைய சம்பளம் 5500 என்றான். ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப வேலை இருக்குமோ? வேறு ஏதும் வேலை உண்டா? என்று கேட்டதற்கு இல்லை என்றான். ஒரு நாளைக்கு 500இல் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனை ஆகும் என்றான். அது சரி, அப்ப இந்த சம்பளம் சரிதான் என்று நினைத்துக்கொண்டேன்.

பிஸினஸ் மஹாராஜாக்கள் ஆக நினைப்பவர்கள், இது பற்றி விசாரிக்கவும்.

---

சேவை துறையில் வாய்ப்புகள் அதிகமானாலும் ஆனது, புதுசு புதுசா யோசிக்கிறார்கள். எனக்கு சில நாட்கள் முன்பு வந்த ஒரு எஸ்.எம்.எஸ். இப்படி சொன்னது. “நீங்கள் ஊருக்கு செல்லும் போது, உங்கள் நாயை எங்களிடம் விட்டு செல்லுங்கள். நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். நீங்கள் ஊர் திரும்பும் வரை, நாயின் முழு பராமரிப்பும் எங்களுடையது. எங்களிடம் நாய் பிக்-அப் வசதியும் உண்டு. தொடர்பு கொள்ள-”.

வீட்டுல ஊருக்கு போனா, நாய்க்கு கூட கம்பெனி கொடுக்குறாங்கப்பா!

---

ஒருபக்கம் மூட சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் திறந்துக்காட்ட சொல்கிறார்கள். நமது அரசு துறைகளின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு கொள்கைகளை சொல்கிறேன்.

ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பண பரிமாற்ற தகவல்களை மூடி மூடி அனுப்ப சொல்கிறார்கள். இதர பாதுகாப்பு அமைப்புகளோ, ரொம்பவும் மூடினால் எங்களால் திறந்து பார்க்க முடியவில்லை. திறந்து காட்டு என்று மிரட்டுகிறார்கள். பாவம் ப்ளாக்பெர்ரி. அடுத்து, ஸ்கைப்பும், கூகிளும் இவர்களிடம் சிக்க போகிறார்கள். ரொம்பவும் பாதுகாப்பாக தகவல்களை அனுப்பினால், எங்களால் உளவு பார்க்க முடியவில்லை. தீவிரவாதிகள் இதை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்கிறார்கள் என்பது அவர்கள் கவலை. திறந்து பார்க்க வசதி செய்து கொடுத்தால், இருக்கிற கஸ்டமர்கள் ஓடிவிடுவார்களே என்பது இவர்கள் கவலை.

தீவிரவாதிகளை விட மோசமான பரிமாற்றங்கள் எல்லாம் இச்சேவைகள் மூலம் நடைபெறுகிறது. உளவு பார்க்கிறேன் என்று அதை பார்க்க போகும் அதிகாரிகளை நினைத்து தான் என் கவலையெல்லாம்.

---

கீழே இருக்கும் படத்தை ஒரு ஹோட்டலில் பார்த்தேன். பக்கத்தில் இருந்த நண்பர், என்ன தெரியுது, என்ன தெரியுது என கேட்க, நானும் தெரிந்ததை எல்லாம் சொன்னேன். அவரும் அப்புறம் அப்புறம் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நடுவில் யாரோ வந்து காப்பாற்றியதால், தப்பினேன்.



இப்ப, என் முறை... உங்களுக்கு இந்த படத்தில் என்னவெல்லாம் தெரிகிறது? ஆங்... அப்புறம்... அப்புறம்...

.